குண்டலகேசியின் கதை 2

குண்டலகேசி | மௌவல் தமிழ் இலக்கியம்

முன் கதைச் சுருக்கம் : 

குண்டலகேசியின் முதல் பாகத்தைப்  படிக்க இங்கே சொடுக்குங்கள் !

https://wp.me/p6XoTi-3sg

 

இயற்கை அழகும்,செல்வ வளமும், சமயப் பொறையும், வணிகச் சிறப்பும் கொண்டது பூம்புகார்  நகரம். இந்நகரின் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை. அழகும், அறிவும், அன்பும்,  அருளும் நிறைந்தவள். இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும்  சென்று கொண்டிருந்த இவள் வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களை இனிக் காண்போம்:

குண்டலகேசி கதை | Gundalakesi story - YouTube

பத்திரையின் தாய் இறத்தல்

 

சிறந்திடும் இன்ப வாழ்வில்
     திருப்பமும் வந்த தம்மா.
அறந்திகழ் அன்புத் தெய்வம்
     அன்னையும் மறைந்தாள் ஓர்நாள்.
பிறழ்ந்தது கனவு, தன்னைப்
     பெற்றவள் பிரிவி னாலே
உறைந்தனள் துன்பத் தாலே
      ஊழ்வலி அறிந்தார் யாரே?

           பத்திரை வளர்தல்

தாயவள் பிரிவால் வாடித்
     தவித்தனள் பத்தி ரையாள்.
சேயவள் மகிழ்ச்சி கொள்ளச்
     செல்லமாய் வளர்த்தான் தந்தை.
ஆயநற் கலைகள் எல்லாம்
      அறிந்திடும் வழிகள் செய்தான்.
தூயவள் அவளும் காலம்
     சுழன்றிட வளர்ந்து வந்தாள்.

ஆற்றினில் ஆடி,  வீழும்
     அருவியில் குளித்துத் தென்றல்
காற்றினைப் போல்தி ரிந்து,
     கவலைகள்  தமைம றந்தாள்.
மாற்றுப்பொன் போன்றாள் செல்வ
       வளங்களைப் பெற்று வாழ்ந்தாள்
சாற்றிடும்  அவள்சொல் கேட்டுத்
     தந்தையும் நடந்து கொண்டான்

          பத்திரையின் அழகு

ஓவியப் பாவை அன்னாள்
     ஒளியுமிழ் மின்னல் கண்ணாள்
கூவிடும்  குயில்போல் சொற்கள்
      கொண்டனள்  புருவ  விற்கள்
பூவென மலர்மு கத்தாள்
      பொன்னென ஒளிர்கு ணத்தாள்
காவியத்  தலைவி  என்று
      காண்பவர் வியப்பார் நின்று.

  மாடத்தில் இருந்து  பத்திரை கண்டவை

ஆனதோர் நாளில் அன்னாள்
     அழகுமா ளிகையின் மாடம்
தானதில் சென்றாள் தன்னைச்
     சார்ந்திடும் தோழி யோடு.
வானமும் முகிலும் சோலை
     வனப்புடை நிலமும்  கண்டாள்.
தேனுணும் வண்டாய் உள்ளம்
      சிலிர்த்திட உவகை கொண்டாள்.

அப்புறமும், இப்புறமும் மக்கள் செல்லும்
     ஆளரவம் மிகுதெருவோ யாரும் இன்றித்
துப்புரவாய்க் காட்சிதரும் விந்தை கண்டாள்
      துடிப்புடனே காரணத்தை அறிந்து கொள்ள
ஒப்பிமனம் தோழியினைக் கேட்டுப் பார்த்தாள்
     ஒன்றுமவள் அறியவில்லை. அந்த நேரம்
அப்பப்பா தெருவினிலே கண்ட  காட்சி
      அப்படியே குருதியினை உறைய வைக்கும்.

கள்வனைக் கொல்ல   இழுத்துச்  செல்லுதல்.

வழிப்பறி செய்வான்,  வம்புகள் செய்வான்,
          வன்மையும் திண்மையும் கொண்டான்
    வனப்புறு தோளன், சினத்துருக் காளன்
          வஞ்சகக் கொலைமிகு கொடியன்   
அழிப்பதும் உயிர்கள், அடிப்பதும் கொள்ளை
          அறிந்திடான் அன்பெனும் சொல்லை.
    அமைதியும் அறமும் நாட்டினில்  சிதைத்தான்
           அச்சமே மனங்களில் விதைத்தான்
பழிப்புறு கள்ளன் கயிற்றினால் கட்டிப்
           பாவியைக் கொலைக்களம் நோக்கிப்
    பத்திரை வாழும் தெருவழி இழுத்துப்
            பற்றியே காவலர் போனார்.        
கழிப்பதும் களைகள், காப்பதும் பயிர்கள்,
            காவலன்  மன்னவன்   கடமை.
    களவுடன் கொலையாம் கொடுமைசெய் காளன்
             கதையினை முடித்திட விரைந்தார். 

( கள்வனின் பெயர் – காளன். சத்துவான் என்றும் கூறுவதுண்டு)

கள்வன் மேல் பத்திரை காதல் கொள்ளுதல்

வடிவதன் அழகும்   புறமொளிர்   விறலும்
      மயக்கிட  உருகினள் பேதை.    
கொடியவன்  அவன்மேல்  கொடியெனும்  கோதை
     கொண்டனள் உடனடிக் காதல்.
நெடியவல் விதியோ? வளைந்தநல் மதியோ?
     நெகிழ்ந்திடும்  இளமையின் சதியோ?        
மடியவே மன்னன் ஆணையும்  உளதால்
      வருந்தலே வாழ்க்கையின்  கதியோ?

      (புறமொளிர் விறல்- வீரத் தோற்றம்)

( தொடரும்)