லீலை கண்ணன்... - கோகுல கிருஷ்ணா யாதவ சேவா சங்கம் | FacebookBaal Krishna by Shuchismita Das on Dribbble

(யசோதைக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கோகுலம் முழுவதும் பரவியது.
கோபர்களும், கோபியர்களும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.
எங்கும் ஒரே கொண்டாட்டம் தான்…)

கோகுலக் காட்சிகள்

கொண்டாட்டங்கள்

கோழி கூவுமுன் கோகு லத்தவர்
சூழ வந்தனர்,தொழுது நின்றனர்
வாழி என்றனர், மகிழ்ச்சி என்றனர்,
ஆழும் அன்பினால் ஆடிப் பாடினர்

ஒப்பார் ஆரென ஓங்கியே கூறுவார்,
அப்பா! ஆதியே! அன்பனே! அண்ணலே!
இப்பார் உய்யவே எம்குலம் தோன்றினாய்,
தப்பா தவ்வினை சாயுமென் றோதுவார்

பிறந்த பிள்ளையின் பெருமை பேசுவார்:
கறந்த பாலொடு கலத்தை வீசுவார்;
திறந்த முற்றமே திரண்டு கூடுவார்;
சிறந்த செவ்வழி சிலிர்த்துப் பாடுவார்.

( செவ்வழி – முல்லைப்பண்)

எண்ணெய், சுண்ணமும் எடுத்துக் கொட்டவும்,
வண்ணச் சேறென மாறும் முற்றமும்.
நண்ணி ஆடியே நழுவி வீழ்பவர்,
பண்ணும் ஓசையால் பல்கும் பாற்கடல்.

( சுண்ணம் – மஞ்சள் பொடி)
( பல்கும் – பெருகும் / பொங்கும் )

தோரணம் ஆயிரம் தொங்கவே யாங்கணும்
வாரணம் ஏறியே வந்தனர் ஊர்வலம்
நாரணன் கோகுலம் நாடியே வந்ததன்
காரணம் அன்பெனக் கண்டனர் விம்மியே

(வாரணம் – யானை)

ஆடும் மகளிரின் கூந்தல் மலர்கள் தரையில் சிந்தி வானவில் போல் காட்சி தருதல்

சந்தனமும் குங்குமமும் சார்மகளிர் குழல்மலர்கள்
கொந்தவிழ்ந்து வண்ணப்பூக் குவியல்கள் தரைமிசையே
சிந்தியதால் நிறமொளிரச் சீரோங்கும் கோகுலத்தில்
வந்திறங்கும் வானவில்லின் வடிவமென வனப்பிருக்கும்

(கொந்து- கொத்து)

குழந்தைக்குப் பெயர் வைத்தல்

மறையோதும் அந்தணர்க்கு மனம்விரும்பும் பரிசுகளைக்
குறையேதும் இல்லாமல் கோவேந்தன் நந்தனவன்
நிறைவாகக் கொடுத்தவுடன் நெடுந்தவத்து மாதவரும்
முறையாகக் கிருஷ்ணனென முகில்நிறத்தின் பெயரிட்டார்!

( முகில்நிறம்– கறுப்பு)

குறிப்பு:

‘கிருஷ்ணன்’ என்ற சொல்லுக்குக் ‘கரிய நிறமுடையவன்’ என்பது பொருளாகும்

ரோகிணியின் பிள்ளை

கொள்ளையெழில் கொண்டிருந்த குழந்தையவன் ரோகிணியின்
வெள்ளைநிற வாள்வளைபோல் வயங்கொளிரும் அருமைமிகு
பிள்ளயவன் பெயர்குறித்தார்- பேராற்றல் இராமனென்று..
கள்ளமிலா நேர்வழியான், கலப்பையெனும் படையுடையான்.

( வாள்வளை– ஒளிவீசும் சங்கு)

குறிப்பு:
பலராமன் ஒளி வீசும் வெண்ணிறச் சங்கு போன்ற நிறத்தை உடையவன் என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது

கண்ணன் பிறந்தபின் கோகுலத்தில் மாற்றங்கள் .

வாங்குகுடம் நிறைபசுக்கள் வள்ளலெனப் பால்சொரியும்
பாங்கொளிரும் சோலைகளில் பன்மலர்கள் தேன்பொழியும்
ஓங்கிவளர் நல்லறமாம் உயர்வாழ்க்கை நெறிவிரியும்
ஈங்கிதுவோ வைகுந்தம் எனவிண்ணோர் மனம்மயங்கும்.

தாய் யசோதையின் தாலாட்டு

( மூன்று அடுக்கி வந்த கலித்தாழிசை)

மின்னே, மணியொளியே, மேவும் இளவளியே,
பொன்னே, புவியின் புகழே, பொலிவான்
புதுநிலவே, தாலேலோ!

கண்ணே, கருமணியே, காரின் முகிழ்மலரே,
விண்ணே, விளங்கும் வெளியே, விரிவான்
வியன்நிலவே, தாலேலோ!

பண்ணே, பழமறையே, பச்சை மரகதமே,
தண்ணார் அமுதே, தரளம் நடுவே
தனிநிலவே, தாலேலோ!

 

கம்சன் பூதனை என்ற அரக்கியை அழைத்துக் குழந்தைகளைக் கொல்லுமாறு ஆணையிடல்

இரக்கமே இலாது கொடுஞ்செயல் புரிவாள்
எயிறுகள் கூரிய அரிவாள்
அரக்கியும் வந்தாள் பூதனை என்பாள்
எவரையும் கொன்றுடல் தின்பாள்
உரக்கவே கம்சன் இளையதாய் முள்ளை
உறுமரம் கொல்வதைப் போல்நீ
இருக்குமச் சிறாரை அழித்திடல் வேண்டும்
இஃதென தாணையாம் என்றான்.

பிறந்த. நாள்கள் பத்தாகும்
பிள்ளை சாவின் வித்தாகும்
பறந்து சென்று சுற்றியுள்ள
பட்டி தொட்டி ஊரெல்லாம்
சிறந்த ஆற்றல் கொண்டவளே
தேடிக் கொல்ல வேண்டுமென
அறம்தான் இல்லான் அவனுரைக்க
ஆணை ஏற்றாள் பூதனையாள்

அரக்கி பூதனையின் அழகிய பெண் வடிவம் எடுத்தல்

சேலோவிழி மானோநடை சீரார்முகில் குழலோ
நூலோவிடை பூவோநகை நோயேசெயும் எழிலோ
பாலோநறும் பாகோமொழி பாங்கேறிய மயிலோ
வேலோங்கிய வேந்தேவலை மீறாதவள் அவளோ

(வேலோங்கிய வேந்து– வேலேந்திய அரசன் கம்சன்)

( தொடரும்)