தமிழ் ஜோக் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் -  Oneindia Tamil

ஓ.எம்.ஆர். ரோட்டில்…

 

நானும் மிதிலாவும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தோம். விளம்பரங்கள்
ஓடிக் கொண்டிருந்தன.

ஒரு அழகான பெண், ‘டோன்ட் மிஸ் திஸ் சான்ஸ்…. சென்னையிலே
முக்கியமான இடத்திலே – ஓ.எம்.ஆர். ரோட்டிலே – மிகக் குறைந்த விலையில்,
பல சலுகைகளுடன், மிக அழகான வீடுகள், ப்ளாட்டுகள், ஃப்ளாட்கள்…
சலுகைகள் இன்னும் மூன்றே நாட்கள்தான்…. முந்துங்கள்… புக் பண்ண
நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்………..’ என்று கூவிக்
கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டிருந்த மிதிலா. ‘ஏன்பா.. ஏரிகள், குளங்கள் இருந்த
இடங்களையெல்லாம் மூடி சமப்படுத்தி வீடுகளும், அடுக்குமாடிக் கட்டிடங்களும் கட்டிட்டாங்க… இப்போ மழைத் தண்ணீரை சேமிக்க இடமில்லை.
தண்ணீர் இல்லாம கஷ்டப்படறோம். மழைக் காலங்கள்ளே பெருகி வரும்
தண்ணீர் எங்கே போவது என்று தெரியாம வீடுகளுக்கு உள்ளே வந்துடுது.
இப்போ ரோட்டிலேயும் வீடுகள் வந்துட்டா ஒரு இடத்துலே இருந்து இன்னொரு
இடத்துக்கு எப்படிப் போவது? மனுஷங்க எப்படி நடப்பாங்க…?!’ என்றாள்,
குழந்தைத் தனமாக.

அதுதானே… நான் அவளையே பார்த்துக் கொண்டு அயர்ந்து போய்
உட்கார்ந்திருந்தேன்.

— சிவமால்

——————————————————————————–

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:

மணிபர்ஸ்..

அவமானத்தாலும், கோபத்தாலும் சிவந்து போயிருந்தது மோகன் முகம்.

ஆபீஸிற்கு ஆட்டோவில் வந்து இறங்கி, ஆட்டோ சார்ஜ் கொடுப்பதற்கு
பந்தாவாக பாக்கெட்டில் கை விட்டு பர்ஸை எடுத்து திறந்தவன் அதிர்ச்சி
அடைந்தான். பர்ஸ் காலி. பக்கத்திலிருந்த கடையிலிருந்து பணம் வாங்கி,

ஆட்டோவை அனுப்பியவன், ஸெல்ஃபோனில் மனைவியை கோபமாகக்
கூப்பிட்டான்.

‘ஹலோ..’ என்ற மனைவியின் குரல்.

‘மூதேவி.. மூதேவி.. என்னடி குடும்பம் நடத்தறே..? ஹஸ்பன்ட் ஆபீஸ்
கிளம்பும்போது அவன் தேவையான சாமான்களையெல்லாம் எடுத்துட்டானா
என்று கேட்கறதில்லே.. பார்க்கறதில்லே… மடஜன்மம்.. மடஜன்மம்.. இன்னிக்கு
என் மானமே போச்சு… இங்கே வந்து ஆட்டோ சார்ஜ் கொடுக்க பர்ஸை
எடுத்தா பர்ஸ் காலி..’

‘நீங்க கிளம்பும்போது ஆஃபீஸ் சாவி இருக்கா.., பர்ஸ் இருக்கா… வேண்டிய
ஆபீஸ் ஃபைல்களையெல்லாம் எடுத்துட்டீங்களா..?ன்னு ஐட்டம் ஐட்டமாகக்
கேட்டேனுங்களே… நீங்க எல்லாத்துக்கும் ‘இருக்கு.. இருக்கு’ன்னு தலையாட்டினீங்களே… பின்னே எப்படீங்க இப்படி..?’ என்றாள் ஈன ஸ்வரத்தில்.

‘அஸமந்தம்… அஸமந்தம்… மணிபர்ஸ் இருக்கான்னு கேட்டே… அதில்
பணம் இருக்கான்னு கேட்டியா… முட்டாள்.. முட்டாள்.. இன்னிக்கு சாயந்திரம்
நான் வந்ததும் இருக்குடி உனக்கு தீபாவளி..’ என்று ஸெல்ஃபோன் கனெக்-
ஷனைத் துண்டித்தான்.

– சிவமால்.

————————————————————————