
“நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்
பாடல் சான்ற புலன்நெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரியதாகும் என்மனார் புலவர்” [தொல்—999]
இந்தத் தொல்காப்பிய வரையறைப்படி பரிபாட்டு வகையில் பாடப்பட்ட ஒரே தொகை நூல் பரிபாடல் என்பதாகும். பரிந்துவரும் இசைப்பாடல்களால் ஆன பாவகை பரிபாட்டு எனப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பலவகையான பாடல் வகைகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாடல் ஆகும்.
“இயற்கைப் பாடல்களில் தெய்வத்தின் தன்மை கண்டு உருகிப் பாடும் முறை பரிபாடல். ஆனால் சங்க காலத்திற்குப் பிறகு பரிபாடல் என்னும் செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று” எனக் கூறுகின்றார் மு. வரதராசனார்.
“திருமாற்கு இருநான்கு செவ்வேட்டு முப்பத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று—மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்”
என்று பரிபாடலின் பகுப்புமுறை பற்றி ஒரு பழம்பாடல் கூறுகிறது.இதன்படி திருமாலுக்கு 8, செவ்வேள் எனப்படும் முருகனுக்கு 31, காளிக்கு 1, வையைக்கு 26, மதுரைக்கு 4, என 70 பாடல்கள் பரிபாடலில் இருந்திருக்கக்கூடும். ஆனால் தற்பொழுது திருமாலுக்கு 6, முருகனுக்கு 8, வையைக்கு 8, என ஒத்தம் 22 பாடல்களே கிடைத்துள்ளன.
பரிபாடலில் அகம், புறம் என்று இருதிணைகளும் கலந்து பாடப்பட்டுள்ளன.
புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களில் உள்ள வீரம், செல்வம், கொடை, முதலான புறத்திணை சார்ந்த செய்திகள் பரிபாடலில் இல்லை. எனவே சமயப் பாடல்களையே புறத்திணை சார்ந்தவையாகக் கொள்ள வேண்டி உள்ளது.
பரிபாடலில் 0 என்பது பாழ் என்னும் பெயரிலும், ½ என்பது பாகு என்றும், 9 என்பது தொண்டு என்னும் பெயராலும் வழங்கப்படுகின்றன. சைவம், சாக்தம் [சக்தி] காணாபத்யம் [கணபதி, கௌமாரம் [முருகன்], வைணவம் [திருமால், சௌரம் [சூரியன் என்னும் அறுவகைச் சமயங்களுள் சாக்தம், கௌமாரம், வைணவம் ஆகிய முச்சமயங்கள் பற்றி மட்டுமே பரிபாடல் பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
பரிபாடலின் முதல் பாடல் திருமாலைப் பலராமனோடு இணைத்து இருவருக்கும் வேறுபாடு இல்லாமல் காட்டிப் புகழ்கிறது. நானும் உன்மீது காம வேட்கை கொண்டுள்ள என் சுற்றமும் உன்னோடு ஒன்றி உன் காலடியில் நாளெல்லாம் கிடக்கவேண்டும் என ஏங்குகின்றேன். அதற்கு நீ அருள் புரிய வேண்டும் என்றே உன்னைப் போற்றுகின்றேன். வாய்மொழிப் புலவனே! அருள் புரிய வேண்டும் – என்று வேண்டிப் பாடல் முடிகிறது.
பாடல்:
ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5
பாடலின் பொருள்:
நாஞ்சில் ஒருகுழை ஒருவன் என்பது பலராமனைக் குறிப்பிடுகிறது.
அச்சம் தரும் ஆயிரம் தலையை உடைய பாம்பு தீயை உமிழும் திறமையோடு உன் தலையில் ஆடிக்கொண்டிருக்கிறது. மாமைநிறம் கொண்ட மலர்மகள் உன் மார்பில் வாழ்கிறாள். நீயோ வெண்சங்கு போன்ற வெண்ணிற மேனியுடன் காட்சி தருகிறாய். வானளாவிய பனைமரம், அழகு மிக்க யானை இரண்டையும் கொடியாகப் பிடித்துக்கொண்டுள்ளாய். வாய் வளைந்திருக்கும் நாஞ்சில் என்னும் கலப்பையை ஒரு காதில் மட்டும் குழையாக மாட்டிக்கொண்டுள்ளாய்.
பரிபாடலில் வையை
இஃது ஊடல் பற்றிய அகப்பொருள் பாடலாகும். இயற்றியவர்: ஆசிரியன் நல்லந்துவனார். இதற்கு இசையமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். பண் – பாலையாழ் ஆகும்
மழை பொழிந்தது. கடலில் நீரை முகந்து சென்ற மேகம் தன்னிடமுள்ள நீரை மழையாகப் பொழிந்தது. அதனால் வையை ஆற்றில் வெள்ளம் வந்தது. நீரானது நிலத்தை மறைத்துக் கொண்டு ஓடியது. மலையில் வாழ்வன எல்லாம் அஞ்சிக் கலங்கும்படியும், மயில் அகவிக் கூவும்படியும் ஓடியது. மலையின் மாசுகளைக் கழுவிக்கொண்டு மழை நீர் அருவியாக இறங்கியது.
குறைவின்றி நூல் கற்றுணர்ந்த புலவர்களின் புலமை நாவில் கவிதை பிறக்குமாறு புனல் பரந்து பாய்ந்தது. தொழில்வினை பலவகையிலும் பெருகுமாறு புனல் பாய்ந்தது. புகை, பூ, படையல், விளக்கொளி என்றெல்லாம் பலவற்றை ஏந்திக்கொண்டு வந்து மணமக்களைவிழாக்கொண்டாடி வரவேற்பது போல கூட்டுவிப்பது போல வையைப் புனலை மக்கள் வரவேற்றனர்.
வையை ஆற்றின் கரை உடைந்தது என்னும் பறைமுழக்கம் எங்கும் ஒலித்தது. வையைப் புனலை வரவேற்கச் செல்வதற்காகத் தோளில், ஆண்கள் தொடியும், பெண்கள் வளையலும் அணிந்துகொண்டனர். மார்பில் ஆண்கள் கொடியும், பெண்கள் வயிரக்கோவை மாலையையும் அணிந்துகொண்டனர். இருபாலாரும் முத்துமாலை அணிந்துகொண்டனர். மகளிர் நகங்களிலும், இதழ்களிலும் செம்பஞ்சுக் குழம்பை அப்பிக்கொண்டனர்.மார்பில் வண்டல்-சாந்து பூசிக்கொண்டனர். கண்புருவ இலைகளிலும், தலைமயிரிலும் ஈரச்சாந்து எண்ணெய் நிழலாடச் செய்தனர்.
பெண்ணின் முலை, ஆணின் மார்பு இரண்டும் முயங்குவதற்காக இந்த ஒப்பனை. இப்படி ஒப்பனை செய்துகொண்டவர்களின் ஒன்றுபட்ட உள்ளத்தில் இருக்கும் ஆணின் நிறையுடைமையும், பெண்ணின் நாணமும் உடைந்து பாய்வது போல, வையை வெள்ளம் தன் கரையை உடைத்துக்கண்டு பாய்ந்தது. வையைக்கரை உடைந்துவிடும் என்று பறையொலி கேட்பது போல் ஊரே பேசிக்கொண்டது.
உண்மையில் கரை உடையவில்லை. ஆண் யானைகள் போர்க்கோலத்துடன் சென்றன.பெண் யானைகள் நீராடும் கோலத்துடன் சென்றன. இளையரும், இனியரும் ஒப்பனை செய்து கொள்ளும் அணி, நீராடுவதற்குரிய அணி என்னும் இரண்டு அணிகலன்களையும் கொண்டு சென்றனர். வேகம் தணிந்து ஓடிய புனலில் புனலாட்டுப் போர் நிகழ்ந்தது. விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
மாலை அணிந்துகொண்டனர்.நீரைப் பீச்சி விளையாடும் கருவிகளை வைத்திருந்தனர். சிலர் புனல் செல்லும் போக்கிலேயே சென்று விளையாடினர்.
யானைமீது சென்றனர். குதிரைமீது சென்றனர். சிவிறி கொண்டு நீரைப் பீச்சினர். கொம்புகளிலிருந்து மணநீரை வீசினர். வெண்ணிறக் கிடைக்கட்டையைத் தேராக்கிக்கொண்டு அதன்மீது ஏறி மிதந்து சென்றனர். வரிசையாகச் செல்லாமல் தாறுமாறாகச் சென்றனர். சிலர் தடையின்றி ஏதாவது உண்டுகொண்டிருந்தனர். ஒரு வழியில் இடையூறு வரும்போது வழியை மாற்றிக்கொண்டு சென்றனர். தெருச்சேரி இளைஞர் சென்று நிலைகொள்ள முடியாமல் நீந்திக்கொண்டே இருந்தனர். வலிமையற்றவர் துறைக்கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். வலிமை உடையோர் புனலில் விளையாடினர். பருகுநீர் , பாயசவகை நெய், மலர் முதலானவை சிந்தி வையை மணம் வீசியது.
பாடல் அடிகள்
நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,
மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
தாயிற்றே தண் அம் புனல்.
புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகைசாலும், வையை வரவு.
தொடி தோள் செறிப்ப, தோள்வளை இயங்க,
கொடி சேரா, திருக் கோவை காழ் கொள,
தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க,
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,
வரைச் சிறை உடைத்ததை வையை: ‘வையைத்
திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக’ எனும்
உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று.
அன்று, போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென,
நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல;
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின், இகல் மிக நவின்று,
தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்
துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின்
அணிஅணி ஆகிய தாரர், கருவியர்,
அடு புனலது செல அவற்றை இழிவர்:
கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,
நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,
வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர்,
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ,
சேரி இளையர் செல அரு நிலையர்,
வலியர் அல்லோர் துறைதுறை அயர,
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர,
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும், யாறு வரலாறு.
இப்பாடல் 60 அடி கொண்டநீண்ட பாடலாகும். தலைவனுக்கும் இற்பரத்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் எல்லாம் இதில் அடங்கி உள்ளன.
பரிபாடலில் திருமால்
”திருமாலே! நின்புகழைத் தாமே கண்டறிந்து புதிதாக யாராலும் பாட இயலாது. எனவே முன்னோர்கள் உன்னைப் போற்றிப் புகழ்ந்து பாடிய வகையிலேயே யாமும் தொடர்ந்து பாடுகிறோம்” என்று பரிபாடலின் அடியார்கள் வேண்டுகின்றனர். “பாடுவோர் பாடும் வகையே எம்பாடல் தாம் அப்பாடுவார் பாடும் வகை” என்னும் அடிகளால் மேற்கண்ட கருத்து விளக்கப்படுகின்றது.
பரிபாடலின் பதினைந்தாம் பாடல் முழுதும் திருமால் எழுந்தருளி உள்ள அழகர் கோயில் என்னும் திருமாலிருஞ்சோலையின் பெருமையே கூறப்பட்டுள்ளது. “புலவரையறியா” எனத்தொடங்கும் அப்பாடல் திருமாலிருஞ்சோலை ஆலயத்தில் உள்ள பழைய சிலாசாசனங்களில் காணப்படுகிறது. இப்பாடலைப் பாடியவர் இளம்பெருவழுதியார். மேலும்
”தையல வரோடும் தந்தா ரவரொடும்
கைம்மக வோடும் காத லவரொடும்
தெய்வம் பேணித் திசைதொழு தனிர் சென்மின்” என்று பரிபாடல்தான் இல்லத்துணைவி, தாய் தந்தையர், கைக்குழந்தை, சுற்றம் ஆகியவரோடு திருமாலை வணங்கவேண்டும் என்று வலியுறுத்தும் முதல் நூலாகும்.
பரிபாடலில் செவ்வேள் [முருகன்]
”சூரபன்மனை அழித்த போராளியே! உன் குன்றத்தில் ஆடுவோர் தாமே சலிக்கும் அளவு ஆடினர், பாடுவோர் தாமே சலிக்கும் அளவு பாடினர். வல்லாரை வல்லார் கண்டு அடங்கினர். அல்லாரை அல்லார் கண்டு அடங்கினர். இப்படி ஆக்கிய மன்றக் கொடிகள் சுனைக்கரைகளில் பறந்தன.
விரும்பும் வேல், வென்று உயர்த்திய கொடி, கற்புக் கடம் பூண்ட இரு மனைவியர் காட்டும் அன்புரிமை – ஆகியவற்றைக் கொண்ட வியக்கத் தக்க குமரனே!
உன்னை வாயார வாழ்த்துகின்றோம். நெஞ்சாரப் பரவுகின்றோம். தலை வணங்கித் தொழுகின்றோம். உன் காலணியாக இருக்க விரும்புகின்றோம். இவற்றை எங்களுக்குப் பயனாக நாள்தோறும் தந்து நீ பொலிவாயாக”. என்று முருகனின் அடியவர்கள் பரிபாடலில் போற்றுகின்றனர்
.
“கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்
அடும் போராள! நின் குன்றின்மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,
வல்லாரை வல்லார் செறுப்பவும்,
அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய்,
செம்மைப் புதுப் புனல்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,
படாகை நின்றன்று;
மேஎ எஃகினவை;
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை;
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத்தகு மரபின் வியத்தகு குமர!
வாழ்த்தினேம், பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை,
பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே”
இப்பாடலைப் பாடியவர் குன்றம்பூதனார் ஆவார். எளிய அறிமுகமாகையால் பரிபாடலில் ஒரு சில முத்துகள் மட்டுமே இங்கு காட்டப்பட்டுள்ளன.

அருமை ஐயா. பரிபாடல் பற்றிப் பரிவோடு விளக்கிப் புரிதல் தந்த உங்களுக்கு நன்றி.
LikeLike