Vadivelu Friends GIF - Vadivelu Friends - Discover & Share GIFs

(அமரர் தேவன் அவர்கள் மன்னிப்பாராக)

ரமா காலை ஒன்பது மணிக்கு சோபாவில் உட்கார்ந்து கொண்டே கனவு கண்டு கொண்டிருந்தாள். கனவு காண்பது, ஒரு சிறிய விஷயத்தையும் விவாதம் செய்வது என்பது அந்த வீட்டில் ஒரு பெரிய கலையாகும். இப்போது குளிக்கலாமாவிலிடுந்து நாளை என்ன சமையல் செய்யலாம் என்பது வரை.

அவள் கண்ணைத் திறந்தபோது சுவற்றில் ஒரு சிறு குளம் தெரிந்தது. ஆஹா இதை உடனே சரி செய்யாவிட்டால் ஏரியாகிவிடுமே என்று தோன்றியது. வேலையை நினைத்தால் மலைப்பாக இருந்தது. ‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பதை விட ‘வீட்டை வெள்ளையடித்துப்பார் ! கல்யாணம் பண்ணிப் பார்’ என்று தோன்றியது. இந்த யோசனை ஐநா சபையில் வைக்கப்பட்டது. இரு உறுப்பினர்களால் வர முடியாததால் அவை தள்ளி வைக்கப்பட்டது. மூன்றாம் நாளன்று விவாதம் தொடங்கியது. முதலில் இது இப்போது தேவையா, உடனேயா அல்லது சிறிது நாட்களிலேயா என்று சொல்லும்போதே ரமேஷின் தலையில் ஒரு சிறு கல் விழுந்தது. அப்போதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்தது போன தடவை வேலை ஆரம்பித்து 18 நாட்கள் மகாபாரதப் போர் நிகழ்த்திய ஒருவனைக் கூப்பிடலாமா அல்லது கூட்டாஞ்சோறு சாப்பிட ஒரு கிராமம் மாதிரி வந்தவரைக் கூப்பிடலாமா அல்லது அடுத்தாத்து அம்புஜம் வீட்டில் வேலை செய்தவரைக் கூப்பிடலாமா என்று சீட்டுக் கட்டிப் பார்க்கப்பட்டது. பல நாட்கள் இழுத்தடிக்காத சுரேஷைக் கூப்பிடுவது என்று தீர்மானம் ஆகி அவருக்கு ஃபோன் பண்ணினால் அவர் வேறு கிரகத்தில், நீங்கள் நினைத்தமாத்திரி சந்திர கிரகம் இல்லை, வேறு ஒரு வீட்டில் இருப்பதாகவும் டவர் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. பின் அவரே 5 மணிக்கு மேல் ஃபோன் செய்தார். விஷயத்தைச் சொன்னவுடன் அடுத்த வாரம் வரை அவருக்கு வேலை இருப்பதாகவும் வரும் சனியன்று வேலை ஆரம்பித்து விடலாம் என்றும் அருள் கூர்ந்தார்.

அவரிடம் பத்து கட்டளைகள் வைக்கப்பட்டன –

1) காபி டீ கேட்கக் கூடாது, 2) வேலை ஆரம்பித்து முடித்து விட்டுதான் வேறு வேலைக்குச் செல்ல வேண்டும், 3) அதற்காக அதிக நாட்கள் இழுத்தடிக்கக்கூடாது, 4) இடையில் லீவ் போடக் கூடாது, 5) அவர்களே சாமான்களை எடுத்து வைத்துப் பிறகு அதே இடத்தில் வைக்க வேண்டும், 6) தரையில் சுண்ணாம்பு பொட்டு வைக்கக் கூடாது, துடைத்து விட வேண்டும், 7) வீட்டு ஏணியை உபயோகிக்கக் கூடாது, 8) தண்ணீர் ஒரு பாட்டிலில் பிடித்து குடிக்க வேண்டும், எல்லா டம்ளர்களையும் எடுக்கக் கூடாது, 9) பணம் வேலை எல்லாம் முடிந்த பிறகு கடைசியில்தான் தரப்படும், 10) செக் ஆகத்தான் தரப்படும்.

ஆனால் அந்த ஆண்டவனின்  கட்டளைகளை மீறும்போது இந்த மனித ஜென்பம் எம்மாத்திரம்! கட்டளை கட்டளையாகவே இருந்தது கேட்டளையாக (கேட்பதாக) மாறவே இல்லை.

சனிக்கிழமை அவசர அவசரமாக ஏதோ சமையலை முடித்து விட்டு உட்கார்ந்தேன். பதினொன்று மணிக்கு இரண்டு பேர் மெதுவே எட்டிப் பார்த்தனர். பிச்சை எடுக்கிறவர்கள் மாடி ஏறி வந்து விடுகின்றனர் என்று எண்ணிய போது ‘இந்த வீடுதான்’ என்று பேசினர். அப்போதுதான் அவர்கள் பெயிண்ட் அடிக்க வந்தவர்கள் என்று உள்ளே அழைத்தேன். என்ன கலர் எந்த அறையில் என்று ஒரு விவாதம். அதே கலரா மாற்றலாமா என்று. எல்லா அறையிலும் சந்தனக் கலர், ஒரு பக்கம் மட்டும் அழுத்தமான கலர் என்று முடிவு செய்யப்பட்டது. ‘முதலில் சமையல் அறை முடித்து விட்டால் மாமிக்குத் தோதாக இருக்கும்’ என்று கூறிக் கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தனர். வேலை ஆரம்பித்த ஒரு மணிக்கெல்லாம் ஃபோன் டீ சாப்பிட வருமாறு. 1 மணிக்கு சாப்பாட்டிற்குப் போனால் இரண்டு மணிக்குத்தான் திரும்புவார்கள். சாயந்திரம் 5 மணிக்கெல்லாம் கையை அலம்பி விடுவார்கள். அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யும் என் அகத்துக்காரர் இதை பின்பற்றக் கூடாதா!

சாயந்திரம் சமையல் அறைக்குப் போனால் இரண்டு மூன்று டம்ளர்கள் தண்ணீர் குடித்து விட்டு. ஆக முதல் கட்டளை மீறியாகி விட்டது. பெயிண்ட் பிரஷ் என்று எல்லாம் கட்டிலுக்கு அடியிலும் வெளியிலும். சின்ன வயதில் விளையாடிய பாண்டி கை கொடுத்தது, மன்னிக்கவும் கால் கொடுத்தது. ஒரு பாத்ரூமில் பாதி பெயிண்ட். எனவே ஒரே பாத்ரூமில் எல்லோருக்கும் ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.

மறு நாள் ஞாயிறு. சுரேஷ் ஃபோன் செய்து ‘நான் இன்று வர மாட்டேன். வருபவர்களுக்கு நீங்கள் சிறிது பணம் தர வேண்டும்’ என்றான். இது என்ன என்று யோசித்து ஏதாவது நடந்தால் கேட்க சுரேஷூம் இருக்க மாட்டான் என்று வேண்டாம் என்று சொல்லி விட்டாள் ரமா. திங்கள் மெதுவே வேலை நடந்தது. பெயிண்ட் பண்ணுகிறவர் போர் புரிபவர் மாதிரி வாள் வீச ரமா சென்று கேட்கவேண்டியதாயிற்று. ரமா புக் படித்து விட்டு உள்ளே சென்றால் ஏணி மேல் ஒருவன், இவர்களது பெரிய ஸ்டூல் மேல் மற்றொருவன். கேட்டதற்கு ‘பெயிண்ட் பண்ணி கொடுத்து விடுவோம்’ ஆக இரண்டாவது கட்டளையும் அம்பேல்.

செவ்வாய் 11 மணி வரை யாரையும் காணோம். சுரேஷ் ஃபோன் செய்து ‘லிங்கேஸ்வரன் மனைவிக்கு தலை சுற்றல். ஆகவே இன்று கிடையாது’ ரமாவிற்கு கோவம் ‘லிங்கம் இல்லாவிட்டால் ஓர் அணுவும் அசையாதோ!’ ஆக மூன்றாவது கட்டளையும் காலி.

புதன் சாயந்திரம் சுரேஷ் பணம் கேட்டான். ரமா ‘வேலை முடிந்துதான் தருவேன் என்று சொல்லியிருக்கேனே’ என்று மறுத்து விட்டாள். கீழே வேலை செய்ய ஆள் இல்லை என்று திரும்பவும் ஒரு நாள் லீவு. திங்களன்று ஒருவாராக முடித்து விட்டார்கள். வீடு துடைக்கவில்லை, அங்கங்கே பெயிண்ட், சாமான்கள் பாதி எடுத்து வைக்கவில்லை. ரமாவிற்கு போதும் என்றாகி விட்டது.

இனி வேலைக்கு யாரையும் கூப்பிடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டே பாத்ரூமில் முகம் அலம்பி துண்டை எடுத்தால் அந்த ஸ்டாண்ட் அவள் தலையிலேயே விழுந்தது!

UNDERSTANDING  சரியில்லை !