சபாஷ்! சரியான போட்டி!!

திண்ணை | வாரமலர் | Varamalar | tamil weekly supplementsதிண்ணை | Dinamalarதிண்ணை | Dinamalar

சற்று அவசரப் பட்டு விட்டோமோ என என் மனது கிடந்து இன்று ஏன் அடித்துக் கொள்கிறது.
வயது எழுபதைத் தாண்டி விட்டது. இந்த வயதில் இப்படி ஒரு ஆசையா, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்ன நினைத்தால் நமக்கென்ன, நாம் ஒன்றும் தவறு செய்ய வில்லை, எதற்கு கவலைப் பட வேண்டுமென முடிவெடுத்து சில நாட்களாகி விட்டன.

பின் ஏன் இன்று இந்தக் குழப்பம். குழப்பத்திலிருந்து எப்படி வெளி வருவது? பிரச்சனை என்ன என்று கூறினால்தானே, நீங்கள் ஏதாவது எனக்கு வழி கூற முடியும். சொல்கிறேன்.

எல்லாம் எனது வயதொத்த நண்பர்கள் அடிக்கடி போடும் வாட்ஸ்அப் பதிவுகளால் வந்த வினை. பெரும்பாலும் நான்கு நாட்களுக்கு ஒரு தடவையாவது வயது எழுபதைத் தாண்டினால் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்ற செய்திகள் வந்து விழுந்து கொண்டே இருக்கும். சில தகவல்கள் நாம் கடை பிடித்து வந்தால் நமக்கு சந்தோசமாக இருக்கும். சில செய்திகள் நமக்கு ஒத்து வராது, எனவே அவற்றை நமக்கில்லை என ஒதுக்கி விடுவோம்.

அவ்வாறு வந்தவற்றில் என்னைக் கவர்ந்த செய்தி ஒன்று, ‘ நமக்கு பிடித்தவைகளை நாம் செய்ய வேண்டும். ஏதாவது ஒன்றில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற யாரோ ஒருவர் அனுப்பிய தகவல்.

ஆர்வம் என்பது ஒவ்வொரு நேரத்திலும் வேறு வேறாக மாறி வருகிறது. நேற்று ஒன்றின் மேல் வைத்த ஆர்வம் இன்று அதன் மீது இல்லை.
10-15 ஆண்டுகளுக்கு முன் இசையென்றால் உயிர். பழைய திரைப் பாடல்களை விழுந்து விழுந்து கேட்பேன். கடைசி காலத்தில் ஆர அமர உட்கார்ந்து கேட்கலாம் என எண்ணி மாய்ந்து மாய்ந்து ஆதி காலம் துவங்கி MKT, P U சின்னப்பா, PBS, TMS, சுசிலா, சந்திர பாபு, இளைய ராஜா, A R R என தேடித் தேடி சுமார் 5000 பாட்டுகளை இரவு பகலில் நேரம் கிடைக்கும் பொழுதெலாம் கணினியில் பதிவு செய்து வைத்தேன்.கடைசியாக பாடல் கேட்டு மூன்று வருடம் ஆகிறது.

கடந்த இரண்டு- மூன்று ஆண்டுகளாக புத்தகங்களை இரவும் பகலும் படிக்கத் துவங்கி புத்தகங்களை வாங்கிக் குவித்தேன். கடைசியாக புத்தகத்தை தொட்டது ஆறு மாதங்களுக்கு முன்னர்.

இப்பொழுது முளைத்த ஆசை என்ன சொல்லேன் என சலித்துக் கொள்வது தெரிகிறது.

ஒன்றுமில்லை…….(வெட்கம்). பாட்டு கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். கர்நாடக சங்கீதம் இல்லை. ஓதுவார்கள் இசைப்பது போல தேவாரம், திருவாசகம் கோவிலில் அமர்ந்து இசைக்க ஆசை.

நல்ல ஆசிரியரின் தேடல் துவங்கியது. இசைக்கூடத்தில் போய் அமர்ந்து கற்றுக் கொள்வது சற்று சிரமம். கர்நாடக இசையாசிரியர் போல தேவாரம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கண்களில் படவில்லை.

அச்சமயம் ஒரு குறுஞ்செய்தி தேவாரம் கற்றுக் கொள்பவர்கள் தொடர்பு கொள்ளலாம் என கண்களில் பட்டு என்னை குளிர்வித்தது.

ஆசிரியை சிதம்பரத்தில் இசைப்பள்ளி நடத்துகிறார். ஜூமில் பயிற்சி. ஒரு வகுப்பில் ஐவர் மட்டுமே. நேரம் கூட காலை, மதியம், மாலை, இரவு என விருப்பப்படி தெரிவு செய்து கொள்ளலாம்.

எல்லாம் நன்றாக இருக்கவே ஒரு நல்ல நாளில் நல்ல நேரம் பார்த்து பணத்தை கட்டி விட்டேன். பின்னர் ஐவரின் பெயர் வெளியிடப் பட்டது. ஐந்தாவதாக தைலாம்பிகை என்ற பெண்ணின் பெயரைப் பார்த்ததும் வயிற்றில் சற்றும் கலவரம்.

ஆசிரியைக்கு போன் செய்தேன். ‘அம்மா எனக்கு பாட்டு வருமா?’ இது நான்.
ஆசிரியை: ஐயா! உங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது. கண்டிப்பாக வரும்.
நான்: கச்சேரியெலாம் செய்யப் போவதில்லை. ஓதுவார் அளவிற்கு பாடினால் போதும்மா.
ஆசிரியை: கண்டிப்பாக பாடலாம் ஐயா.
நான்: எவ்வளவு மாதங்கள் ஆகும் அம்மா.
ஆசிரியை: தொடர்ந்து கற்று வந்தால் 12-15 வருடங்களில் நன்றாக பாடலாம் ஐயா.
நான்: என்ன சொன்னீங்கம்மா?
நான்.: சற்று விரைவில் கற்றுக் கொள்ள முடியாதாம்மா?
ஆசிரியை: முடியும் ஐயா. காலை ஒரு மணி நேரம் மாலை ஒருமணி நேரம் பயிற்சி செய்தால் பத்து ஆண்டுகளில் வந்து விடுமய்யா.
நான்: சரிங்கம்மா. ( மனதுக்குள் என் 85 வது வயதில்தான் பாட முடியும்)
கற்கும் பொழுது சக மாணவர்களுடன் தேர்வு, போட்டியெலாம் உண்டாம்மா?
ஆசிரியை: ஆம் ஐயா.
நான்: தைலம்பிகை என்ற பெண்மனி கூட நான் போட்டி போட வேண்டுமா அம்மா?
ஆசிரியை: ஆம் ஐயா. ஆனால் தைலாம்பிகை முதல் வகுப்பு படிக்கும் ஆறு வயது மாணவிதான் ஐயா.
நான்: ஓ! அப்படியா! சரிங்கம்மா

சபாஷ் சரியான போட்டிதான். ஆனால் என் வகுப்புத் தோழியுடன் போட்டி போட்டு பாட வேண்டுமே என்ற கவலை இப்பொழுதே என்னைப் பற்றிக் கொண்டது. குழப்பத்திற்கு காரணம் இதுதான்.

எதுவாயினும் என் 85 வது வயதில் ஏதாவது ஒரு கோவிலில் அமர்ந்து நான் பாடும் தேவாரத்தை நீங்கள் கேட்கலாம்.