குவிகம் குழுமம் – குவிகம் மின்னிதழ்

குவிகம் இலக்கியவாசல், அளவளாவல், பதிப்பகம், ஒலிச்சித்திரம் , குறும் புதினம் , ஆவணப்படம்

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

ராஜேந்திரன்  (தொடர்ச்சி) 

ராஜராஜனின் புகழால் ராஜேந்திர சோழனின் பெருமைகள் மறைந்துபோனதா?..பிரமிக்கும் போர் சாதனைகள்! | Battles won and titles won by Rajendra Cholan! | Puthiyathalaimurai - Tamil News ...

பட்டியல்

ஈழநாடு கொண்ட பின் அடுத்தது என்ன செய்யலாம்?
இராஜேந்திரன் போட்டு வைத்த பட்டியல் மிகப் பெரியது.

பட்டியலில் முதலில் ஈழம்.

அது முடிந்தது.

அடுத்தது – சோழர்களின் பரம்பரை வைரியான பாண்டியர்!

அப்படியே சேரனையும் விட்டு வைக்கலாமா?

வருடம் 1018:

ராஜேந்திரன் அரசு கட்டில் ஏறி ஆறு வருடங்களாகியது.
அவனது திக் விஜயம் தொடங்கியது!
‘திக் விஜயம்’ என்றால் என்ன என்று அப்பாவித்தனமாகக் கேட்கும் வாசகர்களே!

திக் விஜயம் என்றால், பல திசைகளிலும் பயணப்பட்டு – எதிரிகளை வென்று – பொருள் சேர்த்து வருவது!
ஒளிந்து திரிந்த பாண்டியர்களின் மீது ராஜேந்திரனின் பார்வை படிந்தது.
சரித்திரத்தை நன்கு படித்து உணர்ந்திருந்த ராஜேந்திரன், தலைநகரத்தைக் காக்க வேண்டியது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.

தஞ்சையைக் காக்க பெரும் படையை அமர்த்தி விட்டே அவன் போருக்குப் புறப்பட்டான்.
பாண்டியத் தாக்குதல் தொடங்கியது.
பாண்டியன் தோற்று உயிர் பிழைக்க, அகத்தியர் வாழ்வதாகக் கூறப்படும் மலய மலைக்குச் சென்று தஞ்சமடைந்தான். ராஜேந்திரன் மதுரையில் பாண்டியனின் முத்துக்குவியல்களைக் கைப்பற்றினான். தன் மகனை ‘சோழ பாண்டியன்’ என்ற பட்டத்துடன் மதுரையை ஆள பட்டம் சூட்டினான். அவனுக்கு பாண்டியர்களின் பட்டப்பெயரான ‘ஜடாவர்மன்’ என்ற பட்டமும் அளிக்கப்பட்டது.
 
சேரமன்னர்கள் பொதுவாக, தங்கள் நாடு இயற்கை அரண்களால் காக்கப்பட்டது. இதனால், யாரும் தங்களை அணுக முடியாது என்று நம்பியிருந்தனர். ஆனால், ராஜராஜனின் படையெடுப்பு அவர்களை ஆட்டி விட்டது. சேரர்கள், அதிலிருந்து மீண்டு மறுபடியும் கேரளத்தில் ஆதிக்கம் செய்யத் தொடங்கும் நேரம். ஆனால் ராஜேந்திரன் பட்டியலில் பாண்டியர்களுக்கு அடுத்தபடியாக எழுதப்பட்டிருந்த பெயர்:
‘சேரன்’!
சேரநாடு மீண்டும் கைப்பற்றப்பட்டது. சேரமன்னர்கள் பரம்பரையாக அணிந்திருந்த முடியும், செங்கதிர்மாலையும் பறிக்கப்பட்டது. ‘சோழ பாண்டியன் ஜடாவர்மன்’ – சேர நாட்டுக்கும் பிரதிநிதியாக்கப்பட்டான்.
பட்டியலில் அடுத்து வந்தது ‘பழந்தீவுகள்’!
அது கடலால் காக்கப்பட்டிருந்தது.
அங்கு சங்குகளின் ஒலி என்றும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.
பழந்தீவுகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன!

பட்டியலில் அடுத்தது ‘சாந்திமத்தீவு’!
அதன் அரண்மனை, எதிரிகள் எவரையும் நெருங்க விடாமல் அமைக்கப்பட்டிருந்தது.
‘காற்றுக்கென்ன வேலி.. கடலுக்கென்ன மூடி!’
ராஜேந்திரன் படை காற்றைப்போலப் பரவியது.
அங்கு உலக மன்னர்களை இருபத்தோரு முறை வெற்றி கண்ட பரசுராம முனிவரால் வைக்கப்பட்டிருந்தது ‘செம்பொன் முடி’!
ராஜேந்திரன் அதையும் கைக்கொண்டான்!
சோழநாட்டுக்குத் தென் திசை முழுதும் ராஜேந்திரனின் வசப்பட்டது.
இனி வடமேற்குப் பகுதி.
பட்டியலில் அடுத்தது :‘சாளுக்கிய நாடு’.
1021-22: முன்பு தோற்கடிக்கப்பட்ட சாளுக்கியம் தான்!
மறுபடியும் அதன் மீது போர்.
ஏன்?
ஐந்தாம் விக்கிரமாதித்தனின் சகோதரன் ‘ஜயசிங்கன்’!
1016ல் அவன் முடிசூட்டிக்கொண்டான்!
சோழர்களிடம் முன்பு இழந்த பகுதிகளை மெல்ல மெல்ல மீட்கத் தொடங்கினான். 1019 ல் ஜயசிங்கன், சோழரையும், சேரரையும் வென்றதாகத் தன் கல்வெட்டில் பதித்தான்.
இந்தச்செய்திகளால், ராஜேந்திரனின் பட்டியலில் ‘மீண்டும் சாளுக்கியம்’ – என்று எழுதப்பட்டது.
அப்புறம் என்ன!
சோழப்படையெடுப்பு தான்!
சுருக்கமாக அதைச்சொல்வோம்!
‘இரட்டபாடி கைப்பற்றப்பட்டது.
அளவற்ற செல்வமும் ராஜேந்திரன் வசப்பட்டது.
முசங்கியில் நடந்த இந்த யுத்தத்தில் ஜயசிங்கன் புறமுதுகு காட்டி மறைந்து கொண்டான்’.
ராஜேந்திரன், தலைநகரம் திரும்புமுன், மண்ணைக் கடகம் (மானியகேடா), கல்யாணி அனைத்தையும் வென்று திரும்பினான்.

இங்கு, வாசகர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும்!
தொலைவு நாடுகளில் படையெடுத்தால் அதை ஆள எண்ணுவது சிரமமாகும். அதனால் அதை வென்று அதன் செல்வத்தை மட்டும் கவர்ந்து, தலைநகரம் அடைவதே அரசர்களின் குறிக்கோளாக இருந்தது. இது அசோகர், அலெக்ஸாண்டர், சமுத்திரகுப்தன் அனைவரும் கையாண்ட கொள்கையாகும். குப்தர்கள் தொலைவிலிருந்த காந்தாரத்தை ஆளமுடியாமல் ஹூணர்களால் அடைந்த தொல்லை நாமறிந்ததே!
ராஜேந்திரன் தலைநகரம் திரும்பிய உடன், ஜயசிங்கன் மெல்ல மெல்ல, துங்கபத்திரை ஆற்றின் வடக்குப் பகுதிகளை மீண்டும் கைப்பற்றி சிறு சோழப்படைகளையும் வென்று ஆண்டான்.
மீண்டும் ராஜேந்திரனின் பட்டியலுக்கு வருவோம்.
இப்பொழுது ‘வேங்கி’ என்று சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது!

வேங்கியின் கதை, சரித்திரம் சொல்லும் கதை.
வேங்கியில், முதலாம் சக்திவர்மனின் ஆட்சி முடிந்ததும், அவன் தம்பி விமலாதித்தன் அரியணை ஏறினான். அது ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் போட்ட ஒப்பந்தத்தின் விளைவு.
விமலாதித்தன், ராஜராஜனின் மகள் குந்தவியை மணந்திருந்தது அனைவரும் அறிந்ததே!
விமலாதித்தன்- குந்தவிக்கு ஒரு மகன் இருந்தான்.
அவன் பெயர் என்ன தெரியுமா?
உங்கள் ஊகம் சார்தான்!
தாத்தா பெயர் தான்.
அவனும் ராஜராஜனே!
முழுப்பெயர் ‘ராஜராஜ நரேந்திரன்’!
விமலாதித்தன் ஆட்சிக்குப் பிறகு ராஜராஜ நரேந்திரன் முடிசூட்டிக்கொள்ள நாள் குறித்தான்.
சாளுக்கிய மன்னன் ஜயசிங்கன் இதை எதிர்த்தான். அவன், ராஜராஜ நரேந்திரனின் ஒன்று விட்ட சகோதரன் ‘விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனை’ அரியணையின் அமர்த்தப் போராடினான். ஜயசிங்கன், விஜயாதித்தன் இருவரும் கலிங்க, மற்றும் ஒட்டர் நாடுகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டானர். அந்தப் படைகள் வேங்கியைத் தாக்கின. விஜயாதித்தன் அரியணையில் அமர்ந்தான்.
ராஜராஜ நரேந்திரன் – தாய் மாமன் ராஜேந்திர சோழனிடம் சென்று முறையிட்டான்.
ராஜேந்திரன் காஞ்சியிலிருந்த தனது படைத்தளபதி ‘விக்கிரம சோழிய வரையன்’ என்பவனுக்கு ஓலை அனுப்பி உடனடியாக வேங்கியைத் தாக்குமாறும் சோழப்பெரும்படை தஞ்சையிலிருந்து விரைவில் வந்து சேரும் என்றான். சோழர் படைத்தலைவன் விக்கிரமன் வருவதை அறிந்த விஜயாதித்தன், வேங்கி அரண்மனையைக் காலி செய்து விட்டு ஓட்டம் பிடித்தான். படைத்தளபதி விக்கிரமன் – ஜயசிங்கன், கலிங்கன், ஒட்டர் அனைவரையும் புறங்கண்டான்.
ராஜேந்திரனும் தனது பெரும் படைகளுடன் முதலில் வேங்கியை அடைந்தான். தன் தங்கை மகன் ராஜராஜ நரேந்திரனுக்கு முடிசூட்டினான். அதற்குள், விக்கிரமன், ஜயசிங்கனைத் தொடர்ந்து கோதாவரி நதிவரை சென்று துரத்திவிட்டான்.
ராஜேந்திரன் கோதாவரிக்கரை வந்து சேர்ந்தான். வெற்றி கண்ட விக்கிரமனை ஆரத் தழுவிக்கொண்டான். அவனுக்குப் பல பட்டங்கள் அளித்தான். அந்தப் பட்டங்கள் :

  • நால்மடி வீமன்,
  • சோழனச்சக்கரன்,
  • சாமந்தாபரணம்,
  • வீரபூஷணம்,
  • எதிர்த்தவற்குக்காலன்,
  • ஜயசிம்மன் குலகாலன்!

அன்று இரவு கோதாவரிக்கரையில், பௌர்ணமி நிலவு அந்த நதிக்கரையை ரம்மியமாகச் சாயம் பூசியது. சோழக்கூடாரங்களில் வெற்றிக் களிப்புடன் ஆட்டம், பாட்டம், கூத்து எல்லாம் நடந்தது. ராஜேந்திரன் தனது மஞ்சத்தில் இருந்து தளபதி விக்கிரமனிடம் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தான்.
ராஜேந்திரன் கண்கள் கனவுலகில் மிதந்தன.
“விக்கிரமா! என் மனத்தில் என்ன ஓடுகிறது தெரியுமா?” என்றான்.
“சக்கரவர்த்தி! ஆணையிடுங்கள்! இந்த அகில உலகையும் தங்கள் காலடியில் கொண்டு வருவேன்” – அவனும் கனவுலகில் மிதந்தான்.
“விக்கிரமா! உனது வீரம் மட்டுமல்ல, உனது போர்த்திட்டங்களும் என்னை மிகவும் கவர்ந்தது. அது, உன் மீது எனக்குப் பெரும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. இந்த வேங்கிப் போர் உனக்கு ஒரு பிள்ளையார் சுழி போலத் தான். இனி மேல் நீ செய்யப்போவது இந்தியச் சரித்திரத்தில் தங்கத்தில் எழுதப்படும்.” என்றான்.
விக்கிரமனின் தோள்கள் தினவெடுத்தன.
மன்னவன் ஆணையிட்டான்.
‘மன்னர் மன்னா! என் பாக்கியம் தான் என்னே!” என்று விக்கிரமன் ராஜேந்திரன் பாதங்களைத் தொட்டு வணங்கினான்!
அது என்ன ஆணை!
சற்றுப் பொறுத்திருந்தால் நமக்கும் தெரியும்.
பொறுத்திருப்போம்!

கங்கை கொண்ட சோழபுரம்- எஸ். கௌரிசங்கர்

ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்" - கங்கை கொண்ட  சோழபுரம் மக்கள் | "Rajendra Chola's birthday should be celebrated as a  state festival" - Gangai konda ...

தஞ்சை அரண்மனையில் தன் மாளிகையின் மேல்மாடத்தில் ஒரு விசாலமான அறையில் ஓர் இருக்கையில் சாய்ந்து படுத்திருந்தார் வல்லவரையர் வந்தியத்தேவர். அறையின் ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து வந்த சிறிய வெளிச்சத்தில் பிராயம் தொன்னூறைக் கடந்து விட்டது அவர் தேகத்தில் சில இடங்களில் தெரிந்தாலும், முகத்தின் பொலிவும் கண்களில் ஒளியும் இன்னும் குறைந்துவிடவில்லை என்பதும் தெரிந்தது. உப்பரிகையின் ஒரு புறத்திலிருந்த சாளரத்தின் வழியே வீசிய மெல்லிய மார்கழிக் குளிர் காற்று, மார்பின் மீது போர்த்தியிருந்த மெலிதான ஆடையை விலக்கிய போது அவர் மார்பின் அகலமும் தோள்களின் வீக்கமும் இன்னமும் வீர அடையாளங்கள் அவர் உடலில் மிச்சமிருந்ததை  பறைசாற்றின.

தொலைவிலிருந்து வந்த கோவில் மணியோசையைக் கேட்டு, மெதுவாக எழுந்து நின்று சாளரத்தின் அருகே வந்தார் வல்லவரையர். தூரத்தில் பெருவுடையார் கோவிலின் வானளாவிய விமானம்  முழுமதிக்கு இரு தினங்கள் காத்திருக்கும் நிலவின் ஒளியில்  ஒளிர்ந்து கொண்டிருந்தது. இன்று பிரதோஷம். அர்த்த ஜாம பூஜைக்கான மணியோசை. சாளரத்தின் அருகில் நின்றபடியே கைகூப்பி தொழுது நின்றார் வல்லவரையர்.  சட்டென்று திரும்பிப் பார்த்த போது, பின்னால் நின்று கொண்டிருந்தார் குந்தவை தேவியார்.

“இன்று மாலை தாங்கள் பெருவுடையாரைத் தரிசிக்கச் செல்லவில்லையா?”

“இல்லை தேவி! அதனால்தான் இங்கிருந்தே இறைவனைத்  தொழுது கொண்டிருக்கிறேன்”

“ஏன்… உடல் நலமில்லையா?”

“அதுவும் இல்லை. தொன்னூறு வயதுக் கிழவனுக்கு இருக்க வேண்டிய தேக நலத்துடன்தான் இருக்கிறேன்”

“பின்னர் ஏன்…?”

வல்லவரையர் மறுமொழி எதுவும் கூறாமல், மெல்ல தன் இருக்கையை நோக்கிச் சென்று அதில் சாய்ந்து கொண்டார். பின்னாலே வந்த தேவியும் அவர் அருகே வந்து இன்னொரு இருக்கையில் அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் அவர்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை. பிறகு குந்தவை மெதுவாகப் பேசத் தொடங்கினார்.

”உங்கள் உள்ளத்தில் ஏதோ ஒன்று அரித்துக் கொண்டிருக்கிறது என்பது எனக்குப் புரிகிறது. இன்று இரவு நீங்கள் வழக்கம் போல பிரதோஷ விரதமிருந்து உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. உடலையும் உள்ளத்தையும் இப்படிச் சோர்வாக்கிக் கொண்டால் என்ன ஆவது?”

“பயப்படாதே தேவி! ஒரு வேளை உணவருந்தாவிட்டால் என் உடலுக்கு ஒன்றும் ஆகிவிடாது”

“சரி! உங்கள் உள்ளத்தில் இருக்கும் சோர்வுக்கு என்ன காரணம்? அதைச் சொல்லுங்கள்”

வந்தியத்தேவர், குந்தவை தேவியை ஒரு முறை உற்றுப் பார்த்தார். பிறகு மெதுவாகப் பேசத் தொடங்கினார்.

“தேவி! நான் இந்த தஞ்சைக் கோட்டைக்கு வந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. தங்களின் தமையனார் ஆதித்த கரிகாலரின் ஓலையை எடுத்துக் கொண்டு வந்து தங்கள் தந்தை சக்ரவர்த்தியிடம் கொடுக்க உள்ளே நுழைந்தேன். அன்று முதல் என் வாழ்வின் போக்கே மாறிவிட்டது. சக்ரவர்த்தி, மகாராணி இருவரின் அன்புக்கும் பாத்திரமானேன். பின்னர் பழையாறையில் தங்களைச் சந்தித்தேன். தங்களின் அன்பையும் முழுமையாகப் பெற்றேன். இலங்கை சென்று அருள்மொழி வர்மரின் உற்ற நண்பனானேன்”

“இதெல்லாம் எனக்குத் தெரிந்ததுதானே? இப்பொழுது அதற்கு என்ன?”

“சொல்கிறேன் தேவி! உத்தமச் சோழர் அரியணை ஏறியவுடன், நானும் அருள்மொழி வர்மரும் ஒரு பெரிய கடற்படை அமைத்துக் கீழைக் கடலில் சுதந்திரமாக உலவி வந்த கடற் கொள்ளைக்காரர்களையும் அராபியர்களையும் வென்று அவர்களின் கொட்டத்தை அடக்கினோம். பின்னர் எங்கள் வெற்றிப் பயணம் இலங்கையை நோக்கித் திரும்பியது. சோழ அரசுக்கு அடிபணியாமல் பாண்டியருக்குத் துணை நின்ற இலங்கை அரசை முழுவதுமாக வீழ்த்தினோம்”

“அருள்மொழியோடு நீங்கள் தோளோடு தோள் நின்று போரிட்டதை இந்த நாடே அறியுமே?

”அருள்மொழி வர்மர்  சோழ அரசின் மன்னராக முடி சூடிய பின்னர், அவர் என்னைப் சோழத் தளபதியாக்கினார். நாங்கள் காந்தளூர்ச் சாலையையும், வேங்கியையும் வென்றோம்.  அதுமட்டுமல்ல. ராஜராஜர் பின்னர் சோழ அரசின் தனாதிகாரியாகவும் என்னை நியமித்திருந்தார். அவரின் இறுதிக் காலம் வரை நானே அந்தப் பதவியில் இருந்தேன். அப்போது, இந்தத் தஞ்சைக் கோட்டையில் மட்டுமல்ல இந்த சாம்ராஜ்யம் முழுவதும் என் அதிகாரம் எங்கும் பரவியிருந்தது. என் செவிக்கு எட்டாத எந்த விஷயமும் இருந்ததில்லை. என் அனுமதியின்றி எந்தச் செயலும் நடந்ததுமில்லை”

”அதுவும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே? இதையெல்லாம் இப்போது எதற்கு…”

”கொஞ்சம் பொறுமையாயிருங்கள் தேவி!”

வந்தியத்தேவர் தன் பார்வையை வேறு எங்கோ செலுத்தத் தொடங்கினார். அவரின் எண்ண ஓட்டம் பல்வேறு திசைகளில் செல்வதை அவரின் முக அசைவுகளிலிருந்து தெரிந்து கொண்டார் குந்தவை தேவியார்.  சற்றுப் பொறுத்து வந்தியத்தேவர் தொடர்ந்து பேசலானார்.

”அதற்குப் பின்னால், அமரபுஜங்க பாண்டியரை நாங்கள் வெற்றி கொண்ட போதும்,  போர் முடிந்ததும் நந்தினியை சந்திக்க என்னையே அனுப்பினார் அருள்மொழி வர்மர்”

“நல்ல வேளை, அப்போது தங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது” என்று சற்றுக் கேலியாக இடைமறித்தார் குந்தவை தேவி. வந்தியத்தேவரின் முகத்தில்  சிறு புன்னகை தோன்றியது அந்த சிறிய விளக்கொளியில் நன்றாகத் தெரிந்தது.

“அருள்மொழி வர்மருக்கு என் மீது இருந்த நம்பிக்கை கூட என்னைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் தமக்கைக்கு இல்லை போலிருக்கிறது”

“நந்தினியின் உள்ளத்தை நான் நன்றாக அறிவேன். அவள் விருப்பம் என்ன என்பதும் எனக்குத் தெரியும். நிகழ்வுகள் வேறு வகையில் இருந்திருந்தால், ஒருவேளை  தாங்கள் நந்தினியை மணந்து கொண்டு பாண்டிய மன்னராக இருந்திருப்பீர்கள். அருள்மொழியையே எதிர்த்துப் போர் புரிந்திருப்பீர்கள்.  பெருவுடையாரின் கருணையால்தான் அப்படியெல்லாம் நடக்காமல் போனது”

வந்தியத்தேவர் இப்போது சற்று பலமாகவே சிரித்தார்.

“சோழ அரச குமாரியை எனக்கு மணம் செய்து கொடுத்து, என்னைத்தான் வீட்டு மாப்பிள்ளையாக ஆக்கி விட்டார்களே? சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய பெரும் பேரரசனாக ஆக வேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் சரித்திரத்தில் முதன் முதலாக, இப்படி வீட்டோடு மாப்பிள்ளையாக ஆவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை”

குந்தவையும் இப்போது அவரோடு சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.

“ஓ! அதுதான் இப்போது இந்த மனச் சோர்வுக்குக் காரணமோ?”

வல்லவரையரின் முகம் சட்டென்று மாறியது.

“இல்லை தேவி! காரணம் அதுவல்ல. பேச்சு திசை மாறிவிட்டது”

“சரி! மேலே சொல்லுங்கள்”

வந்தியத்தேவர் சிறிது நேரம் மௌனம் சாதித்தார். பிறகு மீண்டும் பேசத் தொடங்கினார்.

“இலங்கையில் அனுராதபுரத்தை சோழப்படை கைப்பற்றிய போது, இளவரசர் ராஜேந்திரர் வாலிபர். என் தலைமையில் அந்தப் போரை நாங்கள் நடத்தியபோது அவரை எனக்குக் கீழே செயலாற்ற அருள்மொழிவர்மர் பணித்திருந்தார். ஆயுதப் பயிற்சியையும் போர் நுணுக்கங்களையும் என்னிடமிருந்தே கற்றார் ராஜேந்திரர்”

“ஆமாம்… ராஜேந்திரனே என்னிடம் பலமுறை இதைச் சொல்லி இருக்கிறான்”

“ராஜேந்திரர் ஆட்சிக்கு வந்த பிறகு, பாண்டிய மணி முடியும் வாளும் இரத்தின ஹாரமும் இலங்கை மலையில் ஒளித்திருந்ததை தேடிக் கண்டு பிடிக்கப் பெரும் படையுடன் போனார். அப்போதும் என்னை அவருடன் கூட்டிச் சென்றார்.  நான் சொல்லிக் கொடுத்த வழியிலே சென்றுதான் அந்த மணி முடியையும் ஹாரத்தையும் மீட்டுக் கொண்டு வந்தார்”

குந்தவை தேவியாருக்கு இன்னும் வல்லவரையரின் உள்ளத்தில் இருப்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் பொறுமையுடன் கேட்கத் தீர்மானித்தார்.

“பத்தாண்டுகளுக்கு முன்னால், ராஜேந்திரர் சோழத் தலைநகரைத் தஞ்சையிலிருந்து சோழபுரத்துக்கு மாற்றிக் கொண்டார். கொள்ளிடத்துக்கு வடக்கே தலைநகர் இருந்தால், வடதிசை நோக்கி படையெடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்று காரணம் சொல்லப்பட்டது”

“உண்மைதானே? அங்கிருந்து சென்றுதான் சோழப் படைகள் இன்று வேங்கியைக் கடந்து, கலிங்கத்தை வென்று, கங்கைக் கரை வரை சென்று வெற்றி வாகை சூடி வந்திருக்கின்றன. மேலும், சோழ மன்னர்கள் தலைநகரை மாற்றுவது ஒன்றும் புதிதல்லவே? மனுநீதிச் சோழர் காலத்தில் ஆரூரில் இருந்த தலைநகர், பின்னர் உறையூருக்குச் சென்று அங்கிருந்து பழையாறை மாறி வந்து, என் தந்தை காலத்தில் தஞ்சைக்குப் பெயர்ந்தது. இப்போது சோழபுரத்துக்குப் போயிருக்கிறது. இதில் என்ன குறை?”

“தலைநகரை மாற்றியதில் எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் மாமன்னர் இந்தத் தஞ்சையையும் அதில் இருப்பவர்களையும் முழுவதுமாக மறந்து போனதுதான் வருத்தமாயிருக்கிறது.”

குந்தவைக்கு ஏதோ சற்று புரிவதுபோலத் தோன்றியது.

“வடதிசை நோக்கிப் போர்ப் படை புறப்படுவதற்கு முன்னால், நம்மிடம் ஆசி பெற ராஜேந்திரர் தஞ்சைக்கு வந்திருந்தார்.  அப்போது என்னையும் அவருடன் அழைத்துப் போவார் என்று எதிர்பார்த்தேன். அப்படி நடக்கவில்லை. எனக்குப் பதில் அரையன் ராஜராஜனைத் தளபதியாக்கி அழைத்துப் போனார். எனக்குப் போர் புரியும் பிராயம் கடந்துவிட்டதென்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது”

“அதுவும் உண்மைதானே?’

“தேவி! நெஞ்சில் உரமும் தோளில் திணவும் இன்னும் மிச்சம் இருக்கின்றன” என்று பதில் சொன்ன வல்லவரையர் தொடர்ந்து, ”அது போகட்டும். மன்னர் தலைநகரை மாற்றிக் கொண்டு போன பின்னர், தன் மனத்தையும் மாற்றிக் கொண்டு விட்டார் போலிருக்கிறது. நம்மைக் காண இங்கு வருவதேயில்லை. தன, தான்ய பண்டாரங்கள், அரசாங்க அலுவலர்கள், படை வீரர்கள் எல்லோரும் அங்கேயே போய் விட்டார்கள். நம்மைப் போல பிராயம் முதிர்ந்த கிழவர்களும் கிழவிகளும் மட்டும் இங்கே தனித்து விடப்பட்டு விட்டோம்” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

”அதனால் என்ன? நாம்தானே இனி தஞ்சையிலேயே இருப்பதென்று தீர்மானித்தோம்?”

“ஆமாம், உண்மைதான். தஞ்சை மண்ணையும் ராஜராஜர் பெருமையுடன் கட்டிய இந்தப் பெருவுடையாரையும் விட்டுப் போக எனக்கு மனமில்லை தேவி”

“புதிய தலைநகருக்கு அருகில் இன்னொரு பெருவுடையார் கோவிலைக் கட்டி வருகிறான் ராஜேந்திரன். கோவில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்றும் குடமுழுக்குக்கு நாள் குறித்தாகிவிட்டது என்றும் தெரிகிறது.”

”ஆனாலும், பெற்ற தாயை இழந்தவருக்கு தாய்க்குத் தாயாய் இருந்து வளர்த்த தேவியையும், அறுபது ஆண்டுகளுக்கு மேலே இந்த சோழப் பேரரசின் உன்னததிற்காக உழைத்த இந்த கிழவனையும் ஒப்புக்கு அழைப்பதற்குக் கூட மன்னருக்கு மனமில்லை போலிருக்கிறது”

வந்தியத்தேவரின் உள்ளத்தில் மறைந்திருந்த வருத்தம் குந்தவைக்குப் புரிய ஆரம்பித்தது.

”ராஜேந்திரன் இப்படி மாறிப் போவான் என்று நானும் கூட நினைக்கவில்லை. இருந்தாலும் சக்ரவர்த்திக்கு ஆயிரம் வேலைகள், ஆயிரம் கவலைகள்.  படையெடுப்பு, புதிய தலைநகரை நிர்மாணிப்பது, ராஜராஜேஸ்வரம் போல ஒரு கோவிலைக் கட்டுவது இப்படி பல அலுவல்கள். இதற்கிடையே நம்மைப் பற்றி நினைப்பதற்கு நேரம் எங்கே இருந்திருக்கும்?”

வந்தியத்தேவர் சிறிதாக முறுவலித்தார். “மருமகனை விட்டுக் கொடுக்க மனமில்லை தேவிக்கு”

“ஆமாம். அவன் என் மருமகன் மட்டுமல்ல. மகனும் அவன்தான்.” குந்தவை கண்களில் சட்டென்று நிறைந்த கண்ணீரைக் கண்டு தன் மேலங்கியால் அதைத் துடைத்து விட்டார் வந்தியத்தேவர்.

அதே சமயம், வாயிற்காவலன் ஒருவன் உள்ளே வந்து இருவரையும் வணங்கி நின்றான்.

“மாமன்னர் ராஜேந்திரச் சோழச் சக்ரவர்த்தி, தஞ்சை அரண்மனைக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். தங்களையும் தேவியையும் காண ஒரு நாழிகைப் பொழுதில் இங்கு வருவதாக செய்தி அனுப்பியிருக்கிறார்கள்”

அடுத்த ஒரு நாழிகைக்குள் மன்னர் ராஜேந்திரர், வந்தியத்தேவரின் அரண்மனைக்குள் நுழைந்தார். வந்ததும் அவர் வருகைக்காக காத்திருந்த இருவர் கால்களிலும் வணங்கி  எழுந்தார் மன்னர்.

“தந்தையே! நலமாக இருக்கிறீர்களா? தாயே! தாங்களும் நலமா?’

“நலமாக இருக்கிறோம் ராஜேந்திரா. என்ன திடீரென்று இந்த விஜயம்?”

”தாயே! வெகுநாட்களாக, ஏன் சில வருடங்களாகவே நான் தஞ்சைக்கு வரவில்லை.  தலைநகரை மாற்றிய பிறகு அதன் கட்டுமான பணியிலும், வடதிசை நோக்கிய படையெடுப்பை ஆயத்தப் படுத்தி அதைக் கொண்டு செல்வதிலும் பல வருடங்கள் கடந்து விட்டன. இன்று கங்கைக் கரை வரையிலும் சென்று சோழப் படை வெற்றி பெற்றுத் திரும்பி விட்டது. அந்த வெற்றியை பெற்றுத் தந்த எல்லாம் வல்ல அந்த ஈசனுக்கு ஒரு திருமாளிகை கட்டத் தீர்மானித்தேன்.  சோழபுரத்தில்  பெருவுடையாருக்கு  ஒரு சிறந்த கற்றளி கட்டப்பட்டு வருகிறது ”

“தெரியும் ராஜேந்திரா! அது உன் தந்தை இங்கே  தஞ்சையில் கட்டிய கோவிலை விட சிறந்ததாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை ”

“இல்லையம்மா! பேரரசர் ராஜராஜருக்கு இணையான அரசர் நம் சோழக் குடியிலே இதுவரையில் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. அதனால் அவர் கட்டிய பெருவுடையார் கோவிலுக்கு இணையாக புதிய கோவில் இருக்கப் போவதில்லை. அதை விட சற்று உயரமும் வீச்சும் குறைவாகவே இருக்க வேண்டுமென்று தீர்மானித்துள்ளேன்”

இதைக் கேட்ட குந்தவை மகிழ்ச்சியுடன், “நல்லது ராஜேந்திரா. உன் தந்தையைப் போலவே உன் பெயரும் புகழும் ஓங்கி வளரட்டும். சரி! இன்று நீ தஞ்சை வந்ததின் நோக்கம்?”

“தாயே! திருக்கோவிலின் கட்டிட வேலைகள் ஒருவாறு முடிந்து விட்டன. தைத் திங்கள் பிறந்தவுடன், அடுத்த பௌர்ணமி அன்று குடமுழுக்கு நடத்துவதற்கு புரோகிதர்கள் நாள் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள்.”

“மிகவும் நல்ல செய்தி. உனக்கு அந்த பெருவுடையாரின் ஆசி என்றும் நிலைத்திருக்கட்டும்.”

“அம்மா! பெருவுடையாரோடு கூட தாங்கள் இருவரும் சோழபுரம் வந்திருந்து நேரில் குடமுழுக்கில் பங்கு கொண்டு என்னை ஆசிர்வதிக்க வேண்டும்.”

இதைக் கேட்டவுடன் வந்தியத்தேவரின் முகத்தில் ஆச்சரியக் குறிகள் தோன்றியதை குந்தவை கவனிக்கத் தவறவில்லை.

“நாங்கள் அங்கு எதற்கு………….?”

“தாயே! நான் பிறந்த பின்னர் என் தாயை இழந்தேன். அவரை நேரில் கண்டதில்லை. என் நினைவு தெரிந்த நாள் முதல் தங்களையே என் தாயாகக் கருதி வளர்ந்து வந்தேன். ஒரு தாய்க்கும் மேலாக என் மீது கருணையும் பாசமும் கொண்டு என்னை வளர்த்தீர்கள்.  கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெறச் செய்து என்னை அறிவார்ந்த மனிதனாக ஆக்கினீர்கள். வல்லவரையர் எனக்கு வாள், வேல் வீச்சு, குதிரை ஏற்றம் எல்லாம் கற்பித்து என்னை மாவீரனாக ஆக்கினார்கள். இன்று மாபெரும் வெற்றிகள் பெற்று இந்த சோழ சாம்ராஜ்யத்தின் மன்னனாக நான் திகழ உங்கள் இருவரின் அன்பும் ஆசியும்தான் காரணம்”

இதைக் கேட்ட வல்லவரையரின் மனமும் நெகிழ்ந்தது.

“குடமுழுக்கு விழாவை மிக சிறப்பாக நடத்தக் கருதியுள்ளேன்.  அதற்குத் தஞ்சை பெருவுடையாரின் அருளை வேண்டி இன்று அவரைத் தரிசித்தேன். விழாவிற்கு தஞ்சையிலிருந்து நூறு சிவாச்சார்யர்களையும் ஐநூறு வேத பண்டிதர்களையும் அழைத்திருக்கிறேன்.  நீங்கள் இருவரும் என்னோடு சோழபுரம் வந்து முன்னால் நின்று இந்த விழாவை நடத்திக் கொடுக்க வேண்டும். தாங்கள் இருவரையும் அழைத்துப் போவதற்காகத்தான் நான் தஞ்சை வந்தேன்.”  

”இன்று உங்கள் தந்தை இருந்திருந்தால் தன் தனயனுக்காக மிகவும் பெருமைபட்டிருப்பார், சக்ரவர்த்தி” என்றார் வந்தியத்தேவர் மகிழ்ச்சியுடன்.

“ஆமாம் அரசே! இன்று என் தந்தை இவ்வுலகில் இல்லை. அவர் இடத்தில் இப்போது நான் தங்களைத்தான் பார்க்கிறேன். வடக்கிலிருந்து நாங்கள் கொண்டு வந்திருக்கும் கங்கை நீரை புரோகிதர்களிடம் புனித நீர் அபிஷேகத்துக்கு தாங்கள்தான் தங்கள் திருக்கரங்களால் கொடுக்க வேண்டும். தாயே! தாங்கள்தான் எங்கள் அருகிலிருந்து முதல் பூஜையை ஆரம்பித்து வைக்க வேண்டும். இது என் தாழ்வான வேண்டுகோள்”

அடுத்த பௌர்ணமி அன்று சோழபுரத்து பெருவுடையாருக்கு குடமுழுக்கு மிக கோலாகலத்துடன் நடந்தது. கங்கை நீர் அபிஷேகமும் நடந்தது. விழா முடிந்ததும் மாமன்னர் ராஜேந்திரர், இருவர் கால்களிலும் விழுந்து அவர் பாதங்களை தொட்டுத் தலையில் சூடிக் கொண்டார். வந்தியத்தேவர் கண்களில் நீர் பெருக ராஜேந்திர சோழரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

“சக்ரவர்த்தி! மாமன்னர் கரிகாலரைப் போல் இமயத்தில் புலிக் கொடியை பறக்க விட வேண்டுமென்று தங்கள் பெரிய தந்தை ஆதித்த கரிகாலர் ஆசைப்பட்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. இருந்தாலும், அவரின் தீராத ஆசை இப்போது தங்கள் மூலம் நிறைவேறிவிட்டது. இமயம் வரை சென்று, கங்கை நீரைக் கொண்டு வந்து பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யும் பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இனி, இந்த நகரும் அதன் காரணமாகவே, “கங்கை கொண்ட சோழபுரம்” என்று அறியப்பட வேண்டும் என்பது என் விருப்பம்”

“அப்படியே ஆகட்டும் தந்தையே” என்றார் ராஜேந்திரச் சோழச் சக்ரவர்த்தி.

                                                                   ******

பின் குறிப்பு: வாசகர்களே! இந்தக் கதைக்கு சரித்திர சான்றுகளை, வரலாற்றுத் தரவுகளைத் தேடாதீர்கள். ஒன்றும் கிடையாது. அமரர் கல்கியின் ”பொன்னியின் செல்வன்” மீதுள்ள காதலால் அவர் சிருஷ்டித்த கதாபாத்திரங்களை பேச வைத்து எழுதப்பட்ட இந்தச் சிறுகதை  முற்றிலும் என் கற்பனையேயன்றி வேறில்லை. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

 

உலக இதிகாசங்கள் – இலியட் – எஸ் எஸ்

 

 

TROY (2004) – AN EPIC HOMERIAN TALE OF PRIDE, DESIRE AND FATE – jay-reviews-stuff.com

மாபெரும் போருக்காக கிரேக்கப் படைகளும் டிரோஜன்களும் தயார் நிலையில் இருந்தனர். இரு படைகளும் தத்தம் எல்லையில் இருந்தனர். போர் எப்போது எப்படி வெடிக்கும் என்று அனைவரும் ஊசி முனையில் நிற்பதைப்போல் இருந்தனர்.

அது சமயம் டிராய் நாட்டு இளவரசன் பாரிஸ் தன் படையின் முன்னணிக்கு வந்தான். கிரேக்க நாட்டு அரசி ஹெலனைக் கடத்தி வந்து இந்தப் போருக்கே காரணமாக இருந்தவன் அவன். விருந்தினனாக கிரேக்க நாட்டிற்குச் சென்றபோது அந்த நாட்டு இளவரசி ஹெலனையே  தன் அழகால் மயக்கி அவளைத் தன்னுடன் ஓடிவரச் செய்த மாபெரும் அழகன் அவன். வீரத்திலும் அவன்  யாருக்கும் சளைத்தவனில்லை.

கடவுளரின் ஆசி  பெற்ற அவனுக்குத் தன்னை யாரும் வெற்றி கொள்ள முடியாது என்ற இறுமாப்பில் இருந்தான். அந்த தைரியத்தில் தனக்கு முன்னால் அணிவகுத்திருக்கும் கிரேக்கப் படையைப் பார்த்து, “என்னுடன் வாழ்வா சாவா என்று மற்போர் புரியக் கிரேக்கத்தில் எந்த வீரன் இருந்தாலும் அவன் முன்வரட்டும்”  என்று அறைகூவல் விடுத்தான்.

கிரேக்கப் படையின் முன்னணியில் இருந்த மெனிலியஸ் இதைக் கேட்டான். அவன் மனைவியாய் இருந்தவள்தான் ஹெலன். அவளை மயக்கிக் கடத்திச் சென்ற பாரிஸின் அங்கங்களைப் பிய்த்து எறியும் வெறியில் இருந்த அவன் சிங்கம் போலக் கர்ஜித்துக்  கொண்டு முன்னால் வந்தான்.

“இந்தத் தருணத்திற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன். அழகன்  என்ற திமிரில் என மனைவியை மயக்கி இழுத்துச் சென்ற உன் உடம்பின் ஒவ்வொரு சதையையும் அறுத்து எறிந்து உன்னை நாய்க்கும் நரிக்கும் விருந்து படைக்க இதோ  வந்துவிட்டேன்” என்ற வெறிக் கூச்சலுடன் மெனிலியஸ் முன்னே வந்தான்.  

அவன் தோற்றத்தையும் வெறியையும் பார்த்த பாரிஸ் சற்று  திகைத்துவிட்டான். உடனே தன் படைக்குள் புகுந்து மறைந்து கொண்டான்.

டிராய் நாட்டு மூத்த இளவரசனும் பாரிஸின் அண்ணனும் உலகத்தில் உள்ள மிகச் சிறந்த வீரர்களில் ஒருவனுமான ஹெக்டர் தன் தம்பியின் கோழைத்தனத்தைப் பார்த்துக் கடும் கோபம் கொண்டு அவனைச் சாடினான்.

“ அண்ணா! நான் மெனிலியசுக்குப் பயந்துகொண்டு திரும்பவில்லை. இப்போதும் நான் அவனுடன் மற்போர் புரியத் தயாராகத் தான் இருக்கிறேன். அதற்குத் தேவையான வீரமும்  கடவுளரின் ஆசியும் என்னிடம் நிறைய இருக்கின்றன. அந்தப் போருக்கு ஏற்பாடு செய்யவே திரும்பினேன். ஹெலன் அவன் மனைவியாய் இருந்தவள். இப்போது என்னை விரும்பி என்னுடன் வந்தவள். ஹெலனைப் பணயப் பொருளாக வைக்க நான் தயார். என்னுடன் மற்போரில் மெனிலியஸ் வெற்றி பெற்றால் அவளை அவன் அழைத்துச் செல்லட்டும். நான் வெற்றி பெற்றால் கிரேக்கப்படை போரில் ஈடுபடாமல் தங்கள் நாட்டை நோக்கிப் பயணப்பட வேண்டும். என்னால் ஏற்பட்டு இந்த விளைவிற்காக இரு நாட்டு வீரர்களும் ஏன் மடியவேண்டும்? இது பற்றிய உறுதிமொழியை இரு நாட்டுப் படைகளும் ஏற்கச் செய்ய வேண்டியது உன் பொறுப்பு “ என்று மொழிந்தான்.

மாவீரன் ஹெக்டரும் தம்பியின் வீரத்தையும் தீரத்தையும் மெச்சி இரு படைகளுக்கும் நடுவே வந்து நின்றான். அவனது தீர்க்கமான உருவமும் கண்களில் தெறிக்கும் ஒளியும் அனைவரையும் அமைதியாக  இருக்கச் செய்தது. அவன் கணீரென்ற குரலில் பேசினான்.

“ கிரேக்க வீரர்களே ! டிராஜன் வீரர்களே ! நடந்த ஒரு சரித்திர நிகழ்ச்சிக்கு இருநாட்டு வீரர்களும் ஏன்  மடியவேண்டும்? பாரிஸ் சற்று முன் கூறியது போல பாரிஸ் மெனிலியஸ் இருவரும் மற்போர் புரியட்டும்.  வென்றவர் ஹெலனை அடையட்டும். மற்றவர் தங்கள் படைகளை அழைத்துக் கொண்டு தங்கள் நாடு திரும்பட்டும். இதற்கு உங்கள் பதில் என்ன? “ என்று வினவினான்.

மெனிலியஸ் முன் வந்து , எனக்கும் இது சம்மதம்தான். ஆனால் உங்கள் உறுதிமொழியை என்னால் ஏற்க முடியாது. உங்கள் தந்தை டிராய் நாட்டு மன்னர் பிரியம் இங்கு வந்து ஜீயஸ் கடவுள் மீது உறுதிமொழி எடுக்கவேண்டும்.  அதற்குப் பின் மற்போர் துவங்கும் ´என்றான்.   

இருநாட்டுப் படைகளும் அமைதி காத்தனர்.  

Helen Watching Menelaus And Paris Fight From The Walls Of Troy by Fortunino Matania | Ancient greek art, Troy, Ancient troy

அருகே டிராய் நாட்டு எல்லைக்கோட்டையின் உச்சியிலிருந்து மன்னன் பிரியம்,  ஹெலன் மற்ற அரச குமாரிகள் அனைவரும்  இரு படைகளும் தங்கள் ஆயுதங்களை ஓரமாக வைத்து விட்டு மற்போருக்குத் தயார் செய்வதைப் பார்த்தார்கள்.

வயதான மன்னன் பிரியம் கண்களில் சோகம் கவ்விக்கொண்டிருந்தது.

“மகளே ஹெலன்! என் அருகில் வா!  இந்தப் போருக்குக் காரணம் நீ  என்று நான் என்றைக்கும் கருதியதில்லை. இது கடவுளர்களின் சூழ்ச்சி! அதனால்தான் அன்புடன் இருந்த கிரேக்கர்களும் டிராய் நாட்டு வீரர்களும்  இன்று கொலைவெறியுடன் இருக்கிறார்கள். உன் முன்னாள்   கணவன் மெனிலியஸும் இந்நாள் கணவன் பாரிஸும் போரிடப் போகிறார்கள். வெற்றி பெற்றவன் உன்னை அழைத்துச் செல்வான்.”

“தந்தையை விட மதிப்பு வாய்ந்தவரே! நான் என் கணவரையும் குழந்தையையும் மற்ற உறவினர்களையும் விட்டு உங்கள் மகனோடு இங்குவந்து இருக்கும் என் நிலை எனக்கே வெறுப்பை அளிக்கிறது . நான் இறந்து போயிருந்தால் கூட நன்றாக இருக்கும். அதுவும் முடியாமல் நான் இப்படிக் கண்ணீரில் காலத்தைக் கழிக்கிறேன்.”  

“ வருந்தாதே மகளே! கடவுளரின் பகடைக் காய்கள் நாம். கிரேக்கப் படையின் முன்னணியில் போர்க் கடவுளர் போல இருக்கும் அந்த மாவீரர்கள் யாவர்? “ என்று வினவினான்.  

ஹெலன் தன் கணவரின் சகோதரன் அகமெம்னன்,  மற்றும் ஓடிசியஸ் அஜாக்ஸ் ஆகிய தளபதிகளின் பராக்கிரமங்களையும் கூறினாள்.  

அதற்குப் பின் மன்னன் பிரியம் அங்குச் சென்று ஜீயஸ் கடவுளின் பெயரால் உறுதிமொழி அளித்தான். “என் பிரியமான மகன் பாரிஸ் கலந்து கொள்ளும் இந்த வாழ்வா சாவா போரைக் காணும் சக்தி இந்தக் கிழவனுக்கு இல்லை “ என்று கூறி மன்னன் பிரியம் இலியம் நகரை நோக்கிச் சென்றான்.  

Paris (left) and Menelaus in combat stock image | Look and Learn

பாரிஸ்  மெனிலியஸ் இருவரும் பூரணக்  கவசத்துடன் மற்போருக்குத் தயாரானார்கள். முதலில் ஈட்டியால் இருவரும் தாக்கிக் கொண்டார்கள். பின்னர் வாட்களால் போரிட்டார்கள். தன்னுடைய ஒவ்வொரு தாக்குதலிலிருந்து பாரிஸ் தப்பிப்பதைப் பார்த்த மெனிலியஸுக்கு கடவுளரின் கடவுள் ஜீயஸ் தனக்கு எதிராக இருக்கிறாரோ என்ற ஐயம் வந்தது.  தன் முழு பலத்தையும் பிரயோகித்து பாரிஸின் முகத்தைத் தன்  கைகளால் பற்றி மூர்க்கமாக அவனை இழுக்க ஆரம்பித்தான் மெனிலியஸ். பாரிஸ் இனித் தப்பிக்கவே முடியாது . கிரேக்க டிராய் போர் முடிவிற்கு வந்தது என்று அனைவரும் கருதினார்கள்.

அப்போது நடந்தது ஒரு மாபெரும் அதிசயம்.    

ஜீயசின் மகள் டிராய் பக்கம் இருப்பவள். பாரிஸைக் காப்பாற்ற  ஒரு பெரிய பனிப் படலத்தை ஏற்படுத்தி அவனை அப்படியே தூக்கிக் கொண்டு போய் ஹெலனின் படுக்கை அறைக்  கட்டிலில் கிடத்தினாள்!

“போரில் வெற்றி அடையாமல் இப்படித் தப்பி வந்த நீயெல்லாம் ஒரு  வீரனா?“  என்ற ஹெலனின் கோபக் கேள்விக்கு பாரிஸ் அமைதியாகப் பதில் சொன்னான்.

“அவனுடைய தேவதை என்னைக் கொல்லத் தூண்டியது. என் தேவதை என்னைக் காப்பாற்றியது! இதில் ஒரு தவறும் இல்லை. அடுத்த முறை நான் அவனைக் கொல்லாமல் விடமாட்டேன். இப்போது நாம் இருவரும்  சல்லாபிக்கலாம்” என்று கூறி ஹெலனை இறுக்கத் தழுவினான் பாரிஸ் 

(தொடரும்)

குவிகம் குறுக்கெழுத்து – சாய்நாத் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டி

நவம்பர் மாதக் குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இதோ !

 

http://beta.puthirmayam.com/crossword/BD4F65F374

 

100 ரூபாய் பரிசு குலுக்கல் முறையில் !

விடை அனுப்பவேண்டிய கடைசித் தேதி 18.12.2022 

 

சென்ற (அக்டோபர் )மாதக் குவிகம் குறுக்கெழுத்துப் போட்டியில் சரியான விடை எழுதி குலுக்கலில்  பங்கு பெற்றவர்கள் !

1. துரை  தனபாலன் 

2. இந்திரா ராமநாதன் 

3. ஜெயா ஸ்ரீராம் 

4 . கல்யாணராமன் 

5 . கற்பகம்

6 .  லதா ரகுநாதன் 

7. நாகேந்திர பாரதி 

8. பிரேமா 

9. ராமமூர்த்தி 

10 . ராமசாமி 

11 . ராய செல்லப்பா 

12. ரேவதி ராமச்சந்திரன் 

13. உஷா ராமசுந்தர் 

14. வைத்தியநாதன் வெங்கடகிருஷ்ணன் 

15. விஜயலக்ஷ்மி கண்ணன் 

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

 

இதில் குலுக்கல் முறையில் வெற்றி  பெற்றவர் :

ஜெயா ஸ்ரீராம் அவர்கள்! பாராட்டுதல்கள் 

 

சென்ற  மாதம் பரிசு பெற்ற    ஜானகி அவர்கள்  இன்னும் பரிசு  பெற்றுக்கொள்ளவில்லை!

அதற்குமுன் இரண்டு மாதங்களாகத் தொடர் பரிசு பெற்ற தாமோதரன் இன்னும் பரிசு வாங்கிக் கொள்ளவில்லை.

 

வைதீஸ்வரன் அவர்களது ஆவணப்படம்

குவிகம் தயாரித்து வெளியிட்ட ஆவணப்படம் ” கிணற்றில் விழுந்த நிலவு” . கவிஞர் வைதீஸ்வரன் அவர்களைப் பற்றி நிழல் திருநாவுக்கரசு இயக்கத்தில் வந்த தலை சிறந்த ஆவணப்படம். 

பார்த்து மகிழுங்கள் !!

இதைப் பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி டிசம்பர் 4 ஆம் தேதி காலை ஏற்பாடு செய்திருக்கிறது. ZOOM மூலம். அனைவரும கலந்துகொள்ளுங்கள்! 

 

தவம் – தீபா மகேஷ்

ஒவ்வொரு தந்தையும் தன் மகனுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டிய வாழ்க்கை  பாடங்கள்..!

சங்கரனுக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை.

“சித்தப்பா, நானும் அம்மாவும் குழந்தைகளைக் கூட்டிண்டு அடுத்த மாசம் வரோம். நம்ம வீட்டிலதான் ரெண்டு வாரம் தங்கி , கோவிலுக்கு எல்லாம் போகப் போறோம்.” நளினா ஃபோனில் சந்தோஷம் பொங்க பேசினாள்.

“இந்த வருஷம்  கண்டிப்பாக ஊருக்கு வரணும். வேண்டுதல் எல்லாம் இருக்கு”, என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தாள் . ஆனால் இன்று சட்டென்று டிஸைட் பண்ணி, டிக்கெட்டும் புக் பண்ணி ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பி விட்டாள்.

எத்தனை வருடங்கள் ஆயிற்று அவளைப் பார்த்து?  கல்யாணம் முடிந்தவுடன் கலிஃபோர்னியா போனவள். அப்புறம் அவளுடைய டெலிவரிக்காக மன்னிதான் அமெரிக்கா போனாள். அப்போது அவளுக்குப் பிடித்த லட்டு, மைசூர்பாக் எல்லாம் செய்து செய்து கொடுத்தது இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

முதல் பெண் அனன்யா பிறந்த பிறகு அவளுக்குத் துணையாக மன்னி அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.  அப்புறம், அனிருத் பிறந்து இப்போது அவனுக்கும் மூன்று வயதாக போகிறது. நாட்கள்தான் எத்தனை வேகமாக ஓடி விடுகின்றன.

இத்தனை வருடங்களில், வாட்ஸ் அப்பில் பேசுவதும், வீடியோ காலில் பார்ப்பதோடு  சரி. லாக்டௌன் சமயத்தில் அடிக்கடி வீடியோ கால் பண்ணி பேசுவார்கள். அதுவும் சில சமயங்களில் குட்டிப் பையன் தானே ஃபோன் பண்ணி, “தாத்தா, நீ என்ன பண்ற, என்ன சாப்பிட்ட , எப்போ தூங்குவே, சாந்தி பாட்டி என்ன பண்றா”  என்று கதை அடிக்க ஆரம்பித்து விடுவான்.

அவன் வரப் போகிறான், அவனை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில்  சங்கரனுக்கு அன்று இரவு நெடு நேரம் தூக்கம் வரவில்லை. “ஐ.பி.எல் கௌண்ட்டௌன்” போல மனம் நாட்களை எண்ண ஆரம்பித்தது. சோர்வாகவோ, சோகமாகவோ இருக்கும் போது, தூக்கம் ஒரு மருந்து போல தேவைப்படுகிறது. ஆனால், மனம் சந்தோஷமாக இருக்கும் போது, அதற்கு தூக்கம் தேவைப் படுவதில்லை. சங்கரனுக்கு அன்று அப்படிதான் இருந்தது.

சங்கரா, அவன் சாப்பாடு விஷயத்துல அப்படியே உங்கண்ணாதான்டா, ஸ்வீட் இல்லாம சாப்பிட மாட்டான். எந்த பண்டிகை ஆனாலும், ஃபர்ஸ்ட் வந்து என்ன ஸ்வீட் பண்ணுவேன்னு கேட்டுட்டு போவான்.  ஸ்வீட் பண்ணினதும் அவனுக்குத் தெரியாம கொஞ்சம் ஒளிச்சு வைப்போம். இல்லைனா, யாருக்கும் கொடுக்காம அவனே காலி பண்ணிடுவான்.

மன்னி குழந்தையைப் பற்றி சொல்லியது எல்லாம் மனதில் விரிந்து, ராமு அண்ணாவைப் பற்றிய நினைவலைகளை எழுப்பின.

சங்கரனுக்கு எல்லாமே ராமு அண்ணா தான். இருவருக்கும் வயசு வித்தியாசம் அதிகம். தவிர, சிறு வயதிலேயே, அப்பாவும், அம்மாவும் ஒருவர் பின் ஒருவராக போய் சேர்ந்து விட்டதால், ராமு அண்ணாதான் அந்த ஸ்தானத்தையும் எடுத்துக் கொண்டார். மன்னியும் தாயில்லாத பிள்ளையிடம் அளவற்ற அன்பையும் பாசத்தையும் பொழிந்தாள்.

ராமு அண்ணா என்கிற ராமகிருஷ்ணன் மிகச் சிறந்த சமையல் கலைஞர். நள பாகம். கும்பகோணம் மட்டும் அல்லாமல், திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர் என்று மற்ற ஊர்களிலும் அவர் சமையல் பிரசித்தம். கல்யாண சமையல்  ராமு அண்ணாதான் பண்ணனும் என்று கல்யாண தேதி மாற்றி வைத்த குடும்பங்கள் உண்டு. அவர் ஒரு ஸ்வீட் ஸ்பெஷலிஸ்ட். லட்டுவும், பாதுஷாவும், ஜாங்கிரியும் அவர் கை பட்டு வரும் போது, ஒரு தனி சுவையோடு இருக்கும்

ராமு அண்ணா எவ்வளவோ ஸ்வீட் செய்தாலும் அவருக்கு மிகவும் பிடித்தது சர்க்கரை பொங்கல் தான். அதனாலேயே, சங்கரனுக்கும் அது ரொம்பப் பிடிக்கும்.

ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, ஊர்த் திருவிழா, பிறந்த நாள், பண்டிகை  என்று ஏதாவது ஒரு காரணம் காட்டி வாரம் ஒரு முறை சர்க்கரை பொங்கல் செய்து விடுவார். அடிக்கடி செய்கிறோம் என்பதற்காக ஏனோ தானோ என்றெல்லாம் செய்ய மாட்டார். உண்மையான பக்தன் தன் இஷ்ட தெய்வத்திற்க்குச் செய்யும் பூஜை போல, ரசித்து,ரசித்து செய்வார்.

பயத்தம் பருப்பை முதலில் வறுத்து, பிறகு அரிசியுடன் சேர்த்துக் களைந்து, வேக வைப்பார். அது வேகும் நேரத்தில், ஒரு வாணலியில், நெய்யை ஊற்றி (கொட்டி என்று கூட சொல்லலாம்) முந்திரியை இளம் சிவப்பாக வறுத்து, திராட்சையும் சேர்த்து, எடுத்து வைப்பார். வெல்லம் நன்றாகக் கொதித்தவுடன், வேக வைத்த அரிசியையும், பருப்பையும் கலந்து, இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி நன்றாக கொதிக்க விடுவார். அந்த வாசனை வீடு முழுவதும் பரவும் போது, பொடி செய்த ஏலக்காயையும் , முந்திரி திராட்சையும் அதன் மேல் தூவுவார்.

செய்து முடித்தவுடன் சுடச்சுட  கொஞ்சம் சக்கரைப் பொங்கலை கிண்ணத்தில் எடுத்து, சமையல் அறையில் இருக்கும், அன்னபூரணி படத்தின் முன் வைத்து, நைவேத்யம் செய்வார். உடனே கொஞ்சம் வாயில் போட்டுப் பார்த்து “ம்ம், ஸ்வீட் சரியா இருக்கு. சங்கரா , ஆ காட்டு,” என்று இவன் வாயிலும் கொஞ்சம் போடுவார். உருகிய நெய்யின் வாசனையும், ஏலக்காயின் மணமும் சேர்ந்து, அவர் கொடுக்கும் அந்த சக்கரைப் பொங்கல் ஒரு அசாத்தியமான சுவையோடு இருக்கும்.

தேவாமிருதம் என்று ஒன்று நிஜமாகவே இருந்தால், அது ராமு அண்ணா செய்யும் சர்க்கரை பொங்கல் போலதான் இருக்கும் என்று சங்கரனுக்குத் தோன்றும். வீட்டில் என்ன  விசேஷமானாலும் , இலை போட்டவுடன், அதில் முதலில் இந்த தேவாமிருதம்தான் பரிமாறப்படும்.

 

எப்படி இவர் செய்யும் சக்கரைப் பொங்கல் மட்டும் இவ்வளவு சுவையோடு இருக்கிறது ? சங்கரனுக்கு அது ஒரு புரியாத புதிராகவே இருந்தது. ஒரு நாள், கேட்டே விட்டான்.

ராமு அண்ணா, நேத்து சேகர்க்குப் பிறந்தநாள்ன்னு, அவன் வீட்டுக்குப் போயிருந்தேனா, அவங்க அம்மா, கொஞ்சம் சக்கரைப் பொங்கல் குடுத்தாங்க. ஆனா, அது நம்ம பண்ற மாதிரி இல்ல. நீங்க பண்றது மட்டும் எப்படி அண்ணா இவ்ளோ  நல்லா  இருக்கு?

அதுவா, நான் எப்போ சமைக்க ஆரம்பிக்கற போதும், ஒரு மந்திரம் போடுவேன் – என்று சொல்லிக் கண் சிமிட்டினார்.

சங்கரன் அவரையே  கண் கொட்டாமல் பார்த்தான்.

ஆமாம்டா, நான் இந்த அடுப்படில, சூட்டுல  நிந்து  சமைக்கறது கல்யாணத்துக்கோ, விசேஷத்துக்கோ இல்லை. அந்த அன்னபூரணிக்கு. புராணத்துல எல்லாம் ரிஷிகள் தவம் பண்ணினான்னு நீ கதை கேட்டுருப்பியே , அது மாதிரி இந்த சமையல் பண்றது எனக்கு ஒரு “தவம்”. உடனே பலன் கொடுக்கற தவம்.

அந்த சிறு வயதில் அவர் சொன்னது கொஞ்சம் புரிந்து, நிறைய புரியாமல் இருந்தது.

அப்போ, நான் என்ன தவம் பண்ணனும் அண்ணா?

பெரியவன் ஆக ஆக நீயே தெரிஞ்சுப்பே, புரிஞ்சுப்பே.

ஆனால் அவன்  வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முன்பே, அவர் அவசர அவசரமாக போய் சேர்ந்து விட்டார். திடீரென்று வந்த ஒரு விஷ ஜுரம் ஒரே வாரத்தில் அவர் உயிரை கொண்டு சென்று விட்டது.

நடுக்கடலில் அமைதியாய் போய்க் கொண்டிருந்த படகை, பெரும் புயல் வந்து புரட்டிப் போட்டது போல ஆனது வாழ்க்கை. முதலில் சுதாரித்துக் கொண்டது மன்னி தான்.

சங்கரா, நான் எங்கண்ணாவோட சென்னை போகலாம்னு இருக்கேன். அவன் ரொம்ப வற்புறுத்திக் கூப்படறான். எனக்கும் ஒரு மாறுதலா இருக்கும். நளினா  ஸ்கூல் ஃபைனல், காலேஜ்னு மேல படிக்கறதுக்கும் வசதியா இருக்கும்.

ஏன் மன்னி, சாந்தி ஏதாவது சொன்னாளா?

சே, சே, அதெல்லாம் இல்லடா. இங்கயே இருந்தா உங்கண்ணா ஞாபகம் ரொம்ப வரும். அங்க ஒரு மாறுதல், அவளோதான்.

அண்ணாவும் இல்லாமல், மன்னியும் கிளம்பி போக, தான் அனாதை ஆகி விட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது சங்கரனுக்கு.

அண்ணா போனதிலிருந்து சக்கரைப் பொங்கல் சாப்பிடுவதை விட்டு விட்டான். வீட்டிலோ , விழாக்களிலோ, ஏன் கோவில் பிரசாதமே ஆனாலும் கூட சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதில்லை.

மன்னி சென்னை போனதிலிருந்து சங்கரனும் , சாந்தியும் அடிக்கடி சென்னை வந்தார்கள். விடுமுறை நாட்கள் என்றால், மன்னியும் நளினாவும் கும்பகோணம் வந்து விடுவார்கள். வெளியூர் டூர், கோயில்கள் என்று எங்கு போனாலும்  சேர்ந்தே போனார்கள்.

நளினா படித்து முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வ்யூவில் ஒரு பெரிய ஐ.டி கம்பனியில் வேலை கிடைத்தது. அடுத்த ஓரிரு வருடங்களிலேயே கல்யாணமும் கூடி வந்தது.

சங்கரனும், சாந்தியும்தான் கன்னிகா தானம் செய்து கொடுத்து , கல்யாணத்தை முன்னின்று நடத்தினார்கள்.

பெரும் புயலில் சிக்கிய படகு, தட்டுத் தடுமாறி, பின் தலை நிமிர்ந்து, கடலில் இருந்து கரை நோக்கிய தன் பயணத்தை தொடர்ந்தது. வாழ்க்கை மெல்ல மெல்ல அண்ணா இல்லாத  இயல்பு நிலையை நோக்கி நகர்ந்தது.

எவ்வளவு பெரிய துன்பம் ஆனாலும், அன்பும், காலமும், அதை ஆற்றி விடுகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு வீடு கலகலப்பாக இருப்பது போல தோன்றியது சங்கரனுக்கு. குழந்தைகள் இருவரும் வந்த ஓரிரு தினங்களிலேயே அவர்களோடு  ஒட்டிக் கொண்டு விட்டார்கள்.

நளினாவுக்கு பிடித்த மோர்குழம்பு, பருப்பு உசிலி, வாழைப்பூ வடை , குழந்தைகளுக்கு முறுக்கு, மைசூர் பாக் என்று தினம் ஏதாவது ஒரு ஸ்பெஷல் ஐட்டம் செய்து அசத்திக் கொண்டு இருந்தாள் சாந்தி. அனன்யாவும் அனிருத்தும் கூடத்து ஊஞ்சலில் ‘ஹை, பிக் ஸ்விங்’ என்று சதா ஆடினார்கள். குட்டிப் பையன் கொஞ்சிப் பேசி எல்லோரையும் மயக்கினான்.

மன்னியிடம் முன்பு போல் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் பார்க்க முடிந்தது. அவள் உலகம் அந்த இரு குழந்தைகளோடு பின்னிப் பிணைந்திருந்தது.

தினம் காலையில் கோவில், மதியம் சாப்பாடு, குட்டித் தூக்கம், சாயங்காலம் டீயோடு கொஞ்சம் ஸ்நாக்ஸ் , மறுபடி கோவில், என்று பிசியாக நாட்கள் போனதே தெரியவில்லை. இதற்கு நடுவில் ஷாப்பிங் வேறு.

அன்று பெண்கள் எல்லாரும் வெளியில் சென்று விட, சங்கரனும் அனிருத்தும் மட்டும் வீட்டில் இருந்தார்கள்.

 

“சித்தப்பா, அனிருத் நல்லா தூங்கறான். அவன் எழுந்தப்புறம் கொஞ்சம் பால் மட்டும் குடுங்கோ. நான் அதுக்குள்ள வந்துடுவேன்,” என்று சொல்லிவிட்டு நளினா வெளியில் கிளம்பினாள்.

ஆனால் அவள் போன உடனேயே குட்டிப் பையன் எழுந்து விட்டான்.

எழுந்து வந்தவன் கொஞ்சமும் அழாமல் ஓடி வந்து சங்கரனைக் கட்டிக் கொண்டான். சங்கரனின்  உள்ளம் நெகிழ்ந்தது.  கள்ளமில்லாத, தூய்மையான அன்பைப் போல மனதை நெகிழ வைக்கக் கூடியது இந்த உலகத்தில் உண்டா என்ன?

அம்மா அக்கால்லாம் எங்க ?

கடைக்குப் போய் இருக்காடா செல்லம்.

சாந்தி பாட்டியும் போய் இருக்காளா? ஆமாம்டா கண்ணா.

நீ ஏன் போகலை? நான் என் செல்லக் குட்டியோட இருக்கணும்னு போகல. குழந்தை இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்டான்.

அம்மா உன்னை பால் குடிக்க சொல்லி இருக்கா, தரட்டுமா ? தா..

பாலை சூடாக்கி கொஞ்சம் சர்க்கரையும், பாதாம் பவுடரும் சேர்த்துக் கொடுத்தார். அடம் பண்ணாமல் குடித்தான்.

கொஞ்ச நேரம் விளையாடியவன் , மறுபடியும் வந்து, நீ எனக்கு ஏதாவது ஸ்வீட் பண்ணித்தரியா ? என்று கொஞ்சும் குரலில் கேட்டான்.

எனக்கு எதுவும் பண்ணத் தெரியாதேடா செல்லம் என்று சொல்ல நினைத்தவன், சட்டென்று,” சக்கரை பொங்கல் பண்ணித் தரட்டுமா, உனக்குப் பிடிக்குமா?” என்று கேட்டார்.

“ரொம்ப பிடிக்கும்” என்று சிரித்தான்.

கிச்சனில் நுழைந்தவர், மனதுக்குள் அண்ணா கற்றுக் கொடுத்த “மந்திரத்தை” சொல்லிக் கொண்டார்.

பயத்தம் பருப்பு வறுத்து, அரிசியோடு சேர்த்து குக்கரில் வேக வைத்தார். ஒரு வாணலியில் வெல்லத்தை கொதிக்க விட்டார். இன்னொரு பக்கம், நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து, ஏலக்காயைப் பொடி செய்தார்.

நன்றாக வெந்து குழைந்த அரிசி பருப்பு கலவையில் வெல்லதை போட்டு கிளறி, கொதிக்க விட்டு, வறுத்த முந்திரி திராட்சையும் போட்டு கிளறினார். எல்லாம் சேர்த்து ஒரு கொதி வந்ததும், ஒரு கிண்ணத்தில் வைத்து, சுவாமிக்கு நைவேத்யம் செய்தார்.

பின்பு அதை ஒரு தட்டில் போட்டு, ஆற வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஊதி அவனுக்கு ஊட்டி விட்டார்.

நல்லா இருக்காடா கண்ணா

சூப்பரா இருக்கு தாத்தா .

நீ சாப்படலயா?

இல்லடா கண்ணா

“கொஞ்சம் சாப்பிடேன் , ரொம்ப டேஸ்டியா இருக்கு” என்று சொன்னவன், அவன் பிஞ்சு கரங்களால் தட்டிலிருந்து கொஞ்சம் சக்கரை பொங்கல் எடுத்து, “ஆ காட்டு” என்று சங்கரனுக்கு ஊட்டி விட்டான். சங்கரன் அறியாமலேயே, அவன் கண்களின் மதகு உடைந்து கண்ணீர் வழிந்தோடியது.

அவனுடைய தவமும் பூரணம் அடைந்து விட்டது.

நல்லவன் – செவல்குளம் செல்வராசு

மண்வாசனை Petrichor - நட்பு என்பது என்ன?: திருவள்ளுவர் நட்பு பற்றிய  சொல்லியதைவிட நாம் எதுவும் பெரிதாக சொல்லிவிட முடியாது . நட்பு பற்றி ...

என் பிரிய நண்பனே
நீதான் எவ்வளவு நல்லவன்
நான்தான் உணராதவனாயிருக்கிறேன்

யார்யாருக்கோ நன்மைகள் செய்யும்போதும்
பாராதிருந்தவன் நான்தான்

நீ அறிவுறுத்தியபோதெல்லாம்
கேளாதிருந்தவன் நான்தான்

உன் அலங்காரச் சொற்களுக்கெல்லாம்
தவறாக பொருள் கொண்டவன் நான்தான்

உன் நயம்பாராட்டலில் கூட
நம்பிக்கை கொள்ளாதவன் நான்தான்

உன் சாகசங்களில் அனைவரும்
மயங்கிப் போற்றியபோது
மௌனித்திருந்தவன் நான்தான்

என் நன்மைக்காக நீ செய்த
துரோகங்களைப் புரிந்துகொள்ளாதவன் நான்தான்

மேன்மை பொருந்தியது உன் குறியென
அவர்கள் வியந்தோதும்போதெல்லாம்
காது பொத்திக்கொண்டவன் நான்தான்

சேர்ந்து பயணிக்க அழைத்தபோதெல்லாம்
கைகொடாதவன் நான் தான்

எல்லோருக்கும் நல்லவனாகும் சூட்சுமம்
தெரியாதவன் நான்தான்

நாம் அருகருகே இருந்தாலும்
சேர்ந்திருக்கமுடியாது நண்பா
உனக்கும் எனக்கும்
வெவ்வேறு கொதிநிலைகள்

திரை இசைக் கவிஞர் – தாமரை – முனைவர் தென்காசி கணேசன்

காபி இல்லைன்னா என்னால பாட்டு எழுத முடியாது. ஆனா இப்போ...' - கவிஞர் தாமரை #DietSecret | Poet thamarai shares her diet secret's

இனியவளே என்ற 1998 ஆம் வருடம், வெளிவந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இனிய கவிதாயினி தாமரை தான் இன்றைய கவிஞர்.(கூடுதல் தகவல் – இந்தப் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா – இன்று அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வரும் சீமான் தான்)

வழக்கமான பாணியை விட்டு, இலக்கிய உத்திகளுடன், நவீன மொழி அழகை தரும் இந்த கவிஞர் , கோவையை சேர்ந்தவர். GCT கல்லூரியின் பொறியியல் பட்டதாரி – 5 வருடங்கள், உற்பத்தி நிர்வாகத்தில் பணி புரிந்தவர். கவிதைகள், கட்டுரைகள் எழுதியதுடன், பத்திரிகையாசிரியராகவும் பணியாற்றியவர், 23 வயதிலேயே படஉலகில் நுழைந்து, முத்திரை பதித்தவர். (தமிழ்த் திரை உலகின் இரு கவிதாயினிகளும் கொங்கு மண்ணிலிருந்து வந்தவர்கள்)

எத்தனையோ பாடல்கள் – எந்த ஒரு பாடலிலும், ஆங்கில அல்லது பிற மொழி வார்த்தைகள் கலக்காத கவிஞர் என்ற பெருமை கொண்டவர்.

வசீகரா என் நெஞ்சினிக்க .

மல்லிகையே,

இரு விழி உனது,

இவன் யாரோ,

அழகிய அசுரா,

கண்கள் இரண்டால்,

முதல் முதலாக

நான் போகிறேன் மேலே மேலே

உயிரின் உயிரே

பார்த்த முதல் நாளே

முதல் மழை

நெஞ்சுக்குள் பெய்திடும்

அனல் மேலே பனித்துளி

முன் தினம் பார்த்தேனே

அன்பில் அவள்

கண்ணான கண்ணே

ஓ சாந்தி சாந்தி

எனப் பல பாடல்கள். கௌதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ், தாமரை என மூவர் கூட்டணியாக – வாரணம் ஆயிரம்,என்னை அறிந்தால், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் என ஆரவாரமாக பாடல்கள் தந்தார்.

அச்சம் என்பது மடமையடா படத்தில், ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ராஜாளி – அழகு வரிகள் அப்படியே அனுபல்லவிக்குப் பின், அருணகிரிநாதரின் திருப்புகழ் பாணியில் அசத்தியிருப்பது மிக நேர்த்தி.

பறக்கும் ராசாளியே – ராசாளியே நில்லு
இங்கு நீ வேகமா – நான் வேகமா சொல்லு

கடிகாரம் பொய் சொல்லும்
என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே
பறவை போலாகினேன் போலாகினேன்
சிறகும் என் கைகளும் ஒன்றா
ராசாளி பந்தயமா பந்தயமா

நீ முந்தியா நான் முந்தியா
பார்ப்போம் பார்ப்போம்

முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை

என் தோள் மீது நீ
ஆ குளிர் காய்கின்ற தீ

எட்டுத் திசைமுட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ

முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேன

வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடர்வதை
தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே

முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேன்

ஒவ்வொரு பாடல்களிலும், அவரின் தனி முத்திரை இருக்கும்.
,
ஆண்களே , பெண்ணின் உணர்வுகள், ‘இப்படி இப்படி’ தான் இருக்கும் என்று அனுமானித்து பாட்டெழுதிக் கொண்டிருந்த நேரத்தில் தான், தமிழகத்தில் இந்தத் தாமரை மலர்ந்தது. (நான் கூறுவது இந்தக் கவிதாயினியை)

பெண்களுக்கு ஒரு சூப்பர் பவர் உண்டு. ஆண்கள் எப்படி பொய் சொன்னாலும், “ம்ம் அப்புறம்?” என்று அக்தரின் 150 கிமீ வேகப் பந்தை, டிராவிட் டொக்கு வைப்பது போல புஸ்ஸாக்கி விடுவார்கள்.

குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்.

பெண்ணின் மோகத்தை ஆண் கவிஞர்கள் பாட்டாக பாட நினைத்தாலும், கவிதாயினி பாடுவது தான் இது –

அழகிய அசுரா! அழகிய அசுரா!

அத்துமீற ஆசையில்லையா?

கனவில் வந்து எந்தன் விரல்கள்

கிச்சு கிச்சு மூட்ட வில்லையா?

 

இது இன்னொரு வகை வெளிப்பாடு:

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே’

(என்னை நோக்கிப் பாயும் தோட்டா பட மறுவார்த்தை பேசாதே… பாடல்)
*

இன்னொன்று :

தூரத்திலே நீ வந்தால்

என் மனசில் மழையடிக்கும்

மிகப் பிடித்த பாடல் ஒன்றை

உதடுகளும் முணுமுணுக்கும்.

பார்த்து பழகிய நான்கு தினங்களில்

நடை உடை பாவனை மாற்றி விட்டாய்

சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்.

ஒரு சிருங்கார வகை பாடலை இப்படி கூட எழுதலாமா?

சகியே சகியே சல்லாபத் தேரின் மணியே மணியே
ரதியே ரதியே உன் ராவில் நானும் நுழைந்திடவா?
கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள் இறுகிடவே
நகத்தோடு நடனம் தொடங்கும்

சினிமா வியாபாரத்தின் எந்த சமரசத்துக்கும் ஆட்படாமல், ஒரு பெண், கண்ணியத்துடன் பாட்டெழுதி பெயர் வாங்க முடியும் என்று திரும்ப திரும்ப நிரூபித்துக் கொண்டிருப்பது கவிதாயினி தாமரை அடைந்த வெற்றி.

இவரது சமீபத்திய பிரபலமான பாடல் ‘மல்லிப் பூ வச்சு வச்சு வாடுதே’ பாடல் ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தில்  ! கேளுங்கள் !

 

 

அடுத்த மாதம், மற்றொரு கவிஞருடன் சந்திப்போம். 

 

 

அதிசய உலகம் – ‘வைர மழை’ – அறிவுஜீவி

‘மாமி! உங்க முகத்துக்கு ஒரு வைர மூக்குத்தி எவ்வளவு எடுப்பாக இருக்கும்?” என்றாள் அல்லிராணி.

“வைரத்துக்கு எங்கே போறது?“ அங்கலாய்த்தாள் அங்கயக்கண்ணி மாமி.

“மாமி, கவலையை விடுங்கள். புதுசா இரண்டு சேதி வந்திருக்கிறது” என்றாள்.

ஆர்வத்துடன் “என்ன என்ன என்ன” என்றாள் மாமி।

“வைரச் செய்தி தான் மாமி!

பிளாஸ்டிக் தண்ணி பாட்டிலிலிருந்து வைரம் தயாரிக்க முடியுமாம்”

“என்னடி உளறுகிறாய்?”

“அறிவியல் ஆராய்ச்சி சொல்வதைக் கேளுங்கள் மாமி.

PET (polyethylene terephthalate) என்ற பிளாஸ்டிக் தண்ணி பாட்டிலை லேசர் ஒளியால் 6,000°C வெப்பத்தில் காய்ச்சி, அதே சமயம் பத்து லட்சம் வளிமண்டல அழுத்தம் (atmospheric pressure) கொடுத்தால், சிறு வைரக்கற்கள் உருவாகுமாம்” என்றாள்.

“ரசவாதம் பிடிவாதம் கேள்விப்பட்டிருக்கேன். இதென்னது வைரவாதம்?” என்றாள் மாமி.

“இதுக்கே இப்படி அசந்து போய்ட்டீங்களே! இன்னொரு சமாச்சாரத்தையும் சொல்றேன் கேளுங்கள்” – என்றாள் அல்லிராணி.

மாமி, “அல்லி! நீ சொல்வதைக் கேட்க சுகமாகத்தான் இருக்கு. சரி. சொல்.. சொல்” என்றாள்.

“நமது சூரிய மண்டலத்தில் யூரேனியஸ், நெப்டியூன் கிரகங்கள் இருக்கிறது அல்லவா? அவை இரண்டும் பனிக்கிரகங்கள். ஆனால், அதன் அடிவயிறு பல ஆயிரம் டிகிரி வெப்பத்தில் கொதித்துக் கொண்டு  இருக்கும். வெளிக் காற்று மண்டலம் மிகமிக உறைந்து போகும் குளிரில் இருக்குமாம்! இதனால் அங்குப் பெரும் புயலும் வீசுமாம். அதன் வளி  மண்டல உயர் அழுத்தம், பூமியின் காற்றழுத்த மண்டல விசையை பல ஆயிரம் மடங்கு இருக்குமாம். அத்துடன் மீத்தேன் வாயுவும் சேர்ந்து அந்தப்புயலில் அங்கு ஆலங்கட்டி மழை பொழிகிறதாம். ஆலங்கட்டி வைர மழை!”

“என்ன வைர மழையா?” மாமி வாயைப் பிளந்தாள்.

“அடுத்த முறை நெப்டியூனுக்கு ராக்கெட் விடும் போது வைரத்தைக் கொண்டு வந்திடலாம்” என்றாள் அல்லி சிரித்துக்கொண்டே!

“திரும்பி வரும்போது கஸ்டம்ல  மாட்டிக்கொண்டால் காலி தான்” என்று மாமியும் ஜோக்கடித்தாள்.

இருவரும் சிரித்தனர்!

https://www.goodnewsnetwork.org/ordinary-plastic-turned-into-diamonds-via-laser-beam-in-the-blink-of-an-eye/

https://www.science.org/doi/10.1126/sciadv.abo0617

இது ஒரு அதிசய உலகம்!

குதூகலம் தரும் குழந்தைப் பாடல்கள் – -ஜி.பி.சதுர்புஜன்-

 

குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
10. அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
13. ஜன கண மன ! – ஜனவரி 2021
14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
20. வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
21. பஸ்ஸில் போகலாம் – மே 2021
22. சிட்டுக் குருவி – மே 2021
23. ஆகாய விமானம் – ஜூன் 2021
24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
27. தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
28. விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
29. மழையே வா ! – செப்டம்பர் 2021
30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
31. தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
32. வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
33. தமிழ் ! – நவம்பர் 2021
34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
41. என்ன மரம் ! – மார்ச் 2022
42. சைக்கிள் ! – மார்ச் 2022
43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022
45. தோட்டத்தில் காய்கறி – மே 2022
46. இந்தியாவும் தமிழ்நாடும் ! – மே 2022
47. மழை வருது ! – ஜூன் 2022
48. சுற்றிப் பார்க்கலாமா ? – ஜூன் 2022
49. என் சித்திரம் ! – ஜூலை 2022
50. தஞ்சாவூரு பொம்மை ! – ஜூலை 2022
51. பூங்கா ! – ஆகஸ்ட் 2022
52. பூரி வேணும் ! – ஆகஸ்ட் 2022
53. பூனையாரே ! – செப்டம்பர் 2022
54. எதைச் செய்தாலும் ! – செப்டம்பர் 2022
55. கடைக்குப் போகலாமா ? – அக்டோபர் 2022
56. பூ ! பூ ! பூ ! – அக்டோபர் 2022

************************************************************
57.மிருகக்காட்சி சாலை !

 

மிருகக்காட்சி சாலைகள் அரசாங்கத்தையே சார்ந்திருக்கக்கூடாது! | Selliyal - செல்லியல்

மொபைல் கேம்ஸ் கம்ப்யூட்டர் போரடிக்குது !
தொலைக்காட்சி தாங்கலை – தொணதொணக்குது !
வாட்ஸப் வந்து வந்து வறுத்தெடுக்குது !
வெளியே எங்காவது போகச் சொல்லுது !

மிருகக்காட்சி சாலைக்குப் போகலாமா ?
விலங்குக்கெல்லாம் ஹலோ சொல்லலாமா ?
எல்லாவித மிருகமும் அங்கிருக்குமே !
பறவையெல்லாம் அங்கு பறந்திருக்குமே !

யானையை எனக்குத் தொட்டுப் பார்க்கணும் !
சிங்கம் புலி கரடியைக் கிட்ட பார்க்கணும் !
முதலையை நேரே முழிச்சுப் பார்க்கணும் !
ஒட்டகச்சிவிங்கியை நான் வியந்து பார்க்கணும் !

பஞ்சவர்ணக் கிளியை நானும் பக்கம் பார்க்கணும் !
நீர்யானை தலையைத் தூக்கி என்னைப் பார்க்கணும் !
காண்டாமிருகம் நிச்சயமா நானும் பார்க்கணும் !
மான் குட்டி ஒடுறதைப் பார்த்து மகிழணும் !

எல்லைகளைத் தாண்டாமல் எட்டி நிக்கணும் !
தொல்லைகள் தராமல் நான் மிருகம் பார்க்கணும் !
அம்மா அப்பா தம்பி தங்கை – எல்லாம் வாங்க !
சேர்ந்து போகலாம் – வாங்க ஜாலியா வாங்க !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மாமா ஸ்கூட்டர் !

 

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறிங்களா? துவங்கியாச்சு முன்பதிவு!

மாமா, என்னைக் கூட்டிப் போ – உன்
ஸ்கூட்டரில் ரவுண்டு கூட்டிப்போ !
உர் உர்ரென்றே ஓட்டிடலாம் ! – நாம்
ஜாலியாய் சுற்றி வந்திடலாம் !

ஹையா ! நான் முன்னே அமர்ந்திடுவேன் !
ஹேண்டில் பாரைப் பிடித்திடுவேன் !
சர் சர்ரென்றே பறந்திடுவேன் !
கீ கீ என ஹார்ன் ஒலித்திடுவேன் !

முதல் தெரு வழியாய் கிளம்பிடுவோம் !
இரண்டாம் தெருவில் திரும்பிடுவோம் !
மூன்றாம் தெருவில் பஸ்கள் வரும் –
பார்த்து ஜாக்கிரதையாய் ஓட்டிடுவோம் !

அதோ, சங்கர் தெருவில் போகின்றான் !
ஜானும் சைக்கிளில் பறக்கின்றான் !
மாமா நாயுடன் நடக்கின்றார் !
மாமியும் காய்கறி வாங்குகிறார் !

பாட்டி கோயிலில் கும்பிடறார் !
தாத்தா இட்டிலி சாப்பிடறார் !
தம்பிப் பாப்பா சிரிக்கின்றான் !
பேபி டாட்டா காட்டுகிறாள் !

அத்தனையும் எனக்கு வேடிக்கை !
இதெல்லாம் பார்ப்பது வாடிக்கை !
மாமா ஸ்கூட்டரில் ஏறிவிட்டால் –
மாயக் கம்பளம் போலிருக்கும் !

மாமா, என்னைக் கூட்டிப் போ – உன்
ஸ்கூட்டரில் ரவுண்டு கூட்டிப்போ !
உர் உர்ரென்றே ஓட்டிடலாம் ! – நாம்
ஜாலியாய் சுற்றி வந்திடலாம் !

நன்மை அருளும் நவக்கிரகத் தலங்கள் – ( பாகம்-1) – ம. நித்யானந்தம்

 

1. சூரியனார் கோயில் (சூரியன்)

ஒரு சமயம் காலவ முனிவர், தனக்கு தொழுநோய் ஏற்பட இருப்பதை அறிந்தார். நவக்கிரகங்களை வழிபட்டால் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்பதை அறிந்து அவர்களை நோக்கி தவம் இருந்தார். தவத்திற்கு இரங்கி முனிவருக்கு காட்சி தந்த நவக்கிரகங்கள், நோயிலிருந்து அவரைக் காத்தனர். இதை அறிந்த பிரம்மதேவன் கோபம் அடைந்தார். நவக்கிரகங்கள், ஒவ்வொருவரின் முற்பிறவி பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பலனைத் தரவேண்டுமே தவிர, வரம் கொடுக்கும் உரிமை கிடையாது என்று கூறி, ‘முனிவரைப் பிடிக்க வேண்டிய தொழுநோய் நவக்கிரகங்களை பீடிக்கட்டும்’ என்று சாபமிட்டார்.

தங்கள் தவறை உணர்ந்த நவக்கிரகங்கள், பிரம்மதேவனை வேண்டிக் கொண்டனர். அவரும், திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு வனத்தில் தங்கி, பிராணநாதேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் வணங்கி வழிபட்டு, பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் சாப்பிட்டால் சாபம் நீங்கும் என்றும் தெரிவித்தார். நவக்கிரகங்களும் அவ்வாறே செய்து சாபவிமோசனம் பெற்றனர். நவக்கிரகங்கள் தங்கியிருந்த வெள்ளெருக்கு வனமே இன்றைய ‘சூரியனார் கோயில்’.

மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் உள்ள ஆடுதுறை என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.

நவக்கிரகத் தலங்களில் முக்கியமானதும், முதன்மையானதுமான இக்கோயிலின் மூலவராக ‘சூரியபகவான்’ இரண்டு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். இவருக்கு இடதுபுறத்தில் உஷாதேவியும், வலதுபுறத்தில் பிரத்யுஷா (சாயா) தேவியும் நிற்க, தனது ஒற்றைச் சக்கரம் பூட்டிய இரதம் இல்லாமல் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார்.

ஆனால் சுவாமி சன்னதியின் எதிரில் அவர்களது வாகனங்கள் இருப்பதுபோல் இவருக்கு எதிரே இவரது வாகனமான குதிரை உள்ளது. மேலும் சூரிய பகவானின் ஒளியின் தன்மை அதிகம் என்பதால் அதன் கிரணங்களைத் தனிக்கும் பொருட்டு சூரிய பகவானுக்கு நேர் எதிரில் குருபகவான் தரிசனம் தருகின்றார். இந்த மண்டபத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சன்னதியும் உள்ளது.

மீதமுள்ள எட்டு கிரகங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு. இவர்கள் அனைவரும் அனுக்கிரக மூர்த்திகளாக பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர். அதனால் அவர்களுக்கும் வாகனங்கள் இல்லை. மற்ற கோயில்களில் இவர்கள் பரிவாரத் தேவதைகளாகவே காட்சி தருகின்றனர். இத்தலத்தில் மட்டுமே மூலவர்களாக அருள்பாலிக்கின்றனர் என்பது சிறப்பு

நவக்கிரக தோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம், சூரிய தசை உள்ளிட்ட பிற தசாபுத்திகள் நடக்கும் காலங்களில் இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள அந்தந்த மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் அதன் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. நவக்கிரகங்களுக்கும் பொதுவான தலமாதலால் இத்தலத்து வந்து பிரார்த்தனை செய்துக் கொண்டாலே அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி சுற்றியுள்ள பரிவாரத் தேவதை கோயில்களுள் நவக்கிரகங்களுக்கான கோயிலாக இக்கோயில் விளங்குகிறது என்பது சிறப்பு.

சூரிய வழிபாடு நமது நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இந்தியாவில் சூரியனுக்கு இரண்டு கோயில்களே உள்ளன. வட இந்தியாவில் ‘கோனார்க்’ என்னும் இடத்தில் சூரியனுக்கு கோயில் உள்ளது. ஆனால் அங்கு உருவ வழிபாடு இல்லை. தென்னிந்தியாவில் இத்தலத்தில் மட்டுமே சூரியனுக்கு தனி கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.

சங்க காலக் குறிப்புகளின்படி பூம்புகார் என்று அழைக்கப்படும் காவிரிப் பூம்பட்டினத்தில் ‘உச்சிக்கிழான் (சூரியன்) கோட்டம்’ என்னும் பெயரில் சூரியனுக்கு ஒரு கோயில் இருந்ததாகவும், கடற்கோளினால் (ஆழிப்பேரலை) இக்கோயில் அழிந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தை மாதத்தில் வரும் இரத சப்தமி உற்சவம் 10 நாட்கள் திருவிழாவாக இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, இராகு, கேது பெயர்ச்சி போன்றவையும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

இக்கோயிலின் தலவிருட்சம் வெள்ளெருக்கு. கோயிலின் தீர்த்தம் சூரிய தீர்த்தம்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

2. திங்களூர் (சந்திரன்)

நவக்கிரக பரிகாரக் கோயில்களுள் இத்தலம் சந்திரன் தலமாகும். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தார்கள். அப்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. தேவர்களைக் காப்பதற்கு சிவபெருமான் அந்த விஷத்தை அருந்தினார். ஆனாலும் அந்த நஞ்சின் விஷமானது காற்றில் பரவியதால் அதை சுவாசித்த தேவர்கள் மயக்கம் அடைந்தனர். அப்போது சந்திரன் தனது ஒளியால் அவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான். சந்திரன் தனது கிரணங்களைக் காட்டிய தலமாதலால், சந்திரன் பரிகாரத் தலமாக விளங்குகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு என்னும் ஊரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு சென்று இடதுபுறம் செல்லும் சாலையில் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து சுமார் 33 கி.மீ. தொலைவு.

மூலவர் ‘கைலாசநாதர்’ என்னும் திருநாமத்துடன், சிறிய லிங்க மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார். அம்பாள் ‘பெரிய நாயகி’ என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள்.

பிரகாரத்தில் சந்திர பகவானுக்கு தனிச் சன்னதி உள்ளது.

63 நாயன்மார்களுள் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரம் செய்து முக்தியடைந்த தலம். திருநாவுக்கரசு சுவாமிகள் மீது வைத்திருந்த பற்றின் காரணமாக தமது இரண்டு மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயரிட்டார். அப்பர் இத்தலத்திற்கு வந்தபோது, மூத்தவனை அரவம் தீண்டியது. நிலைமையை உணர்ந்த அப்பர் சுவாமிகள் இத்தலத்து இறைவனைத் தொழுது பாட, மூத்த திருநாவுக்கரசு உயிர்ப்பெற்று வந்ததாக அப்பூதி அடிகள் வரலாறு கூறுகிறது.

இக்கோயிலின் தீர்த்தமாக சந்திர புஷ்கரணி உள்ளது.

இத்தலம் தேவார வைப்புத் தலமாகும். திருநாவுக்கரசர் தமது ஒரு பதிகத்தில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.

இக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

3. வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்)

நவக்கிரகங்களில் செவ்வாய் தலமாகக் கருதப்படுவது வைத்தீஸ்வரன் கோயில். ஒரு சமயம் அங்காரகனுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டது. அப்போது இத்தலத்திற்குச் சென்று இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும் என்று அசரீரி கேட்டது. அவர் இங்கு வந்து வைத்தியநாதப் பெருமானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான்.

கோயில் பிரகாரத்தில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், செவ்வாய் தசை நடப்பவர்களும் இங்கு வந்து வைத்தியநாதப் பெருமானையும், தையல்நாயகி அம்மனையும், முத்துக்குமார சுவாமியையும், பின்னர் அங்காரகனுக்கு அர்ச்சனையும் செய்து வழிபடலாம்.

இத்தலமானது சீர்காழிக்கு தென்மேற்கே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் இரயில் நிலையம் உள்ளது. பேருந்தில் சென்றால் கோயில் எதிரிலேயே இறங்கலாம்.

புள் – பறவை (சடாயு, சம்பாதி என்னும் இரு பறவைகள்), இருக்கு – ரிக் வேதம், வேள் – முருகன் ஆகியோர் பூசித்த தலமாதலால் ‘புள்ளிருக்குவேளூர்’ என்று இத்தலத்திற்கு மற்றொரு பெயரும் உண்டு. சிவபெருமான் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளியிருப்பதால் ‘வைத்தீஸ்வரன் கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவர் ‘வைத்தியநாதர்’ என்னும் திருநாமத்துடன், பெரிய நாகாபரணம் சூடி, மேற்கு நோக்கி, லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். 4448 வகையான வியாதிகளைத் தீர்க்கும் வைத்தியநாதனாக இத்தலத்து இறைவன் அருள்புரிகின்றார். இங்கு தரப்படும் பிரசாதம் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றது.

அம்பிகை ‘தையல்நாயகி’ என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். அம்பிகை சன்னதி முன் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உப்பு, மிளகு ஆகியவற்றை சிலர் சித்தாமிர்த குளத்தில் கரைத்தும், சிலர் அம்மன் சன்னதி முன்பு கொட்டியும் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்து முருகப் பெருமான் முத்துக்குமார சுவாமியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். சூரபத்மனை வதம் செய்வதற்காக இத்தலத்து சுவாமியை முருகப்பெருமான் பூஜை செய்து வழிபட்டார். இவருக்கு நடக்கும் அர்த்தசாம பூஜை புனுகு, பச்சைக் கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால்சாதம், பால் ஆகியவற்றுடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

இராமாயணத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும்போது அவனைத் தடுத்து தனது உயிரை இழந்த சடாயுவை இராமபிரான் இங்கு தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ‘சடாயு குண்டம்’ என்று பெயர். பிரகாரத்தைச் சுற்றி வரும் இந்த குண்டம் உள்ளது.

இக்கோயிலில் கிழக்கில் பைரவரும், மேற்கில் வீரபத்திரரும், தெற்கில் விநாயகரும், வடக்கில் காளியும் காவல் தெய்வங்களாக உள்ளனர். நவக்கிரகங்கள் மூலவர் சன்னதிக்குப் பின்புறம் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.

இராமன், இலக்குவன், முருகப் பெருமான், ரிக் வேதம், ஏழு முனிவர்கள், சடாயு, சம்பாதி ஆகியோர் வழிபட்ட தலம்.

இத்தலத்தில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி மாதம் பிரம்மோற்சவம் சுவாமிக்கும், தை மாதம் பிரம்மோற்சவம் முத்துக்குமார சுவாமிக்கும் நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகமும் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

இத்தல தீர்த்தமாக சித்தாமிர்த தீர்த்தம் உள்ளது. தல விருட்சமாக வேம்பு உள்ளது.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

 

(மற்றவை அடுத்த இதழ்களில் )

ஜப்பான் பார்க்கலாமா -2 – மீனாக்ஷி பாலகணேஷ்

          

அடுத்து நாங்கள் டோக்கியோவிலுள்ள கபுகிசா எனும் கலையரங்கிற்கு, ‘கபுகி’ (Kabuki) எனும் ஜப்பானியப் பாரம்பரிய நாட்டிய நாடகத்தைக் காணச் சென்றோம்.  ‘கபுகி’ என்பது ஜப்பானின் 400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பாரம்பரிய இசை-நாட்டிய -நாடகம்.  (க – இசை; பு – நாட்டியம்; கி – நாடகம்.) இந்த 400 ஆண்டுகளில் கபுகி, மற்ற கலைகளிலிருந்தும், நவீன நாகரிகங்களிலிருந்தும் அவசியமானவற்றைத் தன்னுள் இணைத்துக் கொண்டு,  அசுரத்தனமான வளர்ச்சியை அடைந்து விட்டது என்கின்றனர்.

           1600களில், ஆற்றங்கரைகளில், இசை நாடகமாக வளர ஆரம்பித்தது கபுகி. முற்றிலும் பெண்களே ஆண், பெண் இருவரின் பாத்திரங்களையும் ஏற்று நடித்தனர்.  அரசவையில் நடிக்கப் பெற்று, வெற்றிகரமான கலைநிகழ்ச்சியாக உருவான கபுகி நாட்டிய நாடகங்கள், பல்வேறு குழுக்களால் நடிக்கப் பெற்று பிரபலமாயின.  ஆனால், அது பிரபலமானதென்னவோ, அதில் கண்ணியமற்ற ஆபாசமான முறையில் சித்தரிக்கப்பட்ட கருத்துக்களினாலும், அதனை நடித்த கலைஞர்கள் விபசாரத்தில் ஈடுபடுபவர்களாகவும் இருந்ததினால்தான்.  இதனாலேயே கபுகி அக்காலத்தில் ‘விபசாரிகளின் ஆடல் பாடல்’ என அறியப்பட்டது என விக்கிபீடியா கூறுகின்றது!

           இருந்தாலும் கணிசமாக வளர்ச்சியடைந்து, இவ்வாறு சிவப்பு விளக்குப் பகுதியாகப் பதிவு செய்யப்பட்ட ‘ஈடோ’ எனும் நகரில் பிரபலமான இக்கலை, பலவிதமான மக்களையும் கவர்ந்து ஓரிடத்தில் கூடச் செய்தது. நவீன நாகரிகங்களையும் நாட்டு நடப்புகளையும் விசேஷ அம்சங்களாகக் கொண்டிருந்த கபுகி என்ற இக்கலை வடிவம், புதுப்புது விதமான இசை, ஆடையணிகள், புகழ் பெற்ற கலைஞர்கள் எனக் கொண்டு மக்களை மகிழ்வித்தது.  கபுகி கலையரங்குகளைச் சுற்றிலும் தேநீர் அருந்தகங்கள் அமைந்து, உணவு, சிற்றுண்டி, நண்பர்கள் சந்திப்பு என நிகழ ஏதுவாயின என்கின்றனர்.

           (ஆம்! இவற்றையெல்லாம் படித்து ஒரு சிறு அளவாவது நம்மைத் தயார் செய்து கொண்டு போனால் தான் ஒரு நாட்டின் பாரம்பரியமாக விளங்கும் கலை, இசை வடிவங்களைப் பற்றிச் சிறிதாவது புரிந்து கொள்ள இயலும் அல்லவா?)

           1800களில் பலவிதமான கலாச்சார மாறுதல்கள் ஜப்பானில் நிகழ்ந்தன. சாமுராய்கள் ஒழிக்கப்பட்டனர்; ஜப்பான் மேற்கத்திய கலாச்சாரத்தினை வரவேற்றது;  இக்காலத்தில், கபுகி திரும்பப் புது வடிவம் எடுத்தது. பழைய வடிவங்களை விடுத்துப் புதுமையான வடிவம் எடுத்தாலும் ஜப்பானின் பாரம்பரியக் கலாச்சாரத்தின் இசை நாடக வடிவமாகவே கபுகி அறியப்படுகின்றது.  பெண்களும் இவற்றில் நடிகர்களாக அவ்வப்போது பங்கேற்க ஆரம்பித்தனர். இதன் ஆபாசமான பெயர் மாறியது.

           கபுகி நாட்டிய நாடகங்களுக்காக விசேஷமான கலையரங்குகள் நிறுவப்பட்டன.  இவற்றுள் ஒன்று தான் டோக்கியோவில் நாங்கள் சென்ற ‘கபுகிஸா’ (Kabukiza) கலையரங்கு.  இதுதான் ஜப்பானிலேயே கபுகிக்காக உள்ள மிகப்பெரிய கலையரங்கு என்கின்றனர்.  மாதம் ஒரு கலைநிகழ்ச்சி கட்டாயம் இங்கு நடைபெற்றே தீரும்.  கலைஞர்களும் இங்கு பங்கேற்பதனை மிகவும் உயர்வாக மதிக்கின்றனர்.

           ஆனால் நாங்கள் சென்றது ஒருமாலைநேரக் கலைநிகழ்ச்சிக்குத் தான். இது ஒரு நீண்ட கதையின் இரண்டாம் பாகம் என அப்போது அறிந்திலோம். ‘மாடினி’ (matinee) எனும் மதிய நேரத்து நிகழ்ச்சியில் முதல் பாகம் நடிக்கப்பட்டு விட்டது.  சென்று கலையரங்கில் அமர்ந்த பின் தான் இது புரிந்தது.

           மிக அழகாக வடிவமைக்கப்பட்ட கலையரங்கு.  மூன்று முறை தீக்கிரையாகி, உலகப்போரில் குண்டு வீச்சினால் பலமான சேதமுற்று பின் திரும்பத் திரும்பக் கட்டப்பட்ட கலையரங்கு!  தற்போது காணும் கலையரங்கு, கி. பி. 600-800 ஆண்டுகளிலும், 16-ம் நூற்றாண்டிலும் இருந்த கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளதாம்.  உட்புறம்  பாரம்பரிய முறையில் மரத்தினால் கட்டப்பட்டுப் பார்க்க மிக அழகாக இருந்த இக்கலையரங்கு வெளிப்புறம் ஒரு அரண்மனை போன்ற அமைப்பைக் கொண்டிருந்தது.

           ஃபீனிக்ஸ் (Phoenix) எனும் ஒரு பறவை எத்தனை முறை இறந்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்த்து வருமாம்.  இந்தக் கலையரங்கும் திரும்பத் திரும்பச் சேதமடைந்து ஐந்து முறை (1889; 1911; 1923; 1951;  தற்போது 2013) புதுப்பித்துக் கட்டப்பட்டதால் ஃபீனிக்ஸ் பறவையின் சின்னத்தினை எங்கும் பார்க்கலாம்!

           இடைவேளையில் வந்து கண்டு களிக்க அழகான தாழ்வாரங்களையும்,  பாரம்பரிய உணவுப் பொருட்கள், மற்றும் கலைப் பொருட்களையும் விற்பனை செய்யும் பலவிதமான கடைகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள கலையரங்கு இது தான்.  காணும் போதே அதன் அழகும் பிரம்மாண்டமும் பிரமிக்க வைக்கின்றன.  டோக்கியோவின் நடுப்பகுதியில் முக்கியமான  கடைத்தெரு எனப்படும் ‘கின்ஸா’ (Ginza) எனும் இடத்தில் இது அமைந்துள்ளது.

           எங்கள் இருப்பிடங்களில் வந்தமர்ந்து கொண்டு கட்டிடத்தின் உட்புற அமைப்பை வியந்து கொண்டிருந்தோம்.  உற்சாகமாக மக்கள் வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டவாறு இருந்தனர்.  பரபரப்பான ஒரு நாளின்  கடைசி அம்சமாக தங்களுக்குப் பிடித்த ஒரு கலைநிகழ்ச்சியைக் காணப் போகும் உற்சாகம் எல்லாரிடத்திலும் காணப்பட்டது.   நிகழ்ச்சி துவங்கிற்று.  முன்பே கூறியது போல இரண்டாம் பாகமானதால் கதை புரிவதற்காக, அவர்களிடமிருந்து ஒரு மொழிபெயர்ப்புக் கருவியை வாடகைக்கு வாங்கியிருந்தோம்.  அது கலைஞர்கள் பேசும் ஒவ்வொரு வரியையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நமக்கு கையடக்கமான ஒரு திரையில் காட்டும்!  அதன் உதவியால், கதை ஒருவாறாகப் புரிந்தது!

           ‘கபுகி’ என்பது கிட்டத்தட்ட நமது இந்திய கதகளியைப் போன்றே நீண்ட நேரம் செலவழித்து முகப்பூச்சும் அலங்காரங்களும் செய்து கொண்ட கலைஞர்கள் நிகழ்த்தும் நிகழ்ச்சியாகும்.  ஆகவே நடிகர்களைப் பார்த்ததும் கதகளியும் அது சம்பந்தமான ஒற்றுமைகளும் தான் நினைவிற்கு வந்தன. எல்லாப் பாரம்பரிய நாட்டிய நாடகங்களும் விருப்பமுடன் நடத்தும் ஒரு ராஜா – ராணி கதை தான் இங்கும் சில திருப்பங்களுடன் நடிக்கப்பட்டது. இதில் ஜப்பானியர்களின் கலாச்சாரமும், இசையும் பின்னிப் பிணைந்து வெளிப்படுகின்றன.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போல, மிகவும் சிரமப்பட்டு கதையைப் புரிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை ரசித்தோம்.

           பின்பு, இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் உள்ள நான்கு மணி நேர வித்தியாசத்தினால், சிறிது களைப்புற்றதனால், உன்னிப்பாக ரசிக்க இயலவில்லை!  ஆனால் என்ன?

நமக்குக் கண்டு ரசிப்பதற்கு மற்ற ரசிகர்கள் இருந்தார்களே!

‘ரசிகர்களை ரசிப்பது’ ஒரு உன்னதமான அனுபவம்!

           கபுகி நிகழ்ச்சியை எவ்வாறு ரசிப்பது என்று நமக்குக் கொடுக்கப்படும் நிகழ்ச்சித் தாளிலேயே அச்சிட்டிருக்கிறார்கள்!  மதிய, மாலை இரு நிகழ்ச்சிகளையும், ஒரு தொடராகக் கண்டு களிக்க எண்ணியிருப்பவர்கள், தங்களது உணவைக் கையில் எடுத்துக் கொண்டு வரலாம். இடைவேளையின் போது தங்கள் இருக்கையிலேயே அமர்ந்து உண்ணலாம்.  சிந்தாமல், சிதறாமல்- பின் என்ன? இத்தனை கலையழகு பொருந்திய, தங்கள் நாட்டின் பொக்கிஷமான கலையரங்கை யாராவது அசுத்தம் செய்வார்களா?  ஜப்பானியர்களின் அமைதியும், அடக்கமும், தாழ்மையும், பண்பும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.  பின்பு வெளியில் உலாவி, நீண்ட தாழ்வாரங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள், சித்திரங்கள் இவற்றைக் கண்டு களிக்கலாம்.  ஒவ்வொரு நிகழ்ச்சியும் நான்கு மணி நேர நீளம்! ஆகவே இடைவேளையின் போது எல்லாரும் தங்கள் உணவை உண்பதைக் கண்டோம்.  எங்கள் கையிலும் கொஞ்சம் உணவுப்பொருட்கள் இருந்ததால் உண்டோம்.

           இத்தனை கூறி விட்டுப் பின் கலை நிகழ்ச்சியைப் பற்றிக் கூறாமல் விடலாமா?

           நீட்டி, முழக்கி, அவசரமேயில்லாமல் பாடப்படும் பாடல்கள் போன்ற வசனங்கள்.   தொடர் வசனங்கள் கிடையாது.  நாட்டிய அசைவுகளிலேயே புரிந்து கொள்ள வேண்டியவை மிக அதிகம்.  கபுகியை ரசிப்பதும் ஒரு தனிக்கலை.  அதற்கும் பயிற்சி தேவை!  

உதாரணமாக, ஒரு காட்சி: கதாநாயகியுடன் தப்பித்துச் சென்றுவிட்டான் கதாநாயகன்; அவனுடைய தந்தை, கதாநாயகியின் தாய், தந்தை இவர்கள் மூவரும் சந்தித்துப் பேசுவார்கள்.  தங்கள் குழந்தைகளின் நன்மையையும் நலனையும் எண்ணிப் பேசி அங்கலாய்ப்பார்கள்.  பேச்சின் இடையே அனைவரும் ஒரு விரக்திச் சிரிப்பை உதிர்ப்பதாக வரும் பாருங்கள்!!  நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் சிரிப்பை வெவ்வேறு விதங்களில் காட்டுவார்கள்.  இது இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் நீடிக்கும்.  முயன்று பாருங்களேன், பார்வையாளர்கள் முன்பு தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு இடைவிடாது நகைப்பதென்பது (அதுவும் கவித்துவமாக) சாமானியமானதா?  நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நகைப்புத் தொடரை  விதம் விதமாகச் செய்து முடித்ததும் பார்வையாளர்கள் எழுப்பிய குதூகல வாழ்த்தொலிகள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின!

           இதற்கும் நிகழ்ச்சித் தாளில் விளக்கம் கொடுத்துள்ளனர்!  “நிகழ்ச்சியின் இடையிடையே தாங்கள் பார்வையாளர்களிடமிருந்து எழும் வாழ்த்துக் கூச்சலைச் செவிமடுப்பீர்கள்.  இது தொன்று தொட்டு இருந்து வரும் ‘கபுகி’க்கே உரிய ஒரு தனி வழக்கம்.  நடிகர்களை வாழ்த்தி, உற்சாகப்படுத்த, அவர்கள் ஏற்று நடிக்கும் பாத்திரங்களின் பெயர்களைக் கூறிக் கூவுவது பார்வையாளர்களின் வழக்கம்.  இது ஒரு அதீதமான சூழ்நிலையை உருவாக்கி, நடிகர்களையும், நிகழ்ச்சியைக் காண்போரையும் பரவசப்படுத்துகிறது.”

           மிகையேயில்லை.  வாழ்த்தொலிகள், முன்வரிசை, பின் வரிசை என எல்லா திக்கிலிருந்தும் எழுந்த வண்ணமிருந்தன.  பார்வையாளர்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது.  பார்த்த எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.   அற்புதமான ரசனை.  ஆகவே கபுகியை ரசிப்பதும் ஒரு தனிக்கலை என விளங்கியது.

           இரண்டு மணி நேரம் கபுகி நாட்டிய நாடகத்தையும் அதனை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தினையும் ரசித்து விட்டு, வெளியே வந்தோம்.  இன்னும் இரண்டு மணி நேர நாடகம் காண்பதற்கு பாக்கி இருந்தது.  வெளியே ஒரு இளைஞர் குழு (வேற்று நாட்டு மாணவர்கள் போலும்!), ‘உலகப்புகழ் பெற்ற கபுகிஸா தியேட்டரில் சிறிது நேரம் உட்கார்ந்து கண்டு களிக்கலாமே, அதற்கேற்ற குறைந்த விலை டிக்கட்டுகள் உள்ளனவா,’ என்று விசாரித்துக் கொண்டிருந்தனர்.  மீதி இருந்த எங்கள் டிக்கட்டுகளை அவர்களிடம் கொடுத்து விட்டு வந்தோம்.

           யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!!

 

                                                                                     (தொடரும்)

 

 

நன்றி: தாரகை மின்னிதழ்

 

 

 

 

 

_

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

புத்தன் நடந்த புனித வழி...!
பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம்-4

தீய வழியில் சென்று கொண்டிருந்த மக்களை நல் வழிப் படுத்த போதி சத்துவர் சாக்கிய வம்சத்தில் கபில வஸ்து எனும் அழகிய நகரில் அவதரித்து பெற்றோரால் சித்தார்த்தன் என பெயரிடப்பட்டு கௌதம புத்தராக மக்களை வழிநடத்தினார் என்பதை நாம் அறிவோம். அனைவரும் அறிந்தாலும்  பௌத்தம் பற்றி பேசும் பொழுது புத்தரைப் பற்றி பேசாவிட்டால் பௌத்த பிஷுக்களின் பாவம் நமக்கெதற்கு என்பதாலேயே மேற்கண்ட அறிமுகம்.

சிவனின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவர்களை ஆதி சைவர் என்பர். அவர்களே பிரம்ம புத்திரர்கள் அல்லது பிராமணர் என்றும் அறியப் படுபவர்கள். அவர்கள் காசிபர், கௌசிகர், அகத்தியர், பரத்துவாசர், கௌதமர் என்ற ரிஷிகளின் வழித்தோன்றலாதலால் அவர்களின் பெயரையே கோத்திரமாக கொண்டனர்.

அவர்களில் கௌதமர் வழித்தோன்றலே கௌதம புத்தர்.

கௌதம புத்தர் பெற்றோரையும், மனைவியையும், பிறந்த மகனையும் தவிக்க விட்டு உலக நன்மைக்காக துறவு பூண்டார் என்பதையும் நாமறிவோம்.

அரச வாழ்க்கையைத் துறந்து, இரந்து உண்டு பசியால் வாடி, காடு மேடு அலைந்து தன் கொள்கைகளில் உறுதியாக நின்று தம் பக்கம் மக்களைக்  கவர்வது ஒரு சாதாரண மனிதப் பிறவியால் இயலாத ஒன்று.

முற்றும் புகழப் படுபவரும், முற்றும் இகழப் படுபவரும் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, என்றும் இல்லை.

கௌதமர் மட்டும் விதி விலக்கல்ல. பல சோதனைகளையும் வேதனைகளையும் தகர்த்து மதக் கொள்கைகளை பரப்பி பல ஆயிரம் வருடங்கள் கடந்து இன்றும் உலக அளவில் பலரால் வணங்கப் படுகிறார்.

புத்த மதத்தின் மக்களை மயக்கும் கொள்கைகள் சிலவற்றை சென்ற பதிவிலே பார்த்தோம்.

தேவ பாஷை என்று கூறப்பட்ட சமஷ்கிருதம் கற்றலும் கற்பித்தலும் ஒரு பிரிவினருக்கு மட்டுமே உரிமையானது.
ஆனால் புத்தர் தோற்றுவித்த பாலி மொழி பாமரனையும் சென்றடைந்தது.
பாலி மொழியில் கொள்கைகள் எழுதப்பட்டாலும் பௌத்தம் சென்ற நாடுகளில் அந்த அந்த வட்டார மொழிகளிலே மொழி பெயர்த்து ஓதப்பட்டது. பௌத்தம் எங்கும் பரவ இது முதல் காரணம்.
புத்தர் தன்னுடைய சிஷ்யர்களை பல பிரிவுகளாக்கி அவர்களை தொண்டர்களுடன் வெவ்வேறு இடங்களுக்கும் அனுப்பினார். ஒவ்வொரு பிரிவும் சங்கம் என்றழைக்கப் பட்டது. சங்கத்தின் மூத்த பிஷுக்கு அதிகாரம் அனைத்தும் வழங்கப்பட்டது. பௌத்தம் உலகில் நிலை பெற ஒழுங்கு படுத்தப் பட்ட சங்கம் ஒரு மூல காரணம். பௌத்த சங்கத்தைப் பார்த்துதான் பிற்காலத்தில் வைதீக மதத்தை வளர்க்க சங்கர மடங்களும் பிற சைவ மடங்களும் தோன்றின.
மடங்களின் தலைவர்களாக மதகுருக்கள் தோன்றினர்.

ஒன்றுமறியாத பாமரன் அருகே உள்ள புத்த பிஷுவை அணுகி பாலி மொழியில்
புத்தம் சரணம் கச்சாமி ( புத்தரை அடைக்கலம் அடைகிறேன்)
தம்மம் சரணங் கச்சாமி ( தர்மத்தை அடைக்கலம் அடைகிறேன்)
சங்கஞ் சரணம் கச்சாமி ( சங்கத்தை அடைக்கலம் அடைகிறேன்)

என்று திரி சரணத்தை உறுதி மொழியாக எடுத்தால் பௌத்த மதத்தினாகி விடுவான். அனுபவம் அடைய அடைய அவனே தலைமை பிஷூ ஆக முடியும். தலைமை பதவி ஒரு வகுப்பினருக்கு மட்டும் உரிமை இல்லை என்ற கொள்கை அனைவரையும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.

பௌத்தத்தை பரப்ப பாலி மொழியை தோற்றுவித்த புத்தர் அவற்றை எழுத்தில் வடிக்க பிரமி என்ற எழுத்தையும் உருவாக்கினார். கி. மு 3 ம் நூற்றாண்டு முதல் கி. பி 2 ம் நூற்றாண்டு வரை பிரமி எழுத்துக்களிலே சாசனம் வடிக்கப் பட்டன. பிரமி எழுத்து வடிவத்திலிருந்து தோன்றியதே நாகரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளின் எழுத்து வடிவங்கள் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். கிரந்த எழுத்துக்கள் 9 ம் நூற்றாண்டு வாக்கில்தான் தோன்றியதாம்.

புத்தரின் கொள்கைகள் மாமன்னன் அசோக சக்கரவர்த்தி முதல் சிங்கள நாட்டிலோ, சீன நாட்டிலோ வசித்த சாமான்யன் வரை அனைவரையும் கவர்ந்தன. பாரதம் தவிர ஏனைய நாடுகளில் இன்றும் நிலை பெற்று பௌத்தம் வளர காரணங்களைப் பார்ப்போம்.

பௌத்த சங்கம் கட்டுப் பாடுகளுடன் பணி செய்தன. துவக்கத்தில் பிஷுக்கள் தங்குவதற்கு ஊருக்கு வெளியே விகாரைகளும் பள்ளிகளும் கட்டப்பட்டன.
பிஷுகள் ஒரு வேளை மட்டும் இரந்து உண்டனர்.
திரிபடுகம் எனப்படும் பௌத்த கொள்கைகள் தொகுக்கப் பட்டு கி. பி இரண்டாம் நூற்றாண்டு வரை எழுதா மறையாகவே ஓதப் பட்டது.
பள்ளிகளின் கூடங்களில் அனைவர்க்கும் கல்வி போதிக்கப் பட்டு இன்றும் பள்ளிக் கூடம் என்ற பெயரை தமதாக்கி குழந்தைகளின் அறிவை மேம் படுத்திக் கொண்டுள்ளன.
விகாரைகளில் மக்கள் மருத்துவம், கால்நடை மருத்துவம் அனைவர்க்கும் இலவசமாக வழங்கப் பட்டது.
இயலாதவர்க்கு இலவசமாக உணவு வழங்கப் பட்டது.
அனைத்திற்கும் அரசர்களும் நிலக் கிழார்களும் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு உதவினர்.
செல்வத்தை நிலை நிறுத்த ஏதோ ஒரு தெய்வத்தின் கருணை அவர்களுக்கு வேண்டியிருந்தது. அதற்கு மதத்தலைவரின் ஆசியும் வேண்டியிருந்தது. எனவேதான் அந்த தாராளம்.
மாற்றுத் திரனாளிகளுக்கு அனைத்தும் இலவசமாக கிடைத்தது.
சிறைச்சாலைகள் அறச்சாலைகளாகின.
நற் கொள்கைகள், நற் செயல்கள் இருந்தும் காலப்போக்கில் பாரதத்தில் பௌத்த மதம் அழிய காரணம் இருக்க வேண்டுமே.

ஆம்.பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்பே செல் வாக்கு பெற்று வளர்ந்திருந்த வைதீகம், சமண மதங்களுடன் போட்டியிட்டு சண்டையிட்டு, எதிர்ப்புகளை சமாளிக்க போராட வேண்டி இருந்தது.

பௌத்த பிஷுக்கள் ஆள்பவரை நெருக்கத்தில் வைத்து செல்வத்தை பெருக்கினர்.
செல்வம் பெருக பெருக பிஷுக்கள் தம் கடமை மறந்து கொள்கைகளை காற்றில் பறக்க விட்டனர்.
மக்களிடம் மதிப்பு குறையத் துவங்கியது.
கி பி 5 – 6 நூற்றாண்டுகளில் சமண மதம் வைதீக, பௌத்த மதங்களை பின் தள்ளி வேகமெடுத்து வளர்ந்தது.
விளைவு பௌத்த கோவில்கள் சமண கோவில்களாகவும் பிட்சுகள் வகித்த மலைக் குகைகள் சமண குகைகளாக மாற்றப்பட்டன.
மன்னரும் செல்வந்தரும் சமணத்தால் ஈர்க்கப் பட்டனர். சமண குருக்களுக்கு தலை வணங்கத் துவங்கினர்.
வைதீக மதமும் தம் கொள்கைகள் சிலவற்றை மாற்றி மீண்டெழத் துவங்கியது.
மெல்ல மெல்ல பௌத்தம் இங்கு மெலிந்தது. இருப்பினும் மற்றைய நாடுகளில் இன்றும் நிலை பெற்றுள்ளது.

இவ்வளவு சிறப்புடன் இருந்த பௌத்தத்தையும் வைதீக மதத்தையும் புறந்தள்ளி தன்னை சில காலம் நிலைப் படுத்திக் கொண்ட சமண மதத்தைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

முள்முடி – பானுமதி ந

Doctor Vikatan - 16 October 2017 - பேசலாம்... பாடலாம்... இசைக்கலாம்! - இனி  மூளை அறுவைசிகிச்சையின் போது மகிழ்ந்திருக்கலாம் | Music during brain surgery  to keep good mood - Doctor Vikatan

‘தங்க மகனைப் பெற்றவள் என்று என்னை உலகம் சொல்லி மகிழும்’ என்று ஹம் செய்து கொண்டிருந்தாள் பூரணி. இத்தனைப் பழைய பாடல் இவளுக்குத் தெரியுமா என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் மகன் அக்ஷையைப் பற்றி அவளுக்கு எப்போதுமே பூரிப்பு தான். ஐந்து வயதில் அவன் போடும் ஆட்டமும், கும்மாளமும் எங்கள் வீட்டின் புதுச் சுடரொளி.

“தங்க மகன் தானிருக்கிறானே? தேவதைப் போல் ஒரு பெண் குழந்தை” என்று நான் ஆரம்பிக்கும்போதே அவள் உடல் சரிந்து கட்டிலிருந்து கீழே ஒரு பூவைப் போல் விழுந்தாள். எனக்கு கை கால்கள் ஓடவில்லை. நான் ஏதோ உளறிக் கத்தியிருக்க வேண்டும். அப்பா ஓடி வந்தார். உடனடியாக அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தார். “ஒரு கை பிடிடா” என்று அவளைத் தூக்கி மீண்டும் கட்டில் நடுவில் கிடத்தினார். நல்ல வேளையாக இந்தக் கலவரத்தில் அக்ஷை விழித்துக் கொள்ளவில்லை. பூரணியின் உடலில் அசைவு வருவதற்கு முழுதாக மூன்று நிமிடங்களாயின. எங்களைப் பார்த்து மலங்க  மலங்க முழித்தாள். இரட்டைப் பார்வை போல இருந்தது. சிறிது நேரத்தில் தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டு அரற்றினாள்.

“பூரணி, என்ன செய்கிறது உனக்கு?” என்ற அப்பாவிற்கும் பதிலில்லை, பிரமையுடன் திகைத்து நின்ற எனக்கும் பதிலில்லை. அவள் ஒக்காளிக்கத் தொடங்கவே அப்பா சட்டென்று ஒரு பிளாஸ்டிக் மக்கை அவளருகில் கொண்டு சென்றார். ஆனால், வாந்தி அதை நிரப்பி வழிந்தது. ஒன்றும் செய்வதறியாது திகைத்தோம். அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவளை சுத்தம் செய்து, வேறொரு அறைக்கு மாற்றி, எங்கள் அறையைச் சீராக்குவதில் முழு இரவும் கழிந்து விட்டது.

“ரகு, என்னடா இது? முன்னாடி இப்படி நடந்திருக்கா?” என்றார் அப்பா. அவர் வெளி நாட்டிலிருந்த என் அண்ணனின் வீட்டிலிருந்து இரு வாரங்களுக்கு முன்னர் தான் இங்கு வந்தார். எங்கள் கல்யாணம் ஆன கையோடு கலிபோர்னியா போனவர், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஒரு மாதம் இந்தியா வருவார். அண்ணாவிற்கு அவர் உதவி தேவையாக இருந்தது. அம்மா என் ஆறு வயதிலேயே இறந்துவிட்டார்.

“இல்லப்பா, அப்பப்ப தலவலின்னுவோ. ஏதோ அனாசின், ஆஸ்ப்ரின், அம்ருதாஞ்சன்னு எடுத்துப்போ. ஒரு நாள்ல சரியாயிடும். இன்னிக்குதான் இப்படி..”

“சரி, பயப்படாதே. இன்னிக்கு டாக்டர் சுந்தரத்தைப் பாத்துடுவோம்.”

“அப்பா, அவர் ந்யூராலஜிஸ்ட்டுன்னா?”

“ஆமாண்டா, அவ முழிச்ச முழி நேத்திக்கு என்னவோ போல இருக்கல? தலவலி அடிக்கடி வரதுங்கற. என்ன ஒரு வாந்தி? ஏதோ சரியில்லடா, சுந்தரத்தப் பாப்போம்.”

முதல் வாரம் மருத்துவரும் சாதாரண முறையில் மருந்து கொடுத்தார். அந்த வார முடிவில் அவள் திரும்பவும் மயங்கி விழுந்தாள், வாந்தியும் அதிகமாயிற்று.

‘ரகு, ஈ ஈ ஜி எடுக்கணும், ஃபுல், பாடி ஸ்கேனும் செய்யணும். இன்னும் சில டெஸ்ட்ஸ் இருக்கு. இதப் பொறுத்து அதைச் செய்யலாம்.’ பயாப்ஸி எடுத்துப் பார்த்து விடலாம் என்று அவர் சொன்ன போது பயம் வந்ததென்னவோ உண்மை. ‘இந்தக் கால இளைஞன் நீங்கள்; இதெல்லாம் டயானாக்ஸ்டிக் புரோசீஜர்’ என்றார்.

அதற்குப் பதினைந்து நாட்களுக்குப் பின்னர் தான் அவளுக்கு ‘ஹெமேஞ்ஜியோப்ளாஸ்டோமா’ (Hemangioblastoma) என்றார்.

‘ரவுன்ட்ஸ் போய்ட்டு வந்து வெளக்கமா சொல்றேன்.’ என்று அவர் சொன்னது கூட எனக்கு உறைக்கவில்லை.

முதலில் அவர் சொல்வது எனக்கு மொஹஞ்சதாரோ என்று கேட்டது. அவளுக்குப் பிடித்த ‘கிளிமஞ்சாரோ’ பாடலில் ‘மொஹஞ்சதாரோ அதில் நுழைந்ததாரோ?’ என்ற வரி வரும்போது தியேட்டர் என்பதையும் மறந்து அவள் உல்லாசமாகச் சிரித்ததுதான் எனக்கு நினைவில் வந்தது. ஆனால், மருத்துவர் என்னவோ ஒரு பெயர், கிட்டத்தட்ட அதே மாதிரி ஒலிக்கும் பெயரல்லவா சொன்னார்? அவளுக்கு என்னதான் வந்துள்ளது?

எங்கள் திருமணத்தின் போதே அவளுக்கு அப்பா இல்லை. அவள் அம்மா தேனியில் ஓம்காரானந்தா ஆஸ்ரமத்தில் இருக்கிறார். முழுதுமாக, ஏறக்குறைய ஒரு சன்யாசினி போல் இருக்கிறார் அவர். அவருக்கு இவள் நிலை பற்றி ஏதேனும் தெரிந்திருக்குமா? முன்னரே பூரணிக்கு இம்மாதிரி ஏதேனும் ஏற்பட்டிருக்குமா? அவரை ஃபோனில் தொடர்பு கொண்டு கேட்கலாமா? அவரோ குடும்பத்தை விட்டு விலகியிருக்கிறார். அவரை எதற்குத் தொந்தரவு செய்ய வேண்டும்? என் மனம் இரு பாதிகளாகப் பிரிந்து வாதிட்டுக் கொண்டிருந்தது. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன எங்கள் திருமணம் நடந்து. பூரணியுடன் வாழ்வதில் நிறையைத் தவிர குறை எங்கு கண்டேன்? தலைவலி, மயக்கம், வாந்தி எல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் வருவதுதானே?

அப்பா ஆதரவாக தோளில் கைவைத்தார். எத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த ஸ்பரிசம்! அவர் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். “சின்ன வயசுடா, ஒன்னும் பெரிசா இருக்காது; கவலப்படாதே” என்றார்.

‘வாங்க மிஸ்டர் ரகு, கன்சல்டிங் ரூமுக்குப் போகலாம். நீங்களும் வாங்க சார்’ என்றார் ஈஸ்வரன்.

“டாக்டர், ஏதோ பேர் சொன்னீங்க. அது என்ன? அது க்யூரபில் தானே?”

‘பேர் அவ்ளோ முக்கியமில்ல. அவங்களுக்கு மூளைல ஒரு கட்டி.’

நான் பேச்சிழந்தேன். அப்பா சுதாரித்துக் கொண்டார்.

“கட்டின்னா, டாக்டர், கேன்சர் இல்லையே?” என்று கேட்டார்.

‘இது கேன்சர்ல ஒரு வகை. ஆனா, கெட்டது இல்ல.’

“புரியல் டாக்டர்” என்றேன் நான்.

‘ரகு, ஒரு மாரியான வளர்ச்சி. திசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாத் திரண்டு கிட்டத்தட்ட பந்து போல ஆயிடும். இது மெதுவாகத்தான் திரளும். ஆனா, நாளடைவுல, அக்கம் பக்கம் நரம்புகளை அழுத்த ஆரம்பிக்கும். அதனாலத்தான் தலவலி, டபிள் விஷன், வாமிட் எல்லாம்.’

‘இன்னமும் புரியல, டாக்டர். ஏன் செல்லெல்லாம் சேந்துக்கணும், உருண்டையாகி நரம்பை அழுத்தணும்? அதை முன்னாடியே ஏன் தெரிஞ்சுக்க முடியல?’

டாக்டர் சிரித்தார். ‘பொதுவா, ஏன்னு கேட்டீங்கன்னா பதில் சொல்றது சிரமம்; பூரணிக்கு  வந்திருக்கிறது வான் ஹிப்பல் லிண்டாவ் சின்ட்ரோம் (Von Hippel- Lindau Syndrome-VHL) முன்ன சொன்னேன் இல்லயா,  ‘ஹெமேஞ்ஜியோப்ளாஸ்டோமா’ அதுதான் இதுக்குக் காரணம். இன்னும் சொல்லணும்னா, நம்ப இரத்தக் குழாய்கள்ல இருக்கற உட்பூச்சுகள்ல இருக்கற செல்கள் இப்படித் திரண்டுக்கும். அது அளவுக்கு அதிகமானா நரம்பை, நான் முன்ன சொன்னமாரி அழுத்திடும்.’

“பூரணிக்கு மூளைலயா இந்தக் கட்டி இருக்கு?” என்று கேட்டார் அப்பா.

‘ஆமா, சார். கட்டியும், புண்ணுமா சிறு மூளைல இருக்கு. தண்டுவடம் கொஞ்சம் பாதிப்ல இருக்கு.’

‘டாக்டர், என்னென்னவோ சொல்றீங்களே; என் பூரணி, என் பூரணி..’

‘ரிலாக்ஸ், ரகு. இதெல்லாம் ஈசியா நீக்கிடலாம். இதுல இருக்கறது நல்ல திசுக்கள் தான். பரவுங்கற அபாயமில்ல; நீக்கிட்டா இந்த அழுத்தம் போய்டும், மற்ற அறிகுறிகளும் போய்டும். என்ன ஒண்ணு, 14 மணி நேரம் ஆபரேஷன் நடக்கும். ஒரு வாரம் ஐ சி யுல இருக்கணும்; ஹாஸ்பிடல் அறைல பத்து நாள் இருக்கணும். சில மாத்திரகள அப்புறம் தொடரணும்.’

எனக்குத் தலை சுற்றியது. “சர்ஜரியாலதான் சரி படுத்தமுடியும்னு சொல்றீங்க இல்லையா?” என்று கேட்டார் அப்பா.

‘அத இப்பக் கரைக்க முடியாது சார். ஆபரேஷன் பண்ணலேன்னா, அது உள்ளயே வெடிச்சுடும். உயிருக்கு ஆபத்து வரலாம், ஸ்ட்ரோக் வரலாம், நரம்பு மண்டலம் இயங்காமப் போகலாம்.’

அப்பா என்னையும், நான் அவரையும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம். சம்மதித்தோம்.

இரு மாதங்களுக்குப் பிறகு டாக்டரிடம் பூரணி ஒன்றைக் கேட்டாள். “இது பரம்பரையா வருமா?”

‘70% வாய்ப்பிருக்கு.’

“இது இருக்குன்னு முன்னாடியே கண்டுபிடிக்க முடியுமா?”

‘பொதுவா, சிம்ப்டம்ஸ் வச்சு கண்டுபிடிக்கலாம். புதுசா, ஒரு டெஸ்ட் வந்திருக்கு. இந்த வி ஹெச் எல்லைக் கண்டு பிடிச்சு முன் மருந்து கொடுக்கலாம்.’

“அப்படின்னா, அக்ஷைக்கு இருக்கான்னு பாத்துடுங்கோ, டாக்டர்.” என்றாள் பூரணி.

 

சிவசங்கரி- சிறுகதைத் தேர்வு – அக்டோபர் மாதம் – ராஜாமணி

 

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

அக்டோபர் (2022) மாத சிறுகதைத் தேர்வு

_____________________________________________________________________________________________________

இம்மாத சிறந்த கதை : 

அனாதை மரங்கள்

கிறிஸ்டி நல்லரெத்தினம்
கல்கி 

அனாதை மரங்கள்

விவரம் கீழே: 


 

அக்டோபர் மாதம் வந்த வாராந்திர / மாதந்திர இதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் வந்த கதைகளில் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து கொடுக்கும் பொறுப்பை கொடுத்ததற்கு குவிகம் அமைப்பிற்கு நன்றி.

 அக்டோபர் மாதம் 69 கதைகள் வந்துள்ளன. இதில் எல்லாக் கதைகளிலும் ஏதாவது ஒரு சிறப்பம்சம் இருக்கத்தான் செய்தது. சில கதைகள் வெகுஜன ரசனைக்கேற்ப வழக்கமான பாணியில் இருந்தது. குறையாகத் தெரியவில்லை.

இப்போது சில கதைகள் குறித்து

 ” ஒளியின் நிழல்” – கலைச்செல்வி – சொல்வனம்

அருமையான புனைவு கதை

காந்தி – கஸ்தூரிபா- ஹரிலால் இவர்கள் மூன்று பேருக்கும் (தெ.ஆப்பிக்காவில்) இடையேயான, உரையாடல் உராய்வுகள் மற்றும் மன உணர்வுகள் பற்றி மிக அழகாக எழுத்தாளர் கலைச்செல்வி எழுதி இருக்கிறார்.

ஆனால் 34 பக்கங்கள் இருப்பதால் சிறுகதையாக பரிசளிக்க எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் நிச்சயம் படிக்க வேண்டிய புனைவு கதை என்று பரிந்துரைக்கிறேன்.

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் இரண்டு கதைகள் “ஆரஞ்சு பழ விதைகள் அப்படியே இருக்கின்றன ” (அம்ருதா) “தூறலில் நனைதல் ” (உயிர்மை)

அவரது அனுபவமிக்க நடையில் மனித மன உணர்வுகளை மிக அழகாக சித்தரிக்கிறார். அதையும் வாசகர்கள் படித்து மகிழலாம்.

 இதைத் தவிர்த்து மற்ற கதைகளில் சிறந்த கதையாக பரிசீலிப்பதற்கு சுருக்கப்பட்டியலாக எட்டு கதைகள்எடுத்துக் கொள்ளப்பட்டன.

  1. ஆயிஷா நடராஜன் அவர்கள் எழுதிய

“நான் ரோபோட் அல்ல” (குமுதம் -05/10/22)

ஒரு நல்ல கதை. நிகழ்கால மற்றும் எதிர்கால மனித வாழ்வின் இயல்பை சொல்லும் கதை.

 ஒரு நிறுவனத்தில் செயற்கை அறிவுடன் மனித உணர்வுகளுடன் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு மனிதர்களும் ரோபோக்களும் சேர்ந்தே பணிபுரிகின்றனர். அடுத்து ஒரு கட்டத்தில் பதவி உயர்வு கொடுப்பதற்கு இரண்டு பேர்கள் (ரஞ்சன், யுவன்) பரிசீலிக்கப்படுகிறார்கள். ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த ஒருவர் மனிதராக இருக்க வேண்டும்.

அந்த இருவரில் யார் மனிதர் யார் ரோபோட் என்பதை ஒரு பெண் சோதிப்பார். இருவருமே மனிதர் தான் ரோபோட் அல்ல என்று நிரூபிப்பதற்காக பிரயத்தனப் படுவார்கள்.

கதையின் முடிவு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

இவர்கள் மனிதர்களா அல்லது ரோபோட்க்களா என்று சோதனை செய்தது ஒரு ரோபோட் தான். ரோபோட்க்களை மனிதர்கள் அளவுக்கு மேம்படுத்துவதை விட மனிதர்களையே ரோபோட்டுக்களாகிவிட ஒரு கோட்பாடு உண்டு. மனிதத் தன்மை இழந்து மனிதர்கள் இயந்திரமாக மாறி வருவதை சொல்லும் அருமையான கதை.

  1. இதழில் விக்னேஷ் எழுதிய ” தனித்த வனம்” (சொல்வனம்)

சென்னையில் இருந்து கோவைக்கு அப்பாவின் உடல்நிலை சரியில்லை என்று செல்கிறான். அப்பா மரணித்து விடுகிறார். அலுவலகத்தில் மூன்று நாள் தான் லீவு தருகிறார்கள். சென்னையில் இருந்து மனைவி வர முடியவில்லை. அவனுடைய மகனும் இவனை உடனே புறப்பட்டு வரும்படி சொல்கிறான். அப்பாவின் இறந்து போன செய்தியை இவன் சொன்ன பொழுது எதிர்முனையில் சிறிது நேரம் மௌனம்.

இந்த மௌனம் எதற்காக, என் அப்பாவை கற்பனை செய்து பார்க்கவா, உடனே பேசினால் நன்றாக இருக்காது என்று காலம் கடத்துகிறார்களா ?

 வெளிநாட்டில் இல்லாமல் உள்நாட்டிலேயே வேறு வேறு ஊர்களில் இருந்தாலும் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்தவர்களின் மரணத்தில் கூட முழுமனதோடு உணர்வுபூர்வமாக கலந்து கொள்ள முடியாத நிலையில் மாறிவரும் வாழ்க்கை நிலையும், சிதைவுறும் சமூக மதிப்பீடுகளும் அழகாக சொல்லப் பட்டிருக்கின்றன

  1. எம்.எம்-தீன் எழுதிய “கரகம்” (ஆனந்தவிகடன் 05/10/22)

கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு நெருக்கடியான வாழ்விற்கு உள்ளான கரகாட்ட கலைஞர்களின் கதை. சரோஜா கரகாட்டக்காரி. அவள் துணைக்காக, துணைக் கும்பமாக வாணி என்ற இளம் பெண்ணையும் கூடவே அழைத்துச் செல்வாள். கொரோனா காலத்திற்குப் பிறகு அன்றாட வாழ்வை நடத்துவது பெரிய போராட்டமாகி விட்ட நிலையில் நல்ல நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இல்லாமல் சாவுக்கும் கரகம் ஆட செல்கிறாள். சாவு வீட்டில் இழிவாகப் பார்க்கப்படுகிறார்கள்.

 அது மட்டுமல்லாமல் பாலியல் தொந்தரவுக்கும் உள்ளாகிறார்கள். வாணியும் சரோஜாவும் ஒரு பணக்காரியின் சாவிற்கு கரகம் ஆடச் செல்கிறார்கள். அங்கு இழிவான பேச்சுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகிறார்கள். சவடக்கத்திற்குப் பிறகு உறவினர்களிடையே சொத்து தகராறு ஏற்பட்டு, இவளுக்கு யாரும் பணம் கூட கொடுக்க வரவில்லை. ஆடியதற்கான கூலி கூட பெறாமல் தனியாக இருக்கும் அம்மாவிற்காக வீட்டுக்கு திரும்புகிறாள். கரகம் போன்ற கலைகளையே தங்கள் வாழ்வின் ஆதாரமாக கொண்டுள்ள மக்களின் சுமையான வாழ்க்கையை சொல்லும் அருமையான கதை.

  1. நர்சிங் எழுதிய “ஓவியன்” ஆனந்த விகடன் (12.10.22)

சந்தனமாரி ஒரு ஓவியன். காளிதாசனும் கதை சொல்பவனும் சந்தன மாரியும் நண்பர்கள்.

ஒரு முறை மூன்று பேரும் ஒன்றாக இருக்கும் பொழுது அங்கு வந்த காளிதாசனின் பெரியப்பா மகள் பொற்கிழியைப் பார்த்து அவளுடைய அழகான தோற்றத்தை பார்த்துப் பிரமிக்கிறான் சந்திரமாரி.

சில நாட்கள் கழித்து மேல மாச வீதியில் ஒரு நகைக்கடை விளம்பரத்திற்கு படம் வரைந்து கொடுக்கிறான் சந்தனமாரி.

அதில் இருப்பவள் அச்சு அசல் பொற்கிழியைப் போலவே இருக்கிறாள். இது பெரிய பிரச்சனையாகிறது. வேற்று ஜாதி என்பதால் காளிதாசும் அவன் உறவினர்களும் சந்தன மாரியை நையப் புடைத்து விடுகிறார்கள். பொற்கிழியையும் அவள் அப்பா துபாயில் இருப்பதால் அங்கு கூட்டி சென்று விடுகிறார்கள்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்தனமாரி ஊருக்கு வந்திருக்கிறான். மூவரும் சந்திக்கிறார்கள். சந்தனமாரி இப்பொழுது திரைப்படத் துறையில் பல வெற்றி படங்களுக்கு ஸ்டோரி போர்டு வரைந்து கொடுக்கிறான். நல்ல நிலைமையிலும் இருக்கிறான்.

‘காளிதாஸ் கிட்ட நீ பேசி இருக்கலாம் இல்ல அப்பவே’ என்று சொன்ன பொழுது, நான் பொற்கிழியை ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். பிறகு அவளோடு பேசியதோ பார்த்ததோ இல்லை. அந்த முகம் என் மனதில் பதிந்து விட்டது. அவ்வளவுதான் என்றான். சந்தனமாரி காளிதாசுக்கும் வருத்தமாக போய்விட்டது. அடுத்ததாக சந்தனமாரி இந்தியா முழுவதும் வெற்றி பெற இருக்கும் என்று உறுதியாக நம்புகின்ற அடுத்த படத்திற்காக தான் வரைந்த ஸ்டோரி போர்டு படங்களை காட்டுகிறான்.  அதில் கதாநாயகனின் முகம் காளிதாசன் முகமாக இருந்தது.

ஜாதியப்போக்குகளும் வதந்திகளும் நல்ல நட்பையும் உறவையும் எப்படி பாதிக்கும் என்று சொல்லப்பட்ட நல்ல கதை.

  1. சோ.சுப்புராஜ் எழுதிய “தற்செயல்களின் கடவுள் ” (சிறுகதை)

ஒரு பெரிய கட்டிடம் கட்டும் வேலை நடக்கிறது. கார் பார்க்கிங் பகுதிக்கு போடப்பட்டிருந்தது. பீமும், சிலாபும் திடீரென இடிந்து விழுந்து விடுகிறது.  நல்ல வேலையாக யாருக்கும் அடிபடவில்லை.

காண்ட்ராக்டருக்குத் தெரியப்படுத்த, வந்து எல்லோரையும் திட்டுகிறார். சைட் இன்ஜினியரிடம் காரணம் கேட்க, சைட் இன்ஜினியர் வேறு ஒரு கட்டுமானப் பணி நடக்கும் இடத்திற்கு போன சமயம், அவசரகதியில் மேஸ்திரி மேற்பார்வையில் செய்த வேலை.

 பூஜை போடுவதில்லை. அதனால்தான் இப்படி எல்லாம் நடக்குது. ரத்த பலி வாங்காம விடாது என்று அச்சத்தோடு வேலைக்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

விழுந்ததற்கான தொழில் நுட்பக் காரணங்களை இன்ஜினியர் காண்ட்ராக்டருக்கு விளக்கிச் சொன்ன பிறகு இன்ஜினியரைத் தனியாக அழைத்து ‘எனக்கு இதெல்லாம் தெரியும்பா,  நீ என்ன பெரியார் கட்சியா? இருந்தாலும் தப்பில்லை. எனக்கும் இந்த பூஜை எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் நாம் என்ன சொன்னாலும் இந்த வேலைக்காரங்க ஏத்துக்க மாட்டாங்க. அவங்களுடைய நம்பிக்கையை நாம மதிக்கணும் கௌரவிக்கணும் அவங்க பயமில்லாமல் அப்பத்தான் வேலை பார்க்க முடியும். அதனால அடுத்த வாரத்தில் இருந்து பூஜை போட சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு போகிறார்.

சமூகமோ அல்லது பணி செய்யும் இடமோ எல்லோருடைய நம்பிக்கைக்கும் மதிப்பும், இடமும் இருந்தால் தான் அச்சம் இன்றி இயங்க முடியும் என்பதை அழகாக சொன்ன கதை.

  1. சிறுகதை இதழில்

நா. ஞானபாரதி எழுதிய “கோழிக்கறி சாப்பிடுபவர்களுக்கு பூஜா மண்டலைத் தெரியாது” (சிறுகதை)

ஒரு கோழிப் பண்ணை எப்படி பராமரிக்கப்படுகிறது, அதில் வேலை செய்பவர்களின் நிலை என்ன? இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

கோவையில் இருக்கும் கோழி பண்ணையில், காண்ட்ராக்டர் மூலம் வங்காளத்தில் இருந்து பூஜா மண்டலும் அவள் கணவன் அசிஷ் மண்டலும் வேலைக்குச் செல்கிறார்கள். தொற்று காலத்தில் பூஜா மண்டலை கோழிப்பண்ணையில் விட்டு விட்டு பெற்றோரைப் பார்க்க ஊர் சென்ற அசிஷ் மண்டல் தொற்று வந்து இறந்து விடுகிறான்.

பெருத்த அதிர்ச்சியுடனும், மனவேதனையுடனும் பூஜா மண்டல் கோழிப்பண்ணையில் வேலை செய்யும் முத்துப்பாண்டி அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறான். நட்பு காதல் ஆகி திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறான் முத்துப்பாண்டி. பல வருடங்களுக்கு முன் ஊரில் ஏற்பட்ட ஜாதி மோதலில் முத்துப்பாண்டி கொல்லப்படுவான் என அஞ்சி அவனைக் கோவைக்கு அனுப்பி விடுகின்றார் அவனது பெற்றோர். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் ஊருக்கு போகிறான் பெற்றோர் சம்மதம் பெற்று பூஜா மண்டலை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறான். முத்துப்பாண்டிக்காக பூஜா மண்டல் காத்திருக்கிறாள் ஊருக்கு போன முத்துப்பாண்டி இன்னும் வரவில்லை ஏனென்று தெரியவில்லை.

கோழிப்பண்ணை, அதன் வேலைமுறைகள் மற்றும் ஊழியர்களிடையே இருக்கும் உறவு, அவர்களுடைய மனிதம் எல்லாம் மிக அழகாக சொன்ன கதை

  1. மு. அரஃபத் உமர் எழுதிய ” நசீபு ” (உயிரெழுத்து)

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழும் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் நிலையை விவரிக்கும் கதை. சுபைதா பாட்டிக்கும் செரீனா என்ற பேரனின் மனைவிக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் கதை.

சுபைதா தன் வாழ்க்கையைச் சொல்கிறார். சிறுவயதில் பண்டிகைக்குப் பட்டுத் துணியில் பாவாடை கேட்கிறார். அப்பா வாங்கி கொடுத்த துணி பிடிக்காததால் பண்டிகை அன்று கட்டவில்லை.

 இந்த அறிந்த அப்பா அவர் மனைவியை பெண்ணை வளர்க்க தெரியவில்லை என்று அடிக்கிறார். அன்றோடு பிறந்த வீட்டில் தன் விருப்பங்களை அவள் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்.

 திருமணம் ஆன பிறகு புகுந்த வீட்டில் பக்கத்து வீட்டுப் பெண்ணோடு மதார்சா செல்வதாக கணவனிடம் சொல்கிறாள். கணவன் அவளை ஓங்கி அறைந்து சுயமாக இந்த மாதிரி எல்லாம் திமிராக முடிவெடுக்கக் கூடாது என்கிறார்.

அதன் பிறகு அவள் வாழ்நாளில்  “என்னங்க “, “சரிங்க ”  என்ற வார்த்தைகளைத் தவிர வேறு பேசியதே இல்லை.

 

முஸ்லிம் சமூகத்தில் கணவனோ மனைவியோ இறக்கும் தருவாயில் இருந்தால், மற்றவர் அவரிடம் சென்று நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மன்னிப்பு கேட்க வேண்டும்.

சுபைதாவின் கணவர் சாகும் தருவாயில் இருக்கும்போது உறவினர்கள் இவளை வற்புறுத்த இவள் சென்று மன்னிப்பு கேட்கிறாள். அப்போது பேசும் நிலையில் இருந்த அவரது கணவர் ஆண்கள் எல்லாம் வராங்க உள்ள போ என்று தான் சொல்கிறார். நான் என்ன தவறு செய்தேன் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆதங்கத்துடனே சுபைதா வாழ்கிறாள்.

சுபைதாவின் மகனும் இதே போல் தான் நடந்து கொள்கிறான். சுபைதா செரினாவிடம் உன் பையனையாவது பெண்களை மதித்து வாழ கற்றுக் கொடு என்கிறார்.  பேரன் ரியாஸ் சவுதியில் இருக்கிறான். அவனிடமிருந்து வரும் போன் காலில் செரினா மகிழ்ச்சியோடு பேசிவிட்டு சுபைதாவிடம் மொபைலை கொடுக்கிறார். பாட்டியும் பேரனிடம் ‘சவுதியில் போய் கெட்டுப் போயிடாத. நல்ல பிள்ளையா இரு’ என்கிறார்.

‘நீ எனக்கு எதுவும் புத்திமதி சொல்ல வேண்டாம், உன் வேலைய பாரு’    என்று சொன்ன ரியாஸ் மனைவியை அழைத்து ஏதோ பேசுகிறான்.செரினாவின் கண்களில் கண்ணீர் வருகிறது. முகம் இறுக்கமாகிறது. அதை பார்த்து சுபைதா கோபத்தோடு வெற்றிலை பாக்கு இடிக்கத் தொடங்குகிறார்.

பொதுவெளியில் அறியப்படாத பெண்களின் நிலையை மிக அழகாகவும் மிக நேர்த்தியாகவும் இந்த கதை சொல்லுகிறது. வட்டாரச் சொற்கள், உறவு முறைகள் நன்கு அறிய முடிகிறது. இதுவும் ஒரு நல்ல கதை

 

  1. கிறிஸ்டி ரத்தினகுமார் எழுதிய

“அனாதை மரங்கள்”  (  கல்கி 07.10.22)

எளிமையான சுய விருப்பங்களை,எதிர்ப்புகளை மீறி செயல்படுத்தும் பொழுது,  அதுவே நாம் வாழ்ந்ததற்கான அடையாளமாக மாறுவதை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

சத்தியனின் அப்பாவிற்கு பக்கவாதம் வந்ததால் விருப்ப ஒய்வு பெற்று அவருடைய மனைவியின் பூர்வீக சொத்தில்தான் குடும்பம் நடக்கிறது. அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பெரிதாக சண்டை எதுவும் வராவிட்டாலும் தொடர்ந்து உராய்வுகளும் அம்மாவின் சின்ன சின்ன விருப்பங்களுக்கும் எதிர்ப்பும், தடை போடும் போக்கும் நடக்கும்.

வீட்டில் தோட்டம் போடுவதில் அம்மாவிற்கு அதிக விருப்பம்.குறைவான பனிப் பிரதேசத்தில் வளரும் (பட்டர் ஃப்ரூட்) வெண்ணைப் பழ விதைகளை தெருவில் வந்து ஆடைகளை விற்கும் மீரான் லெப்பையிடம் பெற்று வீட்டில் நட்டு வைக்கிறார். இவன் அப்பாவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் இது வளராது, தேவையில்லை என்றெல்லாம் சொல்லி எதிர்க்கிறார்கள்.

ஆனாலும் இவள் எடுத்த முயற்சியின் காரணமாக ஆறு விதைகளில் ஐந்து விதைகள் துளிர்விட ஆரம்பிக்கின்றன. ஆட்டுக்குட்டியின் காதை போல அதனுடைய இலைகள் நீண்டு தரையைத் தொடுகின்றன. இத்தருணத்தில் வீட்டிற்கு வந்த அவளது சகோதரன் வெண்ணெய்ப்பழ மரத்தின் வேர்கள் வீட்டின் அஸ்திவாரத்தையே பாதிக்கும் என்று பயமுறுத்துகிறான்.  யாரிடமும் சொல்லாமல் திரவுபதி கோவிலில் இருக்கும் முத்துலிங்கத்திடம் இந்த செடிகளை கொடுத்து கோவில் அடிவாரத்தில் நட சொல்லுகிறார்.

பிறகு சத்யனும் வெளிநாட்டில் வேலை பார்க்கச் செல்கிறான் அம்மா இறந்து 15 வருடங்களுக்குப் பிறகு தன் மகனுடன் ஊருக்கு வருகிறான்.

முத்துலிங்கம் துணையுடன் அப்பா சக்கர நாற்காலியில் வாழ்க்கையை கடத்துகிறார். அவருடைய தூண்டுதலில் சத்தியனும், பேரனும் அனைவரும் கோவிலுக்கு சென்று வெண்ணெய் பழ மரங்களை பார்க்கின்றனர். முத்துலிங்கத்திடம் சொல்லி அங்கு இருக்கும் சிறுவர்களின் உதவியால் மரத்தின் உயர இருக்கும் ஒரே ஒரு பழத்தை பறித்து இவர்களிடம் கொடுக்கின்றான்.

அந்த பழத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் சத்யனின் அப்பா தன் மனைவியை ஒரு மனுசியாகவே மதிக்காததை நினைத்து நினைவுகளில் மூழ்கி வருந்துகிறார்.

சத்தியனும் அந்த மரங்களை அம்மாவின் நினைவை சுமந்து நிற்கும் மரங்களாக பார்க்கிறான்.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் சலசலப்பு இல்லாத நீரோடை போல எழுதப்பட்ட கதை.

 சுருக்கமாக ஒவ்வொருவரின் வாழ்வையும் சொல்லும் நடை சிறப்பாக உள்ளது. உதாரணத்திற்கு  இயல்பாக இயங்க முடியாத அவனது அப்பாவின் வாழ்க்கை,

“சுழலும் இசைத்தட்டில் இளைப்பாறும் ஈயின் வாழ்க்கை அவருக்கு. அவரைச் சுற்றி வேகமாக காட்சிகள் மாறினாலும் அவருக்கோ ஒரு அங்குலம் கூட நகராத வாழ்க்கை “

 இந்த ஒரு வரி ஹைக்கூ போல பல செய்திகளை சொல்கிறது.

அதேபோலநமக்கு மற்றவர்களால் ஏற்படும் நிராகரிப்பும் எதிர்ப்பும் பற்றி சொல்லும் பொழுது,  “வாழ்க்கையில் தொட்டுக் கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை.  அவற்றின் உறைப்புத் தான் வாழ்க்கையை நகர்த்த உதவுகிறது.”  இதுபோல பல வரிகள் உண்டு. ஒரு சாதாரண நிகழ்ச்சி போல தோன்றியது, வாழ்வின் அடையாளமாக மாறிவிடுகிறது என்பதை அழகாக சொன்ன கதை.

எந்த ஒரு புதிய செயலும் /முயற்சியும் முதலில் எதிர்க்கப்படும், பிறகு ஏளனப்படுத்தப்படும்,  அதையெல்லாம் கடந்து வெற்றி பெற்ற பிறகு  ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்தக் கதையை அக்டோபர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்.

 

அக்டோபர் மாத கதைகளை படித்ததில் கவனித்த சில விஷயங்கள்.

  1. நகைச்சுவை கதைகள் இல்லைஉதாரணத்திற்கு (புதுமைப்பித்தன், கல்கி, தேவன், சாவி… போல.)

2.இன்றைய 30- 45 வயது வரை உள்ள உள்ளவர்களின் வாழ்க்கை நிலை பற்றிய கதைகளும் பெரும்பாலும் இல்லை இரண்டு கதைகளை தவிர.

  1. மிக முக்கியமான விஷயம் மிகவும்

இலக்கிய இதழ்களில் வரும் கதைகளே சிறப்பாக இருக்கும் வெகுஜன பத்திரிகைகளில் நல்ல இலக்கிய தரம் வாய்ந்த கதைகள் வராது என்ற எனது புரிதல் மிகவும் தவறானது என்ற முடிவிற்கு,  எல்லா கதைகளையும் ஒருசேர படிக்கும் பொழுது வந்தடைய முடிந்தது.

இந்த அனுபவம் மிகவும் சிறப்பானது.

ராஜாமணி

 

வாழ்க்கையின் யதார்த்தம் – கோவில்பட்டி கு. மாரியப்பன்

எஸ்தர் ~ வண்ணநிலவன் by தமிழ் சிறுகதைகள் Tamil Short Stories

 

தேவியோட மறைவுக்குப் பிறகு வீடு ஒரு அமைதியான சூழ்நிலைக்கு வந்துருச்சு.

பழைய கலகலப்பு இல்லை.பணி ஓய்வுக்குப் பிறகு எனக்கு பேச அவள் ஒருத்தி தான். என் நேரமும் கூட இருப்பா.

இப்ப தேவி இல்லாததால் என்னால் யாருடன் போய் என்னத்தப் பேச முடியும்?

பெரிய பையன் ராஜா அவன் மனைவி சுஜாதா பழையபடி வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க.

சின்னவன் குமார் அவன் சம்சாரம் ராஜி தனிக் குடித்தனம் போக அவங்க ஆபீஸ் பக்கத்திலேயே ஒரு வீடு புடிச்சு அவங்கள அங்க தனிக்குடித்தனம் வைச்சிட்டேன். அதான் அவங்களுக்கும் சௌரியமா இருக்கும்.

எல்லாரும் ஒரு நல்ல நாள் பொழுதுமா சேர்ந்து இருக்கலாம். அவங்க எல்லாரும் சேர்ந்து இருந்தால் எல்லாருக்கும் ஒரு சந்தோசமும் ஒரு கலகலப்பும் இருக்கும்.

நான் ராஜாகூடத் தங்கிட்டேன். அப்பப்ப குமாரோட வீட்டுக்குப் போயிட்டு வருவேன். அவங்க வீட்டுக்கு போறது நடக்கிற அளவுக்குப் பக்கத்துல இருந்ததனால அங்க போயி ஒரு நாள் இருப்பேன்.

என்னுடைய முழுமனதும் என் தேவியோட வாழ்ந்த வீட்டில்தான். நான் அங்க இருந்தா எனக்கு ஒரு மன நிம்மதி கெடைக்கும்னு நினைச்சேன்.

கொஞ்ச நாளைக்கு அப்புறம் தேவி பொழுதுபோகப் படித்து வைத்திருந்த புத்தகங்களை தூசுதட்டி அடுக்க ஆரம்பிச்சேன் .அடித்தட்டில் பழைய டைரிகள். ஒரு பையில் இருந்தது தூசி தட்டி அவைகளை அடுக்கும்போது இரண்டு போட்டோக்கள் கீழே விழுந்தது.

கல்யாண போட்டோக்கள். குரூப் படங்கள். யார் யாரென்று ஞாபகப்படுத்திப்பார்த்தேன் ஆச்சரியமா இருந்தது. தேவி ரொம்ப சின்னப்பொன்னு!

அவளுடைய இளமை வாழ்க்கையில் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன மனநிலையில் அவ இருந்தா!  சின்ன வயசிலே கல்யாணம் செஞ்சு கொடுத்தாங்க.

அவளுடைய ஆசைகளுக்கு ஏத்தபடி நான் இல்லைன்னு சில நேரங்களில் மனக்குறைப்பட்டு இருந்தாக் கூட அதை வந்து என்னால முதல்ல புரிஞ்சிக்க முடியல. ஆனா அவள் மறைவுக்கு பிறகு தான் உண்மையிலேயே அவ கஷ்டம் என்ன? எதனால என்கிட்ட, கற்பனையான சினிமாக்களில் நடப்பதுபோன்ற வாழ்க்கையை விரும்பி இருக்கா. அவ மனசிலே இருந்ததை நான் பூர்த்தி பண்ண முடியாமல் போனது இப்போ புரியுது.

நான் அம்மாவுக்கு ஓரே பையன், கூடப் பிறந்த பையன் பொண்ணுங்க கிடையாது. பிடிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம். தேவியை மிகவும் சந்தோசமாக வைத்துக்கொண்டேன். அம்மாவும் தனக்கு ஒரு மகள் இல்லை அப்படின்னு சொல்லி தேவியை மகளாக நடத்தினார்.

கணவனுக்கு சினிமாவில் இருக்கிற மாதிரி டை கட்டி விடுறது, சூ போடுறது, இப்படியே எல்லாம் கற்பனை பண்ணி அப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமையும்னு நினைச்சுகிட்டு இருந்திருக்கா!

காலையில எந்திரிச்சி காபி கொண்டு வந்து கொடுக்க வேண்டியது, டிபன் பண்ணி, கணவனை ஆபீசுக்கு அனுப்பிவிட்டு ஏதாவது நாவல் படிக்கிறது, இல்லைன்னா கொஞ்ச நேரம் தூங்குவது, மாலையில ஆபீஸ் விட்டு கணவன் வந்த பிறகு காபி குடுக்க வேண்டியது.

ஜாலியா கடைவீதிக்கு போறது டைம் இருந்தா சினிமா போறது பீச்சுக்கு போறது இப்படி சில ஆசைகளை எல்லாம் மனசுல போட்டு வளர்த்துஇருக்கா.
அவங்க வீட்ல ஒரே பொண்ணு வாழ்க்கையில் அப்படியெல்லாம் இருக்கணும்னு நினைச்சு இருக்கா.

ஆனா எங்க வீடு நான் சொன்ன மாதிரி நானும்என் தாயாரும்தான். சின்ன வயசிலேயே அப்பாகாலமாயிடாங்க. அதனால் எங்க அம்மா என்னை ரொம்பக் கண்டிப்பா வளர்த்திருக்காங்க.

எனக்கு வேற பழக்க வழக்கமும் இல்லை. சாயங்காலம் ஆறு மணிக்கு மேல முடிஞ்ச அளவு வெளியில போக மாட்டேன். ஆபீஸ்ல இருந்து வந்தா நேரா வீடு.

என்னுடைய பக்கத்துத் தெருவுல லைப்ரரி இருக்கு. அதுல போய் நாவல்களை வாங்கிட்டு வருவேன். இப்படி என்னுடைய பழக்கம் வந்து வீட்டோடதான்.

படிக்கிற காலத்தில் அதிகமா பிரண்ட்ஸ் கிடையாது.

போட்டோக்களை ஒருடைரியில் வைத்தேன். டைரிகள் நம்பர் போட்டு இருந்ததால் நம்பர்படி அடுக்கினேன்.

முதல் டைரியைப் பிரித்தேன்.

அவளுடைய டைரியில் சொன்ன மாதிரி “உன்னுடைய முதலிரவு அன்று கணவன் வந்து உன்னைக் கைபிடித்து உட்கார வைப்பார் பால் செம்பு எடுத்து கொடுத்து குடிக்கச் சொல்லுவார்”

இப்படி சில கற்பனைகளை வச்சிருந்திருக்கா.

நிஜ வாழ்க்கையில்அப்படிக் கிடையாது என்று புரியாத பொண்ணு எனக்கு கிடைச்சிருக்கா. தேவியோட ஆசைகள் வேற மாதிரியா இருந்திருக்கு.
அவளே எழுதியிருந்தாள்.”நெனைச்சது ஒன்னு நடந்தது வேற “

” சினிமாவுல மாதிரியே நிஜ வாழ்க்கையிலும் நடக்கும்னு கற்பனைகளை வளர்த்திருக்கா!”

அப்புறம் ஒரு நாள் அவளோட டைரியை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சேன். ராஜாவும் சுஜாதாவும் வெளியில் போன நேரத்தில படிக்க முடிந்தது.

அவளுக்கு இனம் புரியாத ஒரு மன நோய் இருந்திருக்கு அந்த மன நோய்க்கு காரணம் அவளுடைய இளமையிலே நினைத்து ஏங்கிய கனவு வாழ்க்கைதான்.

அதை வந்து ஒரு குறிப்புல புரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்

” நான் வந்து அவரைச் சரியா புரிஞ்சுக்காம முதல்ல டைரிகள்ள எழுதிட்டேன். ஆனா வாழ்க்கையோட உண்மையான எதார்த்தம் என்னங்கறது புரிஞ்சாப் பிறகு நான் அதை உணர்ந்து விட்டேன்.

அவர்கிட்ட இதையெல்லாம் அப்படியே பேசுற ஒரு சூழ்நிலையும் அப்புறம் கிடைக்காம போயிடுச்சு . ஏன்னா குமாரோட திருமண வாழ்க்கை வந்து சரியாக இல்லை. எப்போதும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறது, இவன் வாழ்க்கை டைவர்ஸ் வரைக்கும் போக நினைச்சதுனால எனக்கு மனநிலை அதிகமாக பாதிச்சிருச்சி. உடல்நலம் போச்சி. அந்த நேரத்துல என் கணவர் வந்து என்னைக் குழந்தை மாதிரி கவனிச்சுக்கிட்டார் . 

ராஜாவும் சுஜாதாவும், குமாரும் ராஜியும், நோய்வாய்ப்பட்டு இருந்த காலத்தில் நல்லவிதமா கவனிச்சாங்க. அதுவே எனக்கு கொஞ்சம் தெம்பா இருந்தது. ஆனால் உடல்நிலை நல்லா இல்லை. எனக்கு என்னுடைய இறுதிக் காலம் தெரிந்தது. கணவர் எந்நேரமும் என் பக்கத்தில் உட்கார்ந்து கைய புடிச்சு எனக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டே இருப்பார். நானும் அந்தக் காலத்தில் அவரைத் தப்பா புரிஞ்சுகிட்டு ஒரு கற்பனை வாழ்க்கைக்கு ஏங்கினேன்.

ஏமாற்றமா நினைச்சு டைரிலே எழுதுவது எவ்வளவு பெரிய தப்புங்கிறதை உணர்ந்தேன். என்னுடைய மனநோய் உணர்ந்து என்னை மன்னிச்சிருவாரு என்கிற ஒரு நம்பிக்கை இருக்கு.

பிள்ளைகள் அவரை நல்வழியாக கவனித்துக்கணும்.

அவரைத் தப்பா நினைச்சதுக்கு அடுத்த பிறவியிலாவது சத்தியமா அவரு மனைவியாகவும் நான் கணவனாகவும் வாழ்ந்து அவருக்கு சேவை செய்யணும்னு மனசார வேண்டுகிறேன். என்னுடைய ஆத்மாவோட ஒரே ஆசை. அவர் போல ஒரு தூய்மையான தெளிந்த மனம் கொண்ட ஆதர்ஷ புருசனை டைரியில் தப்பா எழுதிட்டேன். எனக்கு அவருடைய உண்மையான அன்பை சரியான முறையில் புரிஞ்சுக்க தெரியல.

ஆனா பின்னால யோசிச்சு பார்க்கும் போது தான் குடும்பம் நடத்துவது சினிமாத்தனமானது இல்லை, அது அன்பும் பாசமும் ஒவ்வொருவரும் பரிமாறிக் கொள்கிற ஒரு சங்கமம்.,

பலரும் ஒன்றிணைந்து வாசிக்கும், சங்கீதக் கச்சேரி. நான் புரிஞ்சுகிட்டேன் .
என்னால எதையும் வெளிப்படையா சொல்ல முடியல என்னுடைய தவறை, என்னுடைய தப்பை எப்படி ஒத்துக்கிடறது என்ற “ஈகோ” எனக்குத்தான் இருந்தது.

அவருக்கு “ஈகோ” கிடையாது.

அவரோட இத்தனை வருடங்கள் வாழ்ந்த எனக்கு அவரைத் தெரியாதா?

அவரோட அப்பழுக்கற்ற குணத்தை நான்தான் புரிஞ்சிக்கலை.

என்னுடைய கணவனைப் போலே எல்லா பெண்களுக்கும் உண்மையான கணவன்கள் கிடைக்க வேண்டும்

அவர்கிட்ட, ஒரு நடிப்பு, ஆசை வார்த்தைகள் இதெல்லாம் கிடையாது.
அவர் ஒரு ரொம்ப யதார்த்தமான ஆள். அதை வந்து நான் புரிஞ்சிக்க நாள் ஆயிடுச்சு. அதுக்குள்ள நான் டைரி எல்லாம் எழுதி என்னைவந்து வெளிப்படுத்தினேன். ஆனால் அது தப்புங்கிறத பின்னால கண்டிப்பா உணர்ந்தேன். அந்த டைரி எல்லாம் கண்டிப்பாக அவர்கள் கண்ணுல படக்கூடாது, கைக்கு கிடைக்கக்கூடாது.

கணவன் மனைவி என்கிற தாம்பத்திய உறவு குழந்தை பெற்றுக்கொள்வது மட்டும் இல்லை ஒருத்தரை ஒருத்தர் உண்மையா புரிஞ்சிக் கொள்றதுல இருக்கு. அதை உண்மையா நான் புரியவில்லை , நான் தான் சரியா செய்யலை என்கிறது என்னுடைய எண்ணமா இருக்குது.

ஒரு தடவை, குழந்தை பிறந்த ரெண்டு மாசத்துல அவரு என்ன அழைச்சிட்டு வந்தார். அப்போ எனக்கு இன்னும் கூட நாலு மாசம் அம்மா வீட்டுல இருந்தா நல்லா இருக்குமென்று இருந்தது. என்னுடைய தாயார் அப்படித்தான் நினைச்சாங்க ஆனா என்னுடைய மாமியார் உடல்நிலை சரியில்லை, அவங்களைக் கவனிக்க வேற ஆள் கிடையாது.

ஏன்னா எனக்கு நாத்தனார் ஒரகத்தி அப்படின்னு யாரும் கிடையாது . ,எனக்கு ஒண்ணுன்னா அவங்க தான் அங்க கவனிக்கணும். அப்படிங்கிற ஒரு சூழ்நிலை இருந்ததுனால அவர் செஞ்சது சரிதான். ஆனால் அந்த நேரத்தில் அவர்மேல் வெறுப்பைக்காட்டினேன் பதிலே பேசாமல் அமைதியாக இருந்தார். அதை பின்னால் நான் உணர்ந்தேன். இரண்டாவது அவருக்கு என் மேல அபரீத பாசம்.

ஒரு தடவை திருவேணி சங்கமத்தில் வேணிதானம் செய்யும்போது அவர் என்னை, மகிழச் செய்தது மறக்க முடியுமா?

நான் எப்பவுமே அவரோட இருந்தா அவர் சந்தோஷமா இருப்பார் அப்படிங்கறதை நானே பிற்காலத்தில் புரிந்து கொண்டேன். நான் மரணப்படுக்கையில் இருக்கும் போதும் அதை உணர்ந்தேன். எல்லாம் காலம் கடந்த ஒரு ஞானம், ஒன்னும் செய்ய முடியலை. இருந்தாலும் அவர் காலம் முடிகின்ற வரைக்கும் நிம்மதியா வாழனும்.

அதுக்கு என் பிள்ளைகள் உறுதுணையாக இருக்கணும் என் மருமகள்கள் வந்து நல்லபடியா கவனிக்கணும் என்னுடைய ஆசை, விருப்பம், என்னுடைய பிரார்த்தனை. அந்த எண்ணத்தில் தான் நான் நிம்மதியாகக் கண்ணை
மூடுகிறேன். ” முடித்திருந்தாள். 

(டைரியை மூடிவிட்டுக்கண்களைத் துடைத்துக் கொண்டேன்)

 

குட்டீஸ் லூட்டீஸ்: — சிவமால்

ரிய(ரீ)ல் போலீஸ் கமிஷனர்!

அப்பா- மகள் உறவுகளைப் போற்றும் 5 தமிழ் திரைப்படங்கள் ! - 5 Tamil Movies  That Shows Father-Daughter Relationships! | பெமினா தமிழ்

நண்பன் சேகர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.

ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

பேச்சின் நடுவே, ‘இன்னிக்கு நம்ம போலீஸ் கமிஷனர் ·பாமிலியோட டின்னருக்கு வரேன்னு சொல்லியிருக்கார்..’ என்றான் சேகர்.

கேட்டுக் கொண்டிருந்த மிதிலா, ‘அங்கிள்.. போலீஸ் கமிஷனர் உங்க ·ப்ரன்டா.. அவரை நல்லாத் தெரியுமா..’ என்றாள்.

‘ஆமாம்மா.. நல்லாத் தெரியும்.. அவர் எங்க ·பாமிலி ·ப்ரன்ட்.. எதுக்கு கேட்கறே..’ என்று அவளைப் பார்த்தான் சேகர்.

‘அங்கிள் அந்த வில்லி வாசுகி, வருணுக்கும், பூமிக்கும் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துட்டே இருக்கா.. இவங்க போலீஸ் கிட்டே கம்ப்ளெய்ன் பண்ணினா அந்த இன்ஸ்பெக்டர் பணத்தை வாங்கிண்டு வாசுகிக்குத்தான் ஹெல்ப்
பண்ணற மாதிரி எல்லாம் பண்ணறார். கமிஷனர் கிட்டே அந்த இன்ஸ்பெக்டரை கண்டிச்சு வைக்கச் சொல்லணும். வாசுகியை அரெஸ்ட் பண்ணச் சொல்லணும்’ என்றாள் மூச்சுக் கூட விட மறந்து.

‘ஆமா.. யாரது வருண், பூமி, வாசுகி… உங்க பக்கத்து வீட்டுக் காரங்களா..’ என்றார் சேகர் குழப்பத்தோடு.

‘அதாங்க.. சன் டி.வி. சானல்லே ‘அன்பே வா..’ன்னு ஒரு ஸீரியல் வறதே.. அதிலே நாயகன் வருண், நாயகி பூமி, வில்லி வாசுகி… ‘ என்று சொல்லியபடி சிரித்துக் கொண்டே வந்தாள் சேகரின் மனைவி. நாங்களும் அவள் சிரிப்பில் கலந்து கொண்டோம்.

சிரிப்பினூடே, ‘மிதிலா.. அங்கிளுடைய ·ப்ரன்ட் ரியல் போலீஸ் கமிஷனர். அந்த ஸீரியல்லே ஒரு போலீஸ் கமிஷனர் வருவாரில்லையா.. அவர்கிட்டே சொன்னாத்தான் அந்த வாசுகி மேலேயும், இன்ஸ்பெக்டர் மேலேயும் ஆக்ஷன்
எடுக்க முடியும்’ என்றேன் சிரித்துக் கொண்டே.

சிறிது சங்கடமும், வெட்கமும் ஒருசேர மிதிலாவும் எங்கள் சிரிப்பில் கலந்து கொண்டாள்.

‘அடக் கடவுளே..! நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? டி.வி.யில் வர ஸீரியல்களையெல்லாம் பார்த்துப் பார்த்து நமக்கும் ரியலுக்கும், ரீலுக்கும் உள்ள வித்தியாசம் மறந்து விடுமோ..’

திக் ப்ரமையடைந்து உட்கார்ந்திருந்தேன்.

 

கலக்கற சந்த்ரு ! – கமலா முரளி

இந்த விளம்பரங்களை மறக்க முடியுமா? 90களில் HIT ஆன விளம்பரங்கள் | 90s Kids  Favourite Tamil TV Ads - YouTube

கலக்கற சந்த்ரு !

”புது வீடு, புது காரு ! கலக்கற சந்த்ரு !

மறக்க முடியுமா ?

இன்று வரை, நமக்குத் தெரிந்தவர்கள் புதிதாய் ஏதாவது வாங்கினால், ஏதாவது சிறப்பாக செய்தால் கூட, “கலக்கற சந்த்ரு”  க்ளிஷே (cliche ) தன்னிச்சையாக நம் வாயிலிருந்து வந்து விடும்.

பல படங்களிலும், நாடகங்களிலும், சந்த்ரு கதாபாத்திரம் வந்த காலம் உண்டு ! டைட்டிலே, “கலக்கற சந்த்ரு” என வைத்ததும் உண்டு ! 

இரு தசாப்தங்களுக்கு முன் வந்த ஒரு விளம்பரம் அப்படி ஒரு கலக்கு கலக்கியது ! விளம்பர உலகையும்…  மீடியா உலகையும்…மக்கள் மனதையும்…

இந்த விளம்பரம் மட்டுமல்ல ! மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இன்னும் பல விளம்பரங்களும் உண்டு !

“யஹி ஹை ரைட் சாய்ஸ், பேபி”, “என்ன ஆச்சு ? குழந்தை அழறது … “, “வாஷிங் பௌடர் நிர்மா” போன்ற விளம்பரங்களுக்கு இன்றைய மீம்ஸ் அல்லது ட்ரால் போல எக்காளமான சொல் மாற்றங்களுடன் வலம் வந்ததும் உண்டு !

மக்களின் எண்ணத்தைக் கவரும் விளம்பரங்கள் படைப்பாற்றல் மிக்க திறமைசாலிகளால் நேர்த்தியாக வடிவமைக்கப்படுகிறது.

வரலாறு காணாத அளவு விஸ்வரூபம் எடுத்துள்ள விளம்பரத்துறையின் வரலாறு என்ன?

அச்சு இயந்திரம் ,பத்திரிக்கைகள் மற்றும் வானொலி சேவைகள் வருவதற்கு முன்னரே, விளம்பரப்படுத்துதல் இருந்திருக்கிறது. வாய் வழிச் செய்தியாக, வீதிகளில் , சந்தைகளில் கூவி அறிவித்தல் , தண்டோரா போட்டு நிகழ்ச்சிகளை அறிவித்தல் போன்ற முறைகளில் மூதாதையரும் விளம்பரப் பணியைச் செய்து வந்துள்ளனர்.

பத்திரிக்கைகள் வந்த பின், விளம்பரங்கள் பெருக ஆரம்பித்தன.

புதிய பொருட்களை, புதிய தயாரிப்புகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தல், மக்கள் மனதில் அதைப் பற்றிய செய்திகளைப் பதிய வைத்தல், அந்தப் பொருளை வாங்க வைக்கத் தூண்டுதல் போன்றவை ஒரு விளம்பரத்தின் நோக்கமாக இருக்கிறது.

தொழில் முனைவோர்கள், பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் குறிப்பிட்ட ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தங்கள் நிறுவனத்தையும் “ஒரு பிராண்டாக” முன்னிறுத்துவதற்கும் விளம்பரம் செய்கிறார்கள்.

தற்போது பொருட்களுக்கு மட்டுமல்லாமல், சேவைகள், அரசியல், வேலைவாய்ப்பு, கல்வி என எல்லாத்துறைக்கும் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு மூச்சு முட்டும் அளவுக்குத் தரவுகள் தரப்படுகின்றன.

அதனால், விளம்பரத்துறை தற்போது மிக முக்கியமான துறை  ஆகிவிட்டது. மற்ற நிறுவனங்களின் தயாரிப்புக்கான விளம்பரத்தை விட தங்கள் நிறுவனத் தயாரிப்பின் விளம்பரம் நன்றாக இருக்க வேண்டும் எனத் தயாரிப்பு நிறுவனங்கள் விரும்புகின்றன.

விளம்பர நிறுவனங்களுக்குள்ளேயும் போட்டி தான் ! எந்த விளம்பர நிறுவனத்தின் விளம்பரம் மக்களிடம் அதிக அளவில் போய் சேர்கிறது என்பதில் !

மேற்கத்திய நாடுகளில், பதினெழாம் நூற்றாண்டில் பத்திரிக்கைகளில் விளம்பரம் வரத் துவங்கியது.பதினெட்டாம் நூற்றாண்டில் கோலோச்சத் துவங்கியது. 1864 ஆம் ஆண்டு, ஹார்ப்பர்ஸ் மேகசீன் முதன் முதல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அந்த நூற்றாண்டின் இறுதிக்குள்  ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 125 பக்கங்கள் விளம்பரங்கள் போடும் அளவுக்கு வளர்ந்து, விளம்பரத்துக்கான இடம் அதிகமாகிவிட்டது.

“விளம்பரங்கள் தொழில் மற்றும் வர்த்தக உலகத்தின் நரம்பு மண்டலம் போல” என்கிறார், புகழ் பெற்ற ஊளவியல் பேராசிரியர், வால்ட்டர் ஸ்காட். புதிய விளம்பரத் துறை பற்றிய அவரது ஆராய்ச்சிக் கட்டுரையில்,  “எப்படி நமது நரம்பு மண்டலம் பல்வேறு பொருட்களை நாம் உணர்ந்து அறியச் செய்கிறதோ, அது போலவே, விளம்பரங்கள் ஒரு பொருளைப் பற்றிய பிம்பத்தை நமக்குள் பதிய வைக்கிறது என்கிறார்.”

இந்தக் கருத்தைக் காணொளி விளம்பரங்கள் பிரதிபலிக்கின்றன.

காணொளி விளம்பரங்களில்,விளம்பரப்படுத்தப்படும் பொருள் மிக நேர்த்தியாக நம் மனதில் நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்தப் பொருள் அல்லது பொருளின் மேலட்டை ( பேக்கேஜ் ) என்ன வண்ணத்தில் இருக்குமோ, அதே வண்ணத்தில் பின்புலக் காட்சிகள் இருக்கும், நடிப்பவர்களின் உடையில் இருக்கும். யோசித்துப் பாருங்கள் ! நீங்கள் அடிக்கடிப் பார்க்கும் விளம்பரத்தின் பின்புலக் காட்சியின் நிறம் … ஆம் , அந்தப் பொருளாக்கான நிறமாக நம் மனதில் பதியும் வண்ணம் அமைந்திருக்கும்.

தனித்துவமாகவும், மக்களை ஈர்க்கும் வகையிலும் தரப்படும் விளம்பரங்கள், வியாபாரத்தைப் பண்மடங்காக்குகிறது. இதனை உணர்ந்த முதலாளிகள் விளம்பரத்துக்கென கணிசமான தொகை ஒதுக்குவதோடு மட்டுமல்லாமல், சிறந்த விளம்பர நிறுவனங்களை அணுகி தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஒப்பந்தமிடுகிறார்கள்.

குறிப்பாக, விளம்பரத்துறையின் தந்தை என அறியப்படும் டேவிட் ஔகல்வி (David Mackenzie Ogilvy) தயாரித்த விளம்பரங்கள்  ( ஹாத்தவே ஷர்ட், ரோல்ஸ் ராய்ஸ் ) உலக்ப் புகழ் பெற்றவை. “வடிக்கையாளரைப் பேதை என எண்ணக் கூடாது, மனைவி போலக் கருத வேண்டும்” என்ற அவரது வார்த்தைகள், விளம்பரத்துறை சார்ந்த அரங்குகளில் அடிக்கடி ஒலிக்கும். வாடிக்கையாளரை முட்டாள் போல பாவித்து, அறிவுரை போல அமையக் கூடாது விளம்பரம். ஒரு புத்திசாலியின் தெரிவு இந்தப் பொருள் என்பது போல அமைந்தால்… யார் தான் புத்திசாலியாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்?

“மனைவியை விரும்புகிறவர்கள்…”

இப்போது புரிகிறதா ஒரு விளம்பரத்தின், ஒரு விளம்பரப் பட இயக்குநரின் மதிநுட்பம் ?

பிரபலங்களை வைத்துத் விளம்பரம் எடுக்கும் போது, அது மக்களிடம் வெகு விரைவாகச் சென்றடைகிறது. மைக்கேல் ஜாக்ஸனின் அறையில் பெப்ஸி இருக்கிறது எனக் காட்டினாலே… வியாபாரம்  அதீத உயரத்துக்குப் போய் விடுமே ! அது போலவே நம்மூர் விளையாட்டு வீரர்களும், திரை நட்சத்திரங்களும்  விளம்பரத்தில் மின்னுகின்றனர்.

’குட்டீஸ்” பிரபலங்களைப் பயன்படுத்தி, பிரபல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு பக்கம் “தீர்ப்பு” சொல்ல வைத்திருக்கிறார்கள் சமீபத்தில் !

சில பிரபலங்கள், பொருட்களுக்கு விளம்பரம் செய்வதில்லை எனும் கொள்கை கொண்டிருப்பதும் உண்டு ! ஒரு காலத்தில், அநேக திரை நாயகர்கள், விளம்பரம் பக்கம் வரமாட்டார்கள். தற்போது, அரசின் நலத் திட்டங்கள், சேவைகள், தங்கள் மரியாதைக்குத் தகுந்த விளம்பரங்களில் நடிக்க முன் வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, சாமான்யர்களை வைத்து மட்டுமே சில நிறுவனங்கள் விளம்பரம் எடுக்கும். இது ஒன்றும் பளபளக்கும் நட்சத்திர விளம்பரம் இல்லை, உங்களைப் போல ஒருவர், உங்களில் ஒருவர் உங்களுக்குச் சொல்லும் செய்தி என்பதைப் போல !

காட்சிகளின் பின்புலம், வண்ணங்களின் உபயோகம், பிரபலங்களைப் பயன்படுத்துதல், சிறந்த, மனதை ஈர்க்கும் “டேக் லைன்” ( tag line), ஒப்பீடுகள், வித்தியாசமான அணுகுமுறை, வேகமாகக் காட்சிப் படுத்துதல் போன்று பல யுக்திகளைக் கையாளுகிறார்கள் விளம்பரத் தயாரிப்பாளர்கள்.

 பொருளை உபயோகப்படுத்தக் கூடிய “டார்கெட் பயனாளி”களின் வயது ரசனைக்க்கேற்ப காட்சிகளை அமைத்தல் ஒரு யுக்தி !

ஒரு நிமிட விளம்பரத்தில், ஒரு குட்டி ஸ்டோரியுடன், ஒரு “மாரல்’ சொல்லும் விளம்பரத் தயாரிப்புகள் உண்டு. அவற்றில் சில மனதைக் கவரும். சில மிகவும் வெறுப்பேத்தும்.

“பாட்டிக்கு உதவி செய்து துணியை அழுக்காக்கிக் கொள்ளும் ‘வீரப்’ பேரன்கள், மகளுக்குச் சிலம்பம் சொல்லிக் கொடுத்து தன்னம்பிக்கை ஊட்டும் அம்மாக்களை… சோப்பு விளம்பரங்களில் பார்க்கிறோம் !

காணொளி விளம்பரங்களுக்கு முன்னால் வந்த வானொலி விளம்பரங்கள் பற்றி  (எல்.ஆர்) ஸ்வாமி அருள் வேண்டும் !

நல்ல கணிரென்ற குரல் வளத்துடன், பரபரப்பாக, “சௌந்தர பாண்டியன் ஸ்டோரும்’, ‘படித்துவிட்டீர்களா இந்த வார… “ என்ற கேள்வியும் இன்னும்  காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது ! “மம்மி, மம்மி மாடர்ன் ப்ரெட்” விளம்பரம் அரசியல் வானிலும் ஒலித்ததே !

இலங்கை வானின் வரத்தக ஒலிபரப்பின், “அத்தானே… அத்தானே  “ எனத் துவங்கும் முழுப்பாடல் ஒலிக்கும், “மக்கள் வங்கி” நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியில் !

இசையும் ஒரு முக்கிய காரணி எனச் சொல்லும் ஏர்டெல் மற்றும் லியோ காபி, ஏ.ஆர்.ரஹமானின் பிற விளம்பரங்கள்….

 இன்றோ கணினி மயம்… அதிலும் விளம்பரம் தான் கோலோச்சுகிறது என்றால் மிகையாகாது.

”முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது அந்தக் காலக் கூற்று !

இப்போது, ஒரு பொருளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, நீங்கள் இணையத்தில் தகவல் தேடினீர்கள் என்றால், அடுத்த சில நொடிகளில், உங்கள் ப்ரத்யேக பக்கங்களில், நீங்கள் தகவல் திரட்டிய பொருள் எந்த பிராண்டுகளில் எங்கே கிடைக்கிறது, இதை வாங்கு, அதை வாங்கு என விளம்பரங்கள் ஊற்று போல பொங்குகிறது.

பயனாளிகளின் விருப்பு வெறுப்பு  பற்றிய தரவுகள் சேமிக்கப் பட்டு ஆராயப்படுகின்றன.

இவ்வளவு ஏன்? மக்களின் மனதை மெல்ல மெல்ல திசை திருப்பும் வகையில் அவர்கள் படிப்பதற்கான செய்திகள் தரப்பட்டு, நாட்டின் சமூகத்தின் முக்கிய முடிவுகள் மடை மாற்றப் படுகின்றன. இது விளம்பரமா என்றால், செய்தியே விளம்பரமாய்…

நாமே செல்ஃபி எடுத்து நம்மை விளம்பரப் படுத்திக் கொள்ளும் நேரமிது !

“விதி மதி கதி” என்பார்கள் !

இன்று எல்லாமே விளம்பரம் தான் !

 

 

ஜப்பானிய மொழி சிறுகதை – மாதுளம்பழம் – தமிழில் :தி.இரா.மீனா

Keystone-France/Gamma-Keystone via Getty Images

ஜப்பானிய மொழி சிறுகதை

 

மூலம்   : யாசுநாரி காவபட்டா[Yasunari Kawabata ] – நோபல் பரிசு பெற்றவர் 

 

ஆங்கிலம்     :எட்வர்ட் ஜி.ஸ்டெயின்ஸ்டிகர் [Edward G. Seidensticker ]

தமிழில்       :தி.இரா.மீனா

          

 

Lit in the Time of Coronavirus: Chekhov and Kawabata – Danielle Ranucci

அன்றிரவு வீசிய பலமான காற்றில் மாதுள மரத்தின் இலைகள் அனைத்தும் உதிர்ந்து விட்டன.

அடிப்பகுதியைச் சுற்றி வட்டமாக இலைகள் விழுந்திருந்தன.

மரத்தின் நிர்வாண நிலையையும், வட்டம் குறையின்றி முழுமையாக இருந்ததையும் காலையில் பார்த்த கிமிகோ திடுக்கிட்டுப் போனதோடு, ஆச்சர்யமும் அடைந்தாள். காற்று அதைக் கலைத்திருக்கும் என்று அவள் எதிர்பார்த்திருக் கலாம்..

மரத்தில் ஒரு நேர்த்தியான மாதுளங்கனி மட்டுமிருந்தது.

“இங்கே வந்து பாருங்களேன் ”அம்மாவை அழைத்தாள்

“நான் மறந்து போய்விட்டேன்”என்று சொன்னபடி அம்மா வந்து மரத்தைப் பார்ததுவிட்டுத் திரும்பவும் சமையலறைக்குள் போய்விட்டாள்.

அது  அவர்களின்  தனிமையை கிமிகோ நினைத்துப் பார்க்கத் தூண்டியது. வராந்தாவின் ஓரத்திலிருந்த மாதுளையும் மறக்கப்பட்டது போல தனியாக நின்றது..

இரண்டு வாரங்களுக்கோ அல்லது அதற்கு முன்போ அவர்களின் வீட்டிற்கு அவளுடைய ஏழுவயது மருமகன் வந்திருந்தான். வரும்போதே அந்த மாதுளம் பழங்களைப் பார்த்தவன் உடனே மரத்தின் மீது ஏறிவிட்டான். வாழ்வின்  உயிர்த்துடிப்பை  அத்தருணத்தில் கிமிகோ உணர்ந்தாள்.

“மேலே மிகப் பெரியபழம் ஒன்றிருக்கிறது” அவள் வராந்தாவிலிருந்தபடி  சொன்னாள்.

“ஆனால் நான் அதைப் பறிக்கப்போனால் என்னால் கீழே இறங்கமுடியாது”

அது உண்மைதான்.இரண்டு கைகளிலும் மாதுளம் பழங்களோடு இறங்குவது எளிதல்ல. அவன் கெட்டிக்காரன் .கிமிகோ புன்னகை செய்தாள்.

அவன் அங்கு  வரும்வரை வீட்டில் எல்லோரும்  மாதுளையை மறந்திருந்தனர். இப்போது வரைக்கும் அதை அவர்கள் மீண்டும் மறந்து விட்டிருந்தனர்.

அதற்குப் பிறகு அந்தப்பழம் இலைகளினூடே மறைந்திருந்தது.இப்போது அது வானத்திற்கு எதிராக மறைவின்றி தெளிவாக நின்றது.

அடியில் இலைகளின் வட்டமும் பழமும் உறுதியாக இருந்தன.கீழே விழும் படியாக  கிமிகோ அதை மூங்கில் கம்பால் தட்டினாள்.

அது மிகவும் கனிந்திருந்ததால் தானாகவே பிளந்து அதன்முத்துக்கள் வெளி வந்தன.அதை அவள் வராந்தாவில் வைத்தபோது சூரியஒளியில் அவை மினுமினுக்க .சூரியன் அவற்றினூடே செல்வது போலிருந்தது.

ஏனோ அவள் வருத்தமாக உணர்ந்தாள்.

பத்துமணியளவில் அவள் மாடியில் தைத்துக்கொண்டிருந்த போது கிகிசியின் குரல் கேட்டது.கதவு திறந்திருந்த போதும் அவன் தோட்டத்தைச் சுற்றிவந்து கொண்டிருந்தான். அவன் குரலில் அவசரம் தெரிந்தது.

“கிமிகோ ,கிமிகோ ! கிகிச்சி  வந்திருக்கிறான்”அவள் அம்மா கூப்பிட்டுச் சொன்னாள்.

கிமிகோ ஊசியை நூலிலிருந்து பிரித்து அதை டப்பாவில் வைத்தாள்.

“நீ புறப்படுவதற்கு முன்னால் எப்படியும் உன்னைப் பார்த்து விடவேண்டும் என்று கிமிகோ சொல்லிக் கொண்டேயிருந்தாள். அழைப்பு வராமல் உன்னை எப்படி வந்து பார்ப்பது என்று தெரியவில்லை.நீயும் வரவில்லை.இன்று நீ வந்தது நல்லதாகப் போயிற்று”  கிக்கிசி போருக்குப் போகிறான்.

அவனை மதிய உணவு சாப்பிட்டுப் போகும்படி அம்மா சொன்னாள்.ஆனால் அவன் அவசரமாகப் போகவேண்டுமென்றான்.

“சரி.ஒரு மாதுளம்பழமாவது சாப்பிட்டு விட்டுப்போ. இது வீட்டில் பழுத்தது.” சொல்லிவிட்டு அவள் கிமிகோவை மீண்டும் கூப்பிட்டாள்.

அவள் கீழே இறங்கி வந்தால் செய்வதற்கு நிறைய இருப்பது போல அவன் கண்களால் அவளை வரவேற்றான். அவள் படியிலேயே நின்றாள்.

அவன் கண்களிலிருந்து ஒரு வாத்சல்யம் வெளிப்படுவது போலிருக்க, அவன் கையிலிருந்து மாதுளம்பழம் விழுந்தது.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தனர்.

தான் சிரிக்கிறோம் என்று உணர்ந்த நேரத்தில் அவள் முகம் செம்மையானது. கிகிச்சி வராந்தாவிலிருந்து எழுந்தான்.

’கவனமாகப் பார்த்துக்கொள் ,கிமிகோ”

’நீங்களும்தான்.”

அதற்குள் அவன் திரும்பிப் பார்த்து விடை பெற்றுக் கொண்டான்.

அவன் புறப்பட்டுச் சென்ற பிறகு கிமிகோ தோட்டத்தின் கதவைப் பார்த்தாள்.

“அப்படி ஓர் அவசரம் அவனுக்கு.அது மிக இனிய  மாதுளம்பழம் ”என்று அம்மா சொன்னாள்.

அவன் அதை வராந்தாவில் வைத்துவிட்டுப் போய்விட்டான்.

அவன் மாதுளையைப் இரண்டாகப் பிளக்க முயன்றபோது அவன் கண்ணில் வெளிப்பட்ட  வாத்சல்யம் அதை கீழே விழவைத்து விட்டது.அதை இரண்டாக அவன் பிளக்கவில்லை.அதன் முத்துக்கள் வெளியே வந்துவிட்டன..

அவளுடைய அம்மா அதைச் சமையலறைக்கு எடுத்துக் கொண்டு போய் கழுவிவிட்டு கிமிகோவிடம் கொடுத்தாள்.

கிமிகோ சிறிது தயங்கி, பிறகு மீண்டும் செம்மையாகி குழப்பத்தோடு அதை வாங்கிக் கொண்டாள்.

கிகிச்சி ஓரப்பகுதியிலிருந்து சில முத்துக்களை எடுத்திருக்க வேண்டும்.

அம்மா அவளைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது அதைச் சாப்பிட மறுப்பது கிமிகோவுக்கு விசித்திரமாகத் தெரிந்திருக்க வேண்டும். அதைக் கடித்தாள்.துவர்ப்பு வாய்முழுவதும் பரவியது. ஒரு விதவருத்தம் ஏற்பட்டு ஆழமாக அது ஊடுருவது போல அவள் உணர்ந்தாள்.

ஆர்வமின்றி அம்மா எழுந்தாள்

அவள் கண்ணாடி அருகே போய் உட்காந்தாள்.”என் தலைமுடியைப் பார்த் தாயா?இந்த பரட்டைத் தலையோடு நான் கிகிச்சியை வழி அனுப்பியிருக் கிறேன்”

சீப்பின் சத்தத்தை கிமிகோவால் கேட்க முடிந்தது.

“உன் அப்பா இறந்தபிறகு எனக்கு தலை சீவுவதற்கு பயமாகிவிட்டது.தலை சீவும் போதுநான் என்ன செய்கிறேன் என்பதையே மறந்து விடுவேன் .எனக்கு நினைவு வரும்போது நான் சீவி முடிப்பதற்காக உன் அப்பா காத்திருப்பது போன்றிருக்கும்.”என்று அம்மா மென்மையாகச் சொன்னாள்.

அப்பா தன் தட்டில் மிச்சம் வைத்திருப்பதைச் சாப்பிடும் அம்மாவின் பழக்கம் கிமிகோவிற்கு ஞாபகம் வந்த்து.

அந்த உணர்வுகள் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்த அவளுக்கு அழவேண் டும் போலிருந்தது.

அந்த மாதுளம் பழத்தை தூக்கி எறிய மனமில்லாததால்  அம்மா அவளுக்கு அதைக் கொடுத்திருக்க வேண்டும்.ஆமாம்.அதுதான்.எதையும் தூக்கி எறியக் கூடாது என்ற பழக்கம் வரக்காரணம்.

அம்மா முன்பு வெட்கப்பட்ட கிமிகோவிற்கு அந்தரங்கமாக இருந்த போது/ தனியாக இருந்த போது மகிழ்ச்சி ஏற்பட்டது.

அவன் திரும்பிவர எவ்வளவு காலமானாலும் அவள் காத்திருப்பாள் என்பது தான்  கிகிச்சிக்கு அவள் உணர்த்தியிருக்கிற பிரியாவிடையாக இருந்திருக் கும் என்று நினைத்தாள்.

அம்மாவை நோக்கினாள். கதவு வழியாக அவள் உட்கார்ந்திருக்கும் கண்ணாடி அருகே சூரியன் படர்ந்திருந்தான்.

மாதுளம்பழத்தைச் சாப்பிட ஏனோ அவளுக்கு பயமாக இருந்தது.

                 —————————–

மொழிபெயர்ப்பு :  ஜப்பானிய மொழி சிறுகதைகள்:

மூலம்          : யாசுநாரி காவபட்டா [ Yasunari Kawabata ]

ஆங்கிலம்       : எட்வர்ட் ஜி.ஸ்டெயின்ஸ்டிகர் [Edward G. Seidensticker ]

தமிழில்         : தி.இரா.மீனா

 

 

 

 

 

 

 

 

இலக்கியங்களில் நண்டுகள் – வளவ. துரையன்

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள் | nakkheeran இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு, போன்ற பெயர்களில் குறிக்கப்படுகிறது. ”ஐங்குறுநூறு” என்னும் சங்க இலக்கிய நூலில் மருதத்திணையைப் பாடிய ஓரம்போகியார் நண்டு குறித்துப் பத்துப் பாக்கள் “கள்வன் பத்து” என்னும் பெயரில் எழுதி உள்ளார். நண்டின் செயல்கள் எல்லாவற்றையும் அவற்றில் அவர் காட்டுகிறார்.

கள்வன் பத்தின் நான்காம் பாடலில் “தாய் சாவப் பிறக்கும் புள்ளிக்கள்வன்” என்று என்று அவர் எழுதுகிறார். தலைவனின் கொடுமையைக் கூற வந்த தலைவியின் கூற்று இது. குஞ்சுகளை ஈன்ற பிறகு தாய் நண்டானது இறந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. ”தன் தாயே இறந்து பிறக்கும் நண்டு உள்ள ஊரை சேர்ந்தவன் தலைவன்; அவன் மனத்தில் அன்பில்லை; தன்னைச் சேர்ந்த மகளிர் நலம் கெடுப்பவன் அவன்” என்று தலைவி கூறுகிறாள்.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திற்கு உரை எழுதுகையில், நச்சினார்க்கினியர் “தாயுயிர் வேண்டாக் கூருகிர் அலவன்” [157] என்று மேற்கோள்காட்டுகிறார்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில் காலன் எந்தெந்த வடிவில் வருகிறான் என்பதைக்காட்டும் பாடல் இது.

       ”சிலந்திக்குத் தன்சினை கூற்றம்;நீள்கோடு

       விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான்—வலம்படா

       மாவிற்குக் கூற்றமாம்; ஞெண்டிற்குத் தன்பார்ப்பு

       நாவிற்கு நன்றல் வசை”

இப்பாடல் ’ஞெண்டு’ எனும் பெயரால் காட்டப்படும் நண்டிற்கு அதன் குஞ்சே கூற்றமாக அமைகிறது என்று சொல்கிறது.

 

கவியரசர் கண்ணதாசனும், ஜனனம்—மரணம் பற்றி எழுதும்போது,

        ”உண்டபணக் காரனவன் தொந்திஎன விம்மிவரும்

        நண்டிலொரு பிள்ளைநண்டு ஜனனம்—அதைக்

        கண்டவுடன் பெற்றநண்டு மரணம்”

என்று பாடி உள்ளார்.

தாய் நண்டானது சினை ஈன்ற பிறகு உடல் சுருங்கிவிடும். பிறகு உடல் பருப்பதற்காக அது தன் ஓட்டை மாற்றத் தொடங்கும். அப்பொழுது அதன் சினைகள் பொரிந்துத் தாயைவிட்டு நீங்கும். தாய் நண்டு இப்போது ஓய்ந்து ஒடுங்கி இறந்தது போலக் கிடக்கும். அதைக்கண்டவர்கள் அது இறந்துவிட்டது என எண்ணுவார்கள். எனவேதான் இலக்கியங்கள் இவ்வாறு எழுதி உள்ளன போலும். புது ஓடு பெற்ற பின்னர் அது மீண்டும் நடமாடத் தொடங்குமாம்.

திருமங்கையாழ்வார் திவ்யப்பிரபந்தத்தில் நண்டின் மூலம் ஒரு சிறுகதையையே காட்டுகிறார். திருநறையூர் திவ்யதேசத்தைப் போற்றும் பாடல் இது.

                   

பள்ளிக் கமலத் திடைப்பட்ட                         

பகுவாய் அலவன் முகம்நோக்கி

நள்ளி ஊடும் வயல்சூழ்ந்த

நறையூர் நின்ற நம்பியே!’        [1513]

 

இந்த அடிகளில் அலவன் என்பது ஆண் நண்டினையும் நள்ளி என்பது பெண் நண்டினையும் குறிக்கும். திருநறையூரில் ஓர் ஆம்பல் மலரில் ஆணும் பெண்னுமாய் இரு நண்டுகள் வாழ்ந்து வந்தன. பெண் நண்டு கருவுற்றது. அதற்குத் தருவதற்காக இனிமையான பொருள் தேடி ஆண் நண்டு தாமரை மலரை அடைந்தது. அதனுள் இருக்கும் மகரந்தத்தைத் திரட்டுவதற்குள் சூரியன் மறைந்துபோக தாமரை மலர் மூடிக்கொண்டது. உள்ளே இருந்த ஆண் நண்டின் மீது தாமரைத்தாதுகளும் சுண்ணமும் படிந்துவிட்டன. மறுநாள் பொழுது விடிந்தவுடன் ஆண் நண்டு அதே கோலத்தில் பெண் நண்டைத்தேடிவர அதற்குள் பகலில் குவியும் ஆம்பல் மலரும் மூடிக்கொண்டது. ஆண் நண்டு இரவு முழுதும் வேறிடத்தில் தங்கி வந்த படியாலும், அதன் உடலிலிருந்த கோலங்களாலும் பெண் நண்டு ஊடல்கொண்டு கதவை அடைத்துக்கொண்டது போலிருந்ததாம் அது.

இதைப் பட்டர் சொல்லக் கேட்ட அரையர், ”என்ன நடந்ததென்று கேள்வி கேட்டுப் பின் குற்றம் நிரூபணமானால் அன்றோ தண்டிக்க வேண்டும்?” என்று கேட்டாராம். அதற்குப் பட்டர் “என்ன செய்வது? கேள்வி கேட்க முடியாதபடிக்குப் பெண் அரசு நடக்கிறதே? என்றாராம்.  

       திருநறையூர் என்னும் நாச்சியார் கோயிலில் பெருமாளைவிடத் தாயாருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வீதி புறப்பாடுகளில் தாயார் முன்னால் செல்லப் பின்னால்தான் பெருமாள் வருகிறார். இதுவே மறைமுகமாக இங்குக் காட்டப்படுகிறது.

இவ்வாறு நண்டுகள் பல இலக்கியங்களில் இடம் பெற்று நம்மை மகிழ்விக்கின்றன.

 

 

  கண்ணன் கதையமுது-13   – தில்லை வேந்தன்

      New Madhav Profile pictures and DP Images - Dpsmiles   

 

    ஆய்ப்பாடியில் அதிகாலை!

காரிருளும்  போய்மறையும்,  கதிரும் வெல்லும்,

     கன்னியரின் மத்தொலியும் மனைகள் துள்ளும்;

பேரழகன்  புகழ்பாட  இன்பம்  மன்னும்;

     பிறைநிலவு வெண்முத்துப் பற்கள் மின்னும்;

சீரொலிசெய் கைவளைகள் தாளம் போடும்;

     சிற்றிடையும்  நனிவருந்தி வணங்கி ஆடும்.

ஆரமுத   இசைபருக   அமரர்    கூடி,

       அதிகாலை ஆய்ப்பாடி வருவர் தேடி!

                   ( வணங்கி – வளைந்து)

                                     

(ஸ்ரீ லீலா சுகர் சமஸ்கிருதத்தில் எழுதிய “ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்தின்  பாடலைத்(2-100) தழுவி எழுதியது)

கோகுலத்தில் கண்ணன் நிகழ்த்திய  திருவிளையாடல்

 

  1) காலை நேரக் குறும்புகள்

 

அண்ணலின்  குறும்பைக் கேளீர்:

     அடுக்களைப் பொருள்கள்  எல்லாம்

மண்ணிலே  உருட்டித்   தள்ளி 

     வண்டியாய் ஓடச் செய்வான்

வெண்ணெயும் பாலும் கீழே

      வீசியே  ஒளிந்து  கொள்வான்

பெண்களின் பின்னால் சென்று

       பின்னலைப் பிடித்தி ழுப்பான்

 

மாடுகள் கறக்கும் முன்னர்

     வைகறை மறைந்து செல்வான்

ஓடுநீ     கன்றே   என்பான்

   உறுபிணை அவிழ்த்தல் செய்வான்

தேடியே   வீடு   தோறும்

    திருடவே நண்ப ரோடு

கூடியே உறியில் வெண்ணெய் 

    கோலினால் உடைத்துக் கொள்வான்.

        ( உறு பிணை,- கட்டியிருக்கும் கயிறு)

 

                 2) மண்ணுண்ட மதலை

 

கண்ணன் மண்ணுண்டான் என்று நணபர் முறையிடுதல்

தெருவினிலே விளையாடும் கண்ணன் ஓர்நாள்

     தின்றுவிட்டான் மண்ணென்று நண்பர் கூற

வெருவியதால் யசோதையவன் கையைப் பற்றி

     வீட்டிற்கு வந்தவுடன் அதட்டிக் கேட்டாள்

திருமனையில் வெண்ணெயுடன் பாலும் உண்டு

     தின்பண்டம் பலவுண்டு குழந்தாய்  நீயோ

அருமையெனத் தெருமண்ணை உண்ண லாமா?

     அன்னைமனம் கலங்கிடவே பண்ண லாமா?

      (வெருவியதால் – நோய் வரும் என்று அஞ்சியதால்)

 

 கண்ணன் மறுத்தலும் வாயைத் திறந்து காட்டுதலும்

 

அம்மம்மா நான்மண்ணைத் தின்ன வில்லை

     ஆர்சொன்ன பொய்யென்று கண்ணன் கேட்டான்

இம்மண்ணும் கடல்வானும் அண்டம்  யாவும்

      இயற்றியவன் தலையசைத்து மறுத்துச் சொன்னான்

இம்மென்னும் முன்னேநான் அறிந்து கொள்வேன்

       இப்போதுன்  வாய்திறவாய் காண்பேன் என்றாள்

அம்மன்னன் குறுநகையை முகத்தில் தேக்கி

       ஆவென்று சிறுவாயைத் திறந்தான் மெல்ல.

 

                யசோதை கண்ட காட்சி

 செம்பவளச் சிறுவாயின் உள்ளே சுற்றித்

      திரிகின்ற கோள்களெல்லாம் மிதக்கக் கண்டாள்.

அம்புவியும், விண்வெளியும், கடல்ம லையும்,

     அசைகின்ற, அசையாத, பொருள்கள் கண்டாள்.

உம்பரவர்  மூவருடன் முனிவர், சித்தர்,

      ஒளிர்பரிதி, நிலவுடனே உடுக்கள் கண்டாள்.

வம்புமலர் வாய்திறந்து காட்டு கின்ற

       மதலையுடன்  தன்னையுமே  அங்கே கண்டாள்.

                   (மதலை – குழந்தைக் கண்ணன்)

  அன்னை வியத்தலும் பின்னர் மறத்தலும்

 

கற்பனையா, பகற்கனவா, மயக்கம் தானா?

     காண்கின்ற காட்சியதன் பிழையே தானா? 

அற்புதமா, ஆறறிவின் திரிபே தானா?

    அறியாத விஞ்சையர்கள் செயலே தானா?

இற்பிறந்த என்செல்வன் ஆற்றல் தானா?

     என்மனத்தில் உருவான தோற்றம் தானா?-

சொற்பிறழ்ந்து தாயுரைத்த எல்லாம் கேட்ட

     சூழ்முகிலும் யாவுமவள் மறக்க வைத்தான்.

      (சூழ்முகில் – மேகம் போன்ற கரிய கண்ணன்,)

 

              3)அன்னை சொன்ன பொய்!

 

காளிந்தி மணற்குன்றில் ஆடப் போனான்,

    கருமுகிலே! உலக்கைகொள் உன்றன் அண்ணன்.

ஆளரவம் கேட்பதற்குள் பொற்கிண் ணத்தில்,

    அமுதப்பால் அருந்திவிடு, குடுமி நீண்டு,

நாளின்றே, இப்பொழுதே, வளரும் கண்ணே!

    நயமாக எடுத்துரைத்தாள் யசோதை அன்னை.

வாளரவில் துயில்வோனும், குழந்தை போல

    வாய்வழியப் பருகித்தன்  தலையைத் தொட்டான்!

    

விளக்கம்:

 

கிருஷ்ணன் பால் குடிக்காமல் பிடிவாதம்  பிடிக்கிறான். தாய் யசோதை அவனிடம்,

” உலக்கையைக் கையில் ஏந்திய உன் அண்ணன் பலராமன் காளிந்தியின் மணற் குன்றுகளில் விளையாடப் போயிருக்கிறான்.

அவன் வருவதற்குள் நீ இந்தப் பொற் கிண்ணத்தில் உள்ள பாலைக் குடித்து விடு.

அப்படிப் பால் குடித்தால் உன் குடுமி உடனே விரைவாக வளரும்” என்று சொல்லி ஏமாற்றுகிறாள்.

அதை நம்பிய கிருஷ்ணனும் பாலைக் குடித்து விட்டுத் தன் தலையைத் தொட்டுப் பார்க்கிறான்”

 (ஸ்ரீ லீலாசுகர் சமஸ்கிருதத்தில் எழுதிய  ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்

சுலோகம் – 2-60- தமிழ் வடிவம்)           

 .4) இருவருக்கும் வெண்ணெய்!

 ஆடினான் குழந்தைக் கண்ணன்,

     ஆங்கொரு பளிங்குத் தூணும்

ஆடிபோல் அவனைக்  காட்ட

     அன்னையும் குழம்பிப் போனாள்.

தேடிடும்  பிள்ளை யாரோ?

      தெளிவுற அறிய மாட்டாள்,

ஈடிலா வெண்ணெய்க் கட்டி

     இரண்டெனப் பிரித்துத் தந்தாள்!

                 

விளக்கம்:

கண்ணன் நடனம் ஆடிய போது , அவனது உருவத்தை அங்கிருந்த ஒரு பளிங்குத் தூண் அப்படியே காட்டியது.

உண்மையான கண்ணன் யார் என்பதை அறிந்த கொள்ள இயலாமல் குழம்பிய தாய் யசோதை , தன் கையில் இருந்த வெண்ணெய்க் கட்டியை இரண்டாகப் பிரித்து இரண்டு கண்ணன்களுக்கும் ஊட்டி விட்டாள்.

 (  ஸ்ரீ லீலாசுகரின் ” ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்”2/66 பாடலின் கருத்தைத் தழுவி எழுதியது)

    

                     5)கன்றும் பானையும்

 

நாடோறும் ஆய்ச்சியர்கள் இல்லம் சென்று

      நறுவெண்ணெய் களவாடும் கண்ணன் ஓர்நாள்

ஓடோடிப் போவதற்குள் மாட்டிக் கொண்டான்.

      ‘உள்நுழைந்த காரணத்தைக் கேட்க,’ என்றன்

வீடோவென்று  எண்ணிவிட்டேன் ‘ என்றான் .’ஏன்கை

       விடவேண்டும் பானைக்குள் ?’ கேட்டாள் ஆய்ச்சி.

‘மாடொன்றின் காணாத கன்றைத்  தேடி

       மட்பானைக் குள்ளே கை  விட்டேன்’ என்றான் !

விளக்கம்

 தினந்தோறும் ஆய்ச்சியர்கள் வீடுகளில் வெண்ணெய் திருடி வந்த கண்ணன் ஒருநாள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டான்.

உடனே அவன் ,” இது என் வீடு என்று தவறாக நினைத்து நுழைந்து விட்டேன் “என்றான் .

” சரி , நீ ஏன்  வெண்ணெய்ப் பானைக்குள் கையை  விட்டாய் ?” என்று மடக்கினாள் ஆய்ச்சி.

அதற்கு அந்தக் குறும்புக்காரன் ,”கன்று ஒன்று காணாமல் போய் விட்டது .அது பானைக்குள் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன் ” என்று சொல்லிச் சமாளித்தான் .

 (ஸ்ரீ.லீலா சுகரின் ‘ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் ‘ பாடலைத் தழுவி எழுதியது)

 ( தொடரும்)

 

 

 

 

பாவ மன்னிப்பு – ரேவதி ராமச்சந்திரன்

கேட்கும்போதெல்லாம் அள்ளிக் கொடுத்தேனே? இதுதான் நீ காட்டும் விஸ்வாசமா?  எஜமானியை கொன்ற சமையல்கார பெண்!

‘குழலினிது யாழினிது என்ப தம் வீட்டு  அஞ்சலைக் குரல் கேளாதவர்’ ஆம் ‘அம்மாவ் துணி ஊற வைச்சுட்டயா’ என்று அவசரமாக வேலை செய்ய வரும் அவளை எல்லோரும் சந்தோஷத்தோடு வரவேற்பார்கள். அவளது அதிர வைக்கும் குரல் எப்போது கேட்கும் என்று ஆவலாகக் காத்திருப்பார்கள். வேலைக்காரியை வரவேற்காத வீடு உண்டா! புவனாவும் இதற்கு விதி விலக்கல்ல. அவசரமாக வரும் அஞ்சலை அதற்கப்புறம் எதிர் வீட்டு கமலா தண்ணி காப்பி தருவது, அடுத்தாத்து அம்புஜம் அவசர புத்தியினால் பாவக்காயை கருக்குவது, புதிதாக கல்யாணம் ஆன புனிதா இட்லி பானையில் தண்ணீர் வைக்காமல் அடுப்பில் வைப்பது என்று ஒரு கூஜா நிறைய காப்பியைக் குடித்துக் கொண்டே கூறி டைம் வேஸ்ட் செய்வாள். புவனாவும் அரை மனதாக ‘இதையெல்லாம் இங்கே ஏன் கூறுகிறாய்’ என்பாளே ஒழிய ஸ்வாரஸ்யமாகக் கேட்பாள். வம்பு யாருக்குத்தான் பிடிக்காது! ஆனால் புவனாவின் கணவர் மாதவனுக்கு இவளது வம்புப் பேச்சுகள் பிடிக்காவிட்டாலும் வேலை செய்யும் நறுவிசு அவருக்குத் திருப்தியாக இருந்ததால் பேசாமல் இருந்தார்.    

ஒரு நாள் ‘கூடை நிறைய பேண்ட், சர்ட் போடறயே அம்மா’ என்று முணுமுணுத்துக்கொண்டே துணிகளைத் துவைத்துக் காய வைத்தாள். மாலையில் புவனாவின் கணவர் வீட்டிற்கு வந்து எதையோ அவசரமாகத் தேடினார். பிறகு பேண்ட்டைத் தேடி அது கிடைக்காமல் ‘புவனா இங்கே இருந்த என் பேண்ட் எங்கே’ என்று வினவினார். ‘அது ரொம்ப அழுக்காக இருந்தது என்று தோய்க்கப் போட்டேன். ஏன் என்னாச்சு எதற்கு இவ்ளோ பதட்டம்’ என்று புவனா கேட்டாள். ‘போச்சு போச்சு அதிலே ஐந்து லட்சம் பணம் வைத்திருந்தேன். என் நண்பன் திருப்பிக் கொடுத்த பணம். நீ கேட்ட நெக்லசை இன்று சர்ப்ரைசாக வாங்கி வரலாம் என்று இருந்தேன். அதான் உன்னிடம் கூட சொல்லவில்லை. ஆனால் நீயும் கவனிக்காமலேயே பேண்ட்டை தோய்க்கப் போட்டு விட்டாய்’ என்று கூறினார். அதற்கு புவனா ‘இல்லை அதில் பணம் இருந்திருந்தால் அஞ்சலை சொல்லியிருப்பாள். அவள் ஒன்றும் சொல்லவில்லையே’ என்று ஆச்சர்யம், சந்தேகம் கலந்து கேட்டாள்.

‘ஆஹா அதுதான் விஷயமே! எனக்கு முதலிலேயே சந்தேகம் அஞ்சலை மீது. நீ தான் இது எதையும் கவனிப்பதில்லை. பெரிதாகப் பணம் வந்தவுடன் எடுத்துக் கொண்டு விட்டாள். உன்னிடம் எதற்கு சொல்ல வேண்டும்! என் கணிப்பு சரியாக இருந்தால் இன்றிலிருந்து வேலைக்கு வர மாட்டாள் பார். ஐந்து லட்சம் என்பது சின்ன தொகையா!’ என்று படபடத்துக் கோபத்துடன் சொன்னான் மாதவன். ‘இல்லை அஞ்சலை அப்படிப் பட்டவள் இல்லை. நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம். நான் மெதுவாக விசாரிக்கிறேன்’ என்று புவனா சொல்ல ‘முடியாது நான் அவளை விசாரிக்கும் விதத்தில் விசாரிக்கிறேன். அப்பத்தான் சரியாக வரும்’ என்று மீண்டும் கத்தினான் மாதவன். ‘நீங்கள் செய்த தப்புக்கு அவள் எப்படி பொறுப்பாக முடியும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று புவனா மறுபடியும் நிதானமாகக் கூற ‘ஏதோ பண்ணு. நான் சொன்னால் நீ கேட்கமாட்டாய். போலீசைக் கூப்பிடுவேன் அவள் ஒத்துக்கொள்ளாவிட்டால். எனக்கு என் பணம் வேண்டும்’ என்று அழுத்தமாகக் கூறினான்.

ஆனால் மாதவன் கணித்ததிற்கு மாறாக மறு நாள் அஞ்சலை வந்து எப்போதும் போல ஆர்ப்பாட்டத்துடன் வேலை செய்ய ஆரம்பித்தாள். புவனாவிற்குத்தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மெதுவாக ‘இன்று என்னுடைய துணிதான் கொஞ்சம் இருக்கிறது, நேற்றே ஐயாவுடையது எல்லாம் தோய்த்தாகி விட்டதே’ என்று ஆரம்பித்தாள் நப்பாசையுடன். இப்படி ஆரம்பித்தாலாவது அவள் ஞாபகம் வந்து சொல்லுவாள் என்று எதிர்ப்பார்த்தாள். அவள் எடுத்திருக்க மாட்டாள், அப்படியே எடுத்திருந்தாலும் அங்கே அவசரத்தில் வைத்து விட்டு இப்போது ஞாபகம் வந்து சொல்லுவாள் என்று நினைத்தாள். ஆனால் இது ஒன்றும் தெரியாத அஞ்சலை ‘ஆமாம்மா நேற்று நிறைய பேண்ட், சர்ட் தோய்த்து விட்டேன், நீயும் கையால் தோய்த்தால்தான் நன்றாக இருக்கிறது என்று மிசிணும் வாங்க மாட்டேன் என்கிறாய். கை வலிக்கிறதம்மா. நாளை உன் துணிகளைத் தோய்க்கிறேன்’ என்றாள். ஆனால் பணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மாதவனை எப்படி சமாளிப்பது என்றும் புரியவில்லை.

சாயங்காலம் வீட்டிற்கு வந்த மாதவன் முதலில் இதைத்தான் விசாரித்தான். ‘அஞ்சலையிடம் கேட்டேன் அவள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆகையால் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் வேறு எங்காவது வைத்து விட்டீர்களா என்று யோசியுங்கள்’ என்று புவனா சொன்னவுடன் ‘நீ சரியாக விசாரித்திருக்க மாட்டாய், நான் நாளை விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உண்மை வெளி வந்து விடும்’ என்று மாதவன் உருமினான்.

மறுநாள் புவனா பயந்த மாதிரியே அஞ்சலை வந்தவுடன் ‘நேற்று என் பேண்ட் தோய்த்தாயே அதில் ஏதாவது இருந்ததா’ என்று ஆரம்பித்தான் மாதவன். ‘ஆமாஞ்சாமி சில காகிதங்கள் இருந்தன பின் பக்கத்தில் வைத்துள்ளேன்’ என்று இரண்டு சிறு துண்டுகளை எடுத்து வந்தாள். ‘ம்கூம் இதைத் தவிர கத்தைப் பேப்பர்கள், பணம் இருந்ததா?’ ‘இல்லை சாமி இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை’ இப்போது மாதவன் கோவத்துடன் ‘உண்மையைச் சொல் பணம் கத்தைப் பணம் இருந்ததா, நீ எடுத்து வைத்துள்ளாயா’ ‘சாஆஆமி அப்படி இருந்தால் நான் உடனே அம்மாவிடம் கொடுத்திருப்பேனே’ என அஞ்சலை பதற ‘பொய் சொல்லாதே நான் போலீசைக் கூப்பிடுவேன். அவர்கள் விசாரிக்கும் விதத்தில் விசாரிப்பார்கள். உண்மையைச் சொல். ஐந்து லட்சம் ரொக்கம். கொடுத்து விடு. உனக்கும் ஏதாவது அதிலிருந்து தருகிறேன்’ என்று சாம, தான, தண்டத்தை உபயோகித்தான் மாதவன். அஞ்சலைக்கு கண்களிலிருந்து கண்ணீர் தாரையாகக் கொட்டியது. முந்தானையால் துடைத்துக் கொண்டே விசும்பியவாறு ‘சாமி நாங்கள் ஏழைகள் தாம் ஆனால் மானம் மருவாதை உள்ளவர்கள். சத்தியத்திக்குக் கட்டுப்பட்டவர்கள். உழைச்சி சாப்பிடுவிமே தவிர உட்கார்ந்து சாப்பிட மாட்டோம். நான் பணம் எதுவும் பார்க்கவில்லை’ என்று முடித்தாள்.

அப்போதும் மாதவன் சமாதானமாகவில்லை என்று கண்டு ‘அம்மோவ் நான் போகிறேன். இனி இங்கு வேலை செய்ய மாட்டேன். இனி எது காணோம் என்றாலும் என்னத்தான் சொல்வீங்க. பணம் ஒரு நாள் கிடைக்கும் அப்போ இந்த அஞ்சலையை நினைங்க. என் பையை பார்த்துக்கோங்க’ என்று முந்தானையை, பையை உதறி விட்டு சென்று விட்டாள். ‘பாவம் இந்த மாச சம்பளம் கூட கேட்கவில்லை தலை குனிந்து போகிறாள்’ என்று புவனா மிகவும் வருத்தப்பட்டாள். அவள் அஞ்சலையை மிகவும் நம்பினாள். அவள் போனது அதுவும் அப்படி வருத்தப்பட்டு போனது அவளுக்கு வேதனையாக இருந்தது. என்ன செய்ய! அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் கஷ்டப்பட்டப்பிறகு கமலாம்பாள் வந்தாள். ஏதோ வேலை ஆயிற்று

நான்கு நாட்களுக்குப் பிறகு ஆபிசில் இன்ஸ்பெக்க்ஷன் எல்லோரும் அவரவர்கள் இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என்று சர்க்குலர் வந்தது. மாதவன் எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பான். ஆனாலும் மறுமுறை எல்லாவற்றையும் எடுத்து தூசி தட்டி வைக்கலாம் என்று மேசை டிராயரை திறந்த போது உள் பக்கமாக ஏதோ குண்டான கவர் கையில் பட்டது. யோசனையுடன் அதை இழுத்துப் பார்த்தால் ரூபாய் நோட்டுகள் கத்தையாக. அப்போதுதான் அவனுக்கு பொறி தட்டியது. நண்பன் பணத்தைக் கொடுத்தவுடன் பியூன் வந்து மேனேஜர் அழைப்பதாகச் சொல்லவும் பணத்தை அவசரமாக கவரில் போட்டு டிராயரில் வைத்ததும் பிறகு எடுத்து பேண்ட்டில் போட மறந்ததையும் இப்போது நினைத்தான். அஞ்சலையை நாம் எப்படி தவறாக எண்ணி விட்டோம். புவனா சரியாகத்தான் சொன்னாள். ‘அவசர ஆத்திர புத்தியினால் ஏழை என்ற ஒரே காரணத்தினால் அப்படி நினைத்தோமே அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும்’ என்று மிகவும் நொந்து போனான். அவள் சொன்ன மாதிரி பணம் கிடைத்தவுடன் அவள் ஞாபகம் தான் வருகிறது. வீட்டிற்கு வந்து புவனாவிடம் இதைத் தயங்கித் தயங்கி சொன்னபோது புவனா கேட்ட கேள்வி ‘இந்த பாவத்திற்கு மன்னிப்பு ஏது!’ 

 

“திருநங்கையால் மறுவாழ்வு!” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Celebration Of Identity': Tamil Nadu's Transgender Artists Get Their Work Featured At Florida's Art Exhibition

 

பதினான்கு வயது முடியும் தருணத்தில் சைத்ரையை எனக்கு அறிமுகம் செய்தது பேருந்தில் பரிச்சயமான ஒரு திருநங்கை. இந்த திருநங்கை பக்கத்தில் உட்கார மறுத்து கேலியாகப் பேசிய மற்றப் பயணிகளைக் கடுமையாகக் கண்டித்தேன். அப்படி அறிமுகம் ஆகியிருந்தோம்.

தனித்துவம் பெற்ற திருநங்கை மோனா, சைத்ரையை அழைத்து வந்த காரணத்தைக் கேட்டு வியந்தேன். சைத்ரை பிரபல தொழில் அதிபரான அசோக்கின் மகன். எட்டு வருடங்களாக அவனை மோனாவின் இருப்பிடத்தில் அசோக் விட்டுப் போய்விடுவானாம். காரணம் கேட்டால், அசோக் பயமுறுத்துவானாம். சைத்ரையின் நல்ல சுபாவத்தினால் மோனா, மற்ற திருநங்கைகள் அவனுக்கு உணவு அளித்து அசோக் வரும்வரை அன்பாகப் பார்த்துக் கொள்வார்களாம். அசோக் சைத்ரையை தகாத வார்த்தைகளைச் சொல்லி, அடித்து, நீயும் திருநங்கை என ஏளனமாகக் கூறிக் கூட்டிச் செல்வானாம். சாராயம் வாடை அடிப்பதாலும் மறு வார்த்தை பேசினால் சைத்ரையை மேலும் அடிப்பான் என்பதாலும் மோனா, மற்றவர்கள் அமைதி காத்தார்கள்.

இப்படி நடப்பதை எவ்வாறு கையாளுவது என்று திருநங்கைகளுக்குப் புரியவில்லை. அசோக் இருக்கையில் சைத்ரை வித்தியாசமாக நடந்து கொள்வதாலும் கடந்த ஏழு மாதமாக சைத்ரையின் உடல் காயங்கள், முகபாவங்கள், உடல்மொழி குழப்பத்தை ஏற்படுத்தியதாலும் என்னிடம் அழைத்து வந்தார்கள். சைத்ரையின் உடைகள் ஆண்மகன் அணிவது போல இல்லை.

சைத்ரையை தனிமையில் பார்ப்பேன் என அறிந்து வெளியேறியவர்களை, “ஏய்” எனக் குரல் கொடுத்தான் சைத்ரை. பேசு என உடல்மொழியில் சொல்லிவிட்டு திருநங்கைகள்  சென்றார்கள். அழைத்தவிதம் அவர்கள் உறவின் நெருக்கத்தைக் காட்டியது. 

நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர், சிகிச்சை உரையாடல் மையமாக இருக்கும், பகிர்ந்து கொள்வதின் ரகசியம் காப்பேன் என்பதையெல்லாம் சைத்ரைக்குத் தெரிவித்தேன். தன்னைப் பற்றி விவரிக்க ஊக்குவித்தேன்.

சைத்ரை, பெற்றோருக்கு முதல் மகன். பரம்பரைப் பணக்கார குடும்பம். வசதிகள் அந்தஸ்து இத்யாதிகள். அசோக் க்ளப் உறுப்பினர், தொழில் மற்றும் மேல்தட்டு சமூகத்தில் பிரபலமானவன்.

பலர் அசோக்கைச் சந்திக்க வருவதுண்டு. அவர்களுக்கு அறிமுகம் செய்யும் போது சைத்ரை ஏதேனும் தவறு செய்து விட்டால் அசோக் அங்கேயே அவனை அடிப்பான். மீண்டும் மீண்டும் ஆனதால் அப்பாவைக் கண்டால் பயமானது. அசோக்கிற்குப் பிடித்த மாதிரி இயங்க முயல்வதைச் சொல்லும்போது சைத்ரையின் கண்கள் ஆறாக ஓடியது.

தழுதழுத்த குரலில் சைத்ரை சொன்னான், பிறந்ததிலிருந்தே பிடிக்கவில்லை என. பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டார்கள், பிறந்ததோ சைத்ரை. இதனால் சைத்ரையைப் பெண் குழந்தை போல அலங்காரித்து, பெண் பெயரால் அழைப்பது. சைத்ரையின் பெண் பாவனைகளுக்கு அசோக் சிரிப்பான். அதற்காகவே பெண் போல இருக்கப் பார்ப்பான் சைத்ரை. வளர, வளர அம்மாவை நெருங்கினால் தள்ளி விடுவாளாம். “நான் யார்” என்று அல்லோலப் பட்டான்.‌

நடை பாவனை பெண்ணின் சாயலில் இருக்கும் போதெல்லாம் அசோக் இவனிடம் ஆசையாகப் பேசுவதால் அவ்வாறே செய்தான். எட்டு வயதானதும் இவன் இவ்வாறு செய்வதைத் “திருநங்கை” என அசோக் அழைப்பது சைத்ரைக்குப் புரியவில்லை. குழம்பியதால் திருநங்கைகள் (மோனா) இருப்பிடத்தில் அசோக் இவனை விட்டான். வீட்டில் கடுமையான கண்டிப்பு. அம்மாவும் உதறித் தள்ளி விட்டாள். சைத்ரை குழம்பிப் போனான். பயம் அதிகரித்தது.

எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் தவறு நேர்ந்து விடும். அசோக்கிற்கு எல்லாவற்றையும் தவறில்லாமல் செய்ய வேண்டும். உடையோ, செயலோ சரியாக இல்லையேல் சைத்ரை மற்றும் மனைவி ஜெயலட்சுமி மீது கையில் கிடைத்ததை அசோக் வீசி எறிவான்.

ஜெயலட்சுமி சட்டப் பட்டதாரி, இல்லத்தரசியாக இருந்தாள். அசோக்கை ஒட்டியே இருப்பாள். கணவருக்குப் பிடித்ததையே செய்வாள். மேஜையைச் சரியாகத் துடைக்கா விட்டாலோ நாற்காலிகள் வரிசையாக இல்லை என்றாலோ அசோக் அவளை அடிப்பதைப் பார்த்திருக்கிறான்.

பெற்றோர் இவ்வாறு. ஆதரவான  மது பெரியப்பாவை நெருங்க விட மாட்டார்கள் என வருத்தத்துடன் சொன்னான்.

மேற்கொண்டு ஸெஷன்கள் தேவை என்று மோனாவிடம் பகிர்ந்தேன். நல்லெண்ணத்தில் மோனா அழைத்து வந்த போதிலும் சைத்ரையின் இன்னல்கள், வயதினால் பெற்றோர் வரவேண்டியதை விவரித்தேன். அசோக் கோபம் கேரண்டீ. சைத்ரை நலனுக்காகச் செய்வது நிச்சயம் என்றார் மோனா. இந்த வரிகள், சொன்ன விதத்தில் சைத்ரை மனம் நெகிழ்ந்தான். இதுவல்ல பந்தம்!

மறுமுறை மோனா அழைத்து வந்த போது விவரத்தைக் கேட்டு அறிந்தேன். பெற்றோர் வேலை இருப்பதாகவும் நேரம் கிடைக்கும் போது வருவதாகதவும் தெரிவித்தார்கள். ஸெஷனைத் தொடர்ந்தேன்.

சைத்ரை பள்ளியில் தன் மதிப்பெண்கள் சரிந்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாததைப் பற்றிப் பேசத் தொடங்கினான். படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு அப்பா நன்கொடை தருவதால் இவனுக்குச் சலுகைகள். இதனால் வகுப்பில் நண்பர்கள் என்று யாருமில்லை. இது மனதை வாட்டியது.

இது கேள்விகள் எழுப்பும் பருவம், உறவு, வளர்ப்பு பற்றியும்.  சைத்ரைக்கு கேள்விக்குறிகள் மட்டுமே சூழ்ந்தது. அதுவும் அவனைப் பெண் போலப் பாவித்து ஆமோதித்து, பிறகு அதை நிராகரிப்பதின் விளைவு, குழப்பத்தை ஏற்படுத்தியது.

வகுப்பு அனுபவத்தை எடுத்துக் கொண்டு, ஸெஷனில் அங்கு நடப்பதை ஒளிச்சித்திரம் போல எழுதிப் பேசினோம். ஒவ்வொரு ஸெஷனிலும் சைத்ரைக்கு தன்னுடைய தன்மையைப் பற்றி புதிதாக ஒன்றை அறிய முடிந்தது. ஸெஷனின் கடைசி பத்து நிமிடங்களில் அழைத்து வந்த திருநங்கையோடு இந்தக் கண்டறிதலைப் பகிர வேண்டும். பரிச்சயமானவர்களாக இருப்பதால் சைத்ரையால் செய்ய முடிந்தது. இப்படி வெளிப்படையாகத் திறனைப் பற்றிக் கூறியதில், மனதில் நின்று வேலை செய்யத் துவங்கியது.

வகுப்பில், பெற்றோர் இல்லாததால் இயல்பான நிலையைப் பார்க்க முடிந்தது என்றதை உணர்ந்தான். பெண் போன்ற வேஷம் தேவைப்படவில்லை. சுதந்திரத்தை உணர்ந்தான். தன்மேல் கடுகு அளவு பாசம் பிறக்க ஆரம்பித்தது!

வேரொரு ஆதங்கம், மதிப்பெண் ஏதுவாயிருந்தாலும் தாய் எதுவும் சொல்வதில்லை, தந்தையோ அடிப்பது நிச்சயம். நல்ல மதிப்பெண் வாங்க மனமில்லை என்றான். மேலும் உரையாடினோம்.

படிக்கும் போது தன்னுள் நிலவும் நிலையைக் கண்காணித்துக் குறித்துக் கொண்டு, வரைபடம் செய்தான். அதைப் பற்றி ஆலோசிக்க, படிக்கவே பிடிக்காததற்குக் காரணிகள் தென்பட்டது. படிக்கும் போது, சைத்ரையை “இவன் மட்டும் பெண்ணா இருந்திருந்தா…” என்று பெற்றோர் குத்தலாகப் பேசுவார்கள். சைத்ரைக்கு வெட்கத்துடன் அழுகை வரும். இப்போது புரிந்து கொண்டான், அதனாலேயே படிப்பின் மீது வெறுப்பு வர, மதிப்பெண் சரிந்தது என.

மதிப்பெண்கள் ஆண்-பெண் தோரணையில் மாட்டிச் சிக்கியது. இதைச் சரிப்படுத்த சைத்ரையைத் தனக்குப் பிடித்தவை, முடிந்தவை, செய்ய முடியாதவற்றைப் பட்டியலிடச் சொன்னேன். முடியாதவை, பிடிக்காதவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு, அவற்றைச் செய்வதற்கு வேண்டியவை என்னென்ன என்பதைப் பற்றி உரையாடினோம். சைத்ரை சந்தேகங்களைப் பகிர்வதில் ஆரம்பமானது. தான் பெண் என்றே நம்புவதாகக் கூறினான்.

மூன்று மாதங்கள் சென்றது. விடைகள் தென்பட, தைரியம் எட்டிப்பார்க்க சைத்ரை பெண் போலப் பேசுவது, நடந்து கொள்வது மாறியது. பத்தாவது வகுப்புத் தேர்வும் முடிந்தது.

சைத்ரையிடம் மாறுதல் கவனித்து ஆர்வத்தில் நேரம் கேட்டு அசோக், ஜெயலட்சுமி வந்தார்கள். நாயகன் நடை-உடையில் அசோக். வைரம், பட்டுச் சேலை ஜெயலட்சுமி அணிந்திருந்தாலும் கழுத்தில், கைகளில் காயங்களும், வடுக்களும் தான்.

தங்களது மகன் வந்த விவரத்தைப் பற்றி அசோக் அதிகாரத் தோரணையில் கேட்டான். அவ்வாறு வெளிப்படுத்த மாட்டோம் என்றேன். அதற்கு அவன் சைத்ரை ஆண் பிள்ளையாக இருப்பிலும் பெண்ணின் சாயல் உடையவன் எனக் கூறி, மனைவியைக் கேட்டான். அவளும் தலையை ஆட்டி ஆமோதித்தாள். இவர்களுக்கு மன நலன் பாதிப்பு உள்ளதோ என்பதைச் சார்ந்த கேள்விகள் கேட்டேன். அவர்கள் பதில்கள் எனக்கு “ஆம்” என்று விளக்கம் அளித்தது.

அசோக் சைத்ரையை ஸெஷனுக்குத் தொடர்ந்து அனுப்ப ஒப்புக்கொண்டான். தனக்குப் பொறுப்புகள் உள்ளதாகவும், ஜெயலட்சுமி இல்லத்தரசியாக இருப்பதால் அவள் பொறுப்பில் விடுவதாகவும் சொல்லிக் கிளம்பினான். ஸெஷன் வேளையை ஜெயலட்சுமியுடன் முடிவு செய்து கொண்டோம். சைத்ரை வரவேண்டிய நேரத்தையும் குறித்துக் கொண்டோம்.

ஜெயலட்சுமி பிறந்த வீட்டினரும் பிரபலமான பணக்காரர்கள். அதனால்தான் இங்கு வாழ்க்கைப் பட்டதாகக் கூறினாள். கல்யாணத்துக்கு முன் வழக்கறிஞராக இருந்தாள் பிறகு அசோக் விடச் சொன்னதால் விட்டு விட்டாள். அவளது உலகமே அசோக். என்றும் அவன் சொல்வதை மட்டுமே ஏற்றுக்கொள்வாள். கணவன் ஆண் குழந்தைக்கு ஆசை காட்டக்கூடாது என்றதால் சைத்ரையை உதறி விட்டாள். இரண்டு வயது ஆனதும் தூக்கிக் கொள்வதை, உணவைத் தருவதை நிறுத்தி விட்டு இதற்கெல்லாம் ஒரு பணிப்பெண்ணை நியமித்தாள். கணவனைக் கவர்ந்து கொள்ளவே அவன் முடிவையும் ஏற்றுக்கொண்டாள், பிள்ளையை எளிமையான பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதும், அதிகம் கண்டிப்பதும்.

ஸெஷன்களுக்கு அசோக் தந்த வேறு வேலை குறுக்கிட, விட்டு விட்டு வந்தாள். அசோக் சைத்ரையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதாலும்.

ஒரு ஸெஷனைக் கூட தவறவிடாமல் சைத்ரையை மோனா அல்ல அவர்கள் குழுவிலிருந்து ஒருவர் அழைத்து வருவது வழக்கமானது. அவர்களே ஆலோசனைக்குப் பணத்தைத் தருவதும். நான் குறைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தன இந்த நல்ல உள்ளங்கள்!

அன்று ஸெஷனில் இரு தகவல்களை சைத்ரை பகிர்ந்தான். ஒன்று பரீட்சையில் நல்ல மதிப்பெண், பெற்றோர் எதுவும் சொல்லவில்லை. கூடவே மேற்கொண்டு படிப்பது அர்த்தமற்றது என்றான். பெற்றோரிடம் துளிகூட ஆசை பாசம் இல்லை என்றான். எதிர்மறை சூழலால் தன் வாழ்வைச் சீரழிப்பதின் விளைவுகளை யோசிக்கச் செய்தேன். இருப்பிடம் மாற்றத்தை விரும்பினான்.

தனக்கென்று உள்ளவர்கள் என்று மோனா குழுவினரைப் பாவித்தான். இவர்கள், மது பெரியப்பா, மிருதுளா பெரியம்மா மீது தனக்கு உள்ள அன்பைக் காட்டத் தெரியவில்லை என்றான். அன்பைத் தெரிவிக்கும் கதை, பாடல் மூலமாகவும் ரோல் ப்ளேயும் செய்து, பயின்று, தெரிவித்தான்.

மது, மிருதுளா வந்தார்கள். சைத்ரையின் இருப்பிடம், பள்ளிக்கூடத்தை மாற்றுவதைப் பற்றிப் பேசி, செயல் படுத்தினோம். அசோக் சைத்ரையின் பொருட்களை வீசி எறிந்தான். பார்த்திருந்த மிருதுளா, சைத்ரையை அணைத்து, இனிமேல் எங்கள் வீட்டில் இரு என்றாள். என்னுடைய மாணவி நடத்தும் போர்டிங் பள்ளியில் சேர்த்தோம். அங்கு என்னுடைய “வாத்ஸல்யா ஃபார் யூமன் என்ரிச்மென்ட்” அமைப்பின் பெயரில் பல்வேறு  வர்க்ஷாப் செய்தேன். ஒட்டுமொத்தமாகப் பள்ளி, சக மாணவர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தது. அதனால் சைத்ரைக்குப் புனர் ஜென்மம் போல் ஆனது பிரத்யேகமாகச் சொல்ல வேண்டியவை! இவர்களால் சைத்ரை ஏரோஸ்பேஸ் இன்ஜீனியர் ஆக வெளிநாடு சென்றான். முடித்து நல்ல வேலையும் கிடைத்தது.

என்னுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஒரு முறை இந்தியா வருகையில் தன் எண்ணத்தைப் பகிர்ந்தான். மிருதுளா வெவ்வேறு மாநிலச் சேலை கட்டிக் கொள்வதைப் பார்த்து ரசித்ததுண்டு. அப்போது ஒரு பொறிதட்டியது, நெசவுத் தொழிலை மேலும் சீர்படுத்த மோனா குழுவைச் செய்ய வைக்கலாம் என்று. அவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை அரவணைப்பு தந்ததற்கு நன்றி சொல்வதாக! மோனாவை அழைத்து விவரித்து, அங்கு உள்ள அனைவரையும் சேர்த்துச் செயல்படுத்தத் தொடங்கினான். இவர்கள் வாழ்வு படிப்படியாக மேம்பட்டதைப் பார்த்துப் பூரித்துப் போனான்.

வாழ்க்கை முன்னேற்றம் நாம் செய்வதில் தான் என்று மோனா அப்போது சொன்னதை நினைவு கொண்டான் சைத்ரை.

 

 

பிரபல சந்திப்பு – 1 – கணேஷ்ராம்

குவிகம் இலக்கியவாசல் ஆண்டுவிழா | குவிகம்இலக்கிய வாசல் – அறிவிப்பு | குவிகம்
( குவிகம் ஆண்டுவிழா நிகழ்வில் மதிப்பிற்குரிய விருந்தினர்கள் அசோகமித்திரன் மற்றும் இந்திரா பார்த்தசாரதி ) 
உற்சவத்தில் ஊர்வலம் வரும் கடவுள்களைக் காண்பது போல நிறைய எழுத்தாளர்களை தூரத்தில் நின்றவாறு பார்த்திருக்கிறேன்.
லாசரா போன்றவர்கள் இந்த வகையில் என்னால் பார்க்கப் பட்டவர்கள்.
சுஜாதா, ஞானக்கூத்தன் போன்றவர்களோடு சில விருட்சம் நிகழ்வுகள்.
நான் எதையாவது கேட்டு விட்டு, அவர்கள் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதை விட, அவர்கள் ஏதாவது கேட்டு நாம் விழிக்கிற மாதிரி ஆகிவிடக் கூடாதே என்ற பயம்.
ப்ரமிள் என்னை ஒருமுறை எண்ணெய் தடவாமல் முரட்டுக் கத்தரிக்காயைத் துவையலுக்காகத் தணலில் வாட்டுவது போல் வாட்டினார். நான் முழுவதும் தீய்ந்து விடாதபடி அழகிய சிங்கர் வந்து காப்பாற்றினார்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு அதற்கான விடை கிடைத்தது.
அன்றைய எங்கள் சந்திப்பில் நான் அவரிடம் ஞானக்கூத்தன் கவிதைகளைப் பெரிதும் புகழ்ந்திருந்தேன்.இங்கு கோவையில் ஐந்து வருடங்களுக்கு முன் பாலகுமாரனைப் பார்த்தேன். அவரிடம் சுவாரஸ்யம் இழந்து இரண்டு மாமாங்கங்கள் ஆகிவிட்டதில் நானும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கார் முன்சீட்டில் தடுமாறி ஏறியவரிடம், கோவை புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர் என்னை அறிமுகப்படுத்த, நான் அவரிடம் நானும் கரிச்சான் குஞ்சுவின் மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். பாலகுமாரன் முகத்தில் தாடியைத் தாண்டிய‌ “ஓ”!

வண்டி போய் விட்டது. அவரும் போய்விட்டார்.அசோகமித்திரனை அவர் யாராலும் தொந்தரவு செய்யப்படாமல் அநாமதேயமாக மாம்பலம் ரயில் நிலைய பெஞ்சு ஒன்றில் ஏகாந்தமாக இருந்த போது சென்று குசலம் விசாரித்தேன். அவர் சிறிய புன்னகையுடன் நான் வேலை பார்க்கும் இடம் பற்றி விசாரித்தார். அவர் மகன் வாயுதூத்தில் வேலை பார்ப்பதாகச் சொன்னதாக ஞாபகம்.

அதற்கடுத்த முறை சென்னை புதுக்கல்லூரி வாசலில்.

அதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சாகித்திய அகாதமி கிடைத்து இருந்தது.

என் மனைவி வங்கி ஊழியர்கள் தவறாமல் எழுதும் CAIIB என்ற‌ வங்கி ஊழியர்களால் மருத்துவப் படிப்புக்கு சமானமாக உதார் விடும் ஒரு பரீட்சை எழுத, நான் கொண்டு விட வந்திருந்தேன். அது புதுக்கல்லூரியில் நடந்தது.

நாங்கள் பஸ்ஸை விட்டு இறங்கவும், அவரும் ஞானியும் வேகமாக ஓடிவந்து ஏறத் தலைப்பட்டதும் ஒன்றாக நடந்தது.

கூட்டம் அதிகம் என்று அவர்கள் அந்த பஸ்ஸை விட்டு விடவும், நான் வலியப் போய் அவரிடம் “congratulations sir” என்றேன்.

அதற்கு முன் ஓரிரு முறை நானும் என் நண்பனும் ஞானி வீட்டிற்கு (பீட்டர்ஸ் காலனி) சென்றிருக்கிறோம்.

அதனால் ஞானி என்னைப் பார்த்து ஒரு குழப்பமான புன்னகையை உகுத்தார்.
அசோகமித்திரன் என்னை விட்டு விட்டு என் மனைவியைப் பார்த்து “இது யாரு” என்று கேட்டார்.
நான் என் மனைவி என்று கூற, “உங்க ரெண்டு பேருக்கும் இந்த காலேஜ்ல என்ன‌ வேலை” என்று கேட்டார்.
நான் மறுபடியும் அவரிடம் நான் யார் என்பதையும் நாங்கள் வந்த காரணத்தையும் கூறினேன்.
அவர், “அது இருக்கட்டும்… நீங்க ரெண்டு பேரும் ஒரே பேங்குல வேலை பாக்கறேளா” என்று கேட்டார்.
நான் ஆமென்றேன்.
அவர்”அது எப்படி?” என்று கேட்கும் போது அடுத்த பஸ் வந்து விட, ஞானி அவரிடம் “அவன் கிட்ட அப்பறம் பேசலாம்… நமக்கு ஸ்டோரி டிஸ்கஷனுக்கு நாழியாச்சு” என்று அவசரப் படுத்தினார்.

அதற்கு அசோகமித்திரன், “பஸ் போனா போயிட்டுப் போறது… இவா ரெண்டு பேர் கிட்டயும் அதைவிடப் பெரிசா கதை இருக்கும் போல இருக்கே” என்றார்.

அதற்கு அப்புறம் கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் பிற்பாடு நவீன விருட்சம் இலக்கியக் கூட்டங்களுக்கு அவர் வரும்போது ஓரிரு முறை என் வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று அவரது முருகேசன் தெரு வீட்டில் விடும் வாய்ப்பு கிட்டியது.

அவரது கைகள் பஞ்சு போல, தொட்டால் வலிக்குமோ என்பது போல இருக்கும். அற்புதமான வயதானவர்கள் மீது வீசும் விபூதி வாசனை அவர் மேலும் அடித்தது.

கைத்தாங்கலாக அப்பேற்பட்ட மகோன்னதமான எழுத்தாளரை அழைத்துச் செல்வது தான் எவ்வளவு பெரிய பாக்கியம்?

கடைசி முறை நாங்கள் ஏறிக் கொண்டவுடன் வேறு ஒரு பெரியவர் தானும் வருகிறேன் என்று ஏறிக் கொண்டு விட்டார். அவர் அதை ரசிக்கவில்லை என்று அவரது மௌனம் காட்டிக் கொடுத்து விட்டது.

அந்த முறை அவர் என்னை லிஃப்ட் கிட்டேயே திருப்பி அனுப்பி விட்டார். சற்றே துரிதமாக அவர் சென்றார். எங்களுடன் வந்த அந்தப் பெரியவர் கூடவே வந்து விடப் போகிறாரே என்ற பதைப்பு அவரிடம் இருப்பதாகத் தோன்றியது.
அது உண்மைதான் என்று அழகியசிங்கர் உறுதிப்படுத்தினார்.