தாழ்மையில் ஒரு பாடம்!
காலங்கள்தோறும் நாம் இசைவல்லுனர்களைப் பற்றியும், அவர்கள் செருக்குடனோ, தாழ்மையுடனோ நடந்து கொள்வது பற்றியும் பலரும் கூறக் கேட்டறிந்துள்ளோம். இங்கு இரு நிகழ்வுகளை என் பங்காக நானும் பதிவு செய்கிறேன்.
~~~~~~~~~~~
1982ம் ஆண்டு; பெர்லின் நகரில் வழக்கம்போல் குளிர் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. ஜூன் மாதம் நாங்கள் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டும். நான் ஆராய்ச்சி செய்துவந்த இன்ஸ்டியூட்டில் என் சக ஆராய்ச்சியாளனுடன் – அவன் பெயர் லியோ (Leo) – மேற்கத்திய, இந்திய சாஸ்திரீய இசை பற்றி அடிக்கடி கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்வது வழக்கம். எனக்கு ஆபராக்கள் (Opera) (மேற்கத்திய முறை இசை நாடகங்கள்) மிகவும் பிடிக்கும், முடிந்தபோதெல்லாம் சென்று கண்டு மகிழ்வேன் என அவனிடம் கூறியிருந்தேன். “நீ கரயான் (Karajan) நடத்தும் ஒரு ஸிம்ஃபனி (Symphony) இசை நிகழ்வையாவது கண்டு கேட்டு ரசிக்காமல் பெர்லினை விட்டுக் கிளம்பிவிடாதே,” என்றவன், அவருடைய ஒரு இசை நிகழ்ச்சியை நான் கேட்க, டிக்கட்டுக்காக அலையாக அலைந்தான். அவருடைய நிகழ்வுகள் அனைத்துமே ஹவுஸ்ஃபுல்!!
அது சரி! யார் இந்தக் கரயான்? ஹெர்பெர்ட் ஃபான் கரயான் (Herbert von Karajan) எனும் ஜெர்மானியர்; இசையை நடத்தும் நடத்துனர் (Conductor); அங்கெல்லாம் பீதோவன் (Beethovan), பாஃக் (Bach), மொஸார்ட் (Mozart), இன்னும் பல புகழ்வாய்ந்த கலைஞர்கள் வடிவமைத்த இசையை – ஸிம்ஃபனி இசையை அதற்கென பயிற்சிபெற்ற நடத்துனரே நடத்துவார். அவர் தலைமையில் வயலின், புல்லாங்குழல், வியோலா, சில சமயம் பியானோ, பலவிதமான ட்ரம்கள், கிளாரினெட், ஹார்ன் (Horn) எனும் பல இசைக்கருவிகள் ஒருமைப்பட்டு ஒரு ஒழுங்கிற்குட்பட்டு இசைக்கப்படும். அதனால் ஒரு நடத்துனர் நடத்தும் இசைக்குழு மிக உயர்வானதென மக்களால் மதிப்பிடப்படும். அவ்விதத்தில் கரயானின் மதிப்பு மிகமிக உயர்வானது. பெர்லின் ஃபில்ஹார்மொனிகர், (Berlin Philharmoniker) வியன்னா ஃபில்ஹார்மொனிகர் (Vienna Philharmoniker) ஆகியன அவருடைய தலைமையில்தான் இயங்கின. மிகமிக உயர்வாகக் கொண்டாடப்பட்ட இசை நடத்துனர் அவர். இப்போது இது போதும்!
“ஹாய்! இதோ பார்! ரொம்பவே சிரமப்பட்டு ஒரே ஒரு டிக்கட் தான் கிடைத்தது. உன் கணவர் உன்கூட வர முடியாது. நானும் உங்ககூட வரணும் என்று நினைத்தேன். அதுவும் முடியாது. சரி, நீ தனியாகத்தான் போய் கேட்கணும்,” என்றபடி ஒரேயொரு டிக்கட்டை என்னிடம் நீட்டினான் லியோ! கான்சர்ட் ஹாலில் எங்கேயோ ஒரு மூலையில் அமர்ந்து கேட்க 25 ஜெர்மானிய மார்க்குகள் (German Marks) எனக் குறைந்த விலையேயான ஒரேயொரு டிக்கட்! எங்கள் இருவருக்கும் அதுவே மிகப்பெரிய பொக்கிஷம்!!
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்தரை மணிக்கு அந்த இசை நிகழ்ச்சி. அவசர அவசரமாகக் காலையுணவை முடித்துக்கொண்டு, மதிய உணவையும் கணவருக்கும் குழந்தைக்கும் தயார்செய்து வைத்துவிட்டுக் கிளம்பினேன். பஸ்ஸைப் பிடிக்கப் போகும்போது அவசரமாக நடந்ததில், உறைந்துவிட்ட பனியில் வழுக்கி விழுந்து கால்முட்டியையும் சிராய்த்துக் கொண்டேன். கான்சர்ட் ஹாலை அடைந்து எனது சீட்டைக் கண்டுபிடித்து அமரவும், அடுத்த நிமிஷம் இசை நிகழ்ச்சி தொடங்கவும் சரியாக இருந்தது.
முதலில் ஒரு சிறிய இசைவடிவம். உற்சாகம் என்னைத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. அந்தப் பெரிய ஹால் கொள்ளாத கூட்டம். நடுவில் உள்ள ஏறும் படிக்கட்டுகளில் எல்லாம் நெருக்கியடித்துக் கொண்டமர்ந்து இசை கேட்கும் இளைஞர் – முதியவர் கூட்டம்.
ஹா! இது என்ன? நான் மிகவும் விரும்பும் மொஸார்ட்டின், எனக்கு மிகவும் பிடித்த ஸிம்ஃபனி! எண் 29. (மொஸார்ட் நூற்றுக்கணக்கான ஸிம்ஃபனிகளை இயற்றியதால் இவை எண்கள் மூலம் குறிப்பிடப்படும்). கண்களில் ‘குபுக்’கெனப் பொங்கிய ஆனந்த வெள்ளம். யாரும் காணாமல் டிஷ்யூவால் துடைத்துக் கொண்டேன். உடலெல்லாம் சிலிர்த்தது. ஸிம்ஃபனிகள் பெரும்பாலும் 4 பகுதிகளைக் (movements) கொண்டவை. முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும் இடையே 15 அல்லது 20 நொடிகள்தான் அமைதி இருக்கும். முதல்பகுதி முடிந்தது. நீண்ட நேரமாகியும் அடுத்த பகுதி ஆரம்பிக்கப் படவில்லை. இப்போது பார்வையாளர்களிடையே லேசானதொரு அமைதியின்மை! ஒரு நீண்ட நிமிடம், 60 நொடிகள் ஆகியும் அடுத்த பகுதியை ஆரம்பிக்காமல் கரயான் அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் எதற்காகவோ நின்றபடிக்கு இருந்தார்…… என்னவாயிற்று?
இதுதான் விஷயம்! ஒரு இளம் இணையர் அமர இடம் தேடி அவசர அவசரமாக அங்கும் இங்கும் விரைந்து கொண்டிருந்தனர். அந்த 20 நொடி இடைவேளையில் இடம் பிடித்துவிடும் துடிப்பு அவர்களிடம். அது மிக நீண்டுவிட்டதென அவர்கள் உணரவில்லை போலும்! தாங்கள் அமர்வதற்காக இசை நிறுத்தப்பட்டிருந்தது எனவும் அறியவில்லை அவர்கள். அனைத்து ரசிகர்களும் இவர்களின் பொறுப்பற்ற இச்செய்கையினால் அமைதியிழந்து தவிப்பது நன்றாகத் தெரிந்தது. அத்தனை பெரிய பிரபலமான இசை நடத்துனரைக் காக்க வைக்கலாமா? அவமரியாதை செய்யலாமா?
கரயான் அவர்களோ புன்னகையுடன் இவர்கள் இருவரும் ஓரிடம் கண்டுபிடித்து அமரக் காத்திருந்தார். அமர்ந்ததும் இசை இனிமையாகத் தொடர்ந்தது. இசையுடன் இயைந்த என் உள்ளம் இப்போது இவருடைய பெருந்தன்மையான உள்ளத்தைக் கண்டு பரவசத்தின் எல்லைக்கே சென்றுவிட்டது. எத்தகைய மாமனிதர் இவர்! இவருடைய இசை நிகழ்ச்சியுடன் இந்த மனிதாபிமானம் மிக்க செயலைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்துருகியது.
இதுவும் வாழ்க்கை எனும் ஓடம் வழங்கியதோர் பாடம்….. தாழ்மை!
ஒருவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தலைக்கனம் கொண்டு அலையாமல், மற்றவர்களை இகழாமல் இருப்பதே அவருடைய பெரும்புகழை நிலைக்க வைக்கும் என அறிந்து கொண்டேன்.
இது எனக்கு மறக்க முடியாத ஒரு இசை நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது!
இவர் நடத்திய வேறு ஒரு இசை நிகழ்ச்சியின் காணொளியை இணைத்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் வியன்னா ஃபில்ஹார்மோனிக்கின் புத்தாண்டின் முதல் கான்சர்ட் (New Year concert) கரயானின் நடத்துதலில் தான் ஆரம்பிக்கும். கட்டாயம் கண்டு களியுங்கள் – ஒரு கலைஞன் தன் ரசிகர்களுடன் உள்ளம் திறந்து உறவாடும் காட்சிகள், அவர்கள் தன்னைக் கொண்டாடும் போது அவர் அடையும் பெருமகிழ்ச்சி, அவருடைய அன்பு, நகைச்சுவை அனைத்தும் கலந்ததொரு காணொளி. பார்த்தாலே சிலிர்க்கும்.
(கரயான் அவர்களின் முகபாவம் கௌரவம் சிவாஜிகணேசனை நினைவுறுத்துகிறது – சுந்தரராஜன் )
ஒவ்வொரு கலைஞனும் செல்லும் உயரத்தைத் தீர்மானிப்பவர்கள் ரசிகர்களே! இதைப் புரிந்துகொண்டு அவர்கள்பால் தானும் அன்பும், மதிப்பும், மரியாதையும் கொண்டு களிக்கும் இசை வல்லுனர்கள் பலர். வேறுமாதிரியாக இருப்போரும் உண்டு எனப் பின்னொரு நாளில் அறிந்தும் கொண்டேன்.
நம்மூரில் ஒரு கச்சேரி. ரசிகர்களிடையே மிகப் பிரபலமான வித்வான். அருமையாகப் பாடிக்கொண்டிருந்தார். ரசிகர்கள் எல்லாரும் சங்கீத சாகரத்தில் மூழ்கி ஆனந்த அலைகளில் நீந்திக் கொண்டிருந்த தருணம். பின் வரிசைகளினின்றும் ஒரு வயதான அம்மையார் மெல்ல எழுந்து தட்டுத் தடுமாறி முன்னே வந்து கொண்டிருந்தார். ஒதுங்குமிடம் நோக்கி வழிதேடிச் சென்று கொண்டிருந்தார். முன்பக்கமாகவே வரவேண்டியிருந்தது. வித்வானுக்கு வந்ததே கோபம், பார்க்க வேண்டும். சைகை காட்டிப் பக்கவாத்தியங்களை நிறுத்தச் சொல்லித் தானும் பாடுவதை நிறுத்தினார்.
“நீங்கள் எங்கே போக வேண்டும் என்று நிச்சயித்துக் கொள்ளுங்கள்; பின்பு நாங்கள் பாடுவதைத் தொடர்கிறோம். நீங்கள் இப்படி நடுவில் எழுந்து நடப்பது தொந்தரவாக இருக்கிறது,” என்று ஆங்கிலத்தில் வேறு, கோபத்துடன் கூறினார் வித்வான். பேசாமல் அமர்ந்துகொண்டு அம்மையாரையே முறைத்துக் கொண்டிருந்தார்.
இப்போது எல்லோரும் அந்த மூதாட்டியையே பார்த்தனர். அவருக்கோ ஒரே குழப்பம். என்னவாயிற்று எனப் புரியாமல் தவித்தார்; கலங்கிப் போய் விட்டார். நின்ற இடத்திலேயே நின்று செய்வதறியாது தடுமாறினார். பின் யாரோ ஒருவர் எழுந்து வந்து அந்த அம்மையாரை அழைத்துச் சென்றார். கச்சேரி தொடர்ந்தது; தொடர்ந்து கேட்கும் விருப்பம் காற்றில் பறந்து விட்டது.
உள்ளம் பதறியது. என்றாவது ஒருநாள் எல்லாரும் இவ்வாறு வயதாகி நிற்போம். ஆசையாகக் கச்சேரி கேட்கவந்த ஒரு முதியவர் இயலாமையினால் ஒதுங்குமிடம் தேடினால் தப்பா? அதை இவ்வாறு வெளிச்சமிட்டுக்காட்டி அசிங்கப்படுத்தி மனம் வருந்தச் செய்யவேண்டுமா அந்த வித்வான்?
விலாவாரியாகச் சொல்ல வேண்டாம். ரசிகர்களால்தான் கலைஞர்கள் உயரத்தை நோக்கிப் பயணம் செய்கிறார்கள். அதை நினைவிலிருத்திக் கொண்டிருந்தால் இதெல்லாம் நடக்கவே இடமில்லை அல்லவா?
வாழ்க்கை வழங்கிய பல பாடங்களில் இதுவும் இன்னொன்று!
~~~~~~~~~~~~~~~~
