தமிழ் வழி - அகநானூறு ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பாடல்கள் நானூறு  தொகுக்கப்பட்டு அகநானூறு என்ற பெயரால் குறிக்கப்பட்டன. பாண்டியன் ...

 

அக நானூறு புத்தகங்கள் , அக நானூறு tamil books list அக நானூறு புத்தகங்கள் , அக நானூறு tamil books listRoutemybook - Buy Agananooru - Nithilakkovai [அகநானூறு - நித்திலக்கோவை] by  Puliyur Kesigan [புலியூர்க் கேசிகன்] Online at Lowest Price in India

இந்நூலில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 145. சில பாடல்களைப் பாடியவர்களின் பெயர்கள் தெரியவில்லை. இந்நூலைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திரசன்மன் என்பவர் ஆவார். இவரே களவியல் உரையைச் செய்தார் என்பர். அகநானூறு என்னும் இந்நூலைத் தொகுக்கச் செய்தவர் பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.

குறைந்த அடிகளை உடைய ஐங்குறுநூறு, குறுந்தொகை ஆகியவற்றிலிருந்து இதை வேறுபடுத்த இந்நூலை நெடுந்தொகை என்றும் வழங்குவர். தமிழர்தம் அகத்திணை ஒழுக்கங்களான களவு. கற்பு என்பவை இந்நூலில் விளக்கப்படுகின்றன. இந்நூலில் வரும் தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி, செவிலி, நற்றாய் போன்றவர்கள் பேரறிவும், பெருநாகரிகமும் கொண்டவர்கள் ஆவர். அகநானூறு தமிழர்தம் பண்பையும் நாகரிகத்தையும் பெரிதும் விளக்குகிறது எனலாம்.

இந்நூலில் அரிய ஒரு வரலாற்றுச் செய்தி காணப்படுகிறது. கிரேக்க நாட்டைச் சேர்ந்த மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த போது மகதநாட்டை நந்தர் ஆண்டனர். அவர்களின் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும். அலெக்சாண்டரின் படையைக் கண்டு நந்தர் அஞ்சினர். அதனால் வலிமையான பெட்டி ஒன்றைச் செய்து அதில் தம் செல்வங்களை எல்லாம் வைத்துப் பூட்டி அப்பெட்டியினுள் நீர் புகாதவறு அமைத்து அப்பெட்டியைக் கங்கை ஆற்றில் சுரங்கம் ஒன்று அமைத்து அதில் வைத்தனர். பின்னர் அது மறைந்தும் போனது என்பது வரலாறு.

தலைவன் பொருள் தேடச் செல்கிறான். அப்பொழுது தலைவி தோழியிடம் ”தோழி! வாழ்க! நம் தலைவர் தேடச் சென்ற பொருள் எத்தகையதோ? இமயமலையை விடப் பெரிதோ? பாடலிபுரத்தில் திரண்டிருந்து பின் கங்கை நீரில் மறைந்து போன நிதியமோ?” என்று கேட்கிறாள்

”இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ?” [265]

இவ்வாறு நந்தர் மறைத்து வைத்த செல்வம் இப்பாடல் அடிகளில் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

அகநானூறு 42-ஆம் பாடலில் கபிலர் தலைவன் தலைவியை மணம் புரிய வரும் காட்சியைக் காட்டுகிறார். அவன் அவளை மணம் புரிவதற்காகச் சான்றோர்களை அழைத்துக் கொண்டு வருகிறான். அதைத் தோழி பார்க்கிறாள். அப்பொழுது அவள் தலைவியிடம் கூறுகிறாள்.

“தலைவியே! நம் தலைவன் வருகிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? வானம் வரை உயர்ந்த பக்கமலைகளை உடைய பெரிய மலையை உடையவன். அவன் இப்பொழுது உன்னை மணம் முடிக்க வருகிறான். நான் மிகவும் மகிழ்கிறேன். என் மகிழ்ச்சி எப்படி உள்ளது தெரியுமா?

மழையே பெய்யாத காலம் அது. வறுமை தோன்றியது. உழவுத் தொழிலுக்கேற்றக் கலப்பை போன்ற கருவிகள் செயல்படவில்லை. பெரிய நீர்நிலைகளில் நீரில்லை. எல்லாம் வற்றிப் போய்விட்டன. பறவைகள் வந்து தங்கவில்லை. அப்பொழுது விடியற்காலையில் திடீரென நீர்நிலைகள் நிறையுமாறு மழை பொழிகிறது. உடனே எல்லாரும் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவார்களோ அந்த அளவிற்கு நான் மகிழ்ந்தேன்”

இவ்வாறு தன் மகிழ்ச்சிக்கு ஊரார் மகிழும் மகிழ்ச்சியைத் தோழி உவமை கூறுகிறாள். உயர்ந்த மலையை உடையவன் என்று கூறுவதால் இனித் தலைவியின் வாழ்வும் உயர்ந்த புகழால் தொலைவில் வாழ்பவர்க்கும் தோன்றுமாறு சிறந்து விளங்கும் என்பது மறைமுகமாகக் கூறப்படும் செய்தியாகும்.

“கோடை நீடிய பைது அறு காலை
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே—-சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர்வரை
வான்தோய் வெற்பன் வந்த மாறே!”

சீத்தலைச் சாத்தனாரின் 134-ஆம் பாடல் தலைவனின் மென்மையான உள்ளத்தைக் காட்டுகிறது. அருமையான இயற்கைக் காட்சியைக் காட்டும் பாடல் இதுவாகும். தலைவன் தான் சென்ற செயல் முடித்துத் தேரில் திரும்பி வருகிறான். அப்பொழுது தன் தேர்ப்பாகனிடம் கூறுவதாக அமைந்துள்ள பாடல் இதுவாகும்.

வானம் வாய்ப்பக் கவினி, கானம்
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன்
செய்கை அன்ன செந் நிலப் புறவின்;

வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த 10
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.

“வானம் வாய்த்தது. மழை மேகம் கார் கால மழையைப் பொழிந்தது. நீலமணி நிறத்தில் காயாம் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றிற்கு இடையே செந்நிற மூதாய்ப் பூச்சிகள் மேய்கின்றன. வெள்ளை நிற முல்லைப் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. முல்லை நிலமே ஓர் ஓவியன் தீட்டிய வண்ண ஓவியம் போலத் தோன்றுகிறது.

தேரோட்டியே! இசைப் பாணி போன்று ஒலிக்கும்படி துள்ளித் தாவும் குதிரைகளைத் தேரில் பூட்டியுள்ளாய். அவற்றை இடித்து ஓட்டாதே. உதிர்ந்து கிடக்கும் வாழைப் பூ போன்ற கொம்புகளை உடைய இரலை ஆண்மான் பருத்த கால்களை உடைய பெண்மானைப் புணர்ந்துகொண்டிருக்கும்போது தேரின் ஒலி கேட்டால் இடையூறு நேருமல்லவா? “ என்பது பாடலின் பொருளாகும்

தலைவன் புணர்ச்சி இன்பத்தை விரும்புபவன். ஆதலால் அத்தகைய இன்பத்தை அடைந்துகொண்டிருக்கும் உயிரினங்களுக்கு இடையூறுசெய்யதல் தகாது என்றெண்ணுகிறான். அதனால் மான்களின் கூட்டத்துக்கு இடையூறின்றித் தேரைச் செலுத்துக என்கிறான். இதனால் தலைவனின் மென்மையான உள்ளம் புலனாகிறது.

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் எழுதி உள்ள 30-ஆம் பாடல் நெய்தல் நிலத்தை அழகாக வருணிக்கிறது. அத்தகைய நெய்தல் நிலத்திற்கு வந்து என் தலைவியக் கண்டு உரையாடினால் உன் பெருமை கெட்டு விடுமோ” என்று தோழி தலைவனைக் கேட்கிறாள்.

பரத-மக்கள் வலை வீசிக் கடலில் மீனைக் கொண்டு வருவர். கண்ணுக் கண்ணாக முடிந்து கயிறு கோக்கப்பட்ட வலை அது. கொண்டுவந்த மீனை இளையரும், முதியவருமாகச் சுற்றத்தாருடன் கூடிப் பயன்படுத்திக்கொள்வர்.

உப்பு விற்கச் செல்லும் உமணர் வண்டியில் பல எருதுகளைப் பூட்டி ஓட்டிச்செல்வர். உப்புவண்டிகள் பல ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும். இதற்கு ‘ஒழுகை’ என்று பெயர். இந்த ஒழுகை போல இளையரும் முதியவரும் ஒன்று திரண்டு மீனுடன் வரும் திமிலை மணல்-கரைக்கு ஒன்றாக ஒலி எழுப்பி இழுப்பர்.

களத்தில் நெல்லைத் தொகுத்து உழவுத் தொழிலாளிகளுக்கு வழங்கும் உழவர் போல, கொண்டுவந்த மீன்களைக் குவித்து, வெறும்-உண்கலத்துடன் வந்தவர்கள் நிறைவுகொள்ளும் வகையில் வழங்குவர்.

மிஞ்சியிருக்கும் மீன்களை, பாடுபட்டுக் கொண்டுவந்த மீன்களை மணல்-குவியல்களில் வைத்துக்கொண்டு விற்பர். விற்று முடித்தபின் அந்த இடத்திலேயே உறங்குவர். இப்படிப்பட்ட மீன்-துறையை உடைய நாட்டுக்கு அவன் தலைவன்.
தோழி கேட்கிறாள் தலைவனே!

புன்னைப் பூ முத்துப் போல இருக்கும். இந்தப் பூ-முத்துக்களை யாரும் அணிந்துகொள்வது இல்லை. எனவே இந்தப் பூக்கள் மண்ணா முத்தம் (அணிந்துகொள்ளாத முத்தம்) என்று பாடலில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. இப்படி மண்ணாமுத்தம் பூத்துக்கிடக்கும் கானல்-நிலத்துக்கு வந்து, தலைவியிடம் “உன் அழகு என்னவாயிற்று” என்று கேட்டுவிட்டுச் சென்றால், உன் பெருமை கெட்டுவிடுமா?” –

நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,

கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்

ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
பெருங் களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,

கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்

மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங் கானல் வந்து, ”நும்
வண்ணம் எவனோ?” என்றனீர் செலினே?

மதுரைப் புல்லங்கண்ணனார் பாடியுள்ள 161-ஆம் பாடல் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் சூழலைக் காட்டுகிறது.
தலைவன் தன்னைப் பிரியப்போவது அவளுக்கு முன்னரே தெரிய வருகிறது. அதனால் அவன் வந்தவுடனேயே கண்ணீர் வருகிறது.
தோழி கூறுகிறாள். “பிடரியில் சுருண்ட மயிர்ப் பித்தை கொண்டிருக்கும் கொடுமை செய்யும் ஆடவர் அம்புகளால் தாக்கி வழியில் செல்லும் புதியவர்களைக் கொல்வர். அந்தப் பிரிவுப் பாதையில் கழுகுகள் முடை நாற்றம் வீசும் உடல் பிண்டங்ககளைக் கூடித் தின்னத் தன் இனத்தை அழைக்கும். இப்படிப்பட்ட, அச்சம் தரும் காட்டைக் கடந்து செல்ல எண்ணிக்கொண்டிருப்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டாள் என் தலைவி.
தோளிலே சுரும்பு வண்டு மொய்க்கும்படித் தழைத்துத் தொங்கும் கூந்தல், அழகிய மாமை நிற மேனி, நுட்பமான அணிகலன்கள், ஆகிவற்றைக் கொண்ட சுணங்கு தோய்ந்த மார்பில் எழுகின்ற இளமையான முலை நனையும்படி மலர் போன்ற கண்களிலிருந்து கண்ணீரை உகுக்கிறாள் தலைவி. ஆதலால் இவளைப் பிரிந்துசெல்லல் தகாது” என்கிறாள் தோழி.

வினைவயிற் பிரிதல் யாவது? ”வணர் சுரி
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி;
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை,
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி 5
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர்” என்பது சிறப்பக்
கேட்டனள் கொல்லோ தானே? தோள் தாழ்பு

சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல், 10
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல் வரல் இள முலை நனைய;
பல் இதழ் உண்கண் பரந்தன பனியே.

இவ்வாறாக அகநானூறு தலைவன் தலைவி மற்றும் தோழி போன்றோரின் உள்ளுணர்வுகளைப் படம் பிடித்துக் காட்ட்டும் பெட்டகமாக விளங்குகிறது எனலாம்.