எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

இந்த ஜூலை மாதத்தின் சிறந்த சிறுகதையாக எழுத்தாளர் அரவிந்தனின் ‘விருது’ சிறுகதையைத்  தேர்வு செய்கிறேன் -மந்திரமூர்த்தி அழகு 

முன்பு இலக்கியச் சிந்தனையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகளில் இருந்து சிறந்த சிறுகதையினைத் தேர்ந்தெடுக்கும் விமர்சனம் மீது எனக்குத் தீராக் காதல் உண்டு. 

கடந்த ஜூன் மாதத்தில் வெளியான சுமார் 60 -க்கும் மேற்பட்ட சிறுகதைகளைத் தேர்வுக்காக வாசித்தேன். சொல்வனம், உயிர்மை, திண்ணை, கனலி, படைப்பு, வனம், ஆவநாழி, அந்திமழை ஆகிய மின்னிதழ்களில் இருந்தும், காலச்சுவடு, ஆனந்த விகடன், கணையாழி, அமுதசுரபி, குங்குமம், குமுதம், பூபாளம், அம்ருதா, தினமலர், தினமணி கதிர் உள்ளிட்ட அச்சு இதழ்களில் இருந்து 65 -க்கும் மேற்பட்ட சிறுகதைகளை வாசித்தேன்.

நான் வாசித்த 65 சிறுகதைகளில் இருந்து 10 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். இவற்றில் இருந்து மிகவும் பிடித்த ஒன்றை இந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்ய வேண்டும்.

1. ஊட்டி வளர்த்த கதை – எழுத்தாளர் அரவிந்தன் (அந்திமழை)
2.குடம் – எழுத்தாளர் சிவசங்கர் எஸ்.ஜே (வனம் மேகசின்)
3. ஈரல் – எழுத்தாளர் சுஷில் குமார் (வனம் மேகசின்)
4. கிரிஸ்ஸோபதேசம்- எழுத்தாளர் ஜாபாலன் (சொல்வனம்)
5.உள்ளிருத்தல் – எழுத்தாளர் ஆதித்யா ஸ்ரீநிவாஸ் (சொல்வனம்)
6.ஆனை விழுந்தான் கேணி – எழுத்தாளர் அண்டனூர் சுரா (விகடன்)
7.முகம் – எழுத்தாளர் சரவணன் சந்திரன் (உயிர்மை)
8.மூக்குத்தி – எழுத்தாளர் சரவணன் சந்திரன் ( கனலி)
9.மொசு மொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள் – எழுத்தாளர் அ முத்துலிங்கம் ( பூபாளம்)
10.விருது – எழுத்தாளர் அரவிந்தன் (அம்ருதா)

இந்தக் கதைகள் தவிரவும் இந்த ஜூன் மாதத்தில் பல சிறந்த சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
இந்தப் பத்துச் சிறுகதைகளில் எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதியுள்ள சிறுகதைகள் இரண்டும், எழுத்தாளர் அரவிந்தன் எழுதியுள்ள சிறுகதைகள் இரண்டும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த பத்துச் சிறுகதைகளும் எடுத்துக் கொண்ட செய்திகளைச் அருமையான முறையில் பேசி இருக்கின்றன.

முதலாவதான ‘ஊட்டி வளர்த்த கதை’  சுமார் 10 வயது வரை பெண் குழந்தைக்கு இளம் தம்பதியர் உணவு ஊட்டுவதற்குப் ‘படுகின்ற பாட்டைப்பற்றி பேசுகிறது. அதனால் குடும்பத்தில் எழும் குழப்பங்கள், சண்டைகளையும் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார் கதாசிரியர் அரவிந்தன். குழந்தைகளுக்குக் கதை சொல்லி ஈர்க்கலாம்; அதனால் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளைக் குறைக்கலாம் என்பதையும் அழகாகச் சொல்லி இருக்கிறார் அரவிந்தன். எந்தப் பிரச்சாரமும் இல்லாமல் சொல்லப்பட்டுள்ள சிறப்பான கதை.

இரண்டாவது கதை எழுத்தாளர் சிவசங்கர் எஸ்.ஜே எழுதிய ‘குடம்’ சிறுகதை. நாகர்கோவிலைக் களமாகக் கொண்டு எழுதியுள்ள கதை. விபச்சாரத் தொழிலில் விழுந்த பெண்ணின் கதையை மண்ணின் மொழியில் பேசுகிறது. யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் சொல்லப்பட்டு இருக்கின்ற சிறப்பான கதை. இது போன்ற பெண்களைக் குறித்த கதைகள் தமிழில் இதற்கு முன்பும் பேசப்பட்டு இருக்கின்றன.

மூன்றாவது சிறுகதையான ‘உள்ளிருத்தல்’ எழுத்தாளர் ஆதித்யா ஶ்ரீநிவாஸ் எழுதியது. தெருவில் புடவை விற்ற ஒருவன் ஒரு பெரிய ஜவுளிக்கடை முதலாளி ஆகிறான். தனது 2 மகன்கள் தலை எடுத்த பிறகு அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு பிசினஸ்ஸை விட்டு ஒதுங்குகிறான். அவ்வப்போது ஓரிரு பிரச்சனைகள் வரும் போது தீர்த்து வைத்தவன் வங்கியில் வாங்கிய கடனுக்கு கடை ஜப்திக்கு வரும் போது பற்றை விட்டு விலகி நிற்கிறான். மனைவிக்கு அவளது ஜீவனத்துக்கு வேண்டிய வசதிகளைச் செய்து விட்டு காசிக்கு ரயில் வண்டியில் ஏறும் பழைய பாணிக்கதை. சிறப்பான முறையில் சொல்லி இருக்கிறார் கதாசிரியர் ஆதித்யா ஶ்ரீநிவாஸ்.

நான்காவது சிறுகதை எழுத்தாளர் சுஷில் குமாரின் ‘ஈரல்’ சிறுகதை. ஈரல் அறுவை சிகிச்சை இருவருக்கும் தேவையாக இருக்கிறது. இருவருமே ஏழ்மைப் பெண்கள். கட்டணம் செலுத்தி சிகிச்சை எடுக்க முடியாது. இளம் வயது டாக்டர் ஒரு பெண்ணைக் கைவிட்டு இன்னொரு பெண்ணை இலவசக் கல்லீரல் சிகிச்சைக்குத் தேர்ந்து எடுப்பதைச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார் சுஷில் குமார்.

எழுத்தாளர் ஜாபாலன் எழுதியுள்ள ‘கிரிஸ்சோபதேசம்’ தேர்வின் ஐந்தாவது சிறுகதை. குண்டலினி யோகாவுக்கு புதிய ஆப் தயாரிக்கும் ஒரு start up கம்பெனியின் செயலியை உருவாக்குவதில் மூளையாகச் செயல்பட்ட அர்ச்சுனனுக்கு உடன் வேலை பார்த்த ஒருவனே அந்த செயல்முறை ரகசியத்தைத் திருடி வில்லனாகிறான். அவன் போட்டி ஆப் ஒன்றைத் தயாரிக்கிறான். அர்ச்சுனனின் மென்டர்கள் பலரும் அவனது போட்டியாளனுக்குத் துணை நிற்க அர்ச்சுனன் கலங்குகிறான். பாரதத்தில் அர்ச்சுனன் தொடர்ந்து செயலாற்ற கண்ணன் துணை நிற்பது போல இங்கும் ஒருவன் வழிகாட்டி அறிவுரை சொல்லவும், பண உதவிசெய்யவும் துணை நிற்கிறான். நவீன மகாபாரதத்தில் என்ன ஒரு வித்தியாசம் என்றால் இருவருக்கும் முதலீடு செய்வது ஒரே கார்ப்பரேட் முதலாளி தான் என்ற டுவிஸ்ட். பகடியோடு சிறப்பாகக் கதை எழுதியுள்ள எழுத்தாளர் ஜாபாலனைப் பாராட்டலாம்.

அடுத்து எழுத்தாளர் அண்டனூர் சுராவின் ‘ஆனை விழுந்தான் கேணி’ என்ற ஆறாவது சிறுகதை. இது வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் காதல் கதை (?) எனலாம். மணமகனது ஊர் ஆனை விழுந்த காணி என்று நினைத்துக் காதலிக்கிறாள் கதையின் நாயகி. ஆனால் ரெக்கார்டு படி மணமகன் ஊர் கேணி என்று இருப்பதைக் கண்டு மிரண்டு போகிறாள். காரணம் அவளது தாய் மாடு முட்ட வந்த போது நீர் இல்லாத கேணியில் தவறி விழுந்து இறந்து போனவள் . கடைசியில் அவள் எவ்வாறு மணம் முடிக்க சம்மதிக்கிறாள் என்பது தான் கதை. அண்டனூர் சுராவின் நகைச்சுவையான ஓட்டம் கதையின் சிறப்பு எனலாம்.

ஏழாவது கதை எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதிய ‘முகம்’ சிறுகதை. மருத்துவம் படிக்கும் பணக்காரப் பெண் குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு அடிதடியில் ஈடுபடும் ஒருவனைக் காதலித்துக் கரம் பிடிக்கிறாள். அவனை விரும்ப அவனது அழகான முகம் தான் காரணம் என்கிறாள். ஒரு தகராறில் முகத்தில் அவனுக்கு 3 வெட்டு விழுந்து முக அழகு பாழாகி விடுகிறது. ஆனால் அவனது மனைவி அதனால் அவனை வெறுக்கவில்லை. அவளது மனதில் அந்தப் பழைய அழகிய முகம் தான் நிற்கிறது என்கிறாள். சிறு சிறு பிரச்சனைகள் இருவருக்குமிடையே தொடர்ந்து வருகின்றன . தற்போதும் அவனது வெட்டுப்பட்ட முகத்தை விரும்பப் பெண் உண்டா? அப்படி வந்தால் விளைவு என்னவாகும் என்பதுதான் கதை. சரவணன் சந்திரன் கதையைக் கோர்வையாகச் சொல்லிச் செல்வதும், வாசகர்களுக்கு யூகிக்கச் சிலவற்றை விட்டுச் செல்வதும் எப்போதும் அவரது கதையின் அழகு.

எட்டாவது சிறுகதையான ‘மூக்குத்தியும்’ எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதியுள்ளது தான். அனுமாஷ்ய சக்தியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள சிறுகதை. சரவணன் சந்திரனுக்குப் பிடித்தமான களம். விலை உயர்ந்த நகைகள் திருட்டுப்போன வீட்டிற்கு விசாரிக்கச் செல்லும் கால்நடை ஆய்வாளர் அங்குத் தனியாக விழுந்து கிடந்த மூக்குத்தியை எடுத்துத் தனது பேண்ட் பையில் போட்டது முதல் உரிய இடத்தில் அதனைச் சேர்ப்பிப்பது வரையுள்ள சம்பவங்களைத் . திரில்லராகக் கதை கூறுகிறது. விறுவிறுப்பான அனுமாஷ்யச் சிறுகதை.

அடுத்து ஒன்பதாவது கதையானது எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதியுள்ள சிறுகதை. கதையின் தொடக்கமானது டாக்டரம்மா குறித்த கதையோ என்று எண்ண வைக்கிறது. ஆனால் கதை போரினால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்துப் பேசுகிறது. குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பிரச்சனை குறித்துப் பேசுகிறது. அவளது உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரும் வகையில் கணவன் நோய்வாய்ப்பட்டு போதையுடன் சீரழிக்கும் போது குழந்தைகளைக் காப்பாற்ற அவள் எடுக்கும் முடிவு என்ன? என்பது தான் கதை. எந்தப் பிரச்சாரமும் இல்லாமல் வாசகனுக்கும் யூகிக்க இடம் கொடுத்து கதையினை அருமையாகச் சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

பத்தாவதான இறுதிக்கதை எழுத்தாளர் அரவிந்தனின் ‘விருது’ சிறுகதை. இன்றைய மார்கெட்டிங் உலகத்தின் முகம் என்ன? என்பதை இந்தக் கதையில் அருமையாக எழுதி இருக்கிறார் அரவிந்தன். நானும் ஒரு மார்க்கெட்டிங் ஆசாமி என்ற முறையில் கதை என்னை வெகுவாக ஈர்த்தது. விற்பனை உலகில் ஃபீல்டு மார்கெட்டிங் என்பது மிகவும் சிரமமானது. உழைக்கும் உழைப்பிற்கு ஏற்ற பலன் தருவதாக பல சமயங்களில் இருக்காது. கதையில் இறங்கி விளையாடி இருக்கிறார் அரவிந்தன். தேவையான செய்திகளை அருமையாகக் கதையில் பரிமாற்றம் செய்து இருக்கிறார்.

இந்த ஜூலை மாதத்தின் சிறந்த சிறுகதையாக எழுத்தாளர் அரவிந்தனின் ‘விருது’ சிறுகதையைத் தேர்வு செய்கிறேன்.

தேர்ந்தெடுக்க வாய்ப்பளித்த குவிகம் அமைப்புக்கு மிக்க அன்பும், நன்றியும்.