நான் போற்றும் நாகநந்தி

 

Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA

 

 

மகாகவி பாரதியார் அல்லது திருவள்ளுவர் பற்றிப் பேசும் போது பேராசிரியர் நாகநந்தி அவரைக் குறிப்பிடாமல் நான் பேசியது கிடையாது. பொதுவாக இப்பேச்சுகள் முடிந்த பின் என்னை வந்து சந்திப்பவர்கள் ஒவ்வொருமுறையும் கேட்பது “ சார் ! ஒங்க பேச்சில நீங்க அடிக்கடி பாரதிக்கும் வள்ளுவருக்கும் விளக்கங்கள் கொடுத்த உங்கள் பேராசிரியர் “நாகநந்தி எனக் குறிப்பிட்டீர்களே அவர் யார் ?” என்பதாம்.

இந்த இதழில் நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருப்பது “பேராசிரியர் நாகநந்தி” என்ற அந்த மிகப் பெரும் ஆசானைப் பற்றிய நினைவுகள்தாம்.

பின்னோக்கித் திரும்பிப்பார்க்கிறேன். எப்போது அவரை முதலில் சந்தித்தேன்.?
நான் பிறந்து வளர்ந்த எங்கள் இல்லம் இருந்தது மாம்பலம் ஹை ரோடு எனப்படும் வீதி. தாம்பரம் பீச் மின்வண்டி இருப்புப்பாதையில் மாம்பலம் ஸ்டேஷன் அருகே கிழக்குப்பக்கம் உள்ளது. துரைசாமித் தெரு முனையிலிருந்து, ரயில்வே லயனை ஒட்டி கோடம்பாக்கம் ஸ்டேஷன் வரை செல்லும் நீண்ட வீதி. எங்கள் தெருவில் ஒருபுறம்தான் வீடுகள் எதிர்ப்புறம் இருப்புப்பாதைதான். காலை 4.30 முதல் இரவு 12.00 மணி வரை மின்சார ரயில்கள் எதிரும் புதிருமாகச் சென்றுகொண்டே இருக்கும். இவை தவிர இரவு பகல் எந்நேரமும் தெற்கில் திருச்சி, மதுரை, நெல்லை, கன்யாகுமரி ஆகிய இடங்களுக்கு விழுப்புரம் வழியே செல்லும் அனைத்து தொலைதூர ரயில் வண்டிகளும் அவ்வப்போது சென்றுகொண்டே இருக்கும்.

“இந்தச் சத்தத்தில் எப்படிடா இருக்கீங்க ? தூங்கறீங்க ?” என்றெல்லாம் நண்பர்கள் கேலி செய்வார்கள். ஆனாலும் எங்கள் வீட்டிற்கு விளையாட வரும் நண்பர்கள் மொட்டை மாடியில் நின்றுகொண்டு ரயிலைப் பார்த்து இரசித்து நிற்பார்கள். எனக்கும் அப்படித்தான். மொட்டை மாடியில் நின்றுகொண்டு வீதியைப் பார்ப்பதும், இயந்திரப் பாம்பு ஊர்வதுபோல் செல்லும் ரயில் வண்டிகளைப் பார்ப்பதும்தான் என் இளமைப் பருவத்தில் என்னை மிகக் கவர்ந்த பொழுதுபோக்கு.

எங்கள் வீட்டிற்கும் இரயில் தடத்திற்கும் நூறு அடிகள் தொலைவே இருந்ததால் , வீட்டு மதில்சுவர் அருகில் நின்று பார்த்தாலும், அல்லது வெளி அறை ஜன்னல் மூலம் பார்த்தாலும் அல்லது மொட்டைமாடியில் நின்று பார்த்தாலும், ரயில் மிகத் தெளிவாகத் தெரியும்; கொஞ்சம் வேகம் குறைந்து செல்லும்போது ரயில் “கம்பார்ட்மெண்டில்” உள்ளவர்களை நன்றாகவே பார்க்கமுடியும்.

எக்மோரிலிருந்து “சவுத்” பக்கம் இரயிலில் செல்லும் உறவுகள் நட்புகள் ஆகியோருக்கு நாங்கள் வீட்டிலிருந்தே ”கை ஆட்டி பை பை சொல்வோம்”. இள வயதில் இதெல்லாம் பெரிய சாதனை.
இரவு நேர இருளில் கம்பார்ட்மெண்டில் விளக்குகள் ஒளிவீச மின்னலைப் போல் ஓடும் மின்வண்டிக்குள் இருப்பவர்கள் திரைப்படப் பாத்திரங்களாய்த் தெரிவார்கள்.

இரவு பத்து மணிக்கு மேல் ஓடும் “எலெக்ட்ரிக் ட்ரெயினில்” ( இதுதான் தமிழில் அந்தக்காலப் பெயர் !!) கூட்டம் இருக்காது; அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலரே இருப்பர். “ என்ன வேலையோ பாவம். இத்தனை நேரத்துக்கு மேல் வீடு திரும்புகிறார்கள். இனி வீடு சென்று கை கால் முகம் கழுவியோ அல்லது குளித்தோ முடித்துவிட்டுச் சாப்பிடும் போது இரவு பதினொன்று ஆகிவிடுமே ! மனைவிதான் விழித்திருந்து உணவு படைக்கவேண்டும், குழந்தைகள் தூங்கி இருப்பார்கள் ! அடே அதோ ஒரு நடுத்தர வயது மாது அமர்ந்திருக்கிறாரே ..இவர் திரும்பிய பிறகுதான் வீட்டிலுள்ள அனைவருக்கும் உணவு சமைக்கவேண்டுமோ ?” என்றெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன். பின்னாளில் வளர்ந்த என் இலக்கியப் படைப்பார்வத்திற்கு

இவையெல்லாம் ஓர் தூண்டுதலா ? இல்லை அறிகுறியா ?

இதையெல்லாம் நான் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு, இவ்வாறு வீதியையே மறக்காமல் தினம் பார்த்துக் கொண்டு பழக்கமானதால், எங்கள் தெருவில் நடமாடும் மக்களின் முகங்கள் எனக்குப் பழக்கமாகிவிட்டன. கோடம்பாக்கம் மாம்பலம் ஸ்டேஷன்களுக்கு இடையே ரயில் வே லயனை ஒட்டி இருக்கும் நீண்ட தெரு என்பதால், மாம்பலம் ஸ்டேஷனுக்குச் செல்லும் பலர் எங்கள் தெருவின் வழியாகத்தான் செல்வார்கள். புதிய முகங்கள் ஆனோ பெண்ணோ தென்பட்டால் உடனே எனக்குத் தெரிந்துவிடும். அவர்கள் தொடர்ந்து எங்கள் தெருவைப் பயன்படுத்தினால் அவர்களைப் பற்றிய விவரங்களும் அருகிலுள்ள நாடார் கடை, அல்லது தெருவின் வடக்குப் பக்கத்தில் இருந்த “சிறு குடிசைப்பகுதி அல்லது அதைத் தாண்டி இருந்த “வண்ணான் கடை” ஆகிய இடங்களின் மூலமாகத் தெரியவந்துவிடும்.

அப்படி நான் தெரிந்துகொண்ட நபர்தான் “நாகநந்தி”.

கண்னைப் பறிக்கும் வெள்ளை வேட்டி, ஜிப்பா, நல்ல உயரம், சிவந்த நிறம், கொஞ்சன் முன் வழுக்கைக்கு இடம் விட்டுப் பின்னால் குவிந்திருக்கும் நரையிடை கண்ட சுருள்முடி., கொழுவிய கன்னம் கொண்ட கம்பீரமான முகத்தில் வீரமே உருவான முறுக்கு மீசை..காலை வீசிப்போட்டு நடக்கும் பாங்கு, தோளில் ஒரு நீண்ட பை. இந்த அங்க அடையாளங்களோடு தொடர்ந்து ஒருவர் காலை எட்டுமணிக்கு மாம்பலம் ஸ்டேஷன் நோக்கியும் மாலை ஐந்து மணிக்கு வீடு நோக்கியும் எங்கள் தெருவில் சென்றால் அவர் என் கண்களுக்குத் தப்புவாரா ? இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அவரை நான் பார்த்திருக்கிறேன். பேசியதில்லை.

நான் கல்லூரிப் பணியில் சேர்ந்த பிறகு ஒருநாள் “பாரதி கலைக் கழகத்தில்” அவர் ஒரு பார்வையாளராக எங்கள் கவியரங்கிற்கு வந்து அமர்ந்தார். அவர்தான் தி. வேணுகோபாலன் என்ற நாகநந்தி; சென்னை ஏ.எம். சமணக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர்.
மனத்தில் பதிந்த உருவமல்லவா ? அவரிடம் நான் கேட்டேன் “ சார் நீங்க மாம்பலம் தெரு அருகில் குடியிருந்திருக்கிறீர்களா ? உங்களை என் தெருவில் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் உங்களை அங்கே பார்ப்பதில்லையே ! நான் விவேகானந்தா கல்லூரியில் பணிபுரிகிறேன்.” என்று அறிமுகம் செய்துகொண்டேன்.

முறுக்கு மீசையை வருடிக் கொண்டே புன்னகையோடு ( பேசத் தொடங்குமுன் அவர் எப்போதும் செய்வது) “ ஆமாம் ! அங்கே வண்டிப்பாதைத் தெருவில் சில ஆண்டுகள் இருந்திருக்கிறேன். பிறகு இப்போது நங்கநல்லூரில் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு வந்துவிட்டேன்” என்றார்.

அவர் வந்து அமர்ந்த அந்தக் கவியரங்கம் எங்கள் பாரதி கலைக் கழகத்தின் திருப்புமுனை. பாரதி கலைக் கழகத்தின் செயல்பாடுகளில் உண்மையான இலக்கியப் பார்வையின் ஊற்றுக்கண் திறப்பினைச் செய்தவர் நாகநந்தி என்றல் மிகையாகாது.

பாரதிமேல் பக்தி கொண்ட இவர், பாரதியைப் போலவே தனது பத்தாவது வயதில் பூணூலை அறுத்தெறிந்துவிட்டு எல்லோருமை் ஒரே சாதியினர்தாம் என்று புரட்சிக் கொடியெழுப்பியவர். தஞ்சையில் பள்ளிப் படிப்பை முடிந்ததுடன், அந்நாளைய இடைநிலை வகுப்புகளை (Intermediate) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், முதுகலைப் படிப்பினை சென்னை மாநிலக் கல்லூரியிலும் முடித்தார்.

பின்னர் சில ஆண்டுகள் சென்னையில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் (Accountant General’s Office) பணிபுரிந்த பின், 1965ல் சென்னை A. M. ஜெயின் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1975ல் தனது M. Phil பட்டத்தினை ‘புறநானூறு, திருக்குறளில் அன்றைய அரசியல்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றார். ‘கம்பராமாயணத்தில் நாடகவியல்’என்ற தலைப்பில் முனைவர் (கலாநிதி) பட்டத்திற்கான ஆராய்ச்சியையும் செய்துள்ளார்.

‘பாரதி கலைக்கழகம்’என்ற இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திருக்குறள் வகுப்புகளில் ‘திருக்குறள் இன்றைய வாழ்க்கை நெறியில் எவ்வாறு பொருந்தும்’ (Present day application of Thirukkural) என்ற கண்ணோட்டத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேல் நிகழ்த்திய சொற்பொழிவுகள் திருக்குறளை அணுகிக்க கற்க முயல வேண்டும் என்று இவர் விளக்கியது பலருக்குப் பெருத்த பயனுடையதாக அமைந்தது. இந்த மூன்றாண்டுகள் அவர் வகுப்பில் கற்றதுதான் என்னை ஒரு திருக்குறள் மாணவனாக உயர்த்தியது என் நினைவில் நிற்கும் ஆசானாக அவர் அமைந்ததற்கு இதுவே காரணம்.

பாரதியை ஆழ்ந்து படித்து ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னவர் நாகநந்தி. அதற்கான பல உதாரணங்களையும் எங்களுக்கு எடுத்துரைத்தவர். ஒன்றைச் சொல்கிறேன் “காணி நிலம் வேண்டும்” என்ற பாடலில் “காணி” என்பதன் பொருள் என்ன என்று ஒருமுறை கேட்டார்.நாங்கள் விழித்தோம். பிறகு கணக்குப் போட்டு விளக்கி ஏறக்குறைய “ஒண்ணேகால் ஏக்கர் ” அளவு என்று நிறுவினார். அதுமட்டுமல்ல ! இப்படிப் புரிந்துகொண்டால்தான், “பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களுடன், மாளிகை கேணி எல்லாம் இருக்கக் கூடிய இடமாக அது இருக்கும்.” என்று விளக்கினார். காணி என்பதற்கு இன்னொரு பொருள் “சொந்தமானது” என்று பொருள். பெண்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து தரும் நிலத்திற்கு மஞ்சக் காணி நிலம் என்று பெயர். எனவே பாரதி தனக்கே உரிமையான ஓரிடத்தை வேண்டினான் என்றும் கொள்ளலாம் என்பார்.

ஆனந்தவிகடனில் முத்திரைக் கதை எழுதியவர் பல நாடகங்கள் எழுதி, சிலவற்றில் தானும் நடித்தவர். பாரதியின் பாஞ்சாலி சபதத்தை அப்படியே கவிதை நாடகமாக நாங்கள் போட்ட போது அதன் இயக்குனராக இருந்தவர். அதில் துரியோதனன் வேடமும் ஏற்றவர். ( அதில் நான் ஏற்றது பாரதி வேடம்)

 

எத்தனை முறைகள் சந்தேகங்கள் கேட்டாலும் தெளிவாக விளக்கம் தந்து செம்மை செய்யும்

நல்லாசிரியர்களில் நான் கண்ட முதன்மை ஆசான்.

அவர் மறைந்த போது எங்கள் அன்பு நண்பர் இலந்தை சு. இராமசுவாமி எழுதிய இரங்கற்பா.

எங்களின் அருமை ஆசான், இனியவர் நாக நந்தி
இங்கிலை என்னும் செய்தி இடியென இறங்க, வீரக்
கங்கினை அணைத்து விட்ட காலனைச் சினந்தேன், ஆய்வுச்
சிங்கமும் போமோ, நாதச் சீவனும் அடங்கப் போமோ?

இலக்கியம் உருவம் பெற்றால் இப்படி இருக்கும் என்ன
உலவிய நாக நந்தி, உளத்திலே உயர்ந்த மேதை
பலமெனக் கொண்ட அந்தப் பாரதி தன்னைப் பார்க்க
உலகினை நீத்து வேறோர் உலகினுக் கேகினாரோ?

வெண்ணிற ஜிப்பா, வேட்டி, வீரமே விளைக்கும் மீசை
கண்ணிலே காந்தக் கூர்மை, காளைபோல் நடையின் வீச்சு
எண்ணிய வஞ்சியாமல் எடுத்துரைக் கின்ற நேர்மை
புண்ணியர் நாக நந்தி புனிதரைக் காண்ப தெங்கே!

எழுத்தினால், பேச்சால், உண்மை எழுச்சியால், அன்பர் நெஞ்சம்
வழுத்திடும் வண்ணம் வாழ்ந்த மாண்புள நாக நந்தி
எழுத்திலே வாழ்வார், அன்பர் இதயத்தில் வாழ்வார், உண்மை
தழைத்திடும் தமிழில் வாழ்வார், சரித்திர மாக வாழ்வார்

இலந்தை சு இராமசாமி
15-6-1997

கட்டுரையை நான் நிறைவு செய்யும் முன் , உங்களுக்குள் இருக்கும் ஒரு கேள்விக்கு விடை சொல்லிவிடுகிறேன்.

அவருக்கு நாகநந்தி என்ற புனைபெயர் எப்படி வந்தது என்று அவர் மனைவியிடம் ஒருமுறை கேட்டேன். “ அது கல்கியின் “சிவகாமியின் சபத்த்தில்” வரும் ஒரு கதாபாத்திரம். “ அந்த கேரக்டரின் வில்லத்தனம் அவருக்கு மிகப் பிடிக்கும்” என்றார் திருமதி வேணுகோபாலன்.