நாட்டிய மங்கையின் வழிபாடு-7

                     வங்கமொழிக்கதையும் அதன் ஆங்கில மூலமும்: கவியரசர் தாகூர்;

                               தமிழ் மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

 

          முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். அவன் இளவரசன் அஜாதசத்ருவிற்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். அரசி லோகேஸ்வரி இதனை விரும்பவில்லை. அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகி விட்டதில் மனம் நொந்து போயிருக்கிறாள்.

          அரசி பல காரணங்களால் அளவற்ற சினமும் வேதனையும் கொண்டு புத்தமதத்தை நிந்திக்கிறாள். நாட்டியமங்கையான ஸ்ரீமதியை வழிபாட்டு மேடையில் காணிக்கை செலுத்தக் கூறியுள்ளனர். இளவரசிகளுக்கும் அரசிக்கும் அதில் விருப்பமில்லை; அதனை எவ்வாறு தடை செய்யலாம், ஸ்ரீமதியைத் தண்டிக்கலாம் எனக் கலந்தாலோசிக்கின்றனர்.

          இனித் தொடர்ந்து படிக்கவும்:  

         

          ரத்னாவளி: தாங்கள் முன்னேற்பாடாகச் சிந்திக்கிறீர்கள் என நான் கூறுவதற்காக என்னை மன்னியுங்கள்; ஆனால் இந்தத் துயரமான எண்ணங்கள் இந்த வழிபாட்டுத்தலத்தைப் புனருத்தாரணம் செய்யத் தங்களைத் தூண்டும் அஸ்திவாரமாக இருக்குமே!

          அரசி: எனது அச்சமும் அதுவே.

          ரத்னாவளி: ஒருகாலத்தில் நாம் போற்றிய இந்தப் பொய்ம்மையான மதத்தை நமது சிந்தையிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் அழிக்க முடியாது. அதனை அவமானப்படுத்துவதன் மூலமே அதன் பொய்மையையும் அழிக்க இயலும்.

          அரசி: மல்லிகா, கேள்! தோட்டத்தின் வடக்குப்பகுதியிலிருந்து வரும் கூச்சல்கள் உனக்குக் கேட்கிறதா?வழிபாட்டு மேடை உடைகிறது, உடைகிறது!

                     வணக்கங்கள்……..

          இல்லையில்லை, அது சுக்குநூறாக உடையட்டும்!

          ரத்னாவளி: வாருங்கள் மகாராணி, நாம் என்ன நடக்கிறதென்று போய்ப்பார்ப்போம்.

          அரசி: ஆம், நாம் அங்கிருக்க வேண்டும், ஆனால் இப்போதல்ல!

          ரத்னாவளி வெளியே செல்கிறாள்.

          அரசி: ஆ! மல்லிகா! எனது பழைய தொடர்புகளைத் துண்டிக்கும் இந்த நிலை மிகுந்த வலியினைத் தருவதாகும்.

          மல்லிகா: உண்மைதான்! உங்கள் கண்கள் கண்ணீரால் நிறைந்துள்ளனவே!

          அரசி: அவர்களுடைய கூப்பாட்டைக் கேள்: கொடூரமான காளிக்கு வெற்றி உண்டாகட்டும்! என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

          மல்லிகா: மகாராணி, புத்தரின் மதம் வெளியேற்றப்படுமானால், அது திரும்பவும் வரும். மற்றொரு மதம் அதன் இடத்தைப் பிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அமைதி இருக்காது. தேவதத்தரிடமிருந்து ஒரு புதிய மதக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால்தான் தாங்கள் ஆறுதல் அடைவீர்கள்.

          அரசி: உன் வாயினின்றும் அத்தகைய சொற்கள் வரவேண்டாம். தேவதத்தன், அந்த அற்பமான நரகத்துப் பாம்பு? நான் அந்த அஹிம்சையின் வசியத்தில் இருக்கும்போது கூட, எனது சினம் அவனைக் குத்திக்கிழித்து எரிப்பதற்கு முயலவில்லையா? இன்று நீங்கள் என் இதய சிம்மாசனத்தில், எனது சுடர்விடும் கருணை நிறைந்த பெரும் தலைவருக்காக நான் கொடுத்திருந்த இடத்தில் அவனை இருத்துவேன் என நினைக்கிறீர்களா? (மண்டியிடுகிறாள்) என்னை மன்னியுங்கள் தலைவா, மன்னியுங்கள். (எழுந்திருக்கிறாள்). பயப்படாதே, மல்லிகா. என்னுள்ளிருக்கும் பக்தை என் மனதிலேயே குடிகொண்டிருக்கட்டும். வெளியேயுள்ள பிரதேசத்தில் இந்த இரக்கமற்ற அரசி ஆளுகிறாள்- அவளை வெல்ல முடியாது. நான் இப்போது எனது அறையின் தனிமைக்குத் திரும்புகிறேன். எனது வழிபாட்டை ஒரு காலத்தில் எடுத்துச்சென்ற பாத்திரம் இறுதியாக இந்த புழுதிப்புயலில் சிக்கி அழியும்போது என்னைத் திரும்பக் கூப்பிடுங்கள்.

                                         (அனைவரும் செல்கின்றனர்)

          ஸ்ரீமதி சில அரண்மனைப் பெண்களுடன் காணிக்கைப் பொருட்களையும் தீபங்கள், தூபங்கள், பழங்கள், மலர்கள் இவற்றை ஏந்தி வருகிறாள்; அவர்கள் அனைத்தையும் வழிபாட்டுத் தோட்டத்து வாயிலில் புத்தமதச் சடங்குகளின் முறையில் மந்திரங்களாலும், சங்கு ஊதியும் புனிதப்படுத்துகின்றனர். அந்த சம்பிரதாயங்கள் நிறைவுற்றதும், ஸ்ரீமதி பேசுகிறாள்.

          ஸ்ரீமதி: நாம் இப்போது வழிபாட்டு மேடையை நோக்கிச் செல்வோம்.

          மாலதி: ஆனால், சகோதரி, பார், அந்த வழி ஒரு வேலியினால் அடைக்கப்பட்டுள்ளது.

          ஸ்ரீமதி: நாம் அந்த வேலியைத் தாண்ட முடியும்; வா என்னுடன்.

          நந்தா: இதன் பொருள் நமது பாதை அரசரால் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதா?

          ஸ்ரீமதி: ஆனால் நமக்கு நமது தலைவரின் ஆணைகள் உள்ளன.

          நந்தா: உற்றுக்கேள்! அந்த கோரமான குழப்பத்தை! அது ஒரு கலகமாக இருக்குமோ?

                                                                        பெண் காவலர்கள் நுழைகின்றனர்.

          முதல் காவலாளி: திரும்பிச் செல்லுங்கள்!

          ஸ்ரீமதி: ஆனால் நாங்கள் எங்கள் கடவுளை வழிபடச் செல்லுகின்றோம்.

          முதல் காவலாளி: உங்களது பூஜை தடைசெய்யப்பட்டுள்ளது.         

          ஸ்ரீமதி: எங்கள் கடவுளுடைய பிறந்தநாளை நாங்கள் கொண்டாடுகிறோம்.

          முதல் காவலாளி: உங்களது பூஜை தடைசெய்யப்பட்டுள்ளது.

          ஸ்ரீமதி: இது சாத்தியமா?

          முதல் காவலாளி: உங்களது பூஜை தடைசெய்யப்பட்டுள்ளது. நான் அறிந்தது இது ஒன்றே!

                     அவர்கள் கையிலுள்ள காணிக்கைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

          ஸ்ரீமதி: எதனால் எனக்கு இந்தத் துன்பம் வந்து சேர்ந்தது? நான் செய்த தவறு எதற்காகாகவேனும் இது தண்டனையா?

                     (அவள் முழங்காலிட்டு வேண்டுகிறாள்)

                     தங்கள் கால்களில் நான் தலைவணங்குகிறேன் புத்தபிரானே;

                     புனிதமாய தாங்களே எங்கள் அத்துமீறலை மன்னிப்பீராக!

          முதல் காவலாளி: போதும் உன்னுடைய வேண்டுதல்கள்!

          ஸ்ரீமதி: நுழையுமிடத்திலேயே நிறுத்தப்பட்டு விட்டோம். ஐயோ, நாம் நுழையக்கூடத் தகுதியற்றவர்களா?

          மாலதி: எதற்காக அழுகிறாய், சகோதரி? உண்மையான வழிபாட்டுக்குச் சடங்குகள் தேவையில்லை. அந்தக் கடவுளும் நமது இதயங்களில் தானே பிறந்து உறைந்திருக்கிறார்?

          ஸ்ரீமதி: உண்மைதான், குழந்தாய். அவருடைய பிறப்பில் நாமும் திரும்பப் பிறந்துள்ளோம். நமது பிறந்ததினத்தையே நாம் இன்று கொண்டாடுகிறோம்.

          நந்தா: ஆனால் இன்றைக்கென்று கெடுதி வலிமை பெறுவது ஏன் ஸ்ரீமதி?

          ஸ்ரீமதி: ஏனெனில் இன்றைக்கு எல்லாக் கெடுதியும் நன்மையாக மாறும்; சிதறுண்டவை எல்லாம் இணையும்; விழுந்ததெல்லாம் திரும்ப எழும்.

          அஜிதா: ஆ! ஸ்ரீமதி, இன்றைய பிறந்தநாள் வழிபாட்டை உன்னிடம் கொடுத்தது ஒரு தவறென்று நான் நிச்சயமாக எண்ணுகிறேன். அதனால்தான் அது இப்படி மிகவும் கேவலமாக ஆகிவிட்டது. நாம் இதனைப் பற்றி முன்னமே சிந்தித்திருக்க வேண்டும்.

          ஸ்ரீமதி: எனக்குப் பயமில்லை. கோவிலின் கதவுகள் வழிபடுபவர்களுக்காக ஒரேயடியாகத் திறந்துவிடாது. தாள் திறப்பதற்கு நேரமாகும். இருப்பினும் எனது கடவுள் என்னை அழைத்துள்ளார் என்பதனை நான் சந்தேகிக்கவேயில்லை. எல்லாத்தடைகளும் விலகி வழிவிடும் – அதுவும் இன்றைய தினமே.

          பத்ரா: அரசரே ஏற்பாடு செய்துள்ள இந்தத் தடைகளை உன்னால் விலக்க முடியுமா?

          ஸ்ரீமதி: அரசனின் செங்கோல் வழிபாட்டுத்தலத்தை அடைய இயலாது.

          ரத்னாவளி: நான் அனைத்தையும் கேட்டேன் – ஒரு வார்த்தைகூட விடாமல். அரசனின் ஆணையை எதிர்க்க உனக்கு தைரியம் உண்டா?

          ஸ்ரீமதி: வழிபாட்டுக்கெதிரான அரச ஆணை இருக்கவியலாது.

          ரத்னாவளி: உண்மை! அப்படியானால் நீ உனது வழிபாட்டைத் தொடர்வாயாக – அதன் பலன்கள் எனது கண்களுக்கு விருந்தாகும்.

          ஸ்ரீமதி:  எவர் அனைவரின் உள்ளங்களையும் அறிந்தவரோ அவரே சாட்சியுமாவார். நமக்குள் எதுவும் இல்லாமலிருக்கும் அனைவரிடமிருந்தும் அவர் பின்வாங்கி நிற்கிறார்; ஏனெனில் அது திரையாக இருந்துவிடுமோ என்பதனால்.

                                         (அவள் இசைக்கிறாள்)

                     எனது சொல்லிலும் எண்ணத்திலும்

                     எப்போதும் எங்கும்

                     ததாகதரை நான் வழிபடுகிறேன்.

                     படுக்கையிலும் உறக்கத்திலும்

                     நிற்கும்போதும், நடக்கும்போதும்,

                     ததாகதரை நான் வழிபடுகிறேன்.

          ரத்னாவளி: உனது கர்வம் நசுக்கப்படும் தினம் வந்துவிட்டது.

          ஸ்ரீமதி: ஒரு ரேகைகூட விடாமல் அது நசுக்கப் படட்டும்.

          ரத்னாவளி: இப்போது எனது முறை, எனது வேலையைச்செய்ய நான் தயாராக வேண்டும்.

                                                                        (ரத்னாவளி வெளியே செல்கிறாள்)

          பத்ரா: எனக்கு இது பிடிக்கவில்லை. புத்திசாலியான வாசவி இதனை ஊகித்தாள்; முதலிலேயே அவள் ஓடிவிட்டாள்.

          அஜிதா: எனக்கு பயமாக இருக்கிறது.

                               (பிட்சுணி உத்பலா நுழைகிறாள்)

          நந்தா: வணக்கத்துக்குரிய பெண்மணியே, எங்கே செல்கிறீர்கள்?

          உத்பலா: இந்த நகரின்மீது ஒரு சாபம் ஏற்பட்டுள்ளது. மதம் தாக்கப்படுகிறது; பிட்சுக்கள் பயப்படுகின்றனர். பாதுகாப்பிற்கான பாடங்களை நான் தெருக்களில் சென்று ஓதப்போகிறேன்.

          ஸ்ரீமதி: என்னை உங்களுடன் அழைத்துச் செல்வீர்களா, தாயே?

          உத்பலா: என்னால் எவ்வாறு முடியும், ஸ்ரீமதி? வழிபாட்டை நடத்துவதற்கான ஆணை உனக்குப் பிறப்பிக்கப் பட்டுள்ளதே!

          ஸ்ரீமதி: வழிபாடு இனியும் நடத்தப்பட வேண்டுமா?

          உத்பலா: அது நிறைவேறும் வரையிலும் ஆணை அமலில் இருக்கும்.

          மாலதி: ஆனால் அரசர் அதனைத் தடைசெய்கிறார், தாயே!

          உத்பலா: பயப்பட வேண்டாம்! காத்திருங்கள். தடையுத்தரவே உங்களுக்கு வழியையும் காட்டும்.

                                                              (உத்பலா செல்கிறார்)

                                                                                            (தொடரும்)