- சங்கப் புலவர்களின் அறிவியல் அறிவு

சங்க இலக்கியம் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை முறையினையும் எடுத்துரைக்கும் காலக் கண்ணாடியாகும். பழந்தமிழர் வாழ்வில் இடம் பெற்ற காதல், மறம், புகழ் ஆகிய மூன்றும் ஆராயப்பட்ட அளவிற்கு அறிவியல் செய்திகள் ஆராயப்படவில்லை. அவை அறிவியல் பூர்வமகாக ஆரயப்பட்டால் பழந்தமிழரின் ஆழமான அறிவியல் அறிவை அறிந்து கொள்ள முடியும்.
சங்க இலக்கியத்தில் தாவரங்கள் பற்றி ஆராய்ந்த அறிஞர் பி.எல். சாமி “சங்க இலக்கியங்களில் செடி கொடி மரங்கள்” என்ற நூலில் செடி, கொடிகள் பற்றிப் பல செய்திகளை விளக்குகிறார். அவை பெரும்பாலும் செடி நூலார் (Botanist) கண்டுபிடித்தவையோடு ஒத்திருக்கின்றன.
தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூற வந்த நூலாயினும் அறிவியல், தத்துவம், மருத்துவம், வானவியல், சோதிடம், கணிதம் போன்ற கருத்துக்களை வெளியிடும் ஒரு நூலாகவும் அமைந்துள்ளது. மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாளர்களான தாலஸ் (கிமு 639-544), அனாக்ஸிமாண்டர் (611-547) ஷீனோபான்ஸ் (கிமு 576-480) எம்படோகில்ஸ் (கிமு 504-433) அரிஸ்டாட்டில் (கிமு 384-322) போன்றோர் வெளியிடாத பல அறிவியல் கருத்துக்களைத் தனது இலக்கண நூலில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். அவற்றை உயிரியல் சிந்தனைகள், மருத்துவச்சிந்தனைகள், சார்பியல் கோட்பாட்டுச்சிந்தனைகள், தகவல் தொடர்பியல் சிந்தனைகள், வானவியல் சிந்தனைகள் எனப் பிரிக்கலாம்.
உயிரினப் பாகுபாட்டை உலகில் முதன்முதலில் தொல்காப்பியர் பின்வருமாறு விளக்குகிறார்.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே’
(தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், நூற்பா 26-27)
உயிர்களின் பரிணாம வளர்ச்சியை உயிர்களின் உடம்பினோடும் அதனோடு இணைந்த மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளும் மனமும் ஆகிய ஆறுவகை வாயில்களையும் பெற்று அறிவினால் சிறந்து விளங்கும் இயல்பினை அறிவியல் நோக்கில் குறிப்பிட்டுள்ள தொல்காப்பியரின் திறம் போற்றத்தக்கது.
புறநானூற்றில் இடம் பெறும் ஒரு பாடல் பண்டைத் தமிழரின் அறிவியல் அறிவு எத்தகையது என்பதைப் பாடுகிறது.
செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தோர்போல என்றும்
இனைத்து என்போரு முளரே
(புறநானூறு, பாடல் எண் 30, வரிகள்1-7, பாடியவர் – உறையூர் முதுகண்ணன் சாத்தனார், பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி)
‘செஞ்ஞாயிற்றின் செலவு’ என்றால் அதன் இயக்கம் எனக் கருதலாம்; அதாவது கதிரவன் பயணிக்கும் வீதி எனக் கருதலாம்; தற்போது சூரியன் நிலநடுக்கோட்டிலிருந்து 30 டிகிரி வடக்கு அட்சரேகை வரை சென்று, பின்னர் நிலநடுக்கோட்டை கடந்து 30 டிகிரி தேற்கு அட்சரேகை வரை சென்று, மீண்டும் நிலநடுக்கோடு வரை வருவதை சூரியனின் தோற்ற இயக்கம் (apparent motion) எனச் சொல்லுகிறோம்; இதைப் பற்றியும் சங்கலாலப் புலவர்கள் அறிந்திருக்கக்கூடும்.
இவ்வாறு ஞாயிற்றின் செலவும் அஞ்ஞாயிற்றின் இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார்வட்டமாகிய கோள்களும் இந்த அண்டமும் காற்று இயங்குகின்ற திசையையும் ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் ஆகிய இவற்றை அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையவென்று எடுத்துக்கூறும் கல்விடையோரும் இருந்தனர் என்ற அறிவியல் குறிப்பினை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.
சூரியக்குடும்பம்
சூரியக்குடும்பத்தின் ஒரு கிரகத்திலிருந்து வந்தவர்கள் தான் மக்கள் என்ற வானியல் அறிஞர்களின் கருத்திற்கு ஏற்றவாறு சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியும் பின்வரும் பாடலில் கூறுகிறது.
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழு துணரும்
சான்ற கொள்கைச்சாயா யாக்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர்
( மதுரைக்காஞ்சி, வரிகள் 477-481 )
பழங்காலத்தில் வாழ்ந்து வந்த துறவியர் சிலர் வானம் ஏறுதல், கடலில் நடத்தல் போன்ற அறிவியல் செயல்களைச் செய்வதில் திறம் பெற்றிருந்தனர் என ஒரு கருத்து உண்டு. இதனைக் குறிப்பிடும் வண்ணம் குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது.
நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே.
இந்தப் பாடலில் தோழி தலைவியிடம் உன் தலைவன் நிலத்தின் உள்ளே சென்றிருக்க மாட்டார்; கடலின் மீது நடந்து சென்றிருக்க மாட்டார்; கவலைப்படாதே என்ற தேற்றுவதாக ஒரு அறிவியல் செய்தி வருகின்றது.
வான வெளிப் பயணம்
வான வெளிப் பயணம் முன்னோர்கள் அறிந்திருந்த ஒன்றுதான் என்றாலும், இன்றைய காலகட்டத்தில் விமானிகளே இல்லாத தானியங்கி விமானங்களை (ட்ரோன்களை) வானவெளியில் செலுத்தமுடியும் என்ற அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ளது. இக்கருத்தினை
வலவன் ஏவா வானவூர்தி எய்துப ………….
(புறநானூறு, பாடல் 27)
என்ற பாடலில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகின்றார். சிறந்த அரசர்கள் விண்ணில் பாகனால் செலுத்தப்படாத தானே இயங்குகின்ற திறன் வாய்ந்த வானவூர்தியில் சென்றனர் என்ற குறிப்பின் வழி தமிழர்கள் விமான ஓட்டும் கலையில் வல்லவர்களாக இருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.
