தைரியத்தில் ஒரு பாடம்

பயங்கரமான ஒரு மின்னல் மலையையே இரண்டாகப் பிளந்துவிடுவது போல் குறுக்கே வெட்டி ஓடியது. ஆறு வயது ஜானா கண்களை இறுக மூடிக்கொண்டு அம்மாவை அணைத்துக்கொண்டு இன்னும் நெருக்கமாக உட்கார்ந்தாள். மடியில் உட்கார முடியாது; ஏனெனில் ஒரு வயது தம்பிப் பாப்பா அம்மா மடியில் இருந்தான். அவனுடைய உடல் ஜுரத்தில் அனலாகக் கொதித்துக் கொண்டு இருந்தது. தொடர்ந்து வந்த பெருத்த இடிமுழக்கம் கண்ணாடி ஜன்னல் வழியாகத் தெரிந்த மேற்குத் தொடர்ச்சி மலையையும் பிளந்து பொடியாக்குவதுபோல அதிர வைத்தது. ஜன்னல்களுக்கும் கதவுகளுக்கும் திரைச்சீலைகள் போடப்படாத காலங்கள் அவை! போதாக்குறைக்கு பெரிய பெரிய வண்டுகள் வந்து மூடிவைத்த ஜன்னலில் மோதி ‘டங், டங்’ என்று ஓசையெழுப்பி அந்த வீட்டின் அமைதியைக் குலைத்தன.
இது எங்கே தெரியுமா? 1950களில் ஐயர்பாடியில் (வால்பாறை எனும் ஊரின் அருகே உள்ளது; மலைப்பிரதேசம்!) எங்கள் தகப்பனார் வேலை பார்த்தபோதுதான். நான் தான் ஜானா. அப்பா மின்சார வாரியத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். வாரியப் பணியாளர்களின் வீடுகள் அடுக்கடுக்காகப் பல உயரங்களில் இருந்தன. கீழே பத்துப் பதினைந்து வீடுகள் மின்கம்பங்களில் ஏறி வேலை பார்க்கும் ஊழியர்களுக்கானது; பின் முப்பது படிகள் ஏறினால் ஐந்தாறு வீடுகள் அடுத்த நிலை ஊழியர்களுக்காக. இன்னும் முப்பது படிகள் ஏறினால் தனியாக நின்ற ஒரேயொரு பெரிய பங்களா, சூப்பர்வைசருக்காக. அதில் நாங்கள் குடியிருந்தோம். சுற்றி மரங்களும், பூச்செடிகளுமாக, பெரிய தோட்டம். எனக்காகவே அப்பா ஆட்களைக் கூப்பிட்டு விதம்விதமான ரோஜா, டாலியா இன்னும் பல வண்ண மலர்ச்செடிகளை வைத்திருந்த இடம். என் தேவதைக் கனவுலகம்.
நாங்கள் குடிவந்து மூன்று மாதங்களே ஆகியிருந்தன. என் விளையாட்டுத் தோழர்கள் எல்லாம் கீழுள்ள குடியிருப்புகளில். லைன்மேன் கேசவப் பணிக்கரின் மகள் சுமி என் உயிர்த்தோழி. எங்களுக்குச் சமவயது. சுற்றிலும் தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட அந்த இடத்தில் மின்சார வாரியத்தின் பணி, அறுந்துபோன வயர்களை சரிப்படுத்துவதும் இன்னபிறவும். பாதித் தோட்டங்கள் இன்னும் வெளிநாட்டவர் கைவசமே இருந்தன. எப்போது மழைபெய்தாலும்- அது சாமான்ய மழை அல்ல; இடி மின்னலுடன் கூடிய கனமழை- மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் தடைப்படும். தகப்பனார்தான் தன் ஆட்களுடன் சென்று அதனக் கொட்டும் மழையில் சரி செய்வார். அம்மாவும் இரு சிறு குழந்தைகளும் வீட்டில் தன்னந்தனியாக இருப்போம். இரண்டு மூன்றாண்டுகளுக்கொருமுறை ஊர் மாற்றம் செய்யப்படும் வேலை அப்பாவுடையது. அவ்வப்போது புதிய பள்ளிக்கூடம், புதுத் தோழர்கள், தோழிகள், ஆசிரியர்கள், இன்னபிற, பழகிவிட்டது.
நம் கதைக்கு வரலாம். அப்பா இதுமாதிரி சென்றுவிடும் சமயங்களில் கீழே இருக்கும் ஹெல்ப்பர் ராமய்யாவின் மனைவி ரங்கம்மா வந்து துணைக்குப் படுத்துக் கொள்வாள். அவர்கள் இரு பெண்களையும் திருமணமே செய்து கொடுத்தாகி விட்டது. ஆகவே தம்பி ரகுவைப் பார்த்துக் கொள்ளவும் வருவாள்.
இன்று அப்பா மாலை ஏழுமணிக்குத்தான் அவசரமாகக் கிளம்பிச் சென்றார். ஆகவே ரங்கம்மாவைக் கூப்பிட முடியவில்லை. போதாத குறைக்கு தம்பிப் பாப்பாவிற்கு ஜுரம். உடம்பு அனலாகக் கொதித்தது. அம்மாவின் மடியைவிட்டு இறங்காமல் சிணுங்கிக் கொண்டே இருந்தான். மின்சாரம் தடைப்பட்டதால் விளக்குகள் இல்லை. ஓரிரு அந்தக்காலத்து லாந்தர் விளக்குகளை ஏற்றி வைத்துக் கொண்டு, அதனைச் செல்லும் அறைகளுக்கெல்லாம் எடுத்துக்கொண்டு அம்மா செல்வாள்.
பளீரென்ற அடுத்த மின்னலைத் தொடர்ந்து மடமடவென்று இடி இடித்தது. “எங்கேயோ இடி விழுந்திருக்கு போல,” என அம்மா முணுமுணுத்துக் கொண்டாள். பேச்சுத் துணைக்குத்தான் ஆளே இல்லையே, என்னைவிட்டால்… நானோ அட்டையாக அவளை ஒட்டிக்கொண்டிருந்தேன். தம்பு ரகு வீறிட்டலறினான். அம்மா அவனை சமாதானப் படுத்த முயன்றாள்.
நம் கதைக்கு முக்கியமான செய்தியை நான் இன்னும் உங்களுக்குச் சொல்லவில்லையே! எங்கள் பங்களாவின் பின்புறம், ஒதுங்குமிடத்தை (பாத்ரூமை) ஒட்டி ஒரு பெரிய மாமரம் இருந்தது. பெரிய குடைபோல பங்களாவின் பின்புறத்தின்மீது கவிந்து நின்றது. நாங்கள் அங்கு குடிவந்தபோது, எல்லாரும் என் பெற்றோரிடம் சொன்னார்கள்: “சார், அம்மா, கொஞ்சம் கவனமா இருங்க. சாயங்காலம் விளக்கு வெச்சப்புறம், பின் கதவைத் திறக்க வேண்டாம். இந்த மாமரத்துக்கடியில ஒரு புலி படுத்துக்கிட்டிருந்ததை மாயாண்டி விறகுகொண்டு போடறப்போ ஒருநாள் பார்த்தான். இந்தப் பிராணிகள் எல்லாம் ராத்திரிதான் இரைதேட வரும். பகல்ல பயமில்லே. ராத்திரி மட்டும் நல்லா கெட்டியா கொல்லைக் கதவைப் போட்டுடுங்க.”
(இதையெல்லாம் பற்றிப் பிற்காலத்தில் நான் அறிந்து கொண்டேன். சின்னக் குழந்தையான என்னை பயமுறுத்த வேண்டாம் என்று பெற்றோர் என்னிடம் இதைச் சொல்லியிருக்கவில்லை!)
ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தோம். ரகு தூங்காமல் அழுதுகொண்டே இருந்தான். இப்போது ஜானாவுக்கு பாத்ரூம் போக வேண்டும். “அம்மா, என்னைக் கூட்டிண்டு போகிறாயா?” அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. விளக்குகள் இல்லை. “ஜானா, இப்போது வெளில போறது கஷ்டம். நீ இங்கயே, கையலம்பும் இடத்தில் (அந்தக்காலத்தில் எங்கள் வீட்டில் இதற்கு குட்டைத்தளம் என்று பெயர்) அந்த மூலையில் போய்க்கோ, நான் பினாயில் போட்டு கழுவி விட்டுடறேன்,” என்றாள் அம்மா. இப்போ ஜானாவிடம் பெரிய மனுஷித்தனம் ஒட்டிக்கொண்டு நின்றது. “மாட்டேன். நீ என்கூட வா, லாந்தரையும் எடுத்துண்டு வா,” பிடிவாதம் பிடித்தாள். அம்மா கெஞ்ச, ஜானா மிஞ்ச, இடியோ இடித்தது; மழையோ கொட்டிக்கொண்டே இருந்தது. கடைசியில் அம்மாதான் விட்டுக்கொடுக்க வேண்டி வந்தது, பாவம்!!
காய்ச்சலடிக்கும் குழந்தை ரகுவை இடுப்பில் இடுக்கிக் கொண்டு, லாந்தரையும் அந்தக் கையிலேயே பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் குடையில் இருகுழந்தைகளும் நனையாமல் தகிடுதத்தம் செய்தபடி, ஏழூருக்குக் கேட்கும் நெஞ்சத் துடிப்போடு கொல்லைக் கதவைத் திறந்தாள். ஒரு புலி தங்கள்மீது பாயத்தயாராக இருப்பதை எதிர்பார்த்தபடி கண்கள் இருட்டில் துழாவின. கும்மிருட்டு. லாந்தர் விளக்கொளியில் என்னத்தைக் காண முடியும் அருகிலிருப்பதைத் தவிர? “நீயும் வா, வந்து பாத்ரூம் வாசலில் நில்லு. ஜானா, ஜானா என்று கூப்பிட்டுக் கொண்டே இரு,” பயத்தில் பிறந்த தாயின் ஆதரவு தேடும் கட்டளை. வேறு வழியுண்டா? பணிந்தாள் அம்மா. கணங்கள் மணிகளாக நீடித்தன.
‘புலி எங்கேயாவது கொல்லைக்கதவைத் தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் என்ன செய்வது?’ என்பதே அம்மாவின் யோசனை. இந்த லட்சணத்தில் ஒரு பெரிய நத்தை தன் கூட்டோடு பாத்ரூம் சுவரில் மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருந்தது ரகுவின் கண்ணில் பட்டு விட்டது. இப்போதே அதை எடுத்துக்கொடு என அம்மாவிடம் கேட்டு மேலும் அழுகை! அம்மாவின் பாடு எப்படி இருந்திருக்கும்? ஹ்ம்ம்! குழந்தைகள்!
ஒருவழியாக ஜானாவின் வேலை முடிந்து, உள்ளே போகலாம் என சிக்னல் கொடுத்தாள். அம்மாவும் இரு குழந்தைகளும் மழையில் நனையாதபடி குடையைப் பிடித்துக்கொண்டு, லாந்தர் விளக்கையும் எடுத்துக்கொண்டு உள்ளேவந்து கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டாள். பெருமூச்சு விட்டிருப்பாள் பாவம். என்ன செய்தாள் என நானறியேன் பராபரமே!
வெகு நாட்களின் பின், நானெல்லாம் நன்கு வளர்ந்தபின் ஒருநாள் அம்மாவைக் குடைந்து இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டேன். “அடுத்தநாள் காலை புலியின் சில காலடிகளைப் பார்த்ததாக அங்குவந்த மாயாண்டி சொன்னான்,” என்றார் அப்பா!!
இன்று நினைத்தாலும் உடலெல்லாம் மயிர்க்கூச்செடுக்கிறது. அம்மா ஒரு அபூர்வப் பிறவி. தானாக வாசற்படியிறங்கிப் போய் ஒரு கட்டு கொத்துமல்லி வாங்கத் தெரியாது; தைரியம் கிடையாது. புலி இருக்குமிடத்தில் எப்படி குழந்தைகளை வைத்துக்கொண்டு இரண்டாண்டுகள் தைரியமாக வாழ்ந்தாளோ!! அப்புறம் அவளை நாங்கள் “அம்மாப்புலி” என்றே கூப்பிடுவோம்!
இதுவும் இக்கட்டான நிலைமையை தைரியமாக எதிர்கொள்வது எப்படி என வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
