தமிழறிவு!!: குண்டலகேசி

முன் கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’ என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான்.

இருவரும், அங்கொரு மலையில் குலதெய்வக் கோயிலில் படையிலிட்டு வழிபட்டனர்.

பிறகு இயற்கை அழகைக் காணலாம் என்று கூறி மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான்…….

 

        மலை உச்சிக்குச் செல்லுதல்

 

சுடுநெருப்புள் சென்றுவிழும் மலரே அன்னாள்,

     சொற்பிழையால் விளைதுயரம் அறியா மின்னாள்

கடுவனொடு மந்திவிளை யாடக் கண்டாள்

      களிப்புற்றாள், விருப்புற்றாள், மேலே சென்றாள்

நெடுமலையின் முடியதனை முத்த மிட்ட

     நீள்கொண்மூ எழில்கண்டு தனைம றந்தாள்

அடுதொழிலன், கொடுங்குணத்தன் சிரித்துக் கொண்டான்

     அடுத்தவினை தொடுத்திடவே முன்னே சென்றான்

                   ( கொண்மூ – மேகம்)

 

 உச்சியிலிருந்து பத்திரை கண்ட காட்சி

 

பொம்மைகளாய்த் தோன்றுகின்ற மாளி கைகள்,

     புல்வெளியாய்க் காட்சிதரு கான கங்கள்,

வெம்மைமிகு விலங்கொன்றின் விரித்த வாயாய்

      விழுபவரை  விழுங்குகின்ற  பள்ளம்  கண்டாள்.

அம்மம்ம, அழகென்ற போதும், நெஞ்சில்

     அழியாத அச்சத்தைத் தருதல் கண்டாள்.

“இம்மையிலே முத்திதரும் இடத்தைப் பாராய்

       இப்போதே பெறச்செய்வேன்” என்றான் காளன்

                  கவிக்கூற்று

 

குளிர்தென்றல் புயலாக மாறிப் போனால்

     கொடிசெடிகள், மரமெல்லாம் சாய்ந்தி டாவோ?

ஒளிர்நிலவு பெருநெருப்பைப் பொழிந்தால், இந்த

     உலகுயிர்கள் கருகிப்போய் மாய்ந்தி டாவோ?

நளிர்நீரும் நஞ்சானால் வேட்கை தீர

      நானிலத்து மக்களெலாம் எங்குச் செல்வர்?

இளமங்கை நம்பிவந்த கணவன், வஞ்சம்

      இழைக்கையிலே ஏந்திழைதான் என்ன செய்வள்?

 

காளன், தன் தீய எண்ணத்தைத் தெரிவித்தல்

 

பஞ்சணையில் கொஞ்சுவதால் மயங்கி உன்றன்

     பணியாளாய் இருப்பனென்று நினைத்தாய் போலும்,

கொஞ்சமும்நீ மதிப்பதில்லை, திருடன் என்று

     கூசாமல் எனையன்று பழித்து ரைத்தாய்.

வெஞ்சினத்து வீரர்களும் அஞ்சும் என்னை

      வெறுப்பேற்றும் ஆணவத்தை எங்குப் பெற்றாய்?

நஞ்சனைய சொல்லினைநான் மறக்க மாட்டேன்,

     நாணமிலாச் சிறுமகள்நீ இறக்க வேண்டும்!

 

    பத்திரை நடுக்கத்துடன் கூறுவது

 

குலதெய்வத்தின் மீதாணை! தாய்மீ் தாணை!

      குலங்காக்கும் எந்தையவன் மீதும் ஆணை!

நிலங்காக்கும், அறம்காக்கும், நீதி காக்கும்,

      நிகரில்லாச் சோழமன்னன் மீதும் ஆணை!

துலங்குமொரு காதலினால் உனைம ணந்தேன்

      சூதறியேன், தீதறியேன் நம்பு வாயே!

கலங்கடலில் கரைகாணும் விளக்காய் உன்னைக்

       கருதுமெனைப் பிழைகூறல் நன்றோ சொல்வாய்?

 

கேடெதும் நினைக்கா துன்னைக்

     கேள்வனாய்க் கொண்டேன், காதல்

ஊடலில் சொன்ன சொல்லுக்(கு)

     உலகினில் பொருளும் உண்டோ?

 நாடியுன் அன்பை மட்டும்

      நயந்திடும் என்னை நம்பு

தேடிநான் உன்னைக் கண்டேன்

      தெய்வமாய் மனத்தில் கொண்டேன்.

        ( கேள்வன் – கணவன்)

 

திவலையை அலைவெ றுத்தால்

     திரைக்கடல்  வற்றி டாதா?

அவமெனக் குதலைச் சொல்லில்

      ஆத்திரம்  கொள்ள லாமா?

கவவுக்கை நெகிழ லாமா?

       காதலி வருந்த லாமா?

தவறென நினைத்தால் அன்பால்

       சற்றுநீ  மன்னிப்  பாயா?

          ( திவலை – நீர்த்துளி)

 ( குதலைச் சொல்- குழந்தையின் மழலைச்சொல்)

          (கவவுக்கை–அணைத்த கை)

 

     காளன் கடுமொழி

 

புல்லென ஆன போதும்

     பொலிவுறு கொழுநன்  என்றும்,

கல்லென ஆன போதும்

    கணவனே தெய்வம் என்றும்,

சொல்லிய எல்லாம் பொய்யோ?

     சொல்லடி! செருக்கால், அம்பை

வில்லெதும் இன்றி என்மேல்

      விடுத்தனை உன்னைக் கொல்வேன்!

 

                    ( கொழுநன் – கணவன்)

 

பூண்டநகை அனைத்தையுமே கழற்றிப் போடு,

     புதுவாழ்வு தொடங்குவனுன் செல்வத் தோடு.

மாண்டபின்னர் உன்னுடலில் நகைகள் வீணே

      வரும்வாழ்வின் முதலீடாய்க் கொள்வேன் நானே.

ஈண்டிருந்து கீழ்தள்ளிக் கொல்வேன் உன்னை

       என்முடிவில் மாற்றமிலை அறிவாய் பெண்ணே

ஆண்டவனை வேண்டிக்கொள் சாகும் முன்னே,

        அமைதியுறும் ஆன்மாவும் ஏகும் விண்ணே!

 

 

(தொடரும்)