ஆத்திகமும் நாத்திகமும்…
ஆதி காலந்தொட்டே ஆத்திகவாதிகள் ‘கடவுள் இருக்கிறார்’ என்று சொல்ல, ‘இல்லவே இல்லை’ என நாத்திகர்கள் கடவுளை ஆணித்தரமாக மறுக்க, விவாதங்கள் இப்படி முடிவின்றி நடப்பதைப் பார்க்கமுடிகிறது. ஒன்று என்பது இரண்டாகப் பிரியும்போது ஒன்று இடப் புறம் என்றால், மற்றொன்று வலப்புறம்தானே… இரண்டுமே ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் உள்ளன எனினும் கூட, இரண்டுமே ஒன்றின் கூறுகள்தான்!
ஆத்திகம் நாத்திகம் இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் என்கின்றனர் தெளிந்த ஞானிகள்.
அறத்திற்கே அன்புசார் பென்பர் அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. (அன்புடைமை – 76)
அறத்திற்கு மட்டுமல்ல, அறத்திற்கு மாறானவற்றைப் போக்குவதற்கும் அன்பே துணை என்பதைப் போல, ஆத்திகம், நாத்திகம் இரண்டிற்கும் ஆண்டவந்தான் இலக்கு!
ஒரு கதை:
ஆண்டவனின் பரம பக்தர், அடியார் ஒருவர் இருந்தார். எல்லாமே இறைவனின் அருளால்தான் நடக்கிறது என்று நம்புபவர். ….. உண்ணும் முன்பு இறைவனை நன்றியுடன் துதிப்பவர். ஒவ்வொருநாளும் யாராவது ஒருவருக்கு அன்னதானம் செய்த பிறகே தான் உண்பார். எவ்வளவு நேரமானாலும், ஒரு விருந்தினருக்கு உணவளிக்காமல் அவர் உண்டதே இல்லை. சில சமயங்களில் விருந்தினர் எவருமே தென்படமாட்டார்கள் – அன்றெல்லாம் அவர் உபவாசம்தான்…..
முக்கியமான பண்டிகை நாள் – குளித்து, பூஜை எல்லம் செய்து, வடை பாயசத்துடன் சமைத்து, விருந்தினருக்காகக் காத்திருந்தார். பண்டிகை – வீடுகளிலேயே கொண்டாடுவார்கள் – பிரயாணம் செய்ய மாட்டார்கள். ஆகவே உள்ளூர் ஆட்களோ, வெளியூர் ஆட்களோ கிடைப்பது சிரமம்.
அன்றும் அப்படித்தான், காத்திருந்தார். எவரையும் காணவில்லை. நேரமோ போய்க்கொணிருக்கிறது – சூரியனும் உச்சிக்கு வந்துவிட்டான்….
ஊருக்கு வெளியே நெடுஞ்சாலையில் காத்திருந்தார்.
கடைசியாக ஒரு முதியவர் தள்ளாடித் தள்ளாடி வந்துகொண்டிருந்தார். மனம் மிக மகிழ்ந்து, அந்த முதியவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். பின்னர் கை கூப்பி இறைவனை நினைத்துத் துதி பாடினார்.
முதியவர் அமைதியாக இருந்தார். அடியார் வியந்து, ‘நீங்கள் இறைவனைத் துதிக்க வில்லையா?” என்று கேட்டார்.
“அவன் எங்கிருக்கிறான், நான் அவனைத் துதிப்பதற்கு?”
“நீங்கள் கடவுளை வணங்குவதில்லையா?”
“எனக்குச் சாப்பாடு போடுபவன் நீ. உன்னை வேண்டுமானால் வணங்குவேன். இல்லாதவனையெல்லாம் என்னால் வணங்க முடியாது”
வாக்குவாதம் முற்றியது. “இறைவன் எங்கேயிருக்கிறான், எனக்குக் காட்டு பார்க்கலாம்” சவால் விடுகிறார் முதியவர்.
“ஒரு நாத்திகனுக்கு உணவளிக்க என்னால் முடியாது” – சீறினார் அடியவர்.
முதியவரோ அலட்சியமாக,”நானா உன்னிடம் உணவு கேட்டேன்? நீதானே என்னை இங்கு அழைத்து வந்தாய்! உன் விருந்தோம்பலுக்காக என கொள்கையை என்னால் மாற்றிக்கொள்ள முடியாது” என்று கூறி எழுந்து போய்விட்டார்.
சோர்வுடனும் சலிப்புடனும் சாய்ந்த அடியவர், பசியில் அப்படியே தூங்கி விட்டார். அவரது கனவில் சிரித்த முகத்துடன் தோன்றிய பகவான் கிருஷ்ணர் சொன்னார்: “அப்பனே! அவன் என் மீது நம்பிக்கை இல்லாதவன். ஆனாலும் அவனுக்கு 70 வருடங்கள் உணவு அளித்திருக்கிறேன். உன்னை நம்பி ஒரு வேளைதான் அவனை அனுப்பினேன். இப்படி விரட்டி விட்டாயே! இனி நான் அவனுக்கு வேறு ஏற்பாடு அல்லவா செய்ய வேண்டும்?”
அடியார் திடுக்கிட்டு, மனம் பதைத்து, ஓட்டமாக ஓடிச் சென்று அந்த விருந்தினரைக் கண்டுபிடித்து, மீண்டும் அழைத்தார். முதியவருக்கோ வியப்பு. “அப்போது முடியாது என்று விரட்டினாய், இப்போது அழைக்கின்றாயே என்ன ஆயிற்று உனக்கு?
அடியவர் கனவு பற்றி ஏதும் சொல்லவில்லை. பணிவுடன், “ஐயா! நாங்கள் ஆத்திகர்கள்; கடவுள் உண்டு என்று சொல்கின்றவர்கள். அதற்குத் தனி தைரியம் தேவை இல்லை. ஆனால் நீங்கள் இறைவனை இல்லை என்பவர்கள். அதற்கு எவ்வளவு வைராக்கியமும், மனோதிடமும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவருக்கு உணவளிப்பது எனக்குப் பெருமை” என்றார்!
பல கடவுள் மறுப்பாளர்கள் மேலோட்டமாகப் பார்க்கும்போது ஆத்திகத்தை எதிர்ப்பதாகத் தோன்றும். ஆனால் இவர்களது கருத்துக்களை உள்ளூர ஆழ்ந்து பார்த்தால், மேலும் ஆத்திகத்திற்கு வலு சேர்ப்பதாக இருப்பதைக் காணலாம்.
கடவுள் உலகத்தைப் படைத்தார் என்றால், படைத்த உடனே அவர் வேறு, அது வேறு. ஆகவே கடவுள் இருந்தார் என்று கூறலாமே தவிர இருக்கிறார் என்று எப்படிக் கூறுவது? ஆகவே கடவுள் இருக்கிறார் என்றால், அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பதுதான் பொருள்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே.. என மாணிக்கவாசகர் கூறுவது, அனைத்திலும் இருப்பவன் அந்தக் கடவுளே என்பதாம்!
உலகப் புகழ் ஷெனாய் கலைஞர் திரு பிஸ்மில்லா கான் நேர்காணல் (இந்தியா டுடே – 15-7-1986) ஒன்றில் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கின்றார். எளிமையானவர். உலகப் புகழ் பெற்றிருந்தும், ஒரு கார் கூட வைத்துக்கொள்ளாமல், ரிக்ஷாவில் காசி நகரத் தெருக்களில் பயணித்தவர் அவர். அவர் சிறுவனாக இருந்த போது, அவருடைய மாமாவுடன் பாலாஜி கோயிலுக்குச் செல்வார். 15 – 20 வருடங்களாக அங்கே அவருடை மாமா இறைவனுக்கு மாலையில் ஷெனாய் வாசித்து சேவை செய்வார். அதையே இவரையும் செய்யச் சொல்கிறார். மாலை 7 மணி முதல் 11 மணி வரை நான்கு ராகங்களை வாசிப்பாராம். ஓரிரவு தன்னை மறந்து அறையில் வாசித்துக்கொண்டிருக்கும் போது, சந்தனுமும், மல்லிகையும், ஊதுபத்தியும் கலந்த வாசனை வர, கண் விழித்த இவருக்கு கண் முன்னே கையில் கமண்டலத்துடன் பாலாஜி. உள்ளே தாளிடப்பட்டுள்ள கதவைத் தாண்டி வர எவருக்கும் அனுமதியில்லை. ’வாசி மகனே, வாசி..’ என்று சிரிக்கிறார் பாலாஜி. கான் அமானுஷ்ய உணர்வில் வாசிப்பதை நிறுத்தி விட்டாராம். சிரித்தபடி பாலாஜி மறைந்துவிடுகிறார். யாராவது ஃபக்கீர்தான் வந்திருக்க வேண்டும், அவர்களுக்குத்தான் இந்த சித்து வேலைகள் சாத்தியம் என நினத்து, கையில் லாந்தர் விளக்குடன் உள்ளும் வெளியும் தேடுகிறார். யாரும் தென்படவில்லை. இதைக் கேட்ட மாமா மகிழ்ந்து, அவரை முத்தமிடுகிறார். கான் தனியாகவே கோயிலுக்குச் சென்று தனியாகவே ஷெனாய் வாசிக்கிறார்!
“நான் எப்போதும் இறையுணர்வுக்காகவே முயற்சி செய்கிறேன். அதை அடையும்போது என் சுய நினைவை இழந்து விடுகிறேன். சில சமயங்களில் வாசிப்பது யார் என்பது கூட தெரியாமல் போய்விடுகிறது. அப்போதெல்லாம் எனக்குத் தோன்றுவது ஒன்றேதான் “இறைவா என்னை எடுத்துக்கொள். நீயே வடிவம் இல்லாதவன். நீயே பூவிலும், பழத்திலும் இருப்பவன்”.
எங்கும் வியாபித்திருப்பவன் பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசையிலும் இருக்கின்றான் தானே!
