Upset senior man with bouquet sitting on hospital bed and looking away  Stock Photo by LightFieldStudios

பாஸ்கருக்கு அன்றைய தினம் நல்ல நாள் இல்லை என்பது போலத்தான் தோன்றியது. வீட்டில் கிளம்பும்போதே தாமதம் ஏற்பட, தனது நேரத்துக்கான மின்சார ரயிலை தவற விட்டுவிட்டு அடுத்த ரயிலைப் பிடித்து கடற்கரை நிலையத்தில் இறங்கி ஓட்டமும் நடையுமாக ஆபீசுக்குள் நுழையும் பொழுது மணி பத்து பத்து ஆகிப் போனது. தாமதம் பெரிய விஷயம் இல்லையென்றாலும் பாஸ்கருக்குப் பிடிக்காது அவனுக்கு ஒன்பது நாற்பந்தைந்துக்கு தனது இருக்கையில் இல்லையென்றால் அன்றைய நாள் முழுவதும் ஒரு மாதிரி சங்கடப்பட்டுக் கொண்டே இருப்பான்.

தனது மேஜையை ஒழுங்குப்படுத்தி வைத்து அன்றைக்கு பார்க்க வேண்டிய முதல் பைலை எடுத்து வைத்து வாசிக்கத் தொடங்கும் பொழுது, பக்கத்து இருக்கை பரமசிவம் அலுவலகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தார். பாஸ்கருக்கு தாங்கவில்லை “இன்னும் இவருக்கு மைனர்ன்னு நினைப்பு”ன்னு முணுமுணுத்துவிட்டு தலை குனிந்து கொண்டான்.

பரமசிவம் நெடு நெடுவென கோவில் கொடிமரம் போல வளர்ந்தும் அதற்குரிய ஆகிருதியுடனும் சரியான உடைகளுடன் நடந்து வந்து பாஸ்கருக்கு பக்கத்து இருக்கையில் நின்று கைகளைத் தூக்கி தனக்குப் பிடித்தமான கடவுள்களை பிரார்த்தித்து விட்டு அமர்ந்தார். கொஞ்சம் கூட தொப்பை கிடையாது, எப்பொழுதும் ஒரு இளமைத் தோற்றமும் நடவடிக்கைகளுமாக இருப்பார், மெல்லிய வாசனையும் சேர்ந்து கொள்ள அவரை பாஸ்கரைப் பார்க்க வைத்தது. அவரைப் பார்க்கக்கூடாது என்று நினைத்தாலும் அவனுக்கு பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ரிட்டையர் ஆவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது என்று கொஞ்ச நாளைக்கு முன்னால் சொன்னார். அப்படியானால் அவருக்கு இப்போது எப்படியும் ஐம்பொத்தொன்பது வயதிருக்கும், ஆனால் ஆறாவது மாடியில் இருக்கும் கேண்டீனுக்கு லிப்ட் உபயாகிப்பது இல்லை எப்பவும் படி வழியாகத்தான் ஏறுகிறார் இறங்குகிறார். அதுவும் ஏறும் போது இரண்டு இரண்டு படிகளாகத் தாவித் தாவி ஏறுகிறார். ஏறும்போதும் இறங்கும்போதும் கைப்பிடிகளைக் கூடப் பிடிப்பதில்லை.

பாஸ்கருக்கு நாற்பத்திரெண்டு வயதுதான் என்றாலும் தொப்பை விழுந்து விட்டது. சாயம் பூசுகிற பழக்கம் இல்லாததால் தலை முடி அங்கங்கே வெள்ளையும் கறுப்புமாக தெரியத் தொடங்கிவிட்டது. மனைவி எவ்வளவு சொல்லியும் சாயம் பூசுவது பாஸ்கருக்குப் பிடிக்காது. உடம்பு கூடிப் போனதால் வேகமாக நடக்க முடியாது. சில சமயம் சட்டையின் கடைசி பட்டனை மாட்டக்கூட முடியாது. ஓடிப் போய் ரயிலை பிடிப்பது வேகமாக படிகளில் ஏறுவது இறங்குவது எல்லாம், அவனால் முடியவே முடியாது.

பரமசிவம் உடை உடுத்துவதில் சுறு சுறுப்பில் மட்டும் இல்லை வேலையிலும் கெட்டி, அவரது வேலைகளில் தவறே இருக்காது. அடித்தல் திருத்தல் இருக்காது அவரது எழுத்தும் அவரது உடைகளைப் போல் அவ்வளவு தெளிவாக இருக்கும். அவர் எழுதிக் கொடுக்கும் டிராப்ட்கள் எல்லாம் தட்டச்சர்கள் எந்த சந்தேகமும் கேட்காமல் வேகமாக அடித்துக் கொடுத்து விடுவார்கள். அவர் கேண்டீனுக்கு போகும் போது கூட தனது மேஜையை ஒரு ஒழுங்கில் வைத்துவிட்டுத்தான் போவார்.

பாஸ்கர், பரமசிவத்தோடு நல்ல நட்பிலும் பேச்சு வார்த்தையிலும் இருக்கும் பொழுது பல விஷயங்களை அவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறான். சும்மா சொல்லக்கூடாது எந்த மாதிரி சந்தேகங்கள் கேட்டாலும் சரியாகத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சில நேரம் அவருக்கு வேலை இல்லையென்றால் அல்லது தனது வேலையை விரைந்து முடித்திருந்தால் பாஸ்கரிடம் கேட்டு வாங்கி அவனது வேலைகளைக் கூட செய்து கொடுத்திருக்கிறார்.

கேண்டீனிலிருந்து வந்து கொண்டிருந்த பரமசிவத்தை பாஸ்கர் அவனையும் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தான், நட்பாய் இருக்கும் பொழுது இருவரும் சேர்ந்துதான் கேண்டீனுக்குப் போவார்கள் சேர்ந்துதான் வருவார்கள். வந்தவர் நேராக லீவில் போயிருந்த லதா டைப்பிஸ்ட்டின் இருக்கையில் அமர்ந்து டைப் மிஷினைத் திறந்து பேப்பர்களை சொருகி எதையோ டைப் அடிக்கத் தொடங்கினார். பாஸ்கர் பல்லைக் கடித்துக் கொண்டு ”இவனுக்கு எதுக்கு இந்த வேலை தனக்கு எல்லாம் தெரியும்ன்னு ஆபீஸ் பூரா தெரியணும்ன்னு நினைப்பு, காலத்தைக் கழிச்சுட்டு ரிட்டர்யர்ட் ஆகிப் போவானா பெரிய இவரு” என முணங்கினான்.

அவனுக்கு இன்னோரு பக்கம் அமர்ந்திருந்த நாதன் ”உனக்கென்னய்யா எப்பப் பார்த்தாலும் அந்த ஆள் கூட போட்டி உன் வேலையை நீ பாரு அவர் வேலையை அவர் பார்க்கட்டும் எதுக்கு இந்த போட்டி பொறாமையெல்லாம்” என சொல்லி விட்டு எழுந்து போய்விட்டார். பாஸ்கர் நினைத்துக் கொண்டான் சிலருக்கு ஐம்பெத்தெட்டு வயதில் உடல் குறைபாடுகள் வந்து விடுகிறது இந்த ஆளுக்கு ஐம்புலன்களும் எப்போதும் விழிப்போடு இருக்கிறதே என்று.

ரொம்ப நேரமாக டைப் அடித்துக் கொண்டிருந்தார், பேப்பர்கள் மாறி மாறி டைப் மிஷினில் ஏறிக் கொண்டிருந்தன. டைப் வேகமும் கூடிக் கொண்டிருந்தது, பெரிய ரிப்போர்ட் போல என பாஸ்கர் நினைத்துக் கொண்டான். இவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் தனது மேஜை குப்பைக்காடாக மாறிவிடும் பார்க்க வேண்டிய வேலைகள் சேர்ந்து விடும் என நினைப்பு வந்தவுடன். தனது வேலைகளில் மூழ்கத் தொடங்கினான். இப்பொழுது டைப் சத்தம் கொஞ்சம்கூட கேட்கவில்லை, அப்பாடா என்றிருந்தது. வேலை அவனை இழுக்க அவன் வேலைகளுக்குள் மூழ்க ஆரம்பித்தான்.

பரமசிவம் இந்த ஆபீசுக்கு மாறுதலாகி வந்து ஒன்றரை வருடம் ஆகிறது. பாஸ்கர் அதே அலுவலகத்தில் பத்து வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான், அவர் வந்த புதுதில் பாஸ்கரைத்தான் எதுவானலும் கேட்பார். பாஸ்கர் லீவு கேட்டால் அவர்களது உயர் அதிகாரி பரமசிவத்திடம் பாஸ்கரின் வேலைகளை நீங்கள் பார்த்துக் கொள்வீர்களா எனக் கேட்டு விட்டுதான் லீவு கொடுப்பார், அதே போல் பரமசிவம் லீவில் போனால் பாஸ்கர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு லீவு வாங்கிக் கொடுப்பான். இவர்களது வேலையை வேறு யாரும் செய்யத் தயாராக இருக்க மாட்டார்கள் ஏனென்றால் கொஞ்சம் அதிகமாகவும் மிகப் பொறுப்பாகவும் ஒவ்வொரு பைலையும் அணுக வேண்டும் அதில் பாஸ்கர், பரமசிவம் இருவருமே கில்லாடிகள். இந்தத் திறமையினால் இருவருக்கும் வேறு வேலைகள் கொடுக்காமல் அந்தத் துறையிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது.

மறுபக்கத்து இருக்கையிலிருந்து நாதன் “யோவ் பாஸ்கர் ஏன்யா உன் கண்ணு சும்மா சும்மா அங்கேயே போகுது, வந்தமா வேலைப் பாத்தமான்னு போகாமா எப்பப் பாத்தாலும்” ன்னு அடிக்கடி சொல்லி அவருக்கே அலுத்துப் போக இப்பொழுது அதிகமாக எதுவுமே சொல்வதில்லை.

பாஸ்கரும் அப்பப்ப ஏதாவது சாடை மாடையாக எது சொன்னாலும் பரமசிவம் தனது காதில் விழாதது போல எதுவுமே பேசமாட்டார். இதுவே பாஸ்கருக்கு கொஞ்சம் கடுப்பாக இருக்கும். பாஸ்கரும் இனி பார்க்கக்கூடாது எதுவும் சொல்லக்கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டே வீட்டிலிருந்து கிளம்புவான், ஆனாலும் அந்த ஆறடி உருவத்தையும் அதன் அசைவுகளையும் பாஸ்கரால் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

தனக்கு ஒரு நல்ல சீனியரும் வழிகாட்டியும் கிடைத்துவிட்டார் எனத்தான் பாஸ்கர் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தான், அந்த ஒரு கடிதம் பற்றிய விவாதம் வரும் வரை.

பரமசிவன் ஒரு நாள் “பாஸ்கர் நான் ரெண்டு நாளைக்கு லீவு, என் வேலையைக் கொஞ்சம் பார்த்துக்கங்க” என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் முதல் நாள் டைப் அடிக்கக் கொடுத்திருந்த டிராப்ட் டைப்பிஸ்ட்டிடம் இருந்து வந்தவுடன் பாஸ்கர் அதைப் படித்துப் பார்த்தான், அவனுக்கு அந்த கடைசி பாராவும் கடிதத்தை முடித்திருந்த விதமும் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்ததாகப் பட்டது..

டைப்பிஸ்ட் லதாவைக் கூப்பிட்டு அந்தக் கடைசிப் பத்தியை மட்டும் மாற்றித் தருகிறேன் கொஞ்சம் ரீ டைப் செய்துவிடுங்கள் என்றான். லதா  ”எஸ்.பி சாருக்கு அவர் ட்ராஃப்டை மாற்றினா பிடிக்காது சார்” என்றாள்.. எஸ். பரமசிவம் என்பதன் இனிஷியலை மட்டும் சொல்வது ஒருவித அலுவலக மரியாதை. பாஸ்கர் லதாவைப் பார்த்து, ”ஒண்ணும் சொல்ல மாட்டாரு. அதை நான் பார்த்துக்கிறேன்” என்று சிரித்தான். லதா கேட்டுக் கொண்டாள். பாராட்டுவது போலத்தான் தணிந்த குரலில் சொன்னாள். ”எஸ்.பி ஸார் கிட்டே அருமையான இங்கிலீஷ்  . ஆனால் சில சமயம் இப்படி முள்ளு முள்ளா ரெண்டு வரி நாலு வரி எழுதிவிடுவார். டைப் அடிக்கும் போதே விரலில் குத்தும் சுரீர்னு”. டைப்பிஸ்ட் சரியாகச் சொன்னாலும் பரமசிவம் சாரை விட்டுக் கொடுக்காமல் பொதுவான குரலில் ”சரி பண்ணீரலாம்” என்றான்.

தனக்குத் தெரிந்த வரையில் அதைத் திருத்தி மீண்டும் டைப் செய்யச் சொல்லி,  உயர் அதிகாரியிடம் கையெழுத்துப் பெற்று அனுப்ப வேண்டிய கிளை அலுவலகத்துக்கு அனுப்பி விட்டான். அலுவலக காப்பியை அப்படியே பரமசிவன் மேஜையில் வைத்துவிட்டு தனது வேலைகளையும், பரமசிவத்தின் அவசர வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரண்டு நாள் விடுப்புக்குப் பிறகு வந்த பரமசிவன் பாஸ்கர் தனக்காக செய்து வைத்திருந்த வேலைகளை முதலில் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தத் திருத்தி அனுப்பபட்ட கடிதம் கண்ணில் பட்டதும்  அவருக்கு கடுமையான கோபம் வர அடக்கிக் கொண்டு

“பாஸ்கர் இந்த கடைசி வரிகளை யார் திருத்தியது, மானேஜரா” என்றார்.

பாஸ்கர் ”இல்லை சார் நான்தான் திருத்தினேன்” என்றான்.

”நான் எழுதியதை திருத்தியது எந்த வகையில் சரி என்றார். “

“இல்லை சார் அந்த வாக்கியங்கள் கொஞ்சம் கடுமையாக இருந்தன, நான்தான் அவைகளை கொஞ்சம் சாப்ட் ஆக்கி அனுப்பினேன்” என்றான்.

“ சாஃப்ட்டா இருக்க இங்க என்ன பூக்கடையா நடத்திக்கிட்டு இருக்கோம்.. இதில எல்லாம்  நம்ம மேதாவித்தனத்தை காட்டத் தேவையில்லை பாஸ்கர். எந்த கிளைக்கு எப்படி எழுதினா வேலயாகும்ன்னு எனக்குத்தான் தெரியும்” என்று பரமசிவன் சொல்ல.

“சார் நீங்க இந்த ஆபீசுக்குப் புதுசு.  நான் பத்து வருஷமா இருக்கேன். என்னைய விட உங்களுக்கு நம்ம கிளைகளைப் பற்றித் தெரியும்ன்னு சொல்றதே வேடிக்கையா இருக்கு” என்றான்.

“சீனியாரிட்டி என்பதை விட வயதும் அறிவும் முதல்ல அப்புறம்தான் மத்ததெல்லாம்” என்றார். தொடர்ந்து ஆங்கிலத்துக்கு மாறி ஐந்து நிமிஷம் பேசிவிட்டு, ”எனக்கு எப்போது செங்கல் வீச வேண்டும், எப்போது பூச்செண்டு  கொடுக்கவேண்டும் என்று  யாரும் இங்கே சொல்லித்தர வேண்டியதில்லை”  இப்படிச் சொல்லும் பொழுது பரமசிவத்தின் குரல் சற்று உயர்ந்து விட . எதிர் சீட்டு பாலகிருஷ்ணன், டைப்பிஸ்ட் லதா, பக்கத்து சீட்டு நாதன் எல்லோரும் தங்கள் வேலைகளை நிறுத்திவிட்டு தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதை பரமசிவனும், பாஸ்கரும் உணர்ந்து கொள்ள இருவரும் தலை குனிந்து அமைதியாக தங்கள் வேலைகளை பார்ப்பது போல பார்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

அதன் பிறகு எல்லாம் மாறிப்போயிற்று. பரமசிவனும் பாஸ்கரும் தங்களுக்குள் பேசுவதையே நிறுத்திக் கொண்டார்கள். கேண்டீனில் அவர்களை தனித்தனியா பார்த்தவர்கள் முணுமுணுத்துக் கொண்டார்கள். அதனால் கேண்டீன் செல்லும் நேரத்தை இருவரும் அவர்களை அறியாமலேயே மாற்றி அமைத்துக் கொண்டார்கள்.

பாஸ்கர் ஒட்டிப் போடப்பட்டிருந்த தனது மேஜையை விலக்கி நடுவில் கொஞ்சம் இடைவெளி உண்டாக்கிப் போட்டுக் கொள்ளும் அளவுக்கு போய்விட்டான், நாதன் ஜாடை மாடையாகச் சொல்லியும் கேட்கவில்லை.

ஒருநாள் கேண்டீனில் நாதன், பாஸ்கருக்கு கொஞ்சம் அழுத்தமாகவே அறிவுரை சொன்னார். ”பாஸ்கர்ஒருநாள் இரண்டு நாள்ன்னா பரவாயில்லை எவ்வளவு நாளைக்குய்யா இப்படியே இருக்க முடியும். நல்லா யோசித்துப் பாரு வீட்டில பேசுறதைவிட ஆபீசிலதானய்யா நாமெல்லாம் அதிகமா பேசுறோம், அப்புறம் இங்க என்ன கோபமும் முறைப்பும், ஏதோ எனக்குத் தெரிந்ததை சொல்லிட்டேன்” மேற்கொண்டு பாஸ்கரின் பதிலை எதிர்பார்க்காமல் அவனே யோசிக்கட்டும் என விட்டு விட்டு எழுந்து போய்விட்டார்.

நாதனின் அறிவுரைகள் சரியாகத்தான் இருந்ததாக பாஸ்கருக்குப்பட்டது, இருந்தாலும் அவனால் உடனே சமாதானமாக முடியவில்லை. இனி இந்த ஜாடை பேச்செல்லாம் வேண்டாம் என்று மட்டும் முடிவெடுத்தான். இனி பரமசிவத்தைப் பார்க்கவேகூடாது எனவும் முடிவெடுத்தான்.ஆனாலும் அந்த ஆறடி உருவம் அங்கும் இங்கும் போவதையும் வருவதையும் அவனால் பார்க்காமலும் மனசுக்குள் பொங்கமாலும் இருக்க முடியவில்லை.

இவர்கள் இருவரும் ஏன் பேசுவதில்லை, இவர்களுக்குள் அப்படி என்ன நடந்தது என்று இதற்கு மேல்  ஒருவருக்கும் தெரியாது ஆனாலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நெருக்கமும் அக்கறையும் இப்பொழுது இல்லை என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும்.

அன்று மழைநாள், பாஸ்கர் அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் தனது மழைக்கோட்டைக் கழற்றி அதற்கான இடத்தில் மாட்டும் பொழுதே ஊதாக் கலர் மழைக் கோட்டு இல்லை என தெரிந்து கொண்டான். அந்த அலுவலகத்திலேயே ஊதாக்கலர் மழைக் கோட்டு உபயோகிப்பவர் பரமசிவம் மட்டும்தான், மற்றவர்கள் அனைவருமே கறுப்புக் கலர்தான். பரமசிவத்தின் உயரத்திற்கும் அகன்ற மார்புக்கும் நிமிர்ந்த நடைக்கும் அந்த ஊதாக்கலர் மழைக் கோட்டு அவ்வளவு பொருத்தமாக இருக்கும், இது பாஸ்கருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு என்ன ஆச்சு இன்னேரம் வந்திருக்கனுமேன்னு நினைத்துக் கொண்டான், பதினோரு மணி வரை பார்த்துவிட்டு இனி வரமாட்டார் என்று தீர்மானமாகத் தெரிந்துவிட்டது. அவர் மேஜையில் எந்தப் பேப்பரும் இல்லை, நல்லவேளை என நினைத்துக் கொண்டான், கவனிப்பதற்கு எதுவும் இல்லையென்பதால் தனது வேலையில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினான். என்னதான்  அலுவலக கோப்புக்குள் தன்னைத் திணித்தாலும்  பரமசிவத்திற்கு என்ன அப்படி ஆயிருக்கும்  என்று தோன்றி ஒரு ஓரத்தில் கனத்த ஊதா மழைக் கோட்டை அவன்  மனம்  தொங்கவிட்டுக்கொண்டே இருந்தது.

*****

தன் மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க் மற்றும் கைளில் மார்பில் என சில குழாய்கள் தொடங்கி பல எந்திரங்களுடன் இணைக்கபட்டிருக்க, மிகுந்த ஆயாசத்தில் கண் மூடிப் படுத்திருந்த பரமசிவன் இலேசாக கண் விழித்துப் பார்த்தார். தனக்கு நேர் எதிரில் தனது மனைவி அமர்ந்திருக்க கண் அசைத்து அருகில் வரவழைத்தார். மனைவியின் கைகளைப் பற்றியவாறு யாராவது பார்க்க வந்தார்களா என்றார். ஒருத்தர் வந்தார், நீங்க நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததால் ஒரு அரை மணி நேரம் காத்திருந்துவிட்டு போயிட்டாரு என்றாள்.

”என்ன சொன்னார்” என்று பரமசிவம் அடிக்குரலில் கேட்க. அவர் வந்து வெளியிலேயே உட்கார்ந்துகிட்டு இருந்திருக்காரு, தற்செயலா நான் வெளியே போனேன், எந்திருச்சு நின்னு வணக்கம் சொல்லிட்டு சாரி, சார், எப்படியிருக்காருன்னு கேட்டார் நான் சொன்னேன். அப்புறம் யாருக்குமே சொல்லலேயே உங்களுக்கு எப்படித் தெரியும்ன்னு கேட்டேன், அவர் “சார் இன்னைக்கு ஆபீசுக்கு வரலேன்னு தெரிஞ்சவுடன் என் உள் மனசு என்னவோ சொல்லிச்சு, அதான் மூணி மணிக்கு கிளம்பி உங்க வீட்டுக்குப் போனேன், உங்க வீட்டு மாடியில குடியிருக்கவங்கதான் சொல்லி இங்க வந்தேன்” என்றார்.

பரமசிவம் மீண்டும் யார் என்று அடிக்குரலில் ஒரு சிரமத்துடன்  கேட்க, அவரது மனைவி, விலகிப் போய் மேஜை மேல் வைத்திருந்த சிறிய பூங்கொத்தை எடுத்து வந்து அவர் முகத்துக்கு நேராகக் காண்பித்தாள், அதில் இருந்த சிறிய அட்டையில், “சார் வணக்கம், கெட் வெல் சூன் –  பாஸ்கர்” என்று எழுதப்படிருந்தது.

அதை வாங்கிக் கொள்ள நீள்வது போல. அவருடைய கைகள்  இலேசாகப் படுக்கையிலிருந்து  உயர்ந்தன.