குவிகம் பொக்கிஷம் – நீல வெளிச்சம் – வைக்கம் முகம்மது பஷீர் – தமிழில் தி இரா மீனா

 

vaikom muhammad basheer drawing with pastel color - YouTube

நீல வெளிச்சம்

மூலம் :  வைக்கம் முகமது பஷீர் [1908 –1994 ]

ஆங்கிலம் : மினிஸ்தி நாயர் [ Ministhy Nair]

தமிழில் : தி.இரா.மீனா

 

( இந்தச் சிறுகதையின் அடிப்படையில் பஷீர் அவர்களே திரைக்கதை எழுதி பிரேம் நசீர் , மது, விஜயநிர்மலா நடித்த ‘பார்கவி நிலையம்’ என்ற மலையாளப் படத்தை ஏ வின்சென்ட் இயக்கி வெற்றி கண்டிருக்கிறார்)

Bhargavi Nilayam | Ekanthathayude song - YouTube

அந்த நாளையோ, மாதத்தையோ, வருடத்தையோ சொல்ல வேண்டியதில்லை. நான் ஒரு வீடு தேடிக் கொண்டிருந்தேன். அது ஒரு புதிய விஷயமல்ல. நான் எப்போதும் அந்த ஒரு தேடலில் இருந்திருக்கிறேன். ஒரு வீடு அல்லது அறை என்பது எனக்கு எப்போதும் திருப்தி தந்ததில்லை.அதில் முடிவில்லாத குற்றங்களைக் கண்டு பிடிப்பதிலேயே இருப்பேன். ’உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் விட்டுவிடுங்கள்!” ஆனால் நான் எங்கே போவது? நான் யாரிடம் இதைச் சொல்லமுடியும்.

நான் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு அதைப் பற்றிப் புகார் சொல்லிக் கொண்டேயிருப்பேன்.பல வீடுகளும், அறைகளும் என் குறைகளுக்குப் பலியானவை. அது யாருடைய தவறுமல்ல.எனக்குப் பிடிக்காவிட்டால் காலி செய்வேன். யாருக்குப் பிடிக்கிறதோ அவர்கள் குடி வருவார்கள்.வாடகை வீட்டின் சரித்திரம் இந்தமாதிரி ஒடிக்கொண்டிருந்தது.

வீடுகள் கண்டுபிடிப்பதென்பது கடுமையானதாக இருந்த ஒரு காலம் அது.நல்ல இடத்திற்கு அதிக விலை தரவேண்டும்.இதில் உயர்வு, தாழ்வுமுண்டு.நான் ஒரு வீட்டைக் கண்டுபிடித்து விட்டேன்.

நெரிசலான நகர்ப் பகுதியிலிருந்து விலகி, நகராட்சி எல்லை யில் இருந்த ஒரு சிறிய பங்களா– பார்கவி நிலையம்.’வீடு வாடகைக்கு’ என்று கதவில் ஒரு பழைய பலகை தொங்கிக் கொண்டிருந்தது.

மிகப் பழமையானதாக இருந்தாலும், அந்த வீடு என்னைக் கவர்ந்தது.என்னால் அந்த வீட்டில் இருக்கமுடியுமென நான் முடிவு செய்தேன். அடித்தளத்தில் நான்கு அறைகளும்,சமையலறையும்,குளியலறையுமிருந்தன. முதல் மாடியில் ஒரு முகப்பும், இரண்டு அறைகளுமிருந்தன. குழாய் வசதியிருந்தது.ஆனால் மின்சாரமில்லை.

சமையலறையருகே அருகே ஒரு பழைய கல் கிணறும்,ஓரத்தில் கழிவறையு மிருந்தது. வீட்டின் நான்கு பகுதிகளையும் இணைப்பதான ஒரு சுவர், பொதுச் சாலையின் அருகிலிருந்தது.

எப்படி அதுவரை யாரும் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வர வில்லையென்று எனக்கு மகிழ்ச்சியுடனான ஆச்சர்யம். துருவிப் பார்க்கிற கண்களிலிருந்து மறைக்கப்பட வேண்டிய ஒரு பெண் அது என்று எனக்குத் தோன்றியது.அவளை நான் புர்கா போட்டு மறைக்க வேண்டும்.

பணம் திரட்டுவதில் மும்முரமாக இருந்தேன்.இரண்டு மாத வாடகையை முன் பணமாகக் கொடுத்துவிட்டு வீட்டின் சாவியைப் பெற்றுக் கொண்டேன்.வீட்டைக் காலி செய்துவிட்டு மேல் மாடியில் குடியேறி விட்டேன்.என்னுடைய சாமான்களைத் தூக்கி வந்த கூலியாட்கள் அந்த இடத்தைப் பார்த்து பயந்து உள்ளே வராமல் கதவுக்கு வெளியே சாமான்களை வைத்துவிட்டுப் போய்விட்டனர்.

நான் குளியலறை உட்பட எல்லா அறைகளையும் பெருக்கித் துடைத்துச் சுத்தம் செய்தேன். எங்கும் ஏராளமான புழுதி படர்ந்திருந்தது. சுத்தம் செய்து கொண்டிருந்த போது பூட்டப்பட்டிருந்த ஓர் அறையைப் பார்த்து விட்டுக், குளிக்கப் போய் விட்டேன்.மிக லேசாக உணர்ந்தவனாக, கிணற்றைச் சுற்றி தடுப்பாக எழுப்பப்பட்டிருந்த கல்லில் உட்கார்ந்தேன். பரவசமாக இருந்தேன்.முடிவற்ற கனவுகள் காணலாம். பசுமையான காம்பவுண்டைச் சுற்றி ஓடலாம்.எனக்காக ஓர் அழகான தோட்டத்தை அமைக்கத் திட்டமிட்டேன்.அங்கு முழுவதுமாக ரோஜாப் பூக்கள் இருக்க வேண்டும். மல்லிகையும் தான்!

ஒரு சமையல்காரரை வேலைக்கு வைக்கலாமா என்று யோசித்துப் பின் வேண்டாமென முடிவு செய்தேன்.சிற்றுண்டி முடித்து விட்டுவரும் போது, பிளாஸ்கில் தேநீர் வாங்கி வந்து விடுவேன்.ஹோட்டலில் மதியவுணவுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.அவர்களே இரவு உணவையும் அனுப்பலாம். தபால்காரரிடம் என் புதிய முகவரி குறித்துப் பேசவேண்டும்.

மற்றவர்களிடம் நான் இருக்கும் இடம் பற்றிச் சொல்லி விடக்கூடாதென்று எச்சரிக்க வேண்டும். அருமையான இரவுகளும், பேரானந்தமான பகல் பொழுதுகளும் எனக்காகக் காத்திருக்கின்றன! என்னால் எழுதிக் குவிக்க முடியும்.

மேலே சொன்னது போல பலவித எண்ணங்களில் ஆழ்ந்திருந்த நான்  கிணற்றுக்குள் வெறித்தேன். உள்ளே தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை; புதர் மண்டிக் கிடந்தது.நான் ஒரு கல்லை உள்ளே போட்டேன்.

ப்ளம்ம்ம்..ஒரு பெரிய எதிரொலி! உள்ளே தண்ணீரிருக்கிறது. அது காலை பதினோருமணி. முந்தைய நாளிரவு நான் தூங்கவேயில்லை. ஹோட்டலைக் காலி செய்து,வீட்டு சொந்தக்காரரைப் பார்த்து விட்டு, கட்டில், அலமாரி, நாற்காலி ஆவணங்கள், கிராமபோன், ரிக்கார்டுகள், என்று என் உடைமைகளை கவனமாகக் கட்டிவைத்தேன். விடியுமுன்பே புது வீட்டிற்குப் புறப்பட்டு விட்டேன்.

புது வீட்டின் எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு,முன் கதவைப் பூட்டினேன். சாவியைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, சாலையில் சிறிது உலாவினேன். புது வீட்டில் எந்தப் பாடலைக் கொண்டு இரவுப் பொழுதை ஆரம்பிப்பது என்று யோசித்தேன். ஆங்கிலம்,அரேபியம், உருது, இந்தி,தமிழ்,வங்காளம் என்று நூற்றுக்கணக்கான பிரபல பாடகர்களின் இசைத்தட்டுக்கள் என்னிடமிருந்தன. மலையாள மொழி இசைத் தட்டுக்கள் என்னிடமில்லை. இசை வழிமுறைகள் எனக்குத் திருப்தியளிக்கவில்லை.

இப்போது புதிய டைரக்டர்களும், பாடகர்களும் அறிமுகமாகிக் கொண்டிருக் கின்றனர். மலையாளத்திலும் இசைத்தட்டுக்கள் வாங்க முடிவு செய்தேன்.

யார் பாடலை முதலில் கேட்பது? பங்கஜ் மாலிக்?திலிப் குமார் ராய்? சைகல்? பால் ராப்சன் ?அப்துல் கரீம்கான் ?கனன்தேவி ?குமாரி மம்ஜு தாஸ்குப்தா? குர்ஷித்? ஜோதி காரே? எம்.எஸ்.சுப்புலட்சுமி ?சில பெயர்களை மனதில் புரட்டிப் பார்த்தேன். ’தூர் தேஷ்கே ரெகனே வாலே’ என்றொரு பாடல்…பெண்? எனக்கு நினைவிலில்லை. திரும்பிய பிறகு பார்த்துக் கொள்ளலாம். தோளைக் குலுக்கிக் கொண்டேன்.

தபால்காரரைச் சந்தித்து என் முகவரியைச் சொன்ன போது அவர் திகிலடைந்தார். “ஓ…கடவுளே! சார்..அந்த வீட்டில் ஓர் அசாதாரணமான மரணம் நிகழ்ந்தது…அதனால்தான் இதுவரை யாரும் குடிவரவில்லை”

“அசாதாரண மரணமா? “நான் ஒரு கணம் திணறிவிட்டு அந்தச்சம்பவம் பற்றி விசாரித்தேன்.

“முற்றத்தில் ஒரு கிணறு இருக்கிறது…அதில் யாரோ ஒருவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.அதற்குப் பிறகு அந்த வீட்டில் அமைதியே யில்லை. பலர் வாடகைக்கு வர முயன்றனர். இரவில் கதவுகள் தானாகவே அடித்து மோதிக் கொள்ளும்…தண்ணீர்க் குழாய்கள் திறந்து கொள்ளும்..

இரவில் கதவுகள் தானாகவே அடித்து மோதிக் கொள்ளும்! தண்ணீர்க் குழாய்கள் திறந்து கொள்ளும் !தண்ணீர்க் குழாய்கள் பூட்டியிருந்ததைக் கவனித்திருந்தேன். வெளி மனிதர்கள் அதன் பயன்பாட்டைத் தவிர்க்க பூட்டியிருப்பதாக, வீட்டுச் சொந்தக்காரர் சொன்னார். குளியலறைக் குழாய்கள் பூட்டப்பட்டிருப்பதற்கான தேவை எனக்குப் புரியவில்லை.

“இரவில் யாரோ வந்து மூச்சுத் திணற வைப்பது போலிருக்கும். யாரும் உங்களிடம் எதுவும் சொல்லவில்லையா ?” அவர் சொல்லிக் கொண்டே போனார்.

நான் மிரண்டு போனேன்.” ஐயோ ,இரண்டு மாத வாடகையை முன்பணமாகக் கொடுத்து விட்டேனே ’என்று நினைத்தேன்.” அது ஒன்றும் பெரிதல்ல, ஒன்றிரண்டு மாய மந்திரங்கள் செய்தால் சரியாகிவிடும். என் கடிதங்கள் அந்த முகவரிக்கு வந்து சேரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று பதில் சொன்னேன்.

தைரியமாகப் பேசினேன். நான் ஒருகதாநாயகனோ ,கோழையோ இல்லை. மற்றவர்களை எது பயமுறுத்துமோ அது என்னையும் பயமுறுத்தும். நீங்கள் என்னை கோழை என்று அனுமானிக்கலாம். என் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ?

நான் மிக மெதுவாக நடந்தேன். வேண்டுமென்பதற்காக நான் அனுபவத்தைப் பின் தொடர்வதில்லை.ஆனால் அனுபவம் என்னை நோக்கி ஓடி வந்தால் என்ன செய்ய முடியும் ?என்ன நடக்கப் போகிறதென்று தெரியவில்லை.

ஹோட்டலுக்குப் போய்த் தேநீர் குடித்தேன். பசி செத்துப் போனது. வயிறு அக்னியானது…பயமெனும் கலவரம்.. மதிய உணவை அனுப்புவதற்காக என் வீட்டு முகவரியை ஹோட்டல் மேனஜரிடம் சொன்னேன். பகல் பொழுதில் உணவை அனுப்பி வைக்க எந்தக் கஷ்டமுமில்லை.ஆனால் இரவில் யாரும் ரமாட்டார்கள். ஒரு பெண் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டாள். அவள் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு பேய்கள் பற்றிய பயமில்லையா சார் ?” என்றார்.

என் நடுக்கத்தில் பாதி குறைந்தது. ஓ.. அது ஒரு பெண்! “எனக்கு கவலையில்லை. தவிர எனக்கு மாயமந்திரங்கள் தெரியும்” .

எனக்கு மாய மந்திரங்கள் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் பெண் பேய் என்று தெரிந்ததும் நிம்மதி. அவள் சிறிது நட்பிணக்கமானவளாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன். அருகிலுள்ள வங்கியில் பணிபுரியும் என் நண்பர்களில் சிலரைச் சந்தித்தேன். என் புதிய வீடு பற்றிக் கேள்விப்பட்டதும் கோபமடைந்தனர்.

“என்ன முட்டாள்தனம் !அது பேய் வாழுமிடம்.குறிப்பாக ஆண்கள் தான் அதன் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகுபவர்கள்.”

ஓ ! அவள் ஆண்களை வெறுத்தவள். அப்படியா ? “பார்கவி நிலையத்தில் குடியேறுவதற்கு முன்னால் எங்களிடம் ஏன் எதுவும் கேட்கவில்லை ?”

“அப்படி ஒரு கதை இருக்குமென்றே எனக்குத் தெரியாது. ஏன் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள்?”

“காதல்தான். இருபத்தியோரு வயதான பார்கவி பி.ஏ.படித்தவள். ஆழமாகக் காதலித்தவளை ஒதுக்கிவிட்டு அவன் வேறொருத்தியைத் திருமணம் செய்து கொண்டுவிட்டான்.அவள் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்.”

என் பயத்தின் எல்லை குறைந்தது.ஓ..ஆண்களை அவள் வெறுக்கக் காரணம் அந்த இரகசியம்தான் .

“பார்கவி என்னைத் துன்புறுத்த மாட்டாள் “.
“ஏன் ?”
“மந்திரம்,மந்திரம் “
“பார்க்கலாம். இரவில் அங்கிருந்து அலறத்தான் போகிறாய். “

எனக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை.வீட்டிற்குத் திரும்பிய பிறகு கதவுகள், ஜன்னல்களை எல்லாவறையும் திறந்து வைத்து விட்டு கிணற்றை நோக்கிப் போனேன்.

“பார்கவிக் குட்டி, நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். நான் புதிதாகக் குடி வந்திருப்பவன்.என் அபிப்பிராயத்தில், நான் நல்லவன், நித்திய பிரம்மாசாரியும் கூட.ஏற்கெனவே உன்னைப் பற்றி அவதூறான கதைகளைக் கேட்டிருக்கிறேன்.இரவில் குழாய்களைத் திறந்தும்,கதவுகளை மூடியும்,மனிதர்களின் குரல்வளையை நெறித்தும்..நீ மனிதர்களை இங்கே வசிக்கவே விடுவதில்லையாம்.ஏற்கெனவே முன்பணமாக இரண்டு மாத வாடகையைக் கொடுத்து விட்டேன்.நான் என்ன செய்யவேண்டும்? என்னிடம் பணமும் அதிகமில்லை.உன்னுடைய பெயரில் இருக்கிற இந்த வீடு பார்கவி நிலையம் எனக்குப் பிடித்திருக்கிறது.”

“நான் இங்குதான் வேலை பார்க்க வேண்டும்..நான் கதைகள் எழுதுவேன்.உனக்குக் கதைகள் பிடிக்குமா பார்கவி?நான் எல்லாக் கதைகளையும் உனக்குச் சத்தமாகப் படித்துக் காட்டுகிறேன். உன்னுடன் சண்டை போடவென்று எனக்கு எதுவுமில்லை. முன்பு இங்கு வந்தபோது ஒரு கல்லை கிணற்றுக்குள் போட்டேன். அது யோசிக்காமல் செய்தது.எதிர்காலத்தில் அது மாதிரி செய்ய மாட்டேன்.என்னிடம் அற்புதமான கிராம்போன் பெட்டி இருக்கிறது. நூற்றுக்கணக்கான பாடல்களுமிருக்கின்றன. உனக்குப் பாடல்கள் பிடிக்குமா பார்கவி?”

இதையெல்லாம் பேசி முடித்து விட்டு அமைதியாக உட்கார்ந்தேன். நான் யாரிடம் பேசினேன் ?எல்லாவற்றையும் விழுங்க வாயைப் பிளந்து கொண்டிருக்கும் கிணற்றிடமா ?மரங்கள்,வீடு, சூழ்நிலை, பூமி, ஆகாயம், அல்லது உலகம் என்று யாரிடம் பேசினேன்? என் மனதுக்குள்ளிருந்த கலக்கத்திடம் பேசினேனா ?உள்ளத்தோடுதான் பேசிக்கொண்டிருந்தேன் என்று முடிவு செய்தேன்.

(மீதி அடுத்த இதழில்)

One response to “குவிகம் பொக்கிஷம் – நீல வெளிச்சம் – வைக்கம் முகம்மது பஷீர் – தமிழில் தி இரா மீனா

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.