இளவயதிலேயே என்னை இசையில் ஈடுபட வைத்தது என்னுடைய குடும்பம். தாய் தந்தை உடன்பிறந்தோர் அனைவருமே பாட்டினை இரசிக்கும் பக்குவம் பெற்றவர்கள். என் தந்தையார் அடிக்கடி முணுமுணுக்கும் ராகம் ஷண்முகப்ரியா அல்லது காம்போதி. எங்கள் இல்லத்தில் நடக்கும் பண்டிகை, பூஜை காலங்களில் ஸ்லோகங்கள், பஜனைப் பாடல்கள் பாடுவது எல்லாம் சிறப்பாக நடக்கும். எனது மூத்த சகோதரி வீணை கற்றுக் கொண்டிருந்ததால், வீட்டில் வீணை இருந்தது. ஒரு பழைய ஹார்மோனியமும் இருந்த்து. சிறிய இசைப்புயல் கிளம்புவதற்கு இந்தச் சூழல் போதாதா ?
எனக்கும் எனது இணை சகோதரன் கணேசனுக்கும் நல்ல சங்கீத ஞானம் வரவேண்டுமென்று எங்களை இசை வகுப்புகளில் சேர்த்தார்கள். கணேசன் மிருதங்கம் வாசிக்க விருப்பம் தெரிவித்ததால் ஒரு மிருதங்க ஆசிரியர் வீட்டுக்கே வந்து அவனுக்குக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். ஷிமோகா ஸ்ரீகண்டன் என்பது அவர் பெயர். நிறைய கச்சேரி எதுவும் இல்லாதவர். இரண்டொரு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து சம்பாதித்துக் கொண்டிருந்தார். என்றேனும் அவருக்குக் கல்யாணக் கச்சேரி ஏதும் இருந்தால் சிஷ்யன் என்ற முறையில் என் சகோதரனை அழைத்துச் செல்வார். இரட்டை சகோதரனான என்னை விடமுடியாததால் என்னையும் கூட்டிச் செல்வார். அதன் பிறகு என் சகோதரர் திரு ராஜப்பய்யரிடம் கற்றுக்கொண்டார். வங்கி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு இன்றும் சில மேடைகளில் வாசித்துக் கொண்டிருக்கிறார்.
அருகிலுள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் எனக்கு வாய்ப்பாட்டு வகுப்பு அமைந்த்து. ஏனோ தெரியவில்லை; பாட விருப்பம் இருந்தும் சரளி ஜண்ட வரிசை கீதம் வந்த பிறகு வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். கவிதை எழுதுவதும் அதற்க்கு நானே இசை அமைப்பதும் என சுயமாக எனது இசை அனுபவம் தொடர்ந்தது. கல்லூரிக் காலத்தில் பல பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு , சில பாராட்டுகள் சில கோப்பைகள் எனப் பெற்று இசைக்கும் எனக்குமான உறவு கவிதையிலே வலுப்பெற்றது.
1973-ம் ஆண்டில் திரு.ஜி.எஸ் மணி அவர்களை எனது நண்பரின் இல்லத்தில் சந்தித்தேன். ஒரு சிறிய “சேம்பர் ம்யூஸிக்’ நிகழ்ச்சி. அதன் பிறகு டின்னர் என நான்குமணி நேர நிகழ்வு. அன்று கேட்ட அவரது பாடல்கள் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அந்தக் குரல் வளத்துக்கும், சங்கீதப் பொழிவுக்கும் நான் உடனே அடிமையாகி அவரே அறியாமல் அவரை என் மானசீக குருவாக வரித்துக்கொண்டுவிட்டேன்.
பெஸண்ட் நகரில் இருந்த அவரது இல்லத்துக்கு வார இறுதி நாட்களில் செல்வேன். அவரது துணைவியார் ல்லிதா மாமி அன்பின் அவதாரம். எனக்கு இன்னொரு அன்னை. என் கவிதைகளுக்குப் பெரும் இரசிகை. பார்க்கும் போதெல்லாம் “நீ புதிதாக எழுதிய கவிதையைப் படித்துக் காட்டு” என்பார்கள். சில நேரங்களில் மதிய உணவு ; பல நேரங்களில் மாலையில் டிபன் காபி என்று அவரோடு கழிந்த நாட்கள் ஏராளம்.
மணி மாமா ஒரு ஜீனியஸ். அவர் அறியாத “சப்ஜெக்ட்” எதுவும் நானறிந்தவரையில் கிடையாது. இசை முதல் இராக்கெட் சயின்ஸ் வரை, கணிதம் முதல் கம்பன் வரை எதுவும் அவருக்கு அத்துபடி. கர்நாடிக் இசை முதல், தமிழிசை, திரையிசை. மண்ணிசை, சேர்ந்திசை எனப் பல வடிவங்களைப் பற்றியும் அறிந்தவர். பழந்தமிழ் வரலாறு, பாரத பண்பாட்டுச் சிறப்புகள், திருக்கோயில் வரலாறுகள், சடங்குகள், சமய ஆன்மீகத் தத்துவங்கள் ஆகியவை பற்றிப் பல புத்தகங்கள் அவரது இல்லத்தில் நிறைந்திருக்கும். அனைத்தும் படித்த விற்பன்னர். சஸ்கிருதம் தமிழ் , தெலுங்கு ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் நூற்றுக் கணக்கான சாகித்யங்கள் படைத்துப் பாடியவர். இசையின் கூறுகளையும் , தமிழ் இலக்கியச் சிறப்புகளையும் ஒருங்கே எனக்குக் கற்றுத் தந்தவர். அவர் படித்த பல பழந்தமிழ் இலக்கியப் பதிப்புகளை என்னிடம் கொடுத்துவிட்டவர். அவற்றுள் உவேசா வின் என் சரித்திரம், திருப்புகழ் மணி கையெழுத்திட்ட திருப்புகழ் மூன்று வால்யூம்கள், திவ்யப் பிரபந்தத்தின் திருவேங்கடத்தான் பதிப்பு, தாயுமானவர் பாடல்கள் தொகுப்பு, உவேசாவின் சிலப்பதிகார உரை, குறுந்தொகை, திருவாசகம், சேக்கிழாரின் பெரியபுராணப் பதிப்பு, விநாயகர் அகவலின் விளக்க உரை, பேராசிரியர் மு. அருணாசலம் எழுதிய “தமிழிசை வரலாறு என நீளும் பட்டியல்; ஒரு நூலகமே வைத்துவிடலாம். இது தவிர “Fritzof Capra” வின் “Tao of physics” போன்ற நூல்களையெல்லாம் கொடுத்து என்னைப் படிக்கச் செய்தவர்
“ வி.வி. ( கல்லூரி நண்பர்கள் எனது இனிஷியலை வைத்து அழைப்பதைக் கேட்டு ஆசானும் அப்படியே அழைக்கத் தொடங்கினார்.. பின்னாளில் மேடையில் என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில் வவேசு என மாற்றிக் கொள்வார் ) வி.வி. ! நீ எடுத்துண்டு போடா ஐயா ! நான் படிச்சாச்சு..இனிமே வச்சிண்டு என்னபண்ணப் போறேன்..உனக்குப் பிரயோஜனமாகும் நீ படி நீ எழுது “ என்ற மந்திர வார்த்தைகளைச் சொல்லித்தான் நூல்களைக் கொடுப்பார்.
அவரைப் போல ஓர் அற்புதமான ”கான்வர்சேஷனலிஸ்ட்” ஐப் பார்க்கமுடியாது. அரைமணி நேரம் அவரோடு பேசினால் ஐம்பது நூல்களைப் படித்த அறிவு கிடைக்கும். அவர் சந்தித்த மகான்களையும், கலையுலக மேதைகளையும், ஆன்மீகச் செல்வர்களையும், திரையுலக ஜாம்பவான்களையும், அரசியல் பிரமுகர்களையும் பற்றிய அவரது அனுபவங்களைக் கேட்டுக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
அவருடைய கச்சேரிகள் பலவற்றுக்கு அவரோடு சென்றுள்ளேன். அவற்றில் இராக ஆலாபனைகளே முக்கியத்துவம் பெறும். ஏன் என்று கேட்டால் மாமா சொல்வார்
“ நமது முன்னோர்கள் கர்நாடக சாகித்ய கர்த்தாக்கள் எழுதி வைத்ததை அல்லது ஒரு குரு கற்றுத்தந்ததை அப்படியே பாடுவதில் என்ன சிறப்பு இருக்கின்றது. அது முக்கியம்தான்; ஆனால் கற்பனையையும் படைப்புத் திறமையையும், கூட்டி ஒருவனை உண்மையான கலைஞனாக ஆக்குவது ராக ஆலாபனைகளே ! எனவேதான் ராகங்களைப் பல வகைகளில் பயன் படுத்தி பாடலென்ற உடலுக்கு இசையாகிய உயிரைச் சேர்க்கும் திரையிசை அமைப்பாளர்களை நான் உண்மையான இசைக் கலைஞர்கள் எனப் போறுகின்றேன்”.
திரு ஜி.எஸ். மணி இயற்றிய பல தமிழ் சாகித்யங்கள் பல வித்வான்களாலே பாடப்பெற்று வருபவை. அவருடைய “ தோரணப் பந்தலிலே” என்ற பிருந்தாவனி ராக கீர்த்தனை பாடல் இடம்பெறாத கல்யாண நிகழ்ச்சிகள் அக்காலத்தில் மிகக் குறைவு. “தென்னவன் உலா” எனும் தலைப்பில் அவரது தமிழ் சாகித்யங்கள் நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலோடு அப்பாடல்களை அவர் பாடியுள்ள குறுந்தகடும் இணைக்கப்பட்டு இருந்தது. 2021- ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவரது சமஸ்க்ருத சாகித்யங்கள் ஸ்வரக் குறிப்புகளோடு அவரது மாணவி திருமதி உஷா பிரசாத் அவர்களால் வெளியிடப்பட்ட்து. அவரது முத்திரையான “ராஜபூஜித” அந்நூலுக்கும் தலைப்பானது. ( RAJAPUJITHA – Sanskrit compositions of Shri G.S> Mani By Dr.Usha Prasad)
என்னுடைய பல பாடல்களுக்கு சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இசையமைத்து என்னை கௌரவப்படுத்தியவர் என் ஆசான். ஸ்ரீ முத்துசாமி தீஷிதர் பற்றிய தொலைக்காட்சிப் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தவர்.
தமிழ் வளர்த்த சான்றோர் என 2014-லில் இருந்து நான் நடத்திவரும் மாதத் தொடர் நிகழ்ச்சிக்கு மிக ஊக்கம் அளித்தவர். இசையமைப்பாளர் இன்னிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களைப் பற்றிய அத்தொடர் ஒன்றில் என்னோடு இணைந்து பேசியவர். (அதன் காணொளி இங்கே:)
இலக்கியம் இசை இரண்டிலும் என்னைப் பெரும் அளவில் ஊக்குவித்த என் ஆசான் எனக்குக் கிடைத்த வரம.
எனவேதான் “தொட முயன்ற தொடுவானம் “ என்ற எனது முதல் கவிதை நூலின் முன்னுரையில்
“என் கற்பனைகளுக்குப் பல்லவியாய், கவிதைகளுக்குப் பல்லக்காய் விளங்கும் எனது மதிப்புக்குரிய ஆசான் மதுரை திரு. ஜி. எஸ். மணி.- அவர்களுக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தேன்.
அவரைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் போதாது. அவரது “சதாபிஷேகத்தில்” நான் படித்த கவிதையை நமது வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
மதுரை ஜி.எஸ். மணி
ஆயிரம் பிறைகண்ட அற்புத மாமனிதர் – வள்ளுவத்தின்
பாயிரம்போல் நான் வணங்கும் பண்புடைய ஆசிரியர்;
சங்கத்தமிழ் வளர்த்த தனி மதுரை மண்ணதிலே
சங்கீதம் தனைவளர்க்கத் தான்பிறந்து தோன்றியவர்;
பிட்டுக்கு மண்சுமந்த பெருமான் பதியினிலே- மெல்லிசையின்
மெட்டுக்கள் சுமந்திசைக்க மேதினியில் தோன்றியவர்;
மரபிசையும் திரையிசையும் மண்ணிசையும் மெல்லிசையும்
குரலசைவில் கொண்டுதரும் திறம்கொண்ட பேராசான் – எனினும் என்றும்
தமிழிசைக்கே இதயத்தைத் தந்துவிட்ட சீராசான்;
ஓங்கியெழும் இவர் குரலின் கம்பீரம் – அதன்
ஒலியினிலோ தேவதைகள் சஞ்சாரம்.
உடையாமல் விழுகின்ற சங்கதிகள் ஒய்யாரம்;
அணிவகுக்கும் பாடலுக்கு அவையன்றோ அலங்காரம்;
இவர் குரலின் –
வளப்பத்தை விவரிக்க வார்த்தைகட்கு வலிமையில்ல;
இனிமைதனை எடுத்துரைக்க என்மொழியில் சொல்லில்லை.
கர்நாடக இசையென்னும் அற்புதத்தை – இவர்
முந்திக் கற்ற முதலிடம் அன்னை; – பிறகந்த
இசையிலே இவரிழந்தார் தன்ன.
பல அரங்கம் கண்ட இவரின் முதல் குரு
ஜலதரங்கம் பாபு அய்யங்கார்;
ஸ்வரத்தை எல்லாம் நாதமாக்கும் சூக்கும வித்தையினை
நாதஸ்வரக் கலைஞரிடம் நாளும் கற்றறிந்தார்;
அய்யம்பேட்டை வேணு இவருக்கொரு ஆசான்தான்;
மதுரை மேளக்காரர் சுந்தரம் பிள்ளை
இவரெல்லாம் இல்லாமல் இவரிசையும் இல்லை.
இவர் குருவாய் ஏற்றவரோ மழவரேந்தல் சுப்பராமய்யர்;
அதன் பின்னே அவர் சீடர் சீதாராம அய்யர்.
ஜி என் பி என்ற மூன்றெழுத்து இசைவடிவில்
நாளும் இவர் மூழ்கி இருந்த காலமுண்டு; – அது இவர்
பிருகாக்களின் வேகத்திற்குக் காரணமாய் அமைந்ததுண்டு.
இவரிசையின் நாட்டம், ஹிந்துஸ்தானியின் ஊட்டம்.
பேகம் அக்தர் ஓம்கார்நாத் டாகூர்
சித்தேஸ்வரி தேவியென்று – இவர்
சென்றடைந்த கலைக் கோயில் ஏராளம்; – இவர்
பன்முக இசைக்கு அவை பாடியதோ பூபாளம்.
எம் எஸ் வி என்ற இன்னொரு மூன்றெழுத்து – அது இவரைத்
தன்வயமாக்கிக் கொண்டு திரையிசையில் பூட்டியது;
மாற்றறியாப் பொன்னாக மலர்ந்தபல திரைப்பாடல்
ஊற்றுக்கண் திறக்க உதவியவர் இவரன்றோ !
மன்னவன் கல்யாணியில் வந்தானடி !
ஓங்காரமாய் விளங்கக் கீரவாணி வந்ததடி !
துள்ளிவந்த ரதிபதிப் ப்ரியாவோ
வெள்ளிப் பனிமலையில் வீதியுலா கண்டதடி !
ஆம் !
செந்தமிழின் திரையிசைக்குச் செம்மை சேர்த்த
முன்னவரில் என்னுடைய ஆசானும் முன்னோடி !
இசைக்கப் பிறந்த இவர் எழுத்திலும் வல்லவரே!
அசைக்க முடியாத இலக்கண அமைதியொடு
ஆன்ற தமிழ்ப் புலவர் ஆக்குதல் போல் பலநூறு
பாடல்கள் இயற்றியவர் , இசையமைப்பில் பெருஞ்சூரர்.
நான்கு மொழிகளிலே பாடல்களை எழுதுகின்ற
வான் புகழும் “வாக்கேயக்காரரிவர்”
வணங்குகிறேன்.


வவேசு சார், தங்கள் ஆசான் குறித்த பதிவு அருமையான பதிவு. ஆசானுடன் தங்கள் அனுபவங்கள் பேசாதிருக்க முடியாத பெருமைக்குரியவை. அவர் குறித்த உங்கள் கவிதை அழகோ அழகு; ‘அணிவகுக்கும் பாடலுக்கு அவையன்றோ அலங்காரம்’ ஆகா.. என்ன ஓர் ஓசை நயம்! ‘பாயிரம் போல நான் வணங்கும் பண்புடைய ஆசிரியர்’ என்ற அடைமொழி தங்களுக்கும் பொருந்தும் தகைமையை என் சொல்வேன்!
LikeLike
மிக்க நன்றி துரை.தனபாலன்
LikeLike
மணியான தனது ஆசிரிய மணியைப் பற்றி, நமது ‘மகாகவியின் மந்திரச் சொல்’ ஆசிரியர் எழுதிய சுவையான கட்டுரையை இன்று (செப் 5 ) படித்ததன்மூலம் அந்த இரு பெரும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
LikeLike