
இலியட் போரின் முடிவைப் பார்க்க நம்மைப் போல் விண்ணில் இருக்கும் கடவுளர்களும் ஆவலோடு இருந்தார்கள் முடிவை வேறு விதமாக ஜீயஸ் கடவுள் மாற்றுவாரோ என்றும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்
ஜியஸ் கடவுள் ஒரு துலாக்கோலை எடுத்து இருவரின் மரணத்தையும் அதன் இரு தட்டுகளில் வைத்துப் பார்த்தார் எந்தத் தட்டு தாழ்கிறதோ அவன் முடிவு அன்றைக்கு நிகழும்! ஹெக்டரா ?அக்கிலிஸா? துலாக்கோல் இங்கும் அங்கும் அலைபாய்ந்தது!
முடிவில் ஒரு தட்டு சாய்ந்தது.
அங்கே ஹெக்டர் தன்னைத் துரத்தும் அக்கிலிஸிடமிருந்து தப்பிக்க தான் கட்டிய புகழ்பெற்ற டிராய் நகரக் கோட்டையை சுற்றிச் சுற்றி வந்தான் ஆனால் அக்கிலீஸ் அவனை விடாமல் துரத்திக் கொண்டே வந்தான் இந்த இருவருக்கும் இடையே ஜீவ மரணப் போராட்டம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது ஓடுவதும் கடினம் துரத்துவதும் கடினம் ஹெக்டர் நின்றால் இருவருக்கும் இடையே சண்டை நிச்சயம் ஓங்கிய அக்கிலிஸ்முன் ஹெக்டரால் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால் நிற்காமல் ஓடினால் அவன் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது
அந்த சமயத்தில் ஹெக்டர் மீது தீராப் பகை கொண்ட தேவதை அதீனி ஹெக்டருக்கு எதிராக ஒரு அதர்ம காரியம் செய்தாள். ஹெக்டரின் தம்பி போல உருவெடுத்து ஹெக்டரின் முன் சென்று “ நான் உனக்காகக் கோட்டையில் இருந்து வெளிவந்திருக்கிறேன் நாம் இருவரும் சேர்ந்து அக்கிலிஸை வதம் செய்வோம்” என்று சொன்னாள்
அதை உண்மை என்று நம்பிய ஹெக்டர் அக்கிலிசை எதிர்கொள்ள துணிவுடன் நின்றான். ஆனால் அக்கிலிஸ் அருகில் வந்ததும் “வா!தம்பி நாம் இருவரும் அவனைத் தாக்குவோம்’ என்று கூறித் திரும்பிய ஹெக்டர் திகைத்துவிட்டான். அங்கே அவன் தம்பி இல்லை. அதினிதான் சிரித்துக்கொண்டு நின்றாள் . அப்பொழுதே ஹெக்டர் உணர்ந்து கொண்டான் தன் விதிக் கயிறு இறுக்கப்பட்டு விட்டது என்று. இனி வீரனாகப் போரிட்டு மடிவோம் என்று உறுதி பூண்டான்.
மாவீரன் ஹெக்டர் அக்கிலிஸைப் பார்த்து உரத்த குரலில் கத்தினான். “ அக்கிலிஸ்! நம் இருவரில் யார் மடியப்போகிறார்கள் என்பதை நம் வீரம் முடிவு செய்யட்டும் ஆனால் நம்மில் யார் இறந்தாலும் இறந்த உடலை அவர்கள் நாட்டாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் இதை நிச்சயப்படுத்திக் கொண்டு நாம் இருவரும் சண்டைக்குத் தயாராவோம் “ என்று கூறினான்.
தன் நண்பனைக் கொன்று கிரேக்க பலர் உயிர் துறக்கக் காரணமாக இருந்த ஹெக்டரை மன்னிக்க அக்கிலீஸ் தயாராக இல்லை! “ உன் நிபந்தனைகள் எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது! உன்னைக் கொன்று உன் பிணத்தை நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்” என்று கூறி அவன் மீது பாய்ந்தான் அக்கிலிஸ்.
இருவரும் ஈட்டி எறிந்து ஒருவரை ஒருவர் பலமாக தாக்கினர் இருவர் ஈட்டிகளும் பலமுறை மோதி முடிவில் இரண்டும் முறிந்து விழுந்தன ஹெக்டர் தன் குறுவாளை உருவிக்கொண்டு பாய்ந்தான், அக்கிலீஸ் தன் குத்தீட்டியுடன் பாய்ந்தான் அக்கிலீஸ்க்கு அவன் அன்னை அளித்த கவசம் அவனை ஹெக்டர் வாளில் இருந்து காப்பாற்றியது. ஹெக்டரிடம் பெட்ரோகுலசிடமிருந்து திருடிய பாதிக்கவசம் தவிர வேறு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக அவன் கழுத்துப் பகுதிக்குக் கவசம் ஏதும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டான் அக்கிலிஸ்.
ஆயினும் அவன் குரல்வளை முற்றும் முறியவில்லை! அக்கிலிஸ் பயங்கரச்சிரிப்பு சிரித்து “ ஹெக்டர்! நீ செய்த கொடூரத்திற்கு பலன் இப்போது என் கையால் கிடைக்கப் போகிறது. என் நண்பனைக் கொன்று நிர்வாணப்படுத்திய உன் உடலை சின்ன பின்னமாக்கிய பின்னே என் நண்பனின் இறுதிக் கடனை முடிப்பேன் என்று சபதம் செய்திருக்கிறேன். உன் உடலை உன் தந்தை தாய் மனைவி சகோதரர் உன் நாட்டு வீரன் எவனும் காண முடியாத அளவுக்கு உருத்தெரிய முடியாமல் செய்வேன்” என்று கத்தினான். போர் வெறியும் வெற்றிக் களிப்பும் பழி வாங்கும் உச்சமும் அவனை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
ஹெக்டர் அக்கிலிசிடம் “ நீ செய்யும் செயல் சுத்த வீரனுக்கு அழகில்லை! கடவுளர்கள் இதற்காக உன்னை மன்னிக்கப் போவதில்லை! என் தம்பி பாரிஸும் அப்பல்லோ கடவுளரும் ஜீயஸ் கடவுளும் உன்னை வீழ்த்துவார்கள் இது சத்தியம்” என்று கூறினான் . அக்கிலீஸுக்குத் தன் சாவு பற்றி குதிரை கூறியது நினைவிற்கு வந்தது. இருந்தபோதிலும், “ ஹெக்டர்! என் சாவு கடவுளர் விதிப்படி எப்போது நடக்க வேண்டுமோ அப்போதே நடக்கட்டும்! இன்று உன்னை உன் உடலை நிர்மூலமாக்குவது தான் என் லட்சியம்” என்று கத்திவிட்டு மூர்க்கமாக அவனை கீழே சாய்த்து விட்டு அவன் உடலில் பாய்ந்த தன் குத்திட்டியை எடுத்தான்.
மாவீரன் ஹெக்டரின் தலை தொங்கியது. ஹெக்டரின் மரணத்தைப் பார்த்த கிரேக்கப்படை வீரர்கள் அக்கிலிசைக் கொண்டாடினர் பின்னர் ஹெக்டரை நிர்வாணமாக்கி ஒவ்வொரு கிரேக்க வீரனும் தன் கத்தியால் ஹெக்டரை குத்திக் காயப்படுத்தித் தங்கள் போர் வெறியைத் தீர்த்துக்கொண்டார்கள்.
ஜீயஸ் கடவுளின் துலாக்கோலில் ஹெக்டரின் தட்டு சாய்ந்தது.
மாவீரன் ஹெக்டர் தன் சொந்த மண்ணில் உயிரற்று வீழ்ந்தான். தன் கடமையை முடிந்தது என்று அக்கிலீஸ் கிரேக்க வீரர்களைப் பார்த்து.” ஹெக்டர் மாவீரன் தான்! சந்தேகம் இல்லை! அவன் உடலை இழுத்துக் கொண்டு கப்பலுக்கு வாருங்கள்!. நாம் நம் பெட்ரோகுலசின் இறுதி யாத்திரையை செவ்வனே முடிப்போம்” என்று கூறினான் .
ஹெக்டரின் உடலை இழுத்துக் கொண்டு கிரேக்க கப்பலுக்கு அக்கிலிசின் தலைமையில் படை புறப்பட்டது அதன் பின் அக்கினிசின் ஆணைப்படி பெட்ரோகுலசிற்கு ஈமச் சடங்கும் இறுதி யாத்திரையும் கிரேக்கருக்கே உரிய முறைப்படி நடந்தது. பெட்ரோகுலசின் ஆவி “ நண்பா! என் சாவிற்குப் பழி வாங்கி எனக்கு உரிய முறைப்படி வானுலகத்திற்கு அனுப்புகிறாய்! உனக்கு என் அன்பான நன்றி!” என்று சொல்லி மறைந்தது.
கோட்டை உச்சியில் இருந்து தன் மகன் ஹெக்டர் கேவலமான நிலையில் இருப்பதைப் பார்த்த ஹெக்டரின் தந்தையும் டிராய் நாட்டு மன்னருமான பிரியம் துடிதுடித்தார். ஹெக்டரின் அன்னையும் மனைவியும் கதறிக் கதறி அழுதனர்! தனக்கு என்ன நேர்ந்தாலும் நேரட்டும் தன் மகன் ஹெக்டரின் உடலை அக்கிலிசிடமிருந்து வாங்கி வருகிறேன் என்று வண்டி நிறைய மீட்புப் பொருளுடன் புறப்பட்டார் மன்னர் பிரியம். கிரேக்கப் படையினரின் ஆவேசத்தை அறிந்த அவரது மனைவி உற்றார் உறவினர் மகன் அனைவரும் அவரைத் தடுக்க முயற்சித்தனர். ஆனாலும் வயோதிகரான பிரியம் ‘என் மகன் உடலைப் பெற்று வருவதில் எனக்கு சாவு நேர்ந்தாலும் பரவாயில்லை” என்று புறப்பட்டார்.
ஹெக்டரின் சின்னாபின்னமாக்கப்பட்ட உடலைக் கண்ட வானுலகக் கடவுளர்களும் வருந்தினார்கள். ஜீவ மரண ஆட்டம் முடிந்ததும் ஜீயஸ் கடவுள் இதற்கு ஒரு முடிவு கட்டினார்! ஹெக்டரின் தந்தையை அக்கிலிசுடன் பேச ஏற்பாடு செய்யும்படி ஹெர்மிஸ் என்ற கடவுளையும் அனுப்பி வைத்தார். அந்தக் கடவுள் துணையால் இரவில் யார் கண்ணிலும் படாமல் மன்னர் பிரியம் அக்கிலிஸின் பாசறைக்கு வந்து சேர்ந்தார்.
அங்கே சதைப் பிண்டம் போல் கிழே விழுந்து கிடக்கும் தன் மகனைக் கண்ட அவர் இதயம் வெடிக்கும் போல் இருந்தது.
நேராகச் சென்று அக்கிலிசின் கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். “ உன் தந்தையை போன்ற என்னிடம் இரக்கம் கொள். இறந்த என் மகனின் உடலை எனக்குக் கொடுத்துவிடு! எந்தக் கைகளால் என் மகனை கொன்றாயோ அந்த கைகளை முத்தமிடுகிறேன்” என்று கண்ணீர்விட்டு வேண்டிக்கொண்டார்.
போர் வெறி அகன்று அமைதியாக இருந்த அக்கிலிசுக்கு மன்னர் பிரியத்தை பார்த்த போது அவன் தந்தையின் நினைவு வந்தது! இறைவர் விதிப்படி என் உயிரும் இன்னும் சில நாட்களில் பறிக்கப் போகிறது. அபோது தன் தந்தை எப்படி துடிப்பார் என்பதை பிரியமின் துடிப்பிலிருந்து தெரிந்துகொண்டான்.
காலில் விழுந்த மன்னரை இரு கரங்களால் தூக்கி நிறுத்தினான். அவர் கேட்டுக் கொண்ட படி ஹெக்டரின் உடலை அவரிடம் தரவில்லை என்றால் நான் மிருகத்திற்கு சமம் என்று எண்ணி அவருக்கு ஆறுதல் கூறினான். “ என் தந்தையை போன்றவரே நீங்கள் அழ வேண்டாம் கடவுளர்கள் மனிதர்களான நமக்கு துக்கத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தி உள்ளார்கள். அதை மீறி நம்மால் எதுவும் செய்யமுடியாது” என்று கூறிவிட்டு ஹெக்டரின் உடலை அவரிடம் ஒப்படைக்க ஏற்பாடுகளை உடனே செய்தான்.
தன்னால் கர்ண கொடூரமாக சின்னாபின்னம் ஆக்கப்பட்ட ஹெக்டரின் உடலை எண்ணெய் தடவி வெள்ளைத்துணியில் மூடி மிகுந்த துயரத்துடன் அவன் தந்தையிடம் மிக மரியாதையுடன் ஒப்படைத்தான். அத்துடன் அவருக்கு சிறந்த உணவைத் தயாரித்து அவரை உண்ணவும் செய்தான். அவரை தன் அறையில் இருந்த சிறந்த படுக்கையில் படுத்து உறங்கி விடியற்காலை கோட்டைக்குச் செல்லும்படியும் கூறினான்.
அது மட்டுமல்லாமல் ஹெக்டருக்கான ஈமச்சடங்கள் முடியும் 12 நாட்கள் வரை டிராய் நாட்டுடன் போர் தொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதியும் அழித்து அங்கிருந்து அகன்றான் அக்கிலிஸ்.
அக்கிலிஸின் பேச்சினால் நிம்மதியடைந்தாலும் அகெம்னனும் மற்ற கிரேக்கத் தளபதிகளும் வந்தால் அவர்கள் தன்னையும் ஹெக்டரின் சடலத்தையும் விட மாட்டார்கள் என்பதை உணர்ந்த பிரியம் இரவோடு இரவாகப் புறப்பட்டு டிராய் கோட்டைக்கு திரும்பினார். ஹெக்டரின் அன்னையும் மனைவியும் மற்ற சகோதரர்களும் அவன் மேல் விழுந்து புரண்டு அலறினர். 11 நாட்கள் முடிந்ததும் அவன் உடலுக்கு எரியூட்டினார்கள் முழுதும் எரிந்த உடலின் மீது மது ஊற்றி அணைத்தார்கள் அவன் எலும்புகளை ஒரு துணியில் சுற்றி தங்கப் பெட்டிக்குள் வைத்தார்கள் பிறகு ஒரு கல்லறை குழிக்குள் அதை வைத்து கல்லறை மேட்டை உருவாக்கினர்
இலியட் நாட்டின் மாவீரன் ஹெக்டர், பாதி கடவுளான அக்கிலீஸால் அழிக்கப்படும் நிகழ்ச்சியுடன் ஹோமர் எழுதிய இலியட் மகா காவியம் முடிவு பெறுகிறது
நாகூர் பூமி அவர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த 800 பக்கங்கள் கொண்ட இலியட் (கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தை மூல நூலாக வைத்து எழுதப்பட்டது இந்தத் தொடர். இதனை எழுதுவதற்கு அனுமதி தந்த நாகூர் ரூமி அவர்களுக்கு இதய பூர்வமான நன்றி.
இராமாயணத்தை ராவணன் கொல்லப்பட்டதும் கதையை முடித்தால் எப்படியிருக்கும் ? அக்கினிப்பரீட்சை, விபீஷணன் பட்டாபிஷேகம், நந்திகிராமம், சீதை வனவாசம், லவ குசன், ராமர் மறைவு இவையெல்லாம் சொல்ல வேண்டுமல்லவா ?
அதுபோல அடுத்த இதழில் டிராய் நகரின் வீழ்ச்சி பற்றியும் மற்ற கிரேக்கர் தலைவர் நிலை பற்றியும் மற்ற இதிகாச எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

அற்புதமான தொடரை அருமையான மொழியில் கொஞ்சமும் தொய்வில்லாமல் அளித்திருக்கும் எஸ் எஸ் அவர்களுக்கு மிக்க நன்றி!
LikeLike