அட ராமா! | Shanmus blog

அந்தி மயங்கும் அரையிருட்டு வேளை. ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில், யாரோ அணிந்து கழற்றிப் போட்ட மாலை ஒன்று கிடக்கிறது. அந்த வழியே சென்ற ஒருவன் அதைப் பாம்பு என்று நினைத்து அஞ்சி ஓடுகிறான்.  இங்கு மாலை பாம்பாகிறது.

ஆனால் சிவன் கழுத்தில் பாம்பு மாலையாகிறது.

தெருவில் சென்றவனுக்கு மாலையும் பாம்பு– சிவனுக்குப் பாம்பும் மாலை.

பார்வையும், பக்குவமும் நல்லது, கெட்டதை முடிவு செய்கின்றன.

கம்பனின் காவியத்தில் ஓர் உணர்ச்சிகரமான இடம் . தசரதனிடம் இருவரங்கள் பெற்ற கைகேயி இராமனிடம் செய்தி சொல்லும் காட்சி.

பரதன் நாடாள வேண்டும், இராமன் கானகம் செல்ல வேண்டும். — இதைக் கைகேயி விளக்கிக் கூற இராமனும் ஏற்றுக் கொள்கிறான்.

கம்பனின் கவிநயம் இந்த இடத்தில்  இரு பாடல்களில் வெளிப்படுகிறது.

இராமன் போக வேண்டிய காடு எப்படிப்பட்டது?

கைகேயின்  பார்வையில் அது புழுதி பறக்கும் வெப்பமான காடு.

அதனால்தான்,  ‘பூழி வெங்கானம் ஏகி’ என்று சொல்கிறாள்.

அடித்து விட்டுத் தடவிக் கொடுப்பதைப் போலக் காடு வெம்மையுடையதாக இருந்தாலும், அங்குப் போவதால் நீ பல புண்ணியத் துறைகளில் நீராடும் வாய்ப்பும் உள்ளது என்று கூறுகிறாள். கூற நினைத்தவற்றை எல்லாம் கூறி விட்டு,

 ‘என்று இயம்பினன் அரசன்’ என்றும் நழுவுகிறாள்.

இராமனுக்கோ அது மின்னல் ஒளி மிளிரும் அழகான காடு. அதனால் அவன்’ மின்னொளிர் கானம்’ என்று மிடுக்கோடு சொல்கிறான்.

ஒரே காடு, காண்பவரின் மன நிலைகளின் மாறுபட்டால் புழுதி பறக்கும் வெம்மையான காடாகவும், மின்னல் ஒளிர்கின்ற விரும்பத் தக்கக் காடாகவும் ஆகும்  அற்புதத்தை இரண்டு பாடல்களில்  கம்பன் காட்டும் பாங்கு எண்ணி இன்புறத் தக்கதாகும்.

இனிப் பாடல்களைச் சற்றுப் பார்ப்போமா?

கைகேயி கூற்று

 

ஆழி சூழ் உலகம் எல்லாம்  பரதனே ஆள, நீ போய்த்

தாழ் இருஞ் சடைகள் தாங்கி,   தாங்க அருந் தவம் மேற்கொண்டு,

பூழி வெங் கானம் நண்ணி,  புண்ணியத் துறைகள் ஆடி,

ஏழ்-இரண்டு ஆண்டின் வா” என்று,    இயம்பினன் அரசன்’ என்றாள்

 

( கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் பரதன் ஆளவும் , நீ தொங்குகின்ற சடையுடன் தவத்தை மேற்கொண்டு புழுதி நிறைந்த வெப்பமான காட்டுக்குச் சென்று புண்ணிய நீர்நிலைகளில் நீராடிப் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்த் திரும்பி வர வேண்டும்  என்று அரசன் சொன்னான்)

இராமன் மறுமொழி

 

மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்

பின்னவன் பெற்ற செல்வம்  அடியனேன் பெற்றது அன்றோ?

என் இனி உறுதி அப்பால்?   இப்பணி தலைமேற் கொண்டேன்;

மின்னொளிர் கானம் இன்றே  போகின்றேன்; விடையும் கொண்டேன்.’

 

( அரசனின் கட்டளையாக இல்லாவிட்டாலும் உங்களது கட்டளையை நான் மறுப்பேனோ?என் தம்பி பரதனுக்குக் கிடைத்த  பேறு எனக்குக் கிடைத்ததே ஆகும் அன்றோ? இக்கட்டளையைத் தலைமேல்  ஏற்று மின்னொளி வீசும் காட்டிற்கு இப்பொழுதே போகின்றேன். உங்களிடம் விடையும் பெற்று கொண்டேன்)