அட்டைப்படம் – ஜூலை 2022

மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீஸர் இங்கே!

போஸ்டர்களின் இணைப்பு மேலே !

டீஸர் நம் எதிர்பார்ப்பிற்கு நம்பிக்கை அளிக்கிறது.

செப்டம்பர் 30 வெளிவரும் படத்தைக் காண ஆவலாய் உள்ளோம்!

குவிகம் – எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைத் தேர்வு

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

குவிகம்- எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைத் தேர்வு

குவிகம் குழுமத்தின் மற்றுமொரு பரிசுத் திட்டம் !

ஓர் ஆண்டில் வெளிவந்த  சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப்  பரிசுகள் வழங்குவது!   

அச்சில் மற்றும் இணையத்தில் வரும் வார /மாத /காலாண்டு போன்ற இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளில் சிறந்த ஒரு சிறுகதையினை ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுத்து அவற்றிலிருந்து மிகச் சிறந்த ஒரு  சிறுகதையை ஆண்டுச் சிறுகதையாக அறிவிக்க குவிகம் திட்டமிட்டிருக்கிறது.

  • அச்சிலும் இணையத்திலும் பருவ இதழ்களில் இடம்பெறும் சிறுகதைகளில் சிறந்ததாக ஒருசிறு கதையை ஒவ்வொரு மாதமும் (ஜூலை 1, 2022 முதல் ஜூன் 30, 2023 வரை) ஒரு நடுவர்  தேர்ந்தெடுப்பார்.

  • அப்படி தேர்ந்தெடுக்கப்படும் 12 சிறுகதைகளில் சிறந்த ஒன்றை ஆண்டுச் சிறுகதையாக ஒரு நடுவர் தேர்வு செய்வார்.

  • அந்த 12 கதைகளும் நடுவரின் முன்னுரையோடு புத்தகமாக வெளியிடப்படும்.

  • ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் கதைக்கு ரூ. 1000 மற்றும் ஆண்டுச் சிறுகதைக்கு ரூபாய் ரூ5000/ பரிசளிக்கப்படும்.

  • சின்னஞ்சிறு கதைகளும் நீண்ட சிறுகதைகளும் தேர்வில் இடம்பெறாது.

  • தேந்தெடுக்கப்பட்ட மாதச் சிறுகதை குறித்த அறிவிப்பு அடுத்தமாதம் குவிகம் மின்னிதழில் அறிவிக்கப்படும்.

  • குவிகம் குழுமத்தின் முடிவே இறுதியானது.

இந்த முயற்சிக்கு இந்த வருடத்தின்  அனைத்து செலவினங்களுக்கான முழுத் தொகையினையும் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் குவிகத்திற்கு அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.!  

எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

இந்தத் திட்டம் தொடர்ந்து வெற்றி பெற இலக்கிய அன்பர்கள்  அனைவரது ஆதரவையும்   வேண்டுகிறோம்! 

– குவிகம் 

வ வே சு வைக் கேளுங்கள்

Jalamma Kids - kelvi-pathil

1.மிச்சம் மீதம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?  (தென்காசி கணேசன்)

மிச்சம் என்பது நாம் பயன்படுத்திய பிறகு மிகுந்திருப்பது . மீதம் என்பது நாம் பயன்படுத்தாமல் மிகுந்திருப்பது . மிச்சம் என்பது ஒரு வகையில் எச்சில் எனலாம்  . மிச்சில் மிசைவான் புலம் என்று குறள் கூறுவது எண்ணிப்பார்க்கத் தக்கது.  உணவில் மிச்சம் மீதி என்று சொன்னால் இதுதான் பொருள் . ஒன்று  உண்டபின்  எஞ்சியிருக்கும் உணவு; மற்றொன்று உண்ணப்படாமலேயே மிகுந்திருப்பது .   

Jalamma Kids - kelvi-pathil2.நெல்லை மாவட்டத்தில் வல்லிசா முடிந்ததா என்பார்கள் . அதாவது முழுவதும் என்ற அர்த்தம் . வல்லிசா என்ற வார்ததை எதில் இருந்து வந்தது?

(தென்காசி கணேசன்)

பொதுவாக ஒரு விஷயம் ஏதும் பிரச்சினை இன்றி முடிந் தால் இந்தச் சொல்லைப்  பயன்படுத்துவார்கள் . இது நெல்லை இராமநாதபுரம் மாவட்டங்களில் மறவர் சமூகம் பயன்படுத்தும் சொல்லாடல் . முக்கியமாக   அடிதடி இல்லாமல் சுமுகமாக பஞ்சாயத்து முடிந்துவிட்டால் “வல்லிசா முடிந்ததா”என்பார்கள் . வலிமை காட்டாமல் இசைந்ததா என்பதே வல்லிசா ஆக மாறியிருக்கலாம். 

Jalamma Kids - kelvi-pathil3.பொன்னியின் செல்வன் படித்திருப்பீர்கள் ! வரப்போகும் சினிமா பற்றி உங்கள் கருத்து ?  (சந்திரசேகரன் பாஸ்டன் ) 

என்னைப் பொறுத்தவரை கல்கியின் எழுத்தே சினிமா பார்க்கிற மாதிரிதான் இருந்தது. பல வாசகர்களுக்கும் அப்படித்தான் இருக்கும். ஒவ்வொரு வாசகனும் மனக்கண்ணிலே இதை சினிமாவாகப் பார்த்திருப்பான் .எனவே மணிரத்தினம் வெர்ஷன் அவர்களுக்குப் பிடிக்குமா இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வி . பொ .செ . வைப் பலமுறை படித்தவன் நான் .அந்த ரசனையை விஞ்சசும் அளவுக்கு சினிமா அமையுமா என்பது சந்தேகமே . கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலைப் பலமுறை படித்த காரணத்தால் , அந்த எழுத்து, நிகழ்வுகள் ,வசனங்கள் இவற்றை சினிமாவில் எதிர்பார்த்து ஏமாந்தவன் நான். எல்லோரும் இரசித்த அப்படத்தை என்னால் ஓரளவே இரசிக்க முடிந்தது. இதுவும் அப்படித்தான் என்று நினைக்கிறேன் .

Jalamma Kids - kelvi-pathil4.இரா முருகனின் மிளகு நாவலின் கதைச் சுருக்கம்  சொல்ல முடியுமா?   (சுந்தரராஜன் சியேட்டில்) 

ரொம்ப கஷ்டம் சார் , நாலு நுற்றாண்டுகளைத் தடவிக்கொண்டு முன்னும் பின்னும் ஓடுகின்ற கதை .15-ம் நூற்றாண்டு மிளகுராணியாக விளங்கிய சென்னபைரவ தேவியை மையமாகக் கொண்டு நகரும் கதை. 20-ம் நூற்றாண்டு கதாபாத்திரம் ஒன்று காலவெளியில் பின் நோக்கிப் பயணித்து மிளகுராணியின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கின்றது.இக் கதாபாத்திரம் இப்பின்நோக்கிய பயணத்தை மேற்கொண்டிராவிட்டால் சென்னபைரவ தேவியின் வாழ்க்கை எப்படி ஆகியிருக்கக் கூடும் என்று நினைப்பதற்கும் இடமுண்டு.இது போன்ற மாய யதார்த்தவாத படைப்புகளை சுருக்கமாகச் சொல்வது கடினம் .சொல்ல  ஆரம்பித்தால்  அது சுருக்கமாக இருக்காது . மிளகின் காரத்தையும் சாரத்தையும் முழுவதும் அனுபவிக்கவேண்டும் .

Jalamma Kids - kelvi-pathil5.தமிழில் பல சொற்கள்  வழக்கொழிந்து வருகின்றனவே! பழையன கழிதலும் புதியது புகுதலும் எல்லா மொழிக்கும் பொது என்றாலும் தமிழில் இது அதிகம் என்று தோன்றுகிறது . உங்கள் கருத்து என்ன?  (சுந்தரராஜன் சியேட்டில்) 

உண்மைதான். உலகத்தின் பல மொழிகளில் பிறமொழிச் சொற்கள் வரும்போது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள் . தமிழில் நாம் ஒவ்வொரு பிறமொழிச் சொல்லுக்கும் தமிழ்ச் சொல்லை உருவாக்குகிறோம் .எனவே நிறைய சொற்கள் புதிதாக வருகின்றன. பல பழைய சொற்கள் வழக்கொழிய, அவற்றின் பயன்பாடு இல்லாமல் போனதே காரணம் . வில்லைப் பயன்படுத்தாத காரணத்தால் “நாண் “ எனும் சொல் வழக்கொழிந்துவிட்டது . தேர் இல்லாததால் ‘அச்சாணி “ போய்விட்டது. அளவீடுகள் தசமத்தில் ஆனதால் வீசை, பலம், காணி எல்லாம் விடைபெற்றுவிட்டன. தமிழ் எழுத்துக்களில் பிற மொழிச் சொற்களை உச்சரிக்கும் வகையில் மாற்றங்கள் செய்தால் அதில் பயனுண்டு என்பது மகாகவி பாரதியின் கருத்து . 

Jalamma Kids - kelvi-pathil6.வானத்தில் எண்ணிலடங்கா விண்மீன்கள் உள்ளன ஆனால் நாம் (இந்தியர்கள்) 27 விண்மீன்களை மட்டுமே கணக்கில் கொள்கிறோம் , ஏன் ?”   –   ( சுரேஷ்  ராஜகோபாலன் ) 

வானியல் முறையில் பார்த்தால் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் நமது இந்திய சோதிட இயல் முறைப்படி பழங்காலத்தில் 28 நட்சத்திரங்கள் இருந்தன. அது சந்திர நாட்காட்டி முறை.  .நாம் இன்று கடைப்பிடிக்கும் முறை சூரிய சந்திர நாட்காட்டி இணைந்த முறை. ( Integration of solar and lunar systems of calendar ). சூரிய முறையில் 12 ராசிகள் ; சந்திர முறையில் 28 நட்சத்திரம் என்பது சரியாக வகுப்படாது. எனவே 27 நட்சத்திரங்களும் அவற்றின் 4 பாதங்களும் ( 27x 4 )108 பாகங்களாக ஆகும் போது கணக்கு சரியாக வந்தது, 

Jalamma Kids - kelvi-pathil7.நம் சமய நூல்கள் 6 ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் பெருமான், அப்பர் பெருமான் தேவாரங்களோடு தொடங்குகின்றன. என் ஐயம் திருவள்ளுவர் காலத்தின் முன்னும், அவர் காலத்திலும் சமய அருளாளர்கள் இருந்ததில்லையா? அவர்கள் ஞானநூல்கள் எதுவும் இயற்றியதில்லையா? இருந்தார்கள் என்றால் ஏதேனும் இலக்கிய, வரலாற்று சான்றுகள் நமக்கு – (சிவாயநம முத்துசாமி )

வெகுகாலமாகப்  பலரும் விடை  தேடிவரும் ஓர்  ஐயம். பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுவது போல ,இலக்கியங்கள் கிடைக்காத போது கல்வெட்டுகள் , செப்பேடுகள் போன்றவற்றின் துணைகொண்டு சில முடிவுகளுக்கு வரலாம் என்றாலும் அவை முழுமையான ஆய்வுகள் அல்ல. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் காலம் என்று ஒதுக்கிவிட்டதன் காரணம் ,அக்காலகட்டத்தில் படைக்கப்பட்ட இலக்கியம் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. தற்போது பழைய ஓலைச்சுவடிகள் கிடைத்தாலும் அவற்றைப் படிக்கும் அளவுக்குப் பலருக்குத் திறன் இருப்பதாகத் தெரியவில்லை. 

Jalamma Kids - kelvi-pathil8.திருக்குறள் இல்வாழ்க்கை அதிகாரத்தில் வரும் ‘தென்புலத்தார் ‘ என்னும் சொல்லுக்கு பிதிரர் அல்லது இறந்து விட்ட முன்னோர் என்று பொருள் கூறியிருக்கிறார்கள். ‘தென்புலத்தார் ‘ என்ற சொல்லுக்கு குருமார்கள் என்று பொருள் காண முடியுமா? ( சிவாயநம முத்துசாமி )

நிச்சயமாக முடியாது. எள் இரைத்து வழிபடும் திசையில் உறைபவரே தென்புலத்தார். அதுவே யமன் என்ற மறலி உறையும் திசை. குருவை இறைவனாகத்தான் பார்க்க வேண்டும் என்பதை சங்கர பகவத்பாதாள் சரித்திரத்தில்  மகாபெரியவா சொல்லியிருப்பார்கள் .

Jalamma Kids - kelvi-pathil9.இந்நாள் இளைஞர்களிடம் தமிழார்வம் பெருக இந்நாள் இலக்கியவாதிகள் செய்ய வேண்டியது என்ன?

குதிரையைத் தண்ணீர்த்தொட்டி அருகில்தான் அழைத்துச் செல்ல முடியும். குடிப்பதை அதுதான் செய்ய வேண்டும், என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. இலக்கியவாதிகள் தண்ணீர்த்தொட்டிகள்தான் . (ராமமூர்த்தி லாஸ் ஏஞ்சலிஸ் ) 

Jalamma Kids - kelvi-pathil10. சங்கப்  பாடல்களில் காணப்படும் கருத்துக்கள் இன்றைக்குப் பொருந்துமா?       (வீ. ராகவன் .பெருங்களத்தூர்) 

சங்கப் பாடல்கள் என்று பொதுவாகக் கேட்டால் பதில் சொல்ல இயலாது . அதாவது பொருந்தும் என்றும் சொல்லலாம் பொருந்தாது என்றும் சொல்லலாம் .

காலத்துக்கேற்ற வகைகள் அவ்வக் காலத்துக்கேற்ற ஒழுக்கமும் நூலும் 

ஞால முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் விளங்கிடும் நூலொன்றுமில்லை 

என்பது பாரதி வாக்கு. எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் பொருத்தமான ஒரு கொள்கையோ அல்லது கருத்தோ  இருக்கவே முடியாது. திருக்குறளுக்கும் அதே நிலைதான் . சங்ககாலத்தில் சொன்ன வள்ளண்மை , வீரம், அன்பு, மனிதநேயம் எல்லாம் இன்றும் பொருந்தும். ஆனால் பல பெண்ணியக் கொள்கைகள் இன்று பொருந்தாது. முத்தொள்ளாயிரம் போன்ற கைக்கிளை அதாவது ஒருதலைக்காமம் பற்றிப் பாடும் கருத்துக்கள் இன்று ஏற்புடையன  அல்ல.  


குறுக்கெழுத்துப் போட்டி – ஜூலை – சாய்நாத் கோவிந்தன்

Tamil Crossword Game - Google Play இல் உள்ள ஆப்ஸ்

ஜூலை மாதத்திற்கான குறுக்கெழுத்து இங்கே ! 

இது ஒரு ‘தலைப்பிற்கேற்ப ‘ (Theme based)  குறுக்கெழுத்துப்  போட்டி! பத்திரிகைகள் என்பது அந்த தலைப்பு ! அவை சம்பந்தப்பட்ட கேள்விகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

சரியான விடை எழுதும் அதிர்ஷ்டசாலி நண்பருக்கு குலுக்கல் முறையில் ரூபாய் 100 பரிசு! 

பதில் ஜூலை 18 தேதிக்குள் வரவேண்டும்!

புதிர் காண இங்கே சொடுக்கவும்! 

http://beta.puthirmayam.com/crossword/BC4C50A133

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சென்ற மாத (ஜூன் ) போட்டியில் கலந்து கொண்டவர்களில்  மொத்தம் 24 பேர்.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

சரியான விடை எழுதியவர்கள்: 

 

1)நாகேந்திர பாரதி 

2) வைத்யநாதன் 

3) ராய செல்லப்பா 

4) உஷா ராமசுந்தர் 

5) ரேவதி ராமச்சந்திரன் 

6) இந்திரா ராமநாதன் 

7) ராமமூர்த்தி  

8) பிரபு 

9) நடராஜன் 

10) ஜானகி 

11) எழிலரசன்

 

குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர் : ராமமூர்த்தி 

(அவர் எப்போதும் பரிசு வேண்டாம் என்று மறுப்பதால் இன்னொருவரைத் தேர்ந்தெடுத்தோம்)

அவர் : உஷா ராமசுந்தர் 

இருவருக்கும் வாழ்த்துகள் ! 

சரியான விடை இதோ : 

1
தா
2
சீ
ப்
3
பு
4
5
மி
ழ்
6
லி
ங்
ம்
7
னை
வா
8
ம்
9
10
வா
ணி
11
வா
ன்
12
ணி
நீ
க்
ம்
13
சி
லை
கி
14
15
கு
பெ
ர்
16
து
ப்
பு
ழு
ம்
பு

சரித்திரம் பேசுகிறது – யாரோ

ராஜராஜன்- காலத்தை வென்றவன்

ராஜ ராஜ சோழன் சமாதி எது? தொடரும் மர்மம்! | Mr Puyal

“வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்.. அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்” என்று பாடினான் ராஜராஜன் தன் மகன் ராஜேந்திரனைப் பார்த்து.

“காலத்தை வென்றவன் நீ.. காவியமானவன் நீ”- என்று இராஜேந்திரன் தந்தையைப் பற்றிப் பாடினான்.

‘படையெடுப்பு முடிந்ததா’ என்றால் ‘இல்லை’ என்கிறான் ராஜராஜன்!

வேங்கியில் கலிங்க மன்னன் ஜடாசோடன் வீமன் அரசாண்டு வந்தான். இந்த வீமன், முன்னாளில், சக்திவர்மன் – விமலாதித்தன் இருவருடைய தந்தையான தானர்ணவனை கொன்று, தான் அங்கு அரசனாயிருந்தான். மேலைச்சாளுக்கியரும் (சத்தியாசிரயன்), வீமனும் கூட்டணி ஒன்று அமைத்துக்கொண்டனர். கி பி 999 வருடத்தில் ராஜராஜன் வேங்கியின் மீது படையெடுத்தான். வேங்கியில் வேங்கை பாய்ந்தது என்று தான் சொல்லவேண்டும்.

ஆனால், வீமன் கூட்டணியின் எதிர்ப்பு பலமாக இருந்தது.
வீமனின் படைத்தளபதி ‘ஏசுவீரன்’ ஒரு பெரும் வீரன். முரட்டுத்தனமும், அறிவுத்திறனும் கொண்ட தலைவன். அவனை வீமன் அனுப்பினான். ராஜராஜன் போரில் ஏசுவீரனைக் கொன்றான். வீமன் மனம் சோர்ந்தான். ஆயினும் தனது இரட்டைத் தலைவர்கள் பட்தேமன், மகாராசன் என்ற சக்தி கொண்ட இரு படைத்தலைவர்களை சோழனுக்கு எதிராக அனுப்பினான். போர் உடனடியாக முடிந்திடவில்லை. இரண்டு வருடம் இழுத்தடித்தது. ராஜராஜனும், ராஜேந்திரனிடம் படைகளை விட்டு விட்டு தஞ்சை செல்வதும் – வருவதுமாக இருந்து சண்டை செய்தான். ‘இராஜேந்திரா! எதிரிகள் வலுவானவர்கள். நமது படையின் வலிமையும் குறைந்ததல்ல. ஆனாலும் அவசரப்பட்டு சோழ ரத்தத்தை சிந்தவிடாதே. மெல்ல மெல்ல இந்தப் பகையை அழி!’ என்று அறிவுறுத்தினான்.

ராஜாராஜன் பட்தேமன், மகாராசன் இருவரையும் போரில் கொன்றான். முடிவில் – வீமனும் தோல்வியுற்று ஓடினான்.
ஓடிய வீமனும் காத்திருக்கத் தொடங்கினான்.

‘எத்தனை நாள் இந்தச் சோழர்கள் சக்திவர்மனைக் காத்திருப்பர்’ – என்று கொக்கு மீனுக்காகக் காத்திருப்பதைப் போலக் காத்திருந்தான்.

ராஜராஜன் சக்திவர்மனுக்கு முடிசூட்டினான்.

அப்பொழுதே, சக்திவர்மனின் இளவல் விமலாதித்தனே என்றும் – சக்திவர்மனுக்குப் பின் அரசன் விமலாதித்தனே என்பதையும் உறுதி செய்து, அவனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டினான்.

சோழப்பெரும் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக தஞ்சைக்குத் திரும்பின.
வீமன் துணிவு கொண்டான்.

சக்திவர்மன் மீது படையெடுத்தான்.

காஞ்சி வரை அவனை வீரட்டித் துரத்தினான்.

ராஜராஜன் வெகுண்டான்.

கி பி 1001ல் சோழப்படைகள் காஞ்சி அருகில் நடத்திய போரில் வீமனை தோற்கடித்தனர். இந்தத்தோல்வியில் வீமன் துவண்டான். கலிங்கத்துக்குப் பின் வாங்கினான். ராஜராஜனை வெல்வது இயலாது என்று ஓய்ந்தான்.
சக்திவர்மனும் கி பி 1011 வரை ஆண்டான். பிறகு விமலாதித்தன் அரசனாயினான். ராஜராஜன் மகள் குந்தவி வேங்கியின் பட்டத்தரசியானாள்.
இப்படி வீமன் தோல்வியுற்றதையும், ராஜராஜன் ஆதிக்கம் ஏற்பட்டதையும், சாளுக்கிய சத்யாசிரசனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. வேங்கியின் மீது பல படையெடுப்புகளைச் செய்து வந்தான். இராஜேந்திரனின் இரட்டபாடிப் படையெடுப்பால் சத்யாசிரசன் தன் படைகளை வேங்கியிலிருந்து விலக்கிக் கொண்டான். கலிங்க நாடு – அது கோதாவரிக்கும் மகாநதிக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதி. விமலாதித்தனும், இராஜேந்திரனும் சேர்ந்து குலூதன் என்ற கலிங்க மன்னனை வென்றனர்.

இப்படி நானா திசைகளிலும் வெற்றி கண்ட ராஜராஜன் ‘சரி போர் முடிந்தது. இனி நாட்டைக் கவனிக்கலாம்’ என்று எண்ணினான்.

ஆனால்.. அரண்மனையில் அன்று மாலை ஒரு செய்தி வந்தது.
அது போர் முரசங்களை அலறவைத்தது.
செய்தியுடன் வந்தவன் வேறு யாருமல்ல.
நமது பழைய நண்பன் சேர மன்னன் பாஸ்கரன் தான்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் இராஜராஜனிடம் தோற்ற சேரமன்னன் இப்பொழுது அவனுக்கு அடங்கிய நண்பனாக ஆகி இருந்தான்.

அவன் சொன்ன செய்தி இது தான்:

அரபிக்கடலில் இருக்கும் ‘முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம்’ என்கிற (இன்றைய மாலத்தீவு) தீவு நாடு. அது மேற்குக் கடற்கரையிலிருந்து பல நூற்றுக் கல் தொலைவில் இருந்தது. சேரநாட்டினருக்கு அந்தத் ‘தீவு மக்கள்’ துன்பம் கொடுத்து வந்தனர். அந்தத்தீவு மக்கள் கடற்கொள்ளையராக மாறி சேர நாட்டு மரக்கலங்களைக் கொள்ளையடித்து வந்தனர். ராஜராஜனிடம் தீவுக்கொள்ளைக்காரர்களது அட்டூழியங்களை எடுத்துக் கூறி உதவி வேண்டினான்.

ராஜராஜன், ‘அந்நாளில் தனது கடற்படையின் பெருமை பேசித் திரிந்த சேரன்’, இன்று தனது கடற்படையின் உதவி நாடுவதை எண்ணி மனதுக்குள் மெல்ல நகைத்தான். எனினும் சேரனுக்கு உதவுவது தனது கடமையென்பதை உணர்ந்த ராஜராஜன்,

“கவலை வேண்டாம் பாஸ்கரா! நமது கடற்படை உடனே புறப்படும்” என்றான்.
இராஜேந்திரன் தலைமையில் சேர சோழ கடற்படை கடலாடிச் சென்றது. பழந்தீவு, கடலின் நடுவே பல கல் தொலைவில் இருப்பதால், பெருங்கப்பல்கள் கொண்ட பெருங்கடற்படை கொண்டே அதைத் தாக்க முடியும். இந்நாளில் கூட அப்படிப்பட்ட படையெடுப்பு சிரமமான காரியமே. சோழக்கடற்படை சென்றது. கொள்ளையர்களை அழித்தது – தீவை வென்றது. அருகிருந்த இலக்கத்தீவுகளையும் வென்றது.

ஒரேயடியாகச் சண்டைக்காட்சிகளையே காட்டிக் கொண்டிருந்தோம். அப்படி ராஜராஜன் பரபரப்பாக இருந்த போதிலும் அரண்மனையின் அந்தப்புரத்தையும் வளர்த்திருந்தான். ‘அடைந்தால் மகாதேவி.. அடையாவிட்டால் மரணதேவி’ என்ற வசனத்துக்கொப்ப இராஜராஜன் பல மகாதேவிகளை மணந்திருந்தான். நமக்குக் கிடைத்த தகவல்படி அந்த எண்ணிக்கை 15.

  1. உலக மகாதேவி – (தந்திசக்தி விடங்கி) பட்டத்தரசி
    2. சோழ மகாதேவி
    3. அபிமானவல்லி மகாதேவி
    4. திரைலோக்கிய மகாதேவி
    5. பஞ்சவன் மகாதேவி
    6. பிருத்திவி மகாதேவி
    7. இலாட மகாதேவி
    8. மீனவன் மகாதேவி – பாண்டிய நாட்டு இளவரசி
    9. வானவன் மகாதேவி (திருபுவன மாதேவி. வானதி) – இராசேந்திர சோழனின் தாய்
    10. வில்லவன் மகாதேவி- சேர நாட்டு இளவரசி
    11. வீரநாராயனி மகாதேவி.
    12. நக்கந்தில்லை அழகியார் மகாதேவி
    13. காடன் தொங்கியார் மகாதேவி
    14. இளங்கோன் பிச்சியார் மகாதேவி
    15. தைலா மாதேவி

அடேங்கப்பா!
அந்தப்புரத்தில்..
எந்தப்புரத்திலும் ..
காந்தக்கண்ணாட்டிகள் ..
சொந்தமான ராணிகள் ..

‘இராஜராஜ சோழன் நான்.. எனையாளும் காதல் தேசமிது’ என்று அவன் பாடிக்கொண்டே வரும் சிருங்காரக் காட்சி உங்கள் மனத்திலும் விரிகிறது அல்லவா?

இராஜராஜனின் திக்விஜயங்களைப் பேசினோம்.
காதல் காட்சிகளையும் சிறிது பார்த்தோம்.

இனி அவனது பக்தி, மற்றும் அவன் தமிழர் சரித்திரத்துக்கு கலங்கரை விளக்கமாகக் கட்டிய பெரியகோவில் .. அக்கதைகள் விரைவில் வரும்.

தொடரட்டும் சோழ நாட்டின் சரித்திரம்!.

 

சாதனை இயக்குனர்கள் ஸ்ரீதர்/பாலச்சந்தர்/பாரதிராஜா /மணிரத்னம் – நாகேந்திர  பாரதி/டி வி ராதாகிருஷ்ணன் /தென்காசி கணேசன் /பானுமதி

Kollywood Screenplay Writer C V Sridhar Biography, News, Photos, Videos | NETTV4U

10/7/22 அன்று மாலை 6 30 மணிக்கு குவிகம் நிகழ்வில்  இயக்குனர் ஸ்ரீதர் பற்றி ஆற்றிய உரை

-நன்றி குவிகம் சுந்தரராஜன் அவர்களே, வணக்கம், குவிகம் நண்பர்களே.

அலை கடலில் எங்களது சிறிய தோணி, கலை உலகில் எங்களது புதிய பாணி  ‘ என்ற வாக்கியங்களோடு மெல்லிய இசையோடு மெதுவாக நகரும் அந்தச் சித்ராலயா ‘ படகை ‘ மறக்க முடியுமா.  அதன் உரிமையாளர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா ஸ்ரீதர் அவர்களைத்தான் மறக்க .முடியுமா

புதுமை இயக்குனர் , காதல் இயக்குனர் , தென்னகத்து சாந்தா ராம் என்றெல்லாம் புகழப்பட்ட சித்தாமூர் விஜயராகவலு ஸ்ரீதர கிருஷ்ணன் என்ற ஸ்ரீதர் அவர்களின் புகழ் பாட பத்து நிமிடங்கள் பத்தாது என்பதால், மிகச் சுருக்கமாக அவரைப் பற்றியும்  அவர் படங்களில் என்னைக் கவர்ந்த சில காட்சிகளை மட்டும் சொல்லுகிறேன்.

இந்த ஜூலை மாதம் அவர் பிறந்த மாதம்  . 22 ஜூலை 1933 இல் பிறந்து 20, அக்டோபர் 2008 இல் மறைந்தார்.

பதினெட்டு வயதிலேயே திரைக்கதை வசனம் எழுதியவர் .

அந்த முதல் படம் ‘ ரத்த பாசமும் வெற்றிப் படம்.

இயக்குனராக அவர் உருவாக்கிய ‘கல்யாணப் பரிசும் வெள்ளி  விழா படம்.

1951 இல் ஆரம்பித்த அவர் திரைப்பயணம் 1991 வரை நாற்பது வருடங்களாகத் தொடர்ந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு , கன்னடம், என்று  அவர் கதை வசனம், இயக்கம், தயாரிப்பு என்று பங்கேற்ற படங்கள் ஐம்பதுக்கும் மேல். பிலிம் பேர் விருதுகள், கலை மாமணி விருது என்று பல விருதுகள்,  பரிசுகள்,

தமிழ்த் திரைப்பட உலகில் பல விஷயங்களை முதலில் முயற்சி  செய்தவர் ஸ்ரீதர் .

‘பிராண நாதா’ என்று காதல் மொழி பேசிய நாயகியரின்  , ,வசனத்தை இயல்புத்  தமிழுக்கு மாற்றியவர்.

முதன் முதலில் காஷ்மீருக்கு வெளிப்புறப் படப்பிடிக்குச் சென்ற முதல் தமிழ்ப் படம்  . தேனிலவு படம் .

முதன் முதலில் பாரிஸ், சுவிட்சர்லாந்து என்று வெளிநாட்டுக்கு சென்று எடுத்த முதல் தமிழ்ப் படம்- சிவந்த மண்

நடிக நடிகையரை ஒப்பனை இல்லாமல் நடிக்க வைத்த முதல் தமிழ்ப் படம்  – நெஞ்சிருக்கும் வரை

பூர்வ ஜென்ம ஞாபகங்களை வைத்து முழுமையாக எடுத்த முதல் தமிழ்ப் படம் – நெஞ்சம் மறப்பதில்லை

ஒரே செட்டில் முழுப்  படம் எடுத்து முதல் தமிழ்ப் படம் – நெஞ்சில் ஓர் ஆலயம்

முழுக்கவும் புது முகங்களை வைத்து எடுத்த முதல் தமிழ்ப் படம் – வெண்ணிற ஆடை .

ஈஸ்ட்மென் கலரில் எடுத்த முதல் முழுநீள நகைச்சுவைப் படம்  – காதலிக்க நேரமில்லை

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

எம்ஜிஆர் சிவாஜி என்று நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் இயக்குனரின் பெருமையை எடுத்துரைத்து அந்தக் கர்வத்தோடு வாழந்தவர் ஸ்ரீதர். அதற்காக மற்ற பிரபல கலைஞர்களோடு அவருக்கு தகராறு ஏற்பட்டதும்  உண்டு. பிறகு அவர்களோடு சேர்ந்து கொண்டதும் உண்டு .

எம் ஜி ஆரோடு சேர்ந்த ‘ அன்று சிந்திய ரத்தம் ‘ படம் நின்று போனதும் உண்டு. பிறகு அவரோடு ‘ உரிமைக் குரலில்’  சேர்ந்து கொண்டதும் உண்டு.

சிவாஜியோடு மனவருத்தம் ‘ ‘ வைர நெஞ்சம் ‘ படத்தில் . பிறகு ‘ மோஹனப் புன்னகை ‘ படத்தில் சேர்ந்தது .

பி சுசீலா அவர்களோடு கோபத்தில் போலீஸ்காரன் மகள் , சுமைதாங்கி படங்களில் அவரை ஒதுக்கியதும் உண்டு. பின்பு நெஞ்சில் ஓர் ஆலயத்தில் சேர்த்ததும் உண்டு.

ஸ்ரீதரின் பெருந்தன்மைக்கு உதாரணமாக படிக்காத மேதை படத்திற்கு இவரை வசனம் எழுதச் சொன்ன போது  தனது உதவியாளர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இந்தக் கதைக்கு வசனம் எழுத மிகவும் பொருத்தம் ஆனவர் என்று விட்டுக்  கொடுத்த குறிப்பு ஒன்றைக் கேட்டேன்.

அவரின் இயக்குனர் ஆளுமைக்கு உதாரணமாக , இவரது ஹிந்திப் படம் ஒன்றில்  லதா மங்கேஸ்கர் ஒரு பாடல் பதிவுக்கு வர தாமதம் ஆனதால், சுமன் கல்யாண்பூரை வைத்து அந்தப் பாடலைப் பதிவு செய்ய அந்த ஹிந்தி  இசை அமைப்பாளரைக் கேட்டுக் கொண்டு, அவர் அதன் படி நடக்க, அந்த இசை அமைப்பாளரை  அதன் பின் லதா மங்கேஸ்கர் ஒதுக்கி விட, பிறகு அவர்களை ஒன்று சேர்த்து வைத்தார்  ஸ்ரீதர் என்று ஒரு குறிப்பு .

இப்படி ஒரு  மனித நேயமும் அதே நேரம் ஒரு தனிப்பெரும் ஆளுமையும் உடையவராக இருந்து இயக்குனர்களின் பெருமையை திரைப் பட உலகில் உயர்த்திக் காட்டியவர் ஸ்ரீதர்.

இப்படி, தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்ற ஒரு கர்வத்தில் , தைரியத்தில் வாழ்ந்த கலைஞர் அவர்.

ஜெமினிக்குக் காதல் மன்னன் என்ற பெயர் வரும் அளவுக்கு காதல் காட்சிகளை அமைத்துக் கொடுத்ததில் ஸ்ரீதருக்கும் பெரும் பங்கு  உண்டு.. கல்யாணப் பரிசு, மீண்ட சுவர்க்கம் என்று அவளுக்கென்று ஒரு மனம் வரை , பாடல் காட்சிகளில் என்ன ஒரு மென்மையான காதல் உணர்வைக் கொண்டு வந்திருப்பார் ஸ்ரீதர் .

அது மட்டுமா , எத்தனை புதுமுகங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். மறைந்த முதல்வர் கலைச்செல்வி ஜெயலலிதா முதல், நிர்மலா,   மூர்த்தி, ஸ்ரீகாந்த் , ரவிச்சந்திரன் , காஞ்சனா , மற்றும்  மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் ‘ ஆதித்ய கரிகாலன் ‘ விக்ரம் ‘  என்று பல திறமையான கலைஞர்களை திரை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் .

பாடகராக இருந்த ஏ எம் ராஜா அவர்களை கல்யாணப் பரிசு மூலம் இசை  அமைப்பாளராக மாற்றியவர் .

ரிஸ்க் எடுப்பது அவருக்கு ரஸ்க் சாப்பிடுவது போல் என்று சொல்லலாம்.  முதலில் வீனஸ் தயாரிப்பு நிறுவனத்தில்  பங்குதாரராக இருந்து , பிறகு நண்பர்கள் கோபு, வின்சென்ட் மற்றும் சில நண்பர்கள் ஆகியோருடன் சேர்ந்து சித்ராலயா நிறுவனம்  தொடங்கி , தமிழ், ஹிந்தி என்று  எத்தனை  வெற்றிகள். எத்தனை தோல்விகள். தோல்விகளில் மனம் தளராமல் அடுத்த முயற்சி . கடைசிக் காலத்தில் , உடல் நலம் குன்றி இருந்த காலத்திலும் அவருக்கு பண உதவி செய்ய வந்த நண்பர் ஒருவரிடம், பணம் வேண்டாம், படம் பண்ணித்தந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன நம்பிக்கை  .

அவரது படங்களில் வெற்றி படங்களே அதிகம் வெற்றிகளே  அதிகம் என்பதற்கு அவரது நிர்வாகத் திறனும் ,முக்கியக் காரணம்.

சரி, இப்போது அவரது காதல் காட்சிகளுக்கு வரலாம். சுருக்கமான காதல்  வசனங்கள் அவர் சிறப்பு . கல்யாணப் பரிசில்  சரோஜா தேவி ‘ அம்மா நான்  போயிட்டு வர்றேன் ‘ என்று கல்லூரிக்குச் செல்லும் போது காதலனுக்கு கொடுக்கும் சமிக்ஞை காதல்.

‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்’ , – விலகிச் செல்லும் ஜெமினி,  நாகேஸ்வர ராவ் ‘கூப்பிடவா’ என்று கேட்க , ‘வேண்டாம் , அவர் போகட்டும்  ‘ என்று சொல்லி விட்டு அவர் குழந்தையை சரோஜா தேவி தனது கல்யாணப் பரிசாக ஏற்றுக் கொள்ளும் இடம், கல்யாணப் பரிசு கடைசி காட்சி வசனங்கள் மறக்க முடியுமா

இன்று அறுபது வயதுக்கு மேல் ஆகி, வசந்தி என்று பேர் வைத்திருக்கும் பெண்களிடம் கேட்டால், பலர், அவர்கள் பெற்றோர் ; கல்யாணப் பரிசு பார்த்த பாதிப்பில்  வைத்த பெயர் என்று சொல்லலாம்

அதே போல் அவர் இயக்கிய கடைசிப் படத்தில்’ தந்து விட்டேன் என்னை ‘ படத்தில்  காதலியின் திருமணத்திற்கு வந்து அதே போன்று  அட்சதை பெறும்  நாயகனாக  விக்ரமின் முதல் படம். ஸ்ரீதர் இயக்குனராக  முதல் படம், கடைசிப் படம் இரண்டின் இறுதிக்  காட்சிகள் இவ்வாறு அமைந்தது வியப்புக்கு உரிய விஷயம் தான். . ஆனால் அதில் விக்ரம் , இன்னொரு பெண்ணின் கரம் பிடிப்பதாக மகிழ்ச்சியாக முடித்திருப்பார்.  இந்தக் காலத்தில் மக்கள் அந்த சோகத்தை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்ததால் இருக்கலாம்

அந்த  பழைய படங்களில்  முக்கோணக் காதலில் தோல்வி அடைந்த காதலனோ காதலியோ மற்றவரை ‘ எங்கிருந்தாலும் வாழ்க ‘ என்று வாழ்த்தும் குணம் உடையவர்களாக படைத்திருந்தது அந்தக் காட்சிகளை இன்றும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது .

இப்போது போல், ‘ அடிடா அவளை, குத்துடா அவளை ‘ என்று வன்முறையை தூண்டி இன்றும் பத்திரிகைகளில் படிக்கும் பல கொலைச் சம்பவங்களைத் தூண்டாத மென்மையான காதல் காட்சிகள் அவர் அமைத் தவை .

மென்மையான , தியாகம் நிரம்பிய முக்கோணக் காதல் என்றாலே முதலில் ஞாபகம் வருவது  இயக்குனர் ஸ்ரீதர் தானே . கல்யாணப் பரிசில்  தொடங்கி  , நெஞ்சில் ஓர்  ஆலயம், வெண்ணிற ஆடை, அவளுக்கென்று ஒரு மனம், இளமை ஊஞ்சலாடுகிறது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

கல்யாணப் பரிசில் ஜெமினி, சரோஜா தேவி, விஜயகுமாரி

நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண் குமார் , முத்துராமன், தேவிகா

வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த் , ஜெயலலிதா , நிர்மலா

அவளுக்கென்று ஓர் மனம் , ஜெமினி , முத்துராமன், பாரதி

இளமை ஊஞ்சலாடுகிறது கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா

முக்கோணக் காதல் கதைகளில் முத்திரை பதித்தவர் அல்லவா ஸ்ரீதர்

இது போன்று பாடல் காட்சிகளை அவர் படம் ஆக்கி இருக்கும் விதமும் அருமையாக இருக்கும் .

நிலவொளியில் ,காஷ்மீரில், ஏரியில் ,படகில் இருந்து நாயகன் நாயகி பாடும்  தேன்  நிலவு . ‘ நிலவும் மலரும் பாடுது ‘ பாடலை அவர் படம் ஆக்கி இருந்த விதம் மறக்க முடியுமா .

கண்ணதாசன் ,  ஸ்ரீதர்  சேர்ந்து ஏ எம் ராஜா  ,விஸ்வநாதன் இன்னிசையில்  அமைந்த காதல் பாடல்களையும் இசையமைப்பையும், காட்சிப்படுத்தலையும் மறக்க முடியுமா. ஸ்ரீதருக்குப் பிடித்தமான முக்கோணக் காதலை  சோகத்தின் நெகிழ்வோடு  நமக்குள் பாய்ச்சிய பாடற் காட்சிகள் அல்லவா அவை .

நெஞ்சில் ஓர் ஆலயம் ‘சொன்னது நீதானா ‘ பாடல் காட்சியில்  வின்சென்டின் கேமெரா கோணங்கள். சித்தாரோடு  தேவிகா, திறந்திருக்கும் ஜன்னல், முத்துராமன்  கட்டில் , என்று காட்டி  அந்தக் கட்டிலுக்கும்  அடியில் சென்று வரும் காமெரா, என்று படம் ஆக்கியுள்ள விதம்.

‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ‘பாடல் காட்சியில்    ‘ஒன்றிருக்க ஓன்று வந்தால் வரியில்’, சிறிய முக கண்ணாடியில் முத்துராமன் உருவம் தெரிய , தேவிகா அதை பார்த்து கலங்குவது  .

‘எங்கிருந்தாலும் வாழ்க ‘ ஏ எல் ராகவனின் உருக்கமான குரலில்  கல்யாண் குமார் , தேவிகா புகைப்படத்தை வைத்துக் கொண்டு  பழைய நினைவுகளில் கலங்கி அதே சமயம்  ‘தூயவளே நீ வாழ்க ‘ என்று போற்றிப்   பாடும் அந்தக் காட்சியைக் காதல் கவிதையாக கண் முன் வடித்துத் தந்தது ஸ்ரீதரின் இயக்கம் அல்லவா.

சோகத்தின் நெகிழ்வை   நமக்குள் பாய்ச்சிய பாடற் காட்சிகள் அல்லவா அவை

குறைந்த ஒளியில் படம் ஆக்கப்பட்ட  ‘முத்துக்களோ கண்கள்’  , நெஞ்சிருக்கும் வரை பட பாடல் காட்சி யின் காதலும் கவிதையும் மறக்க முடியுமா

‘ பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி ‘ பாடலில் சிவாஜி , முத்துராமன் , கே ஆர் விஜயா  நடிப்பில்  .அந்தக் காட்சிகள், அந்தக் காலத்தில் எல்லாத் திருமண நிகழ்வுகளிலும் ஒலித்த பாடல் அல்லவா அது.

ஸ்ரீதர் டச் , நீங்கள் பார்த்து அனுபவிக்க வேண்டும் .

பெரிய பிரேமுக்குள் சின்ன பிரேமாக  மற்றும் ஒரு  காட்சி வரும் பாணி.

மீண்ட சுவர்க்கம் படத்தில் ‘படத்தில் துயிலாத பெண் ஒன்று கண்டேன்’ – ஆகாயத்தில் காதல் சின்னத்தில் ஜெமினி, பத்மினி பறப்பது

அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் – பாரதி , ஜெமினி  காதல் காட்சி யிலும் வரும் , . இந்த பாணி சிவந்த மண்  ; ஒரு ராஜா ராணியிடம் பாடலிலும் வரும்.

இந்த பாணியெல்லாம் பின்னால் பலர் செய்தாலும் மீண்ட சொர்க்கத்தில் ஸ்ரீதர் ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.

அது போல் ‘என்ன பார்வை உந்தன் பார்வை ‘ காதலிக்க நேரமில்லை பாடலிலும் , கார் கண்ணாடியில் முத்துராமன் முகம் தெரிய முன்னால் காஞ்சனா ஆடிச் செல்லும் காட்சியும் அருமையாகப் படம் பிடித்திருப்பார்.

ஒளிப்பதிவாளர் வின்சென்டை வேலை வாங்கியவர் ஸ்ரீதர் தானே.

காதல் காட்சிகள் இப்படி சோகத்தில் நெகிழ வைத்தால்,  அவர் தந்த நகைச்சுவை காட்சிகள்,

பார்க்கில் படுத்துக்  கொண்டு எழுத்தாளர் பைரவன் என்று பொய் சொல்லும்  கல்யாணப் பரிசு  தங்கவேலு,

பிறகு நண்பர் கோபுவோடு சேர்ந்து அவர் தந்த நகைச்சுவைக் காட்சிகள்

காதலிக்க நேரமில்லை

‘ அசோகன், மகன் என்று ‘ ன் விகுதியோடு  சொல்வது மரியாதை  இல்லை என்று   அசோகர் உங்க மகரா’ என்று பாலையா , முத்துராமனிடம் கேட்கும் காட்சி .

நாகேஷ் கதை சொல்லும் காட்சியில் , ஒரு கண்ணுள்ள பொண்ணா என்பதை  ‘ ஒரு பொண்ணுள்ள கண்ணா ‘ என்று பயத்தில் பாலையா உளறுவது  ‘

ஊட்டி வரை  உறவு  நகைச்சுவை .

சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், நேரக் கட்டுப்பாடு கருதி ,  அவரது படத் தலைப்புகளையே உபயோகப்படுத்தி

நம் நெஞ்சிருக்கும் வரை  . நெஞ்சம் மறப்பதில்லை , நெஞ்சில் ஒரு ஆலயமாய்  ஸ்ரீதர்  நினைவு என்றும் நிற்கும்  என்று சொல்லி  இத்துடன் நிறைவு  செய்கிறேன்.நன்றி.

 

இயக்குநர் கே.பாலசந்தரின் சாதனைகள்
—————————————————
(10-7-22 அன்று மாலை 6-30 மணிக்கு குவிகம் நிகழ்ச்சியில் என்னால்
வாசிக்கப்பட்ட கட்டுரை)
K. Balachander: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimesதமிழில் பேசும்படம் தோன்றிய 1931முதல் பல இயக்குநர்கள் பல சாதனைகளைப்
புரிந்துள்ளனர்.
1948ல் இருந்த தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு எஸ் எஸ் வாசன்
அவர்கள்..தனது :”சந்திரலேகா”படத்தில் அமைத்திருந்த டிரம்ஸ் டேன்ஸ் இன்று
பேசும் ஒன்றாக உள்ளது.”வஞ்சிக் கோட்டை வாலிபன்” படத்தில் நடனப் போட்டியை
மிகவும் அழகாக இயக்கி இருப்பார்.
இன்று நாம் பேச இருக்கும் இயக்குநர்கள் நால்வரைப் போன்று பலர் பல
சாதனைகளைப் படைத்துள்ளனர்.உதாரணத்திற்கு ஏ.பீம்சிங்,பி ஆர் பந்துலு..ஏ பி நாகராஜன், கே எஸ் கோபாலகிருஷ்ணன்,பாலு மகேந்திரா,மகேந்திரன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில்..இவர்களைப் பற்றியும் பேசும் சந்தர்ப்பத்தை
குவிகம் ஏற்படுத்தித் தர வேண்டும்.
இனி..
நாம் பேசப்போகும் நான்கு இயக்குநர்களும்..ஒரு காலத்தில் சிவாஜி படம், எம்
ஜி ஆர் படம், ஜெமினி படம் என ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருந்த
நேரத்தில்..ஸ்ரீதர் படம், பாலசந்தர் படம், பாரதிராஜா படம், மணிரத்னம்
படம் என இயக்குனர் களைக்  குறிப்பிட்டு பேசப்படும் நிலையை
உருவாக்கினார்கள்.
இனி கே பாலசந்தரைப் பற்றி..
இதைச் சொல்லலாமா..மக்கள் ஏற்பார்களா?என்ற விளைவுகளைப்  பற்றி தயக்கமே
இல்லாமல், படத்தின் வெற்றி,தோல்வி பற்றி கவலைப்படாது..செயல்பட்ட உன்னதப்
படைப்பாளி பாலசந்தர் ஆவார்.
நான் சொல்ல வரும் விஷயம் இது..இதை என்னால் இப்படித்தான் சொல்ல
முடியும்..என முகத்தில் அறைந்தாற் போலக் கருத்து சொன்ன கலை வித்தகர்.
இவரது படங்கள் காலத்தால் முந்தியவை.”நாளை இதெல்லாம் சகஜமாகிவிடும்”என்று
முன்பே கணித்த கத்தைக்காரர் இவர்.
இவர் அளவிற்கு சிக்கலான உறவுமுறைகளை திரையில் கொண்டு வந்தவர்கள் யாரும்
இருக்க முடியாது.
பாசம் கொட்டுவது என்ற பெயரில் அழுகையால் திரையை நனைக்காமல், யதார்த்தமாய்
உறவில் இருக்கும் கோபதாபங்களை அவரால் நமக்குள் கடத்த முடிந்தது.
இவரது ஆரம்ப காலப் படங்கள் நாடகமேடையில் இருந்து திரைக்கு வந்தவை.ஆனாலும்
அவரது காட்சி படுத்தலில் நாடகத்தன்மையைப் பார்க்க முடியாது.
நம் பக்கத்து வீட்டில் அன்றாடம் நிகழும் சம்பவங்களை ஒரு வேடிக்கைப்
பார்ப்பது போல அவரது படங்களைப் பார்க்க முடியும்.
காதல், கோபம்,ஆற்றாமை என உணர்வுகளின் உன்னதங்களை அவரது கதாபாத்திரங்கள்
நம்மிடம் காட்டின.
அவர் முதுமையைத் தொட்ட காலத்திலும்,காதலின் இளமைப் பக்கங்களைக் காட்சிப்
படுத்தினார்.மனதை முதுமை தாக்கிவிடாது பார்த்துக் கொள்வது ஒரு
சாமார்த்தியக் கலை.அது அவர்க்கு கை வந்திருந்தது.
கதாநாயகர்களையே மையமாக வைத்து கதாநாயகிகளை ஊறுகாய்ப் போலக் காட்டி வந்த
வெள்ளித்திரையில் பெண்களை மையப்படுத்தி திரையில் உலாவவரச் செய்தவர் அவர்.
இனி, அவரது சில படைப்புகளைப் பார்ப்போம்..
1930ஆம் ஆண்டு ஜூலை ஒன்பதாம் நாள் பிறந்தவர் அவர்.சிதம்பரம் அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்று 1950ஆம் ஆண்டு சென்னை ஏ ஜி
எஸ் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.
அப்போது ஒய்.ஜி.பார்த்தசாரதி,பட்டு ஆகியோர் நடத்தி வந்த யுனைடெட்
அமெச்சூர் நாடகக் குழுவில் இணைந்தார்.
அலுவலகத்தில் பொழுதுபோக்கு மன்றத்திற்காக..ஒருசமயம் “புஷ்பலதா”எனும்
நாடகத்தை நடத்தினார்.அதில் வரும் பெண்பாத்திரம்தான் புஷ்பலதா.அவளைப்
பற்றி அனைவரும் பேசுவர்.ஆனால் கடைசிவரை அப்பாத்திரம் மேடையில்
வராது.அந்நாடகத்தின் ஞாபகமாகவே தன் மகளுக்கு புஷ்பா என்று பெயரிட்டார்.
பின் ராகினி ரெக்ரியேஷன்ஸ் எனுன் நாடகக் குழுவினை நிறுவி..அதன் முதல்
நாடகமாக மேஜர் சந்திரகாந்த் எனும் நாடகத்தை நடத்தினார்.
இவர் நாடகங்களால் கவரப்பட்ட ஆர் எம் வீரப்பன்..இவரை எம் ஜி ஆருக்கு
அறிமுகப்படுத்த..”தெய்வத்தாய்” படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பினைப்
பெற்றார்.பின்.பி மாதவன் தான் தயாரித்த நீலவானம் எனும் படத்திற்கு வசனம்
எழுதும் வாய்ப்பை இவருக்கு வழங்கினார்.
அப்படத்தில்..அவர் எழுதிய..
“ஆறிலே சாகலாம் அறியாத வயசு
நூறுல சாகலாம் அனுபவித்த வயசு
ஆனால் பதினாறுல சாகறது என்பது எவ்வளவு கொடுமை”
என்ற வசனம் பிரபலமாகி..எல்லோராலும் பேசப்பட்டது.
ஆனால் அவரோ..”சர்வர் சுந்தரம்”.”எதிர்நீச்சல்”நீர்க்குமிழி”
“மெழுகுவர்த்தி””,நவக்கிரஹம்,” “நாணல்” என அடுத்தடுத்து நாடகங்களை
வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
இவரது நாடகங்களுக்கு மக்கள் டிக்கெட் கிடைக்காமல்..கள்ள மார்க்கெட்டில்
டிக்கெட் வாங்கி..பார்த்து ரசித்தனர்.
இவரது “சர்வர் சுந்தரம்” நாடகத்தை ஏ வி எம் அவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு
இயக்கத்தில் திரைப்படமாக்கினர்.இப்படத்திற்கு மூன்றாவது சிறந்த
படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.
இவரது மேஜர் சந்திரகாந்த நாடகம் தமிழில் மட்டுமின்றி..ஹிந்தியிலும்
“ஊஞ்சே லோக்” என்ற பெயரில்படமானது.
இதனிடையே முக்தா ஸ்ரீனிவாசன் தனது “பூஜைக்கு வந்த மலர்” படத்திற்கான
வசனத்தை இவரை எழுதச் சொன்னார்.
இவரது “நீர்க்குமிழி” நாடகத்தை ஏ கே வேலன் திரைப்படமாக்கி இவரையே இயக்கச்
சொன்னார்.பாலசந்தரின் இயக்கத்தில் வந்த முதல் படம் இது.
பாலசந்தர் சென்டிமெண்ட் பார்ப்பதில்லை.முதல் படமே “நீர்க்குமிழி”
என்றுள்ளதே..அதை மாற்றுங்களேன் என நண்பர்கள் பலர் கூறியும் “அதில் எனக்கு
நம்பிக்கை இல்லை”என்றார் கேபி.
இப்படத்திற்குப் பின் இவரது திரையுலக கிராஃப்
ஏறத்தொடங்கியது.அடுத்து..”நாணல்” இவர் இயக்கத்தில் வந்தது.
தொடர்ந்து, “ஆனுபவி ராஜா அனுபவி”, “பாமா விஜயம்” என்று இரு நகைச்சுவைப்
படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.
“வரவு எட்டணா..செலவு பத்தணா..”என்ற பாடலையும், “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்”
பாடலையும் முணுமுணுக்காத உதடுகளே அன்று இல்லை எனலாம்.
பின் “எதிர்நீச்சல்” திரைப்படமானது.இதில் நாகேஷ் “மாது” என்ற
பாத்திரத்தில் நடித்ததை நம்மால் எளிதில் மறந்துவிட
முடியுமா?.ஸ்ரீகாந்த்,சௌகார் ஜானகியின் கிட்டு மாமா,பட்டுமாமி கண்டு
மகிழாதவர்கள் இல்லை.
வாணீஸ்ரீ, சரோஜாதேவி ந்டிக்க வந்த படம் “தாமரை நெஞ்சம்”
“துக்கம் அதிகமானால்..மடமடவென ஒரு சொம்பு தண்ணீரை குடிச்சுடுவேன்.துக்கம்
அடங்கிவிடும்.சிரித்திடுவேன்”என்று சரோஜாதேவி கூறும் வசனம் அனைவராலும்
பாராட்டினைப் பெற்றது.
அடுத்து..”பூவா தலையா” படமும், “இரு கோடுகள்” படமும் வந்தன.
“சுகமோ..துக்கமோ..படிப்போ..எதுவாயினும்..அது ஒரு சிறிய கோடாய்
இருந்தால்..அதன் அருகே ஒரு பெரிய கோடு இட்டால்..சுகமெனில்
அதிகரிக்கும்..துன்பமெனில் குறையும்..படிப்பு எனில் படிப்பறிவு
வளரும்.சின்னக்கோடு இருந்த இடம் தெரியாமல் போகும்” என்ற தத்துவத்தை
உணர்த்தியது வசனம்.
1971ஆம் ஆண்டு வந்த படங்கள்..ஏழு…ஒரு இயக்குநரின் இவ்வளவு படங்கள் ஒரே
ஆண்டு வந்தது பெரும் சாதனை.இந்த சாதனையை இதுவரை யாரும்
செய்யவில்லை.மூன்று தமிழ்,இரண்டு தெலுங்கு,இரண்டு ஹிந்தி படங்கள்.
சுதந்திரம் பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்த ஆண்டு 1972.ஆகவே அந்த
ஆண்டு வந்த தன் படத்திற்கும்,”வெள்ளிவிழா” என்றே பெய்ரை வைத்தார்.இதில்
தேங்காய் ஸ்ரீனிவாசனை அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதியாக
காட்டியிருப்பார்.
அடுத்து வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படம்”அரங்கேற்றம்”..மிகவும்
கூர்மையான வசனங்கள்..
உதாரணத்திற்கு…பிரமிளாவின் மேலாடை நழுவ, ஆண்கள் இருக்கும் போது மேலாடை
நழுவுவதை அம்மா கண்டிக்க..”ஆம்பளைங்கறதே மரத்துப் போச்சு”
என்ற வசனமும்..வேறு ஒரு இடத்தில்,”நாங்க எல்லாம் தமிழ்நாட்டு
பொம்பளைங்க..தலை நிமிர்ந்து வீதிக்கு வெளியே பார்க்கும் வழக்கம்
நமக்கில்லை”என்ற வசனமும் பாரட்டுதலைப் பெற்றன.
“அவள் ஒரு தொடர்கதை”..எம் எஸ் பெருமாள் அவர்கள் கலைமகள் இதழில் ஒரு தொடர்
எழுத..அதை இப்பெயரில் திரைப்படமாக்கினார் கேபி.தமிழில் சுஜாதா
அறிமுகம்.இப்படம் ஐந்து மொழிகளில் டப்பிங்க் ஆகவோ..ரீமேக்காகவோ வெளிவந்து
சாதனைப் படைத்தது.
“அபூர்வ ராகங்கள்” ..ரஜினிகாந்த் அறிமுகம்.1975ஆம் ஆடு சிறந்த
படத்திற்கான விருதினையும், சிறந்த இயக்குநர் விருதினை  கேபிக்கும்,சிறந்த
பாடலாசிரியை விருதினை வாணி ஜெயராமிற்கும் பெற்றுத் தந்தது.
அடுத்து, “மன்மத லீலை”.”மூன்று முடிச்சு””அவர்கள்” “பட்டிணப்
பிரவேசம்”,நிழல் நிஜமாகிறது என தொடர்ந்தன இவரது வெற்றி படங்கள்.
1978ல் “மரோசரித்ரா” எனும் மாபெரும் காவியம் தெலுங்கில்
வெளிவந்த்து.கமல்ஃஹாசனும், சரிதாவும் நடித்திருந்தனர்.சென்னை சஃபைர்
தியேட்டரில் 596 நாட்கள் இப்படம் ஓடியது.இதே படம்..”ஏக் துஜே கேலியே”
என்ற பெயரில், கமல், எஸ் பி பாலசுப்ரமணியம்,மாதவி ஆகியோர் ஹிந்தியில்
அறிமுகமாக வெளிவந்த்து.
“வறுமையின் நிறம் சிவப்பு”..அடுத்து வந்த படம்.வேலையில்லா
திண்டாட்டத்தைக் குறித்து வெளியான படம்.
படித்த வேலையில்லா மூன்று பேர்.பல சம்பவங்கள்..பல முடிச்சுகளைக் கொண்ட படம்.
அடுத்து விசு வசனம் எழுத ரஜினி நடிக்க இன்றும் ரசிகர்கள் விரும்பும்
படம்”தில்லுமுல்லு” வெளியானது.
“கோமல்”சுவாமிநாதனின் வெற்றி நாடகம் “தண்ணீர் தண்ணீர்”.கிராமங்களில்
நிலவும் முதலாளித்துவம்,மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி,அரசியல் சிவப்பு
நாடாத்தனம் ஆகியவற்றை தோலுரித்து காட்டிய இந்நாடகத்திற்கு திரைக்கதை
அமைத்து இயக்கினார் கேபி.
சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது..சிறந்த திரைக்கான விருது இப்பட்ம்
பெற்று தந்தது.
பின், 47 நாட்கள்,புன்னகை மன்னன்,மனதில் உறுதி வேண்டும்..என வெற்றிப்
பயணம் தொடர்ந்த்து.இவற்றுள் அச்சமில்லை அச்சமில்லை குறிப்பிட வேண்டிய
படமாக அமைந்தது
அரசியல்வாதி உலகநாதன்.ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன். அவன்
அரசியலில் ஈடுபட்டு முற்றிலுமாக மாறிவிடுகிறான்.அவ்னாய்..அவன் மனைவியே
கொன்று விடுகிறாள்.ராஜேஷ் உலகநாதனாகவும்..சரிதா அவரது மனைவி
தேன்மொழியாகவும் வந்து போட்டி போட்டுக் கொண்டு நடித்தனர்.சிறந்த தமிழ்ப்
பட தேசிய விருது கிடைத்தது,தனக்குப் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று
என்பார் கேபி..இதில் குள்ளமான நடிகர் ஒருவரை நடிக்க வைத்து
அப்பாத்திரத்திற்கு சுதந்திரம் என்ற பெயரை வைத்திருப்பார்.அதாவது
சுதந்திரம் வளரவில்லை என்பதை குறிப்பாக உணர்த்திய படம் இது.
அடுத்து வந்த படம் பாலசந்தரின் மகுடத்தில் வைரக்கல்லை பதித்த
படம்.”சிந்து பைரவி”. சிவகுமார், ஜே கே பி எனும் கர்நாடக சங்கீதத்தில்
ஞானமுள்ல இசைக்கலைஞனாகவே இப்படத்தில் வாழ்ந்திருப்பார்.சுஹாசினி..சிந்து
வாகவும்..சுலக்க்ஷணா பைரவியாகவும் நடித்திருப்பர்.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை.கேபி எப்பேர்பட்ட மேதை என்பதற்கு
ஒரு சிறு உதாரணம்.இப்படத்தில், “பாடறியேன்..படிப்பறியேன்’ எனும் பாடலில்,
“எண்ணியே பாரு..எத்த்னைப் பேரு..தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டுப் பாடு”என
வைரமுத்து எழுதியிருந்தார். அதைப் பார்த்த பாலசந்தர்..”தமிழ் பாட்டும்
பாடு”என மாற்றிக் கொள்ளலாமா? என்று கேட்டார்.
“பாட்டுப் பாடு..”..”பாட்டும் பாடு”
“ப்” மாற்றி, “ம்” போட்டதும்..அதன் அர்த்தம் எவ்வளவு மாறுகிறது பாருங்கள்.
இதற்குப் பின், உன்னால் முடியும் தம்பி,புதுப்புது அர்த்தங்கள்,அழகன்,ஒரு
வீடு இரு வாசல்,வானமே எல்லை,டூயட் என இவரது பட்டியல் நீள்கிறது.
இதுவரை அவரது படங்களையும்..ஆங்காங்கு சில சாதனைகளையும்
குறிப்பிட்டேன்.இனி அவரின் கதாநாயகிகளைப் பார்ப்போம்.
அச்சமில்லை..அச்சமில்லை..தேன்மொழியாக சரிதா
அரங்கேற்றம் படத்தில் லலிதாவாக பிரமிளா
தாமரைநெஞ்சம் படத்தில் கமலாவாக சரோஜாதேவி
மனதில் உறுதி வேண்டும்..நந்தினியாக சுகாசினி
இப்படி பாத்திரங்களின் பெயர்கூட ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் விதமாக படைப்புகள்.
கல்கி படம் பற்றி பாலசந்தர் ஒருமுறை சொன்னார்..”முற்போக்கு சிந்தனைகள்
குறைவாக இருந்த காலத்தில் வந்த படம்.சமூகக் கட்டுப்பாடு
அவசியம்தான்.அதேநேரத்தில் தனிமனித சுதந்திரமும் தேவையானதும்
கூட.கல்கி,சமுதாயத்திற்கு சாட்டையடி தந்தவள்.நான் எடுத்த படங்களில்
பார்ட்2 எடுக்கச் சொன்னால் கல்கிதான் என் சாய்ஸ்.எந்நாளும் பெண்மையின்
அறிவையும்,துணீவையும் பேசுபவர்கள் என் நாயகிகள்”
கேபி தான் இயக்கிய ப்டங்கள் தவிர்த்து..தான் தயாரித்த படங்களை இயக்க பல
இயக்குநர்களுக்கு சந்தர்ப்பம் அளித்தார்.
விசு,அமீர்ஜான்,வசந்தபாலன்,மௌலி,அனந்து,வசந்த்,அகத்தியன்,சரண்,ஹரி,செல்வா,ரமணா,பேரரசு
ஆகியோர் அவர்கள்.
கேபியின் மேலும் சில சாதனைகள் சுருக்கமாக…
50 ஆண்டுகள் தமிழ்த்திரை உலகில் நிலைத்து நின்ற இயக்குநர்
கமல்ஹாசனை அரங்கேற்றம் படம் மூலம் இளைஞனாக அறிமுகப்
படுத்தியவர்.தவிர்த்து “மரோசரித்ரா” மூலம் தெலுங்கிலும்,”ஏக் துஜே
கேலியே” மூலம் ஹிந்தியிலும் அறிமுகப்படுத்தியவர்.
“அபூர்வராகங்கள்” மூலம் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியவர்
மனதில் உறுதி வேண்டும்” படத்தில் 12 நடிக-நடிகையரை அறிமுகப்படுத்தினார்.
102 படங்களில் இவர் உழைப்பு இருந்திருக்கின்றது.87 படங்களை
இயக்கியுள்ளார்.65 நடிகர்-நடிகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தேசிய விருதுகள்,மாநில அரசு விருதுகள்,ஃபிலிம் ஃபேர்
விருதுகள்,பல்கலைக்கழகங்கள் அளித்த டாக்டர் விருது ,பத்மஸ்ரீ விருது
மற்றும் திரையுலகினருக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான தாதா
சாஹேப் பால்கே விருதினையும் பெற்றவர்
ஸ்ரீதேவி,ஜெயப்ரதா,சரிதா,சுஜாதா,ஸ்ரீப்ரியா,ஜெயசுதா,ஜெயசித்ரா,கீதா,ஸ்ரீவித்யா,சுமித்ரா,ஜெயந்தி,மதுபாலா,ரம்யா
கிருஷ்ணன் ஆகியோர் இவர் அறிமுகப்படுத்திய நடிகைகள்.
சினிமாவில் ஒருவர் இயக்குநர் ஆக வேண்டுமானால்..அவர் மனிதர்களைப் படிக்க
வேண்டும்.உணர்வுகளைப் படிக்க வேண்டும்..இந்த இரண்டையும் கூர்மையாகப்
படிப்பவர்..கவனிப்பவர் இயக்குநர் ஆகலாம் என்பார்.
கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் என்று இவர் பணியாற்றிய படங்கள் 125.தமிழ்
-87,தெலுங்கு 19,ஹிந்தி 7,கன்னடம் 8,மலையாளம் 4.இவை தவிர்த்து பல
சின்னத்திரை தொடர்கள்…38 நாடகங்கள்.
கேபியின் மகன் கைலாசம் தனது 53ஆவது வயதில் மறைந்தார்.இந்த மரணம் கேபியை
மிகவும் தாக்கிவிட்டது.
இயக்குநர் சிகரம் என்று அனைவராலும் போற்றப்பட்டவர் 24-12-2014ல் தனது
84ஆவது வயதில் உலக வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்தியா ஒரு ஒப்புயர்வற்ற திரைப்பட இயக்குநரை,ஒரு படைப்பாளியை இழந்தது.
அவர் மறைந்தாலும் அவர் படைப்புகள் வாழ்ந்து கொண்டிருக்கும்.
இவரது ஒரு படத்தில் வரும் பாடலில், “கங்கை நீரும் சொம்புக்குள்ளே அடங்கி
விடாது”என்று ஒரு வரி வரும்.
அதுபோல கேபியின் சாதனைகளை13 நிமிடங்களில் அடக்கி விட
முடியுமா?..முடிந்தவரை அடக்கியுள்ளேன்.
அவரது சாதனைகள் எனும் தேன் கூட்டிலிருந்து சிதறிய சில துளிகளை மட்டுமே தந்துள்ளேன்.
எனக்கு இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை அளித்த “குவிகம்”
சுந்தரராஜனுக்கும், கிருபாநந்தனுக்கு நன்றிகள்.
நன்றி…வணக்கம்
                      – டி வி ராதாகிருஷ்ணன்
பாரதிராஜா 
மதியின் திரை நட்சத்திரங்கள்: இயக்குநர் இமயம் பாரதிராஜா பிற‌ந்த‌ நாள் ஜுலை  17.

பாரதிராஜா – புதிய பரிமாணத்தைத் தொட்ட இயக்குனர் (முனைவர் தென்காசி கணேசன்)

எனக்கு தெரிந்து திரைப்படம் தொடங்குமுன், 1950களின் இறுதிகளில், திரு பி ஆர் பந்துலு அவர்கள்,  வீரபாண்டிய கட்டபொம்மன் , வெளிவந்தபோது, ஒரு சால்வையை போர்த்திக்கொண்டு, கலா ரசிகப் பெருமக்களே,  என்று அடிமை இந்தியா மற்றும் போரிட்ட விடுதலை வீரர்கள் என்று பேசுவார். பின்னாட்களில, இயக்குனர் ஏ பி நாகராஜன்,  நவராத்திரி மற்றும் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள், படங்களில் பேரனபுடைய ரசிகப் பெருமக்களே என்று தொடங்குவார். இரண்டு குரல்களும் அன்றைய தமிழ் ரசிகர்களை , அந்தப் படங்களை எதிர்பார்ப்பில் இருக்க வைத்தன. 

அதற்குப்பின், பாரதிராஜாவின், கரகரத்த, என் இனிய தமிழ் மக்களே என்னும் பாசக்குரலின் தாக்கம் தமிழ் சினிமாவின் புதிய ஆக்கம் என்றால் மிகை ஆகாது.

பாரதிராஜா – கிராமத்தைப் படமாககியவர் மட்டுமல்ல – பாடமும் ஆககியவர். 

அவரோடு பணியாற்றிய படங்களில் நான் நடிக்கவில்லை – என்னை நடிக்க வைத்தார்  – இப்படிப்பட்ட வாழ்த்தை வழங்கியவர் வேறு யாருமில்லை – பார் போற்றும் கலை உலக சக்ரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி தான். 

கிராமங்களை நான் நேசிக்கிறேன் – அந்த அடையாளங்களை நான் காதலிக்கிறேன் என்பார். கிராமம் அவர் கைகளில் வீணை யானதால், ஒவ்வொரு மீட்டலும், புதிய ராகமாய் வெளிவந்தது. 

16 வயதினிலே, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே, புது நெல்லு புது நாத்து, மண்வாசனை என பல கிராமிய படங்கள் – அதை தவிர, பல வகைப் படங்கள். 

புதிய வார்ப்புகள், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், பசும்பொன , என எல்லாவற்றிலும ஒரு புதுமை – மண்ணின் இளமை – அது தான் பாரதிராஜா 

அவரின் பெருவாரியான படங்கள் – புதுமை மற்றும், கூரான வசனங்கள் – கண்ணை கவரும் ஒளிப்பதிவு – கிராமத்தின் தத்ரூபம் – அதேபோல, பாடல்களும் இவரின் படங்களுக்கு உறுதுணையாக இருந்தன. பெரும்பான்மை இளையராஜா, அப்புறம் தேவேந்திரன், வித்யாசாகர், ரஹ்மான் என அனைவரின இசையில வெளிவந்தது. இவரின் படங்களுக்கு, ஒளிப்பதிவு, பீம்சிங் மகன் பி கண்ணன். -ஒளிப்பதிவிற்கு, நான் காமிராவை எடுத்துச் செல்வதில்லை. கண்ணனைத்தான் அழைத்துச செல்கிறேன் என்று. ஶ்ரீதருக்கு வின்சன்ட்,பாலகிருஷ்ணன் போல, பாரதிராஜாவிற்கு, கண்ணன்.

பீம்சிங், ஶ்ரீதர், பாலச்சந்தர், கே எஸ் கோபாலகிருஷ்ணன் வரிசையில் இவருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. இவரின் படங்களில் எதை விட – எதைக் கூற ? தொடக்கத்தில், புட்டன்னா, ரா சங்கரன் இவர்களிடம் உதவியாளராக பணி புரிந்தார்.

பதினாறு வயதினிலே பாத்திரப் படைப்பு – கமல், ரஜினி, ஶ்ரீதேவி, கவுண்டமணி, காந்திமதி என் ஒவ்வொரு பாத்திரமும் சிறப்பு. ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா, ஆனா நாயி மட்டும் வளக்கல – இந்த சப்பாணியை வளத்தா , பத்த வச்சுட்டியே பரட்டை, போன்ற வசனங்கள் பட்டி தொட்டி எல்லாம் பறந்தது.   சப்பாணியின் நேயத்தை காட்ட , ஒனானைக் கொலலாதீங்கடா என்பான் சப்பாணி – ஶ்ரீதர் பாலச்சந்தர் போல directorial டச்.  இதில் வந்த ஶ்ரீதேவி தொட்ட உயரம் தான் என்ன ?

கிராமத்தில் சந்தை கூடுதல் என்பது முக்கியமான ஒன்று. 16 வயதினிலே படத்தில், மயிலின் தாய் குருவம்மாளுடன் சப்பாணி சந்தைக்கு போகும்போது, மருமவனே என்பாள் குருவம்மாள்.

முதல் மரியாதை படத்தில் – சிவாஜி , ராதாவிற்கு, ஆடு விற்றுக் கொடுப்பது, ஃபோட்டோ எடுப்பது, அதை ஒருவர் பார்த்து கண் அடிப்பது – அதைப் பார்த்த சிவாஜி அட சீ என்று துண்டை உதறிக்கொண்டு செல்வது என இப்படி , கிராமதுக்கே உரித்தான காட்சிகள்; ( அந்த ஃபோட்டோ தான் பின்னாளில் குருவம்மாவின் கோபத்துக்கு விதை ஆகிறது.) செருப்பு தைக்கும் செங்கோடன் மகள் காதலைக் கூட , காதலி pant வாங்கி தருவதன் மூலம் தெரியப்படுத்துவார் . கிழக்கே போகும் ரயில் படத்தில், கிராமத்து ராட்டினம் அவர்கள் காதலை உறுதி செய்யும்  இடம் திருவிழா சந்தை, 

மண்வாசனை – நாயகி முத்துப்பேச்சி ஃபோட்டோ எடுக்க ஸ்டுடியோவில் இருக்கும்போது, போட்டோக்காரன் அவளை ஒரு மாதிரி பார்க்கும்போது, முறை மாமன் அடிப்பது, அப்புறம், நாயகியை அடிப்பது – இது காதலை உறுதி செய்யும் சந்தை சூழ்நிலை 

இந்தச் சந்தையே, இவரின் பல படங்களில்,  கதை வளர்க்கும் களமாக அமைந்து விடுகிறது என்றால் மிகை ஆகாது.

முதல் மரியாதை – கதாநாயகன் இமயம் சிவாஜி – அந்த உடல் வாகு – அதற்கேற்ப ஒரு தொட்டுக் கொள்ளாத காதல் கதை – உண்மையிலே அது ஒரு கிராமத்துக் காவியம் என்றால் மிகை ஆகாது.  

சிவாஜி நடிக்க வந்து 32 வருடங்கள் கழித்து இந்தப் படம்.   சிவாஜி வெகு இயல்பாக வாழ்ந்திருப்பார். மீன் குழம்பு சாப்பிடும் இடம் – கல்லை தூக்கி, இளமையை நிரூபிக்கும் காட்சி -ஆற்று நீரில் மீன் பிடிக்கும் காட்சி – தனித்தனியே எதுவும் கிடைக்கவில்லை,  இருவர் இணைய, நிறைய மீன்கள் – இதயம் இணைந்திருக்கிறது என்பதை கூறும் டச். இறக்கும் நிலையில் மூச்சு மேலும் கீழும்  வாங்க, கைக்குள் தலைமயிரில் கோர்த்த முத்து என வைத்து , ராதா வந்தவுடன் கண்கள் மேலே போய், மூச்சு சிவாஜிக்கு மட்டுமா நிற்கிறது ? பார்க்கின்ற அனைவர்க்கும் தான். உயிரின் சிலிர்ப்பை கண்களில் கொண்டு வந்திருப்பார். 

திருவரங்கப் பெருமானாக சிவாஜி ஒருக்களித்துப் படுத்து இருக்க, உள்ளே ராதா காலடி கேட்டவுடன், உடலும் கண்ணும் சிலிர்க்கும்.  அவர்  இறக்கும் காட்சியைப் பார்க்கும் அனைவருக்கும் கூட உடல் சிலிர்க்கும். – இயக்குனரின கை வண்ணம்  அது. 

ஆனால் பாரதிராஜா, குமுதம் பேட்டியில், கூறும்போது, வாழ்க்கைக்கு இராமாயணம், மகாபாரதம் எப்படி வழிகாட்டியோ, அதுபோல, நடிப்புக்கு வழிகாட்டி நடிகர் திலகம் என்றும், அவர், நடிப்பு, அசைவு, உச்சரிப்பு இந்த மூன்றினால், ரசிகர்களைக் கட்டிபோட்டவர் என்றும் கூறினார். 

நிறம் மாறாத பூக்கள் படத்தில், மெட்ராஸ் க்ர்ள் என்னும் வார்த்தை ரசிகர்கள் மனதில் அப்படிப் பதிந்தது. காதல் ஓவியம் வித்தியாசம் கொண்ட காதல் இசைக் காவியம்.

புதிய வார்ப்புகள் – அற்புதமான் படம். ஜி சீனிவாசன் அவர்களின அசாத்திய இயல்பான நடிப்பு.அமாவாசை என்று அழைக்க, கவுண்டமணி, உள்ளதை சொல்றீங்க என்று கூற, அதகளம் தான்.

இப்படிப பல படங்கள் – பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல, பாரதிராஜா படங்கள் ஒவ்வொன்றும் ஒரு நேர்த்தி, 

பாரதிராஜாவின் படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று – வேதம் புதிது திரைப்படம். நிலம் பேதம் பார்ப்பதில்லை – நீரும் , ஆகாயமும், நெருப்பும், காட்றும் பேதம் பார்ப்பதில்லை. பஞ்ச பூதங்களும் பார்க்காத பேதம், பஞச பூதங்களால் ஆன மனிதன் பார்கிறான் என்பார்.

 இந்தப் படத்தில் , இயக்குனர், கத்திமே ராதா, கத்திதிருப்பார். எந்த மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தாமல், மனித உணர்வுகளை,  வாழ்வின் யதார்த்தத்தை மிக அழகாக ஒரு சிறுவன் மூலம் கையாண்ட விதம் மிக அழகு. 

ஆட்று நீரின் பேதமற்ற  தன்மை , வாழும் மக்களிடம் இல்லையே என்பதை கூறி இருப்பார். ஆச்சாரம் என்றால் ஒழுக்கம் தானே – அன்பு இல்லாத வழிபாடு எதற்கு என்பார். 

புறையோடிப்போன புத்துநோய் மாதிரி சாதி என்னும் நோய் மனிதற்களிடத்தில் பரவி இருக்கிறது. அதைக் காட்ட, ஊர்ப் பெரியவர் பாலுத்தேவரிடம் , சிறுவன் சங்கரன் கேட்பான் – சாதி இல்லைனு சொல்ற நீங்க மூச்சுக்கு முன்நூறு தரம் பாலுதேவர் என்று சொல்லிக்கிரிங்களே, அது நீங்க வாங்கின பட்டமா எனும் போது, சத்யராஜுக்கு மட்டுமல்ல பார்க்கின்ற நமக்கும் நெஞ்சில் ஒரு சுறுக் .

இந்தக் கேள்விகள் சென்ற தலைமுறையோடு போகட்டும் – புதிய தலைமுறை வாழட்டும் என்பார்.  இந்த படத்தின கதை வசனம் TVS நிறுவனத்தில் பணிபுரிந்த கண்ணன் என்பவர். வேதம் புதிது கண்ணன் என்றே அழைக்கப்பட்டார்.

கிராமங்களில் இனப்பகையும், சாதிபேதமும், மூட நம்பிக்கையும் , மனிதர்களை விலங்குகளாக மாற்றுகின்றன. நகர்ப்புறங்களில் அரசியல் மற்றும் கடமை மறந்த காவல்துறை காரணமாகிறது என்பார்.

அதேபோல – கருத்தம்மா – பெண் சிசு கொலை – மற்றும் கிராமத்து யதார்த்தம் – சற்றே அறச்சீற்றத்துடன் காண்பிக்கிறார். இவள் உடலால் பெண் – உள்ளத்தால் ஆண் என்று ஒரு வசனம் வரும்.

அலைகள் ஓய்வதிலலை படம் அப்போது, பள்ளி மாணவர்கள் காதல் மற்றும் கொஞ்சம் காமம் தொட்ட காதல் என்று விமரிசனம் வந்தது. இருந்தாலும், இதிலும், அவரின் directorial touch மற்றும் கூர்மையான வசனங்கள் நன்றாக இருக்கும். இங்கே பேச்சு மதம் பற்றி இல்லை – இரண்டு மனம் பற்றி – இடையில் வரும் பணம் பற்றியும் கூட, என்று வரும்.

முண்டாசுக்கவி பாரதியின் புதுமைப் பெண்ணை அப்படியே தந்தார், திரைப்படமாக. தென்றலாம் பெண்மை புயலாக மாறிய அழகு – அவதாரம் இந்த படம் 

என்னுயிர்த் தோழன் – வெளியில் அதிகம் தெரியாமல் போன மிக அருமையான படம்  – தலைவனே, தொண்டனை தீ குளிக்க வைக்கும் படம் – நீயே நான் எனப் பேசும் நய வஞ்சகம் , அற்புதக் கதாபாத்திரங்கள். நறுக்கு வசனங்கள் – அறியாமைக்கு எப்போது விலங்கிடப் போகிறோம் ? இந்த தேசத்தை சூழ்ந்திருக்கும் இருட்டுக்கு இபிகோ வில் பிரிவு உண்டா? இப்படித் தெறிக்கும் வசனங்கள்.

ஆற்றின் சலசலப்பு, கோயில்களின் கலைப்பரப்பு, மேகங்கள் சூழ்ந்த வானம்,பொன் விளையும் பூமி, வயல் வெளிகள், அருவிகள், பறவைகளின்  சப்தங்கள் , மரங்களின் அசைவுகள், இவற்றுடன், கிராமத்து யதார்த்தம், உண்மை வாழ்வு – பேதமற்ற வாழ்க்கை முறை – புரிதல் என – ஒரு ராக மாலிகையாகவே இவர் படங்களைத் தந்திருக்கிறார். 

வாலிபமே வா, கல்லுக்குள் ஈரம், கொடி பறக்குது, கேப்டன் மகள், டிக் டிக் டிக் போன்ற சில சுமார் படங்களை தந்தாலும், பெரும்பான்மையான படங்கள் கலை நயம், மற்றும் யதார்த்தம் இவற்றை தான் தந்தது என்றால்  மிகையாகாது. 

ராதிகா, ராதா, ரேவதி, ரதி, சுகன்யா, பாக்கியராஜ்,ராஜா, மணிவண்ணன் என பலரை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. ஆறு முறை தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்றவர்.

பாரதிராஜாவே கூறி இருக்கிறார் – கலைஞன் என்ற முறையில் பொழுதுபோக்கு இன்பங்களைத் தருவதுடன்,, மக்களை சிந்திக்கவும் வைக்க வேண்டும் – அவரைப் பொறுத்தவரை, சமூக உணர்வு தீக்குச்சியாக உரசப்பட்டாலும், தீவட்டியாக கொழுத்தப்பட்டாலும், வெளிச்சம் நிச்சயம் வெளிப்படுகின்றன – அந்த விடியலைக் கலைமூலம் தர முயற்சிக்கிறேன் என்பார். அதைத் தந்தும் இருக்கிறார் என்பதே உண்மை.

ஶ்ரீதர், பீம்சிங், கோபாலகிருஷ்ணன் போல, தமிழ்த் திரையின் புதிய பரிமாணத்தைக் காட்டிய பெருமை நிச்சயம், மதுரை மண் தந்த பாரதிராஜாவிற்கு உண்டு.


                                                                        மணிரத்தினம்

 

(10/07/2022 அன்று குவிகம் அளவளாவில் பேசிய உரையின் எழுத்து வடிவம்)

Filmmaker Mani Ratnam is back to work after being hospitalised for cardiac problems - Movies Newsகோபால் ரத்தினம் சுப்பிரமணியன் .

‘தென்பாண்டிச் சீமையிலே, தேரோடும் மதுரை’யில் பிறந்த  இவரது தேர் இன்று உலகெங்கும் ஓடுகிறது.

ஜூன் மாதம் இரண்டாம் தேதி 1956 இல் பிறந்த இவரை நாம் மணிரத்தினம் என்று தான் அறிவோம். அவரது தந்தைஃபிலிம் டிஸ்ட்ரிபியூஷன் செய்து வந்தார். பெரும்பாலும் வீனஸ் கிரியேஷன்ஸ் படைப்புகள். ஆனாலும் சிறு வயதில் சினிமாவில் அவருக்கு ஆர்வம் இல்லை. பின்னர், கே பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா, சிவாஜி கணேசன், நாகேஷ் ஆகியோரது திறமைகள் இவரை ஈர்த்தன.

சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துவிட்டு மும்பையில் பஜாஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டில் எம்பிஏ படித்தார். சிறிது காலம் கன்சல்டன்ட்டாக இருந்தார். பிறகு சினிமாவில் தான் தன்னுடைய எதிர்காலம் என்று அவருக்குத் தோன்றி விட்டது. அவருடைய அங்கிள் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்க, குறைந்த பட்ஜெட்டில், 1983 ஆம் வருடம் பல்லவி அனு பல்லவி என்ற கன்னடப் படத்தை இயக்கினார். ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்ற படம் அது. கர்நாடக அரசின் விருதுகளையும் வாங்கியது. ஆனாலும், 1986ல் ‘மௌன ராகம்’ படம் வரும் வரை இடைப்பட்ட ஆண்டுகள் அவருக்கு சினிமாவில் சரிவு தான்.

கேபி, மகேந்திரன், பாரதிராஜா மூவருமே அவரைத் தம்முடைய உதவி இயக்குனராகக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மௌன ராகம் எல்லாவற்றையும் மாற்றியது. அதில் அவர் பயன்படுத்திய லைட்டிங் அதுவும் பின்னொளிகள், கேமராவை நகர்த்தும் முறை, சிச்சுவேஷனுக்கு தகுந்த பாடல்கள், நல்ல ரீரெகார்டிங் அவரை சிறந்த இயக்குனராக அறிமுகப்படுத்தியது. ‘சந்த்ர மௌலி, சார், சந்த்ர மௌலியை’ மறக்க முடியுமா? அல்லது மழையில் ஆட்டம் போட்டுவிட்டு பெண் பார்க்கும் படலத்தைத் தவிர்த்த ரேவதியையும், காத்திருந்து அவளை மணம் முடிக்கும்  மோஹன் பாத்திரத்தையும் ஒரே மழைக் கால பின் மாலையுடன் இணைத்து அவர்களது கேரக்டரைச் சொன்னதைத்தான் மறக்க முடியுமா? ஒளியும், நிழலுமாக செல்லுலாய்டில் ஒரு ஓவியம் வரைந்தார் அவர்.

அவரது படைப்புகள் சமுதாய சூழல்களைக் கதையுடன் பொருத்திக் காட்டுபவை. சிலவற்றில் புராண சம்பவங்கள்; தளபதியில் மம்முட்டி ரஜினி இருவரின் பாத்திரம் துரியோதனன் கர்ணன் நட்பாகும். அதில் அவர் போட்டிருந்த அரங்க அமைப்புகள் உண்மை என்றே தோன்றியது . அதிலும் ‘ராக்கம்மா கையைத் தட்டு’ பாட்டை எடுத்திருந்த விதம், அதைக் கோயிலில் கை விளக்குகள் ஏந்தி பெண்கள் நடனமாடும் அழகுடன் இணைத்த இசை அபாரம்! என்ன ஒரு அழகியல். ‘அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்’ என்று அழகிய அரவிந்தசாமி தந்தையிடம் ஆவேசப்படும் அந்தக் காட்சி, அந்த அரங்கம், அந்த உணர்வு, பாடலைச் சொல்லிக் கொண்டே வருகையில் இறுதித் தழுதழுப்பு, மிக அருமை. அந்த அரங்கம், அதன் ஒளி, நிழல், இருட்டு விந்தைகள், ஸ்ரீவித்யாவின் கண்களில் நிரந்தரமாகத் ததும்பும் சோகம் என்று காட்சிப்படுத்துதலில் அசத்தியிருப்பார் மனிதர்.

ரோஜா படத்தில் கூட சாவித்திரி சத்தியவான் கதைதான். ஆனால் தென்கோடியிலிருந்து சென்ற பட்டிக்காட்டுப் பெண், காஷ்மீரில், தீவிரவாதிகள் கடத்திய கணவனைப் போராடி மீட்கிறாள். கதையுடன், காஷ்மீர் பிரச்சினையுடன்,  அருவி, நதி, பனி என்ற பன்முக இயற்கை அழகுடன், சரியான ஒளி விகிதத்துடன், அருமையான இசையமைப்புடன் அனைவரையும் கவர்ந்து பல பரிசுகளை வென்ற படம் அது. இசைப்புயல் ஏ ஆர் ரெஹ்மான் அதில் தான் சினிமா இசையமைப்பாளராக அறிமுகமானார். பல தேசீய விருதுகள் பெற்ற படம் அது.

இன்று பல ‘பயோபிக்’குகள் வருகின்றன. ‘கப்பலோட்டிய தமிழன்’ பயோபிக் இல்லையா என்ன? 1987 இல் வரதராஜ முதலியாரின் வாழ்க்கையைப் பிரதிபலித்து இவர் கொணர்ந்த ‘நாயகன்’! ஆணித்தரமான ஒரு செய்தி அதில் இருந்தது; குற்றவாளிகள் சமூகத்தால் உருவாக்கப்பட்டு சூழ்நிலைகளால் மேன்மேலும் குற்றம் செய்கின்றனர். கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மனதை தைக்கும் விதத்தில் அவர் சொன்னது மிக இயல்பாக இருந்தது. இன்றும் அந்த தாராவி செட்டை மறக்க முடியவில்லை. ஹோலி கொண்டாட்டங்கள், நிலவும் கடலும், அன்பும் பாசமும், இசையும் சரியான உடை அலங்காரங்களும் இன்று வரை பல  சினிமா இயக்குனர்களுக்கு உதவும் கையேடு என்றே அதைச் சொல்வேன்.  அதில் வன்முறை, கடத்தல் எல்லோமே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது- ஆனால், மிகைப் பாராட்டுதல்கள் இல்லாத வகையில். பல மனிதர்கள் நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் கலந்து கட்டிய குணம் உடையவர்கள். அதனால் தான், அதில் பாலகுமாரன் எழுதிய ‘தாத்தா, நீங்க  நல்லவரா, கெட்டவரா?’ என்ற வசனம் இன்றளவும் நிலைக்கிறது. “நீ ஒரு காதல் சங்கீதம்’. ஆஹா, அந்தப் பாடலைப் படமாக்கிய விதமும், மென்மையான உணர்வுகளும், அந்தக் காதலும் அருமையல்லவா?

88 ல் வெளியான அக்னி நட்சத்திரம் அதன் மியூசிக்கல் வீடியோ ‘ஷாட்ஸ்’சால்  உள்ளம் கவர்ந்தது. ‘ராஜாதி ராஜன் இந்த ராஜா’ அந்தப் பாடல் எடுக்கப்பட்ட விதம், அந்தப் புகைவண்டி நிலையம், ஒளிப் பிழம்புகளாக இளைஞர்கள் தாவிக் குதித்த அற்புதம், ஃப்ளேர் வடிகட்டியின் உதவி அது; ஸ்ரீராமும், மணிரத்னமும் ஒன்றாகவே சிந்தித்தது போல இருந்தது. அதற்கு நேர் எதிரானது, சாஃப்ட் ஃபோகஸ் ஷாட்ஸ் அமைந்த, உயிர் கொடுத்து ஜானகியும், ஜேசுதாசும் பாடிய அமிர்தவர்ஷினி இராகப் பாடலான ‘தூங்காத கண்கள் ஒன்று’ பாடல். அதில் படஇயக்குனர், கேமரா இயக்குனர், இசை இயக்குனர் என்ன ஒரு அழகாக இணைந்திருந்தனர். அந்த ரேஸ் கோர்ஸ் சண்டைக் காட்சி, கனகம்பீரமான குதிரைகள், காட்சிப் படுத்துதலில் களத்தின் தேர்வு அற்புதமல்லவா?

ரோஜா, பாம்பே, தில் சே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்றவை காஷ்மீர் டெரரிசம், இந்து- முஸ்லீம் மதக்கலவரம், உல்ப்பா, இலங்கை நிலவரம் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டவை.

அஞ்சலி, ‘ஆடிசம்’ பாதித்த குழந்தைகளைப் பற்றி பார்ப்போர் மனம் கசியும் வண்ணம் சொல்லியது. அதிலும் ‘வேகம் வேகம் தூரம் போகும் மேஜிக் ஜர்னி’ -அட்டகாசமான உஷா உதுப்பின் குரலில், ராஜாவின் தரமான ஸ்வரக் கோர்வைகளில், நேர்த்தியான படப்பிடிப்பு. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் படிகளில் கணவன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்ற கோபத்தில் நாயகி விரைவாக இறங்கிச் செல்ல, நாயகன் அவளைத் தடுத்து நிறுத்த இறங்க, அந்தப் படிக்கட்டுகளில் கேமரா சுழன்றாடிய விதம் அபாரம். கடைசிக் காட்சியில் ‘ஏந்துரு அஞ்சலி, ஏந்துரு’ என்று அந்தச் சின்னப் பெண் கூவுவது நம்மைப் பார்த்துத்தான்- ஆடிஸக் குழந்தைகள் பைத்தியங்கள் அல்ல என்ற தெளிவை நாம் பெறத்தான். ஆடிசக் குழந்தைகளுக்காகவும், முதியோர்களுக்காகவும் ‘பன்யான்’ என்ற அமைப்பிற்காகவும் இயக்குனர் வசந்துடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் ‘நேற்று இன்று நாளை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி பெருமளவில் பணம் திரட்டித் தந்தார்.

குரு என்ற படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அது திருபாய் அம்பானியின் வாழ்க்கையைக் காட்டியது. கீதாஞ்சலி தெலுங்கு திரை உலகிலும் அவருக்கு பெயர் சொல்லும் படமாக வந்தது. ராவண் ஹிந்தியில் மற்றும் அயல்நாட்டில் சிறப்பாக ஓடியது ஓகே கண்மணி, செக்கச் சிவந்த வானம் வெற்றிப்படங்கள் தான். சீரியஸாகவும் படம் எடுப்பார்; சிரிப்பாகக் கூட ‘திருடா திருடா’ அப்படிப்பட்ட ஒரு படம். அதில் கோட்டையில் ஆடும் அந்தப் பாடல்- ‘சந்த்ர லேகா.’

தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளைப் பற்றிய ‘இருவர்’ என்னைப் பொறுத்த வரையில் ஏமாற்றமே. முழுமையான சித்தரிப்புக் கைகூடாத படம் என்றே தோன்றும்.

‘அலைபாயுதே’ மிக மிக இயல்பாக இளைஞர்களைக் காட்டிய படம். குடும்பத்திற்குள்ளும் இருப்பார்கள், தாங்கள் விரும்புவதில் உறுதியாகவும் இருப்பார்கள்.

பல படங்கள், அதில் 90 சதவீதம் வணிகமாவும், கலையாகவும் இணைந்து வெற்றி பெற்றவை. தன்னுடைய பல படங்களுக்கு அவரே திரைக்கதை எழுதியிருக்கிறார். ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், மது அம்பாட், ராஜீவ் மேனன், ரவி கே சந்திரன், மணிகண்டன், ரவிவர்மன், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், தோட்டாதரணி, என்ற அற்புதக் கூட்டணி அவரது பலம்.

ஆறு தேசிய விருதுகள், நான்கு பிலிம் ஃபேர் விருதுகள், ஆறு பிலிம் ஃபேர் விருதுகள் தென்னகத்திற்காக பெற்றவர்

பல சினிமா விமர்சகர்கள் இவரது ஒளி அமைப்பை, காட்சிப்படுத்துதலை, சிறு சிறு உரையாடல்களால் கதை சொல்வதை வியந்து பாராட்டி இருக்கிறார்கள். ஒரு சிறந்த இயக்குனராக அவர் சர்வதேசப் புகழ் பெற்றவர்.. நாங்கள் எங்களுக்குள் சொல்லிக் கொள்வோம் ‘உம்’ என்று ஒரு காட்சியில் சொல்ல வேண்டி வந்தால், அதை, கிட்டத்தட்ட குளோசப் ஷாட் வைத்து முகக் குறியால் காட்டி விடுவார் மணிரத்தினம் என்று.

2002 ம் ஆண்டு இந்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கௌரவித்தது.
அயல்நாடுகளிலும் இவரைக் கொண்டாடுகிறார்கள் டொராண்டோ இன்டர்நேஷனல் ஃப்லிம் ஃபெஸ்டிவல், டோக்கியோ பிளிமிக்ஸ் பெஸ்டிவல், மான்ட்ரியல் வேர்ல்ட் பிலிம் பெஸ்டிவல், பாம் ஸ்பிரிங், என்று அனைத்துலக விருதுகளை வென்றவர். லண்டன் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அமைப்பு இவருக்கு “சன்மார்க் லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்ட்” வழங்கியிருக்கிறது.

நியூயார்க்கில் ‘மியூசியம் ஆப் மூவிங் இமேஜ்’, ரோஜா, பாம்பே, தில் சே ஆகிய படங்களைக் காட்சிப்படுத்தி சிறப்பு அந்தஸ்தையும் வழங்கி இருக்கிறது.

உலக அளவில் சத்தியஜித்ரேயை, சாந்தாராமைத் தெரிந்து வைத்திருப்பார்கள். கோலிவுட் என்ற தமிழ் தென்னக சினிமாவை பாலிவுட் ஹாலிவுட் போன்ற இடங்களிலெல்லாம் கொண்டாடச் செய்தவர் இவர்.

இவரது சிறப்புகள் என்ன? ஒரு சாதாரண சினிமா ரசிகனுக்கும், கறாரான சினிமா விமர்சகருக்கும் இவர் சமமாகப் புரிந்து விடுகிறார். காட்சி அமைப்பின் விந்தை, கேமரா கோணங்கள், அளவு மிகாத வசனங்கள், பொருத்தமான களம், அலட்டல் இல்லாத தன்மை, டெக்னிக்கல் நாலெட்ஜ், லவ் ஃபார் ம்யூசிக், சமூக நிலவரம் அனைத்தும் சரியான விகிதத்தில் தர முடிந்த இவரால் ‘பொன்னியின் செல்வனை’ சிறப்பாகத் தானே தர முடியும்? அந்த பிரம்மாண்டமும் இவருக்கு வசப்படும். பொன்னியின் செல்வன் தமிழர் அனைவருமே விரும்பும் பெருமை மிக்க வரலாற்று நாவல். கல்கி அதை ‘விசுவலாகவே பல இடங்களில் எழுதி இருப்பார். மணிரத்னமும் சினிமாவை சரியான விஷுவல் மீடியமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர். நிச்சயமாக நம் அனைவருக்கும் நல் விருந்து காத்திருக்கிறது அவர் தேர்வு செய்த நடிகர்களை எண்ணி எண்ணி வியக்கிறேன். சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையர்  சரத்குமார் , சின்னவர் பார்த்திபன், ஆதித்த கரிகாலன் விக்ரம், குந்தவை திரிஷா, ஐஸ்வர்யா ராய் நந்தினி அருண்மொழிவர்மராக ஜெயம் ரவி. நம் உள்ளம் அனைத்தையும் கொள்ளை கொண்ட குறும்பு இளவலாக, வீரனாக, குந்தவையின் கணவனாக, வல்லத்து இளவரசன் வந்தியத் தேவனாக கார்த்திக். இசை ஏ ஆர் ரஹ்மான்.

கரிகாலனைக் கொன்றவர் யாரென்று மணிரத்தினத்திற்குத் தெரியும்!

தேடல் கொண்ட கலைஞர் இவர். கொண்டாடுவோம்.

பானுமதி ந


 

 

ஈகோ – கோவில்பட்டி கு. மாரியப்பன் 

73,395 Bank Manager Stock Photos and Images - 123RF                                     

 மகள் கல்யாணத்திற்குப் பத்து நாட்கள் விடுமுறையில் இருந்து விட்டு அன்றுதான் அலுவலகம் வந்தேன். டேபிள் ஓரத்தில் பைல்கள் குவிக்கப்பட்டிருந்தன. ஜோனல் மேனேஜர் என்பதால் முக்கிய முடிவுக்கான பெரும்பாலான விஷயங்கள் நோட் போட்டு என்னுடைய முடிவுக்கு வரும். எங்கள் வங்கி, அளவில் சிறியது, வளர்ந்து வரும் வங்கி. 
பி ஏ விடம் யாரையும் உள்ளே விட வேண்டாம் என்று சொல்லிவிட்டு வங்கி வேலையைத் தொடங்கினேன். வங்கி சேர்மன் ஆபிஸில் இருந்து ஒரு கடிதம் மேலே இருந்தது, அத்துடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு ஊழியரின் கடிதம். அந்த ஊழியர் வங்கிச் சேர்மனுக்கு எழுதி இருக்கிறார். என் கவனத்திற்கு என்று வங்கிச் சேர்மன் எனக்கு அனுப்பி இருந்தார். பொதுவாக இந்த மாதிரி விஷயங்களில் விசாரணை முடிந்து தீர்வு ஏற்பட்ட பின் மேல்முறையீடு இருந்தால் தான் என் கவனத்திற்கு வரும்.
Banking hours in Tamil Nadu reverts back to 10 am to 2 pm | Mintஅந்த ஊழியரின் பைலை அனுப்பும்படி கூறியிருந்தேன். திருச்சியில் ஒரு கிளையில் வேலை பார்ப்பவர். 52 வயது, படிப்பு எம்எஸ்சி  CAIIB கிளர்க்காகவே இருக்கிறார். பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கவும் இல்லை. சீனியாரிட்டியில் வங்கி பதவி உயர்வு அளித்தபோதும் ஏற்கவில்லை.
அவருக்கு கொடுக்கப்பட்ட சார்ஜ் சீட்டில் அவர் மேல் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் சேர்மனுக்கு எழுதிய கடிதத்தையும் படித்தேன். நீண்ட ஆலோசனைக்கு பின் அடுத்த வாரத்தில் ஒரு தேதியை குறிப்பிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியரையும் கிளை மேலாளரையும் நேரில் விசாரணைக்கு வருமாறு அழைத்தேன். 
சஸ்பென்ஷன் கொடுத்த ரீஜனல் மேனேஜரை ஃபோனில் அழைத்து  காரணம் என்னவென்று விசாரித்தேன். 
மேனேஜர் சொன்ன வேலையைச் செய்யாமல் அவரை எதிர்த்துப் பேசினார் என்று கிளை மேலாளர் போனில் கூறினார். மேனேஜர் உத்தரவுக்குக் கீழ்படிந்து வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்தேன் என்று கூறினார். குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்காமல் மேனேஜர் ரிப்போர்ட்டை மட்டும் வைத்து நீங்கள் சஸ்பெண்ட் செய்தது சரியா நீங்கள் சஸ்பெண்ட் செய்வதற்கு முன்னால் அந்த குற்றம் சாட்டப்பட்டை ஊழியரை விசாரித்திருக்க வேண்டும் அல்லது யாராவது ஒரு மேலதிகாரியை அனுப்பிக் கிளையில் அந்த ஊழியரிடம் நடந்தது பற்றி கேட்டு விஷயத்தை தெரிந்து கொண்டு இருக்கலாம் .
மேனேஜர் சம்பந்தப்பட்ட ஊழியர் கீழ்படியவில்லை என்று சொன்ன காரணத்தை வைத்துக்கொண்டு மட்டும் உடனே சஸ்பெண்ட் செய்தது சரியா என்று அவரிடம் விசாரித்தேன். சரியான பதில் இல்லை, சரி என்று போனை வைத்து விட்டேன். 
விசாரணை அன்று முதலில் கிளைமேளாளரை கூப்பிட்டேன். நடந்த விவரங்களைக் கூறும்படி கேட்டபோது, “நான் அலுவலக நேரத்தில் சொன்ன வேலையை செய்யாமல் என் அறைக்கு வந்து மிரட்டும் தொனியில் , கவுண்டரில் வைத்து அத்தனை பேருக்கும் முன்னால் நீங்கள் இந்த வேலையைச்  செய்யச்  சொல்லி இருக்கக் கூடாது என்று கூறினார். ஒரு சீனியர் ஊழியர் இந்த மாதிரி சொன்னால் நான் மற்றவர்களை எப்படி வேலை வாங்க முடியும். 
எனவே மேலதிகாரிக்கு கீழ்ப்படிய மறுக்கிறார் என்று சொல்லி கம்ப்ளைன்ட் செய்தேன்”. 
நீங்கள் இந்த கிளைக்கு வந்து எவ்வளவு நாள் ஆகிறது”. 
“மூன்று மாதங்கள்ஆகிறது சார்” . “மூன்று மாதத்தில் சார்ஜ் எடுத்து கிளையைப் பற்றியும் கிளையில் உள்ள எல்லா ஊழியர்களை பற்றியும் அறிந்து கொண்டீர்களா?”. 
“ஆமாம் சார்”. 
“நீங்கள் என்ன வேலையை செய்ய சொன்னதற்கு அவர் அந்த பதிலை கூறினார்”. 
தான் சொன்ன வேலையை கூறினார். 
சரி என்று அவரை வெளியில் சென்று உட்காரும்படி கூறிவிட்டு குற்றம் சாட்டப்பட்ட ஊழியரை அழைத்தேன். 
” உட்காருங்கள்”. அவர் பைலைப் புரட்டினேன். வாரா கடன் வசூலில் அவருடைய பங்களிப்பையும் டெபாசிட் கேன்வாஸிங்கில் அவருடைய ஈடுபாட்டையும் எடுத்துக்காட்டும் வகையில் பல பாராட்டு கடிதங்களின் நகல்கள் இருந்தன. 
“உங்கள் மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன”. 
” சார் அன்று நான் கவுண்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மேனேஜர் சார் வந்து குறிப்பிட்ட வேலையை கூறி தலைமை அலுவலகத்தில் இருந்து கேட்பதாகவும் உடனே பட்டியல் தயார் செய்யும்படி கூறினார். அந்த இடத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இருந்தனர். மேனேஜர் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றார். 
நான் சிறிது நேரம் கழித்து அவர் அறைக்கு சென்று, “சார் நீங்கள் சொன்ன வேலையின் முக்கியத்துவம் கருதி தயவு செய்து கவுண்டரில் வாடிகையாளர்களின் முன்னிலையில் கூற வேண்டாம் என்னைத்  தனியா அழைத்து அந்த வேலை கூறி இருக்கலாம் என்றேன். 
நீங்கள் நினைத்தபடி எல்லாம் நான் வேலை செய்ய முடியாது. எனக்கு உள்ள பிரஷரில் நான் உடனே வேலையை ஆரம்பிக்க உங்களை அழைத்தேன். வேலையை கொடுத்தால் செய்ய வேண்டியது உங்கள் கடமை. உங்கள் இஷ்டத்துக்கு எல்லாம் நான் நடக்க முடியாது. சொன்ன வேலையை செய்யவில்லை என்று நான் ரிப்போர்ட் பண்ணி கொள்கிறேன். நீங்கள் போகலாம் என்றார். 
என்னிடம் வாராக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் தாரர்களின் பட்டியல் கொடுக்காததால் அது சம்பந்தமான ஸ்டேட்மென்ட் எதையும் என்னால்  தயாரிக்க முடியவில்லை. 
மூன்றாம் நாள் காலை நான் வந்தவுடன் என்னை கூப்பிட்டு சஸ்பென்ஷன் ஆர்டரை கொடுத்தார். 
 “சார் நான் தவறாகப் பேசவில்லையே, வேலை செய்ய மறுக்கவும் இல்லை. அதை காரணம் என்று கூறி என்ன சஸ்பெண்ட் செய்திருக்கிறீர்கள் என்றேன்” . 
“நீங்கள் என்னிடம் எதுவும் சொல்ல வேண்டாம் போகலாம்” என்றார். “
சார் நான் அந்தக் கிளையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். இதுவரை என் மேல் எந்தப் பழியும் வந்தது கிடையாது, நானும் வங்கியின் நேரம் போக காலையில் மாலையிலும் மேனேஜர்களுடன் டெபாசிட் சம்பந்தமாகவும் கடன் வசூல் சம்பந்தமாகவும் வெளியில் சென்று வருவது, என்னுடைய வாடிக்கையான ஒன்று. மேனேஜர் வந்து மூன்று மாதம் ஆகிறது. இவரிடம் சுமூகமாகவே இருந்தேன் என் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. 
சார், உங்களுக்கு தெரியாததில்லை, வங்கியில் வாராக்கடன் பெருகி வருகிறது. நாம் வாராக்கடனும் வசூல் செய்து வருகிறோம். வாடிக்கையாளர்களில் பலர்  வசதி இருந்தும் கடனைத் திரும்பச் செலுத்துவதில்லை. மேனேஜர் சார் வாராக்கடன் தள்ளுபடி சம்பந்தமாக பட்டியல் தயாரிக்கக் கவுண்டரில் சொன்னது எனக்கு கஷ்டமாக இருந்தது. கடன் தள்ளுபடி பற்றி பலர்  முன்னிலையில் வெளிப்படுத்துவது நல்லதல்ல என்று எண்ணத்தில் தான் தனியாக சந்தித்துக் கூறினேனே தவிர, வேறு ஒன்றும் இல்லை. வேலை செய்ய மாட்டேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. வங்கியின் நலன் கருதி கடன்காரர்கள் திருப்பி செலுத்தும் எண்ணம் போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் தான் நான் அவரிடம் கூறினேன் என்றார். 
சரி நீங்கள் சென்று வாருங்கள் என்று அனுப்பினேன். 
மாலை 4:00 மணி மேனேஜரை அழைத்தேன். “எவ்வளவு நாளா மேனேஜரா இருக்கீங்க”. “இப்ப மூணு மாசம் தான் சார் ஆகுது”. 
“சரி, நீங்க வேலை சொன்னபோது அவர் அங்கேயே உங்களிடம் விவாதித்தாரா? “. 
” இல்லை சார், ரூமில் வந்துதான் நான் கவுண்டரில் வந்து அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்றார். நான் வேலை சொல்லும் போது உடனே செய்யாமல் எனக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்று அவர் பேசியதால் கீழ்ப்படியாமை என்ற குற்றச்சாட்டிற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க  ரீஜனல் மேனேஜர் அவர்களுக்கு அன்றே போனில் கூறினேன். விரிவாகக் கடிதம் அனுப்பினேன்”.
“நீங்கள் குறிப்பிட்ட வேலையை கவுண்டரில் நின்று பல வாடிக்கையாளர்களுக்கு முன் நீங்கள் சொன்னபோது அவர் உங்களிடம் விவாதம் செய்யவில்லை. 
உங்கள் அறைக்கு வந்து நீங்கள் தனியாக இருந்தபோது நீங்கள் சொன்ன வேலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அது வெளியில் நின்ற வாடிக்கையாளர்களுக்கு தெரிந்தால், அதனால் வங்கிக்கு ஏற்படும் இழப்பு கருதியே உங்களிடம் கூறியுள்ளார். உங்களிடமும் அதை கூறினார் அல்லவா? “. 
” ஆமா சார் “. 
” நீங்க சொல்ற வேலையை செய்யாமல் உங்களுக்கு அறிவுரை சொன்னதாக நீங்க டென்ஷன் ஆயிட்டீங்க. 
அவருக்குச் செய்யச் சொன்ன வேலைக்கான விவரங்களைக் கொடுத்தீர்களா? தேவையில்லாமல் டென்சன் ஆகி ஈகோ பிரச்சனையால் எல்லாம் நடந்து விட்டது.  அவர் சொன்னதைப் அமைதியாக உட்கார்ந்து ஈகோ இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.
நமக்கு வங்கி தான் முக்கியம். வங்கி வேலையில் ஈகோ பிரச்சனையே வரக்கூடாது. வங்கியில் உயர் பதவியில்  இருந்து துப்புரவு தொழிலாளி வரை அனைவரும் வங்கியைப் பாதுகாப்பதில் முக்கியமானவர்கள் தான்”.
“நீங்கள் கவுண்டரில் சொன்னது வெளியில் கடன்காரர்கள் மத்தியில் பரவினால் வங்கியின் கதி என்னவாகும். 
நீங்கள் மேனேஜர் பதவிக்கு புதியவர். மேலே இருந்து வேலை சொன்னாலும் இடம் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும். உங்கள் டென்ஷனை உடனே மற்றவர்களிடம் காட்டக்கூடாது. உங்க கஷ்டம் எனக்கு தெரியுது, 
நீங்கள் கிளையின் மேனேஜர் என்பதை மறந்து சக ஊழியர்களிடம் பழகுங்கள். வேலை வாங்குங்கள். நீங்களும் நன்றாக வருவீர்கள். ஆல் தி பெஸ்ட் என்று சொல்லி அவரை அனுப்பி விட்டேன். 
சேர்மன் சார் அவர்களுக்கு ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பித்து, விஷயத்தை இத்துடன் முடித்துவிடலாம் என்றும், என்குயரி பனிஷ்மென்ட் எதுவும் வேண்டாம் என்றும், மேனேஜரை மட்டும் அவர் சர்வீஸ் கருதி சிறிய சைஸ் கிளைக்கு அதிகாரியாக மாற்றலாம் என்று கூறி ஊழியர் மேலிருந்த சஸ்பென்ஷன் உத்தரவை கேன்சல் செய்து திரும்பவும் வேலைக்கு சேர அனுமதிக்கலாம் என்று பரிந்துரைத்தேன். 
சரியாக விசாரிக்காமல் அவசர கதியில் சஸ்பென்ட் செய்யக் கையெழுத்து போட்ட  ரீஜனல் மேனேஜரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்தேன். நிறுவனம்தான் முக்கியம் தனிமனிதன் நல்ல நிர்வாகி இல்லை என்றால் நிறுவனம் பாழாகிவிடும். 
         

திரைக் கவிஞர்கள் – சுரதா – முனைவர் தென்காசி கணேசன்

சுரதா | எழுத்தாளர் ஜெயமோகன்

அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்பக் காவியக் கலையே ஓவியமே

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா

விண்ணுக்கு மேலாடை
பருவ மழை மேகம்

இப்படி அற்புத பாடல்களைத் தந்தவர் உவமைக் கவிஞர் சுரதா, அவர்கள்.

 

மாதம் எந்தக் கவிஞர் என்று திட்டமிட்டு எழுதவில்லை .ஆனால் இந்த மாதம் திரு சுரதா அவர்கள் மறைந்த மாதம் வைத்தார் என்று எழுதி முடித்த பின் தெரிய வந்தது.

வாலி கூறுவார் –

அவன் உரைக்காத உவமை இல்லை
அவனுக்குத்தான் உவமை இல்லை

இவரின் பாடல்கள் அனைத்திலும், உவமை தொக்கி நிற்கும். ராஜகோபாலன் என்ற மாணவர் , தஞ்சாவூரிலிருந்து புதுவை சென்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் பணியாளராக சேர்ந்தார். பள்ளி இறுதி படிப்பிற்கு பிறகு, தனியாக தமிழ் இலக்கணம் கற்றார். இரண்டு வருடங்கள் அவருடன் இருந்தார். அப்போது பாரதிதாசன், வாணிதாசன், கம்பதாசன், கண்ணதாசன் என்ற வரிசையில், தனது பெயரையும் சுப்பு ரத்தின தாசன் என்று மாற்றி, சுரதா என்று அழைத்துக் கொண்டார். (மகாகவி பாரதி தன்னை ஷெல்லி தாசன் என்று ஒரு புனைப்பெயரில் உலாவி இருக்கிறார்)

1944ல் மங்கையர்க்கரசி உள்ளிட்ட பல படங்களுக்கு, கதை வசனம் எழுதினார். கவிஞர் கு ச கிருஷ்ணமூர்த்தி இவரை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். உவமைக் கவிஞர் என்ற பட்டத்தைத் தந்தவர் சிறுகதை எழுத்தாளர் திரு ஜெகசிற்பியன் அவர்கள். பின்னாட்களில், அரசவைக் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையிடம் உதவியாளராக இருந்தார்.

முதல் பாடல் வாய்ப்பு , 1952 ல் என் தங்கை என்ற படத்தில், ஆடும் ஊஞ்சல் போல அலை ஆடுதே. முதல் பாடலிலேயே தனது உவமையைக் கையாண்டார்.தியாகராஜ பாகவதர் நடித்த அமரகவி என்ற படத்தில் எழுதினார். தொடர்ந்து, திருமணம் படத்தில் ,

‘எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே’ என்ற பாடல் மிக அருமை.

எத்தனை உவமைகள் ஒரு திரைப்படப் பாடலில் ? சஹானா ராகத்தில், இசை வேந்தர் டி எம் எஸ், திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் அவர்கள் இசையில் பாடி இருப்பார்கள்.

மனம் விரும்பும் காட்சியை
கனவினில் கண்டாலும்
மையல் தீருமா நுரை தின்று பசியாறுமா
மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா
முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா….
நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே
நேச முகம் இரண்டும் நெருங்குமா
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா

தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் இடம் பெற்ற பாடல், இவரை புகழ் ஏணியில் அமர்த்தியது – சீர்காழி கோவிந்தராஜன், திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் இசையில் வெளிவந்த அந்தப் பாடல் – இன்னும் கேட்டு மகிழும் பாடல் –

அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு.
நிலவின் நிழலோ நின் வதனம்
புது நிலைக் கண்ணாடியோ
மின்னும் கன்னம் என்றும்
மொழி போலே
சுவையூட்டும் செந்தேனே என்றும், உவமைகள் சொட்டும்.

நாடோடி மன்னன் படத்தில் இடம்பெற்ற, கண்ணில் வந்து மின்னல் போல, பாடலும் மிக பிரபலமானது. டி எம் எஸ் – ஜிக்கி இனிய குரல்களில், அற்புத பாடல்.

மானே – மலரினும் மெல்லியது காதலே என்று எழுதி இருப்பார்.

அத்துடன்
சுடர் மின்னல் கண்டு,
தாழை மலர்வது போலே
உன்னைக் கண்டு
உள்ளம் மகிழ்ந்தேனே என்று எழுதியதற்கு, அவர், கூறுவார்.
தாமரை – சூரியனைப் பார்த்து மலர்கிறது
அந்தியில் மல்லிகை – கருக்கலைப் பார்த்து மலர்கிறது
இரவில் அல்லி – நிலவைப் பார்த்து மலர்கிறது
ஆனால், எப்போதோ மேகம் கறுத்து, மழை பெய்யும்போது, தோன்றும் மின்னல் ஒளியில் (ஓரிரு மணித்துளிதான்)
தாழை மலர்கிறது என்று காதல் பாடலுக்கு, அறிவியல் விளக்கம் சொன்னாராம்.
எவ்வளவு அழகு, பாருங்கள் !

நாணல் என்ற படத்தில், வி குமார் இசையில், ஒரு அற்புத பாடல் –

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
மண்ணுக்கு மேலாடை வண்ண மையிருட்டு
மனதிற்கு மேலாடை வளர்ந்து வரும் நினைவு
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்

என்று அற்புதமாக எழுதி இருப்பார். அதேபோல, மறக்க முடியுமா படத்தில், மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்தி அவர்கள் இசையில், எழுதிய, வசந்த காலம் வருமோ என்ற பாடல் மிக அருமை. நேற்று இன்று நாளை படத்தில் நெருங்கி நெருங்கி என்ற பாடல் இவர் எழுதியது.
புதுக்கவிதை பிரபலமாகுமுன்னே, மரபில் அதைக் கொண்டுவந்தவர் சுரதா அவர்கள்.
யானைத் தந்தம் போலே பிறை நிலா ; நெளியும் பாம்பு போல நதி ; வெற்றிலை போடாமல் வாய் சிவந்த கிளிகள் ; காலில்லாக் கட்டில் பாடை ; தண்ணீரின் வாக்கியம் – ஆறு;
வெண்மையைக் குறிக்க, தும்பைப் பூ போல முயல் என்பார். இவரோ, சலவை முயல் என்பார். நாணத்தால் குனிந்த பெண், என்பதை, பிழிந்ததொரு புடவை போல குனிந்து கொண்டாள் என்பார்.
நடிகைகள் அக வாழ்க்கை பற்றி இவர் எழுதிய கவிதைகள் 70 களில், பரபரப்பாக இருந்தன. நடிகை வாணிஶ்ரீ பற்றி, தீக்குச்சி மருந்து போல தேகம் கறுத்தவள்  என்கிறார். சுவடு’ம் சுண்ணாம்பும்’ என்ற அந்த தொகுப்பு இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.

நீர்க்குமிழி படத்தில் இவர் எழுதிய வாழ்க்கையின் நிலையாமை பற்றிய பாடல் மிக அருமை 

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை…

இந்தப் பாடலில், நிறைவுச் சரணம் மிக அழகு மட்டுமல்ல, வாழ்வின் யதார்த்தமும் கூட. அதனால்தான், தனது இறுதி ஆசை என்று அவரே எழுதி வைத்தது – தான் மறைந்த அன்று, வானொலியில் தான் எழுதிய – அமுதும் தேனும் எதற்கு மற்றும் ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற இரண்டு பாடல்களையும் ஒலி பரப்பவேண்டும், அது அப்படியே நிறைவேற்றப்பட்டது.
அவரே கூறினார் – நான் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் திரைப்படப் பாடல்கள் எழுதி உள்ளேன். பற்களைப் போன்று எண்ணிக்கையில் குறைவாகவே எழுதி உள்ளேன் என்றார். அப்படி அவர் கூறி இருந்தாலும், அவர் எழுதியதெல்லாம் நிறைவான பாடல்கள்.

3000த்திற்கும் மேற்பட்ட கவி அரங்கங்கள் – அதிலும், வித்தியாசமாக, ஆற்றுக் கவியரங்கம், நிலாக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம், வீட்டுக்கு வீடு கவியரங்கம் என நிகழ்த்தியவர். பல இதழ்கள் வெளியிட்டார். நூல்கள் மற்றும் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெற்ற பெருமை கொண்டவர்.
திருமண வாழ்த்துக் கூறும்போது கூட, தமிழ் இலக்கணத்தை மனதில் வைத்து,
இரட்டைக் கிளவி போல இணைந்தே வாழுங்கள் – பிரிந்தால் பொருள் இல்லை, என்பார்.

இப்படித் தேர்ந்தெடுத்த சொல் மேகங்களால், தேன் மழையாக உவமைகளைக் கவிதையாகத் தந்தவர் சுரதா என்றால் மிகை ஆகாது.
நன்றி – அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம்.

 

 

ஏப்ரல் மாதக் காலையில் 100 %  பொருத்தமான பெண்ணைப் பார்த்து.. – தமிழில்     :  தி.இரா.மீனா 

Haruki Murakami | On Seeing the 100% Perfect Girl One Beautiful April Morning | Reading Corner - YouTube

A 100% Perfect Love Story:On seeing the 100% perfect girl one beautiful  April morning by Haruki Murakami | Ritu's Weblogஜப்பானிய மொழி சிறுகதை

மூலம்       : ஹாருகி முராமி [ Haruki Murakami ]

ஆங்கிலம்   :  ஜே .ருபின் [ Jay  Rubin ]

தமிழில்     :  தி.இரா.மீனா

ஏப்ரல் மாதக் காலையில் 100 %  பொருத்தமான பெண்ணைப் பார்த்து..

 

 

ஓர் ஏப்ரல் மாதத்தின் காலைப் பொழுதில் டோக்கியோ நகரில் நாகரிகமான ஹருஜூக்கு பகுதியின் குறுக்குத்தெருவில் 100 % பொருத்தமான அந்தப் பெண்ணைக் கடந்தேன்.

உண்மையைச்  சொல்லவேண்டுமென்றால் அவள் அப்படி ஒன்றும் அழகி  இல்லை.அழகு என்று கூட சொல்லமுடியாது. அவள் உடைகள் விஷேசமானவையல்ல. அவள் பின்புறத் தலை முடியின் வடிவம் தூக்கத்திலிருந்து எழுந்து வந்தது போல வளைந்தேயிருந்தது.அவள் இளமையானவளுமில்லை. முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கலாம். தெளிவாகச் சொன்னால் இளம்பெண் என்றுகூடச் சொல்லமுடியாது. ஆனாலும் ஐம்பது அடி தூரத்திலிருந்து பார்க்கும்போதே  அவள் எனக்கு 100 % பொருத்தமானவள் என்று தெரிந்தது. அவளைப் பார்த்த கணத்தில் நெஞ்சு குறுகுறுக்க, வாய் வறண்டு போனது.

உங்களுக்குப் பிடித்த பெண் என்பவள் — மெலிதான கணுக்கால்கள் அல்லது பெரிய கண்கள் அல்லது நீண்ட விரல்கள் , அதிக நேரம் சாப்பிடும் இயல்பு  என்று எந்த அம்சம் கொண்டவளாகவுமிருக்கலாம்.ஒரு பெண்ணைப் பிடிக்க எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். எனக்கென்று சில அபிப்பிராயங்களுண்டு. சில சமயங்களில் ஹோட்டலில் பக்கத்து மேஜையருகே உட்கார்ந்திருக்கும் பெண்ணை வெறித்தபடி இருப்பேன். அவளுடைய மூக்கின் வடிவம் பிடித்திருப்பதால் அவ்வாறு இருக்கலாம். முன்கூட்டியே முடிவு செய்த தன்மையோடு 100 %  பொருத்தமாக தனக்குப் பிடித்த பெண்  இருக்க வேண்டுமென்று யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. எனக்கு மூக்குகளின் மேல் ஒரு விதக் கவர்ச்சியிருப்பதால் அவளுடைய உருவத்தை நினைவில் வைத்திருக்க முடியவில்லை.எனக்கு ஞாபகத்திலிருப்பது அவள் பேரழகியில்லை. அது வினோதமானதுதான்.

“நான் நேற்று தெருவில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவள் 100 % பொருத்தமானவளாகத் தெரிந்தாள்.” நான் யாரிடமோ சொல்வேன்..

“அப்படியா? மிகவும் அழகா? ” அவன் கேட்கிறான்.

“அப்படி ஒன்றும் சொல்ல முடியாது.”

“அப்படியானால் உனக்குப் பிடித்த வகையோ?”

“எனக்குத் தெரியவில்லை. எனக்கு அவள் கண்கள், தோற்றம் ,மார்பு என்று என்று எதுவும் நினைவிலில்லை.”

“விசித்திரம்”

“ஆமாம்.விசித்திரம்தான்.”

“சரி. என்ன செய்தாய்? பின் தொடர்ந்து போனாயா? பேசினாயா? ”அவன் உற்சாகமிழந்து கேட்பான்.

“இல்லை. தெருவில் அவளைக் கடந்து போனேன்”.

அவள் கிழக்கிலிருந்து மேற்கே நடந்தாள். நான் மேற்கிலிருந்து கிழக்கே போனேன். அது ஓர் அற்புதமான ஏப்ரல் மாதக் காலைநேரம்.

நான் பேசியிருக்க வேண்டும். அரைமணி நேரம் அதிகம்தான். அவளைப் பற்றிக் கேட்டிருக்கலாம். என்னைப் பற்றிச் சொல்லியிருக்கலாம்—நான் என்ன செய்ய விரும்புகிறேன்… ஓர் ஏப்ரல் மாதக் காலை நேரத்தில் ஹஜுருக்கு தெருவில் இருவரும் ஒருவரை ஒருவர் கடக்க நேர்ந்த விதியின் தன்மையைச் சொல்லியிருக்கலாம். இந்த விஷயத்தில் மென்மையான ரகசியங்கள் புதைபட்டிருக்கும் என்று தோன்றுகிறது. உலகில் அமைதி நிறைந்திருந்த நாளில் ஒரு மிகப் பழமையான

கடிகாரம் உருவாக்கப்பட்டது போல.

பேசியதற்குப் பிறகு மதிய உணவு எங்காவது சாப்பிட்டிருக்கலாம். உடி ஆலானின் படம் பார்த்திருக்கலாம். பிறகு காக்டெயிலுக்காக ஒரு ஹோட்டல் பாருக்குப் போயிருந்திருக்கலாம். அதிர்ஷ்டமிருந்திருந்தால் இருவரும் சேர்ந்தும் இருந்திருக்கலாம்.

சாத்தியக்கூறுகள் என் நெஞ்சக் கதவைத் தட்டின.

எங்கள் இருவருக்கும் இடையிலான தூரம் பதினைந்து அடியாகக் குறைந்தது.

எப்படி அவளை அணுவது? என்ன பேசுவது ?

காலை வணக்கம். ஓர் அரைமணி நேரம் என்னோடு பேசமுடியுமா?

கேலியாகிவிடும். இது  இன்ஷுரன்ஸ் வியாபாரி பேசுவது போல இருக்கும்.

மன்னியுங்கள். இங்கு பக்கத்தில் யாராவது இஸ்திரி செய்பவர்கள் இருக்கிறார்களா?

இல்லை. இதுவும் வேடிக்கையாகிவிடும். என் கையில் எந்தத் துணியுமில்லை. தவிர யார் அப்படிப் பேச விரும்புவார்கள்.

நேரடியாக விஷயத்திற்கு வருவதே சரி.”வணக்கம். நீங்கள் எனக்கு 100 % பொருத்தமான பெண்”

அவள் நம்பமாட்டாள். நம்பினாலும் என்னோடு பேச விருப்பமில்லாமல் இருக்கலாம். மன்னிக்கவும். நான் உங்களுக்கு 100 % பிடித்த பெண்ணாகத் தெரியலாம்.ஆனால் நீங்கள் எனக்கு 100 % பொருத்தமானவரில்லை என்று அவள் சொல்லலாம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நான் உடைந்து போய்விடுவேன். அந்த அதிர்விலிருந்து மீளமுடியாது. எனக்கு 32 வயதாகி விட்டது.

ஒரு பூக்கடையைக் கடந்தோம். மெல்லிய இளங்காற்று என்னைத் தழுவியது. என்னால் அவளோடு பேசமுடியவில்லை.அவள் வெள்ளை நிற ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். வலது கையில் ஒரு வெள்ளைக் கவர் வைத்திருந்தாள். அதற்குத் தபால்தலை ஒட்ட வேண்டும் போலிருக்கிறது. அவள் யாருக்கோ கடிதம் எழுதியிருக்கிறாள். இரவு முழுதும் தூங்காமல் எழுதியது போலக் கண்கள் தூக்கக் கலக்கத்திலிருந்தன.அவள் ரகசியங்கள் அனைத்தையும் தாங்கியதாக அந்தக் கடிதம் இருக்கவேண்டும்.

நான் மேலும் சில அடிகள் நடந்தேன்.அதற்குள் அவள் கூட்டத்தில் காணாமல் போயிருந்தாள்.

இப்போது அவளிடம் என்ன சொல்லியிருக்க வேண்டுமென்று தெரிந்து விட்டது. அது ஒரு ஓர்  எளிய உரையாடலாக  இருந்திருக்கும்.அதைச் சரியாகச் சொல்ல எனக்கு நேரமாகியிருந்திருக்கலாம். எனக்கு வந்த சிந்தனைகள் மிக மிக இயல்பானவை.

அது இப்படித்தான் ஆரம்பித்திருக்கும். “´ஒரு காலத்தில்” என்று தொடங்கி “சோகமான கதைதான் இல்லையா” என்று முடிந்திருக்கும்.

ஒரு  பையனும் பெண்ணும் வசித்து வந்தனர்.அவனுக்கு 20 வயது. அவளுக்கு 18 வயது. அவன் பெரிய அழகனில்லை.அவளும் மிகச் சாதாரணமானவள். இருவரும் தனியாகவே இருந்தனர். தனக்கு 100 % பொருத்தமானவன் கிடைப்பான் என்று அவளும்,தனக்கு தனக்கு 100 % பொருத்தமானவள் கிடைப்பாள் என்று அவனும் முழுமையாக நம்பினார்கள். அந்த அற்புதம் நிகழ்ந்தது.

ஒரு நாள் இருவரும் தெருவில் சந்தித்தனர்.

“இது அற்புதமானது. இவ்வளவு நாட்கள் உனக்காகத் தான் காத்திருந்தேன். நீ நம்பமாட்டாய். ஆனால் நீதான் எனக்கு 100 % பொருத்தமான  பெண் ” என்று அவன் சொன்னான்

“நான் எனக்குள் கற்பனை செய்து வைத்திருந்தவனைப் போலவே நீ இருக்கிறாய். நீ எனக்கு 100 % பொருத்தமானவன். இது ஒரு கனவு போல இருக்கிறது.” என்றாள் அவள்.

பார்க் பெஞ்சில் உட்கார்ந்து கைக்குள் கைகோர்த்தபடி இருவரும் தங்கள் கதைகளைப் பரிமாறிக்கொண்டனர்.அவர்கள் இப்போது தனியானவர்கள் இல்லை. 100 %  பொருத்தமானவரை இருவரும் கண்டுபிடித்து விட்டனர். 100 %  பொருத்தமானவரைக் கண்டுபிடிப்பது எவ்வளவு உன்னதமான விஷயம் ! அற்புதம்.. இது உலக ஆச்சர்யம் !

அவர்கள் பேசியபடி இருந்தனர். என்றாலும் இருவர் மனதிற்குள்ளும் மெல்லிய  இழையாய் ஒரு சந்தேகம். ஒருவரின் கனவு இவ்வளவு எளிதாக உண்மையாவது சாத்தியமாகுமா? சரியானதாகுமா?

இந்த எண்ணத்தால் அவர்கள் சம்பாஷணை தடைப்பட்டது. ”ஒரு சிறிய பரிசோதனை செய்வோம் .நாம் இருவரும் ஒருவருக்கொருவர் 100 % பொருத்தமானவர்கள் என்றால் எங்கேயாவது ,எப்போதாவது மீண்டும் சந்திப்போம். அப்படிச் சந்திக்கும்போது நாம் 100 % பொருத்தமானவர்கள் என்பது உறுதியாகும். உடனே திருமணம் செய்து கொண்டு விடுவோம். என்ன சொல்கிறாய்?” என்று அவன் கேட்டான்.

“சரி. அப்படியே செய்யலாம்”

அவர்கள் பிரிந்தனர். அவள் கிழக்கும்,அவன் மேற்குமாக. அவர்கள் மேற் கொண்ட சோதனை தேவையில்லாதது. அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் 100 %  பொருத்தமானவர்கள்.அவர்கள் சந்தித்தது அற்புதம்தான். அவர்கள் மிக இளையவர்கள் என்பதால் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது. விதி இரக்கமற்று அவர்களைப் பிரித்தது.

ஒரு குளிர்காலத்தில் இருவருக்கும் கடும் காய்ச்சல் வந்தது. வாழ்வுக்கும் சாவுக்குமிடையே இருவரும் போராடினார்கள். நோயின் தீவிரத்திலிருந்து மீண்டபோது அந்த நினைவுகள் நீங்கியிருந்தன. இளம் டி.எச்.லாரன்சின் பிக்கி பாங்க் போல… தலை காலியானது.

இருவரும் புத்திசாலிகள் என்பதால் கடுமையான முயற்சிகள் செய்து  தங்களை ஒரு சமுதாயத்திற்கு  எல்லா வகையிலும் தகுதியுடையவர்கள் ஆக்கிக் கொண்டனர். ஒரு வழியிலிருந்து மற்றொரு வழிக்கு தங்களை மாற்றிக் கொள்ளும் பிரஜைகளாய் மாறியிருந்தனர். 75 % அல்லது 85 % அளவு  காதலுணர்வை அனுபவித்திருந்தவர்களாயிருந்தனர்..

காலம் கடந்தது. அவனுக்கு முப்பதிரண்டு வயது. அவளுக்கு முப்பது. ஓர் ஏபரல் மாத காலம். அவன் மேற்கிலிருந்து கிழக்கும்,அவள் கிழக்கிலிருந்து மேற்கும் நடந்து வந்தனர். அவள் கையில் ஒரு கவரோடு வந்தாள். தெருவின் பிரதான சாலையில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்தனர். ஒரு நொடி இருவரின் மனதிலும் தொலைந்து போன நினைவு ஓரிழையாக ஓடியது. நெஞ்சு படபடப்பதை இருவரும் உணர்ந்தனர். அவர்களுக்குத் தெரியும்.

அவன் எனக்கு 100 % பொருத்தமானவன்.

அவள் எனக்கு  100 % பொருத்தமானவள்.

ஆனால் அந்த ஞாபகங்களின் இழை மிக பலவீனமாகிவிட்டது. பதினான்கு வருடங்களுக்கு முன்பிருந்த தெளிவு இல்லை. ஒரு வார்த்தை பேசாமல் இருவரும் ஒருவரையொருவர் கடந்தனர்; கூட்டத்தில் கலந்து மறைந்தனர்.

ஒரு சோகமான கதைதான்.இல்லையா?

ஆமாம். அதுதான். அதுதான் அவளிடம் நான் சொல்லியிருக்க வேண்டியது.

———————————

ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமி[ 1949]சர்வதேச அளவில் புகழ் பெற்ற படைப்பாளி. சிறுகதை,நாவல்,கட்டுரை ,மொழி பெயர்ப்பு என்ற பன்முகம் கொண்டவர்.இவர்  படைப்புகள் 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. World Fantasy Award, Frank O’ Connor International Short Story Award   உள்ளிட்ட  பல விருதுகள் பெற்றவர்.

A Wild  Sheep  Chase , Norwegian Wood, The Wind – Up Bird Chronicle , Kafka  On the Shore , IQ84  ஆகியவை அவருடைய சிறந்த படைப்புகளில் சிலவாகும்.

 

 

ஊஞ்சல் வீடு – தீபா மகேஷ்

Arivu Azhagan (@2126Sky) / Twitter

அடுத்த வாரம் வைதேகியின் ஸ்ரார்த்தம். வாத்தியாருக்கு போன் பண்ணி ‘ரிமைன்ட்’  பண்ணியாகி விட்டது. சமையல் மாமியும் அவளே போன் பண்ணி, ‘காத்தால ஏழு மணிக்கு டான்னு வந்துடறேன் மாமா’ என்று சொல்லிவிட்டாள். காய்கறி, பழம் எல்லாம் முந்தின நாள் வாங்கிக் கொள்ளலாம், போதும்.  மாமிக்குப் புடவை, வாத்தியார்களுக்கு வேஷ்டி எல்லாம் வாங்கியாகி விட்டது.  ‘காக்கும் கரங்கள்’  இல்லத்திற்கும் அன்று எல்லோருக்கும் ஸ்பெஷல் லஞ்ச்சுக்கு பணம் அனுப்பி விட்டதாக வசுதா சொன்னாள் .

ராஜாராமன் ஊஞ்சலில் ஆடியபடியே ஒவ்வொன்றாக மனதில்  லிஸ்ட் போட்டார். இது ஆறாவது வருஷம். நாட்கள்தான் எவ்வளவு வேகமாக ஓடி விடுகின்றன.

நீ எங்க போன வைதேகி ? இப்போ எங்க இருக்கே ? பித்ரு லோகத்தில் இருந்து வருஷா வருஷம் வந்து சாப்டுட்டு போறியா ? எங்க மேல உயிரா இருந்தியே, எங்களை எல்லாம் நெனைச்சிக்கிறயா? ஏதேதோ கேள்விகளை அவளிடம் கேட்பது போல் மனதுள் கேட்டுக் கொண்டார்.

இல்ல இல்ல, நீ வைகுண்டத்தில அந்த பகவான் கிட்ட சந்தோஷமா கதை கேட்டுண்டு, பாட்டு பாடிண்டு இருப்ப, என்று அவரே கேள்விகளுக்குப்   பதிலும் சொல்லிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.

வசுதா நாளை வருகிறாள்.  இந்த முறை இந்தியா வருவதற்கு டிக்கெட் புக் பண்ணும் போதே, அம்மா தெவசத்திற்கு இருக்கா மாதிரி வரேன்பா என்று சொல்லி இருந்தாள். அவள் மட்டும்தான் வருகிறாள். மாப்பிள்ளையும் பேரனும் ஆபீஸ் , ஸ்கூல் என்று பிஸி.

நான் கொஞ்ச நாள் லீவு போட்டிருக்கேன், கொஞ்சம் சென்னைலேந்து ஒர்க் பண்றேன்னு சொல்லி இருக்கேன்’ என்றாள். ஒரு மாதமாவது இருப்பதாக பிளான்.  ஆனால் எந்த பிளானும் நடக்கும் வரை நிச்சயம் இல்லை. அதுவும், இந்த கொரோனா காலத்தில், எப்போ லாக்டவுன், எப்போ ப்ளைட் கான்சல், என்பதெல்லாம் பகவானுக்குத் தான் வெளிச்சம்.

இந்த முறை வரும் போது வீடு பற்றி பேசி ஒரு முடிவு எடுத்து விட வேண்டும். எவ்வளவோ முறை பேசியாகி விட்டது. இனிமே புதிதாக பேச என்ன இருக்கிறது?  வீட்டை விற்று விட வேண்டியதுதான். வீட்டை வித்துட்டு என்னோட வந்துடுங்க அப்பா , என்று அவளும் அதைத் தான் சொல்லப் போகிறாள். அந்த பிளானோடுதான் ஓரிரு மாதங்கள் இருக்கும் படி வருகிறாள் என்று நினைத்துக் கொண்டார்.

Star Thozhi | குங்குமம் தோழி Web Exclusiveகிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் வாழ்ந்த வீடு. எத்தனை வருடங்கள் ஆனால் என்ன? எல்லா பந்தங்களும், உறவுகளும் என்றாவது ஒரு நாள் முடிந்துதானே போகின்றன. அதுவும் வீடு  போன்ற  ஒரு உயிரில்லாத ஜடப் பொருளின் மேல் என்ன பெரிய பந்தம், ஓட்டுதல் ? ஆனால், அப்படி நினைத்ததுமே வைதேகியின் ஞாபகம் வந்தது. அவள் அதை ஒத்துக் கொள்ள மாட்டாள்.  ‘வீடு ஒன்னும் ஜடப் பொருள் இல்ல. அதுக்கும் உயிர் இருக்கு’, என்பாள்.

கும்பகோணத்தில் அவளைப் பெண் பார்க்க போன போது ‘உனக்கு என்ன பிடிக்கும் வைதேகி?’ என்ற அவன் கேள்விக்கு, ‘எனக்குப் தோட்டம் வெச்சு, ஊஞ்சல் இருக்கற வீடு ரொம்ப பிடிக்குங்க’ என்று வெகுளியாக பதில் சொன்னவள்.

கல்யாணம் முடிந்து சென்னை வந்த பிறகும் எங்கு வெளியில் போனாலும், ‘இந்த வீடு ரொம்ப அழகா இருக்குல்ல, வாசல்ல  எவ்வளவு செம்பருத்தியும், ரோஜாவும் வெச்சிருக்காங்க; அந்த நாலாவது வீடு நல்லாவே இல்ல, முன்னாடி எடமே விடாம பில்டிங் கட்டியிருக்காங்க, அந்த கோடி வீட்டு பங்களா அவளோ பெருசா இருக்கே, எவ்வளோ கிரௌண்ட் இருக்கும்’ என்று சதா வீடு புராணம் தான். உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்குப் போனாலும், அவர்கள் வீட்டையும், அதை அலங்கரித்திருக்கும் விதத்தையும் கூர்ந்து கவனிப்பாள். மனம் திறந்துப் பாராட்டுவாள்.

கல்யாணமான புதிதில் மந்தைவெளியில் ஒரு சிறிய வாடகை வீட்டில்தான்  இருந்தார்கள். ஆனால், அவள் மனம் போலவே, அவர்கள் குடியிருந்த இடத்திற்கு அருகில், இந்த வீடு விற்பனைக்கு வந்தது.

சதுர வடிவில் ஒன்றரை கிரௌண்ட் நிலம். வாசல் கேட்டுக்கு அருகே ஒரு வேப்பமரம்.  உள்ளே நுழைந்ததும் ஒரு சின்ன வெராண்டா. பெரிய ஹால். அதன் சீலிங்கில் இரு கொக்கிகள் மாட்டி வளைந்து நெளிந்த கம்பிகளில் தொங்கிய அழகிய மர ஊஞ்சல். இரு பக்கமும் ரெண்டு ரூம்கள்.  பக்கத்திலே கிச்சன்.  கொல்லைப் புரத்தில் ரெண்டு தென்னை மரங்கள்.

ஊஞ்சலைப்  பார்த்ததும் வைதேகியின் கண்கள் பெரிதாக விரிந்து அவள் முகம் மலர்ந்ததை ராஜாராமன் கவனித்தான்.

அவளுக்குப்  பிடித்துவிட்டது.

“அவங்க சொல்ற விலை ரொம்ப அதிகமா இருக்கேங்க, நம்பளால வாங்க முடியுமா ?”

“மந்தவெளி ஏரியாக்கு இந்த ரேட் ரொம்ப நியாயமானதுதான், வைதேகி. பத்து நிமிஷம் வேகமா நடந்தா கபாலீஸ்வரர் கோயில். இந்த பக்கம் பெருமாள் கோயில்.  பக்கத்திலேயே ராமகிருஷ்ணா மடம், பீச். இது மாதிரி சென்ட்ரல் ப்லேஸ்ல  அமையாது, எப்படியோ சமாளிச்சு வாங்கிடலாம்”, என்றான். இதையெல்லாம் வெளிப்படையான காரணங்களாக சொன்னானே  தவிர,  அவள் ஆசைப்பட்ட மாதிரி ஒரு வீட்டில் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு அதில் இருந்தது. அது  வைதேகிக்கும் புரிந்தது.

நாம் மிகவும் ஆசைப்பட்ட பொருள் கையில் கிடைக்கும் போது அதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அப்படியே அனுபவித்தாலும் கொஞ்ச நாட்களில் அந்த ஆசையும் மோகமும் போய் ஒருவித சலிப்புத்தன்மை வந்து விடுகிறது.

ஆனால், வைதேகி  அதற்கெல்லாம்  ஒரு விதி விலக்காக இருந்தாள்.

வீட்டின் ஒவ்வொரு அடியையும், ரசித்து ரசித்து அழகுப்படுத்தினாள். ஹாலில் இருக்கும் ஊஞ்சல் போதாது என்று வாசல் வெராண்டாவிலும் ஒரு ஊஞ்சல். வீட்டைச் சுற்றிப் பூச் செடிகளும்,  கொய்யா, மாமரம், வாழையும், காய்கறி தோட்டமும் எல்லாம் அவள் கை வண்ணத்தில் மின்னின.

பண்டிகை நாட்களில் வாழை இலையில் தான் சாப்பாடு. தாம்பூலம்  போட வசதியாக  வெத்திலை கொடி கூட வீட்டில் இருந்தது.

பால்காரன் முதல் கீரைக்காரிவரை யார் வந்தாலும், வாசலில் உள்ள ஊஞ்சலில் வைத்துதான் வியாபாரம் நடக்கும். அவர்களின் குழந்தைகளோ, ஏன் சில சமயம் பெரியவர்களே கூட ஊஞ்சலில் கொஞ்ச நேரம் ஆடி விட்டுதான் போவார்கள். அவர்கள் சந்தோஷத்தை வைதேகி ரசிப்பாள்.

கிரஹப்பிரவேசம் செய்த நாள் முதல் அவள் வாழ்ந்த கடைசி நாள் வரை, அந்த வீட்டின் மேல் அவளுக்கு இருந்த காதல் கொஞ்சம் கூட குறையவில்லை.

வீட்டிற்கு ‘ஸ்ரீ நிகேதம்’ என்று பெயர் வைத்தது கூட அவள்தான். ஆனால், எல்லோரும் ‘ஊஞ்சல் வீடு’ என்றே அழைக்க, அதுவே அந்த வீட்டிற்கு ஒரு அடையாளமாகி நிலைத்து விட்டது.

அதிகாலையில் எழுந்து கோலம் போட்டு வாசலில் இருக்கும் துளசி மாடத்தில் விளக்கு ஏற்றி விட்டு கிச்சனுக்குள் நுழைந்தால் என்றால்  மதியம் வரை ஓயாமல் வேலை செய்து கொண்டு இருப்பாள். வாசலில் அவள் போடும் கோலத்தை வைத்தே அன்று என்ன விசேஷம் என்று சொல்லி விடலாம்.

இப்போது கோலம் இல்லாத வாசலையும், குப்பை மண்டிக் கிடக்கும் தோட்டத்தையும் பார்க்கும் போது சில சமயம் வருத்தமாக இருக்கும். ஆனால் என்ன செய்வது ? வீட்டு வேலை செய்ய வரும் பெண் மாதத்தில் பாதி நாள் வந்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. பழகின ஆட்கள் தவிர யாரையும் உள்ளே விடுவதற்கும் யோசிக்க வேண்டியிருக்கிறது.  எப்படி நடக்கிறதோ நடக்கட்டும் என்று விட்டு விட்டார்.

நல்ல வேளை, சமையலுக்கு ஆள் வைக்கவில்லை. உடலும் மனமும் ஓத்துழைக்கும் நாட்களில் ஒரு  காயோ கூட்டோ செய்து சாப்பிடுவார். மற்ற நாட்களில் ஏதோ ஒரு ரெடிமேட் மிக்ஸ் பொடி அல்லது தொக்கு. போதுமே என்று தோன்றும்.  ஆனால் சாப்பிடும் போது, வைதேகியின் கை மனமும் , வாழை இலையில் அவள் உணவு பரிமாறும் அழகும் நினைவிற்கு வரும்.

முதுமையில் தனிமை கொடியது என்று சும்மாவா சொன்னார்கள்?

ஏதேதோ யோசனையில் இருந்தவரின் சிந்தனையைக் காற்றில் மிதந்து வந்த அந்த கீதம் கலைத்தது. எம். எஸ் சின் “பாவயாமி கோபால பாலம் ” தன்னிச்சையாக  அவர் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. வைதேகிக்கு மிகவும் பிடித்த பாட்டு.

பனிக் காலங்களில், படுக்கப் போகும் முன், ஒரு  பழைய வேஷ்டியை, பவழ மல்லிச் செடிக்குக் கீழே விரித்து வைத்து விடுவாள். காலையில் அந்த வேஷ்டி முழுக்க பவழ மல்லிப் பூக்கள் நிறைந்து பார்க்கவே ரம்யமாக இருக்கும். அவற்றை  நூலில்  கோர்த்து அவளது இஷ்ட தெய்வமான கிருஷ்ணனுக்கு மாலையாகப் போடுவாள்.  ரொம்ப சந்தோஷமாக இருக்கும் நாட்களில் ‘பாவயாமி கோபால பாலம்’ பாடுவாள்.

விடுமுறை நாட்களில் ஊஞ்சலில் அமர்ந்து நித்திய மல்லி பூக்களைத் தொடுக்கும் போதும் பாட்டு  கச்சேரி நடக்கும். சில சமயம் வசுதாவும் சேர்ந்து கொள்வாள்.

எவ்வளவு இனிமையான அழகான பொழுதுகள். அவற்றையெல்லாம் இன்னும் கொஞ்சம் ரசித்து அனுபவித்திருக்கலாமோ, என்று இப்போது தோன்றுகிறது.

இன்றும் கூட மார்கழி மாத முன்னிரவு வேளையில் ஊஞ்சலில் உட்காரும் போது காற்றில் தவழ்ந்து வரும் பவழ மல்லியின் நறுமணம், சந்தோஷமும் வருத்தமும் கலந்த ஒரு உணர்வைக் கொடுக்கும்.

இது போன்ற ஒரு நாளில் தான் அவள் உயிர் பிரிந்தது. காத்தாலேந்து நெஞ்சுல சுருக் சுருக்குனு குத்தற மாதிரி இருக்குங்க என்றவள், அசிடிடின்னு நெனைக்கறேன் என்று அதற்கு காரணமும் சொன்னாள். ஆனால் அரை மணி நேரத்தில் எல்லாம் கை மீறிப் போய் விட்டது. டாக்டருக்கு ஃபோன் பண்ணி, அவர் வந்து பார்ப்பதற்கு முன்னே அவள் காற்றோடு கலந்து விட்டிருந்தாள்.

*****************

வசுதா துபாய் ஏர்‌போர்ட்டில் இருந்தாள். கனெக்டிங் ஃப்ளைட்டுக்கு  இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கிறது.

செல்ஃபோன் எடுத்து அப்பாவுக்கு முதலில் மெஸேஜ் அனுப்பினாள். அவர் காத்துக் கொண்டிருப்பார் என்று தெரியும்.  “ஏர்‌போர்ட்லேந்து நானே கார் புக் பண்ணி வந்துடறேன். நீங்க சிரமப்பட வேண்டாம்”, என்று முன்னாலேயே சொல்லி இருந்தாள்.

கொஞ்ச நேரம் பாட்டு கேக்கலாம் என்று காதில் ஏர் பாட் மாட்டிக் கொண்டாள். ஆனால் மனம் இசையில் லயிக்கவில்லை. இந்த முறை திரும்ப வரும் போது, வீட்டையும் விற்று விட்டு, அப்பாவையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்து விட வேண்டும்.  மனம்  அடம் பிடிக்கும் சிறு குழந்தைப் போல அதே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது.

முகுந்த்திடம் இதைப் பற்றி முன்னாலேயே பேசி இருந்தாள். அவனுக்கும் அப்பாவிடம் பிரியம் ஜாஸ்தி. ரெண்டு பேரும் சலிக்காமல் கிரிக்கெட் பார்ப்பார்கள், பேசுவார்கள். அனிருத் கூட அவள் கிளம்பும் போது, “வெந் வில் யூ கம் பாக் ? இஸ் ராஜா தாத்தா கமிங் வித் யூ” என்றெல்லாம் கேட்டு கொண்டு இருந்தான்.

வீடு விற்பதுதான் பெரிய வேலை. எப்படி நடக்கும் என்று தெரியவில்லை.

அம்மா போன பின், வீட்டின் மேல் அப்பாவிற்கு ‘சென்டிமண்ட்டான’ ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. அதை விற்கவோ, இல்லை இடித்து ப்ரமோட்டர் மூலம் ‘ப்ளாட்’ கட்டவோ அவர் ஒத்துக்கொள்ளவில்லை. உங்கம்மா ராணி மாதிரி இருந்த வீடு,  அதுல போய், பத்துல ஒண்ணா, நானும் ஒரு ஓனர்னு எப்படி இருக்கிறது? என்பது அவர் வாதம்.

அவளுக்கும் அந்த வீடு பிடிக்கும்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்து, விளையாடி, படித்து, வளர்ந்து, வாழ்ந்த வீடு.

ஸ்கூல் படிக்கும் நாட்களில், அம்மா வாசல் ஊஞ்சலில் வைத்துதான் தலை பின்னி விடுவாள். படிப்பது கூட, மொட்டை மாடியில் நடந்த படியோ  அல்லது ஊஞ்சலில் ஆடியபடியோதான். ஊஞ்சலில் ஆடியபடி படித்தால், அந்த ‘ஸ்விங்கிங் எஃபெக்ட்ல்’, வரும் உற்சாகம், மூளையை சுறுசுறுப்பாக்கி, படித்ததை  எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ள உதவும். இந்த காலத்தில்  கதவைச் சாத்திக் கொண்டு சூரிய ஒளியும்,காற்றும் வராத ரூமில் உட்கார்ந்து படிக்கும் அனிருத் போன்றவர்களிடம் இதையெல்லாம் சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

 

அதே போல, சித்ரா பௌர்ணமி நாட்களில், அம்மா விதவிதமான கலந்த சாதம் செய்து மொட்டை மாடியில்   ‘நிலாச்சோறு ‘ சாப்பிடுவார்கள். அம்மா போடும் மாவடுவின் சுவைக்கு இந்த உலகில் ஈடு இணையே கிடையாது என்று தோன்றும்..

தன் கல்யாணத்தின் போது நடந்த கொண்டாட்டங்கள், அனிருத் டெலிவரிக்கு வந்தது, அவனுக்குத் தொட்டில் போட்டது, ஊஞ்சலில் பாட்டி மடியில் படுத்தபடியே அனிருத் கதை கேட்டது, என்று மனம் ஞாபகக் குளத்தில் மூழ்கி எழுந்தது.

இனிமையான நினைவுகள் எல்லாம் சரி. ஆனால், யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா . அப்பா தனியாக எத்தனை நாள்தான் அந்த வீட்டில் இருக்க முடியும் ? வருடத்திருக்கு ஒரு முறை, சம்மரில், தன்னுடன் வந்து ஓரிரு மாதம் இருக்கிறார். அதுவும் கொரோனா காலத்தில் அவரும் வர முடியாமல், தானும் போக முடியாமல் தவித்தது, அப்பப்பா!

அப்போதுதான், அப்பாவிடம் பேசிப்பேசி, ஒரு வழியாக அவரைத் தன்னுடன் வந்து இருக்க சம்மதிக்க வைத்தாள்.

அவர்களுக்கும் வேலை, அனிருத் மேல்படிப்பு என்று இப்போதைக்கு இந்தியா வரும் உத்தேசமே இல்லை. அப்புறம் எதற்கு இங்கே ஒரு வீடு? அதுவும் பராமரிக்க வகை இல்லாமல் ஒரு ‘தனி வீடு’. அப்பாவிடம் பேசி, ஒத்துக்கொள்ள வைத்து  வீட்டை விற்க ஏற்பாடு செய்ய வேண்டியதுதான் என்று அவள் நினைக்கவும், போர்டிங் செய்ய ஆங்கிலத்தில் அழைத்தார்கள்.

********************

“அப்பா”, என்று முகமெல்லாம் சிரிப்பாக, இரு கரம் நீட்டி தன்னிடம் வரும், மகளைப் பார்த்தவுடன், தன் மொத்த சந்தோஷமும் ஒரு உருவெடுத்து தன் முன்னே நிற்பது போலத் தோன்றியது ராஜாராமனுக்கு.

வாம்மா , என்று அவளை மெல்ல அணைத்து  தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

‘ஜெட்லாக்’, அப்புறம் அம்மாவின் தெவசம் என்று நாட்கள்  போனதே தெரியவில்லை. வெகு நாட்கள் கழித்து அன்று இரவு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

“என்னடி வசு, இன்னும் தூங்கிண்டு இருக்க? மார்கழி மாசம் அதுவுமா வாசல்ல கோலம் போடலை, துளசி மாடம் கிட்ட விளக்கு ஏத்தலை. என்ன நீ, எழுந்து போய் தோட்டத்துலேந்து கொஞ்சம் மாவிலை பறிச்சிண்டுவா, வாசல்ல கட்டணும்” என்று அம்மா அடுத்தடுத்து கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தாள். “ஒரு அஞ்சு நிமிஷம் தூங்கறேன்மா இன்னும், ப்ளீஸ்,” . என்றவள் சட்டென்று விழித்துக் கொண்டாள்.

அம்மாவின் முகமும், அவள் பேசியதும், கனவென்று சொல்ல முடியாதபடி தத்ரூபமாக இருந்தது.

அந்த கனவின் தாக்கம் அடுத்த நாள் முழுவதும் இருந்தது. அன்று இரவு சாப்பிடும் போது,  “வசுமா, என்ன ப்ளான் உனக்கு, என்ன டிஸைட் பண்ணி இருக்க,” என்று கேட்டார் ராஜா ராமன்.

“அப்பா, நான் திரும்ப ஊருக்குப் போற போது நீங்களும் என்னோட வந்துடுங்க.  எவ்ளோ நாள் தனியா இருந்தாச்சு. ஆனா, இந்த வீட்டை விக்க வேண்டாம்பா,” என்று சொன்ன மகளை ஆச்சரியமாகப் பார்த்தார்.

 

பூக்களாக மலரும் நோய்! – மீனாக்ஷி பாலகணேஷ்

         

மனித இனத்தைப் பலப்பல நோய்கள் காலந்தோறும் வாட்டி வதைத்துப் படுகொலையும் செய்திருக்கின்றன. கோவிட் (Covid-19) எனப்படும் கொரோனா தொற்றின் தாக்கம் நம்மை இன்னும் விட்டபாடில்லை. இதனைக் கண்ணுற்ற பின்பே பலர் ஒரு தொற்றின் (infection) தாக்கத்தை, அதன் தீவிரத்தை உணர்ந்துள்ளனர் என்பதும் உண்மை.

           சென்ற இதழ்க்கட்டுரையில் கூறியவாறு, நோய் என்பது உள்ளம் தொடர்பானது மட்டுமல்ல, உடல் தொடர்பானதும் கூட என்று விளக்கத்தான் இந்தக் கட்டுரை! அது மட்டுமின்றி, சில தொற்றுநோய்களைப் பற்றியும், அவற்றிலிருந்து காத்துக்கொள்வது பற்றியும், அவை மனித சமுதாயத்திற்குச் செய்த பல துன்பங்களை விளக்குவதற்காகவும் இதனை எழுத முற்பட்டேன். அவ்வப்போது சங்க இலக்கியக் கட்டுரைகளுக்கு இடைச்செருகலாக இவற்றை எழுத எண்ணம்!!

           சரி! தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இல்லாமல் இப்படியொரு தலைப்பைக் கொடுப்பேனா?

           இது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி. என் தாயாரும் கூடப் பிறக்கவில்லையாம். அவளுடைய அண்ணனான என் மாமா ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போது அவருக்குப் பெரிய அம்மை வந்த கதை இது! என்னுடைய பாட்டியார் அம்மாவிற்குக் கூறிய கதை. அம்மைத் தடுப்பூசி (Smallpox vaccination) போடுவது பிரபலமாகாத காலகட்டம். ஒருவயது கூட நிரம்பாத குழந்தைக்கு உடலெங்கும் அம்மை (smallpox) வார்த்துவிட்டது. வேப்பிலையைக் கொத்தாகக் கட்டி அதனால் உடலை வருடுவது வழக்கம். பாட்டியும் செய்தார். ஆனால் குழந்தை படும் அவஸ்தை காணச் சகிக்கவில்லை. உடம்பெங்கும் ஒரு இண்டு இடுக்கு இல்லாமல் அம்மைக் கொப்புளங்கள் பூக்களாக உடலெங்கும், முகமெங்கும், கைகால்களெங்கும் பூத்திருந்தன. பாட்டி பரபரவென்று ஒரு நுனி வாழையிலையை அறுத்துவந்து பூஜையறையில் ஸ்வாமி படத்தின் முன்பு விரித்து வைத்தார். அதில் விளக்கெண்ணையைத் தளும்பத் தளும்பப் பூசினார். குழந்தையின் உடலிலும் தடவிவிட்டு (இது கொப்புளங்கள் காயமாகி வலிக்காமல் இருப்பதற்காக!) குழந்தையை அந்த இலையில் போட்டுவிட்டு, “ஆண்டவனே! நீயே தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என் குழந்தையை,” எனப் பிரார்த்தித்தாராம்.

           அதிசயம்! அம்மை வந்து பெரிதாக ஆடிவிட்டாலும். தழும்புகளுடன் மட்டுமே பெரிய பாதிப்பின்றி தப்பிப் பிழைத்த வெகுசிலரில் என் மாமாவும் ஒருவர்.

           சரி. பெரியம்மை எனும் தொற்றுநோயைப் பற்றி சிறிது அறிந்து கொள்ளலாமா?

           இது ஒரு வைரஸ். காலங்காலமாக இருந்து வரும் தொற்று. கி.மு. 10,000 லேயே இருந்திருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். 3000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய மம்மிகள் சிலர் பெரியம்மையினால் இறந்தவர்கள் என அறிகிறோம். மிக நீண்ட காலங்களுக்கு முன்பு அமெரிக்க, ஆஸ்திரேலிய ஜனத்தொகை அம்மைத்தொற்றால், அதன் தொடர்பான இறப்புகளால் மிகவும் குறைந்து விட்டது. ஆண்டுக்கு 4 இலட்சம் பேர்கள் இறந்தனர்.

           20ம் நூற்றாண்டில் மட்டுமே 30-50 கோடிப்பேர் இறந்துள்ளனர். அம்மைத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபின், அது உலகம் முழுவதிலும் நடைமுறைக்கு வந்த பின்பு 2011ம் ஆண்டில் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது. இதனால் இப்போது அம்மைத் தடுப்பூசி போடுவதும் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

           பல உலக நாடுகளிலும் அவ்வப்போது பெரியம்மை தனது வீரியத்தைக்காட்டி ஜனத்தொகையைக் குறைத்துள்ளது. ரோம் இதில் முக்கியமானது. 15 ஆண்டுகள் கோர தாண்டவம் ஆடிய அம்மைத்தொற்று, மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையைக் குறைத்த பின்பே ஒருவழியாக நிலைக்கு வந்தது!

           கி.பி. 400ல்  ஒரு இந்திய மருத்துவ நூலில் இந்தத் தொற்றின் அறிகுறிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

           சிவப்பும் பழுப்புமான சிறிய கொப்புளங்கள் (Pustules) இடைவெளியே இல்லாமல் உடலெங்கும் நெருக்கமாக மலர்ந்த சிறு காட்டுப்பூக்களைப்போல அரிசிஅரிசியாகப் படர்ந்திருக்கும். வலியும், அரிப்பும், எரிச்சலும்  ஜுரத்துடன் சேர்ந்து நோயாளிகளை வாட்டி எடுக்கும். இது தெய்வத்தால் கொடுக்கப்படும் தண்டனை எனச் சில நாடுகளில் நம்பப்பட்டது.  சீதளாதேவி எனும் பெண்கடவுள் இதற்குத் தெய்வம் என இந்துக்களால் நம்பப்பட்டாள். இவளே இந்த நோயையும் குணமாக்குபவளாக வழிபடப் பட்டாள். ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் பெரியம்மையின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. மக்கள் தொகையின் மிகுதியான இழப்புக்கும் காரணமாக இருந்துள்ளது.

           இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். உலகெங்கிலும் ஆண்டுதோறும் பெரியம்மையால் எண்ணற்ற ஜனங்கள் பரிதாபமாக இறந்தனர்.

           இது இப்படி இருக்க, ஒருமுறை பெரியம்மை வந்து பிழைத்தவர்கள் மறுமுறை இந்தத் தொற்றுநோய்க்கு ஆளாகவில்லை என்பது நிதர்சனமானது. இதனால் உலர்ந்த பெரியம்மைப் பொருக்குகளைப் (scabs) பொடிசெய்து மற்றவர்களுக்குத் தடுப்பூசியாகப் போடப்பட்டது. இதனால் 1-3% பேர்கள் மட்டுமே தீவிரமான பெரியம்மை பாதிப்புக்கு உள்ளாகி இறந்தனர். மற்றவர்கள் லேசான பாதிப்புடன் குணமடைந்தனர். பெரியம்மைக்கான எதிர்ப்புச் சக்தியும் இவர்களுக்கு இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களில் 15-20% இறப்பு விகிதம் காணப்பட்டது.        

           1799-ல் அமெரிக்காவில்தான் முதல் பெரியம்மைத் தடுப்பூசி போடப்பட்டது. எட்வர்டு ஜென்னெர் (Edward Jenner) எனும் மருத்துவர் / ஆராய்ச்சியாளர் முதல் தடுப்பூசியைத் தயாரித்து வழங்கினார். 1800-ல் அமெரிக்காவில் நாடு முழுவதும் ஏழைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. ஏனெனில், ஏழைப்பணியாளர்கள்  மிகவும் அழுக்கான இடங்களில் சுகாதாரமின்றி வசிப்பதனால் இந்தத் தொற்று அவர்களை மட்டுமே பாதிப்பதாக எண்ணப்பட்டது. அவர்களால் பரப்பப்படுவதாகவும் நம்பப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டது. போட்டுக்கொள்ளாவிட்டால் அபராதம், சிறைவாசம் ஆகியன அறிவிக்கப்பட்டன.

           ஜென்னெர் முதலில் தன் ஆராய்ச்சியின்போது மாடுகளுக்கு வரும் அம்மைநோய்க் கொப்புளங்களிலிருந்து நீர் (இது மனிதர்களையும் பாதிக்கும்) மனிதர்களுக்கு செலுத்தப்பட்டால் பெரியம்மையிலிருந்து அது அவர்களைக் காக்கும் என அறிந்தார். பின்பு மாட்டு அம்மை (Cow pox) வந்த ஒரு பெண்ணிடமிருந்து அதனை எடுத்து ஒரு சிறுவனுக்குத் தடுப்பூசியாகச் செலுத்தினார். பின்னர் திரும்பத் திரும்ப அவனை பெரியம்மைத் தொற்றுக்கு உள்ளாக்கிப் பார்த்தார்; ஆனால் அவனுக்கு பெரியம்மைக் கொப்புளங்கள் வரவுமில்லை; அவன் நன்றாகவே இருந்தான். அன்றிலிருந்து ஜென்னெரின் கண்டுபிடிப்பால் பலர் பெரியம்மையிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

           தடுப்பூசி எவ்வாறு செலுத்தப்பட்டது தெரியுமா? அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்பட்ட சீழ் நீர், அதனால் ஈரப்படுத்தப்பட்ட ஒரு சிறு கூரான கருவியால்  தடுப்பூசி போடப்படும் மனிதரின் தோலைச் சிறிது கீறி அதில் செலுத்தப்படும். இதனை ஜென்னெர் தனது நண்பர்களான மருத்துவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் கொடுத்துப் பலரையும் பெரியம்மையிலிருந்து காப்பாற்றினார். மாட்டு அம்மைச் சீழ்நீர் பெரியம்மையிலிருந்து ஜனங்களைக் காத்தது.

           இரண்டாவது வகைத் தடுப்பூசி முட்டையில் வளரும் கோழிக்குஞ்சின்  சவ்வினுள் செலுத்தி வளர்க்கப்பட்டு, பின்பு அறுவடை செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் முட்டையின் புரதங்கள் பலருக்கு ஒவ்வாமையை (Allergy) உண்டுபண்ணின.

           மூன்றாம் வகையில் பெரியம்மை ஒரு வைரஸால் வரும் தொற்று என அறிந்தபின்பு, அந்த வைரஸை அதன் வீரியத்தைக் குறைத்து, மாற்றங்களைச் செய்து, உபயோகிக்கலானோம். அறிவியல் வளர்ச்சியின் துணையால் இந்த வைரஸ்களை நன்கு பாதுகாப்பாக வளர்க்கும் முறையையும் பற்றி அறிந்தோம். பக்கவிளைவுகளும் மிகவும் குறைந்தன.

           ஜென்னரின் தடுப்பூசி முறை 20ம் நூற்றாண்டுவரை, புதியமுறையில் தடுப்பூசி தயாரிக்கப் படும்வரை புழக்கத்திலிருந்தது. 1958ல் இருந்து 1977 வரை புதிய அம்மைத் தடுப்பூசியை உலகளவில் அனைவருக்கும் செலுத்தி, பெரியம்மையைத் தடுத்த உலக ஆராய்ச்சி நிறுவனம், 1979ல் பெரியம்மையை உலக அளவில் அறவே ஒழித்து விட்டதாக அறிவித்தது. ஆனால் இந்தத் தடுப்பூசி இன்னும் தயார் செய்யப்படுகிறது. எதற்காக?

           இத்தகைய தொற்றுக்களால் மனிதனால்

மனித குலத்துக்கே ஏற்படுத்தப்படும் சேதங்கள், (Biological warfare)

மனிதகுல அழிவுக்குக் காரணமான செயல்கள், (Bio-terrorism)

இன்னும் குரங்கு அம்மை (Monkey Pox) போன்ற தொற்றுக்கள்

இவற்றிலிருந்து மனிதர்களைக் காக்க இது பயன்படுத்தப் படலாம்.

           சமீபத்தில் கொரோனாவிற்குபின், தற்போது ‘குரங்கு அம்மை’ (Monkey pox) என ஒரு வைரஸ் தொற்று உலகை வலம்வர ஆரம்பித்திருக்கிறது. இது குரங்கிலிருந்து மனிதனுக்கும், மனிதனிடமிருந்து மனிதனுக்கும் பரவும் தொற்றாகும். பெரியம்மை, மாட்டு அம்மை, குரங்கம்மை அனைத்தும் ஒரே வகையைச் சேர்ந்த வைரஸ்கள் தாம்.

           குரங்கம்மைத் தொற்றினால் ஜுரம், கடுமையான தலைவலி, உடல்வலி, உடலில், தோலில் கொப்புளங்கள் முதலியன வரலாம். இது 2 – 4 வாரங்கள் இருக்கலாம்.  பெரும்பாலானவர்கள் குணமடைந்து விடுவார்கள். சிலர் மிகவும் அவதிப்படக்கூடும். சில இறப்புகளும் நேரலாம்.

           இதற்கும் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது. பெரியம்மைத் தடுப்பூசி இந்தக் குரங்கம்மையிலிருந்தும் ஒருவரைக் காக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால், பெரியம்மைத் தடுப்பூசி போட்டுக் கொண்டது நம் தலைமுறைதான் கடைசி. 1980க்குப் பின் பெரியம்மைத் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் 2010 வாக்கில் நடந்த ஆராய்ச்சிகளில் இருந்து குரங்கு அம்மையிலிருந்து பெரியம்மை தடுப்பூசி காப்பதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

           இதிலிருந்து என்னவெல்லாம் அறிந்து கொள்கிறோம்?

           தொற்றுநோய்களைப் பரப்பும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், மற்ற நுண்ணுயிரிகள் நம் கண்ணுக்குப் புலப்படாவிடினும், உலகில் எங்கெல்லாமோ உள்ளன. சமயம் வாய்க்கும்போது உலகை வலமும் வருகின்றன. நம் முன்னோர்களும் பெற்றோர்களும் சொல்லித்தந்த சில அடிப்படை சுகாதார வழிகளைக் கடைப்பிடிப்பதனால் இவற்றை ஓரளவு கட்டுக்குள் வைக்கலாம். தடுப்பூசி போட்டுக்கொள்வது வருமுன் காத்தலுக்காகத்தான். வந்தபின் காத்தல் தான் கொரோனாவில் பெரும்பாலான மக்களை அந்தத் தொற்றுக்கு இழந்தபின், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபின், அதனைப் போட்டுக்கொண்டு மற்றவர்கள் தம்மைக் காத்துக் கொண்டது! எத்தனையோபேர் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மறுத்துள்ளனர்.

           இன்றைக்கும்  ‘தடுப்பூசியை மறுப்பவர்கள்’ (Vaccine deniers) என உலகில் ஒரு சாரார் உள்ளனர். தடுப்பூசியை மறுப்பவர்கள் அது தயாரிக்கப்படும் முறைகள், (பெரியம்மைத் தடுப்பூசி மாடு, மனிதர்களின் சீழ்க் கொப்புளங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது – ஆகவே அருவருக்கப்பட்டது!), அது போடப்படும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பினைத் தருமா என்பதுவரை பல காரணங்களுக்காக, தடுப்பூசியை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் தமது சுதந்திரம், உரிமை என்று வாதிட்டவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களைக் கொண்டது. இவர்கள் தமக்கும், தமது குழந்தைகளுக்கும் எந்தவிதமான தடுப்பூசியையும் செலுத்தாமல் வாழ்கின்றனர். இது மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இவர்கள் ஏன் உணரவில்லை என்று வியப்பாகவும், மலைப்பாகவுமுள்ளது.         

                                          மீண்டும் பேசுவோம்.

                                             ———————

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கண்ணன் கதையமுது -9 -தில்லை வேந்தன்

லீலை கண்ணன்... - கோகுல கிருஷ்ணா யாதவ சேவா சங்கம் | FacebookBaal Krishna by Shuchismita Das on Dribbble

(யசோதைக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கோகுலம் முழுவதும் பரவியது.
கோபர்களும், கோபியர்களும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.
எங்கும் ஒரே கொண்டாட்டம் தான்…)

கோகுலக் காட்சிகள்

கொண்டாட்டங்கள்

கோழி கூவுமுன் கோகு லத்தவர்
சூழ வந்தனர்,தொழுது நின்றனர்
வாழி என்றனர், மகிழ்ச்சி என்றனர்,
ஆழும் அன்பினால் ஆடிப் பாடினர்

ஒப்பார் ஆரென ஓங்கியே கூறுவார்,
அப்பா! ஆதியே! அன்பனே! அண்ணலே!
இப்பார் உய்யவே எம்குலம் தோன்றினாய்,
தப்பா தவ்வினை சாயுமென் றோதுவார்

பிறந்த பிள்ளையின் பெருமை பேசுவார்:
கறந்த பாலொடு கலத்தை வீசுவார்;
திறந்த முற்றமே திரண்டு கூடுவார்;
சிறந்த செவ்வழி சிலிர்த்துப் பாடுவார்.

( செவ்வழி – முல்லைப்பண்)

எண்ணெய், சுண்ணமும் எடுத்துக் கொட்டவும்,
வண்ணச் சேறென மாறும் முற்றமும்.
நண்ணி ஆடியே நழுவி வீழ்பவர்,
பண்ணும் ஓசையால் பல்கும் பாற்கடல்.

( சுண்ணம் – மஞ்சள் பொடி)
( பல்கும் – பெருகும் / பொங்கும் )

தோரணம் ஆயிரம் தொங்கவே யாங்கணும்
வாரணம் ஏறியே வந்தனர் ஊர்வலம்
நாரணன் கோகுலம் நாடியே வந்ததன்
காரணம் அன்பெனக் கண்டனர் விம்மியே

(வாரணம் – யானை)

ஆடும் மகளிரின் கூந்தல் மலர்கள் தரையில் சிந்தி வானவில் போல் காட்சி தருதல்

சந்தனமும் குங்குமமும் சார்மகளிர் குழல்மலர்கள்
கொந்தவிழ்ந்து வண்ணப்பூக் குவியல்கள் தரைமிசையே
சிந்தியதால் நிறமொளிரச் சீரோங்கும் கோகுலத்தில்
வந்திறங்கும் வானவில்லின் வடிவமென வனப்பிருக்கும்

(கொந்து- கொத்து)

குழந்தைக்குப் பெயர் வைத்தல்

மறையோதும் அந்தணர்க்கு மனம்விரும்பும் பரிசுகளைக்
குறையேதும் இல்லாமல் கோவேந்தன் நந்தனவன்
நிறைவாகக் கொடுத்தவுடன் நெடுந்தவத்து மாதவரும்
முறையாகக் கிருஷ்ணனென முகில்நிறத்தின் பெயரிட்டார்!

( முகில்நிறம்– கறுப்பு)

குறிப்பு:

‘கிருஷ்ணன்’ என்ற சொல்லுக்குக் ‘கரிய நிறமுடையவன்’ என்பது பொருளாகும்

ரோகிணியின் பிள்ளை

கொள்ளையெழில் கொண்டிருந்த குழந்தையவன் ரோகிணியின்
வெள்ளைநிற வாள்வளைபோல் வயங்கொளிரும் அருமைமிகு
பிள்ளயவன் பெயர்குறித்தார்- பேராற்றல் இராமனென்று..
கள்ளமிலா நேர்வழியான், கலப்பையெனும் படையுடையான்.

( வாள்வளை– ஒளிவீசும் சங்கு)

குறிப்பு:
பலராமன் ஒளி வீசும் வெண்ணிறச் சங்கு போன்ற நிறத்தை உடையவன் என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது

கண்ணன் பிறந்தபின் கோகுலத்தில் மாற்றங்கள் .

வாங்குகுடம் நிறைபசுக்கள் வள்ளலெனப் பால்சொரியும்
பாங்கொளிரும் சோலைகளில் பன்மலர்கள் தேன்பொழியும்
ஓங்கிவளர் நல்லறமாம் உயர்வாழ்க்கை நெறிவிரியும்
ஈங்கிதுவோ வைகுந்தம் எனவிண்ணோர் மனம்மயங்கும்.

தாய் யசோதையின் தாலாட்டு

( மூன்று அடுக்கி வந்த கலித்தாழிசை)

மின்னே, மணியொளியே, மேவும் இளவளியே,
பொன்னே, புவியின் புகழே, பொலிவான்
புதுநிலவே, தாலேலோ!

கண்ணே, கருமணியே, காரின் முகிழ்மலரே,
விண்ணே, விளங்கும் வெளியே, விரிவான்
வியன்நிலவே, தாலேலோ!

பண்ணே, பழமறையே, பச்சை மரகதமே,
தண்ணார் அமுதே, தரளம் நடுவே
தனிநிலவே, தாலேலோ!

 

கம்சன் பூதனை என்ற அரக்கியை அழைத்துக் குழந்தைகளைக் கொல்லுமாறு ஆணையிடல்

இரக்கமே இலாது கொடுஞ்செயல் புரிவாள்
எயிறுகள் கூரிய அரிவாள்
அரக்கியும் வந்தாள் பூதனை என்பாள்
எவரையும் கொன்றுடல் தின்பாள்
உரக்கவே கம்சன் இளையதாய் முள்ளை
உறுமரம் கொல்வதைப் போல்நீ
இருக்குமச் சிறாரை அழித்திடல் வேண்டும்
இஃதென தாணையாம் என்றான்.

பிறந்த. நாள்கள் பத்தாகும்
பிள்ளை சாவின் வித்தாகும்
பறந்து சென்று சுற்றியுள்ள
பட்டி தொட்டி ஊரெல்லாம்
சிறந்த ஆற்றல் கொண்டவளே
தேடிக் கொல்ல வேண்டுமென
அறம்தான் இல்லான் அவனுரைக்க
ஆணை ஏற்றாள் பூதனையாள்

அரக்கி பூதனையின் அழகிய பெண் வடிவம் எடுத்தல்

சேலோவிழி மானோநடை சீரார்முகில் குழலோ
நூலோவிடை பூவோநகை நோயேசெயும் எழிலோ
பாலோநறும் பாகோமொழி பாங்கேறிய மயிலோ
வேலோங்கிய வேந்தேவலை மீறாதவள் அவளோ

(வேலோங்கிய வேந்து– வேலேந்திய அரசன் கம்சன்)

( தொடரும்)

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

பஞ்ச லட்சண திருமுக விலாசம்

ஜோதிடம் புத்தகம் – Jothidam tamil books list – Page 27

“என்ன தாத்தா இது? சித்த மருந்தா இல்லை ஏதாதவது முகவரியா? புது மொழியாக இருக்கே என்றாள் என் பெயர்த்தி.

“இல்லம்மா! ஒரு அருமையான புத்தகத்தைப் பற்றி பேசப் போறேன்” என்றேன். “ புத்தகத்திற்கு இப்படியெல்லாம் பேர் இருக்குமா” எனக் கேட்டாள் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் அவள். அவளுக்கு ஆச்சரியம்.

ஆம்! எந்த வகை இலக்கணத்தைச்  சாரா விட்டாலும் 19ம் நூற்றாண்டில் ‘விலாசம்’ என நூலுக்கு பெயரிடுவது ஒரு fashion ஆக இருந்தது எனத்தான் கருத வேண்டும். அவ்வகை நூல்கள் ஒரு இலக்கிய எல்லைக்குள் அடங்காது பல விதமான பாடு பொருளை கொண்டதாக அமைந்திருக்கும்.

‘டம்பாசாரி விலாசம்’ ‘மதன சுந்தரப் பிரசாத சந்தான விலாசம்’, ‘சந்திர விலாசம்’ சமுத்திர விலாசம்’ என சொல்லிக் கொண்டே போகலாம்.

பம்மல் சம்பந்த முதலியாரால் அதே காலத்தில் அவர் எழுதிய சுகுணா விலாசம் என்ற நாடகத்தின் பெயரால் தோற்றுவிக்கப் பட்ட’சுகுணா விலாச சபா” இன்றும் சென்னை, அண்ணா சாலையில் புதுப் பொலிவுடன் மக்களை மகிழ்வித்துக் (!)கொண்டுள்ளது.

நான் ‘விலாசம்’ என்ற தலைப்பை விலாசமாக விவாதிக்க வரவில்லை. என்னை எழுதத் தூண்டியது நான் தேடிக் கண்டு பிடித்த பிரமனூர் வில்லியப்ப பிள்ளை இயற்றிய ‘ பஞ்ச லட்சணத்திருமுக விலாசம்’ என்ற புதையலை ஒரு சிலரோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற நல்ல எண்ணம்தான்.

தாது வருஷப் பஞ்சம் – சொல்வனம் | இதழ் 274 |10 ஜூலை 2022தாது வருஷமான 1876 ம் ஆண்டின் பஞ்சத்தின் கொடூரத்தை 60- 70 ஆண்டுகள் கழித்துப் பிறந்த என் போன்றோர் அனுபவிக்காமலேயே பெரியோர்கள் மூலம் அறிந்துள்ளோம். இன்றைய தலைமுறைகூட முகநூல்,Whats up மூலமாக ஓரளவு அறிவர். பல லட்சம் மக்களை பட்டினியால் காவு வாங்கிய பஞ்சம் பல நல்லவைகளையும் செய்துச் சென்றது.

(படம்: சொல்வனம் )

மதுரை, வடக்கு ஆவணி மூல வீதி, அன்று நல்லோர் நடந்து கடந்து செல்ல தயங்கிய வீதி. காரணம் அங்கு பல வீடுகளை வாங்கிக் குவித்து வசித்த குஞ்சரம் என்ற பரத்தை.

அவள் அத்தனை ஆண்டுகள் சம்பாதித்த கெட்ட பெயரை தாது வருஷ பஞ்சம் நீக்கி குஞ்சரம்மாள் என்ற புனிதவதியாக்கியதாம். தான் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும் விற்று இரவும் பகலும் கஞ்சித்தொட்டியில் கஞ்சியை நிரப்பி சாக இருந்த பல உயிர்களை காப்பாற்றினாராம் குஞ்சரம்மாள். பஞ்சம் முடிந்த தருணம் நோயுற்று தன் குடிசையில் உயிர் விட்டாராம். அன்று அவர் மறைவிற்கு கூடிய அது போன்ற கூட்டம் பல ஆண்டுகள் சென்று சித்திரை திருவிழாவிற்குதான் கூடியதாம்.

தனி மனித துதி பாடாத கோபால கிருஷ்ண பாரதியாரையே கஞ்சித் தொட்டியமைத்து பசி தீர்த்த மாயூரம், வேதநாயகம் பிள்ளை புகழ் பாட வைத்தது அப்பஞ்சம்.

பஞ்சம் முடிந்த இருபது ஆண்டுகள் பின் நம் ஆசிரியர் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை பஞ்சத்தை பாடு பொருளாகவும், சிவகங்கை துரைசிங்க ராஜாவை பாட்டுடைத் தலைவராகவும் கொண்டு இனிய நெடுங் கவிதையாக ( Fascinating Poem) பாடப்பட்டதே நம் விலாசம்.

பல லட்சம் உயிர்களை பலி கொண்ட பஞ்சம் பற்றி 4600 அடிகளில் சிறு காப்பியத்தை நமக்கு அங்கதம் ( satire) அல்லது நையாண்டி இலக்கியம் ( Lampoon) என்ற வடிவில் நூல் முழுதும் பஞ்சமின்றி நகைச்சுவையை கொட்டிக் கொடுத்துள்ளார் ஆசிரியர். அவ்வகையில் தமிழில் தோன்றிய முதல் அங்கத நூலை “ இந்த நூலுக்கு இணையான நகைச்சுவை நூல் உலக இலக்கியத்தில் கிடையாது” என்கிறார் கு.அழகிரிசாமி.

கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரோ மிகச்சுருக்கமாக “ விந்தை ‘முக விலாசம்’ உரை வில்லியப்பர்க்கு அடியேன்” என புகழ்ந்து தள்ளுகிறார்.

இதற்கு மேலே நான் என்ன சொல்வதற்குள்ளது. நூலைப் படிக்கத் துவங்கும் முன், கொடுமையான பஞ்சத்தை எப்படி நகைச்சுவையாக பாடமுடியும் என சந்தேகம் எனக்குத் தோன்றியது. நியாயம்தானே!

யோசித்துப்பார்த்தால் முடியுமென்றே தோன்றுகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரால் ஏமாற்றப்பட்டு அனைத்தும் இழந்தேன். வாழ்வே முடிந்ததென நினைத்தேன். இறையருளால் அனைத்து தடைகளையும் உடைத்து வெளிவந்த நான், இன்று அச்சம்பவத்தை ஒரு கதையாக பேசுகிறேன். ஏன்? நான் வெளியிட்ட புத்தகத்தில் என் அந்த அனுபவத்தை நகைஉணர்வோடு எழுதினேன்.

எனவே முடியும்.

“வீட்டினில் தான்யமும் இல்லாமல் ஒன்றை விற்கவும் கையில் இல்லாமல் கடன்
கேட்ட இடத்தில் கிடைக்காமல் சிலர்
கெஞ்சி இறக்கிறார் பாருங்கடி



எறும்பு வலைகளை வெட்டி அதனில்
இருக்கும் தானியம் தான் எடுத்து
முறத்தால் கொழித்துக் குத்திச் சமைத்து
உண்ணுகிறார் சிலர் பாருங்கடி



குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் பணம்
கொண்டு திரிந்தாலும் கிட்டாமல்
இடிக்குப் பயந்த பாம்புகள் போலே ஏங்குகிறார் சிலர் கேளுங்கடி”

என அப்பஞ்சத்தை பாடுகிறது ஒரு கும்மிப் பாட்டு.

கொடுமையான பஞ்சம்தான். ஆசிரியரும் அனுபவித்துள்ளார். 23 ஆண்டுகள் ஓடி விட்டது. நடந்த நிகழ்வுகளை சந்ததிக்கு விட்டுச்செல்ல எண்ணுகிறார். சம கால நினைவுகளை உள் வாங்கி விமர்சிப்பதற்கு அங்கதமே (satire) ஏற்ற இலக்கிய வகையென (Genre) கையில் எடுத்துக் கொண்டார். நகைச்சுவை இல்லாத அங்கதம் வசை மாரியாகி விடும். இலக்கியத் தரமில்லா அங்கதம் கோமாளித்தனமான சிரிப்பாய் தரம் தாழ்ந்து விடும். ஆசிரியர் கத்தி மேல் சுலபமாக நடந்து செல்கிறார்.

நூல் முழுதும் பஞ்சத்தை பின்னணியாகக் கொண்டு ஏழை எளிய மக்கள் பட்ட பாட்டையும், எத்திப் பிழைப்போரின் பித்தலாட்டத்தையும், ஏமாற்றுக் காரர்களின் இழி செயல்களையும், வியாபாரிகள், லேவாதேவிக்காரர்களின் மோசடிகளையும் நையாண்டிச் சுவை சொட்டச் சொட்ட பாடுகிறார் ஆசிரியர். போலி கௌரவம் கேலிக்கிடமானதையும் , அச்சமயம் நாட்டில் நடந்த திருட்டு, புரட்டு அனைத்தையும் சுவையோடு புட்டு புட்டு வைக்கிறார்.

ஆசிரியர் விறலி ஒருத்தியை முன்னிலைப் படுத்தி நூலின் கருத்தை சுருக்கமாக கூறுவதில் துவங்குகிறது கதை. பஞ்சத்தால் நாட்டுமக்கள் அடைந்த துன்பத்தை கூறி, அவர்கள் மதுரை சோமசுந்தரரை சரண் அடைகிறார்கள். சோம சுந்தரரரோ அவர்களுக்கு தன்னால் உடனடியாக உதவ இயலாமைக்கு காரணங்களை அடுக்குகிறார். தன் கஷ்டங்களை கூறுகிறார்.

அடகு வைத்துக் கொள்வீர் என்றால் தன்னுடைய ஆபரணங்களோ பாம்பும் எலும்பும், உடுப்பதோ ஒன்றுக்கும் உதவாத புலித்தோலும், யானைத் தோலும்,இருக்கும் இடங்கூட மாமியார்வீடு, நானே தாய் தந்தையற்ற அனாதை என்கிறார்.
“ தருக்குற்ற சூலமதைத் தந்தால் ஓர் துண்டுக் கருப்பட்டி ஈவான் கடையில்; – இருக்கின்ற வீடோ மயானம் அந்த வெட்கக் கேடு என்ன சொல்வேன்?
ஓடன்றிக் கையினில் வேறுஒன்றுமில்லை; நாடி கனமாய் நினைப்பீர்; என் காரியத்தை நீவிர்; வினைவியுற்றால் வெட்ட வெளியாம்….”

இருப்பினும் தஞ்சம் என்று வந்தவரை வெறும் கையோடு அனுப்ப ஈசனுக்கு மனமில்லை. தவிக்க விடாமல் சிவகங்கை ராஜாவிற்கு ஒரு சிபாரிசுக் கடிதம் (திருமுகம்) கொடுத்தனுப்புகிறார். சிவனின் சிபாரிசுக் கடிதத்தோடு வந்தவர்களை ராஜா அரவணைத்து வாழ்வு கொடுக்கிறார்.

நூலின் சிறப்பை எழுதிக் கொண்டே போகலாம். ஆசிரியரின் எழுத்தை பகிர நினைத்தால் எதை எழுதுவது எதை விடுவது என தெரியவில்லை. சான்றுக்கு ஒன்றேனும் கூறாவிட்டால் எனக்கு தூக்கம் வராது. பல தொழில் புரிவோரின் பித்தலாட்டங்களையும் கூறி வரும் ஆசிரியர், தனது சொத்தை அடமானம் வைத்து கடன் ( பொன்)வாங்க வந்தவரிடம் கடன் கொடுப்பவர் பேசும் உரை: ( அடிகள் பிறழ்ந்து வருகிறது)

…………. -‘பொன் கேட்பாற்கு
எவ்வளவு சொத்திருக்கும் என்பதை ஆராய்ந்து நன்றாய்
ஒவ்வியசொத்து ஆயிரத்துக்கு ஓர்நூறே – வவ்வுதற்குப் போதும் எனக் கொண்டு, உமக்கு இப்போது துகை நல்குதற்கு இங்கு யாதுமில்லை’ ஆகில் இருந்தாலும் – ஓதுமொரு நூற்றுக்குக் குன்றாது நோக்கப்படி கொடுப்பேன்; ஏற்றமில்லை நூற்றுக்கு இரண்டரையாம் (மாதம் இரண்டரை வட்டி) – போற்றும் அதை
ஆறுமாதக் கெடுவில் ஆய்ந்து செலுத்தாது விடில்
ஊறு இல் கடன்பத்திரம் உற்பத்திமுதல் -ஈறுவரை ஐந்து வட்டியாகவும் அவ்வாறு மாத்தைக்கு ஒருக்கால் முந்தை முதலோடு முதலாக்கி, (compound interest) – இந்தவிதமாச் செலுத்த வேண்டும்; ஈதன்றி மறுபேச்சில்லை; என்று ஊர்ச்சிதமாய்ச் சொல்ல, அவன் ஒப்பியே, -வாய்ச்சபடி பத்திரமும் ஈடுகண்டு பாங்காய் ரிஜிஸ்தர் செய்தும் அத்தொகையில் கால் வாசியாம் உசிதம் – பத்திரத்தின் கொள் கிரையம், நெட்டெழுத்துக் கூலி, ரிஜிஸ்தர் செலவோடு எள்ளரிய சேவகர்க்கு இனாம் செலவு – துள்ளுவண்டி வாடகை; மற்றின்ன செலவாம் என்றும் தள்ளிமிச்சம் கூடி, அதைக்கையிற் கொடுத்தபின்னர்…”

என இன்றைய கந்து வட்டி, மீட்டர் வட்டி ஒன்றும் புதிதல்ல என எண்ண வைப்பார் ஆசிரியர்.

பிரமனூர், மதுரை அருகே இராமநாதபுரம் சாலையில் உள்ள ஓர்அழகிய கிராமம். சிவகங்கை ராஜாவிடம் மிராஸு கணக்கராக வேலை பார்த்தவர் நம் வில்லியப்ப பிள்ளை. சிறந்த மருத்துவர், சிறந்த ஜோதிடர் அனைத்துக்கும் மேல் நல்ல அனுபவஸ்தர். தாம் அறிந்த அனைத்தையும் தம் நூலில் அங்கங்கே தெளித்துச் சென்றுள்ளார். மறைந்து நூறு ஆண்டுகள்தான் தாண்டியிருக்கும். நூலின் பதிப்பாசிரியர் தேடிச் சென்ற பொழுது ஆசிரியரைப் பற்றியோ அவர் படைப்புகள் பற்றியோ அவ்வூரில் ஒரு சிறு தகவல் கூட அறிய முடியவில்லை. ஏன்! நெருங்கிய உறவு கூட அவர் எழுதிய இந்நூலை அறிய வில்லை.

ஒரு நூறு ஆண்டிலேயே படைப்பாசிரியரின் கதி இதுவென்றால் சங்க கால இலக்கியங்களையும், அவற்றை படைத்த புலவர்களையும் தேடிக் கொண்டு வந்து நம் முன் நிறுத்திய தமிழ்த் தாத்தா திரு. உ.வே.சா அவர்களுக்கு குமரி முனையில் சிலை வடித்து கும்பிடலாம்.

 

 

“எவ்வளவு குவித்தாலும் மனதிற்குப் போதவில்லை!” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

“எவ்வளவு குவித்தாலும் மனதிற்குப் போதவில்லை!” /

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

குழந்தையை வெளியே கூட்டிச் செல்ல நினைக்கிறீர்களா..? சென்னையில் இந்த  இடங்கள்தான் பெஸ்ட்..! | chennai best fun place for kids – News18 Tamil

பாஸு கொல்கத்தாவிலிருந்து வந்தவன். விற்பனையாளன் வேலை. கணிசமான சம்பளத்துடன் விற்பனைக்கு ஏற்ற கமிஷனும். மிக எளிய வசதி உள்ளவர்களுடன் வாடகைக்கு ஒண்டிக் குடித்தனத்தில் குடியிருந்தான்.

எங்களது பொதுப்பணி நிறுவனத்தின் ஒரு அம்சம், எளியவர்களுக்கு வசிக்கும் இடத்திலேயே அவர்களுடன் ஆலோசித்து உதவும் திட்டங்களைத் தீட்டுவது. அப்படியே அங்குச் செய்து வந்தோம். படிப்பைப் பலர் நிறுத்தி விட்டிருந்ததால் வகுப்பு பரீட்சையை ஓபன் ஸ்கூல் (Open School) வழியே எழுதுவதற்குத் தயார் செய்வது, கைத்தொழில், சுயதொழில் வகைகளுக்கான பயிற்சி அளித்து வந்தோம். மனம் விட்டுப் பகிர்வதற்கும் ஒரு அறையை அமைத்திருந்தோம்.

வாரத்திற்கு இருமுறை வருவோம். என்னைப் போல் இன்னொருவரும் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர். மற்ற ஏழு பேரும் ஸோஷியல் வர்க்கில் முதுகலை பட்டதாரி.

எல்லாம் இலவசம் தான். அதனாலேயே பாஸு எங்களை அணுகினான் என்றதை ஒப்புக்கொண்டான். அன்றைய தினம் நான் இருந்ததால் என்னிடம் சங்கடத்தைப் பகிர நேர்ந்தது.

பாஸு புத்தகங்களைக் குவிப்பதைப் பெருமையாகக் கூறினான். தெரிந்தவர்களை, புது நட்புகளை அவர்கள் செலவில் வாங்கித் தரச் சாடையாகச் சொல்வானாம். புத்தகங்களைத்  திரட்டுவதே குறிக்கோள் அவர்களுக்குச்

செலவு செய்யப் பணம் இருக்கிறதா, இன்னல் படுகிறார்களா என்றெல்லாம் நினைத்ததோ, பொருட்படுத்தினதோ இல்லையாம்.

இங்கு வந்ததிலிருந்து அக்கம் பக்கத்தில் வசிக்கும் பிள்ளைகள் புத்தகங்களைக் கையாளுவது, எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்பதிலிருந்து, அவை களவு போய்விடுமோ என்ற கவலை ஆரம்பித்ததை உணர்ந்தானாம். மனதைச் சமாதானப் படுத்திக் கொள்ள வேலைக்கு இடையூறாக இருப்பினும் வீட்டிற்கு வந்து புத்தகங்கள் இருக்கிறதா எனப் பார்த்து விட்டுப் போவானாம்.

வாங்கி வைத்திருந்த புத்தகங்கள் தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற பயம். திரும்பவும் சிறுவயதில் ஏங்கிய நிலை நேரிடுமோ எனக் கூறினான். அந்த சூழலைப் புரிந்து கொள்ள, மேலும் தகவல்களைத் தரப் பரிந்துரைத்தேன்.

முப்பது வயதுள்ள பாஸு, தன் பெற்றோருக்கு மூன்றாவது மகன். இரண்டு அக்கா. ஒரு அக்காவுக்குக் கல்யாணம் ஆகி ஆறு வருடம் ஆயிருந்தது. சின்ன அக்காவின் நிறத்தினால் திருமணம் தள்ளிப் போனது. தாய் தந்தை இருவரும் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தார்கள். இவர்களுடன் தந்தையின் பெற்றோரும், தாயின் தந்தையும் இருந்தார்கள். அப்பாவின் அப்பா (தாத்தா) வேலை எதுவும் செய்து பார்த்ததில்லை. பாட்டி, தையல் வேலை, அப்பளம் இட்டு பக்கத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்து, வீட்டுச் செலவுக்குத் தந்து வந்தாள். அம்மாவின் அப்பா அரசாங்க பணியில் உயர் அதிகாரியாக இருந்ததால் நல்ல சம்பளம். அந்த காலத்தில் மாதாமாதம் ஆயிரத்து ஐந்நூறு  ரூபாய் இவர்களுக்குக் கொடுத்தார்.

தாத்தாவுக்கு மாத்திரை மருந்து, பிள்ளைகள் படிப்பு செலவு, அக்காக்கள் திருமணம், என பல்வேறு தேவையைப் பூர்த்தி செய்ய, பணத்தை கச்சிதமாகச் செலவு செய்வது வீட்டின் மௌன கட்டளை. இந்தத் தாக்கம் பாஸுவின் இயல்பானது.

பொருளாதார நெருக்கடியினால் வீட்டில் ஒரு புத்தகத்தைக் கூட வாங்கியதில்லை என்றான். தன் ஆழ் மனதில், “என்றைக்காவது வாங்குவேன்” எனப் புதைத்து வைத்திருந்தான்.

பட்டதாரியாகி வேலையில் சேர்ந்த பின்பே, கிடைத்த சம்பளத்தில் புத்தகங்களை வாங்கியதாக பாஸு கூறினான். புத்தகத்தைப் பற்றிக் கேள்விப் பட்டாலோ, படித்தாலோ அதை வாங்கி விடவேண்டும். கண்ணில் படும்போது வாங்கிடுவானாம், கடையோ, நடைபாதையோ. வாங்குவதில் குறியாக இருந்தானே தவிரப் படிப்பதில் அல்ல. தன்னிடம் புத்தகங்கள் குவிந்து கிடக்க வேண்டும். யாரையும் இதன் பக்கத்தில் நெருங்க விடமாட்டானாம். “இங்கு வந்ததும் பிள்ளைகள்…” என இழுத்தான்.

எங்களது நிறுவனத்தின் பல விதமான ப்ராஜெக்ட் பல வருடங்களாக நடப்பதால் குறிப்பாக இங்குள்ள பெண்கள், பிள்ளைகள் பற்றி நல்ல பரிச்சயம் இருந்தது. பாஸுவின் ஆதங்கம் புரிந்தது. பிள்ளைகளிடம் எந்த உள்நோக்கமும் இல்லை என்றதும் நிதர்சனம். பிள்ளைகளுக்கும் பாஸுவுக்கும் பாலம் கட்ட யோசித்தேன்.

பாஸுவுடன் ஸெஷன்கள் ஆரம்பமானது. சேகரிப்பதை வாங்கி வைக்கும் போது உணருவதைப் பற்றி விவரமாக உரையாடச் செய்தேன். ஏன் எதற்கு எப்போது என்றதை வெளிப்படையாகக் கேட்காமல், தன் செயலைத் தானாகக் கூறி மனதைத் திறக்க வழி அமைத்தேன். பல விவரங்களைப் பகிர்ந்தான்.

தன்னுடைய எதிர்மறை உணர்ச்சிகளைப் பார்த்து, குறித்து வர பரிந்துரைத்தேன். பாஸு கண்டது, யாரேனும் தன் உடமைகள் பக்கத்தில் வந்தாலே மனதில் ஒரு படபடப்பு ஏற்படுவதை உணர்ந்தான். அவனைக் கிண்டல் செய்யும் வகையில் அவற்றை தொட்டோ எடுத்தாலோ கோபம் பொங்கியது என்றதை கவனித்தான். பாஸு தான் பகிர்ந்து கொள்ளும் சுபாவத்தை இழந்ததையும் கவனித்தான்.

இந்தத் தருணத்தில் பாஸுவிடம் நான் தொடங்க இருந்த ஒரு கூட்டமைப்பைப் பற்றி விவரித்து பார்வையாளராக வரப் பரிந்துரைத்தேன். அந்தக் குழுவில் ஒவ்வொருவரும் மற்றவரின் நிலையை, சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் துவக்கியிருந்தேன். இதை நடைமுறைப்படுத்த அன்று வரும் பிள்ளைகளில் ஒருவரின் வீட்டில் சந்தித்து அங்குள்ள புத்தகங்கள் எவை எனப் பார்த்து, அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து சில பக்கங்களைப் படித்த பிறகு அதைப் பற்றி கருத்துகளைப் பகிர்வதாக அமைத்திருந்தேன். மேலும் படிக்க விரும்புவோர் புத்தகங்களை அடுத்த சந்திப்புக்குள் படிக்கலாம்.

இதன் விளைவு, பல தரப்பில் தென்பட்டது. பிள்ளைகளின் சண்டைச் சச்சரவு குறைந்தது, உதவும் மனம் அதிகரித்ததால் மகிழ்ந்தனர் பெற்றோர். ஒருவருக்கு ஒருவர் உதவியால் படிப்பில் கவனம் அதிகரித்தது மதிப்பெண்களில் காட்டியது.

புத்தகப் பகிர்தல், படித்ததை உரையாடுவது  வரவேற்பு பெற, சூடு பிடித்துச் சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொரு கூட்டத்துக்கும் பாஸு வந்தான், நடப்பதைப் பார்ப்பான். இந்த நேர்காணலை பாஸு அனுபவிக்க அனுபவிக்க மனத்தைச் சிந்திக்கத் தூண்டியது! பிள்ளைகள் படித்துப் பகிரும் குழுவை பாஸு வாராவாரம் பார்வையிட்டான். பங்கு கொள்ளவில்லை. பிள்ளைகளின் இந்த குழுவால் உருவான நட்பு வட்டத்தைக் கவனித்து மேலும் இளைஞர்கள் பலர் சேர்ந்தார்கள். பங்களிப்பு, பகிருவதில் உருவான பந்தத்தைப் பார்த்து பாஸு வியந்தான்.

விளைவாக பாஸுவின் உள்மனத்தைத் துளைத்துக் கொண்டிருந்தது தலையைத் தூக்கிக் காட்டியது. இளம் வயதில் ஆசிரியர் ஒருவர் அவன் பொருளாதார நிலையைப் பார்த்து, எங்கே அந்த ஒளவையார் சொன்ன “கொடியது இளமையில் வறுமை” நேரிடுமோ என்றாராம். அப்போதிலிருந்து பயம் கவ்வியது. அப்படி நடந்து விடக்கூடாது என முடிவு செய்து விட்டான். யாருக்கும் எதையும் பகிர விருப்பப்படவில்லை.

ஆகப் புத்தகங்களை யாருக்கும் தர மறுத்தான். புத்தகங்களைக் குவித்து வந்தான். இருப்பிடத்தை ஆக்கிரமித்திருந்தது. இருப்பிடம் சுருங்கியது. பொருட்படுத்தவில்லை.

இங்குப் பிள்ளைகள் வறுமையின் பல இன்னல்களைத் தாண்டியும் வாழ்வதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான். வாராவாரம் உருவாகியுள்ள கம்யுனிட்டீ ஆஃப் லர்னர்ஸ் (Community of Learners) பகிருதல், பரிமாறுதல், அன்பையும் தான்! ஸெஷனில் இந்த நேர்காணல் பல்வேறு சிந்தனைகள் எழுப்புவதாக விவரித்தான்.

தன்னைக் கூர்ந்து பார்க்க ஆரம்பித்தான். சுற்றி உள்ளவரின் வறுமை,‌ இளமை நிலைமையும்.

இதையே மையமாக வைத்து ஸெஷனில் உரையாட, தன்னைத் துளைத்திருந்த “கொடியது இளமையில் வறுமை” பற்றி அஞ்சுவதை இளைஞர்கள் குழுவில் பகிர்ந்து கொள்ளப் போவதாகக் கூறினான். முன்னேற்றத்திற்கான அடிக்கல் என எடுத்துக் கொண்டேன்.

தயக்கம் ததும்ப இதைப் பகிர்ந்து கொண்டான். பல மணித்துளிகளுக்கு யாரும் எதையும் சொல்லவில்லை. பூமியைப் பார்த்திருந்தாலும் உடல்மொழி தகவல்களைத் தெரிவித்தது. மெதுவாக இழைச் சிரிப்பு விரிந்தது. “அப்போது நீ எங்களை அறிவாய்” என்ற வாக்கியத்தைச் சொல்லிக் கொண்டு பக்கத்தில் உள்ளவரின் கைகளைப் பற்றிக் கொண்டார்கள்.

ஒன்றிணைந்த மனதாக இருப்பது தென்பட்டது. “பாஸு, ஒவ்வொரு வாரமும், இங்கே நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறோம்.” பாஸு வியந்து பார்த்தவுடன் இன்னொருவன் தொடர்ந்து பேசினாள், “இதை நாங்கள் படித்து, கேட்டும் இருக்கிறோம். நொறுங்கிப் போய் விடும் இந்த நிலையை மாற்றி அமைக்க வழியை உருவாக்க நினைத்தே மாலதி மேடத்திடம் பேசத் துவங்கினோம். அதிலிருந்து உதயமானது இந்தக் குழு அமைப்பு, வாராவாரம் கூட்டம். என்ன நான் சொல்வது?” என்றதும் மற்றவர் பாதங்களைப் பூமியின் மீது ஒன்றாகத் தட்டி ஒப்புக்கொள்வதைத் தெரிவித்தார்கள்.

அமைதியான பின்னர் சில வினாடிகள் ஓடின.‌ மேலும் பாஸுவைப் பகிரத் தூண்டினார்கள். தன் சங்கடங்களை வெளிப்படையாகக் கூறினான்.

குழுவினரும் இந்தச் சட்டை மற்றவனுடையது, காலணி அவன் தந்தது எனப் பகிரங்கமாகச் சொன்னது உருவான பந்தத்தைக் காட்டியது. பதினாறு வயதான குமார் கூறினான், “ஆசிரியர் சொன்னது போல வறுமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாய்”. தீர்க்கமான குரலில் ஒருத்தி விளக்கினாள், “இங்கு நாங்க எல்லாரும் இல்லாதவர்கள். உன்னிடம் இருப்பதைப் பகிர மனம் வரவில்லை. அதுதான் வறுமை. குற்ற உணர்வினால் மனம் குறுகுறுக்கின்றது”.

இந்த கம்யுனிட்டீ ஆஃப் லர்னர்ஸ் செய்வதின் சாயல் ஆப்ரிக்காவின் “உபன்ட்டு, “நான் இருப்பது நம்மால்” (Ubuntu, “I am because we are” ) அம்சங்களைக் கொண்டது என்று அடையாளம் காட்டியிருந்தேன். இதையே நினைவுக்கூறி பாஸுவுக்கு இதை மையமாக வைத்து அவன் பங்களிப்பு இதனுடன் சேரும் என்றார்கள்.

பாஸு புகழாரம் சூட்டக் கிளம்பியதும், அதை நிறுத்தி இதன் வடிவமே “பெரியோர் எல்லாம் பெரியவர்கள் அல்ல” எனச் சொல்லியதும் பாஸு சுதாரித்துக் கொண்டான். பகிரவில்லை ஆமோதித்து.‌ பாஸு மனதைத் திறந்து பேசியதை வரவேற்றார்கள்.

பகிர்ந்து கொள்ள தன் அச்சத்தின் ஒரு வடிவமே சுயநலம் என்றதை உணர்ந்தான். தன்னலத்தால் கஷ்டமோ நஷ்டமோ புத்தகங்களை வாங்க வைத்ததும், யாரையும் இவற்றின் அருகே வரவிடாமல் செய்ததின் விளைவையும் உணர ஆரம்பித்தான். பல ஸெஷனில் இதைப் பற்றி ஆராய்ந்தோம்.

முழு மனதுடன் பகிர்வதால் பல நன்மைகள் உருவாகியது. அவனும் வாராவாரம் சந்திக்கும் குழுவில் பங்களிப்பு, சிறுதுளி உதவுவது எனத் தீர்மானித்தான்.

முதல் கட்டமாக, பிள்ளைகளை தன் அறையின் அருகில் வரவழைத்தான். பிள்ளைகளுக்குக் குதூகலம். “பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்” என்ற குறள் பாஸுவின் குவிக்கும் பழக்கத்திற்குப் பொருந்தியது.

 

நோ ப்ராக்ஸி ப்ளீஸ்..! — நித்யா சங்கர்

 

சாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?

 

அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். கூட்டம் அதிகமில்லை.

‘அம்மா தேவி அகிலாண்டேஸ்வரி.. போதும் அம்மா நீ செய்யும் சோதனை.. போதும் அம்மா நான் படும் வேதனை… தாங்க முடியலே.. நான் முன்னாலே இருந்த மாதிரி நாத்திகனாகவே மாறிவிட அனுமதி கொடு தாயே..’ என்று சற்று இரைந்தே வேண்டிக் கொண்டான் சிவகுரு.

கர்ப்பக் கிரகத்திற்குள், அம்பாளுக்கு கற்பூர தீபம் காட்ட கற்பூரத்தை எடுத்த அர்ச்சகர் இந்த விநோதமான வேண்டுதலைக் கேட்டு, அப்படியே வெலவெலத்துப் போய், குழப்பத்தோடு அந்தக் கற்பூரத்தை தட்டில் வைத்து விட்டு, வெளியே வந்து ஸந்நிதானத்திற்கு முன்னால் நின்றிருந்த சிவகுருவை நோக்கி வந்தார்.

‘என்ன ஸார்.. நான் என்னுடைய ஸர்வீஸிலே பக்தர்கள் பலர் பல வகையான வேண்டுதல்களை அம்மனின் காலடியில் வைக்கக் கேட்டிருக்கேன். ஆனா.. உங்க வேண்டுதல் ரொம்ப விநோதமா இருக்கே..’ என்றார் சிரமப்பட்டு வலிய வரவழைத்துக் கொண்ட ஒரு புன்னகையோடு.

‘அதையேன் கேட்கறீங்க.. ஸ்வாமி.. அடிப்படையிலே நான் ஆத்திகனல்ல.. நாத்திகனாகத்தான் இருந்தேன். ஆனா, இந்த ஆத்திகத்துலே அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்கற ஆசையிலே எல்லா ஆன்மீக சொற்பொழிவுகளுக்கும் போவேன்.. அவர்கள் சொன்ன கடவுள்களின் வர்ணனைகள், லீலைகளையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கு ஆன்மீகத்தில் ஒரு ஈடுபாடு வந்தது. அந்த ஈடுபாட்டை அதிகரிக்கும் விதமாக, நம்மிடையே இப்பொழுது இருக்கும் பக்தர்கள் பலபேர், அவர்கள் கடவுள் மேல வைத்திருக்கும் மட்டற்ற பக்தியினால், அவர்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்கள், அனுபவங்களைச் சொன்னது அமஞ்சது…

‘எல்லாம் நல்ல படியாகத்தான் போயிட்டிருந்தது. நானும் எல்லாக் கோவில்களுக்கும் சென்று வழிபட ஆரம்பித்தேன்.

‘யார் கண் பட்டதோ.. தெரியலே.. திடீர்னு நான் பண்ணிட்டிருந்த வியாபாரத்துலே சுணக்கம் ஏற்பட்டது.. எனக்கும் என் மனைவி, குழந்தைகளுக்கும் வியாதிகள் பல வந்து வாட்ட ஆரம்பித்தது. பெரும் அவதிப்பட்டேன். தேவி.. நான் என்ன செய்யட்டும்..’ என்று அம்பாளின் காலில் விழுந்து மன்றாடினேன்.

‘அப்போதுதான் ஒரு குருஜியை சந்திக்க நேர்ந்தது.
‘அவரிடம் என்னுடைய நிலமையை விரிவாகச் சொன்னேன். குருஜி ஐந்து அம்பாள் கோவில்களிலும், திருச்செந்தூர் முருகனுக்கும், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தீஸ்வரனுக்கும், சென்னை மருத்தீஸ்வரன் கோவில் ஈஸ்வரனுக்கும் அபிஷேகம் பண்ணச் சொன்னார்.
‘அந்த நேரத்துலே என்னுடைய நண்பர் ஒருவர் குடும்பத்தோடு சக்தி ஸ்தலங்களுக்கும், திருச்செந்தூருக்கும், நவக்கிரகக் கோவில்களுக்கும் போகப் ப்ளான் பண்ணிட்டிருந்தார். அவரிடம் பணம் கொடுத்து, திருச்செந்தூர் முருகனுக்கும், வைத்தீஸ்வரனுக்கும், ஐந்து அம்மன் கோவில்களிலும், மருத்தீஸ்வரர் கோவிலிலும் அபிஷேகம் பண்ணச் சொன்னேன்.. அவர் அதுபடியே பண்ணி திரும்பி வந்த பிறகு, பிரசாதத்தைக் கொண்டு கொடுத்தார். ஒரு மாசமாச்சு… ரெண்டு மாசமாச்சு.. இதோ ஆறு மாசம் முடியப் போகுது… என் வாழ்க்கையிலே ஒரு முன்னேற்றமும் இல்லே… கஷ்டங்கள்தான் ஜாஸ்தியாய்ட்டு இருக்கு. நான் நாத்திகனாக இருந்தபோது கடவுளைத் திட்டினதை விட இப்போ இந்த ஆறு மாசத்திலே திட்டித் தீர்த்து விட்டேன்.. ஆனா அப்படி திட்டறது என் மனசுக்கு ஒப்பலே.. அதனாலதான் நாத்திகனாகவே மாறிவிட தேவி கிட்டே அனுமதி கேட்டு நிற்கறேன்..’ என்றான் சிவகுரு மூச்சு விடக் கூட இடைவெளி கொடுக்காமல்.

அவன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அர்ச்சகர் மெதுவாகச் சிரித்தார்.

‘என்ன ஸ்வாமி..என் நெலமையைப் பார்த்தா சிரிப்பு வரதா..?என்றான் சிவகுரு..

‘இல்லே ஸார்.. கஷ்டமா இருக்கு… இப்போ உங்களுக்கு உடம்பு சரியில்லேன்னா, டாக்டர் கிட்டே போவீங்க.. அப்புறம் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவீங்க.. உங்களுக்கு உடம்பு குணமாயிடும். ஆனா, அந்த மாத்திரைகளை பக்கத்தில் இருக்கும் உங்க நண்பருக்குக் கொடுத்து அவர் அதைச் சாப்பிட்டா உங்க வியாதி குணமாகுமா..? சரியாகாது இல்லையா… ? உங்க வியாதி குணமாக மருந்து வாங்கி நீங்கதான் சாப்பிடணும்.. அது மாதிரி, நீங்க இந்தக் கோவில்களுக்கெல்லாம் போய், அபிஷேக ஆராதனைகளை தரிசித்து மனதார வேண்டிட்டிருந்தீங்கன்னா நல்ல பலன் கிடைச்சிருக்கும். அம்பாள் கிட்டே ப்ராக்ஸி பிஸினஸ் சரிவராது..’
‘அதெப்படி ஸ்வாமி.. நான்தானே பைசா கொடுத்து அனுப்பினேன். அபிஷேகம் பண்ணச் சொன்னேன்.. அந்த பலன் எனக்குக் கிடைக்க வேண்டாமா..?’

‘பைசா கொடுத்து அனுப்பியது என்னவோ நீங்கதான்.. ஆனால் பக்தியோடு கடவுளிடம் வேண்டிக் கொண்டது உங்க நண்பராச்சே..’

‘அப்படிப் பார்த்தீங்கன்னா.. இப்போ நான் அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணச் சொன்னேன்.. அர்ச்சனை நீங்கதானே பண்ணினீங்க.. அப்போ எனக்கு பலன் கிடைக்காதா..?’

‘அதுக்குத்தான் நாங்க ஸங்கல்பம்னு ஒண்ணு பண்ணறோம்.. அர்ச்சனை பண்ண ஆரம்பிக்கும் முன்னாலே உங்க பெயர், நட்சத்திரம், கோத்திரம் எல்லாம் கேட்கறோம்.. அதையெல்லாம் சொல்லி, இன்னார் இன்னார்க்காக அர்ச்சனை பண்ணறேன் என்று சொல்லி அர்ச்சனை பண்ணுவோம். அதனாலே நீங்களே அர்ச்சனை பண்ணற பலன் உங்களுக்குக் கிடைக்கும். உங்க வேண்டுதல்கள் என்னவோ அதைச் சொன்னீங்கன்னா அதையும் சேர்த்துக்குவோம். இல்லேன்னா நாங்க அர்ச்சனை செய்யறபோது நீங்களே கடவுளிடம் டைரக்டா வேண்டுதல்களை ப்ரார்த்தனை மூலமா சொல்லலாம். அதாவது ஒரு வேலைக்கு நீங்க அப்ளிகேஷன் கொடுக்கற மாதிரி..

‘இப்போ நீங்க சொன்னதை வெச்சுப் பார்த்தா, உங்க அப்ளிகேஷனே அம்பாளுக்கு இன்னும் போகலே.. அந்த அப்ளிகேஷன் அவளை அடைந்தாத் தானே அதைப் பார்த்து உங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவாள்..

‘ இது எப்படீன்னா, அப்ளிகேஷன் போடாமலே, அந்தக் கம்பனி எனக்கு வேலை கொடுக்கலேன்னு சொல்ற மாதிரி இருக்கு.. நடந்ததெல்லாம் அப்படியே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாய் இருக்கட்டும். நீங்க் அந்த குருஜி சொன்ன மாதிரி அந்தக் கோவில்களுக்கெல்லாம் சென்று அபிஷேகம் செய்து அந்த தெய்வங்களை மனமுருக வேண்டிக்குங்க.. உங்களுக்கு தெய்வ கடாட்சம் கிட்டும்’ என்றார் அர்ச்சகர்.

நாத்திகனாக மாறும் எண்ணத்தைக் கைவிட்டு, ஒரு சிறு நம்பிக்கையோடு கோவிலிலிருந்து வெளியே வந்தான் சிவகுரு.

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:

‘ஆமா.. அவருடைய நண்பர் நல்லதுதானே செய்தார்.. ‘கடவுளே ரிஸல்ட் நல்லபடியா பாஸிடிவா வரணும்’னு தானே வேண்டிக்கிட்டார். பின்னே ஏன் அவர் நண்பரை இப்படித் திட்டறார்..’

‘அட நீ வேற.. அவங்க எதிர்பார்த்திட்டிருக்கிற ரிஸல்ட்..கோவிட் டெஸ்ட் ரிஸல்ட்.. அது பாஸிடிவா வரணும்னு அந்த நண்பர் சொன்னா இவருக்கு கோபம் வராதா…?’

‘ !?!?

— சிவமால்

————————————————————————————

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

Free download Download Awesome Backgrounds 28 Troy Quality HD Wallpapers [1280x1024] for your Desktop, Mobile & Tablet | Explore 40+ Troy Background |

 

முதல் காண்டம் – அக்கிலிஸின் கோபம்

டிராய் தேசத்தின் மன்னன் பிரியம். அவன் மகன் பாரிஸ் கிரேக்க நாட்டு மன்னன் மெலிசியஸின் மனைவியும் உலகப் பேரழகியுமான ஹெலனைக் கடத்திக் கொண்டு வர, துவங்கியது கிரேக்க நாட்டுக்கும் டிராய் நாட்டுக்கும் இடையே மாபெரும் யுத்தம்.

மெலிசியஸின் சகோதரன் அகமெம்னன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்களில் கிரேக்கப்படை புறப்பட்டது. கிரேக்கப்படைக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல டிராய் நாட்டுப் படை. டிராய் நாட்டின் முக்கிய நகரமான இலியம் கோட்டையைக் கிரேக்கப் படை முற்றுகை இட்டது. பத்து ஆண்டுகளாக இரு பெரும் நாடுகளுக்கிடையே யுத்தம் தொடர்ந்து நடை பெற்றது.

அது மட்டுமல்ல. கடவுளர்களும் இந்த யுத்தத்தில் பங்கேற்றனர். சிலர் கிரேக்கர் பக்கம். சிலர் டிராய் பக்கம். அதனால் போரின் தன்மை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.

கிரேக்கப் படையில் மாபெரும் வீரன் அக்கிலிஸ். இலியட் கதையின் நாயகன்.

அவனது வீரத்தையும் பராக்கிரமத்தையும் பார்த்து கிரேக்க மன்னன் மெலிசியஸ் மட்டுமல்ல, டிராய் நாட்டுப் போருக்கு கிரேக்க சேனாதிபதியாக விளங்கும் அகமென்னனும் பொறாமையில் துடித்தான்.

இனி ஹோமரின் அடிச்சுவட்டில் நம் பாணியில் கதைக்குள் செல்வோம்….

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கிரேக்க மாவீரன் அக்கிலிஸ் கோபாவேசத்துடன் தனது கப்பலின் மேல் தளத்திலிருந்து கடலில் குதித்தான். கரைய நோக்கி நீந்தத் தொடங்கினான். அலைப் பிரவாகம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அலைகளால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் மூச்சிலிருந்து வெப்பக் காற்று பாம்பின் மூச்சு போல வந்து கொண்டிருந்தது. அலைகள் குளிர்ந்த தண்ணீரை அவன் மீது மிகுந்த வேகத்துடன் வாரி இறைத்த போதிலும் அதனால் அவனைக் குளிர வைக்க முடியவில்லை. கரைக்கு அருகில் உள்ள பெரிய பாறையில் அமர்ந்தான். அலைநீர் பாறையை மூழ்கடிப்பதும் பின்னர் வடிவதுமாக இருந்தது. அலைநீரை லட்சியம் செய்யாமல் அமர்ந்திருந்தான். அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்திருக்கும் நேரம் அது.

கிரேக்கர்கள் நடத்தும் இந்தப் போருக்கு அவர்களுக்கு உதவுவதற்காக வந்ததை எண்ணி மிகவும் வேதனைப் பட்டான்.

” தீட்டீஸ் தேவதையின் திருமகன் நான். வீரத்தில் என்னை மிஞ்சக் கூடியவன் எவனும் இந்த மண்ணுலகில் பிறக்கவில்லை. அப்படியிருக்க ஏன் இவர்களுக்கு உதவும்படி அதீனி தேவதை எனக்கு ஆணையிட்டாள்? அதுவும் இந்த அகமெம்னன் சேனாதிபதியாக இருக்கும் படையில் அவனுக்குக் கீழே பணிபுரிவதைவிடக் கேவலம் ஒன்றுமில்லை.

குறுக்குத் தந்திரத்தில் தலைவன் ஆனவன் அகமெம்னன். என்னுடைய வாளுக்கு முன்னால் அவனால் சிறிது நேரம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது. பத்து ஆண்டுகளாக இந்த டிராஜன் முற்றுகையை நடத்திக் கொண்டிருக்கிறான். இலியம் கோட்டையை மோதி உடைத்து உள்ளே சென்று வீரத்துடன் போரிட உத்தரவு தராத இவனெல்லாம் ஒரு தலைவனா? கோட்டைக்கு வெளியே இருக்கின்ற சிறு நகர்களை ஆக்கிரமித்து கொள்ளையடித்து சுகபோகமாக இருக்கும் இவர்களால் எப்படி டிராய் நகரைக் கைப்பற்றி பாரிசிடமிருந்து ஹெலனை மீட்க முடியும்? அதுவும் டிராய் நகரத்தின் மூர்க்க இளவரசன் கோர அரக்கன் ஹெக்டரை இவர்களால் வெல்ல முடியுமா? “

அப்படி எண்ணும்போது அவனுக்கே சிரிப்பு வந்தது. அதற்காகத்தானே இவர்கள் என்னைக் கூட்டி வந்திருக்கிறார்கள். கடவுளர் சொன்னால்தான் கட்டுப்படுவேன் என்று தெரிந்து அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி என்னை இவர்களுடன் சேரும்படி செய்துவிட்டார்கள். நான் மறுக்க முடியாத கடவுளிடம் இருந்த வந்த கட்டளை இது.

இன்னும் கொஞ்ச நேரம் இதே கோபாவேசத்துடன் இருந்திருந்தான் என்றால் அந்தக் கடலின் அலையெல்லாம் வற்றிப்போய் புகை மண்டலமாகியிருக்கும். அப்போது இரு தளிர்க்கரங்கள் அவனுக்குத் தெரியாமல் பாறையின் பக்கவாட்டில் வந்து அவன் உடலை இழுத்துத் தன்னுடன் அணைத்துக் கொண்டன. கண்களைத் திறக்காமலேயே அவள் யார் என்பதை நன்கு உணர்ந்தான் அக்கிலியஸ். அவளது குளிர் மேனி தந்த சுகம் அவனது வெப்ப உள்ளத்துக்கு இதமாக இருந்தது. ஒரு கையால் அவனது இடையைப் பற்றி அணைத்த அந்தப் பேரழகி மறு கையால் அவனது தலையைக் கோதி அவனுக்கு ஆறுதல் தர முயன்றாள். எவ்வளவு நேரம் அந்த நெருக்கம் நீடித்தது என்று அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை. ஆனால் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குவது போல அவனது கோபமும் அவள் அருகாமையில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதைப் போலத் தோன்றியது.

அவள் பிரிஸிஸ். அந்தப் பிராந்தியத்தில் அழகும் அறிவும் நிரம்பிய இளவரசி. அவள் நாட்டுடன் கிரேக்கப் படை போரிட்டபோது அவளுடைய நாடு வீழ்ந்தது. அதில் அடிமையாக இழுத்துவரப்பட்ட இளவரசி அவள். தலைவர் அகிலியஸுக்குத் தகுதியான அடிமை என்று அவளை அவனிடம் கொடுத்தார்கள். தனக்கு அடிமையாக வந்த இளவரசியைக் கண்ட அக்கிலிஸ் அவளுடைய அழகுக்கு அடிமையானான். தனக்குப் போரில் கிடைத்த மாபெரும் பரிசு பிரிஸிஸ் என்று எண்ணினான்.

“என் கோபத்தைக் குறைத்த உன்னை எப்படிப் பாராட்டினாலும் தகும் பிரிஸிஸ்” என்று கூறினான் அக்கிலிஸ்.

” வீரர்களின் கோபத்தைக் குறைப்பது தவறு. அது அவர்களைக் கோழைகளாக்கிவிடும். அவர்கள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கவேண்டும். நான் குறைத்தது உங்கள் கோபத்தை அல்ல , ஆத்திரத்தை”

” உண்மை பிரிஸிஸ். ஆத்திரம் எந்த வீரனையும் அழித்துவிடும். என் கோபம் ஆத்திரம் எல்லாம் அந்த அகமெம்னன் மீதுதான். அவன் கப்பலில் இன்று ஒரு முக்கியமான மந்திராலோசனை நடக்க இருக்கிறது. நான் போகாமலிருக்க முடியாது. ஆனால் நான் போனால் என் கையால் அந்தத் திமிர் பிடித்த அகமெம்னனைக் கொன்றாலும் கொன்றுவிடுவேன். அதன்பின் கடவுளர் கோபத்துக்கு நான் ஆளாக நேரிடும். அதுதான் என் கோபத்தை ஆத்திரமாக மாற்றியிருக்கிறது. “

“மாவீரரே! இன்றைய மந்திராலோசனை என்னுடன் பிடிபட்ட அர்ச்சகர் கிரைசிஸின் மகள் கிரீஸஸ் பற்றியதுதானே! எனக்கு வீர புருஷர் நீங்கள் கிடைத்தீர்கள்! அதை என் பாக்கியமாக ஏற்றுக் கொண்டேன். ஆனால் அவளையோ அகெம்னனக்கு அடிமையாக அனுப்பினார்கள். அவள் துடிதுடித்துப் போனாள். அவள் என் நெருங்கிய சினேகிதி. அவளை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொண்டேன். நீங்கள் அகெம்னனக்கு அறிவுரை கூறினீர்கள். அவன் கேட்க மறுத்துவிட்டான். பின்னர் உங்கள் உதவியால் அப்பல்லோ தேவனின் அர்ச்சகரான அவளது தந்தைக்குத் தகவல் அனுப்பி மீட்புத் தொகையுடன் வரச் சொன்னோம்.

அவரும் அப்பல்லோ அளித்த நம்பிக்கையில் பெரும் பொருளைக் கொண்டுவந்து அகெம்னனிடம் கொடுக்க வந்தார். ஆனால் அகெம்னன் அவரது மீட்புத் தொகையைப் பிடுங்கிக்கொண்டு ‘ உன் மகள் ஆயுள் முழுவதும் என் அடிமையாகவே இருந்து உயிரை விடுவாள்’ என்று அவரை விரட்டிவிட்டான்.

அவரும் அப்பல்லோவிடம் ‘ உன் பக்தனுக்கே இப்படி அநீதி நடக்க விடலாமா’ என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டதும் அப்பல்லோ கோபமுற்று கிரேக்கப் படை மீது கொள்ளை நோயை ஏவிக் கடந்த பத்து நாட்களாக உங்கள் படைகளை அழித்துக் கொண்டிருக்கிறார்.

இனி இந்த நோயால் படை வீரர்கள் அழிந்தால் டிராய் நாட்டுடன் போரிட வீரர்களே இல்லாமல் போய் விடுவர் என்பதை அறிந்த அகெம்னன் இப்போது மந்திராலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு நீங்கள் போவதா வேண்டாமா என்பதுதானே உங்கள் பிரச்சினை.?”

” அழகாகச் சொன்னாய் பிரிஸிஸ்! இன்று நான் போனால் ஒன்று என்னால் அவன் அழிவான். அல்லது அவனால் எனக்கு மாபெரும் தீங்கு வரும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. “

” நீங்கள் கண்டிப்பாகச் செல்லவேண்டும். ஆத்திரத்தைக் குறைத்துக் கொண்டு,   கோபத்துடன் செல்லுங்கள். என் சினேகிதி கிரீஸிஸ் அவள் தந்தையுடன் சேரவேண்டும். நீங்கள் வலியுறுத்தினால் இது கட்டாயம் நடக்கும். உங்கள் தயவின்றிக் கிரேக்கப்படைகள் டிராய் நகரை வெல்லுவது முடியாத காரியம். அதுமட்டுமல்ல நீங்கள் மனிதரில் கடவுள் , கடவுளரில் மனிதர். உங்களை அழிக்க யாராலும் முடியாது. நீங்கள் அகெம்னன் கப்பலுக்குப் புறப்பட்டு அந்த மந்திராலோசனையில் உங்கள் கருத்தை வலியுறுத்துங்கள்! “

இப்படி ஆலோசனை கூறிய அந்த அழகி  அவன் இதழில் ஆசை ததும்ப முத்தம் ஒன்று  கொடுத்தாள். அதுவும் வெகுநேரம் நீடித்தது.  பெரிய அலை ஒன்று அவர்கள் பாறையை நீர்த்திவலைகளால் மூழ்கடித்தது.

பாவம் அவளுக்குத் தெரியாது அதுதான் அவள் அவனுக்குத் தரும் கடைசி முத்தம் என்று!

(தொடரும்)

 

 

 

கோணங்கி மனசு -S.L. நாணு

தனியாக இருக்கும் வயதானவர்கள் டார்க்கெட் - மலப்புரத்தில் அடுத்தடுத்து நடந்த  கொலைகள்/elderly people back to back murder in kerala hrp – News18 Tamilஇரவுத் தூக்கம் மறந்து வெகு காலமாகிவிட்டது.. இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு.. மோட்டு வளையை வெரித்து.. மனதில் ஏதேதோ சிந்தனையோட்டங்கள்.. சில திகிலூட்டுபவையாகக் கூட..

இது வழக்கமாக வயதானவர்களுக்கு வரது தான்.. இன்சோம்னியா.. நானே டாக்டர் தான்.. சர்ஜன்.. எனக்குத் தெரியாதா? டிராங்குலைஸர் முயற்சி பண்ணினேன்.. மைல்ட் டோஸ் தான்..”

ஆனால் வேலைக்காகவில்லை.. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டோஸ் ஏறியும் பாச்சா பலிக்கவில்லை.

தூக்கம் வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது..

“தூக்கமின்மை உடம்பை வீழ்த்தி விடும்.. விரைவில் மரணமும் சம்பவிக்கலாம்”

தற்செயலாக வந்த வாட்ஸாப் பதிவு தலைப்புச் செய்தி சொன்னது.. எனக்குத் தெரியாதா? நானே ஒரு டாக்டர்.. சரி.. ஓய்வு பெற்ற டாக்டர்..

ஆனால் கொஞ்சம் நிம்மதி..

இரவு தூக்கம் ஏமாற்றினாலும் காலையில் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டு பிளேட்டை சிங்க்கில் போடுவதற்குள் கண்களை இருட்டிக் கொண்டு வரும்.. அப்படியே கட்டிலில் சாய்ந்து விடுவேன்.. சாப்பிட்ட உடனே படுக்கக் கூடாது என்று டாக்டர் மூளை எச்சரிக்கும்.. ஆனால் அந்த எச்சரிக்கை முடிவதற்குள் நான் குறட்டை விட்டுக் கொண்டிருப்பேன்.. அடுத்த ஒன்றரை இரண்டு மணி நேரம் எதுவும் உணராத பற்றற்ற நிலை.. மொபைல் சிணுங்கலோ.. அழைப்பு மணியோ.. எதுவும் உரைக்காது..

சில சமயங்களில் தூக்கம் விழித்து நான் கதவைத் திறக்கும் போது.. பக்கத்து வீடு.. எதிரி வீட்டிலெல்லாம் பதட்டம் கலந்த கவலைப் பார்வை..

“ரொம்ப நேரமா பெல் அடிச்சும் கதவைத் திறக்கலையா? அதான் கொஞ்சம் கவலையாப் போச்சு”

“போலீசுக்கு சொல்லிட்டு கதவை உடைக்கலாமான்னு கூட நினைச்சோம்”

எனக்கு சிரிப்பு தான் வரும்..

எனக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று இவர்களுக்குக் கவலையா? இல்லை அப்படி ஏதாவது ஆகி விட்டால் பொறுப்பு அவர்கள் தலையில் விழுந்து விடுமோ என்ற கலவலையா?

“தனியா இருக்கீங்க.. பேசாம துணைக்கு பொண்ணு யாரையாவது வேலைக்கு வெச்சுக்குங்கம்மா.. உதவியா இருக்கும்?”

இது போன்ற உபதேசங்களும் நிறைய..

“வீட்டை சுத்தம் பண்ண.. துணி துவைத்து காயப் போட்டு மடிச்சு வைக்க, பாத்திரங்கள் துலக்க.. செல்வி வந்திட்டுப் போறா.. எடுப்புச் சாப்பாட்டுக்கெல்லாம் தடா.. சுயபாகம் தான் எனக்கு ஒத்துவரும்.. தெம்பாத் தானே இருக்கேன்?.. அப்புறம் எதுக்கு ஒரு துணை? துணைக்கு வந்தவ என்ன செய்யறதுன்னு தெரியாம போரடிசுண்டு மொபைலை நோண்டிண்டு உட்கார்ந்திருக்க.. அவளுக்கு நான் தண்டம் சம்பளம் கொடுக்கணுமா?”

“இல்லை.. வயசாச்சு.. திடீர்னு ஏதாவது எமர்ஜென்ஸின்னா உதவி பண்ண..”

“யாருக்கு வயசாச்சு? ஐயாம் ஜஸ்ட் செவண்டி த்ரீ.. இது ஒரு வயசா? அடுத்த மாசம் ஹரித்வார் ட்ரிப் போகலாம்னு இருக்கேன்.. முடிஞ்சா ட்ரெக்கிங் பண்ணணும்”

நான் சொன்னதில் கொஞ்சம் பிடிவாதம் தெரிந்தது..

அதாவது இவர்கள் சொல்லி நான் என்ன கேட்பது என்று..

உண்மையில் யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் என் மனதில் கொஞ்ச நாட்களாகவே இருக்கிறது என்பது தான் உண்மை.. அதுவும் இஸ்கீமியா கண்டிஷன் என்று என் இதயத்தைப் பரிசோதித்த கார்டியாலஜிஸ்ட் மளிகை லிஸ்ட் போல் முழ நீளத்துக்கு மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்ததிலிருந்து அந்த நினைப்பு இன்னும் அதிகமாகியிருந்தது…

ஆனால் மற்றவர்கள் அதைச் சொன்னவுடன் என் கோணங்கி மனசு ஏற்க மறுக்கிறது.. என் ஈகோ அரணாக நிற்கிறது.. இனி ஒரு பெண்ணை துணைக்கு வைத்துக் கொள்ளும் எண்ணமே மனதில் புகாதபடி அது பார்த்துக் கொள்ளும்..

நான் செய்வது சரியா தவறா என்ற குழப்பமே எனக்குக் கிடையாது.. நான் செய்தது தான் சரி என்ற தீர்மானம் எனக்குள் உரைந்திருக்கும்..

இந்த ஈகோ கலந்த பிடிவாதம் தான் சின்ன வயதிலிருந்தே என்னை செலுத்திக் கொண்டிருக்கிறது..

“தலைல எண்ணை வெச்சுக்கோடி”

அம்மாவின் குரல் கெஞ்சும்..

எண்ணை பாட்டிலை கையிலெடுத்தவள் அதை கீழே வைத்து விட்டு..

“முடியாது.. எனக்கு எண்ணை தடவிக்க வேண்டாம்”

“எண்ணை தடவிக்கலைன்னா முடி வளராது.. அதோட சிக்காயிரும்”

“ஆகட்டும்”

அதிலிருந்து தலைக்கு எண்ணை தடவிக் கொள்ளவில்லை..

இப்போது என் தலை முடியைத் தொட்டுப் பார்க்க..

பாய் கட்..

அம்மா சொன்னது போலவே சீக்கிரமே என் தலை முடி வளர்ச்சியை நிறுத்திக் கொண்டு செம்பட்டையாகி.. மற்றவர்களின் பின்புற கேலிகளுக்கு ஆளாகி..

ஆனால் நான் கவலைப் படவில்லை.. பிறர் சொன்னதை நான் கேட்கவில்லை என்ற ஒரு வெற்றி மிதப்பு மனதில் சிம்மாசனமிட்டிருந்தது..

பி.யு.ஸி. முடித்தவுடன் இஞ்சினியரிங் படிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்..

“உன் மார்குக்கு இஞ்சினியரிங் சுலபமாக் கிடைக்கும்.. உடனே அப்ளை பண்ணு”

அப்பா சொன்னவுடன் என் கோணங்கி மனசு விரைத்துக் கொண்டது..

“முடியாது.. எனக்கு இஞ்சினியரிங் வேண்டாம்.. மெடிஸின் தான் படிக்கப் போறேன்”

கல்வி வியாபாரமாகாத அந்தக் காலத்தில் எனக்கு தகுதி அடிப்படையில் மருத்துவ சீட் கிடைத்தது..

கைனகாலஜியில் சாதனை புரிய வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்..

“பேசாம கைனியே எடுத்துக்கோ.. பொம்பளைகளுக்கு அது தான் நல்லது”

அம்மா உபதேசம் செய்தவுடன் மீண்டும் கோணங்கி மனசு..

“முடியாது.. நான் சர்ஜரி தான் எடுத்துக்கப் போறேன்”

அப்பாவுக்கு டென்ஷன்..

“சர்ஜரியா? வேண்டாம்.. சொல்றதை கேளு.. பொம்பளை சர்ஜனுக்கு அவ்வளவு டிமாண்ட் கிடையாது”

“நான் டிமாண்ட் உண்டு பண்ணுவேன்.. இதுக்கு மேல டிஸ்கஷன் வேண்டாம்.. நான் சர்ஜரி தான் படிக்கப் போறேன்”

சர்ஜரி படித்து முடித்து ஆணாதிக்க சூழலில் நிறைய கிண்டல்கள்.. கேலிகள்.. அவமானங்கள்.. அதையெல்லாம் திறமையால் முறியடித்தேன்..

அந்த ஆணாதிக்கக் கும்பலில் ஒரு தனி முகம்.. அஜயன்.. எப்போதும் ஒரு ஆதரவுப் பார்வை.. எனக்குப் பிடித்தது.. அவனுக்கும் தான்..

வீட்டில் சொல்ல சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருக்க..

“ஒரு வரன் வந்திருக்கு.. பையனும் டாக்டர்.. உன் சித்தப்பனுக்குத் தெரிஞ்ச குடும்பம்.. பொண்ணு பார்க்க எப்ப வரலாம்னு நீ சொன்னா..”

“… …”

“என்னம்மா எதுவும் பேச மாட்டேங்கறே.. நான் ரிடையர் ஆறதுகுள்ள உன் கல்யாணத்தை முடிச்சாத் தான் எனக்கு நிம்மதி..”

சைக்கிள் கேப் கிடைத்தால் போதுமே.. உள்ளே புகுந்து விடும்..

வேறு யாரு? என் கோணங்கி மனசு தான்..

“ஏம்பா.. நீ ரிடையர் ஆகப் போறேன்னு நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?”

“அதில்லைம்மா.. உனக்கும் வயசாயிட்டிருக்கு..”

“என்ன பெரிய வயசு? முடியாது.. நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை”

அப்பாவுக்கு அதிர்ச்சி..

“என்ன.. என்ன சொல்றே?”

“நான் சொன்னா சொன்னது தான்.. எத்தனை வயசானாலும் நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லை.. இது நிச்சயம்”

பாவம் அஜயன்.. அவனுக்குப் பெரிய அதிர்ச்சி..

ஆனால் அதெல்லாம் எனக்கு அப்போது உரைக்கவில்லை..

பல வருடங்கள் கழித்து ஒரு மாலில் அஜயனை மனைவி மகளுடன் பார்த்த போது மனதில் லேசாக ஒரு உரசல்..

காலம் கடந்த உணர்வுகள்..

என் கோணங்கி மனசு மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால்..

பிரம்மன் சித்தம்.. இன்று வரை என் கோணங்கி மனசின் ஆதிக்கம் குறையவில்லை.. சொல்லப் போனால் அதிகமாகிக் கொண்டே தான் போனது..

பலரின் பார்வையில் அது பைத்தியக் காரத்தனமாகத் தெரிகிறது என்பதும் எனக்குத் தெரியும்..

இருந்தாலும் வெளி வர முடியாத வியூகம்..

அன்று..

அழைப்பு மணி அடிக்க கதவைத் திறந்தேன்..

“கொரியர்..”

கவரை நீட்டினான்..

நான் வாங்கிப் பார்க்கும் விநாடியில் சடாலென்று என்னைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து கதவை சாத்தினான்..

இப்போது அவன் கையில் கத்தி.. பார்வையில் கொலை வெறி..

“ஐயோ.. என்னை ஒண்ணும் பண்ணிடாதே.. பீரோவுல பணம் இருக்கு.. நகை இருக்கு.. தாராளமா எடுத்துக்கோ”

சொல்ல நினைத்தேன்..

அதற்குள் அவன் கர்ஜித்தான்..

“மரியாதையா பணம், நகைலாம் எங்க வெச்சிருக்கேன்னு சொல்லு.. இல்லை குத்திருவேன்”

சில மணிநேரங்களில் எல்லா டி.வி. சேனல்களும் முக்கியச் செய்தியை அறிவித்தன..

 

 

 

 

 

 

 

 

திரை ரசனை வாழ்க்கை 17 ராக்கெட்ரி – துரோகம் கற்பிக்கப்படும் பக்தியின் கதை – எஸ் வி வேணுகோபாலன்

ராக்கெட்ரி விமர்சனம் | Rocketry The Nambi Effect Review in Tamil
 
யிரம் கண்டுபிடிப்புகளுக்கு மேல் வழங்கிய அறிவியலாளர் என்று கொண்டாடப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் கன்னத்தில் வாங்கிய ஓர் அறையில் தமது செவிப்புலன் பாதிப்புற்றுக் கேட்புத் திறன் பெரிதும் இழந்தார் என்று வாசிக்கிறோம்.  ‘நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா’ என்ற தலைப்பிலான (அதன் துணைத் தலைப்பு அய்யய்யோ அறிவியல்) நூலில், ஆயிஷா இரா நடராசன், சமூகப் பயன்பாட்டுக்கான தேடலில் எத்தனையோ பறிகொடுக்க நேர்ந்த அறிவியலாளர்களது ஆய்வுக்கூட அனுபவங்களையும், வாழ்க்கை சோதனைகளையும் விவரித்திருப்பார்.  அதிகம் சிந்தித்த சாக்ரடீஸ் பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைந்தார். கலீலியோ கண்ணெதிரே எரிக்கப்பட்ட ஆய்வுக் காகிதங்களைக் கண்ணீர் மல்க பார்த்து நின்றார். 400 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னிடம் மன்னிப்பு கேட்பார்கள் என்பதறியாது கோபர்நிகஸ் தண்டிக்கப்பட்டு மாண்டு போனார்.  
 
இதெல்லாம் நாம் கண் கொண்டு பார்க்காது தப்பிய கொடுமைகள். சம காலத்தில், அபாரமான அறிவியல் ஆய்வுத் தேடலும், ஆற்றலும், அறிவும், சாகச மனப்பான்மையும், தளராத மனவுறுதியும் – எல்லாவற்றுக்கும் மேலாக, கனன்றெரியும் தேச பக்தியும் சுடர் விட்டு ஒளிர்ந்த மனிதர் ஒருவரை தேச துரோகி பட்டம் சூட்டி (இந்த லேபிளுக்கு மேல் வேறொரு தண்டனை உண்டா என்ன?), கைது செய்து, போதுமே வேறென்ன சொல்லவேண்டும், காவல் துறையில் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் தலைகீழாகப் புரட்டி எடுக்கப் பயிற்சி பெற்ற போர் வீரர்களைப் பெற்றுள்ள தேசம் ஆயிற்றே…..  அப்படியான மனிதர் சரண் அடைந்துவிடாமல், உயிராகக் கருதும் தேசத்திற்கு எதிரானவன் அல்ல என்பதை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிரூபித்து நெருப்பில் இறங்கிக் கருக்காது ஜொலித்து வெளியேறி வந்த கதை தான் ராக்கெட்ரி.  அவரை வாட்டியெடுத்த தீயின் சூடும், தேசக் குடிமக்களாக உண்மை உணரும்போது நமக்குப் படும் சூடும் சேர்த்து உறைக்கிற உணர்வை வழங்கும் திரைக்கதை தான் ராக்கெட்ரி -நம்பி விளைவு!
 
மிகுந்த இறை பக்தியும், தேசப்பற்றும், சதா சர்வகாலமும் (கலாமும்!) விண்வெளி ஆராய்ச்சியில் தற்சார்போடு தன்னிகரற்று இந்தியா முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற உணர்வும் கொண்டிருக்கும் விண்வெளி அறிவியலாளர் அவர். குடும்பம், மகன், திருமணமான மகள், மருமகன், பேத்தி, இம்மியளவும் மாறாத ஆர்ப்பாட்டம் அற்ற அன்றாட விடியல் அது, அன்றாடக் குளியல், அன்றாட பூசைகள், அன்றைக்குச் சிறப்பு வழிபாட்டுக்கு வழக்கமான கோயில்.. என்று நம்பி (நாராயணன்) வீட்டில் அன்றாட அமளி துமளிகள், பாசமிகுந்த உரையாடல்கள் முடித்துக் கொண்டு ஆலயம் நுழைகிற அவர், பார்க்காத அன்றைய நாளேட்டின் முக்கிய செய்தி ஒன்றில் தான் பேசப்பட்டிருக்கிறோம், தேச துரோகி ஆக சித்தரிக்கப்பட்டிருக்கிறோம் என்று அறியாது வழிபடும் இடத்தில், ஆரத்தி எடுத்த கற்பூரச் சுடரை இவரிடம் காட்டாது முறைத்து விட்டு அந்தப் பூசாரி  அணைத்து விட்டுப் போகும் இடத்தில் தொடங்குகிறது திரைக்கதை.
 
இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) நிறுவனத்தில் ஆராய்ச்சி தொடர்பான ரகசிய ஆவணங்களை அந்நிய தேசத்திற்குக் கை மாற்றிய மிகப் பெரிய தேச துரோகச் செயலை அவர் செய்து விட்டார் என்ற செய்தி போதுமானதாக இருக்கிறது, மிக சாதாரண மக்களைக் கூட அவர்கள் அதற்குமுன் கேள்விப்பட்டிராத ஒரு மனிதருக்கு எதிராக, அவரது குடும்பத்திற்கு எதிராக, அவரது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கு எதிராகப் பொங்கி எழுந்து ஒழிக என்று குரலெழுப்ப – ஒழிந்து போ என்று சபிக்க –  தொலைத்துக் கட்டுவோம் என்று கூட்டாகக் கொந்தளிக்க வைக்க!
 
காவல் துறைக்கு ஒற்றைச்சொல் ஸ்டேட்மென்ட் தான் எப்போதும் தேவைப்படுவது, அதைச் சொன்னால் முடித்துக் கொள்ளலாம் என்பார்கள், இப்போதே விட்டுவிடுகிறோம் என்பார்கள்! உண்மையைச் சொல் என்று அவர்கள் அடிக்கும்போது, உள்ளபடியே, பொய்யை ஏற்றுக் கொள் என்பது தான் அவர்கள் பூடகமாகத் தெரிவிப்பது.  ‘பதி இழந்தனம், பாலனை இழந்தனம், படைத்த நிதி இழந்தனம் ….இனி எமக்குளது என நினைக்கும் கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம்’  என்று செம்மாந்து நின்ற அரிச்சந்திரன் போல் நின்ற அந்த மனிதர் என்னென்ன சித்திரவதைகள் எல்லாம் எதிர்கொண்டார், புறவுலகில் எத்தனை அவமதிப்புக்கு உள்ளானார், குடும்ப அமைதியை எப்படி பறிகொடுத்தார் என்பதெல்லாம் காட்சிப்படுத்தப் படுகிறது.
 
தனது கணவருக்கு எதிரான  நடவடிக்கைகள், குடும்பத்திற்கு எதிரான தாக்குதல்கள் இவற்றால் நிலைகுலைந்து பித்துப் பிடித்துப் போனவளாக ஆராய்ச்சியாளரது மனைவி சிதறிப்போகும் இடம் யாரையும் உலுக்கும்.  முன் பின் பார்த்திராத பெண் ஒருத்தியோடு படுக்கையைப் பகிர்ந்து, தேசத்தின் ரகசியங்களையும் பகிர்ந்து கொண்டதான அராஜகக் குற்றச் சாட்டை, ஆய்வுலகத்திற்கு அப்பால் ஏதும் பிடிபடாத ஓர் அறிவியலாளர் எப்படி தாக்குப் பிடிக்க முடியும்? ஆனால், குடும்பத்தின் மீதான கறையாக அடுத்தடுத்த சந்ததியினருக்கும் பிதுரார்ஜித சொத்தாக இந்த அவமதிப்பு போய்க்கொண்டே இருக்கும் என்ற பரிதவிப்பில், தற்கொலை முயற்சிக்குப் பதிலாக, பொய்களை மாய்ப்பது எப்படி என்று முடிவெடுப்பது அவர் வாழ்க்கையின் அடுத்த முக்கியமான கட்டம்.
 
நம்பி நாராயணன் அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை ஆவணப் படுத்தும் திரைப்படமாக (பயோ பிக்) முதலில் யோசித்த திரைக்கலைஞர் மாதவன், அவரது அனுமதி பெறுவதற்காக அணுகவும், திரும்பத் திரும்ப அவரோடு நடந்த உரையாடல்களின் ஒரு கட்டத்தில் – அவரது வாழ்க்கை குறித்த முக்கிய புத்தகங்கள் வாசிப்பில், ஒரு போராட்டத்தின் திரைக்கதையாக, அதனுள் பேசப்பட வேண்டிய ஓர் அறிவியலாளரது அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கைத் தடங்களையும் ஆர்வத்தோடு சேகரித்துக் காதலுற எழுதி முடித்துத் தான் விரும்பியபடி தானே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று வலுவாகத் திரையில் கொணர்ந்து இருக்கிறார். 
 
நீதிக்கான போராட்டத்தின் களைப்பு மேலிட்டாலும் கம்பீரம் வற்றாத முதிய முகத்தோடு நம்பி நாராயணனாக மாதவன் அமர்ந்திருக்க, அவரைத்  தொலைக்காட்சி சானலுக்காக நேர்காணல் செய்யும் சூர்யா (இந்தி / ஆங்கில வடிவத்தில் ஷாருக் கான்), தான் சேகரித்திருக்கும் தரவுகள் வழியே அவரது உள்ளத்தின் கதவுகளை மெல்லத் திறக்க வைக்கிறார்.  விக்ரம் சாராபாய் (ரவி ராகவேந்தர் இதமான நடிப்பு) ரசித்து வளர்த்தெடுக்கும் ஆராய்ச்சி மாணவப் பருவத்தில் இருந்து புகழ் பெற்ற பிரின்ஸ்டன் பல்கலையில் அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு அமெரிக்கப் பயணம், அதன் வெற்றியில் மிகப் பெரிய ஊதிய பலன்களோடு நாசா ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கும் வேலையைக் கூட உதறி சொந்த மண்ணில் தாயகத்தின் விண்வெளி சாதனைகளை உயர்த்தும் ஆவேசக் கனவுகளோடு திரும்புவது, அதன் அடுத்தடுத்த கட்டங்களில் பிரான்ஸ், ரஷ்ய பயணங்கள், கிடைத்தற்கரிய பொக்கிஷமான அனுபவங்களை, கருவிகளை, சாதனங்களைத் தனது நட்புறவாலும், அறிவினாலும், சாதுரியமாமுயற்சிகளாலும் பெற்றுக்கொண்டு திரும்புவது எல்லாம் சுவாரசியமாக பின்னோக்கிக் காட்சிகள் வழி சொல்லப்படுகிறது. 
 
1990 – 91 சோவியத் ருஷ்யா கோர்பச்சேவ் – யெல்ட்சின் காலத்தில் ஏகாதிபத்திய ஆசிகளோடு சீர்குலைக்கப்படும் கடைசிகட்ட தருணத்தில் அங்கிருந்து பொருள்களையும் உயிரையும் தற்காத்துக் கொண்டு, அமெரிக்க உளவாளிகள் ஊகிக்க முடியாத வான்வழியில் தேசத்திற்குத் திரும்புமிடத்தில், உள்நாட்டில் கேரள மாநில அரசியல் சதிராட்டத்தில் சந்தேகப் புயல் உருவாக்கப்படும் சதியில் சிறை வைக்கப்படுகிறது நம்பி நாராயணனின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்புமிக்க ஆராய்ச்சி பங்களிப்பும்!  
 
அத்து மீறிய காவல் துறை சித்திரவதைகள், பொய்யாக ஜோடிக்கப்படும் சாட்சியங்கள் எல்லாவற்றையும் பின்னர் சிபிஐ உடைத்தெறிந்தாலும், நீதிக்கான தொலைவு, ஆண்டுகளை விழுங்கி நிற்கிறது. தம் வாழ்நாளில் தன்னைக் குற்றமற்றவராக அய்யத்திற்கிடமின்றி நிரூபித்துக் கொண்டுவிடும் நம்பி நாராயணன், நஷ்ட ஈடு கேட்கிறார் – காசுக்காக அல்ல, இனி வேறொரு மனிதருக்கு எதிராக இப்படியான பொய்யான குற்றச்சாட்டுகள் ஒருபோதும் சாட்டப்படக் கூடாது என்பதற்காக!  இந்திய அரசு 50 லட்சமும், கேரள அரசு 1.30 கோடியும் அவருக்கு வழங்கியதையும் பதிவு செய்திருக்கிறது திரைப்படம். 
 
கதையின் மெல்லிய இந்தச் சரடில் முக்கியமான இன்னொரு வாக்கியம், இந்த தேசத்தின் நேர்மை மீதான அவரது நம்பிக்கை. அது சாதாரணமானதன்று. அந்த உறுதிதான் அவரது போராட்டத்திற்கான அடிப்படை. இந்த நம்பிக்கையை சமூகத்தில் தக்க வைக்க வேண்டியது இக்காலத்தில் மிக முக்கியமானது. உங்களது சக மனிதர்கள் ஏன் உங்கள் பக்கம் உடனே வந்து நிற்கவில்லை என்ற சூர்யாவின் கேள்விக்கு, ‘ராக்கெட் சாய்ந்தால் எப்படி உடனே நிமிர்த்த முடியும் என்று தெரிந்த அவர்களுக்கு, ஒரு மனிதன் சாய்க்கப்படும் போது என்ன செய்யணும் என்று தெரியவில்லை’ என்று கூறுவது வேதனையான உண்மை.
ஆய்வுக்கருவியில் முக்கியமான பாகத்தில் செய்யவேண்டிய சீரமைப்புப் பணிக்காக பிரான்ஸ் நாட்டுக்குத் தங்களுக்கு உதவி செய்யவரும் உண்ணி என்ற பொறியாளரது குழந்தை இங்கே தாயகத்தில் நோயிலிருந்து குணம் பெறமுடியாமல் மரித்துப் போகும் செய்தியை, அவரிடம் சேர்ப்பதில்லை மாதவன். அந்தப் பரிசோதனை வெற்றி பெற்றபின் உண்ணிக்கே நேரடியாக அந்த உண்மை தெரியவரும்போது வெகுண்டெழும் உண்ணி, ‘இனி வாழ்நாள் உன் முகத்தில் முழிக்க மாட்டேன்’ என்று போகிறவர், பின்னர், இவர் பொய்யான குற்றச்சாட்டில் சிறைப்பட்டிருக்கையில் வந்து பார்க்கும் முதல் மனிதராகத் தோன்றுவது உணர்ச்சிகர காட்சி.  அத்தனை கல்நெஞ்சத்தோடு ஆராய்ச்சி செய்பவன் தேசத்திற்கு எதிராகப் போயிருக்க முடியாது என்று இவர் மீதான நம்பிக்கை வெளிப்படுத்துகிறார்.
 
நேர் காணல் நிறைவில் சட்டென்று மாதவன் மறைந்து உண்மையான நம்பி நாராயணன் தோன்றுமிடம், சூர்யாவின் நடிப்பு, வசனங்கள், தேசத்தின் சார்பில் அவரிடம் மன்னிப்பு கோருவது எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது.  நம்பி நாராயணனின் உதவியாளர்களாக வருவோரும் இயல்பாகச் செய்திருக்கின்றனர். பெருங்குறை, அயல் நாட்டவர்களை அவரவர் மொழியில் இயல்பாகப் பேசக் காட்டாமல், தமிழில் டப்பிங் செய்திருப்பது. 
 
இசை, படத்திற்கான தேவைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. வசனங்கள் பல இடங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறது. அப்துல் கலாம் இன்னும் நேர்த்தியாக நம் மனத்தில் இடம் பெறும் வண்ணம் அந்தப் பாத்திரத்திற்கான காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  
 
சிம்ரன் மிகக் குறைவான இடங்களில் வந்தாலும் தன்னியல்பாகத் தனது நடிப்பை வழங்கி இருக்கிறார். மொத்தப் படத்தின் கனத்தையும் கனமாகவே எடையேற்றிக் கொண்ட மாதவன் சுகமாகச் சுமந்து மிக அருமையாக நடித்திருக்கிறார்.  சிபிஐ அதிகாரி, உங்களை அடிக்க மாட்டேன் என்று சொன்னபின்னும், தேநீர்க் கோப்பையை நடுங்கும் கைவிரல்களால் பிடித்துக் கொள்ளுமிடம், நியாயத்திற்காக எழுப்பும் கேள்விகள், அயல் நாடுகளில் சாமர்த்தியமாக வேலைகளை முடித்துக் கொள்ளும் உடல் மொழி என்று சிறப்பாகச் செய்திருக்கிறார். முதிய வேடத்தில் மிகவும் ஈர்க்கிறார், அதிராமல் பேசுகிறார், உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்துகிறார். யாரையும் மாணவராக ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று சொல்லப்படும் பிரின்ஸ்டன் பல்கலை பேராசிரியர் க்ரோக்கோ அவர்கள் இதயத்தில் இடம் பிடிக்கும் காட்சிகள், நோயாளியாக வரும் பேராசிரியர் மனைவி என நெகிழவைக்கும் இடங்கள் படத்தில் நிறைய உண்டு. 
 
தங்களை விமர்சிப்போரை ஒடுக்குவதற்கு இப்போதும் அதிகார பீடங்களில் இருப்போர் மிக இலகுவாக முன்னெடுக்கும் ஆயுதம், தேச துரோக குற்றச் சாட்டு தான் என்கிற போது, திரைப்படம் மேலும் நிறைய செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கிறது. 
 
படத்தைப் பார்த்தபின், மிகச் சிறந்த வாசகரும், கணிதத் தேர்ச்சி மிக்க விண்வெளி ஆராய்ச்சி அறிவியலாளருமான பிரசன்னா அவர்களிடம் பேசுகையில், “நம்பி நாராயணன் அவர்களுக்கு நேர்ந்தது அநியாயம்….ஆறுதலான விஷயம் என்னவெனில், அதற்குப் பிறகும், இஸ்ரோவில் அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு இப்போதும் குறைவில்லை, ஹீரோக்களை நான் வெளியில் தேடிச் செல்ல வேண்டியதில்லை” என்றார். 
 
நம்பி நாராயணன் அவர்களது கனவு அதுவாகத் தானே இருந்திருக்க வேண்டும், வேறென்ன வேண்டும்!
 
*

“நனைகிறேன்” – விக்னேஷ் ரவி

Swan Rangers Trade in Smoke for Rain! | Swan Range blog

ஒரு கூழாங்கல்லை ஊதியபடி
அகன்ற பாறையின் உச்சியிலேறி அமர்ந்திருக்கிறேன்.
எங்களூரில் மழை வரக்கூடுமா
இல்லையா என்பதை
இங்கமர்ந்து தான் பூட்டன் மக்களுக்குரைப்பானாம்.
அதன்பின் நான்தான்
அப்பாவத்தை என்
பரம்பரையிலேயே ஏற்றிருக்கிறேன்.
எதற்காக
உனக்காகத்தான்..

இதோ உலகின் முதல் துளி
என் உள்ளங்கையில்
கூலாங்கல்லாய்..
நேற்றைய மழை,
அதற்கு முந்தைய நாள் மழை,
போன வாரத்து மழை,
போன மாதத்து மழை,
போன வருடத்து மழை,
போன நூற்றாண்டு மழை,
ஏசு சிலுவையில் அறையப்பட்ட
அன்று பெய்த மழை,
புத்தனுக்கு முன்பான மழை,
இப்படி அத்தனை மழைகளிலும் இல்லாத ஒன்று இன்று இருக்கக் கூடுமென்றுணர்கிறேன்..

சென்ற கோடைகாலத்து
மைய நாளொன்றில்
நீதான் சொன்னாய்
இந்த மலையில் அந்த மழை
தொடும் நாள் நான் உன்னைக் காதலித்திருப்பேன் என்று..
அன்றும் மழை தான்..
உன்னையும் என்னையும்
மட்டும் நனைத்த கோடை மழை..
அன்று தொட்டு இன்று வரை
நீ வாயில் போட்டு என்
கையில் கொடுத்த கூலாங்கல்லும்
நான் அமர்ந்திருக்கும் பாறாங்கல்லும் தான் துணையெனக்கு..

வானம் ஒரு மசக்கைக்காரியைப் போல் திடுமென சோர்கிறது..
மேகம் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியாய் இங்கும் அங்கும் கருமை கொண்டலைகிறது..
ஒரு பிரசவக்காரியின் அலறல் சத்தத்தை இடி நினைவு படுத்திச் செல்கிறது.. அந்தோ பனிக்குடம் உடைந்ததைப் போல் மழை கொட்டுகிறது..
சரிந்து விழுந்த சிசுவின் ரத்தமாய் என் கைகளில் மழைத்துளி பிசுபிசுக்கிறது.. பச்சைப் பிள்ளையை துடைத்த துணியாய் மழையோடு சேர்ந்த மண்வாசம் கவுச்சி வீசுகிறது..
முதன்முறையில் சேயின் முகம் பார்த்த தாயின் கண்ணொளியாய் மின்னல் வெட்டிச் செல்கிறது..

நிசப்தம்
பெரு நிசப்தம்
இரைச்சலைக் காட்டிலும் கொடுமை பயக்கும் அகலா நிசப்தம்.
வானில் ஒளியில்லை இடியில்லை கருமேகத்தில் அசைவில்லை மழையில்லை.
இனி எப்படி உனக்கும் எனக்கும் இருந்த உறவை இந்த உலகுக்கு எடுத்துரைப்பேன்..
இனி எப்படிப் புலங்கக்கூடும் நமக்குள் நாம் என்ற சொல்..
உன்னையும் என்னையும் இதே மொட்டைப் பாறையில் கலவிகூடப் பார்த்த மழை
இனி எப்படிச் சொல்லும்
நம் காதலைச் சாட்சி.

கைகளை உயர்த்தி எட்டும் வரைக்கும் நீட்டிப் பார்த்தேன் மழை இல்லை.
காற்றைப் பிழிந்து நுகர்ந்து பார்த்தேன் மழை இல்லை.
மேகம் சிலதை அசைத்துப் பார்த்தேன் மழை இல்லை.
கடலைக் குடித்து துப்பிப் பார்த்தேன் மழை இல்லை.
பூமி மீதும் ஏறிப் பார்த்தேன் மழை இல்லை.

மழை இறந்து போனது.
பிறந்த சிசு தாய் முகம் காணாமல் இறந்து போனதைப் போல்.
தாய் பிறந்த சிசுவைக் காணாமல் இறந்து போனதைப் போல்.
உனக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவு இறந்து போனதைப் போல்.
நம் காதல் இறந்து போனதைப் போல்.
மழை இறந்து போனது.

நான் மட்டும் மொட்டப் பாறையை கண்ணீரால் நனைக்கிறேன்.
நனைகிறேன்!!

 

 

பல்சுவைப் பதிவுகள் – ராய செல்லப்பா – உமா பாலு – கி. சங்கரநாராயணன்

கேட்டு வாங்கிப் பதிவிட்ட பல்சுவைப் பதிவுகள் ..1

மயிலிறகால் வருடி இன்ப வைத்தியம் செய்யும் பதிவர்!

ராய செல்லப்பா அவர்கள்  தில்லித் தமிழ்ச் சங்கத்தில்  16-2-1992  அன்று நடைபெற்ற ‘கவியரசு கண்ணதாசன் நினைவுக் கவியரங்கில்’ தலைமையேற்று வாசித்த கவிதையில் அவர் ஊர் ராணிப்பேட்டையைப் பற்றி சொல்லும் வரிகள்!!

ஆறு காடுகள்

அணிவகுத்து நிற்கும்

ஆற்காடு’

அதனருகே

ஓடாமல் நிற்கும் மணலாறு-

‘பாலாறு!’

இக்கரையில் இருந்தது,

இராணிப்பேட்டை

என் ஊர்- பொன் ஊர்.

தெரியாத கதையா

தேசிங்குராஜன் கதை?

 

செஞ்சி நகரம் –அவன்

செய்த நகரம்.

முரட்டுக் குதிரையை

விரட்டிப் பிடித்து

முடியாட்சி கொண்டான்

தேசிங்கு.

அது, மதியால்!

ஆற்காட்டு நவாப்பின்

ஆயுதங்களின்முன்

அடங்கிப் போனான்.
அது, விதியால்.

செஞ்சி அழிந்தது,

தேசிங்கின்

தேகம் சிதைந்தது.

ஆளனை இழந்த

பத்தினிப் பெண்ணாள்

அஞ்சிடவில்லை.

ஆற்காட்டு நவாப்பின்

ஆசை மொழிகளில்

மயங்கிடவில்லை.

இருளும் நிலவும்

இணையும் பொழுதில்

கிளம்பினாள் –தன்

உயிரினின்றும் விலகினாள்.

அவளை உண்டது

எரியும் நெருப்பு.

பெண்ணென்றால்

அதற்கு விருப்பு,

அன்றும் கூட!

தேசிங்கின் ராணி

தீர்ந்த கதை கேட்டு

அயர்ந்து போனான்

நவாப்.

 

முரட்டு நாகத்தை

ஜெயித்த கரங்கள்-ஓர்

முல்லைப் பூவிடமா

தோற்பது?

 

காற்று அவனுக்கு

ஆறுதல் சொன்னது-விரைவில்

ஆங்கிலர் ஆட்சி

விரியப் போவதும், இவன்

சரியப் போவதும்

காதில் சொன்னது!

அவனுக்குப் புரிந்ததா

காற்றின் மொழி?

 

ஆங்கிலக் கம்பெனி –இவனை

ஆதரிக்க வருவதாய்ச்

செய்தி அனுப்பிற்று.

தொட்டால் வெடிக்கும்

ஆயுதம் தருவதாய்த்

தொடர்ந்து சொல்லிற்று!

வேலை ஒன்று கோரி

விண்ணப்பமும் செய்தது-

வரி வசூலிக்கும் வேலை!

சாவி இவனிடமே

இருக்கலாம்,

பெட்டிபோதுமாம்

அவர்களுக்கு.

கேட்டதும் பணமும்

கேளிக்கைக்கு மதுவும்

இலவசம்.

ஒப்பினான் நவாப்.

தென் இந்தியாவின்

முதல் துரோகி

அவன் தானோ?

 

காலம் அவனை

விரைந்து மறந்தது.

கம்பெனியும் கூட.

ஆற்காடு,

இன்றும் ஆற்காடே.

 

தீயில் குளித்த

செஞ்சி ராணியின்

தேகச் சாம்பல்கள்

பாலாற்று மணலில் படர்ந்தன.

இல்லாமல் போன

இராணியின் நினைவில்

எழுந்ததே,

‘இராணிப்பேட்டை’.

என்னூர்,

என் பொன்னூர்.

***

கேட்டு வாங்கிப் பதிவிட்ட பல்சுவைப் பதிவுகள் ..2

 

உமா பாலு அவர்களின் கை வண்ணத்தில் வந்தவை இந்த வண்ணப் படங்கள்! அருமையாக இருக்கின்றன! அவர் கதை கவிதை மட்டுமல்ல, படங்கள் வரைவதிலும்  சிறந்தவர் என்பதை நிரூபிக்கின்றன இவை! அதனால இவற்றைக் கேட்டு வாங்கி பிரசுரிக்கிறோம். 

 

 

கேட்டு வாங்கிப் பதிவிட்ட பல்சுவைப் பதிவுகள் ..3

 

குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் மட்டுமல்ல பல சிறந்த கவிதைகளைப் படைத்து வருகிறார் இலத்தூர் கி. சங்கரநாராயணன் அவர்கள். அவருடைய ‘பால்’ என்ற கவிதையைக் கேட்டு வாங்கி பிரசுரிக்கிறோம். 

பால் !

பாலின் உள்ளே பலபொருளாம்
பார்க்கும் கண்ணில் தெரியாதாம்
பாலே தயிறாய் மோராகும்
பாலே வெண்ணெய் நெய்யாகும்

பாலே அல்வா கோவா போல்
பல்சுவை இனிப்பாய் மாறிடுமே
பாலைத் தந்திடும் மாடுகளைப்
பக்குவமாய் நாம் காத்திடுவோம்

பசுவின் நிறமோ மாறுபடும்
பாலின் நிறமோ ஒன்றுபடும்
சிசுவின் உடலை வளர்த்திடுமே
சீரும் சிறப்பும் தந்திடுமே

புசுபுசு புசுவென கன்றைப்போல்
புத்தொளி உடலில் வந்திடுமே
மசமச மசவென நிற்காதே
மாடுகள் பசி தாங்காதே .

 

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்

                                    குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
10. அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
13. ஜன கண மன ! – ஜனவரி 2021
14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
20. வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
21. பஸ்ஸில் போகலாம் – மே 2021
22. சிட்டுக் குருவி – மே 2021
23. ஆகாய விமானம் – ஜூன் 2021
24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
27. தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
28. விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
29. மழையே வா ! – செப்டம்பர் 2021
30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
31. தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
32. வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
33. தமிழ் ! – நவம்பர் 2021
34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
41. என்ன மரம் ! – மார்ச் 2022
42. சைக்கிள் ! – மார்ச் 2022
43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022
45. தோட்டத்தில் காய்கறி – மே 2022
46. இந்தியாவும் தமிழ்நாடும் ! – மே 2022
47. மழை வருது ! – ஜூன் 2022
48. சுற்றிப் பார்க்கலாமா ? – ஜூன் 2022

 

************************************************************

 

 

  1. என் சித்திரம் !

Learn to decode children's drawings - Novak Djokovic Foundation

 

 

அம்மா இங்கே வந்து

பார் ! பார் ! பார் !

அழகாய் சித்திரம்

வரைந்திருக்கிறேன் !

 

சூரியன் கிழக்கே

உதிக்கிறான் பார் !

பறவைகள் வானத்தில்

பறக்குது பார் !

 

ஆலமரம் இங்கே

தெரிகிறதா !

அருகே தென்னை மரம்

இருக்கிறதா !

 

ஆறு ஒன்று  சலசலத்து

ஓடுது பார் !

அதிலே மீன்கள்

துள்ளுது பார் !

 

சின்னதாய் அழகாய்

வீடொன்று பார் !

வீட்டினில் இருக்கும்

குடும்பத்தைப் பார் !

அம்மா, அப்பா

நானிருக்கிறேன் !

தம்பி, தங்கை

உடனிருக்கிறார் !

 

எத்தனை அழகாய்

இருக்குது பார் !

சந்தோஷம் இங்கே

பொங்குது பார் !

 

****************************************

  1. தஞ்சாவூரு பொம்மை !

Nanayam Vikatan - 27 March 2022 - தன்னம்பிக்கை விதைக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை! | thalaiyatti bommai business - Vikatan

 

பொம்மை ! பொம்மை ! பொம்மை !

எனக்குப் பிடித்த பொம்மை !

தலையைத் தலையை ஆட்டும்

தஞ்சாவூரு பொம்மை !

 

எத்தனை தள்ளினாலும் –

தலையைத் தட்டினாலும் –

கீழே விழுந்த பின்னும் –

எழுந்து நிற்கும் பொம்மை !

 

கரடி, மோட்டார் சைக்கிள் – அட

எத்தனை பொம்மையிருந்தும் –

எனக்குப் பிடித்த பொம்மை –

தஞ்சாவூரு பொம்மை !

 

என்னைப் பார்த்து சிரிக்கும் – எனக்கு

சந்தோஷத்தைக் கொடுக்கும் !

கிறங்க கிறங்க அடிக்கும் –

தஞ்சாவூரு பொம்மை !

 

நானும் நிமிர்ந்து நிற்பேன் – கீழே

தள்ளினாலும் எழுவேன் !

எனக்கு சொல்லித் தந்த –

தஞ்சாவூரு பொம்மை !

 

எத்தனையோ பொம்மை –

எங்கள் வீட்டில் இருந்தும் –

எனக்குப் பிடித்த பொம்மை –

தஞ்சாவூரு பொம்மை !

 

******************************************************************

 

 

 

 

 

 

 

 

இடையன்எறிந்தமரம் – வளவ. துரையன்

திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்தில் ஆண்டுதோறும் குமரகுருபர சுவாமிகளுக்கு விழா எடுப்பார்கள். 1937-   ஆம்ஆண்டு நடைபெற்ற விழாவிற்கு உ.வே.சா போயிருந்தார்.

அந்தமடத்தில் மாடுகளைப் பாதுகாத்துப் பராமரிக்க ஓர் இடையனை நியமித்திருந்தனர். மாடுகளைப்பற்றித் தான்அறியாதவற்றை அறிந்து கொள்ளலாம் என்று அவனிடம் உ.வே.சா பேச்சுக்கொடுத்தார். 

            அவன் மாடுகளின் வகைகள், மாடுகளைப் பிடிக்கும் முறைகள், சுருக்குப்போட்டுக் காளைகளை அடக்குதல்,  ஆகியனவற்றைக் கூறினான். பிறகு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுபோவதைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

         அவன், “ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் காட்டுப்புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். ஆடுகள் தின்ன மரக்கிளைகளை வெட்டுவோம். அப்படி வெட்டுகையில் கிளை முழுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும்படி வெட்டுவோம். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழைகளைத் தின்னும்” என்றான்.

         ”ஏன் அடியோடு வெட்டிப் போட்டால் என்ன?” என்று கேட்டார் உ.வே.சா.

         ”அப்படி வெட்டிவிட்டால் அந்தக்கிளை பிறகு பயன்படாமல் போய்விடும்.  நாங்கள் வெட்டும் கிளை இன்னும் மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்” என்று அவன் பதில் கூறினான்.

         ’இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக்கொண்டிருக்கும்’ எனும் எண்ணம் அவருக்குள் உருவானது. 

         பட்டென்று அவருக்குத்தாம் முதல்முதல் பதிப்பித்த சீவகசிந்தாமணியின் 1914-ஆம் பாடல் நினைவுக்கு வந்தது.

அந்தப்பாடல் இதுதான்:

        ”கெடலருங் குரைய கொற்றம் கெடப்பிறந் ததுவுமன்றி

        நடலையுளடிகள் வைக நட்புடையவர்கள் நைய

         இடைமகன் கொன்ற இன்னாமரத்தினேன் தந்த துன்பக்

         கடலகத்தழுந்த வேண்டா களைகவிக் கவலை”

            அதில் சீவகன் தன்தாயிடம்  “ என்தந்தை மரணமடைந்து யான்பிறந்தேன். நீயும் மனம் வருந்த, நண்பர்களும் மனம் வருந்த இடையன் வெட்டிய இன்னாமரம் போல இருந்தேன்” என்று கூறுகிறான்.

        இதற்குநச்சினார்க்கினியர்“உயிருடன் இருந்தேனாய்ப் பகையை வென்றேனும் அல்லேன். உயிரையும் நீத்தேன் அல்லேன்” என்று கருதி ’மரத்தினேன்’ என்று உரை எழுதுகிறார்.

         உயிரையும் விடாமல் தொங்கிக் கொண்டிருக்கும் மரக்கிளை வேறு இலக்கியங்களில் வருவதும் அவர்க்குத் தோன்றியது. 

         பெரியதிருமொழியில் திருமங்கையாழ்வார் ‘இடையன் எறிந்த மரம்’ என்னும் தொடரைப் பயன்படுத்தி உள்ளதை அவர் நினைத்துப் பார்த்தார்.

         ”படைநின்ற பைந்தாமரை யோடணிநீலம்

         மடைநின்ற லரும்வய லாலிமணாளா

         இடையன் எறிந்தமரமே ஒத்திராமே

         அடைய அருள்வாய் எனக்குன்அருளே”

திருமங்கையாழ்வார் திருவாலித் திருநகரியில் உள்ள பெருமாளை நோக்கி

         ”ஆலிமணாளனே! நான் இன்னும் உன் அருளைப் பெறவில்லையே எனும் ஏக்கத்தால் மனம் அழிந்தும், பெறுவோம் என்ற நம்பிக்கையால் உயிர் வைத்துக்கொண்டும் இடையன் எறிந்த மரம்போல நிற்கிறேனே” என்கிறார்.

         பழமொழி நானூறு என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ள ஒரு பாடலும் அவருக்கு நினைவில் தோன்றியது.

         ”அடையப் பயின்றார்கொல் ஆற்றுவராக் கேட்டால்

         உடையதொன் றில்லாமைஒட்டிந்—–படைபெற்[று]

         அடைய அமர்த்தகட் பைந்தொடி அஃதால்

         இடையன் எறிந்த மரம்.

என்ற பாடலிலும் இடையன் எறிந்த மரம் உவமை கூறியிருப்பதை அவர் எண்ணிப் பார்த்தார்.

         உ.வே.சா அந்த இடையனிடம் “அவ்வளவு ஜாக்கிரதையாக வெட்டி விழச் செய்வது கஷ்டமல்லவா?” என்று கேட்டார்.

         அவனோ “அது கைப்பழக்கம்; இல்லாவிட்டால் பழமொழி வருமா?” என்று கேட்டான் பதிலுக்கு.

         ””என்ன பழமொழி?” என்று அவர் கேட்டார்.

         ”அதாங்க; இடையன் வெட்டு அறாவெட்டு என்ற பழமொழியைத்தான்  சொல்கிறேன். என்றான் அவன்.

         இந்த நிகழ்வைக் குறிப்பிடும் உ.வே.சா “அந்த உபமானத்தின் கருத்தை ஆயிரம் வார்த்தைகளால் விரித்து உணர்த்தப் புகுவதைவிட

“இடையன் வெட்டு அறாவெட்டு” என்ற சூத்திரத்தை மாத்திரம் சொல்லி நிறுத்தினால் போதும்” என்று எழுதுவது பழமொழிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது.

—————————————————————————————————————————-  

        

தஜிகிஸ்தான்- ரேவதி ராமச்சந்திரன்

 

Tajikistan | People, Religion, History, & Facts | Britannicaஎன் பையன் கார்த்திக் ‘அம்மா, ப்ரீத்தி, வருண், எனக்கு தஜிகிஸ்தானுக்கு மாற்றலாகி வந்திருக்கிறது’ என்று கூவிக் கொண்டே வந்தான். ‘எதுக்கடா தடிக்கி விழுந்து கொண்டு வருகிறாய்’ என அம்மா வினாவினாள். ‘தடி இல்லைம்மா, தஜிகிஸ்தான் என்று சொன்னேன்’ என்றான். ‘ஆங் அது எங்கே இருக்கு!’ ‘ரஷ்யாம்மா’. ‘இப்ப அங்கே சண்டையாமே! அங்கே ஏன் நீ போகிறாய்’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டேன் ஆர்மியில் வேலை செய்யும் ஆபிசரிடம். இந்தக் கேள்வியையே பிறகு எல்லோரும் என்னிடம் கேட்டார்கள். கழகஸ்தான், கிர்கிஸ்தான் என்று தெரிந்தவர்களுக்கு இந்த தஜிகிஸ்தான் கொஞ்சம் புதிதாகத்தான் தெரிகிறது. ‘என்னம்மா நீ இப்படி என்னிடம் கேட்கிறாய். மேலும் எத்தனை டெஸ்ட், இன்டர்வியூ, அதற்கப்புறம்தானே வெளிநாட்டு வேலை கிடைத்திருக்கிறது’ என்று என்னை சமாதானப்படுத்தினான். இதற்காக அடிக்கடி டெல்லி சென்று வந்தான். பொங்கல் கழிந்த பின் கிளம்பி விட்டான். நானும், என் மருமகள் ப்ரீத்தி, பேரன் வருண் மூவரும் லீவில் அங்கே சென்றோம். நீங்கள் எத்தனை பேர்கள் அங்கே சென்றிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் பார்த்து மகிழ்ந்த தஜிகிஸ்தானைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் எனது மனம் சங்கடப்படும், உங்களுடையதும்தான்!

சுத்தம், தண்ணீர்: தஜிகிஸ்தான் விமான நிலையம் மிகவும் சிறியது. எப்போதும் போல இறங்கினவுடனே வாஷ்ரூம் செல்லப் போன எங்களை கார்த்திக் தடுத்து விட்டான். சுத்தமான தண்ணீருக்குப் பஞ்சமில்லாத நாட்டில் எந்த இடத்திலும் வாஷ்ரூமில் தண்ணீர் கிடையவே கிடையாது. ஆனால் குளிக்கும் இடத்திலும், வாஷ்பேசினிலும் எங்கேயும், எப்போதும் குளிர் நீரும், சுடு தண்ணீரும் வரும். நாங்கள் ஒரு இராத்திரி ஒரு ஹோட்டலில் தங்கினோம். அங்கும் ரூமீல் தண்ணீர் பாட்டில் வைக்கப்படவில்லை. நல்ல வேளை நாங்கள் எடுத்துக் கொண்டு சென்றோம். இரவில் வீட்டைச் சுத்தப்படுத்துவது போல தினமும் ஒரு லாரியிலிருந்து பைப்பில் தண்ணீர் பீய்ச்சியடிக்க ரோடு பூராவும் சுத்தம் செய்கிறார்கள். எவ்ளோ பெரிய ரோடாக இருந்தாலும் சரி. ஆனால் வாஷ்ரூமில் ஏன் இப்படி, புரியவில்லை, பிடிக்கவில்லை. இந்த ஒன்றைத் தவிர இந்த நாடு பல விதத்திலும் சுவர்கபூமி தான். எல்லா இடமும் சுத்தம், சுத்தம், சுத்தம். அத்தனை சுத்தம். பாலிதீன் அதிகம் உபயோகிக்கும் நாடு. ஆனால் ஒரு பையோ, குப்பையோ எங்கேயும் பார்க்க முடிவதில்லை. அங்கே எப்படி குப்பைகளைக் களைகிறார்கள் என்று இப்போது வரை எங்களுக்குப் புரியவில்லை. அதைத் தெரிந்து கொண்டு எல்லா நாடுகளும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் அல்லவா!

Tajikistan | Central Asia Luxury Travel | Remote Landsஎங்கும் பசுமை: தண்ணீர் பிரச்சனை இல்லாததால் எல்லா இடமும் பசுமையாக இருக்கிறது. நகரத்திற்கு நடுவிலேயும் மரங்களைப் பார்க்கலாம். இது அதிசயமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. சென்னையில் கிண்டி ராஜ்பவன் அருகில் இப்படி சில மரங்களைப் பார்க்கலாம். அது கூட இப்போது அழிந்து போகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு செழிப்பான நாடு வேறு ஏதாவது உண்டா என்று தெரியவில்லை!

பூக்கள்: நிறைய குட்டி குட்டி கலர் கலர் பூக்களுடன் ரோஜாத் தோட்டம். பெரியதாக. ஆனால் வாசமில்லா மலரிது! நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இரண்டு மரங்கள் அழகாக எங்களை வரவேற்பது போல வளைந்து இருந்தன.

பழ மரங்கள்: அப்பப்பா, நான் ஒன்றும் உலகம் சுற்றும் வாலிபி (வாலிபனது பெண் பால்) அல்ல. ஆனால் நான் இப்போது குறிப்பிடும் மாதிரி  ரோடில் சாதாரணமாக கைக்கெட்டும் தூரத்தில் பழங்களைத் தாங்கிய மரங்கள் இருக்குமா என்று தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள். செர்ரி (என்ன இனிப்பு), பச்சை ஆப்பிள், வால்நட், ஆப்ரிகாட், திராட்சை, மல்பெரி (இரண்டு வகை). இவைகளை அப்படியேப் பறித்து சாப்பிடலாம். மே-ஜூனில் எங்கும் செர்ரி. அங்கு இருப்பவர்கள் இந்த செர்ரியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வடிகட்டி சர்க்கரை போட்டு குடிக்கிறார்கள். நாங்கள் உடல் நலம் கருதி சர்க்கரை சேர்க்காமல் குடித்தோம். எந்த ஒரு செயற்கை எருவோ, கலரோ சேர்க்காத பழங்கள். கண்ணைப் பறிக்கும் கொத்து கொத்து திராட்சை. இதில் என்ன விசேஷம் என்றால் எல்லோரது வீட்டிலும் இத்தனை மரங்களும் இருக்கின்றன. அவர்கள் வீட்டிற்குப் போனால் அவர்களேத் தயாரித்த நான் என்கிற ரொட்டி, பிரட், கேக் (வித விதமான கேக்குகள்) அப்பறம் இந்தப் பழங்கள் தருகிறார்கள். சில சமயம் அவர்கள் சிறிது சோம்பேறிகளோ என்று எண்ண வைக்கிற அளவிற்கு பெரிய பெரிய தடிமனான நான் (ரொட்டி) செய்கிறார்கள் அல்லது கடையில் வாங்குகிறார்கள் அதோடு இந்த ஜூஸ், ஜாம் என்று தங்களது சாப்பாட்டை முடித்துக் கொள்ளுகிறார்கள். வித விதமான தேன் கிடைக்கிறது. எலுமிச்சைத் தோலில் செய்த ஜாம் எல்லோருக்கும் பிடித்திருந்தது.  

உணவு: உணவைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன். இதைத் தவிர சாப்டி என்கிற கோன் ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடுகிறார்கள். மேலும் இனிப்பு, சாக்லேட் இவைகளுக்கு கணக்கே கிடையாது. யாரையாவது பார்த்தாலோ அல்லது கல்யாணம் சொல்ல, குழந்தை பிறந்தால் என்றோ  உடனே கை நிறைய சாக்லேட் தருகிறார்கள். இதனால் இவர்கள் யாருக்கும் எல்லா சொந்தப் பற்களும் இருக்காது. பல்லைத் தட்டி கையில் வைத்திருப்பார்கள் போலும்! ஜகஜகவென்று ஜொலிக்கும் தங்கப் பற்கள்தான். ஆனால் இவர்களுக்கு அதைப் பற்றி கவலை கிடையாது. கடைகளிலும் சாக்லேட் விதவிதமாக குவியல் குவியலாக உள்ளது. எனக்கு அதைப் பார்த்து தலை சுற்றியது. அவைகளை அப்படி பார்க்கும்போது சாப்பிடும் ஆசையே அற்று விட்டது. இன்னொன்று அசைவ உணவு. இங்கு அது சாதாரணம். ஹோட்டலுக்குப் போகும் போது நாங்கள் ஏதாவது எடுத்துக் கொண்டு போய் விடுவோம். பால் சேர்க்காமல் ‘தஜிகி டீ’ என்று அடிக்கடி குடிக்கிறார்கள். இதில் ரோஜா இலை, புதினா என்று சில நல்ல மூலிகைகளையும் சேர்க்கிறார்கள்.       

தட்ப வெட்ப நிலை: இத்தனை மரங்கள் இருப்பதாலா, மக்கள் தொகை குறைவாக இருப்பதாலா, சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருப்பதாலா எப்படியோ அங்கு எப்போதும் ஒரு குளிர்ந்த நிலை இருக்கிறது. பென்சிலால் படம் வரைந்த மாதிரி மலைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன. இதனால் எந்த நேரமும் காலாற நடக்க ஆசையாக இருக்கும்.

பூகம்பம்: நில நடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடு இது. ஜூன் 2 ஆம் தேதி பதினொன்று மணிக்கு நாங்கள் எல்லோரும் படுத்த பிறகு தட தடவென்று கட்டில் அடியில் சப்தம். பயந்து வெளியில் வந்து பார்த்தால் 5.38 ரிக்டர் அளவில் நில நடுக்கம் என்று தெரிந்தது. அப்பப்பா இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது.    

வாகனங்கள்: மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், பஸ், கார், சைக்கிள் மட்டும் தான் இருப்பதாலும், அதுவும் சீராகச் செல்வதாலும், அவற்றின் இயங்கும் சப்தமோ, ஹார்ன் சப்தமோ இல்லாததாலும், மக்களது, வாகனங்களது அடர்த்தியான கூட்டம் இல்லாததாலும் மிகவும் அமைதியான நாடாக இருக்கிறது. வாழ்க்கை முறை மிகவும் எளிமையாக இருக்கிறது. பணக்காரான நாடாக இல்லாவிட்டாலும் அவசியம் கருதி எல்லோரிடமும் கார் இருக்கிறது. மொத்தமாக வியாபாரம் நடக்கும் இடங்களுக்கு காரில் வந்து டிக்கி முழுவதும் சாமான்களை வாங்கிச் செல்வது சர்வ சாதாரண நிகழ்ச்சியாகும்.

Tajikistanமனிதர்கள்: இத்தனை சர்க்கரை சாப்பிடுவதால் பற்கள் கெட்டுப் போகலாம். ஆனால் மனிதர்களது உடம்பும், மனசும் மிகவும் மென்மையானது. சிவந்த மென்மைத் தோல், நல்ல உள்ளம். பயமில்லாமல் இரவில் வெளியில் செல்ல முடியும். எந்த நாட்டில் பெண்கள் இரவில் சுதந்திரமாகச் செல்ல முடியுமோ அது தான் நன்நாடு, அது இந்த நாடு. தெரியாதவர்களாக இருந்தாலும் வணக்கம் சொல்லுகிறார்கள். சிரித்த முகத்துடன் கை ஆட்டுவார்கள். இந்திய நாட்டு மக்களை மிகவும் மரியாதையாக நடத்துவார்கள்.

மின்சாரமும், விளக்குகளும்: இரவில் சுதந்திரமாகச் செல்ல இன்னொரு காரணமும் உண்டு. மின்சாரம் தேவைக்கு மேல் உற்பத்தி செய்வதால் இரவில் எங்கு நோக்கினும் வண்ண வண்ண கலரிலும், டிசைனிலும் விளக்குகள் எரிகின்றன. சில இடங்களில் நடை பாதைகளில் கல்யாணத்திற்குப் பந்தல் போட்ட மாதிரி இரு பக்கமும் விளக்குகள் எரிகின்றன. அதன் நடுவில் நடந்து செல்வதே ஒரு தனி ஆனந்தம். அதனால் இந்த நாடு தூங்கா நாடாக இருக்கிறது. ஆம், இரவு எத்தனை மணி ஆனாலும் மக்கள் வெளியில் வந்து குழந்தைகளை விளையாட விட்டு தாமும் உலாவி விட்டுச் செல்கின்றனர். எலெக்ட்ரிக் சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டுகின்றனர், நடை பயிற்சி செய்கின்றனர்.

முக்கிய இடங்கள்: சோமானி ஸ்குயர் மிகவும் முக்கியமான இடம்  (இந்த இடத்தில் அமெரிக்காவிலுள்ள லிபெர்டி சிலை மாதிரி ஒரு சிலை இருக்கிறது). இந்த இடத்தில் ஒரு தியேட்டரும் இருக்கிறது. அங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ம்யூசியம், லேக் என்று பொழுதுபோக்கு இடங்கள் நிறைய இருக்கின்றன. இங்கெல்லாம் இரவில் வண்ண விளக்குகளின் அடியில் நடை பயிலுவது மனத்திற்கு ரம்யமாக இருக்கும். மொத்த வியாபாரம் நடக்கும் இடங்களும் நான்கு ஐந்து இருக்கின்றன. எல்லா இடத்திலேயும் பிரெஸிடெண்ட் சிலை இருக்கின்றன. அவர்கள் அவரைக் கடவுளாகப் பார்க்கின்றனர். நிறைய இடங்களில் அவரது உருவப்படங்கள் பெரியதாக வைக்கப்பட்டுள்ளன. 

ஆப்பாக்களும், ஆக்காக்களும்: நாங்கள் விமான நிலையத்தில் இறங்கியவுடன் கார்த்திக் காரில் எங்களை அழைத்துச் செல்லும்போது டிரைவரை ‘ஆக்கா’ என்று விளித்துக் கொண்டே வந்தான். இதென்னது இவரை ‘அக்கா’ என்று நீட்டிக் கூப்பிடுகிறானே என்று யோசித்தோம். எங்கள் இடத்துக்குப் போனவுடன் ‘அம்மா இங்கே வேலை செய்யும் ‘ஆப்பாக்கள்’ உங்களைப் பார்க்க வந்திருக்கின்றனர்’ என்றான். சரி வேலை செய்பவர்களை ‘ஆப்பா’ என்று சொல்கிறான் என்று நினைத்தேன். பிறகுதான் புரிந்தது எல்லா ஆண்களையும் ‘ஆக்கா’ என்றும் எல்லா பெண்களையும் ‘ஆப்பா’ என்றும் எல்லோரும் எல்லா இடத்திலும் கூப்பிடுகிறார்கள் என்று. இனம் மாறி விட்டதோ!

நாணயம்: இங்கு உபயோகப்படுத்தப்படும் நாணயம் “சோமானி”. 1 சோமானி சுமார் 7 ரூபாயாகும். மொத்த வியாபார கடைகளில் நன்கு பேரம் பேசி வாங்கலாம். அவர்களும் இந்தியர்கள், சுற்றுல்லாப் பயணி, நிறைய வாங்குபவர்கள் என்று குறைத்துக் கொடுப்பார்கள்.

மொழியும் முழியும்: அங்கு பேசும் மொழி தஜிகி. நமக்கு அது புரியாது. ருஷ்ஷியனும் பேசுவார்கள். தஜிகி மொழியில் ஒன்று இரண்டு வார்த்தைகள் கற்றுக் கொண்டு நாங்கள் கடைக்குச் செல்லுவோம். ஒரு முறை கார்த்தியும்,   ப்ரீத்தியும் வருணுக்கு டிராயிங் பேப்பர் வாங்கச் சென்றனர். வரைந்து காட்டி, கோடு போட்டுக் காட்டியும் டிராயிங் பேப்பரைப் புரிய வைக்க முடியவில்லை. அது எங்கும் கண்ணில் தட்டுப் படாததால் வாங்க மிகவும் கஷ்டப்பட்டனர். கடைசியில் ஒரு கடையில் அதைப் பார்த்து எடுத்த போது கடைக்காரன் ‘நீங்கள் முதலிலேயே வெள்ளைப் பேப்பர் என்று சொல்லியிருக்கலாமே’ என்ற போது அழுகையும் சிரிப்பும் கலந்து வந்தது.

படிப்பு: தஜிகிஸ்தானில் மருத்துவ படிப்பதற்கான கல்லூரி உள்ளது. இது நல்ல தரமான கல்வியை குறைந்த செலவில் தருகிறது. கேரளா, தமிழ் நாடு, ஆந்திரா ஆகிய இடங்களிலிருந்து மாணவர்கள் சென்று படிக்கிறார்கள். டெல்லியிலிருந்து தஜிகிஸ்தான் செல்ல நேர் விமான சேவை இல்லாத நேரங்களில் துபாய், கத்தார் வழியாகச் செல்லலாம்.        

    ரசித்தல்: அதீத பகட்டோ, ஆடம்பரமோ, மாட மாளிகையோ இல்லாமல் எளிய வாழ்க்கையை வாழும் இவர்கள் அதனை ரசிக்கிறார்கள். ஆபரணங்களும் அதிகம் இல்லை. சாதாரணமான ஒன்று இரண்டு அணிகலங்கள்தான். இவர்களது காதல் இனிப்பு மேல் தான். இரவிலும் குடும்பத்தோடு வெளியில் சென்று பொழுதைக் கழிக்கின்றனர்.

வெளி நாடுகளுக்குச் செல்பவர்கள் இந்த தஜிகிஸ்தானையும் தங்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்த மென்மையான குளிர்ந்த சூழல், ஆடம்பரமில்லாத அமைதியான, சுத்தமான சூழ்நிலை, கள்ளங் கபடமற்ற மென்மையான சாதாரணமான மனிதர்கள், மனித நேயங்கள், சுத்தமான சுற்றுப்புரம், பச்சைப்பசலேன்ற சுவையும் சுகாதாருமுமான கனி தரும் மரங்கள், படம் வரைந்தாற் போல மலைகள் இவை எல்லாவற்றையும் கொண்ட தஜிகிஸ்தானை விட்டு வர மனமே இல்லை.

லீவு முடிந்து விட்டது. திரும்ப வர வேண்டுமே! வாழ்க்கை இங்கேதானே! தாய் நாட்டை மறக்க, மறுக்க முடியுமா!    

 

                                             

கடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்

பள்ளிக்கூட நாட்களில் வெள்ளிக்கிழமையோ, புதன்கிழமையோ மதியம் உண்ட களைப்பு தீர, ‘மாரல் சயின்ஸ்’ பீரியட் ஒன்று இருக்கும். அந்த வயதில், கதையில் இருக்கும் சுவாரஸ்யம் அது சொல்லும் நீதி போதனையில் இருக்காது!

சாதிகள் இல்லையடி பாப்பா, எம்மதமும் சம்மதம், ஆள்பவன் நீதி வழுவாமல் இருக்க வேண்டும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்ற அறிவுரைகளை சிறு கதைகள் மூலம் சொல்லிக்கொடுத்தார்கள்! கற்றுக்கொண்டவர்களுக்கு இப்போது வயது அறுபதைத் தாண்டியிருக்கும் – பின்னாட்களில் வந்த தலைமுறைக்கு நீதிபோதனைகள் அவசியம் இல்லை என முடிவு செய்து, அந்த வகுப்புகளையே தூக்கி விட்டார்கள்! இழப்பு குழந்தைகளுக்குத்தான். நல்ல சிறுகதைகளைக் கேட்பதும், அதனால் உந்தப்பட்டு, பின்னர் நல்ல புத்தகங்களை வாசிப்பதும் வழக்கொழிந்து விட்டன. சிரிப்புடனும், சிந்தனையுடனும் வளர்ந்த குழந்தைகள், இன்று அந்த வாய்ப்பே இல்லாமல் கையில் செல்லுடனும், பையில் ‘லாப் டாப்’ உடனும் சுற்றி வருகின்றன!

குட்டிக் கதைகள் வாசிப்பது எப்போதுமே சுவாரஸ்யமானது. ஶ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லாவின் கதைகள், ஜென் தத்துவக் கதைகள், தென்கச்சி வழங்கும் நீதிக் கதைகள், நாடோடிக் கதைகள், சின்ன அண்ணாமலை சிரிப்புக் கதைகள், தேவனின் சின்னஞ்சிறு சிறுகதைகள் இப்படித் தமிழ் மொழியில் ஏராளமான கதைத் தொகுப்புகள் காணக் கிடைக்கின்றன. தாத்தா, பாட்டிகளுக்கும், பெற்றோருக்கும் வீட்டில் குழந்தைகளுடன் கதைக்க நேரமில்லை. குறைந்த் பட்சம், இப்படிப்பட்ட புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தையாவது ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்று தோன்றுகின்றது.

சில குட்டிக் கதைகளைப் பார்க்கலாம்!

வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஏழை பக்தர் ஒருவர், இறைவனுடன் நேரில் பேசும் ஒரு பெரியவரிடம், “எனக்கு ஏன் கஷ்டத்திற்கு மேல் கஷ்டமாகக் கொடுக்கிறார் கடவுள்? நேற்று என்னுடைய சிறிய குடிசையும் இடிந்து விழுந்துவிட்டது. இப்போது தங்குவதற்குக் கூட இடமில்லை. நான் என்ன தவறு செய்தேன்?” என்று இறைவனிடம் கேட்டுச் சொல்லச் சொல்கிறார். இதைக் கேட்ட இறைவன், பெரியவரிடம், ‘எனக்கு ஒரு செங்கல் கொண்டுவந்து தரவேண்டும்’ என்கிறார். பெரியவரும் பக்கத்து ஊர் சென்று, நல்ல கட்டடங்களை விட்டு, இடிந்து போய் விழுகின்ற நிலையில் இருக்கும் ஒரு கட்டடத்திலிருந்து ஒரு செங்கல்லை எடுத்து வருகிறார். இறைவன், ‘ஏன் அங்கிருந்த நல்ல கட்டடங்களில் இருந்து எடுக்கவில்லை?’ என்று கேட்கிறார். அதற்குப் பெரியவர், ‘அந்தக் கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளன. இடிந்த வீட்டிலிருந்து எடுத்தது நல்லதாகப் போயிற்று. இப்போது அங்கே ஒரு புதிய வீடு கட்டுவார்கள்’ என்கிறார். அப்போது இறைவன், “அந்த பக்தனுக்கு அதிகமான கஷ்டங்களைக் கொடுத்ததும் இதற்காகத்தான். அவனுக்கு வைராக்கியம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று சொல்கிறார்.

“துன்பத்தைக் கண்டு துவளக் கூடாது. துன்பங்கள் மனிதனைப் பக்குவப் படுத்துகின்றன” என்ற கருத்தை வலியுறுத்தும் கதை இது!

(தென்கச்சி வழங்கும் நீதிக்கதைகள் – தொகுதி – 1. வானதி பதிப்பகம்).

அதில் ஒரு கதை

மலிவான விலையில் கழுதை!

முல்லா கதைகள் - கல்விமானுக்கு எழுந்த சந்தேகம் | Mulla Stories in Tamil ~  Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்

ஒவ்வொரு வாரமும் ஒரு கழுதையை சந்தையில் மிகக் குறைந்த விலைக்கே விற்கிறார் முல்லா. வழக்கமாக உடன் வரும் கழுதை வியாபாரி, “முல்லா, நான் கழுதைக்கு வேண்டிய தீவனத்தைத் திருடிக்கொண்டு வந்து போடுகிறேன். ஆனாலும் நீ விற்கும் குறைந்த விலைக்கு என்னால் விற்க முடியவில்லையே? அது உனக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது?” என்று கேட்கிறான். அதற்கு முல்லா, “ப்பு… இது ரொம்ப சுலபம். நீ தீவனப் பொருளை மட்டும்தான் திருடுகிறாய். நான் கழுதையையே திருடிக்கொண்டு வருகிறேன். அதனால்தான் என்னால் உன்னைவிட மலிவான விலைக்கு விற்க முடிகிறது!” என்றார்! (சிந்திக்க, சிரிக்க முல்லாவின் கதைகள் – நர்மதா பதிப்பகம்)

கிணற்றுத் தவளை.

கிணற்றிலேயே பிறந்து, அங்கேயே வளர்ந்த ஒரு தவளை, நீண்ட காலமாக வாழ்ந்து வந்தது. சமுத்திரத்தில் வாழ்ந்த வேறொரு புதிய தவளை ஒன்று அந்தக் கிணற்றில் வந்து குதித்தது.

“நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்றது கிணற்றுத் தவளை.

“நான் கடல் தவளை. சமுத்திரத்திலிருந்து வருகிறேன்”

“சமுத்திரமா! அது எவ்வளவு பெரிது?”

“மிகவும் பெரிது” என்றது கடல் தவளை.

தன் கால்களை அகல நீட்டி, “நீ சொல்லும் சமுத்திரம் இவ்வளவு பெரியதாக இருக்குமோ?” என்றது.

“அது இன்னமும் எவ்வளவோ பெரியது” – கடல் தவளை.

இதைக் கேட்ட கிணற்றுத் தவளை, கிணற்றினுள் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குத் தாண்டிக் குதித்து,”உன் கடல் இவ்வளவு பெரியதாக இருக்குமா?” என்றது.

“நண்பா! கிணற்றைக் கடலுக்கு எப்படி ஒப்பிட முடியும்?” என்றது கடல் தவளை.

இதை நம்பாத கிணற்றுத் தவளை, “இப்படி இருப்பதற்கு எந்தக் காலத்திலும் வழியில்லை. என் கிணற்றைக் காட்டிலும் பெரியது ஒன்று ஏது? இவன் பொய்யன். இவனை இங்கிருந்து விரட்டிவிட வேண்டும்” என்று நினைத்ததாம்!

விரிந்த நோக்கம் இல்லாதவனின் விஷயமும் இப்படிப்பட்டதுதான். அவன் தனது கருத்தோ, அனுபூதியோ சிறந்ததென்றும், அதைவிடவும் சிறந்த கருத்தோ, அனுபூதியோ இருக்க முடியாது என்றும் நினைக்கின்றான்!

(ஶ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள் – ஶ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை – 600004).

அந்தக் கதைகள் காட்டும் வாழ்வின் நிதர்சனங்கள் சுவாரஸ்யமானவை – பின்பற்றத் தக்கவை!