சரித்திரம் பேசுகிறது – யாரோ

ராஜாதிராஜன்

முதலாம் ராஜாதிராஜன் | இரண்டாம் ராஜேந்திர சோழன் Promo - YouTube

 

நேரடியாகக் கதைக்குள் செல்வோம்.

வருடம்: 1044

ராஜேந்திர சோழன் பிரம்மதேசத்தில் (இன்றைய அம்பாசமுத்திரத்தில்) ஒரு அரண்மனையின் மஞ்சத்தில் படுத்திருந்தான். தனது கடைசிநாட்கள் நெருங்கியதை அவன் அறிந்திருந்தான். தனது மகன்கள், மகள் அனைவரையும் தன் படுக்கையறையில் அழைத்திருந்தான். தலைமை சேனாதிபதியும், தலைமை அமைச்சரும் இருந்தார்.

ராஜேந்திரன் சொன்னான்:

“ராஜாதிராஜா, உன்னைப்பார்க்கும்போது என் தந்தை ராஜராஜர் முன் நான் என்னையே பார்ப்பது போலவே இருக்கிறது. அவர் ஆட்சியில் நான் பட்டத்து இளவரசனாக இருந்து படைகளை நடத்தி, அரசாங்கத்தையும் கவனித்துக்கொண்டேன். அவருக்குப் பிறகு, நான் சோழ அரசானான நான்காம் ஆண்டில் உன்னையும் பட்டத்து இளவரசனாக ஆக்கி, நீயும் இந்த இருபத்து ஆறு ஆண்டுகள் என்னுடன் சேர்ந்து படைகளை நடத்தியும், நாட்டை ஆண்டும் வருகிறாய். உன் தம்பியர்கள் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் உன்னைக் கண்மணிபோலக் காத்து வருகிறார்கள். பார்க்கவே மனது மகிழ்கிறது. நெகிழ்கிறது. எனது ஆயுள் முடியும் காலம் நெருங்கிவிட்டது. இந்தபிரம்மதேசத்தில், இந்த கைலாயநாதர் ஆலயத்தில் சிவனாரைத் தரிசனம் செய்து அவர் திருவடியில் கலக்க விழைகிறேன். இந்த ஊர் மண்ணில் நான் கலக்க விரும்புகிறேன்” என்றான்.

அனைவர் கண்களிலும் கண்ணீர் தளும்பியது.

ராஜேந்திரன் புன்னகைத்தான்.

“இதில் துன்பத்துக்கு இடமில்லை. வாழ்வாங்கு வாழ்ந்து இறைவனடி செல்கிறேன். அதற்கு முன் சிலவற்றை நான் சொல்ல வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளில் சோழநாடு எண்திசையிலும் பரந்து கிடக்கிறது.

கடாரம் கொண்ட பின்னும், இந்த பாண்டிய, ஈழ, சாளுக்கிய ராஜ்யங்கள் துளிர்விட்டுக் கொண்டும், போராடிக்கொண்டும் வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் சோழ இளவரசர்கள் அனைவரும் ராஜாதிராஜன் தலைமையில், சுற்றி நிற்கும் பகையைத் தொடர்ந்து அழித்து வருகிறீர்கள். நெருப்பணைந்தது போல இருந்தாலும், அதன் கங்குகள் மீண்டும், மீண்டும் ஒளிவிட்டு, சுடர்விட்டு, நம்மை எரிப்பதற்கு வந்து கொண்டே இருக்கின்றன. சாளுக்கிய எதிரிகள் -அவர்கள் மாவீரர்கள். தோல்விக்குப் பின்னரும் துள்ளி வந்துகொண்டே இருக்கின்றனர். வாழ்நாள்தோறும் இந்தப் போர்கள் நம்மைத் துரத்தும். நீங்கள் அனைவரும் இதில் ஒன்று சேர்ந்து இருந்து நாட்டைக் காக்க வேண்டும். ஒருவரை ஒருவர் காக்கவேண்டும். உத்தம சோழர் காலத்தில் நடந்தது போல் உள்நாட்டுக்குழப்பம் நேரலாகாது.

மேலும், ராஜாதிராஜா! நீ மன்னனாகப்போகிறாய். படைகளின் முன்நின்று போர்புரிந்து படைகளை ஊக்குவித்து வெற்றியை ஈட்டுகிறாய். ஒரு மன்னன் என்றும் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். நீயே எப்பொழுதும் முன்னிலை செல்லாமல், படைத்தலைவர்களை முன்னிறுத்தி போர் செய்யவேண்டும்.” என்றான்.

ராஜாதிராஜன் பேசினான்: ”தந்தையே! அது மட்டும் என்னால் முடியாது. நமது படை சண்டையிடும்போது, நான் முன்னே நின்றே போரிடுவேன். இது என்னுடன் பிறந்த குணம்.. மாறாது தந்தையே!” என்றான் திட்டமாக. அதைச் சொல்லும்போது அவன் முகம் இரும்பைப்போல இருந்தது.

ராஜேந்திரன் தொடர்ந்தான்.

“ராஜாதிராஜா! வீர சோழனாகப் பேசினாய். எண்ணுள்ளிலிருக்கும் வீரன் இதைக் கேட்டுப் பூரிக்கிறான். ஆனால், ஒன்று மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். சரித்திரம் நமக்குப் பலப் பாடங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நமது முன்னோர் ராஜாதித்தரின் தக்கோலப் போர் நினைவில் இருக்கிறதா? அதில் சிறு பிசகு நடந்தது.

ராஜாதித்தர் யானைமேல் இறந்தார். உடனே சோழப்படை நிலைகுலைந்து மாபெரும் தோல்வியைத் தழுவியது. அந்த நிலை நமக்கு என்றும் வாராமல், இளவரசர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து சோழநாட்டைக் காக்க வேண்டும். இது நீங்கள் அனைவரும் எனக்குத் தரும் சத்தியம். செய்வீர்களா?” என்று நிறுத்தினான் மன்னன்.

அனைவர் கண்களும் கலங்கியிருந்தது. இளவரசர்கள் வாளை உயர்த்தி ‘உயிரால் ஒன்றுபடுவோம். சோழநாட்டைக் காப்போம்’ என்று சூளுரைத்தனர்.

நிம்மதியுடன் ராஜேந்திரன் ‘சபை கலைந்தது’ என்று சைகை காட்டினான்.

அவனது நெஞ்சின் பாரம் குறைந்தது.

அன்று, தமிழ்நாட்டின் தன்னிகரற்ற நாயகனின் உயிர் பிரிந்தது.

பிரம்மதேசத்திலே அடக்கம் செய்யப்பட்டான்.

சென்ற அடிகள் எல்லாம் தனக்கு உரிமையாக்கிய அந்த வேந்தன் ஆறடி மண்ணுக்குள் அடக்கமானான்.   

சோழநாடு கண்ணீர் வடித்தது.

சோழநாட்டைச்சுற்றியிருந்த தோற்ற மன்னர்கள் மகிழ்ந்தனர். இருப்பினும் ராஜாதிராஜன் மன்னனாவது அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தது.

ராஜாதிராஜன் சோழநாட்டு முடி சூடினான்.

இளவரசர்களை அழைத்தான்.

“2 வருடமுன்பு, சாளுக்கிய நாட்டில் சோமேஸ்வரன் ஆகவமல்லன் அரசனானான். அவன் வீரமும், புத்தியும் உள்ளவனாக இருந்தான். நம் தந்தை உடல்நலம் குன்றியிருந்ததால், சோழநாட்டின் எல்லையைக் கடந்தான். நாமும் படையெடுத்துச் சென்றோம். அவர்களது படைத்தலைவர்கள் ‘கண்டப்பையன்’, ‘கங்காதரன்’ அனைவரும் நமது வாளுக்கு இரையாகினார். சோமேஸ்வரனது மகன்கள் விஜயாதித்தனும், விக்கிரமாதித்தனும் படைக்களத்தை விட்டு ஓடினர். வெற்றி பெற்றோம். கொள்ளிப்பாக்கை நகரை (இன்றைய குல்பர்கா) எரியூட்டி அதன் செல்வங்களைக் கொணர்ந்தோம். இப்பொழுது, சோமேஸ்வரன் மீண்டும் படைகளைத் திரட்டி வருவதாக செய்திகள் கிடைத்திருக்கிறது. சாளுக்கியர் மீது நாம் படையெடுக்கச் செல்லுமுன், தெற்கே, ஈழத்து நரிகள் சலசலக்கின்றன. அவைகளுக்குப் புலியின் ஆட்டத்தைக் காண்பிப்போம்“ என்றான்.

அடுத்த இரண்டு வருடத்தின் ஈழம் அடக்கப்பட்டது.

1046:

அந்த இரண்டு வருடத்தில், சாளுக்கிய ராஜ்யம் சற்றுப் பலமடைந்திருந்தது.

ராஜாதிராஜன் மீண்டும் படையெடுத்து கம்பிலி நகரிலிருந்த சாளுக்கியப் பேரரசர் அரண்மனையைத் தகர்த்து, அங்கு சோழரின் வெற்றித்தூண் ஒன்றை நிறுவித் திரும்பினான்.

1048: இரண்டு ஆண்டுகள் கடந்தது.

சாளுக்கியர்கள் மீண்டும் பலமடைந்து சோழ எல்லையை ஆக்கிரமிக்கத்தொடங்கினர். ராஜாதிராஜன் சாளுக்கியக் குந்தள நாட்டின் மீது படையெடுத்தான். இம்முறை போர் கிருஷ்ணா நதிக்கரையிலிருந்த பூண்டூரில் நடந்தது. பெரும் யுத்தத்தின் முடிவில், சாளுக்கியப்படைத்தலைவர்கள் கொல்லப்பட்டனர். அரசமகளிர் சிறையெடுக்கப்பட்டனர். பூண்டூர் மதில்கள் தகர்க்கப்பட்டன. மண்ணதி நகரிலுள்ள சாளுக்கிய அரண்மனை அழிக்கப்பட்டது. அங்கும் ராஜாதிராஜன் வெற்றித்தூண் கட்டினான். கிருஷ்ணா, துங்கபத்ரா ஆற்றின் துறைகளில் தன் பட்டத்து யானையை நீராட்டினான்.

ஒருநாள், சோழர் பாசறையில் ராஜாதிராஜன் உறங்கும் போது, அவனது கூடாரத்தில் இரு உருவங்கள் நுழைந்தன. அரவம் கேட்ட மன்னன் அவர்கள் இருவரையும் பிடித்தான். அவர்கள் குறுவாளேந்தி மன்னனைக் கொல்ல வந்த சாளுக்கிய ஒற்றர்கள். கூடாரத்தில் படைத்தலைவர் குழுமினர்.

ராஜாதிராஜன் சொன்னான்: “இவர்கள் உயிர்பிழைத்து சோமேஸ்வரனிடம் செல்லட்டும். அவனுக்கு ஒரு செய்தி அனுப்புவோம்” என்றான்.

தம்பி ராஜேந்திரன், “சரி அண்ணா! ஓலையில் என்னவென்று எழுதுவது?” என்றான்.

“இவர்களே ஓலைகள்” என்றான் மன்னன்.

அனைவரும் விழித்தனர்.

மன்னன் சிரித்து விட்டு, “இவர்கள் மார்பில் பச்சை குத்தி அனுப்பவும்.

‘ஆ க வ ம ல் ல ன்   எ ங் கு ம்   பு ற ங் கா ட் டி  ஓ டி ய வ ன் “

என்று எழுதப்படட்டும்.” என்றான்.

தோல்வியை விட அவமானங்கள் வீரர்களை பெரிதும் உறுத்தும்.

சோமேஸ்வரன் துடித்து, மீண்டும் போருக்கு வந்தான்.

எஞ்சின படைத்தலைவர்களையும் போரில் இழந்தான். தோற்ற சோமேஸ்வரன், ராஜாதிராஜனுக்கு இரு தூதுவர்களை அனுப்பினான்.

ராஜாதிராஜன் அந்த தூதர்களை கேலி செய்தான். ஒருவனுக்கு ஆகவமல்லன் என்ற பெயரை ஒட்டுவித்து , மற்றொருவனுக்கு பெண்ணுடை உடுத்தச்செய்து, பெண்கள் போல ஐம்பால் கொண்டையிட்டு, ‘ஆகவமல்லி’ என்ற பெயரை ஒட்டுவித்து அனுப்பினான்.

தோல்வியை விட அவமானங்கள் வீரர்களை பெரிதும் உறுத்தும்.

பிறகும் போர் தொடர்ந்தது.

இம்முறை ராஜாதிராஜன், சாளுக்கியத்தலைநகரான கல்யாணபுரத்தை (கல்யாணி) முற்றிலும் அழித்தான். கல்யாணியில் இருந்து துவாரபாலகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு சோழநாட்டில் தாராசுரம் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கல்யாணீயில் வீராபிஷேகம் செய்து விஜயராஜேந்திரன் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டான்.

1௦54:ஆறு ஆண்டுகள் கழிந்தன.

பகை எனும் தீ.

அதற்கு நினைவு மறதி என்பது கிடையாது.

தோற்றவர்களை அது சுட்டு, மீண்டும் சண்டையிடத் தூண்டும்.

வென்றவர்களையும் அது மீண்டும் சண்டையிடத் தூண்டும்.

சோமேஸ்வரன் படை திரட்டுவது மட்டுமல்லாது, சரித்திரத்தையும் புரட்டிப் பார்த்தான்.

அதில், ராஜாதித்தன் கதை அவனுக்கு இனித்தது.

‘அதுபோல ஒரு சம்பவம் செய்தால் சோழர்கள் நிலைகுலைந்து போய் நமக்கு வெற்றி கிடைக்குமே’!

சோமேஸ்வரன் சோழனுக்கு அறைகூவல் விடுத்தான்.

சும்மாவே சண்டைக்குப் போகக்கூடிய ராஜாதிராஜன் வந்த சண்டையை விடுவானா?

‘கரும்பு தின்னக் கூலியா” என்று புறப்பட்டான்.

தம்பி ராஜேந்திரனுடன் பெரும் படையுடன் புறப்பட்டான்.

இன்றைய பெல்காம் மாவட்டத்தில், கிருஷ்ணையாற்றுக்கரையில் உள்ள ஒரு குடுவை வளைவு ‘கொப்பம்’. இங்கு இருபடைகளும் அணிவகுத்து எதிர்த்து நின்றனர். சாளுக்கியர் பக்கம் சோமேஸ்வரன் போர்க்களத்துக்கு வரவில்லை. அவன் மகன்கள் தலைமை வகித்து இருந்தனர். சோழப்படைகளுக்கு, முன்னணியில்,பட்டத்து இளவரசன் ராஜேந்திரன் தலைமை வகித்து இருந்தான். பின்னணியில் மன்னன் ராஜாதிராஜன் யானை மீது தலைமை தாங்கி இருந்தான்.

சாளுக்கியரின் முதல் யானைப்படைத் தாக்குதலில் ராஜேந்திரனின் முன்னணிப் படை சீர்குலைந்தது. வெற்றி எளிதாகும் இன்று என்று சாளுக்கியர் மகிழ்ந்த சமயம், ராஜாதிராஜனின் பின்னணிப்படை முன்னணியில் வந்து, சாளுக்கியப்படைகளை அழிக்கத் தொடங்கியது.

தோல்வி மீண்டும் சாளுக்கியரை நெருங்கியது.

சோமேஸ்வரனின் திட்டப்படி, நூறு சிறந்த வில்லாளர்கள் ராஜாதிராஜனின் யானையைச் சூழ்ந்தனர். நூற்றுக்கணக்கான அம்புகள் ராஜேந்திரன் யானைமேல் பாய, யானை சுருண்டு விழுந்து இறந்தது. யானை மீதிருந்த வீரர்கள் ஒவ்வொருவாராகக் கொல்லப்பட்டனர். இறுதியில் ராஜாதிராஜன் உடல் சல்லடையாகத் துளைக்கப்பட்டு அவன் யானை மீதிருந்து சாய்ந்தான். மீகாமனில்லாத மரக்கலம் போல சோழப்படை தள்ளாடி, நிலை குலைந்தது.

Chola king rajathirajan who died on an elephant in battlefield

ராஜாதித்தன் கதை ராஜாதிராஜன் கதையாயிற்று.

‘ஹிஸ்டரி ரிப்பீட்ஸ்’ என்று சொல்வார்களே, அது போல சரித்திரம் திரும்பியதா?

போர் என்னவாயிற்று?

அந்த நிகழ்வுகளை சரித்திரம் விவரமாகப் பேசும்.

அது விரைவில்….

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.