Jailer Movie Review : Nelson's 'Jailer' is yet another watered-down attempt at fan service, but Rajinikanth is solid and Vinayakan is superb Galatta

ஜெயிலர்

நல்ல மசாலா படத்தின் ரசாயனம் இந்த நெல்சன் ரஜினி கூட்டணியில் இருக்கிறது. இது கமலஹாசனின் விக்ரம் படத்தின் நெல்சன் வெர்ஷன் என்பதை மறுப்பதற்கில்லை. நல்ல மசாலா படத்தின் காலங்கடந்த வெற்றி ஃபார்முலாவில், தன் கறுப்பு காமெடியை கலக்கியதில் நமக்கு ஒரு கிச்சு கிச்சு படம் கிடைத்து விட்டது. நான் தான் இங்க ராஜா. என் வார்த்தைகள் கட்டளைகள். அவை காலத்துக்கு ஏற்ப மாறும். ஹீரோ முத்துவேல் பாண்டியனின் வசனம் ரஜினிக்கும் பொருந்துவது, நெல்சனின் மேஜிக். அதோடு அனிருத்தின் இசையை எடுத்து விட்டால், பாதி படத்தின் சுவை போய் விடும் அளவிற்கு மரண மாஸ். விக்ரம் போலத்தான் இருக்கு..ஆனா அந்தளவுக்கு சோகமா இல்லை..குதூகலமா இருக்கு. – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.

ஓரளவுக்கு நம்மைக் கட்டிப் போடும் திரைக்கதை, அதிமுக்கியமாக, ஒற்றை ரஜினி எனும் ஐகானை நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. மிகவும் லேசான கதையுடன் முதல் பாதி ஓகேயாகவும் இரண்டாம் பாதி கலைந்த சீட்டுக் கட்டு போலவும் இருக்கிறது. – 123 தெலுகு.

நெல்சன்- ரஜினி கூட்டணிக்கு காமெடி வாசல் திறந்தாச்சு. இருவருக்கும் இது ஒரு விடியல் வெளிச்சம். அபூர்வ ராகங்களில் சொல்லப்பட்ட விமர்சனம்: புதுமுகம் ரஜினிகாந்த் கவுரவத்துடனும், ஈர்க்கும் தன்மையுடனும் இருக்கிறார். ஐம்பது வருடங்களுக்குப் பிறகும் இது ரஜினிக்கு பொருந்துவது ஆச்சர்யம். ரஜினியின் திரை ஆளுமையுடன் நெல்சனின் டார்க் காமெடி கலப்பது நமக்கு ஒரு கொண்டாட வைக்கும் படத்தை தந்திருக்கிறது. – தி ஹிந்து.

ரஜினி நடிகர் இல்லை..சூப்பர் ஸ்டார். அதை மறக்க விடாமல் எடுக்கப்பட்ட படம். கதையையும் கதை மாந்தர்களையும் சொல்வதற்கு முதல் நாற்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டது அதிகமோ என்று தோன்றினாலும், படத்தின் மிக ரம்மியமான செக்மென்ட் அது என்பதால், விமர்சனம் தேவையில்லை. முதல் பாதியின் சுறுசுறுப்பு திரைக்கதை, திசை மாறியதில், டீசல் இல்லாமல் நின்று போன ரயில் போல தடதடத்து இறுதியை நெருங்குவது இதன் பெரிய குறை. வயசானாலும் உன் ஸ்டைலும் கெத்தும் இன்னும் குறையவேயில்லை எனும் நீலாம்பரி வசனம் இன்றும் ரஜினிக்குப் பொருந்துகிறது என்றாலும் அது மட்டும் போதுமா படத்தைக் காப்பாற்ற? – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

தலைவர் ஹிட்டடிக்கும்போது நாமே அடிப்பது போல ஒரு உணர்வு வருவதுதன ரஜினி மேஜிக். அது இந்த படத்தில் முழுமையாக. இடைவேளைக் காட்சியில் ஹீரோ முத்து வேல் பாண்டியனாக மாறும் பாட்சா டெம்ப்ளேட் உண்மையில் புல்லரிக்க வைக்கிறது. வில்லன் விநாயகனின் குத்தீட்டி பார்வையும் மலையாளம் கலந்த தமிழும் சில்லிட வைக்கும் குரலும் ஒரு வில்லனின் புதிய பரிமாணத்தை திரைக்கு கொண்டு வந்திருக்கிறது. பலர் இருந்தாலும் தலைவர் ரஜினி முன்னால் அவர்கள் அடிப்பொடியர்கள் எனும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. – இந்தியா டுடே.

சுவாரஸ்யமான முதல் பாதி அடுத்ததில் கானல் நீராகக் காணாமல் போகிறது. இன்னும் எத்தனை முத்து வேல் பாண்டியன்கள் ரஜினி மனதில் இருக்கிறார்களோ? அதை இளம் இயக்குனர்கள் எப்படி மீட்டெடுக்கப் போகிறார்களோ? ஆனால் எப்படி வந்தாலும் தலைவரைப் பார்க்க நாங்க ரெடி. – சினிமா எக்ஸ்பிரஸ்.

சின்னச்சின்ன அசைவுகளில் இப்படிப்பட்ட மேஜிக்கைத் தன்னால்தான் நடத்த முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ரஜினி. ஒரு வழக்கமான ரஜினிகாந்த் பார்முலா மாஸ் கதையை தன் ஸ்டைலில் சொல்ல முயன்றிருக்கிறார் நெல்சன். அதில் பாதி கிணற்றைத் தாண்டியிருக்கிறார். மீதி? ரஜினி எப்படிப்பட்டவர்? சிலை கடத்தல் கும்பலின் பின்னணியில் இருப்பவர் யார்?  இறுதியில் எதிரிகளிடமிருந்து தன் மொத்த குடும்பத்தைக் காப்பாற்றினாரா போன்ற கேள்விகளுக்கு தன் காமெடி பாணியிலும், ரஜினிகாந்தின் மாஸ் பார்முலாவிலும் திரைக்கதை அமைத்து பதில் சொல்லியிருக்கிறார் நெல்சன். – விகடன் விமர்சனக்குழு

ரஜினிகாந்த் படம் எப்படி இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ அப்படி ஒரு படத்தைக் கொடுத்து ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் நெல்சன். படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ரஜினிகாந்த் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய ஸ்டைலிஷ் ஆன ஆக்ஷன் கொடுத்து அசத்தியிருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை ரஜினி ரசிகர்களை மனதில் வைத்து காட்சிகளை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். நெல்சன் எண்ணங்களுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை காட்சிக்கு காட்சி அலப்பறை செய்ய வைக்கிறார் ரஜினிகாந்த். – தினமலர்

படம் முழுக்க தனது ‘டிரேட் மார்க்’ ஸ்டலை வெளிப்படுத்தி ரசிகர்களை மெய்மறக்க செய்திருக்கிறார், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் என எல்லா திசைகளிலும் நடிப்பின் பரிமாணத்தை கொட்டியிருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் அனல் தெறிக்கும் அளவு தாண்டவமாடி இருக்கிறார். ‘ஹூக்கும்’ பாடல் பின்னணியில் நடந்து வரும்போதெல்லாம் ‘மாஸ்’ காட்டுகிறார். ரஜினிகாந்தின் ‘எனர்ஜி’ வியக்க வைக்கிறது. – தினத்தந்தி

வெப்

சொல்ல வந்த கதையைக் காத்திரமாகச் சொல்லத் தெரியாமல் விழிக்கிறது இந்தப் படம். சிக்கிக் கொண்ட பாத்திரங்கள் மீது ரசிகனுக்கு எந்த பரிதாபமும் ஏற்படாதது இதன் முதல் குறை. ஒட்டகத்தின் மீதான கடைசி புல் போல, குழப்பமான எழுத்து, இதைப் பாதாளத்தில் தள்ளி விடுகிறது. கடைசியில் கொண்டு போவதற்கு ஒரு தருணம் கூட இல்லை எனும் அவல நிலையில் முடிகிறது நட்டி நடராஜனின் இந்தப் படம். தனிமையான அத்வானத்தில் இருக்கும் ஒரு பங்களாவில் மாட்டிக் கொள்ளும் அபி ( ஷில்பா மஞ்சுநாத்) மற்றும் அவரது நண்பர்கள், மனநிலை தவறிய மாற்று திறனாளி வீராவின் ( நட்டி ) பிடியிலிருந்து தப்பித்தார்களா என்று சொல்ல வந்து இயக்குனர் ஹாரூன் ரஷீத்தும், வீராவின் வலையில் மாட்டிக் கொள்கிறார் என்றே தோன்றுகிறது. இதனால் இரண்டு மணி நேர படத்தை பல மணி நேரம் பார்த்த அலுப்பு பாதியிலேயே வந்து விடுகிறது. -டைம்ஸ் ஆஃப் இந்தியா.

ஐடி வேலை, வீக் எண்ட் பார்ட்டிக்காகவே வேலை செய்வது, மது,போதைப் பொருள்கள் என  வாழ்க்கையை ஓட்டி வரும் மூன்று பெண்கள், டீட்டோலரான தங்கள் மற்றொரு தோழியையும் குடிக்க வைத்து ஒரு நாள் இரவு கார் ஓட்டிச் செல்கின்றனர். அடுத்த நாள் காலை மூவரும் போதை தெளிந்து கண் விழித்துப் பார்க்கும்போது, நட்டி நட்ராஜின் கஸ்டடியில் பாழடைந்த வீட்டில் இருக்கின்றனர்.

நட்டி நட்ராஜ் – அவரது பெண் உதவியாளர் இருவரும் சேர்ந்து இந்தப் பெண்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு கொடுத்து, போதை மருந்து செலுத்தி, தூங்க வைத்து தொடர் டார்ச்சர் செய்கின்றனர். ஏற்கெனவே இந்த வீட்டில் மற்றொரு பெண்ணையும் கட்டி வைத்து அடித்து துன்புறுத்துகிறார்.

இடையில் சில கொலைகளையும் செய்கிறார். இந்த சூழலில் நட்டி எதற்காக இப்பெண்களைக் கடத்தினார்? இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன? சைக்கோ வில்லன் நட்டியின் பின்புலம் என்ன? இந்தப் பெண்கள் எப்படி அங்கிருந்து தப்பித்தார்கள் என்பனவற்றை விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் நடந்தது என்ன? இசை கார்த்திக் ராஜா என்பது நம்பும்படியாக இல்லை. இறுதியில் வரும் மிகப் பெரும் திருப்பம் நம்மை ஏமாற்றிய உணர்வைத் தருவதுடன், படத்தில் இருக்கும் ஓட்டைகளையும் நம்மைக் கேள்வி கேட்க விடாமல் இக்கட்டான சூழலுக்குத் தள்ளி விடுகிறது! – ஏபிபி லைவ்

உங்களை படம் முடிந்த பின்னும் இறுக்கமாக வைத்திருக்கும் திரில்லர் – டாக்கீஸ் கார்னர்.

எண்ணற்ற கதாபாத்திரங்கள். எல்லோரும் தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தை மீறி நடித்ததில், படம் பொறுமையை  சோதிக்கிறது. நாற்பது விழுக்காடுகள் இதற்கான மதிப்பெண் – ஃபில்மி கிராஃப்ட் அருண்.

ஹார்ட் ஆஃப் ஸ்டோன்

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்த தமிழ் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஹாலிவுட் படம். இதன் சிறப்பு அலியா பட் இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பது தான். ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

அருமையாக படமாக்கப்பட்ட ஆனால் சரியாக எழுதப்படாத படத்தில் ஆலியா பட் வீணடிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன் வந்த சிட்டாடல் சீரியலை விட இது மோசமில்லை என்பதே ஆறுதல். ஒரு முறை பார்க்கலாம் ரகம் – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

அருமையான சண்டைக் காட்சிகளைத் தாண்டி இந்தப் படம் விரைவில் மறக்கப்படும். கடைசியில் ஹீரோ(யின்) ஜெயிப்பார் எனும் டெம்ப்ளேட்டைத் தாண்டி ஹாலிவுட் கூட வரமுடியவில்லை. – தி ஹிந்து.

கால் கடோட், அலியா பட் நடித்த படம் விரைவில் ரசிகனை கவர்ந்து அதி விரைவில் அதை மறக்கவும் செய்து விடுகிறது. – ஃபிலிம் கம்பானியன்.

மிஷன் இம்பாஸிபில் போன்ற ஒரு திரில்லர் நிஜமாக கவர்கிறது. ஆனால் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்கும் நமக்கும் தெரியவில்லை. படத்தை எடுத்த அவர்களுக்கும் தெரியவில்லை. – தி கார்டியன்.

பத்மினி ( மலையாளம்/ தமிழ்)

குஞ்சாகோ போபன், மடோனா சபாஸ்டியன், அபர்ணா பாலமுரளி நடித்த படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. சுவையான திருப்பங்கள் சில சமயம் பாக்யராஜை நினைவு கூற வைக்கின்றன. எதிர்பார்த்த முடிவு என்றாலும் வழி நெடுகிலும் நம்மை கட்டிப் போடும் திரைக்கதைக்கு சொந்தக்காரர் இயக்குனர் சென்னா ஹெக்டே! சபாஷ்!

சோகமும் சிரிப்புமாக அமைக்கப்பட்ட திரைக்கதை வாவ் போட வைக்கிறது. சமுதாய அவலங்கள் குறித்தான கிண்டலும் கேலியும் நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இன்னும் உயரங்களைத் தொடக்கூடிய படம் தான். ஆனால் இது போதும் என்று விட்டு விட்டார்கள். ஆரம்ப சுவாரஸ்யம் கடைசி வரை தக்க வைக்காமல் திணறுகிறார் இயக்குனர் சென்னா ஹெக்டே! – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

முந்தைய இரண்டு படங்கள் போலல்லாமல் சென்னா ஹெக்டேயின் இந்தப் படம் மித வேகத்தில் நகர்கிறது. அதனால் எந்த வித ஆச்சர்யங்களும் இல்லாமல் முடிந்தும் போகிறது. – தி ஹிந்து.

மாயோன்

 

கதையில் இருக்கும் புதிரைத் தவிர, இந்தப் படம் அரங்குகளுக்கு எப்போது வந்தது? எப்போது விலகியது என்பது பெரும் ரகசியமாக உள்ளது. தவற விட்டவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக அமேசான் பிரைமில் இது வெளியாகி இருக்கிறது.

டா வின்சி கோட் போன்ற ஆங்கிலப் படத்தை தரும் நல்ல வாய்ப்பை கோட்டை விட்டு விட்டது இந்தப் படம் என்றே திரையில் பார்க்கும்போது நமக்குத் தோன்றுகிறது. நீங்கள் தொலைக்காட்சியில் வந்த மர்ம தேசம் நெடுந்தோடர் ரசிகர்களா? அப்ப..இந்தப் படம் உங்களை நிச்சயம் கவரும். இயக்குனர் கிஷோர் சில சுவாரஸ்யமான முடிச்சுகளை படம் நெடுக போட்டு நம்மை உட்கார வைக்கிறார். ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு சில சமயம் ட்ரோன் ஷாட்டுகளில் நம்மை வியக்க வைக்கிறது. கடைசி திருப்பமும் எதிர்பாராமல் நம்மை வியக்க வைக்கிறது. இப்படி சில நல்ல காட்சிகள் போக, ஒரு ஹாலிவுட் படத்தின் இந்திய பிரதியை கையகப்படுத்தத் தவறி விட்டது படம் என்றே சொல்ல வேண்டும். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

அசத்தலான கதையும் திரைக்கதையும். அதை அப்படியே திரையில் கடத்துவதற்கான பெருமுயற்சியில் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் உழைத்திருப்பிருப்பது காட்சிகளில் தெரிகிறது. அதோடு சில மனதில் தங்கும் இளையராஜா மெலடிகள் உண்டு என்றாலும் நினைப்பதெல்லாம் ரசிகனுக்கு கடத்த முடியாது எனும் உண்மை அப்பட்டமாகத் தெரிகிறது. – சினிமா எக்ஸ்பிரஸ்.

சிலை கடத்தல், அதற்கு பின்னால் இருக்கும் கும்பல் குறித்து ஓவர் ஹைப் கொடுத்துவிட்டு இறுதியில் அந்த ஹைப் கொடுத்த வில்லன் அடிவாங்க இந்தியா வரும் காட்சிகள் செயற்கை. ஹாலோசினேஷன் பற்றி கொடுக்கப்படும் விளக்கம் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. தேவையில்லாத காதல் காட்சிகளும், அதையொட்டி வரும் பாடலும் பார்வையாளர்களை திரையரங்கிலிருந்து விரட்டுகிறது. இளையராஜா இந்தப் படத்தில் இசையமைத்தது மட்டுமல்லாமல் பாடல்களும் எழுதியிருக்கிறார். – தமிழ் இந்து.

மத்தகம்

 

கிட்டத்தட்ட ஜெயிலர் அளவுக்கு நீளம். மூன்று மணி நேரம். ஆனால் இது ஒரு வலைத்தொடர். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. அதர்வா முரளி, குட்நைட் புகழ் மணிகண்டன் ஹீரோ வில்லனாக நடித்த எலி பூனை கதை. உதவிக்கு கவுதம் மேனன், நிக்கிலா விமல் என்று சற்று அறிந்த முகங்கள். படாளம் சேகரை ( மணிகண்டன்) பிடிக்க அஸ்வத்( அதர்வா) ஐபிஎஸ், போடும் திட்டமும் அதற்கு ஒரு அடி முன்னால் சேகர் போடும் ஸ்கெட்சும் தான் இந்த ஆடு புலி ஆட்டக் கதை. சில அனாவசிய இழுபறிகள் வலைத்தொடர்களில் எப்போதும் இருக்கும். இதிலும் இருக்கிறது. ஆனாலும் உட்கார வைப்பது சில வியூகங்கள்..அதை தொடர்ந்த நகர்வுகள்.

சின்ன ரவுடியை ஒரு ரோந்தில் சந்தேகப்பட்டு விசாரிக்க, அது இப்படி ஒரு சதிகும்பலை அடையாளம் காட்டும் என்று அறியாத அஸ்வத், அவர்களை கூண்டோடு பிடிக்க போடும் திட்டம் என்பது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த தேடுதல் வேட்டை சற்று அதிகமாக இழுபறியானதில் சலிப்பு மிச்சமாகிறது.

அதர்வா அனுபவம் அதிகமில்லாத அதிகாரியாக காட்சி தர மெனக்கெட்டிருக்கிறார். மணிகண்டன் தன்னுடை பக்கத்து வீட்டு பையன் பிம்பத்தை உடைக்க பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார். அது வெற்றி பெற்றதா என்பதை இதன் இரண்டாம் பாகத்தில் தான் காண வேண்டும். -இந்தியா க்ளிட்ஸ்.

மத்தகம் என்றால் யானையின் நெற்றிப் பகுதி என்று பொருள். திரில்லர் வகைகளில் சைக்கோ திரில்லர், மெடிக்கல் கிரைம் திரில்லர், ஆக்ஷன் திரில்லர் என பல வகை திரில்லர் வகைகள் உள்ளன. மத்தகம் இது வரை அதிகம் சொல்லாத கேங்ஸ்டர் திரில்லர் வகையை சேர்ந்தது. தொடர் தொடங்கி முதல் எபிசோட்டின் முதல் காட்சியிலிருந்து பரபரப்பாக நகர தொடங்கி விடுகிறது. கதை ஒரு நேர்கோட்டில் பயணித்தாலும் எங்கேயும் சுவாரசியம் குறையவில்லை.ஒவ்வொரு காட்சியையும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார் டைரக்டர். தேவையில்லாத ஒரு காட்சியோ, கேரக்டரோ இல்லை. ஒடிடி யில் மட்டுமே தொடராக ரசிக்கும்படியான திரைக்கதையை விரிவாக தந்துள்ளார் இயக்குநர்.  அதிகம் ரத்தம் சிந்ததாத இந்த கேங்ஸ்டர் திரில்லர் கதையை குடும்பத்துடன் ரசிக்கலாம். – கல்கி இணைய இதழ்.

எடிட்டர் பிரவீன் ஆண்டனியின் நறுக்குகள், இயக்குனர் பிரசாத் முருகேசனின் திரைக்கதையின் வேகத்துக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்கின்றன. யார் வெல்வார்கள் என்பதை இரண்டாம் பாகத்தில் தான் காண முடியும். அதுவரை இதன் சுவாரஸ்யம் நினைவில்  தங்குமா? -ஃபிலிம் கம்பானியன்.

 

கிங் ஆஃப் கொத்தா ( தமிழ், மலையாளம்)

வழக்கமான தாதா கதையை பல நட்சத்திரங்களைப் போட்டு பான் இந்தியா படமாக மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். நாயகன் துல்கரைப் பொருத்தவரை கச்சிதம். ஆனால் படத்தின் நீளம் ஆகப் பெரிய குறை. கிட்டத்தட்ட 165 நிமிடங்கள் ஓடும் படம் இடைவேளைக்கு சாத்தியம் இருக்கும் பல இடங்களைக கடந்து பொறுமையைச் சோதிக்கிறது. அதேபோலத்தான் முடிவும். மொத்தத்தில் கிங் ஆஃப் கொத்தை..  சொத்தை. – வலைப்பேச்சு.

நல்ல திறமையுள்ள துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கொத்தா, நம்மை கட்டிப் போட மறுக்கிறது. – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இயக்குனர் அபிலாஷ் ஜோஷியின் திரைக்கதை இந்தப் படத்தை நட்டாற்றில் விட்டு விடுகிறது. – தி ஹிந்து

எதிலும் ஆச்சர்யம் அற்ற திரைப்படம் ஒளிப்பதிவாலும் இசையாலும் காப்பாற்றப்படுகிறது. ஆனாலும் துல்கர் சல்மானின் திரை ஆளுமையை யாரும் புறம்  தள்ள முடியாது. – இந்தியா டுடே.

இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால் படம் படுகுழியிலிருந்து தப்பித்திருக்கும். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

படம் ஏமாற்றத்தைத் தருகிறது. எதையும் புதிதாக யோசிக்கவில்லை இந்தப் படக்குழு. – ஹிந்துஸ்த்தான் டைம்ஸ்.

 

அடியே

கனவுகள் உயிர்பெறும் ‘கற்பனை’ உலகம் ஒன்றில் நடக்கும் காதல் கதையின் முடிவு ரியாலிட்டியை நம்பியிருந்தால் அது ‘அடியே’.

பள்ளிக் காலத்திலிருந்து கவுரி கிஷனை காதலிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் தனது காதலை வெளிப்படுத்தும் போதெல்லாம் எதோ ஒரு பிரச்சினை குறுக்கிட்டுவிட, காதல் கரையைக் கடக்காமல் தவிக்கிறது. அப்படி ஒருநாள் கவுரியிடம் காதலை சொல்ல முயலும் ஜி.வி விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கண் விழித்துப் பார்த்தால் வேறு உலகத்தில் இருக்கிறார். அந்த உலகத்தில் கவுரியும், ஜிவியும் தம்பதியர்களாக வாழ்கின்றனர்.

தான் மல்டி யுனிவர்ஸுக்குள் வந்ததை அறியாத அவர், அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை புரிந்துவிடுகிறது. பின்னர் நிஜ உலக ஒருதலைக் காதல் ஒருபுறமும், கற்பனை உலக திருமண வாழ்க்கை மறுபுறமுமாய் விரிய, இறுதியில் கற்பனை உலகம் காலாவதியானால் என்ன நடக்கும் என்பது படத்தின் திரைக்கதை. திரும்ப திரும்ப மல்டி யுனியவர்ஸை விளக்க முயற்சித்து அதனை சிக்கலாக்கியிருப்பதும், சுவாரஸ்யமற்ற காதல் காட்சிகளும், தேவையில்லாமல் இழுத்த கடைசிப் பகுதியும் சோர்வு.– தமிழ் இந்து.

வாழ்க்கையில் எந்த ஆர்வமும், பிடிப்பும் இல்லாமல் இருக்கும் ஜீவா (ஜி.வி.பிரகாஷ் குமார்) தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் தற்போது பிரபல பாடகராக இருக்கும் அவரது பள்ளிப் பருவத்துக் காதலியான செந்தாழினியின் (கௌரி ஜி.கிஷன்) பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதில் அவர் தனக்குப் பள்ளிப் பருவத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் குறித்து நினைவுகூர்கிறார். அதை எழுதியவரைத் தேடி வருவதாகவும் சொல்கிறார். ஜீவாதான் அதை எழுதியது என்பதால் அவர் அதை செந்தாழினிக்குத் தெரியப்படுத்த முயற்சிகள் எடுக்கிறார். அந்த நேரத்தில் அவர் ஒரு விபத்தில் மாட்டிக்கொள்ள, அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் அவரை ஒரு ஆல்டர்நேட் ரியாலிட்டிக்குள் தள்ளுகிறது. மல்டிவெர்ஸில் (இணை பிரபஞ்சம்) மாட்டிக்கொண்ட ஜீவா தன் காதலை ஜெயிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள்தான் இந்த ‘அடியே’. ஆங்காங்கே வந்து போனாலும் வந்த இடங்களிலெல்லாம் ஏதாவது ஒரு டைமிங் கலாய்களைப் போட்டு அப்லாஸ் வாங்குகிறார் வெங்கட் பிரபு என்கிற கௌதம் மேனன். டைட்டில் கிரியேட்டிவிட்டிக்கு ஒதுக்கிய நேரத்தை ரைட்டிங் டேபிளிலிலும் மல்டிவெர்ஸ் ஐடியாவிலும் கொஞ்சம் செலவழித்து இருந்தால், “அடியே” கொஞ்சம் அடி வாங்காமல் தப்பித்திருக்கும். – விகடன் விமர்சனக்குழு.

 

பார்ட்னர்

இது ஒரு ஓகே ஓகே படம் என்றாலும் படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் ஒரு சம்பவம் தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. அதுவரை பொறுமையை சோதிக்கவும் செய்கிறது. -ஃபில்மி கிராஃப்ட் அருண்.

இது ஒரு மென் நகை காமெடி படம். அதனால் இதில் லாஜிக் பார்க்க வேண்டியதில்லை. கடைசியில் உபதேசமாக எதையும் சொல்ல முயற்சிக்கவில்லை என்பது ஆறுதல். – சவுத் ஃபர்ஸ்ட்.

படம் நம்மை வதைத்து துன்புறுத்துகிறது. – இந்தியா ஹெரால்டு.

ஆதியும் ஹன்சிகாவும் தங்கள் பாத்திரங்களுக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்திருக்கிறார்கள். படத்தின் தொழில் நுட்பக் குழு சரியாக வேலை செய்திருக்கிறது என்றாலும் அது எந்தவிதத்திலும் படத்தை இன்னொரு தளத்திற்கு உயர்த்தவில்லை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இயக்குனர் மனோஜ் தாமோதரன் சுவாரஸ்யமான கதையை யோசித்திருக்கிறார். அதை திரைக்கதையாக்கிய போதுதான் கோட்டை விட்டு விட்டார். உடலால் பெண்ணாகவும் மனதால்  ஆணாகவும் இருக்கும் பாத்திரத்தில் வரும் ஹன்சிகா சராசரி நடிப்பை நல்கியிருக்கிறார். இதன் ஒளிப்பதிவும், படத்தொகுப்பு எல்லாமே சுமார் ரகம் தான். – தினமலர்.

 

ஹர்க்காரா

இது உண்மைக்கதை. இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம். படம் பார்க்கும்போது இது ஒரு ஆவணப்படம் போலத் தோன்றுவதைத் தவிர்த்திருக்கலாம் இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ. – தினமலர்.

நைந்து போனத் திரைக்கதை இந்தப் படத்தை வெற்றிக்கோட்டிற்கு போக விடாமல் தடுக்கிறது. புறக்கணிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் சோகம் படம் முடிந்தபின்னும் நம் மனங்களில் தங்குவது இயக்குனரின் வெற்றி.- சினிமா எக்ஸ்பிரஸ்.

போஸ்ட் மேன் என்பவர் கடிதம் மட்டும் தருபவர் இல்லை. மக்கள் தங்கள் வீட்டின் ஒரு ஆளாக பார்க்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் டைரக்டர். திரைக்கதை மெதுவாக சென்றாலும் ரசிக்க முடிகிறது. காட்சிகள் அனைத்தும் சினிமாவுக்காகான மிகைப்படுத்தல் இல்லாமல் எதார்த்தமாக உள்ளது. காளி வெங்கட் தமிழ் சினிமாவிற்கு  கிடைத்த  திறமையான நடிகர். நடிப்பில் நம் வீட்டிற்கு வரும் தபால் காரரை நினைவுப்படுத்துகிறார். சினிமாவுக்கான எந்த ஒரு பூச்சுகளும் இல்லாமல் ஒரு அழகியல் படமாக வந்துள்ளது ஹர்காரா.” 4 ஜி,5ஜி நுழையாத இடங்களில் கூட இந்த போஸ்ட் மேன் நுழைவான் “என்று காளி வெங்கட் சொல்லும் வசனம் இந்திய அஞ்சல் துறையின் வலிமையை காட்டுகிறது. – கல்கி இணைய இதழ்.

 

பிட்சா 3 தி மம்மி

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கும் பேய் படம். இதுவும் பேய் பழி வாங்கும் கதைதான் என்றாலும் எதற்கு பழிவாங்கல் என்பதில் இதன் சிறப்பம்சம் இருக்கிறது. – சவுத் ஃபர்ஸ்ட்.

இயக்குனர் மோகன் கோவிந்த் கதையின் தளத்தை வெகு சுவாரஸ்யமாக அமைத்திருக்கிறார். அஸ்வின் காகுமனு, நலன் எனும் பாத்திரத்தில் சரியான விகிதத்தில் பயப்படுகிறார். அவரது காதலி கயலாக பவித்ரா மாரிமுத்து. பேய்களுடன் தொடர்பு கொள்ளும் மென்பொருள் விற்பன்னராக சிறப்பாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவும் இசையும் இதில் கைகோர்த்து சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன. ஒரு முறை பார்க்க கூடிய டீசன்ட் ஆவி படம் இது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

மலினமான உத்திகள் கூட இந்தப்படத்தை காப்பாற்ற முடியவில்லை – சினிமா எக்ஸ்பிரஸ்.

திகில் காட்சிகளில் பதட்டம், குழப்பான மனநிலை, கையறுநிலையில் கோபப்படுவது என மொத்த படத்தின் பாரத்தையும் ஒருவராக சுமந்துள்ளார் நாயகன் அஸ்வின். உணவக ஊழியராக வரும் காளி வெங்கட், நாயகனுக்கு ஆறுதல் கூறுவது போல நடிப்பிலும் ஆறுதல் தருகிறார். இரண்டாம் பாதியில் அனுபமா குமார் பாசமான தாயாகவும், கொடுமையைக் கண்டு கதறும் உணர்வுபூர்வமான காட்சியிலும் சிறப்பான நடிப்பினைக் கடத்த முயற்சித்துள்ளார். – விகடன் விமர்சனக் குழு.

நளனான வரும் அஸ்வின், பிரேம் ஆக வரும் கவுரவ், மித்ராவாக வரும் அபிநட்சத்திரா, ராணியாக வரும் அனுபமா குமார், வீராவாக வரும் நாராயணன், தாமுவாக வரும் காளி வெங்கட், விஸ்வநாதனாக வரும் கவிதா பாரதி ஆகியோர் கதாபாத்திரங்களை வெளிக்காட்டும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார்கள். டிஐ மற்றும் வி.எஃப்.எக்ஸ் விளைவுகளைத் தரமாக உருவாக்க, பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவு பேரளவில் கைகொடுத்திருக்கிறது. அருண் ராஜின் அளவான பின்னணி இசை ஆச்சர்யம். பெரும்பாலான காட்சிகளில் அவர், இசைக்காமல் விட்டிருப்பதும் சிறப்பு. 11 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘பீட்சா’ படம் தந்த தரமான ஹாரர் திரை அனுபவம், அதன் 2-ம் பாகத்தில் ஏமாற்றம் அளித்திருந்த நிலையில், ‘பிட்ஸா 3 தி மம்மி’ முதல் படம் தந்த கவுரவத்தை மீட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ் இந்து.