புத்தகம் : அம்மா அம்மா ( சிறுகதைத் தொகுப்பு )

எழுதியவர் : பூர்ணம் விஸ்வநாதன்

 

சிறுவாணி வாசகர் மையத்திற்காக பவித்ரா பதிப்பகம் வெளியிட்ட ஜூலை 2023 பதிப்பு

பக்கம் : 192  விலை : ₹ 200  (முதல் பதிப்பு டிசம்பர் 1989  )

 

சிறுவாணி வாசகர் மையத்தின்  “மாதம் ஒரு நூல் “ திட்டத்தில் நானும் இணைந்திருக்கிறேன்.  சமீபத்தில் அவர்களிடமிருந்து நான் பெற்ற மூன்று நூல்களில் இதுவும் ஒன்று.

எழுத்தாளர் பூர்ணம் விஸ்வநாதனின் குடும்பத்தாரிடமிருந்து அனுமதி பெற்று டிசம்பர் 1989ல் வெளிவந்த அவருடைய சிறுகதைத் தொகுப்பை 34 வருட இடைவெளிக்குப் பிறகு மறுபதிப்பு செய்திருக்கிறார்கள்.

நம்மில் பலருக்கும் பூர்ணம் விஸ்வநாதனை மேடை நாடக ஜாம்பவானாகவும், பாரதம் சுதந்திரம் அடைந்த நற்செய்தியை அகில இந்திய வானொலியின் தமிழ் செய்தி வாசிப்பாளராக நமக்கெல்லாம் அறிவித்த அதிர்ஷ்டக்காரராகவும், தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த உருக்கமான நடிகராகவும் மட்டுமே தெரியும்.

“மேடை நாடகம் எனது முதல் காதல் என்றால், எழுத்து எனது இரண்டாவது காதல்” என்று சொல்லிவந்த பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகளைத் தமிழுக்கு தந்திருக்கிறார் என்பதே இந்தக் காலத்து வாசகர்களுக்கு புதிய செய்திதான்.

பூர்ணம் விஸ்வநாதனின் நாடக பேராளுமையும் திரைப்பட ஜொலிப்பும் அவருடைய எழுத்தாளர் முகத்தை சற்று மறைத்திருந்தனவோ  என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இதற்கு இன்னொரு காரணம், பூர்ணம் தில்லியிலிருந்து சென்னை வந்த பிறகு அவருடைய எழுத்தை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டதுதான்.

சரி, இந்தப் புத்தகத்துக்கு வருவோம் .இதில் இடம் பெற்றுள்ள 14 சிறுகதைகள் அனைத்தும் தமிழின் முன்னணி பத்திரிகைகளில் (ஆனந்த விகடன், கல்கி ,குமுதம், கணையாழி ) 1960 மற்றும் 1970 ஆம் வருடங்களில் வெளிவந்தவை..

பூர்ணம் அவர்களின் மகன் சித்தார்த்தன் அவர்களின் நூல் அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ளது போல அவருடைய பல படைப்புகள் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களின் பிரதிபலிப்புகள். அதில் அவருக்கே உரிய தாயிடம் இருந்த பக்தி (அம்மா அம்மா), மனைவியின் பால் இருந்த அதீத காதல் (மனைவி என்னும் மாய தத்துவம்), தின வாழ்க்கையில் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வு (நான் என்னும் அதிர்ஷ்டக் கட்டை) மிக சுவாரசியமான கதைகளாக உருவெடுத்தி ருக்கின்றன.

அந்த காலத்து சிறுகதைகள் சில சமயம் வளவளவென்று இழுத்தடித்து எழுதப்பட்டிருக்கும். ஆனால் பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் கதைகள் இன்றைய கதைகள் போல இளமையாக இருக்கின்றன. அதே நேரம், பல கதைகள் கனமான கரு கொண்ட முதிர்ச்சியான கதைகள்.

நூலின் இறுதியில் இலவச இணைப்பாக பாரதி மணி அவர்களின் “பூர்ணம் விஸ்வநாதன் நினைவுகள்” என்ற கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. வாசிக்க மிகவும் சுவாரஸ்யமானது. பூர்ணத்தை இன்னும் அறிந்து கொள்ள அருமையான வாய்ப்பு.

. இந்த சிறுகதைத் தொகுப்பை படித்து ரசிக்க உங்களுக்கு நாடக ஆர்வம் தேவையில்லை. நல்ல சிறுகதைகளில் உங்கள் மனதை பறி கொடுப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தை தவற விடாதீர்கள் !

 

ஜி பி சதுர்புஜனின் “இந்தப் புத்தகத்தை படித்து விட்டீர்களா ?” வரிசையில் குவிகம் மின்னிதழில் இதுவரை இடம்பெற்றுள்ள நூல்கள் :

 

  1. The Wisdom Bridge (By Daaji Kamlesh D.Patel)                June 2023
  2. BITS of Social Impact” ( English)

  எழுதியவர்கள் : Harsh Bhargava and Sai Prameela Konduru  July 2023

  1. Adventures Of A Countryside Doctor

    ( By Dr.Thomas T. Thomas )                                                    August 2023

    தமிழில்: ஒரு சிற்றூர் மருத்துவரின் சாகசங்கள்

    ( தமிழாக்கம் : துரை தனபாலன் ) 

  1. 4. பாரதி கண்ட தெய்வ தரிசனம் September 2023

   எழுதியவர் : நஜன்