Theatre director Prasanna Ramaswami's latest play turns the spotlight on to the perpetrators than th
                                                                                    பிரசன்னா ராமசாமி 
ஆழ்வார்ப்பேட்டை ‘மேடை’ யில் தி.ஜா.!! 
ஜூலை 8, 2023 மாலை சென்னை ஆர்ட் தியேட்டர் வழங்கிய “சின்னஞ்சிறு கதைகள் பேசுவோம் – தி.ஜானகிராமன் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது” நிகழ்ச்சிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வித்தியாசமான நாடகமாக்கம், நடிப்பு மற்றும் ‘மேடை’!
‘மேடை’ என்ற பெயரிலேயே அரங்கம். ஒன்றரையடி சுமாருக்கு உயரமான மேடை, வித்தியாசமாக ‘ஷூட்டிங் ஸ்பாட்’ மாதிரி இருந்தது! ஃபோகஸ் விளக்குகள் மிக உயரமான சீலிங்கில் தொங்கின. சுற்றுப்புற சுவர்களில் கருப்பு வண்ணம், மேடை, பேக் ட்ராப், சீலிங் எல்லாமே கருப்பு – மேடையில் கலைஞர்கள் மஞ்சள், வெள்ளை, ஊதா, பச்சை நிற விளக்கொளியில் வித்தியாசமாக ஒளிர்ந்தார்கள்!
சுமார் 150 இருக்கைகள் – மேடைக்கு முன்னால் வெள்ளை நிறத்தில் மெத்தை விரிப்புகள். நண்பர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு! திடீரென்று அந்தக் கூட்டதிலிருந்து ஒருவர் வசனம் பேசியபடி எழுந்து, மேடை நோக்கிச் சென்று, நாடகத்தின் ஒரு பாத்திரமாகிவிடுவார்! ‘இப்பொ நா இந்தக் கதையைப் படிக்கப் போறேன்’ என்றவாறு மற்றொருவர் எழுந்து கதையை வாசிக்கத் தொடங்குவார். நாடகமாக மாற்றப்பட்ட பகுதியில் நடிப்பவர் – முக்கியமாக பெண் பாத்திரம் ஏற்று நடிப்பவர் – இடது பக்க அறையிலிருந்து வெளிப்படுவார்.
வீடு, மரம், வானம், ரயில், கோயில் என எதுவும் விஷுவலாகக் கிடையாது. உரையாடல்கள், இரண்டு ஸ்டூல்கள், கதாபாத்திரங்கள் இவையே அரங்கத்தில் காணப்படும். ஆனால் மனமேடையில் அவை எழுப்பும் பிம்பங்களும், தாக்கங்களும் வியக்க வைப்பவை. தி.ஜா. வின் சிறுகதைகளை வாசித்திருப்பவர்களுக்கும், வாசிக்காதவர்களுக்கும் நாடகத்தைப் பார்க்கும்போது ஏற்படும் ‘தி.ஜா. ஃபீல்’ மறுக்க முடியாதது! முதல் வாசிப்புக்கும், மறுவாசிப்புக்கும் தூண்ட வைப்பது. அது பிரசன்னா ராமசாமி அவர்களுக்கும் அவரது ‘சென்னை ஆர்ட் தியேட்டர்’ குழுவுக்கும் கிடைத்த முழு வெற்றி!
பிரசன்னா ராமசாமி அவர்கள் முகநூல் மூலம் எனக்கு அறிமுகம். அந்தக்கால பழக்க வழக்கங்கள், பாட்டி வைத்த வற்றல் குழம்பு, பூனைக்கு உணவு, இலக்கிய, அரசியல் நிகழ்வுகளில் தன் பார்வை, அன்றைய கோயில்களின் சாநித்தியம், நாடகமும் அதன் பரிமாணங்களும் என முகநூலில் பகிர்ந்து கொண்டவை சுவாரஸ்யமானவை. அசோகமித்திரன் பற்றிய ஆவணப் படத்தில் என்க்கோர் இடம் கொடுத்தார் என்பது எனக்குப் பெருமையே. தி.ஜா. வின் சிறுகதைகளில் மூன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு வித்தியாசமான நாட வடிவைக் கொடுத்து அரங்கேற்றிய போது, என்னையும் அழைத்து பங்கேற்கச் சொன்னதும் அப்படியே! வாசிப்பு அருகி வரும் இந்தக் காலத்தில், இப்படிப் பிரபலமான எழுத்தாளர்களின் கதைகளை வித்தியாசமாக அரங்கேற்றுவது, இன்றைய இளைஞர்களை மீண்டும் வாசிப்புக்குள் இழுக்கும் என்று நான் நம்புகிறேன்.
முதல் சிறுகதை ‘ரசிகனும் ரசிகையும்’ – கதை முழுவதையும் உரையாடல்களிலேயே நகர்த்திச் சென்றிருப்பார் தி.ஜா. இரண்டு பேர் கதையினை மாற்றி மாற்றி வாசிக்க, மேடையில் முக்கியமான காட்சிகள் மட்டும் நடிக்கப்பட்டன. பாகவதர் கர்ப்பமாயிருக்கும் தன் மனைவியிடன் சொல்லிக்கொண்டு புறப்படுவது, ரயில் நிலையத்தில் மிருதங்க வித்வானின் அங்கலாய்ப்பு, திருவையாற்றில் கணிகை வீட்டில் பாகவதர் என வாசிப்பும், உரையாடலும், நாடகமுமாக அமைத்திருந்தார் பிரசன்னா. “போன வருஷத்திலேர்ந்துதான் சுமாரா பாடறேள்”, அதுக்கு முன்னாடி “சும்மா சத்தம் போட்டுண்டிருந்தேள்!”, “அசடு வழியறேள்”, “பெரிய மனுஷன் சடார்ன்னு சறுக்கிட்டேளே”, “தேவ்டியான்னா என்ன வேணா பேசுவேளா?” – தி.ஜா.வின் மிக முக்கியமான உரையாடல்களை எடுத்து நாடகமாக்கியிருப்பது சிறப்பு. சற்று விரிவாக்கமாக, முதலில் ஒரு வீணையிசையும், கல்யாணியில் பாகவதர் பாடுவதாக ஒரு காட்சியும், தேவதாசி பாடுவதாக ‘சங்கீத ஞானமும்’ பாடலும் சேர்த்தது, தி.ஜா. வின் இசை ஞானத்துக்கு ஒரு முத்தாய்ப்பாக அமைந்திருந்தது!
“கோபுர விளக்கு” – கதை வாசிப்பும், எழுத்தாளரும் எழுத்தாளர் மணைவியும் வீட்டில் பேசிக்கொள்வதும், கோயில் மானேஜருடன் எழுத்தாளர் பேசுவதும் என வடிவமைக்கப்பட்டிருந்தது. சமூக அவலங்களைத் தன் எழுத்தில் சாடியிருந்த சிறப்பான கதை, அதன் மையக் கரு சிதையாமல் நாடகமாக்கம் கண்டிருந்தது! “கோவிலை மூடியது சரி. கோபுர விளக்கை அணைத்ததும் சரி. தெரு விளக்கையும் ஏனய்யா அணைத்தீர்?”, “கர்ப்பமா வேற இருந்தாளாம். கண்ணாடித் தூளை முழுங்கி, என்ன வேதனைப் பட்டாளோ”, “சாமிகிட்ட போய், நல்ல வாழ்வைக் கொடுக்கச் சொல்லாம, ஒரு நல்ல பணக்கார ஆளா குடுப்பான்னு கேப்பாளோ?” போன்ற வசனங்கள் நல்ல தேர்வு!
மூன்றாவது கதை ‘சிலிர்ப்பு’ – இரண்டு ஸ்டூல், நான்கு கதாபாத்திரங்கள் மேடையில்! இரண்டு குழந்தை பாத்திரங்களுக்கும் யாரும் கிடையாது. கதை வாசிப்பவர்களே ஏற்ற இறக்கங்களுடன் பேசி, குழந்தைப் பாத்திரங்களைக் கண்முன் கொண்டு வந்துவிட்டனர்! பெரிய செட், விளக்குகள், பிரம்மாண்டங்களே தேவையில்லை – துல்லியமான வசன உச்சரிப்பு, பாத்திரங்களை உணர்ந்த நடிப்பு, அவை கடத்தும் நுண்ணிய உணர்வுகள் இவைகளே ஒரு நாடகத்தைக் காட்சிப்படுத்த போதுமானவை என்பதை ஆணித்தரமாக நிறுவியிருக்கும் பிரசன்னா ராமசாமி பாராட்டுக்குரியவர்!
ரசிகை, எழுத்தாளரின் மனைவி, ரயிலில் குழந்தையை அழைத்துச்செல்லும் மேட்டுக்குடி பெண்மணி என அனாயசமாக நடித்தவர் தர்மா ராமன்! காவிரிக்கரை ‘டயலெக்ட்’ ஒரு சிறிதும் பிறழாமல் ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசியது, உடல் மொழி, கிண்டல், கேலி, வருத்தம் எல்லவற்றையும் குரலில் கொண்டு வந்தது என மூன்று பாத்திரங்களிலும் சிறப்பு. தி.ஜா. வின் கற்பனைப் பாத்திரங்கள், அவரது நடிப்பில் உயிர் பெற்றன என்றால் மிகையில்லை.
திரு ராதாகிருஷ்ணன் (பாகவதர்), திரு சேது (மிருதங்க வித்வான், கடைக்கார சீனு, கோவில் மானேஜர் மற்றும் கதை வாசிப்பு), திரு பரமேஸ்வரன் (எழுத்தாளர் மற்றும் ரயிலில் பயணிக்கும் கதை சொல்லி), சூரியா, ஆதித்யா (கதை வாசிப்பு மற்றும் குழந்தைப் பாத்திரங்கள்) – எல்லாக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். தஞ்சைத் தமிழில், தி.ஜா. வின் உரையாடல்களை மிக நேர்த்தியாக, இயல்பாகப் பேசியதுதான் இந்த நாடகங்களின் சிறப்பு!
வாசிப்புக்கும், நாடகத்திற்கும் இடைப்பட்ட வடிவில் தி.ஜா.வின் மூன்று சிறுகதைகளை (எப்படித் தேர்வு செய்தார்?) மேடையேற்றிய பிரசன்னா தன் குழுவினை அறிமுகப் படுத்தும்போது, தி.ஜா.வின் உரையாடல்களைப் பேசுவதற்கு – சில வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியவில்லை இன்றைய இளைஞர்களுக்கு – ஸ்பெஷல் கவனம் தேவைப்பட்டது என்றார். மேலும், சுஜாதா, ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் மேடையேற்றும் எண்ணமுண்டு என்றார். வரவேற்கத்தக்க எண்ணம் – விரைவில் செயல்வடிவில் காண வாழ்த்துவோம்!
அரங்கு நிறைந்த ‘மேடை’ அன்றைய மாலைப் பொழுதை இனிமையாக்கியதோடல்லாமல், இலக்கிய உலகிற்கு ஒரு புதிய சாளரத்தையும் திறந்து விட்டதாகத்தான் எண்ணத்தோன்றுகின்றது!