In a tragic incident a minor girl died and her elder sister sustained  serious injuries after the scooter they were riding hit a truck from behind  on National Highway 16 near Rathia

பிரேத உடல் பரிசோதனைக்குப் பிறகு சாராவின் உடல் ஸ்டெச்சரில் பிணவறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. அவள் உயிரில்லாத உடலைப் பார்க்கவே கொடூரமாக இருந்தது . அவள் கணவன் ராகேஷும் அவள் குடும்பத்தாரும் கண்ணீர் மல்க நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது போலீஸ், “ஸார்! எஃப்.ஐ.ஆர் போடணும். வாங்க.” என்றார். அதைப் போட்ட பிறகு மரணச் சான்றிதழ் மற்றும் முதல் தகவல் அறிக்கையின் நகலை ராகேஷிடம் கொடுத்தனர். அதை அவன் கடுந்துயரத்துடன் வாங்கி மேலோட்டமாகப் பார்த்தான்.

‘பெயர் – சாரா, வயது-24, மரணம்- சாலை விபத்து.’

ஆம்! இருவரும் நேற்றிரவு நன்றாகக் கொட்டும் மழையில் வரும்போது அவர்களின் இரு சக்கர வாகனம் தடுமாறி சறுக்கிச் சாலையில் விழுந்தது. அதிலிருந்து இவன் சாலை ஓரமாக வீசப்பட்டான். அவள் நடு ரோட்டில் வீசப்பட்டாள். அப்பொழுது வேகமாக ஒரு லாரி அவள் மேல் ஏறியது. “பலி கொடுத்து விட்டேனே!” என்று துயரத்துடன் அழுதான். அவர்களுக்குத் திருமணமாகி மூன்று மாதங்களே ஆகியிருந்தன.

அவன் துயரத்தில் ஆழ்ந்து நின்று கொண்டிருந்தபோது ஒருவர் அவன் முதுகில் தட்டி, “ஆழ்ந்த இரங்கல்கள் சார்! என் பெயர் வருண். இது என் கார்ட். இப்போ ரொம்ப வருத்தத்தில இருப்பீங்க. கொஞ்ச நாட்கள் போகட்டும். எனக்கு கால் பண்ணுங்க. உங்களுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியே வர ஒரு தீர்வு சொல்லுவேன்!.” என்றார். அவன் அவர் நீட்டிய கார்டை வாங்கிக் கொண்டான்.

நாட்கள் நகர்ந்தன. ஆனால் ராகேஷால் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வர முடியவில்லை. மனதை திசை திருப்புவதற்காக மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தான். அவன் அலுவலக நண்பர்கள் மேனகா, சௌரவ் அவனுக்கு ஆறுதல் கூறினர். அலுவலகத்தில் அவன் வேலையில் தன் முழு கவனத்தையும் செலுத்தினான். வீட்டிற்குச் சென்று சும்மா படுத்தாலும் அவள் ஞாபகம் மற்றும் அந்த துயர நிகழ்வே மனதில் வந்து போய்க் கொண்டிருந்தது. பாதி தூக்கத்தில் எழுந்து கத்தி மீண்டும் தூங்க இயலாமல் தவித்தான்.

நாட்கள் சென்றன. அவன் துக்கம் அப்படியே இருந்தது. அவன் அலுவலகத் தோழி மேனகா அவனிடம், “இன்னும் அதையே நினைச்சு எவ்வளவு நாள் இருக்கப் போற? கம்! ஆன்! வாழ்க்கை ‘மூவ்’ ஆயிட்டே இருக்கணும். சாரா போனது எனக்கும் வருத்தந்தான். அவ என்னோட உயிர்த் தோழி! இதோ இந்த இடம் அவளது தான். யாரும் இங்க உட்கார மாட்டேங்கிறாங்க. நீயும் அவளை நெனைச்சே செத்துராதே! நான் இன்னும் உன்ன காதலிக்கறேண்டா” என்றாள்.

அவனுக்குக் கோபம் வந்தது. கத்தினான்.

“மொதல்ல உன் இடத்தில போய் உட்காரு!. அவள் மட்டுந்தான் என் வாழ்க்கையில்! அவ்வளவு தான்! அதுவும் போயிருச்சு!” என்றான்.

அவளும் கண்ணீர் மல்க தன் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

அவன் சினத்தோடு கணினியில் ஆழ்ந்தாலும், ‘பாவம்! மேனகா! அவள் என்ன செய்வாள்?’ என்ற யோசனையும் ஓடாமலில்லை. அப்பொழுது அவனுக்கு திடீரென்று அன்று கார்ட் கொடுத்தவரை பற்றி நினைவு வந்தது. அந்த கார்டை எடுத்து அந்த நம்பருக்குப் ஃபோன் செய்தான்.

“ஹலோ! வருண்!” என்றான் ராகேஷ்.

“ஆமாம்! சொல்லுங்க!” என்றார் வருண்.

“சார்! நான் ராகேஷ்! போன மாதம் மருத்துவ மனையில் உங்க கார்ட் கொடுத்தீங்களே!”

“ஓ! சொல்லுங்க சார்! இப்போ எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லாதான் இருக்கேன், ஆனா என் பிரச்சினை….”என்றான் ராகேஷ்.

“தெரியும்!” என்றார் வருண். “நீங்க நாளைக்கு ஃப்ரீயா இருந்தா அடையாரில என் வீட்டுக்கு வாங்க. என் லொக்கேஷனை வாட்ஸப்பில ஷேர் பண்றேன்!”

“ஓகே சார்! சீயூ!” ராகேஷ் ஃபோன் காலை கட் செய்தான். வாட்ஸப்பில் லொகேஷன் வந்தது.

அடுத்த நாள் அவர் வீட்டுக்குச் சென்றான். வருண் அவனை வரவேற்று, “உள்ள வாங்க! ஐ ஆம் டாக்டர் வருண்!” என்றார்.

“ஹலோ சார்! ஐ ஆம் ராகேஷ்! நீங்கள் மனநல மருத்துவரா?”

“சேச்சே! இல்லை. நான் விஞ்ஞானி. ஸ்பிரிச்சுவல் சயின்ஸ் பிரிவில் புதிய ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். முக்கியமாக உங்களைப் போல திடீரென்று அதிர்ச்சிக்குள்ளானவர்களுக்கு எங்கள் சேவை இது” என்றார் வருண்.

“அது என்ன ஸ்பிரிச்சுவல் சயின்ஸ்? ஆவிகளுடன் பேசுவதா?” என்றான் ராகேஷ்.

“இல்லையில்லை. திஸ் இஸ் மோர் டெக்னிக்கல். ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் மூளை சுமார் எட்டு முதல் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்யும். அப்போ அவர்களின் நினைவுகளை எல்லாம் நம்மால் எடுத்து வைக்க முடியும். மன்னிக்க வேண்டும்! உங்கள் அனுமதியின்றி உங்கள் மனைவியின் நினைவுகளை அவ்வாறே பதிவு செய்து விட்டேன், பிரேத உடல் பரிசோதனையின் போது”

ராகேஷுக்கு சுத்தமாகப் புரியவில்லை.

“இதனால் என்ன பயன் சார்?” என்றான்.

“அப்படிக் கேளுங்கள்! நான் அந்த நினைவுகளை இதோ இந்தக் கருவியில் புகுத்தி விட்டேன்” என்று ‘டேப்லெட்’ போன்ற ஒரு கருவியைக் கொடுத்தார்.

“இதில் உங்கள் மனைவியின் குரல் மற்றும் நினைவுகளும் உள்ளன. இந்த டாப்லெட்டில் நீங்கள் அவளோடு பேசலாம்!”

“இது எப்படி சாத்தியம்? செத்தவங்கன்னா அவ்வளவு தானே? அவங்க கிட்டே போயி எப்படி….?”

“தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அறிவியல் சாதனை இருந்தால் இது சாத்தியமே! இது வந்தால் அனைவருக்கும் இது மிக உதவியாக இருக்கும். இறந்தவர்களை பிரிந்து வாட வேண்டாம். எங்களது ஆராய்ச்சி பரிசோதனை லெவலில் தான் இருக்கிறது. இதனை உபயோகப்படுத்திக் கூறுங்கள்!” என்றார் வருண்.

அவன் வாங்கிக் கொண்டு சென்றான்.

அது வாட்ஸாப் கீ போல இருந்தது. மெசேஜ் டைப் செய்யவும் முடியும். குரலை பதிவு செய்யவும் முடியும். அவன் அதை ‘ஆன்’ செய்து இயக்கத்தொடங்கினான்.

‘சாரா!’ என்று வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினான்.

“சொல்லு, ராகேஷ்! எப்படி இருக்கே?” என்று பதில் கொடுத்தது.

அவனுக்கு மகிழ்ச்சி ஆனது.

“செத்த பிறகு எப்படி சாரா?” என்று கண்ணீர் மல்க கேட்டான்.

“நான் சாகவில்லை. என் நினைவெல்லாம் இங்கேயே தானிருக்கு. உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்!”

நாட்கள் கடந்தன. சாராவுடன் தினமும் பேசிக் கொண்டிருந்தான், மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான்.

ஆரம்பத்தில் புதிதாக இருந்த இந்த ஆச்சரிய அனுபவம் நாளாவட்டத்தில் சாதாரணமாகப் போனது. அது ஒரு இயல்பான விஷயமாக ஆனது.

ஒரு நாள் அவனது அலுவலகத்தில் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் வந்தது. அதற்காக அங்கேயே இருந்து பணி புரிய நேர்ந்தது. அவனும் பிஸியாகி அலுவலில் மூழ்கிப் போனான். சாராவுடன் பேசுவதற்கு மறந்து போனான். அலுவலகப் பணியிலேயே கவனம் செலுத்தினான். மூன்று நாட்கள் கழித்து அலுவலகத்தில் இயல்பு நிலை திரும்பியது. வீட்டிற்குத் திரும்பினான். வந்ததுமே ‘டாபை’ ஆன் செய்தான்.

“ஹாய்! சாரா!” என்று மெஸேஜ் அனுப்பினான்.

“ஏன் மூன்று நாட்களாகப் பேசவில்லை?”என்று கேட்டாள்.

“ஆபிசில நான் பிஸி!” எனறான்.

“என்னோடு பேசு! என்னோட எப்பவுமே பேசணும்! ஐ கான்ட் லீவ் யூ! ஏன் போன? சொல்லு, சொல்லு!” என்று கோபமாக வாய்ஸ் மெஸேஜ் வந்தது.

“மூன்று நாட்கள் தானே சாரா?” என்றான் ராகேஷ்.

“இல்ல! எப்பவுமே என்னோட பேசணும்! இஸ் இட் க்ளியர்? ஐ வோண்ட் லீவ் யூ!”

“எனக்கும் வேலை இருக்கும். சும்மா எல்லா நேரத்தையும் உனக்காகவே ஒதுக்க முடியாது!” என்றான் ராகேஷ்.

“அப்போ நான் அவ்வளவு தானில்ல? சொல்லு! சொல்லு!” என்றாள்.

“சரி! போதும்! இன்னிக்கு டயர்டா இருக்கு! இனிமே என்ன தொந்திரவு செய்யாதே!” என்று அந்த டாபை ஓரம் போட்டான். ஆனால் அவள் ஓயவில்லை.

“பேசு!ராகேஷ் பேசு! ராகேஷ் பேசு!” என்று மாற்றி மாற்றி வாய்ஸ் மெசேஜ் வந்து கொண்டேயிருந்தது.

“செம டார்ச்சர்டா!” என்று சினத்தோடு தன் டாபை அணைத்துப் பரணில் தூக்கிப் போட்டான்.

மாதங்கள் கழிந்தன. ராகேஷுக்குப் பதவி உயர்வு வந்தது. அப்படியே மேனகாவுடனான நட்பு அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. வாழ்க்கை தன் போக்கில் போக வேண்டியது தான் என்று கருதி அவளுடன் பழக ஆரம்பித்தான்.

ஆறு மாதங்கள் சென்றன. அவன் தன் வீட்டை சுத்தப் படுத்தினான். அப்பொழுது பரணில் கிடந்த அந்த ‘டாப்’ அவன் கண்ணில் பட்டது. அதை தூசித் தட்டி எடுத்து, சார்ஜ் செய்து ‘ஆன்’ செய்தான்.

ஆன் செய்ததுமே அவன் எதுவும் செய்தி அனுப்பவதற்கு முன்பு சாராவின் குரல், “ராகேஷ் வந்துட்டியா? என் அருகே வா!” என்றது.

ராகேஷ் கூறினான்,”சாரா! உன்னிடம் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. “

“ஆமாம்! ” என்றது அவள் குரல். “உன்னோடு பேசாமல் இருக்க முடியவில்லை. வா! மறுபடியும் பேச ஆரம்பிக்கலாம். இனிமே நிறைய பேசலாம்!”

“சாரா! நான் ஒனக்கு ஒண்ணு சொல்லணும். இப்போ முன்ன மாதிரி இல்ல. வாழ்க்கை ரொம்ப மாறிடிச்சு. நீ என் கிட்ட இருந்தாலும் உடல் ரீதியாக செத்துப் போயிட்ட!”

“அதனால..?” என்றாள் சாரா.

“அதனால ஒண்ணுமில்ல. வாழ்க்கைப் பாதை மாறி விட்டது. நானும் மேனகாவும் ‘லவ்’ பண்றோம். கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.”

“இல்ல…..இல்ல… நான் தான் உன் மனைவி! நான் இங்கு தான் இருக்கேன். ஹவ் டேர் யூ..?” குரல் கோபமாக வந்தது.

“கூல்! சாரா! நீ டிவைசில மட்டுந்தான் இருக்கே. வாழ்க்கை அதோட பெரிசு.”

“நோ! ராகேஷ்! யூ ஆர் மைன்! ஐ ஷல் நாட் லீவ் யூ!”

ராகேஷ் சினங்கொண்டு,” இது அவ்வளவு தான்! இதைச் சொல்லத் தான் நான் ‘ஆன்’ செய்தேன். இப்பொழுது அணைக்கப் போறேன்!” என்று சொல்லி அணைத்து விட்டான்.

ஆனால் ‘டாப்’ தானே மீண்டும் ‘ஆன்’ ஆனது.

அவன் அணைக்க அணைக்க மூண்டும் மீண்டும் ‘ஆன்” ஆகிக் கொண்டேயிருந்தது.

அவன் கோபத்துடன் அதை வெளியே தூக்கியெறிந்தான்.

காலை எழுந்ததும் அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. “சௌரவ் பேசறேண்டா!”என்றான் அவன் நண்பன் பதற்றத்துடன்.

“சொல்லுடா! என்னாச்சு?”

“மேனகா கொடூரமாக தலையில் அடிபட்டு செத்துக் கிடக்கிறாள்டா!”

“என்னது” அன்று அதிர்ச்சியுடன் எழுந்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

திடீரென்று அவன் வீட்டுக் கீழ்ப் பகுதியில் சத்தம் வந்தது.

“ராகேஷ்! நான் சொல்லல? நீ எனக்கு மட்டுந்தான்!” என்று சாராவின் குரல்.

அவன் அச்சத்தில் உறைந்து போனான். மெதுவாக கீழே ஹாலுக்கு இறங்கிப் போனான். அங்கே அவன் வீட்டுக்கு வெளியே தூக்கிப் போட்ட ‘டாப்’ கிடந்தது. அவனுக்கு அச்சம் இன்னும் அதிகமானது.

தான் வெளியே தூக்கிப் போட்ட ‘டாப்’ எப்படி உள்ளே வந்தது? எப்படி தன்னால ‘ஆன்’ ஆகியது?

“நீ எனக்கு மட்டுந்தான்…”என்று தொடர்ந்து குரல் வந்து கொண்டேயிருந்தது ‘டாபிலிருந்து’.

அந்த டாபைப் பற்றித் தெரிந்தவர் வருண் மட்டுந்தான். அவர் அங்கு வந்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது ராகேஷுக்கு. உடனே அவருக்கு ஃபோன் செய்தான்.

“ஹலோ! வருண்!”என்றான்

எதிர்பக்கத்தில், “ஹலோ!” என்று ஒரு பெண் குரல் கேட்டது.

“வருண் இல்லியா?”

“நான் ஷாலினி! அவரோட அஸிஸ்டென்ட். நீங்க யாரு?”

“நான் ராகேஷ்!”

“ராகேஷ்! வருண் இறந்து போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது.”

“கடவுளே! எப்படி….”

“மர்மமான முறையில் தலையில் அடிபட்டு இறந்து விட்டார்…”

ராகேஷ் தீவிரமாக யோசித்தான்.’மேனகாவும் இதே போல தானே இறந்தாள்?’

“ராகேஷ்! அந்த டிவைஸ் உபயோகிக்கிறீங்களா?”என்றாள் ஷாலினி.

“ஆம்! உபயோகித்தேன். அது என்னை ‘பொஸஸ்’ பண்ணுவது போல எனக்கு ஒரு ஃபீலிங்…….”

“அதை உடனே உடைத்துப் போடுங்கள்! எங்களோட எக்ஸ்பெரிமெண்ட் தப்பாகி விட்டது.”

“என்ன சொல்றிங்க?” என்று அச்சத்தோடு கேட்டான்.

“நாங்க மூளையிலிருந்து தான் ‘ட்ரான்ஸ்மிட்’ பண்ணணும்னு நெனைச்சோம். ஆனால் அது ஆன்மாவைக் கைப்பற்றி விட்டது. அது ஒரு நெகடிவ் எனர்ஜியாக மாறியது. கிட்டத்தட்ட ஒர் பேய் என்று கூடச் சொல்லலாம். அது பிடித்தவரை விடாது. அதற்கு இடைஞ்சலாக இருப்பவரை சூறையாடி விடும்.”

“ஓ! மை காட்!” என்று அச்சத்துடன் காலை கட் செய்தான். பேசிக்கொண்டேயிருந்த அந்த ‘டாபை’ சுத்தியால் உடைத்தான். உடனே பேச்சு நின்று போய் நிசப்தம் நிலவியது.

சிறிது நேரந்தான்….. பிறகு வீடு முழுவதும் மறுபடியும் சாராவின் குரல் கேட்கத் தொடங்கியது,”ராகேஷ் உன்னை விட மாட்டேன்! நீ எனக்கு மட்டுந்தான்.. விட மாட்டேன்…விட மாட்டேன்….”என்ற குரலோடு இருள் கவிந்து அவனை சூழ்ந்து கொண்டது.
*