அன்புடன் அந்தரங்கம்! | Dinamalar

ஒருபுறம் தானாகவே உருவாக்கிய நிறுவனத்தை மூட வேண்டியதாகிவிட்ட நிலைமை, மறுபுறம் உள்ளூரப் பொங்கும் கோபம். மேலும் இரு பிள்ளைகளும் விலகியிருந்த தந்தை மேல் பாசத்தைப் பொழிகிறார்கள். இப்படித் தனக்குப் பல இன்னல்கள் என்றாள் அனிதா. உறவினரும் குடும்பத்தினரும் நிராகரிப்பதாகக் கூறி, கதிகெட்ட நிலைமைக்கு விடிவுக்காண வந்ததாகக் கூறினாள். இதற்கு மனநல நிபுணரான என்னுடன் அனிதாவுக்கு ஐந்து மாதங்களுக்கு ஸெஷன்கள் தேவைப்பட்டது.

முப்பத்து நான்கு வயதானவள் அனிதா. எட்டு வயதுடைய மகன், ஐந்து வயதுடைய மகள். விவாகரத்திற்குப்பின் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கணவன் மார்ட்டின் குழந்தைகளை வாரந்தோறும் சந்திக்க அனுமதி. தந்தையுடன் குழந்தைகள் உறவு தொடங்கியது. பந்தம் கூடியது. அனிதாவின் குடும்பத்தினர், நண்பர்களுடனும் மார்ட்டின் உறவு நன்றாக இருந்தது. இது அனிதாவிற்குத் துளிகூட பிடிக்கவில்லை. வெறுத்தாள்.

கணவரை வன்முறை செய்பவன், தந்திரமானவன் என்றாள்.‌ இதனால்தான் தன்னுடைய தொழிலுக்கும் அதற்குத் தேவைகளுக்கும் எந்தவிதத்திலும் ஆதரவாக இல்லை என்றாள். மார்ட்டினை விட வேறொருவர் ஆதரவு காட்டுவது தன்னை காந்தம் போல் இழுப்பதாகக் கூறினாள்.

முதல் ஸெஷன்களில் அனிதா தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினாலும், வெளிவர வேண்டியவை இன்னும் பல இருந்தது. ஒவ்வொரு விவரிப்பிலும் அனிதா தான் எத்தனை சிறந்தவள் என வலியுறுத்தினாள்.

இது அவளுடைய சுயமரியாதையில் குறைபாடு உள்ளது எனத் தெரிவித்தது. அவளுடைய குடும்பத்தினர், நண்பர்கள் எவருமே அவளுடைய பக்கம் இல்லை என்றதாலும் இப்படி எனப் புரிந்து கொண்டேன். அனிதாவை எந்த விதத்திலும் நான் எடை போடாமல் ஏற்றுக்கொள்ள, அவளுக்கு என்மேல் நம்பிக்கை மற்றும் செஷனில் ஆர்வம் அதிகரித்தது!

அனிதாவின் நிலைமையைப் பற்றிக் கூற வேண்டும் என்றால், கோபம், தொலைந்த நிர்வாகம்,  அதனால் குறைவான வாழ்வு நிலை, ஆதரவு குறைபாடானது என அவளுக்குத் தோன்றியது.

இவற்றுடன் அனிதாவின் எதிர்மறை உணர்ச்சிகளை அவள் உணராததால் திகைப்பு.‌ இவற்றில், குறிப்பாகப் பொறாமை மற்றும் கோபத்தை எப்படிக் கடந்து போனாள் என்பதை இங்குப் பார்ப்போம்.

சொல்லப்பட்ட எதிர்மறை உணர்ச்சிகளை விட்டு விலக, முதலில் அனிதா அவற்றை அடையாளம் காண வேண்டும் என்பதால் அதை எடுத்துக் கொண்டோம். இதன் முக்கியத்துவத்தினால் வாரத்திற்கு மூன்று முறை ஸெஷன்கள் என முடிவானது.

ஸெஷன்களில் உணர்வுகளை மையமாக வைத்துள்ள கவிதை, கதை, உரையாடல்கள் படிப்பதில், கலந்து ஆலோசிப்பதில் பல வாரங்கள் சென்றது. இவற்றுடன் உறவுகளை இணைத்த பின்னரே கணவரை வெறுப்பதை அடையாளம் கண்டாள். வெறுப்பின் காரணங்களை மேலும் ஆராய்ந்ததில், மார்ட்டினுடன் குழந்தைகளின் பந்தம் தனக்குப் பொறாமை தருவதை உணர்ந்தாள். இதுவே கோபத்தின் விதையானது.  அனிதா தன் உணர்வின் பல தோற்றங்களில் இந்த வழிப்போக்கு காணப்படுகிறது எனப் புரிந்து கொண்டாள். 

அதே நேரத்தில், சிந்தனையுடன் உணர்வின் பிணைப்பைக் காணச் செய்ய, அவளுடைய வாழ்வின் பல அனுபவங்கள் தேர்வு செய்து,  அவற்றைப் பற்றி அவளுடைய கருத்தும், மனப்பான்மையின்மேல் விளைவையும் ஆராய்ந்தோம். இதில் குறிப்பாக அனிதா தன்னைப் பற்றிய மதிப்பீடு, அபிப்பிராயம் இரண்டையும் பதிவு செய்யப் பரிந்துரைத்தேன்.

அனிதா நல்லவள் எதிர்மறையான உணர்வை தன்னுள் வளர்த்து விட்டாள். அதுவும் பொறாமையை.  தன்னுடைய நிஜமான ஸ்வரூபத்தையும், சிறந்த ஸ்வரூபத்துடன் வித்தியாசம் காணவும் பல ஸெஷன்கள் தேவையானது.

இந்த புரிதலைச் சுலபமாக்க வரைபடம் முறையைத் தேர்வு செய்தேன். அனிதாவை தன் குடும்பத்தினருடன் வீட்டில் உள்ளது போலப் படங்கள் வரையச் சொன்னேன்.

சமையலறை மற்றும் உணவு உண்ணும் மேஜையை வரைந்திருந்தாள். சமையலறையில் ஏதேதோ பாத்திரம் யந்திரங்கள். மேஜையில், பலவகையான பலகாரங்கள் பழங்கள் நிறைந்திருந்த கணவன் பிள்ளைகள் தட்டுகள், சிரித்த முகபாவம். பளிச்சென்ற முத்திரை ஒன்றும் இருந்தது. அனிதா தூரத்திலிருந்து இதையெல்லாம் பார்ப்பது போலக் காட்சி தந்தாள்.

இவற்றை விரிவாக எடுத்துக் கொண்டோம். மேஜை மீது இருந்த முத்திரையைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அது இதுவரை நடத்தி வந்த தனது நிறுவனத்தின் சின்னம் என்று வருத்தமும் புத்துணர்ச்சியும் கலந்த குரலில் விவரித்தாள் அனிதா. அதன் வடிவமைப்பு தானாகச் செய்தாளாம். தனது திறன்களைக் கணவரைத் தவிர எல்லோரும் புகழ்வார்களாம். அவளுடைய திறன்களால் மார்ட்டினுக்குப் பலன்கள் பல கிடைத்திருந்தும், அதெல்லாம் தானாகவே செய்தது போல அவன் இருந்து விடுவதும் உண்டாம்.

மார்ட்டின் இவ்வாறு செய்வது அனிதாவின் கோபத்தைத் தூண்டியது. அதனால் கணவன் மீதான அன்பு சரிந்தது. தான் பல விதமான பரிசுகள் பெற்றதையும் அவன் பொருட்படுத்தாமல் போனதும் ஏமாற்றமாக இருந்தது என்றாள் அனிதா.‌ வெளியுலகில் கிடைத்த அங்கீகாரம் வீட்டில் இல்லை.

தான் வீட்டிற்கு வருவதை, இருப்பதை வெறுத்ததாகக் கூறினாள்.‌ தான் மார்ட்டினை வெறுத்தோம் என்று சொல்வதைக் கேட்டதுமே சுதாரித்துக் கொண்டு பேச முயன்றாள்.

உடனடியாக இதை அவளுடைய கவனத்திற்குக் கொண்டு வந்தேன். கணவனிடம் இந்த மாதிரியான எதிர்மறை உணர்ச்சிகள் உண்டாகும்போது,  அவற்றினால் தன்மீது ஏற்படும் தாக்கத்தைக் கவனிக்க வேண்டும் என்பதை உணர்த்தினேன். இதைப்பற்றி இதற்கு முன் பேசியிருந்தாலும் மீண்டும் எடுத்துக் கொண்டோம். எவ்வாறு அவள் இருக்க வேண்டும் என்று அவள் நிர்ணயித்திருந்த நிலைக்கும்,  தினசரி வாழ்வில் இருக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசங்களைப் பல ஸெஷன்களுக்கு அவள் வரைந்திருந்த படத்தை வைத்துப் பரிசீலித்து வந்தோம்.

மெதுவாக அனிதா தெளிவு அடைந்தாள். முன்பு வெறுப்பு, பொறாமை, கோபம் என்ற உணர்ச்சிகள் தன்னுள் இருக்கின்றன என்ற அறிந்து கொண்டவள், இப்போது அவை ஏன், எப்படி உண்டாயிற்று என்று புரிந்து கொண்டாள். மார்ட்டின் தன்னைப் பாராட்டாமல் இருந்தது, பெருமையாக மற்றவரிடம் பேசாதது தனக்கு ஏமாற்றம் தந்தது. ஒவ்வொரு முறை நடக்கும்போதும் இது அதிகரிக்க, வருத்தம் கூடிக்கொண்டே வந்தது. இதுவே கோபமும் வெறுப்பாகவும் ஆனது என்று புரிந்து கொண்டாள்.

மார்ட்டினுக்கும் குழந்தைகளுக்கும் இருந்த நெருக்கம், அந்த சந்திப்பை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது, சந்தித்து வந்ததும் சந்தோஷ நிலையில் மிகுந்திருந்தது, இவையெல்லாம் தனக்குக் கசப்பான உணர்வைத் தருவதை உணர்ந்தாள்.

இந்த தருணத்தில் அனிதா தன்னுள் பொறாமை கொப்பளித்து வருகிறதென்று  ஏற்றுக்கொள்ள நேர்ந்தது! தன்னுள் ஏன் இந்த உணர்ச்சிகள் எழுகின்றன என்று பார்க்கையில், தன்னைப் பற்றி, தன் திறன்களைப் பற்றிய கணிப்பை ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தாள்.

அனிதா கணவன்-மனைவி இடையே உள்ள உறவை, நெருக்கமான மற்றும் வருத்தங்கள் அடைந்த நிகழ்வுகளை, சூழல்களைப் பதிவு செய்யத் தொடங்கினாள். இவற்றை அலசி பல நாட்களுக்கு உரையாட, அனிதாவிற்குப் புரிதல் புலப்பட்டது.  நெருக்கமானவர்களின் பாராட்டுக்குத் தான் ஏங்கிய நிலையைப் புரிந்து கொண்டாள். தான் கணவன்-மனைவி உறவை மதிப்பீடு செய்வதை உணர்ந்தாள். உறவில் நெருக்கம், வருத்தம், கசப்பு, கோபம், பொறாமை இந்த மாதிரியான உணர்வுகள் எல்லோருக்கும் வரும் என்ற புரிதல் வர, குற்ற மனப்பான்மை குறைந்தது.

மார்ட்டின் தன் திறமைகளை அலட்சியம் செய்தது மனவேதனை தந்தது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள, அவளின் சுய மதிப்பீடு மெல்ல முன்னேற்றம் அடைந்து தைரியமாகியது. மேலும் மார்ட்டின் என்றவரை அவள் வெறுக்கவில்லை, அவருடைய அந்த ஒரு நடத்தையை மட்டுமே வெறுத்தாள் என்ற தெளிவும் வந்தது. இந்த புரிதல் நிலையை அனிதா அடைந்தது ஒரு பெரிய திருப்பமே! அனிதா இப்போது வரைந்த படங்களும் இதை ஊர்ஜிதம் செய்தது .

சமீபத்தில் நேர்ந்ததைக் கடந்து போக இயலாததே அனிதாவை வாட்டியது. இதற்கு அனிதாவின் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களைப் பல கேட்டறிந்தேன். குறிப்பாக அங்கு எதிர்ப்பு காட்டுவோரை அவள் அணுகிய முறை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயங்கி வந்த சூழல், ஏமாற்றமாகத் தோன்றிய தருணங்கள் எனப் பலவற்றை ஆராய்ந்தோம். இதைப் பல கோணங்களில் கேட்க, மூன்றாவது வாரத்தில் அனிதா தான் உத்தியோகத்தில் கையாளும் முறைகளைச் சொந்த வாழ்வில் செய்யவில்லை என ஒப்புக் கொண்டாள். இந்தப் புரிதல் நிலையை அடைந்ததும், இப்போது நிலவும் ஐந்து இன்னல்களைத் தானாகவே தேர்வு செய்து, அவற்றிலிருந்து மீள எவ்வாறு என்ன செய்யலாம் என்பதைத் தானே பட்டியலிட்டாள். இதிலிருந்தே தெரிகிறது, அனிதாவின் நிலை மேம்பட்டு விட்டது!

**********************************************************