எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர்    ம.வே.சிவகுமாரின் நினைவு நாள் 10 ஜனவரி 

 சில வருடங்களுக்கு முன் அவருடைய பாப்கார்ன் கனவுகள் என்ற நாவலைப் புத்தகக் காட்சியில்  விற்பதற்குப் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் உயர் அதிகாரியாக இருந்த கணேசன் விற்பனைக்குக் கொடுத்தார்.

          விற்க முடியாமல் அவருடைய நாவலின் எல்லாப் பிரதிகளையும் பரண் மேல் போட்டிருந்தார். நான் சில பிரதிகளை விற்றுக் கொடுத்தேன்.  அந்தச் சந்தர்ப்பத்தில் ம.வே.சிவகுமாரைச் சந்தித்தேன். இந்த நாவல் 1995ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்துள்ளது.  அப்போது இந்த நாவலைப் படிக்கவில்லை.

          இந்த நாவல் அவருடைய சுய சரிதம் போல் எழுதப்பட்டாலும் முழுக்க முழுக்க அவர் சுயசரிதமில்லை. இந்த நாவலின் கதாநாயகனான லக்ஷ்மி நாராயணனுக்கும் ம. வே. சிவகுமாருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.  அதேபோல் வேற்றுமைகளும் உண்டு. 

          கல்கி பத்திரிகையில் தொடராக வெளிவந்துள்ள நாவல் இது. ம. வே. சிவகுமாரின்  கனவைப் பிரதிபலிக்கிற நாவலாக இது எழுதப்பட்டிருக்கிறது. 

          ஒரு வங்கியில் பணிபுரியும் சாதாரண ஊழியர் லக்ஷ்மி நாராயணன் என்ற ஊழியர்.  அவர் விஜயலக்ஷ்மி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.  ஆனால் அவருடைய ஆசை சினிமாவில் நடிக்க வேண்டும்.  அது சாத்தியமா என்பதை இந்த நாவல் அலசுகிறது.

          லக்ஷ்மி நாராயணன் எப்படிப்பட்டவன் என்பதை இந்த நாவல் ஆரம்பத்திலேயே அலசி விடுகிறது.

          எடுத்த உடன் லக்ஷ்மி நாராயணனுக்கு  நடக்கும் திருமணத்திலிருந்து ஆரம்பமாகிறது கதை.  அதை விவரிப்பதன் மூலம் கதாசிரியர் எந்த அளவிற்குத் திறமையானவர் என்பதை நிரூபிக்கிறார்.

          …..வெல்வெட்டு வேலைப்பாடுகளுடைய பேண்டு வாத்தியம்.  வேட்டியும், அங்கவஸ்திரமும் அணிந்து காதில் நாதஸ்வரம் வாங்கி மெல்லத் தொடர்கிற பெரியவர்கள் பழைய ஹெரால்டு காரில் பலகையடித்து நடமாடும் இன்னிசைக் குழு. நகர்கிற ட்யூப்லைட் வெளிச்சத்தில் நடமாடுகிற இளைஞர்கள். சூழ்நிலையின் மகிழ்ச்சி கருதி உடன் ஆட இறங்கிவிட்ட யுவதிகள்….

          இப்படி மாப்பிள்ளை அழைப்பு வைபவத்தை வர்ணிக்கிறது கதை.  ஆரம்பத்திலேயே லக்ஷ்மி நாராயணன் ஒரு மாதிரி.  தன் திருமணம் நடைபெறும்போதே அவன் நண்பர்களுடன் நைட் ஷோ சினிமா காட்சிக்குச் சென்று விடுகிறான்.

          அந்த அளவிற்கு சினிமா பார்க்கும் வெறி அவனுக்கு.  வங்கியில் சாதாரண காஷியராகப் பணிபுரிகிறான்.  விடாமல் சிகரெட் பிடிக்கிற பழக்கம் அவனுக்கு இருக்கிறது.  இரண்டு இச்சைகளிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.  ஒன்று சினிமா. இன்னொன்று சிகரெட்.

          இதெல்லாம் தெரிந்துகொண்டு விஜயலக்ஷ்மி அவனைத் திருமணம் செய்துகொள்கிறாள்.  அவளுடைய அப்பாவிற்கு வங்கியில்  அதிகாரியாகும் தேர்வு எழுதி அவன் அதிகாரி ஆகிவிட வேண்டுமென்ற கனவு.

          ஆனால் அவன் வங்கியில் பணிபுரிந்தாலும் ஒரு சினிமா நடிகனாக வேண்டுமென்று கனவு.   சினிமா பற்றி வருகிற எல்லாப் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாங்கி தனியாக ஒரு அலமாரியில் பூட்டிப் பத்திரப்படுத்தி வைக்கிறான் வீட்டில்.  அதை யாரையும் திறக்க விடுவதில்லை.

          அதேபோல் வங்கியில் யூனியனில் முக்கியமான நபராக இருக்கிறான்.  அவன் வங்கிக்குப் போவதே ஒரே கூத்தாக இருக்கும். ரகளையாக இருக்கும்.  அவன் கனவு சினிமாவில் நடிப்பது.  பொழுது போக்காக வருவதுபோல்தான் வங்கிக்கு வருகிறான்.  

          அவன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வரும்போதே தாமதமாகத்தான் வருவான்.  அவனுடைய மேலதிகாரி கேட்டால் ஏடாகூடமாகப் பதில் அளிப்பான்.

          அவன் கனவு நடிகர் சிவாஜி கணேசன்.  அவர் முன்னால் அவனுக்கு நடிப்பதற்கு ஒருவாய்ப்பு கிடைக்கிறது.  கல்கத்தாவில் நடைபெறப் போகிற நாடகத்திற்கு அவன் தன்னை நடிகனாகத் தயார்  செய்து கொள்ள விரும்புகிறேன்.  நடிகனாகத் தேர்ந்தெடுப்பதற்கு நடிகர் சிவாஜி கணேசன் முன்னால் நடிக்க வேண்டும்.

          சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி வசனத்தைப் பேசி அசத்துகிறான்.  இதற்காக வீட்டில் ஒத்திகைப் பார்த்திருந்தான்.  சிவாஜி அவனைப் பார்த்து, ‘நல்லாத்தான் இருந்தது.  ஆனா மிமிக்ரி வேற, நடிப்பு வேற தெரிஞ்சுதா” என்கிறார்.

          லக்ஷ்மி நாராயணன் 13வது பேராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான்.   சிவாஜிகணேசன் அந்த இடத்தை விட்டுப் போவதற்கு முன், அவனைக் கூப்பிட்டு  ‘ஒழுங்கா இருக்கணும், தெரிஞ்சுதா” என்கிறார்.

          ஒரு சிறந்த நாடக நடிகர் என்ற பட்டத்தைக் கல்கத்தாவில் நடந்த நாடகத்தில் நிரூபித்து விடுகிறான்.  ஆனால் அவன் மாமனார் அதை விரும்பவில்லை.  அவன் ஒரு வங்கியில் ஒரு அதிகாரியாக மாற வேண்டுமென்று விரும்புகிறார்.  ஆனால் அவன் மனைவியோ அவன் விருப்பப்படி இருப்பதை ஏற்றுக்கொள்கிறாள்.  அவளுக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

          சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்யும்போதுதான் பெரிய சறுக்கலாகச் சறுக்கி வீழ்கிறான். அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு இந்த இடத்தில் ஒரு சினிமா கம்பெனியின் ஷøட்டிங் கலந்து கொள்கிறான்.  டைரக்டர் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.  

          அவனுக்கு ஒரு துண்டு ரோல் கொடுக்கப்படுகிறது.  லக்ஷ்மி நாராயணனுக்கு வெறுப்பாகி விடுகிறது.  அவன் டைரக்டரைப் பார்த்துச் சொல்கிறான். 

          பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட் பேரைச்சொல்லி நான் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தேன் சார்.  இந்த வேஷத்துல நான் நடிச்சா அது எனக்கும் பெருமையில்லை.   அவங்களுக்கும் பெருமையில்லை என்று சொல்லவிட்டுப் போய் விடுகிறான்.

          அவன் கனவு கலைந்து விடுகிறது.  சினிமாவில் நடிக்கும் ஆசை போய் விடுகிறது. இன்னொரு சினிமா கம்பெனியிலும் அவனை நடிக்கக் கூப்பிட்டு ஏமாற்றப் படுகிறான்.  

          அவனுக்கு ஆசையே போய்விடுகிறது.  ஒரு முறை அவன் அலுவலகத்தின் எதிரில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது.  அவன் அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் பரபரப்பாக இருக்கிறார்கள்.  அவன் அதைப் பார்க்க வேண்டுமென்ற எந்த ஆர்வமும் இல்லாமலிருக்கிறான். 

          திரைத்துளிர் என்ற வார இதழ் மூலம் வாசகர்கள் சார்பாகத் திரு. கமல்ஹாசன் அவர்களுடன் ஒருநாள் சந்திக்கும்படி ஏற்பாடு செய்கிறார்கள். அவன் மனம் சந்தோஷமடைகிறது.  கமல்ஹாசன் நடிக்கும் அவுட்டோர் படப்பிடிப்பில் அவன் கலந்து கொள்கிறான் வாசகனாக. அந்தப் படத்தில் சிவாஜியும் நடிக்கிறார்.  சிவாஜிக்கு மகனாக கமல்ஹாசன் நடிக்கிறார். 

          லக்ஷ்மி நாராயணனைப் பார்த்து சிவாஜி கூப்பிடுகிறார்.  நாம் இதுக்கு முன்னாடி பார்த்திருக்கிறோமே என்கிறார்.  பதிலுக்கு லக்ஷ்மிநாராயணனுக்கு வாயில் வார்த்தைகளே வரவில்லை. இந்த இடத்தில் லக்ஷ்மிநாராயணன் நினைத்துக் கொள்கிறான்.  இத்தனை நாள் கஷ்டபட்டதற்கு இன்றைக்கு ஒரு நாள் பெரும் திறமைகள் நடுவே நிற்க வைத்திருக்கிறாய்.  வாழ்க்கையில் நினைக்காததையெல்லாம் குலுக்கலில் தந்திருக்கிறாய். நினைத்து வருந்திக் கேட்டதை என்றேனும் தராமலா போய்விடுவாய்? என்று நினைத்துக் கொள்கிறான் லக்ஷ்மிநராயணன். 

          அவன் அதிகாரியாகும் தேர்வு எழுதுகிறான்.  மும்பைக்கு மாற்றலாகிப் போகிறான்.  மாமனார் விருப்பத்தை நிறைவேற்றி விடுகிறான். இந்த நாவல்  பல இடங்களில் ஹாஸ்ய உணர்வு வெளிப்படும்படி எழுதப்பட்டிருக்கிறது. ம. வே. சிவகுமாரின் நடை சிறப்பாக உள்ளது.  இந்த நாவலை இன்று படிக்கும்போதும் விறுவிறுப்புக்குக் குறைவில்லை