உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

EPIC OF GILGAMESH - EPIC POEM SUMMARY | Other Ancient Civilizations

 

 

கில்காமேஷுக்கு அவளைப் பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது அவள் மது அரசி  சிதுரி  என்று. அவள்  தன் வழியை மறைக்கும் படி கதவைப் பூட்டுகிறாள் என்பதை அறிந்ததும் அவள் மீது எல்லையற்ற கோபம் வந்தது. 

” ஏ மது அரசி! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? நான் யார் என்று உனக்குத் தெரியவில்லையா? நான்தான் மகாபலசாலியான கில்காமேஷ் ! தேவர்களின் காளையைக் கொன்றவன்.  செடார் வனத்தின் காவல்காரனான ஹம்பாபா ராட்சசனை மாய்த்தவன். மலைப்பாதையில் சிங்கங்களைக் கொன்று குவித்தவன்.  நீ பூட்டிய கதவுகளைத் தூள் தூளாக உடைத்துச் செல்லும் வலிமை எனக்கு இருக்கிறது. அதைச் செயல் படுத்தட்டுமா?” என்று கோபத்தோடு கூறினான்.

அதைக் கேட்ட  சிதுரி ஆச்சரியத்தின் வசப்பட்டாள்.  வெகுதூரம் காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து வாடிய முகத்துடன்  மிருகங்களின் தோலை  ஆடையாக அணிந்த அவனை கில்காமேஷ் என்று அவளால் முதலில் நம்ப முடியவில்லை. 

” நீயா கில்காமேஷ்? உன் முகத்தில் எப்போதும் தெரியும் வீரக்களையைக் காணோமே? ஏன் இப்படி காற்றைப் பிடிக்கத்  திரிபவன் போல வாடிய முகத்துடன் வந்திருக்கிறாய் ?” என்று ஆச்சரியத்துடன் வினவினாள்.

“மது அரசி! என உள்ளத்தில் ஏக்கமும் நிராசையும் நிறைந்து இருக்கிறது. அதனால் நான் களையிழந்து இருக்கிறேன். அதற்குக் காரணம் என்  அருமைத் தம்பி ஆருயிர் நண்பன் என்  உயிருக்குயிரானவன்  எங்கிடு என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். சாவுத்தேவன் அவனை என்னிடமிருந்து பிரித்துவிட்டான். அவன் உடல் புழுத்துப் போகும் வரையில் அவனை விட மனமின்றி பேணிப்  பாதுகாத்தேன். ஆனால் அவனை என்னால் உயிர்ப்பிக்கமுடியவில்லை. அவனைப் போலச் சாவு என்னையும் விழுங்கி விடுமோ என்று அஞ்சுகிறேன். அதனால் சாவை வெற்றி கொள்ளும் மார்க்கத்தில் வந்து கொண்டிருக்கிறேன்! என்னைத் தடுக்காதே!” என்று கோபமும் கெஞ்சலும் இணைந்த குரலில் கூறினான் கில் காமேஷ். 

அவன் மீது பரிதாபம்  கொண்ட சிதுரி ” கில்காமேஷ்! எதற்காக வீணாக அலைகிறாய் ? நீ தேடுவதை உன்னால் அடையவே முடியாது. மனிதனாகப் பிறந்தவன் இறந்தே ஆகவேண்டும். அதை மறந்துவிட்டு வாழ்க்கையை அனுபவி. நன்றாகக் குடி ! சந்தோஷப்படு! மனைவியைத் தழுவி இன்பம் தேடு! மனிதர்கள் இன்பமாக வாழத் தானே தேவர்கள் இரவைப் படைத்திருக்கிறார்கள். அதனை நீ முழுவதும் அனுபவி! சாவு வந்தால் அதை மகிழ்ச்சியோடு எதிர்கொள்” என்று கூறினாள். 

கில்காமேஷ் மிகவும் ஆவேசமடைந்து, “மது அரசி!  ஏன் என்  முயற்சியைத் தடை செய்யும்படி அனைவரும் வற்புறுத்துகிறீர்கள்? நான் யார் சொல்வதையும் கேட்கப் போவதில்லை. இப்போது நான்  மரணத்தை வென்ற உத்னபிஷ்டிம் என்ற மானுடனைத் தேடி அழைக்கிறேன். அவன் எனக்கு மரணத்தை வெல்லும் ரகசியத்தைச் சொல்லிக் கொடுப்பான்.  நீ என் பாதையில் குறுக்கே வராமல் அவன் இருக்கும் இடத்திற்கான வழியைக் காட்டு” என்று பாதி கோபத்துடனும் பாதி கெஞ்சலுமாகக் கேட்டான். 

சிதுரி அவனிடம் இரக்கம் கொண்டு ” கில்காமேஷ்!   சூரியதேவனைத் தவிர வேறு யாரும் இந்தச் சாவுக்  கடலைக் கடந்து  சென்றதில்லை.  கடலுக்கு அப்பால்   சாவு என்னும் ஆறு ஒன்றும்  இருக்கிறது.  அதில் பயங்கர  முதலைகளும் திமிங்கலங்களும் இருக்கின்றன.  இந்த இரண்டையும் கடக்க ஒரே ஒருவன்தான் உனக்கு உதவ முடியும் . அவன்தான்  உத்னபிஷ்டிமின் படகுக்காரன்.  அவன் சரப்பமுகத்துடன் ஒரு படகை வைத்திருப்பான். அவன் உதவிசெய்தால்தான்  அந்தப்   படகு மூலம்  சாவுக்  கடலையும் சாவு ஆற்றையும் கடக்க முடியும். அவன் உதவாவிட்டால் உனக்கு வேறு வழியே இல்லை. நீ திரும்ப உன் நாட்டிற்குச் செல்லவேண்டியதுதான்”  என்று கூறினாள்.

கில்காமேஷ் அவளுக்கு நன்றி கூறிவிட்டு மிகுந்த வைராக்கியத்துடன் தன் கோடாலியையும் வாளையும் எடுத்துக்கொண்டு கடலை ஒட்டிய காட்டின் ஊடே சென்றான். அடர்ந்த காடாக இருந்ததால் பல இடங்களில் ஊர்ந்தே போக வேண்டியிருந்தது.  சில காதங்கள் கடந்தபிறகு கடற்கரையில் அந்தப்  படகையும் படகுக்காரனையும் கண்டான். 

ஒரு மனிதன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த படகுக்காரன் ஆச்சரியத்தில் மூழ்கினான். உத்னபிஷ்டிம் தவிர வேறு யாரும் வர இயலா இந்த இடத்திற்கு வந்த இவன் யாராக இருக்கும் என்று ஒரு கணம் யோசித்தான். அவன் யாராக இருந்தாலும் சரி,  அவன் வருவதற்குள் படகைக் கிளப்பிவிட வேண்டியதுதான்  என்று தீர்மானித்துப் படகைச் செலுத்த ஆரம்பித்தான். 

அதனால் கோபம் கொண்ட கில்காமேஷ் பாய்ந்து ஓடிவந்து தன் கோடாலியால் படகை ஓங்கி அடித்தான். படகின் சரப்பமுகம் உடைந்து நொறுங்கியது. படகுக்காரன்  என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். ‘தானும் கடலைக் கடக்கவிடாமல் செய்துவிட்டானே இந்த வீரன்! இவன் சாதாரண மனிதனாக இருக்கமுடியாது’   என்று யோசித்து அவனிடமே வினவினான் அந்தப் படகுக்காரன் . 

” என் பெயர் கில்காமேஷ்” என்று அவன் சொன்னதுமே படகுக்காரனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது.  மிகுந்த மரியாதையுடன், ” ஐயா!  நீங்கள் மாவீரர் கில்காமேஷ் என்பதை என்னால் முன்னரே அறிந்து கொள்ள முடியவில்லை. தங்கள் முகமும் உடலும் அந்த அளவிற்கு வாடிப்  போயிருக்கிறது.தாங்கள் ஏன் இந்த சாவுக்  கடலுக்கு வந்தீர்கள்”: என்று வினவினான். 

கில்காமேஷ் தன் நண்பன் எங்கிடுவின் கதையைக் கூறி  தான் இவ்வளவு இடர்பாடுகளையும் கடந்துவந்தது   உத்னபிஷ்டிம் அவர்களைக் கண்டு சாகாமல் வாழ்வது எப்படி என்ற ரகசியத்தைக் கற்றுக் கொள்ளத்தான் . அது தான் தன்  வாழ்வின் லட்சியம் என்றும்  கூறினான். 

” உங்களை அவரிடம் அழைத்துச் செல்ல இயலாமல் நீங்களே செய்து விட்டீர்களே” என்று கூறினான் அந்தப் படகுக்காரன். 

 “என்ன சொல்கிறாய்?” என்று கோபாவேசத்துடன் கேட்டான் கில்காமேஷ். 

“தாங்கள் ஆத்திரத்தில்  இந்தப்படகின் சர்ப்பமுகத்தை உடைத்துவிட்டீர்கள். அது இல்லாமல் இந்தச் சாவுக்  கடலையும் அதன் பின்னால் இருக்கும் சாவு நதியையும் கடக்க முடியாது” என்றான் அந்தப் படகுக்காரன். 

என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றான் கில்காமேஷ்!

(தொடரும்) 

 

 

 

வெடிப்போசை – ந பானுமதி

Where were you on 9/11' is code for so much more

சுவற்றில் தொங்கிய இரும்பு வளையங்களில் கைகளும் கால்களும் பிணைக்கப்படிருந்தன. முழு உடலிலும் இரும்பு அங்கி இறுக்கமாகப் போர்த்தப்பட்டிருந்தது. உடலின் ஒரு பகுதியையும் அசைக்க முடியவில்லை. முகத்தில் அவ்வப்போது தீக்கதிர்கள் போல் சுடும் ஒளிக்கதிர்கள் பீய்ச்சப்பட்டன. கிட்டத்தட்ட ஆறு மணி நேரமாக ‘கே’ இந்த நிலையில் இருக்கிறாள்.

’கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் தண்ணீர் வேண்டும்’ என்று கூவ நினைத்தாலும் கழுத்தைப் பற்றியுள்ள கவசம் மூச்சு விடுவதைக்கூட கடினமாக்கியுள்ளது.
‘இவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு விசாரணையுமின்றி இரகசியமாகக் கொன்று விடுவார்களோ? என் தேசம், என் அதிபர் எங்கே போய்விட்டார்கள்? அவர்கள் என்னைக் கை விட்டு விடுவார்களா என்ன? நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்தத் தூதரகத்தின் உள்ளே சிறை வைக்கப்பட்டிருந்த ‘ஏ’ யை எப்படிக் காப்பாற்றி என் நாட்டிற்குத் தப்புவித்தேன். கொரில்லா தாக்குதலில் இரு காவலர்களைக் கொன்று, மூவரை வேதிப் பொருளால் மயக்கமடையவைத்து, அந்த முட்டாள் ‘ஏ’ யை என்னை நம்ப வைத்து எத்தனை துணிகரமாக என்னுடைய 22 வயதில் செய்திருக்கிறேன். என் ஸ்விஸ் கணக்கில் இதற்காக மில்லியன் டாலர்கள் கொடுத்த அதிபருக்கு நான் இப்படி மாட்டிக் கொண்டிருப்பது தெரியாதா என்ன?’

இருவர் உள்ளே நுழைவதை வாசனை வித்தியாசத்தால் கே உணர்ந்தாள். அவள் கைகால் விலங்குகள் கழட்டப்பட்டன. இரும்புக் கவசமும் அகற்றப்பட்டது. சரிந்து விழுந்த அவளை முரட்டுத்தனமாக தூக்கி நிறுத்தி அவள் இடையில் கை போட்டான் ஒருவன். அவள் மேலங்கியை நீக்கி கைகளை உள்ளே செலுத்தினான் மற்றொருவன். கொஞ்சம் பலம், கொஞ்சம் பலமிருந்தால் கேயால் அவர்களின் மர்ம ஸ்தானத்தில் அடித்து கீழே தள்ள முடியும். அதற்குள் அவளைக் கீழே கிடத்தி தரை உரச உரச இழுத்துச் சென்றார்கள் அவர்கள்.

‘சரியான குதிரடா இது. எத்தன முரட்டுத் தனத்துக்கும் அசரல பாரேன். இத ஒரு நா பதம் பாத்துரணும்’ அவர்கள் கிளுகிளுத்துப் பேசிக் கொண்டே அவளை ஒரு இருட்டறையில் அடைத்தார்கள்.

அவள் சிறுமியாய் இருந்த போதே இருட்டிற்கெல்லாம் பயந்ததில்லை. ஐந்து வயதில் அவள் செய்த தவறுக்காக அவள் அப்பா அவளை இரவு இருட்டில் நாய்க் கொட்டிலில் அடைத்துவிட்டார். அவள் பயப்படவில்லை, அழவில்லை. பத்து வயதில் அவள் மனதை அந்த நாட்டு அதிபரின் புகைப்படம் கவர்ந்தது. அழகான, விரைப்பான இராணுவ உடை, இரு மருங்கிலும் தொங்கும் துப்பாக்கிகள், குழந்தை முகம், அவர் அவளது ஹீரோவானார். அவர் பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்டாள்; நாட்டை இவரை விட யாரால் மேம்படுத்த முடியும் என அவள் நம்பிப் பேசத் தொடங்கிய போது அவளுக்கு வயது பதினைந்து. அவள் உல்லாசங்களைத் தேடவில்லை, பொழுது போக்கு எதுவும் அவளை வசீகரிக்கவில்லை. தான் அவரால் கௌரவிக்கப்படவேண்டுமென்ற ஒரே சிந்தனையைத் தவிர வேறொன்றில்லை.

அவள் ஒரு நாள் வீட்டிற்குத் திரும்பவில்லை. அதி இரகசியமான அந்தப் பாசறையில் சேர்ந்தாள். அவள் குடும்பத்தினரை அவள் ஒரு வருடத்திற்குப் பிறகு ஒரு அரை மணி நேரம் சந்தித்தாள். இவள் பயிற்சியில் முன்னேற முன்னேற அவள் குடும்பம் பணத்தில் முன்னேறி வந்தது. அவள் குடும்பம் முன்னரே செல்வ வளமிக்க ஒன்றுதான்; ஆனால், இப்போதோ அதிபரின் கடைக்கண் பார்வை விழுந்து விட்ட ஒன்று.

பால் வெள்ளை நிறத்தில் சிறிது குங்குமப் பூ தூவிய நிறம் அவளுக்கு. அளவான பெண் அழகுகள். ஐந்து மொழிகளில் சரளமாக எழுத, பேச கற்றுவிக்கப்பட்டாள். அது மட்டுமா, ஐந்து கடவுச் சீட்டுகள். அயல் நாட்டு உளவுத் துறையை ஏமாற்ற, ஒரு சாதரணப் பயணியைப் போல சில உல்லாசப் பயணங்கள். ஆனால், அவள் சாதிக்கப் பிறந்தவள். அதிபரின் கரங்களை வலுப்படுத்தப் பிறந்தவள். அவரது வாழ் நாள் கொள்கை, பிரிந்துள்ள தேசத்தின் இரு பாகங்களையும் இணைத்து ஒரே நாடாகச் செய்து அதை அவரே வழி நடத்த வேண்டுமென்பதுதான். அதில் அவள் துணை நின்றாள், இன்னமும் நிற்பாள்.

‘ஆனால், ஏன் என் நாட்டின் காவலர்கள் என்னை விடுவிக்க வரவில்லை இன்னமும்? அன்று ‘எஸ்’ சொன்னானே- அதிபரின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய முதல் போராளி அவள் தானென்று. அவள் செய்கைகளை வீடியோவாக எடுத்து மற்றப் போராளிகளுக்கு படிக்கும் பாடமென அவர் செய்திருப்பதெல்லாம் எப்பேர்ப்பட்ட கௌரவம்?’

முதன் முதலில் ‘சயனைடு’ குப்பியைக் கழுத்தில் அணிந்த போது அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரண்டது. அவள் போராளி, அரசின் விசுவாசி, அவள் இராணுவ இரகசியப் பயிற்சி பெற்றவள், பல மொழிகள் தெரிந்தவள், தான் பிறந்த பூமி இனியும் இரண்டாக இருக்க அவள் விட மாட்டாள், அது அதிபர் சொல்வதைப் போல ஒன்றுபடும், அந்த நாளின் அணிவகுப்பில் அவள் முக்கியத் தலைமையேற்று தேசியக் கொடி ஏந்தி நடப்பாள். குண்டு துளைக்காத மேடையிலிருந்து அதிபர் துள்ளிக் குதித்து கீழிறங்கி அவளது வலது கரம் பற்றி மேல் தூக்கிக் காட்டி உடன் சில அடிகள் நடந்து வருவார். ஆனால், ஏன் இன்னமும் அவளை விடுவிக்க வரவில்லை அவள் தேசம்? காவல் மிக அதிகமாக இருக்கிறதோ?

இதெல்லாம் ஒரு காவலா? அவள் ‘எஸ்’ஸுடன் சென்ற அந்த ‘எக்ஸ்’ ஹேங்கர். பாலைவனம் என்றே சொல்ல வேண்டும் அந்த இடத்தை. அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து அயல் நாட்டிற்கு வந்து விட்டார்கள். மிகக் குறைவாக உணவும், நீரும் தரப்பட்டன. மொத்தமாக மூன்று மணி நேரத்திற்குள் அவர்கள் இருவருமாக அந்த ‘எக்ஸ்’ ஹேங்கருக்குச் செல்ல வேண்டும்; யார் கண்ணிலும் சிக்காமல் பழுது பார்க்கப்பட்டு, தயாராக உள்ள அந்தப் பயணிகளின் விமானத்தின் உள்ளே சென்று பயணியர் இருக்கைகளின் மேலே உள்ள ‘லக்கேஜ் பெட்டி’ யின் மேல் வளைவில் கண்களுக்கும், கைகளுக்கும் புலப்படாத வகையில் வெடிகுண்டினைப் பதுக்கி வைத்து விட்டு சுவடே தெரியாமல் அந்த இடத்திலிருந்து தனித்தனியாக அவர்கள் ஒரு தங்கு விடுதியில் இரவுப் புலரியைக் கழிக்க வேண்டும். மறு நாள் விமானப் பயணிகளாக மற்றொரு நாட்டிற்குப் பறந்து விட வேண்டும். இவர்கள் குண்டு வைத்த விமானம் விழுந்து நொறுங்கி, அவலச் செய்தியாகி அதை மக்கள் மறந்து போகும் போது தாய் நாட்டிற்குத் திரும்ப வேண்டும்.

அந்த ‘ஹேங்கரை’ அடைவதுதான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. நிலவற்ற வானம், மிக வெளிச்சமாகத் தெரிந்த நட்சத்திரங்கள். காற்று குவித்து வைத்திருந்த மணல் குன்றுகள். சப்பாத்திக் கள்ளிகள் மேலே தீஞ்சுடர்களென ஆடிய பூக்கள். எங்கிருந்தோ ஊளையிடும் ஒரு கிழட்டு நரியின் குரல். மணல் தடத்தில் மறைந்து மறைந்து வெளிப்பட்ட ஓனாய் காலடிகள்.

விண்மீன்களின் துணை ஒளி மட்டும் கொண்டு அவர்கள் பதுங்கிப் பதுங்கி அந்த ‘ஹேங்கரை’ அடைந்து விட்டார்கள். அது பின் பகுதி. அடுத்து ஒரு விமானம் அங்கே வரப்போகிறது என்பதற்காக விரியத் திறந்திருந்த கதவு ஏதோ ஒரு ஆணையின் பேரில் மூடப்பட்டது. நம்மைப் பிடித்துவிட்டார்கள் எனத்தான் இவர்கள் நினைத்தார்கள். ஆனால், மனிதன் நுழைந்து வெளியேறும் கதவிற்குள்ளான சிறு கதவு சாத்தப்படாமல் இருந்தது. உள்ளே நுழைந்து அந்த அலுமினியப் பறவையைப் பார்த்த மாத்திரத்தில் இவர்களுக்குத் தான் எத்தனை பரவசம்! ஏறும் ஏணி இல்லாமல் நின்றிருந்தது அது. தூதரக மதிலில் தொற்றி ஏறிய அவளுக்கு இதெல்லாம் ஒன்றுமேயில்லை. அவள் ஏறி அந்த ‘எஸ்’ ஸையும் ஏற்றி விட்டாள். குண்டினைப் பொதிந்தாயிற்று. வெளியில் வருகையில் விடியலோ என்ற அளவில் மணல் துகள்கள் மின்னின. அவர்கள் விடுதியில் தங்கியதும், வேறொரு நாட்டிற்குச் சென்றதும் சாதாரண சாகசங்கள்.

இவர்களின் பாதிப் பயணத்தில் வெடி குண்டிருந்த விமானம் 139 பயணிகளோடு, 20 விமானப் பணியாளர்கள் மற்றும் ஓட்டிகளோடு நடு வானில் 30000 அடியில் தீக்கோளமென வெடித்துச் சிதறியதை மற்ற பயணிகள் போலவே இவர்களும் செய்தியென, தீவிரவாதமெனக் கேட்டுக் கொண்டார்கள். உலக நாடுகள், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர்களின் எதிரி நாட்டில் நடை பெற இருந்த உலக விளையாட்டுப் போட்டிகளை நிறுத்தச் சொல்லி கோரிக்கைகள் வைத்தன. இதைச் சான்றெனக் கொண்டு தன் சகோதர நாடு உலகின் முன் கௌரவம் இழந்து நிற்கிறதென்றும், இரண்டையும் இணைத்து தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் நாள் நெருங்குகிறது என்றும் அதிபர் அளித்த பேட்டியை இவர்கள் ஷாம்பெய்ன்னுடன் கொண்டாடினார்கள். இனி இவர்கள் தங்கள் தாய் நாட்டிற்குத் திரும்பலாம்; இனி வாழ் நாள் முழுதும் அரசின் ஆதரவும், பொருள் உதவியும், பெரும் பதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்தில் விரும்பினால் இணையலாம்.

நாடு திரும்ப விமான நிலையத்தில் காத்திருந்த போது இவர்களது கடவுச் சீட்டு பொய் எனக் கண்டுபிடித்து விட்டார்கள். சயனைட் சாப்பிட்டதில் ‘எஸ்’ உடனடியாக இறந்து விட, இவளைக் காப்பாற்றி விட்டார்கள்.

அவள் இப்போது செய்யக்கூடுவதென்ன? தலையை மோதி உடைத்துக் கொள்ளலாம் என்றால் பாரா இருந்து கொண்டே இருக்கிறது. உடைகளைக் கிழித்து தொங்கி விடலாமென்றால் ஒரு கொக்கி கூட இல்லை. இவர்கள் எப்படியும் தன் தாய் நாட்டை அறிந்து விட்டார்கள். ஆனால், குற்றத்தை நிரூபிக்க சாட்சிகள் வேண்டும். அவள் முகம் எந்த சி சி டி வி காட்சியிலும் பதிவாகவில்லை. அவளுக்கு வெடி குண்டு தந்தவர்களை அவளது அரசாங்கம் இந்நேரம் கொன்றிருக்கும். அவள் இவர்களது விசாரணையில் எந்தப் பதிலும் சொல்ல மாட்டாள். அவளது அதிபர் அவளைக் கை விடமாட்டார். அவள் விரைவில் ஒரு சுதந்திரப் பறவையாகி விடுவாள். பூங்கொத்துக்களும், மாலைகளும், பாராட்டுக்களும் அவளுக்காக அவள் தாய் நாட்டில் காத்திருக்கின்றன.

அவள் நீதி மன்றத்தில் கண்ணியமாக நடத்தப்பட்டாள். ஒருக்கால் பெண் என்பதாலோ? அவளின் இளமை இங்கேயும் அவளுக்காகப் பரிகிறதோ? அவள், தான் தன் நாட்டை அளவிற்கதிகமாய் நேசிப்பதாகச் சொன்னாள்; பல்வேறு நாடுகளில் அற வழியில் அதற்காகச் செயல்படுவதாகவும், மாற்றுக் கடவுச் சீட்டுக்கள் கூட அதற்காகத்தானெனவும் சொன்னாள். அவள் ‘வெடி குண்டையெல்லாம்’ பார்த்ததேயில்லை; ஆம் அவளுக்கு அந்த மற்றொருவர் யாரெனத் தெரியாது. மறு நாள் அவளுக்கு நீதி மன்றத்தில் ஒரு நாற்காலி கொடுத்தார்கள் இரு காணொலிகள் ஒன்றன் பின் ஒன்றாக. முதலாவதில், அவளது தாய் நாட்டின் அதிபர் ‘அவள் தங்கள் குடிமையில் இல்லை; எந்தப் பதிவேட்டிலும் அவள் பெயரில்லை; அவள் பெற்றோர் என்று குறிப்பிடும் நபர்கள் ‘இவள் பொய் சொல்கிறாள், எங்களுக்கு பெண் குழந்தையே கிடையாது’ என்று சொல்கிறார்கள்’ என்று பேசியிருந்தார். இவள் முக பாவங்களை நீதி மன்றம் இரகசியமாகப் படம் எடுத்துக் கொண்டிருந்தது.

அடுத்த காணொலியில் உறவை வெடி குண்டு விபத்தில் பறி கொடுத்த மனிதர்கள் கதறிய காட்சிகள். அதிலும், புதிய மலர் போன்ற இரு குழந்தைகளையும் இழந்த அந்தப் பெற்றோர் கதறியது இவளை வன்மையாகப் பாதித்தது. கைகளில் விளக்குகளோடும், மலர்களோடும், கண்ணீரோடும் மனிதர்கள் அஞ்சலி செலுத்தியதும், கதறியதும், ஆவேசப்பட்டதும், ‘தூக்கிலிடு கேயை’ என்ற பதாகைகளும், ‘பழிக்குப் பழி’ என்ற கூப்பாடுகளும், தன் அதிபரே தான் அந்த நாட்டவளில்லை எனச் சொன்னதும் அவளுக்கு மரண அடியாக இருந்தது. வானில் சிதறுண்டு, அடையாளமற்றுக் கருகிய மனித உறவுகளின் உணர்வுகள் அவளை வெடியோசையுடன் தாக்கின.
‘நான் தான் செய்தேன்; என்னைத் தூக்கிலிடுங்கள்’ எனக் கதறினாள் அவள்.

நீதிபதியின் எண்ணம் வேறாக இருந்தது. அவளுக்குக் கடுங்காவல் தனி ஆயுள் என சுருக்கமாகச் சொன்னார். அத்தனை உயிர்களை எளிதாகக் கொன்ற அவளைக் குற்ற உணர்ச்சிக்கு உட்படுத்தி வாழ் நாள் முழுதும் அவள் தண்டனை பெற வேண்டும் என்பது அவர் தீர்ப்பு. அவள் தன் இருக்கையை விட்டு எழுந்திருக்கையில் சத்தமில்லா துப்பாக்கியிலிருந்து குண்டு அவளை நோக்கிச் சீறி வந்தது.

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

இராஜாதித்தன் முடிவு

இராஜாதித்தன் முன்கதை:

சோழன் பராந்தகன், பாண்டியப் போர்க்களம் கண்டு வெற்றியுடன் இருக்கையில், வடதிசை அரசுகள் எதிரிகளாகிறது. பட்டத்து இளவரசன் இராஜாதித்தன் அந்த பகைகளைத் தடுக்கத் திட்டமிடுகிறான். பகை மேகங்கள் கருக்கத் தொடங்குகிறது. பராந்தகன் இளவரசர்களுடன் போர்த்திட்டம் குறித்து அளவளாவுகிறான். இனி நாம் தொடர்வோம்.

பராந்தகன் தொடர்ந்து பேசினான் :“இராஜாதித்தா! திருக்கோவலூரில் வைதும்பராயன் தங்கி இருக்கிறான். அவன் பல ஆண்டுகளாகவே நமக்குச் செலுத்த வேண்டிய திறைப் பணம் செலுத்தவில்லை.  நீ திருக்கோவலூர் அருகே சென்று பாடி வீடு அமைத்துத் தங்கி இரு. அங்கிருந்தே வைதும்பன் மீது ஒரு கண் வைத்திரு. அங்குத் தங்கி இருக்கும்போது, சும்மாயிராமல் சிவன் கோயில் ஒன்றைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய். நீ அங்கே தங்கியிருப்பது, கோயில் திருப்பணிக்காக என்று காண்பவர்கள் நினைக்க வேண்டும். ஆனால், உன் கண்ணும் கருத்தும் கங்க நாட்டினின்றும் இராட்டிரகூடத்திலிருந்ததும் ஏதாவது செய்தி வருகிறதா என்று காண்பதிலும், வைதும்பனின் மனப்பாங்கை ஆராய்வதிலும் இருக்க வேண்டும். உடனே படைகளுடன் புறப்பட்டு விடு” என்று கட்டளையிட்டார் பராந்தகர்.

“மகிழ்ச்சி தந்தையே! அவ்வண்ணமே செய்வோம்”- என்று இராஜாதித்தன் புறப்பட்டான். புறப்படு முன், வீரமாதேவியை அரண்மணையில் உப்பரிகையில் சந்தித்தான்.

“வீரம்மா! மான்ய கேட நகரில் நான் வீரநடை போட்டு, கிருஷ்ணனை சிறைபிடித்து, உன்னையும் உன் கணவர் கோவிந்த வல்லவரையரையும் அரியணையில் அமர்த்தி, மீண்டும் என் கரங்களால் முடிசூட்டுவேன். அதைச் செய்யாமல், நான் சோழ நாட்டு மண்ணை மீண்டும் மிதிக்க மாட்டேன். இது திண்ணம். இது உறுதி. இது சத்தியம். என் போக்கை யார் தடுத்தாலும் தயங்கமாட்டேன்” -என்று உணர்ச்சிவசப்பட்டு வீர சபதம் செய்ததைக் கேட்டும் இராஜாதித்தன் விழிகளில் வீசிய ஒளியைக் கண்டும், வீரமாதேவி, உடலில் ரோமாஞ்சலி ஏற்பட மெய்மறந்து நின்றாள்.

“அண்ணா! இராஷ்டிரக்கூடப்படையை அவ்வளவு எளிதாக எடை போடலாகாது. ஐந்து வருடமுன் நடந்ததை மறந்துவிட்டாயா? அப்போது என் கணவர் கோவிந்தருடன் நானும் தஞ்சை வந்து தஞ்சமாகி நான்கு ஆண்டுகளாயிருந்தது. இராட்டிரகூட மன்னன் அமோகவர்ஷன் நோய்வாய்ப்பட்ட நேரத்தில், என் கணவர் கோவிந்தன் – பராந்தகனிடம் “மாமா! இது நல்ல சமயம். எனக்கு உதவுங்கள்” – என்று வேண்டினான். சோழர் படையுடன் அவர் புறப்பட்டு, இராட்டிரகூடப் பேரரசைத் தாக்கப் புறப்பட்டார். அண்ணா, நீ சோழ எல்லையைக் காக்கும் பணியிலிருந்ததால், இந்தப்படையெடுப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. பூதகன் – இராட்டிரகூடக் கூட்டுப் படைகள் சோழப்படையை வென்றன. இவர் தஞ்சைக்கு மீண்டும் வந்து சேர்ந்தார். மூன்றாம் கிருஷ்ணன் சோழனைப் பழி தீர்க்க நாளை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல், பெரும் படையையும் சேர்க்கத்தொடங்கினான்.”- என்றாள். அவளது பெருமூச்சு அவளது கண்ணீரைச் சூடாக்கியது.

இராஜாதித்தன் சொன்னான்: “வீரம்மா! நீ வீணே கவலைப்படுகிறாய். நாமும் படையைப் பெருக்கியுள்ளோம். எனக்கு விடை கொடு “ என்றான்.

941-948: பராந்தகன் கணக்கில் இப்பொழுது கங்க, இராட்டிரக்கூட நாடுகள் முதன்மை பகைவர்களானர். சுற்றிவரும் பகை. இராஜாதித்தன் திருநாவலூரில் (இன்றைய திருநாம நல்லூர்) படையுடனிருந்ததான். அவனது படைத்தலைவன் வெள்ளங்குமரன் அருகில் முடியூரின் படையுடன் இருந்தான். பராந்தகன் இந்தப்படைகளின் எண்ணிக்கையை இரட்டித்தான். இராஜாதித்தன் தம்பி அரிஞ்சயனும் படையுடன் அருகில் அமர்த்தப்பட்டான்.

942: அரிஞ்சயனின் வீர மகன் சுந்தர சோழன் 20 வயது அடைந்திருந்தான். அவனுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியிருந்தது. அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். ‘ஆதித்திய கரிகாலன்’ என்று பெயரிட்டனர். பகைகள் புகைந்து கொண்டிருந்தது. பராந்தகன் சோழக்கூட்டணியை வலுப்படுத்த-கொடும்பாளூர் இளவரசனுக்குச் சோழ இளவரசி அநுபமாவை மணம் புரிந்து கொடுத்தான்.

949; கடைசியில் போர் வந்தே விட்டது.
தக்கோலம் – அரக்கோணத்துக்கு ஆறு கல் தொலைவில் இருக்கும் ஊர்.
இராட்டிடகூட சேனை, கங்க சேனை, மற்றும் வைதும்ப, வாண சேனைகள் கடல்போல தொண்டைநாட்டின் வட எல்லைக்கு அருகில் வந்தது. இராட்டிரகூடர்களின் படைகள் வட பெண்ணை ஆற்றைக் கடந்து நேரே காஞ்சிபுரத்தை நோக்கி வந்தன. அவர்களைத் தடுத்து நிறுத்த அரிஞ்சயனும் கொடும்பாளூர் இளவரசனும் படைகளுடன் செல்லும்பொழுது, கங்க நாட்டுப் பூதுகன் பின்புறமாக வந்து சுற்றி வளைத்தான். இராஜாதித்தன் சோழப்பெரும் படையுடன் தடுத்துப் போர் புரிந்தான். தக்கோலம் என்ற இடத்தில் எதிரிகள் கைகலந்தனர்.

கீழ்த் திசையில் செங்கதிரோனின் ஒளி மெல்லப் படரத் தொடங்கும்போது தக்கோலம் அருகே கடல் போன்று வந்த இரட்டர் படைகளைச் சோழ நாட்டுப் படைகள் தடுத்து நிறுத்தின. வீரர்களும், வீரர்களும் மோதினர். கேடயமும் கேடயமும் உராய்ந்தன. வேலோடு வேல் பொறி பறக்கப் பாய்ந்தன. கங்க நாட்டுப் பூதுகன் திறமையான திட்டமொன்றைத் தயாரித்திருந்தான். இரட்டர்களுடன் போர் நடந்து கொண்டிருக்கும் போது போர்க்களத்தை இருபுறமிருந்தும் தாக்கும் திட்டமிட்டிருந்தான். காஞ்சியை வைதும்பன் தலைமையில் படைகள் தாக்குவதென்பதும், பூதூகன் தக்கோலப் போர்க்களத்தில் மேற்குத் திசையில் பக்கவாட்டில் பாய்வது என்பதும் திட்டம்.

தக்கோலப் போர்க்களம் மிகவும் பயங்கரமாகக் காணப்பட்டது. வெள்ளங்குமரனும், அரிஞ்சயனும் தனது போர்த் திறமைகள் எல்லாம் புலப்படுத்திப் போரிட்டும் சோழர் படைகள் ஆயிரக்கணக்கில் மாண்டன. ஆனால், ஒவ்வொரு சோழ வீரனும் எதிரிப் படையினர் இருவரையாவது மாய்த்து விட்டுத்தான் உயிரிழந்தனர். அரிஞ்சயனும் போரில் காயப்பட்டான் – எனினும் காயங்களுடன் தளராது போர் செய்தான். எதிரி படையின் எண்ணிக்கை சோழப்படையினரின் எண்ணிக்கையைப் போல் மும்மடங்காக இருக்கக் கூடுமென்று அன்று மாலை போர் முடிந்த பிறகு அரிஞ்சயனும் வெள்ளங்குமரனும் மதிப்பிட்டனர்.

போரேன்றால் அது போர். கடும் போர். எதிரிகள் தொகை பெரிதாக இருந்தாலும், சோழர்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல், வீரசாகசம் செய்தார்கள். இராஜாதித்தனின் வீரம் எதிரிகளை நடுங்க வைத்தது – சோழப்படையை ஊக்குவித்தது. இராட்டிரகூடப் படைகள் சோர்வடைந்து, தளர்ந்தது. இராஜாதித்தன் சென்றவிடங்களெல்லாம் எதிரிகளின் தலைகள் பந்து போல உருண்டோடியன. மாலைக்குள் – வீரர்களின் தலைகள் மலையாகக் குவிந்தன. சோழ வெற்றி விரைவில் வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படலாயின. படைபலம் அதிகமாக இருந்தாலும், படைச் சேதம் இராட்டிரக் கூட்டணிக்கு மிக அதிகமாக இருந்தது. மூன்றாம் கிருஷ்ணன் – தோல்வியை ஒப்புக்கொண்டு, இராஜாதித்தனிடம் சமரசம் பேசலாம் என்று முடிவு செய்தான்.

கங்க மன்னன் பூதுகன் சொன்னான்: “மன்னா! இந்த இராஜாதித்தன் இருக்கும் வரை நாம் சோழரை வெல்வது அரிது. அவனை மட்டும் கொன்றுவிட்டால்- சோழர்கள் சிதறி ஓடுவர்” – என்றான்.

கிருஷ்ணன் “பூதுகா! கொக்கின் தலையில் வெண்ணை வைக்கச் சொல்லுகிறாய். ஆகிற காரியத்தைச் சொல்லு” என்றான்.

பூதுகன் “கிருஷ்ணா! எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு. இன்று மாலை சூரியனஸ்தமித்த பிறகு, இராஜாதித்தன் தன் படை நிலமையைப் பார்க்க, தன் யானை மேல் செல்வான். அச்சமயம் அவனைத் தாக்கவேண்டும். நானும் என்னுடன் சில வீரர்களும், சோழ வீரர்களைப் போல மாறுவேடமிட்டு செல்வோம்” என்றான்.

கிருஷ்ணன் :”சரி.. செய்து பார். அது ஈடேறிவிட்டால் – சோழர் கதி அதோகதி. அது நடக்கவில்லை யென்றால்  நாளை நான் இராஜாதித்தனுடன் சமாதான உடன்படிக்கை செய்வேன்” – என்றான்.

மாலை வந்தது. அன்று யார் கழுத்தில், என்ன மாலையோ? இராஜாதித்தனுக்கு போர் வெற்றி தரும் ஆத்தி மாலையா? அல்லது இறுதி மாலையா?
பூதுகன் ஐந்து வீரர்களுடன் போர்க்களம் சென்றான். அவர்கள் சோழப் போர் வீரர்கள் போல மாறுவேடமிட்டிருந்தனர். சோழவீரர்கள் அங்கு விழுந்து கிடந்த காயமுற்ற சோழ வீரர்களைத் தூக்கிக் கோண்டு போயினர். அதை மேற்பார்வையயிட்டுக் கொண்டே, இராஜாதித்தன் யானையின் அம்பாரியில் வந்தான்.

‘இந்த இராட்டிரக்கடல் சேனை இன்று நடந்த யுத்தத்தில் அடைந்த தோல்விக்குப்பின்.. நாளை ஓடிவிடவே வாய்ப்பு உள்ளது. அப்படி ஓடவில்லையென்றால் – நாளை அவர்களை நிர்மூலம் செய்து துரத்தி ‘மானிய கேடா’ வரையில் சென்று – ஆட்சியைக் கைப்பற்றி கோவிந்தனை அரசனாக்கி , வீரமாதேவியை மீண்டும் அங்கு மகாராணியாக்க வேண்டும்” – என்று எண்ணமிட்டான்.

அந்த இருட்டை பேய்களின் இராஜ்யமாக அடித்திருந்தது. காயப்பட்டு முனகிக்கொண்டிருந்த வீரர்கள் அந்த பயங்கரத்தை அதிகப்படுத்தியது. இராஜாதித்தன் வெற்றிப்பெருமிதத்துடன் யானை ஒன்றின் மீது அமர்ந்து போர்க்களத்தை வலம் வந்தான். உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கும் சோழ வீரர்களைத் தேடி அழைத்துச் செல்வது அவன் நோக்கமாக இருந்தது. பூதுகன் யானைக்கு வெகு அருகில் வந்தான். விஷ அம்புகளைப் பாய்ச்சினான். ஒரு அம்பு இராஜாதித்தன் மார்பைத் தைத்தது. சோழர்க் குலக்கொடி மண்ணிலே சாய்ந்தது! இராஜாதித்தன் யானைமேல் துஞ்சிய தேவரானான்! அந்த ஒரு நொடி, தமிழகத்தின் சரித்திரத்தை ஒரு உலுக்கு உலுக்கிப் போட்டது. பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவத் துடித்த சோழர் படை, தன் தலைவனை இழந்து, கண்ணீருடன், தோற்றோடினர்.

இனி தமிழக அரசியலில் என்ன ஆயிற்று? பொறுத்திருந்து பார்ப்போம்.

கருகுமணி – பாரதியின் புதுமை பெண்- ராதிகா பிரசாத்

ந.பச்சைபாலன்: மழையின் சங்கீதம் (சிறுகதை)

 

வினோத் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும் தரையில் அந்த போஸ்ட் கார்டு இருந்தது .

யாராக இருக்கும் ?

“ எனது மகள் வயிற்று பேரனுக்கு இரண்டு வயது முடிவடைகிறது.   வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு பெயர் சூட்டு விழா. கட்டாயம் வந்து இருந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு – இளநகை ( தாத்தா)

அவ்வண்ணமே கோரும் – கருகுமணி ( அம்மா )
விலாசம்: 12, முதல் அவின்யூ, வளசரவாக்கம், சென்னை.

பிகு: உங்கள் நண்பர்களிடம் சொல்லவும்

வினோத்துக்கு தலை கால் புரியவில்லை
மனதில் உடனே ஃப்ளாஷ்பாக் மூன்று  வருடங்கள் பின்னோக்கி ஓடியது.

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

தாழையூத்து ஒரு அழகிய செழுமையான பசுமை நிறைந்த கிராமம்.

என்ன ஒரு வீம்பு ? என்ன ஒரு வறட்டு ஜம்பம் ?

அந்த கருகுமணிக்குதான்

அழகு என்றால் அந்த மாதிரி அழகு .

நாலு பேரை பைத்தியமாக்கினாள்.

“நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் ….”

“அய்ய மெல்ல நட மெல்ல நட மேனி ….”

“ நடையா இது நடையா ஒரு நாடகம் …..”

“ பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ……”

இந்த பாடல்கள் பள்ளிக்கூட காலத்தில் மிக்க பிரபலம்.

எல்லா பள்ளிக்கூடத்திலும் என்னதான் அழகான பொண்ணுங்க இருந்தாலும், “தேவதை” “கனவு கன்னி” வகை முத்திரை பதிச்சு ஒருத்திதான் இருப்பாள். இதோட maths equation மத்திரம் புரிபடவே படாது. இன்றைய அளவில் பயங்கர வளர்ச்சி பெற்ற விஞ்ஞானத்தாலும் சால்வ் செய்ய முடியாத ரிடில் இது.

அந்த ஒன்னே ஒன்னு “ கனவு கன்னி தேவதை “ எங்க பள்ளிக்கு பக்கத்திலேயே உள்ள “ பெண்கள் மட்டும்” பள்ளியில் படித்தாள். பெயர் “கருகுமணி”. பெயருக்கு பொறுத்தமான நிறம் ஆனாலும் அழகு அழகு அப்படி ஒரு அழகு.

“கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற பிரபலமான பாடல் வெளியாவதற்கு பல வருடங்களுக்கு முன்பே ,அந்த வரிகள்தான் நாலு விடலை பசங்க , அந்த பொண்ணை சைக்கிள் ஓட்டிக் கொண்டே ஸைட் அடிச்சு கொண்டே,பாடிய வரிகள். கவிபேரரசு வைரமுத்துவும் தன் சொந்த அனுபவத்தில்தான் அந்த வரிகளை எழுதி இருக்க வேண்டும்

வினோத் ,சாரதி , ஜோசஃப் , அலிகான் நாலு பேரும் நெருங்கிய நண்பர்கள்.

சாதி சமய வேறுபாடுகள் நெருங்கிய நட்பை நெருங்க முடியாதுங்கறத்துக்கு இவர்கள் ஒரு உதாரணம். அவரவர்கள் பண்டிகையை நாலு குடும்பமுமே சேர்ந்து கொண்டாடுவார்கள் . முதல் நாலு ராங்க் இந்த நாலு பேருக்குள்ளேயே சுற்றி சுற்றி வரும் .

நாலு பேரும் கருகுமணியை விரட்டி விரட்டி சுற்றி சுற்றி காதலித்தார்கள்.கருகுமணி மறவர் குலத்தை சேர்ந்தவள்.வீட்டில் கட்டுப்பாடுகள் மிக அதிகம்.
பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியதே பெரிய விஷயம்.அவள் அப்பா செல்லம் . அவருக்கு தன் பொண்ணு தப்பு செய்ய மாட்டாள்னு அசாத்திய நம்பிக்கை.

அந்த நாலு பேரும் தங்கள் காதலை அவளிடம் சொல்ல முடிவு எடுத்தார்கள் .

அவள் யாரை பிடித்திருக்கு என்று சொன்னவுடன் மற்ற மூவரும் விலகி விட வேண்டியது என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர் .

அவள் கல்லூளி மங்கியாச்சே ! அவ்வளவு சுலபமா சொல்லிடுவாளா?

ஒரு மாசம் இழுத்தடித்து “ எனக்கு உங்கள்லே ஒருத்தரை பிடிக்கும்.தெகிரியம் இருந்தா நாலு பேரும் சேர்ந்து வந்து என் அப்பாவிடம் சொல்லுங்க. நான் அப்போ யாரை பிடிச்சிருக்குன்னு சொல்றேன் . மத்த மூணு  பேரும் உண்மையான நண்பர்களாக இருந்தால் விலகி விடனும்” .

இது சரியா பட்டாலும் , நாலு பேரும் மண்டை குழம்பி “ யாராக இருக்கும் “ என்று யோசித்து யோசித்து மூன்றாம் பிறை கமல் மாதிரி ஆகி விட்டார்கள் .

விடை தெரிந்தால் மூவருக்கு தூக்கம் போய் விடும். விடை தெரியலைன்னா , “ யாரு யாரு அந்த அதிர்ஷ்டசாலின்னு மனசு குழம்பி நெருங்கிய நட்பு சுக்கு நூறாக சிதறி விட வாய்ப்புகள் அதிகம்”.

அலிகான்தான் முதல் ஸ்டெப் எடுத்தான் “ ஒரு பொண்ணு நமக்கு சவால் விடறா. வெக்கமா இல்லை. வாங்கடா “ ன்னு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கருகுமணி வீட்டுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான் .

கருகுமணி அவர்கள் வாசல் கேட்டுக்குள் நுழைவதை பார்த்து விட்டு பதட்டத்துடன் வெளியே ஓடி வந்து  “ சும்மா விளையாட்டுக்கு சொன்னா இப்படியா திடு திப்னு வருவீங்க. அப்பாரு பாக்கறத்துக்குள்ளே அப்படியே திரும்பி போயிடுங்க “ ன்னு கை கூப்பி கெஞ்சினாள்.

உடனே மத்த மூணு  பேரும் சத்தம் போடாமல் நகர்ந்து நழுவ பார்த்தார்கள்.

அலிகான் உடனே ருத்ர தாண்டவம் ஆடி விட்டான்.
“ இந்தப் பொண்ணு  என்னடான்னா நம்மளை உசுப்பி விட்டுட்டு இப்ப பால் மாறரா.என்னமா சவால் விட்டா? நீங்க என்னடான்னா பம்மறீங்க பதுங்கறீங்க. இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியாம நாம இங்கிருந்து நகர கூடாது.உங்கப்பாரை கூப்பிடுடி.”ன்னு பெரிசா கத்தினான்.

அதற்கு பின் நடந்த அசிங்கங்களை சுருக்கமாக சொல்லி விடுவது நல்லது. கருகுமணியின் அப்பா கருகுமணியை அடிச்சு நிமித்தி விட்டார். நாலு பேரும் அவரை தடுக்க போய் அவர்களும் வாங்கி கட்டி கொண்டார்கள்.அலிகான் ஆத்திரத்தில் பெரியவரை அடிக்க போக, கருகுமணி கண்ணாலேயே வேண்டாம் என்று கெஞ்சியதால் ஓங்கின கையை நிறுத்தி விட்டு மொத்தமாக எல்லா அடியையும் தானே வாங்கி கொண்டான்.
அதற்குள் சேதி போய் மத்த அப்பா அம்மாக்களும் வர ஊரே அல்லோல கல்லோல பட்டு விட்டது .

கருகுமணி படிப்பு நிறுத்தியாச்சு. அவமானம் தாங்க முடியாமல் நாலு பேரையும் சென்னைக்கு படிக்க அனுப்பியாகி விட்டது.

வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தாலும் அலிகான் தவிர மற்ற மூன்று நண்பர்களும் சென்னையில் வாரம் ஒரு முறை சந்தித்து
அந்த வார நடப்புகளை பரிமாறி கொள்வார்கள்.
அலிகான் எங்கே போனான் எங்கு தங்கி இருக்கிறான் என்று தெரியவே இல்லை.

ஒரு மாதத்தில் இடி மாதிரி ஒரு ப்ரோடோடைப் கடுதாசு அவங்க அவங்க வீட்டிலிருந்து மூவருக்கும் வந்தது. “கருகுமணி கர்ப்பமா இருக்காளாம். கேட்டால் யாருன்னு சொல்ல மாட்டேங்கறாளாம். நல்ல வேளை நீங்க எல்லாம் தப்பிச்சுட்டீங்க. அதனால் ஒட்டு மொத்த குடும்பமும் வேறு ஊருக்கு போயிட்டாங்க. அலிகான் உங்களோடயும் இல்லை இங்கேயும் இல்ல அப்ப அவன்தான் காரணமா இருக்கனும்.அவன் சங்காத்தமே வேண்டாம்னு ஒதுங்கிடுங்க”

உடனே மூனு பேரும் ஒருமித்தமாக
“ இப்பதானே தெரியறது அலிகானோட உண்மை சொருபம். அதான் அன்னிக்கு அப்படி ஆட்டம் போட்டான். நாம வேண்டாம் வேண்டாம்னு அவ்வளவு சொல்லியும் நம்ம எல்லாரையும் இதுல இழுத்து விட்டு நம்ம குடும்ப கௌரவத்தையே நாசம் பண்ணிட்டான்டா.அவ மேல விழுந்த அடியையும் தான் வாங்கின்டான்.”

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

ஃப்லாஷ்பாக்கிலிருந்து வெளியே வந்தவுடன் , வினோத் மற்ற இருவரையும் கான்டாக்ட் செய்து அந்த விழாவுக்கு செல்வது என்று முடிவு எடுத்தார்கள்.

ஆனாலும் ரெண்டு விஷயம் அவர்களுக்கு புரியவில்லை. ரெண்டு வருஷமா ஏன் பேர் வைக்கல;வினோத்துக்கு மத்திரம் ஏன் பத்திரிகை அனுப்பனும்.

“குழந்தைக்கு அப்பா யாருங்கற” க்யூரியாசிடியே அவர்கள் அந்த விழாவுக்கு சென்ற முதல் காரணம்.
மனதுக்குள் “ திரும்பவும் செகண்ட் டோஸ் ஆளை வெச்சு அடிப்பாரோ”ங்கற பயமும் இருந்தது .

அரை மணி முன்னதாகவே சென்று விட்டார்கள்.கருகுமணிதான் அவர்களை வரவேற்றாள்.அழகு இன்னமும் கூடியிருந்தது. மூவரின் மனதிலும் “ சே இந்த அழகை கோட்டை விட்டு விட்டோமே”ன்னு தோணியது.

“நீங்க எல்லாம் எம்மேல ரொம்ப கோபமா இருப்பீங்க, வரமாட்டீங்கன்னு நினைச்சேன்.பழசை மறந்துட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி “

மூவரும் சேர்ந்தார்போல் “ அதெல்லாம் நாங்க அப்பவே மறந்துட்டோம்”னு அப்பட்டமான பொய் சொன்னார்கள்.

“ அலிகானோட எங்களுக்கு காண்டாக்டே இல்லை. அதான் அவன் வரல்லை.”

“ பரவாயில்லை.வர வேண்டியவங்க வந்துட்டீங்களே.அது போறும் எனக்கு .”

சரியாக ஆறு மணிக்கு கருகுமணியின் அப்பா ஹாலுக்குள் நுழைந்தார்.எதுவுமே நடக்காதது போல சரளமாக அன்னியோன்யமாக பேசினார்.

அலிகானை பற்றி ஒரு கேள்வி இல்லை.
குழந்தையும் இன்னும் கண்ணில் காட்டவில்லை.

“பாவம். எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் தந்தை பேர் சொல்ல முடியாத குழந்தையை வளர்ப்பதற்கு. ஒரு வேளை நாங்கள் எப்படியாவது தேடி அழைத்து வந்து விடுவோம்கிற நம்பிக்கையா இருக்கும்.நாம்பளும் கொஞ்சம் சீரியஸா முயற்சி செஞ்சிருக்கலாம்.கடன்காரன் இப்படி பண்ணிட்டானே” என்று மூவரும் மனதுக்குள் நினைத்து முடிக்கவில்லை,அலிகான் குழந்தையின் கையை பிடித்து கொண்டு ஹாலில் நுழைந்தான்.

“ வாங்க மாப்பிள்ளை . நல்ல நேரம் போயிட போறது. குழந்தை காதில பேர் சொல்லலுங்க. கருகுமணிதான் உங்க எல்லார் முன்னிலையிலும் பேர் வெக்கனும்னு ஆசைப்பட்டாள்.இப்போதான் தோதா நேரம் கிடைச்சது.”

“ அப்பா நான் இந்த மூனு சீட்டில இவங்க மூனு பேரு எழுதி இருக்கேன்.எங்கள் பழைய நட்புக்கு அடையாளமா , குழந்தை எந்த சீட்டு எடுக்கறானோ அந்த சீட்டுல இருக்கிற பேர் உடைய நண்பன் குழந்தை காதில பேர் ஓதட்டும்.எல்லோர் காதிலும் விழற மாதிரி”

“ கருகுமணி உன் இஷ்டம் போல செய். உங்க மூனு பேருக்கும் சம்மதம்தானே?.

மூவரும் அசடு வழிய சிரித்தார்கள்.

கருகுமணிதான் குழந்தை எடுத்த சீட்டை பிரித்து படித்தாள் “ வினோத்”

அலிகான் குழந்தையை வினோத் மடியில் உட்கார வைத்து வினோத் காதில் ரகசியமாக என்ன பேர்
ஓத வேண்டும் என்று சொன்னான் .

வினோத் முகம் வெளுத்து தயங்கினான்.மற்ற ரெண்டு பேரும்
“கங்கிராட்ஸ். நம்ம நட்புக்கு அடையாளமா பேர் வைடா.”

குழந்தை காதில் “ வினோத்கான்” என்று ஓதினான்.

மனித நேயத்திற்கு மதம் ஒரு தடையே இல்லை .

இருப்பு!- சிரீஷ் ஸ்ரீநிவாசன்

In a tragic incident a minor girl died and her elder sister sustained serious injuries after the scooter they were riding hit a truck from behind on National Highway 16 near Rathia

பிரேத உடல் பரிசோதனைக்குப் பிறகு சாராவின் உடல் ஸ்டெச்சரில் பிணவறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. அவள் உயிரில்லாத உடலைப் பார்க்கவே கொடூரமாக இருந்தது . அவள் கணவன் ராகேஷும் அவள் குடும்பத்தாரும் கண்ணீர் மல்க நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது போலீஸ், “ஸார்! எஃப்.ஐ.ஆர் போடணும். வாங்க.” என்றார். அதைப் போட்ட பிறகு மரணச் சான்றிதழ் மற்றும் முதல் தகவல் அறிக்கையின் நகலை ராகேஷிடம் கொடுத்தனர். அதை அவன் கடுந்துயரத்துடன் வாங்கி மேலோட்டமாகப் பார்த்தான்.

‘பெயர் – சாரா, வயது-24, மரணம்- சாலை விபத்து.’

ஆம்! இருவரும் நேற்றிரவு நன்றாகக் கொட்டும் மழையில் வரும்போது அவர்களின் இரு சக்கர வாகனம் தடுமாறி சறுக்கிச் சாலையில் விழுந்தது. அதிலிருந்து இவன் சாலை ஓரமாக வீசப்பட்டான். அவள் நடு ரோட்டில் வீசப்பட்டாள். அப்பொழுது வேகமாக ஒரு லாரி அவள் மேல் ஏறியது. “பலி கொடுத்து விட்டேனே!” என்று துயரத்துடன் அழுதான். அவர்களுக்குத் திருமணமாகி மூன்று மாதங்களே ஆகியிருந்தன.

அவன் துயரத்தில் ஆழ்ந்து நின்று கொண்டிருந்தபோது ஒருவர் அவன் முதுகில் தட்டி, “ஆழ்ந்த இரங்கல்கள் சார்! என் பெயர் வருண். இது என் கார்ட். இப்போ ரொம்ப வருத்தத்தில இருப்பீங்க. கொஞ்ச நாட்கள் போகட்டும். எனக்கு கால் பண்ணுங்க. உங்களுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியே வர ஒரு தீர்வு சொல்லுவேன்!.” என்றார். அவன் அவர் நீட்டிய கார்டை வாங்கிக் கொண்டான்.

நாட்கள் நகர்ந்தன. ஆனால் ராகேஷால் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வர முடியவில்லை. மனதை திசை திருப்புவதற்காக மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தான். அவன் அலுவலக நண்பர்கள் மேனகா, சௌரவ் அவனுக்கு ஆறுதல் கூறினர். அலுவலகத்தில் அவன் வேலையில் தன் முழு கவனத்தையும் செலுத்தினான். வீட்டிற்குச் சென்று சும்மா படுத்தாலும் அவள் ஞாபகம் மற்றும் அந்த துயர நிகழ்வே மனதில் வந்து போய்க் கொண்டிருந்தது. பாதி தூக்கத்தில் எழுந்து கத்தி மீண்டும் தூங்க இயலாமல் தவித்தான்.

நாட்கள் சென்றன. அவன் துக்கம் அப்படியே இருந்தது. அவன் அலுவலகத் தோழி மேனகா அவனிடம், “இன்னும் அதையே நினைச்சு எவ்வளவு நாள் இருக்கப் போற? கம்! ஆன்! வாழ்க்கை ‘மூவ்’ ஆயிட்டே இருக்கணும். சாரா போனது எனக்கும் வருத்தந்தான். அவ என்னோட உயிர்த் தோழி! இதோ இந்த இடம் அவளது தான். யாரும் இங்க உட்கார மாட்டேங்கிறாங்க. நீயும் அவளை நெனைச்சே செத்துராதே! நான் இன்னும் உன்ன காதலிக்கறேண்டா” என்றாள்.

அவனுக்குக் கோபம் வந்தது. கத்தினான்.

“மொதல்ல உன் இடத்தில போய் உட்காரு!. அவள் மட்டுந்தான் என் வாழ்க்கையில்! அவ்வளவு தான்! அதுவும் போயிருச்சு!” என்றான்.

அவளும் கண்ணீர் மல்க தன் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

அவன் சினத்தோடு கணினியில் ஆழ்ந்தாலும், ‘பாவம்! மேனகா! அவள் என்ன செய்வாள்?’ என்ற யோசனையும் ஓடாமலில்லை. அப்பொழுது அவனுக்கு திடீரென்று அன்று கார்ட் கொடுத்தவரை பற்றி நினைவு வந்தது. அந்த கார்டை எடுத்து அந்த நம்பருக்குப் ஃபோன் செய்தான்.

“ஹலோ! வருண்!” என்றான் ராகேஷ்.

“ஆமாம்! சொல்லுங்க!” என்றார் வருண்.

“சார்! நான் ராகேஷ்! போன மாதம் மருத்துவ மனையில் உங்க கார்ட் கொடுத்தீங்களே!”

“ஓ! சொல்லுங்க சார்! இப்போ எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லாதான் இருக்கேன், ஆனா என் பிரச்சினை….”என்றான் ராகேஷ்.

“தெரியும்!” என்றார் வருண். “நீங்க நாளைக்கு ஃப்ரீயா இருந்தா அடையாரில என் வீட்டுக்கு வாங்க. என் லொக்கேஷனை வாட்ஸப்பில ஷேர் பண்றேன்!”

“ஓகே சார்! சீயூ!” ராகேஷ் ஃபோன் காலை கட் செய்தான். வாட்ஸப்பில் லொகேஷன் வந்தது.

அடுத்த நாள் அவர் வீட்டுக்குச் சென்றான். வருண் அவனை வரவேற்று, “உள்ள வாங்க! ஐ ஆம் டாக்டர் வருண்!” என்றார்.

“ஹலோ சார்! ஐ ஆம் ராகேஷ்! நீங்கள் மனநல மருத்துவரா?”

“சேச்சே! இல்லை. நான் விஞ்ஞானி. ஸ்பிரிச்சுவல் சயின்ஸ் பிரிவில் புதிய ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். முக்கியமாக உங்களைப் போல திடீரென்று அதிர்ச்சிக்குள்ளானவர்களுக்கு எங்கள் சேவை இது” என்றார் வருண்.

“அது என்ன ஸ்பிரிச்சுவல் சயின்ஸ்? ஆவிகளுடன் பேசுவதா?” என்றான் ராகேஷ்.

“இல்லையில்லை. திஸ் இஸ் மோர் டெக்னிக்கல். ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் மூளை சுமார் எட்டு முதல் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்யும். அப்போ அவர்களின் நினைவுகளை எல்லாம் நம்மால் எடுத்து வைக்க முடியும். மன்னிக்க வேண்டும்! உங்கள் அனுமதியின்றி உங்கள் மனைவியின் நினைவுகளை அவ்வாறே பதிவு செய்து விட்டேன், பிரேத உடல் பரிசோதனையின் போது”

ராகேஷுக்கு சுத்தமாகப் புரியவில்லை.

“இதனால் என்ன பயன் சார்?” என்றான்.

“அப்படிக் கேளுங்கள்! நான் அந்த நினைவுகளை இதோ இந்தக் கருவியில் புகுத்தி விட்டேன்” என்று ‘டேப்லெட்’ போன்ற ஒரு கருவியைக் கொடுத்தார்.

“இதில் உங்கள் மனைவியின் குரல் மற்றும் நினைவுகளும் உள்ளன. இந்த டாப்லெட்டில் நீங்கள் அவளோடு பேசலாம்!”

“இது எப்படி சாத்தியம்? செத்தவங்கன்னா அவ்வளவு தானே? அவங்க கிட்டே போயி எப்படி….?”

“தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அறிவியல் சாதனை இருந்தால் இது சாத்தியமே! இது வந்தால் அனைவருக்கும் இது மிக உதவியாக இருக்கும். இறந்தவர்களை பிரிந்து வாட வேண்டாம். எங்களது ஆராய்ச்சி பரிசோதனை லெவலில் தான் இருக்கிறது. இதனை உபயோகப்படுத்திக் கூறுங்கள்!” என்றார் வருண்.

அவன் வாங்கிக் கொண்டு சென்றான்.

அது வாட்ஸாப் கீ போல இருந்தது. மெசேஜ் டைப் செய்யவும் முடியும். குரலை பதிவு செய்யவும் முடியும். அவன் அதை ‘ஆன்’ செய்து இயக்கத்தொடங்கினான்.

‘சாரா!’ என்று வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினான்.

“சொல்லு, ராகேஷ்! எப்படி இருக்கே?” என்று பதில் கொடுத்தது.

அவனுக்கு மகிழ்ச்சி ஆனது.

“செத்த பிறகு எப்படி சாரா?” என்று கண்ணீர் மல்க கேட்டான்.

“நான் சாகவில்லை. என் நினைவெல்லாம் இங்கேயே தானிருக்கு. உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்!”

நாட்கள் கடந்தன. சாராவுடன் தினமும் பேசிக் கொண்டிருந்தான், மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான்.

ஆரம்பத்தில் புதிதாக இருந்த இந்த ஆச்சரிய அனுபவம் நாளாவட்டத்தில் சாதாரணமாகப் போனது. அது ஒரு இயல்பான விஷயமாக ஆனது.

ஒரு நாள் அவனது அலுவலகத்தில் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் வந்தது. அதற்காக அங்கேயே இருந்து பணி புரிய நேர்ந்தது. அவனும் பிஸியாகி அலுவலில் மூழ்கிப் போனான். சாராவுடன் பேசுவதற்கு மறந்து போனான். அலுவலகப் பணியிலேயே கவனம் செலுத்தினான். மூன்று நாட்கள் கழித்து அலுவலகத்தில் இயல்பு நிலை திரும்பியது. வீட்டிற்குத் திரும்பினான். வந்ததுமே ‘டாபை’ ஆன் செய்தான்.

“ஹாய்! சாரா!” என்று மெஸேஜ் அனுப்பினான்.

“ஏன் மூன்று நாட்களாகப் பேசவில்லை?”என்று கேட்டாள்.

“ஆபிசில நான் பிஸி!” எனறான்.

“என்னோடு பேசு! என்னோட எப்பவுமே பேசணும்! ஐ கான்ட் லீவ் யூ! ஏன் போன? சொல்லு, சொல்லு!” என்று கோபமாக வாய்ஸ் மெஸேஜ் வந்தது.

“மூன்று நாட்கள் தானே சாரா?” என்றான் ராகேஷ்.

“இல்ல! எப்பவுமே என்னோட பேசணும்! இஸ் இட் க்ளியர்? ஐ வோண்ட் லீவ் யூ!”

“எனக்கும் வேலை இருக்கும். சும்மா எல்லா நேரத்தையும் உனக்காகவே ஒதுக்க முடியாது!” என்றான் ராகேஷ்.

“அப்போ நான் அவ்வளவு தானில்ல? சொல்லு! சொல்லு!” என்றாள்.

“சரி! போதும்! இன்னிக்கு டயர்டா இருக்கு! இனிமே என்ன தொந்திரவு செய்யாதே!” என்று அந்த டாபை ஓரம் போட்டான். ஆனால் அவள் ஓயவில்லை.

“பேசு!ராகேஷ் பேசு! ராகேஷ் பேசு!” என்று மாற்றி மாற்றி வாய்ஸ் மெசேஜ் வந்து கொண்டேயிருந்தது.

“செம டார்ச்சர்டா!” என்று சினத்தோடு தன் டாபை அணைத்துப் பரணில் தூக்கிப் போட்டான்.

மாதங்கள் கழிந்தன. ராகேஷுக்குப் பதவி உயர்வு வந்தது. அப்படியே மேனகாவுடனான நட்பு அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. வாழ்க்கை தன் போக்கில் போக வேண்டியது தான் என்று கருதி அவளுடன் பழக ஆரம்பித்தான்.

ஆறு மாதங்கள் சென்றன. அவன் தன் வீட்டை சுத்தப் படுத்தினான். அப்பொழுது பரணில் கிடந்த அந்த ‘டாப்’ அவன் கண்ணில் பட்டது. அதை தூசித் தட்டி எடுத்து, சார்ஜ் செய்து ‘ஆன்’ செய்தான்.

ஆன் செய்ததுமே அவன் எதுவும் செய்தி அனுப்பவதற்கு முன்பு சாராவின் குரல், “ராகேஷ் வந்துட்டியா? என் அருகே வா!” என்றது.

ராகேஷ் கூறினான்,”சாரா! உன்னிடம் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. “

“ஆமாம்! ” என்றது அவள் குரல். “உன்னோடு பேசாமல் இருக்க முடியவில்லை. வா! மறுபடியும் பேச ஆரம்பிக்கலாம். இனிமே நிறைய பேசலாம்!”

“சாரா! நான் ஒனக்கு ஒண்ணு சொல்லணும். இப்போ முன்ன மாதிரி இல்ல. வாழ்க்கை ரொம்ப மாறிடிச்சு. நீ என் கிட்ட இருந்தாலும் உடல் ரீதியாக செத்துப் போயிட்ட!”

“அதனால..?” என்றாள் சாரா.

“அதனால ஒண்ணுமில்ல. வாழ்க்கைப் பாதை மாறி விட்டது. நானும் மேனகாவும் ‘லவ்’ பண்றோம். கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.”

“இல்ல…..இல்ல… நான் தான் உன் மனைவி! நான் இங்கு தான் இருக்கேன். ஹவ் டேர் யூ..?” குரல் கோபமாக வந்தது.

“கூல்! சாரா! நீ டிவைசில மட்டுந்தான் இருக்கே. வாழ்க்கை அதோட பெரிசு.”

“நோ! ராகேஷ்! யூ ஆர் மைன்! ஐ ஷல் நாட் லீவ் யூ!”

ராகேஷ் சினங்கொண்டு,” இது அவ்வளவு தான்! இதைச் சொல்லத் தான் நான் ‘ஆன்’ செய்தேன். இப்பொழுது அணைக்கப் போறேன்!” என்று சொல்லி அணைத்து விட்டான்.

ஆனால் ‘டாப்’ தானே மீண்டும் ‘ஆன்’ ஆனது.

அவன் அணைக்க அணைக்க மூண்டும் மீண்டும் ‘ஆன்” ஆகிக் கொண்டேயிருந்தது.

அவன் கோபத்துடன் அதை வெளியே தூக்கியெறிந்தான்.

காலை எழுந்ததும் அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. “சௌரவ் பேசறேண்டா!”என்றான் அவன் நண்பன் பதற்றத்துடன்.

“சொல்லுடா! என்னாச்சு?”

“மேனகா கொடூரமாக தலையில் அடிபட்டு செத்துக் கிடக்கிறாள்டா!”

“என்னது” அன்று அதிர்ச்சியுடன் எழுந்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

திடீரென்று அவன் வீட்டுக் கீழ்ப் பகுதியில் சத்தம் வந்தது.

“ராகேஷ்! நான் சொல்லல? நீ எனக்கு மட்டுந்தான்!” என்று சாராவின் குரல்.

அவன் அச்சத்தில் உறைந்து போனான். மெதுவாக கீழே ஹாலுக்கு இறங்கிப் போனான். அங்கே அவன் வீட்டுக்கு வெளியே தூக்கிப் போட்ட ‘டாப்’ கிடந்தது. அவனுக்கு அச்சம் இன்னும் அதிகமானது.

தான் வெளியே தூக்கிப் போட்ட ‘டாப்’ எப்படி உள்ளே வந்தது? எப்படி தன்னால ‘ஆன்’ ஆகியது?

“நீ எனக்கு மட்டுந்தான்…”என்று தொடர்ந்து குரல் வந்து கொண்டேயிருந்தது ‘டாபிலிருந்து’.

அந்த டாபைப் பற்றித் தெரிந்தவர் வருண் மட்டுந்தான். அவர் அங்கு வந்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது ராகேஷுக்கு. உடனே அவருக்கு ஃபோன் செய்தான்.

“ஹலோ! வருண்!”என்றான்

எதிர்பக்கத்தில், “ஹலோ!” என்று ஒரு பெண் குரல் கேட்டது.

“வருண் இல்லியா?”

“நான் ஷாலினி! அவரோட அஸிஸ்டென்ட். நீங்க யாரு?”

“நான் ராகேஷ்!”

“ராகேஷ்! வருண் இறந்து போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது.”

“கடவுளே! எப்படி….”

“மர்மமான முறையில் தலையில் அடிபட்டு இறந்து விட்டார்…”

ராகேஷ் தீவிரமாக யோசித்தான்.’மேனகாவும் இதே போல தானே இறந்தாள்?’

“ராகேஷ்! அந்த டிவைஸ் உபயோகிக்கிறீங்களா?”என்றாள் ஷாலினி.

“ஆம்! உபயோகித்தேன். அது என்னை ‘பொஸஸ்’ பண்ணுவது போல எனக்கு ஒரு ஃபீலிங்…….”

“அதை உடனே உடைத்துப் போடுங்கள்! எங்களோட எக்ஸ்பெரிமெண்ட் தப்பாகி விட்டது.”

“என்ன சொல்றிங்க?” என்று அச்சத்தோடு கேட்டான்.

“நாங்க மூளையிலிருந்து தான் ‘ட்ரான்ஸ்மிட்’ பண்ணணும்னு நெனைச்சோம். ஆனால் அது ஆன்மாவைக் கைப்பற்றி விட்டது. அது ஒரு நெகடிவ் எனர்ஜியாக மாறியது. கிட்டத்தட்ட ஒர் பேய் என்று கூடச் சொல்லலாம். அது பிடித்தவரை விடாது. அதற்கு இடைஞ்சலாக இருப்பவரை சூறையாடி விடும்.”

“ஓ! மை காட்!” என்று அச்சத்துடன் காலை கட் செய்தான். பேசிக்கொண்டேயிருந்த அந்த ‘டாபை’ சுத்தியால் உடைத்தான். உடனே பேச்சு நின்று போய் நிசப்தம் நிலவியது.

சிறிது நேரந்தான்….. பிறகு வீடு முழுவதும் மறுபடியும் சாராவின் குரல் கேட்கத் தொடங்கியது,”ராகேஷ் உன்னை விட மாட்டேன்! நீ எனக்கு மட்டுந்தான்.. விட மாட்டேன்…விட மாட்டேன்….”என்ற குரலோடு இருள் கவிந்து அவனை சூழ்ந்து கொண்டது.
*

எதிர் வீட்டு ஜன்னல் – எஸ்.கௌரிசங்கர்

North-South Love Story: This Punjabi-Tamil Couple Converted Each Other

தன் வீட்டு பால்கனிக்கு வந்து பேப்பர் படிக்க அமர்ந்த பசுபதியை, திடீரென்று “டடக் டக்” என்ற பெரும் சப்தம் உலுக்கியது. அதிர்ந்து போன பசுபதி எழுந்து திரும்பிப் பார்த்த போது, எதிர் வீட்டு ஜன்னலில் இருந்த பழைய ஏ.சி. தன் சிறிது நேர தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு, புத்துயிர் பெற்று நடுங்கிக் கொண்டே ஓட ஆரம்பித்திருந்தது தெரிந்தது. பசுபதி கோபத்துடன் பேப்பரை மடித்துக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்து, நேராக சமையல் அறைக்குள் நுழைந்தார்.

“வர வர எல்லாம் மோசமாகிகிட்டு வருது” என்று பெரிய குரலில் கத்தினார்

வாணலியில் ஏதோ தாளித்துக் கொண்டிருந்த பார்வதி மெதுவாகத் திரும்பி, “எண்ணையிலே போட்ட கடுகைப் போல, எதுக்கு இப்போ வெடிக்கிறீங்க? என்ன ஆச்சு காலை வேளையிலே?” என்றாள்.

“காலை வேளையா இப்போ? மணி பதிணொண்ணு ஆச்சு?”

“அதுக்கு என்ன இப்போ? சமையல் இன்னும் அரை மணியிலே ஆயிடும். நீங்க போய் முதல்லே குளிங்க. ரிடயர் ஆனதிலேருந்து நீங்கதான் மோசமாகிகிட்டு வரீங்க. எல்லாம் லேட்”

“நான் அதைச் சொல்லலை”. அடுப்பை அணைத்து விட்டு பார்வதி திரும்பி அவரை “வேறு என்ன?” என்ற பாவனையில் பார்க்க, “பதினோரு மணி ஆயிடுச்சு. எதிர்வீட்டு ஏ.சி. இன்னும் ஓடிகிட்டு இருக்கு. இன்னுமா தூங்கிகிட்டு இருப்பாங்க மனுஷங்க?” என்றார் பசுபதி.

“ப்பூ! இவ்வளவுதானா? நான் பயந்தே போயிட்டேன்!” என்று சொல்லித் தன்னைத் தளர்த்திக் கொண்ட பார்வதி, “சின்னஞ் சிறுசுங்க. கல்யாணம் ஆகி அஞ்சு ஆறு மாசம்தான் ஆகுது. இன்னிக்கி ஞாயித்துக்கிழமை. அப்படித்தான் இருக்கும். அந்தப் பொண்ணு ஏதோ ஐ.டி. கம்பெனியிலே ராத்திரியிலே வேலை பார்க்குதாம். லேட்டா வந்திருக்கும். அதான் தூங்கிகிட்டு இருக்கும். இதையெல்லாம் பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க?” என்றாள்.

“இருந்தாலும் மத்தியானம் பதினோரு மணி வரைக்குமா தூங்குவாங்க?” என்றவரை அடக்கி, “போங்க! வேறே வேலை எதுவும் இல்லைன்னா இந்தப் பாத்திரங்களை எல்லாம் தேய்ச்சுக் கொடுங்க, வாங்க” என்றாள் பார்வதி.

“வேண்டாம்! நான் குளிக்கப் போறேன்” என்று சொல்லி விட்டு பசுபதி அங்கிருந்து நழுவினார்.

ஒரு மணி நேரம் கழித்து, அழைப்பு மணி அடித்ததைக் கேட்டு, பசுபதி போய் வாசற் கதவைத் திறந்தார். அங்கே எதிர் வீட்டுப் பெண் நின்றிருந்தாள். முழங்கால் வரையில் ஒரு இறுகிய நீல நிற ஜீன்ஸ் கால் சட்டையும் மேலே “இட்’ஸ் டைம் டு செலிபரேட்” என்று வெள்ளை எழுத்தில் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட கருப்பு நிற ‘டீ’ ஷர்ட்டும் அணிந்திருந்தாள். கால்களில் ப்ளாஸ்டிக் ஸ்லிப்பர். கலைந்து விரிந்து நெற்றியில் விழுந்த தலைமுடியும் கண்களில் முக்கால் தூக்கமுமாக நின்றாள். பசுபதியின் வாய் திறந்து பற்கள் தெரிய வலிந்து ஒரு புன்னகையைச் செய்ய, வலது கை மடித்துக் கட்டிய லுங்கியை முழங்காலுக்கு கீழே தானாகத் தளர்த்தி விட்டது.

“ஆண்ட்டி இல்லையா?” என்றாள் வந்தவள்.

“பார்வதி! உன்னை கூப்பிடறாங்க பாரு” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனார் பசுபதி.

“யாரு?” என்று கேட்டுக் கொண்டே வாசலுக்கு வந்த பார்வதி, நின்றவளைப் பார்த்து புன்னகைத்து “வாம்மா!” என்று உள்ளே அழைத்தாள். அவள் உள்ளே வராமலேயே “ஆண்ட்டி! ஒரு பாக்கெட் பால் இருக்குமா? டீ போட வேணும்” என்று கொஞ்சம் கெஞ்சலாகச் கேட்டாள்.

“இருக்கும்மா, தரேன். வேணும்னா டீயாவே போட்டுத் தரட்டுமா?”

“இல்லை ஆண்ட்டி! டீத்தூள், சுகர் எல்லாம் இருக்கு. பால் மட்டும்தான் வேணும். நேத்து அவனை இரண்டு பாக்கெட் பால் வாங்கி வைக்கச் சொன்னேன். மறந்திட்டு வந்து தூங்கிகிட்டு இருக்கான்”

“பரவாயில்லைம்மா! இரு தரேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே வந்து ஃப்ரிட்ஜ்லிருந்து ஒரு பால் பாக்கெட் எடுத்துக் கொண்டு போய் அவளிடம் கொடுத்துவிட்டு உள்ளே வந்தாள் பார்வதி. அவள் வரும் வழியில் எதிரே போய் மறித்து நின்று கொண்ட பசுபதி, “அந்தப் பொண்ணு நம்ம ஊர் தானா?” என்று கேட்டார்.

“ஆமாம்! தமிழ்லே பேசிச்சே! கவனிக்கலையா நீங்க?”

“நீ கவனிச்சியா? அந்தப் பொண்ணு கழுத்திலே தாலியே இல்லை”

“இல்லாட்டி என்ன? தாலியைக் கட்டித் தொங்க விட்டுக்கிறது எல்லாம் எங்களோடே முடிஞ்சு போச்சு. இப்போ அதெல்லாம் ஃபாஷன் இல்லை”

“நெத்தியிலே, வகிட்டிலே குங்குமப் பொட்டு கூட இல்லை”

“தூங்கி எழுந்து வந்த பொண்ணுக்கு அதெல்லாம் எப்படிங்க இருக்கும்? அழிஞ்சு போயிருக்கும்””

“அது சரி! கால்லே மெட்டியும் இல்லை, பார்த்தியா?”

“இருங்க! அப்போ ஒரு நிமிசத்திலே நீங்க அந்தப் பொண்ணை தலையிலேருந்து கால் வரைக்கும் கவனமா உத்து பார்த்திருக்கீங்க போல. எவ்வளவு நாளா இந்தப் பழக்கம்?”

“ஐய்யய்யோ! அதெல்லாம் இல்லை பாரு! எனக்கென்னவோ சந்தேகமாகவே இருக்கு”

“என்ன சந்தேகம்?”

“ஆ…..அது உறுதியா தெரிஞ்ச அப்புறம் சொல்றேன்.”

“அப்புறம் நீங்க என்ன சொல்றது? நானே தெரிஞ்சுக்கிறேன்” என்றவள், “பொம்பளைங்க விஷயம்னா அப்படி ஒரு ஆர்வம்! போங்க பேசாம!” என்று கொஞ்சம் கடுமையாகச் சொல்லவே, பசுபதி வாயைக் கையால் பொத்தி ஜாடை செய்து கொண்டே மெதுவாக விலகினார்.

இரண்டு நாள் கழித்து, கோவிலுக்கு போய் விட்டு வந்த பசுபதி, பார்வதி தம்பதியினர் லிஃப்ட்டில் மேலே வந்த போது, லிஃப்ட் கதவு திறந்தவுடன் எதிரே ஒரு இளம் வயது வாலிபன் நின்றிருந்தான். நல்ல உயரம். நல்ல சிவப்பு. களையான முகத்தில் குறுந்தாடி வைத்திருந்தான். இவர்களைப் பார்த்ததும் ஒரு அரை சிரிப்பு சிரித்து விட்டு, அவசரமாக லிஃப்டில் நுழைந்து கதவை மூடிக் கொண்டான். பார்வதி உடனே பசுபதி பக்கம் திரும்பி, “இவந்தான் எதிர் வீடு! அந்தப் பொண்ணோட புருஷன்” என்றாள்.

“அப்படியா? நிறைய தடவை லிஃப்ட்லே பார்த்திருக்கேன். பேசினதில்லை”.

பசுபதி வீட்டைத் திறக்க, பார்வதி உள்ளே நுழைந்து கொண்டே “அவன் யார் கூடவும் பேசறதில்லையாம். கீழ் வீட்டு அம்மா சொன்னாங்க. ஒருவேளை ஊமையோ?” என்றாள்.

“ஆ! எல்லாரும் நம்மைப் போல ஓட்டை வாயா இருப்பாங்களா?” என்று பசுபதி பதில் சொல்லி விட்டு, பார்வதியின் கோபப் பார்வைக்குப் பயந்து அவசரமாக உள்ளே ஓடினார்.

ஒரு வாரம் சென்றிருக்கும். மாலை வேளையில் வாசல் அழைப்பு மணி அடிக்கவே, பார்வதி போய்க் கதவைத் திறந்தாள். எதிர் வீட்டுப் பெண் இன்று சுடிதாரில் நின்றிருந்தாள். அவள் கையில் ஒரு பால் பாக்கெட் இருந்தது. அதை நீட்டி “தாங்கஸ் ஆண்ட்டி! உங்ககிட்டே பால் வாங்கினது மறந்தே போச்சு! இன்னிக்குத்தான் ஞாபகம் வந்துச்சு. அதான் திருப்பிக் கொடுக்கலாம்னு…….” என்றாள்.

பால் பாக்கெட்டை கையில் வாங்கிக் கொண்ட பார்வதி, “இருக்கட்டும்மா! ஏன் வெளியே நிக்கிறே? உள்ளே வாயேன்” என்று அழைத்தாள். அந்தப் பெண் சிறிது யோசித்து விட்டு தயங்கிக் கொண்டே உள்ளே வந்தாள். ஹாலில் இருந்த சோபாவில் பசுபதி அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டு மெதுவாக சோபாவின் ஓரமாக அமர்ந்தாள். பார்வதி அவள் எதிரில் அமர்ந்து கொண்டாள்.

“உன் பேர் என்னம்மா?”

“அபிராமி”

“சொந்த ஊர்?”

“கோயம்புத்தூர்”

“கோயம்புத்தூர்லே எங்கே?”

“ஆர். ஏஸ். புரம்”

“எங்க அண்ணன் கூட கோயமுத்தூர்லேதான் இருக்காரு. சரவணம்பட்டி. நீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க போல! கீழ் வீட்டு அம்மா சொன்னாங்க” என்றாள் பார்வதி.

அவள் அதற்கு பதில் சொல்லாமல் லேசாக ஒரு புன்முறுவல் மட்டும் செய்தாள்.

“உங்க வீட்டுக்காரரையும் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் பேச மாட்டேங்கிறாரு. ரொம்ப கூச்ச சுபாவம் போல”

“அவனுக்குத் தமிழ் தெரியாது ஆண்ட்டி. பஞ்சாப்காரன்”

“அவன்”, “பஞ்சாப்காரன்” என்ற வார்த்தைகள் பார்வதிக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தன. அதை மறைத்துக் கொண்டு, “காதல் கல்யாணமா?” என்றாள் சிரித்துக் கொண்டே.

வந்தவள் இந்தப் பேச்சை விரும்பாதவள் போல அதற்கு பதில் சொல்லாமல், “இது உங்க சொந்த ஃப்ளாட்டா ஆண்ட்டி?’ என்று கேட்டு பேச்சை மாற்றினாள்.

“ஆமாம்! வாங்கி ஏழு வருஷம் ஆச்சு. எங்க பையன் அமெரிக்காவிலே பாஸ்டன்லே இருக்கான். அவன் வாங்கினது” என்று முகத்தில் பெருமை பூரிக்கச் சொன்னாள் பார்வதி. தொடர்ந்து, “எனக்கு சொந்த ஊர் மதுரை. இவருக்கு தஞ்சாவூர். எங்களுக்கு கல்யாணம் ஆகி முப்பத்தெட்டு வருஷம் ஆச்சு. ஒரே பையன். இவரு எக்ஸைஸ் டிபார்ட்மெண்ட்லே இன்ஸ்பெக்டரா வேலை பார்த்தாரு. பல ஊர்கள்லே இருந்திருக்கோம். கோயமுத்தூர்லே கூட இரண்டு வருஷம் இருந்தோம். கடைசியா இங்கே சென்னையிலே வந்து அவரு ரிடயர் ஆனப்புறம் இந்த வீட்டை வாங்கிட்டு செட்டில் ஆயிட்டோம்” என்று விவரமாக சொல்லி முடித்தாள்.

‘இதையெல்லாம் இப்போது யார் கேட்டார்கள்?’ என்ற பாவனையில் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்த அந்தப் பெண், சட்டென்று, “சரி! ஆண்ட்டி! நான் வரேன். நேரமாயிடுச்சு. இன்னிக்கி நைட் டுயூட்டி. நான் கிளம்பணும்” என்று சொல்லிவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினாள். “இரும்மா! குங்குமம் தரேன்” என்று பார்வதி சொன்னதைக் கூடக் கேட்காமல் அவசரமாக வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றாள்.

இந்தப் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருந்த பசுபதி பார்வதியிடம், “கேட்டியா? “அவன்” “பஞ்சாப்காரன்”. புருஷனுக்கு மரியாதையைப் பார்த்தியா? எங்க அம்மா “சிதம்பரம்”ன்னு எங்க அப்பா பெயரைக் கூடச் சொல்ல மாட்டாங்க”

“ம்….உங்க மருமகள் நம்ம பையனை, ‘சுந்தர்ர்ர்…’ ன்னு பெயரைச் சொல்லித்தான் கூப்பிடறா. அதுக்கு என்ன சொல்றீங்க? இந்த காலத்திலே எல்லா பொண்ணுங்களும் அப்படித்தான்! புருஷனை வாடா, போடான்னுதான் கூப்பிடறாங்க.”

“அது சரிதான்! நீ பரவாயில்லை. ஏதோ இதுவரையிலும் ‘வாங்க, போங்க’ ன்னு என்னை கூப்பிட்டுகிட்டு இருக்கியே!”

“கல்யாணம் ஆன புதுசிலே நீங்க கூடத்தான் உங்களை “டார்லிங்” ன்னு கூப்பிடணும்னு சொல்லிகிட்டே இருந்தீங்க. இப்போ வேணா அப்படி கூப்பிடட்டுமா?”

பசுபதி ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்துவிட்டு, “கூப்பிடு! ஆனா ரகசியமா கூப்பிடு. யாராவது கேட்டா ஏதாவது நினைச்சிக்கப் போறாங்க” என்றார் வெட்கத்துடன்.

“என்ன, இரண்டு கிழமும் துள்ளி விளையாடுதுன்னு நினைச்சுப்பாங்க. அவ்வளவுதானே!” என்று சொல்லி விட்டு பார்வதி சிரித்துக் கொண்டே உள்ளே போனாள்.

அடுத்த சனிக்கிழமை இரவு இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, எதிர் வீட்டிலிருந்து உரத்த குரலில் இருவர் சண்டையிடும் வார்த்தைகள் காதில் விழுந்தன. “யூ பிட்ச்” என்று அவன் பெரிதாகக் கத்த, பதிலுக்கு “யூ ஸ்கௌண்ட்ரல்! யூ சீட்டட் மீ” என்று அவள் அவன் குரலுக்கு மேலே கத்த, அந்த வீட்டில் ஒரே ரகளையாக இருந்ததாகத் தோன்றியது. கெட்ட வார்த்தைகள் வரிசையாக சீறி விழுந்தன. கைகலப்பில் போய் முடிந்து விடுமோ என்று பசுபதி பயந்தார். கையில் பிய்த்து எடுத்த சப்பாத்தியை தட்டில் திரும்ப வைத்து விட்டு எழுந்து, “நான் வேணாப் போய் என்னன்னு பார்த்துட்டு வரட்டுமா?” என்றார். “சும்மா இருங்க! புருஷன் பொண்டாட்டிக்குள்ளே நடக்கிற சண்டையிலே நீங்க எப்படி குறுக்கே போவீங்க? பேசாம சாப்பிடுங்க” என்று பார்வதி அதட்டவே உட்கார்ந்து மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார்.

சண்டை இரவு வெகு நேரம் நீடித்தது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், பஞ்சாபி என்று எல்லா மொழிகளிலும் வசவு வார்த்தைகள் அங்கே கரை புரண்டு ஓடியது காதில் விழுந்தது. இரவு பதினோரு மணி அளவில், வாசற் கதவு திறந்து “படார்” என்று சாத்தப்படும் சப்தம் கேட்டது. பிறகு பூரண அமைதி நிலவத் தொடங்கியது.

மறுநாள் காலை பதினோரு மணிக்கு வழக்கம் போல பேப்பர் படிக்க பசுபதி பால்கனிக்கு வந்து எதிர் வீட்டைப் பார்த்த போது, ஜன்னலில் இருந்த ஏ.சி. கழட்டப்பட்டிருந்ததைப் பார்த்தார். அவசரமாக சமையல் அறைக்கு விரைந்த பசுபதி, பார்வதியிடம் “பாரு! எதிர் வீட்டு ஜன்னல்லே இருந்த ஏ.சி. யைக் கழட்டிட்டாங்க பார்த்தியா?” என்றார்.

“ஆமாம்! அந்தப் பொண்ணு அவனோட சண்டை போட்டுகிட்டு, ராத்திரியே பொட்டியைத் தூக்கிகிட்டு தன்னோட சிநேகிதி வீட்டுக்குப் போயிடுச்சாம். அந்த ஏ.சி.யை அந்தப் பொண்ணுதான் வாடகைக்கு வாங்கி வைச்சிருந்துதாம். அதான் காலையிலே முதல் வேலையா அதை கழட்டி எடுத்துகிட்டு போயிடுச்சாம்”

“இதெல்லாம் யார் சொன்னாங்க?’

“வேறே யாரு? கீழ் வீட்டு அம்மாதான்”

“என்னதான் புருஷனோட சண்டை போட்டாலும், கல்யாணம் ஆன பொண்ணு இப்படியா ராத்திரி பதினோரு மணிக்கு வீட்டை விட்டுப் போகும்?” என்றார் பசுபதி கவலையுடன்.

“அட! நீங்க ஒண்ணு! அவங்க கல்யாணம் கில்யாணம் ஒண்ணும் பண்ணிக்கலையாம். காதலிச்சாங்களாம். ஒரு ஆறு மாசம் சேர்ந்து வாழலாம், அப்புறம் புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தாங்களாம். இப்போ காதல் முறிஞ்சு போச்சு போல! அதான் எல்லாம் முடிஞ்சு போச்சு” என்று பதில் சொன்னாள் பார்வதி.

“நான் சந்தேகப்பட்டேன்னு சொன்னேனே அது இதுதான். அந்தப் பொண்ணுக்கு கல்யாணமே ஆயிருக்காதுன்னு சந்தேகப்பட்டேன். அது சரியாயிடுச்சு.”

“ஆமாங்க! நான் கூட இப்படி இருக்கும்னு நினைக்கவே இல்லீங்க! கல்யாணத்துக்கு முன்னாலே சேர்ந்து வாழறது எல்லாம் சினிமாவிலேதான் நடக்கும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். நிஜமாவே நடக்குது. ஏதோ ஒரு சினிமாவிலே, ‘எங்க வீட்டு பொண்ணுங்களோடு பழகிப் பாருங்க! பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்குங்க’ ன்னு சொல்வாங்க. அது மாதிரி பழகிப் பார்த்திருக்காங்க. ஆனால் பிடிக்காம போயிடிடுச்சு. என்ன இருந்தாலும் இந்த காலத்துப் பொண்ணுங்களுக்கு தைரியம் அதிகம். அந்தப் பொண்ணுக்கு ஏ.சி.மாதிரி புருஷனும் சும்மா ஆறு மாசத்துக்கு தற்காலிகமாக போயிடுச்சு”

“இதெல்லாம் தப்புன்னு அந்த காதல் ஜோடிக்குத் தெரிய வேணாம்?” என்றார் பசுபதி சற்று கோபத்துடன்.

“தப்பு, சரின்னு நாம எப்படிங்க சொல்ல முடியும்? காலம் மாறிகிட்டேதானே இருக்கு. நம்ம அப்பா அம்மா காலத்திலே தப்பா இருந்தது நமக்கு இப்போ சரின்னு தோணுதில்லை? அதே மாதிரிதான் நமக்கு தப்புங்கிறது நம்ம புள்ளைங்களுக்கு சரின்னு தோணும்.”

“என்ன இருந்தாலும் எனக்கு என்னவோ வருத்தமாத்தான் இருக்கு பார்வதி” என்றார் பசுபதி குரல் தழுதழுக்க.

“சரி விடுங்க! அவங்க எப்படியோ போகட்டும். நமக்கு எதுக்கு இந்த வீண் கவலை?” என்று சொல்லிக் கொண்டே, குக்கரை அடுப்பிலிருந்து எடுத்து இறக்கி வைத்தாள் பார்வதி.

இரண்டு நாள் கழித்து, வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமே குளித்துவிட்டு, பால்கனியில் துண்டைக் காயப் போடப் போன பசுபதி, எதிர்வீட்டு ஜன்னலைப் பார்த்து விட்டு, “பாரு! சீக்கிரம் இங்கே வந்து பாரு!” என்று கத்தினார்.

என்னவோ ஏதோ என்று அலறி அடித்துக் கொண்டு அங்கே வந்த பார்வதி, “என்னங்க! என்ன விஷயம்?” என்று கேட்டாள்

“கவனிச்சியா? எதிர் வீட்டு ஜன்னல்லே புதுசா ஏ.சி. போட்டிருக்காங்க.” என்றார் பசுபதி குழந்தை குதூகலத்துடன்.

பார்வதி கோபத்துடன், “நீங்க எதுக்கு எப்பப் பாரு அந்த எதிர் வீட்டு ஜன்னலையே கவனிச்சுகிட்டு இருக்கீங்க? வரவர உங்களுக்கு ஊர் வம்பு ஜாஸ்தியாயிடுச்சு! கிடந்து அலையிறீங்க. வாங்க உள்ளே!” என்று அதட்டிச் சொல்லி விட்டுத் திரும்பினாள்.

அதே சமயம் வாசல் அழைப்பு மணி அடித்தது.

“பாரு! சீக்கிரம் ஒரு பால் பாக்கட் எடுத்து தயாரா வை” என்று குறும்புச் சிரிப்புடன் சொன்னார் பசுபதி.

 

 

அங்கீகாரமும் சுய அறிவுறுத்தலும்- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

சிறுகதை - இருத்தல் - Kungumam Tamil Weekly Magazine

அவளுடைய உடை அலங்காரத்தைப் பற்றியோ அல்ல அவளைப் பற்றியோ கேள்விகள் கேட்டாலே கிரிஜாவிற்கு உடல் நடுங்கியது, படபடத்தது, வேர்வை ஊற்றியது. மறைந்து விடவேண்டும் எனத் தோன்றுகிறது என்றாள். இந்தப் பேச்சு, எண்ணம் வரும் நேரங்களில் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் கூடவே கண்ணீரும் தளும்புமாம்.

அவள் இப்படி இருக்க விருப்பப் படவில்லை. இவ்வளவு நாளாக எப்படியோ காலத்தைக் கடத்திவிட்டாள். கணவருடன் இயற்கைச் சுற்றுலா செல்லும் போதும், தான் நடத்தும் வகுப்பில், பள்ளிக்கூடத்தில் இது எதுவும் நேர்வதில்லை என்றதைக் கவனித்தாள். கூடிய சீக்கிரம் பெண்ணிற்குக் கல்யாணம். இந்தத் தறுவாயில், இவ்வாறு இருப்பதை மாற்ற எண்ணி, பள்ளிப் புத்தக நூலகத்தினில் விவரங்களைச் சேகரித்து, மனநல நிபுணரை அணுகுவதென முடிவு செய்தாள். வந்தாள். கிரிஜா போன்றவர்களுக்கு இது எளிதானது அல்ல. இந்த அடியெடுத்து வைப்பதே நலன் அடைவதின் முதல் படி.

எதனால், எதற்காக கிரிஜாவிற்கு இப்படியெல்லாம் நேருகிறது என்பதை மையமாக வைத்து அவளுடன் ஸெஷன்களை ஆரம்பித்தேன்.

ஒரு மாதத்திற்கு முன்பு தான் கிரிஜா ஓய்வு பெற்றாள். அவள் ஆசிரியராக இருப்பதை மிக ரசித்தாள். பள்ளியில் ஊக்கம் மிகுந்தவளாகவும், மிக நம்பிக்கையுடனும் செயல் பட்டாள். ஓய்வு பெற்ற பின்னும் இலவசமாகக் கற்றுத் தருவதென்று இருந்தாள். கணவன்-மனைவி மனதிற்குப் பிடித்தபடி எழுத, படிக்க, தோட்டக்கலை, உலகச் சுற்றுலா எனப் பல திட்டங்களைத் தீட்டினார்கள். இந்த கிரிஜா படபடக்கும் பயத்தை உள்ளே அடக்கி வைத்திருந்தவள் தான்!

கிரிஜா அவள் பெற்றோருக்கு இரண்டாவது குழந்தை. இவள் பிறந்தது அவளது பெற்றோர் இஷ்டப்படி அல்ல. பிரியமான பெரிய பையன் போல மற்றொரு ஆண் பிள்ளை வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். பெண் குழந்தை பிறந்ததைக் கொஞ்சமும் வரவேற்கவில்லை. என்றைக்கும் சலுகைகள், பாசமெல்லாம் மகனுக்கு மட்டுமே. தினந்தோறும் பள்ளியிலிருந்து கிரிஜா திரும்பி வரும் போது வீடு பூட்டி இருக்கும். ஐந்து வயதான கிரிஜா கதவு அருகில் உட்கார்ந்து அழுவாள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அம்மா வருவாள், கிரிஜா அழுவதைப் பார்த்து, அசடு எனத் திட்டிவிட்டு அடிப்பாளாம்.

இருந்தும் அம்மா அன்பை எப்படியாவது பெற வேலைகளில் கிரிஜா சிறுவயதிலிருந்தே உதவிகள் செய்தாள். இதெல்லாம் அம்மாவின் அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகள். அம்மாவை மகிழ வைக்க, பாத்திரம் தேய்த்து வைப்பாள். கிரிஜா போன்றவர்கள் அங்கீகாரத்திற்கு ஏங்குபவர்கள். நீட் ஃபார் அப்ரூவல் (need for approval) என்போமே, இதைத்தான். எதை எப்படிச் செய்தாலும் அம்மா குறை கூறி உதாசீனம் செய்வாள். தான் சரியாகச் செய்யவில்லை எனக் கிரிஜா நினைப்பாள். எதைச் செய்தாலும், சரிதானா என்ற சந்தேகம் சூழ, அதிருப்தி கொள்வாள்.

ஒன்பதாவது வயதில் கிரிஜாவின் தந்தை சாலை விபத்தில் மரணம் அடைந்தார். துயரத்தை அம்மாவால் தாள முடியவில்லை. அதனால் அடிக்கடி கிரிஜாவைத் தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். தாத்தா பாட்டியும் இவளைக் குறை கூறுவது அதிகரித்தது. அண்ணன் ஆண்பிள்ளை என்பதால் அம்மாவுடன் இருந்தான்.

இதனால் தான் அம்மா சொத்து முழுவதையும் அண்ணன் பெயரில் எழுதி விட்டதில் கிரிஜா அதிர்ச்சிப் படவில்லை. பட்டதாரி அண்ணன் நல்ல வேலையிலிருந்தான். அண்ணனும் அவன் மனைவியும் அவளைத் துச்சமாக நினைத்தார்கள். ஒரு வழியாக கிரிஜா படிப்பை முடித்து விட்டு டீச்சராக வேலையில் சேர்ந்தாள். வேலை செய்யும் இடத்தில் எல்லாம் இதற்கு நேர்மாறாக. அவளை மதித்தார்கள், சந்தோஷமாக இருந்தது!

இவை ஒவ்வொன்றையும் பல ஸெஷன்களில் பல வழிமுறைகளில் எடுத்து ஆய்வு செய்தோம். அப்போது கிரிஜா தன்மேல் இருந்த சந்தேகம் குறித்துத் தெளிவு அடைந்தாள். அவள் வளரும் பருவத்தில், வீட்டிற்குள் எதைச் செய்தாலும் குறை கூறியதில், தன்னிடம் ஏதோ குறைபாடு உள்ளதோ என்ற சந்தேகம் சூழ்ந்தது. உடனடியாக பயம் தன்னைக் கவ்வியது. அம்மா, தாத்தா, அண்ணன் தன்னை கூர்ந்து கவனிப்பதாகத் தோன்றியதால் இந்த சந்தர்ப்பங்களில் வியர்வை ஊற்றியது, கைகால் நடுக்கம், உலர்ந்த நாக்கு ஏற்பட்டது. தவறுகள் நேர்ந்தது. மனம் தளர்ந்தது என்ற சங்கிலித் தொடரை உணர்ந்தாள். குறைபாடு தன்னிடம் அல்ல என்பதை உணர்ந்தாள்.

தன்னுடைய பெண்ணிற்குக் கல்யாணத்திற்கு முன்னே இதைவிட மனதில் பலசாலி ஆகவேண்டும் எனக் கிரிஜா விரும்பினாள். இதனால் தான் அவள் என்னைத் தேடி வந்தாள்.

மேற்கொண்டு ஸெஷன்களில் கிரிஜா வகுப்பில் பெற்ற திருப்தி, தெளிவு இவை தன்னை ஊக்குவித்ததை முழுமையாகப் புரிந்து கொண்டாள். இத்தனை நாட்கள் இவையே உறுதுணையாக இருந்ததால்தான் மனநிலை தன் பிடியில் இருந்தது என்பதை உணர்ந்தாள். தன்னுடைய இந்த வளம் அவளை வியக்கச் செய்தது.

இருந்தும் நெருங்கிய நண்பர் யாரும் இல்லை. கண்ணீர் பொங்க, இப்போதெல்லாம் இந்தத் தனிமை அதிகமானது என்றாள் கிரிஜா. இந்த நிலைமையைச் சுதாரிக்க அவளுடன் கலந்து உரையாடினோம். இதிலிருந்து அவள் செய்யக் கூடிய பல பணிகளைப் பட்டியல் இட்டோம். இவையெல்லாம் உறவுகளை உருவாக்கச் சிறிய முயற்சிகளே. செய்யச் செய்ய, உறவு வளர வளர தன்னம்பிக்கை கூடவே வளர்ந்தது. வேலையை விருப்பத்துடன் செய்வதும் இந்த நிலையை மேம்படுத்தியது.

இத்தனை வாரங்களுக்குப் பிறகு வியப்புடன் தயக்கம் கலந்தவாறு கிரிஜா தன்னை பற்றிய மற்றொரு தகவலைப் பகிர முன்வந்தாள். பள்ளியில் ஒரு பயிற்சி அளித்து வருகையில் அப்போது வந்த ஆலோசகரின் கணிப்பில் கிரிஜா அயல் நோக்கு உடையவள் (extrovert), அதாவது மற்றவரோடு நன்றாகப் பழகும் தன்மை உடையவள், என வந்தது. தன் பயம், பதட்டத்திற்கு இந்தத் தன்மை பொருந்தாது என்று அந்தத் தகவலைக் கிரிஜா சட்டை செய்யவில்லை.

இப்போது ஸெஷன்களில் இதை மையமாக வைத்து ஆராய்ந்தோம். கிரிஜா வாழ்க்கையில் நடந்ததைப் பார்த்தாள். அதிலிருந்து அவள் தெளிவாகப் புரிந்து கொண்டாள், குறிப்பாகத் தாயார் கூறிய கருத்தை நிஜம் எனத் தான் எடுத்துக் கொண்டோம் என்று. அதாவது அந்த சூழலில் என்ன சொன்னால், செய்தால் அம்மா சுகமாக இருப்பாள் என்ற ஒன்றை மட்டுமே மனதில் வைத்து செயல் பட்டாள். அம்மாவின் ஒப்புதலுக்கு ஏங்கினாள். அதனால் தான் அம்மா நிந்தனை செய்த போது, தான் சரியாகச் செய்யவில்லை என்பது தான் நிஜம் என ஏற்றுக்கொண்டாள். சதா சுய அறிவுறுத்தல் (auto suggestion) செய்து வந்த நிலை.

அதே கிரிஜா, பள்ளியில் தைரியமாக, துணிச்சலாகச் செயல் பட்டாள். வகுப்பு, கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் போது கிரிஜா இயல்பாக இருக்க முடிந்தது.

எந்த எதிர்பார்ப்பும் பார்க்காமல் தன்னை மணந்த கணவர் மேல் கடல் அளவு அன்பைக் குவித்தாள் கிரிஜா. அவரோ சுபாவத்தில் மிக அமைதி காப்பவர். யாருடனும் அதிகம் பேச மாட்டார். வேலை இடத்திலும் தேவைக்கு மேல் ஒரு வார்த்தை கூட வராது. இயற்கை ரசிகன், படிப்பது, பாட்டுக் கேட்பது, என இருப்பவர். தன் வாழ்வில் தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்டதில் அவ்வளவு பூரித்துப் போன கிரிஜா அவர் சுபாவத்துடன் ஒன்றிணைந்து போக தானும் அதிகம் பேசாமல், நண்பர்கள் போக்குவரத்து இல்லாமல் இருந்தாள். நாட்கள் கடந்து போக, மனதில் ஒரு மூலையில் இது தான் நான் எனக் கிரிஜா நம்பினாள்.

அம்மா அன்பையும் ஒப்புதலையும் பெறுவதற்கும் கணவனின் சுபாவத்துடன் இணையவே தன் குணத்தை மாற்றிக் கொண்டது தன்னை அறியாமல் கிரிஜா செய்தது.

கிரிஜாவின் சுய அறிவுறுத்தல் நிலைத்து நின்றது. இந்த உருவாக்கம் அம்மாவின், கணவரின் ஒப்புதல் பெறவே. திரும்பத் திரும்ப தன் குணத்தைக் கிரிஜா மற்றவர்களுக்காக மாற்றியதை எடுத்துக் கொண்டோம். அவள் அதைக் குற்ற உணர்வு இல்லாமல் பரிசீலனை செய்ய வழிகளைப் பரிந்துரை செய்தேன். அதைச் செய்து வரும்போது அவளுக்கு பிடித்தவற்றைக் குறித்துக் கொள்ளச் சொன்னேன். நம்மில் பெரும்பாலானவர்கள், தன்னையே ஆராயும் தருணத்தில், நம்முடைய குறைகளை எளிதாகக் கூறுவோம். பிடித்ததை, நல் குணங்களை வரிசைப் படுத்துவதில் தட்டுத் தடுமாறுவது இயல்பு தான். அது தான் கிரிஜாவிற்கு நேர்ந்தது. தடுமாறிப் போனாள். இதை எதிர்பார்த்தேன். கிரிஜாவிடம், காலி நாற்காலியில் அவளுடைய இன்னொரு சுபாவம் அமர்ந்து இருப்பதாகக் கருதிப் பேசச் சொன்னேன்.

முதலில் என்னிடமே கூறினாள். பிறகு அந்தக் காலி நாற்காலியைக் காட்டிப் பேச ஆரம்பித்தாள். இவ்வாறு செய்துவர, வெகு விரைவில் கிரிஜா உணர்ந்தாள், தன் இயல்பான குணம், மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவது தான் என்று.

இவற்றுடன் கிரிஜா அம்மாவின் சொற்களால் தன் மீதான தாக்கத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். புகழ்ச்சி பெறத் தான் ஏங்குவது அறிய வந்தது. இதனால் கண்ணைக் கட்டி விட்டது போல இருந்ததை உணர்ந்தாள். அறியாமலேயே விட்டவற்றைக் கிரிஜா வரிசை செய்ததில், பள்ளியில் பேச்சுப் போட்டி, ஓட்டப் பந்தயம் எனப் பல திறமை, மற்ற ஆசிரியரின் அரவணைப்பும் ஞாபகம் வந்தது. இவையெல்லாம் அவளுடைய அடையாளங்களாகக் காணத் தொடங்கினாள். அம்மாவின் அன்பைப் பெறவே எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, அதற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. எவ்வளவு காலம் இதைச் செய்ய முடியும்? அதுதான் இப்போது விஸ்வரூபம் எடுத்து உடலில் பல விதமான மாறுதல் காட்டியதை உணர்ந்தாள். எந்த எண்ணத்தால் நேர்ந்தது, ஏன் எதற்காக என்ற முழுமையான அறிதல் வந்தது. அவை வேர்வை, உடல் முழுவதும் நடுக்கம், வாய் உலர்வது என வெளிவந்தது.

இந்த நிலையின் தெளிவு பிறந்ததும் சமாதானம் ஆனாள். விளைவாக, பல காரியங்களைப் புத்துணர்ச்சியுடன் செய்ய ஆரம்பித்தாள். கணவரைக் கூடச் சேர்த்து, காலையில் நடப்பது, கடவுள் பிரார்த்தனை, பக்கத்தில் உள்ள நிறுவனத்தில் இருவரும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோருக்குக் கல்வி கற்றுத் தருவதென்று பலதைத் துவங்கினார்கள்.

இதனாலும், தான் செய்வதை ரசித்துச் செய்வதாலும் நடுக்கம், பயத்திற்கு இடமே இல்லாமல் போயிற்று. கிரிஜா ஸெஷன்களில் நன்றாகப் புரிந்து கடைப்பிடித்து வந்தவை உதவியது. குறைகள், நிகழ்ந்த தோல்விகளை ஞாபகப் படுத்திச் சரிசெய்வது இதுவே வாழ்வின் இன்னொரு தந்திரம்.

கிரிஜா புரிதலை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவளுடைய மகளின் கல்யாணம் ஆனது. தன்னைப் பற்றிய பல தகவல்களைப் புதிதாகப் புரியவும் செய்தது. அதாவது புது மனிதர்களைச் சந்திப்பில் அவள் பெற்ற சுகம். தானாகவே செய்வதைப் பார்த்து தன்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உருவாகியது. அதே போல் கணவனையும் சேர்த்துச் செய்வதில் மேலும் ஆனந்தம் பெற்றாள். எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்ய முடிந்தது. அவளுடைய குரல், முகபாவம், உடல் மொழி எல்லாம் இதைத் தெரிவித்தது.

கிரிஜா தன் மனநலனை சீர்திருத்த எடுத்துக்கொண்ட நிர்ணயம், அவளுடைய முழு பங்களிப்பு, ஒத்துழைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி வைத்தது.
*******************************

 

 அப்புசாமியும் பீட்ஸாவும் – ரேவதி ராமச்சந்திரன்

அமரர் பாக்கியம் ராமசாமி அவர்கள் மன்னிக்க !

அப்புசாமி, சீதாப்பாட்டிக்கு சொல்லிடாதீங்க..!' | அப்புசாமி, சீதாப்பாட்டிக்கு சொல்லிடாதீங்க..!' - hindutamil.in

பீட்ஸா எப்போது இந்தியாவில் இறக்குமதி ஆச்சுன்னு தெரியாது. ஆனால் குழைந்தைகள் டாக்டரைப் பார்த்து விட்டு வரும்போது என் பெண் (அவளுக்கு அப் டு டேட் ஆக எல்லாம் தெரியும்) ‘அம்மா பீட்ஸா வாங்கிக் குடும்மா’ என்றாள்.

எனக்கு அப்போது ஆட்டோ எல்லாம் ஏறத் தெரியாது. நடக்கும் களைப்பு. வெயில் வேறு. அவள் சொன்ன பீட்ஸா பேரைக் கேட்டதே இல்லை. இத்தனை எரிச்சலில் ‘பிட்சாவும் கிடையாது, பிசாசும் கிடையாது நட வேகமாக’ என்று பையனையும் பெண்ணையும் இழுத்தேன்.

ஆகா பிடிவாதத்தில் அப்படியே பாட்டியை உரித்து வைத்தவளாயிற்றே, விடுவாளா! திரும்பவும் பிசாசைப் பிடித்தாள். வேறு வழி இன்றி, இதற்குத் தனியாக உணவகம் இருப்பது தெரியாமல் (இன்று நான் யுட்யூப் பார்த்து பிரட் பீட்ஸா பண்ணுகிறேன் அது வேறு கதை) எப்போதும் போல ஒரு சிறிய ஹோட்டலுக்குப் போய் பீட்ஸா ஆர்டர் பண்ணினேன். ஊத்தப்பம் போல ஒன்று வந்தது. அவனுக்கும் அது புதிது போல. சாப்பிட்ட எங்கள் மூவருக்கும் அது பிடிக்காமல் போனது. என்  பையன் வெளியில் வந்து பெண்ணிடம் ‘இனி நம்ம டிக்க்ஷனரியில் பீ,ட்,ஸா என்ற வார்த்தைகளே கிடையாது’ என்றான்.

இப்படி எங்கள் வாழ்க்கையில் விளையாடிய பீட்ஸா அப்புசாமிக்கும் கனவில்  வந்தது. முக்கோண முக்கோணமாக அப்படியே இழுக்க இழுக்க இன்பம் தரும் பீட்ஸாவை பண்ணித்தரும்படியோ, வாங்கித்தரும்படியோ சீதாக்கீழவியைக் கேட்டதற்கு ‘போறும் ஹெல்த்தியா சாலட் பண்ணித்தருகிறேன் மதில் சுவரில் பீமா, ரசகுண்டுவுடன் உட்கார்ந்து கொண்டு ஓர் இரண்டு மணி நேரம் போல சாப்பிடுங்கள்’ என்று சொல்லி விட்டாள்.

ஹெல்த்தியா, அளவாக சாப்பிட்டுக் கொண்டு ஆரோக்கியமாக இருக்கும் சீதாக் கீழவியைப் பார்த்தும் அப்புசாமிக்கு பீட்ஸாவின் மேலுள்ள மோகம் சிறிதும் குறையவில்லை. ராத்திரி தூக்கத்தில் குடமிளகாய், வெங்காயம், தக்காளி, சோளம் கண்களில் நடனமாடின. இனியும் பொறுக்க முடியாது, பொங்கி எழ வேண்டும், காலையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று பீம சபதம் இட்ட பிறகுதான் அவரால் சிறிது தூங்க முடிந்தது.

மறுநாள் ரசகுண்டுவைக் கடைக்கு அனுப்பி பீட்ஸா விலையைக் கேட்டு வரச் சொன்னார். 400 என்று எழுதி வாங்கி வந்த துண்டு காகிதத்தை திருப்பித்திருப்பிப் பார்த்து ஒரு சைபர் தவறாக கூடுதலாக எழுதி விட்டானோ என்று நப்பாசைப் பட்டார். 400 ரூபாய்க்கு எங்கே போவது! வெத்திலை பாக்கு வாங்க 4 ரூபாய் இருக்கிறது. இதை எப்படி நூறு மடங்கு ஆக்குவது! வீட்டைச் சுற்றி வந்ததில் பின்னாடி ரூமில் இருந்த பழைய பேப்பர், பால் கவர் கண்ணைக் கவர்ந்தது. இதை இப்போதைக்கு சீதேக் கிழவி பார்க்க மாட்டாள் என்ற தைரியமான முடிவுடன் எடைக்குப் போட்டதில் 150 ரூபாய் தேறியது.

மிச்சம் 250 க்கு மறுபடியும் யோசிக்க ஆரம்பித்தார். நெற்றியில் கையால் தேய்த்தபோது மோதிரம் உறுத்தியது. பாவம் மாமனார் ஆசையாக டைமன்ட் பதிச்ச மோதிரம் போட்டார். வாழ்க அவர் குலம் (சீதையைத் தவிர்த்து).  இது இவர் விரலில் இருந்ததை விட அடகுக் கடைக்காரனிடம் தான் அதிக நாள் இருக்கிறது. கல்யாண மோதிரம் ஆகவே சீதேக் கிழவி மீட்டு எடுத்து விடுவாள். பீமாவிடம் கொடுத்து அடகுக் கடைக்குப் போகச் சொன்னார். எப்படியாவது 250 ரூபாய் வாங்கி வரச் சொன்னார். அடகுக் கடைக்காரன் அழுது கொண்டே 200 ரூபாய் தந்தான். அவனுக்குத் தெரியும் இது அவனிடம் தங்காது என்று. ஒரு நப்பாசைதான்.

இன்னும் 50 ரூபாய்க்கு என்ன செய்வது என்று பரோட்டா கடைக்காரன் மாதிரி கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ரசகுண்டுவை விட்டு கடைக்காரனிடமே தள்ளுபடி கேட்கலாமா, அல்லது ரசகுண்டுவை கோயில் வாசலில் உட்காரச் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ரசகுண்டு மூச்சிறைக்க ஓடி வந்து ‘தாத்தோவ், ஒரு நல்ல செய்தி’ என்று மூச்சு வாங்கினான். ‘சொல்லுடா செல்லம், 50 ரூபாய் கிடைத்ததா’ என்று பொக்கைவாயைப் பிளந்தார். ‘இல்லை தாத்தா’ என்றவுடன் காற்றுப் போன டயர் மாதிரி சோர்ந்து போனார். ‘பின் என்னடா நல்ல செய்தி!’ என்று அலட்சியமாக எங்கோ பார்த்துக் கொண்டே வினவினார். அவனும் பெரு மூச்சு விட்டுக் கொண்டே ’தாத்தோவ் இன்று பீட்ஸா பிறந்த தினமாம். ஆதலால் ஒரு பீட்ஸா வாங்கினால் ஒன்று இலவசம் அல்லது ஒரு பீட்ஸாவிற்கு ஐம்பது ரூபாய் தள்ளுபடி’ என்று அறிவித்திருக்கிறார்கள் என்று வயற்றில் பாலை வார்த்தான். அவனைத் தூக்கி ஒரு தட்டாமாலை சுற்றினார் அப்புசாமி. ‘இன்று நீதான் அப்பா சாமி, சாமியப்பா’ என்று கொஞ்சி மகிழ்ந்தார்.

மூன்று பேரும் ‘வட்ட வட்ட பீட்ஸா, வண்ண வண்ண பீட்ஸா, தின்னத் தின்ன ஆசை, தெவிட்டாத தோசை, எடுத்து எடுத்து சாப்பிடலாம், எட்டு முக்கோண தோசை, இழுத்து இழுத்து சாப்பிடலாம் எல்லோருக்கும் பிடித்த தோசை’ என்று குதித்து குதித்து பாடிக்கொண்டே பீட்ஸா சென்டர் சென்றனர். ‘ம் பீட்ஸா நல்ல மணம்’ என்று சொல்லிக் கொண்டே நீள் சோபாவில் உட்கார்ந்தனர். வெயிட்டர் பீட்ஸாவை விட நீளமான மெனு கார்டை தூக்கி வந்து இவர்கள் முன் அலட்சியமாக வைத்தான். இங்கு மாவாட்டற வேலை கிடையாது. மைதா மாவைத்தான் ரப்பர் மாதிரி இழுக்கணும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். படிக்கணும் என்ற காரணத்தினால் தான் பள்ளிக்கூடமே போகாது இருந்த இவர்கள் இந்த புத்தகத்தை (மெனு கார்டைத்தான்) புரட்டக் கூட இயலாமல், ஆனால் அதனைக் காட்டிக் கொள்ளாமல், ‘இன்றைய ஸ்பெஷல் என்ன’ என்று சப்தமாக கேட்டு தங்களது பொருளாதாரத் தன்மையை நிலை நாட்டினார்கள். வெயிட்டர் சொன்ன மார்கரீட்டாவும், டீலக்ஸூம் புரியாமல் அடை தோசை மாதிரி ஆர்டர் கொடுத்தார்கள். டீச்சர் சொன்னது ஒரு துளி மண்டையில் புகுந்த விதத்தில் வெயிட்டர் வேகமாக புக்கைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டான். இன்னும் சிறிது நேரம் அங்கே நின்று இருந்தால் வேலையை விட்டே ஓடியிருப்பான்.

மூன்று பேரும் பாட்டுப் பாடிக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்த வேளையில் வெயிட்டர் பயந்து கொண்டே இன்னுமொரு ஆபரும் கொடுத்தார் விருப்பப்பட்டால் உங்கள் பீட்ஸாவை நீங்களே டாப் அப் பண்ணிக்கொள்ளலாம் என்று. அவ்ளோதான் வெண்கலக் கடையில் யானைகள் புகுந்தன. சீசைப் போட்டு அடித்தளமே தெரியாமல் செய்து விட்டனர். வெங்காயம் தக்காளி கூடை காலி. பன்னீரையும், கார்னையும் தாராளமயமாக்கினர். ஆயிற்று இதோ வெயிட்டர் ஹனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த மாதிரி பீட்ஸாவை கோக்குடன் எடுத்து வந்தான். கைகளால் தொடையைத் தடவிக்கொண்டே முதலில் ஆசையுடன் பார்த்தனர், முகர்ந்தனர், அனுபவித்தனர். ஐம் புலன்களும் வேலை செய்தன. ‘நம்ப முடியவில்லை இல்லை, இல்லை இல்லை இருக்கு’ என்று ஆர்ப்பரித்தனர்.

மெதுவே பீட்ஸாவைத் தொட்டனர். கண்டவர் விண்டிலர் என்ற மாதிரி அதை விள்ளத் தெரியாமல் விஷ்ணுவின் அடி எது முடி எது என்று குழம்பினர். ஒரு வழியாகக் கையில் எடுத்து வாயில் வைத்தால் ஒரு நூல் கைக்கும் வாய்க்கும் பந்தல் போட்டது. பன்னீரும், கார்ன்னும் அவர்களைக் கிறங்கடித்தன. ‘ஒ இதுவல்லவோ சொர்கம்’ என்று சுலபமாக மேல் உலகத்தை அடைந்தனர். ‘பிறவிப் பெருங்குடல் நீந்துவர் நீந்தார் பீட்ஸாவை சாப்பிடாதவர்’ என்று புதிய குறளை பழைய குரலில் பாடினர். இன்று சீதேக் கிழவியின் தீய்ந்த உலக வரைபடம் மாதிரியான மார்க்கண்டேயனான தோசையிலிருந்து விடுதலை விடுதலை என்று சுதந்திரக் காற்றை அனுபவித்துக் கொண்டே வெளியில் வந்தனர். ஆனால் அவர்கள் அறியாத ஒன்று சீதேக் குமரி இன்று சர்ப்ரைசாக வீட்டில் பீட்ஸா ஆர்டர் கொடுத்திருக்கிறாள் என்று!     

இரவுத் தோழமை – மலையாளத்தில் கே.சரஸ்வதி அம்மா – தமிழில் தி இரா மீனா

மூலம்       :  கே.சரஸ்வதி அம்மா [ 1919—1975 ]

ஆங்கிலம்    :  ஜே.தேவிகா

தமிழில்      :  தி.இரா.மீனா

 

                              இரவுத் தோழமை

 

 

தன் மகளின் வரதட்சணைக்கான பதினைந்து ரூபாயை பிச்சை கேட்டுக் கொண்டு, அந்தப் பெண்மணி எங்களிடமும் வந்தாள். முகப்பு பகுதியில் உட்கார்ந்து கொண்டு நாங்கள் கதையளந்து கொண்டும் ,சிரித்துக் கொண்டுமிருந்தோம். வெற்றிலை, பாக்கு நிரம்பிய தட்டை எங்கள் முன்னால் வைத்து கை கூப்பியபடி சொன்னாள்,“ இது இந்த ஏழைப் பெண்ணின் கன்னித் தன்மை கழிவதற்காக. தயவு செய்து உதவி செய்யுங்கள். அடிக்கடி இங்கு வந்து கொண்டிருந்த ஹனுமான் பண்டாரத்தின் சகோதரி நான்.”

“உன்னைப் பார்த்தவுடன் ஹனுமானின் ஞாபகம் வருகிறது. என்ன ஒற்றுமை!” எங்கள் கூட்டத்திலிருந்த ஒரு குறும்புக்காரியான பெண்மணி, சொன்னாள்.

தன் அழகற்ற தன்மை கேலியாக்கப்படுவதை அந்த ஏழைப் பெண்மணி அறியவில்லை. அதற்கு பதிலாக ஆதரவற்றவர்களிடம் நாங்கள் காட்டும் கருணைக்காக எங்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கினாள்.

நேரடித் தேர்வில் பங்கேற்றிருக்கும் ஒரு மாணவியைப் போல அவளிடம் நாங்கள் பேச, அவள் எங்களுக்கு விரிவான பதில்களைத் தந்தாள்.

அந்தப் பெண்ணிற்கு பதினேழு வயது ; மாப்பிள்ளைக்கு நாற்பத்தி ஐந்து வயது. இது அவனுடைய மூன்றாவது திருமணம். மற்ற இரண்டு பெண்களும் அவனை விட்டுப் போய்விட்டார்கள். அப்படியான சில பெண்களால் அமைதியாகவும் ,சாதுவாகவும் வாழ முடியாது.

எப்படியானாலும், இது நல்ல இடம். அவன் ஒரு தொழிற்சாலையில்–பேட்டரியில்  வேலை பார்க்கிறான்— தினக் கூலி வாங்கும் சாதாரணத் தொழிலாளியில்லை. வாரச் சம்பளம் வாங்கும் அதிகாரி.

மிகவும் குறும்புகாரியான இன்னொரு பெண்மணி—“பேட்டரியில்  வேலை பார்க்கிறான் !அவன் ஒரு கதாநாயகனாக இருக்க வேண்டும்! பெண் மிகவும் அதிர்ஷ்டமானவள் ! “ என்று சொன்னாள்.

“அதிர்ஷ்டமா?ஆமாம் !அவள் அதிர்ஷ்டக்காரி ! திறமையால் இல்லை, அவளுடைய நல்ல மனதால். நீங்கள் பெரிய தவம் செய்து இருந்தால்தான் உங்களுக்கு மிக நல்லவர் கிடைப்பார் இல்லையா ?

அதனால்தானே எல்லோருக்கும் பொறாமை. எங்கள் உறவினர்கள் யாரும் எங்களுக்கு உதவி  செய்யவில்லை. அவரைக் கலைத்து விடக் கூட முயற்சி செய்கிறார்கள்! பிரசவத்தின் போது நான் செத்துத்தான் பிழைத்தேன் ! நான் இறந்த பிறகு இறுதிக் கடன்களைச் செய்ய இவள் ஒருத்திதான் இருக்கிறாள் ! இவளை யார் கையிலாவது பிடித்துக் கொடுத்தால்தான் நான் நிம்மதியாகச் சாக முடியும்.! ”

இதைச் சொல்லிவிட்டு  அந்தப் பெண்மணி கண்ணைத் துடைத்துக் கொண்டு, மூக்கை உறிஞ்சினாள். மற்றொரு உரையாடலை ஆரம்பிக்கப் போகிறாள் என்பதை நாங்கள் ஊகித்தோம். எங்கள் எல்லோரையும் சிறிதுஅமைதிப்படுத்தி விட்டு, பின்பு அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் அவள் திட்டம். “ பணம் கேட்டு  பிச்சை எடுக்கவேண்டியது என் விதிதானே? ஹனுமான் பண்டாரம் உயிரோடிருந்தால், தன்மருமகளின் திருமணத்தை ஆடம்பரமாகவும், ஆரவாரமாகவும் நடத்தியிருக்க மாட்டாரா ? இந்தப் பெண் ,அவருக்கு மிகவும் பிடித்தமானவள். அவள் கால் தரையில் படக்கூட அவர் விட்டதில்லை.அவள் குழந்தையாக இருக்கும் போது, ஹனுமான் முகத்தை அணிவித்தால் இவள் அவரைப் போலவே ஆடுவாள் ,பாடுவாள் ! அதனால்தான் அவருக்கு  அவளை மிகவும் பிடிக்கும் –- உண்மையில் அவள் அவருடைய வடிவம்தான் .”

“அவள் உண்மையாக அப்படியிருந்தால், அந்த நாற்பத்தி ஐந்து வயது மனிதன் பெரிய மனதுடையவன்தான். அவள் ஹனுமானைப் போல இருக்க வேண்டும்”, அந்தக் குறும்புக்காரப் பெண் குறுக்கிட்டாள்

ஒரு பெண்ணின் திருமணத்திற்கான செலவு பதினைந்து ரூபாய் என்பது மிகக் குறைந்த தொகைதானே ?இந்தச் சமுதாயத்தில் மக்கள் பெருக்கமும், வறுமையும் அதிகரிக்க, நாம் பங்களிக்கவில்லையெனில் அது பாவமல்லவா? நீங்கள் கன்னியாக இறக்க நேர்ந்தால், உங்கள் ஆத்மா நரகத்தில் அலையும். ஏதாவது பணம் கொடுத்தாக வேண்டும்.

இப்படிச் சொல்லி, நான் ஏழைப் பெண்ணின் கன்னி கழிவதற்காக எட்டணாவை வசூலித்தேன்.“ நேரம் கிடைக்கும் போது வந்து எனக்கு செய்தி செல்லுங்கள்.” முன்பணமாக நான் எட்டணா கொடுத்து விட்டதால் செய்தி சூடு ஆறி விடாமல் எனக்குக் கிடைக்க வேண்டுமல்லவா?

அதற்குப் பிறகு என் சிநேகிதியின் வீட்டில் அம்மா,மகள் இருவரையும் பார்த்தேன். அவர்கள் அந்த வீட்டில் வேலை செய்பவர்கள். மணப்பெண் அவ்வளவு அழகியில்லையெனினும், ஒரு விதக் கவர்ச்சியிருந்தது.

நாகூர் மண்வாசனை | The Aroma of Nagore soil | Page 53

பதினேழு வயது இளம் பெண். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு ஏன் என்னைப் பார்க்க வரவில்லை என்று கேட்டதற்கு , அவன் பேட்டரியில் ’நெய்த்’ பார்த்ததால் வரமுடியவில்லை என்று பெண்ணின் அம்மா பதில் சொன்னாள்.

“ நெய்த்?,அவர் நெசவு வேலை செய்பவரா ?அவர் பாக்டரியில் வேலை பார்ப்பதாகச் சொன்னீர்களே?” என்று என் சிநேகிதி கேட்டாள்.

நெய்த் என்றால் மலையாளத்தில் நெசவு என்பதால் அவள் அப்படி அர்த்தம் செய்து கொண்டு கேட்டாள்.

“அவர் இன்னமும் அங்குதானிருக்கிறார். கடந்த வாரம் நைட்டியூட்டி பார்த்தார்.அவர் பகலில் வீட்டில் இருந்ததால் நான் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது சட்டம் — அந்தக் காலனின் சட்டம்!” புதுப்பெண் இப்படி விளக்கினாள்.

தேன்நிலவுக் காலத்தில் புதுப்பெண் தன் கணவனுக்குக்  — காலன்  என்று பெயரிடுவது !  எனக்கு வேடிக்கையாக இருந்தது.

ஆனால் அவள் அடுத்துச் சொன்ன விஷயங்கள் என் புன்னகையை  மறைத்து விட்டது. சொல்வதற்கு வேதனையான விஷயங்கள் அவளிடம்இருந்தன. பேச்சில் அடக்கமோ, வார்த்தைகளில் மென்மையோ இல்லை.

தேன்நிலவும்,அதன் சிருங்காரமும் கவிஞனின் வெற்றுக் கற்பனைதான் என்று நினைக்குமளவிற்கு அவள் பேச்சு இருந்தது.தன் கணவனைப் பற்றிப் பேசும் போது அவளிடம் ஆசை,வெறுப்பு என்று எந்த உணர்வுமில்லை. தன்னை இந்த உறவிற்குள் தள்ளிய அந்தத்’ திருட்டு முதியவளிடம்’ தான் அவளுக்கு ஆறாத கோபம். எல்லா இடங்களிலும் அலைந்து, திரிந்து பிச்சையெடுத்த அந்தப் பதினைந்து ரூபாயை மட்டும் அவள் அவனுக்குத் தரவில்லை. அரிசி குத்தி அவள் சேர்த்து வைத்திருந்த பதினைந்து ரூபாயையும் அவன் எடுத்துக் கொண்டு விட்டான்.“

அவள் எனக்காகத் தன்னை அலங்காரம் செய்து கொள்வாள்.அவளுக்கு நல்லதாக நான் ஏதாவது வாங்கித் தருவேன், ” என்று சொல்லியிருந்தான்.

கல்யாணத்திற்குப் பிறகு அவள் அந்தப் பேச்சை எடுக்க முயற்சித்தாள்.   ஆனால் அவன் “ஓ, நாட்டியமாடுபவள் போல அலங்கரித்துக் கொண்டு நேரத்தைப் போக்க ஆசைப்படுகிறாயா ?” என்று  தலைமுடியைப் பிடித்திழுத்து அவளை அடக்கி விட்டான். அதற்குப் பிறகு அவள் எதுவுமே கேட்கவில்லை. வாரத்திற்கு ஒரு முறை அவளுக்கு ஓரளவு பணம் கொடுப்பான்,அவள் அதையும்  சில சமயங்களில் அவனது மற்ற

மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு கொடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை.

ஆனால் பெண்ணின் விருப்பு ,வெறுப்புகள் பற்றி யார்தான் கவலைப்படுகிறார்கள்?அம்மா அவளை வற்புறுத்தினாள்.அவனுடைய அத்தைகளில் ஒருத்தி அவளை சாதுர்யமாகச் சிக்க வைத்து விட்டாள். அவர்களை ஆழமான குழியில் தள்ளுவதே அவள் திட்டம் ;கடுமையாக உழைத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை அவர்கள் சாப்பிடுவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

மகள் பேசிய போது அம்மா மௌனமாக இருந்தாள். இந்தஅசட்டுப் பெண்ணிற்கு என்ன தெரியும்? என்பதுதான் அவளுடைய பாவனை. நானும் ,சிநேகிதியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். அம்மாவின் கண்களில் ,அந்தச் சம்பந்தத்தைத் தடுத்து நிறுத்த முயன்றவர்கள் வில்லன்களாகத் தெரிந்தார்கள்; மகளுக்கோ அவர்கள் காவலர்கள்.

“பாவம் அவள்! என் பங்கும் இதிலிருக்கிறதே என்ற குற்றவுணர்ச்சி எனக்கு இருக்கிறது. ஹனுமான் பண்டாரத்தின் மருமகள் கல்யாணத்திற்கு எப்படி உதவி செய்யாமலிருக்க முடியும?” அவர்கள் போன பிறகு நான் கேட்டேன்.

“திருடர்கள் ! ஹனுமானோடோ அல்லது பாலியோடோ அவர்களுக்கு எதுவுமில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் போய் இடத்திற்குத் தகுந்தபடி கதையளப்பார்கள். தங்களுக்குப் பிடித்தவர்கள் என்றால் மட்டும்  மனிதர்கள் உதவி செய்வார்கள் .” என் சிநேகிதி சொன்னாள்.

“பாவம் அந்தப் பெண். ஒருவன் தன் தலைமுடியைப் பிடித்து இழுப்பதற்கு பணமும் கொடுக்க வேண்டியிருக்கிறது.” நான் இரக்கப்பட்டுச் சொன்னேன்.

“இல்லை, அப்படியில்லை. அவன் கெட்டிக்காரன். அதனால்தான் நகைகளுக்கான பணத்தை முன்னரே வாங்கிக் கொண்டு விட்டான் !

அந்தப் பணத்திற்குத் தங்கம் வாங்கி ,பிறகு அதை விற்றால் பாதிப்பணம்தான் கிடைக்கும். இந்த வழியில் இழப்பு எதுவும் கிடையாது.

தங்கள் மனைவியின் இயற்கை அழகை மட்டும் சில கணவர்கள் ரசிக்க விரும்பினால் நாம் என்ன செய்ய முடியும் ?”

“முட்டாள்தனமாகப் பேசாதே, இவ்வளவு மோசமான விஷயங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் ?” நான் கேட்டேன்.

“அவர்களில் ஒருவர் இறக்கும் வரை.” என் இரக்கத்தைக் கிண்டல் செய்வது போல சொல்லிவிட்டு சிநேகிதி தொடர்ந்தாள்.“ இந்த அழுகையும், வருத்தமும், குற்றம் சொல்வதும் ஒரு பழக்கமாக மாறும் வரை இது தொடரும். அதற்குப் பிறகு அவர்களால்  இது இல்லாமல் வாழமுடியாது. குழந்தைகள் பிறக்கும் போது பார். அதற்கென்று தனியாக ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி தேவைப்படுவார். அவையெல்லாம் மனிதனின் அறிவிற்கெட்டாத கடவுளின் செயல். இல்லையா ?அற்புதமான கடவுள் ! நாம் அறிய விரும்பும் ரகசியமே  நம்மை அழித்து விடும் !

அவர்கள் கருவுற்றால் நமக்குப் பைத்தியம் பிடித்துவிடும் ; நாம் அவர்களுக்கு எல்லாம் கொடுக்க வேண்டும், இல்லையா ? இந்த மனிதர்களைப் பொறுத்தவரை, பிரசவமென்பது கீழே இருக்கும் ஒரு  பயனற்ற பொருளை குனிந்து எடுப்பது போன்றதுதான். கடுமையாகவேலை செய்பவர்களுக்கு இயல்பாகவே குழந்தை பிறப்பு மிகச் சுலபமாகி விடும் என்பதை நீ கேள்விப்பட்டிருக்க வேண்டும் ? கொஞ்சம் பொறுத்திரு, இருபது வருடங்கள்? –– அல்லது  பதினைந்து வருடங்களில் — அந்த    முதியவளைப் போல இவள் வெற்றிலைத் தட்டுடன் பிச்சை கேட்டு வருவதை நீ  பார்ப்பாய் !”

நான் எதுவும் சொல்லவில்லை. என் சிநேகிதி மிக தாராளமாக பகிர்ந்து கொண்ட அறிவு விருந்தை ஏற்றுக் கொண்டேன்.

அதற்குப் பிறகு புதுப்பெண்ணை ஏறக்குறைய ஒரு வருடம் கழித்துத்தான் பார்த்தேன். ஒரு குழந்தையைக் தூக்கியபடி என் வீட்டிற்கு வந்தாள். சிவப்பான கொழுகொழு பெண் குழந்தை. இரண்டு மாதக் குழந்தை என்று அவள் சொன்னாலும் அது ஆறு மாதக் குழந்தை போல இருந்தது. வறுமையின் எந்தச் சாயலும்  குழந்தையிடம் தெரியவில்லை.

குழந்தையின் கண்களிலும்,புருவங்களிலும் மை தீட்டப்பட்டிருந்தது. முன் நெற்றியில் கருப்புப் பொட்டு. சுருட்டை முடி அழுத்தி வாரப்பட்டிருந்தது. மெல்லிய பட்டாலான கவுன் அணிந்திருந்தது.விரும்பித தூக்கக் கூடிய அளவிற்கு அழகாக இருந்தது! ஆனால் தாய் சோர்ந்தும், கசங்கிய ஆடைகளோடும்,  கைகளில் புண்ணோடும் இருந்தாள்.

குழந்தையைத் தூக்க வேண்டுமென்ற என் ஆசை குறைந்தது.  தான் பார்த்தும்,பார்த்தும் இருக்காத பொருட்களைப் பார்த்து குழந்தை சிரித்தது. அதன் வாயோரம் தாய்ப் பாலின் அடையாளமாய் வெளுத்த கோடோடிருந்தது. அன்பை விட ஆதங்கத்தையே நான் அதிகமாக உணர்ந்தேன். இப்போது அதிகமாகச் சுரக்கும் தாய்ப்பால் இன்னும் ஆறு மாதங்களில் வற்றிப் போய் விட குழந்தையின் வயிற்றுக்குப் போதிய  உணவில்லாமல் போய்விடும். கருவுற்றிருக்கும் தாயின், வரண்ட மார்பை உறிஞ்சும் வற்றிய குழந்தையாகி விடும்.

பிறகு அடுத்த குழந்தையின் வரவு. அதுவும் முதல் குழந்தை பாணியில். அதற்குப் பிறகு,பத்து வருடங்களுக்குப் பின்னால், அந்தப் பெண் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு ,என் சிநேகிதி சொன்ன மாதிரி திருமணச் செலவிற்காக வெற்றிலைத் தட்டுடன்  வந்து பிச்சை எடுப்பாள்.

பிறகு சில மாதங்களுக்குப் பிறகு – புதுப்பெண்— இந்தக் குழந்தை – ஒரு குழந்தையைக் தூக்கிக் கொண்டு வருவாள் ,அழுக்கான ஆடைகளோடு.

இது சம்பவமாக ,பல தலைமுறைகளாக நடந்து வருகிறது. சமூகத் தேவைகளுக்கான தன்மையை தீவிர நிலையில் சிந்திக்காதவர்கள் ; பொறுப்பற்ற வகையில் ,மூட நம்பிக்கைகளின் பின்புலத்தில், இடம் சார்ந்த பார்வையில்,இயந்திர ரீதியான தன்மையை மட்டும்  அறிந்தவர்கள்…என் எண்ணங்கள் இப்படிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் “ இந்தக் குழந்தைக்கு நான் சில வாழைப்பழங்கள் வாங்க நீங்கள் எட்டுக் காசு கொடுத்தால் கடவுள் அருள் உங்களுக்குக் கிடைக்கும்,”என்று அவள் சொன்னாள்.

எட்டுக் காசிற்கான கடவுள் அருளை நான் பெற்றுக் கொண்டு, அவளிடம் குழந்தையின் தந்தையைப் பற்றி விசாரித்தேன்.

நான் கேள்விப்பட்டிருந்ததை விட பத்து மடங்கு மேலாக புகார்கள் அவளிடமிருந்து பொங்கி வந்தன. கடவுள் அவ்வாறான மனிதர்களை எப்படிப் படைக்கிறார் !அவனுக்குச் சுமைகளே அதிகம்.ஏழு அல்லது எட்டு குழந்தைகள் இருக்கும் மனிதனிடம் என்ன இருக்கும்?அவன் வேதனை தருபவன், அவ்வளவே. சீக்கிரம் இறந்து விடுவானோ? இல்லை !

நரகத்திலிருந்து அவனாவது மீள்வானா? ஒரு போதும் இல்லை! ஒரு ஹோட்டலில் பாதிவிலைக்கு அவனுக்கு உணவு கிடைக்கிறது, அவனுக்கு மகிழ்ச்சி தரவும்,போதாக் குறைக்கு அவனை கவனித்துக் கொள்ளவும் மனைவி இருக்கிறாள்! ஒருவர் இதையெல்லாம் கூடப் பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால் இரவுகளில் கிடைக்கும் அடி சமாளிக்க இயலாதது. அதனால் ஆபத்தில் குரல் கொடுத்தால் கூட யாரும் எட்டிக் பார்க்க  மாட்டார்கள்!

அவள் அம்மா இறந்த போது விடியும் வரை  அவள் உடலின் அருகே தனியாகத்தான் இருந்தாள். அம்மா மூச்சு விடச் சிரமப்படுவதைப் பார்த்து விட்டு ,அவன் போய் விட்டான். ஒரு பொட்டு மனித நேயம் கூட அவனிடம் இல்லை! அவனிடம் அது இருந்திருந்தால்.. குழந்தையின் அழுகை கூட கரகரத்துப் போனதைப் பார்த்து  ஒரு துண்டு ஆடை வாங்கித் தந்திருக்க மாட்டானா ?

ஒரு நல்ல விஷயம், கடவுள் ஏழையைக் கைவிடவில்லை. அவள் அணிந்திருக்கும் கவுனைப் பாருங்கள். அது ஜட்ஜ் கேசவன் வக்கீல் வீட்டில் தந்தது. அவர்களின் கருணையால்தான் தாயும், சேயும் பிழைக்க முடிந்தது.”

இது ’ஜட்ஜ் வக்கீல்’ என்றது  ஒரு வர்ணனையை உள்ளடக்கியது. இறந்த ,நிகழ்,எதிர் காலங்களுக்கான பதவிகளை பெற்ற ஆசீர்வதிக்கப்பட்ட பெயருடைய இந்த பெருமையாளர் யார் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை .ஜட்ஜாகப் பதவியுயர்வு பெற்ற ஒரு வக்கீல்,அல்லது ஜட்ஜாக இருந்து சட்ட ஆலோசகரானவர் என்று ஏதாவது ஒன்றில் அடங்கலாம். கடவுளோடு கோபம் கொள்கிற பெண்கள் எவ்வளவு வேகமாக அதிலிருந்து மாறி புகழத் தொடங்கி விடுகின்றனர் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. லட்சியங்கள், கொள்கைகள், ஒட்டுதல், விலகுதல் என்ற வகையான இயல்புகளில் நிலையான எண்ணமில்லாத  இவர்கள்  எந்த வகையான சூழலுக்கும் தயாராகி, தீவிர எதிர்ப்பின்றிப் போகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.

அவள் மேலும் பேசியது என் சிநேகிதியின் வார்த்தைகளை உறுதி செய்வதாக இருந்தது. புறப்படும் போது தன் கணவனைப் பற்றி அவள் சொன்னது :“கடவுள் இன்னும் ஒரு விஷயத்திற்கு உதவி செய்வார் என்று நம்புகிறேன். இந்தப் பெண் வளர்ந்து ,ஆளாகி ,கணவன் கிடைக்கும் வரை  அவள் அப்பா உயிரோடிருக்க வேண்டும். அடியைத் தவிர நமக்கு வேறு எதுவும் கிடைக்காமல் போனாலும், இரவுகளில் உடன் தங்கியிருக்க உடைமைக்காரன் இருப்பானில்லையா ? என் அம்மா  அடிக்கடி சொல்வதைப் போல , வீட்டில் ஆண்  இல்லையென்றால் ,சுற்றியிருக்கும் மனிதர்கள் தனியாக இருக்கும் கூலி வேலை செய்யும் ஒரு பெண்ணை வாழ விட்டுவிடுவார்களா ?”

———————————————————————

பெண்ணிய எழுத்தாளரான கே.சரஸ்வதி அம்மா சிறுகதை ,நாவல் ,  நாடகம் ,கட்டுரைகள் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. சோள மரங்கள், பொன் குடம், கலா மந்திரம் ஆகியவை அவருடைய  சிறுகதைத் தொகுப்புகளில் சிலவாகும்.

நடுப்பக்கம் – சந்திரமோகன்

பத்து மோதிரம் பாய்

A man wearing rings on all his fingers, who is a Bangladeshi migrant in Malaysia Stock Photo - Alamyரொம்ப வருஷமா மனதை உறுத்திக்கிட்டே இருக்கிற விஷயம். இப்ப கூட சொல்லாம போனா நான் செஞ்ச திருட்டுத் தனம் உலகுக்கே தெரியாம போயிடுமே என்ற உறுத்தல்தான். என் மனசுக்குள்ள இவ்வளவு நாளா அடச்சு வைத்திருந்த ரகசியத்தை இப்ப உடைத்து விட எண்ணினேன். இவன் இப்படித்தான் பீடிகை போடுவான், கடைசியில உப்பு சப்பே இருக்காது என தள்ளாம மேல படிங்க. காரமா இருக்கும்.

திருச்சியில் P U C முடிச்ச பின்னர் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில B. SC (chemistry) க்கு அப்பளிகேஷன் போட்டுவிட்டு காத்துக் கிடந்தேன். என் மார்க்குக்கு ஆள் அனுப்பி கூப்பிடாட்டியும் ஒரு கார்டில் என் நலத்தை விசாரித்து கூப்பிடுவார்கள் என்று எதிர் பார்த்திருந்தேன். ஒரு தகவலும் இல்லை. சரி, ஒரு எட்டு போய் பார்த்து விடலாம் என இரயிலைப் பிடிச்சு கல்லூரிக்கு சென்றேன். வாசலில் வரவேற்பே சரியில்லை. ஆபிஸ் ரூம் அடைவதற்குள் ஏகப்பட்ட தடங்கல். அங்கு ‘ நீ இதுக்கெலாம் இங்க சரிப்பட்டு வர மாட்ட, வேற இடம் பாரு தம்பி’ என்று சொல்லி விட்டார்கள். அப்பதான் எனக்கும் ஞானம் வந்தது. முன்னோர்கள் எல்லாம் தெரியாமையா St’ Joseph’s for slaves என சொல்லி இருப்பாங்க, நாம் என்ன அடிமையா என எண்ணி திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். பாவம் என் நண்பர் சுந்தர்தான் என்னோடு சேர்ந்து படிக்கும் பாக்கியத்தை இழந்தார்.

அடுத்த வாய்ப்பை அப்பொழுது இரண்டாவது இடத்தில் இருந்த ஜமால் முகமது கல்லூரிக்கு அளிக்க எண்ணி அங்கு சென்றேன். Jamal for jolly என்ற அடை பெயர் வேறு என்னை கூவி அழைத்தது. கல்லூரிக்குச் சென்றேன். எந்த தடங்கலும் இல்லாமல் ஆபிஸ் உள்ளே சென்றேன். சுற்றும் மற்றும் பார்த்து என்னை விட பார்க்க பாவமாக இருந்த ஒருவரிடம் சென்று கல்லூரியில் சேரும் என் விருப்பத்தை கூறினேன்.

அவர் ‘ என்னப்பா இப்ப வர்ர. அட்மிஷன் எல்லாம் முடிஞ்சிருச்சே. சரி உன் அப்ளிகேஷன் நம்பரைக் கொடு. வாய்ப்பிருந்தா சொல்றேன். பிரின்ஸ்பலை பார்’ என்றார்.
நான் தயங்கி ‘ சார் நான் இங்க அப்ளிகேஷன் போடலை” என்றேன்.
நல்ல வேளை அவர் கைக்கு எட்டும் தூரத்தில் டேபில் வெயிட் இல்லை. ஆனால் முகத்தில் கடுமையை காட்டி ‘ போ தம்பி, போயி அடுத்த வருஷம் அப்ளிகேஷன் போட்டுட்டு வா, பார்க்கலாம்’ என்றார்.

கதைகளில் படிக்கும் ‘மனமுடைந்து’ என்ற வார்த்தையின் அர்த்தம் அப் பொழுதுதான் தெரிந்தது. மனம் நிஜமாக உடைய வில்லை. ஆனால் உடைந்தது போன்ற உணர்வுடன் திருச்சி ஜங்ஷன் இரயில் நிலையம் வந்தமர்ந்தேன்.

அருகே ஒரு பெரியவர். கதை கேட்பதில் ஆர்வம் அதிகம் போலும் துருவி துருவி கேட்டார். நானும் அவர் மூலம் ஏதாவது ஒரு சிறு துரும்பாவது கிடைக்காதா என என் கதையைக் கூறினேன். இறுதியில் அவர் திமிங்கலம் நாளொன்றுக்கு 3 டன் உணவு சாப்பிடும், எறும்புக்கு சிறு துளி போதும். இரண்டுக்கும் படியளிக்கும் இறைவன் உனக்கும் ஏதாவது செய்வானப்பா என கூறி அவசரமாக இரயிலை நோக்கி சென்றார்.
அவர் என்ன சொல்லி சென்றார் என புரியாமல் விழித்துக் கொண்டிருந்த பொழுது என் நண்பன் பரிமளம் அங்கு வந்தான்.
அவன் நேஷனல் கல்லூரியில் சேர்ந்ததை கூறி அங்கு போய் பார்க்கலாம் என்றான். ‘ கிட்டாதாயின் வெட்டென மற’ என ஔவை சொன்னதை நான் மறந்தேன். ஜமால் மீதான என் மோகத்தை கூறினேன். ‘உடனே நீ போய் கல்லூரியில் பத்து மோதிரம் …..பாயைப் பார் அவர் ரொம்ப பேருக்கு சீட் வாங்கித் தராறாம்’எனக் கூறினான்.
இங்கு பாயைப் பற்றி கண்டிப்பாக கூற வேண்டும். அப்பொழுதே சற்று வயதானவர். இப்பொழுது சொர்க்கத்தில்தான் இருப்பார் என்னைப் போல எத்துனை பேரை பட்டதாரிகளாக்கி இருப்பார். அவர் மனசு கஷ்டப் பட கூடாதென்றுதான் அவர் பெயரைச் சொல்ல வில்லை.
கல்லூரி ஆரம்பித்த நாட்களில் நுழைந்த பாய் ஓரிரு ஆண்டுகளில் அதிகார மையத்தின் அருகே வந்து விட்டார். தொழில் என்னவோ பிரின்ஸ்பல் பியூன், ஆனால் HOD களே அவருக்கு சலாம் வைத்து சற்று ஒதுங்கிச் செல்வார்கள். ஓரிரு ஆண்டுகளிலேயே பத்து விரல்களிலும் மோதிரம் போட்டுக் கொண்டார். யாரோ இடது கையில் மோதிரம் போட்டால் ராசி இல்லையெனக் கூறக் கேட்டு அவைகளை கழற்றி விரலுக்கு இரண்டாக வலது கையில் போட்டுக் கொண்டார். அவர் வலது கையை தூக்கி பேசும் மேனரிஸத்தை சிவாஜி கூட ஒரு படத்தில் காப்பியடித்திருப்பார். வெள்ளை சட்டை, வெள்ளை கைலி. எங்குள்ளார் என அவரைக் காட்டிக் கொடுக்கும் அவரது சென்ட். அந்த வாசனைதான் பிரின்ஸ்பலுக்கு பிடிக்குமாம்.

ஒருவழியாக அன்றே அவரைப் பார்த்து கண்களில் நீர் வராமல் என் கதையை சொல்லி முடித்தேன். அதிகார தோரனையில் ஆரம்பித்த பாய் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்து எனக்கு ஆறுதல் சொல்லளானார். எனக்கு சீட் கிடைத்த திருப்தி. இரண்டு கண்டிஷன்கள் போட்டார். முதல் கண்டிஷன் ஒரு வாரம் பிரின்ஸ்பல் கண்களில் படும்படி தினசரி காலை வந்து நிற்க வேண்டும். இளகிய மனசு காரரின் அனுதாபத்தை பெற என பின்னர் தெரிந்தது. அது ஈசி. நமக்கு வேறென்ன வேலை. இரண்டாவது கண்டிஷன் ஒரு இருபது ரூபாய் வரை செலவாகும் என்பதாகும்.( வருடம் 1968)
அப்பாவிடம் எப்படி சொல்வது, எப்படி கேட்பது. கேட்டேன். “ ஒழுங்கா படிச்சிருந்தா இந்த கஷ்டம் இல்லையே” என்றார். சரிதான். “P U C வச்சுக்கிட்டு எவன் வேலை கொடுப்பான்” என்றார் இதுவும் சரிதான். அடுத்து இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்து “ என்ன செய்றது, ஊர்ல இருந்த மாடுகளை மேய்க்க ஆள் கிடைக்காம கொடுத்தாச்சு” என்ற அப்பாவின் பஞ்ச் எனக்கு தேவையானதுதான்.

அடுத்த நாள் காலை பாய் வருவதற்கு முன் அவர் அமரும் இடத்தில் நான் நின்றேன்.
என்னிடத்தில் ஒரு அப்ளிகேஷன் கொடுத்து எழுதி வாங்கி தன் பையில் வைத்துக் கொண்டார். மறக்காமல் அப்ளிகேஷன் நம்பரை எழுதி வைத்துக் கொள்ள சொன்னார். நான் மனப்பாடம் செய்து கொண்டேன்.
தினசரி பிரின்ஸ்பல் வரும்பொழுது சலாம் வைக்கச் சொன்னார். அதையும் செய்தேன். வாக்குத் தவறாத பாய் ஒரு வாரம் கழித்து என்னிடம் “ நான உன்னை உள்ளே அனுப்பப் போகிறேன். நீ பிரின்ஸ்பலிடம் , எனக்கு இங்க படிக்க ஆசை என்று மட்டும் சொல். உன் நம்பர் கேட்பார், கொடு என்றார். அப்படியே நடந்தது. பிரின்ஸ்பல் தன் மேஜை மீதிருந்த ஒரு சிறு தாளில் என் நம்பரை எழுதி அட்மிட் என கையொப்பம் இட்டார். மணியடித்து பாயை அழைத்து அவர் கையில் கொடுத்தார்.
அடுத்து நடந்ததுதான் கிளைமேக்ஸ்.
பக்கத்தில் இருந்த ஆபிஸ் அறைக்குள் நுழைந்தார் பாய். சற்று அதிகார தொனியில் அங்கிருந்த பியூனிடம் அந்த நம்பருக்கான அப்ளிகேஷனை எடுத்து வர ஆணையிட்டார். ஆபிஸ் ரூம் தலை கீழானது. என் அப்ளிகேஷன் மட்டும் கிடைக்க வில்லை. அதுதான் பத்திரமாக பாயின் பாக்கெட்டில் இருந்ததே.
சில மணி நேரம் கழித்து அப்ளிகேஷன் குவியல்களைக்கிடையே நம் பாய் நுழைந்தார். வெற்றியோடு வெளி வரும் பொழுது அவர் கையில் என் அப்ளிகேஷன். “ ஒன்றுக்கும் லாயக்கில்லை என சத்தமிட்டுக் கொண்டே நான்கைந்து ரப்பர் ஸ்டாம்ப்களை அதன் மீது அவரே ஓங்கி ஓங்கி அடித்தார். மேனேஜரிடம் அதில் கையெழுத்து வாங்கினார்.
வெளியே திரும்பி யாரப்பா இந்த கேண்டிடேட், சீக்கிரம் பணத்தை போய் கட்டு என்றார்.

விடாத காதல் – பி ஆர் கிரிஜா

Ananda Vikatan - 20 November 2019 - சிறுகதை: மற்றும் பலர் | Short Story

       “என்னங்க, நம்ம பொண்ணு ஆசைப்பட்டுட்டா, நாமதான் உடனடியா பெங்களூரு வரை போய், அந்தப் பையனோட அப்பா, அம்மாவைப் பார்த்துவிட்டு வரணும், “ இதை மூன்றாம் முறை சொன்னாள்விமலா தன கணவர் சந்திரசேகரிடம்.

    “ம்….. திரும்பித் திரும்பி இதே பாட்ட பாடாத, போலாம்.. பெங்களூரு  ரயில் டிக்கட் கிடைப்பது என்ன அவ்வளவு லேசுன்னு நினைச்சயா ? அது ரொம்ப கஷ்டம்… என்னால பஸ் பிடிச்செல்லாம் போக முடியாது , ஆமாம் சொல்லிட்டேன்….. “ என்றார் சந்திரசேகர்.

   “சரிங்க…. நான் ஞாபகப்படுத்தினேன் அவ்வளவுதான்…”. என்றாள் விமலா.

    ஒரே மகள் பூரணி, செல்லமாக வளர்க்கப்பட்டவள். எல்லாவற்றிலும் கெட்டிக்காரி. அவள் பெங்களூரில் ஐ.பி.எம் இல் வேலை பார்க்கிறாள். அவள், அவளோடு வேலை பார்க்கும் நரேந்திரனைக் காதலிப்பதாக இவர்களுக்கு மறைக்காமல் தெரியப்படுத்தி இருந்தாள். இவர்களையும் பெங்களூரு வரை வந்து அவன் பெற்றோர்களை வந்து மீட் பண்ணும்படி ரெண்டு முறை ஃபோனில் ஏற்கனவே சொல்லி இருந்தாள்.

     அன்றிலிருந்து விமலாவுக்கு ஒரே பரபரப்பு. சந்திரசேகர் மிகவும் நிதானம். அதனால்தான் விமலா மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தாள்.

    ஒரு வழியாக அடுத்த வாரம் சனிக்கிழமை காலை சதாப்தியில் டிக்கட் புக் செய்து விட்டார். விமலாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. பூரணி ஆசைப்பட்டு விட்டாள். அவர்களும் நல்ல வசதியானவர்கள்தான். அவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்த நரேந்திரன் தான் மூத்தவன். சின்னவன் அமெரிக்காவில் எம்.எஸ். படிக்கிறான். நரேந்திரனின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போகின்றனர். அப்பாவிற்கு  இன்னும் இரண்டு வருடங்கள் சர்வீசும், அம்மாவிற்கு நான்கு வருடங்கள் சர்வீஸ் இருப்பதாக பூரணி முன்பே தெரிவித்திருந்தாள். சந்திரசேகர் வாட்சப்பில் அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டார்.

   விமலா, “இன்னும் ரெண்டு நாட்கள்தான் இருக்கு, ஏதாவது நல்ல ஸ்வீட் செய்து கொண்டு போகணும்னு” சொல்லி, தன் கணவரையும் உட்காரவிடாமல், ஏதாவது வாங்கி வரச் சொல்லி வெளியில் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

   சனிக்கிழமையும் வந்தது. ஊபர் புக் பண்ணி, சென்ட்ரல் வந்து சேர்ந்தார்கள். ட்ரெயினில் ஏறி உட்கார்ந்ததுமே, விமலா தொண தொணவென்று பேச ஆரம்பித்தாள். ஏங்க, …. என்னதான் காதல் கல்யாணம் என்றாலும் நாம பெண்ணைப் பெற்றவர்கள். நகை, நட்டு, பணம்னு நிறைய எதிர்பார்ப்பாங்களோ,! இருக்காது, நம்ம பூரணியும் நல்ல படிச்சு, கை நிறைய சம்பாதிக்கறா, இந்த காலத்தில யாரும் அப்படியெல்லாம் கேக்க மாட்டாங்க… …. இப்படி விடாமல் பேசிக் கொண்டே போனாள் விமலா.

   சந்திரசேகருக்கு சலிப்பாக வந்தது. “கொஞ்ச நேரம் பேசாம வாயேன். என்ன கேட்டாலும் முடிஞ்சா செய்யப் போறோம்… நாம இப்பப் போறது, அதுக்காக இல்ல, அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள், நல்ல குணமுள்ளவர்களா, நம்ம பூரணியை அன்பா நடத்துவாங்களா என்பதை தெரிந்து கொள்ளத்தான். கண்டோன்மெண்டில் இறங்கனும். அதுவரை வாயை மூடிக் கொண்டு வா…” என்று சற்றே உரத்த குரலில் சொல்லவே, விமலாவிற்கு சப்பென்றாகி விட்டது.

    ம்…. பழைய நினைவுகளை அவள் மனம் அசை போட்டது. அவள் கல்லூரியில் மேல் படிப்பு முடித்துவிட்டு , எல்.ஐ.சி யில் நல்ல வேலை கிடைத்தவுடன் அவள் உடனே வேலையில் சேர சென்னைக்கு கிளம்பினாள். அவள் அப்பா அவளை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார். அவள் பிறந்து வளர்ந்தது திருச்சியில். வேலைக்காக சென்னை சென்று ஹாஸ்டலில் தங்கினாள். மவுன்ட் ரோட் வரை பஸ்சில் போய் வருவாள். அப்போதுதான் அவளுக்கு நாராயணனின் பழக்கம் ஏற்பட்டது. அவன் இவள் ஆபீசிற்கு மும்பையிலிருந்து மாற்றல் வாங்கி வந்து சேர்ந்தான்.

    எல்லோருடனும் சகஜமாகவும், மரியாதையுடனும் பழகக் கூடியவன். அவனைப் பார்த்தால், பார்த்த உடனே பிடித்துப் போய் விடும். அப்படி ஒரு முகராசி. இவன் நல்லவன், யாரையும் ஏமாற்ற மாட்டான், என்பது மாதிரி…. விமலாவிற்கு அவனைப் பிடித்துப் போனதில் ஆச்சர்யமில்லை.

   இருவரும் ஒரே டிபார்ட்மெண்டில் வேலை செய்தனர். ஒரே ரேங்கும் கூட. நல்ல நட்பும், புரிதலும் சிறிது சிறிதாக காதலாய் மாறியது. ஆறு மாதங்கள் சென்னையில் வேலை செய்யும்போது நாராயணனின் நட்பும், காதலும் அவளை திக்குமுக்காட வைத்தது.

    அப்போதுதான் ஒரு நாள் திடீரென்று அவள் அப்பா ஃபோன் செய்து அவளை திருச்சி வரச் சொன்னார். நாராயணனிடம், அவள் மூன்று நாட்கள் திருச்சி வரை சென்று வருவதாக சொன்னாள் அவள் திருச்சி போய் இறங்கிய அன்றே பெண் பார்க்கும் படலம். அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். பையன் எம்.பி.ஏ. படித்து விட்டு மும்பையில் வேலை செய்வதாக சொன்னார்கள். 

  பையனும் விமலாவிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு ஓகே சொன்னான். உடனே அவன் பெற்றோர்கள் பாக்கு, வெற்றிலை மாற்றிக் கொண்டு ஒரே மாதத்தில் திருமணத்தை நிச்சயித்தார்கள். விமலாவால் தன பெற்றோரிடம் மறுத்து ஏதும் பேச முடியவில்லை. மெளனமாக எல்லாவற்றையும் தனக்குள் புதைத்துக் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தாள். அவள் காதலையும் அவள் அப்பாவிடம் சொல்ல முடியாது, ஏனென்றால், நாராயணன் வேறு ஜாதி.

   நிச்சயம் தன காதல் கைகூடாது என்று தெரிந்தவுடன் அவளுக்கு திருமணத்திற்கு சம்மதம் தருவதைத் தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை. அப்படித்தான் அவளுக்கு சந்திரசேகருடன் திருமணம் நடந்தது. அது நடந்து இருபத்தி ஆறு வருடங்கள் ஓடி விட்டது. பூரணிக்கு வயது இப்போது இருபத்து ஐந்து. அவளுக்காவது இந்த காதல் திருமணம் கை கூடவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டாள் விமலா.

   சட்டென்று நினைவுலகத்துக்கு வந்தாள் விமலா. வண்டி கிருஷ்ணராஜபுரம் தாண்டி விட்டது. இருவரும் கண்டோன்மெண்டில் இறங்கத் தயாரானார்கள். அடுத்த பத்து நிமிடத்திற்குள் ஸ்டேஷன் வரவே, இருவரும் இறங்கி பூரணியைத் தொடர்பு கொண்டார்கள். அவளும் ஸ்டேஷனுக்கு வெளியில் அவர்களை வரச் சொன்னாள்.இருவரும் வெளியே வந்தனர். பூரணி டொம்லூரில் ஒரு சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் எடுத்து தங்கியிருந்தாள். ஒரு மாதம் முன்புதான் கார் வாங்கியிருந்தாள். இருவரும் காரில் ஏறி டொம்லூர் வந்து சேர்ந்தனர். பூரணிதான் பேச ஆரம்பித்தாள்.

   “அம்மா, இப்போது மணி 11 ஆகிறது. நாம போய் குளிச்சு ரெடியாகி, பக்கத்துல இருக்கற ஹோட்டல் போய் லஞ்ச் சாப்பிட்டு விட்டு மதியம் மூணு மணிக்கு நரேன் வீட்டுக்கு நான் உங்கள் கூட்டிட்டு போறேன். ஏற்கனவே நான் அவர்களிடம் இதைப் பத்தி சொல்லிவிட்டேன் “ என்றாள்.

    விமலாவிற்கு ஆச்சர்யம். ஒரே பெண் என்று இவளை நாம் பொத்தி பொத்தி வளர்த்தோமே, இப்போ இவ என்னடான்னா பெரிய மனுஷி ஆகி என்னமா முடிவெடுக்கறா என்று நினைத்தாள்.

    பூரணி காரைப் பார்க் செய்துவிட்டு, லிஃப்டில் இரண்டாவது மாடிக்கு அழைத்துக் கொண்டு போனாள். அழகான, நேர்த்தியாக, வசதியாகக் கட்டப்பட்ட சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட். மிக அழகாக வைத்திருந்தாள் பூரணி. சந்திரசேகருக்கும் நம்ப முடியவில்லை. இவளை சிறிய பெண் என்று நினைத்தோமே, எவ்வளவு, இண்டிபென்டென்ட்டா, பொறுப்பா இருக்கா என்று ஆச்சர்யப்பட்டார்.

 இருவரும் சீக்கிரமே குளித்துவிட்டு ரெடியாகினர். பூரணி சிறிது நேரம் கழித்து கிளம்பலாம் என்றாள். எல்லோரும் சிறிது நேரம் பேசிவிட்டு, ஒரு மணிக்குக் கிளம்பினர். விமலா அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவேண்டிய எல்லாவற்றையும் மறுபடியும் செக் பண்ணி ஒரு பையில் அழகாக எடுத்து வைத்தாள். மூவரும் கிளம்பி அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். நிதானமாக சாப்பிட்டுவிட்டு கிளம்பினர். அவர்கள் திப்பசந்திராவில் இருப்பதாக பூரணி சொன்னாள்.

     பெங்களூரு ட்ராஃபிக்கில் பூரணி மிக லாவகமாய் கார் ஊட்டியதை பார்த்து விமலா வியந்து போனாள். அவளுக்கு பெருமையாக இருந்தது.

   மிகச் சரியாக 2.55 க்கு பூரணி திப்பசந்திராவில் அவர்கள் வீட்டிற்கு முன் காரை பார்க் செய்துவிடு காலிங் பெல்லை அழுத்தினாள் பூரணி.

   இவர்களும் மெதுவாக பூரணி பின் சென்றார்கள்.கதவு உடனே திறந்தது. “வாங்க, வாங்க உங்களுக்காகத்தான் வெயிட் பண்றோம் என்ற கணீர் குரலில் நரேனின் அப்பா இவர்களை வரவேற்றார்.

   எஸ் அங்கிள்… என்று சிரித்தவாறே பூரணி அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அந்தக் குரலைக் கேட்டவுடன் விமலாவிற்கு தூக்கிவாரிப் போட்டது. ஆம்… யாரை மறக்க முடியாமல் மனதிற்குள் வைத்துப் பூட்டியிருந்தாளோ, அவரின் குரல்….. ஆம்.. நாராயணன்…. ஆவலுடன் ஆறே மாதங்கள் பழகிய நாராயணன்….. அவன் மகனா இந்த நரேந்திரன்…… விமலா அப்படியே சிலையாகி ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

                                                                                             “

 

 

        

 

 குண்டலகேசியின் கதை – 15 – தில்லைவேந்தன்

குண்டலகேசி || ஐம்பெரும் காப்பியங்கள் || KUNDALAKESI - YouTube

முன் கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று கொல்ல முனைகிறான். ஆனால் அவள் தந்திரமாக அவனைக் கீழே தள்ளிக் கொல்கின்றாள்.

பிறகு, மனம் வெறுத்துக் கால் போன போக்கில் அலைந்தவள், வழியில் கண்ட புத்த மதத் துறவியிடம் தன் கதையைக் கூறுகின்றாள்………..

பௌத்த சமய நூல்கள் – Nakkeran

குண்டலகேசியின் கலக்கம்

போகும் இடமெது புரிய வில்லையே,
ஆகும் நிலைமையும் அறிய வில்லையே,
நோகும் உளத்தினில் நூறு கவலைகள்,
பாகு கனிமொழி பகர்ந்து கலங்கினள்.

புத்த மதத் துறவி ஆறுதல் கூறுதல்

கலங்கும் மங்கையைக் கண்ட துறவியும்
இலங்கும் துயரமும் இடரும் போகுமே
துலங்கும் புத்தனின் தூய திருவடி
நலங்கொள் அமைதியை நல்கும் என்றனன்

புத்தன் பெருமையை எடுத்துரைத்தல்

பிறப்பின் தன்மையைப் பெரிதும் அறிந்தவன்,
சிறப்பு மிகுந்தவன், தெளிவு தருபவன்,
வெறுப்பும் அற்றவன், விருப்பும் செற்றவன்,
குறிப்பு ணர்ந்தவர் கொள்ளும் கொள்கையன்.

மாரன் அம்பினை மனத்தில் வென்றவன்,
ஓரும் அறவழி உணர்ந்து நின்றவன்,
ஊரும் உலகமும் உயிரும் உய்ந்திடச்
சேரும் மழையெனச் செய்யும் அருளினன்.

( மாரன் — மன்மதன்)

 

துறவியின் அறவுரை

கருவாக உயிர்த்திருந்து மண்ணில் வந்தோம்;
கையிலொரு பொம்மையுடன் குழந்தை ஆனோம்;
உருவிலொரு மிடுக்கொளிரும் இளமை பொங்க
உறுவதெலாம் இன்பமெனத் திளைத்துப் போனோம்;
வரவிருக்கும் மூப்பதனை மறந்தே போனோம்.
வாழ்க்கையிலும் காலை,பகல் இரவு மேவும்.
ஒருவாறு வாழ்வியல்பை உணரும் வேளை,
ஓடிவிட்ட காலவெள்ளம் வருமோ மீள?.
ஓடாமல் அலைகின்ற கடல்போல் ஆசை,
உள்ளத்தில் எழுகின்ற வாழ்வின் ஓசை,
தாவாத கிளையுண்டோ மனக்கு ரங்கு?
தள்ளாடி விழுஞ்சேற்றில் விளையும் தீங்கு..
மூவாசைப் புதைசேற்றில் வீழ்ந்து விட்டு,
மூள்சினமும் களவும்பொய் கொள்வார் கெட்டு..
காவாத நல்லொழுக்கப் பயிரை மேயக்
காமமெனும் முரட்டாடு சீறிப் பாயும்.

தின்பது, தின்று தூங்கித்
திரிவது, வாழ்வில் வந்த
இன்பமாய் மனத்தில் எண்ணி
இன்னலின் வலையில் வீழ்வோம்.
ஒன்பது வாயில் ஓட்டை–
ஒழுகிடும் அழுக்கின் மூட்டை,
என்பது புரிந்து விட்டால்,
இவ்வுடல் பற்று நீங்கும்.

ஆளென வளர்ந்து வந்தோம்,
அழகினில் பெருமை கொண்டோம்,
வாளென நாள்கள் வாழ்வை
வகிர்தலை அறிய மாட்டோம்.
மீளவும் பிறவி என்னும்
வெவ்விய தன்மை, புத்தன்
தாளினை அடைந்துய் வோர்க்குத்
தரையினில் உண்டோ அம்மா,?
( வகிர்தல் – அறுத்தல்)

 

மனம் தெளிந்த குண்டலகேசி துறவு பூணுதல்

விண்டநல் மொழிகள் காதில்
வியனுல(கு) அமுதாய்ப் பாயக்
குண்டல கேசி உள்ளம்
கொண்டது தெளிவின் எல்லை
பண்டுநான் இன்னல் உற்றேன்
பரிவுடன் அறமும் அன்பும்
மண்டிடும் புத்தன் காட்டும்
வழியினிச் செல்வேன் என்றாள்

அழகினைத் துறந்தேன், உள்ள
ஆசையை அறவே விட்டேன்,
பழகிய உறவும் நட்பும்,
பற்றுமே மறந்தேன் முற்றும்.
அழுகையில் பிறந்த வாழ்க்கை
ஆசையாம் துன்பத் தீயில்,
மெழுகென அழிதல் கண்டேன்,
மெய்ந்நெறித் துறவு பூண்டேன்.

புத்த மடத்தில் பயி்ற்சி பெறுதல்

துறவியுடன் புத்தமதத் தூயமடம் தனையடைந்தாள்
பிறவிகளின் உண்மைகளும் பிறப்பிறப்பின் தன்மைகளும்
அறம்விளக்கும் நன்மைகளும் ஆசைகளின் புன்மைகளும்
திறமையுடன் பலசமயம் செப்புநெறி பயின்றறிந்தாள்.
வாதத் திறமை

பூவொரு புயலாய் மாறிப்
புலன்களை வென்றாள். எங்கும்
நாவலோ நாவல் என்று
நாட்டினாள் கொடியை நாட்டில்.
மேவிய வாதம் எல்லாம்
வெற்றியும் பெற்றாள். மக்கள்
யாவரும் வணங்கிப் போற்றும்
இணையிலாப் புகழும் உற்றாள்

(அக்காலத்தில், நாவல் மரக் குச்சியைத் தரையில் ஊன்றி, ” நாவலோ நாவல்” என்று கூறி, ” நான் வாதத்திற்கு ஆயத்தமாக உள்ளேன்.என்னுடன் வாதிட யாராவது வருகிறீர்களா?” என்று அறைகூவல் விடுப்பது வழக்கம்)

குண்டலகேசியின் தொண்டும், சிறப்பும்

வறியவர்க்கும் எளியவர்க்கும் முதிய வர்க்கும்
வாழ்வினிலே யாருமின்றித் தவிப்ப வர்க்கும்
அறவியிவள் உதவியவர் துயர்து டைத்தாள்
அறச்செல்வி இவளென்று பெயர்ப டைத்தாள்
நெறியுரைத்த புத்தனவன் வழிந டந்தாள்
நிலையழிந்தும் நெஞ்சுயர்த்தித் தடம்ப தித்தாள்
செறிவுடைய செந்தமிழின் காவி யத்தில்
சிறப்புடனே தனக்கெனவோர் இடம்பி டித்தாள்!

( அறவி- பெண் துறவி)

வாழ்த்து!

மடல்விரி நறும்பூ வாக
மகிழ்ச்சியின் மணமே சூழ்க!
இடரெலாம் மறைந்து போக
இன்பமும் அன்பும் வாழ்க!
கடலொடு விண்ணும் மண்ணும்
கடுவெளி அனைத்தும் வாழ்க!
சுடரொளி வையம் வாழ்க!
துலங்கிடும் உயிர்கள் வாழ்க!

(நிறைவுற்றது)

 

குதூகலம் தரும் குழந்தைப் பாடல்கள் – சதுர்புஜன்

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

 1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
 2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
 3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
 4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
 5. எனது நாடு – செப்டம்பர் 2020
 6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
 7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
 8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
 9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
 10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
 11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
 12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
 13. ஜன கண மன ! – ஜனவரி 2021
 14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
 15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
 16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
 17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
 18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
 19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
 20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
 21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021   
 22. சிட்டுக் குருவி – மே   2021  
 23. ஆகாய விமானம் – ஜூன் 2021
 24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
 25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
 26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
 27. தா தீ தோம் நம் !          – ஆகஸ்ட் 2021
 28. விளையாடலாம் !           – ஆகஸ்ட் 2021
 29. மழையே வா ! – செப்டம்பர் 2021
 30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021

 

 

தோட்டம் போடலாமா !

வருவாய், மாசற்ற காய்கறிக்கு மாடித் தோட்டம்!- Dinamani

நீயும் நானும் சேர்ந்து –

தோட்டம் போடலாமா !

செடியும் கொடியும் வளர்த்து –

உற்சாகம் கொள்ளலாமா !

 

வாசலிலே ஒரு வேப்பமரம் –

கொல்லையிலே ஒரு வாழை !

இடம் இருந்தால் ஒரு தென்னை –

இருந்தால் அது போல் இல்லை !

 

பார்த்து பார்த்து பூச்செடிகள் –

தொட்டியில் வளர்ப்போமா !

மல்லிகை, முல்லை, ரோஜா-

மலர்ச் செடிகள் வைப்போமா !

 

அவரை, வெண்டை, கத்தரி –

என்று செடிகள் நடுவோமா !

காய்கறி அனைத்தும் வீட்டில் –

பயிரிட்டே சுவைப்போமா !

 

பாத்திகள் கட்டி கீரை –

இடையிடையே வைப்போமா !

காய்கனி காய்க்கும் போது – அவற்றை

அனைவர்க்கும் கொடுப்போமா !

 

நீயும் நானும் சேர்ந்து –

தோட்டம் போடலாமா !

செடியும் கொடியும் வளர்த்து –

உற்சாகம் கொள்ளலாமா !

 

வள்ளுவர் தாத்தா !

 

வள்ளுவர் - PLAYBOARD

 வள்ளுவர் என்ற நம் தாத்தா –

 வழங்கியதென்ன சொல் பாப்பா ?

 திருக்குறள் என்ற பேரமுதம் –

 தினமும் பருகிட வா வா வா !

 

அகர முதல எழுத்தெல்லாம் –

ஆதிபகவன் முதற்கொண்டு –

ஆயிரத்திற்கு மேல் திருக்குறளாம் !

அனைத்தும் நம் தமிழ் முத்துக்களாம் !

 

ஒவ்வொரு நாளும் ஒரு குரளை –

நாமும் நன்கு படித்திடுவோம் !

பக்கத்திலேயே பால் பாயசம்  –

இருக்கிறதென்றால் விடுவோமா ?

 

அறத்தின் வழியே வாழ்ந்திடுவோம் !

பொருளின் பெருமை புரிந்திடுவோம் !

இன்பம் சேர்த்தே இருந்திடுவோம் !

இனிமையளித்து உயர்ந்திடுவோம் !

 

தமிழே எனக்கு உயிர் மூச்சு !

தாயைப்போல் தமிழ் ஆயாச்சு !

திருக்குறளை நான் போற்றிடுவேன் !

பெருமையுடனே வாழ்ந்திடுவேன் !

 

வள்ளுவர் என்ற நம் தாத்தா –

வழங்கியதென்ன சொல் பாப்பா ?

திருக்குறள் என்ற பேரமுதம் –

தினமும் பருகிட வா வா வா !

 

எழுதாத கவிதை – செவல்குளம் செல்வராசு

pirantha kuzhanthayai epadi paramaripathu: பிறந்த குழந்தையை எப்படி தூக்கி பாலூட்ட வேண்டும்... பல பராமரிப்பு விஷயங்கள் இதோ - Samayam Tamil

அத்தனை விளையாட்டுப் பொருட்களையும்
நிராகரித்துவிட்டு
தவழ்ந்து வந்து
அடம்பண்ணுகிறாள் பாப்பா
கையிலிருக்கும் புத்தகம்தான் வேண்டுமென்று

வராத அழுகை அழுதும்
செல்லச் சிணுங்கல்களுமாய்
கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் வேறு

பாப்பாவை அரட்டவும்
குறும்புசெய்து சிரிக்கவும்
உப்பு மூட்டை ஏறவும்
“அம்மா வஞ்சிட்டா” எனப்
புகாரளிக்கவுமாய்
இடையிடையே வந்துபோகிறான் மித்திரன்
‘விளம்பர இடைவேளைகளில்’

“வெங்காயம் கூட வெட்டித் தருவதில்லை”
“பாப்பாவையாவது பாத்துக்கோங்களேன்”
“சம உரிமை பற்றி பேச்சு மட்டும்தானா”
சமையலறையிலிருந்து கிழத்தி…

தெரியாத வார்த்தைகளை
கவிதைகளில் எழுதியிருக்கிறார்
மௌனன் யாத்திரிகா
அடிக்கடி அகராதி புரட்டவேண்டியுள்ளது

மீண்டுமொரு விளம்பர இடைவேளையில்
காகிதம் எடுத்துவந்து
கப்பல் செய்துதரக் கேட்கிறான் மித்திரன்

கவிதை படித்தலும்கூட
எளிதான காரியமாயில்லை.
எங்கிருந்து படைப்பது?

வந்துவிடு! வந்துவிடு –   வளவ. துரையன்  

எங்களால் கண்டிக்கப்பட்ட இறுதிவரை மிகவும் அழிக்கப்பட்டது. கவிதை, கவிஞர்கள் பற்றி பெரிய மனிதர்கள். "ஒரு மார்பளவு என்னுடன் சுற்றித் ...

வந்துவிடு! வந்துவிடு
வளவ. துரையன்
உன்னை என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை.

இக்கணம் வரமாட்டாய்
என நினைக்கையில்
வார்த்தை ஜாலத்தோடு
வந்து நிற்கிறாய்

மூன்று நான்கு நாள்கள்
காத்திருக்கும் போது
கண்ணாமூச்சி ஆடுகிறாய்

உன்னையே எண்ணியிருப்பதால்
என்னைப் பித்தன் என்கிறார்.

உனக்கும் எனக்கும் இடையே
நிலவும் பாசம் நிறைந்த பாலில்
வெண்ணெய்போல் பதுங்கியிருக்கிறது,

நினைத்தவுடன் மனம் கனத்து
வெளியே வந்துவிட்டால்
காலம் காலமாக இருந்துவரும்
மரபென்ன ஆகுமோ?

ஆனால் இப்படி
வராமலே இருந்துவிட்டால்
வழிவழி வந்தஎன்
வாய்ச்சொல்லும் பெயரும்
தேய்ந்தழிந்து போகும்.

தவழ்ந்துவரும் மழலையைத்
தாவி அணைப்பதுபோல
தளிர்க்கரம் பற்றிக்
காதலிக்குத்
தனிமுத்தம் தருவதுபோலக்
காத்திருக்கிறேன்.

வந்துவிடு வந்துவிடு!
தாளெடுத்து விட்டேன்.
வந்துவிடு!

 

Why I Write | Neuro Vantage

கொள்வாரும் இல்லாமல் கொட்டிக்கிடக்குதே! – ராம்சு

பூக்களின் தனித்துவமிக்க வாசனைப் பண்புக்கு காரணம் என்ன? - Quora

தோட்டத்துச் செடி பேசும்!                                     கேட்டதுண்டோ? மெதுமெதுவாய்த்
தும்பி திரியும் காலை
மௌனம் கலைத்தபடி.

மலர் சொல்லும்:

(தாழையாம் பூமுடிச்சு மெட்டு)

துளும்பும் தேன் சிந்திடாம
சுகந்தமணம் நழுவிடாம
மடல்குவிந்து மொட்டரும்பா
இருளகலக் காத்திருந்தேன்!

உதயமுற அருணன் வந்தான்
இதழ்விரிய முறுவல் பூத்தேன்!
அணைத்துசுக கிரணம் தந்தான்!
மலரெனவே குலுங்கி நின்றேன்!

கண்ணிற்கு விருந்தாவேன்!
கமழும் என் மணம் முகர்ந்தால்
உள்ளம் உவகை கொள்ளத்
துள்ளும் காதலும் அரும்பும்!

இசைபாடி அலையும் வண்டு
பசியாரத் தேன் கொடுப்பேன்!
மகரந்தம் கொண்டு தந்தே
பிஞ்சுவிட வகையும் செய்யும் !

சோலைச்செடி சொன்னது:

 

(வானில் முழு மதியைக்கண்டேன் மெட்டு)

கொத்துகொத்தா போகன்வில்லா,
குலைகுலையாச் சரக்கொன்றைப்பூ!
செந்தாழை புதரில் மலர்ந்தால்
தாமரையோ குளத்தில் தனியா!

ஒரேமண்ணில் உருவானாலும்
ஒன்று போல் மற்றது இல்லை
செடிக்குச்செடி இலைமலர் காய்
வகைவகையாம்! விதவிதமாம்!

தன்னொத்த செடி எனிலோ தம்
தனித்தன்மை கெடாதுபேணி
நிறம் மணம் குணம் மாறாமல்தான்
செடிமரபு காத்து நிற்கும்!

உண்பதுவோ கூளம் எனினும்                                    நிலைமாற்றி வாசமுமேற்றி
மனங்கவரும் வண்ணமலராய்
வழிபடவே நானும் தருவேன்!

கழனியிலே நெல்லாவேன் வயக்
காட்டினிலே காய் கிழங்காவேன்!
கொல்லையிலே கடலை துவரை
பந்தலிலே அவரை புடலை

தோட்டத்தில் மா பலா வாழை,                                            தோப்பிலோ இளநீர் நுங்காய்
பசிபோக்கும் நல்லுணவாவேன்!
சுவைகூட்டும் திரவிய(மு)மாவேன்.

செரிவுசெய்ய வெற்றிலை பாக்கு
ஜுரத்திற்கு சுக்கும் மிளகும்
கபத்திற்கு திப்பிலி கிராம்பென
பிணிதீர்க்கும் மருந்துமாவேன்!

உடுத்தும் உடைக்குப்பருத்தி
இருக்கக்குடில் படுக்கவோர் பாய்
இசைக்க வேய்ங்குழல் வீணை
ஒளிதரவிளக்கு அனைத்துமீவேன்!

மரம் சொன்னது:
(கந்தன் திருநீறணிந்தால் மெட்டு)

குருவி, மரங் கொத்தி, காக்கை
குயில் கிளி கீரி அணில்
குரங்கோணான் பாம்பெல்லாம்                                 கூடிவாழும் மாமரமாவேன்.

உழைத்துக் களைத்து வந்தோர்
இளைப்பாற நிழல்தருவேன்
பசிதீரப் பழங் கொடுப்பேன்!
இசையமுதம் குயில் வழங்கும்!

தேடிவரும் அனைத்துயிர்க்கும்
உணவளித்து உதவி செய்வேன்
வேர்தேடும் எந்தன் உணவைத்
தாய்பூமி பரிந்தூட்டுவாள்!

காற்றுந்தான் மாசடைந்தால்
கரிவாயு நான் உட்கொண்டு
தூயதாய் மாற்றி விடுவேன்
சுகசுவாசம் நீவிர் பெறவே!

மென்மேலும் மரங்கள் நட்டால்
மேதினி செழிக்க வளர்ந்து
கார்மேகம் கூட்டி வந்தே
கணிசமாய் மழை தருவேன்!

வெட்டி விறகாக்குவாயோ, அன்றி
விக்கிரகந்தான் செய்வாயோ
உமக்கே நான் ஆட்செய்வேன்
இயற்கையென்னை வகுத்தபடி!

ஆறறிவு உள்ளவர் போல்
ஆய்ந்தறிதல் எமக்கு இல்லை!
இன்னா செய்தவர்க்கும்
இனியசெய்தல் எங்கள் பணி!

நான்:
(தாழையாம் பூமுடிச்சு மெட்டு)

மண் தோண்டித் தேடிடினும்
மாவும் பார்க்க இயலுமோ?
காய்கிழங்கு தானியத்தில்
எங்கிருந்து சேர்ந்ததது?

ஆண்டாண்டாய் பயிர் செய்து
டன்டன்னாய் விளைத்த பின்னும்
உழுதமண்ணும் குறைவதில்லை
விந்தையிலும் விந்தையே!

சிறுவிதையுள் மறைந்திருக்கும்
மெத்தப்பெரும் ஆலமரம்!
அத்துவைத மாயைதானோ
ஆண்டவனின் ஜாலமோ!

தான்வளர்ந்த கொடி விலக்கி
தனிநிற்கும் முதிர்கனிகள் முழுமைநிலை போதிக்கும்!
மோட்சமொன்றே யாசிக்கும்!

இயற்கையது வகுத்தநெறி
வழுவாப்புல் லுயிர்கள் கண்டும்
தான் வாழும் முறை மாற்றார்,
மரபணுவை மாற்றுகின்றார்!

மரமே தான் குரு என்றால்
மனிதர் மதியார் என்றே
இறைவனையே மரத்தடியில்
குருவெனவே அமர்த்தினரோ?

கொள்வாரும் இல்லாமல்
கொட்டித்தான் கிடக்கின்றது
மெய்ஞான போத மது
மௌனமாய் மரத்தடியில்!

– ராம்சு

கம்பன் சொல்லும் கதை – கவிஅமுதன்

Stream ISKCON Desire Tree | Listen to Rama Katha - Seminar by Chaitanya Charan Das (Hindi) playlist online for free on SoundCloud

கரன் – இராமன் :

முன்கதை:

பரசுராமன், இராமனைப் பார்த்து: ‘இராமா! என்னிடம் இருக்கும் இந்த வில் மகாவிஷ்ணு அளித்தது. நீ மிதிலையில் ஒடித்த வில்லுக்கு சமானமானது. இதை வளைத்து நாணேற்றுவாயா?”- என்று சவால் விடுகிறார்.
இராமன் அந்த வில்லை எடுத்து நாணேற்றி, கணை செலுத்த, அது பரசுராமர் தவத்தை எல்லாம் வாரியெடுத்தது. பரசுராமன், இராமனை வாழ்த்தி விடை பெறுகிறான்.
இராமன் வருணனிடம் அந்த வில்லை சேமிக்கக் கொடுத்தான்.
இந்தச் சிறு நிகழ்வை அனைவரும் மறந்திருப்பர். இருவர் அதை மறக்கவில்லை. அது இராமனும், வருணனும்.

பின் கதை:

ஆரண்ய காண்டத்தில், சூர்ப்பனகை இராமனிடம் தன் காதலைக் கோரித் துடிக்கிறாள். இலக்குவனால் மூக்கறுபடுகிறாள். காட்டின் மன்னனான அரக்கன் கரனிடம் முறையிடுகிறாள். கரன் தன் பெரும் படையுடன் இராமனைத் தாக்க வருகிறான்.

இராமன் சீதையைக் குகை ஒன்றில் வைத்து, இலக்குவனை அவளுக்குப் பாதுகாப்பாக வைத்தான். அந்தப் பெரும் படைக்கு முன், இராமன் தனியனாக வில் பிடித்து சிங்கம் போல நின்றான். இந்த யுத்தத்தைக் காண – வானத்தில் தேவர்கள் குழுமியிருந்தனர். அவர்கள் இராமனின் வெற்றியை நம்பியிருந்தனர். ‘இந்தப் பெரும் படைக்கு முன் ஒரு தனிமனிதன் என்ன செய்ய முடியும்’ என்று தேவர்கள் சற்றே சந்தேகப்பட்டனர். ‘சிங்கம் சிங்கிள் ஆகத்தான் வரும்’ என்பதை மறந்தனர் போலும்.
போர் சமமாக நடந்து கொண்டிருந்தது.

கம்பர் சொல்கிறார்:
“கள்ள வினை மாய அமர் கல்வியின் விளைத்தான்;
வள்ளல் உருவைப் பகழி மாரியின் மறைத்தான்;
உள்ளம் உலைவுற்று, அமரர் ஓடினார் ஒளித்தார்;
வெள் எயிறு இதழ்ப் பிறழ, வீரனும் வெகுண்டான்.”

அதாவது, கற்ற வித்தையால், வஞ்சம் நிறைந்த மாயப்போர் செய்த கரன் இராமன் உருவை அம்பு மழையால் மறைத்தான். அதைக் கண்ட தேவர்கள் ஓடி ஒளிந்தனர். உதட்டைக் கடித்த இராமன் கோபங்கொண்டான் .

கம்பர் சொல்கிறார்:
‘முடிப்பென் இன்று, ஒரு மொய் கணையால்’ எனா,
தொடுத்து நின்று, உயர் தோள் உற வாங்கினான்;
பிடித்த திண் சிலை, பேர் அகல் வானிடை
இடிப்பின் ஓசை பட, கடிது இற்றதே’

இராமன் “நான் இப்பொழுது விடுக்கும் இந்த ஓர் அம்பினாலே – இந்தக் கரனை முடிப்பேன்” என்று மனதில் கருதினான். ஓர் அம்பை வில்லில் பூட்டி நாணை தோளையளாவும்படி வலுவாக இழுத்தான். ‘நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வர். ஆனால், தெய்வம் ஒன்று நினைக்க நடந்தது வேறு ஒன்று’ என்பது எவ்வளவு விசித்திரம்! இராமன் கையிலிருந்த வலிய வில்லானது – அகன்ற வானத்திலுண்டாகும் இடி முழக்கம் போன்ற ஓசையுண்டாகுமாறு விரைவிலே ஒடிந்தது.

கம்பர் இப்பொழுது வானில் இருந்த தேவர்களின் மனநிலையைப் படம் பிடிக்கிறார். இராமனின் வெற்றியைப் புகழ்ந்து பேசிக்கொண்டே யுத்தத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தேவர்கள் – இராமன் வில் ஒடிந்தது கண்டு நடுக்கமுற்றார்கள். அவர்கள் நடுங்கினதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. இராமனுக்கு அருகில் வேறொரு வில் இல்லை. இது அவர்கள் அச்சத்தை உச்சத்திற்குச் கொண்டு சென்றது.
“இனி அரக்கன் வெற்றி கொள்வானோ? அய்யோ, எமக்கு உதவி செய்ய யாரும் இல்லையே. இனி இந்த அரக்கர்களால் நாம் படும் துயர் தொடருமே” – என்று கலங்கினர்.

களத்தில் – இராமன் தனது வில் முறிந்து, தான் தனியாக இருப்பது பற்றி மனத்தில் கருதவில்லை. தனது நீண்ட கையை பின் புறம் செல்லுமாறு நீட்டினான். வானத்தில் இருந்து புலம்பிக்கொண்டிருந்த தேவர்களில் வருண தேவனும் ஒருவன். இராமன் கைநீட்டியது கண்டவுடன் – புரிந்து கொண்டான். நம்மைத்தான் இராமன் குறிக்கிறான் என்று உணர்ந்தான். பரசுராமனின் வில்லை இராமன் தன்னிடம் கொடுத்து ‘இந்த வில்லை பாதுகாப்பாய்’ என்றது அவன் நினைவுக்கு வந்தது. அதைத்தான் இராமன் கேட்கிறான் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. ‘காட்டில் மழை’ போல விரைந்து (வருணன் தான் மழைக்கு அதிபதி ஆயிற்றே) இராமன் கையில் அந்த வில்லைச் சேர்ப்பித்தான்.

பிறகு, காட்சிகள் எதிர்பார்த்தபடி நடந்தது. இராமன் கரனது தேரை அழித்தான். அவனது வலக்கரத்தை வெட்டினான். பின்னர் கழுத்தை வெட்டிக் கொன்றான். அதைக் கம்பர் எழுதும்போது உவமிக்கிறார்.

‘வலக்கரத்தைப்போல கழுத்தறுபட்டது’ என்றார். அதேசமயம் இராவணனது ‘வலக்கரத்தைப் போன்ற கரனின் கழுத்தறுபட்டது’ என்று இரண்டையும் இணைத்துப் பின்னிக் கவி புனைகிறார்.

யாம் ரசித்த இந்த கம்பன் கதையை யாவரும் ரசிப்போமே!

 

 

 

திரை ரசனை வாழ்க்கை 10 – எஸ் வி வேணுகோபாலன்

Server Sundaram (1964)

சர்வர் சுந்தரம்: தனித்துவ முத்திரை

நாகேஷ் எனும் அபாரமான திரைக்கலைஞர் மிகவும் புகழ் பெற்றிருந்தவர் என்றாலும், அவரது அசாத்திய திறமைக்கு ஏற்ற அளவில் இன்னும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்று ஓர் உள்ளுணர்வு எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அவரது படங்கள் சிலவற்றை நினைத்த மாத்திரத்தில் இந்த உணர்வு இன்னும் தீப்பற்றி எரியும். அன்பே வா, தேன்மழை, உலகம் சுற்றும் வாலிபன், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை….இதெல்லாம் பார்க்கும் போது கூட அல்ல, நம்மவர் படத்தை அசை போட ஆரம்பித்தால், நாள் கணக்கில் உடன் வாழ ஆரம்பித்து விடுவார் நாகேஷ். உள்ளபடியே மகத்தான நடிகர் அவர்.

சர்வர் சுந்தரம், கே பாலச்சந்தரின் ஆக்கங்களில் அருமையான படைப்பு. ஒரு புத்திசாலியான இயக்குநர் என்று பேசப்படுபவர் அவர். இந்தப் படத்தின் திரைக்கதை அவரது; இயக்கம், புகழ் பெற்ற இரட்டையர் கிருஷ்ணன் பஞ்சு. அண்மையில் ஒரு வித்தியாசமான நேர்காணலில், டி எம் கிருஷ்ணா, ரசிக அனுபவத்தைச் சிறப்பாக விவரிக்கையில், புனைவு தான் என்றாலும் ஒரு திரைப்படக் காட்சியில் நீங்கள் அழுவது இல்லையா, அப்படி ஒரு கலைஞனாக உங்களை என்னென்ன உணர்வுகளுக்கு உட்படுத்த வேண்டுமோ அந்தந்த உணர்வுகளுக்கு ஆட்படுத்த முடியும் என்று சொல்லி இருப்பார்.

கேபியின் திரைக்கதை மட்டுமல்ல அவரது வசனத்திற்கும் அந்த சக்தி உண்டு. இந்தப் படம் அந்த வரிசையில் அபாரமான எல்லைகளைத் தொட்டுத் திரும்பிய ஒன்று. ஆனால் நாகேஷ்,இந்தக் காட்சிப்படுத்தல், வசனங்களின் துணை, இசை இவற்றுக்கும் அப்பால் தமது உடல் மொழியை அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றித் திக்கு முக்காட வைக்கும் இடங்கள் எண்ணற்றவை.

அம்மைத் தழும்புகள் மலிந்த சுவாரசியமற்ற முகத்தின் நிமித்தம் சுந்தரம், தனது திரையுலகக் கனவுகளை எரித்துக் கொள்ளும் கண்ணீர்த் துளிகள் அல்ல, பின்னர், நெருங்கிய நண்பனின் உதவியால் அடிக்கும் லாட்டரி பரிசு நுழைவில் திரை நட்சத்திரமாக மின்னித் தமது தாயை இழக்கும் தருணத்தில் அல்ல…சட்டென்று சட்டையை மாற்றிக் கொண்டு சர்வர் உலகத்திற்குத் திரும்பும் எதார்த்தப் புறம்பான சித்தரிப்பில் வெடிக்கும் தழுதழுப்பில் அல்ல, இடையே இல்லையென்றாகி விடும் காதலில் அல்ல, ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையைச் சித்தரிக்கும் முன் பாதியில் நாகேஷ் நடிப்பு இப்போது நினைத்தாலும் பிரமிக்க வைப்பது.

தன்னிடம் இருக்கும் 5 பைசாவுக்கு சோடாவோ, வாழைப்பழமோ கூடக் கிடைக்காது நடக்கத் தொடங்குகிறான் சுந்தரம். தன்னைத் துரத்தும் பசியைத் துரத்தும் சுந்தரத்தின் பாதையில் உருளும் ஒற்றை ஐந்து பைசா நாணயம், தன்னிடம் உண்மையிலேயே காசு இல்லை என்று பின்னர் ஓட்டல் முதலாளியிடம் அவன் சொல்லும் நாணயம், இரண்டுக்கும் இடையே அவன் தன்னிடம் இருப்பதாக உணரும் 15 நயா பைசாவின் நினைப்பில் அவனடையும் பரவசமும், அந்த ஓட்டல் நாற்காலியை அவன் முழுவதும் நிறைத்து அமரத் துடிக்கும் துடிப்பும், சர்வரோடு நிகழ்த்தும் உரையாடலும் ஒரு காவியம். சுந்தரத்தின் ஏழ்மையை மறந்து பார்க்க முடியாத காட்சி. எல்லோருக்கும் எல்லாம் சாத்தியமுள்ள உலகத்தில் பெரும்பான்மை மக்களிடம் ஏதும் இல்லாமை ஒரு கசப்பான நகைச்சுவை. அதன் உருவகம் சுந்தரம்.

காசு இல்லாமல் சாப்பிட்டால் பைசாவுக்கு 10 வாளி தண்ணீர் இறைக்கணும் என்ற முன் தகவலால், தன்னிடம் இல்லை என்றாகிவிட்ட 14 பைசாவுக்கு அவனாகவே எங்கே கிணறு, எங்கே வாளி என்று கேட்கும் இடத்தில் தனது சொந்த இடத்திற்கு மீள்கிறான் ஏதுமற்றவன். அவனது பரவசம் சட்டென்று இறங்கி, சுயபரிதாபம் கவ்விக் கொள்கிறது அவனை. மிகச் சில நிமிடங்கள் நீடிக்கும் அவனுக்கும் முதலாளிக்குமான உரையாடல் காட்சியில் நாகேஷ் விவரிப்புக்கு அப்பாற்பட்ட சித்தரிப்பில் சுந்தரம் பாத்திரத்தை எங்கோ உயர்த்தி நிறுத்தி இருப்பார்.

தான் சர்வர் என்பதைத் தாயிடம் மறைத்தது நண்பனால் வெளிப்பட்ட பின்னான காட்சியில் எஸ் என் லட்சுமியும், நாகேஷும் வழங்கி இருக்கும் நடிப்பு படத்தின் இன்னுமொரு காவியத் தலம்.

Server Sundaram - Nagesh cracks joke with girls - YouTube தற்செயலாகச் சுற்றுலாத் தலத்தில் நாயகி கே ஆர் விஜயாவின் அன்புக்குப் பாத்திரமாகி விடும் சுந்தரம், தனது வெகுளித் தனத்தை அவள் ரசிப்பதாகச் சொல்லும், (ஐ லைக் யுவர் இன்னொசென்ஸ்) ஆங்கிலச் சொல்லின் பொருள் அறியாமல், இது கூட அறியாத வெகுளியாக இருக்கோமே என்று சொல்லிக் கொள்ளும் இடம் உள்பட படத்தில் நிறைய இடங்கள் உண்டு சொல்ல.

சுந்தரம் தனது சட்டைப்பையில் போடும் நாணயம் நழுவிப் போவது போலவே, ஓட்டல் முதலாளி மகளின் நேசத்தைக் காதலாக நினைத்து நிரப்பிக் கொள்ள, அதுவும் நழுவிப் போகிற இடத்தில் அந்த இழப்பைப் பொறுக்க மாட்டாதவனாகத் துடிக்கிறான். யாராலும் விரும்பப் படாதவனாகத் தன்னை உணர்ந்து தவித்த ஒருவன், தன்னை நேசிக்கும் மனிதர்கள் தன்னைப் புரிந்து கொள்ள முடியாதபோது உணரும் வறுமை இந்தப் படத்தில் மறைபொருளாக அமைந்திருக்கிறது.

திரைப்பட வாய்ப்பு கிடைக்காது என்று அவமதிப்புக்கு உட்படுத்தபடும் இடத்தில் மனநலம் பாதிப்புற்றவனாக அவர்களை அரட்டியுருட்டி மிரட்டும் இடத்தில், அது நடிப்பு என்றதும் திரையுலக ஆட்கள் அசந்து போகின்றனர். எந்த வாழ்க்கைக்கு அத்தனை அவதிப்பட்டோமோ அதற்கான பொருள் ஒன்றுமில்லையோ என எண்ணுமிடத்திற்கு வாழ்க்கைச் சூழல் அவனைக் கொண்டு சேர்க்கிறது. எதையும் தொலைக்காதவனாக இருக்க ஒரே வழி, எதையும் இருப்பில் கொள்ளாதவனாக இருப்பது தான் என்கிற வேதாந்தியாக அவனைக் கொண்டு நிறுத்துகிறார் கேபி. அந்த இடத்தை அவர் கொஞ்சம் கடந்திருந்தால், படத்தை இன்னும் மகத்தான இடத்திற்கு அவரால் உயர்த்தி இருக்க முடியும். இருக்கட்டும்.

மிகச் சிறந்த திரைக்கதை, அருமையான வசனங்கள், பஞ்சமற்ற நகைச்சுவை, சிறப்பான பின்னணி இசை, சிறப்பான பாடல்கள், நெகிழ வைக்கும் நடிப்பு என்று அமைந்திருக்கும் படம் சர்வர் சுந்தரம்.

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் இந்தப் படத்திற்கான பின்னணி இசையில் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் உழைப்பெல்லாம் நிறைந்திருந்தது என்று சொல்லப்படுகிறது. கவிஞர் வாலியின் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடல் டி எம் சவுந்திரராஜன் – எல் ஆர் ஈஸ்வரியின் எழிலான குரல்களில் எல்லாக் காலத்திற்குமான பாடலாக இருப்பது, பத்தே நிமிடங்களில் எம் எஸ் வி மெட்டமைத்ததாம்! ‘சிலையெடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு’, ‘தத்தை நெஞ்சம்’ இரண்டும் பி சுசீலாவின் தேனிசைக்குரலில் இனிப்பவை. இரண்டாவது சொன்ன பாட்டில், கொஞ்சும் அந்த தத்தை, புகழ் பெற்ற பலகுரல் கலைஞர் சதன் ! பிபி ஸ்ரீனிவாஸ் – பி சுசீலா இணைகுரல்களில் ‘போகப் போகத் தெரியும்’ ஓர் அழகான காதல் கவிதை. இந்தப் பாடல்கள் எல்லாம் கவிஞர் கண்ணதாசன் படைத்தவை.

Server Sundaram - Nagesh-Manorama first film - YouTube

எஸ் வி ரங்காராவ், மனோரமா, ஐ எஸ் ஆர் புடை சூழ நாகேஷ் நடிக்கப் போய் இறங்கும் அதிரடிக் காட்சி அதகளம். அப்பாவிக் கணவன் படக்காட்சியில் அடிக்கும் காற்றும், பெய்யும் மழையும் படம் பார்ப்போர் மீதும் அடிக்கும், பெய்யும். திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு சிரமங்களை, அதிசயங்களை, உழைப்பை சர்வர் சுந்தரம் படத்தில் அற்புதமாகக் கொண்டு வந்திருந்தனர்.

என்னதான் உயர்ந்தாலும், கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாது என்பதுதான் படத்தின் தத்துவம் என்று மேற்கோள் காட்ட, நடிகரின் மாளிகையில் சர்வர் உடை எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். அவரது அசத்தல் நடிப்பைப் பார்த்து, நாகேஷின் சொந்த வாழ்க்கையைப் பேசிய படம் தானோ என்று கூட சில விமர்சகர்கள் எழுதி இருக்கின்றனர்.

மேஜர் சுந்தரராஜன் எதிரே, சட்டைப்பை ஓட்டையின் வழியே தனது வாழ்க்கையின் பாதையைத் தேடும் நாகேஷின் கண்களை ஒருபோதும் மறக்க முடியாது. விம்மித் தணியும் அவரது குரல், வெயிலும் மழையுமாய் அழுதும் சிரித்தும் வெளிப்படும் அவர் முகம், தமிழ்த்திரையில் தனித்துவ முத்திரை.

எஸ்.எம்.ஏ.ராம் அவர்களின் வெளி வட்டங்களும் உள் வட்டங்களும் நாவல் – அழகியசிங்கர்

velivattangal : S.M.A.RAM : Free Download, Borrow, and Streaming : Internet Archive

வெளி வட்டங்கள் என்ற எஸ்.எம்.ஏ.ராம் நாவல் 1979ஆம் ஆண்டில் வெளிவந்தது.

ராமின் இந்த நாவலும், அசோகமித்திரனின் ஆகாயத் தாமரை என்ற நாவலும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. 

தொடர்ந்து புத்தகங்களை வாசிக்கும்போது அதில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை ஞாபகம் படுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒரு முறை சொல்லி பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்..

சுகன்யா என்ற முக்கியமான கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு இந்த நாவலை ராம் புனைந்திருக்கிறார். சுகன்யா தான் சந்திக்கிற மனிதர்கள்தான் இந்த நாவல். சுகன்யா வழியாக இந்த நாவல் எடுத்துச் செல்லப்படுகிறது. உண்மையாய் ராம்தான் இந்த நாவலை சுகன்யா மூலம் நடத்திச் செல்கிறார் என்று சொல்லலாம்.

முதல்ல நாவலை ஆரம்பிக்கும்போது சுகன்யா மூலமாக ராம் என்ன சொல்ல வருகிறார் என்று பார்க்க வேண்டும்.

சுகன்யா மாடியிலிருந்து கீழே இறங்கி வருகிறபோது, பூஜை அறையில் கிணுகிணுவென்று ஒரு மெல்லிய மணிச் சத்தம் கேட்டது. இந்த சத்தம் அப்பாவுக்கு மட்டுமே தெரிந்திருக்கிற ஒரு காலப்பிரமாணத்தின் கணக்கான இடை வெளியோடு அவ்வப்போது விட்டு விட்டுஎழுப்பப்படுகிற ஏதோவொரு பாரம்பரிய சங்கேதம் என்று மட்டும் அனுமானித்துக் கொண்டாள்.

நாவல் ஆரம்பத்திலேயே சுகன்யா எப்படிப்பட்டவள் என்பதைக் கொண்டு வருகிறார்.

நாவலின் ஆரம்பம் சுகன்யா, முடிக்கும்போது சுகன்யா. இப்படி நாவல் ஒற்றைப் பரிமாணத்துடன் ஆரம்பம் முடிவு கொண்டுள்ளது.

இந்த நாவல் அலுவலகம், வீடு என்று விவரித்துக்கொண்டு போகிறது. அலுவலகத்தில் அவள் அடிக்கடி சந்திப்பது இந்திரா, வல்கர் வெங்கடாச்சாரி, ஸ்டோர் கீப்பர் ரகுராமன், மானேஜர்.

சுகன்யா யார்? தன்னையே கேள்வி கேட்கிற பெண். எல்லாவற்றுக்கும் எதாவது அர்த்தம் கண்டுபிடிக்கிற பெண். இந்த நாவல் 70களின் இறுதியில் வெளிவந்துள்ளது. 70களில் இளைஞர்களிடம் காணப்பட்ட சில குணாம்சங்கள் இந்த நாவலில் தெரிய வருகிறது.

முழுதாக நாத்திகமாக மாறாமல் கடவுள் மீதும், சம்பிரதாயங்கள் மீதும் அவநம்பிக்கைக் கொள்கிற போக்கு.

அலுவலகம் வீடு என்று இரண்டு இடங்களில்தான் இந்தக் கதை நடைபெறுகிறது. அலுவலகத்தில் சுகன்யா சந்திக்கிற மனிதர்களைப் பற்றி இந்தக் கதை சொல்லப் படுகிறது.

மானேஜர் அறைக்குச் சென்றாள் சுகன்யா. மானேஜர் சுற்றிச் சுற்றி எதையோ அலுவலகல் சம்பந்தமாகப் பேசினார். சுகன்யா மானேஜர் அறையிலிருந்து விடுபடும் சமயத்தில் திரும்பவும் கூப்பிட்டு, “ஒண்ணுமில்லே சுகன்யா..உங்கப்பா மகா வைதீகி..அவரோடா பொண்ணா இருந்துண்டு, நீ இப்படித் தோள் வரைக்கும் தெரியற மாதிரி கையே இல்லாத ரவிக்கை போடறது பொருத்தமாய் படலே…சரி, நீ போம்மா” என்றார் மானேஜர்.

மானேஜரை நினைத்துச் சிரித்தாள் சுகன்யா. மேலே மின்விசிறி ஓய்வே இன்றி ஒரே வட்டத்தில் ஆவேசமாய் சுற்றிக் கொண்டிருந்தது. எந்த லட்சியத்தைப் பிடிக்க இந்த ஆவேசம்? என்று கேட்டுக் கொண்டாள். இதுதான் சுகன்யா. ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி இது மாதிரி நினைத்துக் கொண்டிருப்பாள். இந்த நாவல் முழுவதும் இப்படி சுகந்தா நினைப்பதைத் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார் ராம்.

அவள் கல்யாணத்தைப் பற்றிப் பேசும்போது சுகன்யா, ஒரு சராசரித் தாம்பத்திய வாழ்க்கையைப் பத்தி ஒரு இளம் பெண்ணுக்கு எழகின்ற  எல்லா மாமூல் கற்பனைகளும் அவளுக்கு மட்டும் ஏனோ அருவருப்பாக இருக்கிறதாகச் சொல்கிறாள்.

தன்னுடன் இருக்கும் அத்தையைப் பார்த்துக் கேட்கிறாள். ‘அத்தே, நீ ஒரு வாழ்க்கையை வாழ முடியாமப் போயிட்டதுக்காக இன்னிக்கு வருத்தப்படறே, நானோ எங்கே அப்படியொரு வாழ்க்கையை வாழ வேண்டி வந்துடுமோன்னு வருத்தப்படறேன் – இல்லே, பயப்படறேன்.’

இந்த நாவல்களில் மூன்று ஆண்களைச் சந்திக்கிறாள். சிவகுரு, ரகுராமன், நந்தகுமார். இந்த மூன்று பேர்களில் நந்தகுமார் என்பவனிடம் தன் மனத்தைத் திறக்கிறாள்.

சிவகுரு நளினம் என்கிற பத்திரிகையில் பணி புரிபவன். அவன் இந்திராவின் அண்ணன். அந்தப் பத்திரிகையின் சார்பாக அவன் சுகன்யாவைப் பேட்டி எடுக்க வருகிறான். அவள் பேட்டி கொடுக்கவில்லை. ஆனால் அவள் ஆத்திரத்தோடு பேசுவதையெல்லாம் குறிப்பிட்டு அந்தப் பத்திரிகையில் விளம்பரப்படுத்துகிறான்.

நந்தகுமார் இந்தப் பத்திரிகையில் வெளிவந்த பேட்டி மூலம்தான் அவளைச் சந்திக்கிறான்

சம்பிரதாயமாக சுகந்தியைப் பெண் பார்க்க அவள் அப்பா ஏற்பாடு செய்கிறார். அன்றுதான் அவள் நந்தகுமார் கூப்பிட்ட சேம்பரோட ஆண்டு விழா கூட்டத்தில் பேச ஒப்புக்கொண்டு போய் விடுகிறாள்.

நந்தகுமாரை அவளுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவள் அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை.

அந்தக் கூட்டத்தில் பேசிவிட்டு நாற்காலியில் அமர்ந்தபோது தன்னை ஒரு புது சுகன்யாவாய் உணர்ந்தாள். நந்தகுமார் வரிசையாக எல்லோருக்கும் மாலை அணிவித்துக் கொண்டு வந்தான். சுகன்யாவின் கழுத்திலும் ஒரு மாலை நழுவியபோது கழுத்துப் பட்டையில் பரவுகிற அந்தக் குளிர்ந்த குறுகுறுப்பில்அவள் மட்டும் முதன் முதலில் ஒரு பழக்கப்படாத பரவசத்தை அனுபவித்து உடம்பைச் .சிலிர்த்துக் கொண்டாள்

அவளுடைய தந்தை சாகிற சமயத்தில் அவளிடம் நந்தகுமாரைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார்.இனிஷியல் போட்டுக்கற யுகத்திலே கோத்திரம் என்னத்துக்கு என்கிறார்.

ஒரு துக்கத்தைப் பற்றிச் சொல்லும்போது நாவலாசிரியர், ஜனனம், கல்யாணம், மரணம் எல்லாமே வெறும் சடங்குகள்தான், மந்திரம் சொல்ல வைக்கிற சடங்குகள் தான், மந்திரம் சொல்ல வைக்கிற சடங்குகள். அட்சதை தெளிக்கிற சடங்குகள், சிரித்தோ அல்லது அழுதோ புரிந்துகொள்ளப் படுகிற சடங்குகள் என்கிறார்.

சுகன்யாவின் அப்பா இறந்தபோது, துக்கம் விசாரிக்க நந்தகோபால் வரவே இல்லை. அவன் ஊருக்குப் போய்விட்டான். அவனைப் பற்றி தகவலே இல்லை.

தொடர்பே இல்லாத நந்தகுமார் போன் செய்கிறான் சுகன்யாவிற்கு. பல யுகங்களுக்குப் பின் மீண்டும் நிகழ்வதுபோல அவளுக்குத் தோன்றியது.

நந்தகோபாலைப் பார்க்க மயிலாப்பூரில் உள்ள அவன் இருக்குமிடத்திற்குப் போகிறாள் சுகன்யா.

ஊருக்குச் சென்றவுடன், உடம்பு சரியில்லாமல் படுத்துக்கொண்டதை அவன் குறிப்பிடுகிறான்.

‘சுகன்யா, வெறும் அறிவின் பலத்தில் மட்டும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துட்டுப் போயிட முடியும்னு நான் நம்பிண்டுருந்த நம்பிக்கை விழுந்ததுடுத்து என்கிறான் நந்தகோபால்.

சுகன்யா அவனுடன் பழகும்போது அவனுடைய மாற்றாகத்தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதனால் அவளை அறியாமல் அவனிடம் அவளுக்கு ஓர் ஈர்ப்பிருந்தது.

நந்தகுமார் அவளைக் காதலிப்பதாகச் சொல்கிறான். அவள் கல்யாணம் என்கிற சடங்கில் நான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை என்கிறாள். இது திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆணிற்கும் பெண்ணிற்கும் ஏற்படுகிற குழப்பம். அதைத் தெளிவாகக் கொண்டு போகிறார் ராம்.

கடைசியில் முடிக்கும்போது ராம் இப்படிக் கூறுகிறார். ‘தொடல்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அவை சடங்குகள் அல்ல.’

வெளிவட்டங்கள் என்ற அவருடைய முதல் நாவல் படித்து முடித்தபோது திருப்தியான உணர்வு ஏற்பட்டது.

மங்கையர் உள்ளம்! பொங்கிடும் வெள்ளம்! – மீனாக்ஷி பாலகணேஷ்

          

அம்மா, இளவரசர் இன்று நமது வீட்டுவாசல் வழியாகச் செல்லப்போகிறார். நான் எப்படி எனது இன்றைய காலை வேலைகளைச் செய்ய முடியும்?

           என் தலையை எப்படிப் பின்னிக் கொள்வதென்று காட்டு; என்ன ஆடைகளை உடுத்திக் கொள்வதென்று கூறு!

           என்னை ஏன் வியப்போடு பார்க்கிறாய் அம்மா?

           அவர் ஒருமுறை கூட நான் நிற்கும்  ஜன்னலைத் தலைநிமிர்ந்து பார்க்கமாட்டார் என்று எனக்குத் தெரியும். கண்ணிமைக்கும் நேரத்தில் எனது காட்சியிலிருந்து அவர் விலகிச் சென்றுவிடுவார் என்றும் எனக்குத் தெரியும். தொலைவில் தேய்ந்தபடி அழுகையாக ஒலிக்கும் புல்லாங்குழலின் இசை மட்டுமே என்னை வந்தடையும்.

           ஆனால் இளவரசர் நமது வாசல் வழியாகச் செல்வார்; நானும் எனது அருமையான அணிமணிகளை அந்த நேரத்திற்காகவே புனைந்து கொள்வேன்.

           ஓ, அம்மா, இளவரசர் நம் வாசல் வழியாகச் சென்றுவிட்டார். காலைச்சூரியன் அவருடைய தேரிலிருந்து மின்னினான்.

           நான் எனது முகத்திரையை விலக்கினேன். எனது கழுத்திலிருந்த மாணிக்கப் பதக்கத்தைப் பிடுங்கியெடுத்து அவர் செல்லும் வழியில் வீசினேன்.

           என்னை ஏன் வியப்போடு பார்க்கிறாய், அம்மா?

           என்னுடைய பதக்கத்தை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பது எனக்குத்  தெரியும். அது அவருடைய தேர்ச்சக்கரங்களில் அரைபட்டுப் பொடியாகிப் புழுதியில் சிவப்புநிறத்தைப் பரப்பிக்கொண்டு சென்றது. என்னுடையது என்ன பரிசு, யாருக்காக என்று ஒருவருக்கும் தெரியாது.

           ஆனால், இளவரசர் நம் வாசல் வழியாகச் சென்றார்; நானும் எனது மார்பிலணிந்த அணிகலனை அவர்  சென்ற பாதை முன்பு வீசினேன்.

 (தாகூர்: தோட்டக்காரன்: பாடல்-7)

                                           00000

           காலந்தோறும் கவிதைகள்- கன்னிப்பெண்களின் ஆசைக்கனவுகளின் வெளிப்பாடுகள்! நிறைவேறாத ஆசைகள்; ஆனால் அந்த அழகனான இளவரசனைப் பார்ப்பதில், அவனுக்குத் தன் விலையுயர்ந்த அணிமணிகளைக் காணிக்கை தருவதில் தன் காதலுக்கு வடிகால் தேடும் இளமங்கை.

           வியப்போடு மகளைப் பார்க்கும் தாய் தனது இளமைப்பருவத்தையும் அப்போது நடந்த நிகழ்வுகளையும் எண்ணிப் பார்க்கிறாளோ என்று சிந்தித்தபோது நமது முத்தொள்ளாயிரப்பாடல் ஒன்று நினைவில் இடறியது.

           கொற்கையில் ஒரு தெருவில் பாண்டியன் உலா வருகிறான். ஒருபெண் அவனைக் கண்டு தொழுகிறாள்; காதலும் கொண்டுவிட்டாள். அதன் காரணமாகத் தோள்வளைகள் கழன்றுவிடும்படிக்கு மெலிந்தும் விட்டாளாம்! “கொற்கையிலுள்ள மக்களைக் காத்து நீதி செலுத்துபவன் அவனே இப்போது என்னுடைய இந்தக் கைவளை, தோள்வளை இவற்றோடு தோளின் அழகையும் திருடிக்கொண்டுவிட்டான். கள்வனும் காவலனும் ஒருவனே ஆக இருக்கும்போது யாரிடத்தில் நான் போய் முறையிடுவது?” என்று வருந்துகிறாள் அம்மங்கை!

           வழுவிலெம் வீதியுள் மாறன் வருங்கால்த்

           தொழுதேனைத் தோள்நலமும் கொண்டான்-  இமிழ்திரைக்

           கார்க்கடல்க் கொற்கையார் காவலனும் தானேயால்

           யார்க் கிடுகோ பூசல்.

                                            (முத்தொள்ளாயிரம்-36)

           நுட்பமான காதல் உணர்வுகளின் வண்ணச்சித்திரங்கள் சங்ககாலத்து முத்தொள்ளாயிரப் பாடல்கள்! (கி.பி. 2 – 5ம் நூற்றாண்டா அதற்கும் முன்பா?) இங்கும் தாகூரின் இளமங்கைபோல ஆண்மைமிக்க அழகனான அரசனிடம் உள்ளம் பறிகொடுத்த இளம்பெண். காதல் நிறைவேறாது என அறிந்தும் அவள் தவிக்கும் தவிப்பு…… பெண்ணுள்ளத்தின் மென்மையை அதில் முகையவிழும் மலராக மலரும் காதல் அனுபவத்தைச் சுவையாக எடுத்துக்கூறி அரசனின் நலத்தை ஏற்றிக்கூற புலவர் கையாண்ட உத்தியா? எப்படியானால் என்ன? 20-ம் நூற்றாண்டுக் கவிஞரான தாகூரும் பண்டைச் சங்கப்புலவரின் கருத்துப்போலவே தமது பாடலையும் அமைத்ததுதான் பேராச்சரியம்!

                                                     00000

           இளமைநலம் வாய்ந்த மங்கை நல்லாள். குன்றின் உச்சியில் உள்ள தனது வீட்டில் தன்னந்தனியளாக அமர்ந்து தறியில் நாள்முழுவதும் காணும் காட்சிகளை நெய்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுக்கொரு சாபம் உண்டு. சாளரத்திற்கு முதுகைக்காட்டிய வண்ணம் அமர்ந்துள்ளவள் சாளரத்தின் வெளியேயான பரபரப்பான தெருவின் காட்சிகளை நேராகக் காணக்கூடாது. தெருவின் காட்சிகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு நிலைக்கண்ணாடி அவள் முன்பாக உள்ளது. அதில் மட்டுமே அவள் நிழலாக அந்தக் காட்சிகளைக் காணலாம்.

           ஒருநாள்….

           ஆண்மை நிறைந்த அழகனான ஒரு பிரபு கம்பீரமாகத் தன் குதிரைமீது ஆரோகணித்து அத்தெருவில் செல்கிறான். இவளுடைய சாளரத்தையும் கடந்து செல்பவனைக் கண்ணாடியில் கண்டவள் தன் உள்ளம் படபடக்க, நெய்வதனை நிறுத்திவிட்டுத் தன் நிலை மறந்து திரும்பிச் சாளரம் வழியே பார்க்கிறாள். அவ்வளவில் கண்ணாடி விரிசல் காண்கிறது.            தன்மீதான சாபம் பலித்துவிட்டது; தன் இறுதி வந்துவிட்டது என அறிந்தவள் தனது வீட்டை விட்டோடிச்சென்று நதிக்கரையை அடைகிறாள்; ஒரு படகில் தன் பெயரை எழுதி வைத்து, அதில் படுத்து ‘கேம்லாட்’ (Camelot) எனும் நகரை நோக்கி அப்படகில் மிதக்கிறாள். அரண்மனையை அடையுமுன் இறந்தும் விடுகிறாள். பிரபுக்களும் சீமாட்டிகளும் வந்து அவளைக் காண்கின்றனர். ஸர் லான்செலாட் (Sir Lancelot) என்பவன் (இவனைத்தான் அவள் தன் கண்ணாடியில் கண்டு அவனழகை ரசித்தது) ‘இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்,’ என்கிறான். இறந்தபின் அவளுக்குக் கிட்டும் புகழாரம்!                                   

           இது லார்ட் டென்னிஸன் எனும் 19ம் நூற்றாண்டு ஆங்கிலேயக் கவிஞர் ‘ஷாலட்டின் மங்கைநல்லாள்’ எனும் தலைப்பில் எழுதியுள்ள அருமையானதொரு கவிதை. நீண்டதொரு கவிதையின் சில பகுதிகளைக் கவிதையின் சுவைக்காகக் கொடுத்துள்ளேன்.

                                           ——————–

           The Lady of Shalott  (1842)        BY ALFRED, LORD TENNYSON

 

           Gazing where the lilies blow

           Round an island there below,

                     The island of Shalott.

           Four gray walls, and four gray towers,

           Overlook a space of flowers,

           And the silent isle imbowers

                     The Lady of Shalott.

           There she weaves by night and day

           A magic web with colours gay.

           She has heard a whisper say,

           A curse is on her if she stay

                        To look down to Camelot.

           She knows not what the curse may be,

           And so she weaveth steadily,

           And little other care hath she,

                      The Lady of Shalott.

                                ————–

           As he rode down to Camelot.

           From the bank and from the river

           He flash’d into the crystal mirror,

           “Tirra lirra,” by the river

                     Sang Sir Lancelot.

           She left the web, she left the loom,

           She made three paces thro’ the room,

           She saw the water-lily bloom,

           She saw the helmet and the plume,

                     She look’d down to Camelot.

           Out flew the web and floated wide;

           The mirror crack’d from side to side;

           “The curse is come upon me,” cried

                     The Lady of Shalott.

                                ——–

                     “Who is this? And what is here?”

                     And in the lighted palace near

                     Died the sound of royal cheer;

                     And they crossed themselves for fear,

                                All the Knights at Camelot;

                     But Lancelot mused a little space

                     He said, “She has a lovely face;

                     God in his mercy lend her grace,

                                The Lady of Shalott.”

           அருமையான இக்கவிதை வாழ்வில் சில கட்டங்களை உருவகிக்கிறது (Metaphor) என்பார்கள். நாம் இதை ஒரு கதையாகக் கண்டால், ஒரு அழகிய பெண்ணின் அற்பமான ஆசைக்கு அவள் கொடுக்கும் விலை இதுவா என அதிர்ந்துவிடுகிறோம். (வேறொரு சமயம் இதைப்பற்றி விவாதிக்கலாம்). இங்கு இதைக் கூறியது, ஆங்கிலக் கவிஞரும் ஒரு அழகான பெண்ணின், பெண்மைக்கே உரிய ஆசை நிராசையானதை விவரித்துள்ள இசைவை வியக்கத்தான்!

           பெண் உள்ளம் என்பது அழகானதொரு மலர். சின்னச்சின்ன ஆசைகளில் அது மெல்லமெல்ல மலரத் தொடங்குகின்றது. செடிகளில் பூக்கும் எல்லா மலர்களுமா பெண்கள் தலைகளிலும் ஆண்டவன் மார்பிலும், பூச்சாடிகளிலும் மிளிர்கின்றன? வாடி உதிர்பவை எத்தனை எத்தனை, பூச்சிகளால் துளைக்கப்படுபவை பல, இன்னும் மொட்டாகவே கருகி உதிர்பவை சில. உலகின் பல மூலைகளிலிருந்தும் பெண்ணுள்ளத்தின் மென்மையான ஒரு பக்கத்தை அவர்கள் உள்ளங்களில் பூக்கும் ஆசையால் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன இந்த அற்புதக் கவிதைகள்.

           சிந்திப்போம்; புரிந்து கொள்வோம். ரசிப்போம்; கருணையோடு கொண்டாடுவோம். இந்த மென்மையான உள்ளங்களைக் கவிஞர்கள் பெருமைப்படுத்தியதனைத்தான் இங்கு கண்டோம்!

                                     00000000000

          

 

மேடையில் பேசுவது எப்படி? – டி வி ராதாகிருஷ்ணன்.

Concern Gathering: The Role of Institutions in Addressing Racial Inequity

 

 

நமக்கெல்லாம்..மேடையில் பேச வேண்டும் என்றும்..நாம் பேசுவதை நான்கு பேர் கேட்டு பாராட்ட வேண்டும் என்றும் உள்ளூர ஒரு விருப்பம் இருக்கும்.
பேசுவது என்பதே ஒரு கலை.அதற்காக பேசுவதெல்லாம் கலை என்று சொல்லிவிட முடியாது.அதுவும்..மேடையில் பேசுவது என்பது…!!! எளிய நடையில் பலர் முன் நின்று மேடையில்..உயர் கருத்துகளைச் சிறந்த முறையில்..கேட்போர் உள்ளத்தில் அழகாக பதிய வைப்பதே ஆகும்.

மேடைப்பேச்சை ‘சொற்பொழிவு’ என்பர்.சொற்களைத் தேடிப் பிடித்து..எளிய நடையில்..அமைதியாக பொழிவது தான் சொற்பொழிவு.

மழை பொழிகிறது என்கிறோம்….மழை நீர்த் துளிகள்..ஒன்றன் பின் ஒன்றாக சீராக.. நேராக.. அமைதியாக பெய்வது தான் ‘பொழிதல்’ எனப்படுவது.அழகாக ஒன்றன் பின் ஒன்றாக வரம்பு மீறாமல் இருப்பதுதான். வரம்பு கடந்தால் மழை பொழிதலும்..மழை அடித்தல், மழை கொட்டல் என்றெல்லாம் ஆகிவிடும்.

அதுபோலவே தான் சொற்பொழிவும்..வரம்பு கடந்தால்.. மக்களிடமிருந்து.. கிண்டல், கத்தல்,திட்டுதல் என்ற நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டு விடும்.. ஒருவர் பேசும் சொற்கள் அனைத்தும் நல்ல சொற்களாக, பண்பட்டவைகளாக இருந்தாக வேண்டும் என்ற கவலை சொற்பொழிவாற்றுவோருக்கு இருக்க வேண்டும்.சொற்கள் பற்றி வள்ளுவன்
சொல்வன்மை என்ற அதிகாரத்தையே வைத்துள்ளார்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லிங்கட் சோர்வு

ஆக்கமும், அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால்..எந்த ஒரு சொல்லிலும் குறைபாடு நேராது கவனமாக இருக்க வேண்டும்…என்கிறார்.

நாம் சொல்வதை பிறர் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.எவ்வளவு நேரம் பேசினோம் என்பதை விட..நாம் என்ன பேசினோம் என்பது மக்களுக்குப் புரிகிறதா என்பதே முக்கியம்.

நாம் கற்றதை ..பிறர் உணரும் வண்ணம் சொல்லத் தெரியாதவர். கொத்தாக மலர்ந்திருக்கும் மணமில்லா மலருக்கு ஒப்பாவர்..(யாருக்கும் பயன் தரா மலர்) என்கிறார் வள்ளுவர்.

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்

ஒருவனின் உண்மைத் தோற்றத்தைக் காட்டுவது அவன் வாய்ச் சொற்களே..மற்ற அனைத்தும் போலித் தோற்றங்கள்.ஆகவே..பிறரிடம் பேசும்போது..அதிலும் குறிப்பாக மேடையில் பேசும்போது மிக விழிப்புடன் இருக்க வேண்டும்..இல்லையேல்..நமக்கு வீழ்ச்சியே ஏற்படும்.

எதைக் காப்பாற்றாவிடினும் நாக்கை காப்பாற்ற வேண்டும்..

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவரது துன்பத்திற்குக் காரணமாகிவிடும்.

நல்ல கருத்துகள் சொற்பொழிவுக்கு அவசியம்.நாம் பேசுவது மக்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால்..அவை நல்ல கருத்துகள் கொண்டதாய் இருக்க வேண்டும்.பண்பற்ற..பயனில்லா சொற்களை மறந்தும் பேசக் கூடாது.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

பயனற்றதும்..பண்பற்றதுமான சொற்களை பலர்முன் சொல்வது மகிழ்ச்சியைக் குலைத்து..நன்மையை மாய்க்கும்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

பேச்சுக்கு கருத்துகளை எப்படி அமைப்பது.அதற்கு ஒரு வழி..

முதலில்..இன்று நாம் எதைப்பற்றி பேச வேண்டும்.. என்னென்ன பேச வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.முதல் கேள்விக்கான விடை தலைப்பாகவும்..அடுத்தக் கேள்விக்கான பதில் கருத்தாகவும் அமையும்.

அதை ஒரு சிறு அட்டையில் குறித்துக் கொண்டு 1, 2 என இலக்கமிட்டு முறைப்படுத்தி மனனம் செய்து கொள்ள வேண்டும்.பின் மேடை ஏறியதும் மனப்பாடம் செய்ததை வரிசைப் படுத்தி பேச வேண்டும்.இது வெற்றிகரமான பேச்சாக அமையும்.ஆரம்ப பேச்சாளர்கள்..இரண்டு அல்லது மூன்று கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டு..ஐந்தாறு நிமிடங்களுக்குள் பேசி நிறுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் இது நமக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்.
குறிப்புகள் எடுக்கையில் பேச வேண்டிய கருத்துகள் ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு சொற்களுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.அதுதான்  மனதில் பதியும்.மனதில் பதிந்ததைப் பேசி முடித்ததும்..நம் குறிப்பை எடுத்து..எல்லாம் பேசி விட்டோமா என்று பார்க்கலாம்.ஏதேனும் விட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை.ஏனெனில் நம் பேச்சை கேட்டவர்களுக்கு அது தெரியப் போவதில்லை.
தொடக்கப் பேச்சாளர்கள்..எழுதியிருக்கும் குறிப்பை இடையிடையே பார்த்து பேசலாம்..ஆனால் இதுவே பழகிவிடக் கூடாது.

மேடைப் பேச்சில் எழுதிப் படிக்கிறார்களே பொறுப்பானவர்கள் என்றுகேட்கலாம்                பொறுப்பான பதவியில் உள்ளவர்கள்..வேறு ஏதும் பேசிவிடக் கூடாதே என்பதற்காக கையாளும் முறை இது.ஆனால் பேச்சாளர்களுக்கு ஏற்றதல்ல இது.பார்த்து படிப்பது படிப்பதாகவே இருக்குமேயன்றி..அது பேச்சாக இராது.அதில் உணர்ச்சியும் இராது..

இப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்களாக ஆகவே முடியாது

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

பாரதி என்னும் தீர்க்கதரிசி! 
Amazon.com: பாரதியார் சரித்திரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு Book 1) (Tamil Edition) eBook : செல்லம்மா பாரதி: Kindle Store

பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன – அவரது தமிழ்ப்பற்றும், தமிழர்கள் மீது கொண்டிருந்த அன்பும், தேச பக்தியும் அளவிடமுடியாதது. அவரது சமூகப் பார்வை சமரசம் இல்லாதது. நாட்டிற்கு உபதேசித்தவற்றை, வீட்டிலும் நடத்திக் காட்டியவர் பாரதியார்.

கவிதைகள், கட்டுரைகள், கதைகள், வசன கவிதைகள், பாஞ்சாலி சபதம், பகவத் கீதை, சந்திரிகையின் கதை, வேடிக்கைக் கதைகள் என பாரதியாரது எழுத்துலகம்பரந்துபட்டது. அவரது தேசப் பற்றுப் பாடல்கள் எழுச்சியூட்டுபவை.

கண்ணனைக் காதலானாக, தாயாக, சேவகனாக, தோழனாக, தந்தையாக, அரசனாக, சத்குருவாக, குழந்தையாக, காதலியாகப் பாவித்து அவர்
பாடியுள்ள பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை.

திருநெல்வேலி மாவட்டம், எட்டயபுரத்தில் 1882 ஆம் வருடம் டிசம்பர் 11 ஆம் தேதி சுப்ரமணியன் என்கிற சுப்பையா பிறந்தார்! தந்தை சின்னச்சாமி அய்யர் தன்பிள்ளையைப் பெரிய கணித மேதையாகவோ, யந்திரங்களை இயக்கும் விற்பன்னராகவோ உருவாக்க விரும்பினார். ஆனால் சுப்பையாவுக்கோ வார்த்தைகளின் கோர்வைகளிம் ( விழி என்றால் உடனே விழி, பழி, வழி, பிழி, சுழி என வார்த்தைகளை அடுக்குவாராம்!)

இயற்கையைரசிப்பதிலும் அதிக விருப்பம்! எப்போதும் ஏதாவது பாட்டு ஒன்றை இரைந்து பாடுவது மிகவும் பிடித்தமானது. இளமையிலேயே அன்னையை இழந்து விட்டதால், அம்மா மயக்கத்திலேயே கவிதைகள், பாடல்கள் புனைவார். எட்டயபுர சமஸ்தான வித்துவான்களும், புலவர்களும் சுப்பையாவை வெகுவாகப் பாராட்டி, அவரது பதினோராம் வயதில் “பாரதி” என்ற பட்டத்தைச் சூட்டினர்.

1921 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி கோவில் யானை தாக்க, அதிர்ச்சியில் நோய்வாய்ப் பட்டார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அதிகாலை
மறைந்தார்.

பாரதியார் சரித்திரங்களைப் பலர் எழுதியிருந்தாலும், வ.ரா., செல்லம்மாள் பாரதி ஆகியோரின் பாரதி சரித்திரங்கள் மிகவும் முக்கியமானவை.
வ.ரா. – வரதராஜ ஐயங்கார் ராமசாமி – சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், பாரதியாரின் பக்தர் – பாண்டிச்சேரியில் பாரதியுடன் வாழ்ந்தவர். பாரதியின் வரலாற்றைச் சிறப்பாகச் சொல்லும் நூல்களில் மிகவும் முக்கியமானது வ.ரா. வின் “மகாகவி பாரதியார்”. வாசிக்க வேண்டிய புத்தகம், அதிலிருந்து…
பாரதியின் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா சிறையிலிருந்து வெளி வரும்போது, கிறிஸ்தவன் ஆகிவிட்டேன் என்கிறார். மதமாற்றம் பற்றி பாரதி கூறுவதைப் பார்க்கலாம்.
“ஹிந்து ஜனசமூக ஆசாரங்களிலும், கொள்கைகளிலும், தினசரி வாழ்க்கையிலும் எத்தனையோ ஊழல்கள், கசடுகள் ஏறியிருக்கலாம். அவைகளை ஒழிக்க நாம் பாடுபட வேண்டும். அவைகளை ஒழிக்க முடியாது என்று பயந்து, வேறு மதத்தில் சரண்புகுவது என்பது, எனக்கு அர்த்தமாகாத சங்கதி. எல்லா மதங்களிலும் உண்மை உண்டு”.
பின்னாளில் அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்று, இந்தியாவுக்குத் திரும்பி வந்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து உழைத்த ஆர்யா இவர்தான் – பாரதியின் ஆதிகால நண்பர். ஜாதி, மதம் இவைகளைத் தாண்டி, பாரதி போற்றிய நட்பு போற்றுதலுக்குரியது!
“பாரதியார் நேருக்கு நேராக யாருடனும் சண்டை போடுவார். யாரையும் கண்டிப்பார். ஆனால் எதிரில் இல்லாதவர்களைப் பற்றி அவதூறு பேசும் கெட்ட வழக்கம் அவரிடம் துளிக்கூடக் கிடையாது”.
‘பாரதியார் சரித்திரம் – செல்லம்மாள் பாரதி’ – ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய உணர்ச்சி மிகு சரித்திரம் – தன் தந்தையாரின் சரித்திரத்தைத் தன் தாயாரே கூறுவதுபோல் அவர்களின் மகள் தங்கம்மா பாரதி எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து:
“திருநெல்வேலியில் படிக்கும்போது, பாரதியாரும் அவரது நண்பர் சுப்ரமண்ய சர்மாவும் “கலியாணராமன் செட்” என்ற கம்பெனி நடத்திய “துரோபதை துகிலுரிதல்” என்ற நாடகம் பார்க்கிறார்கள். பீஷ்மர், துரோணர் முதலியோரைப் பாஞ்சாலி தன் கேள்விகளால் நிலைகுலைய வைத்து, பதில் சொல்லத் திணறி, தலை குனிய வைத்த சாமர்த்தியம், அண்ணன் தாங்கமுடியாத அளவுக்குத் தப்பிதம் செய்துங்கூடச் சகோதரர்கள் அவனுக்கு மரியாதையாக அடங்கி வணங்கியது எல்லாம் அவரது (பாரதியாரின்) மனத்தை நெகிழச் செய்தது. பின்னாளில் உலகம் வியக்கும் ‘பாஞ்சாலி சபதம்’ இயற்ற, சிறுவயதில் அவர் பார்த்த இந்த நாடகமே காரணம்”
எட்டயபுரம் கழுகுமலையில் மறவர்களுக்கும் சாணார்களுக்கும் ஏதோ தகராறு – உற்சவத் தேரை விடக் கூடாதென மறிக்கிறார்கள். சாப்பிட உட்கார்ந்தவர், சாப்பிடாமல் கலகம் நடக்கும் இடத்தைப் பார்வையிடச் செல்கிறார் மானேஜர் வேங்கடராயர். “இவன் யாரடா பார்ப்பான், வழக்கு தீர்க்க வந்தவன்!” என்று யாரோ கத்தியால் குத்திக் கொன்று விடுகிறார்கள். பாரதியை மிகவும் பாதித்தது இந்தச் சம்பவம். அதுமுதல், “ஜாதிச் சண்டைகளும், சமயச் சண்டைகளும் ஒழிய வேண்டும்” என்று ஓயாமல் சொல்லிக்கொண்டிருப்பாராம் பாரதியார்.
தனக்குப் பெண் குழந்தை பிறந்தபோது, காளிதாசனின் ‘சாகுந்தலம்’ சமஸ்கிருத நாடகத்தை மிகவும் விரும்பி வாசித்துக் கொண்டிருந்தாராம்; அதனாலேயே தன் குழந்தைக்கு ‘சகுந்தலா’ என்று பெயர் வைக்கிறார் பாரதியார்.
அவரது கவிதைகளைப் போலவே, கட்டுரைகளும், கதைகளும் சிறப்பானவை. சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் அவர் எழுதிய சுதந்திர எழுச்சிக் கட்டுரைகள் அன்றைய பிரிட்டிஷ் போலீஸ் அடக்குமுறைக்கு அவரை ஆளாக்கின.
புதுச்சேரியில், அரவிந்தர், வ.வே.சு ஐயர், வ.ரா. ஆகியோருடன் இணைந்து அரசியல், கலை, தத்துவம் எனப் பல தளங்களில் செயல்பட்டவர் பாரதியார்.
காலத்தால் அழியாத, கருத்தாழம் மிக்க கதைகளைப் படைத்துள்ளார் பாரதி! வேடிக்கைக் கதைகளில் மட்டுமன்றி, எல்லாக் கதைகளிலும் இழைந்தோடும் நகைச்சுவையும், பகடியும் வியக்க வைப்பவை.
பாரதியாரது கட்டுரைகளின் தெளிவும், நடையும் வாசிப்பவரைக் கட்டிப் போடுபவை. சமூகம், பெண்டிர்,கலைகள், பக்தி, தத்துவம் எனப் பல கட்டுரைகளில் அவரது தனித்துவம் தெரியும். அவரது சிந்தனைத் துளிகள் சிலவற்றை, இப்போது பார்க்கலாம்!
மூட நம்பிக்கைகளை அறவே வெறுத்தவர்
பாரதியார் – நாள், நட்சத்திரம், லக்னம் எல்லாம் பார்ப்பதனால் வரும் கால விரயம் குறித்து விசனப் படுகிறார். “சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதனால் கால, பொருள் நஷ்டங்களுடன், சோதிடருக்கு வேறு செலவாகிறது” என்கிறார்!
‘வாசக ஞானம்’ என்ற கட்டுரையில் மனிதர்கள் தாம் படித்தவைகளைக் கடைபிடிப்பதில்லை என்று வருந்துகிறார். ஆண்,பெண் சமமாகப் போற்றுதல், ஜாதி, மதம் பாராமல் அனைவரையும் ஒன்றாக நேசித்தல் போன்றவை ஏட்டளவிலேயே இருப்பதாக வருத்தப் படுகிறார்.
வாசக ஞானத்தினால் வருமோ சுகம் பாழ்த்த
பூசலென்று போமோ புகலாய் பராபரமே’

என்னும் தாயுமானவர் கண்ணியைக் குறிப்பிட்டு, வெறும் படிப்பினாலும், வார்த்தைகளாலும் ஞானம் வந்து விடாது -அவற்றை வாழ்க்கையில் கடைபிடித்தாலே வரும் என்றும், திருவள்ளுவர் சொன்னபடி, ‘ஒன்றைச் சொல்லியபடி நடப்பதும்’ அவசியம் என்றும் கூறுகிறார் பாரதி.

’தர்மம்’ கட்டுரையில் “தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போரென்று ஸாமான்யர் சொல்லுகிறார்கள். சில சமயங்களில் தர்மங்களே ஒன்றுக்கொன்று முட்டுகின்றன’ என்கிறார். இறுதியில், ‘சுயநலம் ஒதுக்கி, உலக நலன் கருதி எடுக்கும் முடிவுகளே தர்மமாகும்’ என்பதை வலியுறுத்துகிறார்.
பெண் விடுதலை குறித்து அன்றே அவர் எழுதியவைஇன்றும் பொருந்திப்போவது வியக்க வைக்கிறது.
பெண்கள் வயதுக்கு வருமுன் விவாஹம் செய்யக் கூடாது,
இஷ்டம் இல்லாத புருஷனை விவாஹம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தக் கூடாது,
விவாஹம் செய்த பிறகு புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்கவேண்டும் –அதற்காக அவளை அவமானப் படுத்தக் கூடாது,
தந்தை வழிச் சொத்தில் சமபாகம் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும்,
விதவை விவாஹம் செய்துகொள்வதை தடுக்கக் கூடாது,
விவாஹமே இல்லாமல் தனியே இருந்து கெளரவமான தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்,
பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வி வழங்க வேண்டும்,
தகுதியுடன் பெண்களும் அரசாட்சியில் இடம் பெறவேண்டும்,
போன்ற கருத்துக்கள் இன்று எவ்வளவு தூரம் கடைபிடிக்கப் படுகின்றன என்பது விவாதத்துக்குரியன!

நமக்கு நம் மீதே நம்பிக்கை இல்லாமையே நம் பயங்களுக்குக் காரணம்; அதற்கு அவர் கூறும் உவமையைப் பாருங்கள்:
கண்ணாடி மூடிக்குள்ளே தண்ணீர் விட்டு அதில் வளர்க்கப்பட்ட பொன்னிற மீன்கள், கண்ணாடியைத் தண்ணீர் என நினைத்து அதில் வந்து மோதிக் கொள்ளுமாம்; பிறகு பெரிய தொட்டியில் கொண்டு போட்டாலும், தண்ணீரைக் கண்ணாடி என்று நினைத்துப் பயந்து பழைய எல்லைக்குள்ளேயே சுற்றுமாம். அது போலத் ‘தலை உடைந்து போமோ’ என்கிற பயம் நம் எலும்புக்குள் ஊறிக் கிடக்கின்றது.
கவிஞன் என்பவன் யார் ? பாரதி எழுதுகிறார்:

‘கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே
வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையையே
கவிதையாகச் செய்தோன் – அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின்
பேச்சு – இவற்றிலே ஈடுபட்டுப் போய் இயற்கையுடனே ஒன்றாக வாழ்பவனே கவி.
உணவு பற்றி…..
நானாவிதமான விலையுயர்ந்த உணவுப் பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வருமென்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. கார ஸாரங்களும், வாசனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப்படுத்தும் வஸ்துக்கள் தேகபலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி,
கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டாவது போல், பதிர்ப்பேணியிலும், லட்டுவிலும், வெங்காய ஸாம்பாரிலும் உண்டாகாது.

இறுதியாக அவர் தமிழருக்கு அன்று சொன்னது:

‘தமிழா தெய்வத்தை நம்பு. பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது.
தமிழா பயப்படாதே. ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு, ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்.
ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே. ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்ற பழந்தமிழ் வாக்யத்தை வேதமாகக் கொள்.
பெண்னை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர், மனைவியை “வாழ்க்கைத் துணை” என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் சமம்.
‘பதிவிரதை’ என்ற கட்டுரையில் அவர் கூறுவதைக் கேளுங்கள்:
“ஸ்திரீகள் புருஷரிடம் அன்புடன் இருக்க வேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். நம்மைப் போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும், குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமை போல நடித்தாலும், உள்ளே துரோகத்தை வைத்துக்கொண்டுதான் இருக்கும். அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.”

வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து, மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே.

பாரதியின் அன்றைய வார்த்தைகள் இன்றைக்கும் தமிழனுக்கு வழிகாட்டுகிறது –
காரணம், பாரதி ஒரு தீர்க்கதரிசி!!