புத்தன் நடந்த புனித வழி...!
பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம்-4

தீய வழியில் சென்று கொண்டிருந்த மக்களை நல் வழிப் படுத்த போதி சத்துவர் சாக்கிய வம்சத்தில் கபில வஸ்து எனும் அழகிய நகரில் அவதரித்து பெற்றோரால் சித்தார்த்தன் என பெயரிடப்பட்டு கௌதம புத்தராக மக்களை வழிநடத்தினார் என்பதை நாம் அறிவோம். அனைவரும் அறிந்தாலும்  பௌத்தம் பற்றி பேசும் பொழுது புத்தரைப் பற்றி பேசாவிட்டால் பௌத்த பிஷுக்களின் பாவம் நமக்கெதற்கு என்பதாலேயே மேற்கண்ட அறிமுகம்.

சிவனின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவர்களை ஆதி சைவர் என்பர். அவர்களே பிரம்ம புத்திரர்கள் அல்லது பிராமணர் என்றும் அறியப் படுபவர்கள். அவர்கள் காசிபர், கௌசிகர், அகத்தியர், பரத்துவாசர், கௌதமர் என்ற ரிஷிகளின் வழித்தோன்றலாதலால் அவர்களின் பெயரையே கோத்திரமாக கொண்டனர்.

அவர்களில் கௌதமர் வழித்தோன்றலே கௌதம புத்தர்.

கௌதம புத்தர் பெற்றோரையும், மனைவியையும், பிறந்த மகனையும் தவிக்க விட்டு உலக நன்மைக்காக துறவு பூண்டார் என்பதையும் நாமறிவோம்.

அரச வாழ்க்கையைத் துறந்து, இரந்து உண்டு பசியால் வாடி, காடு மேடு அலைந்து தன் கொள்கைகளில் உறுதியாக நின்று தம் பக்கம் மக்களைக்  கவர்வது ஒரு சாதாரண மனிதப் பிறவியால் இயலாத ஒன்று.

முற்றும் புகழப் படுபவரும், முற்றும் இகழப் படுபவரும் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, என்றும் இல்லை.

கௌதமர் மட்டும் விதி விலக்கல்ல. பல சோதனைகளையும் வேதனைகளையும் தகர்த்து மதக் கொள்கைகளை பரப்பி பல ஆயிரம் வருடங்கள் கடந்து இன்றும் உலக அளவில் பலரால் வணங்கப் படுகிறார்.

புத்த மதத்தின் மக்களை மயக்கும் கொள்கைகள் சிலவற்றை சென்ற பதிவிலே பார்த்தோம்.

தேவ பாஷை என்று கூறப்பட்ட சமஷ்கிருதம் கற்றலும் கற்பித்தலும் ஒரு பிரிவினருக்கு மட்டுமே உரிமையானது.
ஆனால் புத்தர் தோற்றுவித்த பாலி மொழி பாமரனையும் சென்றடைந்தது.
பாலி மொழியில் கொள்கைகள் எழுதப்பட்டாலும் பௌத்தம் சென்ற நாடுகளில் அந்த அந்த வட்டார மொழிகளிலே மொழி பெயர்த்து ஓதப்பட்டது. பௌத்தம் எங்கும் பரவ இது முதல் காரணம்.
புத்தர் தன்னுடைய சிஷ்யர்களை பல பிரிவுகளாக்கி அவர்களை தொண்டர்களுடன் வெவ்வேறு இடங்களுக்கும் அனுப்பினார். ஒவ்வொரு பிரிவும் சங்கம் என்றழைக்கப் பட்டது. சங்கத்தின் மூத்த பிஷுக்கு அதிகாரம் அனைத்தும் வழங்கப்பட்டது. பௌத்தம் உலகில் நிலை பெற ஒழுங்கு படுத்தப் பட்ட சங்கம் ஒரு மூல காரணம். பௌத்த சங்கத்தைப் பார்த்துதான் பிற்காலத்தில் வைதீக மதத்தை வளர்க்க சங்கர மடங்களும் பிற சைவ மடங்களும் தோன்றின.
மடங்களின் தலைவர்களாக மதகுருக்கள் தோன்றினர்.

ஒன்றுமறியாத பாமரன் அருகே உள்ள புத்த பிஷுவை அணுகி பாலி மொழியில்
புத்தம் சரணம் கச்சாமி ( புத்தரை அடைக்கலம் அடைகிறேன்)
தம்மம் சரணங் கச்சாமி ( தர்மத்தை அடைக்கலம் அடைகிறேன்)
சங்கஞ் சரணம் கச்சாமி ( சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்)

என்று திரி சரணத்தை உறுதி மொழியாக எடுத்தால் பௌத்த மதத்தினாகி விடுவான். அனுபவம் அடைய அடைய அவனே தலைமை பிஷூ ஆக முடியும். தலைமை பதவி ஒரு வகுப்பினருக்கு மட்டும் உரிமை இல்லை என்ற கொள்கை அனைவரையும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.

பௌத்தத்தை பரப்ப பாலி மொழியை தோற்றுவித்த புத்தர் அவற்றை எழுத்தில் வடிக்க பிரமி என்ற எழுத்தையும் உருவாக்கினார். கி. மு 3 ம் நூற்றாண்டு முதல் கி. பி 2 ம் நூற்றாண்டு வரை பிரமி எழுத்துக்களிலே சாசனம் வடிக்கப் பட்டன. பிரமி எழுத்து வடிவத்திலிருந்து தோன்றியதே நாகரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளின் எழுத்து வடிவங்கள் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். கிரந்த எழுத்துக்கள் 9 ம் நூற்றாண்டு வாக்கில்தான் தோன்றியதாம்.

புத்தரின் கொள்கைகள் மாமன்னன் அசோக சக்கரவர்த்தி முதல் சிங்கள நாட்டிலோ, சீன நாட்டிலோ வசித்த சாமான்யன் வரை அனைவரையும் கவர்ந்தன. பாரதம் தவிர ஏனைய நாடுகளில் இன்றும் நிலை பெற்று பௌத்தம் வளர காரணங்களைப் பார்ப்போம்.

பௌத்த சங்கம் கட்டுப் பாடுகளுடன் பணி செய்தன. துவக்கத்தில் பிஷுக்கள் தங்குவதற்கு ஊருக்கு வெளியே விகாரைகளும் பள்ளிகளும் கட்டப்பட்டன.
பிஷுகள் ஒரு வேளை மட்டும் இரந்து உண்டனர்.
திரிபடுகம் எனப்படும் பௌத்த கொள்கைகள் தொகுக்கப் பட்டு கி. பி இரண்டாம் நூற்றாண்டு வரை எழுதா மறையாகவே ஓதப் பட்டது.
பள்ளிகளின் கூடங்களில் அனைவர்க்கும் கல்வி போதிக்கப் பட்டு இன்றும் பள்ளிக் கூடம் என்ற பெயரை தமதாக்கி குழந்தைகளின் அறிவை மேம் படுத்திக் கொண்டுள்ளன.
விகாரைகளில் மக்கள் மருத்துவம், கால்நடை மருத்துவம் அனைவர்க்கும் இலவசமாக வழங்கப் பட்டது.
இயலாதவர்க்கு இலவசமாக உணவு வழங்கப் பட்டது.
அனைத்திற்கும் அரசர்களும் நிலக் கிழார்களும் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு உதவினர்.
செல்வத்தை நிலை நிறுத்த ஏதோ ஒரு தெய்வத்தின் கருணை அவர்களுக்கு வேண்டியிருந்தது. அதற்கு மதத்தலைவரின் ஆசியும் வேண்டியிருந்தது. எனவேதான் அந்த தாராளம்.
மாற்றுத் திரனாளிகளுக்கு அனைத்தும் இலவசமாக கிடைத்தது.
சிறைச்சாலைகள் அறச்சாலைகளாகின.
நற் கொள்கைகள், நற் செயல்கள் இருந்தும் காலப்போக்கில் பாரதத்தில் பௌத்த மதம் அழிய காரணம் இருக்க வேண்டுமே.

ஆம்.பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்பே செல் வாக்கு பெற்று வளர்ந்திருந்த வைதீகம், சமண மதங்களுடன் போட்டியிட்டு சண்டையிட்டு, எதிர்ப்புகளை சமாளிக்க போராட வேண்டி இருந்தது.

பௌத்த பிஷுக்கள் ஆள்பவரை நெருக்கத்தில் வைத்து செல்வத்தை பெருக்கினர்.
செல்வம் பெருக பெருக பிஷுக்கள் தம் கடமை மறந்து கொள்கைகளை காற்றில் பறக்க விட்டனர்.
மக்களிடம் மதிப்பு குறையத் துவங்கியது.
கி பி 5 – 6 நூற்றாண்டுகளில் சமண மதம் வைதீக, பௌத்த மதங்களை பின் தள்ளி வேகமெடுத்து வளர்ந்தது.
விளைவு பௌத்த கோவில்கள் சமண கோவில்களாகவும் பிட்சுகள் வகித்த மலைக் குகைகள் சமண குகைகளாக மாற்றப்பட்டன.
மன்னரும் செல்வந்தரும் சமணத்தால் ஈர்க்கப் பட்டனர். சமண குருக்களுக்கு தலை வணங்கத் துவங்கினர்.
வைதீக மதமும் தம் கொள்கைகள் சிலவற்றை மாற்றி மீண்டெழத் துவங்கியது.
மெல்ல மெல்ல பௌத்தம் இங்கு மெலிந்தது. இருப்பினும் மற்றைய நாடுகளில் இன்றும் நிலை பெற்றுள்ளது.

இவ்வளவு சிறப்புடன் இருந்த பௌத்தத்தையும் வைதீக மதத்தையும் புறந்தள்ளி தன்னை சில காலம் நிலைப் படுத்திக் கொண்ட சமண மதத்தைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.