
இந்த ஜூம் மீட்டிங்கில் மெயின் பேச்சாளர் பேசி முடிச்ச உடனே ‘கேள்வி நேரம்’ அப்படின்னு ஒண்ணு வச்சிருக்காங்க. இதுல கேள்வி கேட்கிறது கஷ்டமா, பதில் சொல்றது கஷ்டமா ன்னு யோசிச்சுப் பார்த்தா சில பேரு ‘கேள்வி கேட்கிறது தான் கஷ்டம்’ அப்படின்னு சொல்வாங்க. அதாவது கேள்வி கேட்பதற்கு நம்ம மீட்டிங்க தொடர்ந்து கவனிச்சிருக்கணும் இல்லையா. பெரும்பாலான பேரு ஆடியோவையும் வீடியோவையும் மியூட்ல போட்டுட்டு வேற வேலை பார்க்கிறது, இல்லை ஏதாவது கொரிச்சிக்கிட்டே வேடிக்கை பார்க்கிறது இப்படி இருக்கிறதுனால, என்ன கேள்வி கேட்கிறது, அப்படிங்கிறது கஷ்டமான விஷயம்ன்னு சொல்லலாம் .சில பேரு தைரியமா வீடியோவை ஆன் பண்ணிட்டு கண்ண மூடி ஏதோ சிந்தனையில் இருக்கிற மாதிரி மத்தவங்க நினைக்கட்டும் ன்னு தூங்கிறது. அவங்க ஆடியோவை ஆப் பண்ணி வச்சிருக்கிறதாலே அவங்களோட சங்கீதக் குறட்டை சப்தம் நமக்குக் கேட்காது. இன்னும் சில பேரு வேணும்னே ஆடியோ ஆன் பண்ணிட்டு இவங்க வீட்ல ஸ்பெஷலா பண்ணுன முறுக்கு சத்தம் எல்லாருக்கும் கேட்கணும்னு ‘கடக்கு மடக்கு’ன்னு சாப்பிடுறது , இப்படியும் பண்றாங்க. ஆனா மீட்டிங்கில் பெரும்பாலும் இந்த மியூட் பண்றது அட்மின் கிட்ட இருக்கிறதுனால முறுக்கு சத்தத்தை மியூட் பண்ணிறாங்க . ஆனால் சிந்தனையிலே இருக்கிற மாதிரி தூங்குறவங்க வீடியோவ மியூட் பண்ண முடியலை போல தெரியுது .
இப்படி இருந்துட்டு திடீர்னு ‘இப்ப கேள்வி நேரம் ஆரம்பிக்குது’ அப்படின்னு சொல்லி ‘ எல்லாரும் வீடியோவையும் ஆடியோவையும் ஆன் பண்ணிக்கலாம்னு’ சொன்ன உடனே அவசர அவசரமா எல்லாரும் மீட்டிங்கில் கலந்து கொள்வார்கள் . ஆனா முன்னால கேட்டிருந்தா தானே சரியான கேள்வி கேட்க முடியும். அதுவும் சில ஆஸ்தான கேள்வியாளர்களை அட்மின் வச்சிருப்பாரு. அவங்க பெரும்பாலும் தூங்கிற சிந்தனா வாதிகளாத் தான் இருப்பாங்க. ஆனா எப்ப கேட்டாலும் மையமா இப்படி சொல்லிடுவாங்க.
‘ மிகவும் அருமையான நிகழ்ச்சி . ஐயா அவர்களின் அறிவுத்திறன் எங்களை புளகாங்கிதம் அடையச் செய்தது. அவர் குறிப்பிட்டுச் சொன்ன செய்திகள் , பாடல்கள் எல்லாம் மிகவும் பிரமாதம் . அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை’ என்று பொத்தாம் பொதுவாக சொன்னாலும் இதையே கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி இன்னும் பலரும் சொல்லும் பொழுது அது கேட்பதற்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்.
சில பேர். மிகச் சில பேர் , மிகவும் கவனித்து அந்தப் பேச்சு தொடர்பான கேள்விகளையும் கேட்பது உண்டு எனக்கு ஒரு நண்பன். அவன் கேள்வி கேட்பதில் மிகவும் தேர்ச்சி அடைந்தவன். அவன் கேட்கும் கேள்விகள் எல்லாமே மிகவும் சிறப்பாக இருக்கும் . அதே நேரத்தில் அவன் நிகழ்வு முழுக்க கவனிக்கவே இல்லை என்பது எனக்கு மட்டும் தான் தெரியும் . ஏனென்றால் அந்த நேரம் முழுக்க நாங்கள் போனில் பழைய கதை எல்லாம் பேசிக் கொண்டு இருந்தோமே . வீடியோவையும் ஆடியோவையும் எப்பொழுதும் மியூட்டில் போட்டு விடுவோம். இருந்தும் , எப்படி அவன் அவ்வளவு அருமையான, தொடர்புடைய கேள்விகளாக கேட்டு பேசியவரை மகிழ்விக்கிறான் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது .
எனது சந்தேகத்திற்கு அவன் அளித்த பதிலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இது, அந்த விழித்துக் கொண்டே தூங்குகின்ற இன்னொருவர் டெக்னிக்கை போன்று கஷ்டமான டெக்னிக் இல்லை என்று சொன்னான். கேட்ட பின்பு தான் தெரிந்தது .நாம் அனைவரும் மிகவும் எளிதாக பழகிக் கொள்ளக்கூடிய டெக்னிக் தான் என்று.
நம் அனைவருக்கும் தெரிந்த இந்த மூன்று கேள்விகள் தான். மூன்று ‘ஏ’க்கள் . ‘ என்ன, ஏன் ,எப்படி’ . அவ்வளவுதான். இலக்கியம் , அறிவியல் , அரசியல் எல்லாப் பேச்சுகட்கும் கச்சிதமாகப் பொருந்தக் கூடிய கேள்விகள் . இதை அவன் கேட்கும் முறையில் தான் இருக்கிறது விஷமம், இல்லை, விஷயம்.
கேள்வி நேரத்தில் இவனது முறை வரும்பொழுது இவன் ஆரம்பிப்பது இப்படித்தான்.
‘ ஐயா நீங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களுமே மிக மிக அருமையாக இருந்தன .’
இப்பொழுது பேசியவருக்கு உற்சாகம் ஏற்பட்டு விடுகிறது. அத்தனை கருத்துக்களும் அருமை என்றால் சும்மாவா. அவரே உளறியதாக நினைத்த சில கருத்துக்களும் இவனுக்கு அருமையாகத் தெரிந்ததில், பேச்சாளருக்குப் பரம திருப்தி.
அடுத்ததாக இந்த ‘என்ன’ கேள்வி.
‘ ஐயா, அத்தனை அருமையான கருத்துக்களிலும் ,என்ன கருத்து, எந்தக் கருத்து , நீங்கள் மிக மிக முக்கியமான கருத்து என்று நினைக்கிறீர்கள். எந்தக் கருத்து எங்கள் மனதை விட்டு எப்பொழுதும் நீங்காமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் . ‘
இப்பொழுது பேசியவருக்கு மிக மிக மகிழ்ச்சி . முதல் மகிழ்ச்சி அத்தனை கருத்துக்களும் அருமையான கருத்துக்கள் என்று அவன் சொன்னது . இரண்டாவது மகிழ்ச்சி, இதில் அவன் என்றும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கேட்கிறானே, நம் கருத்தின் மேல் இவனுக்கு எவ்வளவு மதிப்பு ,ஆர்வம் ‘ .
இப்பொழுது அவருக்கு வேலை வந்து விட்டது. தான் பேசியது எல்லாம் ஒரு பின்னோட்டமாக சென்று அதில் தனக்கு ஞாபகம் வரும் கருத்துக்களில் ஒரு முக்கியமான கருத்தை எடுத்து அவர் சொல்ல வேண்டிய கட்டாயம். கொடுத்த நேரம் தாண்டியும், இவனால் தனக்கு அதிக நேரம் கிடைத்த சந்தர்ப்பத்தை அவர் தவற விடுவாரா . இந்த நேரம், நமது நண்பன் , தனக்கு மிகவும் தெரிந்த, பள்ளியில் இருந்தே பழகிய , கண்களைத் திறந்தபடி தூங்கும் பழக்கத்தை ஆரம்பித்திருப்பான். அவர் இவன் ஆர்வமாகக் கேட்பதாக நினைத்து உற்சாகமாக ஆரம்பித்துச் சொல்லுவார்.
இப்பொழுது அவரது பதில் முடித்ததும் கிடைத்த கரகோஷத்தில் ( கேள்வி நேரத்தில் அனைவரது ஆடியோவும் ஆன் செய்யப்பட்டிருந்தது , முறுக்கு சாப்பிடுபவர் உட்பட அனைவருக்கும் பிடித்த விஷயம் என்பதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம். ) விழித்திருந்த கண்ணை இன்னும் விழித்து அடுத்த கேள்வியை கேட்பான் .
‘ மிக்க நன்றி ஐயா, உங்களின் விரிவான விளக்கத்திற்கு. ‘
அடுத்த அந்த ஏ வரிசைக் கேள்விகளில் உள்ள அடுத்த ‘ஏ’.
‘ ஆனால் ,ஏன் ஐயா, ஏன் இதுதான் மிகவும் முக்கியம் என்று சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்து நீங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களுமே மிக மிக முக்கியமான கருத்துக்களாகத்தானே தெரிகின்றன. இதை மட்டும் குறிப்பிட்டு ஏன் சொன்னீர்கள் ,ஏன் சொன்னீர்கள் ,’ என்று அவன் ஆவேசமாக கேட்கும் பொழுது அந்த பேச்சாளருக்கு எவ்வளவு மகிழ்வு ஏற்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பேச அதிக நேரம் கிடைப்பது ஒரு பக்கம் , இந்த கருத்து மட்டும் அல்ல, தனது எல்லா கருத்துக்களுமே மிகவும் முக்கியம் என்ற அவனது அந்தக் கருத்து அவர் ஆழ்மனதில் இறங்கிவிட்டு, இப்பொழுது அவர் இதற்கு விளக்கம் சொல்ல ஆரம்பிக்கும் பொழுது அவன் தனது பழைய பழக்கத்திற்கு கண்களை விழித்தபடி சென்று இருப்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. , .
அவன் கடைசியாகக் கேட்கப் போகும் கேள்விக்கு, அந்த ‘ எப்படி ‘ கேள்விக்கு அவரால் சுருக்கமாகப் பதில் சொல்லவே முடியாது அது என்னவென்றால் , ‘
‘ நன்றி ஐயா , நீங்கள் சொன்ன காரணங்கள் எனக்கு நன்றாகவே புரிகின்றன. ஆனால் . எப்படி ஐயா எப்படி, இவ்வளவு அறிவுக் கூர்மையும் , பேச்சுத் திறமையும் உங்களுக்கு எப்படி ஐயா வந்தது ‘ என்று கேட்டு முடிப்பான். இதற்குள் அந்த அட்மின் னுக்குத் தெரியும் .இந்த ‘எப்படி’ பற்றி அந்தப் பேச்சாளர் பேச ஆரம்பித்தால் எவ்வளவு ஆர்வமாகப் பேசுவார், நிச்சயம் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் ‘முடிக்கவே மனம் இல்லாவிட்டாலும், பசிக்க ஆரம்பித்து விட்டதால், இத்துடன் இந்த நிகழ்வை முடித்துக் கொள்ளலாம், மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை , நமது குழுமத்தில் பதிவு செய்யலாம் ‘ என்று அவசர அவசரமாக அந்த ஜூம் மீட்டிங்கை முடித்துக் கொள்வார்.
தொடர்ந்து நண்பர்கள் அனைவரும் , கேட்டவர் ,கேட்காதவர் அனைவரும், அந்தப் பேச்சைப் பாராட்டும் சாக்கில், அந்தக் கருத்தைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த கூகிள் ஆண்டவர் குறிப்புகளை பக்கம் பக்கமாக பதிவு போட்டு விட்டு அதற்குப் பாராட்டுப் பதிவு கிடைக்கும் என்று காத்துக் கொண்டு இருப்பார்கள்.
