கடல்புறா

kadal-pura

வீரராஜேந்திரனுக்குப் பிறகு அரசாண்ட மன்னன் காலத்தில், சோழர்கள், கலிங்கம் முதல் கடாரம் வரை கொண்ட வெற்றிக்கு, வீரராஜேந்திரன் காலத்தில் நடந்த நிகழ்வுகளே ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தது. அவைகள் பெருங்காரணமாகவும் இருந்தது.

1063 ஆம் வருடத்திலிருந்து, 1070 வரை: தமிழக வணிகர் வெளி நாடுகளில் பட்ட துன்பங்கள் சொல்லத்தகாதவையாக இருந்தது. கடார இளவரசராக இருந்த குணவர்மனுக்கும், ஸ்ரீவிஜயசாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியில் இருந்த ஜெயவர்மனுக்கும் இடையில் ஆட்சி உரிமைப் போட்டி இருந்தது. இதை சோழ இளவரசன் அநபாயன் சமாதானமான ஒரு ஒப்பந்தத்தால் முடித்து வைத்தான். இது கதையின் களம். அப்போது சோழ தேசத்து மன்னன் வீரராஜேந்திரன்.

கடல் புறா 2 [Kadal Pura] (கடல் புறா, #2) by Sandilyan | Goodreadsஇதில் கருணாகரப்பல்லவன் (இளையபல்லவன்) செய்த சாகசங்களை சாண்டில்யனின் கடல்புறா என்ற காவியப்புறா வாயிலாக கோடானுகோடித் தமிழ்மக்கள் படித்து இன்புற்றிருக்கின்றனர். உள்ளங்கவர்ந்த அந்த நாயகன் இளையபல்லவனை எண்ண எண்ண நமக்கு சரித்திரம் இனிக்கிறது. அந்த விருந்தை நமக்குத் தந்த சாண்டில்யனுக்கு நமது அஞ்சலி. கடல்புறாவை நாம் சற்று சுவைப்போம்.

முதலில் முகாந்திரம்: கலிங்கத்திலும், ஸ்ரீவிஜய அரசை ஆண்ட சைலேந்திரர்களும், கலிங்கத்தை ஆண்ட பீமன், அனந்தவர்மன் அனைவருமே, அங்கு வாணிபம் செய்து வாழப் போன தமிழர்களை மிகவும் துன்புறுத்தி, அடிமையாகவும், எந்தவிதமான சுதந்திரமும் இன்றி வைத்திருந்தனர். இதுவே பின்னாளில் கலிங்கத்துப்பரணி கூறும் கலிங்கப்போருக்கு அடிப்படையானது.

ஜெயவர்மனால் ஆளப்பட்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்தின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட சோழர்களின் உதவி நாடி ஜெயவர்மனின் மூத்த சகோதரன், குணவர்மன் அவரது மகள் காஞ்சனாதேவியுடனும் கலிங்க தேசத்தை சார்ந்த பாலூர் துறைமுகத்தை வந்தடைகிறான். குணவர்மனை சோழநாட்டுக்கு செல்லவிடாமல் கலிங்கத்திலேயே ஒழித்துவிட ஜெயவர்மன் திட்டமிடுகிறான். அந்த சதித்திட்டத்தை அறிந்த சோழச்சக்ரவர்த்தி வீரராஜேந்திரன், குணவர்மனையும், காஞ்சனா தேவியையும் பாதுகாப்புடன் சோழநாட்டுக்கு அழைத்துவர சோழ படைத்தலைவன் இளையபல்லவனை அனுப்புகிறார். மேலும் கலிங்கத்தில், குறிப்பாக பாலூரில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை நிறுத்த, இளையபல்லவனிடம் ஒரு சமாதான ஓலையையும் கொடுத்து, தென்கலிங்க மன்னன் பீமனிடம் சேர்த்து விடவும் வீரராஜேந்திரர் உத்தரவிடுகிறார். இந்த சமாதான நடவடிக்கைக்காக சோழ இளவரசர் அநபாயர் முன்னரே கலிங்கம் சென்று பீமனால் சிறைப்படுத்தப்பட்டு பின் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாய் இருக்கிறார். சமாதான ஓலையுடன் வந்த இளையபல்லவன் பாலூர் பெருந்துறை துறைமுகத்தில் சிக்கிக்கொள்கிறான். அங்கிருந்து தப்பி ஓடி, விருந்தினர் மாளிகையில் கடாரத்தின் இளவரசர் குணவர்மனையும், அவனது புதல்வி காஞ்சனாதேவியையும் சந்திக்கிறான். கலிங்கவீரர்களால் தந்திரமாக பிடிக்கப்பட்ட இளையபல்லவனை, கலிங்க நீதிமன்றத்திலிருந்து துணிச்சலாக இளவரசர் அநபாயர், காஞ்சனாதேவி ஆகியோர் காப்பாற்றுகின்றனர். இளையபல்லவன், காஞ்சனாதேவி இருவரும் காதல் புறாக்களாகின்றனர்.

கடல்புறா - Tamil Wiki

பாலூர் துறைமுகத்திலிருந்தும், கலிங்க மன்னனின் பிடியிலிருந்தும் தப்ப, இளையபல்லவன், குணவர்மன், காஞ்சனாதேவி, இளவரசர் அநபாயர், மற்றும் கலிங்க நாட்டில் சுங்க அதிகாரியாகவும் சோழ உளவாளியாகவும் பணியாற்றும் கண்டியத்தேவன், கலிங்கத்தின் வணிகன் சேந்தன் ஆகியோர் திட்டமிடுகின்றனர். அநபாயனின் நண்பன் அரபு நாட்டு அமீர் இதற்கு உதவுகிறான். மற்றும் அந்த பிராந்தியத்திலேயே பயங்கர கடல் கொள்ளைக்காரனும், அமீரின் ஆசானுமான அகூதாவின் உதவியும் கிடைக்கிறது. அமீரின் திட்டப்படி, தண்ணீர் பானைகளுக்குள் அனைவரும் மறைந்து தப்ப முயற்ச்சிக்கின்றனர். துறைமுகத்தில் நடை பெற்ற பெரும் சண்டையில் அநபாயர், குணவர்மன், காஞ்சனாதேவி ஆகியோர் மட்டும் தப்பி சோழநாடு செல்கின்றனர். இளையபல்லவன், அமீர், கண்டிய தேவன், சேந்தன் ஆகியோர் கலிங்க வீரர்களால் தடுக்கப்பட்டு பின் அகூதா மூலம் தப்பிக்கின்றனர்.

கடல்புறா - Tamil Wikiஉறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும். பாலூர் பெருந்துறையில் இளையபல்லவனை பிரிய நேரிட்டு அவன் நினைவுடன், கண்களில் கண்ணீருடன், மரக்கலத்தில் பாலூரை விட்டுச்செல்கிறாள் காஞ்சனாதேவி.

சாண்டில்யனின் இலக்கியவரிகள்:
‘காதலனைப் பிரிந்த அவள் வேதனையுடன் சென்றாள். பிரிவுக்கனலில் அவள் வெந்து கொண்டிருந்தாள். ‘இது பிரிவா? முடிவா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு ஏங்கினாள். விம்மினாள். அந்த விம்மலுக்குச் சரியாக அவள் மார்பகம் போலவே கடலின் அலைகளும் எழுந்து எழுந்து தாழ்ந்தன. கப்பல் மட்டும் எதையும் லட்சியம் செய்யாமல் ஓடிக் கொண்டிருந்தது.’! என்ன உணர்ச்சிபூர்வமான இலக்கிய வரிகள்!

பாலூர் பெருந்துறையில், அகூதாவின் உதவியுடன் தப்பிய இளையபல்லவன், சோழநாட்டுக்கு செல்லாமல், அகூதாவிடம் உபதலைவனாகி கடல் போர் முறைகள், கடலாடும் முறை ஆகியவற்றை அடுத்த ஒரு வருடத்தில் கற்று மிகச்சிறந்த மாலுமியாகவும் கடல் கொள்ளைக்காரனாகவும் ஆகிறான். இளையபல்லவனும், அகூதாவும் சேர்ந்து பல கலிங்க மரக்கலங்களை கொள்ளையடிக்கிறார்கள். இளைய பல்லவனின் திறமையை கண்டு வியந்த அகூதா, அவனுக்குத் தன் மரக்கலங்களில் ஒன்றை பரிசளிக்கிறான்.

இளையபல்லவன், அகூதாவால் பரிசளிக்கப்பட்ட மரக்கலத்துடன் அக்ஷயமுனைக்கு வருகிறான். அமீர், கண்டியத்தேவன் அவனுடன் வருகிறார்கள். அக்ஷயமுனை, ஸ்ரீவிஜயசாம்ராஜ்ஜியத்துக்கு கட்டுப்பட்ட கலிங்கத்தின் நட்பு துறைமுகமாக இருக்கிறது. ஒரு முறையான படைகள் இல்லாமல் கொள்ளைக்காரர்களே அங்கு மாலுமிகளாய் இருக்கிறார்கள். அந்தப்பகுதியின் கோட்டைத் தலைவனாக பலவர்மன் என்னும் நயவஞ்சகன் இருக்கிறான். அக்ஷயமுனைக்கோட்டையும், நகரமும் நிலத்தில் “பதக்குகள்” என்ற பழங்குடியினராலும், நீரில் மற்றொரு பழங்குடி இனமான “சூலுக்கள்” என்பவர்களால் கொள்ளையிடப்படுகிறது. இந்த கொள்ளையர்களை நகருக்குள் அனுமதித்து கொள்ளையடிக்க பலவர்மன் துணைபோகிறான். அந்த வழியாக தமிழகத்தில் இருந்து வரும் வணிக மரக்கலங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.

இதையெல்லாம் நேரில் காணும் இளையபல்லவன் இந்த அக்ஷயமுனையை கைப்பற்றினால்தான் தமிழ்நாட்டு மரக்கலங்கள் அச்சமில்லாமல் அப்பகுதியில் பயணிக்கமுடியும் என்று முடிவுசெய்கிறான். இளையபல்லவன், அமீர், கண்டியதேவன் இருவரது துணையுடன் பலவர்மனை முறியடித்து அக்ஷயமுனையை கைப்பற்றுகிறான். பலவர்மனின் வளர்ப்புமகளும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்தை ஆளும் ஜெயவர்மனின் மகளுமான மஞ்சளழகியும் இதற்கு பெருந்துணை புரிகிறாள். அவளும் இளையபல்லவனிடம் காதல் கொள்கிறாள். இளையபல்லவன் அக்ஷயமுனையில் அகூதாவால் பரிசளிக்கப்பட்ட மரக்கலத்தை கண்டியதேவன் உதவியுடன் புறா வடிவில் அமைத்து “கடல் புறா” எனும் போர்க்கப்பலாக்கி, கைப்பற்றிய அக்ஷயமுனையை மஞ்சளழகியிடம் ஒப்படைத்து கோட்டையை ஆண்டுவரும்படி பணிக்கிறான்.

சாண்டில்யனின் தங்க வரிகள்: மஞ்சளழகி இளைய பல்லவனிடம் கடற்கரையில் அவனது பிரிவை எண்ணி சொல்கிறாள்: “இதோ பாருங்கள்…இந்த அலை வந்து காலை தடவுகிறது…மீண்டும் போய் விடுகிறது. மறுபடியும் வருகிறது, போகிறது. அற்ப கால ஸ்பரிசம் இது. விட்டு விட்டு விலகும் நிலை. என் வாழ்க்கையில் நீங்களும் இப்படித்தான் மோதியிருக்கிறீர்கள். அலை போலப் போய்விடுவீர்களா? போய்ப்போய் வருவீர்களா…??”
இதுவல்லவோ இலக்கியம்!

மனசு: காஞ்சனாதேவியா... மஞ்சளழகியா...?

பின்னர் இளையபல்லவன், கடல்புறாவுடன் மாநக்காவரம் என்றழைக்கப்படும் கடல்மோகினித்தீவுக்கு சென்று, அங்கு கங்கதேவன் என்ற கலிங்க கடற்படைத்தலைவனைப் போரிட்டு கொல்கிறான். தீவை தமிழர் வசம் ஒப்படைத்து, சோழர்களின் கடற்தளமாக்குகிறான். சோழநாட்டில் இருந்து கடாரத்துக்கு பயணமான குணவர்மனும், காஞ்சனாதேவியும் சிறைப்பட்டு கிடந்த கலிங்க கப்பலில் இருந்து அவர்களை மீட்டு கடல்புறாவில் தங்க வைக்கிறான்.

பின்னர், ஸ்ரீவிஜயத்தின் மலையூர் கோட்டையை மஞ்சளழகியின் உதவியுடன் கைப்பற்றி, கடல் போரில் ஜெயவர்மனை தோற்கடித்து ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை வெற்றி கொள்கிறான். பின்னர் அநபாயர் ஆணைக்கிணங்க ஸ்ரீவிஜயத்தின் பெரும்பகுதியை குணவர்மனும், ஒரு சிறு பகுதியை ஜெயவர்மனும் ஆண்டு வரவும், சோழஅரசின் நட்பு நாடுகளாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இளையபல்லவனின் துணிச்சலாலும், வீரத்தாலும் கலிங்கத்தின் கடல்பலம் உடைக்கப்படுகிறது.

வெற்றி வீரனாக புகார் (சோழநாடு) திரும்புகிறான் இளையபல்லவன். வீரத்தை போற்றும் வகையில் வீரராஜேந்திர சோழதேவர் கரத்தால்  இளையபல்லவன் குறுநில மன்னனாக்கப்பட்டு “கருணாகர தொண்டைமான்” என்றழைக்கப்படுகிறான். தன் மனம் கவர்ந்த காதலியர் காஞ்சனா தேவி, மஞ்சளழகி இருவரையுமே மணக்கிறான். சிறந்த படைத்தலைவனாகவும், கடல் மாலுமியாகவும் சோழ நாட்டிற்கு தொடர்ந்து தொண்டாற்றுகிறான்.

இது கடல்புறா என்னும் கடற்காவியம்! இங்கு நாம் கண்டது அதன் சுருக்கம். முழு இன்பம் காண, அந்தக் காவியத்தை முழுவதுமாகப் படித்தாக வேண்டும்.

சோழ மன்னர்கள் தங்கள் ஆற்றலால் தமிழத்தின் பொற்காலத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் பிரச்சினை இல்லாத வாழ்வு ஏது? அரசாங்கங்கள் தான் ஏது? விஜயாலய சோழரின் சந்ததிகள் ஆண்டு வந்த சோழப்பரம்பரைக்கு ஒரு திடீர் முடிவு வந்தது.
கவலைப்படவேண்டாம் வாசகர்களே! பிரச்னைகளுக்குப் புதிய தீர்வுகள் ஏற்படும். சோழரின் ஆட்சி இன்னும் வளமாக, பலமாகத் தொடரும். அதையும் சரித்திரம் விரைவில், விவரமாகப் பேசும்.