கலைக்கழகமா ? பல்கலைக்கழகமா ?
ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்தெட்டா அல்லது ஒன்பதா… நினைவில்லை. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். குமுதம் இதழில் “பால்யூ” அவர்களின் ஒரு பெட்டிச் செய்தி என் கண்ணில் பட்டது. அதே வரிகள் நினைவுக்கு வரவில்லை. சாராம்சத்தைத் தருகிறேன்,
சென்னையில் கவிதை அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகின்றது. மாதாமாதம் உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரது இல்லத்தில் கூடிக் கவியரங்கம் நடத்துவார்கள். புதியவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். கவியரங்கம் முடிந்தபின் உணவு உபசரிப்பும் உண்டு. இந்த அமைப்பின் பெயர் “பாரதி கலைக் கழகம். அதன் முகவரி 36, மசூதித் தெரு, சைதாப்பேட்டை, சென்னை-15 (குமுதத்தின் இயல்புக்கேற்ப ஒரு பெண் கவிஞரின் போட்டோவும் இருந்தது.).
பாரதி கலைக் கழகம் எனும் இலக்கிய அமைப்பு 1951 தொடங்கப்பட்டது. பாரதி சுராஜ், அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன், எழுத்தாளர் நா.ராமச்சந்திரன், கவிஞர் இளங்கார்வண்ணன், ஐயாறப்பன் ஆகியோர் இணைந்து தொடங்கப்பட்ட கழகம் இது. நூறாண்டுகள் கடந்து இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
அக்காலத்தில் எங்கள் வீடு தி.நகர் எனப்படும் புதுமாம்பலத்தில் இருந்தது. எங்கள் தெருவின் பெயரும் மாம்பலம் தெரு . இப்போதுள்ள துரைசாமி ”சப் வே” அருகில்; அப்போது அங்கே “ரெயில்வே கேட்” இருந்தது. “கேட்”டைத் தாண்டிச் சென்றால் சைதாப்பேட்டை அவ்வளவு தூரமில்லை. அப்பா, என் இரண்டு சகோதரர்கள் , நான் ஆகிய அனைவருக்கும் உரிமையான ஒரு “சென் ராலே” 22 இஞ்ச் சைகிள் வீட்டில் இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, மற்றவர்களிடம் “ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன்” என்று சொல்லிவிட்டு சைகிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். அவ்வளவு சிறிய பயணம்தான் அது என நினைத்தேன். ஆனால் அன்று தொடங்கிய எனது கவிதைப் பயணம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் பாரதி கலைக் கழகத்துடன் தொடர்ந்துகொண்டுவருகிறது.
அது ஒரு சிறிய ஒற்றைமாடித் தெருவீடு. எண் சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு நீல நிற போர்டில் ”பாரதி கலைக் கழகம்” என்று எழுதித் தொங்கவிட்டிருப்பதைப் பார்த்துவிட்டு சைகிளை ஸ்டாண்ட் போட்டேன். பச்சை வண்ணப் பூச்சோடு இரும்பு அழி போட்ட கதவு இலேசாகத் திறந்திருந்தது. கீழ் வீட்டில் இருந்து ஒரு பெண்மணி வெளியே வந்து என்னை யாரெனக் கேட்டு, விஷயம் அறிந்து மாடிப் பக்கம் கைகாட்டினார். பருமனாக இருந்தால் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய அகலத்தில் அமைக்கப்பட்டிருந்த எட்டு படிக்கட்டுகள் ஏறித் திரும்பியவுடன் மாடி வீடு.
அதுதான் பாரதி கலைக் கழகத்தின் செயலாளர் பஞ்சநதீசன் என்கிற கவிஞர் ஐயாறப்பனின் இல்லம். யாரும் கவியரங்கை “ஹோஸ்ட்” பண்ணாத மாதங்களில் கவியரங்கம் நிகழுமிடமும் இதுதான். நுழைந்தவுடன் உள்ள “பெரிய” ஹாலில்தான் அரங்கம் நடக்கும். பதினைந்து பேர்கள் நெருக்கமாக அமரலாம். ஆனால் கவியரங்கம் நடக்கும் போது இருபத்தி ஐந்து பேர்கள் சௌகரியாமாக அமர்ந்து பாடுவார்கள். உணவு உண்பார்கள்; ஆண்டு விழாவுக்கு திட்டங்கள் தீட்டுவார்கள்; நூல் பதிப்பு பற்றிப் பேசுவார்கள்; சுவையான செய்தி ஒன்று. பேராசிரியர் நாகநந்தி இயக்கத்தில் பாரதி கலைக்கழகக் கவிஞர்கள் நடித்து அரங்கேறிய மகாகவியின் “பாஞ்சாலி சபதம்” கவிதை நாடகத்துக்கான ஒத்திகைகளும் இங்குதான் நடந்தன. ( அந்த நாடகத்தில் நான் தான் பாரதி )
அப்படியா ! என நீங்கள் ஆச்சரியம் கொள்ளவேண்டாம். அந்த இடம் எத்தனை சிறியதோ அத்தன பெரிது ஐயாறப்பன் தம்பதியரின் உள்ளம். வள்ளுவன் வரைந்த விருந்தோம்பல் அதிகாரத்தின் பத்து குறட்பாக்களுக்கும் பழுதில்லா இலக்கணம் இவர்களே !
கவிதை எழுதுவதில் பேரார்வம் கொண்டு தினம் எழுதிக் கிழித்துக் கொண்டிருந்த எனக்கு இக்கழகம் சங்கப் பலகையாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பில் கவியரங்கம். ஒவ்வொரு மாதமும் யார் ஹோஸ்ட் செய்யப் போகிறார்கள் என்பது ஆண்டு ஆரம்பத்திலேயே முடிவாகிவிடும். இந்தப் பன்னிரண்டு கவியரங்கங்கள் தவிர, உறுப்பினர் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் அதாவது திருமணம், பிறந்தநாள், வளைகாப்பு, உபநயனம், மணிவிழா போன்ற பல நிகழ்வுகளில் கவியரங்கம் அமைக்கப்படுவதுண்டு. பொதுவாக எல்லாக் கவியரங்குகளிலும் முப்பது கவிஞர்களுக்குக் குறையாமல் கலந்துகொள்வார்கள்.
பாரதி கலைக் கழகத்தில் நான் உறுப்பினராகச் சேர்ந்து , கவியரங்கங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். 1977- அக்டோபர். ஓர் அழைப்பு. அந்த மாதக் கவியரங்கை அழைத்தவர், ரங்கராஜன் என்ற உறுப்பினர். நுங்கம்பாக்கம் லயோலா காலனியில் அமைந்திருந்த அவர் இல்லத்தில்தான் நிகழ்ச்சி நடை பெற்றது.
பேராசிரியர் ரங்கராஜன் லயோலா கல்லூரியில் கணிதத்துறையில் பணிபுரிகிறவர். ராஜரங்கன் என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதியவர். ஆனந்தவிகடனில் அவரது முத்திரைக் கதை வெளிவந்து பாராட்டுப் பெற்றது. சென்னை மாக்ஸ்முல்லர் பவன் வளாகத்தில் தமிழ் இலக்கியக் கூட்டங்களை மாதந்தோறும் நட்த்திவந்தவர். பாரதீய வித்யா பவன் தொடங்கிய கல்விப் பணியில் ஆலோசகராக இருந்தவர். அனைத்துக்கும் மேலாக மிக உணர்ச்சிகரமாகக் குரலெடுத்து பாரதி பாடல்களைப் பாடக் கூடியவர்.
அவர் இல்லத்து நிகழ்ச்சிக்கு வாகீச கலாநிதி கி.வா.ஜ. அவர்கள் தலைமை. அவர் தலைமையில் அதுதான் எனது முதல் கவியரங்கம்.
தலைமையிலே கி.வா.ஜ. என்று சொன்னால்
தடையின்றித் தமிழ்முழங்கும் என்று சொல்வேன்
கலைமகளின் ஆசிரியர் என்று சொன்னால்
கவிவெள்ளம் பெருகுதற்குத் தடையும் உண்டோ ?
என்று தொடங்கிய என் வணக்கப்பாவை புன்னகையோடு ஏற்றுக் கொண்டார். அடுத்த மூன்றுமணி நேரம் கையில் எந்தப் பேப்பரும் பேனாவும் இன்றி தலைமைக் கவிதை பாடி ஒவ்வொரு கவிஞருக்கும் பின்னூட்டம் சொல்லி ஆசுகவியாக அசத்தினார் கி.வா.ஜ. அது ஒரு பேரனுபவம். ( வீட்டில் நிகழும் கவியரங்கம் என்பதால் தலைமைக் கவிஞரின் அருகேயே எல்லோரும் தரையில் அமர்ந்திருந்தோம். எனது டைரியில் அவர் முகத்தை அப்படியே நான் வரைந்தேன். பிறகு அவரிடம் காட்டினேன். “அடேடே ! என்னைப் போன்றே இருக்கிறதே ! என ஆச்சரியப்பட்டு, கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்)
பல மூத்த கவிஞர்களையும், எழுத்தாளர்களையும், இலக்கியச் செல்வர்களையும் நான் சந்தித்துப் பேசி, பழகி, உரையாடி அறிவை வரவாக்கிக்கொண்ட பள்ளிக்கூடம் அல்லது பயிற்சிக்கூடம் அது. கவிமாமணிகள் தமிழழகன், ரா,பு, தங்கராஜன், நா.சீ.வரதராஜன், மஹி, தேவநாராயணன், தண்டமிழ்க்கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன், இலந்தை இராமசுவாமி, இளந்தேவன், இளையவன், மதிவண்ணன், மதி.சீனிவாசன்,ஐயாறப்பன், ரா.பா.சாரதி போன்ற பலரோடு நட்பு பூண்ட இடம் அது. எழுத்தாளர்கள் விக்ரமன், நா.பா, சுப்ரபாலன், சித்தார்த்தன் போன்றோரையும், நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார், பொள்ளாசி மகாலிங்கம், சௌந்திரா கைலாசம், நாரண துரைக்கண்ணன், ஒளவை நடராஜன்,வல்லிக்கண்ணன், கவிஞர் வாலி திருப்பூர் கிருஷ்ணன், “கல்வி” கோபாலகிருஷ்ணன்,போன்ற இலக்கிய பிரமுகர்களையும் சந்தித்த இடம் அது.
வானவில் ரவி, இசைக்கவி ரமணன், ஹரிகிருஷ்ணன், பா. வீர்ராகவன் ஆகியோரோடு என் நட்பு இறுகி இணைந்த இடமும் அது.
பேராசிரியர் நாகநந்தி என்ற மாபெரும் தமிழறிஞரை சந்தித்து அவரிடம், பாரதியைப் பற்றியும் அவன் படைப்புகள் பற்றியும், அவன் பாடிய மூன்று மகாகவிகள் பற்றியும் அறிந்துகொள்ளத் தலைப்பட்ட இடமும் அது.
இதுவே ஒரு கவிதைப் பயிற்சிக் களமாக எனக்கு மாறிவிட்டது. இந்தக் கவிரங்குகளில் என் கவிதைகளைக் கேட்டு இரசித்த சிலர் பொது மேடைகளில், பெரிய விழாக்கள் நடக்கும் போது அமைக்கப்படும் சிறப்புக் கவியரங்குகளில் என்னை அழைக்கத் தொடங்கினர். வானொலிக் கவியரங்குகளும் பல வந்து சேர்ந்தன. தமிழகம் முழுவதும் நிகழும் இலக்கிய விழாக்களில் பங்குகொள்ள தொடர்ந்து அழைப்புகள் வந்தன.
கவிஞர்கள் திரு நா.சீ.வ, இலந்தை இராமசுவாமி, இளந்தேவன், மதிவண்ணன் இளையவன் நான் என எங்கள் குழு பல இடங்களுக்குப் பயணம் செய்து கவியரங்கங்கள் நடத்தியது. பலநேரங்களில் என் தலைமை அல்லது இளந்தேவன் அல்லது இலந்தை என்று எங்களுக்குள்ளேயே தலைமை அனுபவங்களும் நிரம்பக் கிடைத்தன..
பாரதி கலைக்கழகத்தின் முதல் கவிதைப் பட்டிமன்ற அழைப்பாளர் கவிஞர் இளந்தேவன். நடுவர் வவேசு; தலைப்பு- சீரிய பொழுது இரவா ? பகலா? அணிக்கு மூன்று பேர்கள் என ஆறு கவிஞர்கள்.
பகல் போதில்தான் சூரிய சக்தியால் உணவு உண்டாகிறது; பகல்தான் உழைக்கும் நேரம்; பொருள் சம்பாதிக்கும் நேரம் என்று ஒரு பக்கம்; நிலவுதான் தண்மை தருகிறது; உழைத்தால் போதுமா : உண்டு ஓய்வெடுக்க உறங்க வேண்டாமா ? அது இரவில்தானே சாத்தியம் என்று இன்னொரு பக்கம். தாமரை பகலில்தானே மர்கிறது என்றால் இந்தப்பக்கம் முல்லை இரவில்தான் மலர்கிறது என்று சொல்லிவிட்டு, இரவில் மலரும் பூக்களுக்குத்தான் வாசனை அதிகம் என உபரித் தகவல் கொடுக்கிறது.. கிருஷ்ணன் இரவில்தானே பிறந்தான் என்றது ஒரு கட்சி; ராமன் பகலில்தானே பிறந்தான் என்று எதிர்க் கவிதை பாடியது இந்தக் கட்சி.. பலமாக சூடு பிடித்த சுவைக்கவியரங்கமாக அது நிகழ்ந்த்து.
நான் என்ன தீர்ப்பு கொடுத்தேன் எனக் கேட்கிறீர்களா ? எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன.மறந்துவிட்டேன். நீங்களே ஒரு தீர்ப்பைச் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் இதனால் கிடைத்த லாபம், நாங்கள் ஏழு பேரும் ஒரு குழுவாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் கவிதைப் பட்டிமன்றம் நிகழ்த்த ஆரம்பித்துவிட்டோம். எண்பதுகளில் தொடங்கி தொண்ணூற்றைந்து வரை நாங்கள் கவியரங்குகளில் ரொம்ப :பிஸி” ஆக இருந்தோம்.
இன்னொரு முக்கியமான செய்தி. எனக்குக் கிடைத்த முதல் இலக்கிய விருது பாரதி கலைக் கழகம் வழங்கும் 1987-ம் ஆண்டுக்கான “கவிமாமணி” எனும் பட்டம்.
மேற்படி நிகழ்ச்சி, சைதை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான மண்டபத்தில் நடந்தேறியது. விழாநாள் காலையில் மங்கல வாத்யங்கள் முழங்க கவிஞர்கள் இலக்கிய பிரமுகர்கள், நண்பர்கள் புடை சூழ என்னை மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பெருமதிப்பிற்குரிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கி.வா.ஜ, சௌந்திரா கைலாசம் அம்மையார், ,ஜீவா நாரணதுரைக்கண்ணன் ஆகிய நால்வரும் இணைந்து “கவிமாமணி” பட்டத்தை எனக்கு அளித்தார்கள்.
அன்றைய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட எனது முதல் கவிதை நூல் “தொட முயன்ற தொடுவானம்” பற்றி கி,வா.ஜ பாராட்டிப் பேசியது என் வாழ்நாளை முழுமையாக்கிய பேச்சு.
அன்னை தந்தை அண்ணா மன்னி மனைவி மகன் (ஆறு வயது) என குடும்பம் முழுதும் கலந்துகொண்ட நிகழ்வு. என் ஆசான் மதுரை ஜி.எஸ். மணி அவர்களும் வந்திருந்து வாழ்த்திப் பேசினார்.
இலக்கிய உலகிலே என்னை வளர்த்து ஆளாக்கியதில் மிகப் பெரிய பங்கு பாரதி கலைக் கழகத்திற்கு உண்டு எனப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகளையும் புலப்படுத்திக் கொள்கிறேன்.
கவிதை எழுதுவது மட்டுமன்றி, பண்புமிகு இரசனைகளையும் கற்றுத்தந்த இடம்; மிகப் பெரிய இலக்கிய ஆளுமைகளை அருகிலே சென்று அவர்களோடு அளவளாவ வாய்ப்புத் தந்த இடம்; எனக்குக் கவிஞன் என்ற முகத்தையும் , முகவரியையும் , பட்டத்தையும் கொடுத்த இடம் இன்றளவும் நான் பாரதியை விடாது பற்றிக்கொண்டு பேசுவதற்கான ஊற்றுக்கண் அதுவே.
ஆம் ! என்னளவில் பாரதி கலைக் கழகம் ஒரு பல்கலைக்கழகம்!
( கவிமாமணி விருது பெறும் புகைப்படத்தை முகநூலிலிருந்து தேடி எடுத்துத் தந்த குவிகம் கிருபானந்தன் அவர்களுக்கு நன்றி )


ஆகா.. வவேசு ஐயா.. தங்கள் பரந்த அறிவின் ஊற்றுக்கண்களில் ஒன்றினைச் சிறந்த முறையில் விவரித்து இருக்கிறீர்கள். அருமை.. உங்கள் இளவயதுப் படம் கட்டுரைக்கு இன்னும் சிறப்புச் சேர்க்கிறது. மகிழ்வோடு வாழ்த்துகிறேன் தங்களை.
LikeLike