ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று அந்தக்கால ஒரு எம் ஜி ஆர் பாடல்; ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் வந்தது. அதுபோலத்தான் என் வாழ்க்கை 1980 லிருந்து 1995 வரை இருந்தது .
என்னது? நீங்களும் அவரைப் போல ஏதாவது ஒரு தீவில் மாட்டிக்கொண்டு விட்டீர்களா? தலைவர் ஆகிவிட்டீர்களா? என்று கேட்காதீர்கள்.இது விஷயமே வேற! அந்த காலகட்டத்தில் நான் ஒரு பிரபல குவிஸ் மாஸ்டர் என்று தமிழகம் எங்கும் அறியப்பட்டவன். தினமும் ஏதாவதொரு குவிஸ் நிகழ்ச்சி அல்லது அதற்கான தயாரிப்பு இருந்துகொண்டே இருக்கும். கல்லூரிப்பணி எனது ஆய்வுப்பணி இவை தவிர மற்ற நேரங்கள் எல்லாம் இதற்காகவே செலவு செய்து கொண்டிருந்தேன். ஏன் என்ற கேள்வியைப் பலரிடம் கேட்டுவந்தேன். இதற்காகப் பல புத்தகங்கள் நியூஸ் பேப்பர்கள் ஜி. கே தொகுப்புகள் வாங்குவேன். இந்த பதினைந்து ஆண்டுகளில் பல நூறு வினாடி-வினா நிகழ்ச்சிகளை நடத்திவிட்டேன். எனவேதான் சொன்னேன் “ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை “
பொதுமேடைகளில் பேராசிரியர் , கவிஞர், பாடலாசிரியர் ,பேச்சாளர் என்ற பல முகங்களுடன் திரிந்தாலும், அந்தக் காலகட்டத்தில் “குவிஸ் மாஸ்டர் “வவேசு என்பதுதான் எனது முதன்மையான அறிமுகம்
இதற்கெல்லாம் காரணம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான்.
நமது சென்னைத் தொலைக்காட்சி நிலையம் “தூர்தர்ஷன் “1975-ல் தொடங்கப்பட்டது . 1978-ல் நான் ஒரு நேர்காணலுக்காக அழைக்கப்பட்டேன். தொடர்ந்து அவ்வப்போது சில நிகழ்ச்சிகள் செய்தேன்.1978-ல் ஒரு காலைப்போது; தொலைபேசி கிணுகிணுத்தது. தூர்தர்ஷன் தயாரிப்பாளர் திருமதி புவனேஸ்வரி சந்திரசேகரன் பேசினார். “அவசரம்! இன்று மாலை நிலையத்திற்கு வர இயலுமா?” சரி எனச் சொன்னேன்.
அன்றைய டிஸ்கஷனில் ஆரம்பித்ததுதான் “சிந்திக்க ஒரு நொடி “என்ற தொலைக்காட்சி வினாடி-வினா தொடரில் என் பயணம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்தத் தொடரோடு என் பணி தொடர்ந்தது. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மாறினாலும் மாதத்திற்கு இருமுறை என் நிகழ்ச்சி வந்துகொண்டிருந்தது.
ஏற்கனவே குறிப்பிட்டது போல தூர்தர்ஷன் ரீச் அந்தக்காலத்தில் மிக அதிகம். இத்தனைக்கும் எங்கள் நிகழ்ச்சிகள் முதலில் “பிளாக் அண்ட் வொயிட் “ என்றாலும், பலர் அவற்றை விரும்பிப் பார்த்தார்கள்;சில ஆண்டுகள் சென்ற பிறகே கலர் டி வி வந்தது. வேறு “சானல் ‘ ஏதும் அப்போது கிடையாது என்பதும் யூடியூப் போன்ற இணையதள ஊடகங்கள் இல்லை என்பதும் காரணமாக இருந்திருக்கலாம் .எனினும் என்னளவில் நான் பல புதுமைகளைச் செய்து மக்களைக் கவர எண்ணினேன்.
முதலில் தமிழ் வினாடி வினாவை நல்ல தமிழில் தமிழ் உணர்வோடு நடத்த விரும்பினேன். இயன்றவரை தமிழிலேயே பேச முயன்றேன். நான் பயின்ற தமிழ் இலக்கியங்களும் கவிதைகளும் நல்ல உரைநடைகளும் எனக்குக் கைகொடுத்தன. முதல்நாள் ஹாய் ஹலோ என்று சொல்லாமல் வணக்கம் நலமா என்று தொடங்கினேன். “சிந்திக்க நொடியில் இன்று நீங்கள் சந்திக்க இருப்பது” என்று தொடங்கினேன். கண்ட்ரோல் ரூமில் இருந்த தயாரிப்பாளர் “சார் ரொம்ப செந்தமிழ் போல இருக்கே” என்றார். “அனுமதியுங்கள் சார்! மக்கள் ரசிப்பார்கள்” என்றேன். மக்கள் இரசித்தார்கள்.
அணி பெயர்கள்: முதல் நிகழ்ச்சியிலேயே “டீம் ஏ பி சி டி “என்பதை மாற்றி அணிகள் என விளித்து அவற்றுக்குத் தமிழ்ப் பெயர்கள் கொடுக்கத் தொடங்கினேன். தொலைக்காட்சியில் ஸ்டுடியோ அமைப்புக் காரணமாக எப்போதுமே நான்கு அணிகள் இடம்பெறுவார். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்று ஒருமுறை அணிகள் பெயர் கொடுத்தேன். வினாடி-வினாவின் ஒரு சுற்றில் இதன் தொடர்பாக இலக்கியம் பேசும் திணைகள் பற்றிக் கேள்விகள் கேட்டேன்.
இன்னொருமுறை “வாடை , கோடை கொண்டல், தென்றல்” எனப் பெயர்கள் சூட்டினேன். அந்த நிகழ்ச்சியின் முதல் கேள்வியே “கொண்டல் என்றால் என்ன என்பதுதான். ஒரு சுற்றில் தமிழ் இலக்கியம் பேசும் “காற்று” பற்றியே கேள்விகள் அமைந்தன.
மற்றொரு முறை “சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் “என்று பெயர் சூட்டினேன் !புரிந்துகொண்டிருப்பீர்களே! ஆம்! அது வரலாறு பற்றிய வினாடி-வினாதான் .
எந்த சப்ஜெக்ட் பற்றிய குவிஸ் என்றாலும் அதன் தொடர்பான பெயர்களையே அணிகளுக்கு வைப்பேன். இதுவும் பாராட்டுப் பெற்றது.
( இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இதெல்லாம் என்ன சார் புதுசு என்கிறீர்களா? ஆம் ! இவையெல்லாம் தொலைக்காட்சிக்குப் புதியதுதான். இதுவும் இன்னும் நான் சொல்லப்போகும் பலவும் இன்று புதுமையல்ல. ஆனால் அன்று தமிழ்த் தொலைக்காட்சிக்கு அவை நிசசயமாகப் புதுமை என என்னால் சொல்ல இயலும். பல ஆண்டுகள் முன்னால் “இவர்கள் சந்தித்தால் “ என “குமுதம்” இதழில் ஒரு தொடர் வந்தது. அதில் இருவர் ஒருவரை ஒருவர் கலாய்த்துப் பேசவேண்டும். நானும் காத்தாடி ராமமூர்த்தி சாரும் ஒரு இதழில் சந்தித்துக்கொண்டோம். அவர் ஒரு நாடக நடிகராக நான் ஒரு குவிஸ் மாஸ்டராக ; இதே போன்ற செய்திகளைப் பகிர்ந்து கொண்ட போது அவர், “வவேசு ! புதுமைதான் ஒப்புக்கொள்கிறேன் .. ஆனால் என்ன உங்களுக்கு சான்ஸ் கிடைத்தது செய்தீர் “ எனக் கலாய்த்தார் .”சான்ஸ் கிடைத்தாலும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது எனக்கல்லவோ பெருமை !” என்றேன். “சரி சரி ! நீர் பேசத் தெரிந்தவர் “ என மறுபடியும் கலாய்த்தார். இன்று உங்களிடமும் அதையே பகிர்ந்து கொள்கிறேன். )
சுற்றுக்களில் புதுமை : பொதுவாக முப்பது நிமிட வினாடி-வினா நிகழ்ச்சிகளில் நாலு அல்லது ஐந்து ரவுண்ட் கேள்விகள் கேட்பார்கள். அவற்றில் எந்த தனித்துவமும் இருக்காது. ஆடியோ வீடியோ கேள்விகளெல்லாம் கலந்து வரும். எனக்கு ஆடியோ கஷ்டம் எனக்கு வீடியோ கஷ்டம் வேற கேள்வி கேளுங்க என்றெல்லாம் பங்கேற்பவர்கள் குறைகூறுவார்கள். இதையெல்லாம் தவிர்க்க நான் ஒவ்வொரு சுற்றிலும் ( ரவுண்ட் என்பதை சுற்று என மாற்றினேன் ) ஒரே வகையான கேள்விகள் இடம்பெறுமாறு செய்தேன் . ஆடியோ சுற்று என்றால் பங்கு கொள்ளும் நான்கு அணிகளுக்கும் ஆடியோ ;வீடியோ என்றால் எல்லா அணியினருக்கும் வீடியோ.
இவை தவிர சுற்றுக்களில் என்ன புதுமை செய்யலாம் என்று யோசித்தபோது பல விஷயங்கள் கிடைத்தன.
புகைப்படச் சுற்று: புகைப்படத்தில் ஒருவரைக் காண்பித்து இவர் யாரெனக் கேட்பது பழசு. அதை மாற்ற நினைத்தேன். உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் நேரு இருந்தார் அவர் ரஷ்யா போயிருந்த போது கிரேமிளின் மாளிகை முன்னால் நிற்கும் படம். படத்தில் இருப்பவர் யாரெனக் கேட்பதைவிட அவர் நிற்கும் பின்னணியிலிருந்து அவர் எங்கிருக்கிறார் என்று கேட்பது சிறப்பு. அதே போல எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டு உடையை அணிந்து போஸ் கொடுப்பது நேருஜியின் வழக்கம். படத்தில் நேருவைக்கண்டுபிடிப்பது எளிது ; நாட்டைக் கண்டு சொல்வது கொஞ்சம் சிரமம் . இப்படிக் கேட்பது சுவை சேர்க்கும்.
இன்னும் சுவை சேர்க்க வேண்டுமென்றால் நேருவைக்கண்டுபிடித்தால் ஐந்து மதிப்பெண்கள் நாட்டைக் கண்டு சொன்னால் பத்து மதிப்பெண்கள் எனச் சொல்லலாம்.
புகைப்படத்தைக் காட்டி அதில் இல்லாதவற்றைக் கூடக் கேட்கலாம். நேரு படத்தைக் காட்டிவிட்டு இவருக்குப் பின்னால் வந்த அடுத்த பிரதமர் யார் என்றும் கேட்கலாம்.
சிலமுறை ஒரே ஒரு புகைப்படத்தைக் காட்டி அதிலிருந்தே நான்கு அணிகளுக்கும் நான்கு கேள்விகள் நான் கேட்டதுண்டு
வீடியோ சுற்று என்பது வெறும் புகைப்படச் சுற்று போல அமயக் கூடாது . காணொளி என்பது நகரும் புகைப்படத் தொகுதிகள் . எனவே அவற்றை வீணக்காமல் சமயோசித அறிவாற்றலுடன் சுவையான கேள்விகளைத் தயாரிக்கவேண்டும்.
குவிஸ் மாஸ்டராக நான் செயல்படும்போது கேள்வி பதில் என்று எழுதிவைத்துக் கொள்ள மாட்டேன் . தகவல்கள் ,குறிப்புகள் ஆகியவற்றையே வைத்துக் கொள்வேன். அணிகளின் “புத்திசாலித்தனத்திற்கு” ஏற்ப எனது கேள்விகளும் மாறுபடும். அதுதானே சுவை! (தொலைக்காட்சியில் முன்னதாக ஸ்கிரிப்ட் கொடுக்காமல் நிகழ்ச்சி நடத்திய குவிஸ் மாஸ்டர் முதலும் கடைசியும் நான்தான் என நினைக்கிறேன்)
தொலைக்காட்சி வினாடி-வினா நிகழ்ச்சிகளில் இன்னொரு முக்கியமான கூறு உண்டு. கேள்வி தயாரிப்பில் மிகுதியும் கவனம் தேவை. கேள்விகள் மிகக் கடினமாகவும் இருக்கக் கூடாது; மிக எளிதாகவும் இருக்கக்கூடாது. உதாரணமாக – “கம்பராமாயாணத்தை எழுதியவர் யார் என்றும் கேட்கக் கூடாது; கம்பராமாயணத்தின் 1324 வது பாடல் என்ன என்றும் கேட்கக் கூடாது. It should have not unsurmountable difficulty “என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்களே அப்படி இருக்கவேண்டும்.
யாரும் பதில் சொல்ல இயலாமல் குவிஸ் மாஸ்டருக்கே எல்லா மதிப்பெண்களும் சென்றுவிட்டாலோ அல்லது ஓரிரண்டு புத்திசாலித்தனமான கேள்விகளே இல்லாமல் அனைத்தும் குழந்தைத்தனமாக அமைந்துவிட்டாலோ குவிஸ் மாஸ்டர்தான் மோசம் என்பார்கள் . எனவேதான் கவனம் தேவை.
குவிஸ் நிகழ்ச்சியில் குவிஸ் மாஸ்டர்தான் எல்லாம் ; இருந்தாலும் குவிஸ் மாஸ்டராக இருப்பவருக்கு ஆணவம் கூடாது. அன்போடு பேசவேண்டும். தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது தன்மையாகப் பேசவேண்டும் என்பதையெல்லாம் நான் அங்குதான் கற்றுக் கொண்டேன். காரணம் குவிஸ் மாஸ்டர் பங்கேற்போர் இருவருக்கும் உள்ள வேற்றுமை ஒன்றுதான். குவிஸ் மாஸ்டர் கேள்வி பதில் இரண்டுமே தயாரிப்பின் மூலம் ஏற்கனவே அறிவார். பிறர் அதனை அறியாதார் . முன்னமே பதில் அறியாமல் இருக்கும் நிலையில், குவிஸ் மாஸ்டர் கூட பதில் அறியாத கூட்டத்தில் இருக்கக் கூடும்.
நினைவாற்றலை சோதிப்பதைவிட அறிவாற்றலை சோதிக்கும் குவிஸ் மாஸ்டரே சிறந்தவர். அப்படியென்றால் ?
இதே தலைப்பில் அடுத்த இதழிலும் இது தொடரும்.

அருமை. அந்தக் காலகட்டத்தில் நான் அறியும் பருவத்தில் இல்லையே என்று ஏங்குகிறேன் .
LikeLike
நினைவுகள் (கடந்து போன நிகழ்வுகள்) சுவையாக கொண்டு செல்கிறீர்கள். அருமை.
LikeLike