திரைக் கவிதை

(http://kuzhalinnisai.blogspot.com/2015/09/1954.html)

உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர் கவிமணி தேசிக விநாயகம்

கல்கி எழுதி சிவாஜி கணேசன் நடித்த கள்வனின் காதலி என்ற படத்தில் ‘வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ என்று கண்டசாலா-பானுமதி பாடிய பாடல் இன்றைக்கும் ரசிக்கப்படுகிற பழைய பாடல்களில் ஒன்றாகும்.

உமர் கய்யாமின் ஒரிஜினல் வரிகள்:

Here with a loaf of bread beneath the bough,
A flask of wine, a book of verse – and thou
Beside me singing in the wilderness
And wilderness is paradise now

கவிமணி அவர்களின் மொழிபெயர்ப்பு :

“வெய்யிற்கேற்ற நிழல் உண்டு

வீசும் தென்றல் காற்றுண்டு

கையில் கம்பன் கவி உண்டு

கலசம் நிறைய அமுதுண்டு

தெய்வ கீதம் பல உண்டு

தெரிந்து பாட நீ உண்டு

வையம் தரும் இவ் வனமன்றி

வாழும் சொர்க்கம் வேறுண்டோ”

 “வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு” எனும் கவிமணியின் பாடலை திரை படத்தில் பயன்படுத்திக் கொண்டமைக்காக  அதற்கு கொடுப்பதற்காக, ஒரு பெருந்தொகையை எடுத்துக்கொண்டு, சின்ன அண்ணாமலையும், சிவாஜி கணேசனும், கவிமணியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த கவிமணி சிவாஜியைப் பார்த்து தம்பி யார் ? என்று கேட்டார். பதட்டத்துடன் சின்ன அண்ணாமலை இவர்தான் சிவாஜி கணேசன் என்று சொல்லவும் கவிமணி ‘அப்படியா தம்பி என்ன செய்து கொண்டிருக்கிறார்’ என்று கேட்டார்.

கவிமணிக்கு சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை. அதனால் அவருக்கு சிவாஜி கணேசனைத் தெரியவில்லை.பாடலுக்காக ஒரு பெருந்தொகையை சிவாஜி கொடுக்கவும் அதை வாங்க மறுத்து ‘இந்தப்  பாடல் நான் எப்போதோ எழுதியது அதற்கு இது தேவை இல்லை தம்பி ‘ என்று மறுத்து விட்டார்.

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

தந்திவர்மன்

(கி.பி.774-825)

இரண்டாம் நந்திவர்மனுக்குப் பிறகு வந்தவன் தந்திவர்மன்.
செய்திகளை முந்தித் தரும் தந்தி (தினத்தந்தி) போல தந்திவர்மன் கதை இங்கே:

நந்திவர்மன்- ரேவா இருவருடைய காதல் காட்சிகளை வாசகர்கள் ஏற்கனவே கற்பனை செய்து பார்த்திருப்பீர்கள்.

ஒரு பாடல் ஒலிக்கிறது :
‘நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே..’
‘அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே..”
அவர்களுடைய காதல் பரிசுக்குத் தந்திவர்மன் என்று பெயரிட்டனர்-

இராட்டிரகூட தாத்தா தந்திதுர்கன் பெயரில்.
பல ஆண்டுகள் மன்னனாக இருந்த நந்தி ஒரு நாள் மறைந்தான்.
நந்திக்குப் பிந்தி தந்தி மன்னன் ஆனான்.

காய்த்த மரம் கல்லடி படும்!
காஞ்சி அன்று நகரங்களில் பேரழகி!
அதன் மேல் காதல் கொண்ட மன்னர்கள் அவளை அடையத் துடித்தார்கள்.
புலிகேசி முதல் பின்னால் வந்த சோழர் வரை.-
இடையிலும் பல மன்னர்கள்..

இந்தச் சூழ்நிலையில் தந்தியின் ஆட்சி தொடங்கியது.
அது தந்திக் கம்பி மீது நடப்பது போன்ற காட்சி!
‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’
‘போர்களில் அனைத்திலும் ஒரு மன்னன் தோற்றால் அவனது வாழ்க்கை எப்படியிருக்கும்?’
அன்று தந்தியின் நிலை அதே தான்!
சாகிற வரைக்கும் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?

பிறகு எதற்காக இந்தத் தோற்ற மன்னனைப் பற்றி எழுதுகிறாய் – என்று தானே கேட்கிறீர்கள்?

தோல்விகளும் சரித்திரம் படைக்குமென்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
அந்தத் தோல்விகளையும் தாண்டியும் ஒரு மன்னன் 50 வருடம் மன்னனாக இருப்பது என்பதும் ஒரு சாதனை தானே!

தவறான கூட்டணியில் சேர்ந்ததால் அரசியலில் தோற்ற கட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அன்றைய அரசியலிலும் கூட்டணி அரசியல் தான் நடந்தது.

முதலில் இராட்டிரகூடர், பாண்டியர் தாக்குதலுக்குக் காஞ்சி உள்ளாயிற்று. இராட்டிரகூட அரசன் துருவன் காஞ்சி நகரத்தை முற்றுகையிட்டான்.

தந்திவர்மன் தோல்வியுற்றான். பெரிய யானைப் படையைத் துருவனுக்கு அளித்துச் சரண் புகுந்தான். துருவனுக்கு அடங்கிக் கப்பம் கட்டும் நிலை பல்லவனுக்கு ஏற்பட்டது.

கி.பி.803இல் மீண்டும் இராட்டிரகூட – பல்லவப் போர் நடந்தது. இம்முறை போர் தொடுத்து வந்தவன் துருவனின் மகன் மூன்றாம் கோவிந்தன். அவனிடமும் தந்திவர்மன் தோற்றான்.

வெற்றி பெற்ற மூன்றாம் கோவிந்தன் வடநாடுகளை வெல்லச் சென்றான். அப்போது தந்திவர்மன், கங்கபாடி அரசன், சேர, சோழ, பாண்டியர் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவிந்தனை வெல்லத் திட்டமிட்டனர்.

மீண்டும் தவறான கூட்டணி!
கோவிந்தன் பெரும்படையுடன் வந்து கி.பி.808-810இல் தென்னாட்டு அரசர் அனைவரையும் வென்றான்.
காஞ்சியைக் கைப்பற்றினான்.

இலங்கை அரசன் அவனுக்குப் பரிசுகள் பல அனுப்பி நட்புக் கொண்டான்.

பல்லவ தந்திவர்மன் சந்தித்த மூன்று பெரும் போர்களும், போர்த் தோல்விகளும் பல்லவ அரசைத் தளர்வுறச் செய்தன. இம் மூன்று போர்களாலும் பல்லவநாட்டிற்கு உண்டான ஆள் இழப்பும் பொருள் இழப்பும் ஏராளம்.

பட்ட காலிலே படும்!

வரகுண பாண்டியன் கி.பி.800 முதல் 830 வரை பாண்டிய நாட்டை ஆண்டவன்.
அவன் தகடூர் அதியமானை எதிர்த்தபோது தந்திவர்ம பல்லவன் அதியமானை ஆதரித்தான். சேரனும் அவனை ஆதரித்தான்.

மீண்டும் ஒரு தவறான கூட்டணி!

வரகுண பாண்டியன் கி.பி.806 இல் இவர்கள் அனைவரையும் தோற்கடித்தான். பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த சோழநாடு முழுவதையும் தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங்கரை வரை உள்ள பகுதியையும் பாண்டியன் கைப்பற்றிக் கொண்டான்.

வடக்கே இராட்டிரகூடர் படையெடுப்பாலும், தெற்கே பாண்டியர் படையெடுப்பாலும் பல்லவ மன்னன் தந்திவர்மன் இருதலைக் கொள்ளி நாகம் போல் தத்தளித்தான்.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்!
இடி மேல் இடி இடித்தால்- தந்தியும் தளரும்!..
மாவு விற்கப் போனால் காற்றடித்தது.
உப்பு விற்கப் போனால் மழையடித்தது.
(போதுமடா சாமி இந்தப்பழமொழி என்று யாரோ புலம்புகிறார்கள்!
சரி ஒன்றே ஒன்று சொல்லி அதன் பின் விட்டு விடுவோம்)

சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையும் கொத்துமாம்!
அதுபோல..

தெலுகு சோடா நாட்டு சிற்றரசன் ஸ்ரீகாந்தா – பாண்டியன் மாறவர்மனின் மருமகன்.
அவன் காஞ்சியைத் தாக்கி தந்திவர்மனைத் துரத்தினான்.
அவன் தனது உறவினனை ‘அபிமானசித்தி பல்லவன்’ – என்ற பெயரில் காஞ்சித் தலைவனாக்கினான்.
தந்தி கடம்ப நாட்டில் அடைக்கலமடைந்தான்.
(கடம்ப மன்னர் குலத்தில் பிறந்த ‘அக்கள நிம்மடி’ என்னும் இளவரசியைத் தந்தி மணந்து கொண்டிருந்தான்).
சில வருடங்கள் கழிந்தது
தந்தியின் மகன் (மூன்றாம் நந்தி) – வீர வாலிபனானான்.
கடம்ப நாட்டில் போர்க்கலையை நன்கு கற்றான்.

சின்னஞ்சிறுகதை ஒன்று!

வருடம் கி பி 814:
கடம்ப மன்னரின் மந்திராலோசனைக் கூடம்.
பல்லவன் தந்தி, இளவரசன் நந்தி, மகாராணி அக்கால நிம்மடி, கடம்ப மன்னன்- மற்றும் கடம்ப தளபதி.
அத்துடன் நந்தியின் இரு சகோதர்கள்.
நந்தி சொன்னான்:
“அப்பா, தாத்தா!
நாம் உடனடியாக காஞ்சியை மீட்க வேண்டும்.
மேலும் நமது எதிரி – இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கோவிந்தா காலமான செய்தி இன்று வந்துள்ளது. அவன் மகன் அமோகவர்ஷன் இன்று மன்னனாகிறான்.
ஆதிக்க மாற்றம் என்றுமே ஒரு நாட்டின் பலவீனமான காலம்.
காஞ்சியை மீட்டு.. இராஷ்ட்ரியக்கூடாரின் ஆதிக்கத்திலிருக்கும் பல்லவ பகுதிகளையும் மீட்டு – அவனுக்குச் செலுத்தி வந்த கப்பத்தை நிறுத்த வேண்டும். அதற்கான காலம் கனிந்துள்ளது”

தந்தியின் தளர்வுற்ற முகம் சற்றே மேலும் வெளுத்தது.
இன்னொரு தோல்விக்கு அவன் தயாராக இல்லை என்பது அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
மௌனமாக இருந்தான்.
கடம்ப மன்னர்: “நன்று சொன்னாய் நந்தி! நமது கடம்ப நாட்டுப் படையுடன் – சிதறிக்கிடக்கும் பல்லவ சேனையை ஒன்று சேர்த்து நீயே தலைமை நடத்திப் படையெடுப்பாய்”
சிறுகதை முடிந்தது.

காஞ்சி மீட்கப்பட்டது.
தந்திவர்மன் மீண்டும் பல்லவமன்னன் ஆனான்.
இளவரசன் நந்தி தான் சொன்னது போல் அமோகவர்ஷனிடமிருந்த பல்லவபகுதிகளை மீட்டான்.
தந்தியின் இறுதிக்காலம்.
நந்தியை அழைத்து:
“மகனே! உன்னால் இந்த காஞ்சி உன்னதமாகட்டும்!
என்னால் ஏற்பட்ட அவமானங்கள் உன்னால் அறுபடட்டும் ”

தந்தி அறுந்தது!

இனி நந்தியின் கதை விரைவில்…

டாக்டரும் எகனாமிஸ்ட்டும்  – ஸிந்துஜா

சிறுகதை – குட்டி கதைகள்

ராமநாதனும் வைதேகியும் இனிய மணம் கமழும் அந்த வரவேற்பறையில் உட்கார்ந்திருந் தார்கள். வரவேற்பு அறையில் அவர்கள் இருவரைத் தவிர வரவேற்பாளினி சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்தாள். டாக்டர் இன்னும் வரவில்லை என்று அவர்கள் வந்ததும் அவள் தெரிவித்தாள். ராமநாதன் அறையை ஒரு முறை சுற்றிலும் நோக்கினான். டாக்டர் பல பிரமுகர்களுடன் இருந்த புகைப்படங்கள் சுவற்றில் தொங்கின.  அனைத்திலும் புன்னகையை எறிந்து  கொண்டிருந்த முகமாயிருந்தார் அவர்.  ‘உலகமே காண்டாக்ட் லென்ஸை நம்பி உயிர் வாழ்கிறது’ என்று கூறும் போஸ்டர் ஒன்று ராமநாதனின்

கண்ணைத் தாக்கியது. ‘உங்கள் அண்டர்வேர் போலத்தான் உங்கள் காண்டாக்ட் லென்ஸ்’ என்று அறிவித்த ஒரு போஸ்ட்ரைப்  பார்த்து ராமநாதன் திடுக்கிட்டான்  அணிந்திருந்த கண்ணாடியைச் சற்றுச் சரி செய்து கொண்டு அந்த விளம்பரத்தின் தலைப்புக்குக்கீழே இருந்ததைப் படித்தான்.

அதிகம் உபயோகிக்காதே;

லூசாக இருந்தால் தூக்கியெறி

எப்போதும் எக்ஸ்ட்ரா ஒன்று

கைவசம் இருக்கட்டும்.

ராமநாதன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான். வைதேகி அவனிடம் ‘என்ன விஷயம்?’ என்று கண்ணால் கேட்டாள். அவன் போஸ்டரை மறுபடியும் நோக்கினான். அதை அவளும் படித்தாள்.

முகத்தில் கேள்விக் குறியுடன் அவனைப் பார்த்த அவளிடம் “காண்டாக்ட் லென்ஸ் பத்தி சொல்றானா, இல்லே நிரோத் விளம்பரமா?” என்று அவள் காதில் குசுகுசுத்தான். அவள் “உங்களுக்குன்னு தோணறதே?” என்று வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

அப்போது வரவேற்பாளினி அவர்களைப்  பார்த்து “டாக்டர் இன்னும் சில நிமிஷங்களில் வந்து விடுவார்” என்று சொல்லிப் புன்னகை செய்தாள். அவளது வலது கை அவளணிந்திருந்த கண்ணாடியைச் சரி செய்தது. அவர்கள் இங்கு வந்த பத்து நிமிஷங்களில்  அவள் இவ்வாறு செய்வது ஏழாவது அல்லது எட்டாவது தடவையாக இருக்க வேண்டும் என்று வைதேகி நினைத்தாள். ஸ்டைலுக்காக ஆரம்பித்தது இப்போது பழக்கமாகிவிட்டது போலும். ஆனால் கண்ணாடி அணிந்து எடுப்பாகத்தான் இருக்கிறாள்.

வைதேகி எழுந்து அவளருகில் சென்று “உங்க கண்ணாடி பிரேம் ரொம்ப அழகாயிருக்கு” என்று சிரித்தாள்.

அவளும் புன்னகை செய்தபடி “புதுசா இப்பதான் ரெண்டு வாரம் முன்னே வந்தது” என்றாள்.

அந்த பிரேம்  அவளை அழகாகக் காட்டுகிறது என்று வைதேகி சந்தேகப்பட்டாள். அதை அவளிடம் சொல்லியும் விட்டாள்.

வரவேற்பாளினி தனது மேஜை டிராயரைத் திறந்து “ஒரு எக்ஸ்ட்ரா இருக்கு, பாருங்களேன்” என்றாள்.

“ரொம்ப விலை இருக்கும் போலிருக்கே? ஆயிரம்லாம்னா எனக்குக் கட்டுப்படியாகாது” என்றாள் வைதேகி.

“இந்த மேஜையைக் கெட்டியாப் பிடிச்சுக்குங்க. மயக்கம் போடாம இருக்க” என்று அவள் சிரித்தாள். “இது வெலை நானூறு ரூபாய்தான்.”

“ரியல்லி?” என்று அந்த பிரேமைக் கையில் எடுத்துப் பார்த்தாள்.

“கண்ணாடியோடு சேர்த்து எழுநூறு ஆகும்” என்றாள். “ரெண்டு வருஷம் வாரண்டி கொடுக்கறாங்க.”

அப்போது வைதேகியின் பார்வை வரவேற்பாளினியின் மேஜை மீது விழுந்தது. அதில் இருந்த புகைப்படத்தில் அவளும் டாக்டரும் நின்றார்கள். அவள் டாக்டரின் தோள் மீது கையைப் போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தாள்.

வைதேகியின் ஆச்சரியத்தைப் பார்த்து அவள் பார்வை புகைப்படத்தின் மீது விழுந்தது. “அவர் என்னுடைய மாமா. என் அம்மாவின் அண்ணா” என்றாள்.

அப்போது டாக்டர் உள்ளே நுழைந்தார். கூடவே ஓர் யுவதியும்.

அங்கிருந்தவர்களைப் பார்த்து இருவரும் புன்னகை செய்தபடி டாக்டரின் அறைக்குள் நுழைந்தார்கள்.

சில நிமிடங்களில் ராமநாதன் அழைக்கப்பட்டான். வைதேகியும் அவனுடன் சென்றாள்.

“இதற்கு முன்னால்  நான் உங்களைப் பாத்திருக்கிறேனா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் டாக்டர்.

“இல்லை. நான் இங்கே வருவது  இதுதான் முதல் தடவை” என்றான் ராமநாதன். “மிஸ்டர் திம்மராயப்பாதான் அனுப்பினார்.”

“ஓ, திம்மனா?” என்ற அந்த ‘ன்’னில் நெருக்கத்தை அளித்து விட்டார். “இப்போது உங்கள் பவர் என்ன?”

“வலது கண் மைனஸ் நான்கு. இடது கண் மைனஸ் மூன்றறை. ஆனால்  என் பவர் கிராஜுவலாக வருடா வருடம் ஏறிக் கொண்டே போகிறது.

பெட்ரோல் விலை மாதிரி” என்றான்.

டாக்டருடன் இருந்த பெண் புன்னகை செய்தாள் .

“இவள் என் டாட்டர். லாவண்யா. இவளும் டாக்டர்தான்” என்றார் சீனியர். கணவனும் மனைவியும் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள்.

“அதனால்தான் திம்மராயப்பா காண்டாக்ட் லென்சிற்கு மாறி விடு என்று என்னை உங்களிடம் அனுப்பினார்” என்றான் ராமநாதன்.

“அதுவும் சரிதான். இப்போது நீங்கள் போட்டிருக்கும் கண்ணாடி நாளடைவில் உங்கள் மூக்கின் மேல் பகுதியிலிருந்து சிறிது சிறிதாகச் சரிந்து கொண்டே வரும். உங்கள் கண்ணுக்கும் கண்ணாடிக்கும் இருக்கும் இடைவெளியும் அதனால் அதிகமாகும். இது பார்வையில் உங்களுக்கே தெரியாமல் அழுத்தத்தைக் கொடுக்கும். வாங்கின அன்றைக்கு இருந்த பவர் மெதுவாக ஏற  ஆரம்பிக்கும்” என்றார்.

“நீங்கள் சொல்வது சரி டாக்டர்” என்றான் ராமநாதன்.

“காண்டாக்ட் லென்ஸில் இந்தக் குறை வராது. ஏனென்றால் அது உங்கள் கண்ணில் ஒட்டியபடி இருக்கும்.”

ராமநாதன் ஒப்புக் கொள்வது போலத் தலையசைத்தான்.

“இதைத் தவிர நீங்கள் பார்ப்பது எதுவும் மிக துல்லியமாக உங்களுக்குத் தெரியும்.  வேர்வை அல்லது மழை நீர் பட்டு பிரேம்கள் கெட்டுப் போவது மாதிரியான தொந்திரவுகள் இதில் கிடையாது. பிரேமுடன் இருக்கும் கண்ணாடியை அணியும் போது உங்கள் தோற்றத்தில் மாறுதல் காண முடியும். காண்டாக்ட் லென்ஸில் உங்கள் முகம் மாறாத  முகமே” என்று சிரித்தார். பிறகு “நீங்கள் ரிஸப்ஷனுக்குப் போய் கண்களில்  சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுங்கள் ” என்றார் .

அரை மணி கழித்து மறுபடியும் ராமநாதனும் வைதேகியும் டாக்டரின் அறைக்குள் சென்றார்கள்.  தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தி

லிருந்து கண்ணாடியையும் கண்ணையும் எடுத்து விட்டு டாக்டர் அவர்களைப் பார்த்தார். “டாக்டர் லாவண்யா வில் சி யூ” என்றார்.

உள்ளேயிருந்த அறையிலிருந்து லாவண்யா வந்தாள். கண் பரிசோ

தனை செய்யும் உபகரணத்தின் முன்பு ராமநாதனை உட்கார வைத்து உயரத்தைச் சரி செய்தாள். தான் அணிந்திருந்த கோட்டிலிருந்து கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டாள். முதலில் வலது கண்ணுக்கும் பிறகு இடது கண்ணுக்கும் சிறிய கண்ணாடிகளைப் போட்டு சற்றுத் தொலைவில் சுவர் மீது பதிந்திருந்த போர்டில் மேலிருந்து கீழாக வரிசையில் வரும் எழுத்துக்களைப் படிக்கச் சொன்னாள். வலது கண்ணில் ஐந்தாவது வரிசை வரையிலும்  இடது கண்ணில் ஆறாவது வரிசை வரையிலும் எழுத்துக்கள் தெளிவாக இருந்தன போலத் தோன்றி அவற்றை அவன் படித்தான்.

அவர்கள் சீனியரிடம் வந்து அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர் ராமநாதனிடம் வலது கண்ணில் பவர் கொஞ்சம் ஏறியிருக்கிறது என்றும் இடது கண்ணில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் சொன்னார்.

அவர் ராமநாதனிடம் பல்வேறு கம்பனிகளின் தயாரிப்புகளைக் காட்டினார். “தினமும்  டிஸ்போஸ் செய்கின்ற லென்சுக்கும் மாதத்

திற்கு ஒரு தடவை வாங்கும் லென்சுக்கும் விலையில்  அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. குறைந்த விலை என்று முன்னூறுக்கும் கிடைக்கும். ஆனால் அதன் தரம்  அப்படிக்கப்படிதான் ” என்றார் டாக்டர்.

தொடர்ந்து ” என்னைக் கேட்டால் நீங்கள் மாதம்  ஒரு தடவை மாற்றுகிற மாதிரி வாங்குவதே பெட்டர்.  பாஷ் அண்ட் லாம்பே ஒரு செட் ஆயிரத்து இருநூறுக்கும் தருகிறார்கள். இரண்டாயிரத்துக்கும் தருகிறார்கள்.

நீங்கள் ஆயிரத்து இருநூறுக்கே போகலாம். ஆறு மாதத்துக்கு வாங்கி வைத்துக் கொள்வது சௌகரியமானது” என்றார்.

ராமநாதன் மனைவியைப் பார்த்தான். வைதேகி தோள்களைக் குலுக்கினாள்.

“திம்மா அனுப்பியதால் நான் டிஸ்கவுண்ட் தர வேண்டும். நான் உங்களுக்கு ஆறு மாதத்துக்கு ஆறாயிரத்துக்குத் தருகிறேன்.ஓக்கேவா?”

ராமநாதன் “தாங்க்ஸ் டாக்டர்” என்றான். அவர்கள் மறுநாள் காலை வந்து லென்ஸை வாங்கிக் கொள்ளலாம் என்றார் அவர்.

மறுநாள் டாக்டர் சொன்ன நேரத்துக்கு அவர்கள் சென்றார்கள். டாக்டர் லாவண்யா, ராமநாதனிடம் எப்படி லென்ஸ்களை அணிய வேண்டும் என்று செய்து காண்பித்தாள். அவற்றை அணிந்த பின்  ராமநாதன் “குபேரன் பிங்களாக்ஷனாக மாறிய போது  எப்படி ஃபீல் பண்ணியிருப்பான் என்று தெரிகிறது எனக்கு” என்று சிரித்தான்.

“அது என்ன கதை?” என்று டாக்டர் கேட்டாள்.

“குபேரன் சிவனிடம் போய்ப் பணத்தால் இந்த உலகத்தில் வாங்க முடியாததென எதுவுமில்லை என்று கர்வப்பட்டான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சக்திக்குக் கோபம் வந்து அவனுடைய ஒரு கண்ணைப் பிடுங்கி விட்டாள். குபேரன் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பின் தங்கத்தால் ஆன கண்ணைச் செய்து போட்டுக் கொண்டான். அதை வைத்து உலகைப் பார்த்த போது உலகமே மிகவும் பிரகாசமாகத் தெரிந்ததாம் அவனுக்கு” என்றான் ராமநாதன்.

“இப்போது இந்தக் கண்ணாடியைப் போட்டுக் கொண்ட பின்உங்களுக்கும்

பிரகாசமாகத் தெரிகிறதா?” என்று டாக்டர் லாவண்யா சிரித்தாள்.

“ஆமாம். உதாரணமாக இங்கே வருவதற்கு முன் பார்த்ததை விட இப்போது என் மனைவி மிக அழகாக இருப்பது எனக்குத் தெரிகிறது !” என்றான் ராமநாதன்.

“அடப்பாவி !” என்றாள் வைதேகி.

“நீங்கள் முதல் மாடிக்குப் போனால் அங்கே கடையும் பில் செக்ஷனும் இருக்கிறது” என்றாள் லாவண்யாவும் சிரித்தபடி. “இந்த பிரிஸ்க்ரிப்ஷன் காப்பியையும் அங்கு காண்பியுங்கள்.”

ராமநாதனும் வைதேகியும் அவளுக்கு நன்றி தெரிவித்து விட்டு முதல் மாடிக்குச் சென்றார்கள். பெரிய கண்ணாடிக் கடை.  ஜன்னல்கள், கூரை, ஷெல்ஃபுகள், கவுன்ட்டர்கள்  என்று தரையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கண்ணாடியால் பின்னியிருந்தார்கள். கண்ணாடி அலமாரிகளில் மூக்குக் கண்ணாடிகள், பிரேம்கள், காண்டாக்ட் லென்ஸ் கூடுகள், லோஷன் அட்டைப் பெட்டிகள் ,சன் கிளாஸஸ் என்று அடுக்கி ஒப்பனை செய்து வைக்கப்பட்டிருந்த   கவுண்டர் மேஜைகளுக்குப் பின்புறம்  இரண்டு இளைஞர்கள் நின்றிருந்தார்கள்.

அவர்களில் ஒருவனிடம் ராமநாதன் தன்னிடமிருந்த சீட்டைக் கொடுத்தான். அவன் அதை வாங்கிக் கொண்டு மற்றவனிடம் “சிவா,

இன்னிக்கி ஸ்கூட்டர்லேந்து கீழே இறங்கறப்போ என் கண்ணாடி கீழே விழுந்து பிரேம் ஒடஞ்சு போச்சு.  இந்த பில்லை நீயே போட்டுக் கொடுத்திடறியா?” என்று கொடுத்தான். மற்றவன் அதைப் பார்த்து விட்டுக்  கம்ப்யூட்டரைத் தட்டினான். பின்பு ராமநாதனிடம் “ஆறாயிரம்  ரூபாய் சார் லென்சுக்கு. கேஷா கார்டா?” என்று கேட்டான்.

“டாக்டர் ஃபீஸ்?” என்று கேட்டான் ராமநாதன்.

“டாக்டர் சேர்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்” என்றான் சிவா.

ராமநாதன் திம்மராயப்பாவை நன்றியுடன் நினைத்தான்.

ராமநாதன் கார்டு தருவதாகச் சொன்னான். சிவா பில்லைப் பிரிண்ட் செய்து ராமநாதனிடம் கொடுத்து “கோடியில் கேஷ் கவுன்ட்டர் இருக்கிறது” என்றான்.

ராமநாதன் கேஷியர் பெண்மணியிடம் பில்லையும் கார்டையும் கொடுத்தான். அவள் கறுப்பு நிறக் கண்ணாடி அணிந்திருந்தாள். ‘அலுவலகத்துக்குள் கூலிங் கிளாஸா?’ என்று வைதேகி நினைத்தாள். ராமநாதனிடமிருந்து வாங்கியதும் கேஷியர் அவளது வலது பக்கமிருந்த விளக்கைப் போட்டாள். அதன் ஒளியில் அவள் அணிந்திருந்த கண்ணாடியின் கறுப்பு நிறம் மறைந்து சாதாரண வெள்ளை நிறம் ஒளிர்ந்தது. ‘அட டூ இன் ஒன் கண்ணாடியா?’ என்று வைதேகிக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. கேஷியர் பில்லில் இருந்த விபரங்களைச் சரி பார்த்து விட்டுக் கார்டை மெஷினில் நுழைத்தாள். அப்போது “மம்மி” என்று அழைத்தபடி சற்று முன் கண்ணாடி உடைந்தது என்று சொன்ன கவுன்ட்டர் இளைஞன் அங்கு வந்தான். “டாடி வர இன்னும் லேட்டாகுமா?” என்று கேட்டான்.

அந்தப் பெண்மணி “அவரே வந்து விட்டார் பார்” என்று அவனிடம் சொன்னாள். அந்த இளைஞனுடன் சேர்ந்து ராமநாதனும் வைதேகியும் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே சீனியர் டாக்டர் வாசலில் நின்று அவர்களைப் பார்த்துக்  கையசைத்தார். ராமநாதனும் பதிலுக்கு கையை அசைத்தான். அவர் திரும்பி மாடிப்படிகளில் இறங்கிச் சென்றார்.

ராமநாதனும் வைதேகியும் பணத்தைக் கட்டி விட்டு அவர்களிடம் தந்த பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். சாலையில் இரு பக்கமும் நின்றிருந்த பெரும் மரங்கள் வாகனங்கள் விட்டுச் செல்லும் அழுக்கையும், புகையையும் உள் வாங்கிக் கொண்டு தமது கோபத்தைக் காட்டுவது  போல அசையாமல் நின்றன. எதிர்ப்புறம் தென்பட்ட ஒரு ஒட்டலைப் பார்த்த ராமநாதன் “ஒரு காப்பி அடிச்சிட்டுப் போலாமா?” என்று கேட்டான். வைதேகி தலையை அசைத்ததும் இருவரும் ஓட்டலுக்குள் நுழைந்தார்கள். ஏஸி அறை குளிர்ச்சியாக இருந்தது.. இரண்டு காப்பிக்கு ஆர்டர் கொடுத்தார்கள்.

“ஒரு விஷயம் கவனிச்சேளா?” என்று வைதேகி கேட்டாள்.

“வேலை பாக்கற ஆறு பேர்லே அஞ்சு பேர் டாக்டர் குடும்பம். அதானே?”

வைதேகி சிரித்தபடி”அது மட்டுமில்லே.காண்டாக்ட் லென்ஸ் எப்படி பெஸ்ட்ன்னு உங்களுக்கு க்ளாஸ் எடுத்தாரே ஒழிய அவா  அஞ்சு பேரும் போட்டுண்டு இருந்தது மூக்குக் கண்ணாடிதான்” என்றாள்.

ராமநாதன்  அதைக் கேட்டுத் திகைத்தான்.  அவர்கள் ஐந்து பேரும் காண்டாக்ட் லென்ஸ் அணிந்தவர்களாய் இருந்திருந்தால்?

அவன் தன் மனைவியை நோக்கி ” டாக்டர் பெரிய எகனாமிஸ்ட்டும் கூட”  என்றான்.

 

நாட்டிய மங்கையின் வழிபாடு- 4 –     கவியரசர் தாகூர்- தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்

முன்கதைச்சுருக்கம்: மகத நாட்டரசன் பிம்பிசாரன் புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்டவன்; தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரான் அமர்ந்து உபதேசம் செய்த இடத்தில் ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான்.

          இளவரசன் அஜாதசத்ரு விரும்பியவண்ணம் அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான் பிம்பிசாரன். அரசி லோகேஸ்வரி இதனை விரும்பாததால் மிகவும் மனக்கசப்பிற்குள்ளாகி இருந்தாள். அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மனம்நொந்து போயிருக்கிறாள்.

          ஸ்ரீமதி எனும் நாட்டியமங்கையிடம் உபாலி எனும் பிட்சு யாசகம் வேண்டி வருகிறார். எதைக் கொடுப்பது எனத் திகைப்பவளிடம் உரிய சமயத்தில்கடவுளே அதனைப் பெற்றுக்கொள்வார் எனக் கூறுகிறார். மாலதி என்றொரு கிராமத்துப்பெண் வழிபாட்டுவேளையில் பணிபுரிய ஸ்ரீமதியிடம் வந்து சேர்கிறாள். அவள் தன் கதையை ஸ்ரீமதியிடம் விளக்கிக்கொண்டிருக்கும்போது இளவரசிகள் வந்து இருவரையும் கிண்டல்செய்து துன்புறுத்துகின்றனர்.

அரசி லோகேஸ்வரி அப்போது உள்ளே வருகிறாள்.

          இனித் தொடர்ந்து படிக்கவும்:  


ரசி: என்னால் இனியும் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது! வீதியிலிருந்து வரும் அந்த இரைச்சல் எதிரொலிப்பதனைக் கேட்டாயா?- எங்கள் குருவான புத்தபிரானுக்கு வணக்கங்கள்! ஓ! அது என் உள்ளத்தை நடுநடுங்க வைக்கிறது.

(அவள் காதுகளைப் பொத்திக் கொள்கிறாள்). அது இன்று முடிவுற வேண்டும், இங்கேயே, இப்போதே!

மாலதி: மகாராணி, அமைதியாக இருங்கள்!

அரசி: எனது மனவேதனையை நான் எவ்வாறு தணித்துக் கொள்வேன்? ஒரு வாசகம் (சொல்) அதனை ஆற்றுமா? உயர்வான அமைதிக்கு எங்கள் வணக்கங்கள், உயர்வான அமைதி?- இந்த மந்திரத்தினால் எனக்கு இப்போது என்ன பிரயோசனம்? இல்லை. சினமிக்க மின்னலை விளைவிக்கும் இறைவிக்கு வணக்கங்கள்! அழிப்பவளும், கொடியவளுமான அப்பெண்மணிக்கு வணக்கங்கள்! குருதியும் நெருப்பும் மட்டுமே அமைதியைக் கொணர இயலும் – இல்லாவிடில் ஒரு தாயின் கரங்களிலிருந்து மகனை வலியப் பிடுங்க இயலுமா? புகழ்வாய்ந்த ஒரு அரசன் தன் அரியாசனத்திலிருந்து காய்ந்த இலைச்சருகு போல உதிர்ந்து விழ இயலுமா?

(மற்ற இளவரசிகளிடம்) என் குழந்தைகளே! நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

ரத்னாவளி: (சிரித்தவாறு) நாங்கள் மோட்சத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய பாவப்பட்ட உள்ளங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு சிறிதுசிறிதாக எங்கள் குருவான ஸ்ரீமதி காட்டும் பாதையைப் பின்பற்ற முயல்கிறோம்.

வாசவி: ஓ, பொறுப்பில்லாமல் பேசாதே!

அரசி: ஒரு நாட்டிய மங்கை உனது குருவா? ஆனால் உண்மையில் அப்படித்தான் இந்த மதம் நம்மை வழிநடத்துகிறது. நாதியற்றவர்களே நம்மை முக்திக்கு வழிகாட்டுபவர்களாக அமைவார்கள். ஆக, ஸ்ரீமதி துறவியாக வடிவெடுத்துள்ளாளா? புத்தர்பெருமான் நமது தோட்டத்திற்கு வந்திருந்தபோது, அனைவரும் அவரைத் தரிசிக்க முந்தினார்கள்; நான் இந்தப்பெண்மீது பரிதாபப்பட்டு அவளையும் வருமாறு அழைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டசாலியாகிய இந்த ஜன்மம் மறுத்துவிட்டது. இப்பொழுது என்னவென்றால், பிட்சு உபாலி பிட்சைக்கு வருபோதெல்லாம் அரசர்களின் வம்சத்தில் வந்த இளவரசிகளைப் பார்ப்பதனைத் தவிர்த்துவிட்டு, இந்தப் பெண்ணின் கைகளிலிருந்தே பொருள்களைப் பெற்றுச் செல்கிறார் எனக் கேள்விப்படுகிறேன். ஆ! முட்டாள் பெண்களே! இன்னுமா நீங்கள் இந்த மதத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரக இருக்கிறீர்கள்? அது புழுதியில் கிடப்பவர்களையும் வல்லமை படைத்தவர்களின் ஆசனத்துடன் சரிசமமாக இருத்துகிறது. அரசர்கள் செல்ல விரும்பாத இடங்களுக்குள் பிச்சையெடுப்பவர்கள் புகுந்து விடுகிறார்கள். பைத்தியக்கார தற்கொலைவாதிகளே! இதுவே உங்களுக்கு உண்மையான மதமாக இருக்கிறது.

(ஸ்ரீமதியிடம் கூறுகிறாள்) நாட்டியப்பெண்ணே! உபாலி உனக்கு முதலில் தீட்சைகொடுத்தபோது எந்தப் புனித நூலை நீ அவரிடமிருந்து பெற்றாய்? இப்போது உனக்கு அதனைப் பாட தைரியமிருக்கிறதா? உனது புனிதமற்ற நாக்கு ஊமையாகி விடும்.

ஸ்ரீமதி: (பாடுகிறாள்)

புத்தருக்கு வணக்கங்கள், அவரே கற்பிப்பவர்,

          தர்மத்திற்கு வணக்கங்கள், அதுவே தலைகாக்கும்,

          சங்கத்திற்கு வணக்கங்கள், அதுவே அனைத்திலும் உயர்வானது.

அரசி: (உடன் சேர்ந்து கொள்கிறாள்)

புத்தருக்கு வணக்கங்கள், அவரே கற்பிப்பவர்,- இல்லை இல்லை, போதும்!

ஸ்ரீமதி: (தனது பாடலைத் தொடருகிறாள்)

ஓ! கடவுளே! நண்பர்களேயற்ற என்மீது நீரே தாங்களே கருணை காட்டுவீர்கள்

அரசி: (தனது மார்பிலடித்துக்கொண்டு) ஓ நண்பர்களேயற்ற நான், நண்பர்களேயற்ற நான்! ஸ்ரீமதி, அந்த வரிகளை எனக்காகப் பாடு:

  ஓ மிகவும் கருணை நிறைந்த கடவுளே!

ஸ்ரீமதி: ஓ மிகவும் கருணை நிறைந்த கடவுளே!—

அரசி: போதும்! மேலே வேண்டாம்! மின்னலை விளைவிக்கும் சினமிக்க இறைவிக்கு வணக்கங்கள்!

(ஒரு சேவகன் நுழைகிறான்)

சேவகன்: (அரசிக்கு மட்டும் கேட்கும்படி) மகாராணி, இளவரசர் சித்ரா தன் தாயைக் காண வந்துள்ளார்.

அரசி: இந்த மதம் (புத்தமதம், சமயம்) பொய்யானது என்று எவரால் கூற இயலும்? புனிதமான புத்தகத்தின் சில பகுதிகள் பாடப்பட்ட உடனேயே, கெடுதல்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றன! ஓ! நம்பிக்கையில் பலமற்றவர்களே! ஒருகாலத்தில் நீங்கள் எனது துயரத்தைக்கண்டு நகைத்தீர்கள்; ஆனால் இப்போது மிகவும் தயாளனான எனது கடவுள் வழங்கும் கருணையின் பலத்தைக் காணுங்கள் – அது கல்லையும் கரையச் செய்யும்! நான் சொல்வதைக் கேளுங்கள்: எனது மகனை மீட்டெடுப்பேன் என்றும், எனது அரியாசனத்தைத் திரும்ப அடைவேன் என்றும் நான் மறுபடியும் கூறுகிறேன். நமது கடவுளைப் புழுதியில் கிடத்தி அவமதித்தவர்களின் வீண்பெருமையை நான் திரும்பவும் பார்க்கத்தான் போகிறேன்.

எனது அடைக்கலம் புத்தரிடமே!

                     எனது அடைக்கலம் தர்மத்தினிடமே!

                     எனது அடைக்கலம் சங்கத்தினிடமே!

அவள் சேவகனுடன் செல்கிறாள்.

ரத்னாவளி: காற்று இப்போது எங்கிருந்து வீசுகிறது, மல்லிகா?

மல்லிகா: கண்மூடித்தனமான காற்று இன்று ஆகாயமெங்கும் நிறைந்துள்ளது. அவை எங்கிருந்து வருகின்றன, எங்கு செல்கின்றன, அல்லது எவ்வாறு மனிதர்களை அலைக்கழிக்கின்றன எனக் கூறவும் முடியுமா என்ன?

ரத்னாவளி: இருந்தாலும் இளவரசன் சித்ரா திரும்ப வந்துவிட்டான்!

மல்லிகா: இது எவ்வாறு முடிவுறுகின்றதெனப் பொறுத்திருந்து பார்.

மாலதி: (ஸ்ரீமதியிடம்) சகோதரி, நமது கருணைமிகுந்த கடவுள் இந்தத் தோட்டத்திற்கு வரும்போது, நீங்கள் சென்று அவரைத் தரிசிக்க முடியாதென்பது உண்மையா?

ஸ்ரீமதி: ஆம்; முற்றிலும் உண்மையே! அவர் முன்பு ஒருவர் நிற்பதென்பது, அவருடைய சந்நிதிக்கு ஒரு காணிக்கை அளிப்பதற்காகவே. நான் புனிதமற்றவள், எனது சமர்ப்பணம் தயாராக இல்லை!

மாலதி: ஐயோ! எவ்வளவு துயரமானது இது, அன்பான சகோதரி!

ஸ்ரீமதி: அவரைக் கண்களால் காண்பதென்பது அவரை உண்மையாக தரிசிப்பதற்கல்ல; அவரைக் காதால் கேட்பதும் அவரைப் புரிந்து கொள்வதற்கல்ல.

ரத்னாவளி: ஓஹோ! நல்ல அடி நமக்கு! இந்த நாட்டிய மங்கையின் வினயம் எனும் பலமற்ற திரை, தண்டனையிலிருந்து வேண்டும் மன்னிப்பின் கடைசி மூச்சில் கவிழ்ந்துவிட்டதே!

ஸ்ரீமதி: ஒரு சம்பிரதாயமாக இருந்த எனது வினயத்தின் நாட்கள் முடிவடைந்து விட்டன. உங்களைப் புகழ்ந்து பொய்களைக் கூற நான் மறுக்கிறேன். உங்கள் கண்கள் மட்டுமே கண்டிருக்கும் அவரை (கடவுளை, புத்தரை) நீங்கள் உண்மையாகக் கண்டதில்லை (அறிந்து கொண்டதில்லை) என நான் பகிரங்கமாகக் கூறுகிறேன்.

ரத்னாவளி: வாசவி! பத்ரா! ஒரு நாட்டிய மங்கையின் அதிகப்பிரசங்கித்தனத்தை நீங்கள் எவ்வாறு பொறுத்துக் கொள்கிறீர்கள்?

வாசவி: வெளியில் காணும் உண்மையின் ஒளியை நாம் பொறுத்துக்கொள்ள முடியாவிடின், உள்ளுக்குள் இருக்கும் பொய்ம்மையைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.

ஸ்ரீமதி, எனது உள்ளத்தில் தைத்துள்ள முட்கள் தங்களது கூர்மையை இழக்கும்படி, அந்த வரிகளைத் திரும்ப இசை (பாடு).

ஸ்ரீமதி: ஆசானாகிய புத்தபிரானுக்கு, வணக்கங்கள்,

                      காத்தளிக்கும் தர்மத்திற்கு, வணக்கங்கள்,

                      அனைத்திலும் உயர்வான சங்கத்திற்கு, வணக்கங்கள்!

நந்தா: நமது கடவுளைக்காண நாம் வெளியே சென்றோம். ஆனால் அவர் ஸ்ரீமதிக்கு அவளுடைய உள்ளத்தின் ஆழத்தில் காட்சி கொடுத்துவிட்டார்.

ரத்னாவளி: நாட்டியமங்கையே, நீ உனது அடக்கத்தை இழந்துவிட்டாயா? இதனை மறுத்துக் கூற மாட்டாயா?

ஸ்ரீமதி: எதற்காக, இளவரசி? அவர் கருணையோடு எனது உள்ளத்தில் அடியெடுத்துவைக்க எண்ணினார் எனில், அந்தப் புகழ் அவருக்கே, எனதல்லவே.

வாசவி: போதும். சொற்கள் மேலும் சொற்களைப் பிறப்பிக்கின்றன. நீ பாடு, ஸ்ரீமதி.

(காட்சிக்குப் பின்னிருந்து ஒரு குரல் கேட்கின்றது)

மூன்று ரத்தினங்களுக்கு வணக்கங்கள்!

                               ஞானம் பெற்றவருக்கு வணக்கங்கள்!

                               உயர்வான வாழ்க்கைக்கு, வணக்கங்கள்!

                               பேரருள் நிறைந்தவருக்கு, வணக்கங்கள்!

பிட்சுணி உத்பலா தோன்றுகிறாள்.

இளவரசிகள்: (வணங்கியவாறு) வணக்கத்துக்குரிய பெண்மணியே, தங்களை வணங்குகிறோம்.

பிட்சுணி: ஸ்ரீமதி!

ஸ்ரீமதி: தங்கள் உத்தரவு, பெண்மணியே!

பிட்சுணி: இன்று நமது தெய்வத்தின் பிறந்தநாள்; வசந்தகாலத்துப் பௌர்ணமி இரவு; இன்று மாலை அசோகமரத்தடியில் உள்ள அவருடைய பூஜாபீடத்தில் காணிக்கைகளை வைப்பது ஸ்ரீமதியின் கடமை.

ரத்னாவளி: என் காதில் சரியாகத்தான் கேட்டேனா? எந்த ஸ்ரீமதி என்று கூறுகிறீர்கள்?

பிட்சுணி: இதோ, இங்குள்ள இந்த ஸ்ரீமதி.

ரத்னாவளி: அரண்மனை நாட்டிய மங்கையா?                                                                                                                                                                    (தொடரும்)

———————-&&&———————

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 குதூகலம் தரும் குழந்தைப் பாடல்கள் – சதுர்புஜன்

 

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

 1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
 2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
 3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
 4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
 5. எனது நாடு – செப்டம்பர் 2020
 6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
 7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
 8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
 9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
 10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020

 

 1. எல்லையில் வீரர்!

40+ Most Popular Indian Army Drawing For Kids Easy | Barnes Family40+ Most Popular Indian Army Drawing For Kids Easy | Barnes Family

லெஃப்ட் ! ரைட் ! லெஃப்ட் ! ரைட் ! லெஃப்ட் ! ரைட் ! லெஃப்ட் !

லெஃப்ட் ! ரைட் ! லெஃப்ட் ! ரைட் ! லெஃப்ட் ! ரைட் ! லெஃப்ட் !

 

எல்லையில் வீரர் நிற்கின்றார் – எம்

நாட்டைப் பாதுகாக்கின்றார் !

எதற்கும் தயாராய் இருக்கின்றார் !

ஆயுதம் தாங்கியே நிற்கின்றார் !

 

ஆகாயம், தரை, கடல் என்றே –

முப்படையும் வலுவாய் நிற்கின்றார் !

எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்வார் !

வெற்றி வாகை அவர் சூடிடுவார் !

 

வீண் வம்புக்குப் போக மாட்டார் ! அவர்

வந்த சண்டையை விடமாட்டார் !

ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து

எம் வீரர் வரிசையாய் நிற்கின்றார் !

 

நாட்டுக்கிங்கே ஆபத்தென்றால் –

ஓடி வந்தே அவர் உதவுகின்றார் !

புயல் வெள்ளம் என எது வந்தாலும் –

துயர் துடைக்க அவர் வருகின்றார் !

 

யாதும் ஊரே யாவரும் கேளிர் – என

சொன்னவர் நாங்கள் இந்தியர்தான் !

அமைதியாய் இருப்போம் அன்பை வளர்ப்போம் –

எங்களை சீண்டினால் விடமாட்டோம் !

 

நானும் ஒரு நாள் இந்தியப் படையில் –

சேர்ந்தே சாகசம் செய்திடுவேன் !

நாட்டைக் காப்பேன் நன்மைகள் புரிவேன் –

பெருமைகள் பலவும் சேர்த்திடுவேன் !

 

  

 

 

 1. பலூன் ! பலூன் ! பலூன் !

Boy and Girl Play with Balloons Coloring Pages Kids Drawing Coloring and Learn Color | Drawing for kids, Coloring pages for kids, Coloring pages

. பலூன் ! பலூன் ! பலூன் !

 பலூன் ! பலூன் ! பலூன் !

 

பலூன் மாமா வருகின்றார் !

எங்கள் தெருவில் வருகின்றார் !

வீட்டின் முன்னே நிற்கின்றார் !

என்னைப் பார்த்து சிரிக்கின்றார் !

 

. பலூன் ! பலூன் ! பலூன் !

 பலூன் ! பலூன் ! பலூன் !

 

வண்டி நிறைய பலூன் ! பலூன் !

வண்ண வண்ணமாய் பலூன் ! பலூன் !

சிறிதும் பெரிதுமாய் பலூன் ! பலூன் !

பலவித டிசைனில் பலூன் ! பலூன் !

பலூன் ! பலூன் ! பலூன் !

பலூன் ! பலூன் ! பலூன் !

 

அம்மா பலூனை வாங்கித் தா !

எனக்கு பலூன்கள் வாங்கித் தா !

இந்தக் கையிலும் அந்தக் கையிலும்

இரண்டு கையிலும் ஊதித் தா !

 

பலூன் ! பலூன் ! பலூன் !

பலூன் ! பலூன் ! பலூன் !

 

சிகப்பு பச்சை நீலமென்று

எல்லா நிறத்திலும் பலூன் வேணும் !

பூனை போல பலூன் வேணும் !

பூதாகாரமாய் பலூன் வேணும் !

 

பலூன் ! பலூன் ! பலூன் !

பலூன் ! பலூன் ! பலூன் !

 

ப்பூ ப்பூ என்றே ஊதிடலாம் !

பெரிதாய் வளர்வதைப் பார்த்திடலாம் !

தடவித் தடவி மகிழ்ந்திடலாம் !

பறக்கும் – தாவிப் பிடித்திடலாம் !

 

பலூன் ! பலூன் ! பலூன் !

பலூன் ! பலூன் ! பலூன் !

 

 

            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வழக்காடுமன்றம் – பொன்னியின் செல்வனில் ஆதித்தனைக் கொன்றது யார்? டாக்டர் எல். கைலாசம்

நேற்று மாலை (2/11/2020 – 6.30 pm) குவிஞம் அளவளாவல் சார்பில் இணையம் வழியாக நடத்தப் பெற்ற வழக்காடு மன்றம் கேட்டு மகிழ்ந்தேன். குவிஞம் நிறுவனம் எடுத்த ஆதித்தக் கரிகாலன் தலைப்பு சரித்திரப் பிரியர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளாரான கல்கி அவர்கள் குற்றம் சாட்டப்பெற்றார்கள்.

கல்கியின் மீது சாற்றப்பெற்றக் குற்றம் பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆதித்தக் கரிகாலனைக் கொலை செய்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அதைக் கூறாமல் மறைத்துவிட்டார் என்பதே. சரித்திரப் புதினத்தின் துருவ நட்சித்திரம் காலச்சக்கரம் நரசிம்மா நடுவராக இருக்க, பாண்டிச்சேரியை சார்ந்த உளிமகிழ் வழக்குரைந்தார்.  மிக அருமையாக கல்வெட்டுச் சான்றுகளை எல்லாம் சுட்டிக்காட்டி, ஆதித்தனைக் கொன்றது மதுராந்தகன் என்பது தெரிந்தும் அதைப் புதினத்தில் கூறாமல் விட்டு விட்டார் என்று குற்றம் சாட்டினார்.

எனது நண்பர் உளிமகிழ் சொன்ன குற்றச் சாட்டை மறுத்தவர் உடுமலைப்பேட்டையைச் சார்ந்த முனைவர் தைலாம்பாள் அவர்கள். முனைவர்  தைலாம்பாள் அவர்கள் ஒவ்வொருவராக செய்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லி, ஆதித்தன் தற்கொலை செய்து கொண்டான் என்று சொன்னார். அறிஞர் கல்கி வாசகர்களின் மத்தியில் சரித்திர ஆர்வத்தைத் தூண்ட புதினத்தில் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்றும் அது புதினம் எழுதும் எழுத்தாளரின் உரிமை என்றும் கொலை செய்தவனை சொல்லத்தான் வேண்டும் என்று எந்த விதியும் இல்லை என்றும் வாதிட்டார்.

இந்த வழக்குக்கு அனுஷா வெங்டேஷ் உட்பட ஐந்து படித்தறிந்த சான்றோர்கள் தங்களின் கருத்துகளை சொன்னார்கள்.

அவர்களில் நான்கு பேர் கல்கி எந்தத் தவறும் செய்யவில்லை என்று சொன்னார்கள். நூற்றுக்கும் மேற்பட்டப் பங்கு பெற்றோர்களில் தொன்னூறு சதவிகிதம் கல்கி எந்தத் தவறும் செய்யவில்லை என்று வாக்களித்தார்கள்.

இதையெல்லாம் கேட்ட காலசக்கரம் நரசிம்மா அனைத்தையும் ஆராய்ந்து நீண்ட தீர்ப்பைக் கொடுத்தார். அதில் புதினத்தில் கல்கி ஆதித்தனைக் கொன்றவனைப் பற்றி சொல்லாமல் ஒன்றும் இல்லை. யாழிக்குப் பின்னால் இருந்து யார் என்று தொடர்ந்திருந்தால் தெரிந்திருக்கும், வாசகர்களின் யூகத்துக்கு விட்டிருக்கிறார் என்றும் அதனால் கல்கி மீது சாற்றப்படும் குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கை தள்ளுபடி செய்தார்.

உளிமகிழ் சொன்னபடி மதுராந்தகன் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தால் பாசமான தம்பி அத்தனை இலகுவாக விட்டிருக்க மாட்டார். தனக்கு வந்த ராஜ பதவியைக் கொலைகாரனுக்கு விட்டுக் கொடுத்திருக்க மாட்டார். மிகப்பெரிய வீரனான என்னதான் நந்தினி சொன்னாலும் கரிகாலன் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழையாக இருக்க வாய்ப்பில்லை. ஆக திருமதி  தைலாம்பாள் சொன்னபடி இது தற்கொலையும் அல்ல.

இதுவரை எத்தனையோ வரலாற்று அறிஞர்கள் எத்தனை முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியாத கொலைகாரனை, ஆயிரம் வருடம் கழித்து நம்மால் தான் கண்டுபிடிக்க முடியுமா என்ன?

கல்கியின் மீது சாட்டப்பட்டக் குற்றத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று ஆதித்தனைக் கொன்றவன் யார் என்று அவருக்கு தெரியும். மற்றது அது தெரிந்தும் அவர் சொல்லவில்லை என்பது.

மிகப்பெரிய ஆராய்ச்சியாளரான கல்கி ஆதித்தனைக் கொன்றவனை யூகித்திருப்பார் என்ற அனுமானத்தில் உளிமகிழ் சொன்னாலும் அதற்கு அவரால் சரியான முழுமையான ஆதாரங்களைக் கொடுக்க முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல் இதுவரை ஆதித்தனை கொன்றவன் யார் என்று யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. அனுமானத்தில் சோழிகளை உருட்டியும் கூட சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் கல்கிக்கு தெரிந்திருந்தால் கட்டாயம் புதினத்தில் சொல்லியிருப்பார் என்பது எனது கருத்து.

சரித்திரக் கதை எழுதுவதற்கும், குற்றப்புதினம், குடும்பப் புதினம் போன்றவற்றை எழுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. சரித்திரநிகழ்வுகளை மாற்றி எழுத முடியாது. ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட உண்மையை மறைத்து எழுத முடியாது. எனக்குத் தெரிந்து கல்கி இங்கு தவறவில்லை. நம்மைப்போலவே அவராலும் ஆதித்தனைக்கொன்றவனை சரியாக அனுமானிக்க முடியாமல் இருந்திருக்கலாம். அதை அவர் அப்படியே தனக்குத் தெரிந்ததை அப்படியே புதினத்தில் சொல்லியிருக்கிறார் என்பது எனது கருத்து. ஆக கல்கி மீது எந்தக் குற்றமுமில்லை. நரசிம்மா கொடுத்தத் தீர்ப்பு சரிதான்.

ஞாயிறு மாலையில் மிக அருமையான நிகழ்ச்சியைக் கொடுத்த குவிஞம் நிறுவனத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.

இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடத்துவது நமது பராம்பரியத்தை அறிந்து கொள்ள உதவும்.


குண்டலகேசியின் கதை- 5- தில்லை வேந்தன்

குண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன் | குவிகம்

 முன் கதைச் சுருக்கம்:

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
மகளின் மனதை மாற்ற முடியாத வணிகன்,மன்னனிடம் நயமாகப் பேசி மன்றாடி அவனை விடுவிக்கிறான்……..

மன்னனுக்கு வணிகன் நன்றி தெரிவித்தல்

இன்முகத்  தோடு  மன்னன்
     இருங்கழல் பணிந்து வீழ்ந்தான்.
பொன்மணி,அணிகள், யானை,
     புரவிகள்   பலவும்   தந்தான்
என்மன மகிழ்ச்சிக் காக
      இவற்றைநீ ஏற்ற ருள்வாய்
வன்முறை  இன்றிக்  காளன்
       வாழ்ந்திடச் செய்வேன் என்றான்.

             மன்னன் கூற்று
  

கொட்டியே கொடுத்த போதும்
     கோமுறை பிழைத்தல் செய்யேன்
மட்டிலா  அன்பு  மிக்கு
     மன்னனைத் தந்தை யாகச்
சுட்டிய சொல்லென் உள்ளம்
     தொட்டதால் இணங்கி விட்டேன்
கிட்டிய   விடுத  லையைக்
     கேடுறா வண்ணம் காப்பாய்
     
      ( கோமுறை — அரச நீதி)

         வணிகன் மறுமொழி
     

வாழி வேந்தே! வாழிகொற்றம்!
     வளமார் நாடு வாழியவே!
சூழும் புகழ்சால் தொன்மைமிகு
     சோழர் குடியும் வாழியவே!
பாழி லாதுன் ஆணையினைப்
     பக்கு வமாகக் கடைப்பிடிப்பேன்.
ஆழும் அன்பு மகள்மணத்தை
      அடியேன் நடத்த வாழ்த்திடுவாய்

காதல் நோய் கொண்ட  பத்திரை, தனிமையில் வாடுகிறாள். தன் பிரிவுத் துன்பத்தைப் பெருகச் செய்வதாக, அன்றில் பறவையையும், நிலவையும், தென்றலையும் வெறுத்துக் குறை கூறுகிறாள்:

அன்றில் பறவையைக் கடிந்து கொள்வது

அன்றில் புள்ளே நீயென்றும்
     அன்புத் துணையைப் பிரிவதுண்டோ?
இன்று நானும் தனித்திருக்க
      ஏனோ உரத்துக் கூவுகின்றாய்?
நன்று நீளும் இரவுக்குள்
      நலிந்தென் உயிரும் பிரிந்துவிட்டால்
கொன்ற பழியும் உனக்காகும்
     கொஞ்சம் அமைதி காப்பாயே!

        நிலவை வெறுப்பது

வெள்ளை நிலவே நீயின்று
     வெயிலாய்  வெம்மை வீசுவதேன்?
கொள்ளை அழகுக் குளிர்நிலவாய்க்
     கூறும் கவிஞர் பொய்யர்கொல்?
முள்ளின் தொகுப்போ உன்கதிர்கள்?
     மூண்ட பகையும் நமக்குண்டோ?
தள்ளிப் போவாய் வேறிடமே
      தனியே தவிக்க விட்டுவிடு!

          தென்றலை விரட்டுவது

மலையில் இருந்து மணம்சுமந்து
     வருவாய் தென்றல் எனநினைத்தேன்.
உலையின் தீயாய் வெப்பத்தை
      உன்றன் மூச்சாய் விடுகின்றாய்!
இலையோ ஈரம் உன்நெஞ்சில்
       இரக்கம் என்மேல் வரவிலையோ?
நிலையைக் கண்டு நின்றுவிடு
       நெருங்கி டாமல் சென்றுவிடு!

                      திருமணம்

மகளின் நிலைமை கண்டிரங்கி
      வணிகன் செயலில் உடனிறங்கித்
தகவு சார்ந்த சான்றோரைத்
       தனது மனைக்கு வரவழைத்தான்
புகன்ற கருத்தைச் செவிமடுத்தான்
       பொழுதைத் தள்ளிப் போடாமல்             
மிகவும் சிறப்பாய்த் திருமணத்தை
     விரைவில் நடத்த முடிவெடுத்தான்     
        
                          
 
யானை மீதேறி மகளிர் திருமணச் செய்தியை அறிவித்தல்

தேனின் மொழியாள் பத்திரைக்கும்
     சிந்தை கவர்ந்த காளனுக்கும்        
வானின் மீன்கள் நன்னிலையில்
     வயங்கும் நாளில் மணமென்று
மானின் சாயல் இளமடவார்
     வளைகள் குலுங்கி இசையொலிப்ப
யானை    எருத்தம்    மீதேறி
     எங்கும் நகரில் அறிவித்தார்!

      ( எருத்தம் – கழுத்து/ பிடரி)
        

(தொடரும்)

“ப்ளான் ஏ” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Rajasekharan Parameswaran | Saatchi Art

அழகான நீல வானம். குயில்களின் பாட்டு. அடர்த்தியான மர வேர்களில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் அணில்கள். பூத்துக் குலுங்கும் பூக்கள். ரம்மியமாக இருந்தது. இதையெல்லாம் பார்க்கும் போது நினைவூட்டுகிறது, இந்த வீட்டை நாங்கள் எவ்வளவு பாசத்தைக் கொட்டி கட்டினோம் என்று! மிக அற்புதமான நாள் இன்று.

சொல்லி முடிக்கவில்லை, இதோ வருகிறாள் என் புன்னகை சிந்தும் ராஜாத்தி ! என் மகள். தன் வீட்டைச் சரி செய்து, சமைத்து வைத்த பிறகே வருவாள்.  தான் வெளியே போக வேண்டும் என்றால், வீட்டு வேலை அனைத்தையும் செய்து வைத்து விட்டே வருவாள், இந்த மகராசி. அவள் மாமியார் எவ்வளவோ சொல்லிப் பார்ப்பாள், இவள் காதில் போட்டுக் கொள்ள மாட்டாள். மாமனார்-மாமியார் இவளைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

இங்கேயும் சலித்துக் கொள்ளாமல் செய்வாள். தன் உயர்ந்த பதவியையும், மேல் படிப்பையும் காட்டிக் கொள்ள மாட்டாள். இவளைப் போலவே இவள் கணவனும். கண்ணியமானவர். அரசாங்க அதிகாரி. பலருக்கு உதவி செய்வார். தயாளள மனம் உடையவர். எங்களைப் பொறுத்த வரை கடவுள் எங்களுக்குத் தந்திருக்கும் வரப்பிரசாதம், அவர்.

இருவருக்கும் என் சமையலறையில் சமைக்கப் பிடிக்கும். போளி, பஜ்ஜி போடுவது ஆரம்பமானது.

இவர்கள் வருவதற்கு முன்பாக, எங்களோடு  ப்ரிட்ஜ் (bridge) விளையாடும் நண்பர்களை ஒவ்வொருவராகப் பட்டியலிட்டேன். அடுத்து, எங்களோடு இயற்கையை ரசித்துப் பரிமாறிக் கொள்பவர்களையும் சேர்த்தேன். பிறகு பேச்சுத் துணை நண்பர்களும். கடைசியில், இவருக்குச் சமைக்கப் பிடிக்கும், செடிகளைப் பார்த்துக் கொள்வதும் பிரியமானது என்று இவற்றின் பட்டியலையும் சேர்த்து விட்டேன். கூடை நிறைந்தது எனத் தோன்றியது. எல்லாம் ரெடி. என் கணவரின் நாட்கள் விதவிதமாக, வண்ணமயமாக இருக்க விரும்பினேன். இதெல்லாம் அதற்கான ஏற்பாடுகள்.

Pin on Indian women painting

 

எங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் நான் எப்போதும் ப்ளான் செய்வதைக் கேலி செய்வார்கள்!

அவரை நினைத்துக் கொண்டு இருந்தேன். பல நாடுகளில் வசித்து, எவ்வளவு சுவையான அனுபவங்கள்! வாழ்க்கை அருமையாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இன்று போல!

இதோ சிரித்து-ஆடி, ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக் கொண்டு வருகிறார்கள் அப்பாவும்-பிள்ளையும். என்னமான ஜோடி இவர்கள்! ஞாயிற்றுக்கிழமை என்றால், இங்கு எல்லோருக்கும் தெரியும், க்ளிங் க்ளிங்… என ஆரம்பிக்கும் அவர்கள் சைக்கிள் பயணங்கள். எல்லா பாதுகாப்பு கவசங்களையும் அணிந்த பிறகே தொடங்கும். முடித்து வந்தார்கள்.

சற்றே பின்தொடர்ந்து வந்தார்கள் எங்கள் நண்பர்கள் பலர். சிலர் குடும்பத்துடன் வந்தார்கள். வரவேற்கச் சட்டென்று குளித்து ஜம்மென்று உடை அணிந்த அவருடன், எங்கள் மகராசி மகள் கையைத் துடைத்துக் கொண்டு வந்தாள்.

என் மகன் மடமடவென குளித்து, அப்படியே ஃப்ரெஷாக வந்தான். என்னை அணைத்தவாறு தான் செய்து வைத்திருந்த சாக்லேட் கேக் நோக்கிக் கூட்டிச் சென்றான். பைட் பைப்பர் ஆஃப் ஹெம்லின் போல எல்லோரும் பின் வந்தார்கள்.

உணவு வாசனைக் கமழ எல்லோரும் கூடினார்கள். கேக்கை வெட்டி, பாட்டுப் பாடினோம். சாப்பிட்டோம்.

இதோ சொல்லி வைத்தது போல என்னுடைய ஹாச்பைஸ் (hospice) வண்டி வந்து நின்றது.  என்னை முதல்  சிகிச்சைக்கு அழைத்துப் போகவே.

எனக்கு “மறுவாழ்வு” தரவிருக்கும் கீமோ, அதற்குச் செல்ல வேண்டும். அதற்கு நான், கூடவே என் புத்தகங்கள், பாட்டு, பென்சில், திருத்த வேண்டிய தாள்கள், ஸ்கைப் மூலமாக வகுப்புகள் எடுக்க டேப்லட் (மருந்து அல்ல). ஓட்டுநர் வந்து எல்லா பொருட்களையும் எடுத்துக் கொள்ள, அவர் ஏதோ ஜோக் சொல்ல சிரித்தபடியே சென்றோம்.

எங்களைப் பொறுத்தவரை, புற்றுநோய் வாழ்க்கையையோ எங்கள் சந்தோஷத்தையோ கலைக்க முடியாது!

 

குமாரசம்பவம் – எஸ் எஸ்

DEVO KE DEV MAHADEV: DEVO KE DEV MAHADEV

முனிவரும் மனமகிழ்ந்து தகுதிவாய்ந்த அங்கிரஸைப் பேசும்படி பணித்தனர்

 

அனைத்தும்  அர்ப்பணித்த  இமவானே! மலையினும் பெரிய மனம் உனக்கு !

உலகை அடக்கிய விஷ்ணுபோல் உயிர்கள் அனைத்தும் உன்னிடம் அடக்கம்

 பூமியைத்  தாங்கும் உன்னால்  ஆதிஷேஷனும் சிரமமின்றி இருக்கின்றான்

உன்மடியில் தவழும் கங்கையும் பிறநதியும் உலகையே உய்விக்கின்றன

விஷ்ணுபாதம் உதித்த கங்கை மறுபடி உன்னிடம் உதித்துப் பிறந்தாள்

உலகளவு உயர்ந்த பெருமாள் போல் நீயும் உயர்ந்து பரந்திருக்கிறாய்!     

தேவரைப் போல் யாகத்தில் பாகம் பெரும் நீ தங்க மேருவை மங்க வைத்தாய்  

மலைவடிவில் கடினம் கொண்ட நீ  மனத்தளவில் மிகவும் மென்மையானவன்

உனக்கு நன்மைதரும் செயலை  எடுத்துரைக்கவே நாங்கள் வந்துள்ளோம் !

சகல சித்தியும் புத்தியும் சக்தியும் பெற்றவர் சிவபெருமான் என  நீ அறிவாய்

ரதத்தினைத் தாங்கும் குதிரைபோல் அண்ட சராசரத்தைக் காப்பவர் அவரே

ஆத்மாவிற்கும் ஆத்மா அவர்! தவத்தின் பலன் தரும் பரம்பொருளும் அவரே!

உலகிற்கே நலன்தரும் நம்பிரான் உன்மகள் பார்வதியை வேண்டுகிறார்

சொல்லுடன் பொருள் சேர்வதுபோல் சிவ பார்வதி  இணைய வேண்டும்   

உலகின் தந்தையான அவரைப் பார்வதி மணந்தால் உலகுக்கே தாயுமாவாள்

சிவனை வணங்கும் இந்திராதி தேவர் பார்வதியையும் வணங்கித்துதிப்பர்

சிவனிடம் நீ கொள்ளும் சம்மந்தம் உன் குலத்திற்கே பெருமை அளிக்கும்

அவரிலும் பெரியவர் எவருமிலா சிவனும்  வணங்கும் பெருமை பெறுவாய்”  

 

முனிவர் உரை கேட்ட பார்வதி  நாணி தாமரை இதழ்களை எண்ணலானாள்

தன்மனோரதம் கூடுவகில் மகிழ்ந்த இமவான் மேனையை நோக்கினான்

கணவன் கருத்தே தன் கருத்தெனக்  கூறிய  மேனையும் கண்மலர்ந்தாள்

அதேகணத்தில்  தன் எண்ணத்தை செயலில்  காட்டிட விழைந்தான் இமவான்    

“பார்வதியைச் சிவபிரானுக்குக்  கன்னிகாதனமாய்த் தரும் பேறுபெற்றேன்

பரமன்  மனைவி உங்களை வணங்குகிறாள்” என முனிவரிடம் உரைத்தனன்

 நமஸ்கரித்த பார்வதியை பலன்பெறும் ஆசிகளால் வாழ்த்தினர் முனிவர் 

வெட்கம் தழுவிய பார்வதியை மடியில் அமர்த்திக் கொஞ்சினள்  அருந்ததி

பிரிவை எண்ணிக் கலங்கிய மேனையை  சிவன்  பெருமை கூறித் தேற்றினள்

மணநாள் குறிக்க இமவான் வேண்ட நான்காம் நாளென முனிவரும்  கூறினர்

இமாவானிடம் விடைபெற்ற முனிவர் சிவனிடம் செய்திகூறி தம்மிடம் ஏகினர்

புலன்களை அடக்கிய பிரானும் நான்கு நாட்களை சிரமத்துடன் போக்கினார்  

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

நா சொக்கன்

 

நா. சொக்கன் (பிறப்பு: ஜனவரி 17) என்கிற “என். சொக்கன்” என்று அறியப்படும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் பெங்களூரில் வசிக்கிறார். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள்,  கூகுள், பெப்சி, அமுல் போன்ற பிரபல நிறுவனங்களின் வெற்றிக் கதைகள்  என புனைவு அல்லாத பலதரப்பட்ட படைப்புகளோடு நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார்.

 

**** **** ****

Media | மனம் போன போக்கில் | Page 7

இவரது கனவான்களின் ஆட்டம் எனும் சிறுகதை …

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் ஏரியாவில் பலருக்குக் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரே காரணம், சச்சினோ, தோனியோ அல்ல, நிஷா! ’சேட்டுப் பொண்ணு’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற நிஷா.

என்று தொடங்குகிறது.

நடைப்பயிற்சி செய்வோர், கால்பந்து  ஆடுவோர், நடிவ்ல் வலைகூடக் கட்டாமல் வாலிபால், பேட்மிட்டன் ஆடுவோர் என காணப்படும் காந்தி பார்க்கில் ஒரு பக்கத்தில் கதை சொல்லியும் அவர் தோழர்களும் கிரிக்கெட் ஆடும் கோஷ்டியினர்.

முதல் முறையாக அந்தப் பூங்காவில்  கால் பதிக்கும் நிஷா.  நீராக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் கோஷ்டியினரை நோக்கி வருகிறாள்.

ஹாய் எவ்ரிபடி, ஐ யாம் நிஷா’ என்றாள் பக்கா பிரிட்டிஷ் உச்சரிப்பில். நாங்கள் பதில் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றோம். காரணம், ‘காந்தி பார்க்’ முழுக்க முழுக்க சேவல் பண்ணைதான். இங்கே பெண்கள் நுழைகிற வழக்கமே கிடையாது. அதுவும் நிஷாபோல் ஒருத்தி நுனி நாக்கு ஆங்கிலமும் இறுகப் பிடித்த ஜீன்ஸ், டிஷர்ட்டுமாக வந்து நின்றால் என்னத்தைப் பேசுவது? பராக்குப் பார்க்கதான் முடியும். நிஷா அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

நிஷாவிற்கு கிரிகெட் ஆடுவதில் விருப்பமில்லை. வேடிக்கை பார்க்கத்தான் பிடிக்குமாம். தினமும் இவர்கள் ஆடும் இடத்திற்கு வருகிறாள். கையிலிருக்கும் ஆங்கில நாவலை மூடிவைத்துவிட்டு விளையாட்டை ரசிப்பாள்.  

டாஸ் போடுவதில் ஆரம்பித்து ஒவ்வொன்றுக்கும் கை தட்டுவாள், பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் எகிறிக் குதித்துப் பாராட்டுவாள், அதற்காகவே நாங்கள் அதிகத் தீவிரத்துடன் விளையாட ஆரம்பித்தோம்.

ஃபுட்பாலும் பாட்மிட்டனும் ஆடிக்கொண்டிருந்தவர்களும் கிரிக்கெட்டிற்கு கட்சி மாற, பூங்கா முழுவதையும் கிரிக்கெட் ஆக்கிரமித்தது. முறையாக அணிக்கு பதினொன்று ஆட்டக்காரர்கள் என்கிற விதிகள் எல்லாம் அமலுக்கு வந்தன. திறமைக்கு மட்டுமே மரியாதை. சரியாக ஆடத் தெரியாதவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். 

இத்தனை மாற்றத்துக்கும் ஒரே காரணம், நிஷாதான். அவளுடைய கைதட்டலுக்காகவும் பாராட்டுக்காகவுமே ஒவ்வொருவனும் குடம் குடமாக வியர்வை சிந்தினான்

நிஷா  யாரிடமும் தனிப்பட்ட ஆர்வம் காண்பிப்பதில்லை. இரண்டு அணிகளுமே ஒன்றுதான். விளையாட்டை ரசிப்பதுதான் முக்கியமாம். மேலும் யார்கர், கவர் டிரை, தூஸ்ரா போன்ற கலைச்சொற்களை உபயோகிக்கிறாள்.    

பயிற்சிமட்டுமில்லை, நாங்கள் விளையாடப் பயன்படுத்திய பேட், பந்து, ஸ்டம்ப் எல்லாமே அரைகுறைதான். விக்கெட் கீப்பருக்குக் கை உறைகூடக் கிடையாது. ரன்னர் பேட்டுக்குப் பதிலாக ஒரு ப்ளைவுட் கட்டையைதான் செதுக்கி வைத்திருந்தோம். ஆனால் இதையெல்லாம் தாண்டி, நிஷா எங்களுடைய விளையாட்டை ரசித்தாள்.

தவிர, இந்த ஆட்டக்கரனிடம் ’ஸ்பீட்’, ‘அக்யூரஸி’, ‘ரன்னின் பிட்வீன் விக்கெட்’, ‘ஃபீல்டிங் திறமை’ யாரிடம் அதிகம், யாரிடம் குறைவு என்று எடைபோட்டுப் பேசுகிறாள்.  இப்படித் தவணை முறையில் அவள் வழங்கிய நிபுணத்துவம் ஆட்டகாரர்களின் ஆர்வத்தை வளர்க்கிறது.  நிஷா யாரிடமும் குறிப்பட்ட அக்கரை காண்பிப்பதில்லை. விளையாடுபவர்களும் அவளிடம் அத்துமீறிப் பழகவில்லை. ஆசை இருந்தாலும் தைரியம் இல்லை.

எல்லாம் மாறுகிறது  

போன மாதத்தில், தர்மன் வந்தபிறகு. இந்தத் தர்மன் எங்கிருந்து வந்தான் என்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் பூங்காவின் தெற்கு மூலையில் ஒரு கூடாரம் முளைத்தது. அதற்கு வெளியே அடுப்பு மூட்டியபடி ஒரு பெண்ணும் அவளுடைய காலைச் சுற்றிக்கொண்டு சில பொடியன்களும் தென்பட்டார்கள். சற்றுத் தொலைவில் பீடி புகைத்தபடி ஒரு கல்லின்மீது உட்கார்ந்திருந்தான் இவன். அழுக்கு உடம்பு, பரட்டைத் தலை, கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால் என்று அந்தக் காலச் சினிமாவிலிருந்து நேராக இறங்கிவந்த ஏழைபோல இருந்தான்.

விளையாட்டை ஆரம்பிக்க முஸ்தீபுகள் செய்துகொண்டிருக்கும்போது தர்மன் தன்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளச்  சொல்கிறான்.  இவர்களுக்கு விருப்பமில்லை.  எரிச்சலோடு பார்க்கிறார்கள்.

ஏய், நம்ம க்ளப்புக்குப் புது மெம்பர்’ என்றாள், ‘சாரையும் ஆட்டத்துல சேர்த்துக்கலாம், என்ன சொல்றீங்க?’ எங்கள் எரிச்சல் இன்னும் அதிகரித்தது. எங்களையெல்லாம் ‘வாடா, போடா’ என்று விரட்டுகிற நிஷா இந்த அழுக்குப்பயலைப்போய் ‘சார்’ என்கிறாள்.

நிஷாவுக்காக இந்தப் பயலை உப்புக்குச் சப்பாணியாக ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். எங்கேயாவது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் நிறுத்தி வைத்து அவன் பாட்டுக்குப் பந்தைப் பொறுக்கிக்கொண்டு கிடக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.

தன் பக்கம் வந்த பந்தை நோக்கி ஓடியவன் எப்போது குனிந்தான், பந்தை எடுத்து வீசினான் என்று கவனிக்குமுன்பே குறி வைத்து வீச, ‘ஸ்டம்ப்’ எகிறி, ‘ரன் அவுட்’ ஆகிறது.

பந்து வீசும்போதும் அசத்துகிறான்

அது நிச்சயம் ‘பவுலிங்’ இல்லை, ‘த்ரோயிங்’தான். ஆனால் அந்த வேகம், யாருமே எதிர்பார்க்காதது. பேட்ஸ்மேன் இலக்கு புரியாமல் எங்கோ மட்டையைச் சுழற்றிவிட்டுத் திணற, பந்து ஸ்டம்பைத் தாண்டி எகிறிப் பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் மணவாளன் கையைச் சுட்டுவிட்டுப் பறந்தது.

தர்மன் வீசும் பந்துகள் விக்கட்டைச் சாய்க்கிறது. அல்லது பின்னால் ‘காட்ச்’ ஆக மாறுகிறது. மட்டை பிடிக்கும்போது லேசா அடித்த பந்துகளும் ‘சிக்ஸர்’ ‘ஃபோர்’ எனப் பறக்கின்றன.

இவன் வெறும் ‘காட்டடி கோவிந்தன்’தானே? ஏனோ, நிஷாவுக்கு இந்த வித்தியாசம் புரியவே இல்லை. அவனுடைய பரம ரசிகையாகிவிட்டாள். எங்களுக்கெல்லாம் எப்போதாவது போனால் போகிறது என்று கைதட்டல் பிச்சையிடுகிற அவள், தர்மனைமட்டும் ஒரு பக்தையைப்போன்ற பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததும் எப்பப்பார் அவனையே பாராட்டிக்கொண்டிருந்ததும் எங்களுக்கு எரிச்சலைத் தூண்டியது.

நிஷாவின் போக்கு மற்றவர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறது. ஒருநாள் கதைசொல்லி தர்மனைத் தனியாகப் பார்க்கிறான். பூங்காவிலேயே இருக்கிறாயே, வேலை வெட்டி கிடையாதா என்று கேட்கிறான். அந்தப் பூங்காவில் காவலாளியாக இருக்கிறானாம் வருகின்ற சொற்ப வருமானத்தில் எப்படியோ குடும்பம் நடத்துகிறானாம்.   

கதை சொல்லி அப்பாவிடம் பேசுகிறான். அவரது தொழிற்சாலையில் எட்டாயிரம் சம்பளத்திற்கு தங்குமிடத்தோடு காவலாளியாக நியமிக்க வைக்கிறான்.

தர்மனால் அவனுடைய அதிர்ஷ்டத்தை நம்பவே முடியவில்லை. கண் கலங்கப் புறப்பட்டுப்போனான்.

அதன்பிறகு, தர்மன் பூங்காப் பக்கமே வரவில்லை. நாங்கள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் கிரிக்கெட் ஆடினோம்.

என்று முடிகிறது.

**** **** **** ****

இது போன்ற நடையில் பல சிறுகதைகள் வந்துவிட்டன. எனினும் இது ஒரு யதார்த்தமான கதை. நிகழ்வுகளும் என்ன ஓட்டங்களும் மிகையின்றி சொல்லப்படுகிறது. கதையின் தலைப்பும் கடைசி வரியும் உள்ளடக்கியிருக்கும் கிண்டல் ரசிக்க வைக்கிறது.  

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

குவிகம் பதிப்பகம்- புத்தக வெளியீட்டு விழா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13-12-2020) குவிகம், அவர்கள் பதிப்பிட்ட மூன்று புத்தகங்களை விழா எடுத்து வெளியிட்டனர். சற்று கால தாமதமாக வெளியிட்டதற்கு தலைமை தாங்க திரு. மோடி வருவதாக இருந்ததுதான் காரணம் என்ற செய்தி ஒன்று காதில் விழுந்தது. கொரானாவை காரணம் காட்டி அவர் வர இயலாததால் வேறு யாரையும் அழைக்க மனதில்லாது ஜூம் வழியே வெளியிட்டு விட்டனர்.

ஜூம் வழி என்றாலும் நண்பர்கள் திரு. சுந்தரராஜனும், திரு. கிருபாநந்தனும்  ஏற்பாடுகளை மிகவும் தட புடலாக பண்ணியிருந்தார்கள். தோரணம், பேனர் மட்டும்தான் கட்ட வில்லை. எதிலும் புதுமை செய்யும் ‘குவிகம்’ புத்தகங்களை புதுமையாக வெளியிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

நாம் விஷயத்திற்கு வருவோம்.

அந்த மூன்று நூல்களில் என்னுடைய ‘ சில நினைவுகள், சில கதைகள், சில கட்டுரைகள் ’ ஒன்று என்பதே சிறப்புச் செய்தி. புத்தகத்தின் கனம் பெரிதென்பதால் என் நூலை முதலாவதாக வெளியிட்டார்கள்.

நூலை வெளியிட நண்பர் சந்திர சேகரனை கேட்டுக் கொண்டிருப்பதாக சுந்தர் கூறினார். எனக்கு தேவையில்லாத கேள்விதான், இருந்தாலும் அவரை ஏன் தெரிந்தெடுத்தீர்கள் என்று கேட்டேன். சுந்தர் என்றும் மாறாத தன் அழகிய புன்முறுவலுடன் “ அவர் ஒருத்தர்தாங்க உங்க புத்தகத்தை முழுவதும் படித்திருப்பார்” என்று நேர்மையுடன் கூறிய பதில் எனக்கு புடித்தது.
உண்மைதான் , சந்திர சேகர் முதல் அட்டை முதல் கடைசி அட்டை வரை படித்திருந்தோடல்லாது, படித்ததை நினைவிலும் நிறுத்தியிருந்தார்.

எனக்கு லேசான பயம் வந்தது. சந்திர சேகர் என் மீது உள்ள அன்பினால் ‘மோகனின் எழுத்து சேவை, நாட்டிற்கு தேவை’ என்ற ரீதியில் பேசி விடுவாரோ என்ற பயம் தான். ஆனால் அவர் அப்படி எல்லாம் பேச வில்லை. அதற்கு ஒரு படி மேலே சென்று என்னிடம் இல்லாத தகுதியெல்லாம் இருப்பதாக புகழ்ந்தார். நானும் சபையடக்கம் கருதி மறுப்பு கூறாது மகிழ்வுடன் கேட்டுக் கொண்டேன்.

என் நூலைப் பற்றி அவர் விவரித்த தகவல்கள் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கூட்டம் முடிந்தவுடன் நாம் இப்படியெல்லாம் எழுதியிருக்கோமா என நூலை எடுத்து சரிபார்த்துக்கொண்டேன். சந்திரசேகர் என் மீது கொண்ட பாசத்தை சற்று அதிகமாகவே கொட்டி விட்டார். அவர் பேசும் ஆங்கிலத்திற்கு இணையாக தமிழிலும் அழகாக பேசினார்.

அடுத்த கட்டம் சற்று விவகாரமானது. அன்று மாலை சுந்தர் என்னை அலைபேசியில் கூப்பிட்டு நீங்கள் ஒரு ‘ ஏற்புரை’ மூன்று- நான்கு நிமிடங்கள் நிகழ்த்த வேண்டுமென்றார். அப்பொழுதே என் கால்கள் நடுங்கியது அவருக்கு தெரிந்திருக்காது. கூடவே சற்று மேக்கப் செய்து கொள்ளுங்கள்என்றார், உங்கள் சிலவில் ஒரு மாலையும் நீங்களே வாங்கி போட்டுக் கொண்டு அமருங்கள் என்று மட்டும் கூற வில்லை.

எனக்கு இரண்டு- மூன்று பேர்களுக்கு மத்தியில் பேசுவதே கஷ்டம். உறவுகள் என்னை ‘மௌன சாமியார்’ என வெளிப் படையாக கூறாது ‘ மோகன் அதிகம் பேச மாட்டான்’ என்பார்கள், நண்பர்களோ அதைவிட டீஸண்டாக ‘ மோகனுக்கு மௌனமே மொழி’ அல்லது ‘ மோகன் ஒரு அமைதிப் புறா’ என்பர்.

சுந்தர் என்னை வம்பிலே மாட்டி விடுகிறாரே, புத்தகம் எழுதியதே தவறோ என்று கூட சற்று எண்ணினேன்.

என் முறை வந்தவுடன் அறையின் கதவை மூடி விட்டு, கால்கள் நடுங்குவது தெரியாதவாறு கேமராவை சற்று உயர்த்திப் புடித்து உளறி முடித்தேன்.

பார் கோடெல்லாம் கொடுத்து ஜூம் வழியே புதிய முயற்சியாக புத்தக விற்பனையும் நடந்தது.
ஒலி,ஒளி விண்ணில் தவழ்ந்து வரும் பொழுது ஆங்காங்கே விண்ணவர்களும், செய்தியறிந்தும் இணைய முடியாதவர்கள் மனதளவிலும் , நிகழ்வில் பங்கு கொண்டோர் மகிழ்வுடனும் வாழ்த்த விழா இனிதே முடிந்தது.

நான் மேலே குறிப்பிட்ட அனைவர்க்கும் நன்றிகள் பல. குவிகத்திற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

ஆற்றின் கரையில் – எஸ்.கே. பொட்டேகட் – தமிழில் தி.இரா.மீனா

மொழி பெயர்ப்பு சிறுகதை : மலையாளம்

மூலம்         : எஸ்.கே. பொட்டேகட்

ஆங்கிலம்      : வி.அப்துல்லா

தமிழில்        : தி.இரா.மீனா                   

                

                

மொட்டையாக இருந்த ஒரு சிறு குன்றைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த அந்தச் சிறிய ஆறு பார்ப்பதற்கு ஓர் உருவமற்ற பெரிய குடிசை போலத் தோற்றமளித்தது.

வலிமையான காட்டு மரங்களின் தாழ்வான கிளைகள் பூமியில் சரிந்து கிடந்தன.மரங்களின் அடியில்  நெருக்கமாகப் படர்ந்திருந்த கொடிகளால் ஆற்றின் கரை முழுவதும் மறைந்திருந்தது.பகல் நேரத்திலும் கூட பயம் தரும் கருமை பரவியிருந்தது. 

அந்தச் சிற்றாற்றின் நடுவில்,ஆழமான பகுதியில் ஒரு பெரும் பாறை மூழ்கியிருந்தது.முதியவர்கள் அதை ’தூக்குப் பாறை ’ என்றே சொல்வார் கள். பழைய நாட்களில் தண்டனைக் குற்றவாளிகளின் தலை  அந்தப் பாறையின் மேல்தான் துண்டாடப்படும் என்று சொல்லப்பட்டது.அந்த இடத் தில் தண்ணீரின் நிறம் வித்தியாசமாகத் தெரிவதால்  பொதுவாக யாரும் அங்கு நீராடுவதில்லை.

ஆற்றின் அருகிலான குன்றின் அருகில் பேரீச்சை மரம் ஒன்றிருந்தது. அதன் உச்சியில் எரியும் நெருப்பு போன்ற சிவந்த ஒரு குறிப்பிட்ட வகை கொட்டை தெரிந்தது. அது மயக்கம் கொள்ள வைக்கும் ஒரு வித நறு மணத்தை அப்பகுதியில் பரப்பிக் கொண்டிருந்தது.அந்தப் பனையின் அருகே தனியான ஒரு கம்மட்டி மரம் நின்றிருந்தது. மரத்தின் ஒரு பகுதி காய்ந் தும், முருக்கிக் கொண்டும் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்ட கால் போலி ருந்தது.அதன் கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்த பழைய கட்டுகள் கருமையான தண்ணீரில் பிரதிபலித்தன.அவை பெரும்பாலும் வீடுகளில் செம்மறியாடுகள், ஆடுகள் மற்றும் பசுக்கள் கன்று போட்ட போது வெளிப்பட்ட நஞ்சுக் கொடிகளாகும்.அருகில், ஈரத்தால் அரிக்கப்பட்டு பெருநோயாளி போலத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிளை, மறைந்து போன மரத்தின் வேர் அடிச்சுவடாக இருக்கலாம். முழுவதும்  அரிக்கப் பட்ட நிலையில் , பெரிய கள்ளிச் செடி ஒன்று ஒரு குதிரையின் மெலிந்த விலா எலும்புக் கூடு போலக் காட்சியளித்தது. சுற்றிலும் கொத்துக்களாக இருந்த கென்னா, பல  பாம்புகள் தம் தலையைத் தூக்கியது போன்ற தோற்றத்தைத் தந்தது.

மண்டிக் கிடந்த செடிகளினூடே ,ஒரு பெரிய பலாமரம் வானத்தைப் பார்த்து தலை தூக்கி நின்றிருந்தது.

அந்த ஆழமான ஆற்றில், நீர் அதிகம் இல்லாத சிறிய கால்வாய் ஒன்றின் கலப்புமிருந்தது. அங்கு ஒரு தோணி சென்று கொண்டிருந்தது.

அது மதிய நேரம்.சூரியன் நெருப்பாக தகிக்க, ஆற்றுமணல் தொடக் கூட முடியாதவாறிருந்தது.

மாதவி அம்மா தன் மகனைக் குளிப்பாட்டி , தலையைத் துவட்டி விட்டு,  அவன் முகத்தை மெல்ல நீவினாள். கோவணம் என்று அழைக்கப்படும் சிறிய சிவப்பு பட்டு இடைத் துணியை அவனுக்கு அணிவித்தாள்.அது நீண்ட, அகலக் குறைவான துணி .அவன் பிறப்புறுப்பையும், பின்புறத்தை யும் பாதுகாப்பாக மறைத்து, இடையைச் சுற்றி நாடாவால் கட்டுவதாகும்.  அந்த ஆறு வயதுச் சிறுவன் மிகப் பணிவான தோற்றமுடையவனாக இருந்தான்.தேக்கு மர நிழலின் கீழ் நடந்து அங்குள்ள பாறையில் உட்கார்ந்து தன் கால்களை நீட்டிக் கொண்டான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்தன.அவன் கால்கள் ஆட்டம் போடத் தொடங்கின. குழந்தைப் பிராயம் என்பது பாதரசத் துளி போன்றது.யாராலும் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது.

அந்தச் சிறுவனின் அகன்ற விழிகள் எங்கும் நிலைக்காமல், பரபரவென்று அலைந்து கொண்டிருந்தன.தன் எல்லா விரல்களும் இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்து உறுதி செய்து கொண்டான்.தனது ஆட்காட்டி விரலை நீட்டி தனது மூக்கு, முன்நெற்றி, நாசி ஆகியவற்றின் நீளத்தை அளந் தான்.பிறகு தன் ஒரு நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு ,மற்றொன்றால் சுருதி எழுப்பி ரீங்காரம் செய்தான்.இது போலச் சிறிது நேரம் செய்து விட்டு நிறுத்தினான்.தன் இரு கண்களின் மேல்புறத்தையும் ஒவ்வொரு விரலால் அழுத்திக் கொண்டு சுற்றியுள்ள சிதைவடைந்திருக்கிற நிலப் பரப்பைப் பார்த்தான்.மரங்களும்,புதர்களும் இரட்டையாகத் தெரிவதைப் பார்த்து மகிழ்ந்தான்.திடீரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது.

“ அம்மா, நான் கால்வாயில் போய் வீடு கட்டி விளையாடட்டுமா ?” அம்மாவைக் கேட்டான்.

“இல்லை,இல்லை, சேற்றில் விளையாடக் கூடாது . உன்னி,அங்கேயே அமைதியாக உட்கார்ந்திரு.மோதிரத்தைத் தொலைத்து விடாதே !”

உன்னி அழகு காட்டினான்.

தன் மடியிலிருந்த அந்த மோதிரத்தை எடுத்தான்.விலையுயர்ந்த சிவப்புக் கல் பதித்த தங்க மோதிரம்.தான் குளித்து முடித்துத் திரும்பும் வரை பத்திரமாக வைத்திருக்கும்படி அம்மா அவனிடம் ஒப்படைத்திருந்தாள்.

தன் ஒவ்வொரு விரலிலும் அவன் மோதிரத்தை போட்டுப் பார்த்தான். இறுதியில் வலதுகை கட்டைவிரலில் போட்ட போது அது கச்சிதமாகப் பொருந்தியது.அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ,கைகளை மடித்து நெஞ்சில் வைத்து ,கண்களை இறுக மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

பின்பு கண்களைத் திறந்து நாக்கால் மூக்கின் நுனியைத் தொட முயற்சித் தான். வாயில் காற்றை நிரப்பிக் கொண்டு பாம்பு போன்று ’ புஸ்’ என்று சீறினான். தான் கேள்விப்பட்டிருந்த சில யோகா பயிற்சிகளைச் செய்ய முயற்சித்தான்.

“அம்மா, இங்கே வெயில் கொளுத்துகிறது.நான் மூங்கில் மரத்தடியில் உட்காந்து கொள்ளட்டுமா ? “ அம்மாவிடம் கேட்டான்.

“ஹூ..ம்”  துணிகளைத் துவைத்துக் கொண்டு தன் உலகத்தில் ஆழ்ந்தி ருந்த மாதவி அம்மா ராகமாகச் சொன்னாள்.

எழுந்து  நொண்டி போல பாசாங்கு செய்து நொண்டியடித்துக் கொண்டே அவன் மூங்கில் மரத்தடிக்குப் போனான். அம்மாவின் நேரடிப் பார்வையிலி ருந்து விடுபட முடிந்தது.

மதியநேரச் சூரியனின் பிரதிபலிப்பு, மூங்கில் மரத்தின் அடியையொட்டிக் கடப்பதான அந்தக் கால்வாயின் ஒரு சேற்றுத் தண்ணீர்க்  குழியில் தெரிந்தது.

ஒரு தட்டான் நீரிலிருந்து எழுவது போல் குதித்து, தண்ணீரின் மேற்பரப் பைத் தொட்டு நீச்சலடித்து , மேலெழுந்து பறந்தது.

தட்டானின் அசைவுகள் உன்னியின் கண்களைக் கவர்ந்தன.கழுத்தை வளைத்து , கண்கள் சாய்ந்திருக்க அவன் அதைப் பார்த்தபடி மிக மெது வாக எழுந்தான்.அது மிகக் கவர்ச்சியான இளம் தட்டான். அதன் வாலில் தெரிந்த சிவந்த மினுமினுப்பு அவனுடைய சிவப்பான கோவணத் துணி போல இருந்தது.தட்டான்களைக் கொண்டு மிகச் சிறிய கூழாங்கற்களைத் தூக்க வைக்கும் வித்தையை அறிந்தவன் அவன்.

தட்டானை நோக்கி அவன் இரண்டடி வைக்க,அது மிக வேகமாக அவன் முன்னால் பறந்து ஒரு செம்பருத்திப் புதரின் மேல் உட்கார்ந்து விட்டது.

தன் வலது கையை நீட்டி,பெரு விரலையும், ஆட்காட்டி விரலையும் சேர்த்து ஒரு ஜோடி இடுக்கி வடிவமாக்கிக் கொண்டு மிக மெதுவாக செம்பருத்திச் செடி புதரை நோக்கிப் போனான்.புதரருகே அவன்  நெருங் கிய போது தட்டான் பறந்து விட்டது.அருகிலுள்ள எதிலும் உட்காராமல் போய்விட்டது.

எதுவும் உன்னியை  அச்சுறுத்தவில்லை.ஒரு வித உறுதியோடு அவன் அதன் பின்னால் போனான்.

சிறிய காட்டுப்பூக்கள் கொத்தாகப் பூத்திருந்த புதரில் அது இருப்பதை  அவன் பார்த்துவிட்டான்.

படர்ந்திருந்த செடிகளினூடே ஊர்ந்து தன் கைகளை அவன் நீட்டிய நேரத் தில் ,அது தான் உட்கார்ந்திருந்த இலையிலிருந்து பறந்து கம்மட்டி மரத் தின் மற்றொரு கிளைக்குப் போய்விட்டது.பிறகு கணப்பொழுதில் அந்த மரத்திலிருந்து பறந்து காடாகப் படர்ந்திருந்த கன்னா செடியில் அமைதி யாக  பிரார்த்தனை செய்வது போல உட்கார்ந்து விட்டது

அது ஏறுமாறாகப் பறந்ததைப் பார்த்த உன்னி , தன் கையைத் தூக்கி, உதட்டைக் கடித்து அதைச் சபித்தான்.பிறகு அதை நன்றாகப் பார்ப்பதற்கு வசதியாகக் கண்களை இடுக்கிக் கொண்டான் அது முழுமையாக ஓய்வெ டுக்கும் வரை காத்திருந்தான்.ஆனால் அது அங்கிருந்து பறந்து மரத்தின் இன்னொரு கிளைக்குப் போய்விட்டது.

பலாமரத்தின் கி்ளைகளினூடே  சூரிய ஒளி  அகலமான வட்டமாகப் பரவி்யிருந்தது. பேரீச்ச மரத்தின் உச்சியில் அந்த சிவப்புக் கொட்டையி்ன் ஒளி தெளிவாகவும், நேராகவும் இருக்க, கள்ளியின் எலும்பு வடிவமும், கம்மட்டி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கட்டுக்களும் தெரிந்தன.

பலா மரத்தின் வேரிலிருந்த  பொந்தில் திடீரென அசைவு தெரிந்தது. மரத்தின்  வேர் பகுதியில் காய்ந்த இலைகளின் அசைவும்,  சலசலப்பும் ஏற்பட்டது.ஒரு ராஜநாகப் பாம்பு  ,எட்டடி ராஜநாகம் என்று பொதுவாகச் சொல்லப்படும் பாம்பு அந்தப் பொந்திலிருந்து மெதுவாக வெளியே வந்தது.   மரத்தின் சொர சொரப்பான மரப்பட்டையில் சுருண்டு, நழுவி மற்றொரு புறத்திற்குப் போனது.

பலாமரத்தின் அருகிலிருந்த கம்மட்டி மரத்தில் தட்டான் ஓய்வெடுத்துக்  கொண்டிருந்தது.உன்னியின் மெல்லிய கைகள் அதை நோக்கி நகர்ந்தன. அந்த நேரத்தில் அவனுடைய உடல் ,ஆத்மா இரண்டின் கவனமும்  மரத் தின் கிளையிலேயே ஆழ்ந்திருந்தது.இந்தப் பரந்த உலகில் தட்டானின் சிவப்பு வால் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது.

சூரிய வெளிச்சம் அவன் கையில் உருகிய  வெள்ளியாய் விழுந்தது. மோதிரத்தில் பதிந்திருந்த சிவப்புக் கல் ஒளிர்ந்த போது, இரண்டு  சிறிய கண்கள் சிவப்பு ஸ்படிக பட்டன்கள் போன்று மரத்தின் உச்சியி்லுள்ள  பழத்தின் பின்னால் பிரகாசிப்பது போலிருந்தது.அந்தப் பாம்பு பழத்தின் நறு மணத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது.மோதிரத்திலிருந்த கல்லின் நிறம் பாம்பைக் கவர்ந்தது.கண்கள் ஒளிவிட ,அது தன் தலையை உயர்த்திக் காற்றை உள்வாங்கியது.அதன் முழு உடலும் புடைக்க நெளிந்து தன் தலையை விரித்தது.

அந்தத் தட்டான் ஓய்விடத்திலிருந்து பறக்கவில்லை.உன்னியின் கை தாழ் வாகிச் சரியான அளவுடன் முன்னோக்கி நகர்ந்தது.

திடீரென அந்தத் தட்டான் அசைந்து சிறகடித்து ,மெதுவாக எழுந்து, அந்த இடத்தையே இரண்டு மூன்று முறை வட்டமடித்து மீண்டும் அங்கேயே உட்கார்ந்தது. மதிய வெயிலின் சுகத்தில்,அது மந்திரித்த இடம் போல அதை விட்டு வெளியேற மனமில்லாமல் இருப்பது போலிருந்தது.

அந்த நாகம் இன்னமும் அசையாமல் அந்த  மோதிரத்திலுள்ள சிவப்புக் கல்லையே வெறித்துக் கொண்டிருந்தது.

குறடு வடிவத்தில் இருந்த அந்த மென்மையான விரல்கள் காற்றில் விறைத்தன.

ஒரு குறிக்கோளோடு உன்னியின் விரல்கள் நகர்ந்தன.இம்முறை அவை முன்னோக்கிப் போகவில்லை.அவன் தன் வியூகத்தை  மாற்றிக் கொண் டான்.அவன் கை மெதுவான வட்ட வீச்சாக வலது புறத்தில் பாம்பின் வாய் இருக்கும் திசையில் நகர்ந்தது.உன்னியின் கை அசைவைத் தொடர்ந்து, கல்லின் பிரகாசத்தைப் பார்த்தபடி பாம்பு மிக மெதுவாகத் தன் தலையைத் திருப்பியது. மின்னும் அந்த சிவப்புக் கல் லேசாக முன்னே வர ,அதை முட்டுவதற்குத் தயாராகத் தலையைப் பின்னுக்கிழுத்தது. சூரிய ஒளியின் மயக்கத்தில் தட்டான் செங்குத்தாகப் பறந்தது. விரல்கள் மயிரிழையில் தட்டானைத் தொட்டன…ஒரு கணம் பேரமைதி…கண்ணிமை மூடுவது போல விரல்கள் ஒன்றாகின. தட்டானின் வால் , காய்ந்த ஓலை போல ஒரு சலசலப்போடு விரல்களுக்கிடையே வந்து, சிறகுகள் படபடத்தபோது உன்னி ஒரு சப்தமேற்படுத்தி விட்டு மின்னலைப்  போல மறைந்து  போனான். ஒரு கணத்தில் எல்லாம் முடிந்து விட்டது.

ஒரு ரப்பர் பாம்பைப் போல ராஜநாகம் திரும்பி ஒரு சுற்றுச் சுற்றியது. முழுவதும் முட்டாளானதிலும்,வெறுப்பிலும் ,அதன் தலை சுருங்கியது. தன் நாக்கை வெளியே  நீட்டி,சறுக்கியபடி மரத்தை  விட்டிறங்கியது. கம்மட்டி மரத்திலுள்ள கட்டுக்களை வெறுப்பாக முகர்ந்து , தரையில் இறங்கி, தொழுநோயாளி போலிருந்த மரத்தின் வேரில் நகர்ந்து, கள்ளியைக் கடந்து , கன்னா  தண்டுகளினூடே மறைந்தது.

                   ————————————–     

நன்றி : Contemporary Indian Short Stories Series III Sahitya Akademi 2016

எஸ்.கே .பொட்டேகட் [ 1913 –1982 ]

சங்கரன் குட்டி பொட்டேகட் என்றழைக்கப்படும் எஸ்.கே .பொட்டேகட் [மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். 1980 ம் ஆண்டு Oru Desathinte Katha [The Story of a Locale] என்ற படைப்பிற்காக ஞானபீட விருது பெற்ற இவர், நாவல், சிறுகதை,  கவிதை, கட்டுரை என்ற பன்முகப் படைப்பாளி. இவரது படைப்புகள் ஆங்கிலம், இத்தாலி, ருஷ்யம், ஜெர்மன் ,செக் முதலிய அயலக மொழிகளிலும், பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை நாடுகளுக்கு பயணித்து அற்புதமான பயண இலக்கிய நூல்களைத் தந்தவர்.

’ஆற்றின் கரையில் ” என்ற இந்தச் சிறுகதை துடிப்பான ஒரு சிறுவனின் இயல்பான  மனநிலையையும்,அதன் பின்னணியிலான செயல்பாட்டையும்  பிரதிபலிப்பதாகும். தட்டானைப் பிடிக்க விரும்பும் சிறுவனின் அணுகு முறை, ராஜநாகம் தீண்டி அவன் இறப்பது என்று சிறுகதையின் கருவை இரண்டு வரிகளுக்குள் அடக்கி விடலாம். ஆனால் இச்சிறுகதையின் ஒரு வார்த்தையைக் கூட  நம்மால் விலக்கி விட முடியாது என்று  ஆணித் தரமாகச்  சொல்லுமளவிற்கு வார்த்தைப் பிரயோகங்கள்  இயற்கையான நிகழ்வுகளோடு யதார்த்த உணர்வுகளாக வெளிப்பட்டிருக்கின்றன.’ ஒரு சோறு பதமாக ’ பொட்டேகட்டின் இச்சிறுகதை அமைந்திருக்கிறது என்பது மிகையல்ல.

                    

பூனைக் கனவு – செவல்குளம் செல்வராசு

 

காலை கண் விழித்ததிலிருந்து

குழப்பமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது

எதை எதையோ நினைவுபடுத்துகிறது

அதிகாலை கண்ட பூனைக்கனவு

 

சிறுபிள்ளையில் இருந்தே எதையாவது

வளர்த்துக் கொண்டேயிருந்த நந்தினி பாப்பா

 

“வீடு கட்டுனதும் கோழி வளக்கணும்” என்று

அடிக்கடி சொல்லும் அம்மா

 

“என்னை கால் கேர்ள் னு நினைச்சிட்டயாடா” என்று

பூனைக் கண்கள் கலங்கி நின்ற ஜாஸ்மின்

 

ஊர் மந்தையில் பூனை வாட்டிய

கழைக்கூத்தாடி பெண்

 

எதற்கெடுத்தாலும் சகுனம் பார்க்கும்

நாட்டாமை பெரியப்பா

 

‘எலிக் கணேசன்’,

அவன் வர்ணித்துச் சிலிர்க்கும்

டீ கடை கெங்கம்மா

 

நெல்லை மத்திய பேருந்து நிலையத்தில்

நிறைபோதையில் விழுந்துகிடந்தவரிடம்

கூண்டோடு திருடிவந்த பஞ்சவர்ணக் கிளிகள்

 

எல்லோரும் சகுனத் தடையாகப் பார்த்த

இருளி பேச்சி அக்கா

அவள் வளர்த்த கன்னி நாய்

 

சமீபத்தில் பார்த்த திரைப்படத்தின்

புதுமுக நாயகி

 

இப்படியாக என்னென்னவோ நினைவுகள்

உறுத்திக்கொண்டே இருக்கிறது

கண்ணுக்குள் விழுந்த இமை முடி போல

 

ஒரு நாள் முழுக்க

ஆக்கிரமித்துக் கொள்ள முடியுமா

ஒரு பூனைக் கனவால்?

 

என் கனவில் வந்த

அந்தப் பூனை எந்தப் பூனை

ஏன் என் கனவில் வந்தது?

கனவு வருவதற்கான

அறிவியல் காரணம் என்ன?

விரைவில்

சிக்மண்ட் பிராய்டைப் படிக்க வேண்டும்

 

திரை ரசனை வேட்கை  – அதிகாரவல்லி  எஸ்  வி வேணுகோபாலன் 

Aravalli film poster.jpg
இசை வாழ்க்கை எனும் தொடர் ஒன்றில் பயணம் போய்க் கொண்டிருக்கையில்,சேலம் பாலம் நூல் நிலைய அன்பர் சஹஸ் எடுத்துக் கொடுத்த பாடல் ஒன்று, உள்ளபடியே ஆஸ்கர் விருது பெற்ற ஆங்கில மொழிப் படத்தின் அற்புதமான பாடல். அந்தப் பாடலை அப்படியே இங்கு பி பானுமதி பாடியதையும் கேட்டு வியப்புற்ற  நேரத்தில், மற்றுமோர் அறியாத தகவல் (அதாவது நான் அறியாதது) கிடைக்க, அதைத் தேடிப்போனபோது, ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த பெயருள்ள படம் என்றாலும், அதை இந்த ஊரடங்கு காலத்தில் வீடடங்கி இருந்த ஒரு நேரத்தில் பார்க்கப் பார்க்க வியப்பு விரிந்து கொண்டே போனது.

என் இளமைக் காலத்தில் (எவ்வளவு வசதியாக இருக்கிறது, இப்போது முதுமைக் காலம் என்பதைக் கவித்துவமாக மறைத்துக் கொள்வது), யாராவது துணிச்சலான பெண்மணி, துடுக்கான மூதாட்டி, நெத்தியடியாகப் பதில் சொல்லிவிட்டுப் போகும் சிறுமியைப் பார்த்தால் போதும், அய்யோ அவளா, ஆரவல்லி சூரவல்லியாச்சே என்று சொல்வார்கள் கதி கலங்கிப் போகும் வீட்டு ஆண் மக்கள். அப்போதே, விளக்கமாகக் கேட்டுக் கொள்ளாமல் போயிற்று. இப்போது பார்த்தாயிற்று.

கதைக்குள் போகுமுன், முக்கியமான இரண்டு செய்திகளை இங்கே சொல்லியாக வேண்டும். ஒன்று, பெண்கள் ஆட்சி பரிபாலனம் செய்வதைக் குறித்த திரைக்கதை, அதனால்,  பாதிப்புறும் ஆண்கள் எங்குமே பெண்மையை இழிவு செய்வதாக இல்லாமல் வசனங்கள் அமைக்கப்பட்டிருப்பது. மற்றொன்று, இந்தப் படத்தைப் பார்த்தபின், அ. மாதவையா அவர்களது திரௌபதி கனவு  சிறுகதை குறித்த கட்டுரை, அண்மையில் தி இந்து தமிழ் நாளிதழில் பிருந்தா அவர்கள் எழுதி இருப்பதை வாசிக்க நேர்ந்தது.  ( பெண் எழுத்து: மாதவையாவுக்கு உத்வேகம் அளித்த கதை? | sultana dream – hindutamil.in ). இரண்டிற்கும் அடிப்படையில் ஒற்றுமை ஒன்று உண்டு, ஆண்களால் ஒடுக்கப்படும் பெண் மனத்தின் எதிர்வினை என்பதில். ஆனால், மாதவையா கதை, இன்னும் ஆழமாக இந்தக் கருத்தோட்டத்தை ஓர் அருமையான புனைவாக மாற்றி இருந்தது.

சகோதரிகள் ஆரவல்லி, சூரவல்லி இருவரும் ஆட்சி புரியும் சிற்றரசில், பொறுப்புகள் அனைத்தும் நிர்வகிப்பவர்கள் பெண்கள், வீட்டிலிருந்து, நாட்டின் பாதுகாவல் வரை, பணியாட்களாக ஆண்கள் ! ஆரவல்லியின் அரசாட்சியில் மன்னிப்பு என்பதற்கு இடம் கிடையாது. அவளது அகன்ற புருவங்கள், விரிந்த விழிகள், பரந்த நெற்றியில் எப்போதும் பெண்மையின் அதிகாரத்தின் கம்பீரமும், ஆண்களுக்குப் பாடம் கற்பிக்கும் சமரசமற்ற ஆவேசமும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும்.   விற் போர், வாட் போர், மல்யுத்த பயிற்சிகளில் பெண்கள் அசத்திக் கொண்டிருக்கும் காட்சியும், தர்பாரின் தலைமை வீராங்கனைகள், ஆங்காங்கு வெவ்வேறு பணிகளைச் செய்து கொண்டிருக்கும் ஆண்களை அரட்டியுருட்டி மேற்பார்வை பார்த்துக் கொண்டிருப்பதும், தன்னிடம் வரும் வழக்கில் ஆணுக்குப் பாவம் பார்க்கும் பெண்ணுக்கு சிறைத் தண்டனை தீர்ப்புமாக திரைப்படத்தின் தொடக்கமே அசத்தலாக இருக்கும்.

மகாபாரதக் கதையின் கிளைக் கதையாக, தருமர், வீமன் எல்லோரும் துணை பாத்திரங்களாக வரும் படத்தில், சகோதரிகளை அடக்குகிறேன் என்று சவால் விட்டுப் போகும் வீமன், இவர்கள் வைக்கும் போட்டியில் தோற்று சிறைப்பட்டு நிற்கிறான். அங்கிருந்து தப்பியோடும் அவனைக் குறித்து புகார் செய்ய, தருமரிடமே துணிந்து போய்ப் புகார் செய்கிறார் சூரவல்லி.  வீமன் மீண்டும் சிறைக்குத் திரும்புகிறான். அங்கே தான் கதையில் ஒரு மாற்றம்.

பாண்டவர்களது உறவுக்கார வாலிபன் அல்லிமுத்து வீமனை சிறை மீட்கப்  புறப்படுகிறான். ஆரவல்லி  வைக்கும் போட்டியில் வெற்றி பெறுவதோடு, அவள் மகள் அலங்காரவல்லியின் காதலையும் பெறுகிறான், மணக்கிறான். மடிகிறான். பிழைத்தெழுகிறான்.  ஆரவல்லி தான் அவனது உயிருக்கு உலை வைத்தது என்று கண்டறியப்பட்டு என்ன தண்டனை, என்ன முடிவு என்பதெல்லாம் கறுப்புத் திரையில் காண்க! (யூ டியூப் சானலை எப்படி சொல்வது!)

 ஆரவல்லி தர்பாரில் அவளது உக்கிரமான வசனங்கள், ராணி களை (ராஜ களை நிறைய பார்த்துக் களைத்ததற்கு இது எத்தனை பரவச மாற்றம்), அதிகார தோரணை, பெற்ற பெண்ணே ஆனாலும் ஆணிடம் மயங்கியதற்கு சமரசமற்ற அணுகுமுறை எல்லாம் அமர்க்களம். அவையில் சகோதரிகள் நடப்பதும், அடுத்தடுத்து நடப்பதும் எல்லாமே விவரிப்புக்கு அப்பாற்பட்டது. ஜி வரலட்சுமி, இந்த ஒரு திரைக்கதைக்காகவே, ஆரவல்லி பாத்திரத்திற்காகவே பிறந்து நடிகையாக வந்திருப்பாரோ என்று தோன்றிற்று.

வீட்டில் பழைய காலத்துப் புகைப்படம் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு, இது என் நான்காவது வகுப்பு குரூப் புகைப்படம்.  நான் எங்கே இருக்கிறேன் சொல் என்று அறுபத்து ஐந்து வயது ஆசாமி கேட்டால் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு புதிராக இராது, என்றாலும், வி கோபாலகிருஷ்ணன், காகா ராதாகிருஷ்ணன், ஏ கருணாநிதி, டி பி முத்துலட்சுமி …. எங்கே கண்டுபிடி என்று படத்தில் தேடிப் பார்க்க ஆனந்தமாகத் தான் இருக்கும்.

சிறப்பான இயக்கம், கிருஷ்ணா ராவ். படத்தின் வசனத்தில் (வி என் சம்மந்தம்) எதுகையும், மோனையும், வேகமும் கலக்கலாக இருக்கும். அரண்மனை வேலைக்குப் போகும் பெண்மணி, வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் கணவனிடம் பேசும் காட்சிகள் (ஏ புருஷா புருஷா, இதோ வந்துட்டேனுங்க, ஏன்யா இன்னும் சமையல் ஆகல, கொதிக்குது, ஓ நான் கேள்வி கேட்டா கொதிக்குதோ ஏதேது என்னை எதிர்த்துப் பேசுறியா, பாத்தீங்களா நான் என்ன சொன்னாலும் தப்பாவே புரிஞ்சுக்கிட்டு திட்டறீங்க, அடிக்க வறீங்க …) நகைச்சுவையாகவோ, எதிர்மறையாகவோ தோன்றினால், பாலினத்தை மாற்றிப் பார்த்து, வீடுகளில் என்ன நிலைமை என்று சிந்தித்துப் பாருங்கள், அப்படித் தான் நடைமுறை இன்னும் கூட சமூகத்தில் நிலவுகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கும்.

படத்தின்  காட்சி அமைப்புகள், பாடல்கள் படமாக்கப்பட்டிருப்பது எல்லாமே அசர வைக்கும். மாடர்ன் தியேட்டர்ஸ் என்றால் சும்மாவா…

படத்தின் உயிரான அம்சங்கள் எனில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, பாடல்கள்!  மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வில்லுபுத்தன் மூவர் பெயர் ஓடுகிறது டைட்டிலில். அன்றைய புகழ் பெற்ற பாடகர்கள் எல்லோரும் பாடி இருக்கின்றனர், சி எஸ் ஜெயராமன், டி எம் எஸ், சீர்காழி, ஏ எம் ராஜா, ஜிக்கி… 

இசை ஜி ராமநாதன் அவர்கள்!

‘சின்ன குட்டி நாத்தனா, சில்லறையை மாத்துனா…குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா’  என்ற மிகவும் நகைச்சுவை ததும்பும் பாடல், பட்டுக்கோட்டையார் எழுதியது, திருச்சி லோகநாதன் பெயரில்தான் அறியப்படுகிறது, ஆனால், டைட்டிலில் அவர் பெயர் பார்த்த நினைவில்லை.. ஏ. கருணாநிதி நடிப்பில் அசத்தல் பாடல் அது. ‘கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா’ என்று ஆண்களை, அரசவை வீராங்கனைகள் நையாண்டி செய்வது  அருமையாக இருக்கும்.   ஜிக்கியின் ‘துடிக்கும் யவ்வனம்’ (‘கொடுமை செய்யும் ஆண்கள் கையில் பதுமை ஆவதா’…என்ன வரிகள்)  உள்பட அமர்க்களமான இசையில் அசத்தல் பாடல்கள் நிறைய உண்டு, படத்தில்.

இப்போது, தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம், ஆரவல்லியைத் தேட வைத்த ஆங்கிலப் பாடல், கே செறா செறா  (QUE SERA SERA ), டோரிஸ் டே எனும் பாடகி அருமையாகப் பாடியது (விரிவான அலசல், இசை வாழ்க்கை கட்டுரையில் உண்டு. இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன் – Bookday ).

1956ல் வந்த இந்தப் பாடலை, 1957 தயாரிப்பான ஆரவல்லி படத்தில் அதே மெட்டில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழில் அருமையாகக் கொண்டு வந்த வியப்புதான் இந்தப் படத்தைத் தேட வைத்தது.  ‘சின்னப் பெண்ணான போதிலே’ என்ற பல்லவியும், முழு பாடலும் ஜிக்கி சிறப்பாக இழைத்திருப்பார், நிறைவில் ஏ எம் ராஜா வந்து கலக்கும் இடமும் அமுதமாகப் பொழியும்.  (215) Chinna Pennana Pothile A M Rajah Jikki Aaravalli Tamil Old Song – YouTube

கால காலமான ஒடுக்குமுறைக்கு எதிராகத் தங்களுக்கு அதிகாரம் வந்தால் ஆண்களைப் பெண்கள் எப்படி நடத்துவார்கள் என்கிற கற்பனைக் கதை இது. ஆட்சிக்கு வந்த பெண்மணிகள், குறிப்பாக, மண்டியிட வைத்தவர்கள், யாரும் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்களா, தெரியாது, சாத்தியங்கள் நிறைய உண்டு.

(ரசனை பரவும்…) 

கம்பன் சொல்லும் கதை – எஸ் எஸ்

கம்பர் - தமிழ் விக்கிப்பீடியா

கம்பன் என்ற கடலில் சில முத்துக்களைத் திரட்டலாமே என்ற எண்ணம் தோன்றியது.

கம்பன் சொல்லும் கதை என்று கவி அமுதன் துவக்கிவைத்தார் அக்டோபர் குவிகம் இதழில்!

பின்னர் வெங்கட் கம்பனின் ஏரெழுபது பற்றி நவம்பரில் உரைத்தார்.

இப்போது என்  முறை.

பின்னர் நண்பர்களை அழைத்து அவர்களுக்குப் பிடித்த கம்பன் தேனில் இரு சொட்டுக்களைக் கேட்டுப் பெறப்போகிறேன். 

நான் காட்சிப் படுத்தப்போகும் நிகழ்வு  ராமாயணத்தில் மிக பதட்டமான சூழ்நிலையில் வருவது.

மந்தரை சூழ்ச்சிப் படலம் வெற்றிகரமாக அரங்கேறியது! தெளிந்த பாலைப்போல் இருந்த கைகேயியின் மனத்தைக்  கள்ளிப் பாலாக்கும் முயற்சியில் மந்தரை வெற்றி பெற்றுவிட்டாள். “பரதனுக்கு முடி சூட்டல் ; ராமனைக்  காட்டுக்குத் துரத்தல்” – வெட்டு ஒன்று துண்டு இரண்டு போல இந்த   இரு  விஷ விதையைக் கைகேயியின்  மனத்தில்  விதைத்து விட்டாள், பதித்தும் விட்டாள்  கூனி என்கிற மந்தரை!

கூனியின் விஷம் கடுமையாக வேலை செய்தது. அன்பே உருவான கைகேயியின் மனத்தில் கருமை பரவியது.  கொடுமையான சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னைத் தயார்  செய்துகொள்கிறாள். தலையில் சூட்டிய மலர்களைக் களைகிறாள் . கட்டிய குழலை அவிழ்த்துப் பறக்க விடுகிறாள், போட்டிருந்த நகைகளைக் கழட்டி எறிகிறாள். இட்ட திலகத்தையும் அழிக்கிறாள். தரையில் படுத்துப் புரளுவதைப் போலக் கிடக்கிறாள். 

இப்படி ஆரம்பிக்கிறது கைகேயியின் சூழ்ச்சிப் படலம், இல்லை ,சூழ்வினைப் படலம்.

அழகிய இளைய மனைவியின் திறமையான நடிப்பை  உண்மையென எண்ணிய தசரதன்  துடிதுடித்து விழுந்தான்.

ராமன் காட்டிற்குச் செல்லவேண்டும். பரதன் பட்டம் பெறவேண்டும்.  

தசரதன் இதைக்  கேட்டமாத்திரத்திலேயே தீப்பற்றியதைப் போலத் துடித்தான். 

பரதன் வேண்டுமானால் ஆளட்டும் ராமன் காட்டுக்குப் போக வேண்டாமே என்று கைகேயியின் காலையும் பிடித்துக் கெஞ்சினான். 

தசரதனின் நிலையைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாத கைகேயி அவனிடமிருந்த வரங்களை வாங்கிய பின்னரே திருப்தி கொண்டாள். 

தசரதன் நிலை குலைந்து  மயங்கிச் சாய்ந்தான். 

கைகேயி அத்துடன் நின்றுவிடவில்லை.

ராமனை அழைக்கிறாள்.  எந்த ராமனை? அடுத்த நாள் அயோத்தி மா நகருக்கு அரசனாகப் போகும்  பட்டத்து இளவரசனை!

கீசு கீசென்று: கைகேயி சூழ்வினைப் படலம்

பட்டாபிஷேகத்திற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும்  மன்னனை !

கூப்பிட்டு என்ன சொல்கிறாள் ? ‘

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித், தாங்கரும் தவ மேற்கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப், புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழிரண்டு ஆண்டில் வா என்று இயம்பினன் அரசன்; என்றாள்’

அதாவது  கடலால் சூழப்பட்ட உலகம்  அனைத்தையும்  பரதனே  ஆண்டுகொண்டிருக்க;
நீ நாட்டை விட்டுச் சென்று தொங்குகின்ற பெரிய சடைகளைத் தாங்கிக்கொண்டு, தாங்குவதற்குரிய தவத்தை ஏற்று;  புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வரவேண்டும்  என்றுஅரசன்கொன்னான் என்று கைகேயி கூறினாள்.

 சடாமுடி தரித்தல்,    தவம் ,மேற்கொள்ளல்,  கானம் சேர்தல், புண்ணியத் துறைகள் ஆடுதல் முதலிய நற்பயன்கள் கிட்டவே அரசன் இவ்வாறு பணித்தான் என்று வஞ்சகமாகக் கைகேயி கூறுகிறாள்.

மேலும் இது தசரதன் விருப்பம்  என்பதைக் காட்டுவதற்காக ‘இயம்பினன்அரசன்’  என்றாள். 

அதற்கு மேலே , சொன்னது  தந்தை என்று சொல்லாமல்  ‘அரசன் கூறினான்’ என்பதால் ‘இது அரசு ஆணை இது மீற இயலாது என்பதையும்  மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறாள்.

அரசன் ஏற்கனவே அளித்த தீர்ப்பை – அரசு ஆணையில் இருக்கும் உத்தரவை அப்படியே சொல்வது போல அல்லவா இருக்கிறது கைகேயியின்  பேச்சு.

இது கைகேயி போட்.ட இதிகாச வெடிகுண்டு !

ராமனுக்கு எதிராக வந்த முதல் அரசாணை !

ஆயிரம் முறை ராமாயணம் படித்திருந்தாலும் இந்த இடத்தில் இந்தப் பாடலைப் படிக்கும்போது  படிப்பவர் இதயம் சில நொடிகள் நிற்கும் என்பதில் ஐயமில்லை.   

அப்படித் துடிக்கும்  அனைத்து இதயங்களுக்கு  மருந்தாக ராமபிரான்  தருவது கம்பனின் இந்தப் பாடல் மூலம் .  

கைகேயி தனது வரத்தால் இராமனைக் காட்டுக்கு அனுப்பவும் தனது மகன் பரதன் நாடாளவும் மேற்கொண்ட செயல்களால் வெகுண்டெழுந்தான் தம்பி இலக்குவன்.

”உனக்குரிய அரசைப் பறித்த கைகேயியையும் அதற்கு உடந்தையாயிருந்த தசரதன் முதலானவர்களையும் உடனே கொன்று உனக்குப்பட்டாபிஷேகம் செய்து வைக்கிறேன்”
என்று சீறி நின்ற இலக்குவனைப் பார்த்து இராமன் அறிவுறுத்துவதாகக்  கம்பன் மிக அழகாகக் கூறுகிறான்.

கம்ப ராமாயணம் – அயோத்தி காண்டம் – நகர் நீங்கு படலம் 129 வது பாடல்

சீற்றம் கொண்ட இலக்குவனுக்கு இராமன் உரைத்தது

‘நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். (14)

இலக்குவா!என மைந்தனே !

(அன்பு மிகுதியால், தம்பியை மகனே என்கிறான்.)

நீரோடும் நதியில் ஒரு சில காலங்களில் நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது, அந்த நதியின் குற்றம் அன்று.

அது போல, என்னை வனவாசம் போகச் சொன்னது, நம் தந்தையின் குற்றம் அன்று.

அப்படி வரம் வாங்கியது,  நம்மைப் பெற்றுக் காப்பாற்றி வளர்த்த கைகேயியின் அறிவின் குற்றம் அன்று.

அவள் மகன் பரதனது குற்றமும் அன்று.

இது விதியால் விளைந்த குற்றம்.

இந்தச் செயலுக்கு இவர்களை எல்லாம் காரணமாக்கி நீ கோபித்தது ஏன்?’ என்றான்

இதைக் கேட்டதும் துடிதுடித்துக் கொண்டிருக்கும் நம் இதயமும் அமைதியுறும் என்பதில் ஐயமில்லை. 

கவிச்  சக்கரவர்த்தி கம்பனின் இரு முத்துக்களாக இவ்விரண்டு பாடல்களையும் கருதுகிறேன்.  

நூல் அறிமுகம்: “உள் மனம்” – பி.ஆர்.கிரிஜா 

Gowri Kirubanandan on Twitter: "திரு சாயி பிரம்மானந்தம் கொர்தி அவர்களது 'அந்தர்ஜ்வலனா' என்னும் தெலுங்கு நாவலின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. https://t.co ...   

Gowri Kirubanandan on Twitter: "திரு சாயி பிரம்மானந்தம் கொர்தி அவர்களது 'அந்தர்ஜ்வலனா' என்னும் தெலுங்கு நாவலின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. https://t.co ...

அண்மையில் தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ‘உள் முகம்’ என்ற நாவலை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இது ஒரு மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு. சாயி பிரம்மானந்தம் கொர்தி என்பவர் தெலுங்கில் எழுதியதை, நமக்கெல்லாம் பரிச்சயமான மொழிபெயர்ப்பாளரும், 2015 ம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவருமான திருமதி கௌரி கிருபானந்தன் அவர்கள் இந்நூலை மொழி பெயர்த்துள்ளார். இவர் கடந்த இருபது ஆண்டுகளில் அறுபதுக்கும் மேற்பட்ட தெலுங்கு நாவல்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

      இந்த ‘உள் முகம்’ என்ற மூல நூலின் ஆசிரியரைப் பற்றி : அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த மென்பொருள் பொறியாளர். தந்தை பத்திரிக்கை நிருபராக இருந்த காரணத்தால், சிறு வயது முதலே இவருக்கு படிப்பிலும், எழுத்திலும் ஆர்வம் அதிகம். இசையிலும் ஈடுபாடு அதிகம். இது இந்த ஆசிரியரின் முதல் சமூக நாவல்.

      இந்தக் கதை 25 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்று அங்கேயே குடியேறிவிட்ட ஒருவனின் கதை. அவனுடைய கஷ்டங்களும், வேதனைகளும், உணர்ச்சிகளும் உள்ளூர எரிமலையாகக் கொதித்துக்கொண்டிருப்பதை புதினம் முழுவதும் வாசகர்களால் உணர முடியும். இப்புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் சாயி சொல்லியிருக்கிறார் “ புலம் பெயர்ந்த வாழ்க்கை பூப்படுக்கை ஒன்றுமில்லை, சிலவற்றைப் பெறுவார்கள், சிலவற்றை இழப்பார்கள்” என்று.kandupidi

     1986 லிருந்து 2005 வரையிலான நிகழ்வுகளை கதாநாயகன் விஜய் கூறுவது போல் ஆரம்பிக்கிறார். கதாநாயகனுக்கு கார் விபத்து ஏற்பட்டு சாவின் விளிம்பில் இருக்கும்போது  அவன் மனசாட்சியே அவனுடன் பேசுவது போல், கதையை நகர்த்துகிறார்.

     ஆந்திராவின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த விஜய் எப்படி அமெரிக்கா வரை சென்று ஒரு பெரிய நிறுவனத்தை நிறுவி அதற்கு சி.ஈ.ஓ. ஆகப் பொறுப்பேற்றது எப்படி என்றெல்லாம் விறுவிறுவென்று சொல்லிக் கொண்டே போகிறார். அவன் எப்படி அமெரிக்க கலாச்சாரத்திற்கு தன்னை மாற்றிக் கொள்கிறான் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறார். தன்னுடைய வேலையில் முன்னேறுவதற்காக என்னவெல்லாம் செய்கிறான் என்பதை வர்ணிக்கும்போது படிக்கும் நாமும் அவனுடனேயே சேர்ந்து பயணிக்கிறோம்.

       கதை முழுவதும் விஜய்யை நல்லவனாகவே காட்டி வரும் ஆசிரியர், கடைசியில் அவனுடைய மனசாட்சி அவனுடைய உண்மையான முகத்தை கிழித்தெறிவதைப் படிக்கும்போது நாம் திடுக்கிடுகிறோம்.

      இதற்கு மாறாக அவனுடைய உற்ற தோழன் ஹரி, அவனுடைய அறையில் சேர்ந்து இருப்பவன், இந்தியாவை வெறுப்பது, அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்கப் பெண்களை காதலிப்பது, கைவிடுவது என்றெல்லாம் செய்கிறான்.

      நம்மையும் அறியாமல் நாம் ஹரியை வெறுக்கத் துவங்குவதும், விஜய்யை நேசிக்கத் தொடங்குவதும் தவிர்க்க முடியாதவை.

       இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் இந்தியர்கள் எல்லோரும் எப்படி கணினியின் வசப்பட்டு அமெரிக்கா சென்றார்கள் என்பது  எல்லோருக்கும் தெரிந்ததே. பொறியியல் படித்த அனைத்து இளைஞர்களுமே ஒரு கால கட்டத்தில் மென்பொறியாளர் வேலைக்கு அமெரிக்கா செல்வது மிகவும் அதிகமாக இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வாறு ஒய்.டூ.கே ப்ராப்ளம் வந்தது, அதிலிருந்து எப்படி அவர்கள் அதற்கு தீர்வு கண்டு வெற்றி அடைந்தார்கள் என்பதெல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இந்தக் கதையைப் படித்த பின் நமக்கு இன்னும் தெளிவாகப் புலப்படுகிறது.

      மொத்தத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட ஒரு மனிதனின் மனப் போராட்டத்தை விளக்கும் கதை.

      மொழிபெயர்ப்பு என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு கனகச்சிதமாக திருமதி கௌரி கிருபானந்தன் அவர்கள் அருமையான தன்னுடைய நடையால் வாசகர்களைக் கட்டிப் போட்டு விடுகிறார்.

     தேர்ந்த வாசகர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புதினம் “உள் மனம்” என்று நிச்சயம் சொல்லலாம்.  .

     கௌரி கிருபானந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

.                        

 

                                                                                                                    

 

 

வாசகர் கருத்து

பலே பாண்டியா

 

P.Ravi chandran

 

 

umamaheswaran படத்தை எத்தனை தடவை யாராலும் பார்க்க முடியும். உங்கள் எழுத்துக்களில் இப்போதும் படத்தை பார்க்க முடிந்தது. ‘அத்திக்காய் காய்’ அற்புதமான பாடல். எம் ஆர் ராதாவின் கச்சேரி தனி விருந்து.
tvramaswamy Excellent review. Being Sivaji rasikan in those days I saw this movie atleast 7 times in Madurai. You have analysed it all scenes very minutely.

சுரேஷ் ராஜகோபால் பலே பலே
எத்தனை முறை பார்த்திருந்தும் திகட்டாத “பலே பாண்டியா”, அணு அணுவாய் பிரித்து கதை ஓட்டத்தையும் சரி, நகைச்சுவையான காட்சிகளை அடுக்கியதையும் சரி, இசை பாடல் வரிகளை பிண்ணி பீராயந்ததும், அப்பப்பா…
பலே சொல்ல வேண்டுமே பலமுறை…
மிகவும ரசிக்க தக்க வகையில் சிறப்பாய்வு

 

பிச்சை

dhandudhandu1957
A. குமார் ராஜா இறந்த காலமும் எதிர் காலமும் நம்ம மனசுல தான் இருக்கு. நிஜத்துல இல்ல. அதனால நீ அத உன் தலையில சுமக்க வேண்டிய அவசியம் இல்ல, புரிஞ்சுதா.”
பகவான் வாக்கு

 

தாகூர்

 

sarasa suri சரளமான நடை.அருமையான மொழிபெயர்ப்பு… சகோதரியின் பணி தொடர வாழ்த்துக்கள்…

காது

L. S. Indira Sir, very nice story and reality too.

குண்டலகேசி

Vijay Saradha

Lalitha Natarajan அருமை..எளிய நடை.விறுவிறுபாக செல்கிறது காவியம்
கத்தியும் பொன்னென்று
கண்ணிலே குத்தலாமாதுள்ளிடும் விதியின் ஆட்டம்
தொடங்கியேஅருமையான வரிகள
கவிஞரின் அருமையான கருத்தோவியம்

Rajeswari Simple understandable flow of Tamizh. Very interesting to read. Kalaimagal arupozhigirathu. Very nice.

l rajagopalan பிரமதமான எழுத்தோவியம்

Charumathi jayaraman. அழகான நடை. அற்புதமான சொல்லாற்றல்.மனதுக்கு மிக இதம்.தொடர்க உன் எழுத்துப்பணி.

இரா.முத்துகுமரன் கத்தியும் பொன்னே என்று கண்ணிலே குத்தலாமா
துள்ளிடும் விதியின் ஆட்டம் தொடங்கியே
அருமையான வரிகள். அருமையான சொல்லோட்டம்.
கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

Charumathi jayaraman அருமையான நடை. அற்புதமான எழுத்தாற்றல்!அருசுவை விருந்து!தொடருட்டும் உன் கவிதை!! C

ரா வே சு

 

R ARAVINDAKUMAR Very nice translation. Congratulations for your efforts.

கடைசிப்பக்கம்

rani ramathilagam Very nice

வான் விளக்கு- பானுமதி

ஆரியன் யார்? - உத்யோக பர்வம் பகுதி 33ஈ Karna (Great Heroes of the Mahabharata)

 

பொன்னிழைகளால் ஆதவன் புவியை வேயத் தொடங்கினான். பூ மகள் சிலிர்த்தாள். மாதவிப் பந்தலில் பறவைகள் உறக்கம் கலைந்தன. ஒவ்வொரு இதழாக மெதுவாக தாமரை விழித்தது. உள்ளே தேன் மயக்கில் இருந்த வண்டு, தன் பொன் சிறகை விரித்து ஆசையுடன் அவளை மீண்டும் முத்தமிட்டுப் பறந்தது. மொட்டவிழும் இரகசியத்தை செடிகள் மரங்களுக்குச் சொல்லின. கொடிகள் தங்கள் பங்கிற்கு மரங்களை இறுகப் பிணைத்துப் பேசின. அத்தி மரங்களின் வேர்ப்புடைப்பின் கீழிருந்த வலைகளில் சிறு முயல் குட்டிகள் காதுகளை விடைத்து மான்களைப் போலச் செய்ய முயன்றன. அருகிலிருந்த கனி மரங்களில் ஒரு கண்ணும், குட்டிகளின் துஷ்டத்தனத்தில் ஒரு கண்ணுமாக அன்னை முயல்கள், பூக்கள், மொட்டுக்கள், காம்புகள், கனிச் சிதறல்கள், புற்கள் எனக் கிடந்தனவற்றையெல்லாம் கவ்விக் கொணர்ந்தன. தொலைதூரக் காட்டில் சிம்ம கர்ஜனை கேட்டது. தன் துதிக்கையை வளைத்து மட்டையை விழுங்கிக் கொண்டிருந்த களிறு பிளிறிற்று. பசுக்கள், கன்றுகள், எருதுகள், காளைகள், குடங்களுடன் பெண்கள், சமித்துக்களுடன் முனிவர்கள், ஏருடனும், கலப்பையுடனும் உழவர்கள், சிறு தானிய வணிகர்கள், நெய்க் கூடைகளுடன் ஆச்சியர்…

கர்ணன் நாளும் பார்க்கும் காட்சிதான் அது. இரவு வெளியில் தள்ளிய வெளிச்சம் என்று அவன் கவித்துவமாக நினைத்தான். ‘மெதுவாகத் தொடங்கி, உக்கிரமாய், பின் தணிந்து ஆதவன் தன்னை இருளிற்கு ஒப்புக் கொடுக்கிறானா? இல்லை, என் ஒளித் தெய்வம் அப்படி ஒரு நாளுமில்லை; அவன் இருளிற்கும் இடம் கொடுப்பவன். அவன் தன் தேர்க்காலை ஊன்றி வானிலேயே நின்றுவிட்டால், இருள் எங்கிருந்து வரும்? அவன் நல்லவன், நியாயமானவன், அவன் கருமையான இருளைப் பழிப்பதில்லை, இருளின் குலத்தைக் கேட்டு மதிக்கும் இழிச் செயல் சூர்யனிடம் ஒரு நாளுமில்லை. ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்றான் அவன். வானை உழுகிறான், பூமியில் விளைச்சல். அவனைப் பார்த்து எத்தனை உயிர்கள் ஆரவாரிக்கின்றன. அவனது பெருமிதம் மிகையற்றது. அவன் என் தந்தை தான். ஆனால், நான் எப்படி இப்படித் தீர்மானிக்க முடியும்? அவன் தேவன், வான் விளக்கு; நான் குலமறியாத சூதன்; குதிரைக்காரனால் வளர்க்கப்பட்டவன். என் வீரம், அறிவு, அழகு, கருணை, நட்பு எதுவுமே இந்த உலகத்திற்குப் பொருட்டல்ல. என் குலம் தெரிந்து இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’

‘இந்தச் சிந்தனைச் சுழல் என்னைக் கொன்றுவிடப் போகிறது. என்ன இல்லை என்னிடம், ஏன் இந்தத் தாபம்? எத்தனை நாட்களானாலும், எத்தனை வயதானாலும் குடையும் இந்தக் கேள்விகள் என் பேராண்மையின் மீது சாட்டையெனச் சுழன்று அடிக்கின்றன. இந்தத் தாழுணர்வு என்னை விட்டு நீங்காதா, ஐயனே’ என்று முணுமுணுத்தவன் சூர்யனுக்கான அர்க்யம் செய்துவிட்டு மாளிகைக்குத் திரும்பினான். வாயிலில் விதுரரின் முக்கிய அணுக்கனாகிய கானப்ரியன் நின்றிருப்பதைப் பார்த்தான். ‘இவர் இவ்வளவு காலையில் இங்கே ஏன் எனக்காகக் காத்திருக்கிறார்?’

‘வரவேண்டும், வரவேண்டும் ஐயனே; இன்று நற் சகுனங்கள் காண்கிறேன். ஈடு இணையற்ற அறிவாளியான அமைச்சரின் உத்தம நண்பர் என் மாளிகைக்கு வந்துள்ளார். அவர் வரவு நல்வரவாகட்டும். தேன் சாற்றில் பழ ரசம் கலந்து தருகிறேன், அதை ஏற்றுக் கொள்வீர்களல்லவா?’

“மா வீரன் கர்ணன் நலம் பல பெற்று வாழ குரு விதுரர் வாழ்த்தினை அனுப்பியுள்ளார். கங்கை நீரில் சிறிது தேன் கலந்து தாருங்கள்; உங்கள் அன்பை மறுக்க மனம் வரவில்லை.” என்றவர் ஆசனத்தில் அமர்ந்தார். மாளிகை முழுதும் ஆதவன் கதிர்கள் சாய் கோணங்களில் வருமாறு அமைப்பட்டிருந்த விதம் அவரை மிகவும் கவர்ந்தது. ‘சூரியக் கவசம்’ என்றார். கர்ணன் முறுவலித்தான்.

“குருவே வருவதாக இருந்தார். உங்களுக்குச் சௌகர்யமானால் தன் குடிலுக்கு உங்களை அழைத்து வரச் சொல்லி என்னை அனுப்பியுள்ளார். நீங்கள் அரசராயிற்றே என்று தயங்கினேன். உங்களுக்கு இதில் தயக்கம் இருக்காது என்று என்னை ஊக்கப்படுத்தி அனுப்பினார். ஒருக்கால், உங்களால் முடியவில்லை என்றால் அவர்  எப்போது உங்களைச் சந்திக்கத் தான் வரலாமென்றும் கேட்டு வரச் சொன்னார்.”

கர்ணன் பதறி தன் ஆசனத்திலிருந்து எழுந்தான். ‘அவரை சந்திக்க நான் வருவது தான் முறை. அறிவிலும், வயதிலும் மூத்தவர் அவர். வாருங்கள், புறப்படுவோம்.’

ஆபரணங்கள் எதுவுமே அணியாத இந்த எளிமையிலும் கர்ணன் எவ்வளவு அழகாக இருக்கிறான் என்ற எண்ணத்தை கானப்ரியரால் தவிர்க்க முடியவில்லை. “இவன் ஆதவனை நிகர்த்தவன், கருணைப் பெருங்கடல், துரியனைப் போல இவனிடம் ஆணவமில்லை. தகதகக்கும் சூரியனைச் சில கரு மேகங்கள் மறைப்பது போல் இவன் உள்ளாடும் வருத்தம் இவன் வதனத்தில் படிந்தாலும் அந்த சோகத்தில் இவன் இன்னமும் சோபிக்கிறான். ஆமாம், இவனை ஏன் குரு அழைக்கிறார்? இவன் ஏன் ஒரு கேள்வி கூடக் கேட்காமல் உடனே கிளம்பி விட்டான்? வீரம், பணிவு, தன்மை,எல்லாம் நிறைந்த குணவான்.” என்று நினத்துக் கொண்டார் அவர்.

‘அரசில் அமைச்சர் பதவியில் இருப்பவர், பேரரசரின் சகோதரர், தன் அரசு மாளிகையில் இல்லாமல் தான் வசிக்கும் குடிலிற்கு என்னை அழைத்திருக்கிறார்; அப்படியென்றால், இது அரசு சம்பந்தப்பட்டதல்ல, தனிப்பட்ட செய்தி ஏதோ சொல்லப் போகிறார். என் அன்னையைப் பற்றிச் சொல்வாரோ? என் பிறப்பின் இரகசியம் தெரியப் போகிறதா, ஆதவனே? உலக விளக்கான நீ சாட்சி நிற்க வேண்டும். பகைவர்களைப் பந்தாடும் போது கூட அமைதி காக்கும் என் இதயம் இன்று அஸ்வமேதக் குதிரையாகப் பாய்கிறது. சூரியனே, இந்த நாளின் நற்குறிகள் நல்லவையாக முடியட்டும்.’

விதுரர் வாயிலில் நின்று வரவேற்பார் என அவன் எதிர்பார்க்கவில்லை. தேகம் நடுங்க அவர் பாதங்களில் பணிந்தான். அவர் அவனை அணைத்துக் கொண்டு ஆசிகள் சொன்னார். பிறகு நீண்ட மௌனம். அவனுக்கு அவரிடம் என்ன பேசுவது என்பது தெரியவில்லை; ‘ஆனால், அவர் ஏன் ஒன்றும் பேசவில்லை? கூப்பிட்டது அவர் தானே? அப்போது அவரிடம் தானே சொல்வதற்கு விஷயம் இருக்கிறது?’

அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். கானப்ரியன் காணப்படவில்லை. அவர் எப்போது அங்கிருந்து போனார் என்பதைக் கூட உணர்வெழுச்சியில் தான் கவனிக்கவில்லை என்று கர்ணன் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.

“கர்ணா, நீ துரியனுக்கு சற்று மூத்தவன். நீயும் என் மகன் போலத்தான். இந்த உலகில் பிறர்க்கென அவன் ஒன்று செய்வானென்றால் அது உனக்கு மட்டும்தான்.”

கர்ணனால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. ‘நான் இவருக்கு மகனைப் போலவா? இந்தக் குதிரைக்காரனை, தேரோட்டியை இவர் ஏற்றுக் கொண்டுவிட்டாரா என்ன? நேரே பார்க்கும் சந்தர்ப்பங்களில் கூட ஒரு அரைப் புன்னகையுடன் கடந்து செல்லும் இவருக்கு எப்போதிருந்து நான் மகனுக்குச் சமானமானேன்? என்ன நடந்து கொண்டிருக்கிறது இப்போது? இதற்கு நான் என்ன பதில் சொல்வது?’

“கர்ணா, நான் அமைச்சராக உன்னிடம் பேசவில்லை. துரியனின் பெரிய தந்தையாகப் பேசுகிறேன்.” என்றார் விதுரர்.

கர்ணனுக்கு மீண்டும் திகைப்பு. ‘இவர் என் நண்பனின் சிறிய தந்தை அல்லவா? ஒருக்கால், வியாசர் சொன்னதை என்னிடம் சொல்லப் போவதாக இருக்கிறாரோ?’

விதுரர் அவனது குழப்பதைப் பார்த்து சிரித்தார். “கர்ணா, நான் சிவையின் மைந்தன்; வியாசரால் சிவையின் கர்ப்பத்தில் வந்தவன். என் தாய் சிவை, லோமஹர்ஷன் குலத்தில் வந்த சுபைக்குப் பிறந்தவள். உனக்கு ஆச்சர்யமாக இருக்கும்; சுபையைக் கூடியவர் ஒரு பீதர்.”

கர்ணனுக்கு இவ்விவரங்கள் புதிதாக இருந்தன. இந்தச் செய்திகளை தன்னிடம் ஏன் சொல்கிறார் என்றும் சிந்தித்தான்.

“காரணம் இருக்கிறது, மகனே. உன்னை ஒன்று கேட்கிறேன், க்ஷத்ரிய வம்சத்தில் பட்டத்திற்கு உரிமை யாருக்கு இருக்கிறது?” என்றவர்  தொடர்ந்தார்.“மூத்த பிள்ளைக்கென்று, பொதுவான வழிமுறை இருக்கிறதல்லவா? அதுவும் தந்தை வழிக் குலம்.”

கர்ணன் தலையசைத்தான்.

“அதன்படி, நான் அஸ்தினாபுரியின் அரியணைக்கு முதல் உரிமை உள்ளவன்.” என்று அமைதியாகச் சொன்னார் விதுரர். கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. பல நொடிகள் இருவரும் ஒன்றும் பேசாதிருந்தார்கள்.

விதுரர் கண்களின் மேல் உள்ளங்கைகளை வைத்துக் கொண்டார்; பிறகு காரணமற்று சிரித்தார்.

“கர்ணா, நீ என் தந்தை வியாசரைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? பல நேரங்களில் ஒரு காட்டாளனைப் போலிருப்பார். அவருடைய விந்தினை சுமக்க எந்தப் பெண்ணும் முன்வரமாட்டாள். என் தாய், சிவை, அவளுக்கு அழகு முக்கியமில்லை, அறிவு முக்கியமெனப்பட்டது. அவள் விரும்பித்தான் அவரை ஏற்றாள்; முதல் கரு நான், முதலில் பிறந்ததும்  நான். பின்னர் தான் பேரரசி சத்யவதியின் ஆணைக்கு உட்பட்டார்கள் என் சிற்றன்னையர். இதைப் பேரரசி என்னிடமும் சொல்லியிருக்கிறார், பீஷ்மரிடமும் சொன்னார்.”

‘அப்படியென்றால்…’

“தந்தைக்காக பீஷ்மர் மச்சக் குலக் கன்னியை அன்னையென ஏற்றார்; அன்னை சத்யவதியைச் சொல்கிறேன். அந்த அன்னைக்காக தம்பிக்கு அரியணயையும் விட்டுக் கொடுத்தார். அவர் குருதித் தூய்மையில் நம்பிக்கை உள்ளவர். மேலும் தந்தை வழியில் குல முன்னுரிமை என்ற கருத்தும் உள்ளவர். அதனால் தான், தன் அண்ணன் வியாசர் மூலம் வம்சம் வளர ஆசைப்பட்டார். அதை பேரரசியின் ஆசை என்றும் சொன்னார். அது உண்மைதான். ஆனால், பணிப்பெண்ணின் மகன் சிம்மாசனத்தில் அமர்வதை அவர் விரும்பவில்லை. யோசித்துப் பார், காசி அரசனின் மூன்று புதல்விகளையும் கவர்ந்து வந்து அதில் இருவரை தன் தம்பிகளுக்குத் திருமணம் செய்து வைத்தவர் அவர். விட்டுப் போன தூய க்ஷத்ரிய குருதியை இப்படி மீட்டெடுக்கப் பார்த்தார். பணிப்பெண்ணிற்குப் பிறந்த நான் அரசனாகலாமா, அதற்கு மற்ற அரசர்கள் ஒப்புதல் அளிப்பார்களா, என் அரசின் வழிமுறை இவர்களுக்கெல்லாம் ஒத்து வருமா, அதற்குப் பிறகு பணியாளர்கள் எஜமானரின் பேச்சுக்களைக் கேட்பார்களா என்றெல்லாம் அவர் சிந்தித்தார்.”

‘பீஷ்மர், அவர் மிகவும் போற்றும் விதுரருக்கு இப்படி ஒரு இழிவைச் செய்வாரா? இந்த எண்ணங்களால் தான் தன்னை அவர் வெறுக்கிறாரோ?’ கர்ணனுக்கு கலக்கமாக இருந்தது. இதையெல்லாம் ஏன் இப்போது இவர் சொல்கிறார் என்றும் தோன்றியது.

“கர்ணா, நான் பீஷ்மரை நிழலெனத் தொடர்பவன். அவர் சஞ்சலத்தில் இருப்பதை அறிந்தேன். ஆனால், நானாக என்ன சொல்வது அவரிடம் எனவும் தயங்கினேன். ஒரு நாள் என்னை அழைத்தார். “இந்த அரண்மனையில் எத்தனையோ நிகழ்வுகள், பாதி யூகத்திலும், பாதி உண்மையிலும் நெய்யப்பட்டுள்ளன. அரச குடும்பங்களின் வரலாற்றுச் சாபம் என நினைக்கிறேன். முன்னரே கட்டமைத்த பொய் நீ இளையவன் என்பது. அது அப்படித்தான் தொடர முடியும். இல்லையெனில் மிருக பலத்தால் திருதாஷ்டிரன் உன்னைக் கொல்லக் கூடும்.” என்றார்.

“கர்ணா, நான் அப்போது சிரித்தேன். என் விஷ்ணு அஸ்திரத்தின் முன் யாரும் நிற்க முடியாது தந்தையே. நான் என் சகோதரர்களைக் கொல்வேன் என்றா நினைக்கிறீர்கள், அதுவும் அரசுக்காக?’ எனக் கேட்டேன். “அவர் ஆதரவாக என் தோள் மீது கைகளை வைத்தார். நீண்ட பெரு மூச்சிழுத்தார். பின்னர் சொன்னார்: எனக்கு நீ வேண்டும். உன் அறிவும், அமைச்சும், நீதியும், நெறிமுறைகளும் வேண்டும். உன் வீரமும் நான் அறிவேன். நான் இக்கட்டில் இருக்கிறேன், விதுரா, ஆனால், ஒன்று சொல், விழியிழந்தவன் அரசாளலாமா?” என்றார்.

“நீங்கள் ஞானி, தந்தையே. லகிமா தேவியின் ‘விவாத சந்த்ரம்’ ப்ருஹஸ்பதி சொன்ன ‘ஷாத்ர ஸ்மிருதி’ இவைகள் விழியில்லாதவர் ஆட்சிக்கு வர வழியமைக்கின்றன. உங்களுக்கு உரித்தான சிம்மாசனத்தை சந்தனு மாமன்னருக்காக, அன்னை சத்யவதிக்காக விட்டுக் கொடுத்தீர்கள்; மனைவி, மக்கள் சுகமுமில்லாமல் தனியனாகி விட்டீர்கள். நான் இந்த அரியணைக்குப் போட்டியில்லை, தந்தையே! நிலையில்லாத இந்தப் பதவிகளில் நான் பற்று வைக்கவில்லை. நீங்கள் சொல்வதால் அமைச்சனாக இருக்கிறேன். இல்லையெனில் என் தந்தையிடம் போய்விடுவேன். காட்டாளனாக நானும் உருப் பெறுவேன்’ என்றேன். “கர்ணா, பீஷ்மர் அழுது அன்றுதான் பார்த்தேன். அது எனது வெற்றி என்று கூட ஒரு எண்ணம் எனக்கு.”

பீஷ்மருக்குத் தியாகத்தில் விதுரர் சளைத்தவரில்லை என கர்ணனுக்குத் தோன்றியது. ஆனால், இன்னமும் ஏன் தன்னிடம் இதைச் சொல்கிறார் என அவனுக்குப் புரியவில்லை.

“கர்ணா, நானும் நீயும் ஒன்று. என் பிறப்பை இழித்துப் பேசினார்கள், என் முதுகின் பின்னே. அரசனென்பதால், உன் காதுகளுக்குக் கேட்காமல் உன்னை பழிக்கிறார்கள். இந்த உலகையே அழிக்கும் விஷ்ணு அஸ்திரம் என்னிடம் இருக்கிறது, அதைப் பிரயோகிப்பது எப்படி என்று துரோணரோ, பீஷ்மரோ கூட அறிய மாட்டார்கள். நான் ஆக்கலின் பக்கத்தில் நின்றேன்; என்றும் அப்படித்தான். அழிப்பது இயற்கையின் செயல். அதை மானிடன் ஏன் கைக்கொள்ள வேண்டும்? உடற் குறை கிடையாது எனக்கு, வீரத்திலும், விவேகத்திலும் நான் பீஷ்மரையும், வியாசரையும் கொண்டிருக்கிறேன் என்று பேரரசி சொல்வார்கள். ஆனாலும், நாடாள அதெல்லாம் தகுதியேயில்லை; என் தாய் ஒரு சேடி என்பதைத் தவிர காரணங்கள் ஏதுமில்லை. மன்னனோ, அமைச்சனோ, அதுவுமில்லையோ இவைகள் எனக்கு இல்லாவிட்டாலென்ன? என் இழப்பு இதனால் அதிகமா, அவர்கள் இழந்தது, இழக்கப்போவது அதிகமா? தலை கனத்தில் பேசவில்லை நான். எதற்கு ஏங்கி நம்மை வதைத்துக் கொள்ள வேண்டும்? சிறிய வாழ்க்கை இது மகனே. நம் கௌரவம் நம் கைகளில் தான்; நாம் தான்       நம்மை மதித்துக் கொள்ள வேண்டும்; இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை வரும். கிடைத்து விட்ட பிறகு பல நேரங்களில் ஏமாற்றமும், அசூயையும் தான் மிஞ்சும். புரிந்து கொள், கர்ணா. விடை தெரியாத கேள்வியில் உன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கிறாய். அது உன்னை அமைதியற்றுப் போகச் செய்கிறது. நுட்பமாக ஒன்று சொல்வேன், உனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மட்டும் நீ கணக்கில் கொள்கிறாய்; அதை உன் அவசங்களின் கவசம் என அணிகிறாய்; உன் பேராற்றலில் உனக்குப் பெருமையில்லை, உன் அழகில், உன் வசதியில், உன் வாழ்வில் எத்தனை உன்னதத் தருணங்கள்-அதையெல்லாம் கொண்டாடிக்கொள்ளாமல், பறி கொடுத்தவனைப் போல் துக்கம் கொள்வது உன் அறிவைக் கொன்று விடும். உன்னால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் செய்து விடும். இகழ்பவர் கண்களின் முன் நான் மீண்டெழுந்தேன் என்று நிமிர்ந்து நில். உன்னை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்.”

‘ஐயனே, என் பிறப்பின் களங்கம் என்னை அச்சுறுத்துகிறது. உங்களுக்கு உங்கள் தாய் யார், தந்தை யார் எனத் தெரியும். நீங்கள் தைர்யமாகப் பேசலாம்; ஆனால், நான்..’ சொல்லும் போதே அவன் குரல் தழுதழுத்தது.

“கர்ணா, ஒரு கதை சொல்கிறேன், கேள். மிக நேசித்த பொருட்கள், மிக விலையுயர்ந்தவைகள் அவைகளுடன் ஒருவன் பயணம் செய்தான். சூறைக்காற்றுடன் புயல் அடித்தது திடீரென்று. அவனுடன் வந்தவர்கள் விரைந்து சென்றுவிட்டார்கள். இவன் சுமையைத் தூக்கிக் கொண்டு அந்தப் புயலில், கொடுங்காற்றில், மழை ஈரத்தில் தத்தளித்தான்; அவன் பொருட்கள் அவை, மிக விலை உயர்ந்தவை; தண்ணீரில் நனைந்து கனத்து அவனைக் கடைசியில் நீரிலேயே மூழ்கடித்துவிட்டன. 

விட்டு விடுதலையாகு, கர்ணா; காலம் போட்ட சில முடிச்சுகள் எப்போது அவிழும் என யார் சொல்ல முடியும்? நம் பேச்சு நமக்கிடையேயானது. நீ சிந்தித்துப் பார். அம்மா என்பது சத்தியம், அப்பா என்பது நம்பிக்கை. உன்னை வளர்த்தவர்களைத்தான் நீ உண்மையில் கொண்டாட வேண்டும், விட்டுப் போனவர்களையல்ல. நான் அதைத்தான் செய்தேன். என்னை வளர்த்தவர்களிடம் நேசம் காட்டினேன்; பீஷ்மருக்கு, அவரது சிந்தனைக்கு மாற்றாகக் கூட நான் ஆசைப்பட்டதில்லை. இன்றும், என்றும் தர்ம வழியில் இருக்கிறேன், கவலையில்லாமல் இருக்கிறேன். துரியன் என்னை மதிப்பதில்லை என்பதால் நான் அவனை வெறுப்பதில்லை. அவன் நலமாக வாழத்தான் சில நேரங்களில் அவனிடம், ஏன் உன்னிடமும் கூட கடுமையாக நடந்து கொள்கிறேன். உன்னால் தான் அவனை நேர்வழிப் படுத்த முடியும்; அப்போது சகுனி சொல்வதை சீர்தூக்கிப் பார்க்கும் குணம் அவனுக்கு வந்துவிடும். உறுத்தும் கவலைதான் உன்னுடையது; அதைப் புரையோடிப் போக விடாதே. உனக்கு மங்களம் உண்டாகட்டும்.’

விடை கொள்ளும் முகமாக எழுந்த கர்ணன் ‘முயல்கிறேன், ஐயனே’ என்று சொல்லி வணங்கினான். மாடும், கன்றுமாக மேய்ச்சலில் இருந்து திரும்புவதைப் பார்த்த மாத்திரத்தில் கண்களில் நீர் சுரந்தது அவனுக்கு. சூரியன் ஆயாசமாக மேற்கில் சரிந்தான்.

 

இது என்ன விளையாட்டு..! – கோவை சங்கர்

Murugan and Woody Woodpeacock | Art, Lord murugan, Lord murugan wallpapers

இது என்ன விளையாட்டு – சரவணா
இது என்ன விளையாட்டு

அடுத்தவன் பொருளை ஆசைப்படாதே
என்கிறது என்தங்க மனசு
அவன்பொருள் கவர்ந்து வாழ்ந்துபாரேன்
என்கிறது என்கள்ள மனசு!

பிறர்பெண்ணை பார்ப்பதுவே பெரும்பாவம்
என்கிறது என்தங்க மனசு
அவளழகை ரகசியமாய் ரசிக்கலாமா
என்கிறது என்கபட மனசு!

நல்லெண்ணத்தை கொடுப்பவனும் நீ
கபடவுணர்வை விதைப்பவனும் நீ
தர்மத்தை நெஞ்சினிலே பதிப்பவனும் நீ
ஆசைகளை மனதினிலே திணிப்பவனும் நீ!

என்னவதி உனக்கென்ன விளையாட்டா
என்தவிப்பு உனக்கது தாலாட்டா
எனக்குத் தருகின்ற சோதனையா
எவ்வழி செல்கிறேனென பார்க்கிறயா..!

 

 

 

சுகமா ?சோகமா? – ஜெயந்தி கௌரி ஷங்கர்

கனவுகள், ஏக்கங்கள்! – சிறுகதை | Dinamalar

சுகமா ?சோகமா?

பிரிவுகள்  ஒவ்வொரு காலகட்டத்திலும் வித விதமான அனுபவங்களை தரும் போல !!!!!

சில சமயங்களில் பிரிவு சுகமே.

வெகுவான பல சமயங்களில் பிரிவு  சோகம்தான்.

அம்மா இறந்த போது சுகம் சோகம் இரண்டுமே!! கான்சரில் வேதனைபட்ட அம்மா இறந்தபோது ஒரு கணம் மனம்  வெகுவாக லேசாகி போனது சுகமா?

சகோதரர்களுடன் இடுகாட்டிற்கு சென்று அவள் மீது  கொள்ளி வைத்த  தருணத்தில் இனிமேல் அம்மாவை பார்க்க முடியாது என்ற உள்ளுணர்வு  மடை திறந்த வெள்ளமாக கண்களில் 

கண்ணீர் !இது சோகம் போலும் .

அண்ணா,தினமும் அம்மாவிற்கு காரியம்   சம்பிரதாயம் 

தவறாமல் செய்யும் நாட்களில் அந்தி சாயும் நேரத்தில்

 கொட்டிவாக்கம் மொட்டை மாடியில் அண்ணாந்து வானத்தை பார்த்து  வாய்விட்டு  அழது   ‘அம்மா இந்த மேகங்களுக்கு இடையில் ஒரு நொடிபோழுது உன் தெற்றுபல் தெரிய ஒரு சின்ன சிரிப்பை   உதிர்த்துவிட்டு போவாயா  ?’என்று பிதற்றிய போது சோகம்.

அந்தி சாய்ந்து இருள் சூழ துவங்கும் நேரத்தில் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் தோன்றும்போது ‘நீதான் என் அம்மாவோ ?

என்று ஆச்சர்யபட இது சுகமோ!!!

என்னை பெண்ணாய் இங்கு தந்து சீராட்டிபாலூட்டிஎன் கழிவு துடைத்துபெரிய மனுஷி ஆன அன்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை  மெதுவாக  

கோர்த்து  சொல்லாமல் சொல்லின விஷயங்கள் பல..

அதே அம்மா கான்சரில் தவிக்கும்போது அவள் எனக்கு செய்த அத்தனயும் ,அவளுக்கு நான் செய்ய ஒரு வாய்ப்பு. அம்மாவை, பல் தேய்த்துவிட்டு,குளிப்பாட்டி விட்டு ​அவள் கழிவகற்றி , முகம் அலம்பிவிட்டு,பொட்டு இட்டு, விபூதி இட்டு ஒரு நிமிடம் உற்று பார்ப்பேன் , எப்படி இருந்த  என் அம்மா இப்படி இருந்த என் அழகான அம்மா, வற்றி போய் , உயிர் மட்டுமே ஊசலாடி கொண்டிருக்கும் அம்மாபளீச்சென்று மீண்டும் அழகாகி விடுவாள்.

பாலூட்டிய கடனை அடைக்க முடியுமா ?நான் அம்மாவிற்கு 

இரத்தம் கொடுத்த அன்றுதோன்றியது இந்த ஜென்ம கடன் 

உன்னுடன் முடிந்துவிட்டது என்று

சுகமான சோகம் அன்று நான் அனுபவித்தேன்.

இன்னும் எவ்ளவோ எழுத தோன்றுகிறது ……இந்த நாட்களில் நான் வியக்கிறேன் சின்ன மனதில் ஒரு  வானளவு ,கடலளவு எண்ணங்களா  என்று?

சொல்லுவதில் இருப்பதைவிட எழுதுவதில்  உள்ள சுகம்சுவை இரண்டும் ஈடு செய்ய இயலாது. உள்ளத்தில் இருப்பது வெளிப்படும் போதுதாய் அன்பை உணர்கிறேனோ தாய் மொழியில்.!!!!!

மனதையே முன்னால் இருத்துவது தாய் மொழியில் இயல்பாக இருப்பதால்தான் நம் மொழியை தாய் மொழி என்கிறோமோ? 

 

  ஒரு நாள்- ரேவதி ராமச்சந்திரன்

    ஒரு பெண் விலைமாதுவாக, மனைவியாக மற்றும் காதலியாக இருக்க முடியுமா? #HerChoice - Page 2 - பேசாப் பொருள் - கருத்துக்களம்                                                   

 ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி அப்ப ஆண்டி அரசனாவானா! ஆம் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற எங்கள் அப்பா அரசராகிறாரோ இல்லையோ, எங்களை எல்லாம் ராணி மாதிரி தான் வைத்திருந்தார்.

இப்ப நினைத்தால் கூட  ஆச்சர்யமாக இருக்கிறது.  எப்படி அவரால் தனது சொற்ப சம்பளத்தை வைத்துக்  கொண்டு எங்களை  எல்லாம் கரை ஏற்றினாரோ! ம் ஹூ ம். அவர் எங்கே ஏற்றினார்! ஏற்றியது  பட்ட மகிஷி அல்லவா !

ஆம் படிதாண்டா பத்தினியாக இருந்த எங்கள் அம்மா, கணவரின் சொந்தங்கள் எல்லாம் பிரிந்த பிறகு, அப்பாவை பதவி உயர்வு ஏற்றுக்  கொள்ளத் தூண்டினாள். அதோடு மாற்றலும்  வருமென்று தெரிந்து இருந்தாலும் ஐந்து பெண்களை எண்ணி வரப்போகும் நாட்களை சமாளிப்போம் என்ற தைரியத்துடன் இதற்கு  ஒப்புக்கொண்டாள். அடடே! சும்மா சொல்லக்கூடாது. ப்ரைம் மினிஸ்டர் ஆக வேண்டியவள். ஜாதகம்  தப்பி எங்கள் அம்மா ஆனது எங்களின் பாக்கியம் . எங்களை முன்னே கொண்டு வர  பட்ட பாட்டை எழுத ஒரு குயர் நோட் பத்தாது. அடேங்கப்பா! இரவில் நேரம் கழித்து காய்கறி வாங்கப் போவாள். கடைக்காரன் கொஞ்சம் விலை குறைத்து கொடுப்பான் என்று. கடை கடையாக ஏறி இறங்கி பேரம் பேசி பொருட்களை வாங்கி வந்து எங்களை ஒரு குறையும் தெரியாமல் வளர்த்த விதம் எனது மாமியார் வீட்டில் என்னை பாராட்டிய போது தான் புரிந்தது. ஓ அம்மா புராணம் இன்னொரு கதையில் சொல்வேன். அது ஒரு பெரிய அத்யாயம்.

 இவ்விதம்  தன்  சாமத்திரியத்தால் எங்களுக்கெல்லாம் படி அளந்தாள் . ஒவ்வொருவரையும் நிறைய படிக்க  வைத்து, நல்ல உத்தியோகத்தில் அமர வைத்து, சிறக்கத் திருமணமும் செய் வித்தாள்.

இதோ நான்காவது  நான். திருமணத்திற்கு முன்,  திருமணத்திற்குப் பின் என்று கோலோச்சாத  ராணியாகவே இருந்தேன். என் பிள்ளைகள்  திருமணம், அவர்களின் குழந்தைகள் என்று ஆண்டவன் எனக்கு எந்த ஒரு குறையும் வைக்கவில்லை.

நல்ல நல்ல நண்பர்கள், நல்ல சுற்றம், வசதியான வீடு, பொருட்செல்வம், நல்ல சம்பந்திகள் என்று எல்லோரும்  எல்லாமும்  என்னைச் சூழ்ந்துள்ளன.

60 வயதான நான் என் வாழ்க்கையை எண்ணிப்  பெருமிதம் கொள்கிறேன்,வளர்ந்த விதம், நான் வளர்த்த விதம் , நான் செய்த புண்ணியம். ஆனால் இப்பொழுது, ஒவ்வொரு நாள் விடியலும் எனக்கு சன்மானம் என்றேத் தோன்றுகிறது. ஒவ்வொரு பூ மலர்வதும் என்னைச் சந்தோஷப்படுத்தவே என்று தோன்றுகிறது .காலைக் கதிரவனும்,  மாலை சந்திரனும் இன்னும் என்னை ஆச்சர்யப்படு த்துகின்றன. இரவில் கதை கேட்டுக் கொண்டே மடியில் படுத்துறங்கும் பேரனையும், வீடியோவில் என்னுடன் பல மணி நேரம் உரையாடும் இன்னொரு பேரனையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் இருக்கிறேன். வாழ்க்கைக்கு அரத்தம் புரிய ஆரம்பித்துள்ளது.  ஆனால் நேரம் வந்தால் போகத் தானே  வேண்டும்.

அது வரை அது வரை  ஒவ்வொரு நாளையும்  எனக்கு ஆண்டவன் இடும் பிச்சையாக வணங்குகிறேன். .

அனாயாசேன மரணத்தை வேண்டி நிற்கும் நான் இன்று மேலும் ஒரு நாள் வாழ்வது உலக அதிசயமாக எனக்குப் படுகிறது.

நன்றி ஆண்டவா!

 

                                                                            

 

 

                             

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

இதிகாசங்களைப் பற்றி அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் உலகில் நூற்றுக்கணக்கான இதிகாசங்கள் பவனி வருகின்றன.இந்துக்கள், புத்தர்கள், சீனர்கள், கிரேக்கம், ரோமானியர்கள் , நார்ஸ் , செல்டிக், ஸ்லேவிக், எகிப்தியர்கள், மெசபோடோனியர்கள், பாபிலோனியர்கள், அராபியர்கள், முகமதியர்கள் போன்றவை பிரசித்தமானவை.

இவை அனைத்தும் ஒரு மத்தியப் புள்ளியிலிருந்து வந்தவை போலவே தோன்றுகிறது.

நன்றாக ஆராய்ந்து  பார்த்தால் இவற்றில் இருக்கும் ஒற்றுமையைக் கண்டுபிடிக்கலாம். 

நாமும்  முயல்வோமே!  

அடுத்த ஜனவரி இதழிலிருந்து குவிகத்தில்  தொடங்குகிறது உலக இதிகாசங்கள் பற்றிய ஒரு புதிய தொடர் !

 

Interpretations of Indian Epics - Climate Healers

Ramayana - Marriage of Rama Bharata Lakshmana and Shatrughna - Ramayana - Wikipedia in 2020 | Digital art fantasy, Indian art, Indian artist

Ra Travelling Through the Underworld

Pandora About to Open Her Box

 

 

Oedipus & the Sphinx of Thebes

IMAGEMAP

கடைசிப் பக்கம்- டாக்டர் ஜெ.பாஸ்கரன்

கிளினிக் ‘பல்புகள்’ !

the official book of doctor doctor jokes doctor jokes: funny jokes about doctors! joke cartoon humour png download - 500*677 - Free Transparent Official Book Of Doctor Doctor Jokes png Download. - CleanPNG / KissPNGDoctor cartoon character thumbs up pointing down. A cartoon doctor wearing lab white coat with stethoscope peeking above sign | CanStock

மருத்துவர்கள் பார்க்கும் மனிதர்களில்தான் எத்தனை வகையான வேடிக்கை மனிதர்கள்!  

அன்று கொஞ்சம் நிதானமாக மாலை கிளினிக் வந்தேன் – என் வீட்டுக்குக் கீழ்வீட்டு மாமாவுக்குத் தலை சுற்றல். சுமார் ஒரு மணிநேரம் அவர் என்னைச் சுற்றி வந்ததால், சற்று தாமதமாகி விட்டது. (ஒரு படத்தில் டி.ஏ.மதுரம் ‘தலை சுத்துது’ என்று சொல்ல, உடனே என்.எஸ்.கே., “முதுகு தெரியுதா?” என்பார்! யாருக்கு தலை சுற்றல் என்று சொன்னாலும் இந்த ஜோக் நிச்சயமாக என் நினைவுக்கு வரும்!)

மிகவும் தெரிந்தவர்கள், உறவினர்கள் ‘நோய்’ என்று வீட்டுக்கு வந்தால், அவர்களைப் பார்த்து, மருந்து எழுதிக் கொடுத்த பிறகு, அரை மணி நேரம் உலகளாவிய விவகாரங்கள் பேசிக்கொண்டிருப்பார்கள் – கார்ப்பொரேஷன் குப்பை லாரி குப்பைகளை வாரி இறைப்பதிலிருந்து, ‘ட்ரம்ப்’ ஏன் ஜெயிக்கவில்லை என்பது வரை அலசுவார்கள்! – எல்லாம் முடிந்து போகும்போது, திரும்பவும் ஒரு முறை ப்ரிஸ்கிருப்ஷனைக் காட்டி, “இன்னொரு முறை எப்படிச் சாப்பிடவேண்டும் என்று சொல்லிவிடுங்கள் – எனக்கு மறதி ஜாஸ்தி”  என்பார்கள். நிரந்தரமாக ஒட்டிய புன்னகையுடன், திரும்பவும் சொல்லி, அனுப்புகின்ற நேரம், மாமாவைத் தேடிக்கொண்டு மாமி வந்துவிட, “இவருக்கு ஒண்ணுமில்லையே டாக்டர்?” என்ற கேள்விக்கு மீண்டும் ஒரு சுற்று (ஒரு முறை என்று அறிக!) பதில் சொல்லிச் சிரிக்க வேண்டியதிருக்கும்! திரும்பினால், வீட்டுக்காரம்மா எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் – நேரமாகிறதே என்ற கவலைதான்!  மாமி அகமும் முகமும் மலர, பிரதோஷம் முதல் அன்றைய டிவி சீரியலில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டை வரை பேசுவதற்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்க, எனக்கு கடிகாரம் பார்த்துத் தலை சுற்றத் தொடங்கிவிடும்!!

உள்ளே நுழைந்த பாட்டிக்கு எண்பது வயதிருக்கலாம் – அரக்கு நிறப் புடவையில் பச்சை நிற பார்டர். காதில் பெரிய பாம்படம், ‘எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவேன்’ என்று பயமுறுத்தியது. 

“கொழந்தைக்குப் பாக்கணும். வந்துகிட்டே இருக்காங்க” என்றபடி எதிரில் வந்து அமர்ந்தார். பின்னாலேயே வந்த அவர் மகன் (அப்படித்தான் இருக்க வேண்டும் – ஐம்பது வயதிருக்கலாம்), பாட்டிக்கருகில் இன்னொரு சேரில் அமர்ந்தார். சிரித்தபடி, நானும் குழந்தைக்காகக் காத்திருந்தேன். யாரையும் காணாததால், ‘வந்துகிட்டு இருக்காங்களா?’ என்று பொதுவாகக் கேட்டு வைத்தேன்.

“யாரு?”

“குழந்தைதான்; பேஷண்ட் வருவதாகச் சொன்னீங்களே”

என்னைப் பூச்சியைப் பார்ப்பதைப் போலப் பார்த்து, காவிப் பல் தெரிய சிரித்த பாட்டி, “இவந்தான் கொழந்தை, என் ரெண்டாவது மகன்” என்றார்.

சில வீடுகளில் குழந்தை என்றே பெயர் வைத்திருப்பார்கள். அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே, பாட்டி, “பேரு சண்முவம் – என் ரெண்டாவது கொழந்தை” என்றார். 

நல்ல வேளை, ஐம்பது வயதுக் குழந்தையை இடுப்பில் தூக்கி வராமல் இருந்தாரே – நம்ம ஊர்த் தாய்ப்பாசம் நம்மை வியக்கத்தான் வைக்கிறது!

சில பேஷண்டுகள், தன் கம்ப்ளைண்டுகளை ஒரு தாளில் (ஏ4 ஷீட்டில் இரண்டு பக்கத்துக்குக் குறையாமல் 1,2,3, என்று வரிசைப்படி, நுணுக்கி நுணுக்கி எழுதியிருப்பதுதான் வழக்கம்!) எழுதி வந்து கேட்பார்கள் – இவர்களுக்கு நிச்சயமாக ‘ஆங்ஸைடி’ எனப்படும் படபடப்பு நிலை இருப்பது உறுதி! ஒன்று ஒன்றாகக் கேட்டு, ‘டிக்’ செய்வார்கள் – ‘இரவில் கீரை சாப்பிடலாமா?’ என்பதிலிருந்து, ‘சர்க்கரை வியாதிக்கு எவ்வளவு வெந்தயம் சாப்பிட வேண்டும்?’ என்பது வரை கேள்விகளை அடுக்குவார்கள். பொறுமை கடலினும் பெரிது என்பதற்கேற்ப, சிரித்தபடியே முடிந்த வரையில் பதில் சொல்வது பழகிப்போய்விட்டது! எல்லாம் முடிந்து, வெளியே சென்று, மீண்டும் உள்ளே வந்து, “ஒன்று மறந்து விட்டது – இந்த மருந்துகளினால் ‘சைட் எஃபெக்ட்’ ஒன்றும் இருக்காதே?” என்று கேட்டு, பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல், தலையை ஆட்டியபடியே சென்று விடுவர்! 

எப்போதும் இப்படிக் கேள்விக் கணைகளைத் தாளில் தாங்கி வரும் பெண்மணி ஒருமுறை கையில் ஹாண்ட்பேக் இல்லாமல் வந்தார். ‘ஆஹா, தப்பித்தோம் இன்று’ என்று நினைத்த சந்தோஷம் நிலைக்கவில்லை. ‘அடடா, கைப்பையை மறந்து விட்டேனே’ என்றவர், ஒரு சில நொடிகளில், ‘நல்ல நல்லவேளை, எதற்கும் இருக்கட்டும் என்று, ஒரு காப்பி எடுத்து வைத்துக் கொண்டது நல்லதாய்ப் போயிற்று’ என்று சொல்லி, எதிர்ப்பக்கம் திரும்பி ஒரு பேப்பரை எடுத்து, கேள்விகளை வாசிக்கத் தொடங்கினார் – உண்மையிலேயே எனக்குத் தலை சுற்றத் தொடங்கியது!

கைக் கட்டைவிரலில் அடி பட்ட நண்பருக்குக் கட்டு போட்டபிறகு, ‘நான் ஃபுட் பால் ஆடமுடியுமா?’ என்று கேட்டார். நான் சற்று வியப்புடன், ’கையில், அதுவும் கட்டை விரலில்தானே அடி; ஃபுட் பால் தாராளமாக ஆடலாம்’ என்றேன். அவர் சிரித்தபடியே, ’எனக்கு ஃபுட் பால் ஆடத்தெரியாதே’ என்று ஜோக் அடித்தார். ‘ஙே’ என்று முழித்தேன்!

எதிரில் வந்து அமர்ந்து, ‘என்ன உடம்புக்கு?’ என்று கேட்டவுடன், “நீதான், பட்சிக்கிறியே, இன்னான்னு கண்டி பிடியேன்” என்று என்று சவால் விடும் அப்பாவிகளைப் பார்த்திருக்கிறேன்!  

“சார் எனக்குக் கண்ணெல்லாம் எரியுது, வாய் காயுது, உடம்பெல்லாம் வலிக்குது – ‘ஜாக்ரன் ஸிண்ட்ரோம்’ ஆ இருக்கும்ன்னு நெனைக்கிறேன் (கூகிள் சாமியிடம் பாடம் கேட்டு வந்திருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!), கொஞ்சம் செக் பண்ணி சொல்றீங்களா?” என்னும் அறிவு ஜீவிகளும் வருவதுண்டு!

டாக்டர்களைப் பற்றிய ஜோக்குகள் பிரபலமானவை! எப்போதும் ‘ஸ்ட்ரெஸ்’ ஸுடன் பணி புரியும் டாக்டர்களுக்கு இப்படிப்பட்ட பேஷண்டுகள் கொஞ்சம் ரிலீஃப் கொடுப்பார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை தலைவலியையும் கொடுப்பார்கள் என்பது!.