1. வீரன்
மலையாளத்தில் ஹிட்டடித்த டொவினோ தாமஸ்-குரு சோமசுந்தரம் படத்தை மறு உருவாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நல்ல திரைக்கதையால் நம்மைக் கட்டிப் போடுகிறது படம். ஹிப் ஹாப் ஆதி தன்னளவுக்கு இயன்றவரை முயன்றிருக்கிறார். வில்லனாக வினய் இன்னும் கூட கொடூரமாக இருந்திருக்கலாம். ஹிப் ஹாப்பின் இசை பல காட்சிகளை சற்று உயர்த்துகிறது. மொத்தத்தில் நம்மை கொட்டாவி விட வைக்கவில்லை படம்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
அதிரடியான சூப்பர் ஹீரோ படமில்லை. கிராமியப் பின்னணியில் சற்று நகைச்சுவை தூக்கலாக வித்தியாசப்படுகிறது இந்தப் படம். -ஹிந்துஸ்த்தான் டைம்ஸ்.
தமிழ் ஹிந்து சற்று காட்டமாகவே விமர்ச்சிக்கிறது. நல்ல திரில்லரை, சராசரிக்கும் குறைவான எழுத்து, பள்ளத்தில் தள்ளி விடுகிறது. போலவே சினிமா எக்ஸ்பிரஸும், மனிதன்-நாயகன்- சூப்பர் ஹீரோ எனும் வளையம் சரியாக இல்லை. வில்லனை கேலிச் சித்திரம் ஆக்கி விட்டார்கள். ஆதியைத் தாக்கிய மின்னல் லோ வோல்டேஜ் என்று கிண்டலடிக்கிறது ஃபிலிம் கம்பானியன்.
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
எதையும் புதுசாக படைக்கவில்லை படம். ஆர்யா தன்னால் முடிந்ததை செய்து காப்பாற்ற முயல்கிறார். இசையும் மோசமான திரைக்கதையும் அவருக்கு உதவ மறுத்ததால் மியாவ் என்று முடிகிறது கர்ஜனை சிங்கம். இயக்குனர் முத்தையா இனி பழைய சோற்றை மூட்டை கட்ட வேண்டியது தான். – டைம்ஸ் ஆஃ இந்தியா.
முத்தையாவின் வெற்றி ஃபார்முலா இதன் அலுப்பை குறைக்க முடியவில்லை-தி ஹிந்து. அதிக நெகிழ்வு காட்சிகள், குதுகலிக்க வேண்டிய கிராமியப் படத்தை குட்டையில் தள்ளி விடுகின்றன – சினிமா எக்ஸ்பிரஸ்.
ஏகத்துக்கு தட்டை..அதுவும் நமக்கு வலிக்கும் அளவிற்கு தட்டையோ தட்டை -இந்தியன் எக்ஸ்பிரஸ்.
போர்த்தொழில்
சரத்குமாரும் அசோக் செல்வனும் சேர்ந்து அற்புதமான திரில்லரை தோளில் சுமக்கிறார்கள். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா, ஒரு கடினமான கதையை லகுவாக இயக்கி இருக்கிறார். அனுபவமுள்ள உயர் அதிகாரி லோகநாதன், கத்துக்குட்டி பிரகாஷுக்கு ஒத்துழைப்பு நல்குவாரா? இதோடு தொடர் கொலைகளைச் செய்து வரும் குற்றவாளியை பிடிப்பாரா? இதை எந்த வித நெருடலும் இல்லாமல் எழுதி, அதை திரையில் அச்சு அசலாக காட்டியிருக்கிறார் இயக்குனர். அதிரடி சண்டைக் காட்சிகள் பக்கம் போகாமல், ஒரு மர்ம கதையை சற்றும் தொய்வில்லாமல் கொண்டு வந்திருக்கும் நேர்த்திக்கு எழுதிய இயக்குனரும் மற்றும் ஆல்ஃப்ரட் பிரகாஷும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இடைவேளைக்கு முன் கொலைகாரன் யார் என்று சொல்லும் தைரியம் இந்தப் படக்குழுவுக்கு இருக்கிறது. அதோடு கதையில் நிகிலா விமல் ஒரு அழகு பொம்மையில்லை என்பதும் சிறப்பு. சமீபத்தில் வந்த திரில்லர்களில் இது முதல் இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை. – தமிழ் ஹிந்து.
சரியான, கச்சிதமான எழுத்து இதை தவிர்க்க முடியாத படமாக ஆக்கிவிடுகிறது. கலைச்செல்வனின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் இசையும் படத்தை சற்று உயர்த்துகின்றன. அமரர் சரத்பாபுவின் பாத்திரம் ஒரு திருப்பம். படத்தில் அது ஒன்று தான் திருப்பம். வழக்கமான புலனாய்வு படங்களை விட்டு விலகி கவர்ந்திருக்கிறார் இயக்குனர். எழுபது விழுக்காடு மதிப்பெண்கள்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
படத்தின் வெற்றி, காதலோ, ஹீரோயிஸமோ இல்லாத புத்திசாலித்தனமான காட்சிகளும் திரைக்கதையும்! பாதிக்கப்பட்ட மனநிலையில் சிறு வயது முதலே ஆட்கொள்ளப்படும் வில்லன் பாத்திரம் சராசரி. அதை வேறு மாதிரி சிந்தித்திருந்தால் இன்னமும் கூட இறுக்கமாக இருந்திருக்கும். ஆனாலும் முதல் படத்திற்கு நல்ல அடையாளம் கிடைத்திருக்கிறது இயக்குனருக்கு. – இந்தியன் எக்ஸ்பிரஸ்.
சற்றும் தொய்வில்லாத திரைக்கதையோடு ஒரு திரில்லர் -இந்தியா டுடே.
2018 தி ரியல் கேரளா ஸ்டோரி
ஜூட் ஆண்டனி ஜோசப்பின் இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பிரச்சாரத் தொனி என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், சில உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறது படம். இளம் பெண்களை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றி, ஈராக்கின் தீவிரவாதப் படையில் சேர்க்கும் உண்மை அதிர வைக்கிறது. முக்கியமாக படத்தில் நடித்த அனைவரும் ஹீரோக்கள் தான்! இது ஆரோக்கியமான அம்சம் – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.
டொவினோ தாமஸ், குஞ்சாகோ போபன், வினித் ஸ்ரீனிவாசன் என தெரிந்த முகங்கள் இருந்தாலும், டொவினோ கொடுத்த பாத்திரத்தில் செமையாக ஸ்கோர் செய்கிறார். அபர்ணா பாலமுரளி எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் கைவிடப்படும் பாத்திரம் என்பது குறை. வெள்ளக் காட்சிகளை காண்பித்த விதத்தில் இது ஹை பட்ஜெட் படமோ என எண்ண வைக்கும் நேர்த்தி பாராட்டுக்குரியது.-இந்தியன் ஹெரால்ட்,
கவனமாக செதுக்கப்பட்ட படத்தில் பணியாற்றிய அத்துணைக் கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். சமின் சாக்கோவின் எடிட்டிங் இன்னொரு தொப்பி இறகு – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
150 கோடி வசூல். மோகன்லாலின் லூசிஃபரை தொட்டிருக்கிது இந்த எளிய பட்ஜெட் படம். இடர் காலத்தில் உதவும் ஒவ்வொரு நல்ல உள்ளமும் உத்தமர் தான் எனும் அடிநாதம் அழுத்தமாகப் பதியும் படம். – தமிழ் இந்து.
டக்கர்
அருமையான ஒன்றரை மணி நேர ஹாலிவுட் படம் போல இருக்க வேண்டியது, சுவையற்ற, மறக்க வேண்டிய, மோசமான காமெடி கேலிக்கூத்துகளுடன் நம்மை வீழ்த்துகிறது. அருமையான கலைஞர் சித்தார்த் வீணடிக்கப்பட்டிருக்கிறார் – தமிழ் இந்து.
கவனம் செலுத்த வேண்டிய கதை, தேவையற்ற சுழலில் சிக்கி சீரழிகிறது. தொடர்பில்லாத திரைக்கதையும் காட்சிகளும் இன்னும் புதை குழியில் தள்ளுகின்றன. பணம் குறித்த இருவரின் எதிரும் புதிருமான கண்ணோட்டத்தை மையமாக கொண்ட கதை, படிக்கும்போது சுவாரஸ்யம். பார்க்கும்போது பலத்த குறட்டை. அதோடு பயணம், ஸ்டண்ட் என்று ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை மாறும் காட்சிகள், ஒன்ற விடாமல் தடுக்கின்றன. நிவாஸ் பிரசன்னாவின் இசையில் நிரா நிரா பாடல் க்ளைமேக்ஸுக்கு முன்னால் ஒலித்து போக நினைத்தவர்களைக் கட்டிப் போடுகிறது. வீட்டிற்கு எடுத்துப் போக எந்த நினைவுகளும் இல்லாத படம். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
பல நாட்கள் டப்பாவுக்குள் தூங்கிய படம் தூசு தட்டியதில் பழசும் புதுசுமாக விழி அரிப்புகள். காரியக் கோமாளி வேடத்தில் சித்தார்த் அருமை. ஆனால் அது மட்டும் போதவில்லை இப்படத்தை தூக்கி நிறுத்த! – இந்தியா டுடே.
விமானம்
மாற்று திறனாளி வீரய்யாவும் அவரது மகனும் துருவனும் பிரதான பாத்திரங்கள். இருவரும் செமையாக நடித்தாலும், சில காட்சிகள் அழுத்தம். பல காட்சிகள் தேவையற்ற கண்ணீர் குளம். முப்பது வருடங்களுக்கு முன் வந்திருக்க வேண்டிய படம், அடுத்த என்ன எனும் எந்த எதிர்பார்ப்பும் எகிறாமல் கடந்து போகிறது. – தமிழ் இந்து.
படத்தை சமுத்திரக்கனி தோளில் சுமக்கிறார். ஒரே சமயத்தில் தெலுங்கு தமிழ் என்று வெளியிட்டதால், காட்சிகளின் களம் பழைய பேகம்பெட் விமான தளம் என்பது, தமிழுக்கு அந்நியமாகப் போய் விட்டது. இரண்டாம் பாதி கற்பனை வறட்சியில் மாட்டிக் கொள்கிறது. அடுக்கடுக்காக துன்பங்களைச் சுமத்தி நாயகனை மட்டுமில்லாமல் நம்மையும் வாட்டி விட்டார் இயக்குனர் சிவபிரசாத் யனாலா. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
மனதை நோகச் செய்கிறது விமானம். – இந்தியா டுடே. பாத்திரங்களின் கஷ்டங்களை சொல்லிக் கொண்டே போகும் படம் அதை ரசிகனுக்கு கடத்தத் தவறி விட்டது. – சினிமா எக்ஸ்பிரஸ்.
எறும்பு
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் நிறைய ஆச்சர்யங்களைத் தருகிறது.நல்ல நோக்கங்களைக் கொண்ட திரை ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். இயக்குனர் சுரேஷ், விளிம்பு நிலை மனிதர்களின் அன்றாட வாழ்வின் அல்லல்களை உணர்வு பூர்வமாகச் சொல்லி இருக்கிறார். குறைகள் இல்லாமலில்லை..ஆனால் நல்ல படத்திற்காக அதை புறம் தள்ள வேண்டியது அவசியமாகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
காட்டிய உலகின் போதா நிலையும், எதிர்பார்ப்பு சற்றும் இல்லாத திரைக்கதையும் இப்படத்தை சராசரி ஆக்குகிறது. – சினிமா எக்ஸ்பிரஸ்.
திரைக்கதையில் சறுக்கினாலும் இரண்டு சுட்டிகளின் நடிப்பு நம்மைக் கட்டிப் போடுகிறது. – ஆனந்தவிகடன்.
சார்லஸ் என்டர்பிரைஸஸ்
புதிய உத்திகளும் சுவாரஸ்யமான உப கதைகளும் இல்லாத இப்படம் ஈர்க்க மறுக்கிறது. நல்ல கதையைக் கைவிட்ட சோகம் ரசிகனைத் தாக்குகிறது, -டைம்ஸ் ஆஃப் இந்தியா.
எந்த வேடம் கொடுத்தாலும் அதற்கு நியாயம் செய்யும் ஊர்வசி போன்ற கலைஞரை வைத்துக் கொண்டு நல்ல படத்தை கொடுக்க தவறிவிட்டது படக்குழு. – இந்தியன் எக்ஸ்பிரஸ்.
பொம்மை
இயக்குனர் ராதா மோகன் தன்னுடை சவுகரியமான களத்தை விட்டு விலகி செய்த படம். துணிக்கடை வாசலில் நிற்கும் அழகு பொம்மையை உண்மை என்று நம்பிக் காதலிக்கும் நாயகன் எனும் மைய இழையில் இன்னும் கொஞ்சம் சவால்களைச் சேர்த்திருந்தால் இன்னுமொரு நல்ல படமாக மாறியிருக்கும். எஸ் ஜே சூர்யாவும் பிரியா பவானி சங்கரும் போட்ட உழைப்பு விழலாகி விட்டிருக்கிறது. காரணம் குழப்பமான திரைக்கதை. மீண்டும் ஒரு சைக்கோவாக எஸ் ஜே சூர்யா. இன்னுமொரு குரூர நம்ப முடியாத காட்சிகளுடன் சரியாக எழுதப்படாத ஒரு படம் பொம்மை- டைம்ஸ் ஆஃப் இந்தியா.
அற்புதமான நடிகர் எஸ். ஜே. சூர்யாவாலும் இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. வழக்கமான மெலோ டிராமா காதல் காட்சிகளைப் புகுத்தி பழைய படமாக்கி விட்டார் இயக்குனர் ராதா மோகன். – தமிழ் இந்து.
வீரியமான கதையை திட்டமிடாத திரைக்கதையால் பாழாக்கி விட்டனர். எங்கும் எதிலும் தெளிவில்லை என்பதும் ஒரு குறை. – இந்தியன் எக்ஸ்பிரஸ்.
தண்டட்டி
ஒரு முறை பார்க்கலாம் ரகம் என்றாலும் சீனியர் நடிகர் பசுபதி தன் பங்களிப்பால் படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். ஒரு அடையாளமற்ற கிராமக் காவலராக அவர் வாழ்ந்திருக்கிறார். இசை சில சமயம் ரிபீட் ஆகி சோதனை செய்கிறது – இந்தியா ஹெரால்ட்.
புதுமையாக யோசித்திருக்கிறார்கள் தான்..ஆனால் சற்று அதிகமாக ஆசைப்பட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. இயக்குனர் ராம் சங்கையாவுக்கு இது முதல் படம். தான் வரைந்த திரைச்சித்திரம் புரியாமல் போய் விடுமோ எனும் அச்சத்தில் சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் களத்தை, மாந்தரகளை விவரிக்க.. படத்தில் நெகிழ்வு பூரணம் நம்மை குறைகளைப் புறம் தள்ள வைத்து விடுகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா!
அஸ்வின்ஸ்
மன ரீதியாக நம்மை பயமுறுத்த நினைத்த படம், சில இடங்களில் மட்டுமே ஜிலீர்! காட்டப்பட்ட உத்திகள் ஒன்றையொன்று சார்ந்தோ இணைந்தோ இருக்கவில்லை என்பது தான் இந்தப் படத்தின் குறை. ஹாரரில் இருந்து உளவியல் ரீதியான மடை மாற்றுக்கு, பின் பாதி உண்டாவது படத்திற்கு சாதகமும் பாதகமும். வசந்த் ரவி நல்ல நடிப்பை நல்கி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் கதை நாயகியாக அறிமுகம். மொத்தத்தில் ஒவ்வொரு துண்டும் முகம் காட்டும் உடைந்த நிலைக்கண்ணாடி! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
வசந்த் ரவியின் அபரிமிதமான நடிப்பு இருந்தும் படம் சில இடங்களில் ஈர்ப்பு. சில இடங்களில் அலுப்பு – இண்டியா ஹெரால்ட்.
அழகிய கண்ணே
முன் தீர்மானம் எடுத்த அரத பழசு காட்சிகள்; எதற்கும் ரசிகனை உசுப்பி விடாத உத்திகள் என்று பயணிக்கும் படம், வழியில் நின்று போகும் பேருந்து! காப்பாற்றுவது ரம்மியமான இசை; கண்ணுக்கு குளிச்சியான ஒளிப்பதிவு; இதர தொழில் நுட்ப பிரிவுகள். உடைந்த சிலையை உயர்ந்த பீடத்தில் வைத்தாலும் அது சிதிலம் தானே! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஒரு சறுக்கல் படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். சஞ்சிதா ஷெட்டியும் விஜய் சேதுபதியும் கூட காப்பாற்ற முடியாத மோசமான எழுத்து!– ஃபிலிம் பீட்!
ரெஜினா
இன்னும் அழுத்தமான திரைக்கதை அமைத்திருந்தால் ரெஜினா இன்னமும் மேம்பட்ட திரில்லராக இருந்திருக்கும். போலவே சுனைனா அசத்தாலான நடிப்பைத் தந்தும் படம் சறுக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சி நம்முடைய வினாக்களுக்கு பதில் தருகிறது. கொலைக் குற்றத்தின் புதியதொரு கோணத்தைத் தந்த வகையில் இது புதுசு. சதீஷ் நாயரின் இசையும் பின்னணி ஒலிகளும் அருமை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
காதலனைக் கொன்றவர்களைத் தேடிப் பிடித்து நாயகி பழி வாங்கும் வழக்கமான கதை. கடைசிக் காட்சிக்கும் முன்பாக அத்தனை திருப்பங்களுக்கும் விடை தருகிறார்கள். அதை முன்னமே கோடி காட்டியிருந்தால் இன்னும் படம் ஈர்த்திருக்கும் – தினமலர்.
தலைநகரம் 2
ரவுடி தாதா கதை, சரியான திட்டமிடாதலால் ஈர்க்க மறுக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர் டான் அசோக் தெறிக்க விட்டிருக்கிறார். இறுக்கமான முகத்துடன் சுந்தர்.சி பாத்திரத்தில் பொருந்திப் போகிறார். மாஸ் ஹீரோவுக்கான பில்ட் அப்பில் கோட்டை விட்டிருக்கிறார். தலைநகரம் 1ல் வடிவேலு காமெடி பெரிய பலம். இந்தப் படத்தின் காமெடிதான் இதன் பலவீனம். மொத்தத்தில் கொஞ்சம் கதையையும்,நிறைய சண்டையையும் கொடுத்து நம்முடைய நேரத்தை வீணடித்திருக்கிறார் இயக்குனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்.
பாயும் ஒளி நீ எனக்கு
தனது நண்பருடன் இணைந்து ஸ்டார்அப் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார் அரவிந்த் (விக்ரம் பிரபு). சிறு வயதில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக அவரால் குறைந்த ஒளியில் பார்க்க முடியாது. இப்படியான பிரச்சினையை எதிர்கொண்டு வரும் அவர், ஒரு நாள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் ஒருவரை ரவுடிகளிடமிருந்து மீட்கிறார். அதன் எதிரொலியாக அவரை பழிவாங்க ஒரு கூட்டம் திட்டம் தீட்ட, மறுபுறம் அவரது சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். தன்னைச் சுற்றி நடப்பது புரியாமல் தவிக்கும் அரவிந்த், ஒரு கட்டத்துக்குப் பின் குற்றவாளிகளை நெருங்கி தனது இழப்புக்கு எப்படி பழிதீர்க்கிறார் என்பது திரைக்கதை.
தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மொத்தப் படத்தையும் ஒரே ஆளாக இழுத்து செல்கிறார் விக்ரம் பிரபு. இசையமைப்பாளர் மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகரின் பின்னணி இசை காட்சிகளில் கூட்ட முடியாத விறுவிறுப்பை இசையில் கூட்ட உதவியிருக்கிறது. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு இருளையும் ஒளியையும் பிரித்து காட்டும் இடங்களில் கவனம் பெறுகிறது. பாயும் ஒளி’ தேவையான பாய்ச்சலில்லாமல் பின்தங்கியிருக்கிறது. – தமிழ் ஹிந்து.
விக்ரம் பிரபுவும் வாணி போஜனும் நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார்கள். குறை ஒளியில் பார்வை தெரியாத நாயகன் பாத்திரம் என்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. சரியான திரைக்கதை இல்லாததால் அடுத்த முப்பது நிமிடங்களில் ஒளி அணைந்து விடுகிறது. – டைம்ஸ் ஆஃப் ;இந்தியா.
மாமன்னன்
சூப்பரான முதல் பாதி; சுமாரான இரண்டாம் பாதி! வடிவேலுவும் ஃபகத் ஃபாஸிலும் கலந்து கட்டி அடிக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சோடை போகவில்லை. கீர்த்தி சுரேஷின் பாத்திரம் இல்லாமலே இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கலாம். அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. இசைப்புயல் ரகுமானைப் பொறுத்த வரையில் பாடல்களும் இனிமை. பின்னணி இசையும் செழுமை. இது மாரி செல்வராஜ் எனும் இயக்குனரின் ரசிகர்களுக்குப் பிடித்த படம். பொது ரசிகனை ஈர்க்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தால் நாம் நினைக்கும் மாற்றங்களைக் கொண்டு வந்து விட முடியும் என்பதை சொல்ல வருகிறது இந்தப் படம். சராசரியான படம், செழுமையும் அழுத்தமும் குறைவாக இருப்பதாகத் தோன்ற வைக்கிறது. வரம்பு மீறிப் போகும் அரசியல் சதுரங்கத்தில் தார்மீகம் மட்டுமே வெல்லும் என்று நினைக்கும் வடிவேலு. வெற்றி அனைத்து தவறுகளையும் மறைத்து விடும் என்று நம்பும் ஃபாகத் ஃபாஸில் என்று இரண்டாம் பாதி பயணித்ததில், முதல் பாதியின் கனம் குறைந்து போய் படம் தக்கையாகி விடுகிறது. மூன்றாவது படத்திலேயே வர்த்தக கண்ணோட்டத்தில் மூழ்கிய மாரி செல்வராஜைப் பார்த்து வருத்தப்பட வைத்து விட்டது இந்தப் படம். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
நல்ல நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம், சில தவறான அணுகுமுறையால் கவிந்து விடுகிறது. மாரி செல்வராஜ் எடுத்த படங்களிலேயே இதுதான் பலவீனமான கதையம்சம் கொண்டதாக இருக்கிறது. வில்லனுக்கு நாய்கள்; நாயகனுக்கு பன்றிகள் எனும் தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீட்டை தவறாமல் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். அது தவறாக மாறி விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கீர்த்தி சுரேஷின் பாத்திரம் அவர் படம் நெடுக போட்டுக் கொண்டு வரும் சேகுவரா பனியனைப் போல இருக்கிறது. மொத்தத்தில் இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரப் படமாகத்தான் இருக்கிறது.- இண்டியன் எக்ஸ்பிரஸ்.
ஜுவாலையாக எழுதப்பட்ட கதை, காற்றில் அலையும் சாம்பல் துணுக்குகளாக மாறி இருக்கிறது. அயோக்கியனுக்கு எதிராக கோழையாக இருக்காதே என்பது தான் ஒன் லைன். அதற்கு தகுந்தாற்போல் உதயநிதி தற்காப்பு கலையைச் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக வருவது நிச்சயம் கிளிஷே தான்! பலம் அடிவீரனிடம்; புத்தி லீலாவிடம் என்று சொல்லப் பட்டாலும், கீர்த்தி சுரேஷ் இன்னும் கூட புத்திசாலியாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. படம் முடியும்போது ஒரு இலக்கில்லாத பயணம் போன உணர்வு தான் ரசிகனுக்கு வருகிறது. – சினிமா எக்ஸ்பிரஸ்.
அருமையான முதல் பாதியும் அசத்தலான நடிப்பும் பாதாளத்தில் விழ வேண்டிய படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. பின்பாதியில் சறுக்கினாலும் சொல்ல வந்த கருத்தை ஓங்கி உரக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். இதுவரை பார்த்திராத வடிவேலுவின் நடிப்பும், அதற்கு உரம் சேர்க்கக் கூடிய ரகுமானின் இசையும் இந்தப் படத்தின் முத்திரைகள். – ஃபிலிம் கம்பானியன்.

Thankyou kuvikam
LikeLike