ராக்கெட்ரி விமர்சனம் | Rocketry The Nambi Effect Review in Tamil
 
யிரம் கண்டுபிடிப்புகளுக்கு மேல் வழங்கிய அறிவியலாளர் என்று கொண்டாடப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் கன்னத்தில் வாங்கிய ஓர் அறையில் தமது செவிப்புலன் பாதிப்புற்றுக் கேட்புத் திறன் பெரிதும் இழந்தார் என்று வாசிக்கிறோம்.  ‘நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா’ என்ற தலைப்பிலான (அதன் துணைத் தலைப்பு அய்யய்யோ அறிவியல்) நூலில், ஆயிஷா இரா நடராசன், சமூகப் பயன்பாட்டுக்கான தேடலில் எத்தனையோ பறிகொடுக்க நேர்ந்த அறிவியலாளர்களது ஆய்வுக்கூட அனுபவங்களையும், வாழ்க்கை சோதனைகளையும் விவரித்திருப்பார்.  அதிகம் சிந்தித்த சாக்ரடீஸ் பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைந்தார். கலீலியோ கண்ணெதிரே எரிக்கப்பட்ட ஆய்வுக் காகிதங்களைக் கண்ணீர் மல்க பார்த்து நின்றார். 400 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னிடம் மன்னிப்பு கேட்பார்கள் என்பதறியாது கோபர்நிகஸ் தண்டிக்கப்பட்டு மாண்டு போனார்.  
 
இதெல்லாம் நாம் கண் கொண்டு பார்க்காது தப்பிய கொடுமைகள். சம காலத்தில், அபாரமான அறிவியல் ஆய்வுத் தேடலும், ஆற்றலும், அறிவும், சாகச மனப்பான்மையும், தளராத மனவுறுதியும் – எல்லாவற்றுக்கும் மேலாக, கனன்றெரியும் தேச பக்தியும் சுடர் விட்டு ஒளிர்ந்த மனிதர் ஒருவரை தேச துரோகி பட்டம் சூட்டி (இந்த லேபிளுக்கு மேல் வேறொரு தண்டனை உண்டா என்ன?), கைது செய்து, போதுமே வேறென்ன சொல்லவேண்டும், காவல் துறையில் ஒரே ஒரு வார்த்தை சொன்னால் தலைகீழாகப் புரட்டி எடுக்கப் பயிற்சி பெற்ற போர் வீரர்களைப் பெற்றுள்ள தேசம் ஆயிற்றே…..  அப்படியான மனிதர் சரண் அடைந்துவிடாமல், உயிராகக் கருதும் தேசத்திற்கு எதிரானவன் அல்ல என்பதை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிரூபித்து நெருப்பில் இறங்கிக் கருக்காது ஜொலித்து வெளியேறி வந்த கதை தான் ராக்கெட்ரி.  அவரை வாட்டியெடுத்த தீயின் சூடும், தேசக் குடிமக்களாக உண்மை உணரும்போது நமக்குப் படும் சூடும் சேர்த்து உறைக்கிற உணர்வை வழங்கும் திரைக்கதை தான் ராக்கெட்ரி -நம்பி விளைவு!
 
மிகுந்த இறை பக்தியும், தேசப்பற்றும், சதா சர்வகாலமும் (கலாமும்!) விண்வெளி ஆராய்ச்சியில் தற்சார்போடு தன்னிகரற்று இந்தியா முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற உணர்வும் கொண்டிருக்கும் விண்வெளி அறிவியலாளர் அவர். குடும்பம், மகன், திருமணமான மகள், மருமகன், பேத்தி, இம்மியளவும் மாறாத ஆர்ப்பாட்டம் அற்ற அன்றாட விடியல் அது, அன்றாடக் குளியல், அன்றாட பூசைகள், அன்றைக்குச் சிறப்பு வழிபாட்டுக்கு வழக்கமான கோயில்.. என்று நம்பி (நாராயணன்) வீட்டில் அன்றாட அமளி துமளிகள், பாசமிகுந்த உரையாடல்கள் முடித்துக் கொண்டு ஆலயம் நுழைகிற அவர், பார்க்காத அன்றைய நாளேட்டின் முக்கிய செய்தி ஒன்றில் தான் பேசப்பட்டிருக்கிறோம், தேச துரோகி ஆக சித்தரிக்கப்பட்டிருக்கிறோம் என்று அறியாது வழிபடும் இடத்தில், ஆரத்தி எடுத்த கற்பூரச் சுடரை இவரிடம் காட்டாது முறைத்து விட்டு அந்தப் பூசாரி  அணைத்து விட்டுப் போகும் இடத்தில் தொடங்குகிறது திரைக்கதை.
 
இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) நிறுவனத்தில் ஆராய்ச்சி தொடர்பான ரகசிய ஆவணங்களை அந்நிய தேசத்திற்குக் கை மாற்றிய மிகப் பெரிய தேச துரோகச் செயலை அவர் செய்து விட்டார் என்ற செய்தி போதுமானதாக இருக்கிறது, மிக சாதாரண மக்களைக் கூட அவர்கள் அதற்குமுன் கேள்விப்பட்டிராத ஒரு மனிதருக்கு எதிராக, அவரது குடும்பத்திற்கு எதிராக, அவரது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கு எதிராகப் பொங்கி எழுந்து ஒழிக என்று குரலெழுப்ப – ஒழிந்து போ என்று சபிக்க –  தொலைத்துக் கட்டுவோம் என்று கூட்டாகக் கொந்தளிக்க வைக்க!
 
காவல் துறைக்கு ஒற்றைச்சொல் ஸ்டேட்மென்ட் தான் எப்போதும் தேவைப்படுவது, அதைச் சொன்னால் முடித்துக் கொள்ளலாம் என்பார்கள், இப்போதே விட்டுவிடுகிறோம் என்பார்கள்! உண்மையைச் சொல் என்று அவர்கள் அடிக்கும்போது, உள்ளபடியே, பொய்யை ஏற்றுக் கொள் என்பது தான் அவர்கள் பூடகமாகத் தெரிவிப்பது.  ‘பதி இழந்தனம், பாலனை இழந்தனம், படைத்த நிதி இழந்தனம் ….இனி எமக்குளது என நினைக்கும் கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம்’  என்று செம்மாந்து நின்ற அரிச்சந்திரன் போல் நின்ற அந்த மனிதர் என்னென்ன சித்திரவதைகள் எல்லாம் எதிர்கொண்டார், புறவுலகில் எத்தனை அவமதிப்புக்கு உள்ளானார், குடும்ப அமைதியை எப்படி பறிகொடுத்தார் என்பதெல்லாம் காட்சிப்படுத்தப் படுகிறது.
 
தனது கணவருக்கு எதிரான  நடவடிக்கைகள், குடும்பத்திற்கு எதிரான தாக்குதல்கள் இவற்றால் நிலைகுலைந்து பித்துப் பிடித்துப் போனவளாக ஆராய்ச்சியாளரது மனைவி சிதறிப்போகும் இடம் யாரையும் உலுக்கும்.  முன் பின் பார்த்திராத பெண் ஒருத்தியோடு படுக்கையைப் பகிர்ந்து, தேசத்தின் ரகசியங்களையும் பகிர்ந்து கொண்டதான அராஜகக் குற்றச் சாட்டை, ஆய்வுலகத்திற்கு அப்பால் ஏதும் பிடிபடாத ஓர் அறிவியலாளர் எப்படி தாக்குப் பிடிக்க முடியும்? ஆனால், குடும்பத்தின் மீதான கறையாக அடுத்தடுத்த சந்ததியினருக்கும் பிதுரார்ஜித சொத்தாக இந்த அவமதிப்பு போய்க்கொண்டே இருக்கும் என்ற பரிதவிப்பில், தற்கொலை முயற்சிக்குப் பதிலாக, பொய்களை மாய்ப்பது எப்படி என்று முடிவெடுப்பது அவர் வாழ்க்கையின் அடுத்த முக்கியமான கட்டம்.
 
நம்பி நாராயணன் அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை ஆவணப் படுத்தும் திரைப்படமாக (பயோ பிக்) முதலில் யோசித்த திரைக்கலைஞர் மாதவன், அவரது அனுமதி பெறுவதற்காக அணுகவும், திரும்பத் திரும்ப அவரோடு நடந்த உரையாடல்களின் ஒரு கட்டத்தில் – அவரது வாழ்க்கை குறித்த முக்கிய புத்தகங்கள் வாசிப்பில், ஒரு போராட்டத்தின் திரைக்கதையாக, அதனுள் பேசப்பட வேண்டிய ஓர் அறிவியலாளரது அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கைத் தடங்களையும் ஆர்வத்தோடு சேகரித்துக் காதலுற எழுதி முடித்துத் தான் விரும்பியபடி தானே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று வலுவாகத் திரையில் கொணர்ந்து இருக்கிறார். 
 
நீதிக்கான போராட்டத்தின் களைப்பு மேலிட்டாலும் கம்பீரம் வற்றாத முதிய முகத்தோடு நம்பி நாராயணனாக மாதவன் அமர்ந்திருக்க, அவரைத்  தொலைக்காட்சி சானலுக்காக நேர்காணல் செய்யும் சூர்யா (இந்தி / ஆங்கில வடிவத்தில் ஷாருக் கான்), தான் சேகரித்திருக்கும் தரவுகள் வழியே அவரது உள்ளத்தின் கதவுகளை மெல்லத் திறக்க வைக்கிறார்.  விக்ரம் சாராபாய் (ரவி ராகவேந்தர் இதமான நடிப்பு) ரசித்து வளர்த்தெடுக்கும் ஆராய்ச்சி மாணவப் பருவத்தில் இருந்து புகழ் பெற்ற பிரின்ஸ்டன் பல்கலையில் அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு அமெரிக்கப் பயணம், அதன் வெற்றியில் மிகப் பெரிய ஊதிய பலன்களோடு நாசா ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கும் வேலையைக் கூட உதறி சொந்த மண்ணில் தாயகத்தின் விண்வெளி சாதனைகளை உயர்த்தும் ஆவேசக் கனவுகளோடு திரும்புவது, அதன் அடுத்தடுத்த கட்டங்களில் பிரான்ஸ், ரஷ்ய பயணங்கள், கிடைத்தற்கரிய பொக்கிஷமான அனுபவங்களை, கருவிகளை, சாதனங்களைத் தனது நட்புறவாலும், அறிவினாலும், சாதுரியமாமுயற்சிகளாலும் பெற்றுக்கொண்டு திரும்புவது எல்லாம் சுவாரசியமாக பின்னோக்கிக் காட்சிகள் வழி சொல்லப்படுகிறது. 
 
1990 – 91 சோவியத் ருஷ்யா கோர்பச்சேவ் – யெல்ட்சின் காலத்தில் ஏகாதிபத்திய ஆசிகளோடு சீர்குலைக்கப்படும் கடைசிகட்ட தருணத்தில் அங்கிருந்து பொருள்களையும் உயிரையும் தற்காத்துக் கொண்டு, அமெரிக்க உளவாளிகள் ஊகிக்க முடியாத வான்வழியில் தேசத்திற்குத் திரும்புமிடத்தில், உள்நாட்டில் கேரள மாநில அரசியல் சதிராட்டத்தில் சந்தேகப் புயல் உருவாக்கப்படும் சதியில் சிறை வைக்கப்படுகிறது நம்பி நாராயணனின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்புமிக்க ஆராய்ச்சி பங்களிப்பும்!  
 
அத்து மீறிய காவல் துறை சித்திரவதைகள், பொய்யாக ஜோடிக்கப்படும் சாட்சியங்கள் எல்லாவற்றையும் பின்னர் சிபிஐ உடைத்தெறிந்தாலும், நீதிக்கான தொலைவு, ஆண்டுகளை விழுங்கி நிற்கிறது. தம் வாழ்நாளில் தன்னைக் குற்றமற்றவராக அய்யத்திற்கிடமின்றி நிரூபித்துக் கொண்டுவிடும் நம்பி நாராயணன், நஷ்ட ஈடு கேட்கிறார் – காசுக்காக அல்ல, இனி வேறொரு மனிதருக்கு எதிராக இப்படியான பொய்யான குற்றச்சாட்டுகள் ஒருபோதும் சாட்டப்படக் கூடாது என்பதற்காக!  இந்திய அரசு 50 லட்சமும், கேரள அரசு 1.30 கோடியும் அவருக்கு வழங்கியதையும் பதிவு செய்திருக்கிறது திரைப்படம். 
 
கதையின் மெல்லிய இந்தச் சரடில் முக்கியமான இன்னொரு வாக்கியம், இந்த தேசத்தின் நேர்மை மீதான அவரது நம்பிக்கை. அது சாதாரணமானதன்று. அந்த உறுதிதான் அவரது போராட்டத்திற்கான அடிப்படை. இந்த நம்பிக்கையை சமூகத்தில் தக்க வைக்க வேண்டியது இக்காலத்தில் மிக முக்கியமானது. உங்களது சக மனிதர்கள் ஏன் உங்கள் பக்கம் உடனே வந்து நிற்கவில்லை என்ற சூர்யாவின் கேள்விக்கு, ‘ராக்கெட் சாய்ந்தால் எப்படி உடனே நிமிர்த்த முடியும் என்று தெரிந்த அவர்களுக்கு, ஒரு மனிதன் சாய்க்கப்படும் போது என்ன செய்யணும் என்று தெரியவில்லை’ என்று கூறுவது வேதனையான உண்மை.
ஆய்வுக்கருவியில் முக்கியமான பாகத்தில் செய்யவேண்டிய சீரமைப்புப் பணிக்காக பிரான்ஸ் நாட்டுக்குத் தங்களுக்கு உதவி செய்யவரும் உண்ணி என்ற பொறியாளரது குழந்தை இங்கே தாயகத்தில் நோயிலிருந்து குணம் பெறமுடியாமல் மரித்துப் போகும் செய்தியை, அவரிடம் சேர்ப்பதில்லை மாதவன். அந்தப் பரிசோதனை வெற்றி பெற்றபின் உண்ணிக்கே நேரடியாக அந்த உண்மை தெரியவரும்போது வெகுண்டெழும் உண்ணி, ‘இனி வாழ்நாள் உன் முகத்தில் முழிக்க மாட்டேன்’ என்று போகிறவர், பின்னர், இவர் பொய்யான குற்றச்சாட்டில் சிறைப்பட்டிருக்கையில் வந்து பார்க்கும் முதல் மனிதராகத் தோன்றுவது உணர்ச்சிகர காட்சி.  அத்தனை கல்நெஞ்சத்தோடு ஆராய்ச்சி செய்பவன் தேசத்திற்கு எதிராகப் போயிருக்க முடியாது என்று இவர் மீதான நம்பிக்கை வெளிப்படுத்துகிறார்.
 
நேர் காணல் நிறைவில் சட்டென்று மாதவன் மறைந்து உண்மையான நம்பி நாராயணன் தோன்றுமிடம், சூர்யாவின் நடிப்பு, வசனங்கள், தேசத்தின் சார்பில் அவரிடம் மன்னிப்பு கோருவது எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது.  நம்பி நாராயணனின் உதவியாளர்களாக வருவோரும் இயல்பாகச் செய்திருக்கின்றனர். பெருங்குறை, அயல் நாட்டவர்களை அவரவர் மொழியில் இயல்பாகப் பேசக் காட்டாமல், தமிழில் டப்பிங் செய்திருப்பது. 
 
இசை, படத்திற்கான தேவைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. வசனங்கள் பல இடங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறது. அப்துல் கலாம் இன்னும் நேர்த்தியாக நம் மனத்தில் இடம் பெறும் வண்ணம் அந்தப் பாத்திரத்திற்கான காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  
 
சிம்ரன் மிகக் குறைவான இடங்களில் வந்தாலும் தன்னியல்பாகத் தனது நடிப்பை வழங்கி இருக்கிறார். மொத்தப் படத்தின் கனத்தையும் கனமாகவே எடையேற்றிக் கொண்ட மாதவன் சுகமாகச் சுமந்து மிக அருமையாக நடித்திருக்கிறார்.  சிபிஐ அதிகாரி, உங்களை அடிக்க மாட்டேன் என்று சொன்னபின்னும், தேநீர்க் கோப்பையை நடுங்கும் கைவிரல்களால் பிடித்துக் கொள்ளுமிடம், நியாயத்திற்காக எழுப்பும் கேள்விகள், அயல் நாடுகளில் சாமர்த்தியமாக வேலைகளை முடித்துக் கொள்ளும் உடல் மொழி என்று சிறப்பாகச் செய்திருக்கிறார். முதிய வேடத்தில் மிகவும் ஈர்க்கிறார், அதிராமல் பேசுகிறார், உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்துகிறார். யாரையும் மாணவராக ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று சொல்லப்படும் பிரின்ஸ்டன் பல்கலை பேராசிரியர் க்ரோக்கோ அவர்கள் இதயத்தில் இடம் பிடிக்கும் காட்சிகள், நோயாளியாக வரும் பேராசிரியர் மனைவி என நெகிழவைக்கும் இடங்கள் படத்தில் நிறைய உண்டு. 
 
தங்களை விமர்சிப்போரை ஒடுக்குவதற்கு இப்போதும் அதிகார பீடங்களில் இருப்போர் மிக இலகுவாக முன்னெடுக்கும் ஆயுதம், தேச துரோக குற்றச் சாட்டு தான் என்கிற போது, திரைப்படம் மேலும் நிறைய செய்திகளைக் கொண்டு வந்து சேர்க்கிறது. 
 
படத்தைப் பார்த்தபின், மிகச் சிறந்த வாசகரும், கணிதத் தேர்ச்சி மிக்க விண்வெளி ஆராய்ச்சி அறிவியலாளருமான பிரசன்னா அவர்களிடம் பேசுகையில், “நம்பி நாராயணன் அவர்களுக்கு நேர்ந்தது அநியாயம்….ஆறுதலான விஷயம் என்னவெனில், அதற்குப் பிறகும், இஸ்ரோவில் அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு இப்போதும் குறைவில்லை, ஹீரோக்களை நான் வெளியில் தேடிச் செல்ல வேண்டியதில்லை” என்றார். 
 
நம்பி நாராயணன் அவர்களது கனவு அதுவாகத் தானே இருந்திருக்க வேண்டும், வேறென்ன வேண்டும்!
 
*