“அம்மா! நீ பாட்டியாகப் போற…….”
தன் அம்மாவின் முகத்தில் கண்ட ஆனந்தத்தைப் பார்த்து ரேணுகா வெட்கம் கலந்த மகிழ்ச்சி கொண்டாள். 24 வயதில் தனக்குள் இன்னொரு உயிர் துடிப்பதை உணர்கையில் பிரமிப்பு ஏற்பட்டது. ஐந்தாம் மாதம் நெருங்கியது. இரு வீட்டாரும் சீமந்தத்திற்கு நாள் குறித்து சத்திரம் முடிவு செய்த நிலையில், ஒரு நாள் நள்ளிரவு கொஞ்சம் அசௌகர்யமாக உணர்ந்தாள். வயிற்றுக்குள் சுருக் சுருக்கென்று முறுக்கிப் பிழியும் வலி. தூங்க ஆரம்பித்தவள் வலியின் தீவிரம் தாங்காமல் எழுந்து உட்கார்ந்தாள். மணியைப் பார்த்தாள். நள்ளிரவு 12 மணி. ரேணுகா தூங்கவில்லை என்பதை கவனித்த ரமேஷ் எழுந்து விளக்கைப் போட்டான். அவள் முக பாவத்திலிருந்தே அவள் படும் அவஸ்தையை உணர்ந்த ரமேஷ்,
“என்ன? என்னாச்சு ரேணு….” என்றான்” அவள் பேச முடியாமல் வயிற்றை முறுக்கும் வலியில் நெளிய…
“பயப்படாதே! ஒண்ணுமிருக்காது! இருந்தாலும் வா! என்னன்னு டாக்டர் கிட்டவே கேட்டுடலாம்!” என்று அவள் பதிலுக்குக்குக் காத்திராமல் காரை எடுக்கக் கீழே விரைந்தான்.
இவர்களிடம் விஷயத்தைக் கேட்டறிந்த தலைமைச் செவிலியர் முதலில் டாக்டருக்கு ஃபோன் செய்து செய்தியை சொன்னாள். பிறகு டாக்டர் வந்து கொண்டே இருக்கிறார் என்ற தகவலை இவர்களுக்குச் சொல்லி விட்டு, ஆஸ்பத்திரியில் தலைமைச் செவிலியர் அவளை பரிசோதிக்கப் படுக்க வைத்தாள்.
அந்த நேரத்தில் ரேணுகாவிற்கு இருந்த ஒரே சிந்தனை. ‘இந்த பொறுக்க முடியாத வலி, வேதனை எப்போ முடிவுக்கு வரும்’என்பது தான். பாவம்! அவளே சின்னப் பெண்! இந்த சிசு உயிருடன் பிறக்க வேண்டுமே என்ற எண்ணமே அவள் மனதில் தோன்றவில்லை. எப்போது இந்த வேதனையிலிருந்து விடுபடுவோம் என்ற எண்ணம் மட்டுமே மனதில் வலுவாக இருந்தது. என்ன நடக்கிறது என்று புரியாமல் வலியால் துடித்துக் கதறிக் கொண்டிருந்த ரேணுகாவின் கண் முன்னே அந்த சிசு அவசரமாக இந்த பூமியைக் காண வெளியே வந்தது. ஐந்து மாதக் குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பதெல்லாம் பிறகுதான் அவள் அறிந்து கொண்டாள். கருச் சிதைந்து விட்டது என்று தெரிந்ததும் தான் ரேணுகாவிற்கு தன் இழப்புப் புரிந்தது. ‘ஐயையோ! என் குழந்தை, அஞ்சு மாசம் என் வயத்துக்குள்ள வளர்ந்த குழந்தை போயிடுத்தா?’ மனதளவில் இந்த இழப்பினால் ரேணுகா மிகவும் பாதிக்கப்பட்டாள். ஆசை ஆசையாக எதிர்பார்த்த முதல் குழந்தையாயிற்றே? ரமேஷ் தன் வருத்தத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவளுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான்.
இந்த நேரத்தில் அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வந்தது. அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு வெளிநாட்டு ப்ரொஜெக்ட் வந்தது. அவள் முதலில் அதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல் பிடிவாதமாக, “போக மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ரமேஷ் தான் அவளிடம் இதமாகப் பேசி அவளை அந்த மூன்று மாத ப்ரொஜெக்ட்டுக்கு வெளிநாடு சென்று வரச் சொன்னான். கடைசியில் அவளும் ஒத்துக் கொண்டு சென்றாள். உண்மையிலேயே அந்த வெளிநாட்டு அனுபவம் அவளுக்கு நல்ல உற்சாகத்தையும் மன மாறுதலையும் கொடுத்தது. உடலும் மனமும் தேற ஆரம்பித்தது.
இரண்டு வருடங்கள் ஓடின. மறுபடியும் அவள் கருத்தரித்தாள். அவள் கணவனும் புகுந்த வீட்டினரும் அவளை உள்ளங்கையில் வைத்து கவனித்துக் கொண்டனர். ஐந்தாவது மாதம், நள்ளிரவு, அதே போல வயிற்றை முறுக்கியெடுக்கும் வலி. என்னவோ கால்களுக்கிடையில் திரவமாகக் கசிவது போல வேறு ஒரு உணர்வு. ரேணுகாவுக்கு வலி மிகுதியில் பேச்சே வரவில்லை. ஒன்றும் புரியாமல் ஆனால் மிகுந்த பயத்தோடு அதே போல் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தனர். அந்த நேரத்துக்கு மருத்துவர் எவரும் ஆஸ்பத்திரியில் இல்லை.
பரிசோதிப்பதற்காக ஆஸ்பத்திரியில் படுக்க வைத்த உடனேயே தலைமைச் செவிலியர், “சாரிம்மா! கரு கலைந்து விட்டது. இனிமேல் ஒன்றும் செய்ய இயலாது!” என்று கை விரித்து விட்டாள்.
ரேணுகா இந்த முறை வலி வேதனையை பொருட்படுத்தவில்லை. வலியை மீறி தன் சக்தியையெல்லாம் திரட்டிக் கூச்சலிட்டாள். “எப்படியாவது என் குழந்தையை காப்பாத்துங்க!” என்று கதறினாள். துடித்தாள்.
இந்த இரண்டாவது கருச்சிதைவிற்கு பிறகு அவள் மனதளவில் மிகவும் உடைந்து போனாள். அவள் அம்மாவிற்கு பெண்ணைத் தேற்றுவது பெரும் சவாலாக இருந்தது.
ஒரு வருடம் ஓடியது. ஒரு நாள் ரேணுகாவின் தந்தை தன் மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு திடீரென்று திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் சென்று தன் முடியைக் காணிக்கையாகக் கொடுத்து மனமுருக தன் பெண்ணிற்கு ஒரு குழந்தை உருப்படியாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வந்தார்.
அடுத்த மாதமே ரேணுகாவிடமிருந்து நற்செய்தி. இந்த முறை அவள் அம்மா அவளைப் பூப்போல பாதுகாக்க எண்ணி அவளைத் தன் வீட்டிற்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். இதற்குள் இரண்டு கருச்சிதைவு ஆகி விட்டது என்பதால் அவளை மேலும் பல பரிசோதனைகளுக்கு உள்ளாக்கினார்கள். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் கருவின் கனம் தாங்க முடியாமல் ஐந்து மாதம் ஆனதும் கரு தன்னாலேயே நழுவி வெளி வரும் சாத்தியம் இருப்பதைக் கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து ‘செர்கிளேஜ்’ என்று கூறப்படும் முறையில் கர்ப்பப்பையின் வாயைத் தைத்து விட்டார்கள் ஐந்தாவது மாதத்தில்.
ஆயிற்று! ஐந்தாவது மாதம் தொடங்கியது. என்னதான் கர்ப்பப்பை வாய் தைக்கப்பட்டிருந்தாலும் முந்தைய அனுபவங்களினால் எல்லோருக்கும் பயமும் பரபரப்பும் ஏற்பட்டது. இரவு வந்தாலே பதற்றமாகிவிடும். அவளுக்காக வேண்டாதவர்களே கிடையாது. எத்தனையெத்தனை பிரார்த்தனைகள்! வேண்டுதல்கள்! உலகத்தின் எல்லா கோடிகளிலிருந்தும் நண்பர்கள், உறவினர்கள் அவளுக்காக நல்ல அதிர்வுகளை அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். ஒருவழியாக எட்டரை மாதம் முடிந்தது. இதற்கு நடுவில் சின்ன அளவில் ஒரு வளைகாப்பு சீமந்தமும் பண்ணியாகி விட்டது.
ஒரு நாள் நள்ளிரவில் திடீரென்று பனிக்குடம் உடைந்து படுக்கையறையிலிருந்து ஹால் வரை நீர் வழிந்தோடியது. வீட்டில் அனைவருக்கும் பயத்தில் சப்த நாடியும் ஒடுங்கியது. ‘என்ன நேருமோ கடவுளே!’ ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே பயமாக இருந்தது. எல்லோர் உதடுகளிலும் ஏதேதோ ஸ்லோகம், பிரார்த்தனை. மருத்துவமனைக்கு விரைந்தனர்.
ஆனால் இந்த முறை ரேணுகா மிக்க தைரியத்துடன் இருந்தாள். சிறு துளி கூட பயமோ கலக்கமோ இல்லை. மூன்றாவது முறை பிரசவ வலியில் துடித்த போதிலும் இந்த முறை அது ஒரு நல்ல விதத்தில் முடியும் என்னும் துணிவு அவளுக்கு நிறையவே இருந்தது.
ஐந்து மணி நேர வலிக்குப் பின் ஒரு அழகிய தேவதை சுகப்பிரசவத்தில் வெளிப்பட்டதைக் கண்டு எல்லோரும் மெய்சிலிர்த்து இறைவனை நினைத்து நன்றியுடன் கை கூப்பினர்.
இது தான் முதல் குழந்தை என்றாலும் முதல் இரண்டு சிசுக்கள் தந்த நினைவு, வலி அவளை மனதை விட்டு நீங்காமல் தான் இருந்தது.
தான் கருவுற்ற காலத்தில் இருந்த குழப்பம், பயம் முதலியவற்றைக் கண்டு அஞ்சி இன்னொரு குழந்தையை பற்றி யோசிக்கவே ஏழு வருடங்கள் ஆயின. தன் பெண்ணின் ஏழாவது பிறந்த நாளில் அவளிடம் “உனக்குக் கூடிய விரைவில் ஒரு தம்பியோ, தங்கையோ வரப் போகிறது” என்ற செய்தியை சொன்னாள். அந்த சின்ன தேவதை அளவில்லா மகிழ்ச்சியில் தத்தளித்தது.
மீண்டும் கருவுற்ற பின் ரேணுகாவை பதற வைக்கும் அதே ஐந்தாம் மாதம்! டாக்டர் இந்த முறையும் ‘செர்கிளேஜ்’ செய்து கருவைக் காப்பாற்ற வேண்டியிருக்கும் என்று சொல்ல அதற்கு முன் ஒரு ஸ்கேன் எடுத்தார்கள். ஸ்கேன் பரிசோதனையில் மருத்துவர் அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் மிகுந்த குறைபாடுள்ளது, ஒரு வேளை பிறந்தாலும் எத்தனை நாட்கள் உயிரோடு இருக்கும் என்று சொல்ல முடியாது, என்று சொல்லி இந்தக் கருவை வளர விடுவது உசிதமல்ல. கலைப்பதே சரி என்று சொல்லிவிட்டார்கள். ரேணுகா உடைந்து எரிமலை போல் பீறிட்டு அழத் தொடங்கினாள். ரமேஷ் டாக்டரிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தான். குழந்தை பிறந்த பின் அதற்குள்ள குறைபாட்டை ஏதாவது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியுமா என்று கேட்டு. டாக்டரின் ஒரே பதில். “வாய்ப்பேயில்லை!” என்பது தான். அது மட்டுமல்ல.
“இதெல்லாம் இப்போ ஒரு வரப்பிரசாதம் சார்! பிறந்த பின் வளர்க்க முடியாது அளவுக்கு வளர்ச்சிக் குறைவான குழந்தை என்று முன்னதாகவே தெரிவதால், என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடலாமே?” என்று நாசுக்காகக் கூறினார்கள்.
முதல் இரண்டு இழப்பின் போது அது ஒரு விபத்தாக இருந்தது. இம்முறை இன்னும் ஒரு வாரத்தில் தனக்குள் இருக்கும் உயிரைப் பிரியப் போகிறோம் என்ற எண்ணம் ரேணுகாவை மிகவும் ஆட்டிப் படைத்தது. அந்த ஒரு வாரம் அவள் நரக வேதனையை அனுபவித்தாள். “நீ என் குழந்தையா என் மடியில தவழற பாக்கியம் எனக்கில்லையா? நான் அப்படி என்ன பாவம் பண்ணினேன்?’ வயிற்றிலிருக்கும் சிசுவோடு பேசினாள். மனமுடைந்து அழுது கொண்டே இருந்தாள்.
இந்த முறை கருக்கலைப்பு முடிந்து ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததும் ரேணுகா “பெற்றால் தான் பிள்ளையா? பாதியில் இழக்க நேரும் சிசுக்களும் என் பிள்ளைகள் தானே?” என்று ரமேஷைப் பிடித்து உலுக்கினாள். அதையே சொல்லிச் சொல்லி அரற்றியபடி அழுதுக் கொண்டேயிருந்தாள். அவள் சொல்வது உண்மைதான் என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தாலும் ரமேஷ் அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். நடப்பதெல்லாம் ஒன்றும் புரியாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய பெண் ப்ரீதி அம்மாவைப் பார்த்துக் கேட்டாள், “அம்மா! தம்பிப் பாப்பா எப்போ வரும்?” என்று.
ரேணுகா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போக ரமேஷ் தான், “பாப்பா சாமி கிட்டே போயிடுத்து கண்ணு! ” என்றான்.
குழந்தை உடனே, “ஓஹோ! வேற யாரோ பாப்பா வேணும்னு கேட்டிருப்பாங்க. அதுக்காக சாமி எடுத்துக் கிட்டாரா அம்மா? நீ தானேம்மா சொன்னே? நிறைய பேரு வீட்டில ஒரு பாப்பா கூட இல்லேன்னு?” என்றாள் கண்கள் அகல.
‘உனக்கு நான் இருக்கேனே அம்மா!’ என்று சொல்வது போல தன் கழுத்தை வந்து கட்டிக் கொண்ட ப்ரீதியைப் பார்த்து ரேணுகா விசும்பி விசும்பி அழ ஆரம்பிக்க குழந்தை இன்னும் இறுக அம்மாவை அணைத்துக் கொண்டாள். ரேணுகா அந்த சின்ன தேவதையை தன்னோடு இருக்கிக்கொண்டு முத்தமழை பொழிந்து தன் கண்ணீரை அவள் மேல் தேய்த்து துக்கத்தைக் கரைக்க முயன்றாள்.

Very nice ….. And is relatable
LikeLike
Congratulations for your first story. Very well written expressing the emotions of a young mother. Keep going.
LikeLike
I can relate to my friend’s real stroy. Very realistic written. Congratulations Saran. Keep rocking.
LikeLike