புத்தகம் : “BITS of Social Impact” ( English)

எழுதியவர்கள் : Harsh Bhargava and Sai Prameela Konduru

( A Social Entrepreneurship Primer with Stories of Founders from BITS, Pilani – With Foreword by Kumar Mangalam Birla)

    இது ஒரு ஹார்ப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ் இந்தியாவின் 2022 வெளியீடு.

   இந்த 250 +  பக்க நூலை பிட்ஸ் பிலானியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஹர்ஷ் பார்க்கவாவும் சாய் பிரமிளா கொண்டூருவும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இதை தங்களை உருவாக்கிய, சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்னும் நல்லெண்ணத்தை உருவாக்கிய பிட்ஸ் பிலானி கல்லூரிக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள் இதன் ஆசிரியர்கள்.

   பிட்ஸ் பிலானி என்ற புகழ்பெற்ற சர்வகலாசாலையில் பயின்ற மாணவர்கள் உலகம் முழுவதிலும் பற்பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் ; அவர்கள் தொழில்நுட்பத்துக்கு பெயர் போனவர்கள் என்பதும் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள் என்பதும் நாம் எல்லோரும் நன்கறிந்த உண்மை. பலதரப்பட்ட முன்னணி நிறுவனங்களிலும் உயர் பதவிகளில் பிட்ஸ் பிலானியின் முன்னாள் மாணவர்கள் செயல்படுகிறார்கள் என்பதும், பலர் தங்கள் சொந்த நிறுவனங்களைத் தொடங்கி அவற்றை உச்சத்திற்கு வளர்த்துச் செல்கிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம்தான்.

ஆனால், இந்த நூல் அத்தகைய வெற்றிகளையும் சாதனைகளையும் பற்றியது அல்ல. தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல், “சோஷியல் இம்பாக்ட்” – அதாவது சமுதாய முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ள நிறுவனங்களைப் பற்றியும், அதன் நிறுவனர்களைப் பற்றியும் பேசுகின்ற அருமையான நூல்.

   சமுதாயப் பிரச்சினைகளில் அக்கறை கொண்ட இளைஞர்கள், அத்தகைய பிரச்சினைகளைக் கையிலெடுத்து, ஒரு தொழில் முனைவோருக்கான குறிக்கோளுடன் அவற்றுக்கு மாற்றுக்களை உருவாக்கத் துடிப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. “சோஷியல் சர்வீஸ்” என்பதல்ல இது. சிக்கலான சமுதாயப் பிரச்சினைகளை மையப்படுத்தி, அதற்கு தீர்வு காண்பதையே ஒரு தொழிலாக வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பதே இந்த நூலின் பேசு பொருள்.

                நூலின் பொருளடக்கத்தைக் கவனித்தால், 1. உடல் நலம், 2. கல்வி, 3. சுற்றுச்சூழல், 4. கலை மற்றும் கலாச்சாரம்,  5. சமூக மாற்றம் என்ற தலைப்புகளில் அவர்கள் வரிசைப்படுத்தும் கேஸ் ஹிஸ்டரிகளைப் பிரித்துள்ளார்கள். இந்த ஐந்து பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிலும், பிட்ஸ் பிலானிலிருந்து படித்து முடித்து வெளியே சென்ற பிறகு, சமுதாய மாற்றத்திற்கான நிறுவனங்களை அமைத்து வெற்றிகரமாக நடத்துபவர்களை சந்தித்து, பேட்டி கண்டு, வருங்கால சமுதாய மாற்றத் தொழில் முனைவர்களுக்குத் தேவையான பாடங்களை வடித்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள்.

    உதாரணத்திற்கு, உடல்நலம் அல்லது ஹெல்த் கேர் பிரிவில் ப்ரொஃபசர் விஜய் சந்துரு என்பவரைப் பற்றியும் அவர் நிறுவிய ஸ்ட்ரான்ட் லைஃப் சயின்ஸஸ், மெட்டாஸ்ட்ரிங் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் ஃபவுண்டேஷன்ஸ் பற்றிய விரிவான விளக்கம் முதல் கேஸாக வருகிறது. இது ஜெனோமிக் மெடிசின்ஸ் பற்றியது.

    கல்வி என்ற பிரிவில், அனிருத்தா மிஷ்ரா நடத்தும் “அப்னி க்ளாஸ்” என்ற நிறுவனம் இடம் பெற்றிருக்கிறது. இந்த நிறுவனம் ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு, அவர்களுடைய தாய்மொழி மூலமே எல்லாவிதமான படிப்புகளையும் படித்து முன்னேறும் வழியைக் காண்பிக்கின்றது. இதன் நிறுவனர், தான் பட்ட இன்னல்கள் அடுத்த தலைமுறைக்கு இருக்கக்கூடாது என்ற உயரிய உணர்வுடன் இதை நடத்தி வருகிறார்.

   இப்படி ஒவ்வொரு கேஸ் ஸ்டடியும் இந்தத் துறையில் நுழைய விரும்புபவர்களுக்கும், இத்தகைய முக்கியமான மாற்றங்களை நோக்கி உலகை நகர்த்திச் செல்லும் துறையைப் பற்றி நுணுக்கமாக அறிய விரும்புபவர்களுக்கும் அத்தியாவசியமான வாசிப்பு அனுபவம்.

   இத்தகைய நூலை எழுதிய இந்த ஆசிரியர்களுக்கு எம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நாளைய சமுதாயம் இவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. இந்நூலை குவிகம் மின்னிதழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

   ஜி பி சதுர்புஜனின் “இந்தப் புத்தகத்தை படித்து விட்டீர்களா ?” வரிசையில் குவிகம் மின்னிதழில் இதுவரை இடம்பெற்றுள்ள நூல்கள் :

  1. The Wisdom Bridge (By Daaji Kamlesh D.Patel)               June 2023