சிறுகதை – Makkal Kural

செய்தித் தாளைப் பார்த்த வாசுதேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..

மறுபடியும் கையிலெடுத்து கூர்ந்துப் பார்த்தார்..

அவனே தான்.. அவனே தான்..

ஏற்கனவே அவருக்கு ரத்தக் கொதிப்பு உண்டு.. இப்போது படபடப்பும் அதிகமாகியது. லேசாக வியர்த்துக் கொட்டியது..

பிரச்சனைகள் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்..

எந்த நேரமும் போலீஸ் வரலாம்.. தன்னை விசாரிக்கலாம்.. கைது கூட செய்யலாம்..

இடிந்து போய் உட்கார்ந்தார்..

நான்கு மாதங்களுக்கு முன்னால்..

மாடிப் போர்ஷனில் குடியிருந்தவர் திடீரென்று காலி பண்ணிவிடவே வாசலில் டு-லெட் போர்ட் மாட்டியிருந்தார் வாசுதேவன்.

அவன் வந்தான்..

பெயர் நிரஞ்சன்.. வயது இருபத்தைந்துக்கு மேல் இருக்கலாம்.. கிட்டத்தட்ட ஆறடி உயரம்.. நல்ல உடற்கட்டு.. மாநிறம்.. கச்சிதமாக வெட்டப் பட்ட முடி.. அடர்த்தியான கரு கரு மீசை.. ஜீன்ஸ் பேண்ட்.. டீ ஷர்ட்.. காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ..

ஏதோ ஒரு பத்திரிகையில் நிருபர் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டான்..

இன்னும் திருமணமாகவில்லை..

பேச்சுலருக்கு வீடு வாடகைக்குக் கொடுப்பதில்லை என்று வாசுதேவன் தீர்மானமாகத் தான் இருந்தார். இருந்தாலும் நிரஞ்சனைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்து விட்டது.. மனதில் ஒரு வித பரிச்சய உணர்வு ஏற்பட்டு விட்டது..  அட்வான்சும் வாடகையும் ஒத்துப் போகவே உடனே சம்மதம் சொன்னார்..

தனிக்கட்டை என்பதால் அவனிடம் அதிகம் சாமான்கள் இருக்கவில்லை.. ஒரு சூட்கேஸ், கோணி போன்ற உரப் பையில் சில வஸ்துக்களுடன் ஆட்டோவில் வந்து இறங்கினான்..

சாமான்களை மாடியில் இறக்கியவன் அலைபேசியில் அழைப்பு வரவே உடனே அவசரமாக வந்த ஆட்டோவிலேயே கிளம்பி விட்டான்..

நிருபர் என்பதால் அவன் எப்போது கிளம்புகிறான்.. எப்போது வீடு திரும்புகிறான் என்று நேரம் காலம் கிடையாது.. அதனால் வாசல் கேட் பூட்டுக்கான மாற்றுச் சாவியை வாசுதேவன் அவனிடம் கொடுத்திருந்தார்.. இரவு தாமதமாக வந்தால் அவரை எழுப்பவேண்டியதில்லை.. அவனே திறந்து உள்ளே வரலாம்..

உண்மையில் அவர் அவனைப் பார்ப்பதே அபூர்வமாகத் தான் நிகழ்ந்தது.. சில சமயம் காலையில் வாசுதேவன் தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருக்கும் போது அவன் அவசரமாகக் கிளம்புவான்..

“குட் மார்னிங்”

“குட் மார்னிங்”

”எங்க இவ்வளவு காலைல?”

”முக்கியமான ரிபோர்ட்டிங்”

சொல்லிவிட்டு விநாடியில் பைக்கில் மறைந்து விடுவான்..

திரும்பி எப்போது வருவான் என்பது கணிக்கமுடியாத புதிர்..

வாசுதேவனுக்கும் ஒரு விதத்தில் இது வசதியாகத் தான் இருந்தது.. மாதம் ஒண்ணாம் தேதி பிறந்தால் வாடகையை நீட்டி விடுகிறான்.. அவன் அதிகம் வீட்டில் இல்லாததால் தண்ணீர் செலவு மிச்சமாகிறது.. மின்சார உபயோகமும் கட்டுக்குள் இருக்கிறது..

சில சமயங்களில் மாலையில் சீக்கிரம் வீடு திரும்பினாலும் மாடியிலேயே தான் அடைந்து கிடப்பான்.. கீழே வந்து அவருடன் கொஞ்சம் பேசுவோம் என்பதெல்லாம் கிடையாது.. வாசுதேவனுக்கு இது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.. அவரும் அவர் மனைவியும் மட்டும் தான் கீழ் போர்ஷனில் இருக்கிறார்கள்.. மகனும் மகளும் வெளிநாட்டில் வாசம்.. வாசுதேவனுக்கு வெளிநாடு ஒத்து வரவில்லை என்பதால் ஒருமுறை போனதோடு சரி.. எப்பவாவது மகனோ மகளோ குடும்பத்தோடு இந்தியா வந்தால் உண்டு.

இதற்கு முன் மாடி போர்ஷனில் குடியிருந்தவர் வாசுதேவனுடன் அடிக்கடி அரட்டையடிப்பார்.. அவர் மனைவியும் வாசுதேவனின் மனைவியும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர்.. அவர் மகன் லோன் போட்டு புது பிளாட் வாங்கவே இடம் பெயர்ந்து விட்டார்..

ஒரு முறை வாசுதேவனின் மைத்துனர் சேஷாத்ரி வந்திருந்தபோது நிரஞ்சன் வந்தான்..

“சார்”

என்று அவன் அழைத்ததும் வாசுதேவன் தன்னிச்சையாகக் காலண்டரைப் பார்த்தார்..

தேதி ஒண்ணு..

சலவை நோட்டாக வாடகைப் பணத்தை நீட்டினான்..

”யாரு?”

சேஷாத்ரி புருவம் உயர்த்தினார்..

“மாடி போர்ஷன்ல குடியிருக்கார்.. நிரஞ்சன்னு பேர்.. பத்திரிகைல வேலை பார்க்கறார்”

வாசுதேவன் அறிமுகப் படுத்தியதும் நிரஞ்சன் “ஹலோ” என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டு நகர்ந்து விட்டான்..

சேஷாத்ரிக்கு நிரஞ்சனைப் பிடிக்கவில்லை என்பதை அவர் முகபாவத்திலிருந்தே வாசுதேவன் புரிந்துக் கொண்டார்..

”உகும்.. எனக்கென்னவோ ஆளைப் பார்த்தாலே சரியாப் படலை”

இதைக் கேட்டு வாசுதேவன் சிரித்து விட்டார்..

“உனக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம் தான்”

“இல்லை அத்திம்பேர்.. நின்னு பேசக் கூட மாட்டேங்கறான்.. முகத்துலயும் சிரிப்பு இல்லை.. முழியும் சரியில்லை.. உகும்.. எனக்கென்னவோ நீங்க இவனை உடனே காலி பண்ணச் சொல்லிடறது நல்லதுன்னு தோணறது”

“இல்லை சேஷா.. தங்கமான பையன்.. எந்த வம்பு தும்பும் கிடையாது.. அவன் இருக்கறதுல பிரச்சனையே இல்லை”

மைத்துனரை சமாதானப் படுத்தினார்..

இது முடிந்து ஒரு வாரம் கடந்திருக்கும்..

ஒரு நாள் நள்ளிரவில் வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டு வாசுதேவனின் தூக்கம் கலைந்தது.

ஒரு வேளை நிரஞ்சன் அப்போது தான் வீடு திரும்புகிறானோ? இல்லையே.. அன்று அவன் சீக்கிரமே வந்து வந்து விட்டானே..

பிறகு….

எழுந்து போய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்..

வீட்டு வாசலில் இருந்த லேம்ப்-போஸ்ட் வெளிச்சத்தில் நிரஞ்சன் நிற்பது தெரிந்தது.. வேறு ஒரு நபருடன் ரகசியமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.. பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த நபர் தன் பையிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து நீட்டினார்..

வாசுதேவனுக்கு அது என்ன பொருள் என்று தெளிவாகத் தெரியவில்லை..

நிரஞ்சன் ஒரு முறை சுற்று முற்றும் பார்த்து அதை சட்டைக்குள் மறைத்துக் கொண்டான்..

வாசுதேவனுக்கு குழப்பமாக இருந்தது..

அது என்னவாக இருக்கும்..

ஒரு வேளை யாரைப் பற்றியாவது ரகசிய விவரங்களை ஹார்ட்-டிஸ்க் மூலம் அந்த நபர் நிரஞ்சனிடம் யாருக்கும் தெரியாமல் கொடுக்கிறாரோ? இருக்கலாம்.. பத்திரிகைகாரர்கள் உலகத்தில் இப்படி நடப்பதெல்லாம் சகஜம் என்பதை அவர் சில கதைகளில் படித்திருக்கிறார்..

ஆனால் அடுத்த இரண்டாவது நாள் தான் அது நடந்திருக்கிறது..

மறுபடியும் செய்தித் தாளில் அவர் பார்வை விழுந்தது..

வெடிகுண்டு வைத்து சென்னையைத் தகர்க்கவிருந்த ஒரு நாசவேலை கும்பல் போலீசாரின் அதிரடி நடவடிக்கயில் பிடிபட்டது..

ஐந்து சதிகாரர்கள் பிடிபட்டு கைது செய்யப் பட்டனர்..

அவர்களின் கைது போட்டோ செய்தித் தாளில் பிரசுரமாகியிருந்தது..

அதில் நிரஞ்சனும்..

அப்படியென்றால் பத்திரிகைக் காரன் என்று அவன் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது பொய்யா?

நேரம் காலம் இல்லாமல் வருவதும் போவதும்.. நாச வேலை கும்பலுடன் இருந்த சகவாசத்தினால் தானா?

ஒருவேளை அன்று நள்ளிரவில் அந்த நபர் நிரஞ்சனிடம் நீட்டியது துப்பாக்கியோ இல்லை வெடி குண்டோவா?

ஐயோ.. சேஷாத்ரி சந்தேகப் பட்டது சரிதான்.. இப்படி ஒரு நாசக் காரனை குடி வைத்து இப்போது அவனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றப் பழி அவர் தலையில்….

மனைவியிடம் இதைப் பற்றி அவர் சொல்லவில்லை.. சொன்னால் பயந்து, அழுது ஊரைக் கூட்டிவிடுவாள்..

என்ன செய்யலாம் என்று யோசித்தார்..

தன்னைக் கைது செய்தால் ஜாமீனில் எடுக்க யாராவது வக்கீல் வேண்டுமே.. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தன் அலுவலக வக்கீலாக இருந்த தேசிகனைத் தான்.. இப்போது அவரும் இல்லை.. ஓய்வுக்குப் பிறகு அவருக்கு வேறு வக்கீலின் சேவையும் தேவையிருக்கவில்லை..

அவருக்கு இன்னொரு சந்தேகமும் வந்தது.. இது போன்ற நாசவேலை கேஸ்களில் ஜாமீனில் விடுவார்களா? மாட்டார்கள் என்று செய்தித் தாள்களில் படித்த ஞாபகம்..

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே வெளியே சைரன் ஒலி கேட்டது.. கலவரத்துடன் எழுந்து போய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்..

போலீஸ் ஜீப் ஒன்று விரைந்துக் கொண்டிருந்தது.. அவர் வீட்டுமுன் நிற்காமல் கடந்து போனதில் கொஞ்சம் நிம்மதியுடன் திரும்பியதும் மறுபடியும் சைரன் சத்தம்.. இன்னொரு போலீஸ் ஜீப்..

ஒரு வேளை அவர் வீட்டைச் சுற்றி முற்றுகையிடுகிறார்களோ?

ஆமாம்.. கண்டிப்பாக அப்படித் தான் இருக்கும்.. இல்லாவிட்டால் இந்த ஏரியாவில் திடீரென்று எதற்காக இவ்வளவு போலீஸ் ஜீப்புகள் வர வேண்டும்..

நான்கு மாதங்களுக்கு முன்னால் ரீ-வைண்ட் ஆகி இது எதுவுமே நடக்காமல் இருந்ததாக இருக்கக் கூடாதா என்று அவர் மனம் ஏங்கியது..

“தாயே.. இந்த இக்கட்டுலேர்ந்து என்னைக் காப்பாத்து”

குலதெய்வம் மரகதவல்லித் தாயாரை வேண்டிக் கொண்டார்..

மனைவியிடம் சொல்லிவிடுவது தான் நல்லது என்று இப்போது அவருக்குப் பட்டது.. காரணம் திடீரென்று போலீஸ் வந்து கதவைத் தட்டினால் அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கும்..

மனைவியை அழைக்க அவர் திரும்பிய போது காலிங் பெல் அலறியது..

திடுக்கிட்டு நின்றார்..

போலீஸ்!!

மறுபடியும் காலிங் பெல்.. இந்த முறை அவசர அவசரமாக..

வாசுதேவனுக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது..

இனி தப்ப முடியாது.. உடனே கைது தான்..

இப்போது கதவு தட தடவென்று தட்டப் பட அவர் மனைவி உள்ளிருந்து வந்து..

“கதவை யாரோ தட்டறாளே.. திறக்காம என்ன நின்னுண்டிருக்கேள்?”

என்று கூறிய படி கதவதைத் திறக்கப் போக..

“ஐயோ வேண்டாம்.. கதவைத் திறக்காதே”

என்று வாசுதேவன் கத்த நினைத்தார்.. ஆனால் குரல் எழும்பவில்லை..

இதற்குள் அவர் மனைவி கதவைத் திறந்து விட்டாள்..

போலீசை எதிர்பார்த்த வாசுதேவனுக்கு ஆச்சர்யம்..

சேஷாத்ரி அவசரமாக உள்ளே வந்தார்..

“அத்திம்பேர்.. பேப்பரைப் பார்த்தேளா?”

வாசுதேவன் சுரத்தில்லாமல் சொன்னார்..

“எல்லாம் பார்த்தேன்.. நீ சொன்னதைக் கேட்டு உடனே நான் அவனை காலி பண்ணச் சொல்லி வெளில அனுப்பியிருக்கணும்.. தப்புப் பண்ணிட்டேன்.. பெரிய தப்புப் பண்ணிட்டேன்.. போச்சு.. எல்லாம் போச்சு.. அவனுக்கு அடைக்கலம் கொடுத்ததுக்கு நான் ஜெயிலுக்குப் போகப் போறேன்”

வாசுதேவன் புலம்புவதைக் கேட்டு சேஷாத்ரி விழித்தார்..

“நீங்க ஜெயிலுக்குப் போகணுமா? என்ன சொல்றேள்?”

“நான் என்ன சொல்ல.. அதான் இன்னிக்குப் பேப்பரே சொல்றதே.. அந்த நிரஞ்சன் நாசவேலை கும்பலைச் சேர்ந்தவன்னு.. அவன் போட்டோவும் வந்திருக்கே”

இதைக் கேட்டு சேஷாத்ரி வாய் விட்டுச் சிரித்தார்..

“அத்திம்பேர்.. நீங்க சரியான தத்திம்பேர்.. பேப்பர்ல வந்திருக்கிற நியூஸை ஒழுங்காப் பார்க்க மாட்டேளா?”

“என்னடா சொல்றே?”

“நிரஞ்சன்.. நாச வேலை கும்பலைச் சேர்ந்தவன் இல்லை.. அந்த நாச வேலை கும்பலைப் பிடிக்கற போலீஸை சேர்ந்தவன்.. சொல்லப் போனா அவங்களைப் பிடிக்க இவன் தான் முக்கிய காரணமா இருந்திருக்கான்.. என்ன ஏதுன்னு நியூஸைப் படிக்காம பேப்பர்ல போட்டோவைப் பார்த்து நீங்களா கற்பனை பண்ணிண்டிருவேளா?”

சேஷாத்ரி சொன்னதைக் கேட்டு வாசுதேவன் முகத்தில் அசடு வழிந்தாலும் பெரிய நிம்மதி தெரிந்தது..

“அவர் எப்பவுமே இப்படித் தானே.. எதையும் ஒழுங்காப் பார்க்க மாட்டாரே.. எங்க கல்யாணத்தும் போதே எங்கப்பா மடில உட்கார்ந்திருக்கிற எனக்குத் தாலி கட்டாம பராக்கு பார்த்துண்டு எங்கப்பா கழுத்துல தாலி கட்டப் போனாரே..”

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதைச் சொல்லி தன்னை காமெடி பீஸாக்கும் மனைவியை வாசுதேவன் குரோதத்துடன் பார்த்தார்..