govardhan puja significance date

 

(நீர்வளம் மிகுந்த செழிப்பான பிருந்தாவனத்தில் மகிழ்ச்சியுடனும்,நிறைவுடனும் வாழ்ந்து வந்த யாதவர்கள் ஆண்டுதோறும் இந்திர விழா எடுத்துக் கொண்டாடுவது வழக்கம். இவ்வழக்கத்தை மாற்ற நினைத்தான் கண்ணன்……)

மழைவளத்தால் பிருந்தாவனம் செழித்தல்

கார்வலம் வானில் வந்து
கனமழை பெய்வ தாலே,
நீர்வளம் பெருகி, உண்ணும்
நெல்வளம் பெருகி, ஆயர்
சீர்வளம் பெருகி, ஆவின்
திகழ்குலம் பெருகிப் பல்கித்
தார்வல மார்பன் நந்தன்
தண்ணகர் செழித்த தம்மா!

இந்திர விழாவைக் கண்ணன் மறுதலித்தல்

மழையினை அளிக்கும் அந்த
வருணனின் தலைவ னான
இழைமணி மாலை மார்பன்
இந்திரன் புகழைப் போற்றி
வழிவழி யாக ஆயர்
வழிபடும் வகையில் ஆங்கே
எழிலுறு வனத்தில் கூடி
இந்திர விழவெ டுப்பர்

இந்திர விழவைப் பற்றி
ஏந்தலாம் நந்தன் சொல்ல
மந்திரப் புன்ன கையான்
மாயனோ மறுத லித்தான்
முந்தியோர் யானை காத்த
முதலினை மறந்தாய் போலும்
அந்தமில் நார ணன்தான்
அனைவருக் காதி என்றான்.

கோவலர் குலத்தோ ருக்கும்
குவலய மக்க ளுக்கும்
காவலன் வனத்து ழாயின்
கடிமலர் மார்பன் அன்றோ
பாவலர் பாடு கின்ற
பரமனின் பணியைச் செய்யும்
ஏவலன் வானோர் வேந்துக்(கு)
இவ்விழா எதற்கோ என்றான்

அளத்தலில் நலத்தை நல்கும்
ஆவினம், அந்தண் மக்கள்,
வளத்தினை வழங்கிக் காக்கும்
வளர்மலை, வணங்கிப் போற்றி,
உளத்தினில் பொங்கும் நன்றி
உரைத்துநாம் விழவெ டுப்போம்.
கிளத்தவக் கண்ணன் சொல்லைக்
கேட்டவர் ஒப்பிச் செய்தார்.

கோவர்த்தன மலைக்கு விழா எடுத்தல்

வானவர் வேந்தன் தன்னை
வழிபட மறந்து விட்டார்
கானமும் கூத்தும் சேரக்
கைகளைக் கோத்துக் கொண்டார்
ஆனவம் மலையைச் சுற்றி
ஆயரும் தொழுது வந்தார்
மானமே போன தென்று
மறுகியே சினந்தான் விண்ணோன்

சீற்றத்தால் இந்திரன் பெருமழை பெய்வித்தல்

கறுவிய விண்ணோர் கோவும்
கடுஞ்சினம் நெஞ்சில் மேவச்
சிறுவனின் சொல்லைக் கேட்டுச்
செய்கையில் பிழைத்தார் ஆயர்
செறுமழை மாமு கில்காள்
சென்றுநீர் ஊழிக் கால
இறுதியை வரவ ழைப்பீர்
இடிமழை பெய்வீர் என்றான்

ஆழியே மேலே ஏறி
ஆத்திரம் கொண்டு கீழே
வீழுதல் போன்றே மாரி
வெறியுடன் கொட்டக் காற்றும்
சூழவே வீசிச் சாய்க்கத்
தோப்புடன் தோட்டம் வீடு
பாழெனச் சிதைய ஆயர்
பாரெமைக் கண்ணா என்றார்.

யாதவர்கள் கண்ணனிடம் முறையிடுதல்

கோப்பெரு வான வேந்தன்
கோபமே கொண்டு விட்டான்
பூப்புது முகத்துக் கண்ணா
பொழிமழை சூறைக் காற்றும்
ஆர்ப்பதைக் கேட்டி லையோ
ஆயரின் இறுதி நாளோ
காப்பதுன் கடமை அன்றோ
கழலிணை தொழுதோம் என்றார்

குன்று குடைபிடித்த கோவலன்

கண்டு நகைத்த கார்வண்ணன்
கவலை வேண்டா எனத்தன்கைச்
சுண்டு விரலின் நுனியாலே
தூக்கி அந்தப் பெருமலையை
மண்டு குடையாய்ப் பிடித்துப்பின்
வருவீர் உள்ளே எனவழைக்க
அண்டம் காக்கும் அவன்குடையின்
அடியில் தஞ்சம் புகுந்தாரே

ஆடும் மாடும் புகுந்தனவே
அன்புக் கன்றும் புகுந்தனவே
தேடிச் சேர்த்த செல்வங்கள்
திகழ்ந்த உடைமை புகுந்தனவே
பீடு மிக்க கோபருடன்
பெருமை மிக்க கோபியரும்
நாடி அடியில் புகுந்தனரே
நல்ல மலையாம் குடையின்கீழ்

கண்ணன் துதி – கவிக்கூற்று 

குன்றெடுத்துக் குடைபிடித்த கோவலனின் தாள்போற்றி
அன்றாயர் துயர்தீர்த்த அருமுகிலின் அடிபோற்றி
துன்றுமலர் வனமாலை சூடியதோள் திறல்போற்றி
என்றென்றும் இடர்களையும் எழிலிவண்ணன் அருள்போற்றி

இந்திரன் உண்மை உணர்ந்து அடிபணிதல்

ஏழு நாள்கள் இடையின்றி
இடியும் வெடிக்கப் பெருமழையும்
வாழும் அவரை அச்சுறுத்த
வரையே இன்றிப் பெய்ததம்மா
வேழம் காத்த விதிமுதல்வன்
வெற்பைக் குடையாய்த் தாங்கியதால்
ஊழி மழையும் சோர்ந்துநிற்க,
உண்மை உணர்ந்தான் விண்ணவர்கோன்

முந்தி மலையின் அடியிருந்தோர்
மூண்ட களிப்பால் வெளிவந்தார்.
சிந்தை வருந்தி இந்திரனும்
சென்று கண்ணன் அடிபணிந்தான்
வெந்த உள்ளச் செருக்கடக்கி
வெற்றி கொண்ட மலைதாங்கி
சிந்து நகையான் வாழ்கவெனச்
செப்பி ஆயர் போற்றினரே

( தொடரும்)