
நிகழ்ச்சியை மேடையில் ஒலி வடிவில் தொகுத்து வழங்கிய டாக்டர் பாஸ்கரன் குவிகம் மின்னிதழிற்காக எழுத்து வடிவில் தொகுத்து வழங்குகிறார்:
எழுபதுகளில், மாதாமாதம் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளை வாசித்து, மாதம் ஒரு ஒரு சிறுகதை என்ற வகையில் 12 மாதங்களில் 12 சிறுகதைகளைத் தேர்வு செய்து, அவற்றில் சிறந்த ஒரு கதைக்கு ‘இலக்கியச் சிந்தனை பரிசு’ வழங்கி கவரவித்தது ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பு!
பா.லட்சுமணன், பா.சிதம்பரம், பாரதி ஆகியோர் ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் கீழ் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பெரிய விழாவாகக் கொண்டாடி, பரிசினை வழங்குவார்கள். தமிழகத்தின் எல்லா எழுத்தாளர்களும், வாசகர்களும் கூட்டமாக அன்று கூடுவார்கள்.
வானதி பதிப்பகத்தார், அந்த 12 சிறுகதைகளையும் தொகுத்து, ஒரு புத்தகமாகக் கொண்டுவருவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளை ஒரு மூத்த எழுத்தாளர் மதிப்பீடு செய்து, ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கான தனது காரணங்களையும் ஒரு முன்னுரையாக எழுதி, அந்தப் புத்தகத்தில் சேர்த்திருப்பார்கள்! சிறுகதை படைப்பிலக்கியத்திற்கும், வாசகர்களின் ரசனைக்கும் மிகச் சிறந்த பாலமாக அமைந்தது இந்த நிகழ்வு.
இதனைத் தொடர்ந்து செயல்படுத்துகின்ற வகையில், ‘குவிகம்’ இலக்கிய வாசல், மாதம் ஒரு சிறுகதையைத் தேர்வுசெய்து, அந்த வருடத்தின் பன்னிரெண்டு சிறுகதைகளில் சிறந்த முதல் மூன்று சிறுகதைகளைத் தேர்வு செய்து, குவிகம் சிறுகதைத் தொகுப்பாக கொண்டுவந்துள்ளது.
மூத்த எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் முதல் மூன்று கதைகளோடல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஒன்பது சிறு கதைகளுக்கும் பரிசு வழங்க மகிழ்ச்சியுடன் முன்வந்தார்கள்.
மேலும் 2022 -23 ஆம் வருடத்திய சிறந்த சிறுகதைகளையும் தேர்வு செய்து, தனது மதிப்பீட்டினையும் முன்னுரையாக எழுதித்தந்துள்ளார்கள்! அவர்களுக்குக் குவிகம் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது!
ஜூலை 27, 2023 அன்று, சென்னை, கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக்கழகம் அரங்கில், ‘சிவசங்கரி குவிகம் சிறுகதைத் தொகுப்பு’ (பிரம்ம சாமுண்டீஸ்வரி) புத்தக வெளியீட்டு விழாவும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. ‘குவிகம்’ பற்றிய காணொளியைத் தொடர்ந்து, திரு வ வே சு அவர்கள் தலைமையுரை ஆற்ற, பரிசளிப்பும், புத்த வெளியீடும் நடந்தேறின. புத்தகத்தை வெளியிட்டு, பரிசுகளை வழங்கி, சிறப்புரையாற்றிய திருமதி சிவசங்கரி, சிறுகதைகளின் சிறப்பு பற்றியும், சிறுகதைகளுக்கான இலக்கணம் பற்றியும், தன்னை பாதித்த சிறுகதை ஒன்றைப்பற்றியும் பேசினார். தேர்வாகியிருக்கும் 12 கதைகளும் ஒரே மாதிரியான கருத்துக்களை உள்ளடக்காமல், ஒன்றிலிருந்து மற்றொன்று கரு, சூழல், நடை என்று அனைத்திலும் மாறுபட்டிருப்பது கவனிக்கத்தக்கது என்றார். இந்தப் பரிசளிப்பு விழாவில் தானும் பங்கேற்பது குறித்து பெருமைப்படுவதாகக் கூறி, ‘குவிகம்’ குழுமத்திற்கு நன்றி சொன்னார்!
நடுவர்கள் சார்பில் திரு மந்திரமூர்த்தி அழகு அவர்களும், பரிசு பெற்றவர்களில் வந்திருந்த அனைவரும் நன்றி தெரிவித்தனர். டாக்டர் பாஸ்கரன் தொகுத்து வழங்கிய இவ்விழாவுக்கு நன்றியுரை திரு எஸ் எல் நாணு!
ஆனந்தவிகடன், அம்ருதா, உயிரெழுத்து, காலச்சுவடு, சொல்வனம், தினமலர், திண்ணை, கல்கி, உயிர்மை ஆகிய இதழ்களிலிருந்து சிறுகதைகள் தேர்வாகியிருந்தன.
சிறுகதை இலக்கியம் என்பது மாறிக்கொண்டே இருக்கும் ஒரு சுவாரஸ்யம். மாற்றங்களுக்கேற்ப, வாசகனின் எதிர்பார்ப்புகளும், ரசனைகளும் மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்! இன்றியமையாத இந்த மாற்றங்களுக்கு ஒரு நுழைவாயில் குவிகம் இலக்கியவாசலின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு என்றால் அது மிகையில்லை!
-டாக்டர் ஜெ பாஸ்கரன்
சிவசங்கரி அவர்களின் உரை ( நன்றி ஷ்ருதி டி வி )
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்: ( நன்றி ஹரிஹரன்)
(பரிசு/சன்மானம் பெற்ற கதைகள் பன்னிரண்டும் அடங்கிய இப்புத்தகம் நம் அனைவரிடமும் இருக்கவேண்டும். புத்தகம் தபாலில்/நேரடியாகப் பெற நண்பர் கிருபானந்தனை தொடர்பு கொள்ளவும் ( 97910 69435)
பரிசு பெற்ற கதைகள்:
ஜனவரி 23 – பிரம்ம சாமுண்டீஸ்வரி – இரா. சசிகலாதேவி – சொல்வனம் – ஜனவரி 8, 2023 நடுவர் – ஆன்சிலா ஃபர்னான்டோ –(முதல் பரிசு -ரூபாய் 10000 )
செப்டம்பர் 22 – ஒத்திகைக்கான இடம் – ஜிஃப்ரி ஹாசன் – சொல்வனம் 11-09 22 – நடுவர் லதா ரகுநாதன் (இரண்டாம் பரிசு – ரூபாய் 8000)
மே 23 ஒரு துளி நெருப்புக்குக் காத்திருக்கும் யாக குண்டங்கள்- மா காமுத்துரை – ஆனந்த விகடன் 23-05-2023 – நடுவர் மதுவந்தி – (மூன்றாம் பரிசு ரூபாய் 4000)
ரூபாய் 2000 பெறும் மற்ற 9 கதைகள்:
1. ஜூலை 22 – பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்.. சுப்ரபாரதிமணியன் – உயிர்மை – நடுவர் ம சுவாமிநாதன்
2. ஆகஸ்ட் 22 – ஊமைச்சாமி – சியாமளா கோபு – புதுத் திண்ணை நடுவர் குவிகம் சுந்தரராஜன்
3. அக்டோபர் 22 – அனாதை மரங்கள் – கிறிஸ்டி நல்லரெத்தினம் -கல்கி 7 அக்டோபர் – நடுவர் ராஜாமணி
4. நவம்பர் 22 – தாயகக் கனவுடன்… குரு அரவிந்தன் – திண்ணை 27 நவம்பர் 2022 – நடுவர் சுரேஷ் ராஜகோபால்
5. டிசம்பர் 22 – சாமி போட்ட பணம் – ஆர்னிகா நாசர் – தினமலர் வாரமலர் 4 டிசம்பர் 2022 – நடுவர் (சாந்தி ராசவாதி)–
6. பிப்ரவரி 23 – பாட்டுவெயில் – சாந்தன் – காலச்சுவடு – நடுவர் அழகிய சிங்கர்
7 . மார்ச் 23 – தாவரங்களுடன் உரையாடுபவள் – சோ சுப்புராஜ் – உயிர் எழுத்து மார்ச் 2023 – நடுவர் கிரிஜா பாஸ்கர்
8 . ஏப்ரல் 23 – மங்க்கி கேட்ச் – ஜார்ஜ் ஜோசப் –உயிரெழுத்து – ஏப்ரல் 2023 – நடுவர் ஈஸ்வர்
9. ஜூன் 23 – விருது – அரவிந்தன் – அம்ருதா – நடுவர் மந்திரமூர்த்தி அழகு
பரிசுக்கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசுக்கான தொகையையும் கொடுத்த சிவசங்கரி அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி!!












இலக்கிய சிந்தனை க்கூட்டத்தில் கலந்து கொண்ட நாட்கள் மிக மிக இனிமையானவை. எழுத்தாளர்களான பாலகுமாரன், மாலன், சுப்ரமண்யராஜூ, தேவன், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். குவிகம் அதனை தொடர்வது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
LikeLike