சரித்திரம் பேசுகிறது – யாரோ

பராந்தகன் தொடர்ச்சி

 

மறுபடியும் நாம் பாண்டியர் கதைக்கு வருவோம்.

ஆட்சிக்கு வந்த பிறகு, பராந்தகன், பாண்டிய நாட்டைக் கைப்பற்ற மன்னன் இராஜசிம்மனுடன்  போர் தொடுத்தான். அப்போரில் பராந்தகனுடைய நண்பரான சேரன், முத்தரையர், பிற சிற்றரசர் பராந்தகனுக்கு உதவி புரிந்தனர்.

பாண்டியன் கல்வெட்டுக்கள் கூறுவதாவது:

“இராஜசிம்மன் தஞ்சை அரசனை நெய்ப்பூரில் தோற்கடித்தான். கொடும்பாளூரில் கடும்போர் செய்தான். வஞ்சி நகரைக் கொளுத்தினான். ‘நாவல்’ என்னும் இடத்தில் தென் தஞ்சை அரசனை முறியடித்தான்” – இப்படி இராஜசிம்மன் பட்டயம் பகர்கின்றது. சோழப்பாண்டியப் போர் பல ஆண்டுகள் நடந்ததாகத் தெரிகிறது. ஆதலின் இரு திறத்தாரிடத்தும் வெற்றி தோல்விகள் நடந்திருத்தல் இயல்பே ஆகும்.

முதல்கட்டப் போரின் முடிவில், இராஜசிம்மன் தோல்வியுற்று மதுரையை இழந்தான். பராந்தகன் மதுரையைக் கைக்கொண்டான்; அதனால் ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என்று தன்னை அழைத்துக் கொண்டான். ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ வருவதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும். (எம் ஜி ஆர் படத்தைச் சொல்லவில்லை). மதுரையை இழந்த இராஜசிம்மன், அப்பொழுது இலங்கையை ஆண்டுவந்த ஐந்தாம் கஸ்ஸ்பன் (கி.பி. 913-923) துணையை வேண்டினான்.

காட்சி மாறியது.
இலங்கை: (கி பி 915)

மன்னன் கஸ்ஸபன் (காசியப்பன் என்றும் சொல்லலாம்) தன் அரண்மனையில் வீற்றிருந்தான். பாண்டிய நாட்டிலிருந்து தூதுவர்கள் வந்திருந்தனர்.

“ஈழத்து அரசரே! பாண்டிய மன்னன் இராஜசிம்மன் – இந்தப் பரிசுப் பொருட்களை தங்கள் சமூகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.”
மன்னன் மகிழ்ந்தான்.

பரிசுகள் பளபளத்தன – பாண்டிய வெண் முத்துக்கள் – மரகதம்- மாணிக்கம் –தங்கத்தில் கடகங்கள்- மாலைகள்- ஹாரங்கள் – வாசனைத் திரவியங்கள் – பட்டு ஆடைகள் – என்று பாண்டிய நாட்டின் சிறந்த அங்காடி அங்கு விரிந்தது போல ஒளிர்ந்தது. மன்னன் கண்களும் விரிந்தது.
தூதுவர் தொடர்ந்தனர்:

“மன்னவா! பாண்டிய மன்னன் இந்த ஓலையை தங்களுக்குத் தந்தார்”- என்று ஒரு ஓலையை எடுத்துக் கொடுத்தார்.

 

அது ஓலை மட்டுமல்ல.. ஓலமும் கூட..
தனது தோல்வி நிலையைப் பற்றி எழுதி – பாண்டியன் படையுதவியைக் கோரியிருந்தான்.
அரசன் மந்திராலோசனைக்கூட்டம் நடத்தினான்.

மந்திரிமார்கள் மற்றும் படைத்தலைவர்களுடனும் ஆலோசித்தான்.
இராணுவ ஏற்பாடு செய்வது என்று முடிவெடுத்தான்.
மன்னன், சேனாதிபதி சக்கனை அழைத்தான்.

சக்கன் பலசாலி மட்டுமல்ல. சிறந்த படைத்தலைவன். சண்டை என்று வந்துவிட்டால் – உயிர் போவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் போர் புரிவான். அது எதிரிகள் உயிரானாலும் சரி – தன்னுயிரே ஆனாலும் சரி!

“சக்கா! நீ நமது சிறந்த படையைத் தலைமை தாங்கி, கப்பலில் பாண்டிய நாடு சென்று சோழனை வென்று பாண்டியனுக்கு வெற்றி தேடித் தா “- என்றான்.

சக்கன் மகிழ்ந்தான்.
அவன் ஒரு வில்லன் சிரிப்பு சிரித்து ஓய்ந்தான்.
“மன்னரே! காரியம் முடிந்தது என்று எண்ணிக்கொள்ளுங்கள்”- என்றான். ‘காரியம்’ என்ற சொல்லுக்குப் பல பொருள் இருப்பதை அன்று அவன் அறியமாட்டான்!

கப்பலில் சக்கன் தலைமையில் சிறந்த படை குழுமியிருந்தது. கடற்கரையிலிருந்து ஈழ மன்னன் படைவீரர்களிடம் தமது மூதாதையர்கள் அடைந்த வெற்றிகளைப் பற்றிக் கூறி – உற்சாகமூட்டிப் பேசி விடை கொடுத்தான். அந்த ஈழப்படை பாண்டிய நாடு சென்றடைந்தது. அங்கே, இராஜசிம்மன் கடற்கரைக்குச் சென்று அவர்களை வரவேற்றான். அவர்களது தோற்றம் அவனுக்கு பேருவகையைக் கொடுத்தது. “ஆஹா.. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? இந்தப் படை கொண்டு, இந்த நாவலந்தீவு (தென்னிந்தியா) முழுதும் ஒரு குடைக்குள் கொண்டு வருவேன்” என்று உணர்ச்சி பொங்க உரக்கக் கூவினான்.
‘யார் குடை அது’ என்பதையும் யாரோ அறிவர்?

இரண்டாம் கட்ட பாண்டியப் போர் துவங்கியது.
இராஜசிம்மன்-சக்கன் கூட்டணி பராந்தகனை எதிர்த்தனர். பராந்தக சோழன் பக்கம் பழுவேட்டரையர் – கந்தன் அமுதனார் என்னும் சிற்றரசன் இருந்து போர் செய்தான். சோழனது ஒருபகுதியின் சேனைக்குத் தலைவனாக இருந்தவன் சென்னிப் பேரரையன்.
போர் – வெள்ளுர் என்னும் இடத்தில் கடுமையாக நடந்தது. ஈழத்து மலைநாட்டு வீரர்களின் போர் முறையே விசித்திரமாக இருந்தது. சோழக்கூட்டணி வெறி மிகுந்தவர்களைப்போல் போரிட்டது. பராந்தகனுடைய கைவாள் திருமால் கரத்துச் சக்கரம் போல் சுழன்றது. (கல்கி – பொன்னியின் செல்வனில் ஒரு சோழராஜனின் வாள்வீச்சை இவ்வாறு வர்ணித்திருப்பதை இங்கு வாசகர்கள் நினைவு கூறவேண்டும்). சுழன்ற வாள் எதிரிகளின் எமனானது.

சின்னாபின்னமாக்கப்பட்ட எதிரிகளின் பிணங்கள் மீது சோழர்களின் யானைகளும், குதிரைகளும் ஏறி நடந்தன. இரு பக்கத்திலும் சர்வநாசம். எங்கெங்கு காணினும் தமிழர்களின் உயிரற்ற உடல்கள் துண்டிக்கப்பட்டு, இரத்தத்தில் ஊறிச் சிதறிச் சிதைந்துக் கிடந்தன. கடும் போரின் இறுதியில், பராந்தகன் படை, பாண்டிய-ஈழப்படைகளை வென்றன. இராமாயணத்தில் இலங்கைப் படைகளை வென்ற ‘இராமன்’ போல தானும் இலங்கைப் படையை வென்றமையால், பராந்தகன் தன்னை ‘சங்கிராம இராகவன்’ என்று அழைத்துக் கொண்டான்.

ஆனால், போரோ முடிந்தபாடில்லை. “நான் உயிரோடு உள்ளவரை” போர் முடிவதில்லை – என்று சக்கன் அறைகூவல் விடுத்தான். மூன்றாம் கட்டப் பாண்டியப்போர் உடனே துவங்கியது.
ஈழப்படையின் தலைவனான சக்க சேனாதிபதி எஞ்சிய தன் சேனையைத் திரட்டி மூர்க்கமாக இறுதிப் போர் செய்ய முனைந்தான்.

சக்கன் முரடன்.
தோல்வி என்பதை அவனது மனது என்றுமே நினைத்துப் பார்த்ததில்லை.
போர் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
சோழர்களும், ஏற்கனவே பாதிப்படையை இந்த யுத்தத்தில் பலி கொடுத்திருந்தனர்.
திருப்பியம்புரம் போருக்குக் குறைவில்லை என்று சொல்லத்தக்க வகையில் ஒரு உக்கிரமமான போர் அங்கு நடந்தேறியது.
வெற்றி – தோல்விக்கு என்றும் விதி தான் காரணம்.

பராந்தகனின் அணி, வீரத்தைக் காட்டினாலும், வெற்றி யார் பக்கம் சேரும் என்பது பற்றி ஒரு தெளிவே இல்லாமலிருந்தது. பராந்தகன் – தில்லை நடராஜரை மனத்தில் பிரார்த்தனை செய்தான். ‘விஜயாலயனும், ஆதித்தனும் கண்ணீராலும் வீரத்தாலும் பயிரிட்டு வளர்ந்த சோழப்பயிர் என்னால் கருகுவதோ?” – என்று பராந்தகன் கவலை கொண்டான். இறையருள் இருந்து விட்டால் வேறென்ன தடை? பராந்தகனுக்கு அப்படி ஒரு வரம் கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும்.

அப்பொழுது உண்டான உபசகம் (பிளேக்) என்னும் கொடிய விட நோயால் பல ஈழப்படைவீரர்கள் இறக்கத் தொடங்கினர். சக்கனும் அந்நோயால் பீடிக்கப்பட்டு காய்ச்சலில் விழுந்தான். ஒரே இரவில் அவன் இறந்தான். ஈழ-பாண்டியப் படைகள் தலைவனில்லாமல் சிதறியது. பின் வாங்கியது. சோழன் போரில் வென்றான். எஞ்சிய ஈழவீரர்கள் ஈழநாடு திரும்பினர். இப்போரில் உண்டான படுதோல்வியால் இராஜசிம்மன் மனமொடிந்தான். பாண்டியநாடு முழுவதும் பராந்தகன் ஆட்சிக்கு உட்பட்டது.

பாண்டியன் இலங்கைக்குக் கப்பலேறி ஓடிய கதை கல்வெட்டுக்களில் கவிதையானது:
“பராந்தகனின் வீரமான நெருப்பினால், நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்டு, பாண்டியன், அந்த நெருப்பின் வெம்மையைத் தணித்துக் கொள்ள துடிப்புக் கொண்டவனைப்போல, சரேலென்று கடலில் குதித்து விட்டான் (இலங்கைக்குச் சென்று விட்டான்)” என்று சோழக்கல்வெட்டுகள் கொக்கரித்துக் கூறுகின்றன.

கப்பலேறி இலங்கை வந்த பாண்டியனை ஈழ மன்னன் கடற்கரையில் வரவேற்றான். போர்க்காயங்களை உடலெங்கும் ஆபரணமாகத் தரித்த இராசசிம்மனைக் கட்டி அணைத்து ஆரத்தழுவினான். “பாண்டியரே! காலம் நமக்கு வெற்றியைத் தரவில்லை. விதி செய்தது சதி. உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்” – என்றான். பாண்டியன் மீது அவன் பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தான். நிறைய செல்வங்களைக் கொடுத்து நகருக்கு வெளியே ஒரு அரண்மனை அமைத்து பாண்டியனை அமைதியுறச் செய்தான்.

“பாண்டியரே! இந்த சோழனை விரைவில் போரில் வென்று அவனுடைய இரு அரியணைகளையும் கைப்பற்றி அவற்றை உங்களுக்கு வழங்குவேன்” – என்று சூளுரைத்தான். இராஜசிம்மன் ஆறுதல் கொண்டான்.

இலங்கையரசன் மீண்டும் படைதிரட்டத் தொடங்கினான். ‘தோல்வி’க்கு நண்பர்கள் கிடையாது என்று சொல்வார்கள். அது போல் ‘சோழனிடம் தோற்ற’ காரணம் கருதி இலங்கையில் இருந்த சக்தி வாய்ந்த பிரபுக்கள் கலகத்தைக் கிளப்பி விட்டனர். எதிர்ப்பு வலுக்கவே, ஈழ வேந்தன், வேறு வழியில்லாமல், சோழப் படையெடுப்பை ஒத்திவைக்க முடிவு செய்தான். அது கேட்ட இராஜசிம்மன் நொடிந்து போனான். ஈழ மன்னனைச் சந்தித்தான்:

“அரசே! நீங்கள் எனக்காக செய்த உதவிகள் எண்ணிலடங்கா. என் பொருட்டுத் தாங்கள் இனியும் நீங்கள் துன்பங்கள் அனுபவிக்க வேண்டாம். எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யவேண்டும்” – என்று வேண்டுகோள் விடுத்தான்.

“என்ன வேண்டும் பாண்டிய மன்னா?”- என்றான் இலங்கைவேந்தன்.

“எனது பாண்டிய நாட்டுப் புராதனமான மணிமகுடத்தையும், இரத்தின ஹாரம், செங்கோல் மற்றும் ஆபரணங்கள் அனைத்தையும் உங்களது பொறுப்பில் விட்டு விட்டுச் செல்கிறேன். இன்று என்னால் இயலாதென்றாலும், என் குலத்தில் பின்னாளில் ஒருவன் வந்து இதை உங்களிடமிருந்து பெற்று பாண்டிய நாட்டை தமிழகத்தைச் சிறப்புற ஆள்வான்.”- என்றான்.

“கட்டாயம் பாண்டியரே! ஆனால் தாங்கள் எங்கும் செல்லாமல் எனது விருந்தாளியாகவே இருக்க வேண்டும் “ என்றான்.

இராஜசிம்மன் :“ஈழ ராஜனே! நான் மேலும் உங்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. இங்கு நானிருக்கும் காரணம், பராந்தகன் இங்கும் படையெடுத்து வரலாம். ஆதலால் நான் என் தாயார் வானவன்தேவி வாழும் சேர நாட்டுக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன்” – என்றான்.

“ஆனால்.. சேர நாடும் – சோழநாடும் நட்பு நாடுகளாக உள்ளதே .. அங்கு நீங்கள் எப்படி?” -என்று இழுத்தான் ஈழத்தரசன்.
“தாய்வீட்டில் எனக்கு என்றும் பாதுகாப்பு உண்டு“ என்றான் இராஜசிம்மன் .

இராஜசிம்மன் கப்பலில் ஏறிச் சேரநாடு சென்றான். அவனது மகன் வீரபாண்டியன் மனம் தளரவில்லை. “தந்தையே! பராந்தகனுக்கும் ஒரு நாள் அடி சறுக்கும், அப்பொழுது மதுரையை நான் மீட்பேன். இந்தப் புராதனச் சின்னங்களின் மீது ஆணை!” என்றவன் பாண்டிய நாட்டுக்குச் சென்று மறைந்து படை திரட்டத் தொடங்கினான். இராஜசிம்மனை இனி நாம் பார்ப்பதில்லை. சரித்திரமும் அவனைக் காட்டவில்லை.

பராந்தகன் வெற்றிக்களிப்பில் இருந்தான். ஈழப் பாண்டிய படைகளை அடியோடு அழித்தபின் – மதுரையைச் சென்றடைந்தான். முதன் முறையாக ‘ஒரு சோழன்’ – பாண்டிய மன்னனாக மதுரையில் முடி சூட வேண்டும் – என்று ஆசைப்பட்டான். ஆமாம் இந்தப் பாண்டிய மணிமுடி தான் எங்கே போய்த் தொலைந்தது ?

நகரெங்கும் வலைபோட்டுத் தேடினர்.
பாண்டிய மணிமுடியைக் காணவில்லை.
அதனாலென்ன? வேறு ஒரு மகுடம் செய்து முடிசூட்டிக் கொள்ளவேண்டியது தானே என்று நீங்கள் அப்பாவித்தனமாகக் கேட்கக்கூடும். அப்படிச் செய்யலாம் தான்! ஆனால், அதில் என்ன பெரிய கெத்து இருக்கிறது? இதனால் சோழர்களுக்குப் பெரும் ஏமாற்றம். வேறு வழி என்ன? கடைசியில், நீங்கள் நினைத்தபடி தான் நடந்தது. அதாவது, சோழன் வேறு மகுடமெடுத்து பாண்டிய மன்னனாக முடி சூட்டிக்கொண்டான்.

ஆக – சோழன் வென்றாலும் அதிலும் ஒரு தோல்வி தான் கிடைத்தது.

அந்த பாண்டிய புராதனச் சின்னங்களைக் கொண்டு வர பராந்தகன் யுவராஜா ராஜாதித்தனை ஈழம் அனுப்பினான். அவன், ஈழத்தை வென்றாலும், அந்த பாண்டியச் சின்னங்களைக் கண்டு பிடிக்க முடியாமல் வெறுங்கையோடு தஞ்சை வந்தான். அதற்குள், தென்னிந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களால், பராந்தகனுக்கு நடந்த சோதனைகளுக்கும், துன்பத்துக்கும் அளவில்லை.

அத்துடன் யுவராஜா ராஜாதித்தனின் கதையையும் பிற்கால சோழர்கள் எண்ணிக் கண்ணீர் விட்டு நினைவு கூர்வர்.

.அதை விரைவில் காணலாம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.