`
இந்தக் கதை ஹிந்தியில் அனு சிங் சௌதரி அவர்களால் எழுதப்பட்ட ‘நீலா (ஃப்ளூ) ஸ்கார்ப்’ என்ற கதைத் தொகுப்பிலிருந்து எடுத்து சுருக்கி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கதையின் ஓட்டம் ஏதும் தடைபடவில்லை.

சாம்பவி மௌனமாகத் தன்னுடைய சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். படுக்கையில் ஒரு பெரிய பெட்டியும், துணிகளும் சிதறிக் கிடந்தன. பின்னே மூன்று மாதங்கள் வெளியூர் பயணம் என்றால் சும்மாவா! அந்த நாட்டு கலாச்சாரம், சீதோஷணத்திற்கேற்றவாறு எல்லாம் எடுத்துப் போக வேண்டுமே! எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள். ஏழு வருட வாழ்க்கை! உறவுகள், மனம், சுக துக்கம், குற்றங்கள் இவைகளை எங்கே விட்டுச் செல்ல! இதன் நடுவில் சில்க் துணியில் நீல சால்வையைப் பார்த்து அப்படியே அதை எடுத்துத் தன் கைப்பையில் திணித்துக் கொண்டாள்.
இந்த சால்வை எதை எல்லாம் நினவுப்படுத்துகிறது!. ஞாபகங்கள் இங்கும் அங்கும் அலை பாய்கின்றன. அவற்றைத் துடைப்பதோ, அலம்பி விடுவதோ எளிதல்ல. ஏழு வருடங்களுக்கு முன் கல்யாணமான முதல் மாதம் ஐந்தாவது நாள் புதன் கிழமை டிசம்பர் 6 ந் தேதி சாம்பவி அமிதேஷின் கையை ஒரு கையாலும், கோல்ட் காபியை மற்றொரு கையாலும் பற்றிக் கொண்டு ஜன்பத் இடத்தைச் சுற்றி வரும்போது இதை வாங்கினாள். சாம்பவிக்கு எப்போதும் தேதிகள் நன்றாக ஞாபகத்தில் இருக்கும். ஏன் இதை வாங்கினாள் என்று ஞாபகம் இல்லை. அப்படிப் பார்த்தால் ஏன் கல்யாணம் பண்ணிக் கொண்டாள் என்றும் தெரியவில்லை! இப்போது தலை கால் இல்லாத இவைகள் மூளையைக் குழப்புகின்றன.
இப்போது கட்டிலில் இருக்கும் சிவப்பு ஜாக்கெட் மேல் கவனம் செல்கிறது. இதன் மீது பலத்த சர்ச்சை, சின்னதா, பெரியதா, துணி நன்றாக இருக்கிறதா, விலை அதிகமா இப்படி. 45 நிமிடங்களுக்குப் பிறகு அமிதேஷ் கட்டாயப் படுத்தி வாங்க வைத்தான். இப்போது ஏன் இவையெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த நினைவுகளை எல்லாமா விமானத்தில் எடுத்துச் செல்ல முடியும்? இதை வாங்கின அன்றுதான் திரைச் சீலையும் வாங்கப்பட்டது. இப்போதும் அது ஹாலில் உள்ளது. பெட்ரூமில் வேறு கலர். கலர் மட்டுமா மாறியுள்ளது! எல்லாமே. ஒரே ரூமில் இருந்தும் இவர்கள் தனித் தனியாக.
‘எப்போது திரும்பி வருவாய்?’ என்ற கேள்விக்கு ‘தெரிந்தது தானே’ என்று சாம்பவி எதிர் கேள்வி கேட்டாள். வேறு ஒன்றும் பேசத் தோன்றாமல் அமிதேஷ் தன் ரூமிற்குச் சென்று விட்டான். சாம்பவி மூன்று மாதங்களுக்குச் செல்கிறாள். திரும்பி வருவாளா என்று தெரியவில்லை. இது தற்காலிகப் பிரிவா, நிரந்தரமா, மிகவும் சூன்யமாக இருந்தது. காலியான காப்பி கோப்பை, விடுமுறை நாட்கள் வேகமாகக் கழிதல், வெளியூர் செல்லத் தயாராகுதல் இவைகளில் ஒன்று போதும் அந்த இடத்தை சூனியமாக்க.
சாப்பாடு செய்பவள், வீட்டு வேலை செய்பவள், பிளம்பர், ஆஸ்பத்திரி, மளிகைக் கடை, வீட்டிற்கு உணவு தருபவர் என்று எல்லா ஃபோன் நம்பர்களையும் எழுதிய ஒரு பேப்பரை சாம்பவி ஃபிரிஜ் மேல் ஒட்டி வைத்தாள். வாஷிங் மெஷின் போடுவது, சலவைக்குத் துணிகள் கொடுப்பது, திரைச் சீலை மாற்றுவது, சமையல் செய்வது என்று எல்லாமே சாம்பவிதான். சலவைக்கு எத்தனை பணம், மாவு என்ன விலை, வேலையாளுக்கு என்ன சம்பளம் இவை எதுவுமே அமிதேஷுக்குத் தெரியாது. ஆனால் இந்த மூன்று மாதங்களுக்கு இவை எல்லாம் செய்ய வேண்டும். சாம்பவி திரும்பி வராவிட்டால் இவைகளைக் காலம் பூராவும் செய்ய வேண்டி வரும்.
வண்டி விமான நிலையத்தின் வாசலில் நின்றது. வீட்டின் அமைதி வண்டியிலும் தொடர்ந்தது. சாம்பவி ஒன்றும் பேசாமல் வந்தாள். ஆனால் அமிதேஷ் மனத்தில் இருந்த சஞ்சலம் விமான நிலையத்தை அடைவதற்குள் மூன்று தடவை தவறான பாதையில் செலுத்தியது. அவன் வசம் இருந்தால் வண்டியை வீட்டிற்குத் திருப்பியிருப்பான். சாம்பவியே அவன் வசத்தில் இல்லையே! சாம்பவி வேகமாக வண்டியிலிருந்து பெட்டியை எடுத்தாள். அவசரம் ஒன்றும் இல்லை. ஆனால் அவள் அமிதேஷிடமிருந்து சீக்கிரம் தள்ளிப் போக விரும்பினாள். அமிதேஷும் அவளுடைய நீல சால்வை தெரியும் மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தான். இப்போது அவனுக்கு வீட்டின் வெறுமை புரிந்தது.
விமான நிலையத்தில் எல்லா நடைமுறைகளும் முடிந்த பிறகு சாம்பவி லேப்டாப்பைத் திறந்தாள். விமானம் புறப்பட இன்னும் நேரம் இருந்தது. கடிதத்திற்குப் பதில் எழுதலாம், இன்டர்நெட்டில் மேலும் சில வேலைகள் செய்யலாம் ஆனால் இந்த ஏழு வருடங்களாகச் செய்யாததையா இப்போது செய்யப் போகிறாள்! சில கடிதங்களுக்கப் பதில் கொடுத்து இங்கும் அங்கும் ஓட்டியபின் போட்டோஸ் மேல் அவள் கவனம் சென்றது. கல்யாணத்திற்கு முன், கல்யாணத்தன்று, ஹனிமூன், நண்பர்கள் ஓ அந்த நாள்! 13 பிப்ரவரி! நாள் தள்ளிப் போயிருந்தது. டெஸ்ட் செய்ததில் பாசிட்டிவ் என்று வர, ‘நம்மால் முடியாது. இவ்வளவு சீக்கிரமாகவா! உன் வேலை என்ன ஆகிறது. நான் இன்னும் கால் ஊன்ற வேண்டும்’ என்று அமிதேஷ் பேசிக் கொண்டே போனான். சாம்பவி ஸ்தம்பித்துப் போய் விட்டாள். இருந்தும் ஒரு சிறிய முயற்சியாக ‘ஏன் நாம் தயாராக இல்லையா! உனக்கு 32, எனக்கு 27. இது சரியான வயது. பின் என்ன?’ ‘கல்யாணம் ஆகி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. நான் தயாரில்லை. மேற்கொண்டு பேச எதுவும் இல்லை. அவ்வளவுதான்’ என்று அங்கிருந்து அகன்று விட்டான்.
பிறகு இரண்டு வாரங்கள் அவன் வெளியூர் சென்று விட்டான். சாம்பவியைத் தனியே விட்டு. கர்ப்பம் தரித்தது குறித்து சந்தோஷப் படுவதா அல்லது அழுவதா, குழந்தையை வரவேற்பதா, விடை கொடுப்பதா என்று சாம்பவி தனியே யோசிக்க வேண்டியதாயிற்று. அந்த இரண்டு வாரங்களும் எப்படி போனதே என்றே தெரியவில்லை.
சாம்பவி தன் மாமியார், மற்றும் உறவினர்கள் தனக்கு உதவுவார்கள் என்று இந்த சந்தோஷ சமாச்சாரத்தைச் சொன்னாள். எல்லோரும் இவளுக்கு வாழ்த்து சொல்லி கவனமாக இருக்க அறிவுறித்தினார்கள். முட்டாள் சாம்பவி. அவர்களே அமிதேஷ் வந்தவுடன் தங்களது பாதையை மாற்றிக் கொண்டார்கள். ‘தயாராக இல்லாதபோது நீதான் கவனமாக இருக்க வேண்டும். அவனுடந்தானே வாழ வேண்டும். அப்ப எந்தக் குழந்தையை அவன் விரும்பவில்லையோ அதைப் பெற்று என்ன செய்யப் போகிறாய்? நான் ஆறுதல் தான் தர முடியும்’ என்று அம்மா சொல்ல, மாமியார் இவளுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்.
டாக்டரிடம் தனியே சென்று வந்தாள். இவள் அழுவதைப் பார்த்து ‘கல்யாணம் ஆகி விட்டதல்லவா!’ என்று சந்தேகப்பட்டார். அமிதேஷ் சாம்பவியை அபார்ஷன் செய்யக் கூட்டிப் போனான். டாக்டர் அவர்களுக்கு அறிவுரை கூறினார். ஏழு வார கர்ப்பம். சாம்பவி செய்வதறியாது மௌனமாக இருந்தாள். கரு கலைந்த பின் அமிதேஷ் அவளை அம்மா வீட்டிற்கு அனுப்பி விட்டான். சாம்பவி தனியே துக்கத்தை அனுபவித்தாள். அமிதேஷும் கூட இருந்து துக்கத்தைப் பங்கு போட்டிருக்கலாம். இவள் தனியே முடிவெடுக்காததற்காகத் தன்னையே நொந்து கொண்டாள்.
அமிதேஷ் தன் வேலையில் முன்னேறிக் கொண்டே இருந்தான். ஒரு நாள் ‘சாம்பவி நாம் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம். நீ வேலையை விட்டு விட்டு வரப் போகும் குழந்தையை எதிர்நோக்கு’ என்று கூறினான். சாம்பவி ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த மாதமே அவள் கர்ப்பம் தரித்தாள். ஆனால் இந்தத் தடவை அமிதேஷ் உட்பட யாரிடமும் சொல்லவில்லை. சில நாட்களிலேயே உதிரப் போக்கு ஏற்பட டாக்டர் திட்டிக் கொண்டே ட்யூபில் சிக்கிய குழந்தையை ட்யூபோடு எடுத்து விட்டார். ‘ட்யூப் எடுத்தாலும் கர்ப்பம் தயாரிக்க முடியும்’ என்று அமிதேஷ் சமாதானப்படுத்தினான். சாம்பவி கண்ணீர் வழிய முதல் முறையே தான் திடமாக சண்டை போட்டு, முடிவெடுத்து, குழந்தையைத் தக்க வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
இருவருக்குள்ளும் பிரிவு அதிகமானது. காலம் கடக்க அமிதேஷ் பெண் மருத்துவரிடம் பார்க்கலாம் என்று சொன்னதிற்கு ‘குடும்ப ஆலோசகர் அல்லது வக்கீலைப் பார்க்கலாம்’ என்று சொன்னாள். பிறகு தூர இருக்கலாம் என்று பெலோஷிப்பிற்கு விண்ணப்பித்தாள்.
மொபைல் சிணுங்கவே இந்த உலகத்திற்கு வந்து பேசினாள். ‘செக் இன் ஆகி விட்டதா?’ ‘ம்’ ‘என்ன கோவமா?’ ஒன்றும் சொல்லாமல் மொபைலை வைத்து விட்டாள். இதற்குப் பிறகு இன்டர்நெட் வேலை செய்ய முடியாததால் கடைசியாக கடிதங்களைப் பார்த்தாள். அமிதேஷின் பேரைப் பார்த்தவுடன் திடுமென்று சிலிர்த்தாள். முன்பும் அவன் நிறைய கடிதங்கள் அனுப்புவான். மார்ச் 8 லிருந்து கல்யாண நாள் ஆகஸ்ட் 16 வரை 5 நிமிடத்திற்கு ஒரு கடிதம் அனுப்புவான். ‘நீ எப்படி மனதைக் கவர்ந்தாயோ அப்படி உன் கடிதமும் என்னைக் கவர்ந்தன’ என்று கல்யாணத்தன்று சொன்னாள். தன் அன்பைச் சொல்ல, கல்யாணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய என்று எல்லாவற்றிக்கும் கடிதம்தான்.
இந்தக் கடிதத்தில் என்ன எழுதி இருக்கப் போகிறான்! படிக்காமலேயே அழித்திடலாமா என்ற யோசனையுடன் அதைத் திறந்தாள். ‘சாம்பூ, நீ கோவமாக இருப்பாய் என்று தெரியும். உன்னை நல்லவிதமாகப் பார்த்துக் கொள்ள வேலையை விட்டு தனியே கம்பெனி தொடங்கினேன், உனக்காக லோன் போட்டு வீடு வாங்கி லோனை அடைத்தேன், நீ கஷ்டப்படக்கூடாதே என்று தான் குழந்தையையும் தள்ளிப் போட்டேன்.. நாம் இருவரும் இப்போதும் ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதனால் தான் நீயும் எனக்காக எல்லா ஃபோன் நம்பர்களையும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறாய். நீ இப்போது நன்றாக பெலோஷிப் முடித்து ஊர் எல்லாம் சுற்றி விட்டு வா. நான் நம் குழந்தையை எதிர் நோக்கி வீட்டில் இருப்பேன். சீக்கிரம் திரும்பி வா’.
விமானம் பறக்கத் தயாராயிற்று. ‘குழந்தையை இரண்டு பேரும் காப்பாற்றி இருக்க வேண்டும். இப்போது அதற்கு ஆறு வயதாகி இருக்கும்’ என்று சாம்பவி தன்னையே நொந்து கொண்டாள். நமது முடிவு, நமது அதிர்ஷ்டம். சாம்பவி விமானம் நோக்கிச் சென்றாள். நாற்காலியில் விட்ட நீல சால்வையும் தன்னுடைய அதிர்ஷ்டத்தையும் சாம்பவியின் முடிவையும் ஏற்றுக் கொண்டது.
