காலை கண் விழித்ததிலிருந்து

குழப்பமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது

எதை எதையோ நினைவுபடுத்துகிறது

அதிகாலை கண்ட பூனைக்கனவு

 

சிறுபிள்ளையில் இருந்தே எதையாவது

வளர்த்துக் கொண்டேயிருந்த நந்தினி பாப்பா

 

“வீடு கட்டுனதும் கோழி வளக்கணும்” என்று

அடிக்கடி சொல்லும் அம்மா

 

“என்னை கால் கேர்ள் னு நினைச்சிட்டயாடா” என்று

பூனைக் கண்கள் கலங்கி நின்ற ஜாஸ்மின்

 

ஊர் மந்தையில் பூனை வாட்டிய

கழைக்கூத்தாடி பெண்

 

எதற்கெடுத்தாலும் சகுனம் பார்க்கும்

நாட்டாமை பெரியப்பா

 

‘எலிக் கணேசன்’,

அவன் வர்ணித்துச் சிலிர்க்கும்

டீ கடை கெங்கம்மா

 

நெல்லை மத்திய பேருந்து நிலையத்தில்

நிறைபோதையில் விழுந்துகிடந்தவரிடம்

கூண்டோடு திருடிவந்த பஞ்சவர்ணக் கிளிகள்

 

எல்லோரும் சகுனத் தடையாகப் பார்த்த

இருளி பேச்சி அக்கா

அவள் வளர்த்த கன்னி நாய்

 

சமீபத்தில் பார்த்த திரைப்படத்தின்

புதுமுக நாயகி

 

இப்படியாக என்னென்னவோ நினைவுகள்

உறுத்திக்கொண்டே இருக்கிறது

கண்ணுக்குள் விழுந்த இமை முடி போல

 

ஒரு நாள் முழுக்க

ஆக்கிரமித்துக் கொள்ள முடியுமா

ஒரு பூனைக் கனவால்?

 

என் கனவில் வந்த

அந்தப் பூனை எந்தப் பூனை

ஏன் என் கனவில் வந்தது?

கனவு வருவதற்கான

அறிவியல் காரணம் என்ன?

விரைவில்

சிக்மண்ட் பிராய்டைப் படிக்க வேண்டும்