சர் சி வி ராமன் அவர்களின் திருக்கரத்தில் விருது பெற்று , சங்கத் தமிழையும் மரபுக் கவிதையையும் தன் உயிர் மூச்சாக மதித்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பசுபதி ஐயா நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
ஜனவரி 29 அன்று மரபுக் கவிதை பற்றிய தில்லை வேந்தன் உரையைக் கேட்க அவர் குவிகம் அளவளாவல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரபுக் கவிதை பற்றிய அவரது கருத்தை அழகாகக் கூறினார்.
அதைத் தொடர்ந்து அவரை மீண்டும் குவிகத்தில் அவருக்குப் பிடித்த தலைப்பான தமிழில் சொல் விளையாட்டு பற்றிப் பேச மின்னஞ்சல் மூலமாக அழைப்பு விடுத்தேன். அதற்கு அவர் எழுதிய பதில் கண்ணில் நீரை வரவழைத்தது. அதை உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறேன். அதன்பின் அவரிடம் குவிகத்திற்கு அவருடைய கவிதைகளை அனுப்பும்படி வேண்டிக்கொண்டதற்கு இணங்க இரு வெண்பாக்களை அனுப்பினார். அது இந்த இதழில் அடுத்த பக்கத்தில் வந்திருக்கிறது. ஆனால் திடிரென்று அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர், தமிழ் அன்பர் ஆகியோர் வரிசையில் நானும் நின்று கண்ணீர் வடித்தேன்.
முகநூலில் அவரது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பசுபதிவுகள் உண்மையில் ஒரு இலக்கியச்சுரங்கம்.
அவர் எழுதிய ‘சங்கச் சுரங்கம்’ மற்றும் ‘கவிதை எழுதிக் கலக்கு’ புத்தகங்கள் இலக்கிய – இலக்கண நண்பர்களுக்கு அமிர்தம்.
அவர் நினைவைப் போற்றி அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்!
குவிகத்திற்கு அவர் அனுப்பிய மின்னஞ்சல்:
Pas S.Pasupathy <s.pasupathy@yahoo.ca>
Tue, 31 Jan at 8:15 pm
Thanks.
I will have to give such a talk only later …. hopefully after 6 months or so. If everything goes well.
The reasons are :
1) “word play ” . Love to talk. But requires ‘visual’ aid. Needs preparation of a document to be shared at talk. Not being an expert , will take time. I will slowly start the effort. When I am ready to talk, will let you know.
2) Any other topic without visual need? Yes, possible. BUT…. the main problem is my health-condition.
I have been/am undergoing tests …. preliminary to a heart by-pass operation… any time I may be called by hospital…. due to covid backlog in sugeries, don’t know when. May be next week, …next month , 2 months later …Don’t know.
So with that in background, I am not accepting any such speech commitments because I may not be able to deliver!
Also difficult to focus on a creative effort under this condition…..
Hope you can understand .And excuse me..for now.
Era Murugan:
vaitheswaran
sureshkumar srinivasan
Oh ! It’s shocking. He was a great storehouse of knowledge on various matters of arts and interests including music. That Prof Pas Pasupathi has passed away is a great shock for innumerable fans including me. His blog is very popular and rich with worthy information. Last week he posted in FB like this: “Undergoing treatment for heart attack. So, will be posting oldies. Shall resume new posts after some time. Muruga charanam”.
மறைந்த இசைக் குயில் வாணி ஜெயராம் அவர்களுக்கு அஞ்சலி
(படம் நன்றி: நியூஸ் 7)
நினைவு கூர்பவர் : முனைவர் தென்காசி கணேசன்
பள்ளி மாணவனாக எங்கள் ஊர் தென்காசியில் படித்துக்கொண்டிருந்த போது , எனது சகோதரி ஜெயத்தின் கணவர் திரு ராமன் அவர்கள், HMV Fiesta என்ற சூட்கேஸ் போன்ற ரெகார்ட் பிளேயர் கொண்டு வருவார். அதனுடன், 45 , 78, 33 RPM என்று இசைத் தட்டுக்களும் இருக்கும். 1971 இறுதிகளில், அவர் ஒரு ஹிந்தி இசைத்தட்டு – புதிய படத்தின் பாடல் என்று பாடவிட்டார்.அந்தப் பாடலுக்கு, நான் மற்றும் எனது குடும்பம், மற்றும் எங்கள் தெருவின் பல வீடுகள் அடிமையானது. அந்த இசைத் தட்டின் ஒரு புறம் – போலெரே பபி ஹரா ; மறுபுறம் ஹம்கோ மன் கி என்ற குட்டி என்ற ஹிந்திப் படத்தின் பாடல்கள். இந்தி என்றாலே, லதா மங்கேஷ்கர் என்ற நினப்பில் இருந்த அனைவர்க்கும் ஒரு அதிசயம் – யார் இந்தக் குரலுக்கு சொந்தமானவர் என்று. அன்று வாணி ஜெயராம் குரலில் மயங்கிய நான் இன்னும் விடுபடவே இல்லை.
ஆம், 3 பேர் என்பது பல இடங்களில உண்டு. பிரம்மா, விஷ்ணு, சிவன், கங்கை, யமுனை, சரஸ்வதி, பாரதி, வஉசி, சிவா, தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள், சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி, ஜி இராமநாதன், கே வி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற மூவர் வரிசையில் – சுசிலா, ஜானகி, வாணி ஜெயராம் என்றே ஆகி விட்டது பெருமை.
வாணி ஜெயராம் என்ற பெயர் இசையுடன், திரை உலகுடன், ரசிகர்களுடன் ஒன்றிப்போன ஒன்று. 50 வருடங்களுக்கு மேலாக இசை ரசிகன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல் அது.
நாதம் எனும் கோவிலிலே ஞான விளக்கு ஏற்றியவர். 70 களில் எங்கிருந்தோ வந்த இந்த தேவதையின் குரல் தான் யாரும் செய்யாத, செய்ய முடியாத சாதனைகளைச் செய்தது. – 19 மொழிகளில், 10,000 பாடல்கள் மேல் பாடியவர். ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி கண்டவர்,
எந்த மொழியில் பாடினாலும், இவரின் தாய்மொழி இது தானோ என்ற வியப்பை ரசிகர்களுக்குத் தந்தவர். நடிகர் திலகம் சிவாஜியைப் போல, இவரை one take பாடகி என்பார்கள். பெரும்பான்மையான பாடல்கள் ஒரே டேக்கில் பாடல்கள் பதிவு செய்தவர் வாணி அவர்கள்.
இவ்வளவு சிறப்புகள் கொண்டவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனது பெற்றோர் ஆசி. அவரின் இசை ஞானம், குரல் வளம், இவை தவிர, அவரின் பல பரிமாணங்களைப் பார்க்க முடிந்தது. நிறைய புத்தகங்கள் வாசிப்பவர், கவிஞர், எழுத்தாளர்,ஆன்மீக ஈடுபாடு கொண்டவர், ஓவியர் எனக் கூறிக் கொண்டே போகலாம்.
20 வருடங்களுக்கு முன்பு, ரசிகன் என்ற தொடர் நிகழ்வு, கலைஞர் தொலைக்காட்சியில் வெளிவந்த போது, எனக்குப் பிடித்த பாடகி என்று இவரைப் பற்றி நான் பேசியபோது – நானே நானா யாரோ தானா ஒரு வகை என்றால், நானா பாடுவது நானா என்பது இன்னொரு வகை. மல்லிகை என் மன்னன் மயங்கும் மற்றும் வேண்டும் வேண்டும் உங்கள் உறவு என்ற பாடல்கள் தாம்பத்தியத்தின் அழகை, உறவை, உணர்வை உணர்த்தும் வேளையில், உறவின் பிரிவை, இவரின், கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான், கண்ணின் மணி சீதை தானும் நடந்தாள் என்ற பாடல் கூறும். இப்படி, கவிஞர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் நினைப்பதை , தனது குரலால் வெளிப்படுத்தியவர் திருமதி வாணி என்று கூறினேன், நெறியாளர் திரு அப்துல் ஹமீத் அவர்கள் மற்றும் திருமதி வாணி ஜெயராம் அவர்கள் என்னைப் பாராட்டினார்கள்.
பல்வேறு இசை அமைப்பாளர்களின் இசையில் அவர் பாடிய பாடல்கள் இறவா வரம் பெற்றவை. ஹிந்தியில் வசந்த் தேசாய் என்ற மாபெரும் இசை அமைப்பாளர், மேடையில் வாணி பாடியதைக் கேட்டு தனது படத்தின் அத்தனை பாடல்களும் இவரையே பாட வைத்தார். குட்டி படம் வந்தவுடன் தேசம் முழுவதும் அவரின் பாடல்கள் பேசப்பட்டன. குறிப்பாக, போலுரே பபி ஹரா , (இந்தப் படம் தான் ஜெயா பாதுரியின் முதல் படம்) மற்றும் ஹம்கோ மன் கி சக்தி தேனா என்ற பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவின, ஹம்கோ மன் பாடல் இன்றுவரை வட இந்தியாவில் பல பள்ளிகளில தினசரி பிரார்த்தனை பாடலாக ஒளித்து வருகிறது. (பாடலாசிரியர் குல்சார் – இசை – வசந்த் தேசாய்) இந்தப் பாடல்களைக் கேட்ட வட இந்தியப் பாடகி லதா ஆடிப்போனதுடன், சில எதிர்மறை வேலைகள் செய்தார் என்பதும் அன்றைய செய்தி.
அப்புறம் வாணி அவர்கள் சென்னை வந்து, இசை அமைப்பாளர திரு எஸ் எம் சுப்பையா நாயுடு (தாயும் சேயும் என்ற படம் – வெளிவரவில்லை) மற்றும் சங்கர் கணேஷ் இசையில் (TMS உடன், ஓரிடம் உன்னிடம் என்ற பாடல்) பாடினார். இருந்தாலும், 1974ல் வெளிவந்த இவரின் பாடல் – மெல்லிசை மன்னர் இசையில் வெளி வந்த மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல், படத்தின் மன்னனை மட்டும் அல்ல , மாநிலத்தை, மானுடத்தை மயங்கவைத்தது. கிறங்க வைத்தது. திரை உலகின் தீர்க்க சுமங்களியானது இந்தப் பாடல் என்றால் மிகை ஆகாது.
ஸ்வரங்களை அவர் பாடும் அழகே தனி – அக்கா என்ற திரைப்படத்தில் வரும், மாலை மலர் பந்தலிட்ட மேகம் என்ற பாடலில் மற்றும், புன்னகை மன்னன் படத்தில் வரும் கவிதை கேளுங்கள் போன்ற பாடல்களை அவர் அசாத்தியமாக பாடி இருப்பார். சரிகமபதநி என்ற ஸ்வரங்களால் சாகசம் செய்தவர்.
மொழியின் இலக்கணம் அறிந்து பாடுவதில் சமர்த்தர். ஒரு பாடல் போதும் இதைக் கூற – நிழல் நிஜமாகிறது படத்தில் இடம் பெற்ற, இலக்கணம் மாறுதோ – இலக்கியம் ஆனதோ – இதில் வல்லினம் மெல்லினம் வேறுபாடு, துல்லியம் என்றே சொல்லும் :
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ
என்ற வரிகளில், தமிழின் உச்சரிப்பு தெரியும். அதேபோல, கவிஅரசின் அந்தாதி வரிகள் கொண்ட , வசந்த கால நதிகளிலே, ஆடி வெள்ளி தேடி உன்னை போன்ற பாடல்களும் இவரின் மொழி அழகிற்கு சான்று.
2011 ஆம் வருடம், எனது ரசிகாஸ் அமைப்பின் சார்பில், மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்தி அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தியபோது, முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல், ஒரு மதிய நேரம், என் சகோதரருடன் அவரின் இல்லக் கதவைத் தட்டினேன், கணவருடன் உணவு அருந்தி கொண்டிருந்த திருமதி வாணி அவர்கள், பாதியில் எழுந்து வந்து, கதவை திறந்தார். உங்களுக்கு உணவு தராமல், நாங்கள் சாப்பிடுகிறோம் என்று கூறியவர், அவரே மிக்சியில் பழத்தைப் போட்டு, ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.
சுமார் இரண்டு மணி நேரம், அவரும், கணவர் திரு ஜெயராம் அவர்களும் இசை, பாடல்கள், எம் எஸ் வி, கண்ணதாசன், மற்ற இசையமைப்பாளர்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். தனது அலமாரியில் இருந்த புத்தகங்களின் தொகுப்பு காண்பித்தார்கள்.
நான் குறிப்பிட்ட நிகழ்வு தினம் அன்று, ஹைதராபாதில் ஒரு நிகழ்வில் இருப்பதால், வர முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்ததோடு, நிகழ்வு அன்று, ஒரு கடிதமும் அவர் கைகளால் எழுதி அனுப்பி இருந்தார். இன்றும் அந்தக் கடிதம் என்னிடம் உள்ளது. மெல்லிசை மன்னர்கள் இசையின் காலத்தில் தான் பாடாமல் போனது மிகுந்த வருத்தம் என்று கூறினார்கள்.
தேன் தமிழ் குரலில் இவர் தந்த பாடல்கள் தான் எத்தனை எத்தனை ? திருவாளர்கள் விஸ்வநாதன், கே வி மகாதேவன், டி கே ராமமூர்த்தி, வி குமார், கோவர்தன், விஜயபாஸ்கர், சங்கர்கணேஷ், குன்னக்குடி வைத்தியநாதன், ஜயவிஜயா, இளையராஜா , கங்கை அமரன், எம் எல் ஶ்ரீகாந்த, ரஹ்மான், என அத்தனை பேர் இசையிலும் பாடல்கள் தந்தவர்.
இலங்கையின் இசைக்குயில்
தத்திச் செல்லும் முத்துக்கண்ணன்
வசந்த கால நதிகளில்
ஆடி வெள்ளி
பாரதி கண்ணம்மா
இலக்கணம் மாறுதோ
மேகமே மேகமே
வா வா என் வீணை
மழைக்கால மேகம் ஒன்று
நாள் நல்ல நாள்
மதனோத்சவம் ரதியோடுதான்
யாரது யாரது சொல்லாமல் இங்கே
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
நீராடும் நேரம் நல்ல நேரம்
நானா பாடுவது நானா
நானே நானா யாரோ
என் கல்யாண வைபோகம்
கவிதை கேளுங்கள்
முத்தமிழைப் பாட வந்தேன்
கங்கை யமுனை இங்குதான்
வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
அந்தமானைப் பாருங்கள்
நினைவாலே சிலை செய்து
தங்கத்தில் முகம் எடுத்து
இது தான் முதல் ராத்திரி
மண்ணுலகில் தேவன் இறங்கி
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
கண்ணாடி அம்மா உன் இதயம்
இல்லம் சங்கீதம்
என எத்தனைப் பாடல்கள் ? அத்தனையும் செவிக்கு அமுதம்.
சில கவர்ச்சி மற்றும் – ஹோட்டல் நடனப் பாடல்கள் கேட்கும்போது, வாணி ஜெயராம் கூட இப்படிப் பாடுவாரா என்று எண்ணத் தோன்றும்.
1970களின் இறுதியில், கவியரசு கண்ணதாசன் அவர்கள் குமுதம் வார இதழில் – இந்த வாரம் சந்தித்தேன் என்று ஒரு பகுதி எழுதி வந்தார், அந்த வாரம் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி எழுதிய அவர், ஒரு வாரம் திருமதி வாணி பற்றி எழுதினார். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக் குடும்பப் பெண் என்று எண்ணும்படியான தமிழ் பெண் , மற்றும் தனித்தன்மையான குரல் கொண்டவர் என்றெல்லாம் புகழ்ந்து எழுதி உள்ளார். கண்ணதாசன் மிகவும் விரும்பிய பாடகியாகவும் இருந்தார்.
கவிஞர் வைரமுத்து கூட, அவரது புத்தகத்தில், வாணி அவர்கள் கிளப் டான்ஸ் பாடல்கள் பாடும்போது, குத்து விளக்கில், சிகரெட் பற்ற வைப்பது போல எனக்குத் தோன்றுகிறது. வாணி அவர்கள் இது போன்ற பாடல்களை தவிர்க்கலாம் என்று எழுதி உள்ளார். பல பாடல்களை முறையற்ற வரிகளைக் காட்டி, பாடாமல் சென்றிருக்கிறார் என்று கூறுவார்கள். அதேபோல, அனாவசிய அரட்டை, பேச்சு என்பதே கிடையாது அவர்க்கு என்பதை திருமதி சுசிலா உட்படப் பலர் கூறி இருக்கிறார்கள்.
2021 ஆம் வருடம், கொரோனா பாதிப்பு காலம். வாணி அவர்கள் திரை உலகு வந்து 50 வருட நிறைவு. கோவையில் இருந்து கிளாசிக்கல் என்று வாட்ஸ்அப் குழு நடத்திவரும் , எனது நண்பர், ஆடிட்டர் திரு கிருஷ்ணகுமார் அவர்கள், என்னிடம் இணைய வழி நிகழ்வு ஒன்று நடத்தலாம் என்று கூற, உடனே வாணி அவர்களின் சகோதரி திருமதி உமா அவர்கள் மூலம் திரு கிருஷ்ணகுமார், அதை உறுதி செய்தார். ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவர் சகோதரி இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் பல ரசிகர்கள் கலந்து கொண்டு, கேள்விகள் கேட்க, திருமதி வாணி அவர்கள் பதில் அளித்தார்கள். 4 மணி நேரம் நடந்த இந்த நிகழ்வில் நான் அறிமுக உரை நிகழ்த்த, திரு கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். திரு வாஞ்சி ஹரி அவர்கள் நன்றி கூறினார்கள். மிகவும் சிறப்பாக நடந்த இந்த நிகழ்வை திருமதி வாணி அவர்கள் பெரிதும் பாராட்டினார்கள.
அப்போது நான் அவர்களிடம், நினைவுப் பரிசு தந்து, பொன்னாடையும் அணிவித்தேன். எனது மனைவியுடன் சென்றிருந்த எனக்கு, அவர்கள் தனது கை எழுத்திட்ட அவர்களின் கவிதைப் புத்தகத்தை எனக்குத் தந்தார்கள். என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது. அவர்களின் எளிமை, நேர நிர்வாகம், உண்மைத்தன்மை, விளம்பரம் விரும்பாமை எல்லாம் அப்போது வெளிப்பட்டது
மீண்டும் வாணி அம்மாவை சந்திக்கும் வாய்ப்பு எனது ரசிகாஸ் அமைப்பு மூலம் வந்தது. 2021 ஆம் வருடம், முப்பெரும் விழா – மகாகவியின் நூற்றாண்டு விழா, நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழா, வாணி அவர்களின் திரை உலக 50 வது வருட நிறைவு விழா என, மிக பிரமாண்டமாக, தி நகர் கிருஷ்ணகான சபாவில் நடந்தது. UK முரளியின் இசைக்குழுவுடன், பாராட்டு விழா,
அப்போது கூட, அவரின் எளிமை மற்றும் கண்ணியத்திற்கு ஒரு உதாரணம் – நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து, மல்லிகை, ஏழு சுரங்களுக்குள், இலக்கணம் மாறுதோ என பாடிக் கொண்டே போக, என்னை அருகில் அழைத்த வாணி அவர்கள், என் காதில் ரகசியமாக, சிவாஜி அவர்களின் புதல்வர் ராம்குமார் மற்றும் அவர் மனைவி , அவரின் ரசிகர்கள் அமர்ந்திருக்கும்போது, சிவாஜி படத்தில் நான் பாடிய பாடல்கள் அல்லது சிவாஜி பாடல்களைப் பாட சொல்லுங்கள். மற்ற படங்களின் எனது பாடல்கள் மட்டும் பாடுவது மரியாதை இல்லை என்றார்கள். சபை நாகரிகம் தெரிந்த பெண்மணி.
இந்த நேரத்தில் இன்னொரு தகவல் – நடிகர் திலகம் புதல்வர் தளபதி ராம்குமார் அவர்கள் என்னிடம் சொன்னது – 1974ல் வாணி – விஸ்வநாதன் – கண்ணதாசன் கூட்டணி தான் முதலில் பாடல் ஒலிப்பதிவிற்குத் தயாரானது – சிவாஜி புரொடக்க்ஷன்ஸ் தங்கப்பதக்கம் படத்திற்காக. ஏதோ காரணங்களினால் அது தள்ளிப்போக, தீர்க்க சுமங்கலி படத்திற்காக,மல்லிகை என் மன்னன் பாடல் பதிவாகி பிரபலமானது.
அவரைச் சந்தித்த போதேல்லாம், என்னிடம், பலமுறை, நீங்கள் கண்ணதாசன் பிரியர் – என்னிடம் அவர் கை எழுத்து போட்ட , அவர் தந்த பல புத்தகங்கள் உள்ளன. நீங்கள் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதும், உடனே அவரைத் தொடர்பு கொண்டு, வாழ்த்திப்பேசி, வருகின்ற மார்ச் மாதம், ரசிகாஸ் சார்பில் விழா எடுக்கிறேன் என்று கூறினேன். இரண்டுமே நிறைவேறாமல் போனது எனது துரதிர்ஷ்டம்.
அவருக்கு முறையான வாய்ப்புகள் வராதது, விருதுகள் வழங்குவதில் தாமதம், மற்ற மாநிலங்களில் கொடுக்கப்படும் அரசியல் மற்றும் மொழி சார்ந்த ஆதரவு தமிழ்நாட்டில் இல்லாதது, , மெல்லிசை மன்னரின் இசை மேதமையைப் பற்றி நிறையப் பேசியதால், மற்ற சிலருக்குப் பிடிக்காமல் போனது, பல நேரங்களில் கடினமான சங்கதிகள் கொண்ட high pitch பாடல்கள் பல தனக்கு வந்தது, எனப் பல தகவல்களை என்னிடம் கூறி இருக்கிறார்.
ஆனாலும், இறைவன் மீது நம்பிக்கை வைத்ததுடன், யாரையும் குறை கூறாமல், தேவையற்ற பேச்சு மற்றும் விளம்பரம் விரும்பாத எளிமையான அற்புதமான இசை வடிவமான சிறந்த மனுஷி அவர்.
தெளிவான மொழி உச்சரிப்பு, சங்கதிகளை உள் வாங்கி பாடுதல், தொடமுடியாத சங்கதியையும் பிசிறில்லாமல் பாடும் திறமை என்று வலம் வந்த கலைவாணி அவர்கள், இறைவனடி சேர்ந்தாலும். அவரின் அழியாப் பாடல்கள் இருக்கும் வரை, இசைப் பிரியர்களுக்கு, இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே ஆனந்தம் தானே.!
வாழ்க இசை அரசி வாணி அம்மாவின் புகழ் !
எஸ். கண்ணன்அவர்களுக்குஅஞ்சலி
மியூசிக் கண்ணன் என்று அழைக்கப்படும் எஸ் கண்ணன் அவர்கள் என்னுடன் பாங்க ஆப் பரோடா வங்கியில் பணி புரிந்தவர். தமிழ் இலக்கியத்திலும் இசையிலும் ஆன்மீக சித்தாந்தங்களிலும் ஈடுபாடு கொண்டவர். தமிழ் ஹெரிடேஜ் என்ற நிறுவனத்தின் அறங்காவலர்களில் ஒருவராக இருந்து திறமையுடன் அதனை நடத்திச் சென்றவர்.
மதிப்பிற்குரிய நல்லி குப்புசாமி அவர்களுக்கு வலது கரமாக இருந்து டிசம்பர் மாதம் சங்கீதக் கச்சேரிகளுக்கு அட்டவணை தயார்செய்து சங்கீத ரசிகர்களுக்கு மிகப் பெரிய சேவை செய்தவர்.
குவிகத்தின் பல கூட்டங்களுக்கு வந்து அமைதியாக ரசித்து நிறை குறைகளைச் சொல்லிவிட்டுப் போகும் நல்ல நண்பர்.
அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
==============================================================================
இரா இராசு அவர்களுக்கு அஞ்சலி
திரு ராசு என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது
இப்படிப் பல நல்ல முயற்சிகளையே தன் வாழ்வின் லட்சியங்களாகக் கொண்ட அவர் குவிகம் இல்லத்து நிகழ்வுகலில் முக்கிய பங்கேற்றவர்.
அவரது திடீர் மறைவு ஈடு செய்ய முடியாது.
குவிகத்தின் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
என் நண்பன் நம்பி, அவன் மனைவி நங்கை, அவர்களுடைய குழந்தைகள் யாவரும் இருக்கும் வீட்டின் பெயர் ‘வெண்பா வீடு’;
இது என் வீட்டிற்கு அருகில்தான் உள்ளது. எல்லோரும் அங்கே ‘வெண்பா’க்கள் மூலமாய்த்தான் பேசிக்கொள்வார்கள்.
ஒரு நாள் ‘வெண்பா வீட்’டிற்குள் நுழையும் போது, நான் கேட்டது:
நம்பி:
முன்தூங்கிப் பின்னெழுந்து(உ)ன் மூஞ்சிக்குச் சாயமிட்டுப்
பொன்னான நேரத்தைப் புத்தகத்தில் பாழாக்கி
மிஞ்சிடுமிவ் வேளையிலே வீண்வம்பு பேசாமல்
கொஞ்சம்நீ என்னுடன் கொஞ்சு.
‘அடடா, தப்பான நேரத்தில் வருகிறேனோ?’ என்று எனக்குத் தோன்றியது.
எனக்குப் பதில் சொல்வதுபோல் இருந்தது நங்கை
நம்பிக்குக் கூறின பதில்:
நங்கை:
பண்பற்ற நண்பருடன் பாதிநாள் சீட்டாட்டம்;
கண்கெடுக்கும் தீயதொலைக் காட்சி சிலமணிகள்;
மின்னிணைய மேனகைகள் மீதிநாள் வீணடிக்க
என்னிடமின்(று) ஏன்பல் இளிப்பு ?
என்கையில் இருந்த சீட்டுக் கட்டை அவசரம் அவசரமாக மறைத்துக் கொண்டு, நான் வெண்பா வீட்டை விட்டு வெளியேறினேன்.
~o~0~O~0~o
பிப்ரவரி மாதத்திற்கான குறுக்கெழுத்து லிங்க் இதோ:
https://beta.puthirmayam.com/crossword/FE92D9613B
உங்கள் விடையை 18 தேதிக்குள் அனுப்பவும்.
சரியான விடை எழுதி அனுப்பியவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து Rs 100 வழங்கப்படும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜனவரி மாதம் போட்டியின் சரியான விடை
பங்குபெற்றோர்கள் : 25 பேர்
சரியான விடை எழுதியவர்கள்: 13 பேர்
இவரகளில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர் : ரேவதி ராமச்சந்திரன்
வாழ்த்துகள் !
2 .குறளும் ”குவிஸ்ஸும்”
” ஏம்பா ! மனுசங்கதானே சொற்பொழிவு கேக்க வருவாங்க ..ஆடு மாடுங்கள்ளாம் வருமா ?”
வராது என்பது போல் கூட்டம் தலையாட்டும்.
“அப்ப இங்க வாராதவங்க எல்லாம் யாரு ?”
கூட்டம் கலகலத்துச் சிரிக்கும்.
“ ஏம்பா ..இராமாயணம் மகாபாரதம் அல்லாத்துக்கும் கூட்டம் போவுது ? திருக்குறள் கேக்கணுமுன்னா மட்டும் வரமாட்டேங்குது ? “
கூட்டம் விடை தெரியாது அமைதியாக இருக்கும்.
“ அதெல்லாம் அடுத்தவன் வீட்டுக் கதை….அவுங்க போடற சண்டை… அதக் கேக்க ஓடுவாங்க. ஆனா திருவள்ளுவர்…நம்ம மடியிலேயே கைவைக்கறாரு ! நீ இப்படி இரு ..இப்படி நடன்னு அறிவுரை சொல்லறாரு.. எவன் கேக்க வருவான்.?”
கூட்டம் கலகலத்துச் சிரிக்கும்.
அவர்தான் திருக்குறள் முனுசாமி. நல்ல சிவந்த மேனி. குள்ளமில்லை என்று சொல்லக்கூடிய உயரம். வகிடெடுத்துப் படிய வாரியிருக்கும் நரைத்தமுடி. எதையும் கூர்மயாகப் பார்க்கும் கண்கள் .தங்க ப்ரேம் போட்ட கண்ணாடி. மடிப்புக் கலையாத வெள்ளை சலவை வேட்டி சட்டை. அவ்வளவு எளிதில் சிரிக்கமாட்டார் என்பது போல ஒருமுகம். ஆனால் அவர் பேச ஆரம்பித்தால் அந்த நகைச்சுவை வெள்ளத்தில் கேட்போர் தலைகுப்புற விழுந்து மூழ்கிவிடுவர்.
.இவர் தமிழறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். உலகப் பொதுமறை திருக்குறள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காகப் பணி செய்தவர். திருக்குறள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய இவர், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். 1952-1957 காலப்பகுதியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார். நாடாளுமன்றப் பதிவேடுகளில் தனது பெயருக்கு முன்பு திருக்குறளார் என்பதை இடம்பெறச் செய்தார்.
திருச்சி தூய சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுதே முனுசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார் 1935 ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தனது திருக்குறள் பரப்பும் பணியை ஆரம்பித்தார்.
1985 என்று நினைவு. முதன் முதலில் மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயில் வளாகத்துள் நடந்த “குறள் கருத்தரங்கில்” ஐயா அவர்கள் தலைமையில் நான் பேசியது நினைவுக்கு வருகிறது. அவருக்கு அப்போது வயது எழுபது இருக்கும். அன்று நான் பேசியது “வான் சிறப்பு” அந்த அதிகாரத்தில் கொஞ்சம் கடினமான குறள்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இதை நான் பரிமேலழகர் உரையால் விளக்கிவிட்டு, தாவரயியல் படித்தவன் என்ற முறையில் நீரின் இன்றியமையாத தன்மையை எடுத்துச் சொன்னேன். நீரின் வேதியியல் பண்புகள் பற்றியெல்லாம் விளக்கினேன். கூட்டம் கைதட்டி வரவேற்றது, உடனே நான் இருக்கைக்குச் சென்று அமர முடியாது. திருக்குறளார் தலைமை என்றால், பேசும் பேச்சாளர் பேசி முடித்துவிட்டு அங்கேயே ஒலிபெருக்கி முன் நிற்கவேண்டும். ஐயா அவர்களின் பின்னுரைக்குப் பின்தான் அமரவேண்டும். நான் காத்துக் கொண்டிருந்தேன்.
தொண்டையைச் சற்றே செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார் திருக்குறளார்.
” தம்பி நல்லா பேசினாரு. குறளை தெளிவாகச் சொன்னாரு..பலபேர் இந்தக்குறளின் கடைசி ரெண்டு சீர்களை “தூவும் மழை” என்பார்கள் அதை “துப்பாயதூம் மழை “ என்றுதான் உச்சரிக்கவேண்டும்.
ஆனா அதே அதிகாரத்தில் இருக்கும் வேறு சில குறட்பாக்களைச் சொல்லும் போது முதலடியைச் சொல்லிட்டு அடுத்த அடி சொல்லாமல் விட்டுட்டாரு….. பாவம் வள்ளுவரு…அவுரு எழுதினதே ஏழு சீர் குறள்தான்..அதுலேயும் ஒண்ணு ரெண்ட விட்டுடலாமா?
தண்ணீரோட பெருமையெல்லாம் பேசினாரு..,,சயின்ஸ் படிச்சவரு. தம்பி. ஆனா முக்கியமா இங்க தண்ணி.என்பதைவிட மழைக்குத்தான் வள்ளுவப் பெருந்தகை சிறப்பு கொடுத்திருக்காரு..மழையோட சிறப்பைத்தான் அதிகம் பேசணும். “ என்று தன் கருத்தைச் சொல்லி முடித்தார். கூட்டம் கைதட்டியது. நான் தப்பித்தோம் பிழைத்தோம் என இருக்கைக்குச் சென்று அமர்ந்தேன்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு பேசிய அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஐயாவுடன் பேச நேரம் கிடைத்தது.
“ஐயா ! நீங்கள் சொன்ன கருத்துகள் பயனுள்ளவை. இனி, குறளை மேற்கோள் காட்டிப் பேசும் போது குறளை அரைகுறையாகச் சொல்லாமல் முழுக்குறளையும் சொல்வேன்” என்றேன்.
“நல்லது. நீ எல்லாக் குறளையும் மனனமாகக் கற்றுக் கொண்டுவிட்டால் இந்தப் பிரச்சனையே வராது..”என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னார்.
“ஐயா ஒரு சந்தேகம்.. தவறாக எண்ணவில்லையென்றால் கேட்கிறேன்”
“ அப்படின்னா என்னை ஏதோ கேள்வி கேட்டு மடக்கப்போறே..அப்படித்தானே..சரி சரி கேளு “ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
ஐயா !நீரைப் பற்றித்தானே குறள் முழுதும் பேசுகிறது. கடைசியில் நீர்தானே, தானும் உணவாக மாறுகிறது. நமக்கு உணவாகும் தாவரங்கள் உண்டாகவும் அதைத் தவிர தாகத்துக்கு அதுவே உணவாகவும் மாறுவது நீர்தானே ! ஆனால் நீங்கள் மழையைத்தான் வள்ளுவர் சிறப்பாகச் சொன்னார் என்றீர்கள்..அதை விளக்கவேண்டும்” என்றேன்
“ஏன் தம்பி ! இதக் கேக்க என்ன தயக்கம் ? இப்ப ஒன் சந்தேகம் மழையா ? நீரா ? எதற்குச் சிறப்பு ? என்பதுதானே ? சொல்லறேன் கேளு. பயன்படு பொருள் நீர்தான் சந்தேகமில்ல .ஆனால் சிறப்பு அதை இன்னார் இவரென்று பாராமல் உலகமுழுதும் கொண்டு சேர்ப்பது மழைதானே ! வெவசாயத்துக்கு நீர் பாய்ச்சுவீங்க..அது எங்கிருந்து வருது ? மழை பெய்யலைன்னா நிலத்துல ஏது தண்ணி ?
அத விடு ! காடு மலையில நீ போயி தண்ணி ஊத்தியா மரம் செடிகளை வளக்கற ..அங்க மழையை நம்பித்தானே எல்லா ஜீவராசிகளும் கெடக்கு! இந்த வழியில யோசிச்சுப் பாரு அப்ப எதுக்கு சிறப்புன்னு புரியும் !
பழம் நல்ல சுவையா இருக்குன்னா ..சிறப்பு மரத்துக்குதானே ! எல்லாத்துக்கும் மேல குறள் அதிகாரத் தலைப்பை புரிஞ்சிக்கணும்…அங்கே ”வான்” எனச் சொன்னது வானத்தை அல்ல ; வான் அளிக்கும் ”மழை” ..சரியா?” என்று கேட்டார்.
என் கூட இருந்த மற்ற அனைவருமே இந்த விளக்கத்தை மகிழ்ந்து கேட்டனர். மேடைக்கு வெளியே ஒரு நல்ல கருத்து கிடைத்தது. இதன் பிறகு அவரோடு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அவரது சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம் .அதனை நூலாக ஆக்கச் சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். என்றாலும் அவரது நண்பர்கள் ஒலிவடிவில் இருந்த அவற்றைக் கட்டுரையாக்கி ஆனந்தவிகடனில் தொடராக வெளிவரச் செய்தனர். அவர் அதற்கு மகிழ்ந்தாலும் கூட்ட்த்தில் பேசுவதையே அவர் மிகவும் விரும்புவார்.
ஒருமுறை திருக்கோவிலூரில் கபிலர் விழா சிறப்பு நிகழ்ச்சிகள். கல்வியாளரும் தகுதி மிக்க பெரியவருமான திரு தியாகராஜன் நடத்தும் விழா. சென்னையிலிருந்து நாங்கள் ஒரு சிலர் ஐயாவோடு திருக்கோவிலூருக்குப் பயணம் செய்தோம். வழி நெடுக அவர்கள் தன் அனுபவ்ங்களைப் பகிர்ந்துகொண்டு வந்தார்கள். மலேசியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அவரது இலக்கியப் பயணம் மிகச் சிறந்து அமைந்ததை நாங்கள் அறிவோம். அதுபற்றியும் பேசிக் கொண்டு வந்தார்.
கூடவந்த இன்னொரு பேச்சாள நண்பர் “ ஐயா !ஒங்களோட பல கூட்டங்களுக்கு வரோம். ஒரு பத்து “ஜோக்”கையே திரும்பத் திரும்பச் சொல்லுறீங்க…ஆனால் எல்லா முறையும் ஏதோ புதுசாக் கேக்கறாப்பல ஜனங்க விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க ..இதுமாதிரி நாங்க சொன்னா எங்கள ஓட்டி விட்டுவாங்க..ஒங்களுக்கு மட்டும் இது எப்பிடி சாத்தியம்?” என்று கேட்டார்.
திருக்குறளார் உடனே பதில் சொல்லவில்லை. ஒரு நிமிட இடைவெளிக்குப் பின்னர், கூட அமர்ந்திருப்பவர்களை ஒருமுறை கூர்ந்து பார்த்துவிட்டு நிதானமாகச் சொன்னார்.
“நீங்க எல்லாம் கேக்கறவன் மூளைக்கு ஜோக் சொல்லுறீங்க ..அது ஒருமுறை புரிஞ்சிட்டா அப்பறம் எடுக்காது பழசாயிடும்.. நான் சொல்லறது அவன் மனசுக்கு… அது கிட்ட வந்து “கிச்சு கிச்சு” மூட்டற மாதிரி…. எத்தன தடவ செஞ்சாலும் சிரிப்பு வரும்”
அதனாலதான் ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் கூட்டம் என்றாலும் அவர் ஜோக்குக்கு அனைவரும் சிரிப்பார்கள். ஆண் பெண்ண், சிறுவர் சிறுமியர், இளஞர்கள், படித்தவர் படிக்காதவர் அனைவரும் சிரிப்பார்கள்.
விலங்குகளை உதாரணம் காட்டி பல விஷயங்களைப் புரிய வைப்பார்.
ஒரு காளைமாடு தெருவில் நடந்து செல்கிறது. ஒரு கடையில் வாழைப்பழங்கள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. அதைப் பார்த்ததும் அது நேரே போய் பழங்களை உண்ணத் தொடங்கிவிடும். “பர்மிஷனா” கேக்கும் ! கடைக்காரன் விரட்டினால் நகர்ந்துவிடும். பிறகு திரும்பவும் அதையே செய்யும். தான் செய்தது தவறு என்னும் அறிவு அதற்குக் கிடையாது. ஒரு மனிதன் அப்படிச் செய்வானா ? பசியில் திருடினாலும் பிறகு அது தவறு தண்டனை கிடைக்கும் என்று உணர்ந்து திருந்திவிடுவான். ஆக ! தவறு செய்தால் திருத்திக் கொள்ளத் தெரிந்தவன் மனிதன்…ஏ மனிதா ! இதைப் புரிந்துகொள் இல்லாவிட்டால் நீ யார் எனக் கேட்டு நிறுத்திவிடுவார்.
“ ஐயா ! ஏன் விலங்கு உதாரணமே நெறைய சொல்லுறீங்கன்னு கேட்டோம். அவர் சொன்னார். எல்லா மனுஷனுக்குள்ளேயும் அதுதான் நெறைய இருக்கு ..ஈஸியாப் புரிஞ்சிப்பான்” என்றார்.
ஒருமுறை சென்னை சூளைமேடு பகுதியில் ஒரு பள்ளியில் திருவள்ளுவர் விழா . நான் ” திருக்குறள் வினாடி வினா “ நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருந்தேன். அதிலே ஒரு கேள்வி கேட்டேன்
“திருக்குறளுக்கும் நமது கர்நாடக இசைக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன ?”
ஒரு சிறுமி சரியாக பதில் சொன்னாள். “ம்யூஸிக்” கற்றுக் கொள்கிறாள் போலும்;
“ குறளில் ஏழு சீர்கள்; இசையில் ஏழு ஸ்வரங்கள்”
என் பின்னால் இருந்து “பலே” என்று யாரோ கைதட்டுவது கேட்டேன். அடுத்த சொற்பொழிவுக்குக் கொஞ்சம் முன்னதாகவே வந்திருந்த திருக்குறளார் அங்கே நின்றிருந்தார்.
“தம்பி ! நான் அம்பது வருஷத்துக்கு மேல திருக்குறளைப் பரப்ப ஒழச்சிண்டு இருக்கேன். இனி ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். ஒரு பதினைந்து நிமிடமா இந்தக் கேள்வி பதிலைக் கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தேன். வெவ்வேறு துறைகளோடு குறளை இணைத்து நீங்க கேக்கற கேள்வியும் அதுக்கு சலிக்காம பிள்ளைகள் பதில் சொல்லறதையும் கேட்டா , நாங்க பட்ட கஷ்டம் வீணாப் போகலைன்னு தெரியுது “ என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.
இதைவிடச் சிறந்த பாராட்டு வேறெதுவாக இருக்கமுடியும் ?
(இன்னும் வளரும் )
திருக்குறளார் அவர்களின் குரலைக் கேட்க இந்த சுட்டியைத் தட்டவும்.
https://soundcloud.com/kallappa-naidu-selvan/sets/thirukural-munusamy
“
நற்றிணை
சங்க இலக்கிய நூல்களான எட்டுத் தொகை நூல்கள் இவைதாம் என்று குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலில் குறிக்கப்படுவது நற்றிணை என்பதாகும். நல்+திணை=நற்றிணை; தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே இருந்த நல் ஒழுக்கத்தைக் கூறும் நூல் இதுவாகும்.
இந்நூல் பல புலவர்களால் பல்வேறு காலங்களில் தனித்தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டதாகும்.
தொகுத்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்று கூறப்படுகிறது.
இந்நூலில் 56 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் அறிய முடியவில்லை. பாடல்களின் தொடராலேயே வண்ணப்புறப் கந்தரத்தனார், பெருங்கண்ணனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், தும்பிசேர் கீரனார் , மடல் பாடிய மாதங்கீரனார், மலையனார், தனிமகனார் என்று புலவர்களுக்குப் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நூல்களில் பாடல்கள் ஒவ்வொன்றும் 7 அடிகள் முதல் 13 அடிகள் கொண்டவையாக உள்ளன. 234-ஆம் பாடல் கிடைக்கவில்லை.
மொத்தம் 400 பாடல்களைக் கொண்டதால் நற்றிணை நானூறு என்றும் இதற்கு ஒரு பெயர் வழங்கப்படுகிறது.
இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலில் திருமால் குறிப்பிடப்படுகிறார். அப்பாடலை எழுதியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் 1914-ஆம் ஆண்டில் இதற்கு உரை எழுதிப் பதிப்பித்துள்ளார். பின்னர் ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கமான உரை ஒன்றும் எழுதி பதிப்பித்துள்ளார்.
குறிஞ்சித்திணையில் 130 பாடல்களும், முல்லைத் திணையில் 30 பாடல்களும், மருதத்திணையில் 32 பாடல்களும், நெய்தல் திணையில் 102 பாடல்களும், பாலைத்திணையில் 105 பாடல்களும் இந்நூலில் காணபப்டுகின்றன.
தலைவன் வரவைக் குறிக்க தலைவி சுவரில் கோடிட்டு எண்னும் வழக்கமும், மகளிர் கால்பந்து விளையாடும் வழக்கமும், காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதும் வழக்கமும் இருந்ததைச் சில பாடல்கள் காட்டுகின்றன
நற்றிணையில் மருத்துவம் பற்றியும் காட்டப்பட்டுள்ளது. நம் உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் வீக்கம் கண்டிருந்தாலோ அல்லது உடலின் மூட்டுகளில் வலி இருந்தாலோ அந்த இடங்களில் பத்துப் போடும் வழக்கம் உண்டு. எடை மிகுந்த பொருள்களைத் தூக்குவதால் முதுகில் வலி உண்டாகும். அப்படி இப்படித் திருப்பும்போது கழுத்தும் வலிக்கும். அதற்கும் பத்துப் போடுவர். அரக்கு, மெழுகு, தானியங்களின் மாவு இவற்றால் பத்துப் போட்டுக் காயவைப்பர். பின் அவை தானாகவே செதில்செதிலாக உதிர்ந்து வலியும் குணமாகிவிடும்.
இந்த மருத்துவ முறையை “அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன” என்று நற்றிணையில் பேரி சாத்தனார் எழுதியுள்ள 25-ஆம் பாடல் காட்டுகிறது. ‘அழகிய வளைந்த முதுகினை அரக்கு ஈர்த்துப் பிடிப்பது போல” என்று இப்பாடலில் ஓர் உவமை காட்டப்படுகிறது.
உடலில் போடப்படும் அரக்குப் பத்து காயக் காய செதில் செதிலாக அடுக்குகளாகக் காணப்படும். அப்படிப்பட்ட ஒழுங்கான வரி அடுக்குகளைக் கொண்ட பிடவம் பூ பூத்திருக்கிறது. அதன் மணம் தொலைதூரம் வீசும். அத்தகைய பிடவ மரங்கள் மிகுதியாக உள்ள மலைநாட்டின் தலைவன் என்று தலைவனைக் காட்டுகிறது இப்பாடல்.
இப்பாடல் அடிகளில் மற்றும் ஓர் உவமையையும் காணலாம். அந்தப் பிடவம் பூவின் மகரந்தத் தூள்கள் அப்பூவிற்கு வந்து தேன் உண்ணும் வண்டின் உடலில் ஒட்டிக்கொள்ளும். அந்த வண்டானது பொன் உரைத்துப்பார்க்கும் கட்டளைக்கல் போலத் தோன்றுமாம்.
நற்றிணையின் பாடல்:
“அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்
வள மலை நாடன்…………………………”
நற்றிணையில் ஒரு காட்சி: பிரிந்திருந்த தலைவன் வரப்போகிறான். அவன் வரவு கண்டு, தோழி தலைவிக்குச் சொல்ல இருவரும் மகிழ்கின்றனர். வெளிச்சம் இருக்கும் உப்பங்கழி. கொம்பு உள்ள சுறாமீன் மேயும் உப்பங்கழி. நீலமணி நிறத்தில் நெய்தல் பூக்கள் நிறைய பூத்திருக்கின்றன. அதில் புன்னைமரம் தன் பொன்னிறம் கொண்ட பூக்களைத் தூவுகிறது. அது கானல் நிலம். அங்கே விழுது தொங்கும் தாழம்பூவின் மணம் கமழ்கிறது. இப்படிப் பூக்கள் எல்லாம் கூட நம் தலைவனை வரவேற்கக் காத்துள்ளன எனறு மறைமுகமாகத் தோழி கூறுகிறாள்.
”மாலை நேரம் வந்துவிட்டது. வெளிச்சம் மங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தனிமையில் இருக்கிறோமே என்னும் நினைவலைத் துன்பம் வருவது இயல்பே. இந்தத் துன்பத்திலிருந்து இப்போது தப்பிவிட்டோம். தோழி! உள்ளுக்குள்ளே காது கொடுத்துக் கேள். தலைவன் வரும் தேரின் மணியோசை கேட்கிறது. தலைவன் மனநிலை குதிரைக்குப் புரிகிறது. எனவே அது கோல் ஓச்சல் இல்லாமல் மகிழ்வோடு குதிரை அந்தத் தேரை இழுத்துக்கொண்டு வருகிறது. பறவை போல் பறந்து இழுத்துக்கொண்டு வருகிறது. உப்பங்கழியில் அதன் சக்கரம் இறங்கிவிட்டாலும் கவலைப்படாமல் இழுத்துக்கொண்டு வருகிறது. அவன் வரவால் நம் துன்பம் நீங்கி நமக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.
”கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;
கேட்டிசின் வாழி, தோழி! தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா,
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!
இது நற்றிணையின் 78-ஆம் பாடலாகும். இப்பாடலைப் பாடியவர் கீரங்கீரனார் ஆவார்
நற்றிணையின் 269 -ஆம் பாடல் ஒரு அழகான காட்சியைக் காட்டுகிறது. தலைவியின் அழகு இப்பாடலில் தெரிகிறது. அவளின் மகன் அணிந்துள்ள அணிகலனும் காட்டப்படுகிறது.”தென்னம்பூக் குரும்பை போன்ற மணிப்பூண் கிண்கிணியை அணிந்துகொண்டு பாலுண்ணும் செவ்வாயை உடைய என்மகன் தன் மார்பில் ஏறி விளையாடும்படி, மாலைகள் கட்டியுள்ள கட்டிலில் என் காதலி படுத்திருக்கிறாள்.
அவள் வயிற்றில் அழகு ஒழுகுகிறது. அவளது வாய்ச்சிரிப்பில் மாட்சிமை தோன்றுகிறது.
அது அவளது குற்றமற்ற கோட்பாட்டின் வெளிப்பாடு. அவள் நம் உயிரைக் காட்டிலும் விரும்பத்தக்கமேம்பாடு உடையவள். அவளது திருமுகத்தில் கண்கள் நாள்தோறும் சுழன்றுகொண்டிருக்கின்றன.”என்றெல்லாம் அவன் நினைக்கிறான்
அப்போது தோழி தலைவனிடம்கூறுகிறாள். ”பெருமானே! கொடிபோல் படர்ந்து அவள் உன்னைப் பற்றிக்கொண்டிருக்கிறாளே என்று எண்ணாமல், பல குன்றங்களைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வாயாயின், அச் செயலின் நிலைமையையும், அவர் நினைக்கும் பொருளின் முடிவையும் இன்று அறிபவர் யார்? எதுவும் நேரலாம் அல்லவா? தோழி தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள். தன் தலைவி மகனுடன் மகிழ்ச்சியாக இருப்பதையும், அவன் பிரிந்து சென்றால் அவள் துன்பப்படுவாள் என்பதையும் தோழி தலைவனுக்குத் தெரிவிக்கும் பாடல் இது. அவனைக் கொம்பாகவும் அவளைக் கொடியாகவும் உவமித்துக் கூறும் தோழியின் சொல்லாட்சி இன்புறத்தக்கது.
”குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்,
மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய,
அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி 5
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும்,
பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார்,
சிறு பல் குன்றம் இறப்போர்;
அறிவார் யார், அவர் முன்னியவ்வே?
இப்பாடலைப் பாடியவர் எயினந்தை மகன் இளங்கீரனார் என்பவராவார்.
யாம் மற்றும் எம் போன்ற சொற்கள் தன் பெருமையை உயர்த்திக் கூறும் சொற்கள் ஆகும். தலைவன் தன் ஊரை “எம் ஊர்”என்று பெருமிதம் தோன்றக் கூறுவதும் தோழி தலைவியின் காதலனை“நம் காதலர்” என்று தலைவிக்கும் தோழிக்கும் இடையேயுள்ள நட்புரிமை தோன்றக் கூறுவதும் பண்டைய மரபு. அத் தலைவன் தன் சொந்த ஊருக்கு அவளை அழைத்துச் செல்கிறான். அப்பொழுது அழகான இயற்கைக் காட்சிகளைக் காட்டுகிறான் இந்த 264-ஆம் பாடலில். தலைவன் கூறுகிறான்
“மடந்தைப் பெண்ணே! பொழுது இருட்டுவதைப் பார். பாம்பு வளைக்குள் நுழையும்படி
வானம் மழை பொழியும் காலம் தோன்றும்போது, மணிநிறப் பிடரியைக் கொண்ட ஆண்மயில் தன் அழகு ஒளிறும் தோகையை விரித்துக்கொண்டு ஆடுவது போல, பூச் சூடிய உன் மென்மையான கூந்தல் காற்றில் அசைந்தாடச் செல்வாயாக. மூங்கில் காட்டில் மேய்ந்த பசுக்களைக் கோவலர் ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் மணியொலி இங்குக் கேட்கிறதே அதுதான் என்னுடைய நல்ல சிற்றூர்.” காதலியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் காதலன் காதலிக்கு அவர்கள் ஊருக்கு அருகில் வந்துவிட்டதைத் தெரிவித்துத் தெம்பூட்டுகிறான்.
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர
ஏகுதி மடந்தை! எல்லின்று பொழுதே:
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே
உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது;
உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம்.
இது ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் பாடல் ஆகும்.
இப்படி நற்றிணைப் பாடல்கள் வாழ்வின் சில தருணங்களையும் உவமைகளையும் தலைவன் தலைவி தோழி ஆகியோரின் ஒழுக்கங்களையும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
==========================================================================
சில குறிப்புகள்:
நற்றிணையின் ஆங்கில மொழிபெயர்ப்பு :
THE NARRINAI FOUR HUNDRED
Translated by Dr. A. Dakshinamurthy
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
International Institute of Tamil Studies
C.P.T. Campus, Tharamani, Chennai – 600 113 2001, 830 pages
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0890_02.html
ராஜேந்திரன்-ஸ்ரீவிஜயம்
ராஜேந்திரன் ‘கடலென்னும் காந்தம் அழைக்கிறது’ என்று சொன்னவுடன் மலைத்துப்போகாமல், உவகை கொண்டவர்கள் அந்த மூன்று இளவரசர்களும், படைத்தலைவர்களும் மட்டுமே.
மன்னன் தனது திட்டத்தை விளக்கத்தொடங்கினான்.
“இன்று நம்மிடம் 1000 கப்பல்கள் இருக்கின்றன. மேலும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு 500 கப்பல்கள் அடுத்த மாதத்தில் கட்டப்பட்டு விடும். ஸ்ரீவிஜயம் சென்று அங்கு போரிட பல்லாயிரக்கணக்கான போர்வீரர்கள் வேண்டும். அவர்கள் மாலுமிகளாகவும் இருக்கவேண்டும். நமது காலாட் படையிலிருக்கும் போர்வீரர்களிலிருந்து, ஒரு லட்சம் பேர் இந்த கடல்படையெடுப்புக்குத் தேவைப்படும். இந்த படை பெரிதாக இருந்தால் மட்டும் போதாது. போர்த்திட்டம் எதிரிகளுக்கு எதிர்பாராத விதமான அதிர்ச்சியைத் தரவேண்டும். அவர்கள் நினைக்காத இடத்தில், நினைக்காத பொழுது நாம் தாக்க வேண்டும்.
முதலில், வணிகர்கள் வேடத்தில் சோழ வீரர்கள் அங்குச் சென்று, ஆள் அரவமற்ற தீவுகளில் படை வீடு அமைத்து தங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் அங்கிருந்து கொண்டு, ஸ்ரீவிஜய நிலையை நமக்கு அனுப்பிவைப்பர். நமது படையெடுப்பைப் பற்றி அவர்கள் வேண்டுமென்றே மாறுபட்ட செய்திகளை ஸ்ரீவிஜய நாட்டுக்கு சொல்வர்“ என்று சற்று நிறுத்தினான் ராஜேந்திரன்.
யுவராஜன் ராஜாதிராஜன் இருக்கையை விட்டு எழுந்தான்.
“தந்தையே! இதை நான் நடத்திச் செல்ல அனுமதி தரவேண்டும்” என்று விண்ணப்பித்துக்கொண்டான்.
ராஜேந்திரன், “ராஜாதிராஜா! உனது வீரம் அளப்பரியது. நீ, நம் முன்னோர்கள் இராஜாதித்தர், ஆதித்த கரிகாலர் போன்ற மாவீரன். நாம் இந்த பத்து ஆண்டுகளில் நான்கு திசையிலும் வென்று வாகை சூடியதற்கு, உன் வீரம் தான் பெரும் காரணம். எனினும், நீ இன்று சோழநாட்டின் யுவராஜன். அது மட்டுமல்ல, என்னோடு சேர்ந்து, இந்தப் பரந்த நாட்டை ஆளவும் செய்கிறாய். இங்கிருக்கும் பாதிப்படையை வைத்துக்கொண்டு நமது பரந்த எல்லைகளை நீதான் பாதுகாக்க வேண்டும். நமது கடல் படையெடுப்பைக் கேட்டவுடன், நமது பகைவர்கள் – பாண்டியர்கள், ஈழத்தவர்கள், சாளுக்கியர்கள் அனைவரும் துணிவு கொண்டு போர் விரும்பி வரக்கூடும். அப்படி நேருங்கால், நீதான் இங்கு இருந்து சோழநாட்டைக் காக்க வேண்டும்.” என்றவன், தொடர்ந்தான்.
“மீண்டும் போர்த்திட்டத்துக்கு வருவோம். அனைவரும் இதைக்கவனியுங்கள்” என்ற ராஜேந்திரன் அந்த மந்திராலோசனை அறையின் சுவற்றில் தொங்கிய திரைச்சீலையை விலக்கச் சொன்னான். காவலர்கள் அதை விலக்க அங்கு ஸ்ரீவிஜய நாட்டு கடல் வழி குறிக்கப்பட்ட வரைபடம் ஒரு இருந்தது.
மன்னன், ”இந்த வரைபடத்தில் காணப்படுவது, ஒரு பசு மாட்டின் இரண்டு காம்புகள் போல இருப்பது. இதில் வலது பக்கம், அதாவது கிழக்கே இருப்பது மலாய் தீபகர்ப்பம். இடது பக்கம், அதாவது, மேற்கே இருப்பது சுவர்ணத்தீவு. பொதுவாக, சோழ வணிகக்கப்பல்கள், ஸ்ரீவிஜய நாட்டுக்குச் செல்லும்போது, சுவர்ணபூமித் தீவுக்கும், ஸ்ரீவிஜய (மலாய) தீபகற்பத்துக்கும் இடையே உள்ள நீரிணை (மலாக்கா) வழியாகச் சென்று சுவர்ணபூமியின் துறைமுகமான லயமூரி அல்லது ஸ்ரீவிஜயத்தின் துறைமுகமான கெடாய் இரண்டில் தான் செல்வது வழக்கம்.
நமது படையெடுப்பை அறிந்தவுடன், சங்கிராமன் மலாய் நாட்டில் தன் படைகளைக் குவித்துவைத்து நம்மைத் தாக்கக் காத்திருப்பான்.
அதே திட்டப்படி நமது கப்பல்கள் அதே பாதையில் போகும்” என்று சொல்லி சற்று நிறுத்தினான்.
ஒரு படைத்தலைவன் எழுந்து, “அப்படியானால், நாம் அவனது வலையில் நேரடியாக அல்லவா விழுவோம்?” என்று சந்தேகம் கேட்டான்.
ராஜேந்திரன் பதில் சொன்னான்.
“திட்டம் முழுவதையும் கேளுங்கள். சுவர்ணபூமியின் வட மேற்குப் பகுதியில் இருப்பது பான்சூர் (இன்றைய பாருஸ்) துறைமுகம். அங்கு நம் சோழ நாட்டு வணிகர்கள் ஏராளம் உள்ளனர். அங்கிருந்து தான் கற்பூரம் அகில உலகுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கற்பூரக்காட்டில், நரமாமிசம் தின்னும் காட்டு மிராண்டி மக்கள் வசித்து வருகிறார்கள். நமது வணிகர் அங்கு ஜாக்கிரதையாகவே வாழ்கின்றனர். சோழப்படைகளும் அங்கு வணிகரைப்போல அங்கு வாழ்ந்து நிஜ வணிகர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து வருகின்றனர். அங்கு, மேலும் நமது படைவீரர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் அனுப்பப்படுவர். அது தான் நமது அடித் தளம். நமது கடற்படை முதலில் அங்கு போய் முகாமிடும். அங்கு நமக்குத் தேவையான உணவு, நீர் மற்றும் அத்தியாவசியமான பொருட்களை கப்பலில் ஏற்றிக்கொண்டு படையெடுக்கத் தயாராவோம்.
நமது 500 கப்பல்கள் மட்டும் முதலில் திட்டமிட்டபடி கெடாவை நோக்கிச் செல்லும். எஞ்சியிருக்கும் நமது பெரும்பான்மையான படை – அதாவது ஆயிரம் கப்பல்கள் சுவர்ணத்தீவிலிருந்து பிரிந்து (மலாக்கா) நீரிணையில் பிரிந்து தென்புறம் சென்று, ஸ்ரீவிஜய தீபகற்பத்தின் தெற்குமுனையைச் சுற்றி (இன்றைய சிங்கப்பூர் ஜலசந்தி) வந்து, பின் வடக்கு திரும்பிச் செல்லும். ஸ்ரீவிஜய நாட்டின் தலைநகரான பாலெம்பாங்க் துறைமுகத்தைத் தாக்கி, அங்கு இறங்கி, அங்கிருந்து நிலவழியாக ஸ்ரீவிஜய நாட்டைத் தாக்குவோம். இந்த ஆயிரம் கப்பல்கள் சுவர்ணத்தீவிலிருந்து பிரிந்து பாலெம்பாங்க் போக ஒருநாள் பிடிக்கும்.
கெடாவில் தான் நம்மை ஸ்ரீவிஜய மன்னன் எதிர்கொள்ள இருப்பான். நமது 500 கப்பல்கள் மெல்ல மெல்லச் சென்று கெடாவை நெருங்கும். அதைக்கண்ட ஸ்ரீவிஜய கடற்படை நம்மை நோக்கி வரத் தொடங்கும். மெல்ல நெருங்கிய நமது படை, மெல்லப் பின்வாங்கத் தொடங்கும். அந்நேரம் நமது ஆயிரம் கப்பல்கள் தீபகற்பத்தின் கிழக்குப் பகுதி போய்ச் சேர்ந்திருக்கும். அந்த சேதி கிடைத்தவுடன், ஸ்ரீவிஜயப்படை நம்மைத் தொடர்வதை விட்டு, மீண்டும் கிழக்குப்போக எத்தனிக்கும். அந்நேரம் நமது 500 கப்பல்களும், நம்மைத் தாக்க வந்த ஸ்ரீவிஜயக் கப்பல்கள் மீது பாய்ந்து எரியம்புகளால் தாக்கி, வாணவேடிக்கை செய்யும். மேலும் கற்பூரம் ஏற்றிய படகுகள் விரைவாகச் சென்று கெடாவை நெருங்கி, அந்தத் துறைமுகத்தைத் தாக்கும். தாக்கும் நேரத்தில், அந்தப்படகுகள் தீயைக்கக்கும். துறைமுகம் கற்பூரப்படகினால் எரிந்துபோகும். அந்த கற்பூர ஆரத்தி ஜோதியில் வீரலக்குமிக்கு பூஜை நடக்கும்.
இந்த இரண்டு பக்கத் தாக்குதலில், ஸ்ரீவிஜயம் துண்டாகும்” என்றான்.
“ஆஹா! அற்புதம்”, என்று அனைவரும் எழுந்து நின்று கரம் கொட்டினர்.
ராஜேந்திரன் மேலும் சொன்னான்:
“அடுத்தமாதம் நமது படையெடுப்பு நிகழும் மாதம். அப்பொழுது தென்மேற்குப் பருவக்காற்று துவங்கும் மாதம், அது நமது கடற்பயணத்துக்கு அனுகூலகமாக இருக்கும்” என்றான்.
‘என்னே ஒரு அற்புதத் திட்டம்’ என்று அனைவரும் வியந்தனர்.
மன்னனின் போர்க்கூட்டம் முடிந்தது.
மன்னனின் திட்டப்படியே, அடுத்த மாதம், மிகத் துல்லியமாக அந்தப் படையெடுப்பு நடந்தது.
இந்நாள் மலேசியாவின் வடபகுதியான கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்குதான், தமிழ் வரலாற்றில் கூறப்படும் கடாரம் . இந்தக் கெடா சிகரம் (கடாரம்) கடலில் 100 மைல் தூரத்துக்கு அப்பால் இருந்து பார்க்கக் கூடியது.
இந்தப் போர் கடற்போராக மட்டுமல்லாமல் நிலத்திலும் நடைபெற்றது. ஒருபுறம் கடாரமார்க்கமாகவும், இன்னொருபுறம் நிலமார்க்கமாகவும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஸ்ரீவிஜயத்தலைநகரான பாலேம்பாங்க் நுழைவாசலில் வித்தியாதர தோரணம் என்ற புகழ்பெற்ற ‘போர் வாயில்’ இருந்தது. அது வந்தவர்களை வரவேற்கக் கட்டப்பட்டிருந்தது. பொன்னால் கட்டப்பட்டு, விலையுயர்ந்த மணிகளாலும் அழகுபடுத்தப்பட்டிருந்தது.
சோழவீரர்கள் அதை உடைத்தனர். கெடாவின் அரண்மனை சூறையாடப்பட்டது. மன்னன் சங்கராம விஜயத்துங்கவர்மன் சிறைப்படுத்தப்பட்டான்.
சோழப்படை அத்துடன் நிற்கவில்லை. அனைத்துத் துறைமுக நகர்களையும் வென்றது. அனைத்தும் மின்னல்வேகத்தில் நடந்தது. போரில் சங்கிராம விஜயோத்துங்க வர்மனின் படையில் இருந்த யானைகளையும், அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். பிறகு சோழப்படை, சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊரை வென்றது. அடுத்து சோழப்படை மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் என்ற பகுதியை கைப்பற்றியது. மாயிருடிங்கம், மாபப்பாளம், தலைத்தக்கோலம் (தாய்லாந்து), மானக்கவாரம்(நிக்கோபார் தீவு), இலாமுரி தேசம் அனைத்தையும் சோழப்படை வெற்றி கொண்டது.
சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பரம்பரை மன்னர்களே அங்கு தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டனர். அங்கு சோழக் குடியிருப்புகளையோ, படைகளையோ நிறுத்தவில்லை. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான் திறையாக, முறையாக, இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் ஆட்சி திரும்பக் கொடுக்கப் பட்டது.
இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.
“அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினான்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் “போர் வாயில்” அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான்.”
சோழப்புலி ஒன்று, கடல் தாண்டி, பிரம்மாண்ட வெற்றியை நிகழ்த்தியது. ராஜேந்திரன் உலகச் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றான். அதை எழுதியதால் நானும், அதைப்படிப்பதால் நீங்களும் அடையும் பெருமை அளவிடத்தக்கதா?
பெட்ரோகுலஸ் தன்னை அக்கிலிஸ் போர் உடையை அணிந்துகொண்டு டிரோஜன்களை எதிர்த்துப் போரிடும்படி அவனுடைய ஆசான் போன்ற பெரியவர் நெஸ்டர் கூறியதைக் கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு திகைத்தான்.
பிறகு, “ஐயா! கிரேக்கர்களுக்கு ஆதரவாகப் போரிட அக்கிலிஸும் நானும் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால் தன்னை மதியாத அகெம்னனுக்கு ஆதரவாகத் தன் ஆயுதத்தை எடுக்கவேண்டுமா ‘ என்றுதான் என் நண்பனும் கடவுளை ஒத்தவருமான அக்கிலிஸ் யோசிக்கிறார். இருப்பினும் உங்கள் கருத்தை அவரிடம் கூறி அவரை டிரோஜன்களுக்கு எதிராகப் போராடும்படி நான் வலியுறுத்துவேன் என்று கூறிப் புறப்பட்டான் பெட்ரோகுலஸ்!
செல்லும் வழியில் ஹெக்டரின் தாக்குதலால் படுகாயமுற்ற தன் கிரேக்க நண்பர்களைத் தூக்கிப்போய் பத்திரமான இடத்தில் விட்டுவிட்டு அக்கிலிஸிடம் நிலவரத்தைக் கூற விரைந்தான் பெட்ரோகுலஸ்.
அதேசமயம் கிரேக்கர்களுக்கும் டிரோஜன்களுக்கும் இடையே பெரும் போராக இல்லாமல் பலமுனைத் தாக்குதலாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஹெக்டரின் ஆவேசத் தாக்குதலால் பல இடங்களில் கிரேக்கர்களைப் பின்வாங்க வைத்ததால் ஜீயஸ் தங்களுக்கு உதவியாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட டிரோஜன்கள் மூர்க்கமாகப் போரிட்டனர்.
கிரேக்கர் படையில் உள்ள முக்கிய தளபதிகள் பலர் தோல்வியைத் தழுவியதால் அதிலும் குறிப்பாகப் பிரதம சேனாதிபதி அகெம்னன் காயப்பட்டதால் அவர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அரணுக்குப் பின்னால் உள்ள கப்பல்களுக்குச் சென்று பதுங்கினர்.அந்த அரணைத் தாண்டி டிரோஜன் படை வந்தால் அவர்களை எதிர்கொண்டு விரட்டி அடிக்க மற்ற தளபதிகள் தயார் நிலையில் இருந்தார்கள்.
அவர்கள் அமைத்திருந்த அரண் மிகவும் பலமுள்ளதாக இருந்தது. கடற்கரையை ஒட்டிய சமவெளிப் பகுதியில் பலமான மரத் தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. அதை ஒட்டிய இடங்களில் நீண்ட பள்ளங்கள் தோண்டப்பட்டு அகழி போல இருந்தது. கிரேக்கப் படை பின்வாங்கவேண்டி வந்தால் அது வருவதற்கான குறுகிய பாதையும் எதிரிகள் தொடர்ந்து வருவதைத் தடுக்க மாபெரும் மரக் கதவும் அமைக்கப்பட்டிருந்தது. அரணுக்குள் வரும் எதிரிகளைத் தாக்க தடுப்பு வீரர் படையும் ஆயுதங்களும் தயார் நிலையில் இருந்தன.
வெற்றியின் இனிப்பைச் சுவைத்த ஹெக்டர் அந்த அரணை உடைத்து கப்பலில் பதுங்கியிருக்கும் கிரேக்கர்களைக் கொன்று குவித்துவிடவேண்டும் என்ற வெறியில் இருந்தான். நாடுவிட்டு தங்கள் நாட்டு எல்லைவரை வந்து பத்து ஆண்டுகளாகப் போரிடும் கிரேக்கக் கூட்டத்தை முழுதும் நிர்மூலமாகவேண்டும் என்ற தணியா ஆசையில் எரியும் நெருப்பு போல விளங்கினான் ஹெக்டர். நிதானமாகப் போரிடும்படி வேண்டுகோள் விடுத்த மற்ற உப தளபதிகளின் கோரிக்கைகளையும் நிராகரித்தான். தேர்ப்படை அகழியைத் தாண்டி அரணை உடைக்க சுற்றிலும் செல்லட்டும் என்ற அவனது உத்தரவைக் கேட்டு டிராய் நாட்டு தளபதிகள் திகைத்தனர்.தேர்ப்படை அகழியில் மாட்டி முழுவதும் அழிந்துபோய்விடும் என்ற உண்மையை ஹெக்டருக்கு எப்படிச் சொல்வது என்று தயங்கினர்.
விளைவு பயங்கரமாக இருந்தது.
அகழியைச் சுற்றிலும் சென்ற தேர்ப்படை சின்னாபின்னமாகி டிரோஜன்களுக்கு பலத்த சேதத்தை விளைவித்தது. இனி தாமதித்தால் முழுதும் அழிந்துவிடுவோம் என்பதை உணர்ந்த முக்கிய தளபதி தைரியமாக ஹெக்டரிடம் ‘இது விவேகமான போர்த் தந்திரம் அல்ல; அகழி முழுவதும் தாக்குவதற்குப் பதிலாக கிரேக்கர் பின்வாங்கிச் செல்லும் அந்த இடைவெளிப் பகுதியில் நம் படை புகவேண்டும். கிரேக்கர்கள் கப்பலில் பதுங்கியிருப்பதால் நாம் அரணுக்குள் எதிர்ப்பில்லாமல் உள்ளே சென்று கப்பல்வரை செல்லமுடியும்’ என்று கூறினான்.
ஹெக்டரும் அதுவே சிறந்த போர்த் தந்திரம் என்று தன் திட்டத்தை மாற்றி தன் பிரதம உபதளபதியின் தலைமையில் மிகப் பெரிய தேர்ப்படையை அந்தத் திறவுப் பகுதிக்குள் செல்லுமாறு ஏவினான்.
தடுப்புக்குள் எதிரிகள் செல்ல முடியாமல் தடுத்த பெரிய மரக் கதவை ஹெக்டர் பாறைகளை வீசி உடைத்தான். டிராய் நாட்டுப் படை அரணுக்குள் நுழைந்தது. ஆனால் அங்கே அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
கிரேக்க நாட்டின் மாபெரும் தளபதியான அஜாக்ஸ் தனது திறமையான படைப்பிரிவை அங்கே நிறுத்தியிருந்தான். தானும் அவர்களுக்கு முன்னால் இருந்து எதிர்த் தாக்குதலைத் துவங்கினான். அஜாக்ஸ், உள்ளே புகுந்த டிரோஜன்களை அழிக்கும் சாவுக்கடவுள் போல் இருந்தான். முதலில் சென்ற டிரோஜன் படை முற்றிலும் அஜாக்ஸால் அழிக்கப்பட்டுவிட்டது.
அதைக் கண்ட ஹெக்டருக்கு ஆத்திரம் அதிகமாகியது. மேலும் ஒரு படைப் பிரிவை அந்தத் திறவுப் பகுதிக்குள் சென்று அஜாக்சை முறியடிக்குமாறு அனுப்பினான். அது தற்கொலைக்குச் சமம் என்பதை டிராய் படையில் இருந்த அத்தனை வீரர்களும் அறிந்திருந்தனர்.
அதேசமயம் வானத்தில் ஒரு பாம்பைப் பிடித்துப் பறந்துகொண்டிருந்த கழுகின் கூரிய பிடியிலிருந்து தப்பிய பாம்பு கழுகின் கழுத்தைக் கடித்துவிட, கழுகும் தன் பிடியைவிட பாம்பு தரையில் விழுந்து தப்பி ஓடும் காட்சி டிராய் நாட்டு வீரர்கள் முன்னே நடைபெற்றது.
இது கடவுளர்கள் நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மற்றும் சகுனத்தடை என்பதை உணர்ந்த டிராய் நாட்டு ஆலோசகர்கள் தற்சமயம் படை பின்வாங்கிச் செல்வதுதான் சரியான முடிவு என்று ஹெக்டருக்கு ஆலோசனை கூறினார்கள். நம் படை கப்பலுக்குச் சென்று கிரேக்கருடன் போரிட்டால் நாம் கழுகு போலப் பாம்பால் கடிக்கப்படுவோம் என்று கூறினார்கள்.
ஜீயஸ் தன்பக்கம் இருக்கிறார் என்று உறுதியாக நம்பிய ஹெக்டர் என்ன செய்வது என்று தெரியாமல் சற்று தயங்கினான். இப்போது இருக்கும் வெறியுடன் போரிட்டால்தான் கிரேக்கர்களை முற்றிலுமாக அழிக்கமுடியும் என்று திடமாக நம்பினான் ஹெக்டர். ஆனால் டிராய் நாட்டுக்கு உதவும் ஜீயஸின் கண்களை மறைக்க ஒரு மாபெரும் நாடகம் நடந்துகொண்டிருந்ததை ஹெக்டர் அறியவில்லை !
ஜீயஸ் கடவுள் டிரோஜன்களுக்கு அவர்கள் தகுதிக்கு மீறி ஆதரவு தருவதை அடியோடு வெறுத்த அவர் மனைவி ஹீரா எப்படியாவது ஜீயஸ் கண்ணில் மண்ணைத்தூவி கிரேக்கர்களுக்கு ஹெக்டரின் இந்த வெறித்தாக்குதல் வெற்றி அடையாமல் செய்யவேண்டும் என்று தீர்மானித்தாள் போதாக்குறைக்கு ஜீயஸ் அந்தக் கடலில் ஒரு புயலையும் ஏற்படுத்தி கப்பலில் பதுங்கியிருக்கும் கிரேக்கர்களுக்கு இன்னும் அதிகத் துன்பத்தைத் தந்துகொண்டிருந்தார். அதைவிட இன்னொரு பாதகத்தையும் கிரேக்கர்களுக்கு எதிராக ஜீயஸ் செய்ததை ஹீராவால் ஜீரணிக்க முடியவில்லை. ஜீயஸ் தனது மகன்களில் ஒருவனையும் அனுப்பி ஹெக்டருக்குத் துணையாகக் கிரேக்க அரணை உடைக்க அனுப்பியிருந்தார்.
இனித் தாமதித்தால் கிரேக்கப்படை முழுவதும் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த ஹீரா எப்படியாவது கொஞ்ச நேரம் ஜீயசை மயக்கி கண்ணை மூடச் செய்யவேண்டும் என்று எண்ணினாள். ஜீயஸ் அந்த சமயம் தன்னுடன் உறவு கொள்ள வரமாட்டாரே என்பதால் அதற்கு ஒரு திட்டம் தீட்டினாள்.
தன் மகளும் காதல் கடவுளுமான வீனஸிடம் , தந்தை ஜீயஸ் மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்றும் அவருடன் உறவுகொண்டு அவர் மனதிற்கு நிம்மதி தரவேண்டியது மனைவியான தன்கடமை என்று கூறினாள் .அதற்கு அவரை உடன்பட வைக்க வசியத் திரவம் தருமாறு வேண்டினாள்.
வீனஸ் கிரேக்கர்களுக்கு எதிரணியில் இருந்தாலும் தாய் தந்தையுடன் உறவு கொள்வதைத் தடுக்க விரும்பவில்லை. அதனால் வீனஸ் தன் மார்பகத்திலிருந்து ஒரு திரவத்தை எடுத்து ஹீராவிடம் கொடுத்து அதை அவளது மார்பகத்தில் வைத்துச் சென்றால் ஜீயஸ் ஆவலுடன் உறவுகொள்ளத் துடிப்பார் என்று கூறினாள் . மன மகிழ்ச்சியுடன் அதைத் தடவிக்கொண்டு தன் அழகெல்லாம் தெறிக்கும்படி உடையணிந்து அலங்கரித்துக்கொண்டு ஒலிம்பஸ் மலையில் இருக்கும் ஜீயஸ் முன்னால் நின்றாள் ஹீரா.
உண்மையிலேயே கிரேக்க டிராய் போரில் முற்றிலுமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜீயஸ் ஹீராவின் அழகைப் பார்த்து தன்னிலை மறந்தார். தான் காதலித்த பல பேரழகிகளை எண்ணிப்பார்த்த ஜீயஸ் அவர்கள் எல்லாரையும் விட ஹீராதான் பேரழகி என்று உணர்த்தார். காதல் போதை அவர் தலைக்கு ஏறியது. ஹீராவை இறுக்கத் தழுவினார். அவள் மார்பில் இருந்த வசியத் திரவம் அவர்மீது படித்தது. விளைவு ஜீயஸ் தன்னை மறந்தார். தன்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு ஹீராவின் கட்டழகு மேனியைச் சுமந்துகொண்டு படுக்கை அறைக்குச் சென்றார். ஆவலுடன் உறவுகொண்டு அதன் மயக்கத்தில் விழுந்தார் கடவுளர் தலைவர் ஜீயஸ். அவர் மயங்கிவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட ஹீரா கிரேக்கர்களுக்கு ஆதரவாகக் காய்களை நகர்த்தத் தொடங்கினாள். பொசைடன் என்ற பூகம்பக் கடவுளை அனுப்பி கிரேக்க வீரர்களுக்குத் தைரியம் கொடுத்து அவர்களுக்கு ஆதரவாகப் போரிடும்படியும் ஆணை பிறப்பித்தாள்.
அது செயலாற்றத் தொடங்கியதும் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது பதுங்கிக் கொண்டிருந்த கிரேக்கர் பாயும் புலியாக மாறத் தொடங்கினர். அதிரடித் தாக்குதலாக நடத்தி வெற்றிக்கு மேல் வெற்றி பெற்ற ஹெக்டருக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது.
(தொடரும்)
சாப்டு பாருங்க! சூப்பரா இருக்கும்! என்று அடிக்கடி சொல்லும்போதே இது தேறாது என்றொரு எண்ணம் எல்லோர்க்கும் வந்து விடும். அது போலத்தான் மச் ஹைப்பும் திரைப்படங்களுக்கு! இதற்கு முன்னால் எந்த உச்ச நடிகர் படங்களும், ஒரே நாளில் மோதாதது போலவும், இதுவே முதல் முறை என்றும் பம்மாத்து காட்டியதும், ஒரு மைனஸ் பாயிண்ட்! தல அஜீத் இருப்பதால் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் கன்டென்ட் அங்கலாய்ப்பில், எதை வேண்டுமானாலும் செய்தியாக வெளியிட்டு எரிகிற தீயில் நெய் வார்த்தன. படம் வெளிவந்ததும் தீ அணைந்து போயிற்று. ஆங்கில நாளிதழ்கள் ஜஸ்ட் ஆவரேஜ் என்று தீர்ப்பு சொல்லின. ‘தல’ ஆசாமிகள் வெள்ளையனே வெளியேறு ரகம் என்பதால், துரை பாசையை புறக்கணித்து விட்டனர். அதனால் அவர்களுக்கு நிதர்சனம் புரியவில்லை. கட் அவுட் கிழி! கொண்டாடு என்று பச்சன் ரகமாக செயல் பட்டார்கள். வெறும் மூணு ஸ்டார் கொடுத்த டைம்ஸ், கதை இல்லை என்று குதறி விட்டது. அதனால், படத்தை விட, அதிக ரத்தம் கொப்பளித்து விட்டது.
அப்படி கதை இல்லாத படம் தான் என்ன? வெறும் செய்திகளின் அடிப்படையில், ஒரு கருப்பு பண பதுக்கலை, தனியார் வங்கியில் நுழைந்து, வெளிக் கொண்டு வரும் கதை நாயகன். வெள்ளை தாடி! வெள்ளை கோட்டு சூட்டு! ஆங்காங்கு ரத்தக் கீற்றாக உதட்டு சாயம். இதற்கு பல கோடிகள் பட்ஜெட்.
முகநூல் போன்ற ஊடகங்களும், ஆன் தி ஸ்பாட் விமர்சனங்களும் சூப்பர் சூப்பர் என்று எடிட் செய்து போட, கல்லா கட்டுகிறது படம். முதல் பத்து நாட்களில் இருநூறு கோடிகள் வசூல். இனி அடுத்த அரைத்த மாவுக்கு தல ரெடி!
ஒன்று சொல்ல வேண்டும். அஜீத்தின் திரை ஆளுமை மறுக்க முடியாதது. ரஜினி வழியில் சட்டென்று ஈர்க்கிறார். கொஞ்சம் நடையை விட்டு விட்டு நடித்தால் ‘உல்லாசமாக’ இருக்கும்! மஞ்சு வாரியர் தான் ரியல் வாரியர். கையில் துப்பாக்கியும் சில தாவல்களும், கிடைத்த குறைந்த இடை வெளியில் ஈர்க்கின்றன.
பின் எது இந்தப் படத்தை ஓட வைக்கிறது? பர பர திரைக்கதை. அதிகம் யோசிக்க விடாமல் அகன்ற திரையை ‘ஆ’ என்று பார்க்க வைக்கிற சாகசம் ஹெச். வினோத்திற்கு கை வந்த கலை! அதனால் மூடு பனி போல வெற்றி. ஆதவன் கிரணத்தில் அதுவும் சீக்கிரம் கலைந்து விடும்!
#
குடும்பப் படம் என்று பட்டி தொட்டி வெட்டியென்று விளம்பரப்படுத்தப்பட்ட படம். அஜித் படத்தை விட ஐந்து மதிப்பெண் கூட கொடுத்திருக்கிறது டைம்ஸ் நாளிதழ். யூ ட்யூப் ஊடகங்கள் கழுவி ஊத்துகின்றன. சீரியல் போல இருக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டு. ஆனாலும் ஒரு வாரம் கடந்து, குடும்பப் பெண்கள் குழந்தைகளோடு படம் பார்க்கப் போவதாக ஒரு சர்வே சொல்கிறது. ரஜினி கதைகளைப் போல நாயகன் புறக்கணிக்கப்பட்டு, பின் உழைப்பால், அறிவால் முன்னேறி பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் சுண்டக் குழம்பு கதை. அதை விஜய் எனும் கரிஸ்மாவால் ஈடு கட்ட முயன்றிருக்கிறார் வம்சி படிப்பள்ளி!
பெரும் தொழிலதிபரின் மூன்றாவது மகன் விஜய் ராஜேந்திரனுக்கு சொந்தக் காலில் நிற்க ஆசை! அப்பாவின் நிறுவனத்தில் சேராமல் தனித்து செல்லும் அவரை தந்தைக்கு வந்த பான்கிரியாட்டிக் புற்று நோய் திரும்ப அழைக்கிறது. முழுகும் கப்பலை அவர் எப்படி கரை சேர்க்கிறார் என்பது ஒன்லைன்.
அரசியலுக்கு வந்து விடுவாரோ எனும் ஹேஷ்யத்தில் ஒலி ஒளி ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. விஜய்யின் காமெடி; நடனம்; ஸ்டண்ட் என்று சிலவற்றை மட்டும் ஹைலைட் செய்து விட்டு, கவனமாக கதையைப் பற்றி பேசுவதை தவிர்த்து விட்டன. பல கோடிகள் செலவில் எடுக்கப்பட்ட படத்திற்கு, இன்னும் சில லட்சங்கள் செலவு கூடினால் என்ன என்று கவர் செய்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. ஆனாலும் யூ ட்யூப் ஆசாமிகள் கட்சி பிரித்து கொண்டு, பிரித்து மேய்கிறார்கள். இது வேறு வகையில் ஆவலைத் தூண்டி விட்டு, ‘அப்படி என்னதான் இருக்கிறது படத்தில்?’ என்று பார்க்கும் ஆவலை வெகு சனத்திற்கு தூபம் போட்டு விட்டிருக்கிறது இந்தப் படம்.
உண்மையில் சில அம்சங்கள் கவர்கின்றன! குறிப்பாக ராஷ்மிகா மண்டானா! அமிதாப் பச்சன் படத்தில் செமையாக நடித்த அம்மணிக்கு இங்கு மினி வேடம். ஆட்டம் போட மட்டும் காசு! யோகிபாபு அதிகம் அலப்பறை பண்ணாமல் நடித்தது வெகு பாந்தம். கலாய்க்க இரண்டாம் தர நடிகர்கள் இல்லை என்பதும் ஒரு காரணம். சரத்குமார், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த்(தெலுங்கு) ஷாம், பிரகாஷ் ராஜ் என்று ஏகத்துக்கு பரண் பட்டாளம். ஒரு ஆணியும் பிடுங்கப்படவில்லை என்பது உ.கை.நெ.கனி!
பிளாக் பஸ்டர்; சூப்பர் ஹிட்; என்று கால் பக்க நாளேடு விளம்பரங்கள் எரியூட்ட அடுத்த படத்திற்கு 120 கோடி என்று பயணிக்கிறார் தளபதி. ஒரு நடிகரின் மோசமான படங்கள் கூட, தயாரிப்பாளருக்கு நட்டம் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கான விதி! அதை மாஸ்டர் அடைந்து விட்டாரா என்பது கோடி ரூபாய்க்கான கேள்வி!
#
ஐஸ்வர்யா ராஜேஷ் அற்புத நடிகை. ஆனாலும் ஒரு படத்திற்கு கோடி கேட்கிறார் என்றொரு வதந்தி. இது ஒரு திரில்லர் படம். கட்டக்கடைசி வரை நாயகி சூத்திரதாரி என்பதை மறைத்து, பின் கதையில் சில ஷாட்டுகளில், ஷார்ட்டாக சொல்லியதால் கிராம ரசிகனுக்கு புரியாமல் போய் விட்டது. செய்தி ஊடகங்கள் இதைக் கண்டு கொள்ளவே இல்லை. அதிகம் மெனக்கெடாமல், மகிழுந்து ஓட்டிக் கொண்டிருக்கும் ஐஸைப் பார்த்து யாருக்கும் வேர்க்கவில்லை.
கதை என்ன? கூலிப்படையைக் கொண்டு அரசியல்வாதி மரகதவேல் கொலை செய்த தந்தையின் மரணத்திற்கு, பழி வாங்கும் மகள் ஜமுனா! இதைப் போல் எக்கச்சக்க கதைகள் ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும். பாடல் இல்லை என்பது ஆறுதல். ஆங்காங்கு நகைச்சுவையை தெளிப்பதாக எண்ணிக் கொண்டு தோற்றிருக்கிறது படம். கொஞ்சம் கூட கிச்சு கிச்சு இல்லை.
கூலிப்படையில் ஒருவனாக ஜமுனாவின் தம்பி எனும் ‘அதிர்வு’ திருப்பம் ‘சே’ ஆகி விடுகிறது. நெடுஞ்சாலையில் பயணிக்கும் படம், ஒரு கொண்டை வளைவு கூட இல்லாத ஜாமூனாவாக இருப்பதும் அலுப்பு!
ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கும் படம் போஹா போல சன்னம் என்பது தான் ஃபைனல் தீர்ப்பு!
#
செமை காமெடி படம். ஒரு முகமும் அறியாத்தவர்கள். எப்போதோ பாலகுமாராவில் பார்த்த காயத்ரி, இதிலும் சோக முகத்தோடு! ஆனாலும் திரைக்கதையும், பாயச முந்திரியாக தூவப்பட்ட நகைச்சுவை காட்சிகளும் வசனங்களும் புன்னகைக்க வைக்கின்றன. இந்தப் படத்தையும் செய்தி ஊடகங்கள் சட்டை செய்யவில்லை. பத்தோடு ஒன்று என்று புறம் தள்ளி விட்டன.
வள்ளலார் காம்ப்ளெக்ஸ் இடிந்து அதில் மாட்டிக் கொண்ட தந்தை இறந்து போனால் அரசு கொடுக்கும் இருபது லட்சம் கிடைக்கும் என்று கற்பனை செய்து கொள்ளும் அண்ணன் பரமுவும் தங்கை கண்மணியும். சேதாரம் இல்லாமல் திரும்பி வரும் அப்பா வினாயகம் வீட்டில் இறந்து போக, சவத்தை வள்ளலாரிடம் கொண்டு போய் போட்டு விட்டு இருபதை லவட்டலாம் எனும் திட்டத்தில் ஏகத்துக்கு சறுக்கல். கடைசியில் என்ன ஆச்சு என்பது க்ளைமேக்ஸ்!
சார்லி தன் சீனியாரிட்டியை நிறுவுகிறார். சுட்டிகள் இரண்டு செமையாக நடிக்கின்றன. லிங்கா, சுப்பிரமணியபுரம் சசிகுமாரைப் போல இருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். காமெடிக்கு விவேக் பிரசன்னா. அவருடைய சில டைமிங் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. ஜாலியாக போகும் படத்தில் ஏதும் ரத்தக்களறி இல்லை. வன்முறை இல்லை. தனி மனித உளவியல் சரியான விகிதத்தில் கையாளப்பட்டிருக்கிறது.
ஒருவரை ஒருவர் கவிழ்க்க முற்படும் தருணங்கள், விசு படங்களை நினைவுக்கு கொண்டு வருகின்றன என்றாலும் இன்றைய தலைமுறைக்கு தேவையான படம். இயக்குனர் கார்த்திக் சீனிவாசன் அடுத்த வி.சேகர் ஆகலாம்.
நல்ல படங்களை அடையாளம் காட்டும் யூ ட்யூப் சேனல்கள் இந்தப் படத்தை போகிற போக்கில் விமர்சனம் செய்து விட்டு நகர்ந்து விட்டன. ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கும் படம் உண்மையில் ஆஹா தான்!
#
நல்ல நடிகராக அறியப்பட்ட பாபி சிம்ஹா, புதுமுகம் ஸ்ஸ்விதாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த படம், பல நாட்கள் கிடப்பில் போடப்பட்டு, இப்போது தான் வெளிவந்திருக்கிறது! கார்த்திக் சுப்பாராஜின் கம்பெனி நடிகை பூஜா தேவரய்யாவும் இதில் உண்டு! படம் பழைய பரணை வாசத்துடன் இருப்பதாக மூக்கைப் பொத்திக் கொண்டு நெட்டிசன்கள் சொல்கிறார்கள். செய்தி ஊடகங்கள் இதை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை என்பதே சற்று தாமதமாகக் கிடைத்த செய்தி!
எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய படம். சிம்ஹாவின் பாத்திரத்தில் புதுமை ஏதும் இல்லை! படத்தில் சேர்க்கப்பட்ட டார்க் காமெடி கிஞ்சித்தும் போணியாகவில்லை!
டைம்ஸ், சின்னக் குத்தூசியாக ஏழு வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் ஒரு வேளை ரசிக்கும்படியாக இருந்திருக்கலாம் என்று உள் காயமாக எழுதி இருக்கிறது!
அசோக்செல்வன், கலையரசன், ரம்யா நம்பீசன், சுனைனா என்று பெத்த நடிகர்கள். இருட்டில் எடுக்கப்பட்ட அமானுஷ்யம் என்பதால் ஒரு முகமும் தெரியவில்லை. தலைப்பை வேஸ்ட் என்று வைத்திருக்கலாம்!
டைம்ஸ் இப்படி ;சொல்கிறது: முதல் பாதி எதையோ எதிர்பார்க்க வைத்து க்ளைமேக்ஸில் குப்புற தள்ளி விடுகிறது சரியாக எழுதப்படாத திரைக்கதை!
இசையில் மட்டும் திரில்லிங்கை வச்சா போதுமா என்கிறார் ஒரு விமர்சகர்! குழப்பங்களுக்கு தீர்வு கொடுக்க முடியாம குழம்பி போயிட்டார் இயக்குனர் என்பது இன்னொரு தீர்ப்பு!
#
7.பிகினிங்
ஒரு திரையில் இரண்டு கதைகள் அக்கம் பக்கமாக என்பது புதுமை. இதன் இயக்குனர் ஜகன் விஜயா, திரைத்துறைக்கு வருவதற்கு முன், ஒரு நிறுவனத்தில் சிசிடிவி திரைகளை கண்காணிக்கும் வேலையில் இருந்தாராம். அந்த அனுபவம் ஸ்பிளிட் ஸ்கிரீன் எனும் இந்தப் படைப்பை தர உதவியிருக்கிறது. புதுமுகம் வினோத் கிஷன் மனநலம் குன்றிய இளைஞராக (ஸ்பாஸ்டிக்) நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
புதுமை என்பதைத் தாண்டி இதன் பிரதான கலைஞர்கள் இந்தப் படத்தைக் காப்பாற்றி இருக்கிறார்கள் என்கிறது டைம்ஸ்!
மாலை மலர், நாயகன் நாயகி பாத்திரங்களைக் கொண்டாடி இருக்கிறது. படத்திற்கு எழுபது விழுக்காடு மதிப்பெண்களும் கொடுத்திருக்கிறது!
விஷாலுக்கு குழி தோண்டிய படம். இடைவேளை வரை பரவாயில்லை ரகம். பின்பாதி விஷாலின் நடிப்பையும் அடிப்பையும் காட்ட இழுக்கப் பட்டதால் நேற்று மென்ற சூயிங்கம் போல இழுவையாக படம்!
ஜஸ்ட் பாஸ் நாப்பது மார்க். விஜய் சேதுபதி சம்பளக் கோடிகளில் கவனம் கொண்டு நல்ல கதைகளைத் தேடி நடிப்பதை கோட்டை விட்ட படம். பத்து வருடங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டிய படம் என்கிறது டைம்ஸ்! ஒளிப்பதிவும் இசையும் நாயகனை முன்னிறுத்தும் தலையாய பணியைச் செய்து தோற்றுப் போயிருக்கின்றன. விஜய் சேதுபதி கொஞ்சம் ஓய்வெடுத்து யோசிக்கலாம் என்கிறார் ஒரு சினிமா ஆர்வலர்.
மைனா புகழ் பிரபு சாலமனின் படம். கோவை சரளாவிற்கு அழுத்தமான வீராயி பாத்திரம். சில பெருந்தலைகளால் ஊரை விட்டு விரட்டப்பட்டும் செம்பி எனும் பத்து வயது சிறுமியும் பாட்டியும். சமூகம் அவர்களுக்கான நியாயத்திற்கு போராடுமா?
பேத்தி செம்பிக்கு எப்படி தேனெடுக்க வேண்டும் என்று பாட்டி வீராயி சொல்லும் காட்சியில் நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார் கோவை சரளா!
அன்பு பேருந்தில் தப்பி செல்லும் செம்பியும் பாட்டியும்! உடன் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் விதவிதமான குணச்சித்திரம். பிரபு சாலமன் இன்னொரு மைனா எடுத்திருக்கிறார் என்று கூடச் சொல்லலாம்!
ஜீவனின் ஒளிப்பதிவும் நிவாஸ் பிரசன்னாவின் இசையும் படத்தை பல உயங்களுக்கு கொண்டு செல்கின்றன. சரளாவிற்கு விருது கிடைக்கலாம்!
(என் முகநூல் பதிவு)
மீண்டும் மைனா டெம்ப்ளேட்டில் ஒரு சரி விகிதமான திரில்லர். இம்முறை அமலாவுக்கு வயதாகி கோவை சரளா ஆகிவிட்டார். ஆனாலும் அந்த கொடைக் காடுகளும் மாசற்ற சூழலும் படத்தை வேறு கொண்டை வளைவுக்கு எடுத்து செல்கிறது. சரளாவைத் தாண்டி அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன் கவர்கிறார். செம்பியை போட்டு தள்ள வரும் கும்பலும், அதிலிருந்து தப்பிக்க அவள் பயணிப்படும் ‘அன்பு’ பேருந்தும் கூட படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக மாறியிருப்பது பிரபு சாலமனின் டச். பஸ் பயணிகள் ஒவ்வொருவரும் ஒரு குணச்சித்திரம். மனதில் பதியும் நல் சித்திரம்.
11.ஏஜெண்ட் கண்ணாயிரம்
தெலுங்கு படம் ஏஜெண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயாவின் கல்லா கட்டலைப் பார்த்து, சந்தானம் சுட்டுக் கொண்ட படம். திரைக்கதையில் தவிர்க்க வேண்டிய விசயங்களை புகுத்தி காமெடியா சீரியஸா என்று சீரியஸாக யோசிக்காமல் எடுத்த படம், வேகாத ஒரு பக்க தோசையாக மாறி இருக்கிறது. டைம்ஸ் கொடுத்தது நாப்பது மார்க். எடிட்டிங் கத்தரிக்கு சாணை பிடிக்க வேண்டுமோ என்று பல காட்சிகளில் தவளைப் பாய்ச்சலாக எகிறி ரசிகனை மண்டையை பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறது படம்.
சூப்பர் ஸ்டார்களுடன் காமெடிக்கு திரும்ப வேண்டிய தருணம் வந்தாச்சு சந்தானத்திற்கு!
12.வரலாறு முக்கியம்
வெகு நாட்களுக்குப் பிறகு ஜீவா படம். இயற்கை, கற்றது தமிழ் படங்களில் நடித்த ஜீவாவா இது என்று வருத்தத்துடன் பார்க்க வேண்டிய படம். வயது வந்தவர்களுக்கு மட்டுமான அடல்ட் காமெடி கதை என்று எடுத்து, ஜன்னல் ஜாக்கெட் கூட இல்லாமல் தைத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன். க்ளைமேக்ஸ் பில்ட் அப், பேஸ்மென்டைத் தாண்டவில்லை என்பது தான் தீர்ப்பு! ஜீவா மோசமான கதையில் கடுமையான உழைப்பைக் கொட்டி இருக்கிறார். ஆனால் எவ்வளவு பாலீஷ் போட்டாலும், அது வெறும் கல் என்பதை அவர் உணரவேயில்லை என்கிறது இந்தியா டைம்ஸ் ஊடகம்!
#
குந்தவை திரிஷா திரில்லர்! ஃபைவ் ஸ்டாரில் பார்த்தது போலவே இருக்கிறார் இந்த காயகல்ப அழகி! கதை ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கம் அவர் சிஷ்யன் எம்.சரவணன். பரபரவென திரைக்கதை; முகநூல் நட்பில் இணையும் லிபியா தீவிரவாத இளைஞன் ஆலிம் என்று போகும் வித்தியாச முடிச்சு; சின்ன பாவங்களில் கட்டிபோடும் திரிஷை என செம கலக்கல். குருவின் ‘துப்பாக்கி’ படத்தில் வரும், மும்பை தெருக்களில் தீவிரவாத வேட்டை என்பது போல, இதில் லிபியாவின் தெருக்களில் ஒரு துரத்தல். சில சென்டிமென்ட் காட்சிகளும் பாயசத்தில் முந்திரி!
இந்தியா டைம்ஸ் அழகான திரில்லர் என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறது! எழுபது விழுக்காடு மதிப்பெண்கள்! பார்த்து ரசிக்கலாம்! இந்தியன் எக்ஸ்பிரஸ் மாறுபடுகிறது! ராங்கி லாஜிக் மறந்த அசட்டுத்தனமான படம்! குந்தவைக்குப் பிறகு இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டுமா திரிஷா எனும் முத்தாய்ப்பும் வைக்கிறது!
இந்தியா டுடே, ரிடிகுலஸ் மொமென்ட்ஸ் என்றொரு பதத்தை பயன்படுத்துகிறது. நம்பமுடியாத..சாத்தியம் இல்லாத பல தருணங்களைக் கொண்டதால் முனகலுடன் முடிகிறது படம் என்பது அதன் விமர்சனம்.
ஷாருக் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இரண்டரை மணி நேர பரபர திரைக்கதை! ரசிகர்களை மொத்தமாக அள்ளி முடிந்து கொண்ட கிங் கான்! இந்திய அமைப்பு ரா அனுப்பும் ஜவான் பத்தான்; ஐஎஸ் ஐ தரப்பிலிருந்து கவர்ச்சி குறையாத தீபிகா படுகோன். இந்திய 007 படத்திற்கான அத்தனை கலவைகளும் சரியான விகிதத்தில். ஆனால், சமயத்தில் கொட்டாவி வருவதைத் தவிர்க்க இயலவில்லை என்கிறது இந்திய எக்ஸ்பிரஸ்! நல்லா தூங்கிட்டு வாங்க என்று சொல்லியிருக்கலாம் ஷா கான்! சல்மான் கானின் டைகர் படத்தை ஒட்டியிருக்கிறது என்றொரு விமர்சனமும் உண்டு! இயக்குனர் சித்தார்த் ஆனந்தின் திறமையை ஒட்டு மொத்த ஊடகங்களும் கொண்டாடுகின்றன.
இதுவரை 750 கோடி வசூலாம்! ஆயிரத்தை தொட்டு விடுமாம். பத்தான் கெத்தான் தான் போல!
முதல் பார்வையில் மலையாள ஒரிஜினல் சற்று ஈர்ப்பில் கூடுதலாக இருந்ததோ எனும் சந்தேகம் ரசிகனுக்கு வரலாம். அதை தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால் இது ஒரு நல்ல படம். மலையாளத்தில் பட்டையைக் கிளப்பிய நிமிஷா சஜயனும் சூரஜ் வெஞ்சரமூடுவும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷாகவும் ராகுல் ரவீந்திரனாகவும் மாறியிருப்பது தமிழுக்கு நட்டமில்லை. சரியாகவே பாத்திரத்தில் பொருந்திப் போகிறார்கள் இருவரும். இணைப் பாத்திரங்கள் இன்னும் செறிவாக நடித்திருக்கலாம் எனும் குறை உள்ளூரத் தோன்றினாலும் தமிழுக்கு இது ஒரு செப்பேடு! பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவும் லியோ ஜான் பாலின் எடிட்டிங்கும் மலையாளப் பரபரப்பை தக்க வைத்தது வெற்றிக்கு அறிகுறி.
இந்தியா டைம்ஸ் சொல்கிறது: மூலக்கதையை நீர் சேர்க்காமல் அப்படியே கொண்டு வந்ததில். ஆர். கண்ணனின் இயக்கத்தில் இது ஒரு அழுத்தமாக படமாக மாறியிருக்கிறது. ஒரிஜினலைப் பார்த்தவர்களுக்கு இது கொஞ்சம் கைவிட்ட படமாகத் தெரியும் என்பது இன்டியா டுடேயின் விமர்சனம்.
பா.ரஞ்சித்தின் குறியீடுகளை அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட படம். தயாரிப்பு மட்டும் தான் அவர் என்றாலும் அவருடைய சிஷ்யர் ஷான் தன் இயக்கத்தில் இதை வெளிப்படுத்த தவறவில்லை. சுவரில் ஒரு வாசகம்: நான் சாகடிக்கப்பட்டாலும் தோற்கடிக்கப் பட மாட்டேன் என்பது பா.ரஞ்சித் முத்திரை தான்! குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி சட்டென்று மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடுகிறாள். அடுத்து குட்டிப் பெண்ணின் தாயாக வரும் சுமத்ரா! நெஞ்சு நிறைய சோகம் கொப்பளிக்கும் ஒரு பாத்திரத்தை வெகு இயல்பாக செய்திருக்கிறார் அவர். யோகி பாபுவைப் பொறுத்தவரை இதுவும் ஒரு மண்டேலா மாதிரியான பாத்திரம் தான் என்றாலும், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று அவ்வப்போது தோன்றுகிறது. கே எஸ் சுந்தரமூர்த்தியின் இசை இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம் என்பதில் ஐயம் ஏதுமில்லை. முதல் அரை மணிநேரம் கதை துவங்கவே இல்லை என்பது இந்தப் படத்தின் முதல் பலவீனம்! துணைக் கதை மாந்தர்கள் யாருமே நம்மை ஈர்க்கவில்லை என்பது இரண்டாவது வீனம். இதைக் களைந்து விட்டிருந்தால் இது இன்னமும் ரசிகனை ஈர்த்திருக்கும் என்பது தான் வெகு சன ரசிகனின் தீர்ப்பு.
விளிம்பு நிலை மக்களின் நியாயத்திற்கான தொடர் போராட்டம் தான் களம்! இதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது படம் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்! மெல்ல தொடங்கி உணர்வுகளின் உச்சம் தொடுகிறது இந்தப் படம் என்று சொல்கிறது தி ஹிந்து! யோகி பாபுவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறது!
ஆர்.ஜே. பாலாஜியின் காமெடி கலக்காத திரில்லர் படம்! முதல் பாதி பரபர திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழு முதற் காரணம் எடிட்டர் மதனின் கத்தரி! அனாவசிய நீட்டல்கள் இல்லாதது டெம்போவை தடம் புரளாமல் பார்த்துக் கொள்கிறது. பாலாஜியும் ஐஸ்வர்யா ராஜேஷும் கொடுத்த பாத்திரங்களை சரியாக உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை படத்தின் தன்மையை மீறாமல் இருப்பது இதம். இடைவேளைக்கப்புறம் படம் தடுமாறுகிறது. உண்மைக்கு நெருக்கமில்லாத லாஜிக் மீறல் படத்தில் உண்டு! பல கேள்விகள் பதில் சொல்லப்படாமல் கடந்து போகின்றன. ஆனாலும் திரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கக் கூடிய படமாக இது இருக்கும்!
நல்ல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக இருப்பதாக சொல்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். லகுவாக நகைச்சுவை பாத்திரத்திலிருந்து இந்த திரில்லர் நாயகனுக்கு மாறியிருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.
பழி வாங்கும் கதை கதம்பத்தில் இதுவும் ஒரு மருவு! கிரன் கவுசிக் ஓளிப்பதிவில் காட்சிகள் ரத்தம் தெறிக்க, போதாது என்று கிராபிக்ஸில் சிகப்பை மட்டும் அள்ளி தெளித்திருக்கிறது டி ஐ டீம்! சந்தீப் கிஷன் இன்னும் உயரம் தொடலாம்..ஆனால் பாத்திரம் எழுதப்பட்ட விதம் முழுமையில்லை என்பதால் அவரால் எட்ட முடியவில்லை. சாம் சி.எஸ்ஸின் இசை படத்திற்கு தேவையான பங்களிப்பு. ‘நீ எனக்குப் போதுமே’ மெலடியாக சில வாரங்களுக்கு நம் காதுகளில் ஒலிக்கும். விஜய் சேதுபதி, கவுதம் மேனன், வரலட்சுமி சரத்குமார் போன்றவர்களின் அனுபவம் கெத்தாக படத்தில் தெரிகிறது. இந்தப் படத்தின் திரைக்கதை, காட்சிகளைப் பொறுத்தவரை ஒரு மாஸ் ஹீரோ நடிக்க வேண்டிய படம். சந்தீப் கிஷன் இதில் ஒட்டவில்லை என்பதே விமர்சகர்களின் கருத்து.
டைம்ஸ் ஆஃப் இந்தியா: திரில்லான கதை. சிறப்பான இயக்கம்.
துணிவான முயற்சி என்பது ஹிந்துஸ்தான் டைம்ஸின் கருத்து!
ரசிகனை சீட்டு நுனியில் வைப்பது ஒரு ரகம். எது நடந்தாலும் கவலையில்லை என்று அசிரத்தையாக உட்கார வைப்பது இன்னொரு ரகம். மைக்கேல் இதாகவும் இல்லாமல் அதாகவும் இல்லாமல் நடுவாந்திரத்தில் இருப்பதாகச் சொல்கிறது தி ஹிந்து!
மொத்தத்தில் ஜஸ்ட் பாஸ் தான் மக்களே!
இது போல ஒரு சிறு படம் கே டி என்கிற கருப்புதுரை வந்திருக்கிறது. அதேபோல பாரம் எனும் கலைப்படமும் இதைத்தான் பேசியது!
கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு. வயதான பெற்றோரை தலையில் எண்ணை தடவி ஊற வைத்து குளிர் நீரைக் கொட்டி நோயாளி ஆக்கி சாகடிப்பது தலைக்கூத்தல். சமுத்திரக்கனியும் வசுந்தராவும் அழுத்தமாக மனதில் பதிய, பரியேறும் பெருமாள் புகழ் கதிர் பின்னூட்ட காட்சிகளில் கவர்கிறார் என்பது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம். படத்தின் குறை: இம்மாதிரி அழுத்தமான கதைகளை இயக்குபவர்கள், திரைக்கதையை ஒரு கலைப்பட பாணியில் அமைத்து விடுவது தான்! காசு கொடுத்து அழுவதற்கு யாரும் தயாரில்லை என்பதால் இம்மாதிரி படங்கள் போணியாவதில்லை.
படம் நடுவே பாரதிராஜாவின் முதல் மரியாதை பற்றிய நினைவும் வந்து போகிறது. அதோடு எந்தவித திருப்பங்கள் இல்லாத எதிர்பார்க்கக் கூடிய காட்சிகள் அடுத்தடுத்து வருவது இந்தப் படத்தின் பலவீனம். ஒரு நல்ல கதையை அழுத்தமாகச் சொல்லத் தவறி விட்டார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ்!
தி ஹிந்து: தந்தையை கட்டாய சாவிலிருந்து காப்பாற்ற மகன் நடத்தும் போராட்டம் உண்மையிலே மனதைப் பிசைகிறது!
நெருங்கி வராமல் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறது இந்தப் படம் என்கிறது கலாட்டா டாட் காம்!
பார்வையாளனை நெகிழ்ச்சியில் மூழ்கடிப்பதில் வெற்றி கண்டிருக்கிறது என்பது இந்தியன் எக்ஸ்பிரஸின் வாதம்.
#
சிவசங்கரி – குவிகம் சிறுகதைத் தேர்வுக்காக ஜனவரி 2023 மாதத்தில் வெளியான சிறுகதைகளிலிருந்து என்னுடைய தேர்வு :
முதல் இடம் பெறும் கதை –
“பிரம்ம சாமுண்டீஸ்வரி
எழுதியவர் – இரா. சசிகலாதேவி (சொல்வனம் – ஜனவரி 8, 2023 )
இந்தக் கதைபற்றி :
“காளியை நீ கூர்ந்து பார்க்கும்போது, ப்ரம்ம சாமுண்டேஸ்வரியைக் காண்பாய்” என்ற அம்மாவின் வார்த்தைகளின்படி, இறந்து கிடக்கும் பெண்ணுடலைத் தில்லை காளியாகப் பார்க்கும் பிணவறை அலுவலரின் கதை.
“உனக்கு நல்ல வாசனையான கிராக்கி வந்திருக்கு” என்று ஆரம்பிக்கும் இந்தக் கதை ஒரு அழுகிய பிணத்தைப் பற்றியது. ஒரு சாவு, அதன் மர்மம், அது தொடர்பான ஊகங்கள், சந்தேகங்கள், அதனால் எழும் வாழ்வைப் பற்றியதான விசாரங்கள், யாரோ ஒருவரின் மரணம் மேலெழுப்பும் நம் ஆழ்மனதில் அமிழ்ந்திருந்த சொந்த வாழ்க்கை சோகங்கள் என்று மரணம் தொடர்பான அனத்தையும் ஒரு சுற்றுச் சுற்றி முடிக்கும் இந்தக் கதை, வாசிக்கும்போது உணர்வுகளாலும், முடித்தபின் சிந்தனைகளாலும் நம்மை நிறைக்கிறது.
கதை முழுவதும் “மரணத்தின்மேல் மரணமில்லாமல் தான் மட்டும் நீண்ட காலம் வாழ்வதுபோல் கற்பனை செய்யும் புழு, மரணமடைவதை ஆயிரம் முறை கண்டாலும் சுகமாக வாழ்வதுபோன்ற பிரமை, எத்தனை நெருங்கிய உறவாக இருந்தாலும் நாற்றத்திற்கு முகம் சுழிக்கும் மனித இயல்பு, ஒவ்வொரு மரணத்துக்கும் ஒரு கதை, மங்கலான ஒளியில் அந்த உடல் சிதிலமடைந்திருந்த கோவில்போலிருந்தது, பெண்ணுக்கும் நீருக்கும் சம்பந்தம், மரணம் முடிச்சிடப்படாத புதிர்” போன்ற பொருத்தமான, கதையோடு ஒட்டிய, பிரமிக்க வைக்கும் கருத்துக்கள்.
தண்ணீரில் ஊறிப்போய் சிதிலமாகிவிட்ட உடலை, தன் வேலை விதிமுறைகளுக்கும் மேற்பட்டு, இறுதி யாத்திரைக்கு ஏற்றபடி முடிந்தவரையில் அழகாகத் தயார் செய்வது மனிதாபிமானத்தின் எல்லை.
ஒரு சாவின் துக்கம் வசப்பட்ட பொழுதுகளில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகளில் ஒன்றுதான் இறந்த தேவியின் அம்மா செவ்வரளிப் பூக்களைப் பறித்து முந்தானையில் முடிந்து கொள்வதும்.
‘ஒரு இறந்த பெண்ணை தெய்வத்தின் அம்சமாகக் காண முடிந்தால், உயிருள்ள பெண்ணையும் அப்படியே காண முடியுமே?’ என்கிற நம்பிக்கையையும் தருகிறது கதை.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இரா. சசிகலாதேவி!
கதைத் தேர்வில் போட்டிக்குப் பரிசீலிக்கப்பட்ட மேலும் ஐந்து கதைகள் கீழே :
திண்ணை 15/01/2023
1865 ஆம் ஆண்டுவரை கருப்பினத்தவர் நீச்சல் குளங்களிலோ, கடலிலோ இறங்கக்கூடாது என்று அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருந்ததை எதிர்த்து, கருப்பினத்தவர் கடலில் இறங்கி, கைது செய்யப்பட்டு, பின் கடலில் இறங்கலாம் என்று தீர்ப்புப் பெறும் கதை.
ஒரு நாட்டிய நாடகத்தில் பாடப்பட்ட “வேட் இன் த வாட்டர்ஸ்” பாடல் ஏற்படுத்திய தாக்கம் அது. கருப்பினப் பெண்களை அடிமைகளின் இனப்பெருக்கத்துக்காகப் பயன்படுத்தியதும், தப்பி ஓடும் கருப்பினத்தவரை வேட்டை நாய்களை வைத்துப் பிடித்ததும், கருப்பினத்தவர் நீரில் இறங்கியதும் வெள்ளையர்கள் வெளியேறியதும் நிறவெறியின் உச்சம்.
“நம் உரிமையை நாம்தான் வென்று எடுக்க வேண்டும்” என்பது இந்தக் கதை சொல்லும் நீதி. “நாம் இப்போது அனுபவிக்கும் சுதந்திரம், நமக்காக யாரோ, எப்போதோ போராடிப் பெற்றுக் கொடுத்தது” என்னும் வரிகள் நாடுகள் தாண்டி, கடல்கள் தாண்டி, பிரச்னைகளும், போராட்டங்களும் தாண்டி, எல்லா உரிமைகளுக்கும் பொருந்துவது எப்பேர்ப்பட்ட விந்தை!
வருடம், மாதத்துடன் எழுதப்பட்டிருக்கும் இந்தப் படைப்பு கதையா? உண்மை வரலாறா?
ஒரு கோவில் கட்டுவதன் பின்னணியில் இருக்கும் நினைத்துப் பார்க்க முடியாத உழைப்பும், கலா ரசனையும், அதன் கட்டமைப்பும், ஏதோ ஆராய்ச்சி செய்யப்பட்டதுபோலக் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கிறது. கதை முடியும்போது ஒரு கோவில் கட்டப்பட்டதை ஒவ்வொரு நிலையிலும் நேரில் பார்த்ததுபோன்ற நிறைவு, நேர்த்தி! ஆசிரியரின் கடும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
சித்தாள் செங்காயி முதல் முறையாகத் தன் இளம் வயது மகள் கொடிலாவோடு கோவில் கட்டுமானத்துக்காக இன்னொரு ஊருக்கு
வருகிறாள். அங்கே கோவில் சிலைகளை அமைக்கும் திருப்பணியில் இருக்கும் மணிக்குட்டியோடு கொடிலாவுக்குப் பழக்கம் நேர்ந்து காதலாகிறது. பின் இருவரும் செங்காயியின் எதிர்ப்பால் ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். மீண்டும் மகளையும், பேத்தியையும் செங்காயி சில வருடங்கள் கழித்து இன்னொரு கோவில் கட்டுமானப் பணியில் சந்திக்கிறாள். பேத்தியின் பெயர் “செங்க மலர்” என்பதை அறிந்து மகிழ்கிறாள், அழுகிறாள்.
வேலைக்கும் சென்றுகொண்டு ஒற்றைத் தாயாக ஒரு மகளை வளர்ப்பதன் சிரமங்களைக் கதை கட்டட வேலையோடு சேர்த்தே சொல்கிறது. சித்தாள் வேலை தரும் சவால்கள் வேறு.
ஜல்லிக்கட்டைப் பற்றிய கதை. காலப்போக்கில் அழிந்துவிடுமோ என்று கவலை கொள்ளும் பல விஷயங்களில் ஒன்று இன்றும் கிராமங்களில் உயிர்ப்புடன் இருக்கும் ஜல்லிக்கட்டு. நல்ல மழைக்குப் பின், காளி அம்மனுக்குக் காப்புக் கட்டி கீழக்குடி என்னும் ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டை கதை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறது.
“ஜெயக்கொடி பெரியாம்பளை” என்கிற, இன்றைய ஆறுபது வயது, அன்றைய இளைஞனான ஜல்லிக்கட்டு வீரரின், காளைகளை அடக்கிய வீர, தீர, பராக்கிரமங்கள், அதன் பக்கக் கதைகள், தன் அடக்கப்பட்ட காளையின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத பிரசிடென்டின் சூழ்ச்சியான தாக்குதல் என்று ஒரு முழுச் சுற்று சுற்றி வருகிறது கதை.
ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க முடியாதவர்கள் இந்தக் கதையைப் படித்தால் போதும். நேரில் பார்த்த திருப்தியும், த்ரில்லும் கிடைக்கும்.
கண்முன் ஒரு திருவிழாக் கோலம் தெரியும்.
“ஜல்லிக்கட்டு நடத்தலாமா, கூடாதா?” என்கிற வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப் போவதை ஒட்டி ஜெயக்கொடியின் நினைவலைகளாக ஆரம்பிக்கும் கதை, “ஜல்லிகட்டு நடத்தலாம்” என்று தீர்ப்பு ஆவதுடன் முடிகிறது.
ஒரு நல்ல திரைப்படம் பார்த்தது போன்ற அனுபவம்.
இசை அமைப்பாளர் ரஹ்மானின் பாடல்களைப் பின்புலமாகக் கொண்டு, மழைக்குப் பின் ஒவ்வொரு வண்ணமாக வந்து முடிவில் தெரியும் வானவில்போல, ரயில் பயணிகளான பிரேமா, சத்யன் இருவருக்கும் நடுவிலான அறிமுகம் நட்பாகி, பின் காதலாவதையும்,
அது கனிவதையும் கவிதைபோல நவீன பாணியில் சொல்லும் புதிய முயற்சிக் கதை.
வழக்கமான பாணியிலிருந்து வேறுபடும் கதைகள் நம் கவனத்தை இயற்கையாகவே கவர்வது இயல்பு. இதுவும் அப்படித்தான். கூட வரும் பயணிகளான முதியவர். மற்றும், தம்பதியர் துணைக் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு பாட்டையும் பிரேமாவும், சத்யனும் அகழ்ந்து ஆராய்வதும், படைப்பாளியின் அகத்துக்குள்ளேயே நுழைந்து, அதன் பின்புலம், உணர்வுகள், நுணுக்கமான அனுபவங்கள், அதன் வேறுபட்ட பரிணாமங்களை கலாரசனையோடு சொல்வதும் ஒவ்வொரு முறையும் “அடடே! பலே!” சொல்ல வைக்கிறது. புன்னகை பூக்கவும், வியப்பில் புருவங்களைத் தூக்கவும் வைக்கிறது. கதை சொல்வதில் இது ஒரு நவீன பாணி என்பதில் சந்தேகமில்லை.
வெறும் பார்வையாளர்களாக மட்டுமே ஆரம்பத்தில் இருந்த பெரியவரும், தம்பதியும் உள்ளே வருவதும், பிரேமா, சத்யனிடம் காதல் வசப்படுவதும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு மயிலறகு வருடுவதைப்போல, தென்றல் தலைமுதல் கால்வரை தழுவுவதைப்போல சொல்லப்பட்ட, வித்தியாசமான, ரஹ்மான் பாடலைப்போலவே இனிமையான காதல் கதை. ஒருவேளை இதற்கும்கூட நான் ஏதாவது நவீன உதாரணங்களைத் தேட வேண்டுமோ?
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் விக்னேஷ்! இன்னும்கூட நவீன உத்திகளை முயன்று தமிழ் சிறுகதை உலகத்துக்குப் புதிய பக்கங்களைக் காட்டுங்கள். உங்களால் முடியும்!
அரசின் கடனில் தன் பங்கை அடைக்க முயலும், அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைக்கூடத்தில் பணிபுரியும் கதிர்வேல் என்பவரின் கதை. உண்டியல்களை எல்லாம் உடைத்து, வீட்டைத் துடைத்துப் பணம் சேகரித்து தன் ஆலோசனைகளுடன் அவர் அரசாங்கத்துக்குப் பணம் அனுப்பி வைக்க, அதற்குப் பதிலாக, பரிசாக அரசிடமிருந்து அவரது நேர்மையை சந்தேகித்துக் கேள்விகளும், அவர்மேல் ஒழுங்கு நடவடிக்கைக்கான பரிந்துரைகளும் வருவது எதிர்பாராத அதிர்ச்சித் திருப்பம்.
கற்பனை ஆனாலும் மிகவும் யதார்த்தமாக நல்லவர்களின் நிலையைச் சொல்கிறது கதை. நேர்மறை மாற்றங்களை விரும்பும், முயலும் நல்லவர்களுக்குக் காத்திருக்கும் அச்சுறுத்தல்களை, சவால்களை, சோதனைகளை உருவகமாக சொல்வதாகவும் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
கதை சொன்ன விதத்தில் உலகத் தரம் தெரிகிறது. வாழ்த்துக்கள் ஆர்னிகா நாசர்! ஒரு காலத்தில் உங்கள் கதைகளும் ஆன்டன் செக்காவ்வின் கதைகள்போலக் கடல்கள் தாண்டிப் பேசப்படலாம்.
நீங்கள் ஏன் உங்கள் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது?
சில பொது ஆலோசனைகள் :
ஒரு வாசகியாக, என் வாசிப்பில், சில கதைகளில் நான் உணர்ந்த, சொல்ல நினைக்கிற சில விஷயங்கள் :
வாசித்த எல்லாக் கதைகளுமே அருமை. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த குவிகம் இணையதளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
எனக்கு பூனையை பிடிக்காது!
தப்பு, தப்பு…… பூனைகளைணு மாற்றி வாசியுங்கோ. பூனையாம் பூன. அதேன்ன….. நம்ம கண்ணுக்குள்ளயே ஏதோ தேடற பார்வை…’சீ, நீ ஒரு பதர்’ அப்படின்னு பார்க்கிற மாதிரி ஒரு அலட்சிய பார்வ…. மீசையாம் மீசை…. நார் நாரா உதடுக்கு மேல ஈக்கில் போல … பாக்கவே சகிகல… உற்ற்ற்… உற்ற்ற் எணு எப்பவும் வயிற்றுக்குள இருந்து ஒரு இரைச்சல் சத்தம் வேற. வயிறா இல்ல பாக்டரியா? வால் மட்டும் என்னவாம்? எங்க ஜிம்மிக்கு புசு புசுண்ணு என்னமா பஞ்சு மாதிரி சாஃப்டான வாலு…. பாம்புக்கு ஸ்வற்றர் போட்டாபல இருக்கும். பூனையாம் பூன….. ஏதோ திட்டம் போட்டு ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வச்சி தலய மெதுவா திருப்பி பார்த்திண்டு அப்புறம் அலட்சியமா போறப்ப சினிமால ‘உன்ன அப்புறமா வந்து கவனிக்கறணு’ வில்லன் சொல்லறாப்பல இருக்கும்.
என்ன…. ஒரே குற சொல்லற சண்டைக்காரினு நினைச்சீங்களோ? மாமா கூட அம்மா கிட்ட இதேதான் சொன்னார். “கொண்டு வர்ர எல்லா வரன்களையும் வேணாம் வேணானு உதைச்சி தள்ளுறா உன் மக. நாம பார்க்கிற பையங்க வேணாமா இல்ல கல்யாணமே வேணமா? அவளா பாத்து ஒரு டாக்டரையே ஐ.ஏ.எஸ் பையனயோ கூட்டிணு வரட்டும். ஜாம் ஜாம்னு நானே முன்னால நின்னு தாலிய எடுத்து கொடுக்கிறன்.”
மாமா மீது கோபம் பிச்சுகிணு வரும். டாக்டர், ஐ.ஏ.ஸ்ண்ணா கொம்பா? எதிர் வீட்டு கோமதியும்தான் பெரிசா ‘டாக்டர் மாப்பிள, டாக்டர் மாப்பிளணு’ பெரிசா பீத்திக்கிணு மூஞ்ச திருப்பிகிணு பெங்களூருக்கு குடித்தனம் போனா. எட்டு மாசம் தாங்கல….. தனியா டாக்ஸில வந்து இறங்கினா. பாவம்… அழுது முகமெல்லாம் வீங்கி…. என்ன இளவோ.
‘மஞ்சு… கோமதி கத தெரியுமோ? அவ…..’. அம்மா தொடங்கும் முன்னே ‘ஸ்டொப் இட் மா. டோண்ட் டெல் மி’ ணு சொல்லி கட் பண்ணறன். பொம்மனாட்டிக்குள்ள இருக்திற வலியையும் வேதனையும் ஒரு வேடிக்கையா பார்க்கிற சமூகம்…. நிராகரிக்கப்பட்டவள் அப்படீனு சமூகம் முத்திர குத்தி மூலயில போட்ட பொம்மையாட்டம் அவா வாழ்க்கை இப்போ. அந்த சோக சரித்தில ஒரு பார்வையாளனாக்கூட நா பங்கேற்க விரும்பல.
கோமதி என்னமா இருந்தா…? சிட்டுக்குருவியாட்டம் துரு துருண்ணு சைக்கிளில லைபிறறிக்கு போய் கட்டு கட்டா புஸ்தகங்க எடுத்துண்டு வந்து திண்ணையில இருந்து படிப்ப்பா. அவளுக்கும் அந்த கதைகளில் வர்ராப் போல யாரோ ஒரு கற்பனை காதலனோட என்னமா நேசம் இருந்திருக்கும்.
பெங்களூர்ல என்னெல்லாம் நடந்திடுக்கும்னு நா கற்பனை பண்ணறன்.
அவ புருஷன வேலைக்கு அனுப்புன புறம் சாதம் வடிச்சி காய்கறி நறுக்கி நெய், கடுகு, கறிவேப்பில போட்டு தாளிச்சு அவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சி வச்சி அப்புறமா வீட்ட எல்லாம் பெருக்கி அவன் டிரஸ் எல்லாம் மடிச்சி வைச்சி அப்புறமா வாஷ் எடுத்து பின்ன ஒரு புஸ்தகத்த படிச்சினே ஒரு குட்டி தூக்கம். ஆறு மணி….. அவன் வந்து கதவ தட்டறான். இவ ஓடிப்போய் கதவ திறக்கிறா. ‘என்ன?.. முன் ஜன்னல் திறந்திருக்கு… அதுக்குள்ளால் முன்னால இருக்கிற ஜிம்க்கு வாற பொற பசங்கள….’. என்ன ஆசையா அவனுக்காகவே அவ வாழறா…… அந்த எருமைக்கு அது புரியனுமே? கோமதி பீரிட்டு வந்த அழுகய சேல தலப்பால மூடி அடக்கிகினு கட்டில்ல குப்பற விழுந்து அழறா. அவா உடம்பு குலுங்கி குலுங்கி அதிருது. இந்த வேதன எல்லாம் யாருக்கும் தெரியறதில்ல. ‘ஐய… புருஷன உட்டுபிட்டு வந்தவனு’ ஒரு வசனத்தில ஜனம் என்னமா பச்சகுத்துது. கோமதி வேதன யாருக்கு புரியும்? அவா சுமைகளை இறக்கி வைக்க தோள்களில்ல.
புத்தகத்தில படிச்ச அந்த காதல் கதைகளில என்னமா அவன் ஆபீஸ்ல இருந்து பூ வாங்கிணு வந்து அவ கூந்தல்ல வைச்சி அப்படியே கட்டி அணைச்சி…..
கணவன பிரிஞ்சி வாழனும்ணு எடுக்கிற முடிவு என்னா பெரிய முடிவு!
வாழ்க்கையின் எல்லையில நின்ணு எடுக்கிற முடிவு.
அம்மா தெனமும் கல்யாண பேச்ச எடுக்கப்ப எனக்கு கோமதி ஞாபகம் வரும். பெங்களூர்ல நடந்த ஒண்ணும் எனக்கு தெரியாது. ஆனா என் கற்பனையே உண்மையா இருந்திச்சினா? அம்மம்மா…..அதேல்லாம் என்னால் முடியாதம்மா. தெரிஞ்சே தன்ன பலி கொடுக்கற வாழ்க தேவைதானாணு எனக்கு தோணறது.
“வை டோண்ட் யூ கெட் மறிட் “…… என்னமாய் கேட்டான் ராகவன்? அட, ராகவன பற்றி சொல்லவே இல்ல இல? நா பீ.ஏ முடிச்சிணு சென்னை ரெயில்வே ஆபீஸ்ல எக்கவுண்டிங் செக்சன்ல வேல பார்த்தனா…. ஒரு நாள் ராமனாதன் சார்தான் ராகவன அழைச்சுண்டு வந்து எனக்கு இன்டடியூஸ் பண்ணறார்… “ஹி இஸ் ராகவன்… இண்ணையில இருந்து உங்க அண்டர் ஸ்டடி. டீச் ஹிம் எவ்ரிதிங்”.
நா நிமிர்ந்து பார்க்கிறன். ஆறடி உயரம்…. வெள்ள சேட் பாண்ட் போட்டு ‘காதலிக்க நேரமில்லை’ ரவிசந்திரனாட்டம் அடக்கமா சீவின முடி….. எக்ஸ்ரா கிறீம் போட்டாப்போல….. மினுங்குது. அடர்தியா புருவம்……ரண்டு புருவமும் நடுவுல சந்திக்குது….நோ இடைவெளி. காலேஜ் பையனப் போல துரு துருணு கண்கள்… அரும்பு மீசை.
பீகாம் படிப்பு …. இள வயசு.. என்ன இள வயசு?….. என்ன விட ரெண்டு வயசு கம்மி. அதால சொன்னதெல்லாம் சும்மா பஞ்சில மை கொட்டினாப்போல மூளைல ஊறி நின்னிரிச்சி. கற்பூர மூள.
நா சொல்லிக் கொடுக்கிறதல்லாம் கவனமா கேட்டுண்ணு ஸ்கூல் பையனாட்டம் நோட்ஸ் எழுதிகிணுவார். எழுதிகிணுவான் அப்பிடீனு சொல்ல தயக்கமா இருக்கு. அட, அப்படி ஒன்றும் என் மனசில இல்லீங்க. மனுஷாளுக்கு ஒரு பொம்மனாட்டி கொடுக்கிற மரியாதணு வச்சுக்கங்களேன்.
ராகவனப் பற்றி அப்படி ஒணும் பெரிசா தெரிஞ்சிக்க எனக்கு ஆர்வம் இல்ல. என்ன?… நான் என்னா கட்டிக்கவா போறன்?
அவரா சொல்லுவார் : ஊர் வேலூர் . சென்னையில் அத்தை வீட்டில் குடியிருப்பு. வீக்கென்ட் ஊருக்கு போயிருவார். வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவரர் கோயில், இலட்சுமி பொற்கோயில் அப்புறம் திப்பு சுல்தான் வரலாறுணு கதகதையா சொல்வார். ஏ குட் ஸ்டோரி டெல்லர். கோட்டை கோயில் பற்றி யெல்லாம் சொல்லறப்ப சட்டணு நிறுத்தி “டல் மி…. வாட் டிட் ஐ சே நவ்?” அப்படிணு கேள்வில்ல கேப்பரு! அதனால நா ரொம்ப உன்னிப்பா காலேஜ் பொண்ணு போல கேட்டுகிணு இருப்பேனாக்கும்.
ஒரு நாள் வேல முடிஞ்சாப்பறம் அவர நம்ம வீட்டுக்கு கூட்டியாந்தேன். தயங்கி தயங்கித்தான் சம்மதிச்சு வந்தார். எங்க வீதில இருக்கிறவா எல்லாரும் என்ன ஏதுண்ணு பார்க்கிறா. அம்மா பஜ்ஜியும் காப்பியும் கொடுத்து உபசரிக்கறா. அம்மா ரொம்ப சிரத்தையோட துருவி துருவி பூர்வீகம் எல்லாம் அறிஞ்சுண்டா. எனக்கு என்னவோ போல் இருந்தது. அவர் போனதும் அம்மா: “ரொம்ப நல்ல பையன். உன்ன விட அத்தன உசரமில்ல…. நல்ல குடும்பம்”. அம்மாவின் பேச்சு எங்கு போகிறதுணு எனக்கு தெரியறது. எல்லா தாய்மாருக்கும் உள்ள அந்த ஆதங்கம் அம்மாவிற்கும். அது எனக்கும் புரியறது. நான் பொறந்து மூணு வருஷத்தில அப்பா மார்பு வலிணு நெஞ்ச புடிச்சுணு பரலோகம் போனப்புறம் அம்மாதான் மாமாவோட துணையோட தனிமரமா நின்னு என்ன படிக்கவச்சி ஆளாக்கினா. அவளுக்கு புரியறது தனிமையோட வலி. ஒரு ஆண் துணை இல்லாம வாழற அந்த வாழ்க்கையோட வேதனைய நானும் அம்மா முகத்தில கண்டிருக்கேன். சமையல் கட்டில முந்தானய வாயில வைச்சு அடைச்சிகினு அவா குலுங்கி அழறத நான் பாத்திருக்கேன். ‘மா, ஆர் யு ஓகே?’ ணு கேட்டா தன் கவல எனக்கும் தொத்துநோய் போல பரவக்கூடாதேணு ‘ஒண்ணுமில்ல…… இந்த புகை’ ணு ஏதோ சாக்கு சொல்லுவா. என்னதான் காலம் மாறிண்டே வந்தாலும் ஒரு பெண்ணோ கவல மாறாமலே இருக்கிறது ஒரு சாபம்னு எனக்கு படறது. புருஷன் போனாப்புறம் தனிமைல வாழற வாழ்க்க சோப்பு கட்டி தண்ணீர்ல கரையற மாதிரி கரைஞ்சி போகும் வாழ்க்க. அத அவா வாழ்ந்துதான் கழிக்கணும்.
‘வன் ஸ்வீட் நியுஸ்’ ணு ராகவன் ஒரு திங்கள் காலையில சொல்லாறப்போ எனக்குள்ள என்னவோ பண்ணறது. ‘அம்மா ஒரு மேரேஜ் அரேஜ் பண்ணிட்டாங்க’. இப்படி ஒரு நியூஸ் ஒரு நாள் அவர் வாயில இருந்து வரும்ணு நான் எதிர்பார்த்ததுதான். ஆனா அத உண்மையா கேட்கறப்போ என் காலுக்கு கீழ இருந்து யாரோ இந்த பூமிய இழுத்தவிட்ட மாதிரியும் நான் ‘அலிஸ் இன் வண்டர் லாண்ட்’ ல அந்த பொண்ணு கிடு கிடுணு பாதாளத்தல விழற மாதிரியும் ஒரு பிரமை. என்ன சுற்றி ஆபீஸ்ல இருக்கிற டைப்பிறைட்டர், காப்பி கப், ஃபான், மேச, கதிரை எல்லாம் சுத்தறது.
‘ஆர் யூ ஓகே?’
‘யெஸ்…. யெஸ்’ணு நான் சமாளிச்சிகிறன். கையால மேசைய இறுக்கப் பிடிச்சிணு மெதுவா முகத்த திருப்பி இல்லாத பைஃல தேடறதா பாசாங்கு பண்ணறன்.
அம்மா தோள்ல சாஞ்சி ‘ஓ’ணு அழணும் போல தோணிச்சு.
“வை டோண்ட் யூ கெட் மறிட் ” ணு ராகவன் எப்பவோ கேட்டப நான் ‘ஏன்….. ஒரு பொண்ணு சிங்கிளா வாழக்கூடாதோ? ஒரு மனுஷாளுக்கு வாழ்க்கப்பட்டு ஒரு அடிமை போல அவன சந்தோஷப்படுத்தற, சயன சுகம் தரும் சரீரமா, புள்ள பெத்துகிற யந்திரமாதான் வாழனும்னு ஒரு நியதியா என்ன?’ இத நியாயப்படுத்தறாப்பல ஒரு பெரிய லெக்சரே அடிச்சு முடிச்சன். ராகவனுக்கு ஏன்டா கேட்டோம்ணு இருந்தது. இப்படி ஒரு கேள்வியை கேட்பதற்கு நான்தான் அந்த உரிமையை அவருக்கு கொடுத்தேன் என்பதை ஏனோ என் மனம் சம்மதிக்க மறுத்தது.
இப்போ மட்டும் ஏன் ராகவனின் வெடிங் நியூஸ் என்னை இப்படி போட்டு உடைக்கணும்ணு புரியல்ல.
‘ஆம் ஐ இன் லவ் வித் ஹிம்?’ணு நான் என்னையே கேட்டுகிறன். இதுதான் மனுஷாள் சொல்லற ஊமைக் காதலோ?
‘டோண்ட் பி ஸ்டுப்பிட்’ ணு மனசு சொல்லறது. மனசு, இதயம், ஏக்கம், சோகம்,…… இதெல்லாத்தையும் ஒரு ஊறுகாய் பாட்டலில அடைச்சு பொம்மனாட்டிங்க பொறக்கறப்பவே ஆண்டவன் கூடவே கொடுத்து அனுப்பி வச்சானோணு தோணறது. அப்பப்ப தொட்டுக்க சொட்டு கண்ணீரும் சேத்து வச்சடறான்.
ராகவன் திருமணத்திற்கு நானும் ஆபீஸில இருந்த எல்லா மனுஷாள் கூட போயிடறன். பொண்ணு வாட்டசாட்டமா லட்சணமா இருந்தா. நல்லா இருங்கணும்னு வாழ்த்தி எனக்கும் ராகவனுக்கும் இருந்த ஆபீஸ் பந்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளிய வைச்சன். இனி ராகவன் அவாக்கு சொந்தம். அவரை என்றும் என் சொந்தமாக வைச்சுகணும்னு நான் நினைச்சதே இல்லையே!
நா அவரை எப்படி பார்த்தேணு இன்றைக்கு கூட தெளிவா தெரியல. ஒரு வேள அவரா வந்து ‘ஐ லவ் யூ’ ணு சொல்லியிருந்தா ‘ஓகே’ணு அந்த பந்தத்தில என்னை இணைச்சிண்டு நாலு புள்ள குட்டிய பெத்துண்டு மற்ற பொண்ணுக போல ஒரு லெளகீக வாழ்க்கையை நானும் அமைச்சுண்டு இருப்பேனோ தெரியாது. இது ஒரு அவிழாப் புதிர்!
இப்போ நெனைச்சு என்ன பண்ண?
*. *. *. *. *. *. *. *. *
வருஷங்கள் என்னமா உருண்டோடிப் போச்சு? அம்மா இப்போ படுத்த படுக்கையா பாரிசவாதம் வந்து இடது கையையும் காலையும் இழுத்துகிணு ஒரு குழந்த மாதிரி ‘மஞ்சு. அத தா, இத எடு’ணு கேட்டுண்டே இருக்கா. நா கண்ணாடில எம் மூஞ்சிய பார்க்கிறன்..,,, தலமுடில வெள்ள கீற்று பரவி காது வரைக்கும் வந்தாச்சு. முகத்திலும் மடிப்புகள் மெதுவாய் கோழிக் கீறல்களாய், விஷேசமா கண்ண சுற்றி வரையத் தொடங்கிடறது. காலம் என்னமாய் தன் கொடிய கலப்பையால பொம்மனாட்டிங்க செளந்தரியத்தை உழுது சின்னாபின்னப்படுத்துறது?
அம்மாவுக்கு முந்திரி போட்டு பால் பாயாசத்தை அடுப்பில் கிளறி மெதுவா இளம் சூட்டில கரண்டியால பருக்கிறன். பாயாசமும் அவா எச்சிலும் கலந்து ஒரு பால் ஆறாகி மெதுவாய் கடவாயில வடிஞ்சி கழுத்தில ஓடி அவாள்ட சுருங்கின கழுத்து மடிப்புல தேங்கி நிக்கிறது. மெதுவாய் அதை துடைத்து அவள் கண்களை உற்றுப் பார்க்கிறன். ஆண்டவன் என்னமா மனுஷாள இப்படி வதைத்து அவாளுக்கிணு இருந்த அடையாளத்தயும் சௌந்தரியத்தையும் அழிச்சி அலைக்கழித்து ‘நீ வாழ்ந்தது போதும்னு’ சொல்லாம சொல்லி சோதிக்கிறான்?
‘இருந்தது போதும். கிளம்பு போகலா’மிணு அதே செளந்திரியத்தோட அழைக்கிணு போனாத்தான் என்னவாம்?
மனுஷாள் ஏன் வயசாகணும்னு விஞ்ஞானம் புட்டு புட்டு வச்சாலும் எனக்கு அத ஏத்துக்கற மனசு இல்ல.
எனக்குள்ள நடந்துகிணு இருக்கிற இந்த தார்மீக விவாதம் எல்லாம் அம்மாவுக்கு தெரியப் போவதில்ல. ஆனா அவாளுக்காகத்தான் நா என்னமா எனக்குள்ளேயே ஒரு ஞான தர்க்கத்த அண்டவனோட போடறணு எப்படி அவாளுக்கு புரியவப்பணு தெரியாம மெதுவா அவா கழுத்தில் தேங்கி நிக்கற பால சேலத்தலப்பால அழுத்தி தொடக்கிறன்.
மனுஷாளுக்கு வர்ற சோகம், வஞ்சன, குரோதம்…… இதேல்லாத்தையும் இப்படி தொடச்சி எறிய முடிஞ்சா என்ன நல்லா இருக்குமிணு யோசிச்சி எனக்குள்ளேயே சிரிச்சிகிறன்.
சுவர் கடிகாரம் ‘டங்…. டங்… டங்’ னு பத்து அடிச்சி ஓயறது. வெளி முற்றத்தில நல்ல இளவெய்யில் காயறது.
அம்மாவ பன்னிரண்டு மணிக்குத்தான் குளிப்பாட்டணும்.
அதுவர என்ன செய்யலாமிணு யோசிக்கிண்டு முன் முற்றத்திக்கு வந்து அப்பாடானு கதிரையில சாஞ்சு வானத்த அண்ணாந்து பார்க்கிறன். வெள்ள பஞ்சு பஞ்சா வானத்தில் மேகம் சோம்பலோட கும்பல் கும்பலா நகர்ந்துகிணே இருக்கு. நா சின்ன குழந்தாட்டம் வானத்தில முயல தேடறன். என்னோட கவனெல்லாம் வானத்தில.
“மியாவ்” ……..” மியாவ்”
ஏதோ கனவுல இருந்து விழிச்ச மாதிரி சத்தம் வந்த திசையில கண்கள இடுக்கி பார்க்கிறன்.
அடுத்த வீட்டு மங்களம் மாமி மதில் சுவரில ஒரு வெள்ள பூனை. என்ன ஒரு அலட்சியமா பாத்திண்ணு அப்புறம் எங்க தோட்டத்தில இருந்த வைக்கோல் கட்டில் பாய்ந்து ஒரு சின்னப்புலியாட்டம் நா பதியம் போட்ட தக்காளி செடிகளுக்கால நடந்து என் முன்னால இருந்த படியில ஏறி எம்முன்னால வந்து முகத்தை நிமிர்த்தி என் மூஞ்சிய பார்க்கிறது.
மெதுவா குனிஞ்சி முன் காலால தன் முகத்த நீவி விடறது. ‘இந்த சனியனுக்கு என்ன திமிர்’ ணு நா யோசிக்கிறன்.
இண்ணைக்குத்தான் நா இத முதல்ல பார்க்கிறன்.
மங்களம் மாமியோட ஆத்துக்காரர் போன மாசம்தான் நெஞ்சு வலியில கண்ண மூடிண்டார்.
ஓ! அந்த தனிமய போக்கத்தான் இந்த செருக்கு புடிச்ச இளவ அவா வளர்க்கிறாரோ?
இப்போ நா பூனய உத்து அதனோட கண்ணுக்குள்ள பார்க்கிறன். என்னமோ…… அது கண்கள சோகமா வைச்சிணு என்னையே பாக்கிறது.
அது என்ன என்னமோ பண்ணுறது.
வாழ்க்கையில் பல சமயம் நாம காரணம் புரியாம ஏதோ ஒரு ரசனயையோ, மனுஷாளையோ, வெஜிடபிளையோ வெறுகிறோமே? எல்லாத்துக்கும் காரணம் காரியம் பாத்தா செய்யறம்? ஏதோ மனசுல ‘டக்’ எணு அந்த வெறுப்பு அம்மியில உளியால அடிச்சாப்பல பதிஞ்சிடறது.
நா ஏதோ ஒரு மந்திரவாதியால மனோவசியம் செய்யப்பட்ட விக்டிம் மாதிரி எழுந்து போய் பிரிஜ்ஜை திறந்து ஒரு தட்டில பாலை ஊத்தி மெதுவா மெதுவா வந்து பூன முன்னால் வைக்கறன். அது தட்டையும் என்னையும் மாறி மாறி பார்க்கறது. ஒரு தயக்கம். அப்புறம் மெதுவா ரெண்டு அடி வச்சு முன்னால வந்து தட்ட மோர்ந்து பார்க்கறது. அப்புறம் அது குனிஞ்சி பால ஒரு நக்கு நக்கி அப்புறம் நிமிர்ந்து பார்க்கிறது. பார்வையில ஒரு பரிவு இருக்கிறதா எனக்கு படறது.
“என்னை வாழவைத்த தெய்வமே. என் வாழ்நாள் பூரா உனக்கு கடமைப்பட்டிருக்கேன். செய் நன்றி மறவேன்”…..ஏதோ சினிமாப் பாணியில பூன பேசறதா யோசிச்சி நா சிரிச்சிகிறன்.
நா பலமா சிரிச்சிரிக்கணும்….. அம்மா உள்ள இருந்து “யாரும்மா வந்திருக்கா” ணு கேக்கறா.
நா என்ன சொல்வதாம்? ‘அம்மா, மிஸ்டர் பூனை இஸ் ஹியர்’னு சொன்னா அவா நம்பவா போறா? இரு பரம விரோதிகளின் சந்திப்பு!
பூன தட்ட காலி செஞ்சி அப்புறம் விடாம தட்ட தொடர்ந்து நக்குறது. ரோஜாப்பூ கலர் நாக்கு தட்ட தொட்டு தொட்டு மறையறத நா பாத்திண்டே இருக்கேன். தட்டு ‘சர்ர்ர்… சர்ர்ர்’னு வழுக்கிக்கிணு மெதுவா நகர்ந்து நகர்ந்து என் காலடிக்கு வந்து நிக்கறது. நா மெதுவா குனிஞ்சி பூனேட முதுக தடவறன். ஜிம்மியோட ரோமமும் இதே மாதிரி சொஃப்டா இருந்தது இப்போ ஞாபகத்தில வர்றது.
பூன நிமிந்து என பார்த்து “மியாவ்” ணு என் அன்ப ஆமோதிக்கற மாதிரி ஏதோ சொல்ல நெனக்கறது. என் கால்ல மெதுவா தன்னோட ஒடம்ப உரசறது. அதோட ஸ்பரிசம் என்ன என்னமோ செய்யறது. என்ன என்னமா நம்பி தன்ன பரிபூரணமா என் காலடியில் ஒப்படைத்து ‘நீ என என்னவேணுமானாலும் செஞ்சிக்கோ’ அப்படீனு சொல்லற பரிசுத்தமான அன்ப நா உணர்ந்து பூரிக்கிறன். அதோட நட்பின் அடர்த்தி எனக்கு இப்போ புரியறது. ‘நமக்குள்ள என்ன பகை?’ அப்படீணு கேக்கணும் போல இருக்கறது. ஒரு அதீத உரிமையோடு இந்த ஜீவன் என்னுள் நுழைந்து என்னை ஆட்கொள்வதை நான் உணர்கிறேன்.
ஒரு பந்தத்திற்குள் என்னை கட்டிப்போட முயலும் இந்த மாயக்கயிறு இத்தனை நாள் எங்குதான் இருந்ததாம்?
நா குனிந்து விரலால பூனேட கழுத்துக்கு கீழ கீச்சு கீச்ச மூட்டறன். அது தன் முன் கால் இரண்டாலேயும் என் கைய கவ்வுறது. தன்னோட கால் நகங்கள உள்ளிளுத்து ‘நா இவாள காயப்படுத்தக் கூடாது’ணு ஒரு கரிசனையோட துளிர்க்கும் இந்த புது உறவை கொண்டாடறது.
இந்த விளையாட்டு இருபது நிமிடம் வரை தொடர்கிறது . அப்புறம் மெதுவா சில அடிகள் வைத்து என்ன விட்டு விலகிச் சென்று தன் கழுத்தை திருப்பி என கனிவோடு பார்த்து பின் வந்த வழியே ஓடி மதிலின் மேல் பாய்ந்து மறைகிறது.
நா இப்போ தினமும் காலையில அம்மாவுக்கு பாயாசம் கொடுத்தாம்புறம் ஒரு தட்டல பால் வார்த்து வச்சி என் நட்பிற்காய் காத்திருக்கிறேன்!
‘யெஸ், ஐ டூ லைக் கட்ஸ் நவ்!’
ஆமா, எனக்கு இப்போ பூனைகளை பிடிக்கும்!
குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
************************************************************
வானத்தில் பார் இங்கே நிலா ! நிலா ! நிலா !
அழகான பந்து போல் நிலா ! நிலா ! நிலா !
அம்மா காட்டிய நிலா ! நிலா ! நிலா !
ஆஹா தெரியுது நிலா ! நிலா ! நிலா !
எத்தனை முறை பார்த்தாலும் நிலா ! நிலா ! நிலா !
போரே அடிக்காத நிலா ! நிலா ! நிலா !
எங்கே நான் சென்றாலும் நிலா ! நிலா ! நிலா !
என் கூடவே வருகுது நிலா ! நிலா ! நிலா !
மேகத்தின் ஊடே நிலா ! நிலா ! நிலா !
ஒளிந்து விளையாடுது நிலா ! நிலா ! நிலா !
ஓடி நான் சென்றாலும் நிலா ! நிலா ! நிலா !
ஓடி விளையாடுது நிலா ! நிலா ! நிலா !
நட்சத்திரக் கூட்டத்தில் நிலா ! நிலா ! நிலா !
ராணி போல் நிக்குது நிலா ! நிலா ! நிலா !
மம்மு சாப்பிடும்போது நிலா ! நிலா ! நிலா !
கண்ணையே சிமிட்டுது நிலா ! நிலா ! நிலா !
வந்து பார் அம்மா நிலா ! நிலா ! நிலா !
வட்டமா அழகா நிலா ! நிலா ! நிலா !
வியப்பாய் இருக்குது நிலா ! நிலா ! நிலா !
வேடிக்கை காட்டுது நிலா ! நிலா ! நிலா !
********************************************************************************
ஹையா ! ஹையா ! இன்றெனக்கு லீவு விட்டாச்சு !
ஸ்கூல் கிளாஸ் ஒன்னும் இல்லை – எல்லாம் கட்டாச்சு !
எத்தனை நேரம் வேணும்னாலும் தூங்கிக்கலாமே !
புரண்டு புரண்டு படுக்கையிலே உருண்டிடலாமே !
நேரம் காலம் எதுவும் இல்லை !
ஹோம் ஒர்க் எதுவும் இல்லையே !
அம்மா என்னை விரட்ட மாட்டார் !
யாரும் என்னை துரத்த மாட்டார் !
ஓடி ஓடி ஓடி ஓடி விளையாடிடுவேனே !
உருண்டு புரண்டு சண்டை எல்லாம் செய்திடுவேனே !
கிரிக்கெட் புட்பால் என்று எல்லாம் ஆடிடுவேனே !
வீட்டில் என்னைத் தேடும் வரை ஓடிடுவேனே !
மால் கோவில் என்று நானும் தினமும் சுற்றுவேன் !
அண்ணன் தம்பி அனைவரோடும் ஆடிப் பாடுவேன் !
கடற்கரையில் கால் நனைத்து குதித்திடுவேனே !
சினிமா டிராமா என்று நானும் பார்த்திடுவேனே !
ஆஹா ஆஹா லீவு முழுக்க எனக்கு ஜாலிதான் !
நண்பர் கூட்டம் அனைவரோடும் அடிப்பேன் லூட்டிதான் !
மாலு பாலு சங்கர் சோனி – அனைவரும் வாங்க !
லீவு முழுக்கக் கூத்தடிப்போம் – ஓடி வாங்கடா !
*********************************************************************************************
கீதாவிற்கும் ரகுவிற்கும் திருமணம் நிச்சயம் ஆகப்போகிறது. ரகுவின் வீட்டிலிருந்து பெண் பார்த்து சென்றவுடனே அவன் சம்மதம் தெரிவித்து விட்டான். ரகுவின் பெற்றோர்கள், ஓர் நாளாவது போகட்டும் பொறுத்து பதில் கூறலாம் இல்லாவிடில் , ‘சரியான பறக்காவெட்டி குடும்பம்,’ என்று நினைத்து விடுவார்கள் என்று பயந்து, மறுநாள் காலை ரகுவின் பதிலை தெரிவித்தனர். கீதாவின் பெற்றோரும் திருமணத்திற்கு வேகமாக தலையசைத்து, “ஓ! உங்க குடும்பத்த எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு… ரகு மாதிரி தங்கமான பையன் கிடைக்க எங்க கீதா கொடுத்து வெச்சுருக்கணும்,” என்று ஏகத்துக்கு புகழ்ந்து, கீதாவின் அலைபேசி எண்ணையும் உடனுக்குடன் பகிர்ந்தனர்.
ரகு, கீதாவின் ஃபோன் நம்பர் கிடைத்த குஷியில் குதுகலிக்க, கீதாவோ, ரகு நல்லவனா? கெட்டவனா? என்று மனக் குழப்பத்தில் சிக்கி இருந்தாள். “ எவன் ஓகே சொன்னாலும் என்னை அவன் தலைல கட்டிடுவாங்களா,” என்று புலம்பினாள்.
ரகு, இரண்டு நாள் ஓயாமல் திட்டம் போட்டு, குட் மார்னிங், குட் நைட், இன்னிக்கு நாள் எப்படி போச்சு, என்று வாட்ஸ்ஆப்பில் அவளோடு உரையாடி, ஒரு வழியாக மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை மொபைல் ஃபோனில் அழைத்தான். கீதாவும் அதனை எடுத்தாள். அந்த தடுமாற்றம் நிறைந்த முதல் அலைபேசி உரையாடல் துவங்கி, தினமும் ஃபோனில் கடலை போட ஆரம்பித்தார்கள் ரகுவும் கீதாவும்.
ஒரு வாரம் இப்படியே ஃபோனும் கையுமாக நகர, நிச்சயத்திற்கு முன்பு ஒரு முறை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்று இருவருக்கும் ஆசை எழுந்தது. காலை மாலில் ஓர் திகில் திரைப்படத்திற்கும், பிறகு ஓர் நல்ல உணவகத்திற்கும், நேரமிருந்தால் சாயங்காலம் கடற்கரைக்கு சென்று அறுபடை வீடு முருகனை தரிசித்து, சிறிது நேரம் கடலருகில் காற்று வாங்கி வரலாம் என்று திட்டம் தீட்டினர் இருவரும்.
திருமணத்திற்கு முன் தனியே சந்திப்பது என்பது ஓர் குஷியான அனுபவம். அதனை அனுபவித்தவர்களுக்கு அதன் த்ரில் புரியும். இந்நிலையில் ரகு மற்றும் கீதாவின் மனதில் எண்ணற்ற ஆசைகள்.
கீதாவின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், கீதாவை யார் தயவையும் எதிர்பாராமல் தன்னம்பிக்கையுடன் வளர்த்தனர். ஒப்பீடு செய்து வளர்க்க அவள் குடும்பத்தில் அண்ணன், தம்பி இல்லாத காரணத்தால், பல நேரங்களில் கீதாவிற்கு அவள் ஓர் பெண் என்பதே மறந்துவிடும். அப்படி ஓர் குடும்ப சூழலில் வளர்ந்தாள் அவள்.
ரகுவை பற்றிய அவளது எதிர்பார்ப்புகளை சற்று பார்ப்போம்…
ரகு மாடர்னா ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து அவனது நவீன ரக பைக்கில் வர வேண்டும். வந்தவன் அவளை அவளது வீட்டிற்கு சென்று அழைத்துச் செல்ல வேண்டும். அவள் வீட்டு நபர்களிடம் எதார்த்தமாக, முடிந்தால் சற்று ஹாஸ்யமாகவும் உரையாட வேண்டும். அவளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். அலைபேசியை கவனியாமல் அவளை பார்த்து பேச வேண்டும்; குறிப்பாக கண்களை பார்த்து பேச வேண்டும், முக்கியமாக அவள் கூறும் விஷயங்களை காது கொடுத்துக் கேட்டு உள்வாங்க வேண்டும் என்பது போல மன கோட்டைகள் பலவற்றை கட்டினாள். மேற்கூறிய விஷயங்களில் ரகு பாஸ் மார்க் வாங்கினால், அவனை கடற்கரையில் அவளது கைகளை பிடிக்க அனுமதிக்கலாம் என்று எண்ணினாள்.
கீதா ஒரு ரகம் என்றால், ரகு வேறு ரகம். அவன் கறாரான அப்பாவிற்கும், பழைய பஞ்சாங்கம் அம்மாவிற்கும் பிறந்த ஒரே மகன். அவனுடைய குடும்பத்தில் சகோதரிகள் இல்லாததால், பெண்களுடன் பழக அவனுக்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. தோழிகள் என்று சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை. காதலிக்கவும் தைரியம் இல்லை. ஆனால், அவனுக்கு கீதாவை பார்த்தவுடன் பிடித்து போய்விட்டது. எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பது இவர்கள் கதையில் பலித்துவிட்டது.
அவன் மனதில் ஓடும் எண்ணங்களை சற்று பார்ப்போம்…
பைக்கில் வேகமாக செல்ல வேண்டும். அவள் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அவனை அனைத்தபடி அமர வேண்டும். திரைப்படத்தில் திகில் காட்சிகளின் போது அவள் பயந்து இவன் தோளில் சாய, அவன் அவளது பயத்தை போக்கி, அவளது தோளை பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும். எதாவது ஓர் உடுப்பி ஹோட்டலில், குறைந்த செலவில் வயிறு நிரம்ப சாப்பிட வேண்டும். அவளோடு ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் நடக்க வேண்டும்; அப்போது யாரும் பார்க்காத நேரத்தில், சரியான சந்தர்ப்பம் அமைந்தால், அவளுக்கு ஓர் முத்தம் தர வேண்டும் என்று எண்ணியபடி கனவுலகில் மிதந்தான் ரகு .
இதெல்லாம் டிரெய்லர் தான் இன்னும் மெயின் பிக்சர் வரவில்லை என்பதைப் போல இப்போது நிகழ் காலத்திற்கு வருவோம்!
இரவு வெகுநேரம் அலுவலக வேலை செய்து, அவர்கள் சந்திக்கும் தினத்தன்று காலை 9 மணிக்கு தான் கண் விழித்தான் ரகு . அதற்கு பின் எங்கு ஷவரம் செய்வது என்று 3 நாள் தாடியுடன், கையில் கிடைத்த முதல் சட்டை பேண்ட்டை மாட்டிக்கொண்டு, காலை 11 மணி ஷோவிற்கு வீட்டிலிருந்து 9:30 மணிக்கு புறப்பட்டான் நம் கதாநாயகன்.
“என்ன பைக்லயா போற? முதன்முதல்ல அவள கூட்டிட்டு வெளியில போற, கார்ல போடா, அப்போ தான் மரியாதையா இருக்கும்,” என்றார் அப்பா .
“ என்ன நிச்சயம் கூட ஆகாம பொண்ணோட வெளியில போறியா? எங்க காலத்துல எல்லாம் கல்யாணம் முடிஞ்சு தான் பேசவே முடியும்! இவங்க தான் ஆசை படறாங்கன்னா? பொண்ண பெத்தவங்களுக்கு எங்க போச்சு புத்தி? இப்போவே என் பையன மடக்க பார்க்கறாங்க. அதெல்லாம் நீ ஒன்னும் போக கூடாது,” என்றாள் அம்மா.
“ அம்மா, பிளீஸ்… அவங்க வேண்டாம்னு தான் சொன்னாங்க, நாங்க தான் ஆசை பட்டோம். இப்போ முடியாதுன்னு சொன்னா நல்லா இருக்காது. அப்பா… கொஞ்சம் சொல்லுங்களேன்,” என்று கெஞ்சினான் ரகு.
அடுத்து அரைமணி நேர வாக்குவாதம் கழித்து, “ சரி போயிட்டு வா… ஆனா அவங்க வீட்டுக்கு போய் அவள கூட்டிக்க கூடாது… மெயின் ரோடு ல வந்து ஏற சொல்லு, என்ன ஏமாத்த கூடாது, நா அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி செக் பண்ணுவேன்… அப்பறம் சினிமா முடிஞ்ச உடனே வீட்டுக்கு வந்துடனும், நாள் முழுக்க சுத்த கூடாது,” என்று அறிவுரைகள் பலமாக கொடுத்து அம்மா வழியனுப்பிவைத்தார். ரகுவும் கிளம்பினால் போதும் என்று ஒருவாறு 10 மணிக்கு கிளம்பினான்.
அலைபேசியில் கீதாவை அரைகுறையாக சமாதானம் செய்து மெயின் ரோட்டிற்கு வரவழைத்தான் ரகு. அவனை பார்த்த கீதாவிற்கு பலத்த ஏமாற்றம். அவள் புத்தாடை அணிந்து, ஆசையாக அலங்கரித்து, அவனை பார்க்க கிளம்ப, அவனோ வியர்த்த முகத்துடனும், தாடியுடனும், அவன் நிறத்திற்கு சிறிதும் பொருந்தாத ஒரு சட்டையை மாட்டி வந்து நின்றான். அவன் இருந்த மன நிலையில், கார் என்ஜின் வேறு அடிக்கடி ஆஃப் ஆனது. “ இப்போ தான் கார் ஓட்ட கத்துகிட்டியா ரகு? தடுமாறாத ஓட்டு, நா ஒன்னும் கோவப்படல,” என்று அவனை தேற்றினாள் கீதா. அவனது பதற்றத்தை குறைக்கும் வண்ணம் இனிய காதல் பாடல்களை அலைபேசியில் போட்டு விட்டாள்.
11 மணி படத்திற்கு அவர்கள் 11.30 மணிக்கு மாலிற்கு செல்ல, மாலில் பார்கிங் நிரம்பிவிட்டது என்று கூறி அங்கே பணிசெய்யும் காவலாளி அவர்களை நிறுத்தினான். சுற்றி உள்ள தெருக்களில் அலைந்து, பாதுகாப்பான ஓரிடத்தில் அவர்கள் வாகனத்தை நிறுத்தி, அவர்கள் மாலிற்கு மீண்டும் வந்த போது மணி பன்னிரெண்டை தாண்டி இருந்தது. அவன் அதே பதற்றத்தோடு சினிமா தியேடரை நோக்கி நடக்க, அவள் அவன் கையை பிடித்து நிறுத்தி, சினிமா போகாட்டி பரவால்ல, முதல்ல ரிலாக்ஸ் ஆகு, வா ஒரு காபி குடிக்கலாம் என்று ஒரு கேபிடேரியாவிற்கு அவனை அழைத்துச் சென்றாள். அடுத்த ஒரு மணி நேரம் போவதே தெரியாமல் அவர்கள் மனம் விட்டு பேசினர். வந்த பில்லை கீதாவே கட்டி, “உனக்கு ஒரு சட்டை வாங்கித் தரட்டுமா? வா ஷாப்பிங் போகலாம்,” என்று அவனை அழைத்து துணிக் கடைக்குச் சென்றாள்.
ரகு, இவள் மற்ற பெண்களைப் போல் இல்லாமல் இப்படி இதமாக பேசுகிறாள், பழகுகிறாள், தனது குறைகளை பெரிது செய்யாமல் தன்னை மரியாதையுடன் நடத்துகிறாள் என்று ஆச்சரியப்பட்டான். இதற்கு நடுவில் அவன் தாயிடம் இருந்து இரண்டு மூன்று அழைப்புகள் வர, “ அம்மா, நாங்க சினிமா போகல, வண்டி பஞ்சர் ஆயிடுச்சு, அவள வீட்டுக்கு ஆட்டோ புடிச்சு அனுப்பி விட்டுட்டேன். ரமேஷ் தான் ஹெல்ப் பண்ணினான். இப்போ நானும் அவனும் ஷாப்பிங் போறோம். சாயங்காலம் வரேன்,” என்று விடையளித்தான் ரகு.
இதை கேட்டும், கேட்காதது போல உடை தேர்ந்தெடுத்துக்கொண்டு வலம் வந்த கீதாவிற்கு மனதில் சின்னதாய் ஒரு சந்தோஷம். ரகு அவனது அம்மாவிடம் பொய் கூறியதற்காக இல்லை, ஆனால், அவன் அவனது அம்மாவின் மனது புண்படாத வகையில், அதே நேரத்தில், அவளோடும் மாலை வரை நேரம் செலவிழிக்க போட்ட திட்டத்தை எண்ணி .
மாலை வரை இருவரும் மாலிலே நேரம் கழித்தனர். இதுதான் பேச வேண்டும் என்று இல்லாமால், பல விஷயங்களைப் பற்றி இயல்பாக பேசினர். ஓர் முன் பின் தெரியாத நபருடன் ஒரு நாள் முழுவதும் எதார்த்தமாக கழிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அன்று மாலை வீட்டிற்கு புறப்படும் சமயத்தில், பிரிய மனமின்றி இருவரும் விடைபெற்றனர். அந்த சந்திப்பிற்கு முன்னிருந்த அவர்களது எதிர்பார்ப்புகளும், திட்டங்களும் தவிடுபொடியான போதும், அன்று அவர்கள் இருவர் மனதிலும் ஓர் இணக்கம் மற்றும் புரிதல் ஏற்பட்டது. கண்களில் புலப்படாத காதல் என்னும் அந்த அழகிய உணர்வு இருவர் மத்தியில் துளிர் விட்டது.
படம்: கிறிஸ்டி நல்லரெத்னம்
வேதாளம் சொன்ன கதை
தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தை இழுத்துத் தன் தோளில் போட்டுக் கொண்டு காளி கோயிலை நோக்கி, உருவிய வாளைக் கையில் ஏந்தியபடி நடக்கத் தொடங்கினான்.
“நீயும் உன்னுடைய முயற்சியைக் கைவிடப் போவதில்லை. நானும் உனக்குக் கதை சொல்லாமல் இருக்கப் போவதில்லை” என்று அமைதியாக நடந்து கொண்டிருந்த விக்கிரமாதித்தனைச் சீண்டி விட்டுக் கதையைக் கூற ஆரம்பித்தது.
“வழக்கமான நிபந்தனை தான். கதையை முடித்ததும் நான் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தும் நீ சொல்லாவிட்டால் உன் தலை சுக்குநூறாக வெடித்து விடும். நீ சொல்லும் பதில் சரியாக இருந்தால் நான் மீண்டும் முருங்கை மரத்துக்குப் போய் விடுவேன்” என்று சொல்லி விட்டுக் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
“இது எதிர்காலத்தில் கலியுகத்தில் நடக்கப் போகும் கதை. அப்போது மக்களின் வாழ்க்கை எப்படியெல்லாமோ மாறியிருக்கும். அறிவியல் வளர்ச்சியும், தொழில் நுட்பங்களும் சேர்ந்து அன்றாட வாழ்க்கையை எளிதாக்கிய சூழல் நிலவும். இதை மனதில் வைத்துக் கொண்டு கதையைக் கேட்டுக் கொள்” என்றது வேதாளம்.
மூன்று பெண்களின் கதை.
மதுரை மாநகரில் சமீபத்தில் புது வீடு வாங்கிக் குடியேறியுள்ள ஜெயலட்சுமி, கடை வீதிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“என்ன கிச்சன் வேலை முடிஞ்சதா? கார்த்திகை வருது. விளக்கெல்லாம் வாங்கணும்னு சொன்னயே? இன்னைக்குப் போலாமா?” என்றார் கணேசன்.
“என்ன டிவில கிரிக்கெட் மேட்ச் ஒண்ணும் இல்லையோ இன்னைக்கு? நான் கூப்பிட்டாலும் வரலைன்னு சொல்வேள்? இன்னைக்குத் தானாவே வெளியே கிளம்பலாம்னு சொல்றேளே?” இது ஜெயா.
“உனக்குப் போகணுமா, இல்லை இப்போ நான் விளக்கம் சொல்லணுமா?”
“அச்சச்சோ, இதோ கிளம்பிடறேன். விளக்கமெல்லாம் நீங்க சொல்ல வேணாம். சும்மாத் தான் கலாய்ச்சேன். அனாவசியமாக் கோச்சுக்காதீங்கோ.”
“சீக்கிரமா வா” என்று கணேசன் முறைப்புடன் நிற்க, ஜெயா விருவிருவென்று கிளம்பி வந்தாள். இரண்டு பேரும் தெருவில் நடப்பது கொஞ்சம் வேடிக்கையாகத் தான் இருக்கும். கணேசன் பத்தடி முன்னால் போய்க் கொண்டிருப்பார். ஜெயா நிதானமாக அவரைப் பின்தொடர்வாள். அவர்கள் நடக்கும் வேகம் அப்படி. ஜெயாவின் முழங்கால் வலி அவளுடைய வேகத்தைப் பெருமளவில் பாதித்து விட்டதால் கணேசனைப் போல துரித அடிகளை அவளால் எடுத்து வைக்க முடியாது.
“சேந்து வெளியில வாக்கிங் போகணும்னு ஆசைப்படறதை நினைச்சாச் சிரிப்புத் தான் வருது” என்றாள் ஜெயா. கணேசன் காதில் விழுந்தும் விழாதது போல நடந்தார்.
ஆனந்தா ஸ்டோரில் முதல் மண்டகப்படி. விதவிதமான மண் விளக்குகள், பித்தளை, வெண்கல விளக்குகள் என்று ஆசை தீர வாங்கிக் கொண்டாள். இரண்டு பெரிய பைகள் நிரம்பி விட்டன. சமீபத்தில் தில்லியில் இருந்து மதுரை குடிவந்துள்ள அவர்கள், புதிய வீட்டை வாங்கி, வீட்டு சாமான்களைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பைகளைத் தூக்க முடியாமல் தூக்கியபடி இருவரும் நடந்தார்கள்.
“வா தாயி வா, மல்லிகைப்பூ வாங்கிக்க தாயி. உன்னோட முகம் மாதிரியே பூவும் பளிச்சுன்னு இருக்கு” என்று குரல் கொடுத்தாள் நடைபாதையில் பூக்கடை போட்டிருந்த தாயம்மாக் கிழவி.
“இப்படிப் பேசிப் பேசி கொறஞ்சது ஆயிரம் பூவாவது வாங்க வச்சிருவீங்க தினமும்! இல்லையா?”
“இல்லை தாயி இல்லை! உன்னை மாதிரி சிலர் கிட்டத் தான் உரிமையா இப்படிப் பேசுவேன் நான்! உன் தலையில் பூவோட பாக்கும் போது எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா?” என்று அவளுக்கு திருஷ்டி கழிப்பது போலக் காற்றில் கைகளை அசைத்தாள்.
சமீபத்தில் தாயை இழந்திருந்த ஜெயாவாலும் தாயம்மாக் கிழவியின் முகத்தில் சுடர் விடும் அன்பின் ஆழத்தை அடையாளம் காண முடிகிறது.
“சரி சரி, எவ்வளவு ஆச்சு பூவுக்கு?”
“உன் இஷ்டப்படி கொடு தாயி! நான் கூப்பிட்டதும் வேணாம்னு சொல்லாம நீ வாங்கிக்கறதே பெரிசு!”
மதுரை வந்ததில் இருந்து தினமும் பூ வாங்கிச் சூடிக் கொள்ளும் வழக்கமுள்ள ஜெயாவிற்கும் பூக்களின் விலை ஓரளவு தெரியும் என்பதால் சரியாகவே கொடுத்து விடுவாள்.
“உன் மனசு போலவே உன் கையும் தாராளம் தாயி!” பணத்தை வாங்கிச் சுருக்குப்பையில் முடிந்துக் கொண்டாள் தாயம்மா.
“எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”
“சொல்லு தாயி, சொல்லு.”
“இந்தப் பை ரெண்டையும் இங்கே வச்சுட்டுப் போறோம். எதுத்த பக்கம் ஒரு கடைக்குப் போகவேண்டிய வேலை இருக்கு. திரும்பிப் போற வழியில இந்தப் பைகளை எடுத்துக்கறோம்.”
“வச்சுட்டுப் போ தாயி! இதிலென்ன இருக்கு? தாராளமாப் பாத்துக்கறேன்.”
இதுவரை நடந்த உரையாடலை வாய் திறவாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த கணேசன், விருட்டென்று தலை நிமிர்ந்து ஜெயாவைப் பார்த்து முறைத்தார். அவளோஅவரை அலட்சியம் செய்தபடி பைகளைப் பூக்காரியிடம் வைத்து விட்டு நடந்தாள்.
பை பாஸ் ரோடில் இருந்த மாலை நேர டிராஃபிக்கில் நீந்தியபடி சாலையைக் கடப்பதற்குள் இருவரும் விவாதிக்க நினைத்த விஷயத்தை மறந்தே போனார்கள். ஸில்வர் பேலஸ் கடைக்குள் நுழைந்து கையில் கொண்டு வந்திருந்த பழைய விளக்குகளைப் போட்டு விட்டு, வெள்ளிக் குத்து விளக்குகள் ஒரு ஜோடி வாங்கிய பின்னர், கடையை விட்டு இறங்கினார்கள். வானம் பூந்தூறலைத் தூவி வாழ்த்தியது.
“அடடா, மழை ஆரம்பிச்சுடுச்சே! குடையும் கொண்டு வரலையே! என்ன செய்யறது?” திகைத்துப் போய் நின்றபோது, கடைக்காரர் கதவைத் திறந்து உள்ளே வரச் சொன்னார்.
“ஸார், இந்த மழையில் நனைஞ்சுட்டே நடக்க வேணாம். நீங்களும் மேடமும் உள்ளே வந்து உக்காருங்க.. மழை நின்னதும் போய்க்கலாம்” என்று சொன்னதும், அதுவும் சரியென்றே தோன்றியது. உள்ளே சென்று சொகுசு நாற்காலிகளில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார்கள். மழை ஓய்ந்தபாடில்லை.
“எவ்வளவு நேரம் வெயிட் பண்ணறது? ஆட்டோ பிடிச்சுண்டு போலாம் வா” என்றார் கணேசன்.
“அந்தப் பைகளைப் பூக்காரத் தாயம்மா கிட்ட விட்டுட்டு வந்தோமே? ஆட்டோல போனா அது வேற வழியாச்சே?”
“எனக்கு அப்பவே தெரியும்! உன்னோட புத்திசாலித்தனமான ஐடியால்லாம் இப்படித்தான் அனர்த்தமா வொர்க் அவுட் ஆகப் போகுதுன்னு நினைச்சேன். சரி, விடு, மழை நின்னதும் நான் நடந்து போய் எடுத்துண்டு வரேன். இப்போதைக்கு வீட்டுக்குப் போய்ச் சேருவோம்” என்றவர் ஆட்டோவை அழைத்தார்.
ஒருவழியாக மழை ஓய ஒன்பது மணி ஆகி விட்டது. கணேசன் போய்ப் பார்த்தபோது தாயம்மாக் கிழவி அந்த இடத்தில் கிடைக்கவில்லை. கடுகடுவென்ற முகத்துடன் வந்தவரின் வெறுங்கைகளைப் பார்த்ததும் புரிந்துக் கொண்ட ஜெயா சமாளிக்க முயற்சி செய்தாள்.
“நமக்காக வெயிட் பண்ணிப் பாத்துட்டு வீட்டுக்குக் கொண்டு போயிருப்பா. நாளைக்குக் கொண்டு வந்துருவா” என்று நம்பிக்கையுடன் சொன்ன ஜெயாவை எகத்தாளமாகப் பார்த்து விட்டு நகர்ந்தார் கணேசன்.
அடுத்த நாள் தாயம்மா பூக்கடை போடவில்லை. அடுத்தடுத்து நான்கு நாட்கள் ஓடின. பூக்கடை கண்ணில் படவேயில்லை. கணேசன், ‘அப்பவே சொன்னேனே? பாத்தியா?’ என்று சொல்லாமல் சொல்லியபடி ஜெயாவை முறைக்க, ஜெயாவோ சொல்லத் தெரியாத அவஸ்தையில் நெளிந்தாள்.
கார்த்திகை தீபத் திருநாளுக்கு முதல் நாள். மாலை நேரம் ஐந்து மணியிருக்கும். வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. ஜெயா சென்று கதவைத் திறந்தாள். வந்தவள் ஓர் இளம்பெண். கல்லூரி மாணவி போலத் தெரிந்தாள். கையில் ஜெயா, தாயம்மாவிடம் கொடுத்த அதே இரண்டு பைகள்.
“வாம்மா வா, யாரு நீ? தாயம்மாவோட பேத்தியா?”
“ஆமாம். என் பேர் தெய்வா. ஆனா நான் அவங்களோட நெஜப் பேத்தி இல்லை. என்னை அவங்க எடுத்து வளத்தாங்க. இந்தப் பைகள் உங்களோடது தானே? நீங்க இந்த அபார்ட்மெண்ட்டில் இருக்கீங்கன்னு மட்டும் தான் பாட்டிக்குத் தெரியுமாம். ஆனா வீட்டு நம்பர், உங்க பேரு எதுவும் அவங்களுக்குத் தெரியலை. ஆனா எப்படியாவது உங்களைக் கண்டுபிடிச்சு உங்க கிட்ட இதைச் சேக்கணும்கறது பாட்டியோட கடைசி ஆசை” என்றாள் தெய்வா கண்ணீருடன்.
“என்ன கடைசி ஆசையா? என்னம்மா சொல்லறே?”
“ஆமாம். பாட்டி இறந்து போய் ரெண்டு நாளாச்சு.”
“அச்சச்சோ, எப்படி ஆச்சு?” மனதில் துக்கம் பொங்கிப் பொங்கி வந்தது ஜெயாவுக்கு.
“நாலு நாளைக்கு முந்தி சாயந்திரம் மழை கொட்டுச்சு இல்லையா? அன்னைக்கு மழையில் நனைஞ்சுட்டே வீடு வந்தாங்க. ராத்திரியில் இருந்து குளிர் காய்ச்சல். ரெண்டே நாட்களில் டக்குனு போயிட்டாங்க. நினைவு தப்பறதுக்கு முன்னாடி இந்தப் பைகளைக் காமிச்சு எப்படியாவது உங்க கிட்ட சேக்கச் சொல்லிச் சொன்னாங்க. நானும் அவங்க சொன்ன தகவல்களை வச்சு ஒருவழியாக் கண்டுபிடிச்சுட்டேன்.”
“அடடா, நம்பவே முடியலையே? நான் கடைசியாப் பாத்த போது கூட நல்லா இருந்தாங்களே!” அழுகை முட்டியது ஜெயாவின் குரலில்.
“புண்யாத்மா, அதிகம் கஷ்டப்படாமல் உசுரை விட்டுருக்காங்க. உன்னைப் பத்திச் சொல்லும்மா. நீ எப்படி தாயம்மா கிட்ட வந்தே? இப்போ என்ன பண்ணறே?” என்றார் கணேசன். தாயம்மாவைத் தவறாக நினைத்ததற்காக மனம் வருந்திப் பேசினார் இப்போது.
“பொறந்ததும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தை நான். இப்போ சமீபத்தில் தான் எனக்கே தெரிய வந்தது. அதுவும் பாட்டியோட சொந்தக்காரங்க வீட்டில் ஒரு விசேஷத்துக்குப் போனபோது தான் தெரிஞ்சுது. அதைப் பாட்டி கிட்டயே நேரடியாக் கேட்ட போது தன்னோட கதையைச் சொன்னாங்க. குடிகாரப் புருஷன் குடிச்சுட்டு வந்து தினமும் இவங்களை அடிச்சுத் துன்புறுத்தியிருக்கான். புகுந்த வீட்டுப் பெரியவங்க கிட்ட இவங்க சொன்ன போது, ‘உன்னால குழந்தை பெத்துத் தர முடியலை. அந்த துக்கத்தை மறக்கத் தான் அவன் குடிக்கறான் பாவம்!’னு அவனுக்கு வக்காலத்து வாங்கிருக்காங்க. ஒருநாள் அடிக்க வந்தவனோட கையைத் தடுத்து நிறுத்தி முறிச்சதோட, அவன் கட்டின தாலியையும் அறுத்துப் போட்டுட்டு வந்துட்டாங்களாம்.
ஒரு பொம்பளையால தனியா வாழ்ந்து ஜெயிக்க முடியும்னு உலகத்துக்குக் காட்ட நினைச்சாங்களாம். ஒரு ஸ்கூலில் ஆயா வேலை பாத்துப் பொழைச்சிருக்காங்க. அந்த சமயத்தில் என்னைப் பாத்து எடுத்து வளத்திருக்காங்க. நீ நல்லாப் படிச்சு முன்னுக்கு வரணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. வயதானதும் ஸ்கூல் வேலையில் இருந்து ஸ்கூல்காரங்க அனுப்பிட்டாங்க. அப்போது தான் இந்தப் பூ வியாபாரம் ஆரம்பிச்சாங்க. காலையில் சில வீடுகளில் பாத்திரம் தேய்ச்சு வீடு துடைக்கற வேலை. சாயந்திரம் பூக்கடை. எனக்காக பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிச்சுப் பணம் கூடக் கணிசமாச் சேத்து வச்சிருக்காங்க. காலேஜில் படிச்சுட்டு இருக்கேன். ஆனா வீட்டில் தனியா இருக்க முடியலை என்னால” என்று சொல்லி அழுதாள் தெய்வா.
அவளருகில் சென்று அவளை அணைத்துக் கொண்ட ஜெயா, அவளுடைய கண்களைத் துடைத்தாள்.
“தனியா இருக்க வேண்டாம் கண்ணு. எங்க வீட்டுக்கு வந்துரு. எங்க பசங்க வெளிநாட்டில் இருக்காங்க. எப்போதாவது தான் வருவாங்க. எங்களுக்குன்னு யாரும் இங்கே இல்லை. நாங்க உன்னைப் பாத்துக்கறோம்” என்று சொன்ன ஜெயா, தெய்வாவின் கண்களைத் துடைத்து விட்டாள். கணேசனும் அவள் சொன்னதை ஆமோதித்துத் தலையாட்டினார்.
இத்துடன் கதையை முடித்தது வேதாளம்.
“இந்தக் கதையில் வந்த மூன்று பெண்களில் யார் மிகவும் சிறந்தவர்? பாட்டியின் இறுதி வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவள் ஆசையை நிறைவேற்றிய தெய்வாவா, அனாதைக் குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்கிய ஏழைப் பெண் தாயம்மாவா, இல்லை அறிமுகமேயில்லாத தெய்வாவுக்கு ஆதரவு தந்த ஜெயாவா? “என்று கேட்டது.
விக்கிரமாதித்தன் சிறிது யோசித்து விட்டு பதில் கூறத் தொடங்கினான்.
“அனாதையான தன்னை எடுத்து வளர்த்த பாட்டிக்கு ஒரு சிறிய நன்றிக் கடனாவது பதிலுக்கு செய்ய நினைத்தாள் தெய்வா. அதில் ஆச்சரியமே இல்லை.
தனியாக வாழ்ந்து ஜெயித்துக் காட்ட நினைத்த தாயம்மா, தன் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வேண்டும் என்று தீர்மானித்ததால் தான் குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையை எடுத்து வளர்த்துத் தனது தனிமையைப் போக்கிக் கொண்டாள். அதுவும் ஓர் ஏழைக்கு மிகப்பெரிய விஷயம் என்றாலும் அந்தச் செயலில் தன்னலம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் ஜெயா, செல்விக்கு ஆதரவு தர முன் வந்தது எந்தவிதமான காரணமோ, நிபந்தனையோ இல்லாமல் மனதில் தானாகவே மலர்ந்த கருணையினால். எனவே மூவரிலும் சிறந்த பெண் ஜெயா தான்”
விக்கிரமனின் சரியான பதிலால் வேதாளம் முருங்கை மரத்தில் மீண்டும் தாவி ஏறித் தொங்கியது.
தலைப்பைப் பார்த்து ஆச்சரியமா? தேவையே இல்லை. இக்கட்டுரையைப் படித்து முடித்தபின்பு நீங்களே அனைவருக்கும் இன்னும் ஒரு புதிய செய்தியைக் கூறலாம்!
மனிதர்களுள் ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டினரையோ, விலங்குகளில் ஒன்று மற்றொன்றையோ தமது வலிமையால் அழிப்பதனைக் கண்டுள்ளோம். ஓரறிவோ, ஈரறிவோ, ஐந்தறிவோ, ஆறறிவோ அனைத்துயிர்களிலும் வலிமை பொருந்தியனவே வெற்றிகரமாக உயிர்வாழ்கின்றன.
சரி, நுண்ணுயிரிகளிடையேயும் (Microbes) இந்தமாதிரி நிகழுமா என ஆய்வாளர்கள் ஆராய்ந்தபோது ஆச்சரியமான பல செய்திகளை அறிந்துகொண்டோம்.
இது வைரஸ்களின் காலம். சமீபத்திய கோவிட் என ஒரு வைரஸ், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என வைரஸ், உலகத்தை விட்டே விரட்டப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் பெரியம்மை (Smallpox) வைரஸ், இன்ஃப்ளூயென்சா எனப்படும் வைரஸ், விலங்கு வைரஸ், பறவைகள் வைரஸ், எனப்பலவிதங்களில் வைரஸ்கள். இவை மிக மிக நுண்ணியவை. பாக்டீரியாக்களைவிட ஆயிரம் மடங்கு சிறியவை. மிக உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட மைக்ரோஸ்கோப்பினால் (electron microscope) மட்டுமே இவற்றைக் காண இயலும்.
இவற்றையெல்லாம் தூக்கியடிக்கும் ஒரு செய்தி- பழையதுதான்- ஆனால் இதனை நீண்டநாட்களாக யாரும் கண்டுகொள்ளவில்லை- பாக்டீரியாக்களையும் சில வைரஸ்கள் தாக்குமென்பதுதான். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல வைரஸால் பாக்டீரியாக்களை அழிக்கலாம் என்று ஆராய்ச்சியினால் தெரிந்துகொண்டோம்.
பாக்டீரியாக்களின் வைரஸ்கள் 1915-ல் ஃப்ரடெரிக் ட்வார்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. டி-ஹெரல் என்பவர் இவற்றால் தொற்றைக் கட்டுப்படுத்தலாம் எனக் கண்டறிந்து அந்த ஆராய்ச்சிக்கு வித்திட்டார்.
பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களுக்கு பாக்டீரியோஃபாஜ் (Bacteriophage) அல்லது சுருக்கமாக ஃபாஜ் (phage) என்று பெயர். அதாவது ‘பாக்டீரியாக்களைச் சாப்பிடுபவன்’ என்று பொருள். இது எதனால்? இந்த வைரஸ்கள் தமது மூலக்கூறான டி.என்.ஏவை (DNA) ஒரு புரத (protein) உறையினால் பொதிந்துகொண்டு அமைந்தவை; அமைக்கப்பட்டவை; இவை நடத்தும் நாடகங்கள் மிகமிக சுவாரசியமானவை. இவற்றையெல்லாம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி அருமையான ஆராய்ச்சிகளை டி-ஹெரெல் (d’Herelle) எனும் ஒரு விஞ்ஞானி செய்தார்.
இவற்றைப் பார்க்கப் புகுமுன் சில அடிப்படை உண்மைகள்: வைரஸ்கள் தாமே இனைப்பெருக்கம் செய்துகொள்ளும் திறனற்றவை. இவை மற்ற உயிரினங்களின் ‘செல்’களுக்குள் (cell) புகுந்து அங்குள்ள சக்தியை உபயோகித்துத் தம்மைப் பலவாகப் பெருக்கிக் கொள்கின்றன. ஒரு வைரஸ் ஒரு செல்லில் புகுந்து சில மணி நேரங்களில் பல்லாயிரமாகப் பெருகிப் பின் அந்த செல்லைக் கிழித்துக் கொண்டு வெளிவருகின்றது. உடனே அவை அக்கம் பக்கத்து செல்களைத் தாக்கி எண்ணிக்கையில் மேலும் பெருக ஆரம்பிக்கின்றன. இவ்வாறுதான் வைரஸ் தொற்று (infection) பரவுகிறது. தொற்றுள்ள ஒருவரின் மூச்சுக்காற்று, தொடுதல், துணிமணிகள் போன்றவைமூலம் குடும்பத்தினர், மற்ற வெளியுலகத்தோர் அனைவருக்கும் பரவுகின்றன.
வைரஸ் தொற்று மனித ‘செல்’களை அழிப்பதுபோல, பாக்டீரியாக்களுக்கான வைரஸ்களைப் பயன்படுத்தி பாக்டீரியாக்களை அழித்து, அவற்றால் வரும் தொற்றைக் குணப்படுத்தலாம் என்பது 1900களில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதே சமயம் ஆன்டிபயாடிக் என்னும் மருந்தைக் கண்டுபிடித்தபோது இதனை ஆராய்ச்சியாளர்கள் முற்றிலும் புறக்கணித்தனர். இப்போது 150 ஆண்டுகளின்பின் பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக்கை எதிர்க்கக் கற்றுக் கொண்டுவிட்டதை அறிந்து கொண்டுவிட்டோம். வேறு மாற்று மருந்தைத் தேடும்போது, இந்த பாக்டீரியோஃபாஜால் குணமாக்கும் முறை திரும்பவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது! ஒவ்வொரு விதமான தொற்றுநோய் பாக்டீரியாவையும் ஆயிரக்கணக்கான பாக்டீரியோஃபாஜ் வகைகளில் ஏதாவது ஒன்றுதான் அழிக்க முடியும் எனக் கண்டறியப்பட்டது.
உதாரணமாக, ஒரு பரிசோதனைக்காக வயிற்றுப்போக்கிற்குக் காரணமான பாக்டீரியாக்கள் லாபரட்டரிகளில் பரிசோதனைக் குடுவைகளில் வளர்க்கப்பட்டு, அவற்றைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள் பிரத்யேகமுறைகளில் அறுவடை செய்யப்பட்டுப் பத்திரப்படுத்தப்பட்டன. தீவிரமான வயிற்றுப்போக்கில் தவிக்கும் நோயாளிகளுக்கு, மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பவர்களுக்கு இவை இரண்டு மில்லி அளவில் கொடுக்கப்பட்டன. அடுத்தநாள் அவர்களில் பெரும்பாலோர் குணமடைய ஆரம்பித்தனர். 1919-ல் பிரேஸில், சூடான் ஆகிய நாடுகளில் இப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
1927-ல் இந்த விஞ்ஞானி இந்தியாவிற்கு வந்து பஞ்சாபில் காலராவை (cholera) இவ்வகையில் குணப்படுத்த முயன்றார். மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த நோயாளிகளின் உறவினர்களே வேறுவழியின்றி இதனை ஒப்புக்கொண்டனர். பாக்டீரியோஃபாஜ் கொடுக்கப்பட்ட இவர்களில் பெரும்பான்மையினர் பிழைத்தனர். எடுத்துக்கொள்ளாதவர்கள் பெரும்பாலோர் இறந்தனர்.
1926-ல் எகிப்தில் ப்ளேக் (Bubonic plague) எனும் தொற்றுநோயால் தாக்கப்பட்ட நால்வரை அதற்குரிய பாக்டீரியோஃபாஜை செலுத்தி, இவ்வாறு பரிசோதனைகள் செய்து பிழைக்கவைக்க முடிந்தது.
ஸ்டாஃபைலோகாக்கஸ் (Staphylococcus) எனும் பாக்டீரியாவால் வரும் தொற்றால், அழுகும் புண்களை உடையவர்களில் 90 சதவீதம் பேர் கண்டிப்பாக இறந்துவிடுவார்கள். 1929-ல் டி-ஹெரல் மிகத்துணிவாக வேறிடங்களில் செய்ததுபோல் இங்கும் ஒரு பரிசோதனை செய்ய முற்பட்டார். அவருடைய பரிந்துரைத்தல்படி இதற்கான பிரத்யேகமான ஒரு ஃபாஜை இந்தமாதிரியான ஒரு நோயாளிக்கு (சாவின் எல்லையில் நின்று கொண்டிருந்தவர்) சலைன் ட்ரிப்ஸ் (saline drips) வழியாகக் கொடுத்தனர். இதற்கு ஒரு மணி நேரமானது.
என்ன ஆச்சரியம். அடுத்தநாள் அவர் ஜுரம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக குணமாகி ஏழெட்டு நாட்களில் வீடு திரும்பிவிட்டார். அப்போதிலிருந்து இந்த மாதிரி நோயாளிகளை இத்தகையதொரு முறையில் குணப்படுத்தலாயினர். இந்த வைத்தியமுறை பிரபலமாகிக்கொண்டு வந்தது.
மற்ற தொற்றுநோய்களான டைஃபாயிட் முதலானவைக்கும் இவ்வாறான ஃபாஜ் முறையைப் பயன்படுத்தி குணப்படுத்த முடிந்தது.
ஒரு சுவாரசியமான செய்தி: சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஞ்ஞானி தாம் சொற்பொழிவாற்றிய ஒரு கான்ஃபரன்ஸில் அனைவருடனும் ஒர் செய்தியைப் பகிர்ந்து கொண்டார். பாக்டீரியாக்களின் வைரஸான பாக்டீரியோஃபாஜ்களைப் பயன்படுத்தி தொற்றுக்களைக் குணமாக்குவது பரவலாக இருந்த அக்காலம்; அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கே புதுத் தேடல்களில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களால் ஒரு நூற்றாண்டுக்குமுன்பு மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டும் வந்தது. நம் விஞ்ஞானியின் தந்தையும் ஒரு மருத்துவர். அவருடைய தாய்க்கு டைஃபாயிட் தொற்றுவந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆஸ்பத்திரியிலேயே இருந்தார். சுரம் குறையவேயில்லை. மருத்துவரான தந்தை சால்மொனெல்லா டைஃபி (Salmonella typhi) எனும் டைஃபாய்டு தொற்று பாக்டீரியாவினைத் தாக்கும் பாக்டீரியோஃபாஜ்களை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்களிடமிருந்து வரவழைத்துத் தாயாருக்குக் கொடுத்தார். மருந்துகள், சிகிச்சை முறைகள் பற்றிய கட்டுப்பாடுகள் பெரிதாக செயல்படுத்தப்படாத நாட்கள் அவை! 48 மணி நேரத்தில் தாயின் சுரம் இறங்கி படிப்படியாக அவர் குணமடைந்தாராம். மிகவும் பெருமையாக ஃபாஜ் மருத்துவத்தின் மகிமை பற்றிக் கூறி இதனை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இப்போது பெனிசில்லின், (Penicillin) குளோரம்ஃபெனிகால், (Chloramphenicol) இன்னும் இது போன்ற மற்ற ஆன்டிபயாடிக்குகளுக்கு தொற்றுநோய் பாக்டீரியாக்கள் எதிர்ப்புத்தன்மையை (resistance) உருவாக்கிக் கொண்டுவிட்டன. இது மருத்துவ அறிவியல் உலகின் ஒரு பெரிய சவாலாகவே ஆகி விட்டது. இதற்குக் காரணங்கள் பலப்பல. அவற்றை நாம் இப்போது இங்கு விவாதிக்கப் போவதில்லை. முடிந்தால் பின்னொரு நாளில் பார்க்கலாம்.
பாக்டீரியோஃபாஜ் கொண்டு குணப்படுத்தும் முறையை உலகளாவிய பல சிறு ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரிய அளவில் ஆராய ஆரம்பித்துத் தேடலில் இறங்கியுள்ளன. இது பெருமளவில் பயனளிக்க இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவை. அவை தொடங்கப்படுவிட்டன என்பதே நமக்கு மகிழ்ச்சிதரும் ஒரு செய்தி ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உதவிய கட்டுரைகள்:
Bacteriophage as a treatment in Acute medical and surgical infections- F. d’Herelle- 1931: Bulletin of the New York Academy of Medicine.
ஆசீவகர் என்ற பெயரே அவர்களை இழிவாக கருதியவர்கள் அவர்களுக்கிட்ட பெயரெனக் கூறுவர். மகாவீரர் ‘ பெண்ணோடு கூடினாலும் துறவி தீங்கொன்றும் செய்தவன் ஆகான் என்பது ஆசீவர்கள் கொள்கை’ என்கிறார்.
சமணர்களில் திகம்பரர் போல ஆடையின்றி திரிந்து இரந்துண்டு வாழ்ந்தனர் ஆசீவகர்கள். ஞான சம்பந்தர் இவர்களையும் விட்டு வைக்காது ‘ ஆசீவகப் பேய்கள்’ எண்கிறார்.
இந்த மூன்று மதத்தினர்க்கும் எப்பொழுதும் சமயப் பகை இருந்து கொண்டே வந்தது.
ஆசீவகம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது. தமிழ்நாட்டில் சமதண்டம் எனும் ஊரில் இம்மதத் தலைவர்கள் இருந்ததாக ‘நீலகேசி’ எனும் நூல் கூறுகிறது. கண்ணகியின் தந்தை மாநாய்கன் , கோவலனும் கண்ணகியும் உயிர் நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது செல்வமனைத்தையும் தானம் செய்து விட்டு ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவு பூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
கி. பி ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் ஆசிவகர்கள் பற்றிய சரித்திரம் ஏதுமில்லை. இருப்பினும் 13 ம் நூற்றாண்டு வரை ஆசீவகர்கள் பேசப் பட்டு வந்தனர்.
கடந்த சில பகுதிகளில் நம் நாட்டில் குறிப்பாக வேங்கடம் முதல் குமரி வரையிலான தமிழ் நாட்டில் வைதிகம், சமணம் , பௌத்தம் ஆகிய மதங்கள் நுழைந்து நம்மை எவ்வாறு ஆட்டி வைத்தன என்று சுருக்கமாக பார்த்தோம்.
பொதுவாக மேம்போக்காக படித்து மேம்போக்காகவே ஒரு சில கட்டுரைகள் எழுதிய நான் சமயம் பற்றிய கட்டுரைகள் எழுத சற்று மெனக்கட வேண்டி வந்தது. சில புத்தகங்களை தேடிப் படித்தேன். இது போன்று படிக்கும் வாய்ப்புகளுக்காக சற்று சீரியஸாக எழுதினாலும் தவறில்லை என்று எண்ணுகிறேன்.
இந்தி : மகாஸ்வேதா தேவி
தமிழில் : தி.இரா.மீனா [ ஆங்கில மூலம்]
குந்தியும் நிசாதினும்
ஆசிரமத்தில் திருதராட்டினனையும், காந்தாரியையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குந்திக்கு இருந்தது. இந்தக் கடமையை குந்தி விரும்பியே செய்தாள்.வனத்தின் மத்தியிலான ஆசிரமம் இது. அன்றாட வழிபாட்டிற்காக தினமும் காட்டுக்குச் சென்று சுள்ளிகளை எடுத்து வருவது அவள் வேலை. மதியம்தான் அவளுக்கு பிடித்த பொழுது. சுள்ளிகளைப் பொறுக்கி விட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி விட்டு வருவாள். பீமன் மட்டும் இங்கிருந்தால் எப்படியெல்லாம் உதவி செய்வான்?
நிசாத இன மலைவாழ் பெண்கள் சிலர் எதிரே வந்தனர். இழை ஓடிய நரைகள் அவர்களது அனுபவங்களைச் சொல்வதாக இருந்தன. சுள்ளிகளைச் சேகரித்து கனமான கட்டுக்களாக்கி தோளில் சுமந்து ஏதாவது பேசியபடி போவார்கள். குந்தி அவர்கள் பேசுவதை அறிந்து கொள்ள ஒரு போதும் முயன்றதில்லை.கடுமையாக உழைத்தபடி, மகிழ்ச்சியாக..அழகாக பளீரெனச் சிரித்தபடி…
காற்று வேகமாக அடித்தது.சுகமாக வருடி அவளுடைய சோர்வை நீக்கியது. வீடு திரும்பிக் கொண்டிருந்த மலைவாழ் பெண்களைப் பார்த்த குந்திக்குள் முதல்முறையாக ஒரு கேள்வி எழுந்தது.’நான் ஏன் இந்த இடத்தில் வசித்து என் வாழ்வை வீணாக்குகிறேன்?விருப்பப்பட்டு நான் இங்கு வரவில்லை. விதி விட்ட வழியில் போகிறேன்.’ தன்னைப் பற்றி யோசிக்க இப்போது நேரமிருக்கிறது.இப்படியொரு ஆழமான சுமை அவளுக்குள் இருந்திருக்கிறது என்பது தெரியாமல்தான் இருந்தது. முன்பு அவள் வாழ்க்கை வேறு விதமாக இருந்தது.அவள் பல்வேறு பாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறாள். மருமகள், அரசி, தாய், என்று.. ஒரு பெண்ணாக வாழ அவளுக்கென்று நேரம் இருந்ததில்லை.அவளுக்குச் சொந்தம் என்று எதுவும் இருந்ததுமில்லை. ஆமாம். ஒரே ஒரு தடவை.. இளமையில்..அந்த நினைவு சுடு்காட்டுத் தீயாய் மனதுள் ஜூவாலைகளை விசிறியடித்தது. அவள் சாகும் வரை அது சுடும். அவளுக்கு இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும் போல இருந்தது. காட்டிடம், மலைகளிடம், பறவைகளிடம்,சருகுகளிடம் தன் சுமையை இறக்க முடிந்தால்…பெண்கள் அருகே வந்தும், விலகியும் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். ஆனால் அவர்களிடையே பேச்சுப் பரிமாற்றம் இல்லை. நிசாதினர்களை எப்போது பார்க்கும் போதும் அவர்களைப் பற்றி எந்தப் பதிவும் அவளுக்குள் இல்லை. குந்திக்கும், அவர்களுக்கும் என்றும் தொடர்பு இருந்ததில்லை.எப்படி இருக்க முடியும்? ராஜவாழ்க்கையின் போது வழிபாடும், பிராமணர்களை கவனிப்பதும் தான் அவள் வேலை.அவள் ஒரு தடவையாவது தாசியுடன் பேசியிருப்பாளா? குந்திக்கும் , ஹிடிம்பாவுக்கும் ஏதாவது உறவுண்டா? ராஜவாழ்க்கை தவிர வேறு எதுவும் அவளுக்கு தெரிந்ததில்லை.ஏன் அந்த நிசாதினர் அவளருகில் வர வேண்டும்? அவளுக்குத் தெரிந்து கொள்ள மனமில்லை. அவள் விரும்புவதெல்லாம் தனது மனச்சுமையை இறக்கி வைத்து விட்டு மன்னிப்பு பெறுவதுதான்.
கண்களைக் கட்டிக் கொண்ட காந்தாரியின் தன்மை அவளை வருத்தியது. அவள் எவ்வளவு உறுதியானவள்? நூறு மகன்களை இழந்த பிறகும் எவ்வளவு மனக் கட்டுப்பாடு; எப்போதும் சரியான பாதையில் ..
ஆனால் குந்தி… கண்டிப்பாக பாவமன்னிப்பு பெற வேண்டும்.அதற்கு எப்போது நேரம் வரும்? நாளுக்கு நாள் தன்னை பலவீனமாக உணர்கிறாள். தினமும் அவர்களை கவனித்துக் கொள்வதும் ,ஆசிரமத்தில் விட்டு விட்டு வருவதும் அவளை இன்னமும் பலவீனமாக்குகிறது.காடு, ஆறு, பறவைகள், சரசரக்கும் இலைகள் , காற்று, நிசாதினர்கள் என்று எல்லோரிடமும் சொல்லி விடுவது சரிதான் என்று படுகிறது. அவள் தன் மொழியிலேயே சொல்லும்போது அவர்களுக்குப் புரியாது. கேள்விகளும் இருக்காது. சூரியஸ்தமனத்திற்கு பிறகு அவர்கள் போவார்கள். அவளும் ஆசிரமத்திற்குப் போய் வேண்டியதைச் செய்வாள்.
ஆமாம். யுதிஷ்டிரன் ,கிருட்டிணன், பீமன், அர்ச்சுனன் அவள் கருவறையில் ஜனித்தவர்கள்தான்.ஆனால் அவர்கள் பாண்டுவின் புத்திரர்கள் இல்லை. நகுலனையும், சகாதேவனையும் அவள் அதிகமாக நேசிப்பதேன் ? தன்னிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டவைகளை நிறைவு செய்யவா?அவளது தைரியம், தர்மம் எல்லாம் எங்கே போனது?தனக்குள் பேசிக் கொண்டாள். பாவ மன்னிப்பு பெறாவிட்டால் எப்படிப் பாவங்களில் இருந்து மீள முடியும்? தேவி பிருத்வியே ! என் பாவப்பட்ட கதையைக் கேள். ’நான் காந்தாரியைப் போல தர்மப் பிறவியில்லை. தர்மம் எனக்கு தைரியத்தைத் தரவில்லை. தர்மயுத்தம் முடிந்து என் புதல்வர்கள் உயிரோடு வந்த போது நான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன். ஆனால் திரௌபதியும், உத்தராவும் தம் மகன்களை இழந்த சோகத்தில் இருந்தனர். என்னால் அவர்களை ஆறுதல் படுத்தமுடியவில்லை.ஆனால் காந்தாரிக்கு முடிந்தது.அவளது நூறு மகன் களும் இறந்து விட்ட போதிலும் ஆறுதல் சொல்ல முடிந்தது. இந்த மொத்த மரணமும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதும், தவிர்க்க முடியாததும் ஆகும். உங்களைப் போலவே நானும் என் மகன்களை இழந்திருக்கிறேன். மரணநேரம் முடிந்தது.மனம் சோகத்தில் புதைய நாம் அனுமதிக்கக் கூடாது. இறப்பு என்பது வேதனைதான். ஆனால் மனைவி, தாய், மகள். சகோதரி என்று வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.வாழ்க்கை எல்லாமும் கலந்தது தான்’ என்று ஆறுதல் சொன்னாள். எனக்கு தர்மத்தைப் பற்றி அவளைப் போல முழுப்புரிதல் இல்லை. கிருஷ்ணனிடம் புலம்பியபோதும்கூட அவள் தன் மகன்களுக்காகவும், பேரன்களுக்காகவும் மட்டுமா புலம்பினாள்? அபிமன்யு தன் மடியில் கிடந்த போது உலகத்துப் பெண்களின் சார்பில் அவளால் போரைச் சபிக்க முடிந்தததை நான் உணர்ந்தேன்.அதுதான் காந்தாரி. இது பதவிக்கான போர். இது தர்மத்திற்கான வெற்றியா? அதர்மத்திற்கான தோல்வியா? சவங்களைப் பார்க்கும் போது யுத்தம் என்ற வார்த்தையை எவ்வளவு பெண்கள் சபித்திருப்பார்கள்.கர்ணன் ஜுவாலையை விடப் பிரகாசமானவன்.எதையும் சுலபமாக ஏற்காதவன்.பிணமாய்க் கிடந்த போது எவ்வளவு அமைதி அவனிடம்..அவனுடைய உடலைக் கண்டதும் காந்தாரி கதறியழுதது எனக்குச் சாட்டையடியாக விழுந்தது. எனக்கு ஏன் அந்த தைரியம் இல்லை? நான் ஏன் அவனை என் மடியில் வைத்துக் கொள்ளவில்லை?உண்மையைச் சொல்லவில்லை?அவன்தான் என் முதல் குழந்தை.தனஞ்செயனே!ஏன் அண்ணனைக் கொன்றாய்?பழிக்குப் பயந்து தான் நான் அவனை ஒதுக்கினேன். கர்ணன் ஒருவன்தான் நான் விரும்பி அழைத்து வந்தவனிடம் பிறந்தவன்.எப்படியான வேடிக்கை இது! பஞ்ச பாண்டவர்கள் யாரும் பாண்டுவின் மகன்களில்லை.எனினும் பாண்டவர் கள்.கர்ணன் தேரோட்டியின் மகன்.அந்த நேரத்திலும் நான் மௌனமாக இருந்தேன்.இதைவிடபாவம் எது? காந்தாரி தூய்மையானவளும் அப்பாவி யும்.அதனால்தான் அவளால் தைரியமாக உண்மையைப் பேச முடிந்தது. இல்லாவிட்டால் அவளால் கிருஷ்ணனைச் சபிக்க முடிந்திருக்குமா? நான் அத்தனையும் கேட்டுக் கொண்டுதானே அங்கிருந்தேன்?மனிதர்கள் எப்படி யெல்லாம் இழிவானவர்கள் என்பதை இந்தக் காடு, இயற்கை ஆகியவை எனக்கு காட்டுகின்றன. பதவிக்கான யுத்தம்,முறையற்ற சாவுகள் இவை எதுவும் இயற்கையின் அமைதியைப் பாதிக்க முடியாது.இதற்கு முன்பு எனக்கு எதையும் பார்க்கவும், யோசிக்கவும் மறந்து போனதே. என் மௌனம் மன்னிக்க முடியாதது என்று இப்போது தெரிகிறது.
திடீரென அவள் நிமிர்ந்தாள். நிசாதினர்கள் அவளையே வெறித்தபடி இருந்தனர். முகங்களில் வெறுமை..கண்கள் அசைவின்றி…குந்தி
மரத்துப் போனவளாக இருந்தாள்.அவர்களில் வயதான பெண் ஏதோ சொல்ல மற்றவர்கள் சிரித்தனர். குந்தி பயந்தாள்.அருகில் வந்துவிடுவார்களோ.. மாலைப் பொழுது நெருங்கியது. அவள் சுள்ளிகளை இழுத்துக் கொண்டு நடந்தாள்.நாளை அவள் வேறெங்காவது போவாள்.இன்று பாவத்தை ஒப்புக் கொண்டுவிட்ட பிறகு மனம் அமைதியாக இருப்பதை அவளால் உணர முடிந்தது. இதுவரை கவலை மனதை அரித்ததையும், பொறுக்க முடியாத சுமையாக இருந்ததையும் நினைத்தாள். அந்த நிசாதினப் பெண்கள் அவள் சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும். குந்தியைப் பொறுத்த வரை அவர்கள் பாறைகள்தான்.அவளுக்கு அவர்கள் மொழி தெரியாதைப் போல அவளுக்கும் அவர்களுடையது தெரியாது.
காந்தாரி படுப்பதற்கு குந்தி உதவி செய்தாள்.’எப்போதும் உன் கைகள் குளிர்ச்சியாகவே இருக்கும்.இன்று என்னவோ இளம் சூடு தெரிகிறது. ரத்த ஓட்டம் வேகமாகப் பாய்வதைப் போல.. இன்றுதான் உன் தொடுதல் ஓர் உயிர்ப்புடன் இருக்கிறது.’
“காடு தாயைப் போல அன்புடையதாக இருக்கிறது.”
“உனக்குச் சிறிதாவது அமைதி கிடைத்ததா?”
“ஓரளவு’
“கவலைகளில் இருந்து விலகப் பழகிக் கொள்ள வேண்டும்”
“எனக்கு உங்களைப் போல மனவலிமை இல்லை’
“ஒவ்வொரு கணம் கடக்கும் போதும், நாம் சாவை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம். நான் சாவிற்காகக் காத்திருக்கிறேன்.”
குந்தி படுத்தாள் திருதராட்டினனும், காந்தாரியும் போவது சரிதான். குந்தி ஏன் போகவேண்டும்?.முதுகைச் சூரியனுக்குக் காட்டியபடி குந்தி குளத்தில் குளித்தாள்.வெள்ளைக்கூந்தல் அவள் முதுகை மறைத்திருந்தது. குனிந்து பார்த்தால் சூரியதேவனுக்கு அவள் யாரென்று தெரியுமா? மனித வாழ்க்கையின் பல கோடி வருடங்கள் கடவுளுக்குச் சில கணங்கள் தான்.,
இன்று ஏனிப்படி மன்னிப்புக் கேட்பதற்கான வேகம்? நிசாதினத்தவர் காட்டின் இந்தப் பகுதிக்கு வரமாட்டார்கள். இங்கு எல்லாம் ஒரே மாதிரியான இடமாகவே தெரிகிறது. தொலைந்து போவதற்கு வாய்ப்பு இருப்பதால்தான் விதுரன் மரக்கிளையையும, பாறையையும் அடையாளம் காட்டினான்.’காட்டு தெய்வத்திற்கு மனிதர்களைக் கண்டால் பிடிப்பதில்லை. இது காட்டு வாசிகளின் இடம். அவர்கள் தொலைவதற்கு வாய்ப்பே இல்லை. ஆசிரமத்திற்குப் போகும் வழியிலான மரத்தைப் நீ பார்த்துக் கொண்டு விட்டால் போதும் ’
“பயப்படும்படி ஏதாவது உண்டா?”
’பயம் என்பது மனதின் பிரமைதான்!”
காடு அருமையான இடம்.தனியாக இருக்க முடியும். முணுமுணுப்பாய் மன்னிப்புக் கேட்கமுடியும்.குருஷேத்திரத்திற்குப் பிறகு தர்மன் கட்டளைப்படி விதுரன் பெரிய அளவில் தகனம் செய்து விட்டான், வெண்ணையும், கர்ப்பூரமும் எரிந்த நாற்றத்தை மறைக்கும்படி…என்றாலும் அவ்வளவு சீக்கிரத்தில் போகாத அழிவு. நான் பாவங்களைத் தொடர்ந்து செய்திருக் கிறேன். கர்ணனைப் பற்றி என் மகன்களிடம் சொல்லவில்லை. யுத்தத்திற்கு முதல்நாள் கர்ணனிடம் போய் துரியோதனனை விட்டுவிட்டு யுதிஷ்டிர னோடு சேரும்படி சொன்னேன்.அப்போதும் அவன் கடுமையாக ஒரு வார்த்தை சொல்லவில்லை.”நீ என் மகன். நான் சொல்வதைக் கேட்கத் தான் வேண்டும்.” என்றேன். “வெட்கக் கேடு! நான் பிறந்த கணத்திலேயே என்னை உதறி விட்ட நீ ஒரு தாயின் கடமையைச் செய்யவில்லை. மகனிடம் உன்னால் எப்படி எதையும் கேட்க முடியும்’ என்று அவன் சொல்லி இருக்கலாம். ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.பாசத்தோடு அவனைக் கட்டித் தழுவிக்கொள்வதற்காக நான் போகவில்லை.ஒருதடவை கூட அவனைப்பற்றி நினைத்ததில்லை.எப்போதும்பாண்டவர்கள் நினைவு தான்.ஆனால் காந்தாரியால் எந்தத் தடையும் இல்லாமல் கர்ணனைப் புகழ முடிந்தது. ’கர்ணனைப் பற்றிய பயம் யுதிஷ்டிரனை பதிமூன்று வருடங்கள் தூங்கவிடாமல் செய்தது. கர்ணன் அக்னியைப் போல தைரியமும், இந்திரனைப் போல வெற்றியும், இமயம் போலக் குளிர்ச்சியும்,உறுதியும் கொண்டவன் என்று காந்தாரி புகழ்ந்தாள். பேச்சற்று என்னால் அவளை உற்றுப் பார்க்க முடிந்தது.அவ்வளவுதான். ராஜவாழ்க்கையில் ஒருவரால் தந்திரமானவராக முடியும். கர்ணனிடம் அழைத்துப்போனது என் சுயநலம் தான்;பாசமில்லை.பாண்டவர்களின் வெற்றிக்காக கிருஷ்ணன் எதையும் செய்வான் என்பது கர்ணனுக்குத் தெரியும்என்று இன்று புரிந்து கொண்டேன்.வெற்றிக்குரியவர்கள் சேர்ந்து போராடுவது தர்ம யுத்தமில்லை. இது கர்ணனுக்கு தெரிந்திருந்ததால்தான் ’நான் துரியோதனனை விட்டு வரமாட்டேன். வேண்டுமானால் உன் மகன்களில் நான் அர்ச்சுனனை மட்டும் கொல்வேன். கொன்றாலும் உன்னுடைய ஐந்து மகன்களும் உயிரோடு இருப்பார்கள்.’என்று சொன்னான்.தன்னை என்னுடைய மகனாக நினைத்து இருக்கிறான். நான் ஒரு முறைகூட அப்படிச் சொன்னதில்லை. எனக்கு அந்தக் குற்றவுணர்வு இருக்கவில்லை நான் பாண்டவர்களைப் பற்றி மட்டுமே நினைத்தேன். அதனால் உன் சகோதர்களுக்க் உதவு என்று சொன்னேன்.இறந்தவர்களுக்கு தர்மன் திதி செய்யப் போனபோது ’கர்ணனுக்கும் செய்து விடு. அவன் சூரியனால் எனக்குப் பிறந்த மகன்.’ என்று சொன்னேன். யுத்தத்திற்கு முன்னால் ஏன் இதைச் சொல்லவில்லை என்று அவன் கேட்டான்.என் மகன்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்..’எப்படி அவன் மட்டும் உன் வயிற்றில் பிறந்தான் என்று கேட்டான்.நீங்கள் யாரும் பாண்டுவின் புதல்வர்கள் இல்லை. மத்ரி யின் கருவில் இருவர் பிறந்தது போலவே கர்ணனும் பிறந்தான்.அவர்களைப் போலவே பிறந்ததாக நான் சொல்லி இருக்கலாம் .எதையும் என் விருப்பத்தோடு நான் செய்யவில்லை. மனைவி மற்றவர் மூலம் பிள்ளை பெறலாம் என்று பாண்டு சொன்னதைக் கேட்டுத்தான் நான் உங்கள் மூவரையும் பெற்றேன்.நான் சுயமாக நடந்து கொண்டது கர்ணனனைப் பெற்ற போதுதான்.நான் அப்போது கன்னி. கணவனின் சம்மதம் பெற வேண்டியதில்லை.இன்றைய நாளில் கணவனின் விருப்பத்தோடு மனைவி அதைச் செய்யலாம். ஆனால் கன்னிப் பெண் அதைச் செய்ய முடியாது.யயாதியின் மகள் மாதவி தன் தந்தையின் விருப்பப்படி நான்கு குழந்தைகளை நால்வரிடம் பெற்றாள். கன்னி என்பதால் தந்தையின் விருப்பம் அவளுடையதானது.நான் பாண்டுவின் மனைவி. நீங்கள் பாண்டவர்கள். கர்ணன் தேரோட்டி மகன். தன் மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்த்த குந்தி நிமிர்ந்தாள். அந்த முதிய நிசாதினப் பெண் அவளையே வெறித்தவாறு நின்றாள்.அவள் கண்களில் இரக்கம் தெரிந்தது. இரக்கமா?அதுவும் அந்தப் பெண்ணா?அவள் தன் சுள்ளியை எடுத்துக் கொண்டு நடந்தாள்.இன்று என்னவோ ஆசிரமம் ரொம்பத் தொலைவில் இருப்பது போலத் தெரிந்தது.பாலைவனத்தில் கானல் நீரைக்காண்பது…
காட்டைப் பாலைவனமாக்க முடியாது.
காந்தாரி அவள் கைகளை இணைத்துக் கொண்டாள்.’தேர்ச் சக்கரம் சுழலுவதைப் போல காலம் சுழன்று விடும்.நம்முடைய ஆயுள் சக்கரம் சுருங்கிக் கொண்டிருக்கிறது.விரைவில் அது ஒரு புள்ளியாகி விடும்.அந்தப் புள்ளியும் சூன்யமாகி விடும்”
“ஆமாம்”
“உன்னையே துன்புறுத்திக் கொள்ளாதே. கடந்த காலத்தை திரும்பக் கொண்டு வரமுடியாது.இன்றைய சூரிய உதயம் தான் யதார்த்தம்.அது போலத் தான் சூரிய அஸ்தமனமும்.நாம் தூங்கினாலும் காலம் சுழலும் ; நாளை சூரிய உதயம் நிகழும்.
காந்தாரியின் பாதங்களை தொட்டு விட்டு குந்தி புல்தரையில் படுத்தாள்.
குந்தி பாறை ஒன்றில் உட்கார்ந்திருந்த போது காடு அதிர்வது போன்ற ஒரு வித உணர்வு அவளுக்குள் ஓர் எச்சரிக்கையாய்த் தெரிந்தது.காடு இன்று அமைதியாக இல்லை.பறவைகள், கூட்டமாகப் பறக்கின்றன. குரங்குகள் தாவி மறைகின்றன. என்ன ஆயிற்று?நிசாத இனக் குடும்பங்களும் தங்கள் வேட்டை நாய்களோடு காட்டைவிட்டுச் செல்கின்றனர்.பரவாயில்லை. அவர்கள் போகட்டும்.இன்று குந்தி பூமித்தாயிடம் தன் பாவங்கள் எங்கே தொலையும் என்று கேட்பாள். எப்போது தனக்கு மன்னிப்பு என்று கேட்பாள்.
ஒரு நிழல் அருகே… அந்த முதிய நிசாதஇனப்பெண்.குந்திக்கு வியப்பாக இருந்தது. இவள் எதற்கு தன்னருகில் நிற்கிறாள். எதையோ தேடுவதைப் போல கண்களைப் பார்ப்பதேன்?.
“இன்று மன்னிப்பு கேட்கவில்லையா?”
“நீங்கள் நீங்கள்..”
நான் உன் தவறுகளைக் கேட்டேன். நீ செய்த தவறுகளில் மிகப் பெரிய ஒன்றிற்காகவும் பாவ மன்னிப்பு கேட்பாய் என்று காத்திருந்தேன்”
“உங்கள் மொழி.. எங்களைப் போன்றதா?”
“ஆமாம்.எனக்குப் புரியும். நான் தேவைப்பட்ட போது மட்டும் பேசுவேன். நாங்களும் மனிதர்கள் தான் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை! நாங்கள் யார்? பாறைகளா,மரங்களா, விலங்குகளா?”
“நீங்கள் பேசி நான் கேட்டதில்லை.”
“நான் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.பல வருடங்களாக நான் உன்னைத் தொடர்கிறேன். நாங்கள் நகரங்களுக்குப் போவதில்லை. நீயாக இங்கு வர வேண்டியதாயிற்று. குந்தி நான் பல காலமாகக் காத்திருக்கிறேன்”
“என் பெயர் தெரியுமா உங்களுக்கு?”
“உனக்கு வலிக்கிறது இல்லையா?’
அவள் சிரித்தாள். “ஒரு நிசாதினப் பெண் உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாள்.இந்தக் காட்டில் நீ நிராயுதபாணி.உன் மகன்கள் நகரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சிப்பாய்களை அனுப்பி எங்களை தண்டிக்க முடியாது!”
“இங்கே முனிவர்கள் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா”
“ஓ, முனிவர்கள்! எப்போதும் அவர்களைப் பார்க்கிறோமே!நாங்கள் காட்டின் குழந்தைகள். “
குந்தி மிகச் சோர்வாக உணர்ந்தாள். “சரி.உங்களுக்கு என்ன வேண்டும்?”
“நீ செய்த மிகப் பெரிய தவறுக்கு மன்னிப்பு கேட்கவில்லை. “
“இல்லை. நான் மன்னிப்பு கேட்டதை நீங்களும் கேட்டீர்கள்.”
“இல்லை குந்தி. அது இல்லை. நான் சொல்வது ராஜவாழ்க்கை அத்தியா யத்தைச் சேர்ந்தது. உன் மகன் அப்போது அரசனாக இல்லை.”
“நான் கர்ணனைப் பற்றி மன்னிப்புக் கேட்டாகி விட்டது.”
“ராஜவாழ்க்கையும்,மனிதவாழ்க்கையும்! வெவ்வேறு வகையான தீர்ப்புக ளோடு…ஒரு நிசாதினப் பெண் கர்ப்பமாகி விட்டால் நாங்கள் அவர்களுக்குத் திருமணம் செய்து விடுவோம்.”
“எந்த வழக்கத்தின் அடிப்படையில்?
“அது இயற்கையின் விதி. இயற்கை நாசத்தைப் பொறுக்காது. நாங்கள் வாழ்க்கையை மதிப்பவர்கள். இரண்டு மனித உயிர்கள் இணையும் போது அவர்கள் புதிய வாழ்க்கையை உருவாக்குவார்கள். இது உனக்கு புரியாது.”
“என்ன? என் மன்னிப்புக்கு மதிப்பில்லையா?”
“உனக்கு வேண்டுமானால் இருக்கலாம். எங்களுக்கு அது புரியவில்லை. மனித வாழ்க்கையின் மிகப் பெரிய கொடூரம் சுயநலத்திற்காக அப்பாவி மனிதர்களைக் கொல்வதுதான்..நீ அதைச் செய்திருக்கிறாய்”
“ஆனால்”
“பேசாதே .நான் சொல்வதைக் கேள்.காட்டு கிராமங்களில் இருந்து ஆண்களும், பெண்களும் தங்களிடம் உள்ள தேன், மூலிகைகள் ,தந்தம் இத்யாதிகளைக் கொடுத்து தங்களுக்கு வேண்டிய அரிசி, துணி, உப்பு போன்றவற்றை வாங்கிப் போவார்கள். ஆடிப்பாடி ,குடித்து மகிழ்வார்கள். அந்த வழியில் தான் ஜோதி கிருகம் இருந்தது.’
“ஆமாம்’
“யார் அந்த முதிய நிசாதினப் பெண்ணையும், அவள் ஐந்து மகன்களையும் கண்காணித்தது? யார் நிசாதனர்களுக்கு விருந்து படைத்தது? அவர்கள் விருந்துணவில் மது கலந்தது? நீதானே?” நிசாதி பெண்ணின் பார்வை அவளைக் கொலைக் குற்றம் சாட்டுவதாக இருந்தது.
“ஆமாம்”
அந்தத் தாயும், ஐந்து மகன்களும் நன்றாகக் குடித்து விட்டு கட்டை போலக் கிடந்தனர். நீ அந்தச் சிறுபாதை வழியாக வெளியேறிய போது அது உனக்குத் தெரியும் .இல்லையா?”
“ஆமாம். தெரியும்.”
“அந்த நிசாதின்..”
“நீங்கள் இல்லையா?”
“இல்லை. அவள் என் மாமியார். நான் தான் மூத்த மருமகள். மற்ற நால்வரும் அவர்களின் மனைவியர்.”
“ஆனால் நீங்கள் விதவை..”
“வாழ்க்கையின் தேவைகளை நாங்கள் மறுப்பதில்லை.மறுமணம் செய்து கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு. விரும்பினால் விதவை மணம் உண்டு. ஆம்.எங்களுக்குக் கணவர்கள், குழந்தைகளுண்டு’அவள் பெருமையோடு சொன்னாள்.
“நீங்கள் என்னை…”
“நான் உன்னைக் கொல்ல மாட்டேன். பல்லுக்கு பல், கண்ணுக்குக் கண் என்பதை ராஜவாழ்க்கைதான் செய்யும். குருஷேத்திரத்தில் அது நடந்தது. எங்கள் விதிகள் வேறானவை.”
“சொல்லுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்?”
“நீ இந்த கொடூரத்தைச் செய்து விட்டு முழுவதுமாக மறந்து விட்டாய். ஏனென்றால் உன்னைப் பொறுத்த வரை அது குற்றமில்லை. அப்பாவிக் காட்டுவாசிகள் ஆறு பேரை உன்சுயநலத்திற்காக எரித்துவிட்டாய்.அது குற்றமில்லை. ஆனால் காட்டுவாசிகளான எங்களின் சட்டப்படி நீ ,உன் மகன்கள். உன் கூட்டம் எல்லோரும் குற்றம் செய்தவர்கள்தான்’ நிசாதினப் பெண் நெருங்கினாள் “நீ இந்தக் காட்டை நன்றாகப் பார்த்திருக்கிறாயா?இங்கு இருக்கும் மரங்கள் எல்லாம் குங்கிலியம்.அவை எளிதில் எரியக் கூடியவை.தெரியுமா?’
“உம்.’
’குங்கிலியம் கீழே விழுந்து இறுகும். மரத்திலிருந்து விழும் சருகு உருண்டு குங்கிலியத்தில் உரசி நெருப்பு வெளிப்படும். காட்டுத் தீ!’
“காட்டுத் தீ?”
’ஆமாம். காட்டுவாசிகளான எங்களுக்குக் காற்றின் மணம் மூலம் அது தெரியும்.அதனால்தான் பறவைகளும், விலங்குகளும் வெளியேறுகின்றன. நாங்களும் தான்”
“எங்கே?”
“வெகு தொலைவிற்கு.தீ அணுக முடியாத இடத்திற்கு. மலைகள்,ஏரிகள், ஆறுகள் நிறைந்த இடத்திற்கு’
“காட்டுத் தீ!’
’ஆமாம்.கண் பார்வையற்ற மூன்று மனிதர்களால் அங்கு போக முடியாது. ஒருவன் பிறவியில் பார்க்கும் சக்தி இல்லாதவன். இன்னொருவர் பார்க்கும் சக்தியை விரும்பி விலக்கியவர். நீதான் முழுப் பார்வையும் இல்லாதவள்.நீ அப்பாவிகளைக் கொன்று விட்டு அமைதியாய் இருப்பவள். “
“நிசாதின். என்னை மன்னிக்க மாட்டாயா?”
“குற்றம் செய்து விட்டு மன்னிப்பு வேண்டுவது.அதுவெல்லாம் எங்கள் வசம் இல்லாதது .தவிர அது ராஜவாழ்க்கைக்கு உரியது. நாங்கள் ஜோதி கிருகத்திலிருந்து புறப்பட்ட போது மற்ற காட்டுவாசிகளும் எங்களுடன் வந்து விட்டனர். இந்தக் காடுதான் எங்களுக்கு அடைக்கலம்.”
“இப்போது காட்டுத் தீ வருகிறதே!”
’வரட்டும். தீ . மழை தீயை அணைக்கும்.பூமி மறுபடி பசுமையாய் வளரும். இது இயற்கையின் விதி.”
நிசாதினப் பெண் போய் விட்டாள்.
குந்தி அதிர்ந்தாள்.மனம் சூன்யமாக மெதுவாக எழுந்தாள். ஆசிரமத்திற்குத் திரும்பி, காட்டுத் தீக்காக காத்திருக்க வேண்டும்.காந்தாரியும் ,திருதராட்டி னனும் தம் மகன்கள் இழந்து விட்டு மரணத்திற்காக காத்திருக்கின்றனர்.
ராஜவாழ்க்கையில் முதலில் ஒருவரைக் கொன்று விட்டு அப்புறம் மன்னிப்புக் கேட்பது வழக்கமோ? குந்திக்குத் தெரியவில்லை.
—————————-
மஹாஸ்வேதா தேவி ( 1926-2016 ) புகழ் பெற்ற வங்கமொழி எழுத்தாளர்.சமூக செயல்பாட்டாளர். சாகித்ய அகாதெமி, ஞானபீட விருது, பத்மஸ்ரீ பத்ம விபூஷண் ,மாகசே உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.
இந்தக் கதை ஹிந்தியில் அனு சிங் சௌதரி அவர்களால் எழுதப்பட்ட BLUE SCARF என்ற கதைத் தொகுப்பிலிருந்து எடுத்து சுருக்கி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கதையின் ஓட்டம் ஏதும் தடைபடவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்றும் சுச்ருதா வீட்டுப்பாடம் செய்து வரவில்லை. எந்தவிதத்திலாவது ஆசிரியரை அவமானப்படுத்துவது, வகுப்பிலுள்ள மற்றவர்களிடம் வம்பு செய்வது, கேட்கப்படும் கேள்விகளுக்கு மாற்று பதில் தருவது – இவை அனைத்தும் அவளது பழக்கங்கள். அவளது டைரியில் எழுதி அனுப்பியும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. தன் குழந்தை மீது அக்கறை இல்லையா!
‘சுச்ருதா பாண்டே, சுச்ருதா.. நான் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். இன்றும் வீட்டுப்பாடம் செய்யவில்லையா? என்ன காரணம்?’ ‘எல்லாக் காரணங்களும் சொல்லி விட்டேன், புதிதாக ஒன்றும் இல்லை’. நான் ஸ்தம்பித்துப் போய் விட்டேன். வகுப்பில் எல்லோரும் சிரித்தார்கள். முதல்வரிடமோ, மற்ற ஆசிரியர்களிடமோ, டைரியில் எழுதுவதாலோ எந்தப் பயனும் இல்லை. ‘நீதான் வகுப்பு ஆசிரியர். இதனை நீதான் சமாளிக்க வேண்டும்’ என்று சொல்லி விடுவார்கள். வகுப்பை விட்டு வெளியே வந்தேன், சுச்ருதாவின் கண்கள் என் பின்னாலேயே.
‘ஆறு மாதங்கள் நான் கப்பலிலேயே இருப்பேன். அப்போது நீ தனியாக குழந்தையுடன் என்ன செய்வாய்? மேலே படி, உன் விருப்பம் போல் ஏதாவது வேலை தேடிக் கொள்’ என்று கணவர் சொல்ல, நான் எம்எஸ்ஸி படித்து விட்டு, பிஎச்டி படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பள்ளியில் ஐந்து வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். என் பெண்ணிற்கும் இப்போது ஆறு வயது. பெரிய வகுப்பு எடுப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல.
நான் சுச்ருதாவை வரச் சொன்னேன். ‘என்ன டீச்சர், ஏதாவது உபதேசம் பண்ணப் போகிறீர்களா?’ ‘இல்லை எனக்கு உங்கள் அம்மாவைப் பார்த்து சில உதவிகள் கேட்க வேண்டும். ஃபோன் இருக்கிறதா?’ ‘நீங்கள் உங்கள் வீட்டு நம்பர் கொடுங்கள். நான் வரச் சொல்கிறேன்’. நான் அவளைப் பற்றி ஏதாவது புகார் சொல்வேனோ என்று அவளுக்கு சிறிது சந்தேகம். வேலையில் இருந்து கொண்டே குழந்தையை வளர்ப்பது மிகவும் சிரமம், அதுவும் கணவர் நாடாறு மாதம், கடலாறு மாதம் என்று இருந்தால். மாமியாரையோ, அம்மாவையோ எதிர்ப்பார்க்காததால் குழந்தைக்கு லீவு வரும்போது காப்பகத்தில் விட வேண்டி இருக்கிறது.
சாயந்திரம் சுச்ருதா ஒரு பையனுடன் வண்டியில் வந்து இறங்கினாள். வீட்டைச் சிறிது ஒழுங்குபடுத்தி அவர்களை உட்காரச் சொன்னேன். அவள் ஒரு பேப்பரைக் கொடுத்தாள். அதில் பால், வேலையாள், மின்சாரம், மளிகை கடை, பிளம்பர் எல்லோருடைய ஃபோன் நம்பர்கள் இருந்தன. மேலும் அவள் “உங்கள் பெண் இவ்வளவு சின்னவள் என்று தெரியாது, நாளை நான் மருத்துவமனை, மருந்து கடை நம்பரும் எடுத்து வருகிறேன்’ என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வகுப்பில் கவனக் குறைவாக இருக்கும் இவளா இப்படி! இவளால் நான் எத்தனை தடவை வேலையை ராஜினாமா செய்ய யோசித்துள்ளேன்? ’டீச்சர் நீங்கள் ஸ்கூலுக்குப் போனால் குழந்தையை யார் பார்த்துப்பார்கள்?’ பதின்மூன்று வயது பெண் கேட்ட மாதிரி இல்லை. ‘சியா அப்பா இங்கே இருந்தால் அவர் பார்த்துப்பார், இல்லாவிடில் காப்பாகம்தான்’ என்று சொன்னேன். தன்னுடன் வந்தவனை நண்பன் என்று அறிமுகம் செய்து விட்டு நான் ஜூஸ் கொண்டு வருவதற்குள் இரண்டு பேரும் என் குழந்தையுடன் விளையாட ஆரம்பித்தனர்.
மறுநாள் ஒரு வீட்டு வேலை செய்பவளைக் கூட்டுக் கொண்டு வந்தாள். ‘நான் சிறிது நேரம் சியாவை பார்க்குக்குக் கூட்டிச் செல்லவா’ என்று கேட்டாள். அவள் கூட்டிச் சென்றால் எனக்கும் கொஞ்சம் வேலை ஆகும். ஆனால் பையன்களுடன் சுற்றுபவளுடன் என் குழந்தையை அனுப்ப விருப்பம் இல்லை. ‘பெண் ஒரு பையனுடன் சுற்றுவதைக் கூட கவனிப்பதில்லை. இவள் அம்மா ஏன் இப்படி இருக்கிறார்கள். ஒருவேளை அவளுக்கு நேரம் இல்லையோ? வெளியில் வேலை செய்கிறாளோ? அப்பாவும் என் கணவர் மாதிரி வெளி வேலையோ?’ இப்படி பலவாறாக யோசித்தேன். சுச்ருதாவை விரும்பவும் முடியவில்லை, வெறுக்கவும் முடியவில்லை. ஸ்கூலுக்குப் போகும்போது என் வண்டியை நிறுத்தி ஏறிக் கொள்கிறாள். என்ன பெண் இவள்! ஆனால் அதற்கு கைமாறாக இப்போதெல்லாம் வீட்டுப் பாடம் எழுதுகிறாள், டெஸ்ட் எழுதி அதில் தேர்வும் பெறுகிறாள். முதன் முதலாக பெற்றோர் தினத்தன்று அவளது அப்பா ஸ்கூலுக்கு வந்தார். ஆனால் அவரும் எல்லா விஷயத்தைப் பற்றி பேசினாலும், இவளது படிப்பைப் பற்றி மட்டும் பேசவேயில்லை.
ஒரு ஞாயிறன்று சுச்ருதா ஒரு மாதுவுடன் வந்து, ‘இது என் அம்மா. நீங்கள் அம்மாவுடன் பேசிக்கொண்டிருங்கள், நான் டீ போடுகிறேன்’ என்று ஸ்வாதீனமாக உள்ளே சென்றாள். நான் அவள் அம்மாவை ஆபீசில் வேலை செய்பவள் மாதிரி எண்ணிக் கொண்டிருந்ததால், இந்த மாதிரி சாதரணமானவளை எதிர்பார்க்கவில்லை. ‘சுச்ருதாவிற்கு நீங்கள் கணக்கும், அறிவியலும் சொல்லித் தர வேண்டும்’ என்று அவள் அம்மா ஆரம்பித்தாள். ‘ஆனால் நான் வீட்டில் யாருக்கும் பாடம் சொல்லித் தருவதில்லை’. ‘சுச்ருதா சொல்லியிருக்கிறாள்’. என்ன மனிதர்கள் இவர்கள். பிறரைப் பற்றி நினைப்பதேயில்லை. எல்லாம் தனக்கு வேண்டிய மாதிரி நடக்க வேண்டும். இப்படித்தான் சுச்ருதாவும் இருக்கிறாள். ‘நான் சியாவை எடுத்துக் கொண்டு வெளியில் போகிறேன். நீங்களும் அம்மாவும் பேசுங்கள்’. ‘சியா எங்கேயும் வெளியில் போக வேண்டாம்’ எப்போதும் போல் என் கோவம் சியாவின் மீதுதான். ‘அப்ப நாம் பால்கனியில் உட்கார்ந்து பேசுவோம்’ என்றாள் அம்மா.
‘எப்போதிலிருந்து அவளுக்குப் பாடம் எடுக்க வேண்டும்’ என நான் கேட்க ‘நீங்கள் எப்போது சொல்கிறீர்களோ. சுச்ருதா என்னுடைய இரண்டாவது பெண் குழந்தை. 18 வருடங்களுக்குப் பிறகு பிறந்தவள். அவளுக்கு முன் பிறந்த பையன் கணக்கில் சிறிது மார்க் குறைவாக எடுத்தான். அப்பா திட்டுவார்களோ என்று பயந்து தூக்கில் தொங்கி தற்கொலை பண்ணிக்கொண்டான். நாங்கள் இதைப் பொறுத்துக் கொள்வோம் என்று எண்ணினான் போலும். அதனால்தான் நாங்கள் சுச்ருதாவை படிப்பில் தீவீரப்படுத்தவில்லை. அவள் குறும்புக்காரிதான், ஆனால் நல்ல குணமுடையவள்’ என்று அவள் அம்மா நீளமாகப் பேசினாள். எப்படி அவர்களை சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை. இப்போது எனக்கு சுச்ருதாவைப் பற்றி எல்லாம் புரிந்தது. ஆனால் அவனுடன் வந்த பையனைப் பற்றி எப்படி சொல்வது! சரி அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். இவளிடம் சியாவை விடுவது சரிதான் என்று தோன்றிற்று. இப்போது என மனமும் இலேசாகியது.
மறுநாளிலிருந்து சுச்ருதா என் வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். கணக்கு சொல்லிக் கொடுத்தபின் அவள் சியாவுடன் விளையாடுவாள். நான் என் வேலைகளைக் கவனித்தேன். திடீரென்று ஒரு நாள் அந்தப் பையனைக் கூட்டி வந்து ‘துஷ்யந்தனுக்கும் நீங்கள் கணக்கு சொல்லிக் கொடுப்பீர்களா’ என்றாள். எனக்குக் கோவம் வந்தாலும் அவன் நல்ல விதமாகத்தான் நடந்து கொண்டான். சில நாட்கள் கழித்து ‘நான் துஷ்யந்தனுடன் இப்போது பழகுவதில்லை’ என்றாள். எனக்கு கஷ்டமாக இருந்தது. பதிமூன்று வயது பெண்ணிற்கு இதெல்லாம் தேவையா என்று. பள்ளி முடிந்தவுடன் அவளுடைய ரிசல்ட் வாங்க யாருமே வரவில்லை. நானும் என் கணவருடன் வெளியூர் சென்று விட்டதால் சில நாட்கள் கழித்து அவர்கள் வீட்டிற்கு முதன் முறையாக ரிப்போர்ட் கார்ட் கொடுக்கச் சென்றேன். அவள் அம்மாதான் வரவேற்று உட்கார வைத்தாள். வீட்டில் எங்கு நோக்கினும் பையனுடைய போட்டோதான் இருந்தது. பேச்சும் பையனைப் பற்றியே இருந்தது. ஓ அம்மா, அப்பா இருவரும் இறந்து போன பையனைப் பற்றியே நினைக்கிறார்கள், இவளைப் பற்றி நினைப்பதேயில்லை. இவளது படிப்பைப்பற்றி மட்டுமல்ல இவளைப் பற்றியே யோசிப்பதில்லை. சுச்ருதா அதனால் தான் வெளியில் துணையையும், அவர்களுடன் உறவாடுவதையும் தேடுகிறாள் என்று எனக்குப் புரிந்தது. இப்போது எனக்கு சுச்ருதா ஏன் அவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறாள் என்று தெளிவாயிற்று.
நான் சுச்ருதாவிடம் கார்ட் கொடுத்து விட்டு ‘நாளை முதல் படிக்க வந்து விடு. சியாவும் ஷ்ருதி அக்காவிடம்தான் படிப்பாளாம்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
Anu Singh Choudhary, a celebrated author in Hindi, is one of the few truly bilingual and multimedium writers. Her years as a documentary filmmaker and award-winning journalist make her stories an authentic chronicle of the zeitgeist. Her diverse experience in storytelling, publishing and communications consulting took shape at multiple platforms such as NDTV, Save the Children, Gaon Connection, Yatra Books, Harper Collins India and Amazon-Westland. As a Screenwriter, Anu has adapted two bestselling novels for screen for a leading digital platform.
சரவணன் பால் பொங்கி வருகையில் உற்சாகமாகப் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கைகளைத் தட்டிக் கொண்டே கூவினான். அம்மா அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்தார். அப்பாவும், அம்மாவும் அவனுடன் இணைந்து ‘பொங்கலோ பொங்கல்’ என்று மென் குரலில் சொன்னார்கள். முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு அதன் மீது பொங்கலுக்காக புது அடுப்பையும், மஞ்சளும், இஞ்சியும் கோர்த்துக் கட்டிய பானையையும் அம்மா வைத்து அதில் பால் ஊற்றி பொங்கி வருகையில் தான் இந்த சந்தோஷக் கூப்பாடு. கதிரவனை வரைந்திருந்த மற்றொரு கோலத்திற்குப் பக்கத்தில் அரிசி நிரம்பிய தலை வாழையிலையில், கலசத் தேங்காய், மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, புதுக் காய்கள், வாழைப்பழம், கரும்பு, மெது வடை, வெல்லப் பாகில் சுண்டிய சக்கரவள்ளிக் கிழங்கு எல்லாம் தகுந்த பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தன. தென்னங் கூந்தல்களும் தோரணங்களும், மாவிலைகளும் நிலைப்படியையும், முற்றத்தையும் அலங்கரித்தன. அம்மா ‘சூர்ய மூர்த்தே, நமோஸ்துதே’ என்றப் பாடலைப் பாட, அப்பா துதிகள் சொல்லி செவ்வந்தி, செம்பருத்தி, வெண் தும்பையால் அர்ச்சிக்க, வீடே கோயிலானது போல இருந்தது.
‘இன்று இலையில் சாப்பாடு’ என நினக்கும் போதே சரவணனுக்கு இனித்தது. அனைத்தையும் ஒரு கை பார்த்தான். அம்மா சில ஏனங்களில், சர்க்கரைப் பொங்கல், சுண்டிய சக்கரவள்ளிக் கிழங்கு, வடை, கரும்பு என்று எடுத்துக் கொடுத்து சஞ்சையின் வீட்டில் கொடுத்துவிட்டு வரச் சொன்னார். “அவா தாத்தா செத்து ஒரு வருஷமாகல்ல; இதைக் கொண்டு போய் கொடு. அவனும், பவானியும் சாப்பிடுவா; உன்ன மாரி அவாளும் சின்னவாதானே.”
பவானியின் கண்கள் வள்ளிக்கிழங்கைப் பார்த்து விரிந்ததென்றால், சஞ்சையின் கைகள் பரபரத்து வடை ஒன்றைப் பாய்ந்து எடுத்து கபளீகரம் செய்தது. ‘நெறய இருக்குடி, நீயும் எடுத்துக்கோ’ என்றான் சரவணன்.
‘நன்னா இருக்குடா, ஏன் தை மாசம் முதல் தேதி பொங்கல் வரது?’
‘சூர்யனோட கதிர் தெக்குலேந்து வடக்குக்குப் போறது சஞ்சய். அவன் மகர ராசிக்கு வரான்னு அம்மா சொல்வா.’
“ஆமா, கரெக்ட். ஹார்ட் சக்கரத்துக்கு அநாகதம்னு பேரு. அதுக்குக் கீழுள்ள இயக்கம், ஆடிலேந்து மார்கழி வர நன்னாருக்கும்னும், தைலேந்து ஆனி வரைக்கும் மேலியக்கம் நன்னாயிருக்கும்னும் எங்க யோகா மிஸ் சொன்னாங்க” என்றாள் பூரிப்புடன் பவானி.
‘உனக்குத் தெரியுமாடா, சூர்யனோட மேல்பகுதியிலிருந்து ஒரு துண்டு உடஞ்சு அதோட வட துருவப் பகுதில ரெண்டு நாளக்கி முன்ன விழுந்துடுத்து. அத ‘நாசா டெலஸ்கோப்’ படமெடுத்துருக்கு.’
“அப்போ, நமக்கெல்லாம் ஆபத்தா?”
‘இப்ப வரைக்கும் ஒண்ணும் சொல்லல. வான்வெளிகள்ல இருக்கற விண்மீன் மண்டலங்கள், பிரபஞ்சப் பொருட்கள், ஸ்டாரெல்லாம் எப்படி ஃபார்ம் ஆறதுங்கறப் பாக்கறத்துக்காக ‘ஜேம்ஸ் வெப் வானியல் தொலை நோக்கி’ (James Webb Space Telescope) ஒண்ண நாசா, (NASA) கனடாவோட ஸ்பேஸ் ஏஜென்சி, (Space Agency, Canada) யூரோப்பிய விண் அமைப்பெல்லாம் (European Space Agency) 25/12/2021ல லாக்ரேஞ்ச் 2 ல (Lagrange-2) வச்சாங்க.’ என்றான் சஞ்சய்.
“அதான் ஹப்பிள் (Hubble) இருக்கே. அப்றம் இது எதுக்கு?” என்றாள் பவானி.
‘இது சிவப்புக் கதிர்கள் (Red Rays- Infra Red Rays) மூலமா ஸ்பெஷலா ஆய்வு செய்யும். உனக்குத் தெரியுமில்லையா, ஆரம்பத்ல புற ஊதா, அதான் அல்ட்ரா வயலட் (Ultra Violet) கதிரா இருப்பது, டாப்ளர் எஃபெக்ட்டால,(Dopler Effect) அகச் சிவப்பு, (இன்ஃப்ரா ரெட்) கதிராகி நல்ல தெளிவானப் படங்களக் கொடுக்கும்.’ என்றான் சரவணன்.
“அதுக்கு $10 பில்லியன் செலவாச்சாம். அது இருக்கற லாக்ரேஞ்ச் புள்ளி 2, பூமிலேந்து 15 லட்சம் கி மீட்டர்ல இருக்கு. பூமிக்குப் பின்னாடி ஒளிஞ்சுண்டிருக்கு. அந்த இடத்ல, சூரியனோட ஈர்ப்பு சக்தியும், பூமியோட ஈர்ப்பு சக்தியும் சமமா இருக்கறதால கொறஞ்ச ஃபூயலே (Fuel) போறுமாம்.” என்றாள் பவானி.
‘அதப் பத்தி வேறென்ன தெரியும் உனக்கு?’ என்று அசந்து போய் கேட்டான் சஞ்சய்.
‘இந்த நோக்கியோட பாகங்கள் என்னென்ன, அதோட தனிச் சிறப்பு என்னன்னு சுருக்கமாச் சொல்றேன். கப்தான் இழைகளால வெளிப்பகுதியை அமைச்சு, அதில அலுமினியம் பூசியிருக்காங்க. எடை குறைவா இருக்க, வலுவா இருக்க, வெப்பத்தை வெளி மண்டலத்துக்கே திருப்பத்தான் இந்த ஏற்பாடு. அடுக்கிதழ்களாக அதிகக்கனமில்லாமல் செஞ்சிருக்காங்க. தொலை நோக்குக் கண்ணாடியெல்லாம் அறுகோணம்; சிலிக்கான், பெரிலியத்தால ஆனது இந்தக் கண்ணாடிகள். சும்மா இல்ல, 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடிகளாக்கும் அதெல்லாம். அம்மாவுக்குத் தெரிஞ்சா ஆறு பவுனாச்சேடின்னு பொலம்புவா!” என்று சிரித்தாள் பவானி.
‘எல்லாம் சரி. இப்ப அது என்னென்ன செஞ்சிருக்குன்னு உனக்குத் தெரியுமா, சரூ?’ என்றான் சஞ்சய்
‘அட்டகாசம்டா, அது. முதல்ல அத்தன தொலவுல ஒரு டெலெஸ்கோப்! ஈகிள் நெபூலா படம் (Eagle Nebula Photo) பாத்திருக்கியா? தூண் தூணா இருக்கும். அந்த புக மண்டலத்துக்குப் பின்னே சின்னச் சின்ன சிவப்பு புள்ளியாத் தெரியறத, இது படம் பிடிச்சிருக்கு. அது ஸ்டார்ஸ் பொறக்கப் போறத சொல்லுதாம். அந்த விண்மீன்கள்ல ஹைட்ரஜன் இன்னும் எரிய ஆரம்பிக்கல; அப்படி ஆச்சுன்னா 2 மில்லியன் செல்சியஸாக இருக்குமாம் அதோட வெப்பம்.’
‘ஹப்பிள் டெலஸ்கோப் ‘எக்சோ பிளெனெட்’ (Exo Planet) அதாண்டா புறக்கோள காமிச்சிருந்தாலும், இந்த ஜேம்ஸ் வெப், ஒண்ணக் காட்டியிருக்கு. ஹெச் ஐ பி 65426 பின்னு(HIP 65426 B) பேரு. அதோட முதல் நேரடி படத்தை இது காட்டியிருக்கு. நம்ம சூர்யக் குடும்பத்ல பல கிரகங்கள் இருக்கில்ல; ஆனா, இந்தக் கோள் அதனோட நக்ஷத்திரத்லேந்து ரொம்ப ரொம்பத் தொலவுல இருக்கு.’ என்றான் சஞ்சய்.
“நாம கன்யா ராசின்னு சொல்றோமே. அந்த விண்மீன் கூட்ட்த்ல, நம்மோட சூர்ய அமைப்பத் தாண்டி இருக்கற வாஸ்ப்-96 பிங்கற (WASP-96B) கோள இது படம் பிடிச்சுருக்குடா. அது 700 ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கு. அதோட அட்மாஸ்பியர்ல கார்பன் டை ஆக்ஸைட் இருக்குங்கறதை இந்த டெலஸ்கோப்தான் முதமுதலா கண்டு பிடிச்சிருக்கு.” என்றாள் பவானி.
‘நெறயாப் படிக்கறன்னு தெரியறது. டபிள்யூ ஆர் 140 (WR140) மேலோட்டைப் பத்தியும் செய்தி வந்திருக்கு. கிட்டத்தட்ட செத்துப் போச்சுன்னு நெனச்ச உல்ஃப் ரே (Wolf-Rayet) நக்ஷத்ரத்தைச் சுத்தி நம்ம கை விரல் ரேகை மாரி அழகா ஒரு படம் வந்திருக்கு பாரு, செம அசத்தல்.’ என்றான் சரவணன்.
‘எனக்கு ஒண்ணு ஞாபகம் வரதுடா. பழுப்புக் குள்ளர்கள்ல (Brown Dwarf) மண் மேகங்களை இது காட்டுது. இந்தப் பழுப்பு குள்ளர்கள், கிரகங்களை விடப் பெரிசு, ஆனா விண்மீன்னு சொல்ல முடியாத அளவுக்கு சின்னது. அதோட பேர மறந்துட்டேன்’
‘வி ஹெச் எஸ் 1256 பி’(VHS 1256 B) என்றான் சரவணன்.
‘இன்னும் நெறயா இருக்கும் விண் விந்தைகள். போகப் போகத் தெரிஞ்சுப்போம்.’
“ஆமா, ஏன் சக்கரைப் பொங்கல், வாயில கரையற வள்ளிக் கிழங்கு, மிருதுவான வட எல்லாம் சூர்யனுக்குக் கொடுக்கறாங்க?” என்று கேட்டாள் பவானி.
இருவரும் முழித்தார்கள்.
“அவனுக்குப் பல் கெடையாதாம்.”
‘இதென்ன கத? அப்போ கரும்பு?’ என்று கேட்டான் சஞ்சய்.
“அத அவர் ஜூஸா உறிஞ்சிடுவார்” என்றாள் பவானி. எல்லோரும் சிரித்தார்கள்.
வேலையிலிருந்து திரும்பி வருகையில் தினந்தோறும் இதே காட்சியைப் பார்ப்பாள் அஞ்சனா. நான்கைந்து பிள்ளைகள் குழுவாக உட்கார்ந்து ஒருவருக்கு ஒருவர் பாடம் சொல்லித் தருவார்கள். நல்லது தான். சனி-ஞாயிறு தோறும் இந்த வசதியற்ற படிக்க ஆர்வம் காட்டுவோருக்குச் சந்தேகங்களைத் தெளிவு படுத்துவதைச் செய்து வந்தாள் அஞ்சனா. சத்தமில்லாமல் நூலகமும் துவக்கினாள். நாளடைவில் ஒரு நாளிதழில் இவர்களின் முன்னேற்றத்தைக் கவனித்து விமர்சித்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு இந்தச் செயலை அங்கீகரித்துப் பாராட்டு விழாவும் நடந்தது.
கேட்கவே எனக்குச் சுகமாக இருந்தது! ஏனெனில் அஞ்சனா வாழ்வில் முன்பு விசித்திரமான ஒரு சவால் எழுந்திருந்தது. அதை அஞ்சனா எதிர்கொண்டதை நீங்களும் கேளுங்கள்.
தொலைப்பேசியில் மருத்துவர் அழைத்து அவரிடம் வந்த பத்மாவை என்னிடம் அனுப்புவதாகக் கூறினார். இரண்டு மாதமாகத் துவண்டு விழுகிறாள், ஆனால் சட்டென்று எழுந்து கொள்கிறாள். பலவிதமான பரிசோதனை செய்ததில் எதிலும் பிரச்சினை இல்லை என்றார்.
பத்மாவைக் கையால் தாங்கியபடி அழைத்து வந்தவனைத் தன் மாப்பிள்ளை கண்ணன் என அறிமுகம் செய்தாள். பத்மா ஐம்பது வயதான இல்லத்தரசி. இரண்டு ஆண்டுகள் முன் அறுபத்து ஐந்து வயதான கணவன் திடீர் மரணம். விதவை கோலத்தில் இல்லை.
பத்மாவை மட்டும் உட்காரச் சொல்லி, நேர்வதை விவரிக்கச் சொன்னேன். ஏறத்தாழ ஆறு மாதங்களாக மயங்கி விடுவதாகக் கூறினாள்.
நுணுக்கமாக ஆராய்ந்ததில் பத்மா துவண்டு விழுவது மாலை நேரங்களில் நேர்வதாகவும், சனி-ஞாயிறு மட்டும் ஆகிறது என்று கூறினாள். ஒரு பொழுதும் உடலில் காயம் பட்டதேயில்லை.
எங்கேயாவது போகவேண்டும் என்றால் கண்ணன் இவ்வாறே தாங்கிக் கொள்வான் என்றாள். குணமாகுமா எனக் கேட்டதற்குப் பல ஸெஷன் தேவை என விளக்கினேன்.
தொடர்ந்து ஆராய்ந்ததில் மயங்கும் போது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, யார் இருக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் தெரிகிறது என்றாள். சில வினாடிகளுக்குள் நினைவு திரும்புகிறது, சோர்வாக இல்லை. மறு வினாடி எப்பொழுதும் போல எல்லாவற்றையும் செய்ய முடிகிறது. பசி, தூக்கம், உணர்வில் எந்த வித்தியாசமும் இல்லையாம்.
சொல்வதிலிருந்து நுணுக்கங்களை அடையாளம் கண்டுகொண்டு, மேலும் கேட்டதும் விவரித்தாள் பத்மா.
மகள் அஞ்சனா, அப்பாவின் செல்லம். அவளுக்குத் தைரியம் அதிகம் என்றதால் பத்மாவிற்கு அவளிடம் பாசம் குறைவே.
இப்போதெல்லாம் பத்மாவிற்கு மாதவிடாயின் போது ஏதேதோ உணர்வுகள் பொங்குகிறது, நெருக்கமாக இருப்பதைப் பார்த்தாலே ஏக்கப் படுவது, எனப் பலவற்றை விவரித்தாள். அவளுடைய கைனகாலஜிஸ்ட் இவை மெனோபாஸ் சம்பந்தப்பட்டவை என விளக்கியிருந்தார்கள். மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது என்றாள்.
யாரும் தனக்குக் கவனிப்புத் தருவதில்லை என்று மனதிற்குள் தோன்றுவதாகக் கூறினாள். ஒவ்வொரு முறையும் அஞ்சனாவைப் பார்க்க வேண்டும் என்பேன். சொல்ல மறந்து விட்டதாகச் சொல்வாள். கண்ணனுடன் வருவாள்.
ஸெஷன் துவங்கியது. பத்மாவிற்குக் கைகொடுத்துத் தாங்குவது அவசியமற்றது எனக் கண்ணனுக்குப் புரிய வைத்ததும் நிறுத்தினான்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த அஞ்சனாவிடம் கேட்டபோது அம்மாவிற்கு இதுபோல மயக்கம் முன்பு இல்லை என்றாள். அப்பா இருந்தவரை தலைவலி எனப் படுத்து இருப்பாள்.
தனக்கு இருபத்தி எட்டு வயதில் கல்யாணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது என்றாள் அஞ்சனா. கணவன் கண்ணனின் வயது இருபத்தி ஒன்பது.
கண்ணனின் அப்பா தியாகராஜனும் அஞ்சனாவின் தந்தையும் பால்ய நண்பர்கள். பக்கத்து வீட்டில் வசித்தார்கள். நண்பனைப் பார்க்க வரும் போதெல்லாம் ஏதோவொரு மனவீராங்கனைச் செயலை அஞ்சனா செய்ததாக நண்பனுடன் பகிர்வது வழக்கமானது. தியாகராஜனுக்கு அது தன் இறந்த மனைவி விசாலாட்சி செய்வது போலத் தோன்றியது. அப்பா மகன் பந்தம் அந்த அளவிற்கு நெருக்கமாக இருக்க, மகன் கண்ணனிடம் பேசினார். அவனது ஒப்புதல் தெரிந்ததுமே கையோடு குலம்-கோத்திரம் கேட்காமல் மகனுக்கு அஞ்சனாவைக் கேட்டார். கல்யாணம் நடந்தது.
அஞ்சனா படிப்பை ரசிப்பவள். நிறையப் படித்தது புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவன வேலையிலும் உதவுகிறதாம்! வேலைப் பொறுப்பை ஆறு மணியுடன் நிறுத்திக் கொண்டு, ஏழு மணி அளவில் வீட்டிற்கு வந்து விடுவாள். இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டு, பேசிய பின் அறைக்குள் சென்று விடுவார்கள். எட்டரை மணியிலிருந்து தாயம், செஸ், புத்தகம் படிப்பது, பாட்டுக் கேட்பது என்று இருப்பார்கள். கல்யாணமான முதல் வருடம் முழுவதும் இப்படி.
கடந்த ஆறு மாதங்களாக பத்மாவும் அவர்களுடனேயே இருக்கிறாள். மகளின் வீட்டில் இருப்பதாலும், அஞ்சனா வேலைக்குப் போவதாலும், பத்மா சமையல் செய்வதைத் தன் இலாகாவென வைத்துக் கொண்டாள். இருவரும் சாப்பிட்டபின் தன் அறைக்குச் சென்று சேர்ந்து இருக்கையில் பத்மா வருவாள், உற்றுப் பார்த்துச் சென்று விடுவாள்.
தியாகராஜனும் இவர்களுடன் இருந்தார். கண்ணன் ஒரே மகன். அப்பாவுடன் நெருக்கம், அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தங்களது எனக் கணவன் மனைவி ஒருமனதாக எடுத்த முடிவு. வீட்டில் மூன்று படுக்கையறை என்பதால் சரியாக இருந்தது. அவர் கணிதம் பேராசிரியர். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பக்கத்தில் உள்ள கல்வி இடங்களில் பாடம் சொல்லிக் கொடுப்பார், பிள்ளைகள் சந்தேகம் தீர்த்துக்கொள்ள வீட்டுக்கு வந்தாலும் சொல்லித் தருவதைச் செய்து கொண்டிருந்தார். இதனால் அடிக்கடி வெளியே சென்று வருவார்.
பத்மா முதலில் இதைப் புகழ்ந்தாள். போகப்போகச் சலித்துக் கொண்டு தியாகராஜன் மனசாட்சி இல்லாதவன், தனக்கு உளைச்சல் ஏற்படுகிறதென முணுமுணுத்தாள். கண்ணன், அப்பாவைக் கோபித்துக் கொண்டான். மகனின் சொல், செயலில் தியாகராஜன் வியந்தார். ஏதோ சரியில்லை எனத் தோன்றியது.
ஸெஷன்களுக்கு, பத்மா ஏதோ விழாவிற்குப் போவது போல அலங்கரித்துக்கொண்டு வருவாள். அஞ்சனா இவ்வாறு இல்லாததால் கணவன் அவள்மேல் ஆசையாக இல்லாததாகப் பத்மா நினைத்தாள். இதை நாங்கள் அலச, தனக்கு அஞ்சனாவைப் பிடிக்காவிட்டாலும் கண்ணனைப் பிடித்திருக்கிறது என்றாள்.
அஞ்சனா வேலையிலிருந்து வருவதற்குச் சற்று தாமதமானால், அவள் வருவதற்கு முன்பே பத்மா கண்ணனுக்கு உணவைப் பரிமாறி விடுவாள். ஞாயிற்றுக்கிழமைகளில் தலையில் எண்ணெய் தேய்த்து விடுவாள், படங்களுக்குப் போகும் போது அவன் கையைப் பற்றியபடி படம் பார்ப்பாளாம். அவனிடம் ஏதோ ஈர்ப்பு என்றாள்.
பத்மா இவ்வாறு செய்கையினால் தம்பதியர் உறவின் மேல் தாக்கம் என்னவென்று அறிய, அடுத்த ஸெஷனில் அஞ்சனாவுடன் தொடங்க நினைத்தேன்.
வந்ததோ தியாகராஜன். மனம் குழப்பத்தில் இருப்பதாகக் கூறினார். தன்னுடைய வேலை நேரங்கள் ஒரே மாதிரி இல்லாததால் வெவ்வேறு நேரத்தில் வீட்டிற்குத் திரும்புகிறார். சம்பந்தியம்மா இது தனக்குக் கஷ்டமாக இருப்பதாகக் கண்ணனிடம் சொல்லிய விவரத்தைப் பகிர்ந்தார்.
இதைச் சீர்செய்ய வேண்டும், தன்னால் கணவன்-மனைவி உறவில் எந்த வித்தியாசமும் வரக்கூடாது என முடிவு செய்தார். இதுவரை அப்பா பிள்ளை உறவில் விரிசலே இருந்ததில்லை. படித்த கல்லூரியில் வேலை அழைப்பை ஏற்றுக்கொள்ள நினைத்தார். ஓரிரு ஸெஷனில் நிலைமையைச் சமாளிக்க வழி வகுத்தோம். செய்து வந்தார். பத்மா முணுமுணுக்கவில்லை. மயக்கமும் குறைந்தது. கண்ணனுக்கு பத்மா செய்வதைத் தகப்பனாக ஏற்றுக்கொள்ளத் தயக்கமாக இருக்கிறது என்றார். அதனால் கண்ணன்-அஞ்சனா இடையே இடைஞ்சலோ?
கண்ணனின் விளக்கம், கல்யாணமான முதல் வருடம் திருப்தியாக இருந்தது. பத்மா கூடச் சேர்ந்ததிலிருந்து ஏதோ மாதிரி ஆனது. ஏறத்தாழ ஆறு மாதமாக மாமியாரை அந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பதில் சங்கடப் படுவதாக விளக்கினான்.
சம்பவங்களின் விவரங்களைச் சேகரிப்பதற்கு கேள்விகளை அமைத்தேன். பத்மா அவ்வளவு நெருக்கமாக உட்காருவது, உணவைப் பரிமாறுவது என்று சிலவற்றைக் கண்ணன் கூற, எதனால் சங்கடம் என்று கவனித்து வரப் பரிந்துரைத்தேன்.
பத்மா, கண்ணன் தனக்குக் கணவராக வராதது வருத்தம் என்று வெளிப்படையாகச் சொன்னாள். கண்ணனுக்குச் சேவை செய்வதற்கு இடையூறு சம்பந்தி தியாகராஜன் என்றாள். கண்ணனும் ஈடுகொடுக்க, இப்படி மகளின் வாழ்க்கையில் குறுக்கிடுவது தவறென்று நினைக்கவில்லை என்றாள். இத்தகையான மனோபாவம், பத்மா மயக்கத்திற்கானச் சிகிச்சை அணுகுமுறையை விரிவாக வேறொரு முறை பார்ப்போம்.
பத்மா, தன்னால் தியாகராஜனுடன் பகல் வேளையில் தனியாக இருக்க முடியாது என்றதை அவரால் தாங்க முடியவில்லை. மறுநாள் வந்து இதைச் சொல்லி வருந்தினார். மகனும் அவர் தரப்பில் ஏதும் சொல்லாததால், கல்லூரியில் வேலையை ஏற்றுக் கொண்டு விட்டேன் என்றார். அஞ்சனாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
அஞ்சனா வந்தாள். தியாகராஜனின் நிலையை விளக்கினாள். தன்னால் அம்மாவை குறைகூற மனம் வராததைப் பற்றிப் பேசினாள். அம்மா கண்ணனைக் கவர்ந்தது மனதை வலித்தது. கணவன் இவ்வாறு ஈர்ப்புப் படுவான் என்று நினைக்கவேயில்லை என அழுதாள். எடை குறைந்து கொண்டே போனது.
இந்த தருணத்தில், அவள் செய்துவந்த ஆராய்ச்சியைச் செயல்படுத்த இந்தோர் போய் பத்து மாதங்கள் இருக்கும்படி நேர்ந்தது. கண்ணன் அவளைத் தனியாக அனுப்பி வைக்க விரும்பவில்லை. தன் வேலையில் சொல்லி ஊர்மாற்றம் ஏற்பாடு செய்தான், இருவரும் ஒன்றாகச் சென்றார்கள். ஸெஷன்கள் ஆன்லைனில் தொடர்ந்தது.
அங்கு அஞ்சனா-கண்ணன் வாழ்க்கை மறுமலர்ச்சி அடைய, பலவிதமான முன்னேற்றத்தைக் கண்டார்கள். கண்ணன் பத்மாவின் ஈர்ப்பை ஸெஷனில் எடுத்து பரிசீலனை செய்து வர, இருவருக்கும் இடையே இருந்த வேறுபாடுகள் கரைந்தது, ஓர் வருட ஸெஷன்களுக்குப் பிறகே. அதன் ஓர் பிரதிபலிப்பே முதலில் அஞ்சனா சந்தித்த வெற்றி!
கண்ணன் அப்பாவுடன் உறவைச் சரிசெய்ய விரும்பினான். தியாகராஜனோ நம்பிக்கைத் துரோகத்திலிருந்து வெளிவர மனம் வராததால் தயக்கத்துடன் பங்களிப்பைத் தரச் சம்மதித்தார். அந்தப் பயணமும் தொடர்கிறது!
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை
ஆலங்குடி சோமு அவர்களின இந்த வரிகளைப் பார்த்த, கவிஞர் முத்துக்கூத்தன் , தான் இந்த வரிகளைத் தொகையராவாக உப்யோகிக்கலாமா என்று கேட்க, கவிஞரும் சரி என்று கூற, அந்தப் பாடல் தான் ஆடிவா ஆடிவா என்று, கே வி மகாதேவன் இசையில், டி எம் எஸ் பாட, பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது.
ஆலங்குடி சோமு பாடல் வரிகளில் அழகான உவமைகளைக் கையாண்டிருப்பார். நடிகர் திலகம் நடித்து, மிகப் பெரிய வெற்றி பெற்ற சொர்க்கம் படத்தில் இடம் பெற்ற பாடல் அந்தக் காலத்தில் வானொலியில் தினமும் ஒலித்தது. பணக்காரக் கனவு என்பதனால, பாடல் முழுவதும் விலை உயர்ந்த பொருள்களை வார்த்தைகளாக எழுதிஇருப்பது கவிஞரின் சிறப்பு. அந்தப் பாடல் –
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்.
இந்தப் பாடலில், பொன்மகள், பொருள் கோடி, பொங்கும் தேன், பூமேடை, முத்துக்கள், வைரம், செல்வத்தின் அணைப்பு, வெல்வட்டின் விரிப்பு – முத்தாய்ப்பாக செல்வத்தின் உருவாம் திருமகள் சம்மதம் என பயன்படுத்தியிருப்பது மிகச் சிறப்பு.
அதேபோல,
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணை வேண்டும்
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திடவே இங்கு வழி ஏது ,
கண்ணுக்குப் பார்வை பகையானால்
அதைக் கருத்தால் உணர்த்திட வழி உண்டு
பெண்ணுக்குத் துணையே பகை ஆனால்
அந்தப் பேதையின் வாழ்வினில் ஒளி ஏது ,
என உவமைகளால் வடித்திருப்பார்.
தனது தாய் மறந்த சோகத்தை, அடுத்து வந்த திரைப்படப் பாடலில்,
மலை சாய்ந்து போனால் சிலை ஆகலாம்
மரம் சாய்ந்து போனால் விலை ஆகலாம்
மலர் சாய்ந்து போனால் சரம் ஆகலாம்
ஏழை மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்
என்று எழுதி இருப்பார்.
காதல் என்பது தேன்கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு ,
ஆண்டவன் உலகுக்கு முதலாளி
அவனிடம் நான் ஒரு தொழிலாளி –
எண்ணப் பறவை சிறகடிக்க
விண்ணில் பறக்கின்றதா
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
போன்ற பாடல்களின் வரிகள் இவரின் கவித்துவதிற்கு ஒரு உதாரணம் எனக் கூறலாம்.
இளையராஜா இசையில் கூட, பதினாறு வயதினிலே படத்தில் – செவ்வந்திப் பூவெடுத்து என்ற பாடலை எழுதினார். உடல் நிலை சரி இல்லாததால், இன்னும் சில பாடல்கள் எழுத முடியாமல் போனது என்று கவிஞரின் மகள் திருமதி காவேரி அவர்கள், கூறுவார்கள்.
சில வருடங்களுக்கு முன், சென்னை எப் எம் வானொலிக்கு, நானும், கவிஞரின மகளும் இணைந்து ஒரு மணி நேர நிகழ்ச்சியாக, கவிஞரின் பாடல்களைப் பற்றிப் பேசி, ஒலிபரப்பியது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இவரின் பாடல்களில் சில
1932-ஆம் ஆண்டு பிறந்தவர். திரைக்கதை எழுதவேண்டுமென்ற ஆவலோடு திரையுலகை நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித்தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பளை அவசியந்தான்’’ என்ற பாடல்.
‘கொங்கு நாட்டுத் தங்கம்’ படத்துக்காக ’கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்’, ‘கலையரசி’ படத்தில் ’நீல வானப் பந்தலில்’, ’காஞ்சித் தலைவன்’ படத்தில் ‘அவனியெல்லாம் புகழ் மணக்கும் அம்மன் அருள்’, பி.பானுமதி பாடிய ’மயங்காத மனம் யாவும் மயங்கும்’ போன்ற பாடல்கள் ஆலங்குடியாரின் பிரபலமான பாடல்களாகும்.
‘தொழிலாளி’ படத்தில் ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’ என்ற பாடல் பொதுவுடமை, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவற்றை அழகாக எழிய தமிழில் எடுத்துக் கூறிய பாடல்.
1965-ஆம் ஆண்டு 10 படங்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. ‘இரவும் பகலும்’, ’எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒரு விரல்’, ‘கார்த்திகை தீபம்’, ‘எங்க வீட்டுப் பெண்’, ’பூஜைக்கு வந்த மலர்’, ‘நாணல்’, ’நீர்க்குமிழி’, ‘விளக்கேற்றியள்’ என்பவை .
நடிகர் எஸ்.ஏ.அசோகன் பாடிய ஒரே பாடலான, ‘இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்’ , நல்ல தத்துவப் பாடல்.
டி .எம்.எஸ்.பாடிய, ஜெய்சங்கர் அறிமுகப் படமான இரவும் பகலும் படத்தில் வந்த, இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்’, உள்ளத்தின் கதவுகள் கண்களடா என்ற பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றப் பாடல்களாகும்.
‘எங்க வீட்டுப் பிள்ளை’க்காக இவர் எழுதிய எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினருடன் பாடிய ‘கண்களும் காவடிச் சிந்தாகட்டும், காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்’ என்ற பாடலை எழுதித்தரும்படி கேட்டவுடன் ஏழே நிமிடங்களில் எழுதிக்கொடுத்தார் ஆலங்குடி சோமு, என்பார்கள்.
‘குடியிருந்த கோயில்’ படத்தில் இவர் எழுதிய ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ என்ற டி..எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடலைக் கேட்டு ரசிக்காத உள்ளங்கள் இல்லையெனலாம். இதே படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை’ என்ற பாடலும் அன்றைய காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும், ரசிகர்களைத் துள்ளி ரசிக்க வைக்கிறது.
‘காதல் படுத்தும் பாடு’, ‘சாது மிரண்டால்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’, ‘செல்வம்’, ‘தேன் மழை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’, ‘அரசகட்டளை’, ‘பக்தப்ரஹலாதா’ போன்ற படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதினார்.
டி. எம்.எஸ். பாடிய ‘அடங்கொப்புறான சத்தியமா நான் காவல்காரன்’ என்ற பாடல் மிக மிகப் பிரபலமானது. இதே படத்தில் மற்றொரு பாடல் ‘கட்டழகுத் தங்க மகள் திருநாளோ, அவள் கிட்டே வந்து கட்டி முத்தம் தருவாளோ’ என்ற பாடலும் மிகப் பிரசித்தம் பெற்றது.
‘கணவன்’, ‘கண்ணன் என் காதலன்’, ’காதல் வாகனம்’, ‘சத்தியம் தவறாதே’, ‘தெய்வீக உறவு’, ‘பொம்மலாட்டம்’ எனப் பல படங்கள்., பொம்மலாட்டம் படத்தில் , வி குமாரின் இசையில், சுசீலா பாடிய ‘மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி’, பாடல் ரசிகர்களை மயங்கச்செய்தது.
‘அடிமைப்பெண்’, ‘அத்தை மகள்’, ’கன்னிப்பெண்’, ‘மனசாட்சி’ ‘பத்தாம் பசலி’, ‘சொர்க்கம்’, குமரிக்கோட்டம்’ ‘உனக்கும் எனக்கும்’, ‘வரவேற்பு’, ‘திருமலை தெய்வம்’ ‘பொன் வண்டு’ ‘இதயம் பார்க்கிறது’, ‘தாய் பிறந்தாள்’, ‘திருமாங்கல்யம்’ ,‘பணம் பெண் பாசம்’, ’ஆசை 60 நாள்’, ’மழை மேகம்’, ’16 வயதினிலே’, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ ஆகிய படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
1960 தொடங்கி, 1997 வரை 35 ஆண்டுகளில் எண்பது படங்களுக்கு சுமார் 200 பாடல்கள் எழுதியுள்ளார் ஆலங்குடி சோமு. இவர் கடைசியாக ‘பொற்காலம்’ படத்திற்கு எழுதியது 1997-இல் வெளிவந்தது.
பிற்காலத்தில் பாரிஸவாத நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்த இவர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் நாகேஷ், ஜெமினிகணேஷ், ராஜஸ்ரீ, நடித்த ‘பத்தாம் பசலி’ என்ற படத்தையும், ஜெய்சங்கர், ஜெயகௌசல்யா, ஜே.பி.சந்திரபாபு, நடித்த ‘வரவேற்பு’ என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவ்விரு படங்களும் வெற்றி பெறவில்லை. வரவேற்பு படம் தேவையற்ற அரசியல் பிரச்சினைகளையும் இவருக்கு உருவாகியது.
இந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும, பத்தாம் பசலியில் இடம் பெற்ற ‘அம்மாடி எம்புட்டு தூரம் நடக்குறது’, ‘வெள்ளை மனம் கொண்ட பிள்ளையொண்ணு’, ’போடா பழகட்டும் ஜோடி’, ‘பத்தாம் பசலி மாமா…. மாமோய், ஆகிய பாடல்கள் , இசை அமைப்பாளர வி குமார் இசையில், ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அது போல ‘வரவேற்பு’ படத்தில் இடம்பெற்ற ‘பொன் வண்ண மாலையில் நீ தொடும்போது’, ‘வரவேண்டும் மகராஜா தரவேண்டும் புதுரோஜா’, ‘ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்’ ஆகிய பாடல்களும் , சங்கர் கணேஷ் இசையில், அன்றைய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும்.
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச் சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா,
என்ற பாடல், தாலாட்டுப் பாடலுக்கு ஒரு உதாரணம். வி குமாரின் இசையில், டி எம் எஸ் குரலில் நம்மை மயக்க வைக்கும் வரிகள்.
மெல்லிசை மாமன்னர் டி கே ராமமூர்த்தி இசையில், இசை மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய, சாது மிரண்டால் படத்தில் இடம் பெற்ற அருள்வாயே நீ அருள்வாயே என்ற சிந்துபைரவி இராகப் பாடல் இவர் எழுதியது தான்.
நான் ஆணையிட்டால் என்ற படத்திற்காக,
ஓடி வந்து மீட்பதற்கு உண்மைக்கோ கால்கள் இல்லை
ஓய்ந்திருந்து கேட்பதற்கு நீதிக்கோ நேரமில்லை
பார்த்த நிலை சொல்வதற்கு பரமனுக்கோ உருவம் இல்லை
என்று ஒரு பாடல் எழுதி இருப்பார். அவரின் நேர்மையான வாழ்க்கையின் வடிவம் இந்த வரிகள் எனலாம். அதேபோல,
வெள்ளி நிலா வானத்திலே வந்து போகுதடா – அது
வந்து போன சுவடு அந்த வானில் இல்லையடா
என்று அவர் எழுதினார்.
ஆனால் ஆலங்குடி சோமு வந்து போன சுவடு காலத்தால் மறையாதது – கனிந்த பாடல்களால் நிறைந்திருப்பது என்றால் மிகை ஆகாது.
(கம்சன் அனுப்பிய பகாசுரன் என்ற அரக்கன் கொக்கின் உருவில் வந்தான். கொக்கின் அலகைப் பிளந்து கொன்றான் கண்ணன்.
அகாசுரன் சொல்வது
படைக்கலம் ஏதும் இன்றிப்
பாய்ந்துதன் அலகால் யாவும்
உடைக்கவே வல்ல என்றன்
உறுதிறன் மிக்க அண்ணன்,
இடைக்குலச் சிறுவ னாலே
இறுதியை அடைந்த செய்தி
கிடைக்கவே வந்தேன், அந்தக்
கேட்டினைத் துடைப்பேன் என்றான்.
பாம்பின் உருவில் காத்திருத்தல்
பிள்ளைகள் மாடு மேய்க்கும்
பெரியதோர் வனத்தை மேவித்
தள்ளியே புதரின் பின்னே
தன்னுரு மறைத்தி ருந்தான்
கள்ளமே மிக்க பாம்பாய்க்
கடிதினில் உருவம் கொண்டான்
துள்ளியே வருவோர் தம்மைத்
துற்றென விழங்கு தற்கு.
(துற்று – சோற்றுக் கவளம்/ உணவு)
கூடிக் குதிப்பர் சிலசிறுவர்
குழலை இசைப்பர் சிலசிறுவர்
ஓடி ஒளியும் விளையாட்டில்
உவகை கொள்வர் சிலசிறுவர்.
பாடிப் பறந்து செல்கின்ற
பறவை நிழலைப் பிடிப்பதற்கு
நாடிச் செல்வர் சிலசிறுவர்
நகரும் பொழுதை மறந்திருப்பர்
அன்னம் போலச் சின்னநடை
அசைந்து செல்வர் சிலசிறுவர்
மின்னும் மடுவில் தம்முருவம்
மேவக் காண்பர் சிலசிறுவர்
தின்னும் உணவை மறைத்துவைத்துத்
தேட வைப்பர் மற்றவரை
இன்னும் குறும்பு பலவற்றை
இனிதே இயற்றி மகிழ்ந்தனரே
மலைபோல் இருக்கும் பெரும்பாம்பின்
வடிவம், வயிறோ பசித்தீயால்
உலைபோல் கொதிக்கும், உதடுகளோ
ஒருங்கே விண்ணும் மண்தொடுமே
சிலைபோல் விரிந்த பேழ்வாயும்
சிறுவர் நுழையும் குகையென்ற
வலைபோல் அமைய அவ்வரக்கன்
வஞ்சம் மிஞ்சக் காத்திருந்தான்.
(பேழ்வாய் – பெரிய வாய்)
விளக்கம்:
பாம்பின் வடிவம் மலைபோல் இருந்தது. அதன் வயிறு, பசித் தீ எரியும் உலை போல் இருந்தது. அப்பாம்பின் மேல் உதடு விண்ணையும், கீழ் உதடு மண்ணையும் தொட்டன. சிலைபோல் காட்சியளித்த பெரிய வாய் விரிந்து, சிறுவர் நுழையக் கூடிய குகையாகிய வலைபோல் அமைந்திருந்தது.இப்படிப்பட்ட பாம்பின் தோற்றத்தில் அவ்வரக்கன் காத்திருந்தான்.
சிரித்தவாய்ச் சிறுவர், தேரை
சிக்குதல் போல அங்கு
விரித்தவாய்க் குகையின் உள்ளே
விருப்புடன் பசுக்க ளோடு
வருத்தமே இன்றிச் செல்ல
மாயனும் தொடர்ந்து போக
நரித்தன அரக்கப் பாம்பு
நச்சுவாய் இறுக்கி மூடும்
மூடிய வாய்க்குள் சென்றார்
மொய்த்திருள் சூழக் கண்டார்
வாடியே மயங்கி வீழந்தார்
மாயனும் சிரித்துக் கொண்டான்
கூடிய வேளை இஃதே
கொல்லவே, என்று தன்னை
நீடிய உருவாய் ஆக்கி
நெடுமரம் போல்வ ளர்ந்தான்
வெடித்தவவ் வுருவம் மேலும்
விரைவுடன் வளர்ந்தே ஓங்கத்
துடித்தது அரக்கப் பாம்பு
தொண்டையும் புடைத்துக் கொள்ள
அடித்தது தரையில் வாலை
அக்கணம் உயிர்பி ரிந்து
படைத்தவன் பாதம் சேரப்
பார்த்தவர் வியந்தார் அம்மா!
(வெடித்த – மேலே கிளம்பிய)
(தொடரும்)
“அடியே அல்லி! இன்னைக்கு என்ன சூடான சயன்ஸ் நியூஸ்?” என்று கேட்டாள் அங்கயற்கண்ணி மாமி!
“சாகும் போது மனதில் என்ன தோன்றும் தெரியுமா மாமி?” என்றாள் அல்லிராணி.
“எனக்கு என்னடி தெரியும்? நான் என்ன செத்தாப் பார்த்திருக்கேன்” என்று சிரித்த மாமி, “சாகும் போது சங்கரா என்று சொன்னால் புண்ணியம் என்றுதான் கேள்விப்பட்டிருக்கேன்” என்றாள்.
“மாமி சயன்ஸ் அதை ஆராய்ச்சி செய்து, ஒரு ரிப்போர்ட் ஒன்று வந்திருக்கிறது” என்றாள் அல்லி.
“சொல்.. சொல்.. சொல். “என்றாள் மாமி.
“உயிர் போகும் முன், வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் மனதில் விரியுமாம்”
“அது என்ன, T20 ஹைலைட் வீடியோ போலவா?” என்றாள் மாமி.
“மாமி.. நீங்கள் சினிமாப்பைத்தியம் மட்டும் தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்ப தான் தெரிந்தது நீங்கள் கிரிக்கெட் பைத்தியம் என்பதும்” என்று சொல்லிய அல்லி சிரித்தாள்.
“சரி.. மேலும் சொல்” என்றாள் மாமி.
“இதயம் நிற்பதற்கு முன்னர், 30 நொடிகளிலிருந்து இதயம் நின்ற பின் 30 நொடிகள் வரை, மனிதனுடைய மூளை அலைகள் காட்டும் நிகழ்வுகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்து ஆய்ந்துள்ளனர். அதன் படி அது ஒரு கனவு நிலை, நினைவின் முன்னோட்டம் (memory recall) மற்றும் ஒரு தியான நிலை.” என்றாள் அல்லி.
“அது ‘மலரும் நினைவுகள்’ என்று சொல்லு” என்றாள் மாமி.
அல்லி தொடர்ந்தாள்:
“ஆராய்ச்சியாளர்கள், செத்துக்கொண்டிருக்கும் மனிதனின் கடைசி 15 நிமிடங்களில் மூளை அதிர்வுகளைப் பதிவு செய்ததில், அந்த ‘ஒரு நிமிடம்’ இப்படி வெளியிட்ட காமா (gamma waves) அலைகள் வாழ்க்கை அலைகளைக் (life recall) காட்டியுள்ளது.” என்றாள்.
“ஷாருக்கான்-ஐஸ்வர்யா ராய் நடித்த தேவதாஸ் இந்திப்படம் பார்த்திருக்கியா” என்று கேட்டாள் மாமி.
அல்லி, “பார்த்திருக்கிறேன். இப்ப அந்தக் கதை எதுக்கு என்றாள்”.
மாமி, “அதில் தேவதாஸ் சாகும் சமயம், அவன் மனதில் அவனது வாழ்க்கை நிகழ்ச்சிகள் விரிவதாகக் காட்டியிருந்தார்கள். அப்புறம் இதைத்தான் கண்ணதாசனும் பாடினானோ ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?” என்றாள் மாமி!
அல்லி சிரித்தாள்!
இது ஒரு அதிசய உலகம்!
https://www.livescience.com/first-ever-scan-of-dying-brain