குவிகம் இலக்கியவாசல் ஆண்டுவிழா | குவிகம்இலக்கிய வாசல் – அறிவிப்பு | குவிகம்
( குவிகம் ஆண்டுவிழா நிகழ்வில் மதிப்பிற்குரிய விருந்தினர்கள் அசோகமித்திரன் மற்றும் இந்திரா பார்த்தசாரதி ) 
உற்சவத்தில் ஊர்வலம் வரும் கடவுள்களைக் காண்பது போல நிறைய எழுத்தாளர்களை தூரத்தில் நின்றவாறு பார்த்திருக்கிறேன்.
லாசரா போன்றவர்கள் இந்த வகையில் என்னால் பார்க்கப் பட்டவர்கள்.
சுஜாதா, ஞானக்கூத்தன் போன்றவர்களோடு சில விருட்சம் நிகழ்வுகள்.
நான் எதையாவது கேட்டு விட்டு, அவர்கள் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதை விட, அவர்கள் ஏதாவது கேட்டு நாம் விழிக்கிற மாதிரி ஆகிவிடக் கூடாதே என்ற பயம்.
ப்ரமிள் என்னை ஒருமுறை எண்ணெய் தடவாமல் முரட்டுக் கத்தரிக்காயைத் துவையலுக்காகத் தணலில் வாட்டுவது போல் வாட்டினார். நான் முழுவதும் தீய்ந்து விடாதபடி அழகிய சிங்கர் வந்து காப்பாற்றினார்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு அதற்கான விடை கிடைத்தது.
அன்றைய எங்கள் சந்திப்பில் நான் அவரிடம் ஞானக்கூத்தன் கவிதைகளைப் பெரிதும் புகழ்ந்திருந்தேன்.இங்கு கோவையில் ஐந்து வருடங்களுக்கு முன் பாலகுமாரனைப் பார்த்தேன். அவரிடம் சுவாரஸ்யம் இழந்து இரண்டு மாமாங்கங்கள் ஆகிவிட்டதில் நானும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கார் முன்சீட்டில் தடுமாறி ஏறியவரிடம், கோவை புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர் என்னை அறிமுகப்படுத்த, நான் அவரிடம் நானும் கரிச்சான் குஞ்சுவின் மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். பாலகுமாரன் முகத்தில் தாடியைத் தாண்டிய‌ “ஓ”!

வண்டி போய் விட்டது. அவரும் போய்விட்டார்.அசோகமித்திரனை அவர் யாராலும் தொந்தரவு செய்யப்படாமல் அநாமதேயமாக மாம்பலம் ரயில் நிலைய பெஞ்சு ஒன்றில் ஏகாந்தமாக இருந்த போது சென்று குசலம் விசாரித்தேன். அவர் சிறிய புன்னகையுடன் நான் வேலை பார்க்கும் இடம் பற்றி விசாரித்தார். அவர் மகன் வாயுதூத்தில் வேலை பார்ப்பதாகச் சொன்னதாக ஞாபகம்.

அதற்கடுத்த முறை சென்னை புதுக்கல்லூரி வாசலில்.

அதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சாகித்திய அகாதமி கிடைத்து இருந்தது.

என் மனைவி வங்கி ஊழியர்கள் தவறாமல் எழுதும் CAIIB என்ற‌ வங்கி ஊழியர்களால் மருத்துவப் படிப்புக்கு சமானமாக உதார் விடும் ஒரு பரீட்சை எழுத, நான் கொண்டு விட வந்திருந்தேன். அது புதுக்கல்லூரியில் நடந்தது.

நாங்கள் பஸ்ஸை விட்டு இறங்கவும், அவரும் ஞானியும் வேகமாக ஓடிவந்து ஏறத் தலைப்பட்டதும் ஒன்றாக நடந்தது.

கூட்டம் அதிகம் என்று அவர்கள் அந்த பஸ்ஸை விட்டு விடவும், நான் வலியப் போய் அவரிடம் “congratulations sir” என்றேன்.

அதற்கு முன் ஓரிரு முறை நானும் என் நண்பனும் ஞானி வீட்டிற்கு (பீட்டர்ஸ் காலனி) சென்றிருக்கிறோம்.

அதனால் ஞானி என்னைப் பார்த்து ஒரு குழப்பமான புன்னகையை உகுத்தார்.
அசோகமித்திரன் என்னை விட்டு விட்டு என் மனைவியைப் பார்த்து “இது யாரு” என்று கேட்டார்.
நான் என் மனைவி என்று கூற, “உங்க ரெண்டு பேருக்கும் இந்த காலேஜ்ல என்ன‌ வேலை” என்று கேட்டார்.
நான் மறுபடியும் அவரிடம் நான் யார் என்பதையும் நாங்கள் வந்த காரணத்தையும் கூறினேன்.
அவர், “அது இருக்கட்டும்… நீங்க ரெண்டு பேரும் ஒரே பேங்குல வேலை பாக்கறேளா” என்று கேட்டார்.
நான் ஆமென்றேன்.
அவர்”அது எப்படி?” என்று கேட்கும் போது அடுத்த பஸ் வந்து விட, ஞானி அவரிடம் “அவன் கிட்ட அப்பறம் பேசலாம்… நமக்கு ஸ்டோரி டிஸ்கஷனுக்கு நாழியாச்சு” என்று அவசரப் படுத்தினார்.

அதற்கு அசோகமித்திரன், “பஸ் போனா போயிட்டுப் போறது… இவா ரெண்டு பேர் கிட்டயும் அதைவிடப் பெரிசா கதை இருக்கும் போல இருக்கே” என்றார்.

அதற்கு அப்புறம் கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் பிற்பாடு நவீன விருட்சம் இலக்கியக் கூட்டங்களுக்கு அவர் வரும்போது ஓரிரு முறை என் வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று அவரது முருகேசன் தெரு வீட்டில் விடும் வாய்ப்பு கிட்டியது.

அவரது கைகள் பஞ்சு போல, தொட்டால் வலிக்குமோ என்பது போல இருக்கும். அற்புதமான வயதானவர்கள் மீது வீசும் விபூதி வாசனை அவர் மேலும் அடித்தது.

கைத்தாங்கலாக அப்பேற்பட்ட மகோன்னதமான எழுத்தாளரை அழைத்துச் செல்வது தான் எவ்வளவு பெரிய பாக்கியம்?

கடைசி முறை நாங்கள் ஏறிக் கொண்டவுடன் வேறு ஒரு பெரியவர் தானும் வருகிறேன் என்று ஏறிக் கொண்டு விட்டார். அவர் அதை ரசிக்கவில்லை என்று அவரது மௌனம் காட்டிக் கொடுத்து விட்டது.

அந்த முறை அவர் என்னை லிஃப்ட் கிட்டேயே திருப்பி அனுப்பி விட்டார். சற்றே துரிதமாக அவர் சென்றார். எங்களுடன் வந்த அந்தப் பெரியவர் கூடவே வந்து விடப் போகிறாரே என்ற பதைப்பு அவரிடம் இருப்பதாகத் தோன்றியது.
அது உண்மைதான் என்று அழகியசிங்கர் உறுதிப்படுத்தினார்.