வஞ்சியென நஞ்சமென வந்த வஞ்சமகள் (சூர்ப்பணகையின் நடையழகு)

அழகிய உருவம் அமைந்த தோற்றத்துடன் சூர்ப்பணகை வருகிறாள். அரக்கி உருவத்தை மறைத்து வஞ்சனை உள்ளத்தோடு வருகிறாள். மிக அழகிய உருவம்; அதே நேரத்தில் வஞ்சக உள்ளம்; இதனைக் கம்பர் தமக்கே உரிய கவித்திறத்துடன் புனைந்துள்ளார்.

பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி
அஞ்சொலிள மஞ்ஞைஎன அன்னம்என மின்னும்
வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்

(கம்ப. ஆரணிய காண்டம், சூர்ப்பணகைப்படலம், 31.)

Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories |  SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts

வாலிக்கும்  சுக்ரீவனுக்கும் ஏற்பட்ட சிறு பூசல் போராக மாறுகிறது. சீதையை இழந்து சித்தம் கலங்கி இருக்கும் ராமனை சுக்ரீவன் சந்திக்கின்றான். வாலியைக் கொல்வதாக வாக்குத்தருகிறான். வாலியை நேருக்குநேர் நின்று எதிர்ப்பவரின் பாதி பலம் அவ்வாலிக்கே போய் விடும்.

இவ்வுண்மையை ராமன் அறிவான். எனவே மறைந்து நின்று வாலி மேல் அம்பு எய்கின்றான். எய்த அம்பு வாலியின் மார்பில் தைத்து நின்று விடுகிறது.

ராமனுக்கோ ஒரே திகைப்பு. முன்பு நடந்த போர்களில் தாடகை, கரன், மாரீசன் ஆகியவர்கள் மார்பைத் துளைத்துச் சென்றது போல் இதுவும் செல்லும் என்று எதிர்பார்த்தான். நடந்ததோ வேறு. அம்பு அவன் மார்பிலேயே தங்கி நின்றது.

காரணம் புரியாமல் திகைத்தான் ராமன். இதுவரை கைவிடாத அம்பு, இப்போது தன்னை கைவிட்டு விட்டதே இதென்ன வம்பு என வருந்துகிறான்.

இதைக் கம்பன் விளக்குகின்றான்–

‘கார் உண் வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப?
நீரும் நீர் தருநெருப்பும் வன்காற்றும் கீழ் நின்ற
பாரும் கார் வலி படைத்த வன் உரத்தை அப்பகழி’.

‘பகழி’ என்றால் ‘அம்பு’. பழத்தில் ஊசி செல்வது போலச் செல்லும் தகுதி படைத்த அம்பு, இதுவரை சென்ற அம்பு, இப்போது நின்று விடுகின்றது.

முன்பெல்லாம் தீமையை அழிப்பதற்காக ராமனின் ‘அற வில்’ பயன்பட்டது. ஆனால் இங்கோ அற நெஞ்சுடையவன் வாலி. பிறருக்குத் தீமை செய்வதறியாதவன். குரங்கினப் புத்தியால் தம்பியின் தாரத்தைப் பறித்துக் கொண்டான். எனவேதான் அறவலிபடைத்த ராமனின் அம்பு அறநெஞ்சுடைய வாலியின் மார்பில் தைத்து நின்றுவிடுகிறதாம்.

இந்த நிலையைப் பார்த்த கம்பனுக்கு என்ன சமாதானம் சொல்லுவதென்றே புரியவில்லை. ராமன் செய்த தவற்றை நினைத்து ‘என் செப்ப’ அதாவது ‘நான் என்ன சொல்ல’ என்று கையை விரித்து விடுகின்றான்.

வாலி இறந்த பிறகு அந்த அம்பு அங்கிருந்து ஊடுருவிச் சென்று அறத்தைக் கொன்ற பாவம் தொலையக் கடலில் நீராடி மீண்டும் ராமன் கைக்கு வந்து சேருகின்றதாம்.

வாலியின் உயிர் இருக்கும் வரை அவன் நெஞ்சைத் துளைக்கும் ஆற்றல் அந்த அம்புக்கு இல்லை என்று கம்பன் காட்டிய கவிதை இன்பம் கண்களைக் கசிந்துருகச் செய்கின்றன.

(நன்றி : தமிழ் மித்திரன்)