தமிழறிவு!!: குண்டலகேசி

முன் கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான்.

அங்கொரு மலை உச்சியில்  குலதெய்வக் கோயில் இருப்பதாகக் கூறி அவளை அழைத்துச் செல்கிறான்……

 

கோயிலில் படையல் இடுதல்

 

அருள்மணம் கமழும் கோயில்,

     அறநெறி நுழையும் வாயில்,

பொருள்வழிச் செல்வோர்,  உண்மைப்

     பொருளினை விழையும்  ஓரில்,

இருள்மனம் வழியைக் காண,

      எல்லொளி ஞானம் சேரில்.

இருவரும் வணங்கிப்  பின்னர்

       இட்டனர் படையல் நேரில்.

     (எல் – சூரியன்)

      ( சேரில் — சேர் இல் )

 

          கவிக் கூற்று

கற்புநெறி பிறழாத குடிப்பி றந்த

     காரிகையாள், காமத்தின் கவர்ச்சி யாலே

இற்பிறந்த பெருமையெலாம் விட்டுத் தாழ்ந்தாள்

     இழிபிறவி ஒருகள்வன் வலையில் வீழ்ந்தாள்

கற்பிளவை ஒத்தசினக்  காளன், நம்பும்

     காதலியைப் பழிதீர்க்க எண்ணம் கொண்டான்.

நெற்பயிரின் சிறப்பதனை, மேயும் மேதி,

     நினைத்திடுமோ,வருந்திடுமோ, நெஞ்சம் கொஞ்சம்

                ( மேதி — எருமை)

 

மலையுச்சியில்,  துன்பத்தைப் போக்கும்  அழகைக் கண்டு மகிழலாம் என்று வஞ்சகமாகக் காளன் அழைத்தல்

 

மலையிடையினில் பிறந்திடுமொரு மணியெனமிகை அழகே,

அலையிடையினில் விளைந்தெழுகுளிர் அமுதெனவொளிர்  நிலவே,

தொலைமுகடதில் சிலநொடிகளில் துயரறுமெழில் உளதே,

கலகலவென உளமகிழ்வுறக் கடிவிரைவினில் வருவாய்!

 கலைமகளென நிலமிசையுனைக் கவிமொழிந்திடும் கனியே,

சிலையுருவெனத் திருமகளெனத் திகழ்வுறுமலர்த் திரளே,

தொலைமுகடதில் சிலநொடிகளில் துயரறுமெழில் உளதே,

கலகலவென உளமகிழ்வுறக் கடிவிரைவினில் வருவாய்!

 

கொலைபுரிபவன்  மணம்புரிந்தவென் கொழுமலரிளங்  கொடியே,

விலையளித்திடும் விதியழைத்திடும் விடுதலையினைப் பெறவே,

தொலைமுகடதில் சிலநொடிகளில் துயரறுமெழில் உளதே,

கலகலவென உளமகிழ்வுறக் கடிவிரைவினில் வருவாய்!

       (தொலைமுகடு — தொலைவில் தெரியும் மலையுச்சி)

 

தோன்றிய தீய நிமித்தங்களைப்  புறக்கணித்துப் பத்திரை செல்லுதல்

 

இடப்புற மரத்தில் ஆந்தை

     எழப்பிய அலறல் கேட்டாள்

மடக்கொடி ஆடை முள்ளில்

      மாட்டியே கிழியக் கண்டாள்

நடக்கையில் காட்டுப் பூனை

       நடுவிலே போகக் கூந்தல்

தொடுத்தபூ தலையில் வாடத்

      தளர்வுறு மனத்தாள்  சென்றாள்

 

இடவல மாக மானும்

      ஏகிடக் கண்ட யிர்த்தாள்

துடிவலக் கண்ணும் தீமை

     சொல்வதை அறிந்தாள்.ஆங்கோர்

நெடுமரக் கிளைமு றிந்து

      நீள்தரை வீழ அஞ்சி

நடுங்கியே  துயரம் ஒன்று

      நண்ணிடும்  என்று ணர்ந்தாள்

                 (அயிர்த்தாள் – ஐயுற்றாள்)

 

ஓவியப் பூவின் உள்ளே

     உறைந்திடும்  தேனும்  உண்டோ?

பாவியின் உடல்வ னப்பில்

      பண்புதான் சிறப்ப துண்டோ?

சாவினைத் தருவ தற்குச்

      சற்றுமே  தயக்கம் இல்லான்

வாவென அழைக்க மங்கை

      வல்விதி வழியில் சென்றாள்

 

(தொடரும்)